![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
47. பதுமை கலங்கினாள் பகை மன்னர்களை வென்று, மகத நாட்டைச் சூழ்வதற்கு இருந்து அச்ச மூட்டிய துன்பத்தைப் போக்கியதற்காக உதயணனைத் தன் அரண்மனை விருந்தினனாகச் சில நாள்கள் தங்கியிருக்கச் செய்தான் தருசக மன்னன். உதயணனுடைய அருமை நண்பர்களும் மற்றையோரும் கூட அவ்வாறே இராசகிரிய நகரத்தில் தங்கி இருந்தனர். உதயணன் உள்ளம் எந்த நிலையிலும் எதையாவது சிந்தித்துக் கொண்டிருக்கப் பழகிய உள்ளம். அரண்மனையில் விருந்தினனாகத் தனிமையும் அமைதியும் மிக்க சூழ்நிலையில் தங்கி இருந்த அப்போது கூட அவன் நெஞ்சம் பழைய இன்ப நினைவுகளில் ஆழ்ந்திருந்தது. சிந்தித்துச் சிந்தித்துப் பழகித் தழும்பேறிய உள்ளத்திற்குத் தனிமை என்பது பல நாள் பசிக்குப் பிறகு கிடைத்த சுவை மிகுந்த உணவைப் போன்றது. பதுமையோடு கன்னிமாடத்திலும் காமன் கோட்டத்திலும் பழகிய மகிழ்ச்சி நினைவுகள் அவன் மனத்தில் மலர்ந்தன. உதயணன் பழைய நினைவுகள் என்பனவற்றைத் திராட்சை மதுவைப் போல மயக்கம் அளிக்கும் இயல்புடையனவாகக் கருதினான். அவற்றை எண்ணிப் பார்ப்பதில் தனிப்பட்ட ஒருவகைக் களிப்பு இருந்தது. அரண்மனையில் விருந்தினனாகத் தங்கியிருந்த அந்த நிலையில் தான் பதுமையோடு பழகிய நிகழ்ச்சிகளை எண்ணுதலாகிய நினைவுப் புணை கொண்டு தனிமைக் கடலைக் கடந்து கொண்டிருந்தான் உதயணன். 'பதுமையிடம் தான் கொண்ட காதல் இப்படி வெறும் நினைவு மாத்திரையோடு நின்றுவிடக் கூடாதே!' என்ற ஏக்க உணர்வும் அப்போது அவனுக்கு உண்டாகும். 'தாங்கள் காதலை நிலையாக இணைத்துக் கொள்ளத் திருமண உறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்! அதை எவ்வாறு ஏற்படுத்திக் கொள்ளலாம்?' என்று சிந்திக்கத் தொடங்கினான் அவன். 'முறையாக இவை நடக்க வேண்டியவை' என்னும் விளக்க முடியாத நியதிக்கு உட்பட்ட நிகழ்ச்சிகளை விதி தானே பொறுப்பேற்று நடத்தி விடுகிறது. அத்தகைய நிகழ்ச்சிகளோடு சம்பந்தம் உடைய யாவருக்கும் அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஏற்ற மனப்போக்கு, எண்ணங்கள் முதலியவற்றையும் விதியே உண்டாக்கிக் கொடுக்கிறது என்று கூடச் சொல்லலாம். இல்லை என்றால் தருசக வேந்தனுக்கும் அப்போது 'பதுமையை உதயணனுக்குத் திருமணம் செய்து கொடுத்தால் என்ன?' என்ற சிந்தனை தோன்றியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. 'அச்சுவப் பெருமகன் போரில் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டான். உதயணனுக்கே பதுமையை மணஞ் செய்து கொடுத்து விட்டால் என்ன? காலமறிந்து நமக்கு அவன் செய்த உதவிக்கும் நாம் வேறு எந்த வகையில் தான் கைம்மாறு செய்யப் போகிறோம்! பதுமையும் உதயணனை அடைவதற்கு முற்பிறவியில் தவம் செய்திருக்க வேண்டும். உதயணன் அழகன், அறிஞன், கலைஞன், வீரன்! ஒப்பிலாப் பேரரசர்களில் ஒருவனாகவும் இருக்கிறான். பதுமையை அவனுக்கு மணம் புரிந்து கொடுப்பதால் நமக்கும் பெருமை; பதுமைக்கும் அது ஒரு சிறந்த பாக்கியம். நம் பதுமையின் அழகைக் கண்டால் உதயணன் அவளை உறுதியாக மணந்து கொள்ள விரும்புவான், என இத்தகைய சிந்தனைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த தருசகவேந்தன் தன் அமைச்சர்களையும் மற்ற பெரியோர்களையும் அழைத்து இதைப் பற்றி ஆலோசித்தான். தருசகனின் கருத்தை அவர்கள் யாவரும் ஒப்புக் கொண்டு வரவேற்றனர். பதுமை - உதயணன் திருமணச் சிந்தனை அவர்களுக்கும் மகிழ்ச்சியையே அளித்தது. நல்ல செயல்கள் யாவரும் தம்மை விரும்புவதற்கு ஏற்ற நிறைந்த கவர்ச்சியையும் தம்பால் உள்ளடக்கிக் கொண்டிருக்கின்றன. உதயணனுக்குப் பதுமையை மணம் செய்து கொடுக்க வேண்டும் என்று தருசகனுக்குத் தோன்றிய எண்ணத்திலும் அத்தகையதொரு கவர்ச்சி இயல்பாகவே அமைந்திருந்தது போலும்! தருசகன் தன் அமைச்சர்களுள் சிறந்த ஒருவனை அருகே அழைத்து, இச் செய்திகளை அவனுக்கு விளக்கமாகக் கூறி, 'உதயணனிடமும் இதை அறிவித்து அவனுடைய மனக் கருத்தைத் தெரிந்து கொண்டு வருமாறு' அனுப்பினான். அமைச்சன் இதற்காக அரண்மனையில் உதயணன் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையை நோக்கிச் சென்றான். தெய்வப் பிரசாதங்களைப் பதுமைக்கு அளித்துவிட்டு, முதியவர்கள் வாழ்த்தும் முறைப்படி, 'பொலிக நங்கை!' என்று அவளை வாழ்த்தினாள். "பதுமை! இப்போது நான் உனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்றைக் கூறப் போகின்றேன். உன் தமையன் உனக்கு எல்லாவகையிலும் ஒத்த தகுதியுடைய மணவாளன் ஒருவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த மணவாளன் எத்தகையவன் தெரியுமோ? தன் நிகரற்ற போர்க்கலைஞன். வத்தவநாட்டின் வேந்தன், யானையின் மதத்தையும் அடக்க வல்ல வினை வித்தகன். அவன் தான் உதயணன். அவனுக்கு உன்னை மணம் புரிந்து கொடுப்பதற்காக உன் தமையன் இன்று முடிவு செய்திருக்கிறார்" என்று பதுமைக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் உணர்வை எதிர்பார்த்துக் கொண்டே முதுமகள் அவளை நோக்கிக் கூறினாள். இதைக் கேட்டவுடன் தீயை மிதித்து விட்டவள் போலத் திடுக்கிட்டாள் பதுமை. மாணகனைத் தன் உயிரினும் மேலாகக் கருதி அவனுக்குத் தன் உள்ளத்தில் இடமளித்துவிட்ட அவள் உதயணனையும் எப்படி எண்ண முடியும்? பதுமையின் உள்ளம் துணுக்குற்று நடுங்கியது. தன்னுடைய மனநடுக்கத்தையும் அச்சத்தையும் புறத்தே காட்டிக்கொள்ள விரும்பாத பதுமை சிரிப்பும் மலர்ச்சியும் தவழும் முகபாவத்தோடு அந்த முதுமகளை நோக்கினாள். அவளது முகம் நகைத்தது. அகம் புகைந்தது. தான் கூறிய செய்தியைக் கேட்டவுடன் பதுமையின் பவழச் செவ்விதழ்களில் முத்துநகை மலர்ந்தது. அவள் முகம் மலர்ச்சி பெற்றதைக் கண்ட முதுமகள் உண்மையாகவே பதுமைக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். அவள் அவ்வாறுதானே எண்ண முடியும்? பதுமையின் உள் மனம் கேள்விப்பட்ட செய்தியால் கொதித்தது. காமன் கோட்டத்திலும் கன்னிமாடத்திலுமாகக் கலந்து பழகிக் காதல் உறவு கொண்ட மாணகனை எண்ணிக் கண்ணீர் வடித்தது. அவள் மனம் மாணகனை மறந்து, வேறு யாரையாவது மணக்க நேரிடுமானால் வாழவேண்டும் என்ற ஆசையே அவளுக்குத் தோன்றவில்லை. அவள் மனத்தின் உணர்ச்சிக் கதிர்கள் யாவும் ஒன்றுப்பட்டு, 'மணந்தால், மாணகனை மணக்க வேண்டும். சந்தர்ப்பம் அதற்கு மாறாக ஏற்படுமானால் உயிரையே மாய்த்துக் கொள்ள வேண்டும்' என்ற ஒருமை நிலையை அவளுக்கு உண்டாக்கிக் கொடுத்திருந்தன. அவள் இந்தச் சோதனையால் மனம் கலங்கினாள். |