![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில் |
தமிழ் திரை உலகம் (www.tamilthiraiulagam.com) - தற்போதைய வெளியீடு :
எண்ணி இருந்தது ஈடேற - அந்த 7 நாட்கள் (1981) |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
காடை - (Quail) |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : நூல்கோல் - Knol Khol |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : சோலைக் கிளி - 7 |
முதல் பாகம் 31. செம்பவழத் தீவு இடையாற்று மங்கலம் மாளிகையில் பாண்டிய மரபின் மரியாதைக்குரிய மாபெரும் அரசுரிமைச் சின்னங்கள் கொள்ளை போன மறுநாள் அங்கே ஒருவகைப் பயமும் திகைப்பும் பரவி விட்டன. சாவு நிகழ்ந்த வீடு போல், மழையைக் கொட்டித் தீர்த்து விட்ட வானம் போல், ஓர் அமைதி. பறிகொடுக்கக்கூடாத பொருளைப் பறிகொடுத்து விட்டால் ஏற்படுமே அந்த அமைதி, இடையாற்று மங்கலத்தில் சோகம் கலந்து சூழ்ந்திருந்தது. அமைதியும், துயரமும் கலந்த இந்தச் சூழ்நிலையிலிருந்து நேயர்களை அழகான கடல் பகுதிக்கு அழைத்துக் கொண்டு போகப் போகிறேன். தென் மேற்குக் கோடியில் அலைகொட்டி முழக்கும் மேலைக் கடலின் நுழைவாயிலெனச் சிறந்து விளங்கும் விழிஞம் துறைமுகத்தைப் பற்றி நம் நேயர்கள் முன்பே அறிந்து கொண்டிருப்பார்கள். அந்தத் துறைமுகத்தில் தானே நாராயணன் சேந்தன் என்ற அபூர்வமான மனிதனை நேயர்களுக்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தி வைத்தேன்! இடையாற்று மங்கலத்தில் கொள்ளை போன மறுநாள் நண்பகல் உச்சி வேளைக்கு விழிஞம் துறைமுகத்துக்குத் தெற்கே ஐந்து காத தூரத்தில் ஒரு வனப்பு மிக்க தீவின் கரையோரமாகக் கடலில் மிதக்கும் வெண்தாமரை போல் அழகிய கப்பலொன்று விரைந்து செல்வதைக் காண்கிறோம். ஆ! அதென்ன உச்சிவேளையின் ஒளிக்கதிர்களில் அந்த மரக் கலத்தின் பாய்மரக் கூம்பில் ஆண் சிங்கம் ஒன்று பாய்வதற்குத் தயாராகிக் கொண்டிருப்பது போல் ஒரு காட்சி தெரிகிறதே! அல்ல! அல்ல! அது ஒரு கொடி தான். அந்தக் கொடி காற்றில் ஆடி அசையும் போதெல்லாம் அதில் தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் சிங்கத்தின் உருவம் உயிர்ப்பெற்றுப் பாய்வது போல் பார்க்கிறவர்களின் கண்களில் ஒரு பிரமையை உண்டாக்கி விடுகிறது. தீவின் பெயர் தான் அப்படியென்றால் அவர்களுடைய நிறம் கூடவா செம்பவழம் போலிருக்க வேண்டும்? கூந்தலில் அடுக்கடுக்காக மயில் தோகைகளையும், முழு நீளத் தாழை மடல்களையும் சூடிக் கொண்டு அன்னமும், கிளியும், குயிலும், மானும் கூட்டம் கூட்டமாக ஓடி வந்தாற் போலத் துள்ளி ஓடி வரும் அந்தத் தீவின் யுவதிகளை எப்படி வருணிப்பது? அந்த மாதிரி ஒளியும் வசியமும் நிறைந்த கரிய கண்களை அவர்களுக்கு மட்டும் தான் அமைக்க வேண்டுமென்று படைத்தவன் தீர்மானம் செய்து வைத்துக் கொண்டிருந்தானோ? அவ்வளவுதான். அடடா? அந்தத் தீவில் தான் என்ன எழில், எவ்வளவு இயற்கைக் கவர்ச்சி. தீவுக்கு என்ன பெயர் என்று சொல்லவும் வேண்டுமோ? கரையோரமாக இரத்தக் காடு முளைத்தது போல படர்ந்து கிடக்கும் செம்பவழத்தீவு! எத்தனை இனிமையான பெயர். மேலைக் கடலில் மூலைக்கு மூலை பரவிக்கிடக்கும் பன்னீராயிரம் 'முந்நீர்ப் பழந்தீவு'களில் அதுவும் ஒன்று. கொத்துக் கொத்தாகக் கடலை நோக்கித் தொங்குவது போல் மேகங்கள், தீவின் பசுமை, கப்பல் செல்லும் அழகு, கடல் மக்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசியது போல் பவழக் கொடிகள் - ஆகிய இவற்றின் அழகில் மயங்கி, அந்தக் கப்பலில் பிரயாணம் செய்வோர் யார்? எதற்காகப் பிரயாணம் செய்கின்றனர்? எங்கே பிரயாணம் செய்கின்றனர்? என்பது போன்றவற்றை நாம் கவனிக்காமல் விட்டுவிடக் கூடாதல்லவா? அதோ கப்பல் செம்பவழத் தீவின் கரையோரமாக நிற்கிறது. பயங்கரமான மீசையோடு காட்சியளிக்கும் ஒரு முரட்டு மீகாமன் (மாலுமி) கீழே குதித்துத் தீவின் கரையோரத்துத் தென்னைமரம் ஒன்றில் கப்பலை நங்கூரம் பாய்ச்சுகிறான். ஏதோ, தேர், திருவிழா அதிசயங்களைப் பார்க்க ஓடி வருகிறவர்களைப் போல் அந்தத் தீவில் ஆண்களும், பெண்களும் கப்பலைப் பார்க்க ஓடி வருகிறார்கள். ஆகா! அந்தத் தீவின் மக்கள் தான் என்னென்ன விநோதமான முறைகளில் உடையணிந்திருக்கிறார்கள். முகத்திலும், விழிகளிலும், வியப்பும், புதுமையும் இலங்கக் கப்பல் நின்ற இடத்தைச் சூழ்ந்து கொண்டார்கள் அவர்கள். மீகாமன் அவர்களை வழிவிட்டு ஒதுங்கி நின்று கொள்ளுமாறு அதட்டினான். இப்போது அந்தக் கப்பலிலிருந்து செம்பவழத் தீவின் கரையில் இறங்கப் போகிறவர்களைப் பார்க்கலாம். உள்ளேயிருப்பவர்கள் கரையில் இறங்குவதற்காகத் தூக்கிக் கட்டியிருந்த மரப் படிக்கட்டைத் தணிவாக இறக்கி வைத்தான் மீகாமன். முதலில் குமார பாண்டியன் இராசசிம்மன் சிரித்த முகத்தோடு கீழே இறங்கினான். தாடி மீசையோடு கூடிய பழைய துறவித் தோற்றத்துக்கும் இப்போதைய இளமைத் தோற்றத்துக்கும் தான் எவ்வளவு வேற்றுமை? அடுத்து முதல் நாள் அவனைத் தேடி இடையாற்று மங்கலத்துக்கு வந்திருந்தவர்களும் கப்பலிலிருந்து இறங்கினார்கள். "சக்கசேனாபதி! இந்நேரத்துக்குள் செய்தி தென்பாண்டி நாடு முழுவதும் பரவியிருக்கும். அரண்மனையில் கூற்றத் தலைவர் கூட்டத்துக்காகப் போய் தங்கியிருக்கும் மகாமண்டலேசுவரருக்கு இடையாற்று மங்கலத்திலிருந்து கொள்ளை போன தகவல் கூறி அனுப்பப்பட்டிருக்கும்." தன்னோடு கப்பலிலிருந்து இறங்கியவர்களின் மூத்தவரும், வீரகம்பீரம் துலங்கும் தோற்றத்தை உடையவருமான ஒருவரைப் பார்த்து இராசசிம்மன் நகைத்துக் கொண்டே இவ்வாறு கூறினான். "இளவரசே! திருடினவர்கள் திருட்டுக் கொடுத்தவர்களுக்காக அனுதாபப்படுவது உண்டோ?" என்றார் சக்கசேனாபதி. "சக்கசேனாபதி! இந்த இடத்தில் பயனப்டுத்தத் தகுதியற்ற ஒரு வார்த்தையை நீங்கள் பயன்படுத்தி விட்டீர்கள். யார் திருடினவன்? யார் திருட்டுக் கொடுத்தவன்? என்றோ ஒரு நாள் என் தலையில் சூட்டிக் கொள்ளப் போகிற முடியையும், இடையில் அணிபெற வேண்டிய வாளையும் இன்றே பாதுகாப்பான இடத்தில் கொண்டு போய் மறைத்து வைக்கப் போகிறேன். பொருளுக்கு உரியவர்கள் பொருளை எடுத்துச் சென்று பத்திரப்படுத்துவதைத் திருட்டு என்று கூறக் கூடாது." சக்கசேனாபதி சிரித்தார். கம்பீரமான ஆண் சிங்கம் போன்ற அவருடைய முகத் தோற்றத்திலும், பார்வையிலும் ஒருவித மிடுக்கு இருந்தது. அவர் முகத்தைப் பார்க்கும் போது பிடரி மயிரோடு கூடிய ஓர் ஆண் சிங்கத்தின் நிமிர்ந்த பார்வை நினைவுக்கு வராமற் போகாது. வீரத்தின் மதர்ப்பும் ஆண்மையும் விளங்கும் பருத்த, உயர்ந்த தோற்றம் அவருடையது. இந்தக் கதையில் மேற்பகுதிகளில் இன்றியமையாத சில நிகழ்ச்சிகளுக்கும், மாறுதல்களுக்கும் காரணமாக இருக்கப் பொகிறவர் சக்கசேனாபதி. அவர் ஈழ மண்டலப் பேரரசின் மகா சேனாபதி. குமார பாண்டியனின் உற்ற நண்பரும் இலங்கைத் தீவின் புகழ்மிக்க வேந்தருமாகிய காசிப மன்னரின் படைத்தலைவர். தந்தை காலஞ்சென்ற நாளிலிருந்து இராசசிம்மனின் இளமைக் காலத்தில் அவனுக்கு எத்தனையோ முறை கடல் கடந்து சென்று ஒளிந்து கொண்டு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் அவனுக்கு ஆதரவளித்து உதவி செய்தது இலங்கைப் பேரரசே. அவன் மனச் சோர்வோடு கடல் கடந்து சென்ற போதெல்லாம் வரவேற்று ஆதரவளித்தவர்கள் சக்கசேனாபதியும், காசிபனும் தான். தென்பாண்டி நாட்டு இளவரசன் தன் அரசியல் வாழ்க்கையின் துன்பம் நிறைந்த சூழலில் கழித்த சந்தர்ப்பங்கள் கணக்கற்றவை. வளமான கடற்கரை, அழகான மலைத்தொடர், இளமரக் காடுகள், குளிர்பொழிற் சோலைகள் அத்தனையும் நிறைந்த ஈழ நாட்டின் சூழலில் சொந்தத் துயரங்களை மறந்து விடுவான் இராசசிம்மன். அனுராதபுரத்துக் கற்கனவுகளைக் காணும் போதெல்லாம் சோர்வும் ஏமாற்றமும் நிறைந்த அவன் உள்ளத்தில் ஆயிரமாயிரம் திடம் வாய்ந்த எண்ணங்களும், நம்பிக்கைகளும் முகிழ்ந்திருக்கின்றன. வாழ்க்கையின் துன்பங்களைத் தமிழ்நாட்டிலும் அவைகளை மறக்கும் இன்பங்களை ஈழநாட்டிலும் அனுபவித்தான் இராசசிம்மன். இப்போதும் ஈழநாட்டின் படைத்தலைவர் இந்த மரக்கலத்தில் அவனை அங்கே தான் அழைத்துக் கொண்டு போகிறார். இடைவழியில் சிறிது தங்கிச் செல்வதற்காக அந்தத் தீவில் இறங்கியிருக்கிறார்கள் அவர்கள். சக்கசேனாபதியும், இராசசிம்மனும் கரையில் இறங்கி நின்று பேசிக் கொண்டிருந்த நேரத்துக்குள் அந்தக் கப்பலில் அவர்களோடு வந்திருந்த ஆட்கள் தீவின் கரையில் இரத்தினக் கம்பளங்களையும் சித்திரத் துணிகளையும் கொண்டு தங்குவதற்கு ஓர் அழகான கூடாரம் அமைத்து விட்டார்கள். தென்னை மரக் கூட்டங்களின் இடையே காற்றில் ஆடி அசையும் பசுந் தோகைகளின் கீழே எழும்பி நின்ற அந்தச் சித்திரக் கூடாரம் மண்ணைப் பிளந்து கொண்டு தானே மேலே வந்து தோன்றும் மலர் வீடு போல் காட்சியளித்தது. அன்றைய இரவு முடிய அங்கே பொழுதைக் கழித்து விட்டு மறுநாள் காலை மறுபடியும் கடற் பயணத்தைத் தொடரலாம் என்பது சக்கசேனாபதியின் திட்டம். தங்குவதற்கு அத்தியாவசியமான பொருள்கள் மட்டும் கப்பலிலிருந்து கூடாரத்துக்குள் இறக்கி வைக்கப்பட்டன. நீராடி உணவு முடிந்ததும் அன்று பகல் முழுவதும் இராசசிம்மனும், சக்கசேனாபதியும் கூடாரத்தில் ஓய்வு பெற்று நிம்மதியாக உறங்கினர். கதிரவன் மலைவாயில் விழுகிற நேரத்துக்குக் குமார பாண்டியனும், சக்கசேனாபதியும் அந்த அழகிய தீவைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்று புறப்பட்டனர். உடனிருந்த ஆட்கள் கப்பலுக்கும் கூடாரத்துக்கும் காவலாக இருந்தனர். மாலை நேரத்தில் அந்தத் தீவின் அழகு பன்மடங்கு மிகுதியாகத் தோன்றியது. வானப் பரப்பு முழுவதும் குங்குமக் குழம்பும், கீழே கடலில் மிதக்கும் பசுமைக் கனவு போல் அந்தத் தீவும் இருந்தது. விந்தையும் விநோதமும் பொருந்திய கடல்படு பொருள்களான சங்கு, முத்து, சிப்பிகள், சலங்கைகள், பல நிறம் பொருந்திய கடற்பாசிக் கொத்துகள் இவற்றையெல்லாம் குவியல் குவியலாகக் குவித்து விற்கும் தீவின் கடைவீதிக்குள் அவர்கள் நுழைந்தார்கள். சக்கசேனாபதியையும் அழைத்துக் கொண்டு அந்தக் கடைகளில் ஒன்றை நெருங்கினான் தென்பாண்டி நாட்டு இளவரசன் இராசசிம்மன். வனப்பும், வாளிப்பும் நிறைந்த உடலோடு சிரிப்பும் மலர்ச்சியும் கொஞ்சும் முகத்தையுடைய இளம் பெண் ஒருத்தி அந்தக் கடையில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். முற்றிலும் கடலில் கிடைக்கும் அலங்காரப் பொருள்களாலேயே அவள் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். கழுத்தில் முத்து மாலை, செவிகளில் முத்துக் குண்டலம், நெற்றியில் முத்துச் சுட்டி, கைகளில் சங்கு வளையல், கால்களில் முத்துச் சிலம்பு, அள்ளி முடிந்த அளகபாரத்தில் இரண்டொரு மயில் கண்களைத் தோகையிலிருந்து பிரித்துச் செருகியிருந்தாள். அவர்களைக் கண்டதும் தோகையை விரித்துக் கொண்டு எழுந்திருக்கும் இளமயில் போல் பாதங்களில் சிலம்பு ஒலிக்க எழுந்து நின்று அவள் வரவேற்றாள். அடடா! அப்போது அந்தப் பெண் சிரித்த சிரிப்புக்குத்தான் எவ்வளவு கவர்ச்சியும் ஆற்றலும் இருந்தன. "சக்கசேனாபதி! இந்தத் தீவின் கடலில் சிப்பிகளில் மட்டும் முத்தும் பவழமும் விளையவில்லை. இங்குள்ள பெண்களின் வாய் இதழ்களிலும், வாய்க்குள்ளும் கூடப் பவழமும், முத்தும் விளைகின்றன போலும்!" என்று மெல்ல அவர் காதருகில் சிரித்துக் கொண்டே சொன்னான் குமார பாண்டியன். அவர் முகத்திலும் புன்னகை அரும்பியது. சிறிய செவ்விளநீர் அளவுக்கு வலப்பக்கமாக வளைந்து செந்நிறத்தோடு அழகாக விளங்கிய ஒரு சங்கைக் கையில் எடுத்தான் இளவரசன். பவழத்தில் கைப்பிடியும், முத்துக்களில் விளிம்பும் கட்டி வைத்திருந்த அந்தச் சங்கு அவனுடைய உள்ளத்தைக் கவர்ந்தது. ஆனால் இதென்ன? அவன் அதைக் கையில் எடுத்ததைப் பார்த்ததும், கண்களில் கலவரமும், முகத்தில் பதற்றமும் தோன்ற நின்ற இடத்திலிருந்து ஓடி வந்து அந்தப் பெண் அவனுடைய கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். இளவரசனுக்குச் சிரிப்பு வந்தது. சிறிது சினமும் உண்டாயிற்று! பூவைக் காட்டிலும் மென்மையான அந்தப் பட்டுக் கைகள் தன் மேல் தீண்டியதால் ஏற்பட்ட உணர்வு அவன் உடலில் பாதாதி கேச பரியந்தம் பரவியது. சிரிப்பு, சினம், சிருங்காரம் மூன்று உணர்ச்சிகளும் பதிந்த பார்வையால் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான் அவன். அப்போதுதான் பூத்த கருங்குவளைப் பூக்களைப் போல் நீண்டு குறுகுறுவென்றிருக்கும் அவள் கண்களில் பயத்தையும், பரபரப்பையும் அவன் கண்டான். அந்த நிலையில் ஏதோ பெரிய நகைச்சுவைக் காட்சியைக் கண்டு விட்டவர் போல் இரண்டு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டு அடக்க முடியாமல் குலுங்கக் குலுங்கச் சிரித்தார் சக்கசேனாபதி. ஒரு கணம் இராசசிம்மன் தயங்கினான். அந்தப் பெண்ணின் கைகளிலிருந்து தன்னை எப்படி விடுவித்துக் கொள்வதென்று திகைத்தான். "ஏதேது? இந்த செம்பவழத் தீவில் பெண்களெல்லாம் பெரிய வம்புக்காரர்களாக இருப்பார்கள் போலிருக்கிறதே?" அவன் சக்கசேனாபதியைப் பார்த்துக் கூறுகிறவனைப் போல் இதழ்களில் குறும்புநகை நெளிய அவளைப் பேச்சுக்கு இழுத்தான். "வருகிறவர்கள் அளவுக்கு மீறித் துணிச்சல் உள்ளவர்களாயிருக்கும் போது நாங்கள் வம்புக்காரர்களாக மாறுவது வியப்பில்லையே!" "நீ சங்கு விற்கிறவள். நான் வாங்கப் போகிறவன். வாங்க இருக்கும் பொருளை எடுத்துப் பார்ப்பதற்குக் கூட நான் உரிமையற்றவனா?" "சங்கு என்றால் ஒரு பொற்கழஞ்சுக்கு ஐந்தும், ஆறுமாக அள்ளிக் கொடுக்கின்ற சாதாரணச் சங்கு இல்லை இது! வலம்புரிச் சங்கு! இதன் விலை ஆயிரம் பொற்கழஞ்சுகள். இந்தத் தீவின் எல்லையிலேயே இந்த மாதிரிச் சங்கு ஒன்று தான் இருக்கிறது. இதை விற்க வேண்டுமானால் யாராவது பேரரசர்கள் வாங்க வந்தால் தான் முடியுமென்று என் தந்தை சொல்லியிருக்கிறார்!" "பெண்ணே! பேரரசர்கள் கிடக்கிறார்கள்! அவர்கள் எல்லாம் பேருக்குத்தான் அரசர்கள். நான் இரண்டாயிரம் பொற்கழஞ்சுகள் தருகிறேன். இந்தச் சங்கை எனக்கு விற்பாயா?" "இல்லை, பொய் சொல்கிறீர்கள் நீங்கள். உங்களைப் பார்த்தால் உங்களிடம் இரண்டு பொற்கழஞ்சுகள் கூட இருக்காது போல் தோன்றுகிறது. நீங்கள் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். மரியாதையாக சங்கை வைத்துவிட்டுப் போகிறீர்களா...? இல்லையானால்...?" "அடேடே! உன் கோபத்தைப் பார்த்தால் என்னை இப்போதே அடித்துக் கொன்று விடுவாய் போலிருக்கிறதே? வேண்டாம்! இதோ வாங்கிக் கொள்..." இப்படிச் சொல்லிக் கொண்டே சக்கசேனாபதியின் பக்கமாகத் திரும்பினான் இராசசிம்மன். அவர் இடுப்பிலிருந்து தயாராக எடுத்து வைத்துக் கொண்டிருந்த இரண்டு பட்டுப்பை முடிப்புகளை அவன் கையில் கொடுத்தார். அவன் அதை வாங்கி அந்தப் பெண்ணின் கையில் கொடுத்தான். பைகளை வாங்கிப் பிரித்துப் பார்த்த அந்தப் பெண் ஆச்சரியத்தால் வாய் அடைத்துப் போய் நின்றாள். பை நிறையப் பொற்கழஞ்சுகள் மின்னின. அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று தலைநிமிர்ந்து பார்த்த போது அவர்களைக் காணவில்லை. தொலைவில் கடைவீதி திரும்பும் மூலையில் கையில் வலம்புரிச் சங்கோடு அந்த இளைஞனும் அவனோடு வந்த முதியவரும் வேகமாகச் செல்வது தெரிந்தது. அளவொத்து மேலெழும்பித் தணியும் இரு செவ்விளநீர்க் காய்கள் போல் நெஞ்சங்கள் நிமிர்ந்து தணியக் கடைவீதி மூலையைப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள் அந்தப் பெண். |