34. சிந்தை புகுந்த செல்வன் பதுமாபதியின் ஆர்வமும் அவசரமும் தூண்ட அரண்மனையை விட்டுப் புறப்பட்ட வண்டி அவள் மனத்தைப் போலவே காமன் கோவிலை நோக்கி வேகமாகச் சென்றமையால் சற்றைக்கெல்லாம் அங்கே போய்விட்டது. சித்திரமாடத்தைக் கடந்து காமன் கோவிற் பூங்காவினுள் சென்று வண்டி நிற்கவும் பதுமை இறங்கினாள். அவளுடைய இணை விழிகள் புன்னை மரத்தடியில் அவனைத் தேடின. அப்படித் தேடி விரைந்த அவள் பார்வை மரத்தடிக்குச் செல்லு முன்பே நடுவில் அங்கிருந்து வந்த அவன் பார்வையைச் சந்தித்தது. ஆம்! உதயணன் அங்கே புன்னை மரத்தடியில் முதல் நாளைப் போலவே இவள் வரவு நோக்கிக் காத்துக் கொண்டிருந்தான். இரண்டும் இரண்டும் நான்கு கண்கள் கலந்து உறவாடிக் காதல் கதைகள் பேசின. தன் விருப்பத்தை அவனுக்குக் குறிப்பினால் வெளிப்படுத்த எண்ணிய பதுமை, புன்னை மரத்திற்கு எதிரே இருந்த ஒரு சிறு மண்டபத்தில் தன் தோழி அயிராபதியுடன் ஏறி அவள் கழுத்தைத் தன் கைகளால் வளைத்துக் கட்டித் தழுவிக் கொள்வது போலப் பாவனை செய்தாள். குறிப்பாகக் கூறிய இந்தப் பாவனையின் உட்பொருளை உணர்ந்து கொண்ட உதயணன், தன் பக்கத்திலிருந்த வயந்தகனுடைய பரந்த மார்பைத் தன் தோள்களால் தழுவிக் குறிப்பினாலேயே தன் விருப்பத்தையும் அவளுக்குப் புலப்படுத்தினான். பேசாத உறவுகள், குறிப்பையே மொழியாகக் கொண்டு பேசின. இவ்வாறு சுற்றியுள்ள மற்றயவர்கள் அறியா வண்ணம் காதலர் இருவரும் தத்தம் விருப்பத்தைப் பரிமாறிக் கொண்டனர். பதுமையின் பக்கத்தில் அவள் தோழி அயிராபதியும் உதயணனின் பக்கத்தில் அவன் நண்பன் வயந்தகனும் இந் நாடகத்திற்குத் துணையாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டனர். ஆனால் உண்மையில் இதனால் நிகழ்ந்த சங்கேதத்தை அயிராபதியோ, வயந்தகனோ அறியவில்லை. அவ்வளவு நயமாக இருவரும் தத்தம் குறிப்பை விருப்பமாகப் பாவனை செய்து காட்டியிருந்தனர். இது முடிந்ததும், பதுமாபதியின் நோக்கம் உதயணன் கையில் இருந்த பூம்பந்து ஒன்றின் மேற்சென்றது. அப்பந்தின் அழகு அவளை வெகுவாகக் கவர்ந்தது. உதயணன் கையிலிருக்கும் அப் பூந்தளிர்ப் பந்தைக் காணும் போக்கில் கள்ளத்தனமாக அவன் தோள்களின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் பதுமை. பக்கத்திலிருக்கும் வயந்தகனோடு பேசுவது போல ஓரக் கண்ணால் எதிர்ப்புறம் மண்டபத்தில் உள்ள பதுமையை விழுங்கிவிடுபவன் போலப் பார்த்துக் கொண்டிருந்தான் உதயணன். ஆனால் எவ்வளவு நேரம் கள்ளக் கண் நோக்கம் நிகழ முடியும்? உலகத்திலுள்ள எல்லாக் காவியங்களும் காதலனுக்கும் காதலிக்கும் நடுவில் ஒரு தோழனையும் தோழியையும் படைத்து வைத்திருக்கின்றனவே! என் செய்வது? புன்னை மரத்தடியில் நிலைத்திருந்த பதுமையின் பார்வை, சிரித்துக் கொண்டே தன்னை நோக்கும் அயிராபதியின் கண்களைக் கண்டதும் தான் இங்கே மீண்டன. விண்டு சொல்லவோ, மறைக்கவோ முடியாத நிலையில், "அயிராபதி, அதோ அந்தப் புன்னை மரத்தடியில் நிற்கிறானே ஓர் அந்தண இளைஞன்! அவனைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமோ? அவன் யார்?" என்று தோழியை விளித்துக் கேட்டு வைத்தாள். பதுமையின் சமத்காரமான இந்தக் கேள்விக்கு அயிராபதியும் பதில் கூறினாள். "நேற்று நாம் இங்கே வந்து விழா வழிபாட்டை முடித்துக் கொண்டு புறப்பட்டோம் அல்லவா? அப்போது நான் சற்றுப் பின் தங்கிப் புறப்படும்படி நேர்ந்தது. நான் இங்கிருந்து புறப்படும் போது இவன், இந்த மரத்தடியிலிருந்து என் பக்கமாக வந்தான். நான் பரிவுடன் இவனை விசாரித்தேன். இவன் தன் பெயர் மாணகன் என்றும் தன் தோழர்களோடு மகத நாட்டின் அழகைக் கண்டு போக வந்ததாகவும் என்னிடம் சொன்னான். நீ விழா இறுதி நாளில் செய்யும் தானத்தை அடைவதற்காக இவனும், இவன் தோழர்களும் இன்னும் இங்கே தங்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது!" என்று பதுமையிடம் கூறத்தக்கனவற்றை மட்டும் சுருக்கமாகக் கூறினாள் அயிராபதி. இதைக் கேட்டபின் தன் சிந்தை குடி புகுந்த செல்வன் இன்னான் என்பதைப் பதுமை தெரிந்து கொண்டாள். அவளுக்கு இப்போது வேறு ஓர் ஆசை தோன்றியிருந்தது. அதுதான் உதயணன் கையிலுள்ள பூம்பந்தை எவ்வகையிலேனும் பெற வேண்டும் என்ற ஆசை. "அவன் கையிலிருக்கும் பூம்பந்தை நீ பார்த்தாயோ அயிராபதி! பந்து புனைவதில் அவனுக்கு நல்ல தேர்ச்சி இருக்கும் போல அல்லவா தோன்றுகிறது! குறிப்பினால் மற்றவர்கள் அறியாதபடி அந்தப் பந்தை நீ எனக்கு வாங்கிக் கொடேன்!" என்ற குழைவோடு கூடிய வேண்டுகோளைப் பதுமை அயிராபதியிடம் வெளியிடவும், அயிராபதி அவளுடைய அந்த ஆசையை நிறைவேற்ற ஒப்புக் கொண்டாள். பதுமையின் மனம் மகிழந்தது. பதுமையிடம் அவள் கூறியவாறே பந்தை வாங்கி அளிப்பதாக ஒப்புக் கொண்ட அயிராபதி, மண்டபத்திலிருந்து கீழிறங்கி உதயணனுக்குச் சற்றே அண்மையில் வந்து நின்று கொண்டு, அவன் கையிலிருக்கும் பந்தைப் பதுமைக்குக் கொடுக்குமாறு கைகளாலும் கண்களாலும் சைகை காட்டிக் குறிப்பைப் புலப்படுத்தினாள். அவள் குறிப்பை உதயணனும் நன்றாகப் புரிந்து கொண்டான். குறிப்போடு வேறோர் உண்மையும் இப்போது அவன் மனத்தில் உறுதியான நம்பிக்கையைப் பெற்றது. பதுமை தன்னைக் காதலிக்கிறாள் என்ற உண்மைதான் அது. பந்து இரகசியமாகக் கைமாறியது. இப்போது உதயணன் பக்கத்தில் வயந்தகனோடு இசைச்சனும் வந்து சேர்ந்தான். தொலைவில் வரும்போது மரத்தடியிலும் எதிரிலுள்ள மண்டபத்திலும் கண்ணோட்டம் விட்டுக் கொண்டே வந்த அவன், விஷயத்தை ஒருவாறு புரிந்து கொள்ள முயற்சி செய்தான். தோழர்கள் இருவரும் குறும்பும் சந்தேகமும் தோன்றத் தன்னைப் பார்ப்பது கண்ட உதயணன், உண்மையை ஒளிப்பதில் பயனில்லை என்ற கருத்துடன் அவர்களிடம் நிகழ்ந்தவற்றைச் சொல்லத் தொடங்கினான். பதுமாபதி தன் நெஞ்சைக் கவர்ந்ததையும் அவள் நெஞ்சில் தான் குடி கொண்டதையும் நளினமாக எடுத்துக் கூறி முடித்தான். அவன் சொல்லி நிறுத்தவும் இசைச்சன் வாய்விட்டுச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் எவ்வளவோ பொருள் பொதிந்திருந்தது. அவற்றுள் இகழ்ச்சியும் ஒன்று. இசைச்சனுடைய சிரிப்பில் அத்தகைய இகழ்ச்சிக் குறிப்பு இருந்ததை உணர்ந்து கொண்டவன் போலக் கடுமையாக அவனை ஏறிட்டுப் பார்த்தான் உதயணன். அந்தப் பார்வையிற் கனல் பறந்தது. சிரித்தவன் மட்டும் இசைச்சனாக இல்லாமல் வேறொருவனாக இருந்திருந்தால் அந்த அம்புப் பார்வைக்கு உரிய விளைவைப் பெற்றிருப்பான். அவ்வளவு கடுமை அந்த விழிகளில் இருந்தது. இசைச்சன் கூட ஒரு கணம் நடுங்கிப் போனான். பின்பு சமாளித்துக் கொண்டு தான் சிரித்ததன் காரணத்தை விளக்குகின்றவன் போல் உதயணனை நோக்கிக் கூறலானான்: "மகத நாட்டுப் பெண்கள் மனத்தை அவ்வளவு எளிதில் நெகிழவிட்டு விடுபவர்கள் இல்லை! அவர்கள் நெஞ்சு எதற்கும் கலங்காத நிறை உடையது. பெண்களின் நிறை ஒழுக்கநெறி தவறாமல் இருப்பதற்கு, மகத வேந்தன் தருசகன் தன் ஆணைகளை எவ்வளவோ வன்மையாக வைத்திருக்கிறான். அதோ! வழிபாடு செய்ய வந்திருக்கிறாளே அந்தக் கன்னி பதுமாபதி, அவளும் இதற்கு விதிவிலக்கு இல்லை. நெஞ்சழுத்தமும் நிறைவரம்பும் கொண்டவள் அவள். அவளுடைய தோற்றமே இதை வற்புறுத்துவதாக அமைந்திருக்கிறது. மனம் போன போக்கிற் செல்பவள் இல்லை அவள். 'தத்தை தீப்பட்ட துயரும் பிறிவும் பொறாமல், உதயணன் அந்தண வேடங்கொண்டு இங்கே வந்திருக்கிறான்' என்று எவராயினும் அறிந்தவர்கள் அவளிடம் சொல்லியிருக்க வேண்டும்! அல்லது, 'இவர்களைப் பார்த்தால் தானம் பெறக் காத்திருக்கும் அந்தணர் போலத் தெரியவில்லையே? ஏதோ உயர்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தோர் போன்ற எடுப்பான தோற்றமும் ஒளியும் இவர்களிடம் காணப்படுகின்றனவே' என்று அவர்களாகவே சந்தேகங் கொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒரு காரணம் பற்றியே அவள் உன்னை ஆர்வமுடன் கவனித்திருக்க வேண்டும். வேறு எந்தக் காரணத்தாலும், அவள் நெஞ்சு உன்னிடம் நெகிழ்வதென்பது இயலாது. ஒருவேளை நீ கூறுவது போல அவள் உன்னைக் காதலித்தாலும் அது முற்கூறிய சந்தேக உணர்ச்சியுடன் கூட நிகழ்வதாகவே இருக்கும். எனவே, மாறு வேடங்கொண்டு வேற்றுநாடு வந்திருக்கும் நமக்கு, இதனால் துன்பம் வரினும் வரலாம். ஆகவே இந்த விஷயத்தில் நீ கொஞ்சம் ஒடுங்கி இருப்பதே நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது." இசைச்சன் செய்த இந்த நீண்ட சொற்பொழிவு உதயணனுக்கு வேதனையையும் வெறுப்பையும் கொடுத்தாலும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தான். நோக்கில் மட்டும் முன்போலவே இன்னும் கடுமை இருந்தது. இதற்குள் அங்கு வந்திருந்த உருமண்ணுவா, வயந்தகன் முதலிய மற்ற நண்பர்களும் இசைச்சன் கூறியது போலவே கூறி உதயணனை எச்சரித்தனர். இதுவரை அமைதியாக இருந்த உதயணன், தன்னை எவ்விதச் சந்தேகங்களுக்கும் இடமின்றி மெய்யாகவே பதுமை காதலிக்கிறாள் என்பதை அவர்களுக்குப் பிரத்தியட்சமாக நிரூபித்துக் காட்ட விரும்பினான். அதற்கென ஓர் ஏற்பாட்டை முதலில் தனக்குள் தீர்மானம் செய்து கொண்டு அதை அவர்களிடம் கூறினான். கண்வழிக் கலந்து மனத்தின் வழிப் புகுந்து தானும் பதுமையும் பரஸ்பரம் கொண்ட காதலை அவர்கள் அவ்வளவு சாதாரணமாக இகழ்ந்து பேசினதும் உதயணனை மிக்க வருத்தத்தில் ஆழ்த்தியது. "பலவகை மலர்கள், அரும்புகள், தளிர்கள், இவற்றால் ஓர் அழகிய மாலையை என் கையால் தொடுத்து, அதை அவள் காணும் போதே பொய்கைக் கரையில் உள்ள மரமொன்றின் கிளையில் தொங்க விடுகின்றேன். அப்படிச் செய்த பின் நானும் மறைவாக இருந்து கவனிக்கிறேன். நீங்களும் மறைவாக இருந்து கவனியுங்கள். அவள் வந்து நான் தொங்கவிட்ட மாலையை எடுத்து மார்பில் அணிந்து கொள்வாள். அப்போதாவது நீங்கள் என் காதல் இருபுறமும் ஒத்த மெய்க் காதல் என்று ஒப்புக் கொள்வீர்கள் அல்லவா?" என்று உதயணன் கூறிய நிபந்தனை ஏற்பாட்டை நண்பர் வரவேற்று ஒப்புக் கொண்டனர். அவர்கள் சம்மதம் கேட்ட அப்போதே உதயணன் தனக்கு வெற்றி கிடைத்து விட்டது போல மகிழ்ந்தான். பதுமை தன்னைக் காதலிக்கிறாள் என்ற உண்மை அவனுக்குத்தானே தெரியும்! திருடர்கள் குறிப்புத் திருடர்களுக்கே புரிவது போலத்தான், காதலர்கள் குறிப்பும். உதயணன் தன் நண்பர்களிடம் ஒப்புக் கொண்ட ஏற்பாட்டின்படி அன்றலர்ந்த புதிய மலர்களையும் அரும்புகளையும் தளிர்களையும் கொண்டு புதுமையும் அழகும் பொருந்திய மாலை ஒன்றைத் தொடுத்தான். அந்த மாலையுடன், ஓர் இளங்குருத்து வாழை இலையில் அதுவரை பதுமைக்கும் தனக்கும் இடையில் நடந்த காதல் நிகழ்ச்சிகளைக் கை நகத்தால் சித்திரங்களாகக் கீறி, அதையும் கையிற் கொண்டு புறப்பட்டான். சித்திர வண்டியின் திரைச் சீலை விலகியபோது இருவர் கண்களும் சந்தித்த நிகழ்ச்சியில் ஆரம்பித்து, அவள் உதயணனிடம் பந்து வேண்டிக் குறிப்புக் காட்டியது ஈறாக அவ்வளவு நிகழ்ச்சிகளும் இலையில் இடம் பெற்றிருந்தன. புன்னை முதலிய மரங்கள் செறிந்திருந்த மிக அடர்த்தியான பகுதியில் பதுமையின் கண்களுக்குத் தெரியுமாறு, அவளும் காணும்படி அம்மாலையும் வாழை இலையும் ஒரு மரக்கிளையில் கட்டித் தொங்கவிடப் பெற்றன. இது முடிந்ததும், உதயணன் நண்பர் முதலியோர், தனித்தனியே மறைந்திருந்து பதுமையின் வரவை எதிர்பார்த்தனர். மறைவிலிருந்த யாவருடைய கண்களும் நடக்க இருப்பதை ஆவலோடு நோக்கிக் கொண்டிருந்தன. பதுமை தன் ஆயத்து மகளிர் கூட்டத்திலிருந்து விலகி, யாப்பியாயினி என்னும் பார்ப்பனத் தோழியுடன் நீராடுங் கருத்துக் கொண்டு, பொய்கைப் பக்கமாக வந்தாள். முழங்கால் ஆழமுள்ள பொய்கையின் முன்பகுதியிலேயே வெகுநேரம் குழைந்து விளையாடினாள். நீராடி முடிந்த பின் கார்முகில் போல நீண்டு வளர்ந்திருந்த தன் கூந்தலை நீரறப் புலர்த்தினாள். சிற்சில அணிகலன்களையும் அணிந்து அலங்காரம் செய்து கொண்டாள். இவ்வளவும் செய்யும்போதே, அவள் கரங்கள், உதயணன் தனக்காகவே அங்கு வைத்துவிட்டுச் சென்ற கண்ணியை எடுக்கத் துறுதுறுத்துக் கொண்டிருந்தன. சுற்றும் முற்றும் நோக்கிக் கொண்டே பதுமை, புன்னை மரத்தின் மிகத் தாழ்ந்த அந்தக் கிளையை நெருங்கினாள். கிளையில் தொங்கிய வாழை இலையில் சித்திரங்களைக் கண்டு தனக்குள்ளே வெட்கந் தோன்ற நகைத்துக் கொண்டாள். அடுத்த கணம் உதயணன் தொங்கவிட்டிருந்த மாலையை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள். அவள் இவ்வளவும் செய்யும்போது யாப்பியாயினி ஏதோ செயலாகப் பக்கத்தில் சென்றிருந்தாள். அவள் வருவதற்குள், அதே மரக்கிளையில் தன் பெயருடன் கூடிய மோதிரம் ஒன்றையும் மலர்மாலை ஒன்றையும் உதயணனுக்காக எடுத்துக் கொள்ளும்படி பதுமை வைத்தாள். பின் அவசர அவசரமாக மார்பிலணைத்த மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு, தான் பூசிக் கொள்வதற்காக அதனுடன் உதயணன் வைத்திருந்த சந்தனத்தையும் பூசிக்கொண்டு புறப்பட்டாள். இந்தச் செய்கைகளினால் உதயணனையே தழுவிக் கொண்டது போன்ற ஆனந்தம் அவளுக்கு ஏற்பட்டது. இதனால் அவள் உடலெங்கும் இன்பப் பசலை பரந்தது போல ஓருணர்ச்சி தோன்றியது. இவ்வாறு காதல் நிறைந்த உணர்ச்சியோடு புன்னை மரத்தடியைக் கடந்து பொய்கைக் கரைக்குப் பதுமை வரவும் யாப்பியாயினி எதிர்ப்படவும் சரியாக இருந்தது. பதுமையை இந்தக் கோலத்தோடு கண்ட யாப்பியாயினி விளையாட்டாக அவள் பின்புறம் போய் நின்று கொண்டு, அவளை வம்புக்கு இழுக்க ஆரம்பித்தாள்! "பெண்ணே! நீ யார் தெரியவில்லையே? என் தோழி ஒருத்தி இங்கே இருந்தாள். பதுமாபதி என்பது அவளுடைய பெயர். அவளும் உன் போலவே தோற்றமுடையாள்! இப்போது அவள் எங்கே சென்றாளோ? காணோம்!" என்று பதுமையை நோக்கிக் குழைந்து வினவினாள் யாப்பியாயினி. அவள் வினாவில் குறும்பு விளையாடியது! இகழ்ச்சியும் குறிப்பாக ஒலித்தது! பதுமை இதற்கு விடை சொல்லவில்லை. நாணித் தலை குனிந்தாள். அவள் கால் விரல்கள் நிலத்திற் கிளைத்துக் கோலமிடத் தொடங்கின. யாப்பியாயினி பதுமையை நோக்கிக் கலகலவென்று நகைத்தாள். இங்கே இப்படியிருக்க, இவைகளையெல்லாம் மறைந்திருந்து நன்றாக நோக்கிய உருமண்ணுவா அங்கே தன் நண்பர்களிடம் மகிழ்ச்சியோடு கூறிக் கொண்டிருந்தான். உதயணன் உட்பட அநேகமாக எல்லோருமே மறைந்திருந்து இந்நிகழ்ச்சியைக் கண்டவர்கள் தாம். இருப்பினும் உருமண்ணுவா ஆர்வம் மேலிடத் தான் கண்டவற்றைக் கூறினான். அப்போது உதயணனும் அங்கே வந்து சேர்ந்தான். அந்த நேரத்தில் அவர்களைச் சேர்ந்தவருள் வயந்தகன் ஒருவன் தான் தோட்டத்திலிருந்து வரவில்லை. உண்மையாகவே அவள் உதயணனைக் காதலிப்பதை அறிந்து கொண்ட நண்பர், அதற்கேற்றபடி மேல்திட்டங்களை வடிக்கக் கருதிச் சிந்திக்கத் தொடங்கினர். இதை ஒரு சாதாரண நிகழ்ச்சியாக எண்ணி ஒதுக்கிவிடுவதற்கும் இல்லை. ஏனென்றால் இதனாலேயே அவர்கள் சூழ்ச்சி, மாறுவேடம் யாவும் அம்பலமானாலும் ஆகிவிடலாம் அல்லவா! எனவே தான் நண்பர்கள் இதைப் பற்றிய சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படியாக நேர்ந்தது. அப்போது மரத்தடியில் பதுமை உதயணனுக்காக வைத்து விட்டுச் சென்ற மோதிரம், மாலை ஆகியவைகளுடன் வயந்தகன் உள்ளே பிரவேசித்தான். உதயணனைத் தேடித் தோட்டத்துக்குள் சுற்றியபோது, அந்த மோதிரத்துடன் மாலையும் புன்னை மரக்கிளையில் இருந்ததாகவும், தான் அவற்றை உதயணனிடம் அளிக்கக் கொணர்ந்ததாகவும், சொல்லிவிட்டு அவற்றை உதயணனிடம் சேர்ப்பித்தான் வயந்தகன். அவற்றைப் பெற்றுக் கொண்ட உதயணன் தானும் அதே பொய்கையில் உருமண்ணுவாவுடன் சென்று நீராடி, வேறுடை உடுத்தியபின் மோதிரத்தையும் மாலையையும் அணிந்து கொண்டான். பதுமையின் நினைவு மயக்கம் அவன் நெஞ்சில் தோன்றியது. அவள் தொடுத்த மாலையும் மோதிரமும் தாபத்தைத் தணித்தன. இவ்வாறு காதலர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். மனத்தையும் நினைவுகளால் பரிமாறிக் கொண்டிருந்தனர். தான் வைத்த மோதிரத்தையும் மாலையையும் உதயணன் அணிந்திருப்பதனைக் கண்ணாரக் கண்ட பின்பே பதுமாபதி அங்கிருந்து அரண்மனைக்குப் புறப்பட்டாள். அங்ஙனம் புறப்படும் போது அவள் அவனைப் பார்த்த பார்வை எவ்வளவோ பொருள் பொதிந்ததாக இருந்தது. 'நம்முடைய காதல் நேற்றுவரை கண்களின் பார்வையளவில் இருந்தது. இன்றோ ஒருவர் மாலையை மற்றொருவர் மாற்றிக் கொள்ளும் அளவு வளர்ச்சியடைந்திருக்கிறது' என்று அவள் தன் மனத்திற்குள்ளேயே பேசிக் கொள்வது போல் இருந்தது அந்தப் பார்வை. இந்தப் பார்வையோடு அவனிடம் குறிப்பாக விடைபெற்றுக் கொண்டு சித்திர வையமேறி அரண்மனை சென்றாள் பதுமை. அப்போது மாலை நேரமாகியிருந்தது. அன்றிரவு உதயணன் நன்றாக உறங்கினான். பதுமாபதியிடம் தான் பூண்ட காதலுரிமை உண்மையானது என்பதை நண்பர்களுக்கு நிரூபித்து விட்டு திருப்தியோடு உறங்கினான். அந்த அமைதியான உறக்கத்தில் அவன் ஒரு கனவு கண்டான். கனவில் வாசவதத்தை அவன் முன்பு தோன்றினாள். பின்னலிட்டுப் படியாது மாசுற்றுப் பரந்த தலையும், இளைத்த நோயுடம்பும், வற்றிப் போய் எலும்பு தெரியும் முதுகுமாக இருந்தது அவளுடைய பொலிவில்லாத அந்தத் தோற்றம். உதயணன் கனவில் அவளைக் கண்டு ஆச்சரியத்தால் சூழப்பட்டான். மகிழ்ச்சியோடு வாசவதத்தையை வரவேற்றான். "வாசவதத்தாய், குற்றமற்ற கற்பின் செல்வி! என் துன்பம் இனித் தீர்ந்தது. நீ வந்துவிட்டாய்" என்று கனவில் வாய்விட்டு அரற்றினான். வாசவதத்தை, உதயணன் இவ்வாறு கூறியவற்றைச் செவியுற்று மெல்ல வாய் திறந்து பேசலானாள். உதயணன் அவள் பேசுவதைக் கவனமாகக் கேட்டான். "என்னைப் பிரிந்து வேற்று நாட்டிற்கு வந்திருக்கிறீர்கள். இப்போதோ என்னைக் கண்டவுடன் மிகவும் அன்பாக பேசுவது போல் பேசுகிறீர்கள்! எதற்கு இந்த வீண் பேச்சு" என்று அவன் பக்கம் நெருங்காமல் அகன்று நின்று கூறினாள் தத்தை. அது கேட்ட உதயணன் மனம் மயங்கி, "இறந்து போன உன்னை உயிரோடு மீட்டுத் தருபவர் இந்நகரத்தில் உள்ளார் என்று கேள்விப்பட்டே நெடுந் தொலைவைக் கடந்து இங்கே வந்தேன்! இதற்காக நீ சினங்கொள்ளாதே" என்று அவளை நெருங்கி இருந்து ஊடல் தணிக்க முற்பட்டான். இதைக் கேட்ட தத்தை மேலும் சினங்கொண்டவள் போல, "இன்று நீங்கள் இந் நாட்டரசன் தருசகன் தங்கையாகிய பதுமாபதியின் மேல் காதல் கொண்டீர்கள். அவளுக்குக் கொடுக்கவென மாலையுங் கட்டி வைத்தீர். அவள் கொடுத்த மோதிரத்தையும் மாலையையும் ஏற்று அணிந்து கொண்டீர்!" என்று சொல்லிவிட்டு ஒதுங்கி நின்று கொண்டாள், வெறுப்புடன். அவளுடைய ஊடலைக் கண்டு உதயணன் திகைத்தான். அவள் வெறுப்பையும் ஒதுக்குதலையும் கண்ட உதயணன் "பதுமாபதி என்ற பெயரையே இன்று இப்போது நீ சொல்லத் தான் நான் கேட்கிறேன். இதற்கு முன்பு அறியேன். அவ்வாறிருக்க நீ என்னைக் கூறுவது வீண் பழியாம். என் மனம் துயர் கொள்ளுமாறு தவிப்புறச் செய்வது உனக்கு அழகன்று. என் மனத்திற்கு உவகை அளிப்பது உன் கடமை" என்றிவ்வாறு மேலும் வேண்டிக் கொண்டான். இப்போது உதயணன் கண் முன்பு தத்தை தோன்றவில்லை. அதற்குப் பதிலாகப் பொழுது விடிந்தது. ஒளி பரவித் தோன்றியது. தான் அதுவரை தத்தையைக் கண்டது, பேசியது அவள் சினங் கொண்டது எல்லாம் இரவு நேரத்துக் கனவு என்பதை உதயணன் உணர்ந்தான். கனவை நண்பர்களுக்கு விளங்க எடுத்துரைத்தான். உதயணன் முதல் நள்ளிரவு கண்ட கனவை அவன் கூறக்கேட்ட நண்பர் மகிழ்ந்து, "கனவிற் கண்டதும் நல் நிமித்தத்திற்கு உரியதே. தத்தை உயிருடன் மீண்டும் உனக்குக் கிடைபபாள் என்பதையே கனவு நிகழ்ச்சியும் வற்புறுத்துகிறது" என்று கூறி உதயணனை வாழ்த்தினர். |