![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
மூன்றாம் பாகம் 19. ஊழிப் புன்னகை மகாமண்டலேசுவரர் அந்த மாதிரித் தளர்ந்து பேசிச் சேந்தன் அதற்கு முன்பு கேட்டதில்லை. கம்பீரத்தின் சாயை குன்றி துயர அமைதியோடு கூடிய சாந்தம் நிலவுவதை அந்த முகமண்டலத்தில் அன்று தான் கண்டான் அவன். புரிந்து கொள்ள முடியாத புதிர்த்தன்மை நிறைந்த அந்தக் கண்களில் ஏக்கம் படர்வதை முதல் முதலாகச் சேந்தன் பார்த்தான். நிமிர்ந்து அகன்று நீண்டு மேடிட்டுப் படர்ந்த அவருடைய நெற்றியில் மேதா கர்வம் மறைந்து சுருக்கங்கள் தெரிந்தன. சேந்தன் மனத்தில் அதையெல்லாம் பார்த்துக் காரணமற்ற பயங்கள் கிளர்ந்தன. "சுவாமி! இன்று தங்களுடைய பேச்சும் தோற்றமும் இதற்கு முன்பு நான் காணாத விதத்தில் இருக்கின்றனவே! என் மனம் எதை எதையோ நினைத்து அஞ்சுகிறதே!" - துணிவை வரவழைத்துக் கொண்டு அவரிடமே கேட்டான். அவன் இப்படிக் கேட்டதும் அவர் நேருக்கு நேர் திரும்பி அவனுடைய முகத்தைப் பார்த்தார்! மெல்லச் சிரித்தார். வாடிய பூவைக் காண்பது போல் மங்கித் தென்பட்டது அந்தச் சிரிப்பு. சேந்தன் பயபக்தியுடனே அந்த முகத்தையும், அந்தச் சிரிப்பையுமே பார்த்துக் கொண்டு நின்றான். மெல்ல நடந்து அருகில் வந்து தம் சொந்தக் குழந்தை ஒன்றைத் தடவிக் கொடுப்பது போல் அவன் முதுகை இரு கைகளாலும் வருடினார் அவர். "சேந்தா! உன்னைப் போல் என்னிடம் நன்றி விசுவாசங்களோடு உழைத்த மனிதர் வேறு யாருமில்லை. உன்னிடம் எந்த அந்தரங்கத்தையும் நான் மறைக்கக் கூடாது. ஆனாலும் இப்போது என்னிடம் எதுவும் கேட்காதே... பேசாமல் என்னுடன் இடையாற்று மங்கலத்துக்கு வா." இந்த வார்த்தைகளைச் சொல்லும் போது அவருடைய கண்கள் கலங்கி ஈரம் கசிந்து பளபளப்பதை அவன் பார்த்து விட்டான். அதைப் பார்த்ததும் சேந்தனுடைய மனத்தை ஏதோ ஓர் அவல உணர்வு இறுக்கிப் பிழிந்தது. அழுகை வந்து விடும் போலிருந்தது. அரிய முயற்சியின் பேரில் தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, அவரோடு இடையாற்று மங்கலம் சென்றான். இடைவழியிலுள்ள ஊர்களிலெல்லாம் போர்க்காலத்தில் நிலவும் பயமும், பரபரப்பும் நிலவிக் கொண்டிருந்தன. வேளாண்மைத் தொழில் சரியாக நடைபெறவில்லை. ஊர்கள் கலகலப்புக் குறைந்து காணப்பட்டன. பறளியாற்றில் நீர் குறைந்து காலால் நடந்து அக்கரை சேர்ந்து விடுமளவுக்கு ஆழமற்றிருந்தது. கரையோரத்து ஆலமரங்களில் இலைகள் பழுத்தும், உதிர்ந்தும் விகாரமாகத் தென்பட்டன. சோகமயமான பெரிய நிகழ்ச்சி ஒன்று வருவதற்கு முன் கூத்தரங்கில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் அவையினரின் அமைதி போல இடையாற்று மங்கலம் தீவும், மகாமண்டலேசுவரர் மாளிகையும் நிசப்தமாயிருந்தன. சேந்தனும் மகாமண்டலேசுவரரும் பறளியாற்றைக் கடந்து இடையாற்று மங்கலத்தை அடையும் போது நண்பகலாகிவிட்டது. வெயில் நன்றாய்க் காய்ந்து கொண்டிருந்தது. அம்பலவன் வேளானையும், இரண்டொரு காவல் வீரர்களையும் தவிர இடையாற்று மங்கலம் மாளிகையில் வேறு யாரும் இல்லை. "சேந்தா! இப்போது இந்த இடம் மயானம் போல் அமைதியாயில்லை?" என்று ஒரு தினுசாகச் சிரித்துக் கொண்டே அவர் கேட்டார். அவன் அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தான். அந்தச் சமயத்தில் அம்பலவன் வேளான் வந்து அவர்களெதிரே வணங்கி நின்றான். "வேளான்! நீ உடனே அரண்மனைக்குப் புறப்பட்டுப் போ. அங்கே மகாராணியோடு குழல்வாய்மொழி தங்கியிருக்கிறாள். நான் அழைத்து வரச் சொன்னதாக உடனே அவளை அழைத்து வா" என்று மகாமண்டலேசுவரர் கட்டளையிட்டார். அவரே குழல்வாய்மொழியை மகாராணியோடு அரண்மனைக்கு அனுப்பிவிட்டு ஏன் இப்போது இவ்வளவு அவசரமாக அழைத்து வரச் சொல்கிறாரென்று விளங்காமல் சேந்தன் திகைத்தான். அவர் கட்டளை கிடைத்தவுடன் வேளான் புறப்பட்டு விட்டான். மகாமண்டலேசுவரர் சேந்தன் பின் தொடர, மாளிகைக்குள் போய் ஒவ்வோர் இடமாக அன்று தான் புதிதாகச் சுற்றிப் பார்ப்பவர் போல் சுற்றிப் பார்த்தார். நந்தவனத்துக்குப் போய் ஒவ்வொரு செடியாக, ஒவ்வொரு மரமாக, ஒவ்வொரு கொடியாக நின்று நோக்கினார். அவருடைய நோக்கம் என்னவாக இருக்குமென்று சேந்தனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. கடைசியாக இடையாற்று மங்கலம் மாளிகையில் மேல்மாடத்து நிலா முற்றத்தில் உயர்ந்த இடத்தில் ஏறி நான்கு புறமும் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். அப்போதும் மகாமண்டலேசுவரர் சிறு குழந்தை மாதிரி கண்கலங்கி நிற்பதைச் சேந்தன் கண்டான். அவனால் பொறுக்க முடியவில்லை. சகலத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த அந்த அரிய மலை கண்கலங்கி நிற்பதைக் காணப் பொறுக்காமல், "சுவாமி! மறுபடியும் இப்படிக் கேட்பதற்காக என்னை மன்னியுங்கள். உங்கள் செயல்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று அழுகையின் சாயை பதிந்த குரலில் கேட்டான் சேந்தன். மெதுவாகத் திரும்பி அவன் முகத்தைப் பார்த்து முன் போலவே சிரித்தார் அவர். "சேந்தா! நீ மிகவும் நல்லவன்" என்று அவன் கேட்ட கேள்விக்குத் தொடர்பின்றிப் பதில் வந்தது அவரிடமிருந்து. சிறிது நேரத்தில் இருவரும் நிலா முற்றத்திலிருந்து கீழே இறங்கி வந்தனர். "சேந்தா நீ போய் நந்தவனத்திலிருந்து எத்தனை வகை மலர்கள் இருக்கின்றனவோ அவ்வளவையும் குடலை நிறைய கொய்து கொண்டு வா. நான் போய் நீராடி வருகிறேன்" என்று கூறிச் சேந்தனை நந்தவனத்திற்கு அனுப்பிவிட்டு பறளியாற்றை நோக்கி நடந்தார் மகாமண்டலேசுவரர். குழந்தைத்தனமாக வெகுநேரம் துளைந்து முங்கி முழுகி நீராடினார். ஈரம் புலராத ஆடையோடு இடையாற்று மங்கலம் மாளிகையிலிருந்த சிவன் கோயில் வாயிலுக்கு வந்தார். சேந்தன் குடலை நிறையப் பல நிறப் பூக்களோடு எதிரே வந்து நின்றான். அவற்றை வாங்கிக் கொண்டு ஆலயத்துக்குள் சென்றவர் வெகு நேரமாக வெளியே வரவில்லை. மேலாடையை அரையில் பயபக்தியோடு கட்டிக் கொண்டு கோயிலுக்குள் நுழைந்து எட்டிப் பார்த்தான் சேந்தன். அங்கே கண்ட காட்சி அவனை மெய்சிலிர்க்க வைத்தது. சிவலிங்கத்திற்கு முன்னால் மகாமண்டலேசுவரர் தியானத்தில் அமர்ந்திருந்தார். சற்றே மூடிக் குவிந்திருந்த அவருடைய விழிப் பள்ளங்களிலிருந்து மாலை மாலையாகக் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. தம் சிரத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த முடியைக் கழற்றி மலர்களோடு சிவலிங்கத்தின் பீடத்தில் இட்டிருந்தார் அவர். சேந்தன் அதைக் கண்டு மெய்யும், மனமும் குழைத்து உரோம புளகமெய்தி, கண்ணீரரும்ப நின்றான். எவ்வளவு நேரம் அப்படியே நின்றானோ அவன்? தன்னை மறந்து நின்று கொண்டே இருந்தான். மகாமண்டலேசுவரர் தியானங் கலைந்து எழுந்து நின்றார். அப்போது தான் மலர்ந்த செந்தாமரைப் பூப்போல் அவருடைய முகத்தில் தெய்விகமானதொரு ஒளி மலர்ந்து இலங்கியது. அந்த ஒளியின் மலர்ச்சியில் அறிவின் அகங்காரம் எரிந்து சாம்பலாகி விட்டது போல் திருநீறு துலங்கியது நெற்றியில். "சேந்தா! மகாமண்டலேசுவரரை, அதோ அந்த இடத்தில் கழற்றி வைத்து விட்டேன். இனி என் தலையில் யாரும் கல்லெறிய மாட்டார்கள்" என்று சிவலிங்கத்தின் பீடத்தை சுட்டிக்காட்டிச் சொன்னார் அவர். அப்போது அவருடைய முகத்தில் மலர்ந்த சிரிப்பில் கருணை பூத்திருந்தது. சேந்தன் பேசும் உணர்விழந்து நின்றான். "என்னோடு வா!" என்று அவனைக் கைப்பற்றி அழைத்துச் சென்று சிவ ஆலயத்துக்கு முன் குறட்டில் கொண்டு போய் உட்கார வைத்துவிட்டுத் தாமும் எதிரே உட்கார்ந்தார். அப்போது ஒளி மங்கி இருள் சூழ ஆரம்பித்திருந்த சமயம். காற்று இதமாகக் குளிர்ந்து வீசிக் கொண்டிருந்தது. சிவாலயத்துக்குள்ளிருந்து அகிற்புகையின் மணமும் மலர்களின் வாசனையும் கலந்து வெளிவந்து பரவின. அந்த அற்புதமான சூழலில் இடையாற்று மங்கலம் நம்பியின் குரல் சேந்தனை நோக்கி ஒலித்தது. "சேந்தா, கேள்! நீயும் உன் மனமும் எந்தப் பேரறிவின் முன்னால் பணிந்து வீர வணக்கம் செலுத்தி வருகிறீர்களோ அந்த அறிவு இப்போது அழிந்து விட்டது. அல்லது தன்னை அழித்துக் கொண்டு விட்டது என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள். கயிற்றால் கட்டப்பட்டுக் கையும் காலும் ஆடும் மரப்பாவை கயிற்றின் இணைப்பறும் போது ஆட்டமற்றுப் போவது போலும் நம் வினைகளின் கழிவு காலத்தில் அறிவும் மனிதனுக்குப் பயன்படுவதில்லை. இந்த உண்மையைத் தெரிந்து கொள்ள எனக்கு இத்தனை காலம் வாழ்ந்து பார்க்க வேண்டியிருந்தது, அப்பா! அறிவு அளவற்றுப் பெருகிக் கூர்மையாகும் போது அதை நமக்களிக்கும் தெய்வத்தை நோக்கிச் செலுத்தும் பக்தியாக மாற்றிக் கொண்டு விட வேண்டும். அதை நான் செய்யத் தவறி விட்டேன். கத்தியை நீட்டிப் பயமுறுத்தும் வழிப்பறியாளனைப் போல் என் அறிவைப் பிறர் அஞ்சும் கருவியாக்கினேன். அளவற்ற அறிவின் கூர்மைக்கு எதிரிகளும், பொறாமைப்படுபவர்களும் ஏற்படாமலிருக்க வேண்டுமானால் அதைப் பக்தியாக மாற்றிக் கொண்டு விட வேண்டும். நான் இறுமாந்து, செம்மாந்து திரிந்தேன். என் கண் பார்வையால் மனிதர்களை இயக்கினேன். நல்வினை துணை நின்ற வரையில் என் அறிவு பயன்பட்டது. தளபதியும், கழற்கால் மாறனாரும் என் மேல் அசூயைப் படத் தொடங்குகிற சமயத்திலேயே என் நல்வினையின் விளைவு குன்ற ஆரம்பித்து விட்டது. "நான் சிறைப்படுத்தி வைத்த தளபதி தப்பி வந்தான். நான் தந்திரமாக அடக்க எண்ணிய ஆபத்துதவிகள் தலைவனோடு சேர்ந்து கொண்டான். நான் மறைக்க விரும்பிய பகவதியின் மரணத்தைத் தளபதியும், ஆபத்துதவிகள் தலைவனுமே கேட்டுத் தெரிந்து கொண்டு என் மேல் கல்லெறிந்து விட்டு ஓடினார்கள். உங்கள் கப்பலில் உங்களோடு தற்செயலாக மாறுவேடத்தில் வந்து தன் திமிரால் இறந்து போன பகவதி என் சூழ்ச்சியினால் கொல்லப்பட்டாளென்றே தளபதி நினைத்து விட்டான். என் நல்வினை கழிகிற காலம் வந்ததனால்தான் அவன் மனத்தில் இந்த நினைவு உண்டாயிற்று. இப்போது அவனும் கழற்கால் மாறனார் முதலியவர்களும் ஒன்று சேர்ந்து என்னை அழிக்க முயன்று திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். அதை எதிர்த்துச் சூழ்ச்சி செய்ய என் அறிவுக்கு இப்போது ஆற்றலில்லை. நல்வினைப் பயனை அது இழந்து விட்டது. ஒவ்வொருவருடைய அறிவுக்கும் 'ஆகூழ்' (வளர்ச்சி), 'போகூழ்' (அழிவு) என இரண்டு நிலைகளுண்டு. எனக்கு இப்போது போகூழ் நிலை. என் அறிவு இனிமேல் பயன்படாது. என் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதற்கே பயப்படுகிறவர்கள், என் நெஞ்சுக்குக் குறிவைத்துக் கத்தியை ஓங்கவும், தலையில் கல்லெறியவும் துணிந்து விட்டார்களென்றால், என் அறிவு அவர்களைத் தடுக்கும் நல்வினைத் துணையை இழந்துவிட்டது என்றுதான் பொருள். அதன் விளைவாக இந்தத் தென்பாண்டி நாட்டுக்கே துன்பங்களை வளர்த்து விட்டேன் நான். பக்தியாக மாறாத காரணத்தால், ஞானமாகப் பழுக்காத இயல்பால் எத்தனை பிரிவினைச் சக்திகளை இங்கே உண்டாக்கிவிட்டது என் அறிவு? தளபதியின் முரட்டு வீரத்தைப் போலவே என் முரட்டு அறிவும் எவ்வளவு கெடுதலானதென்பதை இன்று உணர்கிறேன். ஆனால் இது காலங்கடந்த உணர்வு. மகாமண்டலேசுவரர் என்ற அந்தப் பதவியை ஏற்றுக் கொண்ட காலத்திலேயே எனக்கு இந்த உணர்வு இருந்திருந்தால் எவ்வளவோ பயன்பட்டிருக்கும். ஒழுக்கம், நேர்மை, 'அறிவின் அகந்தை அழியாத தெய்வபக்தி' இவற்றை வைத்துக் கொண்டிருந்தேன். இதுவரை இடையாற்று மங்கலத்துச் சிவன் கோவிலில் நான் செய்த அத்தனை வழிபாடும் அறிவின் ஆணவத்தோடு செய்தவை. ஏனென்றால் அந்த வழிபாடுகளின் போது நான் மனமுருகிக் கண்ணீர் சிந்தியதில்லை. இன்று செய்த வழிபாடுதான் உண்மையான வழிபாடு. இன்றைக்கு வடித்த கண்ணீரில் என் அறிவுக் கொழுப்பெல்லாம் கரைந்து விட்டது. அப்பா! ஒவ்வொரு தலைமுறைகளிலும் மனிதனுக்குக் காலங்கடந்து புத்தி வருவதால் தான் விதியின் வெற்றிகள் அதிகமாகிவிடுகின்றன. சேந்தா! நான் மறுபடியும் ஒரு பிறவி எடுத்தால் அறிவாளியாகப் பிறக்க மாட்டேன். பக்திமானாகப் பிறப்பேன். பாடியும், அழுதும், தொண்டு செய்தும் என்னை அழித்துக் கொண்டு இன்பம் காண்பேன்." இந்தக் கடைசி வாக்கியத்தைச் சொல்லும் போது இடையாற்று மங்கலம் நம்பியின் குரலில் அழுகை குமுறிப் பாய்ந்தது. குரல் தழுதழுத்துப் பேச்சு தடைப்பட்டது. இரண்டு கன்னங்களிலும் கண்ணீர் முத்துகள் உருண்டு வடிந்தன. அதுவரை சிலைபோல் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த சேந்தன், வாய் திறந்தான். "சுவாமி! இந்த விநாடியே தாங்கள் உத்தரவு கொடுத்தால் தங்கள் எதிரிகளை அழித்தொழித்து விட என்னாலான முயற்சியைச் செய்கிறேன். தாங்கள் இப்படி நைந்து மனம் புண்பட்டுப் பேசுவது நன்றாகயில்லை!" இதைக் கேட்டு அவர் பலமாக வாய்விட்டுச் சிரித்தார். "சேந்தா! நீ நன்றியுள்ள ஊழியன். ஆனால், என் எதிரிகளால் என்னென்ன சீரழிவுகள் வரப் போகின்றன என்பதை நீ உடனிருந்து காணப் போவதில்லை! அதற்குள் ஒரு மாபெரும் சன்மானத்தை - நீ கனவிலும் எதிர்பார்த்திராத சன்மானத்தை உனக்குக் கொடுத்து, உன்னிடம் நான் பட்டிருக்கும் நன்றிக் கடனைத் தீர்த்து, உன்னை இங்கிருந்து அனுப்பி விடுவேன்" என்றார். "சுவாமி! அப்படியெல்லாம் சொல்லி என் மனத்தைப் புண்படுத்தாதீர்கள். நன்றியுமில்லை; கடனுமில்லை. இந்த உடல் உங்களுக்குச் சொந்தம். உங்களுக்கே உழைத்துச் சாவதற்குக் கடமைப்பட்டது" என்று உருக்கமாகச் சொன்னான் சேந்தன். "அதெல்லாமில்லை! நான் எதை உனக்குக் கொடுக்கிறேனோ அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேனென்று சத்தியம் செய்து கொடு. இந்த நாட்டு மகாராணிக்கும் குமாரபாண்டியனுக்கும் கூட நான் இவ்வளவு நன்றிக் கடன் படவில்லை. ஆனால் உனக்குக் கடன் பட்டிருக்கிறேன் சேந்தா!" அவர் கூறியதைக் கேட்டுச் சேந்தன் தயங்கினான். அவர் சிரித்துக் கொண்டே மேலும் கூறினார்: "பார்த்தாயா? எனது நல்வினைப் பயன் தீர்கிற காலத்தில் நீ கூட நான் சொல்கிறபடி கேட்க மாட்டேனென்கிறாயே!" "ஐயா! சுவாமி! அந்தக் குற்றத்தை என் மேல் சுமத்தாதீர்கள். நான் நீங்கள் கொடுப்பதை ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் சொல்கிறபடியே கேட்கிறேன். இது சத்தியம்! இது சத்தியம்!" என்று கைகூப்பிச் சொன்னான் சேந்தன். "சிவன் கோவில் குறட்டில் உட்கார்ந்து என்னை வணங்கிக் கொண்டே நீ சொல்லும் இந்த வார்த்தைகள் உறுதிதானே? எந்தக் காரணத்துக்காகவும் நீ கொடுத்த சத்தியத்தை மீற மாட்டாயே?" "என் மேல் இன்னும் சந்தேகமா சுவாமி?" என்று கூறிய அவனை விளக்கருகே கூட்டிக் கொண்டு போய், அவன் முகத்தை உற்றுப் பார்த்தார் அவர். சில விநாடிகள் அப்படியே பார்த்துக் கொண்டு நின்றவர், "சேந்தா உன் சத்தியத்தை நம்புகிறேன்" என்று தீர்மானமான குரலில் சொன்னார். "என் பாக்கியம்" என்றான் சேந்தன். "இப்போது கேட்டுக்கொள்! அதிர்ச்சியோ கூச்சமோ அடையாதே. நான் பட்ட நன்றிக் கடனைத் தீர்த்துக் கொள்வதற்காக என் பெண் குழல்வாய்மொழியை உனக்குக் கொடுக்கப்போகிறேன்!" "சுவாமி! அபசாரம்... என்ன வார்த்தை கூறினீர்கள்? மகாமண்டலேசுவரரின் செல்வப் புதல்வி எங்கே? இந்த அடிமை ஊழியன் எங்கே? நான் தகுதியற்றவன். குரூபி... மேலும் தங்கள் அருமைக் குமாரி அல்லும் பகலும் குமாரபாண்டியனின் நினைவிலேயே ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்று அலறிக் கொண்டே, நெடுஞ்சாண்கிடையாக அவர் பாதங்களில் வீழ்ந்து பற்றிக் கொண்டான் நாராயணன் சேந்தன். "அவள் குமாரபாண்டியனைக் காதலிப்பதை நான் அறிவேன். ஆயினும் என் விருப்பம் அவளை நீ ஏற்க வேண்டும் என்பதுதான். இதை மாற்ற முடியாது. எழுந்திரு!" சிரித்தவாறே கூறினார். அந்தச் சிரிப்பு! அது ஊழிக் காலத்தின் புன்னகையா? |