60. இழந்த பொருள்களின் வரவு தொலைவிலிருந்து காற்றோடு கலந்து வந்த அந்த யாழிசையைக் கேட்டு அது தனக்குப் பழக்கமான ஓசையாயிருப்பதை உணர்ந்தான் உதயணன். எதிர்புறத்துத் தெருவில் ஒரு வீட்டின் மேல்மாடத்திலிருந்து செவ்வழிப் பண்ணில் இசைக்கப்பட்டு, காற்றில் கலந்து வந்து கொண்டிருந்தது அந்த யாழ் ஒலி. உதயணன் கண்களில் மலர்ச்சியும் முகத்தில் மகிழ்ச்சியும் தோன்ற, மீண்டும் அந்த ஒலியைக் கூர்ந்து கேட்டன். 'சந்தேகமே இல்லை! அது கோடபதியின் ஒலிதான்!' என்று தன் மனத்திற்குள் உறுதி செய்து கொண்டான். பத்திராபதியில் ஏறி வாசவதத்தையோடு உஞ்சை நகரத்திலிருந்து வரும்போது நடுவழியில் மூங்கிற் புதரில் சிக்கித் தொலைந்து போன அந்த யாழ் இப்போது இங்கே எப்படி வந்தது? தான் அந்த ஒலியைக் கேட்பது கனவா, நனவா?' என்று சில கணம் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், எதிர்புறத்துத் தெருவிலுள்ள அந்த வீட்டு மேல் மாடத்திலிருந்து வந்த கோடபதியின் ஒலியானது, 'அரசே என்னைக் காட்டிலே தவறவிட்டுவிட்டு ஒரேயடியாக மறந்து போய் விட்டாயே! உன் மனம் எவ்வளவு கடுமையானது?' என்று அவனை நோக்கிப் பழைய சம்பவத்தை நினைவூட்டி இரக்கப்பட்டுக் கொள்வது போல இருந்தது. உதயணனுக்கு அந்த இசை செவியில் பாயப்பாய, மனம் நெகிழ்ந்தது. கோடபதியின் தெய்வீகத் தன்மை அவன் நினைவிலே படர்ந்து அவனை ஏங்க வைத்தது. சட்டென்று ஓர் ஆளை அந்த வீட்டிற்கு அனுப்பி, 'யார் யாழ் வாசிப்பது? வாசிக்கின்ற யாழ் அவனுக்கு எங்கே அகப்பட்டது?' என்று விசாரித்து வரச் சொல்ல வேண்டும் என்று கருதி, மேல்மாடத்தின் வாயிலுக்கு வந்து மெய்க்காப்பாளனை அழைத்தான் உதயணன். மெய்க்காப்பாளன், உதயணனுக்கு அருகில் வருவதற்குள் பக்கத்து அறையில் இருந்த வயந்தகன் அவசரமறிந்து விரைந்தோடி வந்தான். வந்து "என்ன செய்ய வேண்டும்? என்ன நிகழ்ந்தது?" என்று உதயணனைக் கேட்டான். உடனே, உதயணன், வயந்தகனை மேல் மாடத்தின் முன் பகுதிக்கு அழைத்துச் சென்று அவனையும் காற்றோடு கலந்து வந்த அந்த யாழிசையைக் கேட்கும்படி செய்தான். வயந்தகனும் அதைக் கேட்டுவிட்டு, "அது கோடபதியின் ஒலிதான்" என்று உறுதியாகக் கூறினான். உதயணன் உடனே அந்த வீட்டிற்குச் சென்று விவரங்களை மேலும் அறிந்து கொண்டு வருமாறு வயந்தகனை அனுப்பினான். வயந்தகன் கீழிறங்கி விரைந்து சென்றான். எதிர்ப்புறத்துத் தெருவில் யாழொலி எந்த வீட்டு மேல்மாடத்தில் இருந்து வந்ததோ, அந்த வீட்டிற்குள் செய்தியை அறியும் ஆவலோடு விரைந்து நுழைந்தான் வயந்தகன். கீழே இருந்த சிலரை விசாரித்ததில், யாழ் வாசிப்பவன் உஞ்சை நகரத்தைச் சேர்ந்த ஓர் அந்தண இளைஞன் தான் என்றும், அவன் அங்கே தன் நண்பர் வீட்டுக்கு அப்போதுதான் புதிதாக வந்துள்ளான் என்றும், வந்து இரண்டோர் நாள்களே ஆகின்றன என்றும், அவன் நன்றாக யாழ் வாசிப்பான் என்றும் விவரங்கள் தெரிய வந்தன. இவற்றைத் தெரிந்து கொண்ட பின்னர், மேல்மாடத்தை அடைந்து அந்த இளைஞனைச் சந்தித்துப் பேசும் கருத்துடன் வயந்தகன் ஆவலோடு சென்றான். திடும் என்று யாரும் எதிர்பாராத விதமாக வயந்தகன் உள்ளே நுழையவே, அருஞ்சுகன் யாழ் வாசித்துக் கொண்டிருந்ததை நிறுத்தி விட்டான். வயந்தகனை ஏற்கனவே அறிந்து கொண்டிருந்த மற்றவர்கள், அவனுக்கு வணக்கம் செலுத்தும் பாவனையில் எழுந்து நின்று வரவேற்றனர். வயந்தகன் நேரே யாழோடு வீற்றிருந்த அருஞ்சுகனின் அருகிற் சென்று அமர்ந்தான். "அன்பு கூர்ந்து இந்த யாழ் தங்களுக்குக் கிடைத்த வரலாற்றை எனக்குச் சிறிது விளக்க வேண்டும்! அதை நானும் அறிந்து கொள்ளலாம் அல்லவா?" என்று வயந்தகன் கேட்டவுடனே அருஞ்சுகன் மறுக்காமல், தான் கோடபதியைப் பெற்ற விவரத்தைக் கூறலானான். "இரண்டோர் நாள்களுக்கு முன்னால், உஞ்சையிலிருந்து நடையாக நடந்து கோசாம்பி நகருக்குப் பயணம் வரும்போது, வழியில் நருமதை நதிக்கு இப்பால், ஒரு பெரிய மலையடி வாரத்தில் மூங்கிற் புதர் ஒன்றில் சிக்கியிருந்த இந்த யாழை நான் கண்டேன். நீர் பருக வந்த யானைகளால் துன்புற நேருமே என்றஞ்சி நான் வேங்கை மரத்தில் ஏறிய போது, காற்றிலே மூங்கிற் புதரிலிருந்து இந்த யாழ் ஒலித்தது. இதன் ஒலி கேட்டு யானைகள் விலகிச் சென்றன. நான் இறங்கி இந்த யாழை எடுத்துக் கொண்டு வந்தேன்" என்று அருஞ்சுகன் யாவற்றையுமே கூறவே, வயந்தகன் அந்த யாழ் உதயணனுடைய கோடபதி என்பதையும் பத்திராபதியில் வரும்போது அது மூங்கிற்புதரில் சிக்கிக் கொண்டதையும் சொல்லி, அவனை யாழுடனே உதயணனிடம் அழைத்துச் சென்றான். காட்டில் கிடைத்த அந்த யாழால் உதயணனைச் சந்திக்கும் வாய்ப்பு வந்ததே என்ற மகிழ்ச்சியோடு வயந்தகனைப் பின்பற்றி அரண்மனை சென்றான் அருஞ்சுகன். இருவரும் அரண்மனை மேல்மாடத்தில் ஏறி நுழைந்ததும் அருஞ்சுகன் கையில் கோடபதியைக் கண்ட உதயணன் அவனை அன்போடு வணங்கி வரவேற்றான். அருஞ்சுகன் மீண்டும் தனக்கு அது கிடைத்த வரலாற்றைக் கூறிவிட்டு, அதனைப் பயபக்தியோடு உதயணன் கரங்களில் அளித்தான். "வருக என் கோடபதியே! நீதான் வத்தவனுக்கு, அமுதம்" என்று யாழை வரவேற்பவன் போலக் கூறிக் கொண்டே அதைப் பெற்றுக் கொண்டான் உதயணன். பின்பு வெகுநேரம் அவன் அருஞ்சுகனோடு அமர்ந்து யாழிசையையும் கலைகளையும் பற்றி ஆர்வத்தோடு அளவளாவிக் கொண்டிருந்தான். கோடபதியைக் கொண்டு வந்து கொடுத்தவன் என்ற முறையில் அருஞ்சுகனின் மேல் உதயணனுக்கு அளவற்ற அபிமானம் ஏற்பட்டிருந்தது. இறுதியில், அருஞ்சுகனுக்கு பல பரிசில்களை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு வழங்கி மகிழ்ந்தான் உதயணன். பரிசில்களை மட்டுமின்றித் தன் நாட்டைச் சேர்ந்த சிறப்பான ஊர் ஒன்றையும் அவனுக்கு அளிக்க உவந்தான். "அருஞ்சுக! நீ திரும்பவும் உஞ்சை நகருக்குச் செல்ல வேண்டாம். இங்கேயே கோசாம்பியில் நீ வசித்து வருதல் வேண்டும் என்பது என் விருப்பம். என் அரசவைக் கலைஞனாக நீ இங்கேயே இருந்தாக வேண்டும்" என்று உதயணன் வேண்டிக் கொண்டபோது அருஞ்சுகனும் வேண்டுகோளுக்கு உடன்பட்டு அங்கேயே, கோசாம்பியில் வசிப்பதற்கு தனக்குச் சம்மதம் தான் என்று மறுமொழி கூறினான். பின்னர் அவன் உதயணனிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றான். கோடபதி கைக்கு வந்ததும் ஆருயிர்க் காதலி வாசவதத்தையைப் பற்றிய பழைய நினைவுகளும் ஒன்றன்பின் ஒன்றாக அந்த யாழைக் காண்கின்ற போதிலும் வாசிக்கின்ற போதிலும் உதயணனுக்கு ஏற்படலாயின. பதுமை அவனுக்கு மிக அருகிலேயே இருந்தும் கூடத் தத்தையைப் பற்றிய இத்தகைய நினைவுகளை அவனால் தவிர்க்க முடியவில்லை. இழந்த பொருள்களை மீண்டும் அடைவதில் ஒரு துயரமும் உண்டு. மீண்டும் கிடைத்த அந்தப் பொருளோடு தொடர்புடைய பழைய துயர நினைவுகள் எவையேனும் இருந்தால், அவற்றைத் தவறாமல் நினைவூட்டி விடும் அந்தப் பொருள். கோடபதியால் உஞ்சை நகரத்தில் நளகிரியை அடக்கியது, அதனால் வாசவதத்தையைச் சந்தித்துக் காதல் கொண்டது, யூகியையும் ஒருங்கே இழந்தது முதலிய நினைவுகளை அவன் மனத்தில் படருமாறு செய்தது அந்த யாழ். பிங்கல கடகர்களாகிய தன் தம்பியரை மீண்டும் பெற்றது, கோசாம்பி நகரத்து ஆட்சியை மீண்டும் எய்தியது, எல்லாவற்றிற்கும் மேலாக 'இனிமேல் அது கிடைக்காது' என்று நம்பிக்கை இழந்துபோன கோடபதி அருஞ்சுகனால் கிடைத்தது ஆகிய இவ்வளவு நிகழ்ச்சிகளுக்காகவும் இன்புற்றிருக்க வேண்டிய உதயணன், இவற்றிற்கு நேர்மாறான பழைய துன்ப நினைவுகளைக் கோடபதியால் நினைவூட்டிக் கொண்டு நெஞ்சங் குழம்பிய நிலையில் சிறிதும் அமைதியின்றி இருந்து வந்தான். இங்கே கோசாம்பி நகரத்து நிகழ்ச்சிகள் இவ்வாறு இருக்க, மகத நாட்டில் உதயணன் புறப்படும் போது, 'உருமண்ணுவாவை எப்படியும் சங்க மன்னர்களிடமிருந்து விடுதலை செய்து அனுப்புவது தன்னுடைய பொறுப்பு' என்று அவனுக்கு வாக்களித்திருந்த மகத வேந்தன் தருசகன் அதற்காக முயற்சி செய்தான். உருமண்ணுவாவை விடுதலை செய்வதற்கு அவன் மேற்கொண்ட முயற்சிகள் பல. ஆருணியை வெல்லும் முயற்சியை மேற்கொண்டு புறப்படும் அந்த வேளையிலும் மறவாமல் 'நீங்கள் எவ்வாறேனும் உருமண்ணுவாவை விடுதலை செய்து அனுப்ப வேண்டும்' என்று உதயணன் உள்ளமுருக வேண்டிக் கொண்டதனால், தருசகனுக்கு அதனை மறுக்க முடியவில்லை. ஆகையால் தான், எப்படியும் உருமண்ணுவாவை விடுதலை செய்ய ஏற்பாடு செய்வதாகத் துணிந்து உதயணனிடம் அன்று வாக்களித்து விட்டான் அவன். உதயணன், வருடகாரன் முதலியவர்களுடனே புறப்பட்டுக் கோசாம்பிக்குச் சென்றபின், தனியாகச் சிந்தித்துப் பார்க்கும் போதுதான், 'உருமண்ணுவாவைச் சங்கமன்னர்களிடமிருந்து விடுவிப்பது அவ்வளவு எளிதாக முடிந்து விடக் கூடிய காரியமில்லையே' என்பது தருசகனுக்குப் புலப்பட்டது. எனவே அதற்கான முயற்சியில் நுட்பமான ஆழ்ந்த சிந்தனைகளுக்குப் பின் செயலாற்றுவதற்குத் திட்டமிட்டான் அவன். இறுதியில் ஓர் அருமையான வழி உருமண்ணுவாவை விடுதலை செய்வதற்கு ஏற்றதாகக் கிட்டியது. படையெடுத்து வந்து தோற்றுப் போய் ஓடிவிட்ட சங்க மன்னர்களைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானவர் சிலரும் உடைமைகளிற் சிலவும் இராசகிரிய நகரத்துச் சிறையில் இருந்ததுதான் அந்த வழி. இங்கிருக்கும் இந்த உடைமைகளையும் இவர்களையும் விட்டு விடுவதாக ஆசைகாட்டி விடுதலை செய்துவிட்டால், உருமண்ணுவாவைப் பதிலுக்கு விடுதலை செய்யுமாறு அவர்களைக் கேட்கலாம் என்பது தருசகனுக்குத் தோன்றிய திட்டம். எலிச்செவி அரசனுடைய தம்பியாகிய சித்திராங்கதன் முதலிய சில முக்கியமானவர்கள் தருசகன் வசம் சிறைப்பட்டுக் கிடந்ததால், தன்னிடம் இருக்கும் அந்தப் பிடிப்பை வைத்துக் கொண்டு எதிரிகளிடமிருக்கும் உருமண்ணுவாவை விடுதலை அடையச் செய்து விடலாம் என்பதே அவனது நம்பிக்கை. 'எதிரிகள் தனது நம்பிக்கை நிறைவேற்றுவதற்கு ஏற்ற நிலையில் இருக்கின்றார்களா? அல்லது அழுத்தமான பிடிவாதத்தோடு இருந்து வருகிறார்களா?' என்று மெல்ல அறிந்து வருவதற்காகத் திறமையும் நுணுக்கமும் வாய்ந்த சில தூதுவர்களை சங்க மன்னர்களிடம் அனுப்பினான் தருசகன். தூதுவர்கள் சென்றனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாகச் சங்க மன்னர்கள் மகிழ்ச்சியோடும் மரியாதையோடும் அவர்களை வரவேற்றனர். இழிந்தவர்களோடு கூடி இன்பம் நுகர்வதிலும் உயர்ந்தவர்களோடு பகைகொள்வதே நல்லது என்ற தத்துவத்தை உணர்ந்து கொண்டவர்கள் போல் நடந்து கொண்டனர் சங்க மன்னர்கள். தருசகனிடமிருந்து சென்றிருந்த தூதுவர்கள் தாமாகப் போய் அங்கு எல்லா விவரங்களையும் கூறுவதற்கு முன்பே அவர்களாகவே உருமண்ணுவாவைச் சிறையிலிருந்து விடுதலை செய்து கொணர்ந்து அழைத்துக் கொண்டு போகுமாறு வேண்டினர். சென்றிருந்த தூதுவர் திகைத்தனர். சங்க மன்னர்களுடைய பண்பாட்டில் அவர்கள் மதிப்பிற்குரிய தன்மையைக் கண்டனர். உருமண்ணுவாவும் தூதுவர்களும் சங்க மன்னர்க்குத் தங்கள் உள்ளமர்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு விரைவில் தங்களிடத்தில் சிறைப்பட்டிருக்கும் எலிச்செவியரசனின் தம்பி முதலியோரை விடுவித்து அனுப்பி விடுவதாகக் கூறி விடைபெற்றுக் கொண்டு சென்றனர். இராசகிரிய நகரத்திற்கு வந்ததும் உருமண்ணுவா தருசக வேந்தனைச் சந்தித்துச் சங்க மன்னர்கள் தன்னிடமும் மகத நாட்டுத் தூதுவர்களிடமும் பண்புடனே நடந்து கொண்ட முறையைப் பாராட்டிக் கூறிச் சித்திராங்கதன் முதலியோரை உடனே விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டான். தருசகனும் சங்க மன்னர்களின் பண்பையும் நல்லியல்பையும் பாராட்டி உடனே சித்திராங்கதன் முதலியோரை விடுதலையாகச் செய்தான். அதுவரை சிறை வாழ்வைப் பொறுத்துக் கொள்ள நேர்ந்தமைக்காக வருத்தந் தெரிவித்துக் கொண்டு அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினர் தருசகனும் உருமண்ணுவாவும். அவர்கள் சென்ற பின் உதயணனைப் பற்றிய சகல விவரங்களையும் தருசக வேந்தனிடம் கேட்டு அறிந்து கொண்டான் உருமண்ணுவா. கோசாம்பியை ஆருணியிடமிருந்து மீட்டாயிற்று என்ற செய்தி அவனுக்குப் பேருவகை தந்தது. எல்லா வகையிலும் தன் தலைவனான உதயணனுக்குத் தருசகராசன் மிகுந்த உதவி செய்துள்ளமையைப் புகழ்ந்து கூறி நன்றி செலுத்தி விட்டு அங்கேயே சிறிது காலம் உருமண்ணுவா தங்கியிருந்தான். இந்த நிலையில் வாசவதத்தையோடு மறைந்து வசித்து வந்த யூகி, சாதகன் என்னும் குயவனை உருமண்ணுவாவிடம் தூது அனுப்பியிருந்தான். உஞ்சை நகரத்திலிருந்து உதயணன் மீண்டு வருவதற்காக அன்று யூகி செய்த சூழ்ச்சிகளுக்குத் துணையாக இருந்தவனாகிய இந்தச் சாதகன், யூகி உஞ்சை நகரிலிருந்து திரும்பும் போது தானும் வந்து, யூகிக்கு உதவியாக இருந்து வந்தான். அடிக்கடி யூகி, உருமண்ணுவாவிற்குக் கூறியனுப்பும் சூழ்ச்சித் திட்டங்களின் விவரத்தை அவனே கூறுவதற்குப் புறப்படுவது வழக்கம். சங்க மன்னர்களிடமிருந்து விடுதலை அடைந்து இராசகிரிய நகரத்தில் தருசக மன்னனின் அரண்மனையில் உருமண்ணுவா தங்கியிருக்கிறான் என்பதை நன்கு தெளிவாக அறிந்து கொண்ட யூகி, சாதகனைத் திருமுகத்துடனே இராசகிரிய நகரத்துக்கு அனுப்பியிருந்தான். இரண்டாவது முறையாகத் தானும், தத்தையும் இறந்து விட்டதாக உதயணனை நம்பச் செய்த பின் அவன் நன்மையைக் குறிக்கொண்டு, தான் செய்த ஒவ்வோர் சூழ்ச்சியும் நடத்துவதற்கு உருமண்ணுவாவைத் தான் யூகி முற்றிலும் பொறுப்பாக நம்பியிருந்தான். 'இப்போது உதயணன் கோசாம்பி நகரத்து ஆட்சியை மீட்டுக் கொண்டு வாழ்விலே தனது அரசியல் பொறுப்பை உணர்ந்தவனாகப் பதுமையோடு அமைதியான முறையிலே வாழ்ந்து வருகிறான்' என்பதைக் கேள்வியுற்றுத் 'தன் திட்டங்களும் சூழ்ச்சிகளும் அநேகமாக வெற்றி பெற்றுவிட்டன' என்ற மன நிறைவு யூகிக்கு அப்போது ஏற்பட்டிருந்தது. எனவே, 'வாசவதத்தை உயிருடன் தான் இருக்கிறாள்' என்று கூறி அவனிடத்தில் மீண்டும் ஒப்படைக்கவும், தான் 'அவல் விக்கி இறந்து போனதாகப் பரப்பிய செய்தி பொய்' என்று நிரூபித்துக் காட்டவும் ஏற்ற சந்தர்ப்பம் வந்து விட்டது என்பதை யூகி உணர்ந்தான். தனது இந்தக் கருத்தை சமயமறிந்து முடித்து வைக்கத் தகுந்தவன் உருமண்ணுவாவே என்ற எண்ணத்தோடுதான், சாதகனைத் தனது திருமுகத்தோடு அவனிடத்துக்கு அனுப்பியிருந்தான். சாதகன் திருமுகத்தோடு தன்னைத் தேடிக் கொண்டு வந்த போதே, யூகி தான் தன்னிடம் அவனை அனுப்பியிருப்பான் என்பதை உருமண்ணுவாவும் ஒரே நொடியில் உய்த்துணர்ந்து கொண்டான். சாதகன் தன்னைத் தேடி வரும் போது அரண்மனையைச் சேர்ந்த யானைக் கொட்டிலின் வாயிலில் யானைப் படைத் தளபதிகள் சிலரோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தான் உருமண்ணுவா. தொலைவில் வரும்போதே சாதகனை அடையாளம் கண்டு கொண்டான். சாதகன் கையில் திருமுகச் சுருளோடு தயங்கி நின்ற குறிப்பைக் கண்டதும், அவன் தன்னைத் தனியாக அழைக்கின்றான் என்ற குறிப்பைப் புரிந்து கொண்டு சாதகனோடு வேறு இடத்திற்குத் தனிமையை நாடிச் சென்றான் உருமண்ணுவா. அங்கு சுற்றும் முற்றும் நோக்கிக் கொண்டே யூகியின் திருமுக ஓலையை உருமண்ணுவாவிடம் எடுத்துக் கொடுத்த பின் விவரங்களைக் கூறினான் சாதகன். உருமண்ணுவா, யூகியின் ஓலையை வாங்கிப் படித்தான். 'உதயணன் அரசபாரத்தின் பொறுப்பை உணர்ந்து கோசாம்பியைக் கைப்பற்றி அமைதியான முறையில் ஆளத் தொடங்கி விட்டதனால் வாசவதத்தையோடு தானும் மறைவிலிருந்து வெளிப்பட்டுப் பின்பு தத்தையை அவனிடம் ஒப்பித்து விட்டு, எல்லாவற்றையும் ஐயமற அவனுக்கு விளக்கிக் கூறிவிட வேண்டும்' என்ற செய்தியைத் தான் யூகி அந்தத் திருமுகத்தில் உருமண்ணுவாவுக்கு எழுதியிருந்தான். அதைப் படித்தவுடன் உருமண்ணுவாவும் மகிழ்ச்சியே அடைந்தான். 'யூகியும் தத்தையும் மறைந்த பின், அவர்கள் எங்கே எப்படிக் காலங்கழித்து வந்தார்கள்?' என்ற செய்தியை அடிக்கடி வந்த திருமுகங்களினால் அறிந்திருந்தான். ஆனாலும் அவற்றை முழுவதும் ஆதியோடந்தமாகக் கூறும்படி அப்போது சாதகனைக் கேட்டான் உருமண்ணுவா. சாதகனும் நிகழ்ந்த யாவற்றையும் முதலிலிருந்து தொடங்கிக் கூறலானான். "இலாவாண நகரில் அரண்மனையைத் தீயிட்டு விட்டுச் சுரங்க வழியாகத் தப்பிப் பிறரறியாமல் காட்டு வழியே சென்றோம். காட்டு வழியில் வாசவதத்தை நடக்க முடியாமல் தளர்ந்தமையால் எங்கள் பயணம் சற்று மெல்லவே நடந்தது. காட்டைக் கடந்து ஒரு தவப்பள்ளியை அடைந்து அங்கே சில நாள் தங்கி இருந்தோம். பின்பு 'அது தவத்தினர் வசிக்கும் இடமாகையினால் எங்கள் இரகசியம் வெளிப்பட்டு விடுமோ?' என்று அஞ்சி விரைவில் அங்கிருந்து கிளம்பிச் சண்பை நகரத்தைச் சென்றடைந்தோம். சண்பை நகரத்தில் யூகிக்கு நண்பனாகிய மித்திரகாமன் என்பவன் வீட்டில் சிறிது காலம் மறைவாக வசித்து வந்தோம். மித்திரகாமனின் மனைவி வாசவதத்தையை அன்போடு பேணிப் போற்றி வந்தாள். இந்த நிலையில் சண்பை நகரிலிருந்து அடிக்கடி ஆருணியிடம் கோசாம்பி நகருக்குச் சென்று பழகும் காளமயிடன் என்பவன் அக்கம் பக்கத்தில் எங்களைப் பற்றி ஐயந்தோன்ற விசாரிக்கலானான். சண்பை நகரத்தில் வசித்து வந்தாலும் ஆருணிக்கு ஒற்றனைப் போன்றவன், காளமயிடனென்னும் இந்த அந்தணன். 'இவன் மூலமாகப் பகைவனான ஆருணி அறிந்து கொள்ளும்படி நம் இரகசியம் வெளிப்பட்டு விடக்கூடாதே' என்று அஞ்சி, மித்திரகாமனையே துணைக்கு அழைத்துக் கொண்டு சண்பை நகரை விட்டுப் புறப்பட்டுப் புண்டரம் என்னும் நகரத்தை அடைந்தோம். அந் நகரத்தை ஆண்டு வந்த வருத்தமானன் என்னும் அரசன், யூகிக்கு நண்பன் ஆகையால் அவன் ஆதரவில் மறைந்து வாழ்ந்து வரலானோம். அங்கும் விதி எங்களை அமைதியாக இருக்க விடுவதாயில்லை. வருத்தமானன் மேல் பகை கொண்டிருந்த அவன் தமையன் இரவிதத்தன், திடீரென்று புண்டர நகரத்தின் மேல் படையெடுத்துத் துன்புறுத்தவே, அங்கிருந்தும் நாங்கள் தப்பி ஓடி அந் நகரத்திற்கு அரண்போல அமைந்திருக்கும் ஒரு மலை சாரலை அடைக்கலமாகக் கொண்டு அங்கே புகுந்தோம். அவ்வாறு அந்த மலைச்சாரலில் வசித்து வந்த போதுதான், உதயணன் கோசாம்பி நகரை வென்று விட்ட செய்தியும் பதுமை அவன் மனைவியானது முதலிய பழைய நிகழ்ச்சிகளையும் நாங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. யூகி இப்போது இவற்றை அறிந்து கொண்ட பின், 'தத்தையை இனிமேல் எப்படியும் உதயணனிடம் கொண்டு போய்ச் சேர்த்து விட வேண்டும்' என்றெண்ணியே இன்று என்னை இங்கே திருமுகத்தோடு அனுப்பினார். அவர்கள் எல்லோரும் இப்போது புண்டர நகரத்து மலைச்சாரலில் தான் வசித்து வருகிறார்கள். மேலே நடக்க வேண்டியவைகளை விளக்கி, நீங்கள் என் வசம் இனிமேல் கூறி அனுப்பப் போகும் செய்திகளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள். எனவே, விரைவில் எனக்கு செய்தி கூறி அனுப்புங்கள்" என்று சாதகன், உருமண்ணுவாவை நோக்கிக் கூறி வேண்டிக் கொண்டான். உடனே உருமண்ணுவா, சாதகனைச் சிறிது போது அங்கே தாமதிக்கும்படி கூறிவிட்டு அரண்மனைக்குள் நுழைந்து, யூகியின் திருமுகத்தோடு அவசரமாகத் தருசக மன்னனைச் சந்திப்பதற்காகச் சென்றான். அப்போதிருந்த நிலையில் தருசகனைப் போன்ற ஒரு பேரரசனிடம் எல்லாவற்றையும் விளக்கமாகக் கூறி, ஆலோசனைக் கேட்டுக் கொண்டு அதன்படி நடப்பதே சிறந்ததாக இருக்கும் என்று உருமண்ணுவாவின் மனத்தில் தோன்றியது. வியப்புக்குரிய மிகப் பெரிய இரகசிய உண்மைகளாயினும் அவற்றை அந்த நிலையில் தருசகனிடம் விவரித்துச் சொல்ல வேண்டியதாகத்தான் இருந்தது. உருமண்ணுவா ஒவ்வொன்றாகக் கூறிக் கொண்டே வரும் போது சிறிது சிறிதாகத் தருசகனுடைய வியப்புப் பெருகிக் கொண்டே இருந்தது. எல்லாவற்றையும் தருசகனுக்குக் கூறி முடித்த பின், தான் உடனே யூகி முதலியவர்களைச் சந்திப்பதற்காகப் புண்டர நகரம் செல்ல வேண்டும் என்றும், தன்னோடு துணையாக வருவதற்கு இராசகிரிய நகரத்து அரண்மனையிலிருந்து விவரந்தெரிந்த ஒரு மனிதரை உடனே அனுப்பி உதவ வேண்டும் என்று தருசகனை வேண்டிக் கொண்டான் உருமண்ணுவா. உருமண்ணுவாவின் வேண்டுகோளின் படி இராசகிரிய நகரத்து அரண்மனையைச் சேர்ந்த சக்தி யூதி என்னும் மதி நுட்பம் மிக்க மனிதனை அழைத்து அவனை உடன் கூட்டிக் கொண்டு செல்லுமாறு அனுப்பினான் தருசகன். அன்றே உருமண்ணுவா, சக்தி யூதியுடனும் ஓலை கொண்டு வந்த சாதகனுடன் புண்டர நகரத்தை நோக்கிப் பயணம் புறப்பட்டான். புண்டர நகரத்திற்குச் செல்லும் போது இடைவழியில் இருந்த சண்பை நகரில் நுழைந்து மூவரும் மித்திரகாமனைச் சந்தித்தனர். அவன் கூறிய சில செய்திகளிலிருந்து, 'யூகி தத்தை முதலியோருக்கு இந்த அஞ்ஞாத வாசத்தினால் மிகுந்த துன்பம் ஏற்பட்டிருக்குமோ?' என மனம் தளர்ந்து போயிருந்த உருமண்ணுவாவுக்குச் சிறிது ஆறுதல் உண்டாயிற்று. 'அவர்கள் மிகுந்த துன்பத்தை அடையாதவாறு அங்கங்கே வேண்டிய உதவிகளை எய்தியிருந்தார்கள்' என்பதை மித்திரகாமன் ஓரளவு தெளிவாகக் கூறியிருந்ததனால் தான் உருமண்ணுவாவிற்கு இந்த ஆறுதலாவது ஏற்பட்டிருந்தது. அப்பால் மித்திரகாமனிடம் விடை பெற்றுக் கொண்டு மூவரும் புண்டர நகரத்தின் எல்லையிலே இருந்த மலைச்சாரலை அடைந்து அங்கே யூகி, வாசவதத்தை, சாங்கியத்தாய் ஆகிய மூவரையும் சந்தித்தனர். உருமண்ணுவாவும் யூகியும் அவ்வளவு காலம் சந்திக்காமல் இருந்த பிரிவு தீர ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு மகிழ்ந்தனர். நண்பர்களின் அந்த உணர்ச்சிச் சங்கமத்தைக் கண்டு யூதி, சாதகன் ஆகிய இருவருக்கும் கண்களில் நீர் துளிர்த்து விட்டது. அந்தக் காட்சி அவர்களை மனம் உருக்கிற்று. |