மூன்றாம் பாகம் - வெற்றி மங்கலம்

8. புதிய நிபந்தனை

     நீண்ட நேரம் வரை அந்த நிலையில் இரத்தினமாலையிடம் அவன் என்ன பேசினாலும் மறுமொழி கிடைக்கவில்லை. அவன் ஏதாவது வினாவினால் அந்த வினாவைக் கேட்டு அவள் விசும்பல் இன்னும் அதிகமாகியது. அழுகை பெருகியது. கடைசியில் அவளைப் பேசவைக்க அவன் ஒரளவு கடுமையான வார்த்தைகளைக் கூறி வினாவ வேண்டியதாகி விட்டது.

     “இரத்தினமாலை! பெண்களைப் பற்றிய ஒரு பேருண்மை இன்றுதான் எனக்குப் புரிகிறது! தங்களால் அன்பு செய்யப்படுகிற ஆடவனுக்கு நல்ல காலம் வரும் போதுகூட அதற்கும் மகிழாமல் அழுவதற்குத் துணிகிற கொடுமையான உள்ளம் பெண்களுக்கு மட்டுமே இருக்கும் போலும்.”

     “பேதைகளின் உள்ளங்களைக் கோட்டை கொத்தளங்களை மீட்டுக் கொடியேற்றச் செல்லும் மாமன்னர்கள் ஞாபகம் வைத்திருக்கக்கூட முடியாது ஐயா! அரசர்களின் உலகில் இதயங்களை விடக் கோட்டை கொத்தளங்கள் பெரியதாகி விடலாம். ஏற்கெனவே வெற்றி கண்ட ஒரு மனத்தை நாளை வெல்லப் போகும் ஒரு கோட்டையின் வெற்றி - ஞாபகத்தில் அவர்கள் மிக எளிதாக மறந்து போய் விடுவார்கள். அவர்களை நம்பி வலுவில் முன்வந்து அன்பினால் தோற்றவர்களை வென்றதாகக் கூட அவர்களுக்கு நினைவு இருக்காது...”

     “களப்பிரர்களோடு நான் இன்னும் போரைத் தொடங்கவே இல்லை! அதற்குள்ளேயே நீ உன்னோடு என்னைப் போருக்கு இழுக்கிறாய்! இதுவும் என் தீவினை என்றுதான் சொல்ல வேண்டும்.”

     “நீங்கள் புரியும் வாதம் பிழையானது உங்களுக்கு முன் மனப்பூர்வமாகத் தோற்று நிற்பவர்கள் உங்களிடமே தொடங்குவதற்குப் போர் எதுவும் இருக்க முடியாது.”

     “பின் என்ன? இல்லாமலா தொடங்குகிறாய் நீ?”

     “நான் எதையும் புதிதாகத் தொடங்கவில்லை. ஏற்கெனவே மனப்பூர்வமாகத் தொடங்கியது எதுவோ அது முடியப் போகிறதே என்றுதான் கண் கலங்குகிறேன்...”

     “மனப்பூர்வமாகத் தொடங்கும் எதற்கும் முடிவே இல்லை இரத்தினமாலை! அதை முடியவும் விடக் கூடாது...”

     “பதவிகளும், சுகபோகமும், ஏற்றத் தாழ்வும் உங்களுக்கும் எனக்கும் குறுக்கே மலைகளாக நிற்கும் என்பதை மறந்து விடாதீர்கள்...”

     “உண்மை! அவை உன் உடலுக்கும் என் உடலுக்கும் குறுக்கே நிற்கலாம். இதயங்களுக்கு நடுவே எதுவும் குறுக்கே நிற்க முடியுமா?”

     “பல திங்கள் காலம் உங்களை அன்போடு உபசரிக்கும் பேறு பெற்றதற்காக நான் முன் பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.”

     “நீ மட்டுமில்லை! நானும்தான்...”

     “ஆனால், இப்போது நாம் பிரியும் நாட்கள் நெருங்குகின்றன என்பதை எண்ணும்போது என்னால் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் தவிப்பதை உங்களால் உணர முடியவில்லையா?”

     “உணராமல் இருப்பதற்கு நானோ என் இதயமோ குருடாகி விடவில்லை. நீ அணிந்த மலர் மாலைகளைத் தாங்கிய தோள்கள் இனி அரச பாரத்தைத் தாங்கப் போகின்றன. என்னுடைய புதிய சுமையை நீ கவலையோடும் அநுதாபத்தோடும் நோக்க வேண்டும். இந்த மாளிகையில் அடைப்பட்டுக் கிடந்த காலத்தில் ஒர் அரச குடும்பத்து இளைஞனுக்கு நீ அளித்த மகிழ்ச்சிகளை இனிமேல் அரியணையில் அமர்ந்திருக்கும் போதோ, போர்க்களங்களில் ஊடாடும் போதோ அவன் அடையமுடியாது...”

     “என்போல் திருவடித் தொண்டு செய்யும் கணிகைகள் உங்களோடு அரியணையில் ஏறிக் கொலு அமர அரச குலத்து நியாயங்கள் இடம் தரமாட்டா...”

     “அரசகுல நியாயங்கள் கண் இல்லாதவை! ஆனால், என் இதயத்தில் நீ கொலு வீற்றிருப்பதை எந்த நியாயமும் தடை செய்ய முடியாது...”

     “நீங்கள் இங்கிருந்து அரண்மனைக்குப் போய்விடுகிற மறுநாளே இந்த மாளிகை சுடுகாடு போலாகிவிடும், அதன் பின் இங்கே மங்கல வாத்தியங்களின் ஒலி எழாது. நறுமணங்கள் இராது. மாலைகளும் சந்தனமும் மணக்காது. விளக்குகள் இருண்டுவிடும். நான் உருகித் தேய்ந்து மாய்ந்து போவேன்...”

     “நீ உண்மையில் என்னிடம் இதயத்தைத் தோற்ற வளாயிருந்தால் அப்படிச் செய்யக்கூடாது.”

     “வாழ முடியாதவர்கள் சாவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கப் போகிறது!”

     “நாயகனைப் போர்க்களத்துக்கு அனுப்பும் தமிழ்ப் பெண்கள் அவன் திரும்பும்வரை அவன் நலத்தோடு திரும்பி வர நோன்பிருக்க வேண்டும்.”

     “இந்தப் போர்க்களத்தில் என் நோன்பிற்குப் பலன் இராது. நீங்கள் வென்ற மறுகணமே அரியணை என்ற மேட்டில் என் கண்ணுக்கு எட்ட முடியாத உயரத்துக்கு ஓடிப்போய் விடுவீர்கள்.”

     “மீண்டும் உன்னிடமே திரும்பிவருவேன்! ஆனால் அதுவரை உன் நோன்பின் பலனை எதிர்பார்த்துக் காத்திருக்க உனக்குத்தான் பொறுமை வேண்டும்.”

     “அப்படி எவ்வளவு காலம் நான் பொறுத்திருக்க வேண்டுமோ?”

     “அடுத்த பிறவிவரை பொறுத்திருக்க வேண்டும்! இந்தப் பிறவியில் நான் பாழாய்ப்போன அரச குடும்பத்தில் வேறு வழிமுறையினரே இல்லாத ஒற்றைக்கொரு வீரனாகப் பிறந்து தொலைத்துவிட்டேன் பெண்ணே! அரச பாரச்சுமை என்னை இப்போது விடவே விடாது. அந்த அரச குடும்பத்து நியாயங்கள் நீயே கூறியது போல், உன்னை என்னருகே அமரவிடவும் இசையமாட்டா. தயை செய்து இன்னும் ஒரு பிறவி வரை எனக்காக நோன்பிருந்து கழித்துவிடு இரத்தின மாலை! அடுத்த பிறவியில் நான் குழலுதும் கலைஞனா கவோ, யாழ்ப்பாணனாகவோ, ஒரு இன்னிசைக் கவிஞனாகவோ பிறக்கிறேன். அப்போது எந்த நியதிகளும் நம்மைத் தடுக்கமுடியாது” என்று கூறிக் கொண்டே வருகையில் இளைய நம்பியின் கண்களிலும் நீர்மல்கி விட்டது. உணர்ச்சிப் பெருக்கில் அவன் சொற்கள் தடைப் பட்டன. அவள் அவன் நெஞ்சில் சாய்ந்தாள். அவளை ஆரத் தழுவி மகிழ்ந்தான் அவன். அவன் கண்ணிர் அவள் தலையில் சிந்தி நனைத்து அவளை மறு பிறவிக்கு அங்கீகரித்துக் கொண்டது.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.