16. வேகத்தில் விளைந்த சோகம் அழகிய பெருவயல்களிலே கொட்டும் பறையொலிக்குப் பயந்த பசிய கண்களையுடைய எருமை தன் கன்றை நினைந்து மடி நிறைந்த இனிய பாலை, தாமரைப் பொய்கையின் விரிந்த இலைகளில், எழில் இள அன்னங்களோடு நாரைக் குஞ்சுகளும் உண்ண எழுந்து வருமாறு சொரிந்தன. பெரிய பெரிய பாத்திகளில் ஓங்கி வளர்ந்த கரும்பின் மடல்களிலே கட்டப்பட்ட செறிந்த இனிய தேன் கூட்டில் இருந்து ஒழுகும் செந்தேன், கீழே பக்கத்தில் கவின் பெறக் காட்சி தரும் தாமரைச் செம்மலரில் தீயை வளர்ப்பதற்குச் செய்யும் ஆகுதி போலப் பொழிந்தது. இடமகன்ற சோலைகளிலே வெள்ளிக் கும்பமெனக் குலைதள்ளிய பாளைக் கமுகும், பச்செனப் பருத்த மூங்கிலும், பழுத்த கதலி கொத்துக் கொத்தாக மரங்களும், குலைத் தள்ளிய தென்னை மரக்கூட்டமும், இனிய தீம் பலாவும், தே மாமரங்களும், புன்னையும், செவந்தியும், பொன்னென இணர்ந்த பூங்குவை ஞாழலும், இன்னும் பலபல மரங்கொடி செடிகளின் ஈட்டமும் கலந்த தோற்றம் எழுமையும் நுகர அரிய இன்பக் காட்சியாக விளங்கின. பகற்போதிலே கதிரவன் கிரணங்களும் உள் நுழைய இயலாத செறிவு, பொருந்தி இருண்டவை, அச்சோலைகள். கழனிகள் தோறும் முற்றிச் சாய்ந்திருந்த விளை நெற்கதிர்கள் காற்றோடு அசைந்தாடின. அங்கங்கே உழவர் கூட்டம் செய்யும் ஆரவாரமும், களங்களில் நெல்லடிப்போர் செய்யும் களிச் செயல்களும் காட்சியளித்தன. வேளாள மகளிர் வளர்க்கும் இல்லுறை கிளிகளின் மழலைச் சொல் விருந்து ஒரு புறம்; தண்ணுமையும் தடாரியுமாக முழவுடன் முழக்கும் ஆடவர் நாதவெள்ளம் ஒருபுறம்; களை கட்டும் கடைசியர்கள் வரிப் பாடல் பாடும் இசை விருந்து இன்னொரு புறம். இத்தகைய மருத நிலப் பெருவழியில் பத்திராபதி உதயணன் முதலியோரைச் சுமந்து விரைவாகச் சென்று கொண்டிருந்தது. முல்லைக் கொடிகள், முல்லை நில மகளிர் இடைபோலக் கொடி பரப்பி, நகை போல மலர்ந்து விளங்கின. குரவு, தளவு, குருந்தம் முதலியன மெல்ல மலர்ந்து தோன்றின. அவைகள் மலரும் செவ்வி நோக்கிக் காத்திருந்த வண்டுகள், மகிழ்ந்து தேன் விருந்துண்ணப் புறப்பட்டன. தினையும் சோளமும் வித்திட்டு விளைக்கும் முல்லை நில மக்கள் அவற்றை வரியாகப் பயிரிட்டிருந்த காட்சி கவின் செறிந்து தோன்றியது. அந்நிலத்தில் விளையத்தக்க வேறு சில பல தானியங்களையும் பயிரிட்டிருந்தனர். முல்லை நில மக்கள் முயற்சி மிக்க பண்பினர் என்பதை அது விளக்கியது. கொல்லைப் புறங்களிலே மேய்ந்து கொண்டிருந்த முல்லை நிலத்துப் பசுக்கள் மடிநிறைந்த பாலைச் சேற்று நிலத்தில் பொழிந்தன. இரலையும் பிணையுமாகிய மான்கள் முசுண்டைக் கொடியின் பசிய தழையை மேய்ந்த வண்ணம் திரிந்தன. காயாம் பூவும் கொன்றையும் கவினிப் பூத்து விளங்கும் பொழில்களில் இடைஇடையே சிறுசிறு தோட்ட வீடுகள் விளங்கின. குற்றமற்ற வாழ்க்கை கோவலர் வாழ்க்கை. பசுக்களைக் காத்து ஓம்பிப் பயன்பெறும் வாழ்க்கை அல்லவா அது? அத்தகைய நல்வாழ்வு படைத்த முல்லை நிலத்தைக் கடந்து குறிஞ்சி நிலப் பகுதியை அடைந்தது பிடி. நருமதையின் அக் கரையை அடைந்ததும் வயந்தகன் நீரில் நனைந்திருந்த தனது உடலைத் துவட்டிக் கொண்டு பிடி மீது ஏறிக் கொண்டான். வானத்தில் விளங்கிய நட்சத்திரங்களைக் கூர்ந்து நோக்கிய பின் அப்போது இரவு எவ்வளவு நேரமாகி இருக்கும் என்பதைக் கணக்கிட்டுக் கூறினான் வயந்தகன். பிடியின் நிலையும் அது கடந்த ஆற்றின் அளவும் இவையாவும் சேர்ந்து, வயந்தகனுக்கு ஓருண்மையைப் புலப்படுத்தின. எப்படியும் பத்திராபதி இன்னும் ஓரிரண்டு காதம் செல்வதற்குள் தங்களைக் கைவிட்டுவிடும் என்பதுதான் அந்த உண்மை. நருமதை யாற்றிற்கு அப்பால் ஒரு பெரிய பாலைவனம், சற்றுத் தொலைவில் இருந்தது. அந்தப் பாலை நிலம் பயங்கரத்திற்குப் பேர் பெற்றது. அங்கங்கே தோன்றிய பருக்கைக் கற்களின் கரடுமுரடான தோற்றமும் ஒரே மணற் பெருவெளியும் அந்தப் பாலைவனத்திற்கு வந்துவிட்டோம் என்பதை வயந்தகனுக்கு அறிவுறுத்தின. அவன் மனத்திற் சில அச்சங்கள் எழுந்தன. 'சுமந்து வந்த யானை விரைவில் சோந்துவிடும்' என்பதைத் தவிர, அந்தப் பாலை நிலவழியின் பயங்கரமும் வயந்தகனுக்கு நினைவு வந்தது. கொடுமை, கொலை, கொள்ளை இவைகளுக்கு அந்தப் பாலை நிலவழி இருப்பிடம். அங்கே வசிக்கும் ஆறலை களவர் ஈவிரக்கமற்ற கொலைஞர். வழி ஓரமாக அமைந்திருந்த பாழடைந்த துர்க்கை கோயிலில் பதுங்கியிருந்து வழியில் வருவோர் போவோரைக் கொள்ளையடித்துத் துன்புறுத்துவது அவர்கள் வழக்கம். கொல்லப்பட்ட உடல்களைப் பருக்கைக் கற்களால் மூடிவிடுவார்கள். வெட்டுண்ட உடல்களைக் குழி தோண்டிப் புதைத்துவிடுவர். அந்த வறண்டு போன பாலை நிலத்தைப் போன்றதுதான் அவர்கள் உள்ளமும். கள்ளி, முள்ளி முதலிய பாலை நிலத்து மரங்கள் இடையிடையே வளர்ந்திருந்தன. குளிர் பருவத்திலும் வெப்பக் கொடுமை தாங்க முடியாத இடம் அது. இத்தகைய துன்பங்கள் நிறைந்தது ஆகையால் பொழுது புலர்வதற்குள் நல்ல இருளிலேயே அதைக் கடந்துவிட வேண்டுமென்று கூறினான் வயந்தகன். அதைக் கேட்ட உதயணன் பத்திராபதியை முன்னிலும் விரைவாக முடிக்கினான். பிடி காரெனக் கடிது சென்றது. அதன் அசுர வேகத்தில் வயந்தகன் கையிலிருந்த கோடபதி என்ற யாழ் கீழே வீழ்ந்து மூங்கிற் புதர் ஒன்றிலே சிக்கிக் கொண்டது. யாழ் விழுந்ததை வயந்தகன் உதயணனிடம் கூறிக் கொண்டிருக்கும் போதே, பிடி நூறு விற்கிடை தூரம் முன்னால் கடந்து சென்றுவிட்டது. பிரமசுந்தர முனிவரால் தனக்கு அளிக்கப்பட்ட அற்புதமான தெய்வீக யாழாகிய கோடபதியை உதயணன் இழந்துவிட்டான். யாழைத் தவறவிட்ட இடத்தைக் கடந்து மிக்க தொலைவு வந்து விட்டதை அறிந்த உதயணன், "தந்த தெய்வம் தானே தரும்! அதற்காக மீண்டும் வழியில் திரும்ப முடியாது" என்றுரைத்து விட்டுத் தயங்காமல் மேலே பத்திராபதியைச் செலுத்தினான். கோடபதிதான் உதயணனுக்குத் தெய்வ யானையைப் பணிபுரியச் செய்தது. நளகிரியின் மதத்தை அடக்கிப் பிரச்சோதனனிடம் நன்மதிப்புப் பெறவும், தத்தைக்கு யாழ் கற்பித்துக் காதல் கொள்ளவும் செய்தது. அந்த அரும் பொருள் கெட்டுப் போய் விட்டது. ஆனாலும் உதயணன் மனங் கலங்கினானில்லை. சிறு துயருக்கு வருந்திப் பெருந் துயரத்திற்கு நடுவே அகப்பட்டுக் கொள்ளக் கூடாதல்லவா? எனவே மனந்தேறி மேலே சென்றனர். வேகத்தில் விளைந்த சோகங்களை வேகத்தாலேயே மறக்க முயன்றான் உதயணன். |