மூன்றாம் பாகம் - வெற்றி மங்கலம் 7. இரு வாக்குறுதிகள் படைப்புக் காலந் தொட்டு மேம்பட்டு விளங்கி வந்த பாண்டிய மரபு மீண்டும் தலையெடுக்கும், என்று நம்ப முடிந்த நற்செய்தி முதலில் வடதிசையிலிருந்து திருமால் குன்றத்துக்கு வந்து அங்கிருந்து ஓர் ஆபத்துதவி மூலம் கணிகை மாளிகைக்குச் சொல்லி அனுப்பப்பட்டிருந்தது. திருமால் குன்றத்திலிருந்து வந்திருந்த ஆபத்துதவியிடமிருந்து செய்தியை அறிந்தவுடன் முதலில் அந்த ஊக்கமளிக்கும் செய்தியை இளையநம்பியிடம் தெரிவிப்பதற்கு ஓடோடி வந்திருந்தான் கொல்லன். அவன் மகிழ்ச்சியோடு கூறலானான்: “ஐயா! களப்பிரர்களை எதிர்த்து வடதிசையில் பல்லவ சைனியம் படையெடுத்து வந்திருக்கிறது. வெள்ளாற்றங் கரையில் வந்து தாக்குதலைத் தொடங்கி விட்டார்கள் பல்லவர்கள். இன்னும் சில நாட்களில் தெற்கு முனையிலோ தென் மேற்கு முனையிலோ சேர நாட்டுப் படைகளும் களப்பிரர்களை எதிர்த்துத் தாக்குதலைத் தொடங்கிவிடும். போரை எதிர்பாராவிடினும் களப்பிரர்கள் தங்களிடம் இருக்கும் முழுமையான படை பலத்தை இரு கூறாக்கி ஏற்கெனவே இந்த இரு முனைகளிலும் நிறுத்தியுள்ளனர்.” “ஆகவே, களப்பிரர்களை எதிர்த்து மூன்றாவது முனைத் தாக்குதலாகப் பாண்டியர்களாகிய நாம் உட்புக இருக்கிறோம்...” “ஆகவே போரைத் தொடங்கினால் நமக்கு வெற்றி உறுதி என்கிறாய்!” “அதில் சந்தேகம் என்ன ஐயா? நம் பெரியவர், காராளரைத் தீர்த்த யாத்திரை அனுப்பியபோதே இந்தத் திட்டத்தை மனத்திற் கொண்டுதான் அனுப்பியிருப்பார்.” “இம்முறை நாம் தோற்க முடியாது. தோற்கக் கூடாது” என்று குரலில் உறுதி பொங்கக் கூறினான் இளையநம்பி. இப்போது ஓர் அரிய உண்மை அவனுக்கு நன்றாகப் புலப்படத் தொடங்கியது. காராளரைப் பெரியவர் தீர்த்த யாத்திரை என்ற பெயரில் அனுப்பி வைத்த பயணத்தின் மாபெரும் அரசியல் சாதனைகள் சிறிது சிறிதாகப் புரிந்தன. அந்த அரச தந்திரப் பயணத்தை முதலில் தவறாக எண்ணியதற்காக உள்ளூற வருந்தி வெட்கப்பட்டான் அவன். அவருடைய தீர்த்த யாத்திரையின் பயனால் மாபெரும் பாண்டிய நாடே களப்பிரர் கொடுங்கோலாட்சியில் இருந்து விடுதலை பெறப்போகிறது என்பது இளையநம்பியின் மனத்தில் தெளிவாயிற்று. மங்கல நேரம் பார்த்து நல்ல நிமித்தம் தேர்ந்து பாட்டனார் திருக்கானப்பேரில் இருந்துதன்னை நீண்ட நாட்களுக்கு முன்பு எதற்காக விடை கொடுத்து வழியனுப்பி வைத்தாரோ, அந்த நன்னோக்கம் நிறைவேறும் நாள் தொலைவில் இல்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திருக்கானப்பேர்க் காட்டில் அஞ்ஞாத வாசம் போல மறைந்து வாழும் பாட்டனாருக்கோ பிறருக்கோ இந்தத் திருப்பங்களும் மாறுதல்களும், அதிகமாகத் தெரிந்திருக்கக் கூட முடியாது என எண்ணினான் அவன்.
இருந்தாற்போலிருந்து வேறு ஏதோ ஞாபகம் வந்தவன் போல், “அழகன் பெருமாள் முதலியவர்களோடு களப்பிரர்களிடம் சிறைப்பட்டிருந்து நடுவே தப்பி வந்த அந்தக் குறளனைப் பத்திரமாக நம்மோடு இருக்கச் செய்யுங்கள். பல காரியங்களில் அவனுடைய உதவி நமக்கு வேண்டிய தாயிருக்கும்...” என்று இளையநம்பி, கொல்லனிடம் நினைவூட்டினான். வெற்றிக்குப் பின்பு நிகழ வேண்டிய உண்டாட்டு விழாவோ பெருஞ்சோற்றுக் கொண்டாட்டமோ முன்னதாகவே கொண்டாடப்பட்டது போல் அன்றிரவு கணிகை மாளிகையில் அந்த வீரர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்தாள் இரத்தினமாலை. அன்றிரவு அவர்கள் நெடுநேரம் உறங்கவில்லை. வீரர்களின் வாள் போர்த்திறன், ஈட்டி எறிதல், வேல் எறிதல், வில்லை நாண் ஏற்றி அம்பு செலுத்துதல் ஆகியவற்றைத் தானே முன் நின்று பரிசோதித்துத் திருப்தி அடைந்தான் இளையநம்பி. அவனே ஒரு சோதனைக்காகக் கொல்லனோடு வாட்போர் செய்து, தன் திறமையையும் சோதித்துக் கொண்டான். வடக்கேயும், தெற்கேயும், படை எடுத்து வந்திருப்பவர்களோடு களப்பிரர்கள் போரிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் பாண்டிய நாட்டு மக்களின் ஆதரவோடு அரசைக் கைப்பற்றிவிட முடியும் என்ற உறுதி இளையநம்பிக்கு இருந்தது. பல்லாண்டுக் காலமாகப் பாண்டிய நாட்டு மக்களை இந்த உள் நாட்டுப் போருக்கு அந்தரங்கமாக ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார் பெரியவர். தேசபக்தி என்ற மூலக் கனல் அறவே அவிந்து பாண்டிய மக்கள் அடிமைகளாகி அடிமைத்தனத்தையே ஏற்றுக் கொண்டு விட்டதாகக் களப்பிரர்கள்தான் தப்புக் கணக்குப் போட்டிருந்தார்களே ஒழிய, அந்த மூலக் கனல் இன்னும் நீறுபூத்த நெருப்பாக இருந்தது. தொடர்ந்து சில நாட்களாகக் கோட்டையையும், அகநகரையும் கைப்பற்றுவதற்கான சூழ்ச்சிகளைச் சிந்திக்கத் தொடங்கியிருந்தார்கள் அவர்கள்.
நாலைந்து நாட்கள் கழித்து ஒர் இரவில் மீண்டும் பெரியவரிடமிருந்து ஒரு தூதுவன் இவர்களைத் தேடி வந்தான். அவன் கொண்டு வந்திருந்த ஓலையும் பொருள்களும் வெற்றி நம்பிக்கையை உறுதிப்படுத்துவன வாயிருந்தன. ‘திருக்கானப்பேர் நம்பிக்கு நல்வாழ்த்துக்களுடன் வரையும் ஓலை. காலம் நமக்கு இசைவாகக் கனிந்து வருகிறது. நான் அறிந்த வரையிலும் அங்கங்கே உள்ள நம் ஒற்றர்கள் சொல்லியனுப்பியிருக்கும் செய்திகளின் படியும் அடுத்த பெளர்ணமிக்குள் மதுரைக் கோட்டையில் நெடுங்காலத்திற்குப் பின் நமது மீனக் கொடியைப் பறக்க விட முடியும் என்று தெரிகிறது. கோட்டைக்குள்ளும், கோநகரி லும், உள்நாட்டின் பிற பகுதிகளிலும், அந்தப் பழைய அவிட்டநாள் விழாவின்போது இருந்த அவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் களப்பிரர்களால் இப்போது செய்ய முடியவில்லையாம். எல்லா வீரர்களையும், படைபலத்தையும் அவர்கள் எல்லைகளில் குவித்து விட்டார்களாம். என்னைச் சந்திப்பதற்காக மாறோகவள நாட்டுக் கொற்கையிலிருந்து இங்கு வந்து திரும்பிய மருதன் இளநாக நிகமத்தானும் இதையே கூறிச் சென்றிருக்கிறான். தென்திசையில், நம் காரியங்களைச் செய்யுமாறு அவனுக்குக் கட்டளை இட்டிருக்கிறேன். இன்னும் சில நாட்களிலேயே தென் மேற்கே சேரர்கள் களப்பிரர்களைத் தாக்கத் தொடங்கி விடுவார்கள். அப்போது களப்பிரர்களின் கவனம் முழு அளவில் எல்லைகளைக் காப்பதில் தான் திரும்ப முடியும். அந்தச் சமயத்தில் வளர் பிறைக் காலத்தில் ஓர் இரவில் நீங்கள் கோட்டையைக் கைப்பற்றி நம் மீனக் கொடியை அதிகாலையில் மங்கலமான பிரம்ம முகூர்த்தத்தில் அங்கே ஏற்றிவிட வேண்டும். அநேகமாகக் களப்பிரக் கலியரசன் போர் முனைக்குப் போகமாட்டான் என்று தெரிகிறது. அவன் அரண்மனையில் இருந்தால் அவனை அழிப்பதற்கும் நீங்கள் தயங்க வேண்டியதில்லை. எதிரியை அழிப்பதும் போர் அறங்களில் முதன்மையானது. கோட்டையில் நமது கொடி ஏறிய பின் நான் அங்கு வருவேன். அதற்குமுன் நான் பாண்டிய நாட்டின் எதிர் கால நலனை முன்னிட்டுக் கேட்க இருக்கும் இரண்டு வாக்குறுதிகளைச் சூரிய சந்திரர்கள் சாட்சியாக எனக்கு அளிப்பதாக இவ்வோலை கொண்டு வரும் தூதனிடம் மாற்றோலையாகத் திருக்கானப்பேர் நம்பி வரைந்தனுப்ப வேண்டும். அந்த இருவாக்குறுதிகள் என்ன என்பதை நானே பின்பு நேரில் கூறுவேன். இவ்வோலையோடு முதல் முதலாகக் கோட்டையில் ஏற்றப்பட வேண்டிய மீனக் கொடியையும் நானே எழுதிக் கொடுத்துள்ளேன். கொடியைத் தவிர அரண்மனையில் முதல் முதலாக நுழையும்போது அணிந்து செல்ல வேண்டிய இடைவாளும், உறையும் இதனோடு உள்ளன. இந்த வாளின் நுனியில் வெற்றிகள் குவியும். இந்தவாள் ஒரு பேரரசைப் பல்லாண்டுகளுக்குப் பின்பு மீட்கும் நலத்தை அடையப்போவது என்பதையும் அறிக!' என்று முடிந்திருந்தது அவர் ஓலை. இளையநம்பி தூது வந்திருந்தவனிடம் இருந்து அந்தக் கொடியையும், வாளையும் பயபக்தியோடு வணங்கிப் பெற்றுக் கொண்டான். இரத்தினமாலையைக் கூப்பிட்டு ஓலையும், எழுத்தாணியும் கொண்டு வரச்சொல்லி வேண்டிப் பெற்ற பின், பெரியவருக்கு மாற்றோலை வரைவதற்கு முன்னால் அவர் கேட்டிருக்கும் அந்த இரு வாக்குறுதிகள் என்னவாக இருக்க முடியும் என்று இளைய நம்பி சிந்திக்க முயன்றான். எவ்வளவோ முயன்றும் அவனால் புரிந்து கொள்ள முடியாதவைகளாக இருந்தன அவை. அதேசமயம் பாண்டிய மரபை ஒளிபெறச் செய்வதற்காகத் தம் வாழ்வையே தத்தம் செய்து கொடுத்திருக்கும் பெரியவரின் வேண்டுகோள் என்னவாக இருந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டிய கடமை தனக்கு இருப்பதையும் அவன் உணர்ந்தான். “தேவரீர் திருவடித் தாமரைகளில் அடியேன் இளைய நம்பி தெண்டனிட்டு வணங்கி வரையும் ஓலை. சூரிய சந்திரர்கள் சாட்சியமாகப் பாண்டிய நாட்டின் எதிர்கால நலனை முன்னிட்டுத் தாங்கள் கேட்கும் இரண்டு வாக்குறுதிகளை மறுக்காமலும் மறக்காமலும் நிறைவேற்றுவதாக ஆலவாய் அண்ணல் மேலும், இருந்தவளமுடையார் மேலும் ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன். தாங்கள் எழுதியுள்ள குறிப்புகளின்படியே எல்லாச் செயல்களையும் செய்வேன். தங்கள் நல்லாசியுடன் வந்த மீனக் கொடியையும், இடை வாளையும் வணங்கிப் பெற்றுக் கொண்டேன். ஒளிதிகழும் தங்கள் திருமுக மண்டலத்தைத் தரிசனம் செய்யும் நாளை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன்” என்று ஓலையை எழுதி முடித்து வந்திருந்த தூதுவனிடம் கொடுத்தான் இளையநம்பி. தூதன் திரும்பியபின் கொடியையும், வாளையும் இரத்தின மாலையிடம் கொடுத்து, “மீண்டும் நான் கேட்கிற வரை இவற்றைப் பாதுகாப்பாக வைத்திரு” என்றான். இரத்தின மாலை அவற்றை வாங்கிச் சென்று உள்ளே வைத்து விட்டுத் திரும்பி வந்தாள். “ஐயா தாங்கள் வேறுபாடாக நினைக்கவில்லை என்றால் பெரியவர் இன்று இங்கே அனுப்பிய ஓலையில் தங்களுக்கு என்ன எழுதியிருந்தார் என்பதை இந்தப் பேதையும் அறிய ஆசைப்படுகிறேன்” என்றாள் அவள். அந்த ஒலையை அவள் படித்தறிவதில் தவறில்லை என்று கருதிய இளையநம்பி, “நீயே படித்துப்பார் இரத்தின மாலை!” என்று அவளிடமே அதை எடுத்துக் கொடுத்து விட்டான். அதைப் படித்ததும் ஏதோ சிந்தனை வயப்பட்டவள் போல் நெடுநேரம் ஒன்றும் பேசாமல் அவனெதிரே அமர்ந்திருந்தாள் அவள். இடையிடையே அவள் நெட்டுயிர்ப்பதை இளைய நம்பி கண்டான். அந்த ஒலைச் செய்தி அவளுக்கு ஏன் மகிழ்ச்சியளிக்கவில்லை என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் அவளைக் கேட்டான்: “கோட்டையில் மீண்டும் நமது கொடி பறக்கப் போகிறது என்னும் செய்தி உனக்கு ஏன் மகிழ்ச்சியை அளிக்கவில்லை இரத்தினமாலை?” “...” அவளிடமிருந்து இதற்கு மறுமொழி இல்லை. அவள் கண்களில் ஈரம் பளபளப்பதை அவன் பார்த்தான். அவள் செவ்விதழ்கள் துடித்தன. எதைக் கூறுவதற்கு அவை அப்படித் துடிக்கின்றன என்பதையும் அவனால் உடனே விளங்கிக் கொள்ள முடியவில்லை. தொலை தூரத்தில் இருந்து கேட்கும் சோகம் நிறைந்த ஓர் இன்னிசையைப் போல் மெல்லிய விசும்பல் ஒலியும், விரைந்து மூச்சுவிடும் உயிர்ப்புக்களும் அவள் பக்கமிருந்து அவன் செவிகளில் விழுந்தன. மிகமிகத் திடமானவள் என்றும், ஓரளவு ஆணின் உறுதியுள்ளவள் என்றும் அவன் நினைத்திருந்த இரத்தினமாலை இப்படிப் பேதையாக நெகிழ்ந்ததைக் காணப் பொறுக்காமல் அவன் பதறிப்போனான். தன் சொற்களோ, பெரியவரின் அந்த ஓலையிலுள்ள சொற்களோ அவளை எந்த விதத்தில் வருத்தியிருக்க முடியும் என்பதை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஓர் இதயம் கரைந்து பொங்குவது போன்ற அந்த இனிய விசும்பல், மெல்லிய இசையாக அவன் செவிகளில் நுழைந்து இதயத்தில் பதிந்து வேதனை செய்தது. |