13. காப்பது என் கடன்

     எங்கும் கலவரம் மிகுந்து காணப்பட்ட அத்தருணத்தில் வாசவதத்தையின் நினைவு வரப்பெற்ற பிரச்சோதனன் திடுக்கிட்டு, 'யாது செய்வது' எனத் திகைத்தான். உடனே உதயணனைப் பற்றிய கருத்து எழுந்தது. தன் மாணாக்கியாகிய தத்தையைக் காப்பது உதயணன் கடனெனச் சிலர் மூலம் அவனுக்குச் செய்தி சொல்லி அனுப்பினான் பிரச்சோதன மன்னன். பிரச்சோதனன் தனக்கு அனுப்பிய செய்தி கேட்டு, கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததென மகிழ்ந்தான் உதயணன். தத்தையைக் கைப்பற்றத் தானே அவன் அங்கே நிற்கிறான்? தக்க செய்தியை மன்னனும் அனுப்பிவிட்டான். இனிச் சற்றளவு தடையும் இருக்க நியாயமில்லை. 'வானவெளி இடிந்து வீழினும் வீழ்க, மன்னர் தத்தையைப் பற்றிச் சிறிதும் கலங்க வேண்டா. அவளைக் காப்பது என் கடன்' என்று மறுமொழி கூறி அனுப்பிவிட்டுத் தத்தை நீராடும் துறை நோக்கிப் பத்திராபதியை விரைவாகச் செலுத்தினான் உதயணன்.

     தத்தை நீராடும் துறையை அடைந்த உதயணன், "இனி இவள் இங்கே சிறிது நேரமும் தங்குதல் நன்றன்று. என்னுடன் வருக! பிடியேற்றிச் சென்று தத்தையைக் காப்பது என் கடனென ஆணையிட்டிருக்கிறார் அரசர்" என்று அவள் ஆயத்தாரை நோக்கிக் கூறினான். அதைக் கேட்ட வாசவதத்தை நாணமும் மகிழ்ச்சியும் கலந்து கால் நிலங்கிளைப்பக் காதலுணர்வு மேலிடத் தலைகுனிந்து நின்றாள். நிறைக்கும் நாணத்திற்கும் அவளுள்ளே ஒரு பூசல் நடந்த வண்ணமிருந்தது. உதயணனை நினைத்தாலோ நெஞ்சம் உருகியது.

     ஆனால் அவனோடு எப்படி யானையில் ஏறிப் போவதென நாணம் தடுத்தது. காஞ்சனமாலை என்ற தோழி தத்தையைத் தன் கைகளால் தாங்கிய வண்ணம் பிடியின் மீது ஏற்ற அருகே அழைத்து வந்தனள். தத்தையைக் கைகொடுத்து யானை மேலே தூக்கிப் பிடரியின் மீது ஏற்றிக் கொண்டான் உதயணன். ஒருவரை ஒருவர் கைப்பற்றிய போது அவர்களுக்குள் ஏதோ புரிய முடியாத இன்ப மயக்கம் புகுந்து விளையாடியது. பூங்கொடி ஒன்றை மேலே தூக்குவது போன்ற பொலிவையும் மென்மையையும் உதயணன் உணர்ந்தான். மனத்திலே கோயில் கொண்ட காதலனின் கரங்கள் மேலே எடுத்தணைப்பதைத் தத்தை உணர்ந்தாள். பிடியானை நடந்தது. உதயணன் ஊறேதுமின்றி வெற்றியுற்ற பெருமிதம் கொண்டான்.

     தத்தைக்குத் துணையாகக் காஞ்சனமாலையும் பிடியில் ஏறிக் கொண்டாள். அப்போது வயந்தகன் தன் கையில் கோடபதி என்ற யாழுடன் வந்து நின்றான். தத்தை உதயணன் வடிவழகை நோக்கி வியந்த வண்ணம் இருந்தாள். அப்போது தத்தையைக் கண்டு பேச வருபவள் போல சாங்கியத் தாய் அங்கே வந்தாள். யூகியின் அங்க அடையாளங்களை அவள் பால் விவரித்து, மேலே நிகழ வேண்டிய திட்டங்களை விரிவாக எழுதியுள்ள ஓலையொன்றை யூகியிடம் அளிக்குமாறு அவளிடம் உதயணன் தந்தான். இது மிக மறைமுகமாக நடந்தது. பிறரறியாதபடி ஓலையைப் பிடியின் மேலிருந்து கீழே நழுவவிட்டான் உதயணன். வயந்தகன் சாங்கியத் தாயிடம் அதை எடுத்துச் சேர்ப்பித்தான். சாங்கியத் தாய் யூகிக்கான திட்டங்களும் சூழ்ச்சியும் அடங்கிய ஓலையைக் கொண்டு சென்று மறைந்தாள். செல்லும் போது தத்தையிடம் கண்கள் நீர் பெருக்க அவள் விடை பெற்றுக் கொண்ட காட்சி மறக்க முடியாதது. வயந்தகனும் ஏறிக் கொண்ட பின் பிடியைத் தன் நாடு செல்லும் பெருவழி நோக்கி விரைவாக நடத்தினன் உதயணன். இதுவரை ஒன்றும் புரியாமல் அரசனாணையால் தத்தையை உதயணன் காத்தற்காகப் பிடியேற்றுகிறான் என்று எண்ணியிருந்த பிரச்சோதனனின் வீரர் இப்போது திகைப்புடன் திடுக்கிட்டனர். யூகியின் வீரர்களுக்கும் உதயணன் போக்கைத் தடுக்க முன் வந்த உச்சயினி வீரர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. போராகவும் மாறி நிகழ்ந்தது. பிடியின் மேல் தத்தை, காஞ்சனமாலை, வயந்தகன் இவர்களுடன் விரைவிற் சென்று கொண்டிருந்த உதயணனின் முன்னே வராகனென்ற பிரச்சோதனனுடைய வீரன் எதிர்ப்பட்டான். அவ்வீரன் தன்மேல் சந்தேகமுற்று ஏதேனும் ஊறு செய்தலும் கூடும் என்றெண்ணி உதயணன் அவனை நோக்கி, "வராக! நம்மைச் சுற்றிப் போரிட்டுக் கலகம் விளைவிப்பவர்கள் மாறுவேடத்திலுள்ள திருடர்களாகவும் இருக்கலாம். எதற்கும் நீ என்னுடன் ஆயுதபாணியாகப் பிடியின் மேல் வருவது நல்லது" என்றான். உதயணன் கூறியவற்றை உண்மை என்று நம்பிய வராகன் பிடி மீதேறுவதற்காகத் தன் வில்லையும் அம்பையும் உதயணனிடம் கொடுத்துவிட்டு நெருங்கினான். வில்லும் அன்பும் தன் கைக்கு வரப்பெற்ற உதயணன், 'இனி இவனாற் பயமில்லை!' என்று ஏறவந்த வராகனுக்கு இடங்கொடாமற் பிடியை வேகமாகச் செலுத்திக் கொண்டு போய்விட்டான். வராகனும் வீரர்கள் சிலரும் உதயணன் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டனர். அவந்தியர் வேந்தனாகிய பிரச்சோதனன் திரு முன்னர்ப் போய் யாது கூறுவது என்றஞ்சி மயங்கினர். இரு படைக்கும் இடையே போர் நடந்தது. கொற்றவன் ஆணை தப்பிய கொடுமைக்கு மிகவும் வெருவிய அவந்தி வீரர் ஒன்று கூடி, உதயணன் செல்லும் பிடியைப் பின்பற்றி ஓடினர். அவ்வாறு ஓடினவர்களை வத்தவ நாட்டு வித்தக வீரர், வாள் கொண்டு எதிர்த்தனர். 'வத்தவன் வழிப்பட்டனள் தத்தை என்ற செய்தியை மன்னன் அறியின் என் செய்வானோ?' என நடுங்கிய வீரர், இப்போரில் உயிரே போயினும் கவலை இல்லை எனத் துணிந்து முன் வந்தனர்.

     முன்னேற்பாட்டுடன் அங்கங்கே ஒளிந்திருந்த யூகியின் வீரர்கள் ஐந்நூற்றுக்கு மேற்பட்டவர் வெளிவந்து பிரச்சோதனன் ஆட்களோடு போரிட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் போர் நிகழ்ந்தது. யூகியின் படையினர் வீசிய வாள்களில் பகைவர் சிரங்கள் பனங்கனிக் குலையிலிருந்து உதிர்வது போல உதிர்ந்தன. குருதி வெள்ளம் ஆறெனப் பரந்தது. அப்போது யூகி தன் வாளுடன் அங்கே தோன்றி உதயணனைச் சந்தித்தான். பிடி மீது விரைவாகச் சென்று கொண்டிருந்த உதயணன் பிடியை நிறுத்தி யூகியை வரவேற்றான். உதயணனுக்கு இறுதி வரை வெற்றியை அளிக்குமாறு அவன் ஏறிக் கொண்டிருந்த யானையாகிய பத்திராபதியை வாழ்த்தினான் யூகி. நண்பர்கள் மேலே நடக்க வேண்டிய திட்டங்களை ஒருவருக்கொருவர் அறிவித்துக் கொண்டனர். சாங்கியத் தாயைப் பற்றி யூகிக்கு விரிவாகக் கூறி, அவளை மேல் நடக்கும் வினைகளில் நம்பிப் பயன் கொள்ளலாம் என்றான் உதயணன். அவளைப் பற்றிய விவரங்கள் யாவும் அடங்கிய ஓலையொன்றையும் உதயணனிடமிருந்து யூகி பெற்றுக் கொண்டான். பின்னே துரத்தி வரும் படை நெருங்கி விடவே யூகியிடம் விடைபெற்றுப் பிடியை விரைவாகச் செலுத்தினான் உதயணன். யூகி மக்கள் கூட்டத்தில் கலந்து மறைந்தான். முன்னர் ஏமாற்றப்பட்ட வராகன் இப்போது உதயணனைப் பின் தொடர்ந்த படையினர் முன்னணியில் நின்றான். போகின்ற போக்கில் உதயணன், "பிரச்சோதனனிடம் இதுவரை நான் சிறைப்பட்டிருந்தேன். இழிவு கருதாத என்னைத் தன் மகட்கு யாழ் கற்பிக்கச் செய்தான். கற்பித்தேன். இவள் மேற் காதல் கொள்ள நேர்ந்தது. இன்று அவன் வாயாலேயே இவளைக் காக்குமாறு கூறினான். இவளை என் நாடு கொண்டு சென்று மணக்கக் கருதினேன். அம் மன்னனுக்கு என் வணக்கத்தைக் கூறுக" என்று இவ்வாறு வராகனுக்குக் கேட்கும்படி உரைத்து விட்டுச் சென்றான் உதயணன். வராகனுக்கு உதயணனாற் கூறப்பெற்ற இம் மறுமொழி கேட்டுத் தத்தை சற்றே சினங்கொண்டாள். காஞ்சனமாலையைக் 'கீழே இறங்கி விடுக' என்னும் குறிப்புத் தோன்ற நோக்கினாள். அக் குறிப்பை அறிந்து கொண்ட காஞ்சனமாலை, "கொடியூசலில் தோழியர் கைகோத்தாடினும் குரவைக் கூத்து ஆடினும் எம் தலைவி நடுங்குவாள். சூறாவளிக் காற்றெனச் சுழன்று ஓடும் பிடியால் அவளுக்கு அச்ச முண்டாகிறது. பின் தொடரும் எங்கள் படையை ஒரு பொருட்டாக மதியாமல் நீவிர் பிடியை இத்துணை விரைவிற் செலுத்துவது என் கருதியோ? எங்கள் மனம் பயப்படுகிறது" என வணங்கிய கையுடன் உதயணனைக் கேட்டாள். அவர்களுடைய சந்தேகம் உதயணனுக்கும் புரிந்தது.

     காஞ்சனமாலையின் வினாவுக்கு ஏற்ற விடை கூறித் தேற்றினான் உதயணன். "அரசன் தத்தையைக் காக்குமாறு என்னைப் பணித்த செய்தியை அறியாது இந்த வீரர்கள் சந்தேகமுற்றுப் போருக்கு வருகின்றனர். இவர்களை வென்று மேற்செல்லுதல் எனக்கு அரிய வினையன்று. எனவே நீங்கள் இருவரும் சிறிதும் அஞல் வேண்டா" என்றான் உதயணன். இவ்வாறு கூறிய மொழிகளைக் காஞ்சனை தத்தைக்கு உரைத்து ஆறுதல் கொள்ளுமாறு செய்தாள். தத்தையின் ஆயத்தைச் சேர்ந்த கொட்டந்தாங்கிய பணிப்பெண்கள், அடைப்பை மகளிர், சுவரி மகளிர், பணிசெய்கூனர், தோழியர், செவிலித்தாயார், சஞ்சுகிமுதியர் முதலியோர் யாது செய்வதென்றறியாது அலமரல் எய்திப் புலம்பினர். நீராட வந்த மக்கள் கூட்டம் துயராடித் துன்பத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தது. இஃது இவ்வாறு இருக்க உதயணனிடம் ஓலை பெற்றுச் சென்ற சாங்கியத் தாய் பெரிய படைப் பரப்பின் நடுவே மாறுவேடத்துடன் திரிகின்ற யூகியை அவன் உடல் அடையாளங்களாற் கண்டு அறிந்தாள். தன்னை அறிந்து நிற்கும் சாங்கியத் தாயைக் கூர்ந்து நோக்கிய யூகி உதயணன் கூறியிருந்த விவரங்களால் அவளை அறிந்து கொண்டான். மேலே நிகழ இருக்கும் திட்டங்களைப் பற்றி முடிவு செய்வதற்காக அருகில் இருந்த ஒரு குயவன் மனையில் மறைந்து இருவரும் ஆலோசித்தனர். ஆலோசனை முடிந்த பின் மீண்டும் தாம் சந்திக்கும் காலத்தை ஒருவருக்கொருவர் அறிவித்துக் கொண்டு பிரிந்து சென்றனர்.