![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
முதல் பாகம் 33. மகாமண்டலேசுவரர் இடையாற்று மங்கலத்தில் கொள்ளை போன செய்தியை அம்பலவன் வேளான் வந்து கூறிய போது எல்லோரும் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். ஆனால் இடையாற்று மங்கலம் நம்பியோ அதிர்ச்சியை விட அதிகமாக விழிப்பும், முன்னெச்சரிக்கையும் பெற்றார். தாம் பொறுப்பும், திறமையும், சூழ்ச்சியும் ஒருங்கே அமைந்த ஒரு மகாமண்டலேசுவரர் தான் என்பதை அந்த விநாடியில் அவர் செய்த காரியத்தால் நிரூபித்து விட்டார். அம்பலவன் வேளான் செய்தியைத் தெரிவித்த போது அவர்களெல்லாம் எந்த இடத்தில் இருந்தார்களோ அந்த இடத்தின் வெளிவாயிற் கதவுகளை உடனே அடைத்து உட்புறமாகப் பூட்டிக் கொண்டு வருமாறு நாராயணன் சேந்தனை அனுப்பினார் இடையாற்று மங்கலம் நம்பி. அவருடைய செயல் எல்லாருக்கும் வியப்பை அளித்தது. சிலருக்கு அர்த்தமற்றதாகவும் பட்டது? சிலருக்குப் பயமாகவும் இருந்தது. நம்பியின் கட்டளைப்படி உடனே கதவைப் பூட்டிக் கொண்டு வந்து விட்டான் சேந்தன். மகாமண்டலேசுவரர் என்ன சொல்லப் போகிறாரோ என்று எல்லாரும் அவருடைய முகத்தையே பார்த்தார்கள். அந்த முகத்திலும், கண்களிலும் ஆழம் காணமுடியாத அமைதி தெரிந்தது. மகாராணி வானவன்மாதேவி, தளபதி வல்லாளதேவன், நாராயணன் சேந்தன், கரவந்தபுரத்திலிருந்து வந்த தூதன், இடையாற்று மங்கலத்தில் கொள்ளை போன செய்தியைக் கூற வந்த அம்பலவன் வேளான் முதலிய முக்கியமான ஆட்களே அப்போது அந்த இடத்தில் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவர் முகத்தையும் நின்று நிதானித்துத் தனித் தனியே ஏறிட்டுப் பார்த்தார் இடையாற்று மங்கலம் நம்பி. மேலோட்டமாகப் பார்க்கின்ற சாதாரணப் பார்வையன்று அது! முகத்தை, கண்களை, அவை இரண்டின் மூலமாக உள்ளத்தைப் பார்க்கின்ற அழுத்தமான பார்வை அது. மழை பெய்வதற்கு முன் பூமியில் ஏற்படுகின்ற ஒருவகைப் புழுக்கம் போல் பெரிய பேச்சுகளை எதிர்பார்த்து நிற்கும் சிறிய அமைதி அங்கே நிலவியது. ஆனால், அந்த அமைதியின் கால எல்லை சில விநாடிகள் தான். அதைக் கலைத்துக் கொண்டு மகாமண்டலேசுவரரின் கணீரென்ற குரல் எழுந்தது. "மகாராணியின் முன்னிலையில் இவர்களுக்கெல்லாம், இவர்களுக்கு மட்டுமென்ன? எனக்கும், தங்களுக்கும் கூட எச்சரித்து அறிவுறுத்த வேண்டிய முக்கியமான செய்தி ஒன்று உண்டு." இதைச் சொல்லிவிட்டு நம்பி சிறிது நிறுத்திக் கொண்டு எல்லோருடைய முகங்களையும் பார்த்தார். பின், மீண்டும் தொடர்ந்தார். "தேசத்தைக் காப்பாற்றுவதற்கு முன்னால் இரகசியங்களைக் காப்பாற்றுவதற்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்குள் தோல்விகள், பலவீனங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றை நம்முடைய எதிரிகள் அறிந்து கொள்ளும்படியாக விட்டு விடக்கூடாது. இப்போது நான் வேண்டிக் கொள்வதெல்லாம் இதுதான். இடையாற்று மங்கலத்தில் அரசுரிமைப் பொருள்கள் களவு போன செய்தி நம்மைத் தவிர மற்றவர் செவிகளில் பரவவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். கரவந்தப்புரத்திலிருந்த வந்த செய்தியும் அப்படியே. களவைக் கண்டுபிடிக்கவும், பகைவர் படையெடுப்பைச் சமாளிக்கவும் வேண்டிய ஏற்பாடுகளை நாம் செய்ய வேண்டும். ஆனால் நாம் செய்யும் எல்லா ஏற்பாடுகளும் நமக்குள் இருக்க வேண்டும். இப்போது நாம் இருக்கும் இந்தக் கட்டடத்தின் வாயிற் கதவுகளை நான் அடைக்கச் சொல்லிவிட்டேன். பிறரிடம் செய்தியைச் சொல்லிவிட மனத்தில் ஏற்படும் ஆவலையோ வாய்த்துடிப்பையோ நான் அடைக்க முடியாது. நீங்கள் எல்லோரும் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ளுங்கள்." "மகாமண்டலேசுவரருடைய இந்த வேண்டுகோள் நம்முடைய நன்மைக்காகவே என்பதை நீங்கள் எல்லோரும் விளங்கிக் கொண்டிருப்பீர்கள். வயதும், அனுபவமும் உள்ள அவர் கட்டளைகளை என் கட்டளைகளாகவே நினைத்துப் போற்ற வேண்டியது உங்கள் கடமை" என்று அதையடுத்து மகாராணி வானவன்மாதேவியார் கூறினார். எல்லோரும் சிலை போல் அடக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். மகாமண்டலேசுவரரை எதிர்த்து மடக்கி என்னென்னவோ குறுக்குக் கேள்விகளெல்லாம் கேட்க வேண்டுமென்று துடிதுடித்துக் கொண்டிருந்த தளபதி வல்லாளதேவனுக்குக் கூட அப்போது பேச நா எழவில்லை. எப்போதும், எவர் முன்னிலையிலும், சிரிப்பும் குறும்புமாகத் தன் பேச்சுகளால் பாதி - தன் தோற்றத்தால் பாதி என்று நகைச்சுவையலைகளைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நாராயணன் சேந்தன் இருக்குமிடம் தெரியாமல் நின்று கொண்டிருந்தான். எதிரே இருப்பவர்களின் வாயையும், புலன் உணர்வுகளையும் கட்டி விடுகிற ஆற்றல் உலகத்தில் மிகச் சிலருடைய கண் பார்வைக்கே உண்டு. அப்படிப்பட்ட கண்களைப் பெற்றவர்கள் வாயில் வீரமொழிகளும், கையில் வாளும் இல்லாமலே கண்களால் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள். கண்கள் என்ற ஒரே புலனுணர்வால் மட்டுமே உலகத்தை அளந்து எடை போட்டு நிறுத்திவிடும் மகாசாமர்த்தியக்காரர்கள் அவர்கள். அந்தச் சாமர்த்தியத்தின் சாயல் தென்பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரரிடம் இருந்தது.
"நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கால் கண்ணல்ல தில்லை பிற." என்று மகாமண்டலேசுவரரைப் போன்றவர்களை நினைத்துத்தான் திருவள்ளுவப் பெருந்தகையார் அழகாகப் பாடிவைத்தார் போலும். மழைக்காலத்து மங்கிய நிலவு போல் மகாராணி வானவன்மாதேவியின் முகத்தில் கவலைகள் தேங்கி நின்றன. அந்த முகத்தில் ஏற்கனவே நிரந்தரமாகத் தேங்கிவிட்ட கவலை ஒன்று உண்டு. அது கைம்மைக் கவலை. கணவனை இழந்த கவலை. சுட்டுவிரலால் கீறிய கறுப்புக்கோட்டை மேலும் கட்டை விரலால் கீறிப் பெரிதாக்கினாற் போல் அந்தப் பழைய கவலை புதிய கவலைகளால் விரிவடைந்திருந்தது. ஏதோ ஒரு சோகக் கனவில் ஆழ்ந்திருப்பது போல் மோட்டுவளையை வெறித்துப் பார்த்துக் கொண்டு வீற்றிருந்த மகாராணியைத் தம் பேச்சுக் குரலால் கவனம் திரும்பும்படி செய்தார் இடையாற்று மங்கலம் நம்பி. "மகாராணி! இது பலவகையிலும் சோதனைகள் நம்மைச் சூழ்கின்ற காலம். இந்த நாட்டின் நன்மைக்கும், பாதுகாப்புக்கும் ஏற்ற எதையும் செய்கின்ற அதிகாரங்களை முன்பே நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் அவற்றைப் பூரணமாகப் பயன்படுத்த வேண்டிய சமயம் என்னை நோக்கி வந்திருக்கிறது." "மகாமண்டலேசுவரருக்கு எந்த உரிமையையும் எப்போதும் நான் மறுத்ததில்லையே?" வானவன்மாதேவியிடமிருந்து சுருக்காமாகவும் விநயமாகவும் மறுமொழி பிறந்தது. "தங்கள் அன்புள்ளம் மறுப்பறியாததென்று நான் அறிவேன். இருந்தாலும் நிலைமையைக் கூறிவிட வேண்டியது என் கடமை." இந்தச் சொற்களைச் சொல்லும் போது புன்னகை - அல்ல, புன்னகை செய்வது போன்ற சாயல் மகாமண்டலேசுவரரின் முகத்தில் நிலவி நின்றது. மகராணி மறுபடியும் அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். தயக்கத்தோடு கேட்டார்: "மகாமண்டலேசுவரரே! இராசசிம்மனை இடையாற்று மங்கலத்திலிருந்து உடனே அழைத்து வர ஏற்பாடு செய்வதாகக் கூறினீர்களே...?" வானவன்மாதேவியின் இந்தக் கேள்வி அவரைச் சிறிது அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்க வேண்டும். அவர் தயங்கினார். மிடுக்கு நிறைந்த அவருடைய நிமிர்ந்த பார்வையில் சற்றே சோர்வு நிழலாடி மறைந்தது. "மகாராணி! நான் அதைப் பற்றித் தங்களிடம் தனிமையில் சிறிது நேரம் பேச வேண்டும். புதிதாக வந்த செய்திகள் சிறிது குழப்பத்தை உண்டாக்கிவிட்டன...!" "இந்தச் செய்திகளுக்கும் நீங்கள் இராசசிம்மனை அழைத்து வருவதற்கும் என்ன சம்பந்தமோ?" "இப்போது இந்த இடத்தில் இந்தச் சூழலில் தங்களிடம் அதைப் பேச இயலாதவனாக இருக்கிறேன். தயவு செய்து என்னைப் பொறுத்தருள வேண்டும். நாம் தனிமையில் மட்டும் தான் பேச முடிந்த செய்தி அது!" மகாராணி பதில் பேசவில்லல. "சேந்தா! கதவு மூடியிருக்க வேண்டிய அவசியம் இனி மேல் இல்லை. கதவைத் திறந்துவிடு." மகாமண்டலேசுவரரின் ஆணைப்படி மூடிப் பூட்டிய கதவுகளைச் சேந்தன் அவசர அவசரமாகத் திறந்து விட்டான். "மகாராணி! இதோ நம்மைச் சுற்றி நிற்கும் இவர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பைப் பேசி ஒப்படைத்து அனுப்பிவிட்டு நான் மறுபடியும் இங்கே வருகிறேன். குமார பாண்டியரைப் பற்றி அப்போது நாம் பேசலாம்." வானவன்மாதேவி மகாமண்டலேசுவரருடைய பேச்சைக் கேட்டுத் தலையசைத்தார். உணர்ச்சியும், விருப்பமும், நம்பிக்கையின் மலர்ச்சியும் இல்லாத வெற்றுத் தலையசைப்பாக அது இருந்தது. அங்கிருந்தவர்களில் மகாராணியாரைத் தவிர மற்றவர்கள் பின் தொடர அரண்மனையில் தாம் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்குப் புறப்பட்டார் மகாமண்டலேசுவரர். தயங்கித் தயங்கிப் பின் தொடரும் ஆட்களோடு அவர் அங்கிருந்து வெளியேறி நடந்து சென்ற காட்சி நிமிர்ந்த பார்வையும் இராஜ கம்பீரமும் பொருந்திய வயதான கிழட்டுச் சிங்கமொன்று சில இளம் புலிகள் பின் தொடர அவற்றை எங்கோ அடக்கி அழைத்துச் செல்லுவது போலிருந்தது. அந்தப்புரத்திலும், கன்னிமாடத்திலும் இருந்த அரண்மனைப் பெண்கள் கூட்டமாகப் பலகணித் துவாரங்களின் வழியாகவும், மேல்மாடங்களில் நின்று கொண்டும் இந்தக் காட்சியை வேடிக்கை பார்த்தனர். விடிந்ததும் விடியாததுமாக மகாமண்டலேசுவரர், தளபதி முதலிய பெரிய பெரிய ஆட்களெல்லாம் அந்தப்புரத்துக்குத் தேடிவந்து அவசரமாக மகாராணியைச் சந்தித்துவிட்டுத் திரும்பவேண்டுமென்றால் விஷயம் ஏதோ பெரியதாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியது. தளபதியின் தங்கை பகவதியும் அதங்கோட்டாசிரியரின் மகள் விலாசினியும் கூட அந்தக் காட்சியைப் பரபரப்புடன் பார்த்தார்கள். இவர்களுக்கு ஏற்பட்ட பரபரப்பைப் போல் அல்லாமல் முன்பே சில இரகசியங்கள் தெரிந்திருந்த காரணத்தால் வண்ணமகள் புவன மோகினிக்கு அதிகமான பரபரப்பும், பீதியும் ஏற்பட்டிருந்தன. தமையன் அரண்மனையிலிருந்து எங்கேயாவது வெளியேறிச் சென்று விடுவதற்குமுன் அவனை ஒருமுறை சந்திக்க வேண்டும் போல் இருந்தது தளபதியின் தங்கை பகவதிக்கு. இப்படியாக, அதிகாலையில் அந்தப்புரத்தில் மகாராணியின் தனி மாளிகையில் நடந்த கூட்டத்தில் என்ன பேச்சுகள் நடந்தன என்ற செய்தி எங்கும் பரவாவிடினும், ஒரு பரபரப்பும் மர்மமான பீதியும் அரண்மனையில் பரவிவிட்டிருந்தன. முக்கியமானவர்கள், முக்கியமில்லாதவர்கள், காவல் வீரர்கள், சாதாரணப் பெண்கள் எல்லாரும் அரண்மனைக்குள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும் போது இதைப் பற்றியே பேசிக் கொண்டார்கள். காதும் காதும் வைத்தாற் போல் வாய்களும், காதுகளும் இந்தச் செய்தியைப் பரப்பி விட்டன. எல்லோரையும் அழைத்துக் கொண்டு விருந்து மாளிகைக்குச் சென்ற இடையாற்று மங்கலம் நம்பி இரண்டொரு நாழிகைக்குப் பின் ஒவ்வொருவரையும் ஓரோர் காரியத்துக்காக வெளியே அனுப்பினார். மகாமண்டலேசுவரருடைய ஆணை பெற்று அந்த மாளிகையிலிருந்து வெளியேறிய ஒவ்வோர் முகத்திலும் ஒவ்வொரு விதமான உணர்ச்சியின் சாயல் படிந்திருந்தது. சிரிப்பு, சீற்றம், கடமை, பணிவு - இன்னும் அவர்கள் அனுப்பப்பட்ட நோக்கங்களும், சென்ற திசைகளும் போலவே அவர்களுடைய நெஞ்சத்து எண்ணங்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்டனவாக இருந்தன. மகாமண்டலேசுவரருடைய கட்டளைப்படி எல்லோரும் அவரவர்கள் அனுப்பிய இடத்துக்கு உடனே புறப்பட்டு விட்டனர். ஆனால் தளபதி வல்லாளதேவன் மட்டும் உடனே புறப்படவில்லை. மகாமண்டலேசுவரர் தன்னை அனுப்பிய வேலை அவசரமாயினும் அவசரமாக அவன் கிளம்பவில்லை. அந்தப்புரத்திலிருந்த தன் தங்கை பகவதியையும், அரண்மனையில் மறைந்திருந்த ஆபத்துதவிகள் தலைவனையும் அந்தரங்கமாகச் சந்தித்து ஏதோ பேசிய பின்பே அவன் கிளம்பினான். |