கணிமேதாவியார் இயற்றிய ஏலாதி (உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.) ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம் 'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்பெறும். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு, நாககேசரம் மூன்று பங்கு, மிளகு நாலு பங்கு, திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படி சேர்த்து இம் மருந்தை ஆக்குவர். ஏலாதி நூலும் ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்களைப் பெற்று, உயிருக்கு உறு துணையாக அற நெறியை விளக்கி உரைக்கும் ஒப்புமை பெற்றமையால் இப் பெயரைப் பெற்றுள்ளது. இந் நூலின் ஆசிரியர் கணிமேதாவியார். கணிமேதை என்றும் இவர் வழங்கப் பெறுவர். கணிமேதை என்பது கொண்டு சோதிட நூற் புலமை மிக்கார் இவர் என்று கொள்வாரும் உண்டு. நூலின் முதற்கண் அருகக் கடவுளுக்கு இவர் வாழ்த்துக் கூறியுள்ளமையினாலும், நூலுள் சமண சமயத்தின் சிறப்பு அறங்கள் சுட்டப் பெறுதலினாலும், இவரைச் சமண சமயத்தவர் என்று கொள்ளலாம். இந் நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எண்பது பாடல்கள் உள்ளன. ஆறு பொருள்களை நான்கு அடிப் பாடலில் அடக்கும் இந் நூலில், மகடூஉ முன்னிலைகளைச் சிற்சில பாடல்களில் ஆசிரியர் மேற்கொள்ளுதல், பொருளை மேலும் குறுக்கிவிடுகிறது. கடவுள் வாழ்த்து
அறு நால்வர் ஆய் புகழ்ச் சேவடி ஆற்றப் பெறு நால்வர் பேணி வழங்கிப் பெறும் நான் - மறை புரிந்து வாழுமேல், மண் ஒழிந்து, விண்ணோர்க்கு இறை புரிந்து வாழ்தல் இயல்பு.
புரிந்து - விரும்பி விண்ணோர்க்கு - தேவர்களுக்கு மந்திரி முதலிய இருபத்து நால்வரும் குற்றமற்ற புகழமைந்த தனது சிவந்த பாதங்களால் இட்ட பணியைச் செய்ய ஒழுக்கத்தின் பயனைப் பெறுகின்ற பிரமச்சாரி முதலிய நால்வர் விரும்பிய பொருளைக் கொடுத்து, நான்மறை கற்று, அவ்வொழுக்கத்துடன் வாழ்ந்தால் அவன் தேவர்களுக்கு அரசனாகிய இந்திரனால் விரும்பப்பட்டு வாழ்வான். நூல்
சென்ற புகழ், செல்வம், மீக்கூற்றம், சேவகம் நின்ற நிலை, கல்வி, வள்ளன்மை, - என்றும் அளி வந்து ஆர் பூங் கோதாய்!-ஆறும் மறையின் வழிவந்தார்கண்ணே வனப்பு. 1
வள்ளன்மை - ஈகைத்தன்மை வனப்பு - அழகு நிறைந்த நவையணிந்த கூந்தலையுடையாய்! திசையெங்கும் பரவிய புகழ், செல்வம், மேன்மையான சொல், வீரத்தில் அசையாத நிலை, கல்வி, வரையாது கொடுத்தல் ஆகிய இவ்வாறும் தொன்மையுடைய குடிப்பிறந்து திருநான்மறை நெறி ஒழுகுவோரது இலக்கணம் ஆகும்.
கொலை புரியான், கொல்லான், புலால் மயங்கான், கூர்த்த அலைபுரியான், வஞ்சியான், யாதும் நிலை திரியான், மண்ணவர்க்கும் அன்றி, - மது மலி பூங் கோதாய்!- விண்ணவர்க்கும் மேலாய்விடும். 2
கூர்த்த - மிக்க யாதும் - சிறிதும் தேன் சிந்தும் பூவையணிந்த கூந்தளையுடையவளே! கொலைத் தொழிலை விரும்பாதவனும், பிற உயிர்களைக் கொல்லாதவனும், புலால் உண்ணாதவனும், மிகுந்து வருந்தும் தொழிலை செய்யாதவனும், பொய் பேசாதவனும், எந்த நிலையிலும் தன் நிலையிலிருந்து விலகாதவனும் பூமியில் மட்டுமல்லாமல் தேவலோகத்திலும் போற்றப்படுவான்.
தவம் எளிது; தானம் அரிது; தக்கார்க்கேல், அவம் அரிது; ஆதல் எளிதால்; அவம் இலா இன்பம் பிறழின், இயைவு எளிது; மற்று அதன் துன்பம் துடைத்தல் அரிது. 3
தக்கார்க்கேல் - தகுதியுடைய சான்றோர்களால் அவம் இலா - தாழ்வில்லாத யாவருக்கும் தவம் செய்தல் எளிது, கைப்பொருள் வழங்கல் அரிது, பெரியோரின் குற்றத்துக்கு ஆளாதல் எளிது, நன்நெறியில் ஒழுகுதல் அரிது, வீட்டின்பம் தவறுமாயின் பிறவி தொடர்தல் எளிது, முக்தி பெறுதல் அரிது.
இடர் தீர்த்தல், எள்ளாமை, கீழ் இனம் சேராமை, படர் தீர்த்தல் யார்க்கும், பழிப்பின் நடை தீர்த்தல், கண்டவர் காமுறும் சொல், - காணின், கல்வியின்கண் விண்டவர் நூல் வேண்டாவிடும். 4
சேராமை - இணங்காமை எள்ளாமை - பிறரை இகழாமை பிறர்க்கு நேரிட்ட துன்பந் துடைத்தலும், பிறரை இகழாமையும், கீழ்மக்களோடு பழகாமையும், யாவர்க்கும் பசித்துன்பம் போக்குதலும், உலகம் பழிக்கும் நடையினின்று நீங்குதலும், தன்னை எதிர்ப்பட்டவர் விரும்பும் இன்சொல்லும் ஒருவன் தானே கண்டு கொண்டானெனில் கற்றரிந்தோரால் சொல்லப்பட்ட நூல்களைப் பார்த்து அறிய வேண்டிய பொருள் ஒன்றுமில்லாதவன் ஆவான்.
தனக்கு என்றும், ஓர் பாங்கன், பொய்யான்; மெய் ஆக்கும்; எனக்கு என்று இயையான், யாது ஒன்றும்; புனக் கொன்றை போலும் இழையார் சொல் தேறான்; களியானேல்; - சாலும், பிற நூலின் சார்பு. 5
இயையான் - பற்றுவையாமல் களியானேல் - செருக்கு கொள்ளாமல் இருப்பானாயின் எதற்காகவும், தனக்காகவும் தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும் பொய் பேசாது உண்மையுரைப்பவனும், யாதொரு பொருளையும் எனக்குரியதென எடுத்து வைக்காதவனும், முல்லை நிலத்தில் உள்ள கொன்றைப் பூக்களை அணியும் பெண்களின் சொற்களைக் கேட்காதவனும், செல்வச் செருக்கில்லாதவனாய் ஒருவன் வாழ்ந்தால் அவனிடத்தில் அறநூல்களில் கூறப்பட்ட மேன்மையான பொருள்களெல்லாம் வந்து நிரம்பும்.
நிறை உடைமை, நீர்மை உடைமை, கொடையே, பொறை உடைமை, பொய்ம்மை, புலாற்கண் மறை உடைமை, வேய் அன்ன தோளாய்! - இவை உடையான் பல் உயிர்க்கும் தாய் அன்னன் என்னத் தகும். 6
நீர்மை உடைமை - நல்லியல்புடைமை மறை உடைமை - மறுத்தலுடைமை மூங்கிலையொத்த தோளையுடையவளே! புலன் வழி போகாது தன் மனத்தை அடக்குதலும், நற்குணமுடைதலும், ஈதலும், பொறுமையோடிருந்தலும், பொய் கூறாது தன்னை அடக்குதலும் ஊன் உண்ணாமையும் ஆகிய இப்பண்புகளை உடையவனை தாயின் அன்பு போல அன்பினையுடையவன் என்று யாவரும் போற்றுவர்.
இன்சொல், அளாவல், இடம், இனிது ஊண், யாவர்க்கும் வன்சொல் களைந்து, வகுப்பானேல் மென் சொல், - முருந்து ஏய்க்கும் முள் போல் எயிற்றினாய்! - நாளும் விருந்து ஏற்பர், விண்ணோர் விரைந்து. 7
அளாவல் - உள்ளங்கலந்த உறவும் ஊண் - உணவும் மிருதுவாகிய சொல்லையும் மயிற்பீலியினது அடியைப் போன்று பல்லையும் உடையவளே! தன் மனைக்கு வரும் விருந்தினரிடம் இன்சொற் கூறலும், கலந்துறவாடலும், இருக்கையுதவலும், அறுசுவையுண்டி யளித்து கடுஞ்சொல் பேசாது மென்சொல் வழங்கிச் சிறப்பிப்பாயின் அவளை எக்காலமும் வானோர் விருந்தினராய் ஏற்றுக் கொள்வர்.
உடன்படான், கொல்லான், உடன்றார் நோய் தீர்ந்து, மடம் படான், மாண்டார் நூல் மாண்ட இடம் பட நோக்கும் வாய் நோக்கி, நுழைவானேல், - மற்று அவனை யாக்குமவர் யாக்கும், அணைந்து. 8
மடம் படான் - அறியாமையில் மயங்கானாய் யாக்குமவர் - நண்பராக்கி கொள்வானை ஒன்றினைப் பிறர் கொல்ல உடன்படாது, தானுங் கொல்லாது, பிணியால் வருந்தினார் நோயைத் தீர்த்து, அறியாமை இல்லாதவனாய் சான்றோருடைய சிறந்த கருத்துகள் புலனாகும்படி ஆராய்ந்து, அதற்கு தக்கபடி வாழ்பவனை நண்பராக்கிக் கொண்டால் அவ்வியல்புகள் நம்மையும் மேம்படுத்தும்.
கற்றாரைக் கற்றது உணரார் என மதியார், உற்றாரை அன்னணம் ஓராமல், அற்றார்கட்கு உண்டி, உறையுள், உடுக்கை, இவை ஈந்தார் - பண்டிதராய் வாழ்வார், பயின்று. 9
அன்னணம் - அவ்வகையாக பண்டிதராய் - அறிஞர்களாய் கற்றவர்கள் கல்வியறிவில்லாதவர்கள் என்று எண்ணாமலும், உறவினர்களையும் நண்பர்களையும் ஏற்றத்தாழ்வு கருதாமலும், பொருள் அற்றவர்களுக்கு உணவு, மருந்து, உறைவிடமும், உடையும் கொடுப்பவரையே அறிவுடையவர்கள் என்று போற்றுவர்.
செங் கோலான், கீழ்க் குடிகள், செல்வமும்; சீர் இலா வெங் கோலான், கீழ்க் குடிகள், வீந்து உகவும்; வெங் கோல் அமைச்சர், தொழிலும், அறியலம் - ஒன்று ஆற்ற எனைத்தும் அறியாமையான். 10
செங்கோலான் - அரசர் சீர் இலா - முறைமை இல்லாத செங்கோலானது செல்வமும், அவன் கீழ் வாழுங்குடிகளது செல்வமும், வெங்கோலானது கேடும், அவன் கீழ் வாழுங் குடிகளது கேடும், வெங்கோலமைச்சரது கேடும், அவர் தொடங்கிய வினைமுடியாது கெடுதலும், இவ்வாறினையுமொரு திறனறிய மாட்டோம்.
அவா அறுக்கல் உற்றான் தளரான்; அவ் ஐந்தின் அவா அறுப்பின், ஆற்ற அமையும்; அவா அறான் - ஆகும் அவனாயின், ஐங் களிற்றின் ஆட்டுண்டு, போகும், புழையுள் புலந்து. 11
தளரான் - உறுதி தளராமல் புலந்து போகும் - துன்புறுவான் அவாவினை விடக் கருதியவன் உறுதி தளராமல் ஐம்பொறிகளின் வழிச் செல்லும் ஆசைகளை விட வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் ஐம்பொறிகள் என்ற யானைகளால் அலைப்பட்டு அதன் போக்கிற்குச் சென்று அவதிப்படுவான்.
கொலைக் களம், வார் குத்து, சூது ஆடும் எல்லை, அலைக் களம் போர் யானை ஆக்கும் நிலைக்களம், முச் சாரிகை ஒதுங்கும் ஓர் இடத்தும், - இன்னவை நச்சாமை, நோக்காமை, நன்று. 12
ஆக்கும் நிலைக்களம் - பழக்குகின்ற இடமும் நச்சாமை - விரும்பாமை கொலை செய்யும் இடமும், வெள்ளம் பெருகிச் சுழியும் நீர் நிலைகளும், சூதாடும் கழகமும், பிறரை வருத்தும் சிறைச்சாலையும், போர் செய்ய வல்ல யானைகளைப் பழக்குகின்ற இடமும், தேர் குதிரை யானைப்படைகள் செல்லும் இடத்திற்குச் சென்று பாராமை நன்று.
விளையாமை, உண்ணாமை, ஆடாமை, ஆற்ற உளையாமை, உட்குடைத்தா வேறல், களையாமை, - நூல் பட்டு ஆர் பூங்கோதாய்! - நோக்கின், இவை ஆறும் பாற்பட்டார் கொண்டு ஒழுகும் பண்பு. 13
ஆடாமை - பயனில சொற்களைப் பேசாமை நோக்கின் - ஆராயின் உழவாற் பயிர் விளைவிக்காமையும், ஐம்பொறிகள் களிப்புற உண்ணாமையும், பயனில் சொற்களைப் பேசாமையும், பிறரால் விளையும் தீமைகட்கு வருந்தாமையும், நாணந் தருவனவற்றை வெல்லுதலும், மேற்கொண்ட ஒழுக்கங்களை விட்டுவிடாமையும், ஆகிய ஒழுக்கங்களை மேற்கொண்டு ஒழுகுதல் இயல்புகளாம்.
பொய்யான், புலாலொடு கள் போக்கி, தீயன செய்யான், சிறியார் இனம் சேரான், வையான், - கயல் இயல் உண் கண்ணாய்! - கருதுங்கால், என்றும் அயல, அயலவர் நூல். 14
பொய்யான் - பொய் சொல்லாமல் போக்கி - ஒழித்து மீன் போன்ற கண்ணினை உடையவளே! பொய்யுரையாது, புலாலையும் கள்ளையும் நீக்கி, தீவினைகளைச் செய்யாது, சிறியாரினத்தைச் சேராது, பிறர்க்கின்னாதனவற்றைச் சொல்லாதவனுக்கு அறநூல்கள் தேவை இல்லை.
கண் போல்வார்க் காயாமை; கற்றார், இனம் சேர்தல்; பண் போல் கிளவியார்ப் பற்றாமை; பண் போலும் சொல்லார்க்கு அரு மறை சோராமை; சிறிது எனினும் இல்லார்க்கு இடர் தீர்த்தல், - நன்று. 15
பற்றாமை - பின்பற்றாமை அருமறை - அருமையான மறை பொருள்களை ஒருவன் தனக்கு உற்ற நண்பர்களை உடையவனும், கற்றவர்களைச் சேர்தலும், மென்மையான பெண்ணின் பேச்சைக் கேட்காமையும், இசையினைப் போல் பேசக்கூடிய பெண்களுக்கு அருமையான மறை பொருள்களை மறந்தும் சொல்லாமையும், இல்லை என்பவர்களின் துன்பத்தைத் தீர்த்தலும் நல்லவாம்.
துறந்தார்கண் துன்னி, துறவார்க்கு இடுதல், இறந்தார்க்கு இனிய இசைத்தல், இறந்தார், மறுதலை, சுற்றம், மதித்து ஓம்புவானேல், இறுதல் இல் வாழ்வே இனிது. 16
இடுதல் - வேண்டுவன கொடுத்தல் சுற்றம் - உறவினர் துறவிகளுக்கு ஈதலும், கல்வி கற்றவருக்கு இனிய சொற்களைக் கூறுதலும், தனக்குத் தீமை செய்தவர்களையும், தம் உறவினர்களையும் மதித்துப் போற்றுவானாயின் அவனது இல் வாழ்க்கை துறவு வாழ்க்கையை விட இனிதாகும்.
குடி ஓம்பல், வன்கண்மை, நூல் வன்மை, கூடம், மடி ஓம்பும், ஆற்றல் உடைமை, முடி ஓம்பி, நாற்றம் சுவை கேள்வி நல்லார் இனம் சேர்தல் தேற்றானேல், தேறும் அமைச்சு. 17
கூடம் மடி - கரவுஞ் சோம்பலும் கேள்வி - இசைக்கேள்வியையும் குடிகளைப் பாதுகாத்தலும், நல்லறமும், கலங்காத அறிவும், சோம்பல் இல்லாமையும், அரசாட்சியைப் பாதுகாத்து, நாற்றம், சுவை, கேள்வி இவற்றைப் பெற்று, நல்லவர்களுடன் சேர்தலும் இவை நன்மை தருவனவென்று துணிவானாயின் அவன் அமைச்சனாக தேர்ந்தெடுக்கப்படுவான்.
போகம், பொருள் கேடு, மான் வேட்டம், பொல்லாக் கள், சோகம் படும் சூதே, சொல்வன்மை, சோகக் கடுங் கதத்துத் தண்டம், அடங்காமை, காப்பின், அடும் கதம் இல், ஏனை அரசு. 18
பொருள் கேடு - பொருளழிதலும் சொல்வன்மை - வன்சொல் கூறலும் பெண்களோடு சேர்தலும், தேடிய பொருளைப் பாதுகாக்காமல் அழித்தலும், மான் வேட்டையாடுதலும், தீமையைத் தரும் கள்ளினை உண்ணுதலும், துன்பம் தரும் சூதாடலும், வன்சொற் கூறலும், மிக்க சினத்தினால் போர் செய்தலும், தன் இன்பத்தை மட்டும் பார்த்தலும் ஆகிய குணம் கொண்ட அரசனை மற்ற அரசர்கள் போர் செய்து அழிப்பர்.
கொல்லான், கொலை புரியான், பொய்யான், பிறர் பொருள்மேல் செல்லான், சிறியார் இனம் சேரான், சொல்லும் மறையில் செவி இலன், தீச் சொற்கண் மூங்கை, - இறையில் பெரியாற்கு இவை. 19
சிறியர் இனம் - கீழ்மக்கள் கூட்டத்தை மூங்கை - ஊமை கொலை செய்யாதவனும், பிறர் கொலை செய்வதை விரும்பாதவனும், பொய் சொல்லானும், பிறர் மனைவியினிடம் செல்லாதவனும், தீயவர்களிடம் சேராதவனும், தீய சொற்களைப் பேசாதவனும் கேளாதவனும் ஆகிய இவன் பெரியோன் என்று போற்றப்படுவான்.
மின் நேர் இடையார் சொல் தேறான், விழைவு ஓரான், கொன்னே வெகுளான், கொலை புரியான், - பொன்னே! - உறுப்பு அறுத்தன்ன கொடை உவப்பான், தன்னின் வெறுப்பு அறுத்தான், - விண்ணகத்தும் இல். 20
கொன்னே - பயனில்லாமல் கொடை உவப்பான் - ஈகையை விரும்பி செய்வான் மின்னலைப் போல இடையுடைய மகளிரின் சொற்களைக் கேளாது, காமத்தினை நினையாது, சினமில்லாது, கொலை செய்யாது, தன் உறுப்பைக் கொடுப்பதுபோல் கொடை செய்பவன், தன் மனதிலே வெறுப்பை நீக்கியவன் தேவலோகத்தில் சிறந்து விளங்குவான்.
இளமை கழியும்; பிணி, மூப்பு, இயையும்; வளமை, வலி, இவை வாடும்; உள நாளால், பாடே புரியாது, - பால் போலும் சொல்லினாய்!- வீடே புரிதல் விதி. 21
பிணி மூப்பு - நோயும், கிழத்தனமும் விதி - முறைமை பால்போலுஞ் சொல்லினாய்! இளமை நில்லாது கழியும், பிணியும் மூப்பும் வந்தடையும், செல்வமும் வலிமையும் வாடும், தானுள்ள நாளின் துன்பந்தருஞ் செயல்களையே செய்து கொண்டிருக்க விரும்பாமல், வீடுபேற்றிற்கான தவ வொழுக்கங்களையே விரும்புதல் முறைமையாம்.
வாள் அஞ்சான், வன்கண்மை அஞ்சான், வனப்பு அஞ்சான், ஆள் அஞ்சான், ஆம் பொருள்தான் அஞ்சான்; நாள் எஞ்சாக் காலன் வரவு ஒழிதல் காணின், வீடு எய்திய பாவின் நூல் எய்தப்படும். 22
ஆள் அஞ்சான் - ஆட்சியை அஞ்சான் காலன் - கூற்றுவன் பகைவனது வாட்படைக்கு அஞ்சான், கண்ணோட்டமின்மையை அஞ்சான், ஆண்மைத் தோற்றத்தை அஞ்சான், ஆட்சியை அஞ்சான், தெரிந்து தேடிய செல்வப் பொருளை அஞ்சான், நாளினை மறந்தொழியாத காலன் தன் மேல் வரும் வரவினை விரும்பாதவன் வீடுபேற்றினை அறிவு நூல் ஒழுக்கங்களை அடைதல் வேண்டும்.
குணம் நோக்கான்; கூழ் நோக்கான்; கோலமும் நோக்கான்; மணம் நோக்கான், மங்கலமும் நோக்கான்; கணம் நோக்கான்; - கால் காப்பு வேண்டான், - பெரியார் நூல் காலற்கு வாய் காப்புக் கோடல் வனப்பு. 23
கூழ்நோக்கான் - செல்வத்தை மதியாமல் கணம் நோக்கான் - சுற்றத்தாரை மதியாமல் கால் வளை போன்ற திருமணத்தை விரும்பாத ஒருவன், நல்லியல்பினையும், செல்வத்தையும், அழகையும், திருமணத்தையும், அதன் புண்ணியத்தையும், அதனை வற்புறுத்தும் சுற்றத்தையும் மதிக்காமல் இருப்பவன், சான்றோருடைய அறிவு நூல்களைக் கொள்ளுதல் அழகாகும்.
பிணி, பிறப்பு, மூப்பொடு, சாக்காடு, துன்பம், தணிவு இல் நிரப்பு, இவை தாழா - அணியின், அரங்கின்மேல் ஆடுநர்போல் ஆகாமல் நன்று ஆம் நிரம்புமேல், வீட்டு நெறி. 24
சாக்காடு - இறத்தல் நிரப்பு - வறுமை பிணியும், பிறப்பும், மூப்பும், சாக்காடும், முயற்சியால் வருந்துன்பமும், போதும் என்று நினையாமல் வரும் வறுமை துன்பமும், என்றிவை உடனே அடையும். புதுப் புதுக் கோலத்தில் வந்தாடும் கூத்தாடி போல் மாறி மாறிப் பிறக்காமல் துறவொழுக்கத்தை ஒருவன் எய்துறுவாயின் அவனுக்கு இன்பம் உண்டாகும்.
பாடு அகம் சாராமை; பாத்திலார்தாம் விழையும் நாடகம் சாராமை; நாடுங்கால், நாடகம் சேர்ந்தால், பகை, பழி, தீச்சொல்லே, சாக்காடே, தீர்ந்தாற்போல் தீரா வரும். 25
சாராமை - அணுகாமல் நாடுங்கால் - ஆராயுமிடத்து ஒருவருக்கும் உரிமையில்லாத பொது மகளிர் பாடும் இடத்தை அணுகக் கூடாது. அவர்களோடு நாடகம் செல்லக்கூடாது. அவ்வாறு சென்றால் பகையும் பழிச்சொல்லும் கடுஞ்சொல்லும் சாவும் இல்லாதன போலிருந்து ஒழியாமல் வரும்.
மாண்டு அமைந்தார் ஆய்ந்த மதி வனப்பே, வன்கண்மை, ஆண்டு அமைந்த கல்வியே, சொல் ஆற்றல், பூண்டு அமைந்த காலம் அறிதல், கருதுங்கால், - தூதுவர்க்கு ஞாலம் அறிந்த புகழ். 26
வனப்பு - தோற்றப்பொலிவு ஞாலம் அறிந்த - உலகமறிந்த மாட்சிமைப்பட்ட ஆராய்ந்த மதியுடைமையும், தோற்றப் பொலிவு உண்டாதலும், தறுகண்மையும், கல்வியுடைமையும், சொல்வன்மையும், பொருந்தியமைந்த காலமறிதலும் என இவை யாவும் தூதருக்கு அழகாகும்.
அஃகு, நீ, செய்யல், எனஅறிந்து, ஆராய்ந்தும், வெஃகல், வெகுடலே, தீக் காட்சி, வெஃகுமான், கள்ளத்த அல்ல கருதின், இவை மூன்றும் உள்ளத்த ஆக உணர்! 27
அஃகு - குறைக்க வெகுடல் - சினத்தல் பிறர் பொருளை விரும்புதல், சினத்தல், தீய காட்சிக¨ளைக் காணல் ஆகியவற்றை விட்டு விடுக. ஆராய்ந்து பார்த்தால் சினத்தல் முதலான செயல்களை ஒருவன் தீயவென்று அறிந்துஞ் செய்வானாயின், அவன் அவற்றை ஒரு செயல் முடிதல் பொருட்டுச் செய்தால் நன்மையாகும்.
மை ஏர் தடங் கண் மயில் அன்ன சாயலாய்! - மெய்யே உணர்ந்தார் மிக உரைப்பர்; - பொய்யே, குறளை, கடுஞ் சொல், பயன் இல் சொல், நான்கும் மறலையின் வாயினவாம், மற்று. 28
குறளை - புறங்கூறல் உணர்ந்தார் - சான்றோர் மை தீட்டிய பெரிய கண்களை உடைய மயில் போன்ற பெண்ணே! அறிவுடையவர்கள், மெய்யுரையே உரைப்பர். பொய்யும், புறங்கூறலும், கடுஞ்சொல்லும், பயனில்லாச் சொற்களும் அறிவில்லாதவர்களே சொல்வார்கள்.
நிலை அளவின் நின்ற நெடியவர்தாம் நேரா, கொலை, களவு, காமத் தீ வாழ்க்கை; அலை அளவி, மை என நீள் கண்ணாய்! - மறுதலைய இம் மூன்றும் மெய் அளவு ஆக விதி! 29
களவு - திருடுதல் நேரா - உண்டாகா அலைகின்ற நீண்ட கண்களையுடையவளே! தம்தம் நிலைக்கேற்ப நிற்கும் சான்றோர்க்கு, ஒரு உயிரைக் கொல்லுதலும், திருடுதலும், கொடிய காம வாழ்க்கையும் உண்டாகாது. கொல்லாமை, கள்ளாமை, காதல் வாழ்க்கையென்று இம்மூன்றும் உண்டாகும்.
மாண்டவர் மாண்ட அறிவினால், மக்களைப் பூண்டு அவர்ப் போற்றிப் புரக்குங்கால், - பூண்ட ஒளரதனே, கேத்திரசன், கானீனன், கூடன், கிரிதன், பௌநற்பவன், பேர். 30
புரக்குங்கால் - வளர்க்குங்கால் கிரிதன் - கிரிதனும் சான்றோர் தமது சிறந்த அறிவினால் தம் மக்களை வளர்க்கும்போது, ஔரதனும், கேந்திரசனும், கானீனனும், கூடோத்துபனும், கிரிதனும், பௌநர்பவனும் என்பன அம்மக்களின் வகையாகும். ஔரதன் - கணவனுக்குப் பிறந்தவன், கேத்திரசன் - கணவன் இருக்கும்போது பிறனுக்குப் பிறந்தவன், கானீனன் - திருமணம் ஆகாதவளுக்குப் பிறந்தவன், கூடோத்துபன்னன் - களவிற்பிறந்தவன், கிரிதன் - விலைக்கு வாங்கப்பட்டவன், பௌநற்பவன் - கணவன் இறந்தபின் பிறரை மணம் செய்து பெற்ற மகன்.
மத்த மயில் அன்ன சாயலாய்! மன்னிய சீர்த் தத்தன், சகோடன், கிருத்திரமன், புத்திரி புத்திரன் அபவித்தனொடு, பொய் இல் உருகிருதன், இத் திறத்த, - எஞ்சினார் பேர். 31
புத்திரி புத்திரன் - மகள் மகன் பொய் இல் - பொய்மையில்லாத மயில் போன்ற பெண்ணே! தத்தன், சகோடன், கிருத்திரமன், பௌத்திரன், அபவித்தன், உபகிருதன் என்றும் மைந்தரை வகைப்படுத்துவர். தத்தன் - சுவிகார புத்திரன், சகோடன் - திருமணத்தின் போதே கருவிருந்தவன், கிருத்திரமன் - கண்டெடுத்து வளர்த்துக் கொள்ளப்பட்டவன், புத்திரபுத்திரன் - மகனுக்குப் பிறந்தவன், அபவித்தன் - பெற்றோர்கள் காப்பாற்றாமல் விட்டு மற்றவர்களால் வளர்க்கப்பட்டவன், உபகிருதன் - காணிக்கையாக வந்தவன்.
உரையான், குலன், குடிமை; ஊனம் பிறரை உரையான்; பொருளொடு, வாழ்வு, ஆயு, உரையானாய், - பூ ஆதி வண்டு தேர்ந்து உண் குழலாய்! - ஈத்து உண்பான் தேவாதி தேவனாத் தேறு! 32
குடிமை - குடிப்பிறப்பின் உயர்வையும் ஊனம் உரையான் - குற்றஞ் சொல்லாமல் வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய பெண்ணே! தன் குலத்தின் உயர்வினையும், குடிப்பிறப்பின் உயர்வினையும் பாராட்டிச் சொல்லாமலும், பிறரின் இழிவினை இகழ்ந்து உரைக்காமலும் தன் செல்வத்தை வறியவர்க்குக் கொடுத்து வாழ்பவன் தேவர்களுக்கு தலைவனாவான்.
பொய் உரையான், வையான், புறங்கூறான் யாவரையும், மெய் உரையான், உள்ளனவும் விட்டு உரையான், எய் உரையான், - கூந்தல் மயில் அன்னாய்! - குழீஇய வான் விண்ணோர்க்கு வேந்தனாம் இவ் உலகம் விட்டு. 33
வையான் - எவனையும் இகழான் விட்டு உரையான் - வெளிப்படுத்து சொல்வான் மயில் தோகை போன்ற கூந்தலை உடையவளே! பிறர் தீங்கு கருதி பொய் பேசாமலும், இகழாமலும், தனக்குத் தீமை செய்தவர்களை அவமதித்துப் பேசாமலும், ஒருவருக்கு ஏற்பட்ட தீமையினை போக்குவதற்காக நடந்த உண்மைகளைச் சொல்லாமலும், தன்னிடத்தில் உள்ள பொருள்களையும், தன் நண்பர்களிடம் வறுமையும் சொல்லாதிருக்கும் ஒருவன், இந்த உலகத்தை விட்டு வானுலகிற் கூடியுள்ள தேவர்கட்குத் தலைவனாவான்.
சிதை உரையான், செற்றம் உரையான், சீறு இல்லான், இயல்பு உரையான், ஈனம் உரையான், நசையவர்க்குக் கூடுவது ஈவானை, - கொவ்வைபோல் செவ் வாயாய்! - நாடுவர், விண்ணோர், நயந்து. 34
சிதை உரையான் - கீழ்மை பேசாமலும் ஈனம் உரையான் - குற்றஞ் சொல்லாமலும் கொவ்வை போல சிவந்த வாயினை உடையவளே! கீழ்மையான சொற்களைப் பேசாமலும், சினமூட்டும் சொற்களைக் கூறாமலும், சீறுதலில்லாமலும், தன்னால் இயலக் கூடிய மேம்பாட்டை எடுத்துப் பாராட்டாமலும், பிறர் குற்றங்களைச் சொல்லாது தன்னிடத்து வந்து ஏற்றோர்க்கு இல்லையென்னாது கொடுத்து உதவுவோனைத் தேவர்கள் தங்களுடனிருந்து மகிழ விரும்புவர்.
துறந்தார், துறவாதார், துப்பு இலார், தோன்றாது இறந்தார், ஈடு அற்றார், இனையர், சிறந்தவர்க்கும், - பண் ஆளும் சொல்லாய்! - பழி இல் ஊண் பாற்படுத்தான், மண் ஆளும், மன்னாய் மற்று. 35
துறவாதார் - இல்லறத்தில் உள்ளவர் துப்பிலார் - வறியவர் இசை போன்ற சொல்லினை உடையவளே! துறவிகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், விருந்தினருக்கும், வறியவர்களுக்கும், சிறியவர்களுக்கும், தென்புலத்தார்க்கும், பலமற்றவர்க்கும், சிறந்த தக்காருக்கும் அன்புடன் உணவளித்தவன் மறுபிறவியில் பூமண்டலத்தையாளும் மன்னனாவான்.
கால் இல்லார், கண் இல்லார், நா இல்லார், யாரையும் பால் இல்லார், பற்றிய நூல் இல்லார், சாலவும் ஆழப் படும் ஊண் அமைத்தார், இமையவரால் வீழப்படுவார், விரைந்து. 36
சாலவும் - மிகவும் இமையவரால் - தேவர்களால் கால் ஊனமானவர்களுக்கும், குருடர்களுக்கும், ஊமைகளுக்கும், எவரையும் தம் பக்கம் துணையாக இல்லாதவர்களுக்கும், பதிந்த நூலறிவில்லாதவர்க்கும், நீரினாற் சமைக்கப்பட்ட அந்த உணவை வயிறு நிறைய விரும்பியளித்தவர் தேவர்களால் விரைவாக விரும்பப்படுவர்.
அழப் போகான், அஞ்சான், அலறினால் கேளான், எழப் போகான், ஈடு அற்றார் என்றும் தொழப் போகான், என்னே, இக் காலன்! நீடு ஓரான், தவம் முயலான், கொன்னே இருத்தல் குறை. 37
கேளான் - கேட்க மாட்டான் ஈடு - பெருமையை காலன் நாம் அழுவதால் விடுவதில்லை. அலறி கூவினாலும் அதற்காக இரக்கப்பட மாட்டான். எங்கும் ஓடி விட முடியாது. உன்னைக் குலதெய்வமாக வழிபடுவோம் என்றாலும் கூட விட மாட்டான். ஆதலால் காலனது வரவுக்காக சிந்தனை செய்யாமல் தவம் புரியாது வாழ்க்கையை வீணக்குவது தகாத செயலாகும்.
எழுத்தினால் நீங்காது, எண்ணால் ஒழியாது, ஏத்தி வழுத்தினால் மாறாது, மாண்ட ஒழுக்கினால், நேராமை சால உணர்வார் பெருந் தவம் போகாமை, சாலப் புலை. 38
மாறாது - மாறாமலும் நேராமை - சேராமையும் இறப்பும் பிறப்புமாகிய துன்பம் கல்வி அறிவினாலோ, தியானத்தினாலோ, துதிக்கும் பாடல்களினாலோ, நீங்காது. சிறந்த ஒழுக்கங்களினாலும் தவத்தாலுமே நீங்கும். ஒழுக்கம் கெட்டு இறைவழிபாடு செய்வது பெரிய தவறாகும்.
சாவது எளிது; அரிது, சான்றாண்மை; நல்லது மேவல் எளிது; அரிது, மெய் போற்றல்; ஆவதன்கண் சேறல் எளிது; நிலை அரிது; தெள்ளியர் ஆய் வேறல் எளிது; அரிது, சொல். 39
சாவது - உயிர்விடுதல் மேவல் - சார்தல் இறப்பது எளிது, நல்ல பெயர் எடுப்பது அரிது. நல்ல பொருளை அடைவது எளிது வாய்மையை காப்பாகக் கொள்வது அரிது. தனக்குத் துணையாகும் தவத்திற்குச் செல்தல் எளியது. ஆனால் கீழ்மையில் இருப்பது அரியது. தெளிந்த ஞானியரானாலும் ஐம்புலன்களையும் வென்று காட்டுவது எளிய காரியமில்லை.
உலையாமை, உற்றதற்கு ஓடி உயிரை அலையாமை ஐயப்படாமை, நிலையாமை தீர்க்கும் வாய் தேர்ந்து, பசி உண்டி நீக்குவான், நோக்கும் வாய் விண்ணின் உயர்வு. 40
உலையாமை - வருந்தாமலும் நோக்கும் வாய் - செல்லுமிடம் தனக்கு வந்த துன்பத்துக்காகப் பல இடங்களுக்குச் சென்று வருந்தாமல், பிற உயிர்களைத் துன்புறுத்தாமல், மறுமையை நினைத்து, பிறப்பினைத் தீர்க்கும் வழியினைத் தேர்ந்தெடுத்து, ஆசைகளை நீக்கி வாழ்பவன் தேவராவான்.
குறுகான், சிறியாரை; கொள்ளான், புலால்; பொய் மறுகான்; பிறர் பொருள் வெளவான்; இறுகானாய், ஈடு அற்றவர்க்கு ஈவான் ஆயின், நெறி நூல்கள் பாடு இறப்ப, பன்னும் இடத்து. 41
பன்னுமிடத்து - சொல்லுங்கால் நெறி நூல்கள் - அறிவு நூல்கள் சிற்றினத்தைக் குறுகாது, புலாலை விரும்பாது, பொய் பேசாது, பிறர் பொருளை விரும்பாது செல்வப் பொருளை தானே வைத்துக் கொள்ளாமல், பிறருக்குக் கொடுப்பானானால் அவனுக்கு அறிவு நூல்கள் வேண்டாம்.
கொல்லான், உடன்படான், கொல்வார் இனம் சேரான், புல்லான் பிறர் பால், புலால் மயங்கல் செல்லான், குடிப் படுத்துக் கூழ் ஈந்தான், - கொல் யானை ஏறி அடிப் படுப்பான், மண் ஆண்டு அரசு. 42
பிறர்பால் - அயலார்பால் மண் ஆண்டு - உலகத்தை அரசாண்டு பிறிதொருவரை கொல்லாது, கொல்லுவதற்கு உடன்படாது, கொலைகாரர்களுடன் சேராது, பிறன் மனைவியை விரும்பாது, தனது குடும்பத்தை நல்ல நிலையில் வைத்துப் பிறருக்கு உணவு கொடுப்பான் அரசர்களை வென்று உலகை ஆட்சி செய்வான்.
சூது உவவான், பேரான், சுலா உரையான், யார்திறத்தும் வாது உவவான், மாதரார் சொல் தேறான், - காது தாழ் வான் மகர வார் குழையாய்! - மா தவர்க்கு ஊண் ஈந்தான்- தான் மகர வாய் மாடத்தான். 43
வான் - பெரிய தேறான் - நம்பாமலும் மீன் போன்ற குண்டலங்களை அணிந்த பெண்ணே! சூதாடலை விரும்பாமலும், நடுவு நிலைமையிலிருந்து நீங்காமலும், பிறர் வருந்தும்படி சொற்களைச் சொல்லாமலும், யாரிடத்திலும் வாதம் செய்யாமலும், பெண்களின் சொற்களைக் கேளாமலும், தகுந்தவர்க்கு உணவு கொடுத்தவன் சுறாமீன் போன்று உருவகைப்பட்ட தோரண வாயிலையுடைய மாளிகையிடத்தில் இருப்பவனாவான்.
பொய்யான், பொய் மேவான், புலால் உண்ணான், யாவரையும் வையான், வழி சீத்து, வால் அடிசில் நையாதே ஈத்து, உண்பான் ஆகும் - இருங் கடல் சூழ் மண் அரசாய்ப் பாத்து உண்பான், ஏத்து உண்பான், பாடு. 44
வழி சீத்து - வழி திருத்தி வால் அடிசில் - தூய்மையான உணவு தான் பொய்யுரையாது, பிறர் சொல்லும் பொய்க்கு உடன்படாது, புலாலுண்ணாது, யாவரையும் வையாது, பிறரை வருத்தாமல், வழி திருத்தி, தூய்மையான உணவினை அனைவருக்கும் பிரித்துக் கொடுப்பவன் கடல் சூழ்ந்த உலகத்திற்கு அரசனாகி அனைத்து சுகங்களையும் அடைவான்.
இழுக்கான், இயல் நெறி; இன்னாத வெஃகான்; வழுக்கான், மனை; பொருள் வெளவான்; ஒழுக்கத்தால் செல்வான்; செயிர் இல் ஊண் ஈவான்; அரசு ஆண்டு வெல்வான் விடுப்பான் விரைந்து. 45
இழுக்கான் - வழுவாமல் செயிர் இல் ஊண் - குற்றமில்லாத உணவை தானொழுகு நெறியை விடாது, பிறர்க்கின்னாதவனவற்றைச் செய்ய விரும்பாது, பிறன் பொருளை (மனைவியை) விரும்பாது, நல்ல ஒழுக்கத்தில் ஒழுகி, குற்றமில்லாத உணவினைப் பிறருக்கு கொடுப்பவன், பகைவர்களை வெற்றி கொண்டு அரசாட்சி செய்து வாழ்வான்.
களியான், கள் உண்ணான், களிப்பாரைக் காணான், ஒளியான் விருந்திற்கு, உலையான், எளியாரை எள்ளான், ஈத்து உண்பானேல், ஏதம் இல் மண் ஆண்டு கொள்வான், குடி வாழ்வான், கூர்ந்து. 46
ஆள்வான் - ஆட்சி செய்வான் குடிகூர்ந்து வாழ்வான் - குடும்பம் பெருகியும் வாழ்வான் செருக்கில்லாமலும், மது அருந்தாமலும், மது அருந்துபவரை காணாமலும், வந்த விருந்தினரைக் கண்டு ஒளியாமலும், ஏற்றோர்க்குக் கொடுத்துத் தானும் உண்பானாயின், தானே உலகம் முழுவதும் ஆள்வதும் மட்டுமில்லாமல் இல்லற வாழ்க்கையிலும் ஓங்கி வாழ்வான்.
பெரியார் சொல் பேணி, பிறழாது நின்று, பரியா அடியார்ப் பறியான், கரியார் சொல் தேறான், இயையான், தெளிந்து அடிசில் ஈத்து உண்பான் - மாறான், மண் ஆளுமாம் மற்று. 47
பறியான் - வெறித்து நிற்காமலும், கரியார் சொல் - வஞ்சகர் சொற்களை ஒழுக்கத்திற் பெரியோரது உறுதி மொழியைப் போற்றி, அவ்வொழுக்கத்திலிருந்து வழுவாது, தன் பணியாட்கள் மேல் விருப்பமும் வெறுப்பும் இல்லாமலும், வஞ்சகர்கள் சொற்களை நம்பாமலும், அவர்களோடு நட்பு கொள்ளாமலும், வாழ்க்கையின் பயனை ஆராய்ந்துணர்ந்து, விருந்தினர் முதலியவர்க்கும் படைத்துத் தானும் உண்பவன் தவறாமல் நாடாள்வான்.
வேற்று அரவம் சேரான், விருந்து ஒளியான் தன் இல்லுள் சோற்று அரவம் சொல்லி உண்பான் ஆயின், மாற்று அரவம் கேளான், கிளை ஓம்பின், கேடு இல் அரசனாய், வாளால் மண் ஆண்டு வரும். 48
தன் இல்லுள் - தன் வீட்டில் மண் ஆண்டு வரும் - நாட்டை அரசாண்டு வருவான் பழிதருஞ் செயலை விரும்பாமலும், விருந்தினர்களை உபசரித்தும், தன் இல்லத்தில் பிறர் வந்துண்ணும்படியாகத் தான் உண்ணுஞ் செய்தியை அறிவித்துப் பின் ஒருவன் உண்பானாயின், பகையரசர் சொல் கேட்க வேண்டானாய்த் தன் குடும்பத்தைப் பேணி, அழிவில்லாத அரசுரிமை உடையவனாய் வாளால் வெல்லும் பூமியினை ஆண்டு கொண்டிருப்பான்.
யானை, குதிரை, பொன், கன்னியே, ஆனிரையோடு ஏனை ஒழிந்த இவை எல்லாம், ஆன் நெய்யால் எண்ணன் ஆய், மா தவர்க்கு ஊண் ஈந்தான் - வைசிர- வண்ணன் ஆய் வாழ்வான் வகுத்து. 49
கன்னி - கன்னிகையும் மாதவர்க்கு - பெருந்தவத்தினர்க்கு யானையும், குதிரையும், பொன்னும், கன்னிகையும், பசுவின் கூட்டமும் மற்ற பொருள்களும் வேண்டிய அளவிற்கு வகை அறிந்து கொடுத்தவனும், தவசிகளுக்குப் பசுவின் நெய்யுடன் உணவளித்து அன்பு செய்தவனும் ஆகிய ஒருவன் குபேரப் பட்டம் பெற்று வாழ்வான்.
எள்ளே, பருத்தியே, எண்ணெய், உடுத்தாடை, வள்ளே, துணியே, இவற்றோடு, கொள் என, அன்புற்று, அசனம் கொடுத்தான் - துணையினோடு இன்புற்று வாழ்வான், இயைந்து. 50
வள்ளே - பணமும் அசனம் - உணவும் அன்புடன், எண்ணெயும், பருத்தி ஆடையும் கொடுத்து உணவினையும் ஏற்றுக் கொள்வீராக என்று கொடுத்தவன் தன் மனைவியுடனும் சுற்றத்துடனும் இனிமையாக வாழ்வான்.
உண் நீர் வளம், குளம், கூவல், வழிப் புரை, தண்ணீரே, அம்பலம், தான் பாற்படுத்தான் - பண் நீர பாடலொடு ஆடல் பயின்று, உயர் செல்வனாய், கூடலொடு ஊடல் உளான், கூர்ந்து. 51
கூவல் - கிணற்றையும் அம்பலம் - மண்டபங்களையும் குளத்தையும், கிணற்றையும், வழிகளிற் பலரும் தங்குதற்குரிய இலைக் குடில்களையும், தண்ணீர்ப் பந்தர்களையும், மண்டபங்களையும், வகைவகையாய் அமைப்பித்தவன் மிகுந்த செல்வம் உடையவனய், இசையின் இயல்களோடு ஆடலை அனுபவித்து உள்ளன்புடைய மாதர்களின் ஊடலோடு கூடுதலையும் பெறுவான்.
இல் இழந்தார், கண் இழந்தார், ஈண்டிய செல்வம் இழந்தார், நெல் இழந்தார், ஆன் நிரைதான் இழந்தார்க்கு, எல் உழந்து, பண்ணி ஊண் ஈய்ந்தவர் - பல் யானை மன்னராய், எண்ணி ஊண் ஆர்வார், இயைந்து. 52
ஈண்டிய - பெருகியிருந்த ஊண் ஆர்வார் - இன்சுவையுணவுகளை ஆர உண்பர் வீட்டை இழந்தவர்களுக்கும், கண்ணை இழந்தவர்களுக்கும், சேர்ந்திருந்த செல்வத்தை இழந்தவர்களுக்கும், விளைந்த நெல்லை இழந்தவர்களுக்கும், பசுமந்தையை இழந்தவர்களுக்கும், இரவிலும் வருந்தி, முயன்று பொருளை பிடி உணவுகளாகச் சமைத்துக் கொடுத்தவர், பலவாகிய யானைப்படையுடைய அரசர்களால் மதிக்கப்படும் மனைவி மக்களுடன் சுகமாய் வாழ்ந்திருப்பர்.
கடம் பட்டார், காப்பு இல்லார், கைத்து இல்லார், தம் கால் முடம் பட்டார், மூத்தார், மூப்பு இல்லார்க்கு உடம் பட்டு, உடையராய் இல்லுள் ஊண் ஈத்து, உண்பார் - மண்மேல் படையராய் வாழ்வார், பயின்று. 53
கடம்பட்டார்க்கு - கடன்பட்டவர்களுக்கு மண்மேல் - உலகத்தில் கடன் பட்டவர்களுக்கும், ஆதரவற்றோருக்கும், பொருள் இல்லாதவர்களுக்கும், கைகால் முடம்பட்டவர்களுக்கும், முதிர்ந்தவர்களுக்கும், பெற்றோர் முதலிய பெரியோர்களில்லாதவர்களுக்கும், அன்புடன் தன் வீட்டில் உணவு கொடுத்து உண்பவர், பூமியின் மீது நால்வகைப் படைகளை உடைய மன்னர்களாய் மனைவி மக்களுடன் கூடி இன்பமாய் வாழ்வார்கள்.
பார்ப்பார், பசித்தார், தவசிகள், பாலர்கள், கார்ப்பார், தமை யாதும் காப்பு இலார், தூப் பால நிண்டாரால் எண்ணாது நீத்தவர் - மண் ஆண்டு, பண்டாரம் பற்ற வாழ்வார். 54
பார்ப்பார் - அந்தணர் பாலர்கள் - குழந்தைகள் அந்தணருக்கும், பசித்தவர்க்கும், தவம் செய்கின்றவர்க்கும், குழந்தைகளுக்கும், பிறரால் வெறுக்கப்படுகிறவர்க்கும், ஆதரவற்றோருக்கும், நல்ல ஒழுக்கத்தில் நிற்போருக்கும் பயன் கருதாமல் அவர்களின் துன்பங்களை நீக்கியவர்கள் அரசனாய் இன்பத்துடன் வாழ்வார்கள்.
'ஈன்றார், ஈன்கால் தளர்வார், சூலார், குழவிகள், மான்றார், வளியான் மயங்கினார்க்கு, ஆனார்!' என்று, ஊண் ஈய்த்து, உறு நோய் களைந்தார் - பெருஞ் செல்வம்- காண் ஈய்த்து வாழ்வார், கலந்து. 55
சூலார்க்கு - கருவுற்றவர்களுக்கு குழவிகட்கு - குழந்தைகளுக்கு பிள்ளையைப் பெற்றவர்க்கும், பிள்ளையைப் பெறுகின்ற காலத்தில் வேதனைப் படுகின்றவர்க்கும், கருவுற்றிருக்கின்றவர்க்கும், குழந்தைகளுக்கும், அறிவால் மயங்கினோருக்கும், வாதநோயால் வருந்துகின்றவர்க்கும், அவர்களைக் காப்பாற்றுவதற்கு அலைந்தவர்கள் என்று பிறர் சொல்லும்படி அவர்களுக்கு உணவு கொடுத்து அவர்களுடைய துன்பங்களைப் போக்கியவர்கள் தம் உறவினர்களுடன் கூடி மகிழ்ச்சியாய் வாழ்வார்கள்.
தளையாளர், தாப்பாளர், தாழ்ந்தவர், பெண்டிர், உளையாளர், ஊண் ஒன்றும் இல்லார், கிளைஞராய் - மா அலந்த நோக்கினாய்! - ஊண் ஈய்ந்தார், மாக் கடல் சூழ் நாவலம்தீவு ஆள்வாரே, நன்கு. 56
பெண்டீர் - பெண்மக்கள் உளையாளர் - இல்லாதவர் மான்கள் மயங்கும் பார்வையுடைய பெண்ணே! செய்த குற்றத்திற்காக காலில் தளையிடப்பட்டவர்கள், தாப்பாளர், தாழ்ந்தவர், பெண்கள், நோயுடையவர்கள், வறுமையுடையவர்கள், இவர்களுக்கு உறவினர் போலிருந்து உணவு கொடுத்தவர்கள், பெரிய கடல் சூழ்ந்த இந்நாட்டை ஆட்சி செய்வர்.
கருஞ் சிரங்கு, வெண் தொழு நோய், கல், வளி, காயும் பெருஞ், சிரங்கு, பேர் வயிற்றுத் தீயார்க்கு, அருஞ் சிரமம் ஆற்றி, ஊண் ஈத்து, அவை தீர்த்தார் - அரசராய்ப் போற்றி ஊண் உண்பார், புரந்து. 57
வளி நோய் - வாத நோய் காயும் - வருத்துகின்ற கருஞ்சிரங்கும், வெள்ளிய தொழுநோயும், கல்லெருப்பும், வாதமும், காய்ந்திடர் செய்யும் கழலையும், பெருவயிற்றுப் பெருந்தீயும் என ஆறுவகையான நோயுடையவர்களுக்கு உணவு கொடுத்து அந்நோய்களை நீக்கியவர்கள் மன்னவராய்ப் போற்றப்பட்டு வாழ்வார்கள்.
காமாடார், காமியார், கல்லார்இனம் சேரார், ஆம் ஆடார், ஆய்ந்தார் நெறி நின்று, தாம் ஆடாது, ஏற்றாரை இன்புற ஈய்ந்தார், முன், இம்மையான் மாற்றாரை மாற்றி வாழ்வார். 58
ஏற்றாரை - தம்மை அண்டி இரப்பவர்களுக்கு முன் - முற்பிறப்பில் காமம் நுகராது, பொருளின் மேல் பற்று வைக்காது, படிக்காதவர்களோடு சேராமல், நீரில் விளையாடாது, கற்றார் நிற்கும் நெறியில் நின்று, தம்மை அண்டி இரப்பவர்களுக்கு அவர்கள் மகிழ்ச்சி அடையும்படி கொடுத்தவர்கள், இப்பிறப்பில் பகைவர்களை வென்று அரசர்களாய் வாழ்வார்.
வணங்கி, வழி ஒழுகி, மாண்டார் சொல் கொண்டு, நுணங்கிய நூல் நோக்கி, நுழையா, இணங்கிய பால் நோக்கி வாழ்வான் - பழி இல்லா மன்னனாய், நூல் நோக்கி வாழ்வான், நுனித்து. 59
நுணங்கிய நூல் - நுட்பமான அறிவு நூல்களை நோக்கி - ஆராய்ந்து பிறரை வணங்கி, சான்றோர் சொல்கேட்டு, நுண்ணிய நூல்களைக் கற்று, அந்நூற் பொருள்களில் தம் அறிவைச் செலுத்தி அதன்படி வாழ்கின்றவன் வடுவில்லா வேந்தனாய், அறிவு நூல்களையும் நுட்பமாய் ஆராய்ந்து வளர்த்து பெருவாழ்வில் வாழ்வான்.
பெருமை, புகழ், அறம், பேணாமை சீற்றம், அருமை நூல், சால்பு, இல்லார்ச் சாரின், இருமைக்கும், பாவம், பழி, பகை, சாக்காடே, கேடு, அச்சம், சாபம்போல் சாரும், சலித்து. 60
சீற்றம் பேணாமை - சினத்தை விரும்பாமை சாரின் - சேர்ந்தால் பெருமையும், புகழும், அறம் பேணாத சினமும், அருமை நூலும், சால்புக் குணமுமில்லார், இல்லாதவர்களை சேரின், இம்மை மறுமை இவ்விரண்டிற்கும் பாவமும் பழியும், பகையும் சாக்காடும், கேடும் அச்சமும், இந்த ஆறும், முனிவரின் சாபம் போல வந்து சேரும்.
ஆர்வமே, செற்றம், கதமே, அறையுங்கால், ஒர்வமே, செய்யும் உலோபமே, சீர்சாலா மானமே, மாய உயிர்க்கு ஊனம் என்னுமே - ஊனமே தீர்ந்தவர் ஒத்து. 61
அறையுங்கால் - சொல்லுமிடத்து ஆர்வம் - அவாவும் ஆசையும், பகையும், கோபமும், ஒரு பக்கம் சார்தலும், ஈயாத்தன்மையும், பெருமை இல்லாத மானமும் இவை நிலையில்லாத மாந்தருக்கு துன்பத்தைத் தரும் என்று சான்றோர்கள் விரும்பும் அறிவு நூல்கள் தெரிவிக்கின்றன.
கூத்தும், விழவும், மணமும், கொலைக் களமும், ஆர்த்த முனையுள்ளும், வேறு இடத்தும், ஒத்தும் ஒழுக்கம் உடையவர் செல்லாரே; செல்லின், இழுக்கம் இழவும் தரும். 62
விழவு - திருவிழா நடக்குமிடம் செல்லார் - போகார் கூத்தாடும் இடத்தும், விழாச் நடக்கும் இடத்தும், மணஞ் செய்யுமிடத்தும், கொலை நடக்கும் இடத்தும், ஆர்த்த போர்க்களத்தும், பகைவரிடத்தும், ஒழுக்கம் உடையவர்கள் செல்ல மாட்டார்கள். செல்வாராயின் துன்பமும் பொருள் அழிவும் வரும்.
ஊணொடு, கூறை, எழுத்தாணி, புத்தகம், பேணொடும் எண்ணும், எழுத்து, இவை மாணொடு கேட்டு எழுதி, ஓதி, வாழ்வார்க்கு ஈய்ந்தார் - இம்மையான் வேட்டு எழுத வாழ்வார், விரிந்து. 63
இம்மையான் - இப்பிறப்பில் விரிந்து - வாழ்வு பெருகி ஊக்கத்தோடு கற்கும் மாணவர்களுக்கு உணவினையும், உடையையும், எழுத்தாணியும், நூலும், கொடுத்தும் உதவுகின்றவர்கள் செல்வராய் வாழ்வர்.
உயர்ந்தான் தலைவன் என்று ஒப்புடைத்தா நோக்கி, உயர்ந்தான் நூல் ஓதி ஒடுங்கி, உயர்ந்தான் அருந் தவம் ஆற்றச் செயின், வீடு ஆம் என்றார் - பெருந் தவம் செய்தார், பெரிது. 64
பெருந் தவம் - அரிய தவத்தை தலைவன் என்று - கடவுள் என்று அரிய தவத்தை மிகவும் முயன்று ஆற்றிய சான்றோர், தக்க முறையில் ஆராய்ந்து எல்லா வகையிலும் உயர்ந்திருப்பவன் கடவுள் என்று உணர்ந்து அக்கடவுள் இயல்பைப் பற்றிய அறிவு நூல்களைக் கற்று அடங்கி, அரிய தவத்தினை செய்வானாயின் அவனுக்கு முக்தி கிடைக்கும் என்று கூறினார்கள்.
காலனார் ஈடு அறுத்தல் காண்குறின், முற்று உணர்ந்த பாலனார் நூல் அமர்ந்து, பாராது, வாலிதா, ஊறுபாடு இல்லா உயர் தவம் தான் புரியின், ஏறுமாம், மேல் உலகம் ஓர்ந்து. 65
காண்குறின் - அறிய விரும்பினால் பாராது - வருத்தம் நோக்காது எமன் வராமல் இருக்க வேண்டுமென்றால், கடவுளின் நூல்களை விரும்பிக் கற்று வருத்தம் நோக்காது, தூய்மையுடையதாக, கெடுதி இல்லாத, சிறந்த தவத்தினைச் செய்தால் அவன் வீடுபேற்றினை அடைவான்.
பொய் தீர் புலவர் பொருள் புரிந்து ஆராய்ந்த மை தீர் உயர் கதியின் மாண்பு உரைப்பின், - மை தீர் சுடர் இன்று; சொல் இன்று; மாறு இன்று; சோர்வு இன்று; இடர் இன்று; இனி துயிலும் இன்று. 66
மாண்பு உரைப்பின் - மாட்சிமை சொல்லுமிடத்து மாறு இன்று - நிலை மாறுதல் இல்லை பொய்தீர்த்த அறிவுடையோர் பொருளாக விரும்பி ஆராய்ந்த குற்றந் தீர்த்த வீட்டுலகின் மாட்சிமையை உணர்ந்தால் ஒளியில்லை, உரையில்லை, மாறுபாடில்லை, சோர்வு இல்லை, துன்பமில்லை, இனிய துயிலுமில்லை.
கூர் அம்பு, வெம் மணல் ஈர் மணி, தூங்கலும், ஈரும் புகை, இருளோடு, இருள், நூல் ஆராய்ந்து, அழி கதி, இம் முறையான், ஆன்றார் அறைந்தார் - இழி கதி, இம் முறையான் ஏழு. 67
வெம்மணல் - சூடான மணல் இருள் - பேரிருள் சூழ்ந்த கூரான அம்புகள் எய்யும் இடமும், சூடான மணல் நிறைந்த இடமும், மிகவும் குளிர்ச்சியான மணிகள் உருளுமிடமும், மயக்கம் வருமிடமும், புகை கலந்த இடமும், இருட்டிய இடமும் ஆகிய இந்த ஏழு இடங்களில் இருக்கக் கூடாது.
சாதல், பொருள் கொடுத்தல், இன்சொல், புணர்வு உவத்தல், நோதல், பிரிவில் கவறலே, ஓதலின் அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணம் ஆக, மென்புடையார் வைத்தார், விரித்து. 68
இன்சொல் - இன்சொல் கூறுதலும் ஆறு குணம் - ஆறு இயல்புகளும் நண்பர்கள் இறந்தவுடன் தாமும் இறத்தலும், நண்பர்களுக்குப் பொருள் கொடுத்தலும், இனிய சொற்களைப் பேசிக் கூடி இருத்தலும், அவர்கள் வருத்தம் அடையும்போது தானும் வருந்தி அவர்களின் பிரிவில் வருந்தி இருத்தலும் ஆகிய இவ் வகை குணம் உடையவர்களே சிறந்த நண்பர்கள் என்று புலவர்கள் கூறுவார்கள்.
எடுத்தல், முடக்கல், நிமிர்த்தல், நிலையே, படுத்தலோடு, ஆடல், பகரின், அடுத்து உயிர் ஆறு தொழில் என்று அறைந்தார், உயர்ந்தவர் - வேறு தொழிலாய் விரித்து. 69
முடக்கல் - அவற்றை முடக்குதலும் நிலை - நிலைக்கச் செய்தலும் உறுப்புகளை எடுத்தலும், முடக்கலும், நிமிரச் செய்தலும், நிலைக்கச் செய்தலும், படுத்தலும், ஆடுதலும், ஆகிய இந்த ஆறும் உடலின் செயல்பாடுகள் என்று உயர்ந்தோர் விளக்கிக் கூறினார்கள்.
ஐயமே, பிச்சை, அருந் தவர்க்கு ஊண், ஆடை, ஐயமே இன்றி அறிந்து ஈந்தான், வையமும் வானும் வரிசையால் தான் ஆளும் - நாளுமே, ஈனமே இன்றி இனிது. 70
நாளும் - எந்நாளும் ஈனம் இன்றி - குறைவில்லாமல் அரிய முயற்சியுடையவர்களுக்கு உணவும், உடையும், சந்தேகம் இல்லாமல் அவர் அவர் இயல்புணர்ந்து கொடுத்தவர்கள் இம் மண்ணுலகத்தையும் வானுலகத்தையும் குறைவில்லாமல் முறைமையோடு நன்றாய் அரசாள்வார்கள்.
நடப்பார்க்கு ஊண், நல்ல பொறை தாங்கினார்க்கு ஊண், கிடப்பார்க்கு ஊண், கேளிர்க்கு ஊண், கேடு இன்று உடல் சார்ந்த வானகத்தார்க்கு ஊணே, மறுதலையார்க்கு ஊண், அமைத்தான் - தான் அகத்தே வாழ்வான், தக. 71
இன்று - கெடுதலில்லாமல் அகத்து - மனையில் வழிப்போக்கருக்கும், சுமை தூக்கியவர்க்கும், நோய் கண்டவர்க்கும், உறவினர்க்கும், இறந்தவர்களுக்கும், அயல்நாட்டிலிருந்து வந்தவர்களுக்கும், உணவு கொடுத்தவன் சிறப்பாய் வாழ்வான்.
உணராமையால் குற்றம்; ஒத்தான் வினை ஆம்; உணரான் வினைப் பிறப்புச் செய்யும்; உணராத தொண்டு இருந் துன்பம் தொடரும்; பிறப்பினான் மண்டிலமும் ஆகும்; மதி. 72
ஒத்தான் வினை ஆம் - நூலுணர்ச்சியால் நல்வினைகள் விளையும் உணரான் வினை - அறிவு நூல்களையுணராதவன் அறியாமையால் குற்றங்கள் உண்டாகும். நல் உணர்வால் நன்மை உண்டாகும். வேதங்களை உணராதவனின் செயல்கள் பிறவியை உண்டாக்கும். ஒன்பது பெரிய துன்பங்கள் தொடர்ந்து வரும். எனவே பிறவிச் சூழலில் ஈடுபடாமல் நடந்து கொள்ள வேண்டும்.
மனை வாழ்க்கை, மா தவம், என்று இரண்டும், மாண்ட வினை வாழ்க்கை ஆக விழைப; மனை வாழ்க்கை பற்றுதல்; இன்றி விடுதல், முன் சொல்லும்; மேல் பற்றுதல், பாத்து இல் தவம். 73
மனை வாழ்க்கை - இல்லற வாழ்க்கை மாதவம் - சிறந்த தவ ஒழுக்கம் இல்லற வாழ்க்கையும், தவ வாழ்க்கையும் மேலானது என்று அறிஞர்கள் கூறுவார்கள். இல்லற வாழ்க்கை என்பது பற்றுடன் வாழ்வதாம். பற்றில்லாத தவவாழ்க்கை என்பது வீடுபேற்றில் பற்றுடன் வாழ்வதாம்.
இடை வனப்பும், தோள் வனப்பும், ஈடின் வனப்பும், நடை வனப்பும், நாணின் வனப்பும், புடை சால் கழுத்தின் வனப்பும், வனப்பு அல்ல; எண்ணோடு எழுத்தின் வனப்பே வனப்பு. 74
ஈடின் வனப்பும் - செல்வத்தினழகும் வனப்பு அல்ல - உண்மை அழகாகா இடுப்பினழகும், தோள்களினழகும், செல்வத்தினழகும், நடையினழகும், நாணத்தினழகும், பக்கங்கள் தசை கொழுவிய கழுத்தினழகும், உண்மையான அழகு ஆகாது. மக்கட்கு இலக்கணத்தோடு கூடிய இலக்கியக் கல்வியழகே உண்மையழகாகும்.
அறுவர் தம் நூலும் அறிந்து, உணர்வு பற்றி, மறு வரவு மாறு ஆய நீக்கி, மறு வரவின் மா சாரியனா, மறுதலைச் சொல் மாற்றுதலே - ஆசாரியனது அமைவு. 75
நீக்கி - கழித்து மறுவரவு இல் - குற்றமில்லாத சமய நூல்கள் பலவும் உணர்ந்து, தவறு நீக்கியொழுகும் ஒழுக்கம் உடையவனாய்த் தனக்கு மாறாவார் கூறும் மறுப்புரைகளை மாற்றி நிறுத்தவல்ல ஆற்றலுடையவனே ஆசிரியன்.
ஒல்லுவ, நல்ல உருவ, மேற் கண்ணினாய்! வல்லுவ நாடி, வகையினால், சொல்லின், கொடையினால் போகம்; சுவர்க்கம், தவத்தால்; அடையாத் தவத்தினால் வீடு. 76
ஒல்லுவ - ஒப்பனவும் சொல்லின் - சொல்லுமிடத்து அழகிய உருவத்தினையும், வேல் போன்ற கண்களையும் உடைய பெண்ணே! ஈகையால் இம்மையின்பமும், தவத்தால் விண்ணுலக நுகர்ச்சியும், மெய்யுணர்வால் வீடுபேறு உண்டாம் என்பது அறிவு நூல்களைக் கற்றோரின் கருத்தாகும்.
நாற் கதியும் துன்பம் நவை தீர்த்தல் வேண்டுவான், பாற்கதியின் பாற்பட ஆராய்ந்து, நூற் கதியின் எல்லை உயர்ந்தார் தவம் முயலின், மூன்று, ஐந்து, ஏழ், வல்லை வீடு ஆகும்; வகு! 77
தீர்த்தல் வேண்டுவான் - ஒழித்தலை விரும்புகின்றவன் வல்லை - உறுதியாக நால் வகைப் பிறப்புக்களிலும் துன்பமென்னும் இழுக்கைத் தீர்த்தல் விரும்புவன் தவத்தினைச் செய்வானாயின் மூன்றாம் அல்லது ஐந்தாம் அல்லது ஏழாம் பிறவியில் அவனுக்கு வீடுபேறு உண்டாகும்.
தாய் இழந்த பிள்ளை, தலை இழந்த பெண்டாட்டி, வாய் இழந்த வாழ்வினார், வாணிகம் போய் இழந்தார், கைத்து ஊண் பொருள் இழந்தார், கண்ணிலவர்க்கு, ஈய்ந்தார்; - வைத்து வழங்கி வாழ்வார். 78
ஈய்த்தார் - வேண்டுவன கொடுத்தவர்கள் வாணிகம் போய் இழந்தார் - வாணிகம் புரிந்து முதற்பொருளை இழந்தவர்கள் தாயை இழந்த பிள்ளைக்கும், கணவனை இழந்த மனைவிக்கும், ஊமைக்கும், வியாபாரம் செய்யப் போய் பொருள் இழந்தவருக்கும், உண்ணுதற்கு ஆதாரமாய்ப் பொருள் இழந்தவர்களுக்கும், குருடர்கட்கும் பொருள் கொடுத்தவர் சிறப்பாய் வாழ்வர்.
சாக்காடு, கேடு, பகை, துன்பம், இன்பமே, நாக்கு ஆடு நாட்டு அறைபோக்கும், என நாக் காட்ட, நட்டார்க்கு இயையின், தமக்கு இயைந்த கூறு, உடம்பு அட்டார்வாய்ப் பட்டது பண்பு. 79
கேடும் - இடையூறும் நாக்காட்ட - நாவினாற் பேசப்படுவன சாக்காடும் கேடும், பகையும், துன்பமும், நண்பர்களுக்கு வந்தால் அதனைத் தனக்கு வந்ததாகக் கருதுபவனே சிறந்த நண்பனாவான்.
புலையாளர், புண்பட்டார், கண் கெட்டார், போக்கு இல் நிலையாளர், நீர்மை இழந்தார், தலையாளர்க்கு ஊண் கொடுத்து, ஊற்றாய் உதவினார் - மன்னராய்க் - காண் கொடுத்து வாழ்வார், கலந்து. 80
புண்பட்டார் - உடம்பிற் புணபட்டவர்களுக்கும் கண்கெட்டார் - குருடர்களுக்கும் தாழ்வை உடையவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும், குருடர்களுக்கும், நாடு சுற்றி வருவதில் நிலை கொண்டிருபவர்களுக்கும், மேன்மைத் தன்மை இழந்தவர்களுக்கும், ஆதரவாய் உணவைக் கொடுத்து உதவி செய்தவர்கள், அரசர்களாய் உறவினர்களுடன் கூடி வாழ்வர். சிறப்புப் பாயிரம்
இல்லற நூல்; ஏற்ற துறவற நூல், ஏயுங்கால், சொல் அற நூல்; சோர்வு இன்றித் தொக்கு உரைத்து, நல்ல அணி மேதை ஆய், நல்ல வீட்டு நெறியும் கணிமேதை செய்தான், கலந்து.
ஏயுங்கால் - ஏற்ற இடங்களில் சோர்வின்றி - குற்றமில்லாமல் சிறந்த அழகாகிய அறிவையுடையவளே! கணிமேதை என்னும் புலவர் இல்லற ஒழுக்கங்களைக் கூறும் நூலினையும், துறவற ஒழுக்கங்களைக் கூறும் நூலினையும், வீடு பேற்றினை அடையும் வழியையும் ஆராய்ந்து 'ஏலாதி' என்று பாராட்டப்படும் இந்நூலினை குற்றமில்லாமல் ஆக்கியுள்ளான். |