46. கேகயன் மரணம் போரில் உதயணன், எலிச்செவியின் தம்பி சித்திராங்கதனைக் கைப்பற்றிய உடனே உருமண்ணுவாவும் கேகயனும் முன்னேற்பாடாக எலிச்செவியை அருகிற் சென்று நெருங்கித் தாக்க ஆரம்பித்தனர். தம்பியை இழந்து தவிக்கும் இந்த நிலையில் எலிச்செவியையும் கட்டிக் கைப்பற்றிவிடலாமென்றே உருமண்ணுவா அவனை எதிர்ப்பதில் அவ்வளவு அவசரப்பட்டான். எலிச்செவியைச் சுற்றிப் பின்னால் அவன் படைகள் நிறைந்திருக்கின்றன என்பதைக் கூட அப்போது அவன் நினைப்பதற்கு மறந்து போனான். தன்னை நெருங்கி வளைக்கும் உருமண்ணுவாவையும் கேகயனையும் கண்டதும் எலிச்செவி பொறுமை இழந்து போகும் அளவிற்குப் படபடப்பு அடைந்து விட்டான். அந்த படபடப்போடு அவன் திடீரென்று எழும்பிக் குதித்து வீசிய வாள் வீச்சுக்குக் கேகய அரசனின் தலை இலக்காகிவிட்டது. ஒரு நொடியில் உருமண்ணுவாவோ, உதயணனோ, ஏன்? எலிச்செவி கூட எதிர்பாராதது நடந்து விட்டது! கேகயன் தலை உடலிலிருந்து பிரிந்து தரையில் வீழ்ந்தது. குருதி ஒழுகும் அவன் உடல் யானைமேற், சரிந்து சாய்வாக விழுந்தது. எதிர்பாராத விதமாகக் கேகயனுக்கு நேர்ந்த இந்தத் தீய மரணத்தை எண்ணித் திகைத்தவாறே என்ன செய்வதெனத் தோன்றாமல் இருந்தான் உருமண்ணுவா. உருமண்ணுவாவின் இந்தத் தளர்ச்சியையும் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய எலிச்செவி, சட்டென்று அவன் யானை மேலே தாவிப் பாய்ந்தான். கையில் உருவிய வாளுடனே பாய்ந்த எலிச்செவி உருமண்ணுவாவைக் கட்டிப் பிணித்துக் கைதியாக்கி விட்டான். போர்க்களத்தில் விநாடி நேர அமைதிக்கும் கூட விளைவு உண்டு. உதயணன் தன் தம்பியை எப்படிக் கைதாக்கினானோ அப்படியே உருமண்ணுவாவை எலிச்செவியும் கைதாக்கி விட்டான். இடையில் கேகயன் கொலை செய்யப்பட்டதும் உதயணன் பக்கம் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக வந்து வாய்த்து விட்டது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தன் நம்பிக்கையையே முற்றிலும் உருக்குலைத்து அழிக்கும்படியான இரண்டு பெரிய நஷ்டங்கள் ஏற்பட்டு விட்டதைக் கண்டு உதயணனுடைய மனம் ஒடுங்கிப் போயிற்று. 'கேகயன் மரணமடைந்து விட்டானே என்று மலைத்து வேதனைப் பட்டுக் கொண்டிருந்த போதே, இப்படி உருமண்ணுவாவும் எதிரி கையிலே போய்ச் சிக்கிக் கொண்டானே' என்று வருந்தினான் உதயணன். "என் தம்பியை உதயணன் சிறைப்பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறான். அதே போலத் தான் நானும் உன்னைச் சிறைப்பிடித்திருக்கிறேன். என் தம்பி உதயணனிடமிருந்து விடுதலை பெற்றால் ஒழிய நீ என்னிடமிருந்து தப்ப முடியாது. அஞ்சாதே! உன்னை நான் வீணாகத் துன்புறுத்த மாட்டேன். ஆனால், என் தம்பி உன் தலைவன் கைகளினால் துன்புறுத்தப்படுவதைப் பார்க்கவும் நான் பொறுக்க மாட்டேன்" என்று எலிச்செவி, உதயணன் காதுகளிலும் கேட்கும்படியான உரத்த குரலில் உருமண்ணுவாவை நோக்கிக் கூறினான். உதயணனும் அவன் கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்டான். எப்படியாவது உருமண்ணுவாவைப் பகைவன் கையிலிருந்து மீட்டுவிட வேண்டும் என்றும் அதற்காக அவன் சிந்தித்தான். "நீ சிறைப்பிடித்திருக்கும் இவன் எங்கள் மன்னனாகிய தருசகனுக்கு ஒப்பானவன்! இவனுக்கு எந்த விதமான துன்பமும் இழைக்காமல் நீ விடுதலை செய்து எங்களிடம் அனுப்பிவிட்டால் நானும் உன் தம்பியை உடனே விடுதலை செய்து விடுகிறேன்" என்று அவன் கூறியவற்றிற்கு மறுமொழி கூறுகின்றவனைப் போல உதயணனும் இரைந்து பதில் சொன்னான். இந்தப் பதிலை எலிச்செவியும் கேட்டிருந்தாலும் உடனே விடை கூறாமலே அவன் மேலும் போர் செய்வதையே தொடர்ந்தான். உதயணனும் அவனை எதிர்த்துப் போர்ச் செய்தான். இதற்குள் மற்றப் பகுதிகளில் போர் செய்து கொண்டிருந்த தருசகனின் படைகளும் அங்கங்கே வெற்றி பெற்றுக் கொண்டு, உதயணன் பக்கம் வந்து சேர்ந்தன. ஒன்று கூடி வந்திருந்த அரசர்களில் தோற்று ஓடிப்போனவரும் இறந்து போனவர்களும் போக எஞ்சியிருந்தவர்களே இரண்டொருவர்தாம். உதயணன் பக்கம் படைப் பெருகப் பெருக எலிச்செவி, பின்வாங்கிப் பதுங்க ஆரம்பித்தான். தண்ணீர் வெள்ளத்தைத் தாங்க முடியாமல் கரைந்து உடைந்து அழியும் உப்புச் சுவரைப் போலப் பகைவர் படை சிதறி அழிந்து போயிற்று. இறுதியாக எலிச்செவியும் வேறு சிலரும் போர் செய்ய ஆற்றலிழந்து, சிறைப்பிடித்த உருமண்ணுவாவையும் இழுத்துக் கொண்டு புறமுதுகுகாட்டி ஓடிப்போயினர். உதயணன் வெற்றி பெற்றான். ஆனால், அந்த வெற்றியில் கண்ணீரும் கலந்திருந்தது. கேகயத்தரசனின் மரணம், உருமண்ணுவா பகைவர்களிடம் கைதியானது இவ்வளவிற்கும் மேல் அல்லவா அந்த வெற்றி கிடைத்திருக்கிறது? உருமண்ணுவாவைப் பிரிந்த துயரத்துடனும் கேகயத்தரசனை இழந்த வேதனையுடனும் உதயணன் வெற்றியினாலும் களிப்பைப் பெறுவதற்கு முடியாதவனாய்ப் படைகளோடு தலைநகருக்குத் திரும்பினான். முதல் முறை தனியொருவனாக இருந்து, சிலர் உதவியுடனே, சூழ்ச்சியால் வெற்றி பெற்ற போது கூட இத்தகைய துன்பங்கள் எதுவும் அவனுக்கு ஏற்படவில்லை. இப்போது போர் செய்து பெற்ற வெற்றி, அவ்வளவு துன்பங்களை அவனுக்குத் தந்துவிட்டது. இரண்டாம் முறையாக வெற்றி வாகை சூடித் திரும்பும் உதயணனை வரவேற்க நகர் எல்லையருகே பரிவாரங்கள் புடைசூழ வந்து காத்திருந்தான் தருசகன். தனக்கு ஏற்பட இருக்கும் துன்பங்கள் உதயணனால் ஒவ்வொன்றாக விலகி வருவதைக் கண்டு, அவன்பால் மட்டற்ற மகிழ்ச்சியும் அன்பும் கொண்டிருந்தான் அவன். உதயணனும் படைகளும் நகர எல்லைக்கு வந்து சேர்ந்தவுடன் தருசகன் எதிரே வந்து வரவேற்றான். உதயணனைப் போற்றிப் புகழ்ந்து இரண்டாம் முறையாகத் தன் நன்றியைக் கூறிக் கொண்டான். 'தருசகனைக் கண்டதும் கேகயத்தரசன் மரணத்தை அவனுக்கு எவ்வாறு கூறுவது' என்று எண்ணித் தயங்கினான் உதயணன். பின்பு மனத்தைத் தேற்றிக் கொண்டு, தான் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் உருமண்ணுவாவோடு களத்தில் முன்னே முன்னே சென்று பகைவர்களை வருத்தும் ஆர்வத்தோடு போரிட்டதனால் கேகயன் எலிச்செவியின் வாளுக்கு இரையானான் என்பதையும் உருமண்ணுவாவைப் பகைவர் பிடித்துச் சென்றனர் என்பதையும் விளக்கமாக எடுத்துரைத்தான். இந்தச் செய்திகளைக் கேட்ட தருசகன் பெரிதும் வருந்தினான். "என் தங்கையை மணம் செய்து கொள்ள ஆர்வமுற்று, இங்கே அவன் வந்தான். அந்த ஆர்வத்தை நான் அவனுக்குப் பூர்த்தி செய்து வைப்பதற்கு முன் எனக்காக அவனே போரில் கடமை பூண்டு உயிர்தியாகம் செய்துவிட்டானே!" என்று சொல்லி உள்ளம் உருகிய தருசகனை உடனிருந்தவர்கள் தகுந்த வார்த்தைகளைக் கூறி ஆற்றுவித்தார்கள். உடனே அன்று இரவிலேயே போர்க்களத்திலிருந்து கேகயனின் சடலத்தைக் கொணரச் செய்து முறைப்படி கருமங்களைச் செய்தனர். ஆசை தணியாமலே வெந்து அழிந்து போனது கேகயனுடல். எல்லாம் முடிந்த பின் தருசகனும் உதயணனும் தலைநகரத்திற்குப் புறப்பட்டனர். நகரமக்கள் உதயணனைப் பலவாறாகப் புகழ்ந்து வரவேற்றனர். 'இவன் அல்லவா உண்மை வீரன்?' என்று புகழ்ந்தது மகத நாட்டு மக்கள் கூட்டம். 'இவனுடைய இத்தகைய வெற்றிகளை எல்லாம் பார்க்கக் கொடுத்து வைக்காமல் இறந்து போன இவன் தேவி வாசவதத்தை பாக்கியமில்லாதவளே' என்று சிலர் அவளைப் பழிப்பது போலப் பேசினர். 'தத்தை இறந்த துயரம் தாங்காமல் தான் உதயணன் இங்கு வந்தான். அதனால் எங்கள் நாடு பெற இருந்த பகைத் துன்பங்கள் நீங்கின. எனவே இறந்தும் நன்மை செய்கிறாள் வாசவத்தை' என்று அவளைப் புகழ்வது போல் பேசினர் வேறு சிலர். அப்போதிருந்த மனநிலையில் உதயணனால் இப் புகழுரைகளில் ஈடுபாடு கொள்ள இயலவில்லை. உதயணன், கேகயனுக்கும் உருமண்ணுவாவுக்கும் போர்க்களத்தில் ஏற்பட்ட துன்பங்களையே எண்ணி எண்ணி வருந்திக் கொண்டிருந்தான். அவற்றை அவ்வளவு எளிதாக மறக்க முடியவில்லை அவனால். புகழ்ச்சி உரைகளில் ஈடுபாடு கொள்ள இயலாத மனநிலையோடு தருசகனுடன் அரண்மனை நோக்கிச் சென்று கொண்டிருந்தான் உதயணன். உதயணனது அந்த வரவை வெற்றித் திருஉலாவாகக் கொண்டாடும் நகர பெருமக்கள் வாய் ஓயாமல் அவன் புகழ் பேசி மகிழ்ந்தனர். "தருசகன் தன் தங்கை பதுமாபதியை இனி உதயணனுக்கே மணம் புரிந்து கொடுக்கலாம். பதுமையை மணந்து கொள்வதற்கு என்று வந்து தங்கியிருந்த கேகயத்தரசன் கூடப் போரில் மாண்டு போயினான். தனக்கு உதயணன் செய்திருக்கும் அரிய பேருதவிக்குக் கடல் சூழ்ந்த உலகம் முழுவதையுமே தருசகன் ஈடாகக் கொடுத்தாலும் அது போதாது. உதயணனின் ஈடு எடுப்பற்ற உதவிக்குப் பதுமையை அவனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும் இந்தக் கைம்மாறு ஓரளவு ஏற்றதாக அமையலாம்" என்று தமக்குத் தோன்றியவாறு பேசினர் நகர மக்கள். |