17. பிடியின் வீழ்ச்சி கோடபதியை இழந்த துயரத்தை மறக்க அவர்கள் முயன்று கொண்டிருக்கும் போது வேறோர் புதிய துயரம் புகுந்து வாட்டியது. எண்பதெல்லை அளவு ஓடிய பின் வேகம் மெலிவடைந்து தளர்ந்தது, பிடியின் நடையில் வேகம் குறைந்தது. கால்களும் துதிக்கையும் விதிர் விதிர்ப்பத் தள்ளாடியது பத்திராபதி. அதன் நிலையை உய்த்துணர்ந்த உதயணன் பாலை நிலத்தில் எஞ்சியுள்ள இருபது எல்லைத் தொலைவும் எப்படியாவது அதைக் கொண்டே கடந்து விட வேண்டும் என்று எண்ணித் துரிதப்படுத்தினான். இப்போதோ, இன்னும் சற்று நேரத்திலோ பிடி இறந்து போவது உறுதி என்பதையும் அங்கை நெல்லியென அவன் அறிந்தான். யானைகளின் இயல்பைப் பல நூல்களின் வாயிலாகத் தேர்ந்திருந்த உதயணன், இந்த உண்மையை அறிந்திருந்தது வியப்பிற்குரிய செய்தி அல்ல. ஆனால், செத்துக் கொண்டிருக்கும் அந்தப் பிடியின் துணைகொண்டே பாலை நிலத்தையும் கடந்து பிரச்சோதனனுடைய நாட்டு எல்லையையும் நீங்கியதுதான் வியப்பிற்குரியது. பிடியைப் பற்றியிருந்த நோய் 'காலகூடம்' என்னும் சுடுநோயாகையால் இனிமேல் அது பிழைக்க எவ்வகையிலும் வழியே இல்லை. பிரச்சோதனனுடைய நாடாகிய ஐந்நூற்றெல்லை நில அளவையும் கடந்து நோயின் கடுமை மிகுந்த பிடி, 'யான் இனி உயிர்விடுவேன். நின்னுயிர்க்கு ஏதும் துன்பம் நேராமல் காத்துக் கொணர்ந்து விட்டேன். சுகமாக நீ இனி மேலே செல்லலாம்' என்று கூறுவது போலத் தன் உடல் வெடவெடக்கச் சோர்வு எய்தி நின்றது. ஏற்கனவே பிடியின் நிலையை நருமதையாற்றங் கரையில் தீர்மானித்திருந்த வயந்தகன் என் செய்வது என்னும் குறிப்புத் தோன்ற உதயணன் முகத்தைப் பார்த்தான். "பிடி நம்மை விரைவிற் கைவிட்டுவிடும் போலிருக்கிறது" என்றான் உதயணன். "தெப்பத்திலே நீரிடைச் செல்வோரை அது கவிழ்ந்து இடையிலேயே கைவிடுவது போல ஆயிற்று நம் கதியும்" என்று உதயணன், வயந்தகனை நோக்கி மேலும் கூறிவிட்டுக் காஞ்சனையை விரைவிற் பிடியின் பின்புறமாக இறங்கும்படி வேண்டினான். வயந்தகன் முன்பே இறங்கிவிட்டான். தன் வில்லையும் அம்பறாத் தூணியையும் இறுக்கிக் கட்டிக் கொண்டு மற்றொரு கையால் சோர்ந்த நிலையிலிருந்த வாசவதத்தையை மார்புறத் தழுவிக் கொண்டே கீழே இறங்கினான் உதயணன். அக்காட்சி, கரிய மலையொன்றிலிருந்து நிலத்திலே அர்த்தநாரீசுவரனாகச் சிவபெருமான் இறங்கி வருவது போலிருந்தது. அப்போது உமாதேவியாரை ஒரு புறத்தே கொண்டு தோன்றும் முக்கட் கடவுள் போலக் காட்சி கொடுத்தான் உதயணன். இவர்கள் இவ்வாறு இறங்கியதும், பிடி மெல்லக் கீழே வீழ்ந்தது. பக்கத்து விலாப்புறம் தரையிலே படும்படி சாய்ந்து வீழின், அங்கே நின்று கொண்டிருக்கும் உதயணன் முதலியோருக்குத் துன்பம் வருமென்றெண்ணிக் கால்களைத் தரையில் பாவி அமர்வது போல வீழ்ந்தது. அது உதயணனுக்குப் பக்கத்தில் சாய்ந்து வீழ்ந்தது, அவனை வணங்குவது போலவும் விடை பெற்றுக் கொள்வது போலவும் இருந்தது. நீண்ட கரிய பெரும் பட்டுப்பை ஒன்றிலிருந்து பவழத்தைக் கொட்டுவது போல அதன் துதிக்கையில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. பிடி வீழ்ந்த வகையும் திசையும் கொண்டு, தனக்கு முதலில் தன் நாடு செல்லும் வழியில், துன்பம் வந்து பின் நீங்குமென்று உதயணன் அறிந்தான். அதன் சாவு உறுதி என்று தெரிந்து கொண்டதும், அது அணிந்திருந்த மணி, புரோசைக் கயிறு, முதுகிலிட்டிருந்த மெத்தை, மேற்போர்த்த பட்டுக்கலிங்கம் இவைகளை உதயணன், வயந்தகன் இருவருமாகக் களைந்தனர். அப்படிக் களையும் போது, மிகுந்த அன்புடன் அதன் மத்தகத்தைக் கைகுளிரத் தடவிக் கொடுத்தான் உதயணன். அப்போது கீழ் வானத்தில் விடிவெள்ளி மேலே எழுந்து தோன்றிக் கொண்டிருந்தது. விடிவதற்கு இன்னும் இரண்டு நாழிகைப் பொழுது இருக்கும். தத்தையும் காஞ்சனமாலையும் துயிலின்றி மிகச் சோர்வாகக் காணப்பட்டனர். "அவர்கள் இருவரையும் இங்கே பக்கத்தில் எங்காவது ஓரிடத்தில் துயிலச் செய்து நீ காவல் புரிக" என்று வயந்தகனுக்கு ஆணையிட்டுவிட்டு இறந்த பத்திராபதி நற்கதி அடைதற் பொருட்டுச் செய்யவேண்டிய கடன்களைச் செய்யலானான் உதயணன். பக்கத்திலே இருந்த நீர் நிறைந்த அழகிய தாமரைப் பொய்கையொன்றில் போய் நீராடினான். நீராடிய பின் தூய உள்ளத்தோடு தன் வழிபடு தெய்வத்தைக் கருதி நீர்க்கடனையும் நியமக்கிரியைகளையும் செய்து முடித்தான். பின்னர் வயந்தகன் இருக்குமிடம் சென்று தத்தை, காஞ்சனை இவர்களோடு பகற்பொழுதில் மறைந்து வசிப்பதற்கு உரிய ஓர் இடத்தைக் காண வேண்டுமென்று அவனுடன் கலந்து ஆலோசித்தான். உதயணனுடைய இன்ப துன்பங்களில் வயந்தகனுக்கு முற்றிலும் பங்கு உண்டு. அவர்களிடையே இருந்த நட்பு அவ்வளவிற்கு உயர்ந்தது. உதயணன் கூறியதைக் கேட்ட வயந்தகன், அந்த இடத்தினுடைய நிலையையும் அங்கிருந்து தாங்கள் உடனே புறப்பட்டுச் செல்ல வேண்டிய அவசியத்தையும் விவரமாகக் கூறினான். "மனநெகிழ்ச்சி என்பது சற்றளவுமில்லாத கொடுவினை வாழ்க்கையை உடைய வேடர்கள் பயிலும் இடம் இது. அன்றியும் இரண்டு நாடுகள் சந்திக்கும் எல்லைத்தானமாகிய இங்கிருப்பது துன்பத்தை வலிதின் அழைப்பது போலாகும். வாசவதத்தை வருந்தினாலும் துன்பத்தைப் பொருட்படுத்தாது மேலே நடத்தலே சரி" என்று வயந்தகன் சொல்லி முடித்தான். உதயணன் காஞ்சனையிடம் அதைக் கூறி நடந்து புறப்படுமாறு வேண்டினான். வாசவதத்தையின் நிலையோ எழுந்திருந்து மேலே காலை ஓர் அடிகூட எடுத்து வைக்க ஏற்றதாக இல்லை. நடைப் பழக்கமே அறியாத பூங்கொடி தத்தை காதலன் மனக் கருத்தறிந்து நடக்க உடன்பட்டு எழுந்தாள். தனது பஞ்சினும் மெல்லிய மலரடிகள் சிவப்பத் தத்தை காஞ்சனையைக் கைபற்றிக் கொண்டு துவளத் துவள மெல்ல நடந்தாள். வயந்தகன் வழிகாட்ட உதயணன் முன் சென்றான். நடக்க நடக்கத் தத்தையின் மெலிவு அதிகப்படுவது கண்ட உதயணன், வயந்தகனை உடனடியாக அங்கே தங்குவதற்கு ஓரிடம் பார்க்கப் பணித்தான். வயந்தகன் சுற்றும் முற்றும் பார்த்த வண்ணம் ஓரிடம் தேடினான். வாசவதத்தை சோர்ந்து உட்கார்ந்து விட்டாள். பொழுது விடிந்து வெயிலும் ஏறத் தொடங்கியிருந்தது. பக்கத்தில் பாறை பாறையாகக் கிடந்த கல் பகுதியினிடையே ஒரு நீர்ப் பொய்கை இருந்தது. அதன் கரையை ஒட்டிக் கோங்கிலவ மரங்கள் சில அடர்த்தியாக வளர்ந்திருந்தன. புதர்போலச் செறிந்து விளங்கிய அந்த இலவமரக்கூட்டம், வயந்தகன் நோக்கில் விழுந்தது. 'மறைவாகத் தங்கியிருப்பதற்கு ஏற்ற இடம் அதுதான்' என்று தீர்மானம் செய்து கொண்டவனாய் அவன் அதை நெருங்கினான். மரங்களின் மேலே செந்நிறப் பட்டால் கூடாரம் அமைத்தது போலச் சிவந்த இலவம்பூ கொத்துக் கொத்தாகப் பூத்திருந்தது. புதருக்கு உட்புறம் ஒரு குகை போல, இருப்பதற்கு வசதியாக அமைந்துள்ளமையைக் கண்ட வயந்தகன், அங்கே உதிர்ந்திருந்த சருகுகளையும் முள் பொருந்திய கிளைகளையும் ஒருபுறமாக ஒதுக்கிவிட்டுப் பசிய இலைகளைக் கொண்டு தைத்து ஆக்கப்பட்ட விரிப்பு ஒன்றைத் தரையில் விரித்தான். அதற்குள் உதயணனும் தத்தை, காஞ்சனை இவர்களும் அங்கே வந்தனர். யாவரும் அந்த நாளின் நண்பகற் பொழுதை மறைவான அவ்விடத்தில் கழிக்க விரும்பினர். பக்கத்திலிருந்த பொய்கையின் குளிர்ச்சி அங்கே அவர்களுக்குச் சற்றே சோர்வை நீக்கி இன்பம் அளித்தது. |