உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மூவாதியார் இயற்றிய ஐந்திணை எழுபது (உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.) ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந் நூல் அமைந்துள்ளதால், ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது. இந் நூலின் முதலில் விநாயகரைக் குறித்த கடவுள் வணக்கப் பாடல் ஒன்று உள்ளது. இக் கடவுள் வாழ்த்து நூலுக்குப் புறம்பாதலோடு, இதற்குப் பழைய உரைகாரர் உரை எழுதாமையாலும், இச் செய்யுள் நூலாசிரியரே இயற்றியது என்று துணிந்து கூற இயலாது. இச் செய்யுளின் நடைப் போக்கும் ஏனைய பாடல்களினும் வேறுபட்டுள்ளது. ஐந்திணை நூல்களில் வேறு ஒன்றிற்கும் கடவுள் வாழ்த்துப் பாடல் இல்லாமையும் சிந்திக்கத் தக்கது. இந் நூலில் உள்ள 70 பாடலகளில் முல்லைத் திணையில் இரண்டு பாடல்களும் (25, 26), நெய்தல் திணையில் இரண்டு பாடல்களும் (69, 70) இறந்துபட்டன. இந் நூலை ஆக்கியவர் மூவாதியார். இவரைச் சிலர் சமணர் என்று கூறுவர். 1. குறிஞ்சி தோழி தலைமகனை வரைவு கடாயது
அவரை பொருந்திய பைங் குரல் ஏனல் கவரி மட மா கதூ உம் படர் சாரல் கானக நாட! மறவல், வயங்கிழைக்கு யான் இடை நின்ற புணை. 1
ஏனல் - தினை இழை - அணிகலன் அவரைக் கொடிகள் நிறைந்த பசுமையான கதிர்களையுடைய தினைப்புனத்தில் இளைய கவரிமான்கள் மேய்கின்ற மலைநாட்டுத் தலைவனே! அணிகலன்களை அணிந்த தலைமகளுக்கும் உமக்கும் நடுவே புணையாக இருந்த என் உதவியை மறக்காமல் அவளை மணந்து என்னை மகிழ்விப்பாயாக என்று தோழி தலைவனிடம் கூறினாள்.
கொல்லைப் புனத்த அகில் சுமந்து, கல் பாய்ந்து, வானின் அருவி ததும்ப, கவினிய நாடன் நயம் உடையன் என்பதனால், நீப்பினும், வாடல் மறந்தன, தோள். 2
புனம் - தினைப்புனம் கவின் - அழகு "தோழியே! மழை அருவிப் பெருக்கெடுத்து ஓடும் தினைப்புனத்தில் உள்ள அகிற்கட்டைகளைச் சுமந்து செல்லும் அருவியினை உடைய மலைநாட்டுத் தலைவன் வாய்மையுள்ளவன் என்பதால் அவன் பொருள் தேட என்னைப் பிரிந்து சென்றாலும் என் உடல் வருந்தவில்லை" என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள். தோழி தலைமகன் வரைவு மலிந்தமை தலைமகட்குச் சொல்லியது
இலை அடர் தண் குளவி வேய்ந்த பொதும்பில், குலையுடைக் காந்தள், இன வண்டு இமிரும் வரையக நாடனும் வந்தான்; மற்று அன்னை அலையும் அலை போயிற்று, இன்று. 3
குளவி - காட்டுமல்லிகை இமிரும் - ஒலிக்கும் என் தலைவியே! தழை அடர்ந்து குளிர்ந்த காட்டு மல்லிகைக் கொடிகள் படர்ந்து, காந்தள் மலர்கள் நிறைந்த சோலையில் வண்டின் கூட்டம் தேனுண்டு பாடும். அப்படிப்பட்ட மலைநாட்டுத் தலைவன் மணம் பேச சான்றோர்களை அனுப்பியுள்ளான். எனவே நம் செவிலித்தாயின் துயரம் நீங்கியது என்று தோழி தலைவியிடம் கூறினாள். தலைமகன் சிறைப்புறத்தானாக இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது
மன்றப் பலவின் சுளை விளை தீம் பழம் உண்டு, உவந்து, மந்தி முலை வருட, கன்று அமர்ந்து, ஆமா சுரக்கும் அணி மலை நாடனை யாமாப் பிரிவது இலம். 4
மந்தி - பெண் குரங்கு ஆ - பசு "பொது இடத்தில் இருந்த பலா மரத்தில் இனிய பலாப்பழத்தைத் தின்று நீர் வேட்கை மிக அங்கிருந்த பசுவின் மடியை மந்தி தடவ அப்பசு தன் கன்றுக்குப் பால் கொடுப்பதைப் போல பால் கொடுக்கும் படியான மலைநாட்டுத் தலைவனை யாம் பிரிந்து வாழ இயலாது" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.
சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய், ஊன்றி, வலி ஆகி, பின்னும் பயக்கும்; மெலிவு இல் கயம் திகழ் சோலை மலை நாடன் கேண்மை நயம் திகழும் என்னும், என் நெஞ்சு. 5
கேண்மை - நட்பு கயம் - குளம் "தோழியே! சான்றோரின் நட்பானது சிதைவு இல்லாததாய் நிலைத்து நின்று வலிமையுடையதாகிப் பலவகை நன்மைகளை உண்டாக்கும். அதுபோல நீர் நிலைகளால் வளமாகக் காணப்படும் சோலைகள் சூழ்ந்த மலைநாட்டுத் தலைவனின் நட்பானது குறைவின்றி இன்பம் பயக்கும் என என் நெஞ்சம் நினைக்கின்றது" என்று தலைவி கூறுகிறாள். புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்டு தோழி வரைவு கடாயது
பொன் இணர் வேங்கை கமழும் நளிர் சோலை நல் மலை நாட! மறவல்; வயங்கிழைக்கு நின் அலது இல்லையால்; ஈயாயோ, கண்ணோட்டத்து இன் உயிர் தாங்கும் மருந்து? 6
இணர் - பூங்கொத்து இழை - அணிகலன் "வேங்கை மரங்களும் நறுமணம் வீசுகின்ற குளிர்ந்த பூஞ்சோலைகள் மிக்க நல்ல மலை நாட்டுத் தலைவனே! தலைவியை மறவாமல் காப்பாயாக. உன்னை விட்டால் அவளுக்கு உதவயாருமில்லை. ஆதலால் நின் அருட்பார்வையால் இனிய உபாதை நிலைபெறச்செய்யும் மருந்துபோன்று திருமணத்தை அவளுக்கு அளித்துக் காப்பாயாக" என்றாள். பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, படைத்து மொழி கிளவியால் தோழி வரைவு கடாயது
காய்ந்தீயல், அன்னை! இவளோ தவறு இலள்; - ஓங்கிய செந் நீர் இழிதரும் கான் யாற்றுள், தேம் கலந்து வந்த அருவி குடைந்து ஆட, தாம் சிவப்பு உற்றன, கண். 7
செந் நீர் - சிவந்த நீர் "அன்னையே! உயர்ந்த மலைகளிலிருந்து இறங்கி ஓடும் சிவந்த நீரையுடைய காட்டாற்றுள் தேன் கலக்கப் பெற்றுப் பாயும் அருவியில் தலைவி தலை முழுகி விளையாடியதால் அவள் கண்கள் சிவந்தன. இவள் தவறு ஏதும் செய்யவில்லை. எங்களைச் சினந்து கூறவேண்டாம்" என்று கற்பனையாகத் தோழி செவிலித்தாயிடம் கூறினாள். புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்டு தோழி வரைவு கடாயது
வெறி கமழ் தண் சுனைத் தெண்ணீர் துளும்ப, கறி வளர் தே மா நறுங் கனி வீழும் வெறி கமழ் தண் சோலை நாட! ஒன்று உண்டோ, அறிவின்கண் நின்ற மடம்? 8
கறி - மிளகு மடம் - அறியாமை "மிளகுக் கொடிகள் படர்ந்துள்ள இனிய மாமரத்தின் நறுங்கனிகள் மணம் கமழ்கின்ற குளிர்ந்த சுனையில் உள்ள தெளிந்த நீர் ததும்பும்படியாக வீழும். நறுமணம் கமழ்கின்ற குளிர்ந்த சோலைகள் நிரம்பியுள்ள மலைநாட்டுத் தலைவனே! உம்மிடம் அறியாமை இல்லை. அறிவுள்ளவனாகிய உன்னிடம் தலைவியை மணந்து கொள்ள வேண்டும் என்று கூறவேண்டியதில்லை" என்று தோழி தலைவனிடம் கூறினாள். தலைமகன் சிறைப்புறத்தானாக, இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது
மன்றத் துறுகல் கருங் கண் முசு உகளும் குன்றக நாடன் தெளித்த தெளிவினை நன்று என்று தேறித் தெளிந்தேன், தலையளி ஒன்று; மற்று ஒன்றும் அனைத்து. 9
உகளும் - விளையாடும் "குரங்குகள் குதித்து விளையாடும் மலையுடைய நாட்டவன் இயற்கைப் புணர்ச்சியின்போது என்னைத் தெளிவித்த தெளிவான தலைவனுக்கும் எனக்கும் ஏற்பட்ட நட்புப் பெருமை எதிர்காலத்து நன்மைபயக்கக்கூடிய ஒன்று எனத் தெளிந்தேன். அன்று தலைவன் காட்டிய அன்பு வளமையாக நின்று என்னைக் காக்கும் எனவே தலைவனை இகழ்ந்து பேசவேண்டாம்" என்று தலைவி தோழியிடம் கூறினாள். தோழி தலைமகனைக் கண்டு வரைவு கடாயது
பிரைசம் கொள வீழ்ந்த தீம் தேன் இறாஅல் மரையான் குழவி குளம்பின் துகைக்கும் வரையக நாட! வரையாய வரின், எம் நிரைதொடி வாழ்தல் இலள். 10
வரை - மலை தொடி - வளையல் "வேடர்கள் தேனடைகளைக் கவர்ந்து செல்லும்போது கீழே நழுவி வீழ்ந்த தேனடைகளை மான் கன்றுகள் கால் குளம்புகளால் சிதைக்கும் மலைநாட்டுத் தலைவனே! நீ தலைமகளை விரைவில் மணந்து கொள்வாய். இல்லையென்றால் அவள் துன்பத்தினால் இறந்துபோவாள்" என்று தலைவனிடம் தோழி கூறினாள். தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் கேட்ப, இயற்பட மொழிந்தது
கேழல் உழுத கரி புனக் கொல்லையுள், வாழை முது காய் கடுவன் புதைத்து அயரும் தாழ் அருவி நாடன் தெளி கொடுத்தான், என் தோழி நேர்வளை நெஞ்சு ஊன்று கோல். 11
கேழல் - பன்றி கோல் - அம்பு "பன்றிகள் கொம்புகளால் கிளறியதும், வேடர்களால் சுட்டு எரிக்கப்பட்ட தினைப்புன நிலத்தில் ஆண் குரங்குகள் வாழையின் முற்றிய காய்களைப் பழுக்கச் செய்வான் வேண்டி புதைத்து வைத்துப் பின் புதைத்த இடம் தெரியாமல் வருந்தும்படியாக தாழ்ந்து ஓடும் அருவிகளை உடைய மலைநாட்டுத் தலைவன் என் தோழியின் (தலைவியின்) மார்பில் பாய்ந்த அம்பைப் போன்ற தெளிவான உறுதிமொழிகளைத் தந்துவிட்டான்" எனத் தோழி தலைமகனைப் பார்த்துக் கூறினாள். தலைமகன் சிறைப்புறத்தானாக, இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது
பெருங் கை இருங் களிறு ஐவனம் மாந்தி, கருங் கால் மராம் பொழில் பாசடைத் துஞ்சும், சுரும்பு இமிர் சோலை, மலை நாடன் கேண்மை பொருந்தினார்க்கு ஏமாப்பு உடைத்து. 12
துஞ்சும் - உறங்கும் ஏமாப்பு - பாதுகாப்பு "ஆண் யானை மலையில் உள்ள நெற்பயிரை மேய்ந்து கரிய அடிப்பகுதியையுடைய மாமரச் சோலையில் உறங்கும். இத்தகைய சோலைகள் உடைய மலைநாட்டுத் தலைவனின் நட்பானது, அவனை நெருங்கி வாழ்பவர்க்கும் பாதுகாவலாகப் பொருந்தும் இயல்புடையதாகும்" என்று தலைவி தோழியிடம் கூறினாள். வெறியாட்டு எடுத்துக்கொண்ட இடத்து, தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது
வார் குரல் ஏனல் வளை வாய்க் கிளி கவரும், நீரால் தெளி திகழ், கான் நாடன் கேண்மையே ஆர்வத்தின் ஆர முயங்கினேன்; வேலனும் ஈர, வலித்தான், மறி. 13
ஏனல் - தினை கேண்மை - நட்பு "நீண்ட தினைக்கதிர்களை வளைந்த வாயினையுடைய கிளிகள் கவர்ந்து செல்லாதிருக்க என் ஐயன்மார் தினைப்புனக் காவலில் நிறுத்தினர். அப்போது சோலைகள் சூழ்ந்த மலை நாடனின் நட்பு கொண்டு அவனை ஆரத்தழுவினேன். அதனால் என் மேனியில் சிறிது மாற்றம் ஏற்பட்டது. அதனை தெய்வத்தால் ஏற்பட்ட மாற்றம் என்று எண்ணி செவிலித்தாய் ஆட்டைப் பலிகொடுக்க, தேவராளனும் வெறியாடத் துணிந்துவிட்டான். எனவே தோழியே செவிலியிடம் உண்மையைக் கூறுவாயாக" என்று தலைவி கூறினாள். தலைமகன் வரும் வழியின் ஏதத்திற்குக் கவன்ற தலைமகள் வரைவு வேட்டு, தோழிக்குச் சொல்லியது
குறை ஒன்று உடையேன்மன்; - தோழி! - நிறை இல்லா மன்னுயிர்க்கு ஏமம் செயல் வேண்டும்; இன்னே, அரா வழங்கு நீள் சோலை நாடனை நம் இல், 'இரா வாரல்' என்பது உரை. 14
ஏமம் - பாதுகாவல் அரவு - பாம்பு "தோழியே! நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். பெரிய சோலைகள் சூழ்ந்த மலைநாட்டுத் தலைவனை இப்போதிருந்து பாம்புகள் நடமாடுகின்ற நம் வீட்டுப் பக்கத்தில் இரவில் வர வேண்டாம் என்று அவரிடம் கூறவேண்டும்" என்று கூறினாள். 2. முல்லை பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
செங் கதிர்ச் செல்வன் சினம் கரந்த போழ்தினால், பைங் கொடி முல்லை மணம் கமழ, வண்டு இமிர, காரோடு அலமரும் கார் வானம் காண்தொறும் நீரோடு அலமரும், கண். 15
கரத்தல் - மறைத்தல் இமிர்தல் - ஒலித்தல் "தோழியே! சூரியன் தன் கோபமாகிய வெப்பத்தை மறைத்துக் கொண்டதால் பைங்கொடி முல்லைகள் மலர்ந்து மணங்கமழ வண்டுகள் மதுவுண்டு மகிழ்கின்றன. கரும் மேகங்கள் வானில் தெரியும் போதெல்லாம் என் கண்கள் கண்ணீரைச் சிந்துகின்றன" என்று தலைவன் கார்காலத்தில் வராததை நினைத்து தோழியிடம் வருந்திக் கூறினாள்.
தட மென் பணைத் தோளி! நீத்தாரோ வாரார்; மட நடை மஞ்ஞை அகவ, கடல் முகந்து, மின்னோடு வந்தது எழில் வானம்; வந்து, என்னை, 'என் ஆதி?' என்பாரும் இல். 16
தட - அகன்ற எழில் - அழகு "அகன்ற மென்மையான மூங்கிலைப் போன்ற தோள்களையுடைய தோழியே! பொருள் மேல் பிரிந்து சென்ற நம் தலைவன் இன்னும் வரவில்லை. ஆனால் அழகிய மயில்கள் மகிழ்வதற்காக கடல் நீரைக் குடித்து மின்னல்களுடன் கார்மேகம் வந்துவிட்டது. காதலரைச் சேர்ந்து பெண்கள் மகிழும் காலத்தில் உன் நிலை யாது? என்று கேட்பவர் யாருமில்லாமல் தனியாளாய் வருந்துகிறேன்" என்று கார்ப்பருவம் வந்துற்றதை அறிந்து தோழியிடம் தலைவி வருந்திக் கூறினாள்.
தண் நறுங் கோடல் துடுப்பு எடுப்ப, கார் எதிரி விண் உயர் வானத்து உரும் உரற்ற, திண்ணிதின் புல்லுநர் இல்லார் நடுங்க, சிறு மாலை, கொல்லுநர் போல, வரும். 17
உரும் - இடி கொல்லுநர் - கொலையாளி "சிறு பொழுதாகிய இம்மாலை நேரத்தில் நல்ல மணமுடைய வெண்காந்தள் செடிகள் துடுப்பு போன்ற அரும்புகளை ஏந்தி நிற்கின்றன. வானத்தே உயர்ந்து விளங்கும் மேகங்களில் உள்ள இடிகள் இடித்திட அதனைக் கேட்ட காதலரைப் பிரிந்த காதலிகள் மிகுந்த துன்பம் அடைகின்றனர்" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.
கதழ் உறை வானம் சிதற, இதழகத்துத் தாது இணர்க் கொன்றை எரி வளர்ப்ப, பாஅய் இடிப்பது போலும் எழில் வானம் நோக்கி, துடிப்பது போலும், உயிர். 18
இணர் - மலர் "மழைபெய்ய, பூந் தாதுக்களையுடைய பூங்கொத்துக்களோடு கூடிய கொன்றை மரங்கள் நெருப்பைப் போல் பூத்து விளங்க, எங்கும் பரவி இடித்துரைப்பது போல் ஒலிக்கும் வான்வெளியைப் பார்த்தால் என் தலைவரை நினைத்து என் உள்ளம் வெதும்பித் துன்புறுகிறது" என்று தலைவி கூறினாள்.
ஆலி விருப்புற்று அகவி, புறவி எல்லாம் பீலி பரப்பி, மயில் ஆல, சூலி விரிகுவது போலும் இக் கார் அதிர, ஆவி உருகுவது போலும், எனக்கு. 19
பீலி - மயில் தோகை ஆவி - மழைத்துளி "மயில் கூட்டங்கள் மழைத் துளிகளை மிகவும் விரும்பிக் கூவி அழைத்துக் கொண்டு முல்லை நிலத்தின் பக்கமெல்லாம் தோகைகளை விரித்து ஆடுகின்றன. அவற்றின் அழைப்பினை ஏற்று மேகங்கள் கருக்கொண்டு முழக்கம் செய்கின்றன. இவற்றைக் கண்டு என் உள்ளம் மிகவும் வருந்துகிறது" என்றாள் தலைவி.
இனத்த அருங் கலை பொங்க, புனத்த கொடி மயங்கு முல்லை தளிர்ப்ப, இடி மயங்கி, யானும் அவரும் வருந்த, சிறு மாலை- தானும் புயலும் வரும். 20
புனம் - கொல்லை புயல் - மேகம் "ஆண் மான்களும் பெண் மான்களும் சேர்ந்து திரிகின்றன. கொல்லையில் பல்வேறு கொடிகள் கலந்து படர்கின்றன. அவற்றில் பூக்கள் பூக்கின்றன. நானும் பொருள் தேடிச் சென்ற தலைவனும் வருந்தும்படியாக மாலை இடிமுழக்கத்துடன் மழை வருகிறது" என்றாள் தலைவி.
காரிகை வாடத் துறந்தாரும் வாராமுன், கார்க் கொடி முல்லை எயிறு ஈன, காரோடு உடன்பட்டு வந்து அலைக்கும் மாலைக்கோ, எம்மின் மடம் பட்டு வாழ்கிற்பார் இல். 21
காரிகை - பெண் எயிறு - பல் "நான் வாடும்படி பொருள் தேடுவதற்காகச் சென்ற தலைவன் வருவதற்குள் கார்கால மழையால் செழித்த கொடிகளையுடைய முல்லைச் கொடிகள் அரும்புகளைத் தோற்றுவிக்கின்றன. அத்தகைய இம்மாலைப் பொழுதில் நம்மைப்போல் துன்பம் அடைந்து உயிர் வாழும் வலிமைபெற்றவர் வேறு யாரும் இல்லை" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.
கொன்றைக் குழல் ஊதிக் கோவலர் பின் நிரைத்து, கன்று அமர் ஆயம் புகுதர, இன்று வழங்கிய வந்தன்று, மாலை; யாம் காண, முழங்கி, வில் கோலிற்று, வான். 22
கோலுதல் - வளைதல் "இடையர்கள் கொன்றைக் குழலினை ஊதி வரிசையாகப் பசுவும் கன்றுமாக ஊருக்குள் வருகின்றனர். மாலைப் பொழுது பரவி வந்தது. மேகம் மழையைப் பெய்வித்தது. இவற்றைக் கண்டு என் மனம் வருந்துகின்றது" என்று தோழியிடம் கூறினாள். பருவம் கண்டு அழிந்த தலைமகள் சொல்லியது
தேரைத் தழங்குரல் தார் மணி வாய் அதிர்ப்ப, ஆர் கலி வானம் பெயல் தொடங்கி, கார் கொள, இன்று ஆற்ற வாரா விடுவார்கொல், காதலர்? ஒன்றாலும் நில்லா, வளை. 23
தேரை - தவளை பெயல் - மழை "மிக்க ஒலியையுடைய மேகமானது மழை பெய்யத் தொடங்கி கார் காலத்தை மேற்கொள்வதால் என் கையில் உள்ள வளையல்கள் எல்லாம் கழன்று போகின்றன. தவளைகள் இரைச்சலிடுவதைப் போல குதிரைகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணிகள் ஒலிக்க நம் தலைவர் தேரில் அமர்ந்து நம்முடைய பிரிவாற்றாமை நீங்கும்படி இன்னும் வரவில்லை. என்றும் வருந்துமாறு விட்டுவிடுவாரோ? நான் என்ன செய்வேன்" என்றாள்.
கல் ஏர் புறவில் கவினி, புதல்மிசை முல்லை தளவொடு போது அவிழ, எல்லி அலைவு அற்று விட்டன்று வானமும்; உண்கண், முலை வற்று விட்டன்று, நீர். 24
போது - அரும்பு எல் - இரவு "கற்கள் மிகுந்த முல்லை நிலத்தில் முல்லைப்பூக்கள் மலரும்படி இரவில் இடைவிடாது மழைபெய்தது. ஆனால் என் முகம் மலரச் செய்வதற்குரிய என் தலைவர் வராததால் என் மையுண்ட கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் வெளிவர அவை என் மார்பகத்தின் மீது வடிந்து கொண்டிருந்தன" என்று தலைவி தோழியிடம் கூறினாள். [இது முதல் துறைக்குறிப்புகள் கிடைக்கவில்லை]
................. 25 ................. 26
கார்ப்புடைப் பாண்டில் கமழ, புறவு எல்லாம் ஆர்ப்பொடு இன வண்டு இமிர்ந்து ஆட, நீர்த்து அன்றி ஒன்றாது அலைக்கும் சிறு மாலை, மால் உழந்து நின்றாக நின்றது நீர். 27
பாண்டில் - வாகை மரம் புறவு - முல்லை "நாள் தோறும் மழைபெய்ய வாகை மரங்கள் தழைத்துப் பூத்து மணம் வீசுகின்றன. முல்லை நிலத்தின் எல்லாப்பக்கங்களிலிருந்தும் வண்புனங்கள் ஆரவாரத்துடன் தேனுண்டு திரிகின்றன. நல்ல குணங்கள் இல்லாமல் பகை கொண்டு என்னை வருத்தும் சிறு பொழுதான மாலைக்காலம் எனக்கு மாறாக முயன்று நிற்க அதனால் கண்ணீரானது கண்களில் நிலையாய் நின்றது. நான் என்ன செய்வேன்" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.
குருந்து அலை வான் படலை சூடிச் சுரும்பு ஆர்ப்ப, ஆயன் புகுதரும் போழ்தினான், ஆயிழாய்! பின்னொடு நின்று ..... படு மழை கொ ....ல் என்னொடு பட்ட வகை. 28
சுரும்பு - வண்டு ஆயன் - இடையன் "ஆராய்ந்து தொடுக்கப்பட்ட அணிகளை அணிந்த தோழியே! குருத்த மலர் மாலையை அணிந்து வண்புளங்கள் சூழ்ந்து ஆரவாரம் செய்ய ஆயன் பசுக்கூட்டத்துடன் வீட்டில் சேர்கின்ற மாலை நேரத்தில், என்னிடம் தோன்றிய வருத்தம் மிக்க தன்மையானது நிலைபெற்று நின்று ஊர்ந்து வருகின்ற மிக்க மழையினால் தோன்றியது போலும். நான் என்ன செய்வேன்?" என்று தலைவி தோழியிடம் கூறினாள். 3. பாலை
எழுத்துடைக் கல் நிரைக்க வாயில் விழுத் தொடை அம் மாறு அலைக்கும் சுரம் நிரைத்து, அம் மாப் பெருந் தகு தாளாண்மைக்கு ஏற்க அரும் பொருள் ஆகும், அவர் காதல் அவா. 29
மாறு - பகைவர் தாளாண்மை - முயற்சி "முயற்சியினை உடைய நம் தலைவர், நடுகற்கள் நடுவதற்குக் காரணமான வீரர்கள் போரிடும் பாலை நில வழியில் செல்ல விருப்பப்படுகிறார்" என்று தலைவிக்குத் தலைவனின் பிரிவைத் தோழி உணர்த்தினாள்.
வில் உழுது உண்பார் கடுகி அதர் அலைக்கும் கல் சூழ் பதுக்கை ஆர் அத்தத்து இறப்பார்கொல்- மெல் இயல் கண்ணோட்டம் இன்றி, பொருட்கு இவர்ந்து, நில்லாத உள்ளத்தவர்? 30
கடுகி - விரைந்து அதர் - பாறை "வில்லால் போர் செய்து அதன் காரணமாகக் கிடைக்கும் பொருளைக் கொண்டு பிழைக்கும் ஆறலைக் கள்வர்கள் வாழும் கற்கள் நிறைந்த பாலை நிலத்து வழிக் கொடுமையை எண்ணிப் பார்க்க மாட்டாரா?" என்று தலைவனின் பிரிவுக்கு உடன்படாத தலைவி தோழியிடம் கூறினாள்.
பேழ் வாய் இரும் புலி குஞ்சரம் கோள் பிழைத்துப் பாழ் ஊர்ப் பொதியில் புகாப் பார்க்கும் ஆர் இடை, சூழாப் பொருள் நசைக்கண் சென்றோர், அருள் நினைந்து, வாழ்தியோ மற்று என் உயிர்? 31
குஞ்சரம் - யானை நசை - விருப்பம் "என் ஆருயிரே! பிளந்த வாயினை உடைய புலி யானையைக் கொல்ல முயன்று தோல்வியுற்று, பாழ்பட்ட ஊர்களில் உள்ள மன்றங்களில் புகுந்து உணவை நாடி நிற்கும். அத்தகைய தன்மையுடைய பாலை நில வழியில் நம் தலைவர் பொருள் தேட விருப்பம் கொண்டு சென்றுள்ளார். அப்படிப்பட்டவரின் அருளினை எதிர்பார்த்து இன்னும் இறவாதிருக்கிறாயே" என்று தலைவி தனக்குத்தானே கூறினாள்.
நீர் இல் அருஞ் சுரத்து ஆமான்இனம் வழங்கும் ஆர் இடை அத்தம் இறப்பர்கொல்? - ஆயிழாய்! - நாணினை நீக்கி, உயிரோடு உடன் சென்று காண, புணர்ப்பதுகொல் நெஞ்சு? 32
ஆமான் - காட்டுப்பசு அத்தம் - பாலை நிலம் "அணிகலன் அணிந்தவளே! என் உள்ளம் நாணத்தை நீக்கி, உயிருடன் என் தலைவர் உடன் சென்று அவரைக் கண்டு சேர எண்ணுகின்றது. அவ்வாறு இருக்க, குடிப்பதற்கு நீர் இல்லாமல் காட்டுப்பசுக்கள் திரியும் அரிய இடமாகிய பாலை நில வழியில் நம்மைப் பிரிந்து செல்வாரோ" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.
பொறி கிளர் சேவல் வரி மரல் குத்த, நெறி தூர் அருஞ் சுரம் நாம் உன்னி, அறிவிட்டு அலர் மொழிச் சென்ற கொடி அக நாட்ட, வலன் உயர்ந்து தோன்றும் மலை. 33
மரல் - ஒருவகைக் கொடி "காட்டுக் கோழிகள் செடிகளைக் கொத்துவதால் வழியானது தூர்ந்து போகும். அத்தகைய இயல்பு கொண்ட பாலை நில வழியின் கொடுமையை நினைத்தால் நமக்கு வருத்தம் மிகுகின்றது. பிரிவினால் ஏற்பட்ட மெலிவைக் கண்டு அயலார் அலர் தூற்றுகின்றனர். மலையில் பறக்கும் கொடிப் போன்று அலர் நாற் திசையிலும் செல்கின்றது" எனத் தலைவியிடம் தோழி கூறினாள்.
பீர் இவர் கூரை மறு மனைச் சேர்ந்து அல்கி, கூர் உகிர் எண்கின் இருங் கிளை கண்படுக்கும், நீர் இல், அருஞ் சுரம் முன்னி அறியார்கொல், ஈரம் இல் நெஞ்சினவர்? 34
எண்கு - கரடி சுரம் - பாலை "பீர்க்கங் கொடி படர்ந்த பாழ் வீடுகளில் கூரிய நகங்களையுடைய கரடியின் கூட்டம் ஒன்று சேர்ந்து உறங்கும். இரக்கமில்லாத நெஞ்சினை உடைய தலைவர் இத்தகைய நீர் இல்லாத அரிய பாலை நிலக் கொடிய வழியை எண்ணிப் பார்த்துத் தம்முடைய செயலை விட்டுவிட எண்ண மாட்டாரா?" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.
சூரல் புறவின் அணில் பிளிற்றும் சூழ் படப்பை ஊர் கெழு சேவல் இதலொடு போர் திளைக்கும் தேரொடு கானம், தெருள் இலார் செல்வார்கொல், ஊர் இடு கவ்வை ஒழித்து? 35
படப்பை - தோட்டம் கவ்வை - பழிச்சொல் "பொருளை விட அருளே மேலானது என்ற தெளிவு இல்லாத நம் தலைவர் பிரப்பம் புதர்கள் நிறைந்த காட்டில் அணில்கள் ஒலிக்கும்படியான தோட்டங்கள் நிறைந்த பாலை ஊர்களில் ஆண் கோழிகள் காடையுடன் போர் செய்யும்படியான பாலை நிலத்தின் வழியே பரவும் பழிச் சொற்களைப் பொய்யென ஒதுக்கிவிட்டுச் செல்லமாட்டார்" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.
முள்ளுடை மூங்கில் பிணங்கிய சூழ் படப்பை, புள்ளி வெருகு தன் குட்டிக்கு இரை பார்க்கும் கள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி. 36
வெருகு - காட்டுப் பூனை "நம் தலைவர் சென்ற பாலை நில வழியானது முட்களையுடைய மூங்கில் புதர்கள் சூழ்ந்திருக்கும்படியான தோட்டத்தில் வாழும் புள்ளிகளையுடைய காட்டுப் பூனை தன் குட்டிக்கு இரையைத் தேடித் திரியும். ஆறலைக் கள்வர் உலவும் பாலை நில வழி என்று சொல்வர்" என்று தோழியிடம் தலைமகள் கூறினாள்.
பொரி புற ஓமைப் புகர் படு நீழல், வரி நுதல் யானை பிடியோடு உறங்கும் எரி மயங்கு கானம் செலவு உரைப்ப, நில்லா, அரி மயங்கு உண்கண்ணுள் நீர். 37
ஓமை - மாயம் நுதல் - நெற்றி "எம் தலைவனே! பொந்துள்ள மேல் பகுதியினையுடைய மாமரத்தின் அழகுடைய நிழலில் நீண்ட நெற்றியையுடைய ஆண் யானை தன் பெண் யனையுடன் உறங்கும். அதனை அடுத்து காட்டுத் தீ எங்கும் கலந்து எரியும். இத்தகைய காட்டு வழியே பொருள் தேடிச் செல்வதாகக் கூறினால் தலைவியின் கண்களிலிருந்து நீர் நில்லாது வடியும்" என்று தோழி தலைவனிடம் கூறினாள்.
கோள் வல் .... வய மாக் குழுமும் தாள் வீ பதுக்கைய கானம் இறந்தார்கொல்- ஆள்வினையின் ஆற்ற அகன்றவா நன்று உணரா மீளி கொள் மொய்ம்பினவர்? 38
வயம் - வெற்றி மீளி - தீபம் "விலங்குகளைக் கொல்லும் புலிகள் நிறைந்த புதர்கள் நிறைந்த பாலை நில வழியே வீரம் வாய்ந்த வன்மைமிக்க நம் காதலர் தம் முயற்சியால் கொண்ட விருப்பத்தால், இங்கு இருப்பதால் உண்டாகும் தன்மையை அறியாது நம்மைப் பிரிந்து சென்றாரோ?" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.
கொடுவரி பாயத் துணை இழந்து அஞ்சி, கடு உணங்கு பாறைக் கடவு தெவுட்டும் நெடு வரை அத்தம் இறப்பர்கொல், கோள் மாப் படு பகை பார்க்கும் சுரம்? 39
கொடுவரி - புலி அத்தம் - பாலை "புலி பாய்ந்து பெண் யானையைக் கொன்றது. ஆண் யானை அச்சத்தால் அகன்று மாவிலங்கு மரங்கள் வாடி நிற்கும் பாறைகளுக்கிடையில் உள்ள வழியில் தன் பெண் யானையை கொன்ற புலியின் வருகையை எதிர்நோக்கிப் பழிவாங்கக் காத்திருக்கும். அப்படிப்பட்ட பாலை நில வழியில் தலைவர் செல்வாரோ" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.
மன்ற முது மரத்து ஆந்தை குரல் இயம்ப, குன்றகம் நண்ணி, குறும்பு இறந்து சென்றவர் உள்ளிய தன்மையர்போலும் - அடுத்து அடுத்து ஒள்ளிய தும்மல் வரும். 40
மன்று - பொதுவிடம் "மலை வழியாகப் பல ஊர்களைக் கடந்து சென்ற நம் தலைவர் ஆந்தை அலறுவதாலும் அடிக்கடி நலமிக்க தும்மல்கள் தோன்றுவதாலும் களவொழுக்கத்தில் நம்மிடத்தில் கொண்ட அன்புபோல உன் கலக்கம் நீங்க மீண்டும் வருவார்" எனத் தலைமகளின் வருகையை எதிர்பார்த்த தலைவிக்குத் தோழி கூறினாள்.
பூங் கண் இடம் ஆடும்; கனவும் திருந்தின; ஓங்கிய குன்றம் இறந்தாரை யாம் நினைப்ப, வீங்கிய மென் தோள் கவினிப் பிணி தீர, பாங்கத்துப் பல்லி படும். 41
கவின் - அழகு "உயர்ந்து குன்றுகள் நிறைந்த பாலைவழியில் சென்ற தலைவரை நாம் நினைக்கின்ற காலத்தில் நம்முடைய இடக்கண் துடிக்கின்றது. கனவுகள் நல்லதாய்த் தோன்றுகின்றன. நம் மென்மையான தோள்கள் அழகுற்று நம் துன்பம் நீங்கும் வண்ணம் பக்கத்தில் பல்லியும் நன்மையுண்டாகும்படி அடிக்கிறது" என்று தோழி தலைவியிடம் கூறினாள்.
'ஒல்லோம்!' என்று ஏங்கி, உயங்கி இருப்பவோ? கல் இவர் அத்தம், அரி பெய் சிலம்பு ஒலிப்பக் கொல் களிறு அன்னான்பின் செல்லும்கொல், என் பேதை மெல் விரல் சேப்ப நடந்து? 42
உயங்குதல் - வாடுதல் அரி - சிறுசொற்கள் "ஆண் யானை போன்ற தலைவனுடன் சென்ற அறியாச் சிறுமகள் பாலை வழியில் செல்ல இயலாமல் வாடித் துன்பம் அடைந்திருப்பாளோ! பரல் கற்கள் இடற சிலம்பு ஒலிக்க கால் விரல்கள் சிவக்குமாறு துன்புற்று நடந்து செல்வாளோ அறியேன் நான்!" என்று உடன்போன தலவியின் நற்றாய் கூறினாள். 4. மருதம்
ஆற்றல் உடையன், அரும் பொறி நல் ஊரன், மேற்றுச் சிறு தாய காய்வு அஞ்சி, போற்று உருவிக் கட்டக முத்தின் புதல்வனை மார்பின்மேல் பட்டம் சிதைப்ப வரும். 43
பட்டம் - மேலாடை போர் ஆற்றல் உடையவனும் அளவிடற்கரிய செல்வத்தை யுடையவனும் ஆகிய மருத நிலத்து நல்லூரன், மேல் பகுதியில் சிறிய காய்களையுடைய வஞ்சிச் செடியைப் போன்று கணுக்கள் சிதறுதலதால் தோன்றுகின்ற முத்தைப் போன்ற தன் செல்வ மகனைத் தன் மார்பின் மீது தழுவிக் கொண்டு தன் மேலாடை கீழே விழுவதைக் காணாதவனாய் உள்ளார்.
அகன் பணை ஊரனைத் தாமம் பிணித்தது இகன்மை கருதி இருப்பல்; - முகன் அமரா ஏதில் மகளிரை நோவது எவன்கொலோ, பேதைமை கண்டு ஒழுகுவார்? 44
தாமம் - மாலை ஏதிலார் - அயலார் "அகன்ற மருத நிலத்தூர்த் தலைவனான என் ஐயனைப் பரத்தையர் மலர் மாலையினால் பிணித்துக் கொண்டு போனதால் அவர்களிடமே மாறுபாடு கொண்டிருக்கிறேன். அறியாமையால் நடக்கும் அப்பெண்களை நொந்து கொள்வதை விட தலைவனை நொந்து கொள்வதே அறிவுடைமையாகும்" என்று தலைவி தனக்குத்தானே கூறிக் கொண்டாள்.
போத்து இல் கழுத்தின் புதல்வன் உணச் சான்றான்; மூத்தேம் இனி யாம்; வரு முலையார் சேரியுள், நீத்து நீர் ஊன வாய்ப் பாண! நீ போய் மொழி; கூத்தாடி உண்ணினும் உண். 45
கூத்தாடு - ஆடிப் பாடு "பாணனே! எம் கணவர் கழுத்திடம் தழுவியிருந்தார். ஆனால் இப்போது நேரம் இல்லாத காரணத்தினால் புதல்வன் பால் உண்ண என்னைத் தாயாக அடைத்துவிட்டார். நான் முதுமை அடைந்துவிட்டேன் என்று வளர்கின்ற முலைகளை உடைய பரத்தையர் சேரிக்குச் சென்று கூறு. அங்கேயே கள் முதலானவற்றைப் பருகினாலும் பருகி ஊன் வகைகளை உண். அல்லது அப்பரத்தையரோடு கூடிய கணவன் முன் கூத்தாடினாலும் ஆடு" எனப் பாணனிடம் தலைவி வாயில் மறுத்து வெறுப்புடன் கூறினாள்.
உழலை முருக்கிய செந் நோக்கு எருமை பழனம் படிந்து, செய் மாந்தி, நிழல் வதியும், தண் துறை ஊரன் மலர் அன்ன மார்புற, பெண்டிர்க்கு உரை - பாண! - உய்த்து. 46
அன்ன - போன்ற "பாணனே! உழலை என்னும் மரத்தை முறித்து தொழுவத்தை விட்டு நீங்கிச் சிவந்த கண்களையுடைய எருமையானது, மருத நிலத்து வயல்களில் மேய்ந்து, மர நிழல்களில் தங்கியிருக்கும்படியான குளிர்ந்த நீர்த்துறையையுடைய மருத நிலத்துத் தலைவரின் காதலைச் சேரியில் வாழும் பரத்தையரிடம் கூறுவாயாக" என்று தலைவி கூறினாள்.
தேம் கமழ் பொய்கை அக வயல் ஊரனைப் பூங் கண் புதல்வன் மிதித்து உழக்க, ஈங்குத் தளர் முலை பாராட்டி, என்னுடைய பாவை வளர் முலைக்கண் ஞெமுக்குவார். 47
பொய்கை - நீர் நிலைகள் "நீர் நிலைகளையும் வயல்களையும் உடைய மருத நிலத் தலைவனை அழகிய கண்களையுடைய இளம்புதல்வன் தம் இளங்காலால் மிதித்துச் சிதைத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அத் தலைவன் மகவு பெற்றதால் தளர்ந்திருந்த பாவை போன்ற தலைவியின் மார்பகக் காம்பினை வருடிக் கொண்டிருந்தான்" என்று செவிலித்தாய் நற்றாயிடம் கூறினாள்.
பேதை! புகலை; புதல்வன் துணைச் சான்றோன் ஓதை மலி மகிழ்நற்கு யாஅம் எவன் செய்தும்? பூ ஆர் குழல் கூந்தல் பொன் அன்னார் சேரியுள் ஓவாது செல் - பாண! - நீ. 48
பொன் - திருமகள் ஓவாது - இடைவிடாது "பாணனே! வயல்கள் சூழ்ந்த மருத நிலத்து எம் தலைவனுக்கு, மகனையே பிரிவுக்காலத்துத் துணையாக இருக்கக்கூடிய சான்றோன் என அடைக்கலமாகக் கொண்ட பெண்ணாகிய நாம் என்ன செய்ய முடியும்? அதனால் மலர்கள் நிறைந்த சுருட்டி முடித்த கூந்தலையுடைய திருமகளைப் போன்ற பரத்தையரின் சேரிக்குத் தவறாது செல்வாயாக" என்று பாணற்கு வாயில் மறுத்துக் கூறினாள்.
யாணர் நல் ஊரன் திறம் கிளப்பல்; என்னுடைய பாண! இருக்க அது களை; நாண் உடையான் தன் உற்ற எல்லாம் இருக்க; இரும் பாண! நின் உற்றதுண்டேல், உரை. 49
யாணர் - புதுவருவாய் "என்பால் வாயில் வேண்டி வந்த பாணனே! நீ சிறிது நேரம் இருக்க. அந்த நேரத்தில் புது வருவாயினையுடைய நல்ல மருத நிலத்தூர்த் தலைவனின் புகழினைச் சொல்வதைக் கைவிடுவாயாக. பிற பெண்டிரைக் கண்டு நாணம் கொள்ளும் என் தலைவன்பால் உள்ள குறைகள் ஒருபுறம் இருக்கட்டும். உனக்குக் குறை ஏதேனும் இருந்தால் கூறுவாயாக" என்று தலைவி கூறினாள்.
ஒள் இதழ்த் தாமரைப் போது உறழும் ஊரனை உள்ளம் கொண்டு உள்ளான் என்று யார்க்கு உரைக்கோ? - ஒள்ளிழாய்! - அச்சுப் பணி மொழி உண்டேனோ, மேல் நாள் ஓர் பொய்ச் சூள் என அறியாதேன்? 50
அறியா - அறியவில்லை "நல்ல அணிகலன்களை அணிந்த தோழியே! களவுப் புணர்ச்சி நிகழ்ந்த அக்காலத்தில் கூறிய உறுதி மொழிகளைப் பொய் என்று கருதியிருந்தால் அதனை எழுத்தில் எழுதிப் பெற்றிருப்பேன். அங்ஙனமிருக்க நிறமிக்க இதழ்களையுடைய தாமரை மலர்கள் இடையிட்டுக் கிடக்கும் மருதநிலத்து தலைவன் என்னை நினைத்தும் பார்ப்பதில்லை என்பதை யாருக்கு உரைப்பேன் தோழி" என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
பேதையர் என்று தமரைச் செறுபவோ? போது உறழ் தாமரைக்கண் ஊரனை நேர் நோக்கி, வாய் மூடி இட்டும் இருப்பவோ?- மாணிழாய்! - நோவது என்? மார்பு அறியும், இன்று. 51
ஏர் - அழகு "அழகிய அணிகலன்களை அணிந்த தோழியே! நம்முடைய தலைவரைக் காணாதவிடத்து பரத்தையர் அறிவற்றவர் என வைது சினம் கொள்வர். கண்டபோது வாய்மூடி இருப்பர். இப்படிப் புறம் கூறுகின்றவர்களிடம் செல்லும் நம் தலைவனை நினைத்து என் உள்ளம் வருந்துகிறது. இதனை யாரிடம் கூறுவேன் தோழி" என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
காதலின் தீரக் கழிய முயங்கன்மின்; ஓதம் துவன்றும் ஒலி புனல் ஊரனைப் பேதைப் பட்டு ஏங்கன்மின் நீயிரும், எண் இலா ஆசை ஒழிய உரைத்து. 52
விழுமம் - விருப்பம் முயங்குதல் - தழுவுதல் "ஆருயிர்த் தங்கையரே! ஒலிக்கின்ற நீர் வளம் வாய்ந்த மருத நிலத்தூரனை உள்ளன்பினால் நீங்கள் நெருங்கித் தழுவாதீர்கள். அறியாமையில் அகப்பட்டு அளவற்ற முறையில் தலைவன் மேல் விருப்பம் கொண்டு காதல் சொற்கள் பலவற்றைப் பேசி ஏங்குதல் வேண்டாம். இவ்வாறு இருந்தால் தலைவன் முன்போல் என்னிடம் அன்புடன் ஒழுகுவான்" என்று தலைவி மற்றவர்களிடம் கூறினாள்.
'உள் நாட்டம் சான்றவர் தந்த நசை இற்று என்று எண்ணார்க்குக் கண்ணோட்டம் தீர்க்குதும்' என்று எண்ணி, வழிபாடு கொள்ளும் வள வயல் ஊரன் பழிபாடு நின் மேலது. 53
நசை - அன்பு "ஆழ்ந்த ஆராய்ச்சியுடைய, நிறைந்த சான்றோர் ஏற்படுத்திய இல்லற வாழ்க்கையானது அன்புடன் கூடியது என்று நினைக்காது புணர்ச்சி ஒன்றையே எண்ணும் பரத்தையரிடத்தில் காட்டிய அருளை இனி விட்டுவிடுவானோ என நினைத்த தலைவன் நின்பால் வணக்கத்தை மேற்கொண்டான். அவனை ஏற்காவிட்டால் உனக்குப் பழிவந்து சேரும் எனவே அவனை ஏற்றுக் கொள்வாயாக" என்று தோழி தலைவியிடம் கூறினாள்.
உண் துறைப் பொய்கை வராஅல்இனம் இரியும் தண் துறை ஊர! தகுவதோ, - ஒண்டொடியைப் பாராய், மனை துறந்து, அச் சேரிச் செல்வதனை ஊராண்மை ஆக்கிக்கொளல்? 54
இரியும் - திரியும் பொய்கை - குளம் "மீன் இனங்கள் நிறைந்த மருத நிலத் தலைவனே! வீட்டைவிட்டு பரத்தையர் வீடு செல்வது சாதனை என்று நினைப்பது பெருமையாகுமா? உம்மைப் பிரிந்த தலைவியின் நிலையை எண்ணிப் பார்ப்பாயாக" என்று தோழி தலைவனிடம் கூறினாள்.
பொய்கை நல் ஊரன் திறம் கிளத்தல்! என்னுடைய எவ்வம் எனினும், எழுந்தீக; வைகல் மறு இல் பொலந் தொடி வீசும், அலற்றும், சிறுவன் உடையேன் துணை. 55
தொடி - வளையல் "நீர் நிலைகளையுடைய மருத நிலத்தூர்த் தலைவனின் ஒழுக்க நெறிகளை நீ எடுத்துக் கூற வேண்டியதில்லை. தலைவன் பிரிந்தது என்னுடைய தவறாக இருப்பினும் இருக்கட்டும். நாள்தோறும் பொன் வளையல்களை அணிந்து கைவீசி விளையாடும் என் மகனை நான் பாதுகாவலாகக் கொண்டுள்ளேன். ஆகையால் இவ்விடத்தை விட்டுச் செல்வாயாக" என பாணற்கு வாயில் மறுத்துத் தலைவி கூறினாள்.
வள வயல் ஊரன் மருள் உரைக்கு மாதர் வளைஇய சக்கரத்து ஆழி, கொளை பிழையாது, ஒன்று இடைஇட்டு வருமேல், நின் வாழ் நாட்கள் ஒன்றி அனைத்தும் உளேன். 56
ஆழி - மோதிரம் "எம் தலைவியே! வளம் பொருந்திய வயல்கள் சூழ்ந்த மருத நிலத்தூரன், மயக்கும் மொழிகளைப் பேசித் தங்கள் வலையில் சிக்க வைக்கும் பரத்தையரின் வளைந்த சக்கரம் போன்ற மோதிரம் அணிந்த கைகளில் தப்பி என்றேனும் இடையில் நம்மிடம் வந்தால் அவனை உம்மிடம் சேரச் செய்து வேண்டியவற்றை பெற்றதைப் போல மகிழ்ச்சியடைவேன்" என்று தோழி தலைவியிடம் கூறினாள். 5. நெய்தல்
ஒழுகு திரைக் கரை வான் குருகின் தூவி உழிதரும் ஊதை எடுக்கும் துறைவனைப் பேதையான் என்று உணரும், நெஞ்சம்; இனிது உண்மை ஊதியம் அன்றோ உயிர்க்கு? 57
தூவி - இறகு திரை - அலை "தோழியே! அலைகளையுடைய கடலினைச் சார்ந்த தலைவன் வஞ்சனை இல்லாத அறியாமை உடையவன் என்று உணரும்படியான நெஞ்சத்தை நாம் கொண்டிருத்தல் நம் வாழ்வுக்கு நன்மையை உண்டாக்கும்" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.
என்னைகொல்? தோழி! அவர்கண்ணும் நன்கு இல்லை; அன்னைமுகனும் அது ஆகும்; பொன் அலர் புன்னை அம் பூங் கானற் சேர்ப்பனை, 'தக்க தேர்; நின் அல்லது இல்' என்று உரை. 58
உரை - சொல் "அழகிய கடற்கரைச் சோலையையுடைய தலைவன் நம்மை விரைவில் மணந்து கொள்வதாகத் தெரியவில்லை. அதனால் நமது துன்பம் மிகுகின்றது. களவொழுக்கம் தெரிந்ததால் செவிலியின் மனநிலை மாறியுள்ளது. நெய்தல் நிலத்து எம் தலைவனுக்கு மணம் செய்து கொள்வதில் தாமதம் ஏற்படுவது தகாது? ஆதலால் நின்னைத் தவிர எனக்கு வேறு துணையில்லை என்பதை என் தலைவன் பால் சொல்வாய்" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.
இடு மணல் எக்கர் அகன் கானல் சேர்ப்பன் கடு மான் மணி அரவம் என்று, கொடுங்குழை புள் அரவம் கேட்டுப் பெயர்ந்தாள் - 'சிறு குடியர் உள் அரவம் நாணுவர்' என்று. 59
அரவம் - ஒலி புள் - பறவை தோழி தலைவனிடம் "பறவைகளின் ஒலியைத் தம் தலைவன் விரைவாய்ச் செலுத்தும் குதிரைகளின் ஒலி என்று எண்ணி, தலைவி ஏமாந்து சென்றாள். பரதவர் பயங் கொள்வாரோ என்று நினைத்து இரவுக்குறியிடம் வரை சென்று உன்னைப் பார்க்காமல் திரும்பி விட்டாள்" என்று கூறினாள்.
மணி நிற நெய்தல் இருங் கழிச் சேர்ப்பன் அணி நலம் உண்டு அகன்றான்; என்கொல், எம்போல் தணி மணல் எக்கர்மேல் ஓதம் பெயர, துணி முந்நீர் துஞ்சாதது? 60
எக்கர் - மணல்மேடு ஓதம் - அலை தலைவனை இரவுக்குறியில் சந்தித்துவிட்டுத் திரும்பிய தலைவி தோழியிடம் "சான்றோர்களால் துணிந்து வரையறுக்கப்பட்ட கடலானது உறங்காமைக்குக் காரணம் நெய்தல் நில மலர்கள் பூத்துள்ள உப்பங்கழிகளையுடைய கடல் துறையையுடைய தலைவன் தன் அழகிய நலமான இன்பத்தை மேற்கொண்டு நீங்கிவிட்டான் என்று எண்ணிதான் உறங்கவில்லை போலும்" என்றாள்.
கண் திரள் முத்தம் பயக்கும் இரு முந்நீர்ப் பண்டம் கொள் நாவாய் வழங்கும் துறைவனை முண்டகக் கானலுள் கண்டேன் எனத் தெளிந்தேன், நின்ற உணர்வு இலாதேன். 61
நாவாய் - மரக்கலம் முந்நீர் - கடல் "கண்விழிபோல் திரண்ட முத்துக்களைத் தரும் பெரிய கடலில் பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்கின்ற மரக்கலங்கள் உலவும்படியான துறைமுகத் தலைவனை தாரைச் செடிகள் சூழ்ந்த கடற்கரைச் சோலையில் இன்று அரிதாய்க் காணப்பெற்றேன். அவனைப் பிரிந்த போது நேர்ந்த துன்பத்தால் இப்பொழுது இன்ப உணர்ச்சி இல்லாதவளானேன்" என்று தன் நெஞ்சுக்குத் தலைமகள் கூறினாள்.
'அடும்பு இவர் எக்கர் அலவன் வழங்கும் கொடுங் கழிச் சேர்ப்பன் அருளான்' எனத் தெளிந்து, கள்ள மனத்தான் அயல் நெறிச் செல்லும்கொல், நல் வளை சோர, நடந்து? 62
இவர்தல் - படர்தல் அலவன் - நண்டு "அடம்புக் கொடி படர்ந்துள்ள மணல் மேடுகளில் நண்டுகள் நடமாடும் உப்பங்கழிகள் சூழ்ந்த கடற்கரைத் தலைவன் வரவை நீட்டித்ததால் அவனிடம் அன்பில்லை என்று தலைவி வருந்தும்படி வேறொரு குலமகளை மணந்து கொள்வானோ? அவ்வாறு செய்யமாட்டான்" என்று கூறினாள்.
கள் நறு நெய்தல் கமழும் கொடுங் கழித் தண்ணம் துறைவனோ தன் இலன்; ஆயிழாய்! வள்நகைப்பட்டதனை ஆண்மை எனக் கருதி, பண் அமைத் தேர்மேல் வரும். 63
தண் - குளிர்ச்சி "ஆராய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த தலைவியே! உப்பங்கழிகளையுடைய குளிர்ந்த அழகிய தலைவன் அவனுடைய கைகளில் அகப்பட்டுக் கொண்டாரைத் தன் ஆண்மையிற்பாற்பட்டது என்று கருதி இறுமாப்பு கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட தேரில் அமர்ந்து மணந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமில்லாமல் வருகின்றான்" என்று தோழி தலைவியிடம் கூறினாள்.
தெண் நீர் இருங் கழி, வேண்டும் இரை மாந்தி, பெண்ணைமேல் சேக்கும் வணர் வாய்ப் புணர் அன்றில்! தண்ணம் துறைவற்கு உரையாய், 'மடமொழி வண்ணம் தா' என்று தொடுத்து. 64
வணர் - வளைந்த வண்ணம் - அழகு தோழி அன்றில் பறவையிடம், "உப்பங்கழியில் தான் வேண்டிய மீனினை உண்டு அருகில் உள்ள பனைமரத்தின் மீது தங்கும் இணைபிரியா அன்றில் பறவையே! தலைவியின் களவுப் புணர்ச்சியில் கொண்ட அழகைத் திருப்பித் தந்து விடுவாய் என்று வேண்டிய சொற்களை அடக்கத்தோடு தொகுத்துத் தலைவனிடம் கூறுவாயாக" என்று கூறினாள்.
எறி சுறாக் குப்பை இனம் கலக்கத் தாக்கும் எறி திரைச் சேர்ப்பன் கொடுமை அறியாகொல் - கானகம் நண்ணி அருள் அற்றிடக் கண்டும், கானலுள் வாழும் குருகு? 65
குருகு - நாரை "கடல் துறையைச் சார்ந்த நெய்தல் நிலத் தலைவனைப் பிரியேன் எனக் கூறிப் பிரிந்த கொடுமையைக் காட்டு வழியில் சென்று என்மேல் அன்பு இல்லாது காலம் நீட்டிடத் தெரிந்தும் தலைவனைப் பற்றி அறிந்து கொள்ள மாட்டாயோ?" என்று தலைமகள் தன் மனத்திடம் கூறினாள்.
நுண் ஞாண் வலையின் பரதவர் போத்தந்த பல் மீன் உணங்கல் கவரும் துறைவனைக் கண்ணினால் காண அமையும்கொல்? 'என் தோழி வண்ணம் தா' என்கம், தொடுத்து. 66
வண்ணம் - அழகு "தலைவியே! வலையால் பரதவர் பிடித்துக் கொண்டு வந்த பலவித மீன்களாகிய வற்றலினைப் பற்றுதற்கு இடமான துறையையுடைய தலைவனை நம் கண்களால் காண முடியுமா? அவனைக் காண நேருமானால் விடாது தொடர்ந்து தலைவியினிடத்துக் கொண்ட அழகைத் திருமணத்தின் மூலம் கேட்டுப் பெறுவோம்" என்று தோழி தலைவியிடம் கூறினாள்.
இவர் திரை நீக்கியிட்டு, எக்கர் மணல்மேல் கவர் கால் அலவன் தன பெடையோடு, தவழும் இருங் கழிச் சேர்ப்ப! என் தோழி- படர் பசலை பாயின்று - தோள். 67
கவர் - பிரிதல் அலவன் - ஆண் நண்டு "மணல் மேட்டில் இரண்டு பிரிவான கால்களையுடைய ஆண் நண்டானது தன் பெண் நண்டோடு விளையாடுகின்ற ஒப்பற்ற பெரிய உப்பங்கழிகளையுடைய கடல் துறைத் தலைவனே! என் தோழியான தலைமகளின் தோள் நின் பிரிவால் பசலை பூத்துள்ளது. அதனால் துன்பப்படுகின்றாள்" என்று தலைமகன், தலைமகளை மறந்த போது தோழி எதிர்ப்பட்டுக் கூறினாள்.
சிறு மீன் கவுள் கொண்ட செந் தூவி நாராய்! இறு மென் குரல நின் பிள்ளைகட்கே ஆகி, நெறி நீர் இருங் கழிச் சேர்ப்பன் அகன்ற நெறி அறிதி, மீன் தபு நீ. 68
தூவி - இறகு தபு - வழி "சிறு மீன்களைத் தன் அலகிடைக் கொண்ட சிவந்த இறகுகளையுடைய நாராய்! மெல்லிய குரலையுடைய நின் குஞ்சுகளையே எண்ணி மீன்களைக் கொத்திக் கொல்லும் நீ, களவுப் புணர்ச்சியில் எம்மைக் கண்டுள்ளாய். ஆகையினால் வளைந்து செல்லும் உப்பங்கழிகள் மிகுதியாக உள்ள கடல் துறைத்தலைவன் என்னை விட்டு நீங்கிய தன்மையை நன்றாய் அறிவாய்" என்று தலைவன் பொருள் வயிற் பிரிந்த காலத்து வருந்திய தலைவி, நாரையைப் பார்த்துக் கூறினாள்.
................. 69 ................. 70 நூலைச் சேர்ந்ததாக ஊகிக்கும் பாடல்
முடம் முதிர் புன்னைப் படுகோட்டு இருந்த மடமுடை நாரைக்கு உரைத்தேன் - கடன் அறிந்து பாய்திரைச் சேர்ப்பன் பரித் தேர் வர, கண்டு, 'நீ தகாது' என்று நிறுத்து.
பரி - குதிரை கடன் - கடமை "முதிர்ந்த புன்னை மரத்திலே இருக்கும் நாரையே! கடமையினைச் செய்வதற்காக என்னைப் பிரிந்து குதிரைத் தேரிலே வரும் தலைவனை இது தகாது என்று நிறுத்தி என்னிடம் அனுப்புவாய்" என்று பொருள் வயிற்பிரிந்த தலைவனை நினைத்துத் தலைவி நாரையிடம் கூறினாள். மிகைப் பாடல் கடவுள் வாழ்த்து
எண்ணும் பொருள் இனிதே எல்லாம் முடித்து, எமக்கு நண்ணும் கலை அனைத்தும் நல்குமால் - கண்ணுதலின் முண்டத்தான், அண்டத்தான், மூலத்தான், ஆலம் சேர் கண்டத்தான் ஈன்ற களிறு.
ஆலம் - நஞ்சு களிறு - யானை நெற்றிக் கண்ணையுடையவனும், உலக வடிவமாய் இருப்பவனும், எல்லாவற்றுக்கும் மூலகாரணமாய் இருப்பவனும், கழுத்திலே நஞ்சினை உடைய நீலகண்டன் அருளிய யானை முகத்தைக் கொண்ட விநாயகப் பெருமான் யாவற்றையும் நன்றாக முடிவு பெறச் செய்து எல்லாக் கலைகளையும் அளிப்பான். |