16. பக்குவமான சீர்திருத்தம் சுகுணாவின் வாழ்க்கை அநுபவங்களைக் கேட்ட பொது என்னுடைய குறுநாவலுக்கு நான் பட்டுப்பூச்சி என்று பெயர் வைத்தது எவ்வளவு பொருத்தம் என்பது எனக்கு விளங்கிற்று. சமூகத்துக்கு மென்மை அளிக்க வேண்டுமென்று புறப்பட்டுத் தொண்டு செய்ய வந்து தன்னையழித்துக் கொண்டு நிற்கிறாள் அவள். பட்டுப்புழுக்களைத் துன்புறுத்தி நூலெடுத்துப் பட்டுச் செய்து மினுக்குவது போல இந்தச் சமூகத்தில் சுகுணாவைப் போல் இன்னம் எத்தனை பேர் பலியாவதற்கு இருக்கிறார்களோ என்று எண்ணி எண்ணி நொந்தேன் நான். அன்று இரவு நான் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த நேரம் வரை அவள் தன்னுடைய கதையை என்னிடம் ஒளிவு மறைவில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் எல்லாவற்றையும் சொல்லி முடித்த போது பன்னிரண்டரை மணியோ, ஒரு மணியோ ஆகியிருந்தது. என் மனைவியை அழைத்து, “நீயும் இந்தப் பெண் சுகுணாவும் கீழே படுத்துக் கொள்ளுங்கள், நான் மாடிக்குப் போகிறேன்” என்று என்னைத் தேடி வந்த பட்டுப்பூச்சியிடம் ஒப்படைத்துவிட்டு மாடிக்குச் சென்றேன் நான். என் சிந்தனையின் அந்த நேரத்து உணர்வுகளுக்கு மதிப்பும் மௌனமும் தருவது போல் அந்த இரவில் உலகம் நிசப்தமாயிருந்தது. படுக்கையில் போய்ப் படுத்துக் கொண்ட பின்பும் நீண்ட நேரம் வரை தூக்கம் என்னை அணுகவில்லை. சுகுணாவும் அவள் கூறிய வாழ்க்கை அநுபவங்களும், அல்லியூரணி கிராமத்தில் சமூக சேவகியாகப் பணிபுரியத் தொடங்கிய காலத்தில் அவளுக்கு ஏற்பட்ட தொல்லைகளாக அவள் கூறிய நிகழ்ச்சிகளும் நினைவில் அலை அலையாகப் புரண்டன. அந்தச் சிந்தனைகள் என்னை வேதனை கொள்ளச் செய்தன. ‘வண்ணக் கவர்ச்சியும் வனப்பும் கொண்டு எண்ணத்தில் மோகம் நிறைக்கும் கோலத்தில் பறந்து திரியும் பட்டுப்பூச்சிகளைப் போன்றவர்கள் இந்த நாட்டுப் பெண்கள். பறந்து திரியும் போது யார் பிடித்து விளையாட்டுக்காகத் தீப்பெட்டியில் அடைப்பது போல அடைப்பார்கள் என்று உறுதி சொல்ல முடியாது. எந்தக் குறும்புக்காரன் சிறகுகளைப் பிய்த்து விடுவான் என்று தெரியாது. அழகும் கவர்ச்சியும் உள்ள பொருளை அழிக்க ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இந்தத் தேசத்தில் பிரமுகர்களாகவும், வசதியுள்ளவர்களாகவும், முரடர்களாகவும், காமுகர்களாகவும், உள்ள கொடியவர்கள் பரவிக் கிடக்கிறவரை குரூபமும், அவலட்சணமும் நிறைந்த பெண்களாக தேடிப் பிடித்துத் தான் இத்தகைய பொதுத்துறை வேலைகளுக்கு நியமிக்க முடியும் போலிருக்கிறது. பெண் அழகாயிருந்தால் அவளுக்கு ஒரு நிமிடம் கூட நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலையை உண்டாக்கும் கொடியவர்கள் மேல் கோபம் கோபமாக வந்தது எனக்கு. நிறைய அழகும் நிறைய அணிகளும் பூண்டு நடு இரவில் ஒரு பெண் நிம்மதியாகத் தெருவில் தனியே நடந்துபோகும் நிர்ப்பயமான சூழ்நிலை வந்தால் தான் இந்த நாட்டுக்கு உண்மையாகவே சுதந்திரம் வந்ததாக ஒப்புக் கொள்ள முடியும்’ - என்பது போல அடிகள் கூறியிருந்த ஓர் அறிவுரையை நினைத்துக் கொண்டேன். இன்னும் ஏதேதோ நினைத்தபடியே சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டேன். மறுநாள் காலை விடிந்ததும் நான் காபி குடிப்பதற்காகக் கீழே இறங்கி வந்த போது சுகுணா பயணத்துக்குத் தயாரான கோலத்தில் நின்றாள். “நான் இன்று போக வேண்டும். எங்கள் சமூக நலத்துறையில் சேவைகள் கிராமத்தை எப்படி எப்படி வளர்த்திருக்கின்றன என்று பார்த்துப் போக அரசாங்கத்திலிருந்து வழக்கமாக கண்காணிப்புக்கு வரும் மேலதிகாரி நாளைக்கு வரவேண்டியதாக கெடு. இன்றே போனால் தான் லெட்ஜர்களையும் நிகழ்ச்சிகளைக் குறித்து வைக்கும் ‘மினிட்ஸ்’ குறிப்புக்களையும் நான் தயார் செய்து வைக்க முடியும். என்னுடைய வேண்டுகோளை நீங்கள் மறுக்கக் கூடாது. நான் போய்க் கடிதம் எழுதுவேன். இரண்டு மூன்று இடங்களில் சொற்பொழிவுக்கும் ஏற்பாடு செய்கிறேன். சுதந்திர தினத்தை ஒட்டி நீங்கள் ஒரு தடவை அல்லியூரணிக்கு வந்து போக வேண்டும். உங்கள் மனைவியையும் அழைத்து வாருங்கள். அல்லியூரணிக்கு அருகில் உள்ள மலைத்தொடர்களில் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளமாயிருக்கின்றன. ஒரு பத்து நாள் இந்த நகரத்து வாழ்க்கையை மூட்டைக் கட்டி வீட்டில் அடைத்துப் போட்டுவிட்டுக் கிராமத்துக்கு வந்துதான் பாருங்களேன்” - என்று சொல்லிவிட்டு என் மனைவி அளித்த காபியை குடித்த பின் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள் சுகுணா. உலகத்திலேயே இவ்வளவு நளினமான அழகி இல்லை என்று எல்லாரும் ஏகமனதாகப் புகழத்தக்க பெண்ணொருத்தியைத் தன் தங்கையாகப் பெற்ற தமையனுக்கு ஏற்படுமே, அத்தகைய சகோதர பாசத்தோடு கூடிய பெருமிதம் சுகுணாவின் மேல் எனக்கு ஏற்பட்டது. அவளுடைய தனி அழகை மட்டும் கண்டு நான் பெருமிதப்படவில்லை. அவள் குறுகிய எண்ணங்கள் அற்றவளாக இருந்தாள். அந்த நேரத்தில் நான் அடைந்த இனிய பெருமிதத்துக்கு இவை எல்லாம் சேர்ந்துதான் காரணமாயிருந்தனவே ஒழியத் தனியாக ஒரு காரணம் மட்டும் இல்லை.
என்னுடைய வாழ்வில் பிரச்னைகளை ஏற்படுத்திய பெரிய மனிதர்களை எல்லாம் உங்களுக்குக் காண்பிக்கிறேன். அல்லியூரணிக்குப் புறப்பட்டு வாருங்கள் - என்று மட்டும் அவள் என்னிடம் வேண்டுகோள் விடுத்திருந்தாள் அதை அவளுடைய சுயநலம் கருதிய வேண்டுகோளாக நான் நினைத்திருப்பேன். ஆனால், அவள் அப்படிப்பட்ட குறுகிய நோக்கத்தோடு என்னைத் தன் கிராமத்துக்கு அழைக்கவில்லை. எனக்கும் ஏதாவது ஒரு கிராமத்தில் போய்ப் பத்து பன்னிரண்டு நாள் சுற்றிப் பார்த்து விட்டு வரவேண்டுமென்று ஆசையாகத்தான் இருந்தது. ஏதாவது உயிர்த் துடிப்புள்ளதொரு பசுமையான வாழ்க்கையைக் காண வேண்டும் என்று தவிப்பாகவும் இருந்தது.
நகரத்தின் வளர்ச்சியைப் பார்த்துச் சில சமயங்களில் நான் பயமும் மலைப்பும் அடைந்ததுண்டு. ஒவ்வொரு நகரத்திலும் குடியிருக்கிற தெருக்களைக் கூடக் கடை வீதியாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள். குடியிருக்கும் வீடுகளை எல்லாம் இடித்துக் கடை கட்டிவிட்டால் குடியிருப்பவர்கள் கதி என்ன ஆவது? பெரிய வீடாயிருந்தால் அறை குறையாகத் தடுத்து ‘போர்டிங்’ ‘லாட்ஜிங்’ என்று போர்டு மாட்டி விடுகிறார்கள். நகரங்களின் வேகத்துக்கும் போட்டிக்கும் மிதமிஞ்சிய வியாபார வளர்ச்சிக்கும் ஏராளமான கடைகள் தேவைதான்! சத்தியத்தைத் தவிர மற்ற எல்லாப் பொருள்களும் விலை போக இன்றைய நகரங்களில் வசதி உண்டு. குடியிருக்கும் வீடுகளை எல்லாம் கடைகளாகவும், போர்டிங் லாட்ஜிங்குகளாகவும் கட்டி வியாபாரக் களமாய் ஆக்கி விட்டால் மத்தியதரக் குடும்பத்து மனிதர்கள் வசிக்க எங்கே போவார்கள் என்பது சிந்தித்துச் சிந்தித்து அந்த சிந்தனையினாலேயே நகரங்களின் மேல் வெறுப்பை ஏற்படுத்திக் கொண்டவன் நான். வடக்கே இரண்டு பர்லாங், தெற்கே இரண்டு பர்லாங் கடைகளோ, வியாபாரக் கூச்சல்களோ இல்லாத தனி வீடாகப் பார்த்துக் கொண்டு பசுமலை அடிவாரத்தில் நான் குடி இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்தான். கிராமசேவகி சுகுணா அல்லியூரணி கிராமத்துக்கு வரும்படியாக என்னை அழைத்த தேதியை நான் டைரியில் குறித்துக் கொண்டேன். அந்தத் தேதிக்கு இன்னும் நிறைய நாட்கள் இருப்பதாலும் அதை ஒட்டி ஒரு வாரமோ, பத்து நாளோ, முழுமையாக ஓய்வு இருக்கிறாற் போல் எழுத்து வேலைகளை எல்லாம் முடித்துக் கொள்ளத் திட்டமிட்டேன். முதலை நாள் மாலையிலிருந்து ‘பட்டுப்பூச்சி’ கதையைப் பற்றிச் சுகுணா என்னிடம் எழுப்பிய கேள்விகளை எல்லாம் மீண்டும் நான் வரிசையாக நினைத்துப் பார்த்தேன். அந்தச் சகோதரி என்னைத் தேடிவந்து விட்டுப் போனதை நினைப்பதே எனக்குப் பெருமையாக இருந்தது. வேலைக்குப் போகச் சிபாரிசுக் கடிதங்கள் கேட்டோ, பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு அறிமுக ஓலை கேட்டு மன்றாடியோ, புத்தகங்களுக்கு முன்னுரை கேட்டோ தினம் பல பேர் வருகிறார்கள். அவர்களை எல்லாம் நினைவு வைத்துக் கொள்வதே சிரமமாயிருக்கிறது. இந்தப் பெண்ணையோ மறப்பதுதான் சிரமமாயிருக்கிறது. இவளை நினைவு வைத்துக் கொள்வதில் எனக்குச் சிரமமே இல்லை. இதன் பின்பு ஒரு வாரம் பத்து நாள் கழித்துச் சுகுணா விடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அல்லியூரணியில் தன்னைப் பற்றித் துஷ்பிரசாரம் செய்யும் கௌரவமான எதிரிகள் அதிகமாகி வருவதாக அவள் எழுதியிருந்தாள். கதைகளை எழுதுவதற்காக உருவாக்கிக் கொண்டிருந்த கற்பனைப் பாத்திரங்களின் வாழ்வை எப்படி எப்படி நன்றாக மாற்றி அமைக்கலாம் என்று கவலைப்படுவது தவிர அல்லியூரணி கிராமத்திலிருக்கும் என்னுடைய இந்த உண்மைக் கதாபாத்திரத்தை வழி நடத்திச் செல்லும் பொறுப்பும் இப்போது எனக்கு ஏற்பட்டிருந்தது. மேதின விழாவுக்காகத் தொழிலாளிகள் கூட்டம் ஒன்றில் பேசுவதற்குக் கோயமுத்தூர் வருவதாக ஒப்புக் கொண்டிருந்ததனால் அவளுடைய கடிதம் என் கைக்குக் கிடைத்த அன்று நான் கோயம்புத்தூருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அதனால் நான், அன்று அவளுக்கு உடனே மறுமொழி எழுத முடியவில்லை. மறுநாள் பகலில் கோயம்புத்தூரில் சிறிது ஓய்வு இருந்தது. கூட்டம் மாலை ஆறு மணிக்குத்தான். நான் ஐந்து மணிக்குத் தயாரானால் போதும். எனவே கிடைத்த ஓய்வு நேரத்தை வீணாக்காமல் சுகுணாவுக்குப் பதில் எழுதினேன். அந்தக் கடிதத்தை நான் உற்சாகமான மனநிலையில் எழுதினேன். “இதற்கு எல்லாம் நீங்கள் அதைரியமடையக் கூடாது சுகுணா! பெரிய கைகளானாலும் அவற்றில் தான் அணிவிக்கும் வளையல்களும் உடையாமல், கைகளும் நோகாமல் வளையல்காரன் வளை அணிவிக்கிற மாதிரி இந்தச் சமூகத்தில் புதிய கருத்துக்களை மிகவும் சாமர்த்தியமாக நுழைக்க வேண்டும். அவசரப்பட்டு முரட்டுத்தனமாக நுழைத்தால் அணிவிக்கும் வளையல்களே உடைந்து விடுவது போல் நம்முடைய கருத்துக்களே சிதறிப் போகும். நம்முடைய கருத்துக்களும் சிதறக்கூடாது. இந்தத் தலைமுறையில் சமூகத்தைத் திருத்துவதற்கு என்று செய்யும் எல்லா முயற்சிகளும் இப்படி வளையல்காரன் வளையல் அணிவிப்பது போல் பக்குவமான நல்ல முறையில் முயலும் முயற்சிகளாக இருக்க வேண்டும். உங்களுடைய அழகு உங்கள் பணிக்கு இடையூறாக இருப்பதாக நீங்களே எழுதியிருக்கிறீர்கள். அழகாயிருப்பதைக் குறைபாடு என்று எப்படி நினைக்க முடியும்? காலமும் மனிதர்களின் மனமும் மாறிவிட்டால் எல்லாம் சரியாய்ப் போகும். சுதந்திர தினத்தின் போது நானும் என் மனைவியும் அல்லியூரணிக்கு வருகிறோம். உண்மையில் உங்கள் மனம் அளவற்றுத் துயரப்படுகிற போதெல்லாம் எனக்குக் கடிதம் எழுதுங்கள், நான் பதில் எழுதுகிறேன்” - என்று அன்று அவளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். நான் கோவை முகாமிலிருந்து எழுதிய இந்தக் கடிதம் அவளுக்குப் பெரிதும் ஆறுதல் அளித்திருக்கும் என்று நம்பினேன். அவ்வளவு அழகாக அந்தக் கடிதம் வாய்த்திருந்தது. கோவையில் மேதினக் கூட்டத்தில் பேசும் போது ஒரு மணி நேரம் என்னை மறந்த ஆவேசத்தில் மிதந்து விட்டேன் நான். சமூக சேவை, உழைப்பின் பெருமை, பழைய ஆஷாபூதிகள் இந்தத் தேசத்தின் புதிய தலைமுறை எண்ணங்களை பாழாக்கி நல்ல உழைப்பை உறிஞ்சிக் கொண்டு வரும் கொடுமை, எல்லாவற்றையும் எடுத்துக் கூறினேன். “சமூகத் தொண்டர்கள் சுக்கு போல எல்லா இடத்திலும் கிடைக்கிற எளிய மருந்தாக இருந்து சமுதாய நோய்களைத் தீர்க்க உதவி புரிய வேண்டும். பென்சிலின் மருந்து போலக் கிடைப்பதற்கு அருமையான உயரத்தில் இருக்கும் கௌரவமான சமூகத் தொண்டு இந்த நாட்டுக்குப் பயன்படாது. மாதர் சங்கத் தலைமை, சமூகத் தொண்டு ஆகியவற்றை எல்லாம் சோப்பு, சீப்பு, உடைகள் போலப் புதிய ஃபாஷன்களாகக் கருதுகிற பணக்காரர்கள் தயவு செய்து இந்தத் தொண்டு வழிகளில் ஆசைப்படக் கூடாது. அவர்களால் தொண்டு வளர்வதற்குப் பதில் ஊழல்கள் தான் வளரும்” என்று கொதிப்போடு பேசினேன். என் பேச்சில் அப்போது நான் முழுமையாகத் தோய்ந்து பேசியதற்குக் காரணம் அன்று பகலில் சுகுணாவுக்கு எழுதிய கடிதம்தான். அந்தக் கடிதத்தில் சுருக்கமாக எழுதியிருந்த பல கருத்துக்களையே கூட்டத்தில் விரிவாகப் பேசினேன். என்னுடைய கருத்துக்கள் பல கல்லூரி இளைஞர்களிடையே உணர்வு மூட்டியிருப்பதைக் கூட்டம் முடிந்ததும் என்னைத் தனியே சந்திக்க வந்தவர்களில் இருந்து நான் தெரிந்து கொண்டேன். அந்தச் சந்திப்பின் போது சிறந்து இலட்சியவாதியான அழகி இளைஞன் ஒருவனையும் நான் என்னுடைய இரசிகனாகச் சந்தித்தேன். |