![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
8. சாங்கியத் தாயின் கதை காஞ்சன மாலையைக் காவல் வைத்துவிட்டுக் கிளம்பிய செவிலி, வேல்முற்றத்தையும் மயிலாடு முன்றிலையும் கடந்து சென்று தத்தை யாழ்கற்கும் இடத்துக்கு அருகில் தகுந்த நேரத்தையறிந்து கீதசாலையின் ஒரு புறத்தே காத்திருந்தாள். உதயணன் யாழ் கற்பிக்கும் நேரமாகியதறிந்து அப்போது அங்கே வந்து சேர்ந்தான். வந்தவனைச் செவிலி குறிப்பாகச் சில சொல்லி மணல் முற்றத்திற்கப்பாலுள்ள மாதவிப் பந்தரைச் சார்ந்த புன்கமர மொன்றின் கீழ் அழைத்துச் சென்று இருக்கச் செய்தாள். சுற்றும் முற்றும் பார்த்துத் தங்கள் தனிமையை உறுதி செய்து கொண்டு, கண்ணினும் செவியினும் நண்ணியறியும் ஒற்றர்கள் யாருமில்லாமை யறிந்து சாங்கியத் தாய் அவனிடம் கூறுவாளானாள்; "நற்குடியிலே தோன்றிய அரசிளங்குமரனே! நின் போன்றோர் நருமதை போன்ற பெண்களின் விஷயத்தில் ஈடுபட்டுக் குடிவடுப்படுதல் என்னால் பொறுக்க முடியாது." செவிலியினுடைய கண்களில் கண்ணீர் துளித்து விட்டது. அன்பு உள்ளத்தோடு இயைந்த பாசம் என்பது சாதாரண சித்தாந்தம். சாங்கியத் தாயின் நிலையிலிருந்த அது உடலுக்கும் இயைபு தருகிறது. அன்பு தன்னால் தொடர்புற்றார் துன்பங் கண்டபோது கண்ணீராய்த் தோற்றமளிக்கிறது. தான் கண் கலங்கும்படி தனக்கு முன் நின்று கூறும் செய்திகளைக் கேட்டு, 'இவள் யார்?' என்னும் ஐயக்குறி முகத்தில் தோன்ற உதயணன் வாளாவிருப்பதைக் கண்ட சாங்கியத் தாய் தன் வரலாற்றையும் தனக்கும் உதயணனுக்குமுள்ள தொடர்பையும் கூறுகின்றாள்: "யான் யார் என ஐயுற்று நோக்கும் அரசிளங்குமர! நீ சிறிதும் ஐயுறல் வேண்டா. நின்னால் வாழ்வு பெற்றவள் யான். அதை நீ விளக்கமாக அறியுமாறு இப்போது கூறுகிறேன் கேள். கௌசாம்பி நகரத்தைச் சேர்ந்த யான் ஒரு பார்ப்பனி. திருமணமாகிய சில நாள்களில், கணவன் என் இளமை நலமும் இன்பச் செவ்வியும் நோக்காது என்னைப் பிரிந்து நுந்தையின் அவைக் களத்தையடைந்து, புகழ் மிகப் பெற்று, வேற்று நாடுகள் சென்று, தன் கலைநிலை நாட்டுவானாயினன். பருவம் என்னைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டது. மகளிர்க்குப் பொற்பினுட் பொற்பாய், புகழ் தரும் கற்பை இழந்துவிட்டேன். யான் வழி தவறியதை அறம் கூறும் அவையும் அறிய நேர்ந்தது. செய்த குற்றத்திற்கு ஏற்ற தண்டனையும் விதித்தது. மணற் குடத்தோடு பிணித்து என்னை யமுனை யாற்றில் வீழ்த்தி விடும்படி தண்டனை கிடைத்தது. குற்றம் தலை மேலிருக்கும் போது உற்றதை மறுக்கவும் இயலவில்லை. ஒப்புக்கொண்டேன். இத் தண்டனை அடைந்தார்க்குச் செய்யும் வழக்கப்படி, என் தலையில் செங்கற்பொடியைத் தூவிப் பறையறைந்து, நகரறிய என் பிழை கூறி யமுனை ஆற்றிற்கு என்னை அழைத்துச் சென்றான் தண்டனையை நிறைவேற்ற வேண்டிய புலையனொருவன். அப்போது நீ, நின் இளம் நண்பர்களுடன் யமுனை நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தாய். என்னை நதியில் வீழ்த்துவதற்காகப் படகேற்றி நடு ஆற்றிற்குக் கொண்டு போயினர். நடப்பதென்ன என்றறியும் ஆவலினால் நீ என் செய்தியைக் கேள்விப்பட்டு ஓடோடியும் வந்து, என்னை மீண்டும் கரைக்குக் கொண்டு வரும்படி ஆணை தந்தாய். நின் ஆணைப்படி யான் கரைக்குக் கொண்டு வரப்பட்டேன். என்னை விரைவாகத் தோணியிலிருந்து இறக்கும் போது தோணியோட்டும் புலையனுடைய துடுப்பு என் நெற்றியில் வடுப்படுத்திவிட்டது. அந்த வடு இதோ இருக்கிறது" சாங்கியத்தாய் நெற்றியில் சுருண்டு படிந்திருந்த கூந்தலை விலக்கி வடுவைக் காட்டினாள். உதயணன் கூர்ந்து நோக்கினான். "யான் கரையில் இறக்கப்பட்டதும் நடந்த யாவற்றையும் விசாரித்தறிந்து கொண்டு நீ 'இவள் செய்தது மன்னிக்க முடியாத குற்றமேயானாலும், அதற்காக இவளுக்கு விதிக்கப்பட்ட இத்தண்டனை மிகுதியானது' என்று உரைத்தாய். ஏற்ற தண்டனையொன்றை யுரைக்கும்படி அருகே நின்ற அறிஞர்களைக் கேட்டாய். பலர் பலவாறு கூறினர். 'தாம் மேற்கொண்ட நெறியைப் பிழைத்தவர்கள், கைக்கொள்வதற்குரிய விரதமே இவளுக்கும் ஏற்ற தண்ட்னை' என்று அணித்தே நின்ற ஒரு குறிக்கோளான் கூறினான். அது ஏற்றதாக நினக்குப் படாமையால் மீண்டும் கேட்டாய். அது கேட்டு உன் அருகே நின்ற கோசிகன் என்னும் சேனைக் கணிமகன், 'இளமையில் கணவனைப் பிரிந்தமை காரணமாக நெறிக்கடந்தொழுகிய இவள் தவத்துறையிற் செல்லுதற்குரியள். இவளைக் கொல்லுதல் பாவமாகும். தவநெறியில் சில நாள் ஆழ்ந்திருந்து பின்னர் ஓரரசன் மேற்பார்வையில் அவன் அந்தப்புர மகளிர்க்கு அறநெறி புகட்டும் முதுமகளாக இவள் ஆவாள்' என்று கூறினான். அதுவே நினக்கும் பொருந்திய நெறியாகப் புலப்பட்டது. என்னை அவ்வாறே செய்யுமாறு கூறி அக்கொடுமையிலிருந்து விடுவித்தாய்" என்று சொல்லி நிறுத்தினாள் சாங்கியத் தாய். உதயணன் அவள் வாழ்விலே அதற்குப் பின்பு நடந்த நிகழ்ச்சிகளையும் தான் அறிய வேண்டுமென்று கூறவே அவள் மேலும் கூறுவாளாயினள்: "அங்கிருந்து சென்று கங்கைக்கரையை அடைந்த யான் வைர வியாபாரிகளுடன் வட தேசத்திற்குச் செல்லலானேன். வழியில் யான், தன் சீடர்களுடன் யாத்திரை செல்லும் சாங்கிய முனிவன் ஒருவனைச் சந்தித்தேன். அவனை அடிபணிந்து வணங்கிச் சாங்கிய மதத்திற் சேர்ந்து அவனோடு சென்றேன். நாளடைவில் சாங்கிய மத உண்மைகளை அந்த முனிவரிடமிருந்து நன்கு கற்றறிந்து சமயவாதம் புரிவதில் தேர்ச்சியடைந்தேன். இமயமலையிலுள்ள சாங்கியர் ஆசிரமத்தில் இரண்டாண்டுகள் தங்கினேன். பின்னர் சாங்கிய முனிவர், தம் சீடர்களுடன் தெற்கே குமரியில் நீராடப் போந்தார். யானும் அவருடன் புறப்பட்டேன். இடையே இந்நகரத்தின் பாலுள்ள காள வனத்தைச் சார்ந்த ஓர் தவப்பள்ளியில் சில நாள்கள் தங்கினார். பிரச்சோதனனுடைய அவையிலுள்ள பல சமயவாதிகளை வென்று புகழ்க்கொடி நாட்டும் பேறு அப்போது என் ஆசிரியனுக்குக் கிட்டியது. மன்னன் என் ஆசிரியன்பாற் பெருமதிப்புக் கொண்டான். யானும் பிரச்சோதனனுடைய அரண்மனையில் நெருங்கிப் பழகினேன். அரசமாதேவி என்னை மிக்க அன்புடன் போற்றி, என்பால் அறங்கேட்க ஆவல் கொண்டாள். எனவே நான் இங்கேயே தங்கிவிட்டேன். ஆசிரியர் முதலியோர் குமரியாடச் சென்றுவிட்டனர். அரண்மனையில் நிலையாகத் தங்கி அரசமாதேவிக்கு அறநெறி விளக்கி வருங்கால், சிறுமியாக இருந்த வாசவதத்தை என்னைப் பெரு விருப்புடன் பார்த்து மகிழ்ச்சியாகப் பழகுவாள். பழக்கம் வளர்ச்சியடைய அடைய நற்றாய்க்கு அடுத்த நிலையிலிருந்து அவளை யான் காக்க வேண்டியதாயிற்று. அரசமாதேவியும் அவ்வாறே காக்குமாறு வேண்டிக் கொண்டாள். ஆகவே யான் தத்தையின் செவிலித் தாயானேன்." சாங்கியத் தாய் இவ்வாறு தன் வரலாற்றை உதயணனுக்குக் கூறி முடித்தாள். சாங்கியத் தாயின் வாழ்க்கைக் கதையில் தானும் பெருமைக்குரியதொரு பங்கு பெற்றிருப்பதை அறிந்த உதயணனுக்கு அவளிடம் பேரன்பு உண்டாயிற்று. அவளை மதித்து வணங்கினான் அவன். |