![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
45. மறுபடியும் போர் இங்கு நிலைமை இவ்வாறு இருக்கும்போது, அரண்மனையில் திருமணம் பேசி வந்து முன்பே விருந்தினனாகத் தங்கியிருந்த கேகயத்து அரசன் அச்சுவப் பெருமகனுக்கும், இச் செய்திகள் பராபரியாகத் தெரியலாயின. இந்த நிலையில் விருந்தினனாகத் தங்கித் திருமணப் பேச்சோடு வந்திருந்தாலும் தருசகனுக்கு உதவாமல் இருந்துவிடுவது ஆண்மைக்கும் தன் உறவு நோக்கத்துக்கும் அழகல்ல என்றெண்ணினான் அவன். தான் உதவாமல் இருந்துவிட்டால், தருசகனே தன்னைப் பற்றித் தவறாக எண்ணிக் கொள்வான் என்றும் அவனுக்குத் தோன்றியது. 'தான் எப்படியும் இந்தச் சந்தர்ப்பத்தில் தருசகனுக்கு உதவி செய்தே ஆக வேண்டும்' என்று முடிவு செய்து கொண்ட அவன், நேரே தருசகனைச் சந்திப்பதற்குச் சென்றான். "உங்களை எதிர்த்துப் படையெடுத்து வந்திருப்பவர்கள் தேவர்களே ஆனாலும் சரி! நான் ஒருவனே அவர்களை வென்று உங்களுக்கு இழுக்கு வராமல் பாதுகாப்பேன். அருள் கூர்ந்து எனக்கு அனுமதி கொடுங்கள். நான் படைகளோடு சென்று வெற்றியைக் கொண்டு வருகிறேன்" என்று கேகயத்து அரசன் அச்சுவப் பெருமகன், வலிய முன்வந்து கூறிய போது தருசகன் வியப்படைந்தான். கேகயத்து மன்னனின் வேண்டுகோளை அவனால் புறக்கணிக்க முடியவில்லை. ஏற்கனவே உதயணன், வயந்தகன் மூலமாகக் கூறி அனுப்பியவற்றைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்திருந்த தருசகன், இப்போது தன் தங்கையை மணம் பேசி வந்த கேகயன் கேட்கும் வேண்டுதலுக்கு செவிசாய்த்துத்தான் ஆகவேண்டியிருந்தது. உதயணனுடனே தன் படைகளை உதவிக்கு அனுப்பும் போது கேகயத்தரசனையும் கூட அனுப்பலாம் என்று கருதினான் தருசகன். "என்மேற் படையெடுத்து வந்த பகையரசர்களை வெல்வதற்கு, உதயணன் தானே போருக்குச் செல்வதற்கு அனுமதி அளித்து என்னுடைய படைகளையும் உதவும்படி முன்பே வேண்டிக் கொண்டிருக்கிறான். நீ அவனோடு உடன் சென்று போர் செய்ய விரும்புவாயாயின் அதனை நான் மறுக்கவில்லை" என்று அச்சுவப் பெருமகனை நோக்கித் தருசகன் பதில் கூறினான். உதயணனோடு போர்க்களம் சென்று, தருசகனை வெல்லக் கருதிப் படையெடுத்து வந்திருக்கும் ஆத்திரங் கொண்ட பகையரசர்களோடு தானும் போரிடுவதற்குச் சம்மதித்தான் கேகய மன்னன். அவன் சம்மதத்தைக் கேட்டதும் தருசக மன்னன் அங்கே காத்திருந்த வயந்தகனைத் தன் அருகில் அழைத்தான். வயந்தகன் அருகில் நெருங்கி வந்து நின்று கொண்டதும், உதயணனுக்குத் தான் அனுப்ப வேண்டிய செய்திகளை, அவனிடம் கூறத் தொடங்கினான். "வயந்தக! இப்போது நான் கூறுவனவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு சென்று நீ உதயணனுக்குக் கூற வேண்டும். உதயணன் உன்னிடம் கூறி அனுப்பிய வேண்டுகோளின்படி என் படைகளை அவனுடன் உதவிக்கு அனுப்புகிறேன். அதனுடன், என் தங்கையைத் திருமணம் பேசுவதற்காக வந்து இப்போது இங்கே என் விருந்தினனாகத் தங்கியிருக்கும் கேகய மன்னனும் போரில் கலந்து கொள்ள விரும்புவதால் அவனையும் அனுப்புகின்றேன். என் படைகளையும் கேகய மன்னன் அச்சுவப் பெருமகனையும் துணைகளாகக் கொண்டு நாம் வெற்றி அடையும்படியாகப் போரை நடத்த வேண்டும் என்று உதயணனிடம் நீ போய்க் கூறு. மேலும் கேகயத்தரசன் திருமணக் காரியமாக இங்கே வந்திருப்பதனால் போரில் அவனுக்கு எதுவும் தீங்கு நேர்ந்து விடாமல் அவனைக் காப்பாற்றும் கடமையும் உதயணனுக்கு உண்டு என்று நான் சொல்லியதாக அவனிடம் சொல்" என்று கூறித் தருசகன் வயந்தகனை அனுப்பினான். வயந்தகன் சென்ற பின்பு, மீண்டும் கேகயத்தரசனையும் தன் அமைச்சர்கள், படைத்தலைவர்கள் முதலியோரையும் அழைத்தனுப்பி அவர்களுடன் கூடி ஆலோசனைகள் சிலவற்றை நடத்தினான் தருசகன். 'பகைவர் படையின் இரண்டாவது தாக்குதலும் தானாகவே தீர்க்கப்பட்டுவிடும்' என்று எண்ணி நம்பிக்கைக் கொள்ளும் அளவிற்கு உதயணன் வேண்டுகோளால் தருசகன் துணிவு அடைந்திருந்தான். படைவீரர்களை மேலும் மேலும் திரட்டுமாறு சேனாதிபதிகள் ஏவப்பெற்றனர். மகத நாட்டுக்குரிய பல்வகைப் படைகளும் போருக்கு எழுந்தன. கேகய மன்னனும் அந்தப் படைகளுடன் போருக்குச் சித்தமானான். உதயணனிடம் இருந்த சின்னஞ்சிறு படைத் தொகுதியும் மகத நாட்டுப் படைகளோடு கலந்து கொண்டன. உதயணன் தங்கியிருந்த பகுதிக்கு எதிரே அரண்மனை முற்றத்தில் எல்லாப் படைகளும் வரிசை வரிசையாக அணிவகுத்து நின்றன. உருமண்ணுவா, வயந்தகன், இசைச்சன் முதலியோர் நன்கு அலங்கரிக்கப்பட்ட யானைகளின் மேல் ஏறிக் கொண்டு முன்னணியில் விளங்கினர். அதற்கு முன்னால் ஒளி தவழும் அம்பாரியோடு கூடிய வேறோர் பெரிய யானை உதயணன் வந்து ஏறிக்கொள்வதற்காக என்றே நின்று கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் உதயணனும் போர்க் கோலத்துடனே வந்து அதன் மேலே ஏறி அமர்ந்து கொண்டான். சுற்றியிருந்த கோடிக்கணக்கான படை வீரர்களின் வாழ்த்தொலி வானைப் பிளந்தது. படைகளெல்லாம் புறப்படும் நேரமும் வந்தது. அந்த நேரத்தில் கேகயத்தரசனை உடன் அழைத்துக் கொண்டு தருசகன் அங்கே வந்தான். உதயணன் முதலியோரும் படைகளும் அவர்களுக்கு மிகுந்த மரியாதை செய்து வரவேற்றனர். தருசகன், உதயணனைத் தனியே அழைத்து, "கேகய மன்னன் இங்கே சுப காரியத்தைப் பற்றிப் பேசி விட்டுப் போவதற்காக வந்து தங்கியவன். தற்செயலாகத் திடுமென்று ஏற்பட்ட இந்தப் போரில் அவன் விரும்பிக் கலந்து கொண்டாலும் அவனுக்குத் துன்பம் நேராமல் நாம் காத்துக் கொள்ள வேண்டும்" என்று கவலையோடு கூறினான். உதயணன் கேகய மன்னனைக் காப்பது தன் கடமை என்றும் உறுதி மொழி கூறிய பின், தருசகன் இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு சென்றான். அவன் சென்றதும் அச்சுவப் பெருமகன் தனக்கு என்று இருந்த போர் யானையின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். உதயணன், உருமண்ணுவாவையும் கேகயத்தரசனையும் ஒரு வரிசையில் முன்னாக அமைத்து மற்றப் படைகளையும் ஏற்றபடி வரிசை செய்து கொண்டு புறப்பட்டான். கேகயத் தரசனுக்குத் துன்பம் நேராமல் காக்கவே அவனை உருமண்ணுவாவின் பக்கத்தில் நிறுத்தினான். தான் எல்லாருக்கும் முன் சென்று பகைவர்கள் பாசறையை நோக்கிப் படையைச் செலுத்தினான் உதயணன். பகைவர்கள் பாசறையை நேரடியாகப் போய் வளைத்துக் கொள்ள வேண்டுமென்பது அவன் திட்டமாயிருந்தது. பகைவர் பாசறைக்கு அருகில் இரு தரப்புப் படைகளும் சந்தித்தன. தருசகன் படையை எதிர்நோக்கி காத்திருப்பவர்கள் போலப் போரிடுவதற்கு ஏற்ற நிலையிலிருந்தனர் பகை படையினர். ஒருமுறை ஏமாற்றப்பட்டவர்கள் ஆகையால் இப்போது அவர்களுடைய ஆவேசமும் ஆத்திரமும் வளர்ந்து பெருகியிருந்தன. உதயணன் தலைமையில் கேகயன், உருமண்ணுவா முதலியவர்களோடு வந்த தருசகனின் வீரர்களும் திடீர்த் தாக்குதலுக்கு ஆயத்தமாகவே வந்திருந்தனர். படைவீரர்கள் சந்தித்த உடனேயே எதிர்பார்த்ததைக் காட்டிலும் விரைவாகப் போர் தொடங்கி விட்டது. இரண்டு பக்கத்திலும் வீரர்கள் நிறைகுறை சொல்ல முடியாதபடி ஈடுபட்டுப் போர் செய்தனர். காலாட் படையினர், யானைப் படையினர் என்றும் தனித்தனியே பிரிந்து நின்று போரிட்டனர். ஆரவாரம் செய்யும் அலைகடல் போலப் போர்க்களமே பயங்கரமான ஒலிகளால் நிறைந்து கலகலப்பாகவும் சுறுசுறுப்பாகவும் விளங்கியது. சிறிது நேரத்திற்கு முன்பு அமைதி தவழ்ந்த மண்ணில், இப்போது குருதி பெருகி ஓடியது. உடல்கள், யானைகள், குதிரைகள் சிலபல பிண்டங்களாகக் கோரமாய் வெட்டுண்டு வீழ்த்தப்பட்டன. உயிரைப் படைத்த மண், உயிரைப் போரிட்டு விளையாடச் செய்யும் பயங்கரத்தை யுத்த மூலமாகக் கண்டது. நேரம் ஆக ஆகப் போர் வெறி மூண்ட நிலையில், இரண்டு படைகளும் மிக நெருங்கி நின்று தாக்கிக் கொள்ளத் தலைப்பட்டன. போரின் வேகம் உச்ச நிலையை அடைந்திருந்தது. |