11. உவகைத் திருவிழா அரசன் உடன்பாடு பெற்ற பின் சேனாபதி நீராட்டு விழாவிற்குரிய நாளைக் குறிப்பிட வேண்டியவனானான். மறுநாள் நீராட்டுக்கு ஏற்றதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றது. முரசெறி வள்ளுவன் நகர் முழுதும் நாளை நீராட்டு விழா நிகழுமென்பதை அறிவித்தான். நகர் முழுவதும் ஒரே ஆரவாரமயம். விடிந்தால் திருவிழா. விறுவிறுப்புக்குக் கேட்கவா வேண்டும்? ஊர்திகளை ஏற்பாடு செய்வதில் சிலர் ஈடுபட்டனர். ஆடல் விழாவிற்கு வேண்டிய அலங்காரப் பொருள்களைச் சேகரிப்பது பலருடைய வேலையாயிற்று. இளமகளிர் வளைக்கரம் இசை முழங்க, வாசனைச் சுண்ணங்கள் இடித்தனர். தோணிகளும் படகுகளும் துறைதோறும் குழுமின. வான் கிளர்ந்தது போல வனப்பொடு பொலிந்தது அவ் வளநகர். நாளைக்கு நீராட்டு விழா நெருக்கடியில் தான் யூகியின் சபதம் நிறைவேற வேண்டும். விழா ஆரவாரத்தில் மக்களும் அரசரும் தம்மை மறந்திருப்பர். நகரில் ஈ காக்கை இராது. யாவரும் நீர்த் துறை சென்றிருப்பர். அந்நேரத்தில் நகர்க்குத் தீ மூட்டிவிட்டு நீர்த்துறையிலுள்ள உதயணனைத் தத்தையுடன் நாடு கடத்திவிடுவது என்பதுதான் யூகி போட்டிருந்த திட்டம். விழா வெறும் நீராட்டு விழாவாக மட்டும் வரவில்லை. உவகைத் திருவிழாவாக வந்தது. ஊர் களிக்கும் பெரு விழாவாக வந்தது. விழா யாத்திரை தொடங்கியது. யாழுங் குழலும் நல்லிசை எழுப்ப, முரசும் முழவும் ஒலி வளர்க்க, ஆரவார யாத்திரை ஆரம்பமாகிவிட்டது. ஆடவர், பெண்டிர், சிறார் அனைவரும் விழா யாத்திரையிற் கலந்து கொண்டனர். குதிரையேறிச் செல்வோரும், யானையேறிச் செல்வோரும், கொல்லப் பண்டிகளிற் செல்வோரும், பல்லக்குகளிற் செல்வோருமாகப் பரவச யாத்திரையை நடத்தினர். ஊரின் கட்டளை வாயிலைக் கடந்து சென்ற மக்கள் கூட்டம் கடல் போல விளங்கிற்று. மக்கள் ஆற்றங்கரையை அடைந்தனர். ஆற்றின் இரு கரையிலும் அசோக மரங்களும் இளங் கமுக மரங்களும் செறிந்து விளங்கின. பல சோலைகளில் மயிலும் கிளியும் மந்தியும் குயிலும் பயின்று விளையாடின. தோட்டத்திலுள்ள பெரிய மரங்கள் தோறும் அழகிய ஊஞ்சல்கள் (ஊசல்கள்) தொங்கின. ஊசல்களிலெல்லாம் ஆடும் மக்களின் கூட்டம் நிறைந்திருந்தது. அக் காட்சி காணக் கவின் மிகுந்து விளங்கிற்று. நீரங்காடிக்குச் சமீபத்தில் பலபல கலைப் பொருள்களை விற்கும் வாணிகர் கடைகள் அமைத்தனர். நீரங்காடியைச் சூழ இருந்த கடைகளில் மதுவும் கத்தூரியும் மண்கலன்களும் உடை வகைகளும் விற்கப் பெற்றன. நீராடு விழாவிற்காக வந்த மக்கள் மணற் பரப்பிலே தத்தம் இருக்கைகளைச் சமைத்துக் கொண்டனர். பந்தரும் படப்பும் கலிங்கம் தோய்ந்த காசு பொதி சிற்றில்களும் சமைக்கப் பெற்றன. அந்த அவசரத் தேவையை உத்தேசித்தெழுந்த வீடுகளிலும் அவர்களுடைய அலங்காரக் கலையின் நுண்ணியத்திறன் தோன்றியது. நதிக்கரையை ஒட்டி நீரிலே பாய்ந்து விளையாடுதற்கு உரிய நீர் மாடங்களை அமைத்தனர். ஆற்றைச் சூழ எங்கும் விழாக் கோளாளர் மொய்த்துச் சூழ்ந்தனர். நீராட்டு விழா மன்னவன் பணியை எதிர்நோக்கிக் காத்திருந்தது. நல்ல நாளிலே எல்லோரும் ஒன்று கூடி நல்லதைப் பகுத்து கொண்டு மகிழ்வது நம்மவர்களுடைய தலை சிறந்த பண்பாடு. இதை நன்குணர்ந்த பிரச்சோதனன், எத்தகைய குற்றம் செய்தவர்களாயினும் இவ்விழா மகிழ்ச்சியிற் பங்கு கொள்ள வேண்டும் என்று அறிவிக்கச் செய்தான். இவ்வாறு முரசெறி வள்ளுவ முதுமகன் அரசுரை ஆணையை நகரறியப் பரப்பினான். விழா நிகழும் இருபத்தொரு நாளும் மெய்காவலர்களன்றிப் பிறபடைகளை நீக்கித் தனியாக இருப்பான் மன்னவன். அழகிற் சிறந்த பெண்யானை ஒன்றின் மேலேறிப் பிரச்சோதன மன்னன் விழாவிற்குப் புறப்பட்டான். அரசமாதேவி முதலியோர் யானைத் தந்தங்களால் இயற்றப் பெற்று வலிய எருதுகள் பூட்டிய பாண்டியங்களில் சென்றனர். நீராட்டிற்கு வேண்டிய பலவகைப் பொருள்களையும் அரசமாதேவியருக்குரிய குற்றிள மகளிர் பின்னே கொண்டு சென்றனர். சேனாபதி மகளைத் தத்தை அலங்கரித்தாள். காஞ்சனமாலை தத்தையை அலங்கரித்து நீராட்டிற்குப் புறப்பட ஏற்பாடு செய்தாள். தத்தை ஒருவையப் பண்டியில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டாள். வண்டி புறப்படும் போது காளையின் குளம்பு வழுக்கவே பாகன் அவ் வண்டியை நீக்கிவிட்டு மல்லர் தூக்கும் மாடச் சிவிகை ஒன்றில் அவளை ஏற்றினன். தத்தை ஆயமகளிர் சூழ விழாவிற்குப் புறப்பட்டாள். இதற்குள் சிவேதன் மூலமாகப் 'பத்திராபதி' என்ற இலக்கணக் குறைவில்லாத பெண் யானையை உதயணனுக்கு அனுப்பி அதிலேறி வருமாறு பிரச்சோதனன் சொல்லிவிட்டிருந்தான். உதயணனுடன் வயந்தகனும் வர, இருவருமாக நீர் விழாவிற்குப் புறப்பட்டுச் சென்றனர். நகர நம்பியர் மன்னவன் தங்கியிருந்த சோலையில் கூடி ஆரவாரம் செய்தனர். நீராடுவதற்கு முன் அரசன் பலவகைத் தானங்களைச் செய்தான். பொன்னும் மணியும் முத்தும் வாரி வாரி வழங்கப் பெற்றன. நீராட்டு ஆரம்பமாகியது. உதயணன் தன் பொறுப்பிலிருந்த அரசகுமரரை மனம் விரும்பிய இடங்களிற் சென்று ஆடுமாறு கூறிவிட்டுத் தான் ஓர் பாங்கரிற் சென்றான். மன்னவன் தலைப்புனல் ஆடியபின், மக்கள் நீராடத் துறைகளில் இறங்கினர். அரசனைப் போல் மக்களும், 'ஏழைகளே இல்லாமல் செய்து விடுவோம்' என உறுதி கொண்டாரோ என ஐயுறும் வண்ணம் கொடைத் தொழில் புரிந்தனர். கொடுப்போர் தொகை பெருகிற்றே ஒழியக் கொள்வோர் யாருமில்லை. ஏனென்றால் கூடியிருந்த எல்லோருமே கொடுக்கும் ஆற்றலுடையோரே அன்றி, வாங்கும் ஏழ்மையுடையோர் எவரும் இல்லை. நீராட்டு விழாவின் ஆரவாரக் காட்சிகள் காணுமிடமெல்லாம் தென்பட்டன. யானைகளும் குதிரைகளும் நெருங்கின. ஏற்றி வந்த மகளிர் அஞ்சி ஓட, தான் மதங்கொண்டு பொய்கையொன்றில் வீழ்ந்து கலக்கியது ஓர் களிறு. நீராடுங்கால், பொன்னரிமாலை தன் முதுகிற் புடைப்பக் கணவன் தட்டி அழைக்கின்றான் என்று திரும்பி நோக்கி ஏமாந்தாள் ஓர் இளநங்கை. கள் விற்கும் வாணிக மகள் ஒருத்தி தனது வெள்ளி வள்ளத்தை ஒரு புறம் வைத்துவிட்டு ஏதோ கவனமாக இருந்தாள். அப்போது ஒரு குரங்கு அதை எடுத்துக் கொண்டு மரக்கலத்தின் கூம்பில் ஏறியது. அது சந்திரனைக் கைப்பற்றிக் கொண்டு வானில் ஏறும் தெய்வ மகளிர் தோற்றம் போலிருந்தது. தன் எதிரே வந்த அந்தணன் ஒருவனை, 'மதுவுண்பதிலுள்ள இழிவென்ன? நீ ஏன் அதை உண்ண மாட்டேனென்கிறாய்? தக்க காரணம் கூறு. இல்லையானால் நின்னைத் தொட்டு விடுவேன்' என்று மிரட்டினான் ஒரு குடியன். எட்டி குமரன், ஒருவன் இன்னிசை வீணை வாசித்தான். மயிலொன்று தோகை விரித்தாடியது. அறச்சாலைகளில் அந்தணர் உண்டி நுகர்ந்தும் நுகர்வித்தும் அறநெறி பேணினர். மகளிர் குரவையொலி ஒருபுறம் இனிமை செய்தது. தன் மெல்லிய வெண்பட்டாடையை நீரிற் பறிகொடுத்த பெண்ணொருத்தி நுரையை ஆடையென்று கையால் அரித்து, அஃது ஆடையின்மையின் வெட்கிதலை குனிந்தாள். கள் குடியன் ஒருவனும் அவன் காதலியும் ஒருபுறம் ஊடல் நாடகம் நடத்தி ஊர் சிரிக்கச் செய்து கொண்டிருந்தனர். சேனை வாணிகன் மகள் அணிந்திருந்த பொன்னரி மாலை நீரோடு போயிற்று. அதை அவளருகில் நீராடிக் கொண்டிருந்த மைத்துன முறைமையனான மன்னன் கைப்பற்றி, அவளை மெல்லத் தழுவி அம்மாலையை எடுத்துக் கொணர்ந்து அணியத் தலைப்பட்டான். அவள் நாணி விலகினள். அது கண்டு அவன் 'நீ விலகினால் மாலையைத் தொலைத்த செய்தியை எல்லோரிடமும் கூறிவிடுவேன்' என்று பயமுறுத்தி அவளை இசையச் செய்தான். இவ்வாறு பல்வகை இன்ப நிகழ்ச்சிகளுடன் நீராட்டு விழா இனிது நடந்து கொண்டிருந்தது. தோணியேறி நதியினிடையே சென்று நகர நம்பியரும் நங்கையரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து விழாவிற்கு ஒரு தனி அழகைக் கொடுத்தனர். பேதை முதல் பேரிளம் பெண்டிர் ஈறாக எழுபருவ மகளிரும் நீராட்டின்பந் திளைத்தனர். இதழ்கள் சூழ்ந்த அல்லிக் கொட்டை போல ஆயமகளிர் புடைசூழத் தத்தை நீராடத் துறை சேர்ந்தாள். அவளுடைய நீராடல் தொடங்கியது. |