ஹைபவர் கமிட்டி

     ஜாதிக்காய் மலைத்தொடரில் வாழும் 'பகடர்' என்னும் பழங்குடி இனத்தவர் பற்றித் திடீரென்று அரசாங்கத்துக்கு மகத்தான அக்கறை ஏற்பட்டிருந்தது.

     "பகடர் இன நல்வாழ்வுக்கும், முன்னேற்றத்துக்கும் பாடுபடுவோம். அவர் தம் மொழியையும் கலாச்சாரத்தையும் கட்டிக் காப்போம்" - என எல்லாத் தினசரிகளிலும் முதலமைச்சரின் படத்தோடு (பகடர்களின் படத்தோடு அல்ல) பெரிய பெரிய விளம்பரங்கள் வெளி வந்திருந்தன.

     சமூக சீர்த்திருத்தக்காரர்களும், ஆந்த்ரபாலஜீக்காரர்களும், ஸோஷியாலஜிஸ்ட்டுகளும், புகைப்படக்காரர்களும், பத்திரிகை நிருபர்களும் ஜாதிக்காய் மலைத் தொடருக்கு ஓடி அலைந்தார்கள். பத்திரிகைகளில் பகடர் இன ஆண், பெண்களின் படங்கள் தடபுடலாகப் பிரசுரமாயின. பகடர் வீடு, பழக்க வழக்கங்கள், கலாசாரம் பற்றிக் கட்டுரைகள் எல்லாம் பிரசுரமாயின.

     பகடர் இன முன்னேற்றத்துக்காக அரசாங்கம் 'ஹைபவர் கமிட்டி' ஒன்றை நியமித்திருந்தது. மலைவாழ் மக்களும், பழங்குடி மரபினரும், பின் தங்கிய ஏழ்மை நிலையிலிருப்போரும், மக்கள் தொகை எண்ணிக்கையில் மிகமிகக் குறைந்து வருவோரும் ஆகிய பகடர்களின் வளர்ச்சிக்கானவற்றை அந்த 'உயர் அதிகாரக்குழு' உடனடியாகக் கவனித்து ஆவன செய்ய வேண்டும் என ஏற்பாடாகியிருந்தது.

     மலைஜாதியினரான பகடர்களின் பசிப்பிணியையும் ஏழ்மையையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் போக்குவதற்காக அமைக்கப்பட்ட 'உயர் அதிகாரக் குழுவின்' முதல் கூட்டம் தலைநகரில் 'ஏஷியா இண்டர் காண்டினெண்டல்' ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஏ.ஸி. கான்ஃபரன்ஸ் ஹாலில் ஆடம்பரமாக நடைபெற்றது.

     ஹோட்டலின் ஏ.ஸி. கான்ஃபரன்ஸ் ஹாலில் பகடர் முன்னேற்றக் குழுவின் முப்பது உறுப்பினர்களும் சந்தித்தார்கள். கூட்டம் நெடுநேரம் நடந்தது. உறுப்பினர்களின் பகல் உணவு, மாலைக் காபி சிற்றுண்டி எல்லாம் ஏஷியா இண்டர் காண்டினெண்டலிலேயே தான். முதல் கூட்டத்துக்காக ஹோட்டல் பில், உறுப்பினர்களின் டி.ஏ. தினப்படி எல்லாமாக ஒன்றே கால் லட்ச ரூபாய் செலவாயிற்று.

     ஆறு, ஏழுமணி நேர விவாதத்துக்குப் பின்னர் ஒரு குறிப்பிட்ட தீர்மானத்தைக் குழுவின் தலைவர் முன்மொழிந்த போது அதை அனைவரும் ஏகமனதோடு உடனே வரவேற்று ஒப்புக் கொண்டனர்.

     குழுத் தலைவர் முன்மொழிந்த தீர்மானம் இதுதான்:-

     "அருகி வரும் 'பகடர்' இனத்தை வளர்த்து அவர்களுடைய மொழியையும், கலாசாரத்தையும் கட்டிக்காக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம் தலைகளில் சுமத்தப் பட்டிருக்கிறது.

     ஜாதிக்காய் மலைத் தொடரில் சிவநந்தி நதி உற்பத்தியாகுமிடத்தை ஒட்டி இப்போது எஞ்சியிருக்கும் 'பகடர்' குடும்பங்களின் எண்ணிக்கை மொத்தம் பத்துதான். இந்தப் பத்துக் குடும்பங்களினுடைய அபிவிருத்திக்காக நமது அரசாங்கம் திட்ட ஒதுக்கீட்டில் 2 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறது. அந்த 2 கோடி ரூபாயை எப்படிப் பயனுள்ள விதத்தில் செலவழித்துப் பகடர் மக்களை முன்னேற்றலாம் என்று தீர்மானிக்கும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடலாகாது என்று தொடக்கத்திலேயே நினைவூட்டினேன். மீண்டும் அதையே வற்புறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

     இந்தப் பகடர் மொழி இனம் பற்றிய நூல்கள் சில லண்டனிலுள்ள இந்தியா ஹவுஸ் லைப்ரரியிலும், அரும் பொருள்கள் சில பிரிட்டிஷ் மியூஸியத்திலும் உள்ளதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. குழுவின் தலைவர் என்ற முறையில் நான் மட்டுமே லண்டனுக்குப் போய் இந்த விவரங்களை அறிந்து வந்தாலும் போதும் என்றாலும் என் சுயநலத்துக்காக மட்டும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மற்றவர்களை ஒதுக்கி விட நான் விரும்பவில்லை. குழுவின் அடுத்த கூட்டத்தையே லண்டனில் கூட்டலாம் என்று முன் மொழிகிறேன்."

     தலைவர் கூறிய இந்த முன் மொழிதலை மற்ற இருபத்தொன்பது பேரும் அப்படியே கோரஸ் பாடுவது போன்ற குரலில் வழி மொழிந்தனர். ஒரு சின்ன ஆட்சேபணை கூடக் கிளம்பவில்லை.

     கூட்டத்து நிகழ்ச்சிகளை மினிட்ஸ்ஸுக்காகக் குறிப்பெடுத்த கிளார்க் மட்டும் "60 மைல் தூரத்தில் இருக்கிற ஜாதிக்காய் மலையில் போய்ப் பகடர்களை நேரில் பார்த்துவிட்டு வரத் துப்பில்லை! 6000 மைல் கடந்து போய் லண்டனிலுள்ள மியூஸீயத்தைப் பார்க்கப் போகிறார்களாம். இந்தக் கமிட்டி உருப்பட்டாற் போலத்தான்" என்று தனக்குள் வெறுப்புடன் முணுமுணுத்துக் கொண்டார்.

     அடுத்த வாரமே பகடர் நல்வாழ்வுக்கான 'ஹைபவர் கமிட்டி' லண்டன் போவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கிற்று.

     பயணத்துக்கு சுமார் முப்பது லட்ச ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டது. பரம இரகசியமாக ஏற்பாடுகள் வைக்கப் பட்டிருந்தாலும் எப்படியோ தகவல்கள் வெளியேறிவிட்டன.

     பயமேயில்லாத ஓர் இடதுசாரித் தினசரி "பகடர்கள் புண்ணியத்தில் பாமரர்கள் உல்லாசப் பயணம்" என்று தலைப்பிட்டு இதைக் கண்டித்தது. மிக மிக ஏழ்மையிலும் பின் தங்கிய நிலையிலும் இருக்கும் பகடர்களை முன்னேற்றுவதற்காக முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருக்கும் இரண்டு கோடி ரூபாயில் ஒரு பைசாக்கூட பகடர்களுக்குப் போய்ச் சேர முடியும் என்று தோன்றவில்லை - என்பதையும் அந்தப் பத்திரிகை கடுமையாகச் சுட்டிக் காட்டியிருந்தது.

     ஆனால் அந்தப் பத்திரிகையை யாரும் பொருட்படுத்தவில்லை. கமிட்டியின் முடிவுப்படி லண்டன் பயணம் உறுதி செய்யப்பட்டது. முப்பது உறுப்பினர்களும் இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் லண்டன் புறப்பட்டனர்.

     லண்டனில் பத்து நாட்கள் தங்கி ஒரு முதல்தரக் கமிட்டிக்குரிய வசதிகளை அநுபவித்தார்கள் உறுப்பினர்கள். அவர்கள் தங்கியிருந்த லண்டன் நகர ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றிலேயே குழுவின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

     குழுவின் உறுப்பினர்களில் அதி புத்திசாலியான ஒருவர் அப்போது அபூர்வமான சமயோசித யோசனை ஒன்றைத் தெரிவித்தார்.

     "லிங்விஸ்டிக் சார்வே ஆஃப் இண்டியா என்னும் நூலில் கிர்யர்ஸன் பகடர் மொழியைப் பற்றி எதுவுமே குறிப்பிடாதது மிகவும் வருந்தத்தக்கது. அதிர்ஷ்டவசமாக இன்று பிரிட்டிஷ் லைப்ரரியில் புதையல் கிடைத்தது போல ஒரு நூலைப் பார்க்க நேர்ந்தது. பென்ஸில்வேனியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் ஏழாண்டுகளுக்கு முன் பகடர் இனத்தினரை நேரில் சந்தித்து அவர்களோடு தங்கி வாழ்ந்து ஆராய்ந்து "லாங்வேஜ் - கஸ்டம்ஸ் அண்ட் பிலீவ்ஸ் ஆஃப் பகடாஸ்" என்ற அருமையான புத்தகத்தை எழுதியிருக்கிறார். பகடர்களிடம் பதிவு செய்த டேப்புகளும் பகடர் பற்றிய செய்திகள் அடங்கிய பல இரகசியக் கோப்பு (ஃபைல்)களும் அவரிடம் இருப்பது நூலின் முன்னுரையிலிருந்து தெரிகிறது. இந்தக் குழு சிரமத்தைப் பாராமல் இப்படியே அமெரிக்கா சென்று பென்ஸில்வேனியாவிலுள்ள அந்த ஆராய்ச்சிப் பேராசிரியரை உடனே சந்தித்தாக வேண்டியது மிக மிக அவசியம்."

     "மார்வலெஸ் ஐடியா! இதைக் கண்டிப்பாகச் செய்தாக வேண்டும்" - என்று குழு ஒரு சிறு முணுமுணுப்பும் இல்லாமல் உடனே முடிவு செய்தது. ஹைகமிஷன் மூலம் பயணத் திட்ட மாறுதல் அதிகப்படித் தொகை சாங்ஷன், பாஸ்போர்ட் விஸ்தரிப்பு, விஸா ஏற்பாடுகளை லண்டனில் இருந்தபடியே செய்து முடித்தார்கள் அவர்கள்.

     மேலும் எழுபது லட்ச ரூபாய் செலவில் ஏழை எளியவர்களாகிய பகடர்களை முன்னேற்றும் புனிதயாத்திரை அமெரிக்காவுக்கும் தொடர்ந்தது. 'பென்ஸில்வேனியா' - சென்ற பின் அங்கே அவர்களுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தி காத்திருந்தது. பகடர்களைப் பற்றி அவர்களோடு தங்கி வாழ்ந்து ஆராய்ந்திருக்கும் அந்தப் பேராசிரியர் அப்போது பென்ஸில்வெனியாவில் இல்லை என்றும் அவர் ஹவாயில் உள்ள ஈஸ்ட்வெஸ்ட் செண்டர் - பல்கலைக் கழகத்தில் இருப்பதாகவும் தெரிய வந்தது.

     அட்லாண்டிக் ரூட்டில் புறப்பட்டுத் திரும்புவதற்கும் அதே டிக்கெட் வாங்கியிருந்த குழுவினர் பஸிபிக் ரூட்டில் திரும்ப முடிவு செய்து டிக்கெட்டை 'கலிஃபோரினியா - ஹோனலூலூ - டோக்கியோ - ஹாங்காங் - கோலாலம்பூர் - இந்தியா' - என்பதாக மாற்றினர். இந்த மாறுதலுக்காகச் சில லட்சங்கள் அதிகம் செலவாகுமென்று தெரிந்தாலும் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. குழுவினர் சான்பிரான்ஸிஸ்கோ சென்று அங்கிருந்து 'ஹவாய்' பயணமானார்கள்.

     ஈஸ்ட்-வெஸ்ட் செண்டரில் வில்லியம் புரூஸ் என்ற அந்த அமெரிக்க அறிஞரை அவர்கள் சந்தித்துத் தங்களை அறிமுகம் செய்து கொண்டபோது அவர் ஆச்சரியமும் திகைப்பும் அடைந்தார்.

     "உங்கள் ஹெட் குவார்ட்டர்ஸ்ஸிலிருந்து அறுபதாவது மைலில் ஒரே இடத்தில் கூட்டமாக இணைந்து வாழும் பத்து டிரைபல் ஃபேமிலீஸைப் பற்றி ஆராய - அங்கே நேரில் போகக்கூட நினைக்காமல் இவ்வளவு தூரமா அலைந்தீர்கள்? வேஸ்ட் ஆஃப் மணி, வேஸ்ட் ஆஃப் டைம்!" என்று பொரிந்து தள்ளினார் அந்த அமெரிக்க அறிஞர்.

     அந்த அறிஞரின் அசௌகரியமான ஒளி மறைவில்லாத கேள்விகள் சங்கடப்படுத்தினாலும் பொறுத்துக் கொண்டு டேப்புகளையும், கோப்புகளையும் பற்றி அவரிடம் விசாரித்தார்கள் அவர்கள். அறிஞர் ஒருபுறம் அவர்களைச் செல்லமாகக் கண்டித்திருந்தாலும் மறுபுறம் பண்புடன் உபசரித்து டேப்புகளைப் போட்டுக் காட்டினார். கோப்புகளைப் பிரித்து விவரித்தார். விடை கொடுக்கும் போது ஞாபகமாக, "முதலில் பகடர் ஏரியாவிற்குப் போய் அவர்களை நேரில் சந்தியுங்கள்" என்று அவர்களுக்கு அறிவுரையும் கூறி அனுப்பினார்.

     ஜப்பான், ஹாங்காங், மலேசியா, எல்லாம் சுற்றிவிட்டுக் குழுவினர் இந்தியா திரும்பிய போது ஏறக்குறைய ஒன்றறை மாதம் கழிந்திருந்தது.

     அதற்குள் நாட்டிலும் சில மாறுதல்கள் நடந்திருந்தன. சிலர் கூட்டாகக் கட்சி மாறியதால் ஒரு மந்திரிசபை கவிழ்ந்து மற்றொரு மந்திரிசபை பதவி ஏற்றிருந்தது. புதிய மந்திரிசபைக்கு இப்படி ஒரு 'ஹைபவர்' கமிட்டி நியமிக்கப்பட்டிருப்பது பற்றி அறியவே வாய்ப்பில்லை.

     பகடர் ஹைபவர் கமிட்டியின் மூன்றாவது கூட்டத்தில் ஃபைனான்ஷியல் அட்வைஸர் நிதி நிலைமை பற்றிக் கவலை தெரிவித்தார்.

     "திட்ட ஒதுக்கீட்டில் ஒதுக்கப்பட்ட 2 கோடி ரூபாயில் இதுவரை ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிவிட்டது. எஞ்சிய ஒரு கோடியாவது திட்டத்தின் பட்ஜெட் காலவரையறைக்குள் பகடர் நல்வாழ்வுக்காகச் செலவழித்தாக வேண்டும்" என்றார்.

     பகடர் மொழி, கலைகள், கலாசாரம், பழக்க வழக்கங்கள் பற்றிய 'என்ஸைக்ளோ பீடியா' என்று வெளியிட வேண்டும் என்ற ஓர் உறுப்பினரின் யோசனை ஏற்கப்பட்டது.

     "எப்படி என் யோசனை? வெறும் நல்வாழ்வுத் திட்டங்கள் என்று உடனே பகடர்களுக்கு எதையாவது செய்து முடித்து விட்டால் இந்தக் கமிட்டியை நாளைக்கே கலைத்து விடுவார்கள். கமிட்டி கலைக்கப்பட்டால் நாம் தெருவில் நிற்போம். 'என்ஸைக்ளோ பீடியா' என்றால் அது இந்த ஜன்மத்தில் முடியாது. ஜவ்வு மிட்டாய் மாதிரி வேலை இழுபடும். நம் கமிட்டியும் அதுவரை நீடிக்கும். அதற்காகத்தான் இப்படி ஒரு போடு போட்டேன்."

     "பிரமாதமான ஐடியா" என்று அதைப் பாராட்டினார் மற்றொரு சக உறுப்பினர்.

     என்ஸைக்ளோ பீடியாவுக்கு ஆசிரியராக மாதம் ஐயாயிரம் ரூபாய் சம்பளத்தில் 'லெக்ஸிகோகிரா'யில் பி.எச்.டி. பண்ணிய ஒரு நிபுணர், மாதம் ரூ. 2000 சம்பளத்தில் ஆறு உதவியாசிரியர்கள், 800 ரூ. சம்பளத்தில் நான்கு புரூஃப்ரீடர்கள் எல்லாம் நியமிக்கப்பட்டனர். மாதம் பத்தாயிர ரூபாய் வாடகையில் ஓர் எடிட்டோரியல் அலுவலகம் அமர்த்தப்பட்டது. 'ஹைபவர் கமிட்டி' சந்திப்பதற்கான நிரந்தர கமிட்டி ரூமை 'ஏர்க்கண்டிஷன்' மற்றும் இண்டீரியர் டெகரேஷன் செய்து முடிக்கவும் பெருந்தொகை ஒதுக்கப்பட்டது.

     "அந்த அமெரிக்க அறிஞர் சொல்லியது போல் பகடர்களை இன்னும் நம் கமிட்டி நேரில் போய் சந்தித்து அவர்கள் குறைகளை அறியவில்லையே?" - என்று அவசரக் குடுக்கையாகக் கேள்விகேட்டார் ஓர் உறுப்பினர்.

     "அதற்கென்ன இப்போது அவசரம்? 'என்ஸைக்ளோபீடியா' வேலை முடிந்து அதன் வெளியீட்டு விழாவில் ஒரு பகடரையே வரவழைத்து அவரிடம் முதல் பிரதியை வழங்கினால் போயிற்று" - என்று குழுவின் தலைவர் அதற்குச் சமாதானம் சொல்லிவிட்டார். 'என்ஸைக்ளோ பீடியா'வுக்கான பேப்பர் வாங்குவது, பிரிண்டிங் பைண்டிங் காண்ட்ராக்ட்டுகள் விடுவதில் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் கொஞ்சம் வகையாகவே கிடைத்தது. இப்படி முதல் திட்ட காலத்திலேயே - அந்தக் காலம் முடிவதற்கு முன்பாகவே 'ஹைபவர் கமிட்டி' ஒதுக்கீட்டுத் தொகையான 2 கோடி ரூபாயையும் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது.

     ஜாதிக்காய் மலை - மலேரியா உள்ள இடமாகையினால் அங்கு எஞ்சியிருந்த 40 பேர் அடங்கிய 10 பகடர் குடும்பங்களிலுமாக, அந்தத் திட்டத்தின் கால எல்லைக்குள் 12 பேர் மலேரியாக் காய்ச்சலில் உயிர் துறந்திருந்தார்கள். எஞ்சிய இருபத்தெட்டுப் பேரில் 4 பேர் மூப்பினால் இயற்கை மரணம் அடைந்திருந்தனர்.

     ஆக இரண்டாவது திட்டகாலத்துக்கு முன்பே 40 - ஆக இருந்த பகடர் இனத்தின் மொத்த எண்ணிக்கை குறைந்து போய் இரண்டு டஜனுக்குள் வந்திருந்தது.

     இரண்டாவது திட்டகாலத்தில் பகடர் என்ஸைக்ளோ பீடியா முதலிய வேலைகளைப் பூர்த்தி செய்யவும் பகடர் இன முன்னேற்றத்துக்கான பிற சாதனைகளைப் புரியவும் ரூபாய் ஆறு கோடிக்குக் குறையாமல் ஒதுக்க வேண்டும் என்று 'ஹைபவர் கமிட்டி' கூடித் தீர்மானம் போட்டு அதை அரசுக்கு அனுப்பியிருந்தது. அந்த மழைக்காலத்தில் இடைவிடாமல் தொடர்ந்து ஒரு வாரமாகப் பெய்த அடைமழையின் போது ஏற்பட்ட பயங்கரமான மலைச் சரிவில் ஜாதிக்காய் மலைத் தொடரில் ஒரே பகுதியில் மீதமிருந்த பகடர் குடியிருப்புகள் முழுவதுமே மண்மூடி அமிழ்ந்து விட்டது.

     உலகில் கடைசியாக மீதமிருந்த பகடர்களுமே கூண்டோடு அழிந்து போயிருந்தனர்; முதலில் பகடர்களைப் பற்றித் தலையங்கள் எழுதிய அதே இடது சாரித் தினசரி இதை எட்டுக் காலம் தலைப்பு கொடுத்து முதல் பக்கச் செய்தியாகத் தலைப்பிலேயே துணிந்து பிரசுரித்துவிட்டு உள்ளே 'பகடர்' நல்வாழ்வுக்கான ஹைபவர் கமிட்டியைப் பற்றிச் சாடுசாடென்று சாடித் தலையங்கமும் எழுதியிருந்தது.

     உடனே ஆட்டு மந்தைகளைப் போல அத்தனைப் பெரிய தினசரிகளும் பகடர் பற்றி முதல் திட்டக்காலத்தில் அந்த இன அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 2 கோடி ரூபாயில் ஒரு பைசாக் கூட அதற்காகச் செலவிடப்படாமலேயே துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தன. விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. பார்லிமெண்டில் கேள்விக் கணைகள் பறந்தன. அதன் விளைவு "ஹைபவர் கமிட்டி" கலைக்கப்பட்டு அதன் மேல் ஒரு விசாரணைக் கமிஷன் போடப்பட்டது. 'என்ஸைக்ளோ பீடியா ஆபீஸ்' 'கமிட்டி ஹால்' - யாவும் பூட்டி ஸீல் வைக்கப்பட்டன. "மலைச்சரிவில் இறந்து போன ஒவ்வொரு பகடர் குடும்பத்துக்கும் பத்தாயிரம் ரூபாய் நஷ்ட ஈடு தர முடிவு செய்துள்ளேன்" - என்று சபையில் அறிவிக்க இருந்த அமைச்சரை உரிய நேரத்தில் அவரது காரியதரிசி எச்சரித்துத் தடுத்தார்.

     "சார் பஸ் விபத்துக்கும், ரயில் விபத்துக்கும் இப்படி அறிவிச்சு அறிவிச்சுப் பழகின பழக்க தோஷத்திலே இதுக்கும் அதுமாதிரி அறிவிச்சுப்பிடாதீங்க. எதிர்க்கச்சிங்க கேலி பண்ணிச் சிரிப்பாங்க! உங்க நஷ்ட ஈட்டை யாரிட்ட கொடுக்கப் போறீங்க. இனிமே உலகத்திலே பகடர் இனமே கிடையாது. அந்த இனத்திலே கடைசியா மிச்சமிருந்த 24 பேருமே மலைச்சரிவிலே கூண்டோட போயிட்டாங்க" என்று காரியதரிசி ஞாபகப்படுத்தி அமைச்சரைத் தக்க தருணத்தில் காப்பாற்றினார்.

     ஆனாலும் அமைச்சர் விடவில்லை.

     "இறந்த பகடர் இனத்துக்கு அந்த மலைச்சரிவிலே உலகமே வியக்கும் வண்ணம் ஆறு கோடி ரூபாய் செலவில் ஒரு நினைவுச் சின்னம் எடுத்து வரலாறு காணாத உலகப் பெருவிழா நடத்தி அதைத் தொடங்கி வைக்கப் பிரதமரையே அழைக்கப் போகிறோம். பிரதமர் வரமாட்டார் என எங்கள் எதிரிகளிலே யாரும் மனப்பால் குடிக்க வேண்டாம். எங்களுக்காக இல்லாவிடினும் மறைந்த பகடர்களுக்காகப் பிரதமர் அவசியம் வருவார்" என விளாசித் தள்ளினார்.

     நாட்டின் பத்திரிகைகள் 'பகடர்' ஹைபவர் கமிட்டி ஊழல்கள் பற்றி விரிவாக வெளியிடத் தொடங்கியிருந்தன. பகடர்கள் எங்கே எப்படி வாழ்கிறார்கள் என்று அறுபது மைல் தொலைவில் இருந்த அவர்களைப் போய்ப் பார்க்காமலே 'பகடர் நல அபிவிருத்திக் கமிட்டி' இங்கிலாந்துக்கும், அமெரிக்காவுக்கும் ஊதாரிப் பயணங்கள் போய் வந்தது பற்றிய சுவையான தகவல்களும், 'என்ஸைக்ளோபீடியா' பற்றிய துணுக்குகளும் பத்திரிகைகளில் 'கவர் ஸ்டோரி'யாகவும் ஸ்பேஸ் ஃபில்லர்களாகவும் வெளிவந்தன.

     அந்த நிலையில் மறுபடி சிலர் கட்சி மாறியதால் மந்திரிசபை கலைக்கப்பட்டுத் தேர்தல் வந்தது. ஹைபவர் கமிட்டிக்கு வேண்டியவர்களும் தேர்தலில் நின்றார்கள்.

     எதிர்க்கட்சிகள் 'பகடர் கமிட்டி' ஊழலைப்பற்றி ஊரூராகப் பிரசாரம் செய்து அதை நியமித்த கட்சியை முறியடிக்க முயன்றனர்.

     ஆனால் என்ன துரதிர்ஷ்டம்? பகடர் கமிட்டிக்கு வேண்டிய கட்சியே தேர்தலில் பெருவாரியாக ஜெயித்தது. அது ஆட்சிக்கு வந்ததும் செய்த முதல் வேலையாகப் 'பகடர் கமிட்டி' மேல் நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷனைக் கலைத்தது. கமிட்டி மீண்டும் உயிர் பெற வழி செய்தது.

     மீண்டும் 'என்ஸைக்ளோ பீடியா' ஆபீஸ் திறக்கப்பட்டது. அதன் பின் பல ஐந்தாண்டுத் திட்டங்கள் தொடர்ந்தன. பகடர் நல அபிவிருத்திக் குழுவும் தொடர்ந்தது. குழுக்கூட்டங்கள் ஏஷியா இண்டர் காண்டினெண்டல் ஏ.ஸி. கான்ஃபரன்ஸ் ஹாலிலேயே தொடர்ந்து நடந்தன. இங்கிலாந்து - அமெரிக்க விஜயங்களும் 'என்ஸைக்ளோ பீடியா' சாக்கில் தொடர்ந்தன. என்ஸைக்ளோ பீடியா வேலைகள் முடிவற்று நீண்டன.

     அவ்வப்போது ஆண்மையை இரவல் வாங்கிப் பின் நிரந்தர நபும்ஸகர்ளாகி விடும் பல பத்திரிகைகள் அது பற்றி அடிக்கடி எழுதவும் செய்தன. எதிர்க்கட்சிகள் சீறின.

     என்ன செய்தும் பிரயோசனமில்லை! எங்குமே இல்லாத பகடர் இனத்தின் என்ஸைக்ளோ பீடியா இன்னும் வெளிவரவும் இல்லை. முடியவும் இல்லை. கமிட்டி கலைக்கப்படவும் இல்லை. செயல் தீவிரப்படுத்தப் பெறவும் இல்லை.

     'செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்பது போலச் செத்துப் போன பகடர் இனத்தின் பேராலே ஒரு 'ஹைபவர் கமிட்டி' இன்னும் சாகாமல் பயன்பெற்று வாழ்ந்து கொண்டிருந்தது.

     ஒரு விஷயத்தை யுகக் கணக்கில் செயல்படவிடாமல் இழுத்தடிக்கக் கமிட்டிகளாலேயே முடியாவிட்டால் பின் வேறு யாரால் தான் முடியப் போகிறது?