![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : சோலைக் கிளி - 11 |
மூன்றாம் பாகம் 15. ஒரு பிடி மண்ணை "சுவாமி! இதென்ன அநியாயம்? எவனோ அக்கிரமம் செய்து விட்டு ஓடுகிறான். அவனைப் பிடிக்கலாமென்றால் போகவிட மாட்டேன் என்கிறீர்கள்!" என்று இராசசிம்மனும் சேந்தனும் மகாமண்டலேசுவரரோடு மன்றாடிக் கொண்டிருந்த போது அவர் பதில் சொல்லாமல் இருட்டில் கீழே விழுந்த மகுடத்தைத் தேடி எடுத்து அணிந்து கொண்டார். "இந்த முடியை நானே ஒரு நாள் கீழே கழற்றி வைக்கத்தான் போகிறேன். அதற்குள் என் எதிரிகள் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்களோ, தெரியவில்லை!" என்று அவர் கூறிய போது அதில் எத்தனையோ அர்த்தங்கள் தொனித்தன. அவர் இதைக் கூறிய போது அவருடைய முகத்தைப் பார்க்க வேண்டுமென்று சேந்தனுக்கும், இராசசிம்மனுக்கும் ஆசையாயிருந்தது. ஆனால் இருளில் முகம் தெரியவில்லை. "வாருங்கள், போகலாம்!" என்று எதுவும் நடக்காதது போல் கூறியபடி அவர்கள் இருவரும் பின் தொடரக் கப்பலுக்கு அருகே வந்தார் அவர். "அது என்ன? அங்கே நீங்கள் போய்ப் பேசிக் கொண்டிருந்த இடத்தில் ஏதோ ஓசை கேட்டதே?" என்று மகாராணி வானவன்மாதேவியார் வினவினார். "ஒன்றுமில்லை! ஏதோ ஒரு கல் காலில் இடறியது. அதைத் தூக்கி எறிந்தேன்" என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுக் குமாரபாண்டியனுடைய முகத்தையும் சேந்தனுடைய முகத்தையும் பார்த்தார் மகாமண்டலேசுவரர். அப்போது தூறிக் கொண்டிருந்த மழை நின்று போயிருந்தது. கப்பலிலிருந்து பொருள்களெல்லாம் இறக்கப்பட்டு விட்டன. "இங்கேயே நின்று கொண்டிருப்பானேன்? வாருங்கள் எல்லோரும் விழிஞத்து அரச மாளிகையில் போய்த் தங்கலாம்" என்று முன்னால் நடந்தார் மகாராணி. எல்லோரும் சென்றார்கள். விடிவதற்குச் சிறிது நேரமே இருந்தது. யாரும் உறங்கவில்லை. குழல்வாய்மொழியும் விலாசினியும் ஒரு மூலையில் உட்கார்ந்து மகாராணி வானவன்மாதேவியாரோடு பேசிக் கொண்டிருந்தார்கள். அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும், குமாரபாண்டியனுக்குக் காந்தளூர் மணியம்பலத்து நிலைகளைப் பற்றி விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். வேறொரு மூலையில் சேந்தனும், மகாமண்டலேசுவரரும் இரகசியமாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். விடிகிற நேரம் நெருங்க நெருங்கத் துறைமுகத்தில் வழக்கமான ஒலிகளும், கலகலப்பும், ஆள் நடமாட்டமும் அதிகமாயின. இவர்களெல்லோரும் விழிஞத்து அரச மாளிகையில் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த சமயத்தில் விழிஞத்தின் ஒதுக்குப்புறமான மற்றொரு பகுதியில் நடந்து கொண்டிருந்த மற்றொரு சம்பவத்தைக் கவனிக்கலாம். அந்த இடம் கடற்கரையிலிருந்து நெடுந்தொலைவு விலகியிருந்தது. செடி, கொடிகளும், பெயர் வேறுபாடு தெரியாத பலவகைக் காட்டு மரங்களும் அடர்ந்த பகுதி அது. பகற்போதிலேயே மயான அமைதி நிலவுகிற இடம் அது. அங்கே குருதிக் கொழுந்துகள் போல் பூத்திருந்த ஒரு செவ்வரளிப் புதரின் கீழே தளபதி வல்லாளதேவனும், ஆபத்துதவிகள் தலைவனும் உட்கார்ந்திருந்தனர். தளபதி குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தான். அவன் கண்கள் கள்ளிப் பழங்களைப் போலச் சிவந்திருந்தன. குழைக்காதன் தளபதிக்கு ஏதோ ஆறுதல் கூறித் தேற்ற முயன்று கொண்டிருந்தான். "குழைக்காதரே! என் அருமைத் தங்கையின் முடிவு இப்படியா ஆக வேண்டும். அன்பையும், ஆதரவையும், செலுத்த எனக்கு இனிமேல் யார் இருக்கிறார்கள்? அவள் போன பின்பும் நான் இனி எதற்காக உயிர் வாழ வேண்டும்? கடல் கடந்து போய் எத்தனையோ பெரிய காரியங்களைச் சாதித்துக் கொண்டு வரப்போகிறாள் என்று கனவு கண்டு கொண்டிருந்தேனே! அங்கே போய் உயிர் விடுவதற்காகவா அவளை அனுப்பினேன்?" என்று தளபதி அழுது புலம்பிய அவலக் குரல் மனித நடமாற்றமற்ற அந்தக் காட்டில் எதிரொலித்தது. "மகாசேனாபதி! அந்தச் செய்தியைக் கேட்டது முதல் என் உள்ளம் எவ்வளவு கொதிப்படைந்திருக்கிறது, தெரியுமா? கப்பலிலிருந்து குமாரபாண்டியருடன் தங்கள் தங்கையார் இறங்குவாரென்று எவ்வளவு ஆவலோடு பாறை மறைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தோம் நாம்? மகாமண்டலேசுவரர் நாம் ஒளிந்திருந்த பாறைக்கு அருகில் வந்து குமாரபாண்டியரிடம் அந்த இரகசியத்தை வெளியிடக் கூடாதென்று கேட்டுக் கொண்ட போது தானே நமக்கே அந்த உண்மை தெரிந்தது? அந்தச் செய்தியைக் கேட்டவுடன் எனக்கு ஏற்பட்ட கொதிப்பில் எவ்வளவு பெரிய கல்லைத் தூக்கி மகாமண்டலேசுவரர் மேல் வீசினேன்? அந்தப் பாழாய்ப் போன கல் அவர் மண்டையை உடைத்து நொறுக்கியிருந்தால் எனக்குத் திருப்தியாயிருக்கும். மகுடத்தைக் கீழே தள்ளியதோடு போய்விட்டதே!" என்று சோக வெடிப்பில் உண்டான கோபத்தோடு சொன்னான் குழைக்காதன். அதுகாறும் பொங்கி எழும் அழுகையோடு சோகத்தில் துவண்டு போய் வீற்றிருந்த மாவீரன் வல்லாளதேவன் திடீரென்று ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன் போல் எழுந்து நின்றான். அழுகை ஓய்ந்தது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். முகத்தில் வைரம் பாய்ந்த உணர்ச்சி ஒன்று கால்கொண்டு பரவியது. கண்களில் பழிவாங்கத் துடிக்கும் உணர்வொளி மின்னியது. முகம் சிவந்து, மீசையும் உதடுகளும் துடித்தன. ஆவேசமுற்ற வெறியாட்டக்காரன் போல் விறைப்பாக நின்று கொண்டு சூளுரைத்தான் அவன். "குழைக்காதரே! இந்தக் கணத்திலிருந்து நான் அயோக்கியனாக மாறப் போகிறேன். கடமை, நன்றி, நியாயம், அறம் இவைகளைப் பற்றி நான் இனிமேல் கவலைப்படப் போவதில்லை. கருணையும், அன்பும், எனக்கு இனிமேல் தேவையில்லை. அவைகளை நான் யார் மேல் செலுத்த முடியுமோ, அந்த அருமைச் சகோதரி போய்விட்டாள். என் ஒரே உறவு அழிந்து விட்டது. இல்லை! சூழ்ச்சியால் அழிக்கப்பட்டு விட்டது. என் உடன்பிறந்த இரத்தம் துடிக்கிறது. பறி கொடுத்த மனம் பதறுகிறது. இனி யாரும் எனக்கு வேண்டியவரில்லை. நான் இரத்தப் பசி மிகுந்த கோர ராட்சசனாக உருவெடுக்கப் போகிறேன். ஞானிக்குத் துன்பம் வந்தால் அதே மாதிரித் துன்பம் பிறருக்கு வராமல் காப்பான். முரடனுக்கு ஒரு துன்பம் வந்தால் ஆயிரம் பேருக்கு ஆயிரக்கணக்கான துன்பங்களை விளைவிப்பான். நான் முரடன். எனக்கு எதிரி மகாமண்டலேசுவரர் ஒருவர் மட்டும் இல்லை. மகாராணி, இளவரசர், அந்தக் குட்டைச் சேந்தன், மகாமண்டலேசுவரரின் பெண், இந்த நாடு, இந்தத் துன்பத்தை எனக்கு அளித்த எதிரிகளின் தலையாய விதி என்னும் எதிரி - எல்லோரையும் எல்லாவற்றையும் நிர்மூலமாக்கப் போகிறேன் நான். என் தங்கைக்கு இல்லாத உயிரும் வாழ்வும் எவருக்கும் இல்லாமல் செய்து விடப் போகிறேன். என்னை இதுவரையில் தலை நிமிர முடியாமல் செய்து வந்த அறிவின் பரம்பரையைப் பூண்டோடு அழித்தே விடப் போகிறேன், பாருங்கள்!" என்று கூப்பாடு போட்டுக் கொண்டு கீழே குனிந்து வலது கையால் ஒரு பிடி மண்ணை அள்ளிக் காற்றில் தூவினான் தளபதி. குழைக்காதன் பயத்தோடு பார்த்துக் கொண்டு நின்றான். தளபதியின் வெறியை என்ன கூறி எப்படி ஆற்றுவதென்றே அவனுக்கு விளங்கவில்லை. மூட்டாத காலக்கடைத் தீயாக, ஊழி நெருப்பாக, உக்கிரமான கொதிப்பின் கம்பீர பிம்பமாக எழுந்து நின்றான் தளபதி. "மகாசேனாபதி! இந்த அழிக்கும் வேலையில் நம்மோடு ஒத்துழைப்பதற்கு வேறு மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்களையும் சந்தித்து நம்மோடு சேர்த்துக் கொள்ளலாமோ?" என்று அருகில் நெருங்குவதற்குப் பயந்து கொண்டே மெதுவாகக் கேட்டான் குழைக்காதன். "யார் அவர்கள்?" "கழற்கால் மாறனாரும் அவரைச் சேர்ந்தவர்களும்." "எங்கே சந்திக்கலாம் அவர்களை?" "பொன்மனைக்குப் போனால் அவர்களைச் சந்திக்கலாம்!" "புறப்படுங்கள் பொன்மனைக்கு!" தளபதி வேகமாக நடந்தான். குழைக்காதனும் பின்பற்றினான். காட்டு எல்லை கடந்து மக்கள் புழக்கம் மிகுந்த இடம் நெருங்கியதும் தங்கள் தோற்றங்களைப் பிறர் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள இயலாதபடி மாற்றிக் கொண்டு பொன்மலைக்கு விரைந்தனர் இருவரும். போது நன்றாக விடிந்து விட்டது. பகல் பவனி வரத் தொடங்கியிருந்தது அப்போது. |