மூன்றாம் பாகம் - வெற்றி மங்கலம்

6. கடுங்கோன் ஆகுக!

     இளைய நம்பிக்குச் செல்வப் பூங்கோதை எழுதியிருந்த அந்த ஓலை கோபத்தோடும் தாபத் தோடும் தொடங்கியது. அதில் கோபம் அதிகமா, தாபம் அதிகமா என்று பிரித்துக் கண்டுபிடிக்க இயலவில்லை. ஏனெனில் அந்த மடலில் தொனித்த கோபத்திலும் தாபம் கலந்திருந்தது. அதே போல் தாபத்திலும் கோபம் கலந்திருந்தது. ஒர் அழகிய இளம் பெண்ணின் கோபத்தில் அதன் மறுபுறமுள்ள தாபங்களே அதிகம் தெரியமுடியும் என்பதைத்தான் செல்வப் பூங்கோதையின் சொற்கள் காட்டின.

     “திருக்கானப்பேர் நம்பிக்கு அடியாள் செல்வப் பூங்கோதை வரையும் இந்த மடலை அவர் நலத்தோடும் நல்லுறவோடும் காணட்டும். தாங்கள் இந்தப் பேதையை நினைவு வைத்திருக்கிறீர்களோ இல்லையோ, தங்களை நித்தியமாகவும் நிரந்தரமாகவும் நினைவு வைத்துப் போற்றுவது இப் பேதையின் கடமையாகி விட்டது. திருமோகூரில் இருந்தாலாவது கொல்லன் எதிர்ப்படுகிற போதெல்லாம் நேராகவோ, குறிப்பாகவோ, தங்களைப்பற்றி விசாரித்து அறிய முடியும். இன்னும் சில திங்கள் காலத்துக்குத் தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும் என்று பெரியவர் இட்ட கட்டளையை மேற்கொண்டு நாளைக் காலையில் பிரம்மமுகூர்த்தம் கழிவதற்குள் மங்கல நேரத்தில் தந்தையும் தாயும் அவர்களோடு நானும் யாத்திரை புறப்படுகிறோம். இனிமேல் தங்களைப் பற்றி ஆவல் தீரக் கேட்டறியவோ, விசாரிக்கவோ கூட என்னருகே மனிதர்கள் இல்லை. தந்தையிடம் நானாக வலியச் சென்று தங்களைப்பற்றிப்பேச முடியாது. தாயிடம் பேசினால் அவள் சந்தேகப்படுகிறாள். என் உணர்வுகளைப் பெற்ற அன்னையிடம் கூட நான் பூரணமாகக் காண்பித்துக் கொள்ள முடியவில்லை. எங்கள் ஊருக்கு நீங்கள் வழிப்போக்கராகப் பிரவேசித்த முதல் தினத்தன்று நீங்கள் என்னை ஊமை என்பதாகக் கூறி ஏளனம் செய்தீர்கள். அப்போது அன்று நான் காரியத்திற்காக ஊமையாக நடிக்க வேண்டியிருந்தது. இப்போதெல்லாம் உங்களைப்பற்றிப் பேசவோ, விசாரிக்கவோ, அருகில் யாருமே அந்தரங்கமானவர்கள் இல்லாத காரணத்தால் நான் உண்மையிலேயே ஊமையைப் போலாகிவிட்டேன். வாய் திறந்து நான் பேசும் எதுவும் உங்களைப் பற்றிய பேச்சாகவே இருக்க வேண்டுமென்று தவிப்பதால் வேறெதையும் நான் பேச முடியவில்லை. செவிகளால் கேட்க முடிந்த எதுவும் உங்களைப்பற்றிய நற்செய்திகளாகவே இருக்க வேண்டும் என்று தவிப்பதால் வேறெதையுமே நான் கேட்க முடியவில்லை. உங்கள் மேற்கொண்ட காதல் இப்படி என் பொறி புலன்களின் இயக்கத்தைக்கூட ஒடுக்கி விட்டது. தாபத்தில் உருகுகிறேன். கோபத்தில் உங்களைச் சபித்துவிட வேண்டும் போல் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. தாபமும் கோபமுமே என்னைக் கொல்கின்றன.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.