1. மாய யானை

     சதானிகன் கௌசாம்பி நகரத்து அரசன். வைசாலி நகரத்து அரசனாகிய சேடகராசனின் புதல்வி மிருகாபதியைச் சதானிகன் மணம் புரிந்து கொண்டான். மகளுக்கு மணம் முடித்துக் கொடுத்ததிலிருந்தே சேடகராசனுக்கு மறக்கள வேள்வியில் மனம் விருப்புக்குன்றி, அறக்கள வேள்வியில் ஆர்வம் கொண்டது. என்றும் நிலைக்கப் போகிற உண்மை, நிலையாமை ஒன்றுதான் என்பது அவன் நினைவுகளில் அடிக்கடி தோன்றிக் கொண்டே இருந்தது. அரண்மனை மேல் மாடத்தில் நின்று மேகங்கள் தவழும் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே உலாவிய மாலை நேரமொன்றில் அந்த மேகங்கள் நிலையின்றிக் கூடுவதையும், கலைவதையும் எண்ணி அவற்றைத் தன்னோடு ஒப்பிட்டுக் கொண்டான் சேடகராசன். இப்படி எதைப் பார்த்தாலும் எதைச் சிந்தித்தாலும் அதிலிருந்து நிலையாமையே அவனுக்குத் தோன்றியது. கடைசியில் ஒரு நாள், அவனுடைய மனமும் உணர்வுகளும் காம்பிலிருந்து பிரியும் வெள்ளரிப் பழம் போலப் பற்றுகளிலிருந்து கழன்றன. தன் மகளுக்குத் திருமணம் முடித்த சில ஆண்டுகளில் மன்னர் மன்னனான சேடகராசனுக்கு வாழ்க்கையின் இந்த நிலையாமை புலனாகியதனால் அவன் உள்ளம் துறவை நாடிற்று. தன் புதல்வர் பதின்மரையும் அழைத்து, ஒவ்வொருவருக்கும் தன் விருப்பத்தைக் கூறி, வைசாலி நகர ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி சேடகராசன் வேண்டினான். அவர்களுள் ஒன்பது புதல்வர்கள், தாமும் அவனைப் போலவே துறவு நாடுதலைக் கூறி ஆட்சியை மேற்கொள்ள மறுத்து விட்டனர். இறுதியில் பத்தாவது முதல்வனாகிய விக்கிரனை வற்புறுத்தி ஆட்சியை அவனிடம் ஒப்படைத்துவிட்டு, விபுமலைச் சாரலிற் சென்று சேடகராசன் துறவு பூண்டு, தவம் செய்வானாயினான். தந்தை சென்ற பின் விக்கிரன் வைசாலி நகர ஆட்சியை நடத்தத் தொடங்கினான்.

     சேடக ராசன் துறந்த செய்தி, கௌசாம்பி நகரில் கணவனோடு இருந்த அவன் மகள் மிருகாபதிக்கு எட்டிற்று. அவள் தந்தையின் துறவு கேட்டு வருந்தினாள். அவள் கணவனாகிய சதானிகன் அவளைத் தேற்றினான். அப்போது மிருகாபதி (உதயணனை) கருக் கொண்டிருந்தாள். ஒருநாள் நிலா முற்றத்திலே செந்நிற மஞ்சத்தில் முற்றிலும் செந்நிறமான பூக்களால் செய்த அலங்காரத்தோடு அவள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அந் நேரத்தில், நிலா முற்றத்திற்கு மேலே வான் வழியாகப் பறந்து கொண்டிருந்த ஆற்றல் மிக்க சரபப் பரவையொன்று உறங்கும் மிருகாபதியைக் குருதி தோய்ந்த சதைத் தொகுதி என்று கருதி உணவாகுமெனத் தூக்கிச் சென்றுவிட்டது. தூக்கிச் சென்ற பறவை நல்வினை வயத்தால் சேடக முனிவர் தவம் செய்யும் விபுல மலைச் சாரலில் அவருடைய தவப்பள்ளியின் பக்கத்தில் மிருகாபதியை இறக்கி வைத்துத் தசையென்று உண்ணத் தொடங்கியது. மிருகாபதி விழித்துக் கொண்டாள். பறவை அஞ்சி ஓடிப்போயிற்று. விழித்ததும் தான் முற்றிலும் புதிய வேறு ஓர் இடத்தில் இருப்பது கண்டு திகைப்பும் வியப்பும் கொண்டு, அச்சமுற்றாள் மிருகாபதி. வான்வழியே பறவையால் தூக்கப்பெற்று வந்த களைப்பாலும் அச்சத்தாலும் வயிற்றில் கரு வேதனை மிகுதியாயிற்று. இந் நிலையில் இரவு மெல்ல கழிந்து கொண்டிருந்தது. உருக்கி வார்த்த தங்கத் திகிரி போலக் கீழ்வானில் இளங் கதிரவன் உதயமாயினான். அத்தகைய இன்ப மயமான சூரியோதய நேரத்தில் மிருகாபதி ஓர் ஆண் மகவைப் பெற்று மகிழ்ந்தாள். காலைக் கடன்களை முடிக்கத் தவப்பள்ளியிலிருந்து வெளியேறிய சேடகர் மிருகாபதியையும் குழந்தையையும் சந்திக்க நேர்ந்தது. அவள் தன் மகள் என்றுணர்ந்து, அவர் வியப்போடு அருகிற் சென்று உதவினார். அப்பால் தன் தந்தையாகிய சேடக முனிவரோடு மிருகாபதி குழந்தையுடனே வசிக்கலாயினாள். கையிற் குழந்தையோடும், கருத்தீர்ந்த உடலோய்வுடனும் இருந்த அவளுக்குச் சேடக முனிவரின் நண்பரான பிரமசுந்திர முனிவரும் அவர் மனைவி பரம சுந்தரியும் உதவி செய்து அன்புடன் பேணி வந்தனர். சூரியன் உதயமாகும் நல்ல பொழுதில் பிறந்ததால் அந்தக் குழந்தைக்கு உதயணன் என்று பெயரிட்டார் சேடகர். அவன் தன்னிகரில்லாத பெருந்தலைவனாக வளர்வான். ஆகையினால் அவனது வரலாறு வேறு பலருடைய வரலாற்றுக்கும் காரணமாக விளங்குமென்றார் சேடகர். பலருடைய வரலாற்றையும் - புகழையும் உதிக்கச் செய்வதற்கு அவன் காரணமாயிருப்பானென்றதாலும், உதயணன் என்னும் பெயர் அவனுக்குப் பொருத்தமாயிற்றென்றார் முனிவர்.

     விபுமலைச் சாரலில் அத் தவத்தோர் சூழலில் உதயணன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து தக்க பருவத்தை அடைந்தான். உதயணனுக்குச் சம வயதினனாக, யூகி என்னும் புதல்வன் ஒருவன் பிரமசுந்திர முனிவருக்கு இருந்தான். உதயணனும் அவனும் இணைபிரியாத உயிர்த்தோழர்களாகி இருபெரு முனிவர்களிடமும் பல அருங்கலைகளைக் கற்றுத் தேர்ந்தனர். இருவருக்கும் வாலிபப் பருவம் வந்தது. உதயணனின் கலைத் திறனையும் மதி நுட்பத்தையும் கண்டு அவன்பால் தனி அன்பு கொண்ட பிரமசுந்திர முனிவர், அவனுக்கு இசைக் கலையின் நுட்பங்கள் பலவற்றையும் கற்பித்ததோடு, யானையின் மதத்தை அடக்கி ஆளுதற்குரிய மந்திரத்தையும் விந்தைமிக்க 'கோடபதி' என்னும் யாழையும் கொடுத்தருளினார். கோடபதியை வாசித்தால் யானை முதலிய விலங்குகள் யாவும் வாசிப்பவர் வயப்பட்டு அடங்கி, அவரிட்ட ஏவல்களைச் செய்யும். பின்பு பிரமசுந்திர முனிவர் உதயணனை வாழ்த்தித் தம் புதல்வனாகிய யூகியையும் அவனுக்கு அடைக்கலமாக அளித்துப் பயன் பெறும்படி செய்தார். யூகியும் உதயணனும் நட்பில் ஈருடலும் ஓருயிருமாயினர். இவ்வாறு இருக்கையில் ஒருநாள் காடு சென்ற உதயணனுக்குக் கோடபதி யாழால் தெய்வீக யானை ஒன்று வசப்பட்டு ஏவல் செய்யலாயிற்று. தான் அவனை விட்டு நீங்காதிருக்கக் கருதினால் மூன்று நிபந்தனைகளை மேற்கொள்ள வேண்டுமென்று ஒரு நாள் இரவு அவன் கனவில் தோன்றி அந்த யானை கூறியது. "என் மேல் பாகர்களை ஏற்றக்கூடாது. நான் உண்ணுமுன் நீ உண்ணக்கூடாது. தோல் கயிற்றைக் கொண்டு என்னைக் கட்டக்கூடாது" என்பவையே யானையின் நிபந்தனைகள்.

     இங்கு இப்படி இருக்குங்கால் அரசாட்சியில் மனம் பற்றாது துறவு நெறியிற் செல்ல விரும்பிய உதயணனுடைய தாய்மாமனாகிய விக்கிரன் விபுலமலைச் சாரலுக்கு வந்தான். சேடக முனிவர் மிருகாபதி அங்கு வந்து சேர்ந்தது முதல் நிகழ்ந்தவற்றையெல்லாம் கூறி, உதயணனை விக்கிரனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சில நாள்கள் சென்றபின் விக்கிரன் முனிவர் அனுமதி பெற்று மிருகாபதி, உதயணன், யூகி இவர்களுடன் வைசாலிக்குச் சென்று உதயணனுக்கு முடி சூட்டிவிட்டுத் துறவு பூண்டான்.

     இதற்குள் கௌசாம்பி நகரத்திலே நிலா முற்றத்தில் துயின்ற மனைவியைக் காணாமல் சதானிகன் பலவிடங்களிலும் தேடிப் பல்லாண்டுகளாக அவளைப் பற்றி ஒரு விவரமும் அறியாமல் குழம்பிக் கிடந்தான். இறுதியில் இரு முனிவரை அடைந்து அவர் வாயிலாக நடந்தவை எல்லாம் கேட்டு நன்கு தெளிந்தனன். அதன் பின் வைசாலி நகர் சென்று தன் புதல்வனைக் கண்டு மகிழ்ந்து, தன் மனைவியோடு இன்புற்று உறைந்தனன். மீண்டும் கௌசாம்பி சென்று சில காலம் ஆட்சி புரிந்தான். இடையிடையே உதயணனும் கௌசாம்பி போய் வருவதுண்டு. இத் தருணத்தில் உதயணனுக்குப் பிங்கலன், கடகன் என்னும் இரண்டு தம்பிகள் பிறந்தனர். சதானிகனும் வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து துறவு நிலைக்குச் செல்லவே, கௌசாம்பி நகரின் ஆட்சிப் பொறுப்பும் உதயணனுக்கு ஏற்பட்டது. உடனே உதயணன் வைசாலியின் அரசாட்சியை யூகியிடம் ஒப்பித்துவிட்டுத் தான் கௌசாம்பி சென்று ஆளுவானாயினன். தெய்வ யானையும் அவனுடைய யாழ் வாசிப்பினுக்கு அடங்கி அவனோடு சென்று இருந்து ஏவல் செய்தது. இப்போது வயந்தகன், உருமண்ணுவா, இடவகன் என்னும் வினைத்திட்பமும் மனத்திட்பமும் சிறந்த மந்திரிகள் மூவரும் உதயணனுக்கு ஏற்பட்டனர். உதயணன் புகழ் உதய சூரியனின் ஒளிபோலப் பரந்தது. மக்கள் அவனைப் போற்றிப் புகழ்ந்தனர்.

     உதயணன் தன் மந்திரிகளுடனும் வீரர் சிலருடனும் ஒரு நாள் காட்டிற்கு வேட்டையாடும் விருப்பினனாகச் சென்றான். வேட்டையாடி முடிந்த பின் நீர் வேட்கை மிகவே அக்கம் பக்கம் உண்ண நீர் காணாது தவித்தான் உதயணன். வழி காணாது திகைத்து நீர் விடாயால் வாட்டமும் எய்தித் தெய்வமே துணை என்று ஒரு மரத்தடியில் அவனும் நண்பர்களும் சோர்ந்து விழுந்தார்கள். அப்போது குபேரனுக்குத் தொண்டு செய்யும் இயக்கர்களில் ஒருவனாகிய 'நஞ்சுகன்' என்னும் இளைஞன் தோன்றி, இனிய நீர் கொண்டு வந்து கொடுத்து அவர்களை உயிர்ப்பித்தான். அவர்கள் நீர் வேட்கை தணித்த பின், "இது போல் நீங்கள் வேண்டும் போது எல்லாம் வந்து யான் உங்கள் துயர் களைவேன்! என்னை நினைக்க ஒரு மந்திரம் உண்டு" என்று சொல்லி, அந்த மந்திரத்தை உருமண்ணுவாவிடம் கூறிவிட்டு, இயக்கன் விடைபெற்றுச் சென்றான். உதயணன் முதலியோர் அவன் செய்த உதவிக்கு நன்றி பாராட்டிவிட்டுத் திரும்பி நகரடைந்தனர். இவ்வாறிருக்கையில் ஒரு நாள் உதயணன் இசை, நாடகம், முதலிய கலைகளை அரண்மனையில் நுகர்ந்துவிட்டுப் பசி மிகுதியால் யானைக்கு உணவளிக்காது மறந்து தான் உண்டுவிட்டான். முன் யானை அவனிடம் வேண்டிய நிபந்தனைகள் 'என் மேற் பாகரை ஏற்றக்கூடாது. தோல் கயிற்றைக் கொண்டு கட்டக் கூடாது. நான் உண்ணும் முன் நீ உண்ணக்கூடாது' என்பன. இவற்றுள் ஒரு நிபந்தனையை உதயணன் கைவிட்டதால் யானை அவனை நீங்கிற்று. வழக்கம் போல் யாழ் வாசிக்கும் போது யானை வராமை கண்டு கலங்கிய உதயணனுக்குத் தன் தவறு புரிந்தது. பல இடங்களிலும் வீரர்களை அனுப்பி யானையைத் தேடினான். கோடபதி என்னும் யாழும் கையுமாகக் காடுகளில் தானே தனியாக அதனைத் தேடி அலைவானாயினான். யானையின் பிரிவு அவனை ஒரு நிலை கொள்ளும்படி விடவில்லை.

     இவ்வாறு உதயணன் காடுகளில் தனியே திரியும் செய்தி உச்சயினியைத் தலைநகராகக் கொண்டு அவந்தி நாட்டை ஆண்டு வந்த பிரச்சோதன மன்னனுக்கு எட்டியது. பிரச்சோதன மன்னனுக்கு வாசவதத்தை என்ற ஒரு பெண்ணும், பாலகன் முதலிய புதல்வர் மூவரும் இருந்தனர். யானை இலக்கணத்தில் குறைபாடு இல்லாத நளகிரி என்ற பட்டத்து யானை ஒன்றை அவன் பெற்றிருந்தான். தனக்கு செலுத்த வேண்டிய கப்பத்தை ஏனைய அரசர்களெல்லாம் மறவாது செலுத்தி வரும்போது உதயணன் மாத்திரம் செலுத்தாமையைத் தன் மந்திரி சாலங்காயன் மூலம் அறிந்த பிரச்சோதனன், உதயணன்பால் பெரும்பகை கொண்டிருந்தான். அவனைச் சிறைகொள்ள ஏற்ற சமயம் எதிர் பார்த்துக் கொண்டும் இருந்தான். அப்படி இருந்த பிரச்சோதனனுக்கு உதயணன் காடுகளில் தனியே திரியும் இந்த நிலை ஒரு நல்ல வாய்ப்பல்லவா? இந்த வாய்ப்பைத் தப்பாமல் பயன்படுத்திக் கொள்ள மந்திரியோடு கலந்தாலோசித்த பிரச்சோதனன் ஒரு தந்திரமான வேலையைச் செய்தான். உண்மை யானையைப் போல் தோன்றும்படி ஒரு எந்திர யானையை மரச்சட்டம், துணி, அரக்கு முதலியவற்றால் உருவாக்கினான். அந்த எந்திர யானைக்குள் பிரச்சோதனனுடைய வீரர்கள் ஆயுதங்களணிந்து ஒளிந்திருந்தனர். யானையின் உடலுக்குள்ளும் வேறு ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. காட்டில் தனியே திரியும் உதயணனுக்கு யூகி உதவி செய்ய வருவதைத் தடுப்பதற்காக, முன்னேற்பாட்டுடன் வைசாலிக்கும் ஒரு படையை அனுப்பினான் பிரச்சோதனன். படை வைசாலி நகரையடைந்ததும் யூகியோடு பெரும் போர் நிகழ்த்தியது. யூகியின் கவனம் காட்டுக்குப் போன உதயணன் பக்கம் திரும்பாமலிருக்கவே இந்தப் போர் ஏற்பாடு. பிரச்சோதனனுடைய சூழ்ச்சியில் உருவானப் போலி யானை, வீரர்களையும் வெம்படைகளையும் உட்கரந்து உதயணன் அலைந்து கொண்டிருந்த காட்டிற்கு வந்து சேர்ந்தது. அதைக் கண்ட காட்டு வேடர்கள், அதுதான் உதயணனை நீங்கிச் சென்ற தெய்வ யானையாக இருக்க வேண்டுமென்று எண்ணி உதயணனிடம் வந்து கூறினார்கள். உதயணன் அதைக் கேட்டு யாழுடன் ஓடி வந்தான். வருகையில் தீய நிமித்தங்கள் தென்பட்டதைக் கூட அவன் கவனிக்கவில்லை. போலி யானையின் முன்னின்று கோடபதியை வாசித்தான். யானை அவன் வாசிப்பதற்கு வயப்படுவது போல் பக்கத்தில் நெருங்கிற்று. உதயணன் தன்னை மறந்த பரவசத்துடன் யாழிலே ஈடுபட்ட போது யானையின் உடல் சரிந்தது. உள்ளிருந்து போர் வீரர்கள் வெளிப்பட்டனர். போர் நடந்தது. அவர்களது சூழ்ச்சிச் செயல் கண்டு உதயணன் ஏளனப் புன்முறுவல் செய்தான். உதயணனுக்கு இவ்வாறு ஏதேனும் ஆபத்து வரக்கூடாது என்று முன்பே எண்ணிப் படையுடன் மறைவாக இருந்த வயந்தகன் உதவிக்கு வந்தான். வயந்தகன் படையொடு வருதலையறிந்து யானையைப் பின் தொடர்ந்து பெரும் படையுடன் மறைந்து வந்திருந்த அவந்தி நாட்டு மந்திரி சாலங்காயன் வெளிப்பட்டான். இருவருக்கும் போர் பெரிதாயிற்று. உதயணன் அவனை வாள்முனையில் வரவேற்றான். ஆனால் மந்திரியைக் கொல்லுதல் அறமன்று என்பதற்காக அவனை விட்டுவிட்டான். இறுதியில் ஒரு யானையின் கொம்பில் பட்டு உதயணன் போரிட்ட வாள் ஒடிந்து விட்டது. அதுதான் சமயம் என்று சாலங்காயன் அவனைக் கைது செய்துவிட்டான்.

     கைதான உதயணன் தந்திரமாகப் பிறர் அறியாதபடி, நிகழ்ந்தவற்றை ஓர் ஓலையில் விவரமாக எழுதி வயந்தகன் மூலமாக யூகிக்கு அனுப்பிவிட்டுப் பகையரசன் நாட்டிற்குச் சிறைப்பட்டுக் கைதியாகச் சென்றான். அரசன் பிரச்சோதனனின் ஆணைப்படி அங்கே ஓர் இருட்சிறையில் உதயணன் அடைக்கப்பட்டான். வயந்தகன் மூலமாக உதயணன் நிலையறிந்த யூகி பெருஞ்சினங் கொண்டான். சீறியெழுந்த யூகியின் சினம் ஒரு சபதமாக வெளிப்பட்டது. "தன் போலி யானையால் எங்கள் உதயணனை அகப்படுத்திய பிரச்சோதன நகரை ஓர் உண்மை யானையாலேயே அழிப்பேன். உஞ்சை நகரத்தை நெருப்பில் ஆழ்த்திவிட்டு உதயணனை மீட்பேன். உதயணனைக் கொண்டே அந்த வஞ்சக மன்னன் மகள் வாசவதத்தையை வலிந்து இங்கே கொண்டு வரச் செய்து அவனுக்கே மணம் முடிப்பேன்" என்று யூகி சபதம் செய்தான். பிறகு யூகி உதயணன் பிரிவைப் பொறுக்காமல் தான் இறந்து போயினதாக ஒரு பொய்ச் செய்தியை எங்கும் பரப்பினான். வைசாலி நகரத்தைத் தன் ஆட்களில் சிலரையும், கௌசாம்பி நகரத்தைப் பாதுகாக்க பிங்கல கடகர்களையும், ஏற்பாடு செய்தான். தான் இறந்து விட்டதாகக் கிளம்பிய பொய்யை யாவரும் நம்புவதற்காகத் தன்னைப் போல் வேடமிட்ட ஒருவனை எரித்து, அவன் பிணத்தின் எரிந்த கோலத்தைச் சுடுகாட்டிலிட்டு எல்லோரும் காணச் செய்தான். எல்லோரும் யூகி இறந்து விட்டான் என்றே நம்பி வருந்தினார்கள். யூகி தன் தோழர்கள் சிலருடன் உஞ்சை நகரத்தை அடைந்தான். தன் தோழர்களில் பலரை மாறு வேடத்துடன் பிரச்சோதனனுடைய அரண்மனையில் வேலை பார்த்து வரும்படி ஏற்பாடு செய்தான். அவர்களுக்குத் தான் செய்திருக்கும் ஏற்பாடுகளை விவரித்திருந்தான். உஞ்சை நகரத்தின் புறத்தேயிருந்த ஆள் நடமாட்டமற்ற காளிகோவில் ஒன்றில் யூகி வசித்து வந்தான். அவனுடைய திட்டங்களும் தனிமையான சிந்தனையில் அங்கேதான் உருவாயின.

     யூகி இறந்தான் என்பதைக் கேட்ட பிரச்சோதனனும் அதனை உண்மை என்று நம்பி வைசாலிக்கு அனுப்பிய தன் படையை மீண்டும் வரும்படி கட்டளையிட்டான். இனிமேல் தன்னை ஏன் என்று கேட்பாரில்லை என்ற இறுமாப்பில் உதயணனுடைய நாடுகளிற் சிலவற்றையும் கைப்பற்றி ஆளத் தொடங்கினான். யூகியின் பிரிவு பிங்கல கடகர்களுக்குப் பெரிதும் துயர் கொடுத்தது.

     யூகியின் சூழ்ச்சி வெற்றி பெறுவதற்கான வேலைகள் விரைவாக நிகழ்ந்தன. காளிகோவில் ஊரையொட்டி இருந்ததால் ஏதேனும் ஆபத்து வரலாம் என்று கருதிய யூகி, சற்றுத் தொலைவிலுள்ள பாகம் என்ற சிற்றூரை அடைந்து ஒரு பாழ்வீட்டில் தங்கி, வயந்தகன் முதலிய நண்பர்களோடு கலந்து ஆலோசித்தான். அந்த ஆலோசனையின் விளைவாகச் சிலர், பல்வேறு மொழிகளைக் கற்று உஞ்சை நகரக் கடை வீதிகளில் வாணிகர்களாக நடித்து ஒற்றறிந்தனர். வயந்தகன் பிரச்சோதனனுடைய குமாரர்களோடு நட்புப்பூண்டு, அவர்களோடு கல்வி கற்று வந்தான். யூகியின் ஆட்களிற் சிலர் ஊமையாகவும், செவிடாகவும் நடித்து அரண்மனையில் வேலை பார்த்து வரலாயினர். இரவு நடுயாமத்தில் வந்து யாவரும் ஒன்று கூடுவார்கள். ஏதாவது ஒரு பாழ்மண்டபம் அல்லது இடிந்து போன காளி கோவில் அவர்கள் கூடும் இடமாக அமையும். நண்பர்கள் கூடும் போதும் பிரியும் போதும் இரகசியமான சில அடையாளங்களும் சங்கேதங்களும் நடக்கும். அவரவரறிந்தவற்றை அன்றன்று வெளிப்படுத்துவார்கள். அடுத்து நடத்த வேண்டிய திட்டங்கள் உருவாகும். நண்பர் பிரிவர்.

     உஞ்சையில் இவர்கள் இங்ஙனம் இருக்குங்கால், பாஞ்சால நாட்டு அரசனாகிய ஆருணி, பிங்கல கடகர்களை வென்று கௌசாம்பியைக் கைப்பற்றி ஆள ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு அஞ்சி ஓடிய பிங்கல கடகர்கள், சில வீரர்களுடன் மறைந்து வாழ்ந்தனர். ஆருணி ஏற்கனவே உதயணனின் பகைவன். அவனது சோர்வை எதிர்பார்த்து காத்திருந்தவன். அந்தச் சந்தர்ப்பம் இப்போது வகையாக வாய்த்ததால் பயன்படுத்திக் கொண்டுவிட்டான்.

     உஞ்சை நகரத்தில் யூகி, உதயணனைச் சிறை மீட்பதற்காக வேண்டிய ஏற்பாடுகளை மறைமுகமாக நடத்திக் கொண்டிருந்தான். உதயணனைச் சிறையிற் போய்ச் சந்திப்பதற்காக யூகி ஒரு நாடகத்தைத் துணிந்து நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தலையில் நீர்க் கரகம், நோயுற்றவன் போன்ற தோற்றம், தெய்வ அருள் பெற்றவன் போன்ற பேச்சு, பித்தனின் கோலம் ஆகியவற்றோடு ஆடிப் பாடிக் கொண்டு நகர வீதிகளின் வழியே சென்றான் யூகி. "வானுலகிலிருந்து தேவன் ஒருவன் இந் நகருக்கு வந்துள்ளான். அவனைப் பின் தொடர்ந்து வந்த தொண்டன் யான். இவ்வூரரசன் ஐந்தலை நாகமொன்றைச் சிறை செய்திருக்கிறான். எங்கே அந்தச் சிறை?" என்று பலவகையாகப் பிதற்றிக் கொண்டு பல மக்கள் தன்னைச் சூழ்ந்து வர உதயணன் இருந்த சிறையை யூகி அணுகினான். உதயணன் தன்னை அறிந்து கொள்வதற்காக அவனும் தானும் மட்டும் அறிந்த ஒரு பாட்டை யூகி பாட, யூகி வந்துள்ளான் என உதயணன் உய்த்துணர்ந்து, ஒரு புல்லாங்குழலை ஊதித் தான் அந்தச் சிறையில் இருப்பதை யூகிக்கு அறிவித்து விட்டு, வேடிக்கைப் பார்ப்பவன் போல் சிறைக் காவலரை ஏமாற்றிவிட்டு வெளியே வந்தான். நண்பர்கள் சந்தித்தனர். குறிப்பால் ஏதேதோ பேசிக் கொண்டார்கள். நேரமிகுவது ஆபத்து என்பதை அறிந்த யூகி, உதயணனிடம் விடை பெற்று ஒரு பயங்கரப் பேயைப் போல நடித்து யாவரையும் அஞ்ச வைத்துத் தன் இருப்பிடம் சென்றான்.

     உதயணனும் யூகியும் குறிப்பால் ஏதேதோ பேசிக் கொள்வதை நுட்பமாகக் கவனித்த சிறைக்காவலன் ஒருவனுக்குச் சந்தேகம் தோன்றியது. அவன் தன் சந்தேகத்தை அரசனிடம் தெரிவித்தான். அப்போது அரசனுக்கு அருகில் இருந்த சாலங்காயன், "ஒருவேளை வந்தவன் யூகியாக இருக்கலாம். யூகியின் மார்பில் யானைக் கொம்பு குத்திய வடு ஒன்றுண்டு. அதைக் கொண்டு உண்மையை அறியவேண்டும்" என்றான். பிரச்சோதனன் அதை அறிய வேண்டிய ஏற்பாடுகள் செய்தான். ஆனால், அரண்மனையில் நடந்த இந்த நிகழ்ச்சியையும் சாலங்காயனுடைய சந்தேகத்தையும் அங்கிருந்து ஊமைபோல் நடித்த யூகியின் ஒற்றனொருவன் உடனே யூகிக்கு தெரியச் செய்துவிட்டான். யூகி விழித்துக் கொண்டான். அன்றிலிருந்து தன் மார்பிலிருந்த வடு தெரியாதபடி மறைத்துக் கொண்டு உஞ்சையில் நடமாடத் தொடங்கினான் யூகி. ஒருநாள் நள்ளிரவு யூகி, அஞ்சத்தக்கதொரு பேய் வடிவங்கொண்டு நகருட் புகுந்து, அரசனுடைய பட்டத்து யானையான நளகிரி இருக்கும் கொட்டிலுக்குச் சென்று, ஒரு மருந்தைக் கொடுத்து, அதை மிகப் பெரிய மதவெறியடையச் செய்துவிட்டுத் திரும்பினான். மறுநாள் பொழுது விடிந்தது. நளகிரி உஞ்சை நகருக்கு நமனாயிற்று. அதன் மதத்தால் ஊர் அழிபட்டது. எதிர்ப்பட்ட மக்களைத் தன்னுடைய கொம்பில் குத்தி மாலை தொடுத்தது நளகிரி. பாகர்களால் யானையை அடக்க முடியவில்லை. இன்னும் இப்படியே சிறிது நேரம் பொறுத்தாலோ ஊர் சுடுகாடாகிப் போகும். பிரச்சோதனன் செய்வதறியாது திகைத்துப் போனான். இந்தத் தருவாயில் மந்திரி சாலங்காயன், அரசனிடம் உதயணன் பால் உள்ள கோடபதி என்னும் யாழின் சிறப்பையும், உதயணன் ஒருவனே யாழை வாசித்து நளகிரியை அடக்க முடியும் என்பதையும் கூறினான். "வஞ்சனையாற் கைப்பற்றி வன்சிறையில் அடைத்தேன். அவனிடம் போய் நான் உதவி கேட்பது எவ்வாறு?" பிரச்சோதனன் இவ்வாறு கூறி நாணினான். பின் அரசன் சம்மதம் பெற்றுச் சிவேதன் என்னும் மந்திரி, உதயணனிடம் சென்று எல்லா விவரங்களையும் கூறிப் பகைமை பாராட்டாமல் உஞ்சை நகரை யானை வாயிலிருந்து காத்தளிக்குமாறு வேண்டினான். உதயணன் அதற்கு உடன்பட்டு வெளியே வந்தான். கோடபதியின் கோலாகலமான இசை வெள்ளம், நளகிரியின் மதத்தைப் போக்கி அதனை உதயணன் அடிமையாக்கிற்று. நளகிரியின் மேலேறி மன்னன் துயர் போக்கி வந்தான் உதயணன். பிரச்சோதனன் தன் துயர் தீர்த்த தகைசால் வள்ளல் உதயணனைக் காணத் தேவியரோடும் புதல்வி வாசவதத்தையோடும் அரண்மனை முன்புறம் புலிமுக மாடத்துக்கு வந்தான்.