![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
முதல் பாகம் 4. இடையாற்றுமங்கலம் நம்பி இந்தக் கதையை மேலே தொடர்வதற்கு முன்னால் பன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தென்பாண்டி நாடாகிய நாஞ்சில் நாட்டின் பல்வேறு உட்பிரிவுகளைப் பற்றி இங்கே ஒரு சில செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகிறது. தோவாழைக் கூற்றம், மருங்கூர்க் கூற்றம், பொன்மனைக் கூற்றம், அருவிக்கரை கூற்றம், பாகோட்டுக் கூற்றம் ஆகிய ஐந்து பெருங் கூற்றங்களாக நாஞ்சிற் புறத்தாய நாடு பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கூற்றத்துக்கும் பாண்டியர் ஆட்சியை மேற்பார்க்கும் இராஜப் பிரிதிநிதியாக ஒரு தலைமகன் நியமிக்கப்பட்டிருந்தான். இந்தக் கூற்றத் தலைவர்களின் தொகுதிக்கு நாஞ்சில் நாட்டு மகாசபை என்று பெயர். இந்த மகாசபையின் மந்திராலோசனைத் தலைவராக அறிவினும், திருவினும், ஒழுக்கத்தினும், வயதினும் மூத்த சான்றோர் ஒருவரைப் பாண்டிய மன்னன் தானே தேர்ந்தெடுத்து நியமிப்பது வழக்கம். அவருக்குப் புறத்தாய நாட்டு மகாமண்டலேசுவரர் என்று பெயர். திரிபுவனச் சக்கரவர்த்திகளாகிய பராந்தக பாண்டியதேவர் காலத்தில் பாண்டிய சாம்ராஜ்யம் வடக்கிலும் தெற்கிலும் பெரிதாகப் பரந்திருந்தாலும் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்த அவரால் தென்கோடி மூலையிலுள்ள நாஞ்சில் நாட்டை நேரடியாகக் கவனித்து ஆள முடியாததாலும் இந்த ஏற்பாட்டைச் செய்தார். இந்த ஏற்பாட்டின்படி மருங்கூர்க் கூற்றத்து இடையாற்றுமங்கலம் நம்பி என்ற நாஞ்சில் நாட்டு மேதை மகாமண்டலேசுவரராக நியமிக்கப்பட்டிருந்தார். பராந்தகச் சக்கரவர்த்திகள் ஆண்ட இருபதாண்டுக் காலமும் அதன் பின்பும் இடையாற்றுமங்கலம் நம்பியே தொடர்ந்து அம் மாபெரும் பொறுப்பை நிர்வகித்து வந்தார். சக்கரவர்த்திகள் தேகவியோகமடைந்து, அமரரான பின்பு வடபாண்டி நாட்டைச் சோழனும், அவனோடு சேர்ந்தவர்களும் கைப்பற்றிக் கொண்டதும், குமார சக்கரவர்த்தி இராசசிம்மன் இலங்கைத் தீவுக்கு ஓடியதும் நேயர்கள் ஏற்கெனவே அறிந்த செய்திகள். அந்தப் பயங்கரமான சூழ்நிலையின் போது மகாராணி வானவன்மாதேவியாரைத் தென்பாண்டி நாட்டுக்கு அழைத்து வந்து புறத்தாய நாட்டுக் கோட்டையில் இருக்கச் செய்து மகாராணிக்கு அளிக்க வேண்டிய இராஜ கௌரவமும் மரியாதையும் அளித்தவர் மகாமண்டலேசுவரரான இடையாற்றுமங்கலம் நம்பி அவர்களே. நாஞ்சில் நாட்டின் உயிர்நாடி போன்ற பகுதி மருங்கூற்றம், கன்னியாகுமரி, சுசீந்திரம், தாணுமாலய விண்ணகரம், தென் திசைப் பெரும்படை தங்கியிருக்கும் கோட்டாற்றுப் படைத்தளம், புறத்தாய நாட்டுக் கோட்டை, மகாமண்டலேசுவரரின் வாசஸ்தலமாகிய இடையாற்றுமங்கலம் ஆகிய எல்லா முக்கிய இடங்களும் மருங்கூர்க் கூற்றத்திலேயே அமைந்திருந்தன. பார்க்குமிடமெங்கும் பரந்து கிடக்கும் நெல்வயல் வெளிகளும், சாலைகளும் நிறைந்த மருங்கூர்க் கூற்றத்தின் பசுமை வெளியில் இரட்டை வடமாகிய முத்துமாலையொன்றை நெளியவிட்டது போல் பஃறுளியாறு என முதற் சங்கக் காலத்து அழைக்கப்பட்ட பறளியாறும், புத்தனாறும் பாய்ந்து ஓடுகின்றன. பறளியாறும், புத்தனாறும் கடலோடு கலக்கும் சங்கம முகத்துவாரத்துக்கு முன்னால் தனித்தனியே விலகிப் பிரிந்து ஒரு சிறிய அழகான தீவை உண்டாக்கியிருக்கின்றன. அதுவே இடையாற்றுமங்கலம். தென்பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரரும், முதுபெரும் பேரறிஞருமாகிய நம்பியின் மாளிகை இந்தத் தீவில்தான் அமைந்திருந்தது. இந்தத் தீவின் பெரும்பாகத்தை நிரப்பிக் கொண்டு நின்றது மகாமண்டலேசுவரரின் கம்பீரமான மாளிகைதான் என்றால் அது எவ்வளவு பெரிதாக இருக்குமென்பதை நேரில் பார்க்காமலே கற்பனை செய்து கொள்ள முடியும். மலைத் தொடர்போல் அந்த மாளிகையைச் சுற்றி வளைந்து செல்லும் பிரம்மாண்டமான கோட்டை மதிற்சுவர்களுக்கு இப்பால் வெட்டப்படாத இயற்கை அகழிகளைப் போல் புத்தனாறும், பறளியாறும் இரு கரையும் நிரப்பி நீர் ஓடிக் கொண்டிருந்தன. பகல் நேரத்தில் கதிரவன் ஒளியில் இந்த மாளிகையைப் பார்ப்பதற்குப் பதிலாக, நடு இரவில் உலகமே ஆழ்ந்த அமைதியின் மாபெரும் ஒடுக்கத்தினுள் உறங்கிக் கிடக்கும் போது பார்க்கும்படியான அவசர வாய்ப்பை இந்தக் கதை ஏற்படுத்தி விடுகிறது. நடு இரவானால் என்ன? மடல் விரித்த கமுகம் பாளையைப் போலப் பௌர்ணமி நிலா ஒளிக்கதிர்களை உமிழ்ந்து கொண்டிருக்கிறதே! குளிர்ந்த கடற்காற்றின் சுகத்தை அனுபவித்துக் கொண்டே வளம் நிறைந்த நாஞ்சில் நாட்டு இராஜபாட்டையில் நடந்து செல்வதற்கு சோம்பல் அடைவார்களா? இடையாற்றுமங்கலத்துக்குச் செல்லும் கீழ்த் திசைச் சாலையில் ஆளரவமற்ற அந்த நடு யாமத்தில் ஒரு வெண்ணிறப் புரவி கன வேகமாகப் பாய்ந்து சென்றது. அதன் மேல் வல்லாளதேவனே வீற்றிருப்பதை நிலா ஒளியில் நன்றாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அவன் முகத்தில் அவசர காரியத்தை எதிர்நோக்கிப் பிரயாணம் செய்யும் பரபரப்பைக் காணமுடிந்தது. வானமும், பூமியும், திசைகளும், திசைக் கோணங்களும் அமைதியில் கட்டுண்டு கிடந்த அந்த யாமப் பொழுதில் யாரோ, மத்தளத்தின் புறமுதுகில் 'தடதட' வென்று தட்டுவது போல் குதிரையின் குளம்போசை எதிரொலித்தது. வாயு வேகம், மனோவேகம் என்பார்களே, அவையெல்லாம் பிச்சை வாங்க வேண்டும்! தென் திசைத் தளபதி வல்லாளதேவனின் குதிரை நாலு கால் பாய்ச்சலில் பறந்து கொண்டிருந்தது! சாதாரணமாகக் கன்னியாகுமரியிலிருந்து இடையாற்றுமங்கலத்துக்கு ஒன்றரை நாழிகை நேரம் குதிரைப் பயணத்துக்கு ஆகும். காரியத்தின் அவசரத்தை முன்னிட்டுக் கொண்டு வந்திருந்த வல்லாளதேவன் ஒரு நாழிகை நேரத்துக்கு முன்னதாகவே இடையாற்றுமங்கலத்தை நெருங்கிவிட்டான். மண்டலேசுவரரின் மாளிகைக்குத் தென்புறம் கண்ணுக்கெட்டிய வரை நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் ஒரே தண்ணீர்ப் பிரவாகமாகத் தெரிந்த பறளியாற்றின் இக்கரையில் வந்து தளபதியின் குதிரை நின்றது. பூமிக்குக் குடை பிடித்தது போல் பரந்து வளர்ந்திருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் அவனும் அவன் ஏறிக் கொண்டு வந்த குதிரையும் நின்ற போது, நிலா மேகத்தில் மறைந்து மெல்லிய இருள் பரவியது. கரையோரத்து ஆலமரத்தின் அடர்த்தியால் முன்பே ஒளி மங்கியிருந்த அந்த இடம் இன்னும் அதிகமாக இருண்டது. ஆற்றில் தண்ணீர் குறைவாக ஓடினால் நனைந்தாலும் பரவாயில்லையென்று குதிரையையும் பிடித்துக் கொண்டு இறங்கி நடந்து அக்கறையிலுள்ள மாளிகைக்குச் சென்று விட முடியும். ஆனால் ஆற்றில் அப்போது ஆள் இறங்க முடியாத வெள்ளம் போய்க் கொண்டிருந்தது. தளபதி தன் குதிரையை மரத்தடியிலேயே நிறுத்திவிட்டுக் கரையில் விளிம்பருகே சென்று ஆற்றின் நிலையை நிதானிக்க முயன்றான். இரு தினங்களாக நாஞ்சில் நாட்டு மலைத் தொடர்களில் நல்ல மழை பெய்திருந்ததால் பறளியாற்றில் நீர் இரு கரையும் நிமிர ஒடிக் கொண்டிருந்தது. இறங்கிப் போவதென்பது சாத்தியமில்லை என்று தெரிந்தது வல்லாளதேவனுக்கு. திரும்பி வந்தான். குதிரையை ஆலமரத்தின் வேரில் கட்டி விட்டு நின்றான். இதற்கு முன்பு இத்தகைய திகைப்புக்குரிய அநுபவம் நாஞ்சில் நாட்டுப் படைத்தலைவனுக்கு ஏற்பட்டதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேற்கே சிறிது தூரம் கரையோரமாகவே நடந்தான். இடையாற்றுமங்கலம் மண்டலேசுவரர் மாளிகைக்குத் தோணி விடும் துறை இருந்தது. தோணித் துறையில் தொண்டாற்றும் அம்பலவன் வேளான் துறையில் இருக்கிறானோ, இல்லையோ! பெரும்பாலும் இரவு ஏழெட்டு நாழிகைக்குள் தோணிப் போக்குவரத்து முடிந்து விடும். அதன் பின் படகுடன் அக்கரையிலேயே தங்கிவிடுவது வேளானின் வழக்கம். பகலில் வந்திருந்தால் இடையாற்றுமங்கலம் போவதற்கு இவ்வளவு அவதிப்பட வேண்டியதில்லை. மாளிகைத் தோணியுடன் அதைச் செலுத்தும் வேளான் காத்திருப்பான். இரவில் அகால வேளையில் வர நேர்ந்ததனால் தான் இவ்வளவு துன்பமும். 'சரி! எதற்கும் தோணித்துறை வரையில் போய்ப் பார்க்கலாம். நம்முடைய நல்வினைப் பயனாக அம்பலவன் வேளானும் அவன் தோணியும் இக்கரையில் இருந்தால் நல்லதாகப் போயிற்று' என்று நினைத்துக் கொண்டே கரையோரத்துப் புதர் மண்டிய பாதையில் மேற்கே தோணித் துறையை நோக்கி நடந்தான் தளபதி. ஒற்றையடிப் பாதையின் இருபுறமும் அடர்த்தியான தாழம்புதர் இருக்குமிடம் தெரியாமல் மலர்ந்திருந்த தாழம் பூக்களின் மணமும், நதிக்கரைக் குளிர்ச்சியும், நிலாவின் இன்பமும், தளபதியின் மனத்துக்கோ உடலுக்கோ சுகத்தை அளிக்கவில்லை. கவலை நிறைந்த சூழ்நிலையில் கடமையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான் அவன். கன்னியாகுமரிக் கோவிலிலிருந்து மகாராணியார், அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயர், பகவதி, விலாசினி எல்லோரையும் பரிவாரங்களோடு அரண்மனைக்கு அனுப்பிவிட்டு, தப்பிச் சென்ற ஒற்றனைத் தேடிப் பிடிப்பதற்காகத் தளபதியும் வேறு சில வீரர்களும் அங்கேயே தங்கிவிட்டனர். மகாராணி மனக்குழப்பமடைந்திருக்கும் நிலையைப் புரிந்து கொண்டதால் கடற்கரைப் பாறைகளிடையே, தான் கண்ட ஒற்றர்களைப் பற்றியோ, அவர்களில் ஒருவனைப் பிடித்துக் கொண்டு வந்ததைப் பற்றியோ அவன் கூறவில்லை. ஓலையை மட்டும் கொடுத்தான்; அதையும் அவர் படிக்காமலே திருப்பிக் கொடுத்து விட்டார். மகாராணி முதலியோர் கோட்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த போது தன் காதருகே வந்து பரிவாரத்து வீரன், ஒற்றன் தப்பியதாகக் கூறிய செய்தியையும் அவன் யாருக்கும் அறிவிக்கவில்லை. "மகாராணி! நீங்கள் எல்லோரும் கோட்டைக்குப் போய் இருங்கள். எனக்கும் இந்த வீரர்களுக்கும் இங்கே கொஞ்சம் வேலை இருக்கிறது. உங்கள் உத்தரவுப்படியே நாளை மகாசபைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து விடுகிறேன். இன்றிரவே இடையாற்றுமங்கலத்தில் நம்பியைச் சந்தித்து விவரம் கூறிவிடுகிறேன். மற்றக் கூற்றத் தலைவர்களுக்கும் இரவோடிரவாக ஆள் அனுப்பி விடுகிறேன்" என்று கூறினான் தளபதி! "அப்படியானால் இன்றிரவு நீ கோட்டைக்கு வருவது சந்தேகந்தான். இவ்வளவு வேலைகளையும் செய்ய இரவு முழுவதும் சரியாயிருக்கும்!" என்றார் அதங்கோட்டாசிரியர். "எங்கே வரமுடியப் போகிறது? நீங்கள் போய் வாருங்கள். ஒருவேளை இடையாற்றுமங்கலத்திலிருந்து விரைவில் திரும்பினால் உடனே கோட்டைக்கு வந்து விடுகிறேன்" என்று சொல்லித் தளபதி அவர்களை அனுப்பிவிட்டான். அவர்கள் சென்றதும் பிடிபட்ட ஒற்றனை அஜாக்கிரதையாய் தப்ப விட்டு விட்ட வீரர்களைத் திட்டினான். கோபத்தோடு கடிந்து கொண்டான். மறுபடியும் அவர்களை அழைத்துக் கொண்டு பாறை இடுக்குகளிலும், கடலோரத்து இடங்களிலும் கோவிலைச் சுற்றியும் தேடினான். ஏற்கெனவே தளபதியால் அடிபட்டு மயங்கி விழுந்திருந்தவனையும் இப்போது அந்தப் பாறை மேல் காணவில்லை. 'மூன்று பேர்கள் வந்திருக்கிறார்கள். வேலை எறிவதற்காக ஒருவன் கோவில் மேல்தளத்தில் ஏறிக் காத்திருக்கிறான். மற்ற இருவரும் பாறை இடுக்கில் இருந்திருக்கிறார்கள்' - நடந்ததை ஒருவாறு உணர முடிந்தது அவனால். 'எப்படியானால் என்ன? மூன்று பேர்களுமே தப்பி விட்டார்கள்! நமக்குக் கிடைத்தது இந்த ஓலை ஒன்றுதான்' என்று மேலும் தேடும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு இடையாற்றுமங்கலம் புறப்பட்டான் வல்லாளதேவன். தன்னோடு இருந்த வீரர்களை மகாசபையின் ஐந்து கூற்றத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியே மறுநாள் கூடும் சபையைப் பற்றிய செய்தியைத் தெரிவிக்குமாறு இரவோடிரவாக அங்கிருந்தே குதிரைகளில் அனுப்பினான். இவ்வளவும் செய்து முடித்து விட்டு அவன் கன்னியாகுமரியிலிருந்து இடையாற்றுமங்கலம் புறப்படும் போது இரவு பதினோரு நாழிகைக்கு மேலாகிவிட்டது. அப்படிப் புறப்படுவதற்கு முன் கோவில் தீபத்தின் ஒளியில் தனியாக மீண்டும் ஒரு முறை ஒற்றனிடமிருந்து கிடைத்த அந்த ஓலையைப் படித்த போதுதான் தளபதியின் இதயத்தில் அதன் விளைவான பயங்கரமும் கொடிய சூழ்நிலையும் நன்றாக உறைத்தன. 'மகாராணி இந்தத் திருமுகத்தைப் படிக்காமல் கொடுத்ததும் ஒருவகைக்கு நல்லதுதான். கூடுமானால் மகாமண்டலேசுவரரிடம் கூட இந்த ஓலையைப் பற்றிக் குறிப்பிடாமல் இருப்பது நல்லது!" என்ற முடிவான தீர்மானத்தோடு தான் மகாமண்டலேசுவரரைச் சந்திப்பதற்குக் கிளம்பியிருந்தான் அவன். பறளியாற்றங்கரை ஆலமரத்தடியில் குதிரையைக் கட்டிவிட்டுத் தோணித் துறையை நோக்கித் தாழை மரக்கூட்டத்தின் இடையே வளைந்து வளைந்து செல்லும் குறுகிய பாதையில் நடந்து கொண்டே அன்று மாலையில் நிகழ்ந்தவற்றையெல்லாம் மீண்டும் மேற்கண்டவாறு நினைத்துப் பார்த்துக் கொண்டான் தளபதி வல்லாளதேவன். தோணித்துறையை நெருங்கியபோது அங்கே தீப்பந்தங்களின் வெளிச்சமும், பேச்சுக் குரல்களும் இருப்பதைக் கண்டு அவன் முகம் மலர்ந்தது. தன் நம்பிக்கை வீண் போகாமல் காப்பாற்றியதற்காகத் தெய்வத்துக்கு நன்றி செலுத்திக் கொண்டே துறையில் இறங்கினான். தோணி அக்கரைக்குப் புறப்படுவதற்குத் தயாராக இருந்தது. அதில் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்தபோதுதான் தளபதியால் தன் கண்களையே நம்ப முடியவில்லை! 'தோணியே இருக்காது இந்த நள்ளிரவில்' என்று அவநம்பிக்கையோடு அங்கு வந்த அவன் தோணியையும் அதைச் செலுத்தும் படகோட்டி அம்பலவன் வேளானையும் மட்டும் பார்த்திருந்தால் கூட அவ்வாறு ஆச்சரியப்பட்டிருக்க மாட்டான். ஆனால், தோணியில் வீற்றிருந்தவர்கள் யார்? யாரைக் கண்டு தளபதி இவ்வளவு வியப்படைகிறான்? யாரைத் தேடி வந்தானோ அந்த இடையாற்றுமங்கலம் நம்பியே படகில் உட்கார்ந்திருந்தார். அவரோடு அவருடைய திருக்குமரியாகிய குழல்வாய்மொழி நாச்சியாரும், அவன் இதற்கு முன் பார்த்திராத ஒரு வாலிபத் துறவியும் படகில் அமர்ந்திருந்தனர். தாடி மீசையோடு காட்சியளித்த அந்தத் துறவியின் களை சொட்டும் முகம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. தளபதியின் உருவத்தைத் துறையின் அருகில் கரையின் மேல் கண்டதும் தோணி நின்றது. "யாரது கரையில் நிற்பது? இந்நேரத்துக்கு வேற்றாட்களைத் தோணியில் ஏற்றும் வழக்கம் இல்லை" என்று கூச்சலிட்டான் அம்பலவன் வேளான். அதைக் கேட்டு மெல்லத் தனக்குள் சிரித்துக் கொண்டே, "மகாமண்டலேசுவரர்க்குத் தளபதி வல்லாளதேவனின் வணக்கங்கள் உரியனவாகுக!" என்று கூறியவாறு, தீப்பந்த வெளிச்சம் தன் முகத்தில் படும்படி படகு அருகே வந்து நின்று கொண்டான் தளபதி. கம்பீரமான தோற்றமும், அறிவொளி வீசும் முகத்தில் கூர்ந்து நோக்கும் கண்களும் கொண்ட இடையாற்றுமங்கலம் நம்பி, "யார் வல்லாளதேவனா? ஏது இந்த அர்த்த இராத்திரியில் இப்படி இங்கே திடீர் விஜயம்?" என்றார். அப்பப்பா! என்ன மிடுக்கான குரல்! "மகாராணியார் ஓர் அவசர காரியமாக அனுப்பி வைத்தார்கள்." "சரியான சமயத்துக்குத்தான் வந்தாய்! இன்னும் கால் நாழிகை கழித்து வந்திருந்தால் எங்கள் தோணி அக்கரை சென்று அடைந்திருக்கும். வா! நீயும் படகில் ஏறிக்கொள். மாளிகையில் போய்ப் பேசிக் கொள்ளலாம்!" "தளபதியாரே! வாருங்கள்" என்று சிரித்துக் கொண்டே அவனுக்கு இடம் கொடுத்தாள் மகாமண்டலேசுவரரின் புதல்வி. படகிலிருந்த மூன்றாவது ஆளாகிய வாலிபத் துறவி 'உம்'மென்றிருந்தார். அவர் பேசவேயில்லை. படகு மறுகரையை அடைகிறவரையில் அவர் பேசவேயில்லை! |