செய்திகள் (Last Updated: 10 செப்டம்பர் 2025 04:30 PM IST) | ||
|
Cotton Bath Towels (Dharanish Mart - www.dharanishmart.com)
Set of 3 Towels | Big Size 29 x 55 Inch (73 x 139 cm) | MRP: Rs. 333/- | Discount Price: Rs. 300/- | Shipping: Rs. 50/- | Total Rs. 350/-
|
![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
To Order: whatsapp: 9444086888 | To Pay: GPAY/ UPI Id: dharanishmart@cub
|
இரண்டாம் பாகம் 8. முடியாக் கனவின் முடிவினிலே... நான்கு புறமும் திக்குத் திகாந்தரங்களெல்லாம் ஒரே நீல நெடு நீர்ப் பரப்பு. யாரோ சொல்லித் தூண்டி அனுப்புவது போல் அடுக்கடுக்காய் ஒன்றன் பின் ஒன்றாய் நிரவி மேலெழுந்து நிமிர்ந்து வரும் அலைகளின் ஆனந்தக் காட்சி. சுழித்து ஓலமிடும் காற்றுக்கும், அலைகளின் ஆர்ப்புக்கும் அஞ்சாமல் அந்தக் கப்பல் சென்று கொண்டே இருந்தது. "இளவரசே! சோர்ந்து போய்க் காணப்படுகிறீர்களே! மிகவும் களைப்பாக இருந்தால் படுத்துக் கொள்ளலாமே!" என்றார் சக்கசேனாபதி. இராசசிம்மன் உண்மையில் சோர்ந்து தான் போயிருந்தான். அதிக நேரக் கடற் பயணத்தின் அலுப்பு அது. கண்கள் சிவந்திருந்தன. உடல் நெருப்பாய்க் கொதித்தது. தலை கனத்து வலிப்பது போலிருந்தது. கீழ்த்தளத்தில் ஒரு மரக் கம்பத்தின் அடியில் சாய்ந்து கொண்டு வீற்றிருந்தான் இராசசிம்மன். அந்த நிலையில் ஒற்றை நாடியான அவன் உடலையும் முகத்தையும் பார்த்தால் குளத்திலிருந்து தண்டோடு வெளியில் பறித்து எறிந்த தாமரை போலத் தோன்றியது. அந்த வாட்டத்தைக் கண்டு சக்கசேனாபதி மனத்தில் வேறு விதமாக நினைத்துப் பயந்தார். 'கடற் காய்ச்சல் மாதிரி ஏதாவது வருவதற்கு முன்னறிவிப்புதான் அந்தச் சோர்வோ?' என்று தோன்றியது அவருக்கு. கப்பலுக்குள் பொருள்கள் வைத்திருந்த பகுதிக்குப் போய் மெத்தென்றிருக்கும் கனமான விரிப்பு ஒன்றையும் சாய்ந்து கொள்வதற்கு வசதியான தலையணைகளையும் எடுத்துக் கொண்டு வந்தார். தளத்தில் ஒரு நல்ல இடமாகப் பார்த்து விரிப்பை விரித்தார். இராசசிம்மனை எழுந்திருக்கச் செய்து கைத்தாங்கலாக நடத்தி அழைத்துக் கொண்டு போய்ப் படுக்க வைத்தார். கையிலிருந்த வலம்புரிச் சங்கையும் படுக்கையிலேயே பக்கத்தில் வைத்துக் கொண்டான் அவன். அந்தச் செயலைப் பார்த்த போது சக்கசேனாபதி மனத்துக்குள் சிரித்துக் கொண்டார். வீரமும், சூழ்ச்சியும் துணைகொண்டு ஒரு நாட்டின் அரியணையில் வீற்றிருக்க வேண்டிய அரச குமாரனுக்கு இவ்வளவு குழந்தை மனமா? தனது விளையாட்டுப் பொருளைத் தான் தூங்கும் போதும் பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கும் சிறு பிள்ளையைப் போன்றல்லவா இருக்கிறது இது?' - அவர் நினைத்தார். "இந்த சங்கு எப்போதும் உங்கள் பக்கத்திலேயே இருக்க வேண்டுமா? கப்பல் ஆடும் போது உருண்டு எங்கேயாவது போய்விடுமே. நான் இதை உள்ளே கொண்டு போய் வைத்து விடுகிறேன்" என்று சிரித்துக் கொண்டே குனிந்து அதைக் கையில் எடுக்க முயன்றார் அவர். "வேண்டாம்! அது இங்கேயே இருக்கட்டும்!" படுத்திருந்தபடியே அவருடைய கைகளை மறித்துத் தடுத்து விட்டான் அவன். "சரி! தூங்குங்கள்" - இப்படிச் சொல்லிவிட்டு நடந்தவர் எதையோ நினைத்துக் கொண்டவர் போல் மறுபடியும் அவனருகே வந்து முழங்கால்களை மடித்து மண்டியிட்டு அமர்ந்தார். இளவரசனின் மார்பை மூடியிருந்த பட்டு அங்கியை விலக்கி வலது கையால் தொட்டுப் பார்த்தார். பின்பு நெற்றியிலும் கையை வைத்துப் பார்த்தார். அவருடைய முகத்தில் கவலை வந்து குடிபுகுந்தது. "கண்கள் எரிச்சலாக இருக்கின்றதா உங்களுக்கு?" 'ஆம்' என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தான் இராசசிம்மன். "நீங்கள் கவனமாயிருக்க வேண்டும்! கடற்காய்ச்சலை இழுத்து விட்டுக் கொண்டு தொல்லைப்படக் கூடாது." அவர் எச்சரிக்கை செய்து விட்டுப் போனார். நினைத்துப் பார்க்கும் போது அவருக்கு வேடிக்கையாக இருந்தது. 'தலைமுறை தலைமுறையாக உரிமை கொண்டாட வேண்டிய முடியையும் வாளையும் சிம்மாசனத்தையும் கூட இப்படிப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பாதுக்காக்கத் தெரியவில்லை. கப்பலில் ஒரு மூலையிலுள்ள அறையில் அடைப்பட்டுக் கிடக்கின்றன அவை. ஏதோ ஒரு தீவில் எவளோ ஒரு பெண்ணிடம் விலைக்கு வாங்கிய இந்தச் சங்குக்கு இவ்வளவு யோகம், புதுப் பொருள் மோகம். 'ஊம்! யாரை நொந்து கொள்வது? உலகத்தில் பெண் சம்பந்தப்பட்ட எந்தப் பொருளுக்கும் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது' என்று தளத்தில் நடந்து கொண்டே முணுமுணுத்தது அவருடைய வாய். உடல் தளர்ந்து படுத்துக் கொண்டிருந்த இராசசிம்மனுக்கு கண் இமைகள் சொருகி விழிகள் மேற் கவிந்தன. உடலின் அனுபவங்களுக்கும், உள்ளத்துக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு இருக்கும் போலும். காலையில் செம்பவழத் தீவிலிருந்து புறப்படுகிறவரை உற்சாகமாக இருந்த அவன் மனமும் இப்போது தளர்ந்திருந்தது. தன் செயல்களால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளைப் பற்றியெல்லாம் கற்பனை செய்து பார்த்தது அவன் உள்ளம். கடுங்குளிர் காலத்தில் வெந்நீருக்குள் உடலை முக்கிக் கொண்டால் இதமாக இருக்குமே! அதுபோல் படுக்கையில் படுத்துக் கொண்டே கண்களை மூடிக் கொண்டு நினைவுகளை எங்கெங்கோ படரவிடுவது சுகமாக இருந்தது அவனுக்கு. ஒவ்வொருவர் முகமாக, ஒவ்வோர் இடமாக, அவன் முன் தோன்றியது. நினைவு நழுவித் துயில் தழுவும் ஓய்ந்த நிலை. காற்று மண்டலத்தின் எட்ட முடியாத உயரத்துக்கு உடலின் கனம் குறைந்து நுண்ணிய உணர்வுகளே உடலாகி மெல்லப் பறப்பது போன்ற தன் வசமற்றதோர் பரவசத்தில் ஆழ்ந்திருந்தது மனம். மலையுச்சியும், வான்முகடும், கடல் ஆழமும், நிலப்பரப்பும், இவையனைத்தின் பெருமையும், கம்பீரமும் ஒன்றாய்ச் சமைந்து ஒரு முகமாக மாறி அவன் கண்களுக்கு அருகில் நெருங்கி வருகிறது. பயந்து போய் அவன் கண்களை இறுக்கி மூடிக் கொள்கிறான். 'இராசசிம்மா! நீ அசட்டுத்தனமாக நடந்து கொண்டு விட்டாய். என்னென்னவோ பெரிய எண்ணங்களை எண்ணிக் கொண்டு உன்னை வரவழைத்து இடையாற்று மங்கலத்தில் இரகசியமாகத் தங்க வைத்தேன். நான் எதை எதையே திட்டமிட்டுக் கொண்டு செய்தேன். நீயும் எதை எதையோ திட்டமிட்டுக் கொண்டு தான் என்னிடம் வந்து தங்கினாய் என்பது இப்போது புரிகிறது. என்ன செய்யலாம்? எப்படி நடக்குமோ, அப்படி நடத்திக் கொடுப்பதற்கு விதிக்குச் சிறிதும் சம்மதமில்லை." பெரிய கண்டாமணியின் நாக்கைக் கையின் வலிமை கொண்ட மட்டும் இழுத்து விட்டு விட்டு அடிப்பது போல் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு அறையாக அவன் கன்னத்தில் மோதிவிட்டுச் செவிக்குள் புகுந்தது. பயந்து கொண்டே மெல்லக் கண்ணைத் திறக்க முயல்கிறான் அவன். ஆனால் கண்ணைத் திறப்பதற்கு முன்பே மகாமண்டலேசுவரரின் முகம் கண்ணுக்குள்ளேயே புகுந்து வந்து தெரிவதுபோல் அவனுக்குப் புலனாகிறது. மறுபடியும் சில கணங்கள் காற்று மண்டலத்தில் பறப்பது போல் ஒரு பரவசம் ஏற்பட்டது. அந்தப் பரவசத்தைக் கலைத்துக் கொண்டு, 'குழந்தாய்!' என்று ஒரு குரல் உலகத்துக் கருணையையெல்லாம் உள்ளடக்கிக் கொண்டு ஒலித்தது. இராசசிம்மன் தன்னைப் பெற்றெடுத்த அன்னையின் முகத்தைக் கண்டான்; நெஞ்சை நெகிழ்த்தது, 'குழந்தாய்' என்ற அந்தக் குரல். உலகில் தாயின் குரலைத் தவிர வேறு எந்தக் குரலும் ஏற்படுத்த முடியாத நெகிழ்ச்சி அது. 'செல்வா!' இத்தனை வயதும் பொறுப்பும் ஏற்பட்ட பின்பும் உனக்கு இன்னும் விளையாட்டுப் புத்தி போகவில்லையே, அப்பா! யாரிடம் விளையாடலாம், யாரை ஏமாற்றலாம் என்று கூடவா உனக்குத் தெரியாமற் போய்விட்டது? மகாமண்டலேசுவரர் எவ்வளவு பெரியவர்? நம் நலனிலும் நாட்டு நலனிலும் எவ்வளவு அக்கறையுள்ளவர்? அவர் உனக்குக் கெடுதல் செய்ய முற்படுவாரா? அவரைக் கூட நம்பாமல் இப்படி நடந்து கொண்டு விட்டாயே நீ? இடையாற்று மங்கலத்தில் வந்து மறைந்து கொண்டிருந்த போது உன் தாயைப் பார்க்க வேண்டுமென்ற துடிப்பு உன் மனத்தில் ஒரு தரம் கூட ஏற்படவேயில்லையா குழந்தாய்? நீ வந்து பார்க்க வேண்டுமென்று உன் மனத்தில் ஒரு முறையாவது நினைத்திருந்தாலே போதும். அதுவே என் தாய்மைக்கு வெற்றிதான். அரியணை ஏறி அரசாண்டு வீரச் செயல்கள் புரிந்து தென்பாண்டி நாட்டு மக்கள் மனங்களையெல்லாம் கவரவேண்டிய நீ அந்த அரியணையையும் அரசுரிமைப் பொருள்களையுமே கவர்ந்துகொண்டு போய்விட்டாயே! யாருக்கும் தெரியாமல் இப்படிக் கவர்ந்து கொண்டு கள்வனைப் போல் போவதற்கு உனக்கு வெட்கமாக இல்லையா, அப்பா? ஆற்றங்கரை மரம் போல் செழித்துக் கொழித்துப் பெரு வாழ்வு வாழ்ந்த உன் தந்தையைப் போல் தென்பாண்டி நாட்டை ஆளும் வீரம், கடகம் செறிந்த உன் கைகளில் இருக்குமென்றுதான் நான் நம்பிக் கொண்டிருக்கிறேன்! நீ என்ன செய்யப் போகிறாயோ?' - அந்தக் குரல் ஒலி நின்று போயிற்று. 'ஐயோ, அம்மா!' என்று அலறி விட வேண்டும் போலிருந்தது குமார பாண்டியனுக்கும். ஆனால் அப்படி அலற முடியாமலும் அழ முடியாமலும் ஏதோ ஓர் உணர்ச்சி அவன் வாயைக் கட்டி விட்டது போலிருந்தது. வாயிருந்தும் நாவிருந்தும், பேசத் தெரிந்தும், அவன் ஊமையானான். 'நீங்கள் மிகவும் பொல்லாதவர்! உங்களுக்கு இரக்கமே கிடையாது. கல்நெஞ்சு உடையவர்' - முகத்திலும் கண்களிலும் பொய்க் கோபம் துடிக்கக் குழல்வாய்மொழி அவன் முன் தோன்றினாள். 'குழல்வாய்மொழி! நீ என்னை மன்னித்துவிடு. நான் உன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்துவிட்டேன்' என்று எதையோ சொல்வதற்காக அவன் வாயைத் திறந்தான். ஆனால் அந்தப் பெண்ணின் பேச்சு அவனை வாயைத் திறக்கவே விடவில்லை. ஆத்திரமடைந்து கூப்பாடு போட்டாள் அவள். 'நீங்கள் பேசாதீர்கள்! போதும், உங்கள் பேச்சு. பேசிப் பேசி என்னை ஏமாற்றினீர்கள். அத்தனையும் வெளிவேடம். உடலுக்கு வேடம் போட்டுக் கொள்ளத்தான் உங்களுக்குத் தெரியுமென்று நினைத்திருந்தேன். நீங்களோ மனத்தில், நினைவில், அன்பில், பேச்சில், எல்லாவற்றிலும் வெளிவேடம் போடுகிறீர்கள். நீங்கள் பெரிய கள்வர், மிகப் பெரிய கள்வர். உலகத்துக் களவர்களுக்கெல்லாம் பொன்னையும், பொருளையும் தான் திருடத் தெரிந்திருக்கிறது. உங்களுக்கு அதோடு மனத்தையும் திருடி ஏமாற்றிவிட்டுப் போகத் தெரிகிறது. ஐயா இளவரசே! நீங்கள் கெட்டிக் காரர் என்று உங்கள் மனத்தில் எண்ணமோ?' படபடப்பாகப் பேச்சைக் கொட்டிவிட்டு மறைந்து விட்டது இடையாற்று மங்கலத்து இளங்குமரியின் மதிமுகம். அப்புறம் சமீபத்தில் அவன் சந்தித்த, சந்திக்காத, யார் யாருடைய முகங்களோ, எந்த எந்த இடங்களோ, அவன் கண்முன் தெரிந்து மறைந்தன. நாராயணன் சேந்தன், தளபதி வல்லாளதேவன், பகவதி, விலாசினி, ஆசிரியர்பிரான், பவழக்கனிவாயர், இடையாற்று மங்கலத்துப் படகோட்டி, பாண்டிநாட்டுக் கூற்றத் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள் ஒவ்வொருவர் முகமும் அவன் பார்வைக்கு முன்னால் தோன்றி மறைந்து ஏசி இரைந்து, சினந்து பேசுவது போல் தோன்றின. கோட்டை, அரண்மனை, இடையாற்றுமங்கலம், பறளியாறு, வசந்த மண்டபம், குமரிக் கோயில், விழிஞம், சுசீந்திரம், மின்னல் மின்னலாக, ஒளிவட்டம் ஒளிவட்டமாக, அந்த இடங்கள் அவன் உணர்வுக்குப் புலனாகி மறைந்தன. எல்லாவற்றுக்கும் இறுதியில் கடல் முடிவற்றுத் தெரிந்த நீர்ப் பிரளயத்தின் மேல் சக்கசேனாபதி அருகில் துணை நின்று, ஒரு கப்பலில் அவனை எங்கே அழைத்துக் கொண்டு போகிறார். செம்பவழத் தீவு, கடைவீதி, மதிவதனி, வலம்புரிச் சங்கு, உயிருக்கு நேர்ந்த ஆபத்து, முதலை வலையில் சுருண்டு தப்பியது - நினைவுகள் - முகை பிறழாமல் ஒவ்வொன்றாகத் தொடருகின்றன. சிரித்துக் கொண்டே மதிவதனி அவனுக்கு முன் தோன்றுகிறாள். அவன் ஆவலோடு எழுந்து ஓடிப் போய் அவள் கொடி உடலைத் தழுவிக் கொள்கிறான். அடடா! அந்த இன்ப அரவணைப்பில் தான் என்ன சுகம்? எலும்பும் தோலும் நரம்பும் இணைந்த மனிதப் பெண்ணின் உடல் போலவா இருக்கிறது அது? மலர்களின் மென்மையும், அமுதத்தின் இனிமையும், மின்னலின் ஒளியும் கலந்து கவின் பெற்று இளமை ரசம் பூசிய ஒரு கந்தர்வச் சிலை அவள் உடல்! அவன் தழுவலில் கண்ணொடு கண்ணினை கலப்புற்று நிற்கும் அவள் நாணிக் கண் புதைத்துச் சிரிக்கிறாள். வலது இதழ் முடியுமிடத்தில் சிரிப்பு சுழித்துக் குழியும் சமயத்தில் தன் கையால் குறும்புத்தனமாகக் கிள்ளுகிறான் அவன். பொய்க்காக வலிப்பது போல நடிக்கிறாள் அவள். அந்த இனிய நிலை முடிவற்றுத் தடையற்று வளர்ந்து தொடராய் நீண்டு கொண்டே போகிறது. அப்போது இடையாற்று மங்கலம் நம்பி ஓடி வந்து, 'நீ ஓர் அசடன்?' என்று கூச்சலிடுகிறார். அவனுடைய அன்னை ஓடி வந்து, 'உனக்கு இன்னும் விளையாட்டுப் புத்தி போகவில்லை' என்கிறார். குழல்வாய்மொழி ஓடிவந்து, 'நீங்கள் பொல்லாதவர்' என்று பொறாமையோடு கத்துகிறாள். சக்கசேனாபதி சிரித்துக் கொண்டே 'நீங்கள் இன்னும் குழந்தையாகவே இருக்கிறீர்களே?' என்று குற்றம் சுமத்துகிறார். அத்தனை குரல்களும் மண்டையைப் பிளப்பது போல் ஒன்றாகச் சேர்ந்து ஒலிக்கின்றன. அவன் பயந்து போய் மதிவதனியை இன்னும் இறுக்கித் தழுவிக் கொள்கிறான். 'ஐயோ! இதென்ன உங்கள் உடல் இப்படி அனலாய்ச் சுடுகிறதே?' என்று பதறிப் போய்ச் சொல்கிறாள் அவள். இராசசிம்மனின் உடல் வெடவெடவென்று நடுங்கியது. 'பெண்ணே! இந்தக் கனவைத் தீர்க்கும் மருந்து நீதான்' என்று அவளைத் தழுவிய கைகளை எடுக்காமலே சொல்லுகிறான் அவன். திடீரென்று யாரோ கைகொட்டிச் சிரிக்கும் ஒலி கடல் ஒலியோடு கலந்து கேட்கிறது. காற்று மண்டலத்தில் நுண்ணுணர்வே உடலாகி மேலே எட்டாத உயரத்தில் பறந்து கொண்டிருந்த இராசசிம்மனின் உடல் 'பொத்தென்று' தரையில் வந்து விழுந்ததைப் போல் ஒரு பெரிய அதிர்ச்சி. அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டு அவன் மெல்லக் கண்களைத் திறக்கிறான். எதிரே கப்பல் தளத்தில் சக்கசேனாபதி அவன் அருகே சிரித்துக் கொண்டு நின்றார். தன் கைகளினால் படுக்கையின் பக்கத்தில் இருந்த வலம்புரிச் சங்கை நெரித்து விடுவது போல் தழுவிக் கொண்டிருப்பதை அப்போது தான் உணர்ந்தான் அவன். அவர் சிரிப்பதன் காரணம் புரிந்தது. அத்தனையும் கனவு! முடியாக் கனவு! என்று தான் அதற்கு முடிவோ! இராசசிம்மன் வெட்கமடைந்து சங்கைப் பற்றித் தழுவிக் கொண்டிருந்த தன் கைகளை எடுத்தான். "தூக்கத்தில் இப்படியா அழுகையும் சிரிப்புமாக மாறி மாறி உளறிப் பிதற்றுவீர்கள்? நான் பயந்தே போனேன். நீங்கள் இந்தச் சங்கை அழுத்திய விதத்தைப் பார்த்தால் உங்கள் பிடியின் இறுக்கம் தாங்காமல் இது உடைந்து விடுமோ என்று அஞ்சிவிட்டேன்" சக்கசேனாபதி கூறினார். அவன் அருகில் குனிந்து உட்கார்ந்து மீண்டும் மார்பையும், நெற்றியையும் தொட்டு நீவிப் பார்த்தார். அவர் முகம் சுருங்கிச் சிறுத்தது. "உங்களுக்குக் காய்ச்சல் தான் வந்திருக்கிறது! நான் நினைத்தது சரியாகப் போயிற்று" என்று பதட்டத்தோடு கூறிவிட்டுப் போர்வையை எடுத்து நன்றாகப் போர்த்திவிட்டார். இராசசிம்மன் அவரைப் பார்த்து மிரள மிரள விழித்தான். கப்பல் அறைக்குப் போய் ஏதோ ஒரு தைலத்தை எடுத்துக் கொண்டு வந்து அவன் மார்பிலும் நெற்றியிலும் சூடு பறக்கத் தேய்த்துத் தடவிக் கொடுத்தார். |