![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
முதல் பாகம் 13. பகவதி காப்பாற்றினாள் மேல் மாடத்து நிலா முற்றத்தில் எதிர்பாராத நிகழ்ச்சியால் அரைகுறையாக முடிந்த நாட்டியத்துக்குப் பின் மகாராணியாரும் அவரோடு இருந்த பெண்களும் பரபரப்படைந்து அந்தப்புரத்துக்குச் சென்றார்களல்லவா? அதன் பின் அங்கு நடந்த தொடர்பான நிகழ்ச்சிகளைக் கவனிப்போம். திடீரென்று ஏற்பட்ட குழப்பத்தினால் சூதுவாதறியாத அந்தக் கன்னிப் பெண்களின் மனத்தில் தன்னைப் பற்றித் தவறான எண்ணம் ஏற்பட்டிருக்குமோ என்று மகாராணி வானவன்மாதேவி கலக்கமுற்றார். இந்தப் பரந்த உலகத்தில் எத்தனை கொடுமைகளைச் செய்தாலும் அவற்றிலிருந்து தப்பலாம். கள்ளங் கபடமற்ற நல்ல மனங்களில் தீமையை விதைத்தவர்கள் எந்த விதத்திலும் தப்ப முடியாது. மகாராணி வானவன்மாதேவியின் மனத்தில் எப்போதும் நிரந்தரமாக நிலைத்திருக்கக் கூடிய சிந்தனையில் இதுவும் ஒன்று. "குழந்தைகளே! பகவதி! விலாசினி! உங்களுடைய ஆடல் பாடல்களை இன்னும் சிறிது நேரம் காணவும், கேட்கவும் ஆவலாயிருந்தேன். என்னுடைய எத்தனை, எத்தனை கவலைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன தெரியுமா? ஒரு தேசத்தின் மகாராணியாக இருந்து காணுகிற சுகத்தை விட உங்களைப் போல் இரண்டு பெண்களின் தாயாக ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்திருந்தேனானால் இன்னும் எவ்வளவோ சுகத்தையும், நிம்மதியையும், கண்டிருப்பேன்" என்று கூறினார் வானவன்மாதேவி. "மகாராணியாரின் திருவாயிலிருந்து இத்தகைய வார்த்தைகளைக் கேட்க நேரிடுவது எங்கள் பெரும் பாக்கியம்! தாங்கள் சாதாரணக் குடும்பத்துத் தாயாகப் பிறந்திருந்தால் நாங்களெல்லாம் அஞ்சலி செய்யும் மதிப்புக்குரிய பாண்டிமாதேவியாகத் தங்களை அடைந்திருக்க முடியுமா?" என்று உபசாரமாக மறுமொழி கூறினாள் விலாசினி. "எங்களுடைய ஆடலும், பாடலும் எங்கே ஓடிப்போய் விடப் போகின்றன? மகாராணியாருடைய அன்புக் கட்டளை எந்த விநாடியில் கிடைத்தாலும் ஓடி வந்து ஆடவும், பாடவும் காத்திருக்கிறோம். கலைகளை அர்ப்பணம் செய்ய வேண்டிய இடமே இதுதானே?" என்று விநயமாகக் கூறினாள் பகவதி. அவர்கள் இருவரும் கூறியவற்றைக் கேட்ட வானவன்மாதேவியின் வதனத்தில் எத்தனையோ அர்த்தங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கிற அற்புதமான புன்னகை ஒன்று மலர்ந்தது. உலக அநுபவங்களின் வாசனையை அதிகம் நுகர்ந்தறியாத அந்த இளம் பெண்களுக்கு மகாராணியின் சிரிப்புப் புரியவா போகிறது? "குழந்தைகளே! இந்த வயதில் உங்களைப் போன்றவர்களுக்கு இப்படித்தான் தோன்றும். பதவி, படாடோபம், இராஜபோகம் எல்லாவற்றாலும் கிடைக்கக்கூடிய ஆடம்பரம் இணையற்ற பெரும் பேறு என்று நினைப்பீர்கள். ஆனால் அவற்றுக்குப் பின்னால் மறைந்திருக்கக்கூடிய துன்பங்கள், ஆசாபாசங்கள் எல்லாம் உங்களுக்குப் புரியாதவை, விலாசினி! உன் தகப்பனார் உனக்குச் சிலப்பதிகாரம் கற்பித்திருப்பாரே? தொல்காப்பியத்தை அரங்கேற்றிய மாபெரும் அதங்கோட்டாசிரியரின் வழியில் வந்து இன்று தாமும் அதே பேர் பூண்டு விளங்கும் உன் தந்தை தமிழ் இலக்கியக் கடல். அவரிடம் அநேகமாக நீ எல்லா நூல்களையும் கற்றுக் கொண்டிருப்பாய். என்ன, நான் நினைப்பது சரிதானா?" "ஆமாம், தேவி! என் தந்தை குழந்தைப் பருவத்திலிருந்து என்னை வற்புறுத்தி ஆவலோடு அவற்றையெல்லாம் எனக்குக் கற்பித்திருக்கிறார். சிலப்பதிகாரத்தைப் பலமுறை அவரிடம் பாடம் கேட்டிருக்கிறேன். அந்த முத்தமிழ்க் காவியம் என் மனத்தைக் கவர்ந்ததைப் போல் வேறு எதுவும் கவரவில்லை" என்றாள் விலாசினி. "அந்த மகா காவியத்தில் ஓர் அருமையான கட்டம் எனக்கு நினைவுக்கு வருகிறது. குழந்தாய்! மதுரையில் கண்ணகிக்கு தவறிழைத்த பாண்டியன் உயிர் துறந்த செய்தியைச் சாத்தனார் என்ற புலவர், சேர நாட்டில் பேராற்றங்கரைப் படுகையில் செங்குட்டுவன் வந்து தங்கியிருக்கும் போது அவனுக்குக் கூறுகிறார். அந்த அவலச் செய்தியைக் கேட்ட செங்குட்டுவன் இதயத்தில் பெருந்தன்மையான முறையில் அநுதாபம் சுரக்கிறது. அந்த அநுதாபத்தைச் சேரர் பெருவேந்தனான செங்குட்டுவன் எவ்வளவு நாகரிகமாக வெளியிடுகிறான், தெரியுமா? 'ஆகா! என்னைப் போல் சக அரசனாகிய பாண்டியன் ஒரு பெண்ணுக்குத் தவறாக நியாயம் வழங்கியதற்கு நாணித் தன் உயிரையே விட்டுவிட்டான். அரசாளுகிற பரம்பரையில் பிறப்பது மகத்தான அதிர்ஷ்டம் என்று எத்தனை பேர்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். மழை பெய்யாமற் போனால், 'அரசன் சரியில்லை; மழை தவறிவிட்டது' என்பார்கள். மழை அதிகமாகப் பெய்து வெள்ளச் சேதம் ஏற்பட்டுவிட்டாலோ அப்போதும், 'அரசன் சரியில்லை' என்பார்கள். நியாயம் தவறி ஓர் உயிரைக் கொன்று விட்டால் பெரும்பழியை அரசன் சுமக்க நேரிடும். ஓர் அரசனுடைய தோளில் இத்தனை துன்பச் சுமைகள். அப்படி இருந்தும், அரசாளும் குடியில் பிறக்கவில்லையே என்று இந்த அசட்டு மனிதர்கள் வீணாக ஏங்குகிறார்களே!' என்று செங்குட்டுவன் சாத்தனாரிடம் கூறியதாகச் சிலப்பதிகாரத்தில் வருகிறது." "தேவி! இந்த இடத்தில் புலவர் பெருந்தகையான இளங்கோவடிகள் செங்குட்டுவனின் இதயப் பண்பை மிக அருமையாகச் சித்தரித்திருக்கிறார்; உயர்ந்த காவியப் பண்புக்காகப் பாராட்டுவதாக யிருந்தால் இதை அல்லவா பாராட்ட வேண்டும்?" "பெண்ணே, விலாசினி! உங்கள் புகழ்ச்சியும், மகாராணிப் பட்டமும், இந்தக் கோட்டை கொத்தளம் முதலிய அரசபோக ஆடம்பரங்களும் எனக்குச் செங்குட்டுவன் கூறிய இந்தக் கருத்தை ஞாபகப்படுத்தின." மகாராணி இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்த போது நந்தவனத்தில் ஏற்பட்ட குழப்பத்தைப் பார்த்துவிட்டு வருவதற்காகப் போயிருந்த பவழக்கனிவாயரும், அதங்கோட்டாசிரியரும் அங்கே திரும்பி வந்து சேர்ந்தனர். "என்ன! செங்குட்டுவனைப் பற்றி ஏதோ பேச்சு நடக்கிறாற் போலிருக்கிறதே? மகாராணியாரின் சுவாரஸ்யமான இலக்கியச் சம்பாஷணையில் நாங்களும் கலந்து கொள்ளாமல்லவா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார் அதங்கோட்டாசிரியர். "நான் எதையும் உங்களைப் போல வகை தொகையாக விவரித்துச் சொல்ல முடியுமா? அதெல்லாம் சரி! நந்தவனத்திலிருந்துதானே வருகிறீர்கள்? அது என்ன குழப்பம் அங்கே? விவரம் தெரிந்து கொண்டு வந்திருப்பீர்களே! சொல்லுங்கள். நாங்களும் தெரிந்து கொள்கிறோம்" என்று மகாராணியார் அதங்கோட்டாசிரியரை நோக்கிக் கேட்டார். உடனே அதங்கோட்டாசிரியர் பக்கத்தில் திரும்பி, "பவழக்கனிவாயரே! மகாராணியாருக்குச் சொல்லும். நீர் தான் இம்மாதிரி விஷயத்தை நன்றாக வருணித்துச் சொல்லமுடியும்" என்று தம் சமீபத்திலிருந்த பவழக்கனிவாயரைத் தூண்டினார். "கலகத்தைப் பற்றிச் சொல்ல நான் தான் சரியான ஆள் என்று தீன்மானித்து விட்டீராக்கும். பரவாயில்லை! நானே சொல்லுகிறேன்," என்று சிரிப்போடு பீடிகை போட்டுப் பேச்சைத் தொடங்கினார் பவழக்கனிவாயர். "மகாராணி! கோட்டைக்கு வெளியிலிருக்கும் ஏரியிலிருந்து அரண்மனை நந்தவனத்துக்குத் தண்ணீர் கொண்டு வரும் கால்வாய் வழியாக யாரோ நந்தவனத்துக்குள் புகுந்திருக்கிறார்கள். அப்படிப் புகுந்தவர்கள் யார், என்ன நோக்கத்தோடு புகுந்தார்கள், என்பனவெல்லாம் தெரியவில்லை. நிலா முற்றத்துச் சுவரை ஒட்டினாற்போல் இருக்கும் மகிழ மரக்கிளையில் வந்தவர்கள் ஏதோ ஒரு காரணத்தை உத்தேசித்து ஏறியிருக்க வேண்டும். அதனால் தான் சுமை தாங்காமல் அந்தக் கிளை முறிந்திருக்கிறது." "இதென்ன? எல்லாம் அநுமானம் தானா? நேரடியாக ஒன்றும் பார்த்துத் தெரிந்து கொண்டு வரவில்லையா நீங்கள்?" என்று வானவன்மாதேவி குறுக்கிட்டுக் கேட்டார். "தேவீ! நாங்கள் என்ன செய்ய முடியும்? வந்தவர்களில் எவரும் பிடிபடவில்லை. வீரர்கள் அரண்மனை நந்தவனத்தில் சல்லடைக் கண் இடமும் விடாமல் தேடிப் பார்த்து விட்டார்கள். நந்தவனத்து ஈர மண்ணிலும், கால்வாய்க் கரையில் தரையில் பதிந்திருக்கும் அடிச்சுவடுகளிலிருந்தும் ஒருவன் தனியாக வரவில்லை என்று தெரிகிறது. அதைத் தவிர மகிழ மரத்தடியில் ஒரு குத்துவாளும், கால்வாய்க் கரைப் படியில் ஒரு தலைப்பாகையும் விழுந்து கிடந்தன. கோட்டை மெய்க்காப்பாளர்கள் அவற்றை எடுத்துக் கொண்டு போய்ப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஒருவேளை இந்த இரண்டு பொருள்களையும் கொண்டு வந்தவர்களைக் கண்டுபிடிக்க முயன்றால் வெற்றி கிடைத்தாலும் கிடைக்கும்" என்று பவழக்கனிவாயர் கூறி முடித்த போது, கேட்டுக் கொண்டிருந்த வானவன்மாதேவியின் முகத்தில் சிரிப்பில் மலர்ச்சி ஒளிர்ந்தது. "ஏன் சிரிக்கிறீர்கள்?" "சிரிக்க வேண்டிய காரணம் இருந்தது சிரித்தேன். பவழக்கனிவாயரே! உலகியல் அறிவையும், ஞானச் செல்வத்தின் விளைவையும் வளர்க்கக் கூடிய காந்தளூர் மணியம்பலத்தின் தலைவராகிய உமக்குக் கூடவா இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறது?" "இதில் எல்லாம் என்றால்...?" "கோட்டையின் உயரமான பெரிய சுவர்கள், அவைகளைச் சுற்றிலும் ஆழமான அகழி, போதும் போதாதற்கு வாளும், வேலும் சுமந்த மெய்க்காவல் வீரர்கள், சீவல்லப மாறனைப் போல அவர்களுக்கு ஒரு தலைவன் - எல்லாம் எனக்கு வேடிக்கையாகத்தான் இருக்கின்றன. கேவலம் ஐம்புலச் செங்கற்களால் உருவான நிலையற்ற இந்த உடற்கோட்டையைப் பாதுகாக்க இவ்வளவு ஏற்பாடுகளா? எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. மனிதர்களுக்கு ஆத்மபலம் குறையும் போது புறக்கருவிகளின் துணையால் கிடைக்கும் பாதுகாப்பில் நம்பிக்கை விழுகிறது. உண்மையில் இந்த ஏற்பாடுகளால் என்னுடைய ஆத்ம பலத்தை நலியச் செய்கிறீர்கள் நீங்கள்! கோட்டைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்தவர்கள் கன்னியாகுமரியில் என்னைக் கொலை செய்ய முயன்று முடியாமல் ஏமாந்து போனவர்களாகவே இருக்கலாம். அவர்களைப் போன்ற ஒரு சிலரின் கையால்தான் எனக்குச் சாவு என்றிருக்குமானால் அதை உங்களால் தடுத்துவிட முடியுமா?" "தேவீ! இன்று மாலையிலிருந்து உங்கள் பேச்சு பற்றற்ற விரக்தி நிலையையே காட்டுகிறது. இவ்வளவு நம்பிக்கை இழக்கும்படியான பெருந் துன்பங்கள் எவையும் வரவில்லையே?" என்று உருக்கம் நிறைந்த தொனியில் விசாரித்தார் அதங்கோட்டாசிரியர். "ஆசிரியரே! இதுவரையில் வந்த துன்பங்கள் போதாதா? இன்னும் என்ன வரவேண்டும்?" "ஒரு துன்பமுமில்லை! நீங்களாகவே என்னென்னவோ நினைத்துக் கொள்கிறீர்கள். குமரித் தெய்வத்தின் அருளும் தென்பாண்டி நாட்டு மக்களின் குறைவில்லாத அன்பும் இருக்கிறவரை உங்களுக்கு எவராலும் கேடு சூழ முடியாது. தங்களுடைய அருமந்தப் புதல்வரும் குமாரபாண்டியருமான இளவரசர் அருகில் இல்லையே என்று கவலைப்படலாம். நாளைக் காலையில் நடக்க இருக்கும் மகாசபைக் கூட்டத்தில் செய்யப் போகிற ஏற்பாடுகளின் மூலம் அந்தக் கவலையையும் போக்கிவிடுகிறோம். இளவரசர் எங்கிருந்தாலும் அவரை உடனே அழைத்துக் கொண்டு வருவதற்கு வேண்டிய செயல் திட்டங்களெல்லாம் நாளைக் கூட்டத்தில் உருவாகிவிடும்" என்றார் ஆசிரியர். "அதோடு விட்டு விடமாட்டோம். இளவரசர் திரும்பி வந்ததும் உடனடியாக மகுடாபிஷேகத்தையும் கூடவே திருமணத்தையும் செய்து முடித்து விட்டால் தான் மகாராணியாருக்குப் பூரணமாகத் திருப்தி ஏற்படும்" என்று பவழக்கனிவாயர் கூறியபோது அங்கே அவர்களோடு உட்கார்ந்திருந்த விலாசினியும், பகவதியும் தலை குனிந்து கொண்டனர். அந்த இளம் பெண்களின் கன்னங்களில் ஏன் அந்தச் சிரிப்பு; கண்களில் மின்னும் அந்த ஒளிக்கு என்ன பெயர் சொல்லுவது? எப்போதோ, சில ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை அரண்மனையில் கண்டிருந்த குமார பாண்டியரின் சுந்தரத் தோற்றம், அவர்கள் நினைவில் அப்போது காட்சியளித்திருக்க வேண்டும். பெண்களுக்கு நாணம் எவ்வளவு அழகாக இருக்கிறது! எத்தனையோ சமயங்களில் எத்தனையோ காரணங்களுக்காகப் பெண்களுக்கு நாணம் ஏற்படுகிறது. ஆனால் ஒரே ஒரு சமயத்தில் மட்டும் நாணத்தில் முழுமையான கனிவைக் காண முடிகிறது. திருமணமாகாத இளம் பெண்களுக்கு நடுவில் திருமணத்தைப் பற்றிப் பேசினால், உண்டாகிற நாணம் இருக்கிறதே அதற்கு ஈடும் இல்லை, இணையும் இல்லை. மேலும் சிறிது நேரம் வானவன்மாதேவிக்கு ஆறுதலை உண்டாக்குகிற விதத்தில் பேசிக் கொண்டிருந்து விட்டுப் பவழக்கனிவாயரும், அதங்கோட்டாசிரியரும் உறங்குவதற்குச் சென்றனர். போகும்போது பகவதியையும், விலாசினியையும் தனியே அழைத்து, "பெண்களே! இன்று மகாராணியின் மனநிலை சரியில்லை. கசப்பும், விரக்தியும் அடைந்த நிலையில் புண்பட்டு நொந்து போயிருக்கிறார். எந்த விநாடியில் அவருக்கு என்ன தோன்றுமென்று ஒன்றும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. நீங்கள் இருவரும் இங்கேயே மகாராணியோடு படுத்துக் கொள்ளுங்கள். ஆடவர்களாகிய நாங்கள் இவ்வளவு நாழிகைக்கு மேலும் இங்கே அந்தப்புரப் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருப்பது முறையல்ல. கீழே மாளிகையில் போய்ப் படுத்துக் கொள்கிறோம். நீங்கள் இருவரும் மகாராணியைக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று கூறி எச்சரித்து விட்டுச் சென்றனர். இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டது. அந்தப்புரத்துப் பணிப்பெண்கள் தீபங்களை அணைத்துக் கதவுகளை ஒவ்வொன்றாக அடைத்துக் கொண்டிருந்தனர். சயனக் கிருகங்களின் தூப கலசங்களிலிருந்து கிளம்பிய அகிற்புகையின் நறுமணம் காற்றோடு இழைந்து எங்கும் பரவிக் கொண்டிருந்தது. வானவன்மாதேவியின் பள்ளியறையில் விளக்கு ஒன்று மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. அங்கிருந்த மூன்று மஞ்சங்களில் இரண்டில் கொடிகள் துவண்டு நெளிந்து கிடப்பது போல் பகவதியும், விலாசினியும் படுத்துக் கொண்டிருந்தனர். நடுவாக இருந்த மூன்றாவது மஞ்சத்தில் வானவன்மாதேவி உட்கார்ந்தபடியே ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். "தேவீ! இப்படியே விடிகின்றவரை விழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கப் போகிறீர்களா? களைப்புத்தீர உறங்கினால் என்ன?" என்றாள் பகவதி. "தூக்கம் வரவில்லையே, குழந்தாய்! நான் என்ன செய்வேன்? நீ தூங்கு!" என்று பதில் கூறினார் மகாராணி. விலாசினியோ படுத்த சில வினாடிகளுக்குள்ளேயே ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டு விட்டாள். பகவதி அதற்கு மேல் மகாராணியை வற்புறுத்தும் உரிமை தனக்கு இல்லையென்று கண்களை மூடிக்கொண்டு தலையணையில் சாய்ந்தாள். நன்றாக உறங்கவுமில்லை. நன்றாக விழித்துக் கொண்டிருக்கவுமில்லை. இரண்டுக்கும் நடுப்பட்ட ஒரு நிலையில் அவள் படுக்கையில் கிடந்தாள். கடைசியாக, அவளைக் கோட்டைக்குள் ஒரு திறந்த வெளியான இடத்தில் கொண்டு போய் விட்டது. அந்த வழி, 'கம்'மென்று பவழ மல்லிகைப் பூக்களின் மணம் கமழ்ந்தது. அது அரண்மனைப் பெண்கள் நீராடும் பகுதி. சிறுசிறு குளங்கள். அவற்றில் நிலா ஒளியையும் வானையும் பிரதிபலிக்கும் தெளிவான நீர். குளங்களின் நடுவே நீராழி மண்டபங்கள். சுற்றிலும் அடர்ந்த பவழ மல்லிகை மரங்கள். நிலாத் திகழும் வானவொளியின் நட்சத்திரங்களெல்லாம் அந்த மரக் கிளையில் வந்து அப்பிக் கொண்டது போல் வெண்ணிற மலர்கள் மலர்ந்திருந்தன. 'கீ' என்ற ஓசை நிறைந்திருந்தது. அதோடு யாரோ மெல்லிய குரலில் விசும்பி அழுகிற ஒலி! - பகவதி நாலா பக்கமும் மிரண்டு பார்த்துக் கொண்டே அந்த ஒலி வருகிற இடத்தைக் கண்டுபிடிப்பதற்காகச் சுற்றிச் சுற்றி வந்தாள்; பவழ மல்லிகை மரங்களையும் நீராழி மண்டபத்தையும் கடந்து தென் கோடியில் வந்து பார்த்தாள். கோட்டைச் சுவரை ஒட்டினாற் போலிருந்த ஒரு பாழுங் கிணற்றின் விளிம்பில் மகாராணி விரித்த கூந்தலும் அழுத கண்களுமாக அமர்ந்து கொண்டிருந்தார். ஓசைப்படாமல் பின்புறமாக மெதுவாக நடந்து போய் மகாராணி வானவன்மாதேவியின் கைகளைப் பற்றிக் கொண்டாள் பகவதி. |