25. சோகமும் அசோகமும் உஞ்சை நகரத்து நதிக்கரையிலிருந்து பத்திராபதியில் உதயணன் தத்தை முதலியவர்களுடன் ஏறிப் புறப்பட்ட பின் நிகழ்ந்தவற்றை அவனிடம் கேட்டறிந்தாள் சாங்கியத்தாய். அவற்றோடு உதயணன் சந்திப்பை முடித்துக் கொண்டு தத்தையைக் காணச் செல்லலாம் என்று எழுந்த அவளை, உதயணன் கேட்ட அந்தக் கேள்வி திகைக்கச் செய்து விட்டது. "ஆமாம்! யூகியும் உங்களோடு உஞ்சையிலிருந்து திரும்பி வந்திருக்க வேண்டுமே? எங்கே அவன்? நலமாகத்தானே இருக்கிறான்?" இந்தக் கேள்வி சாங்கியத் தாயால் விடை கூற முடியாதது அல்ல. ஆனால் இதற்கு அவள் கூற வேண்டிய விடை இன்னும் சில திட்டங்கள் முடிந்த பின் சொல்லக் கூடியதாக இருந்தது. என்ன சொல்லவேண்டும் என்பதைத் தான் யூகி முன்பே கூறியிருந்தானே? அதை இவ்வளவு விரைவாக வெளிப்படுத்த நேருமென்று அவள் எதிர்பார்க்கவில்லை. ஒரு கணம் என்ன கூறுவது என்ற திகைப்பும் சிந்தனையும் அவளுக்கு ஏற்பட்டன. உடனடியாக உதயணனுக்கு அவள் விடை கூறவில்லை. சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்த பின் யூகியைப் பற்றிய வேறு சில செய்திகளை விவரித்துக் கொண்டே பொழுதைக் கழித்தாள். 'யூகி தன்னுடன் வந்தானா? அவன் நலமா? இல்லையா?' என்ற விவரங்கள் எதுவுமே இல்லாமல் சென்றது அவள் பேச்சு. "விரைவிற் சென்று நம் அரசனை அடையுங்கள்" என்று எனக்கும் ஏனையோர்க்கும் கூறிவிட்டுத் தான் பின்னால் வந்து சேர்வதாக யூகி கூறினான், எனச் சாங்கியத் தாய் இறுதியாகச் சொல்லி முடித்தாள். அதைக் கூறியதும் யூகி கூறிய பொய்ச் செய்தியைப் பின்பு கூறலாமென்ற கருத்துடன் வாசவதத்தையைப் பார்க்க அவனிடம் விடைகொண்டு எழுந்தாள். தளர்நடைப் பருவம் முதல், உஞ்சை நகரில் உதயணனனோடு பிடியேறி வந்தது முடியத் தத்தை தன் நெஞ்சைத் திறந்து பேசுவதற்கு ஏற்ற ஒரே ஒருத்தியான செவிலித் தாயாக இருந்தவள் சாங்கியத் தாய்தான். அவளைக் கண்டவுடன் அப்படியே தன் மெல்லிய இடை வளைய இறுகத் தழுவிக் கொண்டாள் வாசவதத்தை. திடீரெனச் சந்தித்த சந்திப்பின் இன்ப மிகுதியால் இருவருக்குமே கண்ணில் நீரும் துளித்தது. உஞ்சை நகரிலிருந்து வாசவதத்தை வந்த பிறகு அரண்மனையில் தந்தை தாய் முதலியோர் அடைந்த நிலையை அவள் கேட்கவே, சாங்கியத் தாய் அவற்றைக் கூறினாள். அப்போதுதான் தாய் தந்தையரையும் ஏனைச் சுற்றத்தினரையும் எண்ணிப் புலம்பினாள் வாசவதத்தை. அவளைத் தேற்றி ஆறுதல் கூறிய சாங்கியத் தாய், "திருமணமான மங்கல மகளிர், இவ்வாறு பெற்றோரை எண்ணி வருந்துதல் கூடாது" என்று அவளுக்குக் கூறி அரண்மனைப் பூங்காவிலிருக்கும் மிக உயர்ந்த செய்குன்று ஒன்றிற்கு அவளை அழைத்துச் சென்றாள். அந்தச் செய்குன்றிலிருந்து உஞ்சை நகரத்தைத் திசை சுட்டிக் காட்டித் தத்தையினுடைய மனக் கலக்கம் தீருமாறு மேலும் பல தேற்றுரைகளைக் கூறினாள் சாங்கியத் தாய். தத்தை மனந்தேறிய பின் உருமண்ணுவா, வயந்தகன், எல்லோரும் யூகியோடு கூடிச் செய்திருக்கும் திட்டங்களை அவள் துணுக்குறாதபடி மெல்லக் கூறினாள். எல்லாவற்றையும் கேட்டு முதலில் திகைத்த வாசவதத்தை, இறுதியில் உதயணன் நலங்கருதி யூகியின் திட்டப்படி நடக்க ஒப்புக் கொண்டாள். உறுதிப் பொருளை விளக்கும் நன்னெறி நூல்களை முயன்று கற்று வருந்தித் தவம் செய்வோன் பின்னர் நற்பயன் பெறுவது போல, யூகியின் திட்டத்தால் வருத்தமடைவதற்குரிய பல நிலைகள் நேரிடுமாயினும் பின்னால் நலமே விளையும் என்று தத்தை மனந்தெளிந்தாள். அந்தத் திட்டப்படி தானும் ஒத்துழைப்பதாக ஒப்புக் கொண்டாள் அவள். தத்தையின் இசைவு பெற்ற சாங்கியத் தாய் அவளை மீண்டும் விரைவில் சந்திப்பதாகக் கூறி விடைபெற்றுக் கொண்டு யூகி தன்னிடம் குறிப்பிட்டிருந்தபடி, அவன் ஒளிந்து வாழும் மறைவிடத்துக்குச் சென்றாள். உதயணனைக் கண்டதையும் அவன் கேட்ட கேள்விகளையும் வாசவதத்தை தங்கள் திட்டத்திற்கு இசைந்ததையும் யூகியிடம் சாங்கியத் தாய் விளக்கமாகக் கூறினாள். அவற்றைக் கேட்ட யூகி, தான் இறந்துவிட்டதாக எழுப்பிய செய்தியைக் குறிப்பாகச் சாங்கியத் தாய் மூலம் உதயணனுக்கு அனுப்பத் தீர்மானித்தான். சித்திரம் வரைவதற்கு ஏற்ற பலகை ஒன்றில் உதயணனுடைய உருவத்தை வரைந்து, அந்த ஓவியத்தை யூகி, வயந்தகன், இடவகன், உருமண்ணுவா என்ற நான்கு நண்பர்களையும் நான்கு கண்களாக உருவகப்படுத்தி, மேற்கண்ணாகிய யூகி அழிந்து போனதற்கு அறிகுறியாக அக்கண்ணை ஒளி மழுங்கிப் போனதாக அமைத்து, உதயணனிடம் அப்படத்தைக் காட்டுமாறு சாங்கியத் தாயிடம் கொடுத்து அனுப்பினான். படத்தைக் கண்டவுடன் குறிப்பைத் தெரிந்து கொண்டு உதயணன் வினாவினால் செய்தியைச் சொல்லி விடுமாறும் சாங்கியத் தாய்க்குக் கூறினான். அவள் அந்தப் படத்தைப் பெற்றுக் கொண்டு சயந்தி நகர் சென்றாள். சாங்கியத் தாய் படத்தோடு நகர அரண்மனையை அடைந்தாள். உதயணனும் வாசவதத்தையும் ஒருங்கே அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில் படத்தை உதயணனிடம் அளித்துக் காணும்படி வேண்டிக்கொண்டாள். ஓவியக்கலை நுட்பங்களை நன்கு உணர்ந்தவனாகிய உதயணன் படத்தை எழுதியவன் செய்திருக்கும் உருவகங்களையும் மேற்கண் ஒளி மழுங்கி இருந்த குறிப்பால் தோன்றும் செய்திகளையும் புரிந்து கொண்டான். யூகிக்கு ஏதோ துயரப்பொறை அவன் உள்ளத்தை அழுத்தியது! ஒன்றும் புரியாமல் கையில் அந்த ஓவியத்துடன் அப்படியே மலைத்துப் போய் உட்கார்ந்து விட்டான் உதயணன். அப்போது யூகியின் ஓவியக் குறிப்பை உதயணன் ஓரளவு அறிந்து கொண்டிருக்கிறான் என்ற செய்தி எதிரே அமர்ந்திருந்த சாங்கியத் தாய்க்குத் தெரிந்தது. உடனே அவள், "யூகி உஞ்சையிலிருந்து வரும் வழியில், அவல் விக்கி இறந்து போனான்" என்று கூறிவிட்டாள். அதைக் கேட்ட அக்கணத்தில் இயக்கும் பொறி இழந்த எந்திரப் பாவை போலச் சோர்ந்து கீழே வீழ்ந்தான் உதயணன். வாசவதத்தையும் அச்செய்தி கேட்டுத் துடிதுடித்தாள். முதல் நாள் எல்லாத் திட்டங்களையும் கேட்டிருந்தும் இப்போது பெண்மைக்குரிய பேதைமையால் இப் போலிச் செய்தியை உண்மையென நம்பி அவள் அழுவதைக் கண்ட சாங்கியத் தாய் கள்ளமற்ற அவள் உள்ள நிலையை விளங்கிக் கொண்டாள். நண்பர்கள் ஓடோடி வந்து உதயணன் மயக்கத்தைத் தீர்த்தனர். மயக்கம் தெளிந்த உதயணன், யூகி தனக்குச் செய்த பேருதவிகளைச் சொல்லிப் புலம்பினான். இளமையில் தானும் யூகியும் பழகிய உழுவலன்பு முறையைக் கூறிக் கதறினான். உருமண்ணுவா மெல்ல உதயணனை நெருங்கி ஆறுதல் கூறி அவனைத் தேற்றத் தொடங்கினான். யூகி இறந்தான் என்ற செய்தி அறிந்த பின்னர், உருமண்ணுவா எவ்வளவோ தேறுதல் கூறியும் உதயணன் ஆறாமல் எப்போதும் யூகியின் நினைவாகவே புலம்பிக் கொண்டிருந்தான். நாள்தோறும் தேய்பிறையைப் போலத் துயரால் வாடிவரும் உதயணனை, எவ்வாறு துன்பத்தை மறக்கச் செய்வது என்று உயிர் நண்பர் ஏதும் புரியாமல் இருந்தனர். அமைச்சரையும் மந்திரச் சுற்றத்தினரையும் கூட்டி அரசனின் அவலந்தீர என்ன செய்வது எனச் சிந்தித்தனர். உதயணன், யூகி இறந்த துன்பத்தைப் பொறுக்க முடியாமல் அரை உடலாக இளைத்துப் போய்விட்டான். கடைசியில் நண்பர் யாவரும் சேர்ந்து அவனுடைய துயர் தீர்க்கும் அந்தப் பொறுப்பும் உருமண்ணுவாவினாலேயே நிறைவேற்றப்பட வேண்டுமென்று அவனை வேண்டிக் கொண்டனர். உருமண்ணுவாவும் ஒப்புக் கொண்டனன். பலவகை இன்ப நுகர்ச்சிகள், பகை மன்னர்களோடு போர் புரிந்து வென்று அவர்கள் முடி வணங்கச் செய்தல், சிற்றரசர்களைத் திறை இடச் செய்தல், காடு செய்து விலங்குகளை வேட்டையாடுதல், இத்தகைய நிகழ்ச்சிகளில் சில திங்கள் இடைவிடாமல் உதயணனை ஈடுபடுத்தி யூகி இறந்த துயரை ஒருவாறு அவன் மறக்கும்படி செய்து வந்தான் உருமண்ணுவா. சில முறை வாசவதத்தையோடு உதயணனையும் பக்கத்திலுள்ள மலைச்சாரல் ஒன்றில் பொழில் விளையாட்டுக்கு அழைத்துச் சென்றும் வேறு பல நுகர்ச்சிகளில் ஈடுபாடு கொள்ளச் செய்தும் துயர் மறக்கச் செய்துவிட்டான். இதன் பின்னர் உருமண்ணுவா, உதயணனுக்கு யூகியைப் பற்றிய நம்பிக்கை ஒன்றையும் உண்டாக்கிவிட வேண்டுமென்று கருதித் தோழர்களோடு கலந்து சிந்தித்துப் பின்வரும் முடிவுக்கு வந்தான். உதயணனையும் ஏனையோரையும் இலாவாண மலைச்சாரலில் உண்டாட்டு விழாவிற்காக அழைத்துச் சென்று, அங்குள்ள முக்கால நிகழ்ச்சிகளையும் அறிந்து சொல்லவல்ல முனிவரொருவர் மூலம் அவனுடைய வாழ்வில் இதுவரை நடந்தவற்றையும், இனி நடக்கப் போவனவற்றையும் அவனுக்குக் கூறச் செய்து, இடையே யூகி எப்படியும் உயிர்பெற்று வருவான் என்பதைப் போன்ற ஒருவகை நம்பிக்கையையும் அம் முனிவர் வாயிலாகவே அவனுக்கு ஏற்படுத்தி விட வேண்டும் என்பது தான் உருமண்ணுவாவின் அந்த முடிவு. அதற்கு மற்றவர்களும் இசைவு தெரிவித்தனர். தோழர்கள் சம்மதம் பெற்ற உருமண்ணுவா, உதயணனை அணுகி இதனை உரைத்தான். உதயணன் முதலில் "அப்படி முக்காலமும் அறிந்து கூறும் முனிவர்களும் இருக்கிறார்களா?" என்று சந்தேகப்பட்டு வினாவினான். 'அவனுக்கு நம்பிக்கை ஏற்படும்படியாக அந்த வினாவுக்கு விடை கூறவேண்டும்' என்று நினைத்த உருமண்ணுவா, "நீயும் உன் தாயும் விபுலமலைச் சாரலில் சேரக முனிவரிடம் வாழ்ந்து வந்ததையும் பின் உன் மாமனுக்குரிய ஆயர்குலத்து ஆட்சி பெற்று இருந்ததையும் முதலில் அறிய முடியாதபடி உன் தந்தை சதானிகன் துன்புற்றார். கோசாம்பியிலிருந்து சதானிக மன்னர் இப்படி ஒரு முனிவனை அடைந்து, வனத்தில் அவனிடம் கேட்டுத்தான் முக்கால நிகழ்ச்சிகளையும் அறிந்து கொண்டார். அதுவும் அல்லாமல், யூகி இறந்ததாக எழுந்த செய்தி ஒருவேளை பொய்யாகவும் இருக்கலாம். அதனால் எதற்கும் இலாவாண மலைச்சாரலில் உண்டாட்டு விழாவிற்காகத் தங்கி அப்படியே அந்த முனிவரையும் பார்த்து வரலாம்" என்று கூறினான். உருமண்ணுவா தக்க முறையில் கூறிய இந்த விடை உதயணன் உண்டாட்டு விழாவிற்கு உடன்படச் செய்தது. இலாவாண மலைச்சாரலில் உண்டாட்டு விழா நடைபெறப் போவதை நகரமெங்கும் அறிவிக்கச் செய்தனர். உண்டாட்டு விழாவிற்கு உதயணன் உடன்பட்டால், யூகியின் இரண்டாவது சூழ்ச்சியாகிய வாசவதத்தையை உதயணனிடமிருந்து பிரிக்கும் செயலும் அந்த விழாவிலேயே எளிதில் முடியுமென்று நண்பர்கள் மகிழ்ந்தனர். விழாவிற்குத் தேவையான நுகர் பொருள்களைச் சேகரித்தார்கள். விழாச் செய்தி அறிந்த நகர மக்கள் களிப்பில் ஆழ்ந்தனர். இயற்கை அழகு இலாவாண நகர மலைச் சாரலுக்கே தனி உரிமை உடையது என்று சொல்லும் படியாக இருக்கும் அதன் நிகரற்ற வனப்பு. இலாவாணத்தின் சாரலிலே இனிய நீர்ச்சுனைகளும் கலகலவென்ற ஒலி பரப்பிப்பாயும் கான்யாறுகளும் சோவென்ற போரொலியும் கறங்கிவீழும் அருவிகளும் நிறைந்திருக்கும். புகுந்தவர் திரும்ப விரும்பாத பேரெழில் வளம் படைத்தது அது. பலவகை மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப் பசுமை கொழிக்கும், நறுமண மிக்க ஒருவகைக் கத்தூரி விளையும் தகர மரம் என்னும் விருட்சங்கள் எங்கும் நாசிக்கு மண விருந்து நல்கும். அந்த மலைச்சாரலில் தக்க முனிவர் வாழும் தாபதப் பள்ளியும் கற்றோர் வாழும் கடவுட் கோட்டங்களும் எங்கும் நிறைய உண்டு. இத்தகைய பெரு வனப்பு வாய்ந்த இலாவண மலைச் சாரலில் சயந்தி நகரப் பெருமக்கள் கூடிக் குழுமினர். தேரும் வையமும் சிவிகையும் வண்டியும் ஆகிய பலவகை ஊர்திகளில் ஏறி வந்திருந்தனர் அவர்கள். நகர், மக்களை முற்றிலும் இழந்து தனிமையுற்றது என்னும்படியாக அவ்வளவு மக்களும் மகளிரும் மைந்தருமாக மலைச்சாரலுக்கு வந்திருந்தனர் என்றால் அது மிகையாகாது. பாடி வீடுகள் பல அமைக்கப் பெற்றன. மலைச் சாரலில் உள்ள சோலைகள் தோறும் அங்கங்கே பல வெண்ணிறத் துணிகளில் அமைத்த பாடி வீடுகள் முழு நிலவு போலத் தோன்றின. சுனையிலுள்ள குவளை மலர்களைக் கொய்து மகிழ்ந்தனர் சில மகளிர். தத்தம் கை விரல்களைச் செம்மை நிறத்தால் தோல்வியுறச் செய்வன போல முறுக்கேறிச் சிவந்திருந்த காந்தள் மொட்டுக்களைப் பறித்து அழகு பார்த்தனர் வேறு சில மகளிர். பொன் போன்ற நிறத்துடன் பூத்துக் குலுங்கும் வேங்கை மலர்களைப் பறித்துத் தம் காதல் மகளிர்க்கு விரும்பி அளித்தனர் சில ஆடவர். பின்பு ஆடவரும் மகளிருமாகப் பல்வகை விளையாட்டுக்களை ஆடினர். ஊசலாடுவோரும் பூக்களிற் செய்த பந்தை அடித்து விளையாடுவோருமாகப் பலர் பல விளையாடல்களை மேற்கொண்டனர். மயிலும் கிளியும் குயிலும் பயிலும் சோலைகளில் தழை கொடிகளால் கயிறிட்டு ஊஞ்சலாடிய காட்சி எழில் மிகுந்து விளங்கியது. வளம் பொருந்திய மலையில் வாழும் வளம் பொருந்திய மக்கள் இன்னும் எண்ணற்ற இன்பங்களை நுகர்ந்தனர். வேனிற் காலத்தில் பொழில்களில் வாழும் வாழ்க்கையின் அருமையைப் 'பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை' என்று புகழ்ந்து கூறியுள்ளனர். அத்தகைய பேரெழில் வாழ்க்கையாகத்தான் இவர்களுடைய வாழ்வு அமைந்தது. மக்கள் மலைச் சாரலில் இவ்வாறிருக்க உதயணன் அவன் நண்பர், வாசவதத்தை முதலியோர் பரிவாரங்கள் புடைசூழ மிக்க ஆரவாரத்துடன் மலைச் சாரலிலுள்ள ஒரு பெரிய வனத்தில் வந்து தங்கினர். அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு எதிரே ஒரு தவப்பள்ளி இருந்தது. அதில் பேராற்றல் மிக்க சிறந்த முனிவரொருவர் வாழ்ந்து வந்தார். உதயணன் அந்த முனிவரைக் கண்டு தான் குறிகேட்க விரும்புவதாகத் தக்கவர்கள் மூலம் அவருக்குக் கூறி அனுப்பினான். முனிவர் மகிழ்ந்து குறி கூற உடன்பட்டவுடன் உதயணன் அங்கே சென்றான். அந்த முனிவரின் தவப்பள்ளிக்குச் செல்லும் வாயிலில் மணல் முற்றத்தின் மேல் அழகாகத் தழைத்து வளர்ந்திருந்த அசோக மரம் ஒன்று விளங்கியது. அந்த அசோக மரத்தின் நிழலில் அவனை எதிர் கொண்டு இருக்கச் செய்தார் முனிவர். சோகம் நிறைந்த உதயணன் அசோக மரத்தின் கீழே அமர்ந்திருந்தான். அப்போது உதயணன் கையில் வைத்துக் கொண்டிருந்த வெள்ளிய இதழ்களையுடைய நறுமண மலர் ஒன்று கையிலிருந்து நழுவிக் காலடியில் வீழ்ந்தது. அவன் பசுமையான மரத்தின் அடியில் இருப்பதையும் மலர் வீழ்வதையும் உற்று நோக்கித் தமக்குள் ஏதோ முடிவு செய்தவர் போலக் காணப்பட்டார் முனிவர். முனிவர் என்ன கூறப் போகிறார் என்று எதிர்பார்த்து அமைதியாக உட்கார்ந்திருந்தான் உதயணன். யூகியைப் பறி அவர் கூறும் செய்தி நலம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதே அவனுடைய மனத்தினுள் இருந்த ஒரே எண்ணமாகும். அவன் மனக் கருத்தையும் முகக் குறிப்பையும் பிறவற்றையும் ஊடுருவித் தெரிந்து கொண்ட பின் முனிவர் அவனிடம் கூறத் தொடங்கினார். "நீ இப்பொழுது பசுமரம் ஒன்றை அடைந்து அதன் அடியில் வீற்றிருக்கிறாய். ஆகையால் உன்னோடு உயிர் நட்புப் பூண்ட ஒருவன் கருதுவது போல் இறந்துவிடவில்லை. உண்மையில் அவன் உயிரோடு இருக்கிறான். ஆனாலும் வேறோர் துயர் இப்போது உனக்கு நேர இருக்கிறது. உன் கையிலிருந்த வெண்மலர் நழுவிக் கீழே விழுந்ததால் உனக்கு அளவற்ற இன்பமளித்து வரும் ஒரு பொருள் உன்னிடமிருந்து விலகி மறைந்துவிடும். மலர் உன் காலடியிலேயே வீழ்ந்திருத்தலினால் அதை நீ எடுத்துக் கொள்ளவும் முடியும். அது போல இழந்த அந்தப் பொருள்களையும் பின்பு நீ விரைவில் அடைந்து விடலாம். நின் ஆட்சிக்குரிய தலைநகரையடைந்து பேரரசனாக வாழும் ஆட்சிப்பேறு உன்னை நோக்கி விரைவில் வந்து சேரும்" என்று அந்த முனிவர் உதயணனுக்கு விவரமாகச் சொன்னார். சாரணர் தரும உபதேசத்தையும் அவனுக்கு உள்ள வாழ்நாள் அளவையும் அதற்குள் அவனடையக் கூடிய பேறுகளையும் மேலும் அந்த முனிவர் அவனுக்குக் கூறினார். அவற்றை எல்லாம் கேட்ட உதயணன் யூகியை அப்போதே உயிருடன் காண முடிந்தது போல மகிழ்ந்தான். முனிவரைப் பாராடிக் கொண்டாடி அவருக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்தான். யூகியைப் பற்றியும் ஏனையச் செய்திகளைப் பற்றியும் தனக்கிருந்த மனக் கவலையின் சுமை, முனிவர் கூற்றுக்குப் பிறகு கழிந்து போனது போன்ற உணர்வு அப்போது அவனுக்கு ஏற்பட்டது. அவன் ஓரளவு நிம்மதியடைந்தான். பழைய கவலைகள் நீங்கின. கவலை நீங்கவே முழு மகிழ்ச்சியுடன் உண்டாட்டு விழாவில் கலந்து கொண்டு அதைச் சிறப்புற நிகழ்த்தலாயினான். நண்பரும் துயர் நீங்கி உவகை பெற்றனர். இலாவாண மலைச் சாரலில் பொழுது இன்பமாகக் கழிந்து கொண்டிருந்தது. மலைச்சாரலில் அங்கங்கே இருந்த சுனைகளில் நீராடியும் சுவையுணவுண்டும் பூப் பல கொய்தும் பொழுதைக் கழித்தனர். மூங்கில் வெடித்ததனால் வீழ்ந்த முத்துக்களை பதித்துச் சிற்றில் இழைத்து விளையாடினர் சிறுமகளிர். குரவம் பூவைக் கொய்து, பாவை விளையாட்டும் விளையாடினர். அம்மானைப் பாடலும் வள்ளைப் பாடலும் பாடிச் சிலர் ஆடிப் பலர் கண்டுங் கேட்டும் மகிழ்ந்தனர். காதலர் இருதலைப் புள்ளின் ஓருயிர்போல இணைபிரியாத உண்டாட்டு அயர்ந்து உவந்தனர். இவ்வாறு உண்டாட்டு விழா நிகழ்ந்து வரும் நாள்களில் ஒருநாள் மலைச்சாரல் வழியாகத் தன் போக்கில் உலவச் சென்ற உதயணன் மிக்க அழகான இயற்கைச் சூழ்நிலையில் அமைந்திருந்த ஒரு தவப்பள்ளியை அடைந்தான். அவ்வாறு உலாவிய வண்ணம் சென்று கொண்டிருந்த அவனோடு இடையிலே தத்தை, காஞ்சனமாலை, வயந்தகன் முதலியோரும் வந்து சேர்ந்து கொண்டனர். மிக்க எழிலோடு கூடிய பல சோலைகளை அந்த ஆசிரமத்தைச் சுற்றிக் கண்ட வாசவதத்தையும் காஞ்சனையும் உதயணனிடம் கூறிவிட்டுச் சோலைகளின் வளங்காணச் சென்று விட்டனர். உதயணன் வயந்தகனுடனே அங்கிருந்த பெரிய அசோக மரமொன்றின் நிழலில் அமர்ந்தான். உடன் வந்த இரண்டோர் படை வீரர்களும் தனியே அகன்று போயிருந்தனர். மலைச் சாரலின் அழகைக் கண்டு மகிழ்வதற்கு வாய்த்த அந்த இனிய சூழ்நிலையில் அங்கே தனியாக உதயணன் அமர்ந்திருந்தான். சோகங்கள் நீங்கப் பெற்றவன் அப்போது அசோக மரத்தடியிலே அமர்ந்தது மிகவும் பொருத்தமாக இருந்தது. |