36. அரண்மனைத் தொடர்பு

     காமன் கோட்டத்தின் உட்புறத்திலிருந்து தோழியரோடு வெளியேறிச் சென்ற பதுமை, வையத்திலேறிய பின்பும் உதயணனைப் பற்றிய இனிய நினைவுகளோடுதான் அரண்மனைக்குப் புறப்பட்டாள். எல்லோரும் கோட்டத்திலிருந்து வெளியே சென்ற பின்பு, உதயணன் இருள்நிறைந்த மணவறை மாடத்திலிருந்து வெளியே வந்தான். அவனுடைய நெஞ்சு நிறையப் பதுமையைப் பற்றிய இன்ப நினைவுகள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. தவப்பள்ளிக்கு அவன் செல்லும் போது இரவு வெகு நேரமாயிருந்ததை அங்கிருந்த அமைதி நிலையினாலேயே அவன் அறிந்து கொண்டான். தானும் தன் நண்பர்களும் இனியும் அதே தவப் பள்ளியில் தங்கியிருப்பது அங்குள்ளவர்கள் சந்தேகமுற ஏதுவாகும் என்ற சிந்தனை உதயணனுக்கு இப்போது உதித்தது. தங்களுக்குள் அடிக்கடி நிகழும் வாக்குவாதங்களையும் பேச்சுக்களையும் பிறர் கேட்க நேர்ந்தால், மாறுவேடம் வெளிப்படையாகிவிடுமே என்ற அச்சமும் அவனுக்கு இருந்தது. தான் அடிக்கடி காமன் கோட்டத்தின் பக்கம் சென்று வருவதனால் கூடப் பிறர் தன்னைத் தவறாக எண்ண நேரிடும் என்று எண்ணினான் அவன். இந்தச் சிந்தனையின் பயனாக உதயணன் ஒரு முடிவுக்கு வந்தான். 'மறுநாள் எப்படியும் மகத வேந்தன் தருசகனுடைய அரண்மனையில் மாறுவேடத்துடன் ஏதாவது ஒரு வேலையிற் சிறந்தவனாகச் சொல்லிக் கொண்டு அமர்ந்து விட வேண்டும். தருசகனுக்கு எந்த வகைத் தொழிலில் விருப்பம் அதிகம் என்று முன்பே தெரிந்து கொண்டுவிட வேண்டும்' என்பவைதாம் உதயணனுடைய அந்த முடிவுக்குள் அடங்கியிருந்தன. பதுமையின் காதலை வளர்த்துக் கொள்வதற்கும் சரி, மற்றவற்றிற்கும் சரி, அரண்மனைத் தொடர்பு மிகமிக ஏற்றதாகவும் அவனுக்குத் தென்பட்டது. இன்னும் சில நாள்கள் இதே முறையில் காமன் கோட்டத்திற்குள்ளேயே அவன் பதுமையைச் சந்திக்க வேண்டியதாக இருந்தது.

     தவப் பள்ளியில் இருந்துகொண்டு அவன் இவ்வாறு பலமுறை காமன் கோட்டத்திற்கு வந்து செல்வது பிறர் கண்ணில் பட்டால் அவனையும் நண்பர்களையும் அதுவே காட்டிக் கொடுத்துவிடும் என்பதை அவன் தெளிவாக அறிவான். உடனடியாக அவனுக்கு இந்த எண்ணம் தோன்றுவதற்குக் காரணமே அதுதான். அடுத்த நாள் பொழுது விடிந்ததும் வழக்கப்படி செய்ய வேண்டிய காலைக்கடன்களை முடித்துக் கொண்ட பின், உதயணன் புதியதொரு மாறுவேடத்தோடு இராசகிரிய நகரத்து அரண்மனைக்குப் புறப்பட்டான். மகத அரசன் தருசகனைப் பற்றி நன்கு பழகி அறிந்து கொண்டிருந்த அரண்மனைக் காவலன் ஒருவனை முதலில் உதயணன் சந்தித்தான். அந்தக் காவலனோடு ஏதேதோ பல செய்திகளைச் சுற்றி வளைத்துப் பேசிக் கொண்டே வரும்போது, 'அரசனுக்கு மிகவும் விருப்பமான தொழில் ஏது?' என்றும் ஒரு கேள்வியையும் இடையே அவனிடம் கேட்டு வைத்தான். அரண்மனைப் பெருவாயிலின் ஒரு புறத்தே நின்று அவர்கள் இப்படி உரையாடிக் கொண்டிருந்தனர்.

     பேசுவதில் விருப்பமிக்க அந்தக் காவலனைத் தன்னுடைய சிறிது நேரப் பழக்கத்தினாலேயே நன்றாகக் கவர்ந்து விட்டான் உதயணன். உதயணனிடம் அவனுக்கு விலக்க முடியாத ஈடுபாடு ஏற்பட்டு விட்டது. உதயணன் கேள்விக்கு அந்தக் காவலன் அன்போடும் ஆர்வத்தோடும் விடை சொல்லலானான். "எங்கள் அரசனின் தந்தை தம் ஆட்சிக் காலத்தில் பொன்னும் மணியும் முத்தும் அடங்கிய மதிப்பிட முடியாத செல்வத் தொகுதி ஒன்றை இவ்வரண்மனையின் ஒரு பகுதியில் புதைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் எங்கள் அரசன் புதையலாக இருக்கும் தம்முடைய தந்தையின் அந்த நிதியை இதுவரை பெற முடியவில்லை. அப்புதையலின் இருப்பிடம் இதுவரை தெரியவில்லை என்பதே அதற்குக் காரணம்! எனவே, புதையல் இருக்குமிடத்தை அறிந்து கூறுபவர்களைக் கண்டால் எங்கள் அரசன் அவர்களைக் கடவுள் போலக் கருதிக் கொண்டாடுவான். ஆயினும் இதுவரை வந்த ஓர் அறிஞராவது எம்மரசனின் தந்தையினுடைய புதையல் இருக்கும் இடத்தை அவனுக்குச் சரியாகக் கூறவில்லை. இருந்தாலும் அவருக்கு இன்னும் புதையல் இருக்குமிடத்தைக் கண்டு சொல்பவர்கள் மேல் அன்போ ஆதரவோ சிறிதும் குறையவே இல்லை" என்று காவலன் உதயணனுக்குச் சொல்லி முடித்தான்.

     காவலன் இவ்வாறு கூறி நிறுத்தவும் உதயணன் தன் முகத்தில் மிகுந்த வியப்புத் தோன்றுமாறு செய்து கொண்டே "எவ்வளவு பொருத்தம்! உங்கள் அரசர் எந்த வித்தையை அதிகம் விரும்புவதாக நீங்கள் கூறினீர்களோ, அதே வித்தையில் நான் மிகவும் வல்லவன். நான் எண்ணி வந்தது போலவே இங்கும் இருக்கிறது பார்த்தீர்களா?" என்று தொடங்கிப் புதையல் இருக்குமிடத்தை அறியும் தன் கலை வன்மையை அவனிடம் விவரிக்கலானான். "முன்னோர் புதைத்து வைத்திருக்கும் புதையல்கள் இருக்கும் இடங்களை அறிந்து கூறுவதில் எனக்கு நல்ல பயிற்சி உண்டு. இதற்கு முன் பல இடங்களில் அத்தகைய புதையல்களைக் கண்டுபிடித்துக் கூறி அவற்றுக்கு உரியவர்களிடம் நற்பெயர் பெற்றுள்ளேன். இது தவிர வேறு பல திறமைகளும் என்பால் உள்ளன. அரண்மனைக்குள் நல்ல நீரூற்றுக்கள் இருக்கும் என்பதை நான் நிலத்தைப் பார்த்தவுடனே சொல்லுவேன். நிலத்தினுள்ளே மறைந்திருக்கும் பொருள்களை அறிவதற்கு வழிகூறும் நூல்கள் பலவற்றை நான் நன்கு ஆராய்ச்சி செய்திருக்கிறேன். உங்களுடைய அரசனுள்ளத்தை வருத்துகிற குறையையும் என்னால் தீர்த்து வைக்க முடியும் என்று எண்ணுகிறேன்" என்று உதயணன் கூறியவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டே அந்தக் காவலன் மன மகிழ்ச்சியோடு உள்ளே சென்றான்.

     காவலன் வேந்தனின் இருப்பிடத்திற்குச் சென்று, "புதையலெடுத்தல், நிலத்தினுள் மறைந்திருப்பவற்றைக் கூறுதல் ஆகிய அருங்கலைகளில் தேர்ந்த கலைஞன் ஒருவன் நம் அரண்மனை வாசலில் வந்து காத்திருக்கிறான்" என்று கூறினான். தருசகவேந்தன் காவலன் கூறுவதைக் கவனமாகக் கேட்டான். "கலைஞர்களைக் காண்பதும் அளவளாவுவதும் கொடுத்து வைத்த பெரும்பேறுகள் அல்லவா? நீ கூறிய அந்தக் கலைஞர் திலகத்தை உடனே போய் இங்கழைத்து வா!" என்று அரசனின் கட்டளையைப் பெற்றுக் கொண்டு காவலன் வாயிலுக்குத் திரும்பினான். அரசன் தருசகனின் அழைப்பைக் காவலன், உதயணனிடம் கூறி, அவனை உள்ளே அழைத்துச் சென்றான். உதயணனும் மாறுவேடத்திற்கு ஏற்ற நடிப்புடனே அவனைப் பின்பற்றினான். உள்ளே நுழைந்ததும் தருசகன் அவனை அன்போடு வரவேற்று ஓர் ஆசனத்தில் இருக்கச் செய்தான். பின்பு அவன் படித்திருக்கும் கலைகள் எவை எவை என்பதைப் பற்றியும் சில வினாக்களைக் கேட்டான். உண்மையாகவே தான் புதையல், நிலத்து மறைபொருள்கள் முதலியவற்றைக் காணும் கலைஞன் தான் என்று அந்த அரசன் அப்போதே நம்பும்படியாக அவனுக்கு விடை கூறினான் உதயணன்.

     கடைசியில் தன் தந்தை புதைத்து வைத்து விட்டுச் சென்ற அரும்பெரும் புதையலைத் தேடி இருக்குமிடம் அறியாமல் தான் துன்புற்று வருவதையும், அதுவரை வந்த எந்தக் கலைஞரும் அது இருக்கும் இடத்தைப் பற்றிச் சரியாகக் கூற முடியவில்லை என்பதையும் உதயணனிடம் தருசகன் கூறினான். மேலும், "தங்களால் அப் புதையல் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப் பெறுமாயின் யான் பெரிதும் மகிழ்ச்சியுறுவேன். உங்கள் திறமை இதில் எப்படியும் வெற்றி பெறும் என்றே நம்புகிறேன். இந்த உதவியை நீங்கள் எனக்குச் செய்தே தீர வேண்டும்" என்று அவன் வேண்டிக் கொண்ட போது, புதையல் எடுப்பதைப் பற்றிய அவனது எண்ணங்கள் எவ்வளவு பரபரப்பாக இருக்கின்றன என்பதை உதயணன் தெரிந்து கொண்டான். புதிய வேடம், புதிய துன்பத்தை வலுவில் கொணர்ந்திருப்பது உதயணனுக்கு அப்போதுதான் புரிந்தது. 'எப்படியாவது அரண்மனையில் தொடர்புகொள்ள வேண்டுமென்பதற்காக மாறுவேடத்தோடு இந்த நாடகத்தை மேற்கொண்டோம். ஆனால், எடுத்த எடுப்பிலேயே இங்கே நமக்காக பெரிய சோதனை காத்துக் கொண்டிருக்கிறதே?' என்று வருந்தினான் அவன். அரசனுடைய வேண்டுகோளுக்கு விடை கூறாமல் 'சொல்லிய வாக்கின்படி புதையலைக் கண்டுபிடிப்பது எவ்வாறு?' என்ற சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான் உதயணன்.

     சற்றும் எதிர்பாராத உதவி ஒன்று அவனுக்கு அப்போது கிடைத்தது. ஏற்கனவே புதையலின் இருப்பிடத்தைச் சங்கேதமாகக் குறித்து வைத்திருந்த சில சுவடிகள் அரண்மனையில் இருந்தன. அந்தச் சுவடிகளைப் படித்துப் பார்த்தும் அதுவரை முயன்ற எல்லோருமே ஒருமுகமாகத் தோல்விதான் அடைந்திருந்தார்கள். இருப்பினும் அந்தச் சுவடிகளைக் கொண்டு எப்படியாவது தன் சொல்லைக் காப்பாற்றிக் கொண்டு விடலாம் என்ற நம்பிக்கை உதயணனுக்கு ஏற்பட்டது. 'மறைபொருளோடு சுவடியில் இருந்த சில குறிப்பான வார்த்தைகளை அறிந்து கொண்டால் உறுதியாக அவனுக்கு வெற்றி கிட்டிவிடும்' என்ற எண்ணம் உறுதியாக அவனுக்கு இருந்தது. உதயணன் உறுதிக்கு விதியும் தேவையான முறையில் உதவி புரிந்தது என்று தான் உரைக்க வேண்டும்! சுவடியிலிருந்து படித்து அறிந்ததில் அனுமானமாக அவனுக்குத் தெரிந்த ஓரிடத்தினை ஆட்களை விட்டு அகழ்ந்து பார்த்தால், அதுவே புதையல் இருக்கும் இடமாகத் தெரிந்தது. தருசகனின் தந்தை தாம் வைத்துச் சென்றிருப்பதாக எழுதியிருந்த எல்லாப் பொருட்களும் தோண்டிய அவ்விடத்திலேயே கிடைத்துவிட்டன. தருசகனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. உதயணனுக்கோ தற்செயலாகவும் சாதாரணமாகவும் தனக்குக் கிடைத்து விட்ட பெரிய வெற்றியை எண்ணி வியப்பாக இருந்தது. தருசகன் உதயணனைப் பாராட்டித் தன் அரண்மனைக் கலைஞர்களுள் அவனும் ஒருவனாகப் பதவி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றான். உதயணன் எதிர்பார்த்த தொடர்பு அவனுக்குக் கிடைத்து விட்டது.