![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
முதல் பாகம் 20. கோட்டையில் நடந்த கூட்டம் நாராயணன் சேந்தன் கேட்ட கேள்வியைச் செவியுற்றதும் தளபதி வல்லாளதேவன் திகைத்துப் போனான். "என்ன கேட்டாய்?" - மீண்டும் சந்தேகத்தோடு வினவினான் தளபதி. "ஒன்றுமில்லை! நேற்று இரவோடு இரவாக யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நீங்களாகவே படகைச் செலுத்திக் கொண்டு அவ்வளவு அவசரம் அவசரமாய் ஓடி வந்தீர்களே! வந்த காரியத்தைச் செய்தாயிற்றோ இல்லையோ என்று தான் கேட்டேன்." தளபதி சேந்தனைச் சந்தேகத்தோடு பார்த்தான். அந்தக் குட்டையன் தன்னை வெற்றி கொண்டு விட்டது போல் எண்ணிச் சிரித்த சிரிப்பு தளபதி வல்லாளதேவனின் உள்ளத்தில் எரிச்சலை உண்டாக்கியது. "எனக்கு அங்கே உறக்கம் வரவில்லை. படகுத் துறைக்கு வந்து பார்த்தேன். படகு தயாராக இருந்தது. எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன்; அவ்வளவுதான். நான் அங்கிருந்து புறப்பட்டதற்கு வேறு எந்த முக்கியமோ அவசரமோ இல்லை" என்றான் தளபதி. நாராயணன் சேந்தன் இதைக் கேட்டு நமட்டுச் சிரிப்புச் சிரித்தான். "தளபதி! கொல்லர் தெருவிலேயே ஊசி விற்க நினைக்கிறீர்கள் நீங்கள். ஆபத்துதவிப் படைகளைக் கோட்டைக்கு அனுப்ப வேண்டுமென்பதற்காகவே நீங்கள் இங்கு வந்ததும் எனக்குத் தெரியும். இப்போது அனுப்பிவிட்டுத்தான் இங்கே நிற்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்." தளபதி ஆத்திரத்தோடு சேந்தனை உற்றுப் பார்த்தான். நாஞ்சில் நாட்டு வேளாளப் பெருமக்கள் விதை நெல்லைச் சேர்த்து வைக்கும் நெல்லுக்குதிர் போன்ற உருவத்தையுடைய சேந்தனைக் கோபம் தீர உதைத்து விட வேண்டும் போல் கை துறுதுறுத்தது தளபதிக்கு. 'இடையாற்று மங்கலம் நம்பியைப் போன்ற ஒரு மாபெரும் இராஜதந்திரிக்கு ஒற்றனாக வேலை செய்ய இவன் முற்றிலும் தகுதியானவன் தான். அவருடைய திறமையான அரசியல் நிர்வாகத்தின் வெற்றியில் சரிபாதி இந்த ஒற்றனுக்கு உரியது' என்று தன் மனத்தில் எண்ணி வியந்து கொண்டான். 'அவன் அந்த அதிகாலையில் தன்னைத் தேடிக் கொண்டு எதற்காக அங்கு வந்தான்? தான் அங்கிருப்பதை அவன் எப்படித் தெரிந்து கொண்டான்? ஆபத்துதவிப் படைகளை அனுப்புவதற்காகத் தான் அங்கே வந்திருக்கும் நோக்கத்தை அவன் எப்படிப் புள்ளி பிசகாமல் அனுமானிக்க முடிந்தது?' என்று பலவிதமாக எண்ணி மனம் குழம்பினான் தளபதி வல்லாளதேவன். "தென் திசைப் பெரும் படையின் மகா சேனாதிபதியும் இளமைப் பருவத்திலேயே பல போர்களில் வெற்றிவாகை சூடியவரும், சூழ்ச்சித் திறன் மிக்கவருமாகிய தங்களையும் கூற்றத் தலைவர் கூட்டத்துக்கு அழைத்து வரச் சொல்லி மகாமண்டலேசுவரர் அடியேனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அதை நிறைவேற்றவே இங்கு வந்தேன்." நாராயணன் சேந்தன் இதைக் கூறிய போது அவன் சாதாரணமான விநயத்தோடு தான் அப்படிப் பேசுகிறானா? அல்லது தன்னைக் குத்தலாகக் கேலி செய்கிறானா? என்று தளபதிக்குச் சந்தேகமாக இருந்தது. அந்தச் சந்தேகத்தை மனத்துக்குள் அடக்கிக் கொண்டு, "சேந்தா! நீ என்னை அழைத்துக் கொண்டு போக வந்திருப்பதும், அதற்காக மகாமண்டலேசுவரர் உன்னை என்னிடம் அனுப்பியதும் வேடிக்கையாக அல்லவா இருக்கிறது? கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் வழக்கமாகக் கூட்டத்துக்கு வரவேண்டியவன் தானே நான்?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான். "அப்படி இல்லை! நீங்கள் நேற்றிரவு திடீரென்று அங்கிருந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு விட்டதால் கூட்டத்துக்கு வருவீர்களோ, வரமாட்டீர்களோ என்று அவருக்குச் சந்தேகம்!" "சில நாட்களாக மகாமண்டலேசுவரருடைய சந்தேகத்துக்கு யாரும் எதுவும் தப்ப முடிவதில்லை போலிருக்கிறது!" வேண்டுமென்றே சேந்தனின் வாயைக் கிண்டுவதற்காகத் தான் அவன் இவ்வாறு கூறினான். ஆனால் தளபதியின் பேச்சை விழிப்போடு கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சேந்தன் சுடச்சுடப் பதில் சொன்னான். "ஆமாம்! ஆமாம்! இப்போதெல்லாம் தென்பாண்டி நாட்டு அரசாட்சியைத் தங்கள் பலத்தினால் மட்டுமே காப்பதாக எண்ணிக் கொண்டு மகாமண்டலேசுவரர் மேலேயே சிலர் சந்தேகப் படுகிறார்களாமே!" சேந்தன் தன்னைத்தான் குத்திக் காட்டுகிறான் என்று தளபதிக்குப் புரிந்து விட்டது. ஆனாலும் அதைப் புரிந்து கொள்ளாதது போல் வேண்டுமென்றே அவன் சிரித்து மழுப்பினான். அதன் பின் அவர்கள் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. தளபதி வல்லாளதேவன் நீராடிக் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வருகிறவரை சேந்தன் காத்திருக்க வேண்டியதாயிற்று. இருவரும் கூற்றத்தலைவர் கூட்டத்துக்காக அரண்மனைக்குப் புறப்பட்ட போது பொழுது நன்றாகப் புலர்ந்து வெயில் பரவிவிட்டது. படைப்பள்ளியிலிருந்து சிறிது தொலைவு சென்றதும் நேரே புறத்தாய நாட்டு அரண்மனைக்குச் செல்லும் வழியை விட்டுவிட்டுச் சுற்றி வளைத்துத் திருநந்திக் கரை வழியே அரண்மனை செல்லும் சாலையில் குதிரையை செலுத்தினான் சேந்தன். அந்தப் பாதையில் போகாமல் தளபதி குதிரையின் கடிவாளத்தைச் சுண்டி இழுத்து நிறுத்தினான். தளபதி பின் தங்கியதைப் பார்த்துச் சேந்தனும் குதிரையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டு திரும்பி, "என்ன தளபதி ஏன் நின்று விட்டீர்கள். நேரமாகவில்லையா?" என்று கேட்டான். "நீ போகிற பாதையாகப் போனால் கூட்டமெல்லாம் முடிந்த பின்புதான் அரண்மனைக்குப் போய்ச் சேரலாம். இதோ அரண்மனைக்கு நேர்பாதை இருக்கும் போது ஏன் திருநந்திக் கரையைச் சுற்றிக் கொண்டு போக வேண்டுமென்கிறாய்?" என்று தளபதி வல்லாளதேவன் சற்றுச் சினத்தோடு நாராயணன் சேந்தனை வினவினான். "பறளியாற்றில் உடைப்பெடுத்து வெள்ளம் அந்தச் சாலையில் பெரும் பகுதியை அழித்து விட்டதே! அது உங்களுக்குத் தெரியாதா? காலையில் மகாமண்டலேசுவரர் கூடத் திருநந்திக் கரைவழியாகச் சுற்றித்தான் அரண்மனைக்குப் போயிருக்கிறார்." "ஓஹோ! அதுவா செய்தி? அப்படியானால் சரிதான். திருநந்திக் கரை வழியே போகலாம். விடு குதிரையை" - தளபதியின் குதிரை திருநந்திக் கரைச் சாலையில் திரும்பியது. தளபதி வல்லாளதேவனையும், இடையாற்று மங்கலம் நம்பியின் ஒற்றனான நாராயணன் சேந்தனையும் இப்படியே திருநந்திக்கரை போகும் நெடுஞ்சாலையில் செல்லவிட்டு நாம் புறத்தாய நாட்டு அரண்மனைக்குச் சென்று அங்கு நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளைச் சிறிது கவனிப்போம். வேறு வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த கூற்றத் தலைவர்கள் அரண்மனை மந்திராலோசனை மண்டபத்தில் கூடியிருந்தார்கள். கூட்டத்துக்கு முக்கியமான இருவர் யாரோ அவர்கள் மட்டும் இன்னும் வந்து சேரவில்லை. மகாமண்டலேசுவரர் இடையாற்று மங்கலத்திலிருந்தே இன்னும் வரவில்லை. அவர் வந்ததும் தமக்குச் சொல்லியனுப்பினால் தாம் உடனே புறப்பட்டு வந்துவிடுவதாக மகாராணி வானவன்மாதேவி அந்தப்புரத்திலிருந்து சொல்லியனுப்பியிருந்தார். தனிமையாக மண்டபத்தில் அமர்ந்திருந்த கூற்றத் தலைவர்கள் தங்கள் மனம் போன போக்கில் பேசித் தென்பாண்டி நாட்டு அரசியல் நிலைமை பற்றி விவாதிக்கத் தொடங்கினார்கள். அப்போது அங்கே கூடியிருந்த கூற்றத் தலைவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாத இரகசியங்களைக் கூட அவர்கள் பேசினார்கள். அப்போது அந்த இடத்தில் எதைப் பேசலாம், எதைப் பேசக்கூடாது என்ற கட்டுப்பாடு இன்றி அவர்கள் தாராளமாகப் பேசியதற்குக் காரணம் தனிமைதான். தங்களை விடப் பெரியவர்கள், தங்களைக் கட்டுப்படுத்தக் கூடியவர்கள் அப்போது யாரும் இல்லை என்ற துணிவுந்தான். அவர்கள் எல்லோரும் நன்றாகத் தமிழ் நூல்களைக் கற்றுத் தன்னடக்கமும், பண்பும் நன்றாக வாயக்கப் பெற்றவர்தாம். பொறுப்பின்றி வாய்க்கு வந்தபடி பேசுதல், அளவுக்கு அதிகமாக உணர்ச்சி வசப்படுதல் இவற்றால் விளையும் கேடுகளைத் திருக்குறளில் படித்திருந்தார்கள்.
'நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க் கிறுதி யாகிவிடும்.' என்றெல்லாம் படித்திருந்தால் மட்டும் போதுமா? மந்திராலோசனை மண்டபத்தின் அரங்கத்தைச் சுற்றிக் கட்டியிருந்த பட்டுத் திரைச் சீலைக்குப் பின்னல் மறைந்து நின்று செவிப்புலனின் உணர்வைக் கூர்மையாக்கிக் கொண்டு ஒன்று விடாமல் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு மனித உருவத்தைப் பார்த்திருந்தால் அவர்கள் அப்படிப் பேசியிருக்க மாட்டார்கள். "இந்தத் தென்பாண்டி நாட்டுக்கு ஒரு பொல்லாத சோதனைக் காலம். தேசத்தின் பெரிய பெரிய அரசியல் பொறுப்புகள் தாய் இழந்த பிள்ளைகளைப் போல் ஆகிவிட்டன. எவனோ ஊர் பேர் தெரியாத ஒற்றன் மகாராணியாரை வேல் எறிந்து கொல்லத் துணிந்து விட்டான் என்றால் நம்முடைய வீரத்துக்கு எவ்வளவு பெரிய அவமானம்?" என்றார் தோவாழைக் கூற்றத்து நன்கனிநாதர். "மகாமண்டலேசுவரர் இடையாற்று மங்கலம் தீவை விட்டு அந்தப்புறம், இந்தப்புறம் அசையாமல் நாட்டு நிலையைப் பற்றிக் கவலையே இன்றி உட்கார்ந்திருக்கிறார். தென் திசைப் படைகளும் படைத் தலைவர்களும் வேளை தவறாமல் உடல் கொழுக்கத் தின்று விட்டுப் பொழுது போகாமல், படைப்பள்ளியில் தாயமும், சதுரங்கமும் விளையாடிக் கொண்டிருக்கிறார்களாமே? இப்படி இருந்தால் நாடு எப்படி உருப்படும்?" என்று ஆத்திரத்தோடு சொல்மாரி பொழிந்தார் பாகோட்டுக் கூற்றத்துப் பரிமேலுவந்த பெருமாள். "அது சரி, ஐயா! தளபதி என்று ஒருவர் மகா சேனாதிபதிப் பட்டம் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாரே! அவருக்குக் கண் அவிந்து போயிற்றா? அரச குடும்பத்தாருக்குப் பயங்கரமான ஆபத்துகள் ஏற்படுகிற சூழ்நிலையை அறிந்தும் ஆபத்துதவிப் படைகளை அனுப்பாமல் இருக்கலாமா? இப்படிப்பட்ட சமயங்களில் கூட உதவி செய்ய முடியாமல் அவர்கள் எதற்காகத்தான் இருக்கிறார்கள்?" என்று பொன்மானைக் கூற்றத்துக் கழற்கால் மாறானார் தம்முடைய மனக் கொதிப்புப் புலப்படும்படி பேசினார். "காணாமற் போன குமார சக்ரவர்த்தியைத் தேடுவதற்காக இதுவரை மகாமண்டலேசுவரரோ, தளபதியோ ஏதாவது முயற்சி செய்திருக்கிறார்களா? பொறுப்புள்ளவர்களே இப்படி இருந்தால் நாமெல்லாம் என்ன செய்ய முடியும்? இளவரசர் இராசசிம்ம பாண்டியர் கடல் கடந்து ஈழ நாட்டில் மறைந்து வசிப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் இளவரசர் பகைவர்களுக்காகப் பயந்து தென்பாண்டி நாட்டு எல்லைக்குள்ளேயே மறைந்து வசிக்கிறார் என்கிறார்கள். எது உண்மையென்று நமக்குத் தெரியவில்லை. இன்றையக் கூட்டத்தில் இதைப் பற்றியெல்லாம் விரிவாகப் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும்!" என்று தம்முடைய கருத்தைத் தெளிவாகவும், நிதானமாகவும் ஆனால் அழுத்தமாகவும் எடுத்துக் கூறினார் அருவிக்கரைக் கூற்றத்து அழகிய நம்பியார். "இந்தக் குழப்பமான சூழ்நிலைகளால் மகாராணி மனம் நொந்து விரக்தியடைந்து போயிருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். மகாராணி வானவன்மாதேவி இந்த நாட்டில் கன்னியாகுமரித் தெய்வத்துக்கு அடுத்தபடியாக மரியாதைக்கும், வழிபாட்டுக்கும் உரியவர்கள். அவர் மனம் கலங்குமாறு செய்வது நம்முடைய பெருந்தன்மைக்கே இழுக்கு" என்று உணர்ச்சி நிறைந்த உருக்கமான குரலில் மீண்டும் அழுத்திக் கூறினார் முதலில் பேச்சைத் தொடங்கிய நன்கனிநாதர். "தாம் அமர பதவி அடைந்த பின்னர் இப்படியெல்லாம் நம்முடைய நாட்டுக்கும், புதல்வனுக்கும், பட்டத்தரசி வானவன்மாதேவியார்க்கும் துன்பங்களும், தொல்லைகளும் ஏற்படுமென்று பராந்தக பாண்டியச் சக்ரவர்த்தி கனவிலாவது எண்ணியிருப்பாரா? அவர் இருந்தால் தான் இப்படிப்பட்ட நிலைகள் ஒன்றும் ஏற்பட்டிருக்க முடியாதே?" என்று மிகுந்த ஏக்கத்தோடு கூறிப் பெருமூச்சு விட்டார் மற்றொரு கூற்றத் தலைவர். அவர்கள் இப்படி ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருந்த போது மந்திராலோசனை மண்டபத்து வாசலில் யாரோ பலர் பேசிக் கொண்டே உள்ளே வரும் ஒலி கேட்டது. ஒரு சேவகன் முன்னால் வேகமாக ஓடி வந்து, "மகாமண்டலேசுவரரும், மகாராணியும் வந்து கொண்டிருக்கிறார்கள்" என்று கூற்றத் தலைவர்களுக்கு முன் தகவல் கொடுத்தான். மூலைக்கொருவராகத் தங்களுக்குத் தோன்றியபடி இருக்கைகளில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தவர்கள் மரியாதையாக எழுந்து நின்றனர். தங்களை விட அதிகாரமும், மதிப்பும், பெருமையும் உள்ளவர்களை எதிர்பார்த்துச் சாதாரணமான மனிதர்கள் காத்திருக்கும் போது ஏற்படும் ஒரு வகை அமைதி அங்கே திடீரென்று நிலவியது. வேலேந்திய வீரர் ஒடுக்கமாக ஒதுங்கி நின்று கொண்டனர். மகாராணி வானவன்மாதேவியாரும், இடையாற்று மங்கலம் நம்பியும் மண்டபத்துக்குள் நுழைந்தனர். அவர்களுக்குப் பின்னால் அதங்கோட்டாசிரியர் பிரானும், பவழக்கனிவாயரும் வந்தனர். மகாராணியோடு ஆசிரியர் மகள் விலாசினியும், தளபதியின் தங்கை பகவதியும் உடன் வந்திருந்தனர். மண்டபத்தில் இருந்த கூற்றத் தலைவர்கள் எல்லோரையும் வணங்கி எதிர்கொண்டு வரவேற்றனர். "தளபதி வல்லாளதேவன் எங்கே? அவனை அழைத்து வரச் சொல்லி சேந்தனை அனுப்பினேனே! இன்றைய கூட்டத்தில் அவன் கலந்து கொள்வது அவசியமாயிற்றே? இன்னும் வரவில்லையோ?" என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டார் இடையாற்று மங்கலம் நம்பி. "வரவில்லை" என்று அவர்களிடமிருந்து பதில் கிடைத்தது. மண்டபத்தின் நான்கு புறமும் கண்களைச் செலுத்திச் சிறிது நேரம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் மகாமண்டலேசுவரர். "இதென்ன? இந்த மண்டபத்தில் ஏற்கெனவே காற்றுக் குறைந்து புழுக்கமாக இருக்கிறது. இந்தப் பட்டுத் திரைகள் எதற்கு? இவற்றை அகற்றி விடுங்கள்" என்று அங்கு நின்றிருந்த மெய்க்காப்பாளர்களை நோக்கித் திடீரென்று ஒரு கட்டளை பிறப்பித்தார் அவர். அப்போது திரைக்குப் பின்னால் யாரோ அவசரமாக நடந்து செல்லும் ஒலி கேட்டது. |