![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
மூன்றாம் பாகம் 16. 'வாகை சூடி வருக!' விழிஞத்து அரச மாளிகையில் உட்கார்ந்திருந்த அந்த நேரத்தில் கடல் கடந்து பயணம் செய்த போது தனக்கும், சேந்தனுக்கும் ஏற்பட்ட அனுபவங்களையெல்லாம் மகாராணிக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள் குழல்வாய்மொழி. பகவதி மாறுவேடத்தில் உடன் வந்தது, கப்பலிலிருந்து தப்பியோடி இலங்கைக் காட்டில் மாண்டது - ஆகிய சம்பவங்களை மட்டும் சொல்லாமல் தவிர்த்து விட்டாள் அவள். செம்பவழத் தீவைப் பற்றிச் சொன்னாள். ஆனால் மதிவதனியைப் பற்றிச் சொல்லவில்லை. "பெண்ணே! இவ்வளவு அரும்பாடுபட்டுக் கடல் கடந்து சென்று என் குமாரனை அழைத்து வந்ததற்காக உனக்கும் சேந்தனுக்கும் நான் எவ்வளவோ நன்றி செலுத்த வேண்டும். எனக்குத் தெரிந்த பெண்களுக்குள் தளபதி வல்லாளதேவனின் தங்கை பகவதி ஒருத்திதான் துணிவும், சாமர்த்தியமும் கொண்டு காரியங்களைச் சாதிக்கும் திறமை உள்ளவள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது பார்த்தால் நீ அவளை விடக் கெட்டிக்காரி என்று தெரிகிறது" எனக் குழல்வாய்மொழியைப் பாராட்டினார் மகாராணி. அவருடைய பாராட்டுரையில் பகவதியைப் பற்றிப் பேச்சு வந்த போது குழல்வாய்மொழியின் முகம் பயத்தால் வெளிறியது. உடல் மெல்ல நடுங்கியது. சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டாள் அவள். "தேவி! பகவதியை எங்கே காணவில்லை? நானும் என் தந்தையும் அரண்மனையிலிருந்து காந்தளூர் சென்றபின் அவளைச் சந்திக்கவேயில்லை. இப்போது அவள் எங்கே இருக்கிறாள்? நான் பார்த்து வெகுநாள் ஆயிற்று. பார்க்க வேண்டும் போல் ஆவலாயிருக்கிறது?" என்று அப்போது உடனிருந்த விலாசினி மகாராணியைக் கேட்கவே, குழல்வாய்மொழி தன் உணர்வின் பதற்றத்தை அடக்க இயலாமல் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள். "விலாசினி! நீங்களெல்லாம் ஊருக்குப் போன மறுநாள் காலையே அந்தப் பெண் பகவதியும் ஊருக்குப் புறப்பட்டுப் போய்விட்டாள் போலிருக்கிறது. மறுநாள் காலையிலிருந்து நான் அரண்மனையில் அவளைப் பார்க்கவில்லை. அவளுக்கு என்னிடம் என்ன கோபமோ தெரியவில்லை, போகும்போது சொல்லிக் கொள்ளாமலே போய்விட்டாள். கோட்டாற்றுப் படை மாளிகைக்குத் தன் தமையனோடு போய் இருப்பாளென்று நினைத்துக் கொண்டேன். மறுபடியும் தளபதியைச் சந்திக்கிற போது அந்தப் பெண்ணை வரச் சொல்லியனுப்ப நினைத்திருந்தேன். சந்தர்ப்பமே வாய்க்கவில்லை" என்று விலாசினிக்கு மறுமொழி கூறினார் மகாராணி. "பகவதி உடனிருந்தால் பொழுது போவதே தெரியாது, தேவி! கலகலப்பான பெண்" என்று மேலும் கூறினாள் விலாசினி. "ஆமாம்! நீங்கள் இரண்டு பேரும் என்னைத் தனியாகவிட்டு விட்டுப் போய்விட்டீர்கள். எனக்குத் தனியாக இருக்கவே பிடிக்கவில்லை. புவனமோகினியும் இல்லாமற் போயிருந்தால் எனக்குப் பைத்தியமே பிடித்திருக்கும்" என்று மகாராணிக்கும், விலாசினிக்கும் பேச்சு வளர்ந்தது. ஓர் உண்மையைத் தெரிந்து வைத்துக் கொண்டே தெரியாதது போல் நடிப்பது எவ்வளவு கடினமான காரியமென்பதை அப்போதுதான் குழல்வாய்மொழி உணர்ந்தாள். "குழல்வாய்மொழி! உன்னையும் பகவதியையும் போல் பெரிய சாமர்த்தியமெல்லாம் இதோ என்னருகில் உட்கார்ந்திருக்கும் இந்தப் பெண் விலாசினிக்குக் கிடையாது. மிகவும் அடக்கமான பெண் இவள். காந்தளூர் மணியம்பலத்தில் எத்தனை கலைகள் சொல்லிக் கொடுக்கிறார்களோ அவ்வளவிலும் தேர்ந்தவள். நன்றாக நாட்டியமாடுவாள்" என்று விலாசினியைப் பற்றிப் புகழ்ந்து கூறினார் மகாராணி. தங்கள் பேச்சில் கவனம் செலுத்தாமல் எங்கோ முகத்தைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்த குழல்வாய்மொழியின் கவனத்தை மீட்கவே மகாராணி இப்படிக் கூறினார். "தேவி! இடையாற்று மங்கலத்து நங்கைக்கு முன் என்னை இப்படியெல்லாம் புகழாதீர்கள். எனக்கு வெட்கமாக இருக்கிறது" என்று விலாசினி கூறிய சொற்கள் இயல்பானவையா, தன்னைக் கேலி செய்யும் தொனியுடையவையா என்று குழல்வாய்மொழிக்கே சந்தேகமாக இருந்தது. அவர்கள் ஒன்றாக அமர்ந்து இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது மகாமண்டலேசுவரரும் சேந்தனும் அங்கே வந்தார்கள். மகாமண்டலேசுவரரைக் கண்டதும் மகாராணி உள்பட மூவரும் எழுந்து நின்றனர். மாளிகையின் மற்றோரிடத்தில், அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயரோடு உரையாடிக் கொண்டிருந்த குமாரபாண்டியனும் அவர்களோடு மரியாதையாக மகாமண்டலேசுவரருக்கு அருகில் வந்து நின்றான். மகாமண்டலேசுவரரின் வாயிலிருந்து என்ன வார்த்தைகள் வரப் போகின்றன என்பதை எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு நின்றார்கள். "பொழுது விடிந்து விட்டது. நீங்கள் எல்லோரும் அரண்மனைக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள். குமாரபாண்டியரையும் உங்களோடு அழைத்துச் செல்லுங்கள். நானும் சேந்தனும் இடையாற்று மங்கலம் வரை போய்விட்டு அப்புறம் அரண்மனைக்கு வருகிறோம். நான், அரண்மனைக்கு வந்த பின் குமாரபாண்டியரைப் போர்க்களத்துக்கு அனுப்புகிறேன். அதற்கு முன் இலங்கையிலிருந்து வரவேண்டிய படைகளும் வந்து விடலாம்!" என்று கூறிக் கொண்டே வந்த மகாமண்டலேசுவரர், மாளிகை வாசலில் குதிரைகள் வந்து நிற்கிற ஒலியைச் செவியுற்றுப் பேச்சை நிறுத்தினார். அவர் கண்களும் ஏனையோர் கண்களும் வாயிற் பக்கமாகத் திரும்பின. போர்க்களத்திலிருந்து செய்தி கொண்டு வரும் தென்பாண்டி நாட்டுப் படைவீரர் இருவர் அவசரமாகக் குதிரைகளிலிருந்து இறங்கி உள்ளே வந்தனர். அவர்கள் முகங்களில் பரபரப்பு தென்பட்டது. அவர்களில் ஒருவன் முன்னால் நடந்து வந்து மகாமண்டலேசுவரரைத் தலைதாழ்த்தி வணங்கிவிட்டு ஒரு திருமுக ஓலைச் சுருளை அவரிடம் அளித்தான். எல்லோருடைய முகங்களிலும் ஆர்வம் படர்ந்து நிற்க அவர் பிரித்துப் பார்த்தார். "மதிப்புக்குரிய மகாமண்டலேசுவரருக்குக் கரவந்தபுரத்துக் குறுநிலவேள் பெரும்பெயர்ச்சாத்தன் போர்க்களத்துப் பாசறையிலிருந்து கொண்டு எழுதும் அவசர ஓலை! தாங்கள் கோட்டாற்றுத் தளத்திலிருந்து அனுப்பி வைத்த ஐந்நூறு பத்திப் படை வீரர்களும் இங்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் என்ன காரணமோ, தளபதி வல்லாளதேவனை மட்டும் தாங்கள் அனுப்பவில்லை. நம்மிடம் படைவீரர்கள் நிறைய இருந்தும், தலைமை தாங்கி நடத்த ஏற்ற தளபதிகள் இல்லை. நானும், சேர நாட்டிலிருந்து வந்திருக்கும் தளபதியும் ஆக இரண்டு பேரே இருக்கிறோம். நம்மை எதிர்க்கும் வடதிசைப் பெரும்படையிலோ, ஐந்து திறமை வாய்ந்த படைத் தலைவர்கள் இருக்கிறார்கள். சோழ மன்னனும், கொடும்பாளூரானும், கண்டன் அமுதனும், அரசூருடையானும், பரதூருடையானும் எவ்வளவு பெரிய படைத் தலைவர்கள் என்பது தங்களுக்குத் தெரியாததன்று. நம் கை சிறிது தளர்ந்தாலும் பகைவர்கள் வெள்ளூரைப் பிடித்துக் கொண்டு தெற்கே முன்னேறி விடுவார்கள். "நேற்று நடந்த போரில் சேர நாட்டிலிருந்து வந்துள்ள படைத்தலைவன் ஏராளமான விழுப்புண்கள் பெற்றுத் தளர்ந்து போயிருக்கிறான். இன்னும் ஐந்தாறு நாட்களுக்கு அவன் போர்க்களத்தில் நிற்க முடியாதபடி பலவீனமாக இருக்கிறான். எனவே இந்தத் தகவல் கண்டதும் தளபதி வல்லாளதேவனைக் களத்துக்கு அனுப்பி வைக்கவும். அவன் வந்து விட்டால் நம் படைகளுக்கும் புதிய ஊக்கம் பிறக்கும். நம் வீரர்கள் குமாரபாண்டியருடைய வரவையும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தளபதியை அவசரமாக அனுப்பவும்.
இங்ஙனம், தங்கள் கட்டளை மேற்கொண்டு நடக்கும் பெரும்பெயர்ச்சாத்தன்." படித்து முடித்ததும் ஓலைச் சுருளைப் பத்திரமாகத் தம் கையில் சுருட்டி வைத்துக் கொண்டார் அவர். மகாராணியை நோக்கிக் கூறலானார்: "தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். வந்ததும் வராததுமாகத் தங்கள் புதல்வரை இங்கிருந்தே போர்க்களத்துக்குப் போகச் சொல்லவேண்டிய அவசரம் இப்போது எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அரண்மனைக்குச் சென்று தங்கி நீண்ட நாள் பிரிவால் மனங் கலங்கியிருக்கும் தங்களை ஆற்றுவித்த பின்பு களத்துக்குப் புறப்படச் செய்யலாம் என்று நான் சற்று முன் கூறினேன். இப்போது ஏற்பாட்டை மாற்றி இங்கிருந்தே இளவரசரை அனுப்பப் போகிறேன். நம் படைகள் உற்சாகமின்றி இருக்கின்றனவாம். குமாரபாண்டியரைக் கண்டால் ஊக்கமும், உற்சாகமும் ஏற்படுமென்று கரவந்தபுரத்துப் பெரும்பெயர்ச்சாத்தன் எழுதியிருக்கிறான்." "மகாமண்டலேசுவரரே! இதில் மன்னிப்பதற்கு என்ன குற்றமிருக்கிறது! போர் செய்வதற்கும், தன் நாட்டைக் காப்பாற்றி முடிசூடிக் கொள்வதற்கும் தானே இவ்வளவு அரிய முயற்சி செய்து இராசசிம்மனை இலங்கையிலிருந்து அழைத்து வரச் செய்திருக்கிறீர்கள். மகனைக் கண்குளிரப் பார்த்து விட்டேன். நெடு நாட்களாக என் நெஞ்சை வாட்டிப் பிழிந்து கொண்டிருந்த தாய்மைத் தாகத்தைத் தீர்த்துக் கொண்டேன். இனி அவன் போரை முடித்துக் கொண்டு வெற்றி வாகை சூடித் திரும்புகிற வரை எவ்வளவு காலமானாலும் காத்திருப்பேன். தயவு செய்து அதுவரை உங்கள் பெண்ணையும், ஆசிரியர் மகள் விலாசினியையும் என்னோடு அரண்மனையில் வைத்துக் கொள்ள இருவரும் இணங்க வேண்டும். சிறு வயதுப் பெண்கள் இருவர் உடனிருந்தால் எனக்கு என் கவலைகளை மறந்து விட முடிகிறது" என்று மகாராணி முகத்தில் மலர்ச்சியோடு கூறினார். "மகாராணி! கரும்பு தின்னக் கூலி கேட்பார்களா யாராவது? என் மகள் விலாசினியும், மகாமண்டலேசுவரரின் பெண் குழல்வாய்மொழியும் தங்களோடு அரண்மனையில் இருப்பதைப் பெரும் பாக்கியமாக ஒப்புக் கொள்வார்களென்பதில் ஐயமில்லை" என்றார் அதங்கோட்டாசிரியர். குமாரபாண்டியன் தாயின் அருகிற் சென்றான். குழல்வாய்மொழியும், விலாசினியும் விலகி நின்று கொண்டார்கள். மகாராணிக்குக் கண்கள் கலங்கின. "அம்மா! எனக்கு ஆசி கூறி விடையளியுங்கள். நான் வெற்றியோடு திரும்பி வருவேன். என்னுடைய எதிர்காலத்தைப் பற்றி உங்கள் மனத்தில் நிறைந்திருக்கும் எண்ணற்ற ஆசைகளை நிறைவேற்றுவேன். வெற்றியோடு திரும்பியவுடன் இலங்கையிலிருந்து நம்முடைய சுந்தர முடியையும், பொற்சிம்மாசனத்தையும், வீரவாளையும் காசிப மன்னர் கொடுத்தனுப்பி விடுவார். பின்பு எப்போதும் போல் இந்தத் தென் பாண்டிய மரபு வளர்ந்தோங்கச் செய்யும் பொறுப்பை மேற்கொள்வேன். மகாமண்டலேசுவரரும் நீங்களும் அவ்வப்போது எனக்குப் பயன்படும் அறிவுரைகளையெல்லாம் போர்க்களத்துக்குச் சொல்லி அனுப்ப வேண்டும். சிறிதும் தயக்கமில்லாத நிறைமனத்தோடு கண்கலங்காமல் என்னை அனுப்புங்கள், அம்மா!" அன்னையின் காலடியில் மண்டியிட்டு வணங்கினான் அவன். "போய் வா. வெறும் இராசசிம்மனாகத் திரும்பி வராதே! வெற்றி வீரன் இராசசிம்மனாக வாகை சூடி வா. பல்லூழிக் காலமாக இந்தத் தென் பாண்டி நாட்டைக் காத்துக் கொண்டு கடல் மருங்கே நின்று தவம் செய்யும் குமரித்தாய் உன்னைக் காத்து உனக்குத் துணை நின்று அருள் புரிவாள்." கண்களில் நீர் பனிக்கத் தொண்டை கரகரத்துக் குரல் ஒலி மழுங்க இந்தச் சொற்கள் மகாராணியின் வாயிலிருந்து வெளிவந்தன. இந்த வார்த்தைகள் செவியில் விழுந்த அதே சமயத்தில் அவன் பிடரியில் அன்னையின் கண்ணீர் முத்துகள் சில உதிர்ந்து சிதறின. இராசசிம்மன் எழுந்து மகாமண்டலேசுவரருக்கு அருகில் சென்றான். "சுவாமி! ஈழ நாட்டுச் சேனை சக்கசேனாபதியின் தலைமையில் வந்து சேர்ந்தால், அதை வெள்ளூர்ப் போர்க்களத்துக்கு அனுப்பி வையுங்கள். நான் இப்போதே புறப்படுகிறேன்" என்று கூறி முடிக்கு முன்னே, "அதெல்லாம் நான் கவனித்துக் கொள்கிறேன்! நீ தாமதம் செய்யாமல் புறப்படு. இதோ இந்த வீரர்கள் உன்னை அழைத்துப் போகக் காத்திருக்கிறார்கள். நான் போர்க்களத்தில் இருக்கும் உனக்கு மிக முக்கியமான செய்தி ஏதாவது சொல்லி அனுப்ப வேண்டியிருந்தால் சேந்தனை அனுப்புவேன்! போய் வா... தோல்வியோடு திரும்பாமல் இருக்கத் தெய்வம் துணைபுரியட்டும்" என்று அவசரத்தோடு இடைமறித்துச் சொன்னார் மகாமண்டலேசுவரர். அவன் அதிகம் பேசிக் கொண்டிருப்பதை விரும்பாத மாதிரி அவசரப்படுத்தினார். ஆசிரியரையும், பவழக்கனிவாயரையும் வணங்கினான் அவன். "வெற்றியோடு திரும்பி வந்து தங்கள் பராந்தக பாண்டியர் போல் பெரும் புகழ் பெற்று வாழுங்கள்" என்று வாழ்த்தினார்கள் அவர்கள். "சேந்தா! இளவரசர் புறப்படுவதற்கு நல்ல குதிரை ஒன்று கொண்டு வா. இங்கே அரச மாளிகையில் யவனத்திலிருந்து வந்த உயர்தரமான குதிரைகள் நிறைய இருக்கும்!" என்று தம் ஒற்றனைத் துரத்தினார் மகாமண்டலேசுவரர். அதே மாளிகையின் பின்புறமிருந்த பரிமாளிகைக்கு ஓடிப்போய் ஒரு குதிரையை அவிழ்த்துக் கொண்டு வந்து நிறுத்தினான் சேந்தன். புறப்படுவதற்கு முன் கடைசியாக, "இதோ ஒரு விநாடியில் வந்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுத் தான் மட்டும் தனியாக அந்த மாளிகையின் பின்புறத்துக் கதவைத் திறந்து கொண்டு சென்றான் இராசசிம்மன். அங்கே குதிரைகளை மேற்பார்த்துக் கொள்ளும் கிழவன் ஒருவன் இருந்தான். "பெரியவரே! நான் மறுபடியும் வந்து கேட்கிற வரை இந்தப் பொருளைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்" என்று தன் வலம்புரிச் சங்கை அவரிடம் கொடுத்து விட்டுச் சென்றான் இராசசிம்மன். குதிரைகள் புறப்பட்டன. எல்லோரும் மாளிகை வாயில் வரை வந்து நின்று இளவரசரை வழியனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் மகாராணியும் மற்றவர்களும் அங்கிருந்து பல்லக்குகளில் அரண்மனைக்குக் கிளம்பி விட்டனர். சேந்தனும், மகாமண்டலேசுவரரும் மட்டுமே விழிஞத்து அரச மாளிகையில் எஞ்சியிருந்தனர். மகாமண்டலேசுவரர் சேந்தனை அனுப்பி விழிஞத்துக் கடல்துறை அதிகாரிகளை வரவழைத்தார். அவர்கள் வந்தனர். "அதிகாரிகளே! உங்களிடம் ஒரு பொறுப்பான காரியத்தை இப்போது ஒப்படைக்கப் போகிறேன். நாளை அல்லது நாளன்றைக்குள்ளாக ஈழ நாட்டுப் படைக் கப்பல்கள் சக்கசேனாபதியின் தலைமையில் இத்துறைக்கு வந்து சேரும். அப்போது நீங்கள் சக்கசேனாபதியைச் சந்தித்து, 'இராசசிம்மன், படைகளை இறக்கிக் கொண்டு உங்களை வெள்ளூர்ப் போர்க்களத்துக்கு நேரே வரச்சொல்லியிருக்கிறார்' என்று தெரிவித்து விட வேண்டும். இது முக்கியமான பொறுப்பு" என்று மகாமண்டலேசுவரர் கூறிய போது அந்த அதிகாரிகள் தலை வணங்கி ஒப்புக் கொண்டனர். அவர்களை அனுப்பிய பின் அவர் சேந்தன் பக்கம் திரும்பினார். "சுவாமி! இதுவரை மற்றவர்கள் உடனிருந்ததற்காகப் பொறுத்துக் கொண்டிருந்தேன். இனி என்னால் ஒரு கணம் கூட என் ஆத்திரத்தைத் தவிர்க்க முடியாது. நேற்றிரவு இளவரசருக்கு முன் தங்கள் முடியில் கல்லெறிந்து தங்களை அவமானப்படுத்தியவன் யார் என்று கண்டுபிடித்து அந்த முட்டாளின் மண்டையை உடைத்தால் தான் என் ஆத்திரம் தீரும். அப்போதே ஓடிப்போய்த் தடுத்துப் பிடித்திருப்பேன். நீங்கள் கூடாதென்று நிறுத்தி விட்டீர்கள்!" என்று ஆத்திரத்தோடு கூறினான் சேந்தன். மகாமண்டலேசுவரர் சிரித்தார். அந்த வார்த்தைகளைச் சொல்லும் போது அவருடைய குரல் தொய்ந்து நைந்து ஒலிப்பதை நாராயணன் சேந்தன் உணர்ந்தான். "சுவாமி! எதற்கும் வருத்தப்படாத உங்களையும் வருந்தச் செய்து விட்டார்களே? அவர்கள் யாரென்று மட்டும் சொல்லுங்கள். இப்போதே போய்க் கழுத்தைத் திருகிக் கொண்டு வருகிறேன்" என்று துடிப்போடு சொன்னான் அவன். "கோபத்தை அடக்கிக் கொள்! என்னோடு புறப்படு. என்னுடைய அனுமானம் சரியாயிருந்தால் வாழ்க்கையிலேயே மகத்தான காரியம் ஒன்றை நாளைக்கு நான் செய்ய வேண்டியிருக்கும். எல்லாவற்றையும் நடக்க நடக்கப் பார்த்துக் கொண்டிரு! ஒன்றையும் கேட்காதே" என்று கூறிவிட்டுச் சேந்தனையும் உடன் அழைத்துக் கொண்டு விழிஞத்திலிருந்து புறப்பட்டார் அவர். அன்று இரவு நெடு நேரத்துக்குப் பின் அவர்கள் இருவரும் கோட்டாற்றுப் படைத் தளத்தை அடைந்தனர். அங்கே தூங்கி வழிந்து கொண்டிருந்த யவனக் காவல் வீரர்கள் எழுந்து வந்து தளபதி வல்லாளதேவன் தப்பிப் போய்விட்டானென்ற செய்தியை நடுங்கிக் கொண்டே சொன்னார்கள். "என் ஓலையோடு ஆபத்துதவிகள் தலைவன் குழைக்காதன் இங்கு வந்தானா?" என்று கேட்டார் அவர். "வரவில்லை" என்ற பதில் அவர்களிடமிருந்து கிடைத்தது. "சேந்தா! இன்னுமா உனக்குச் சந்தேகம்? என் மேல் கல்லெறிந்துவிட்டு ஓடியவர்கள் யார் என்று இப்போது கூடவா உனக்குத் தெரியவில்லை?" என்று சேந்தனிடம் காதருகில் மெல்லச் சொன்னார் மகாமண்டலேசுவரர். "புரிகிறது, சுவாமி! கல்லெறிந்த கைகளை முறிக்க ஒரு சூழ்ச்சி செய்ய வேண்டும்." மகாமண்டலேசுவரர் நகைத்தார். "அப்பனே! சூழ்ச்சிகளைக் கடந்த நிலையில் இப்போது நான் நிற்கின்றேன். வா, இடையாற்று மங்கலத்துக்குப் போகலாம். நீ எந்த நேரமும் எனக்கு அந்தரங்கமானவனல்லவா? புறப்படு" என்றார். |