உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
புல்லங்காடனார் இயற்றிய கைந்நிலை (உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.) 'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன. இந் நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், என்ற வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. திணைமொழி ஐம்பதும் இவ் வகை வரிசை முறையிலே அமைந்திருத்தல் கவனிக்கத்தக்கது. இந் நூற் செய்யுட்களில் 18 பாடல்கள் சிதைந்துள்ளன (1, 8, 14-17, 20, 26-35, 38). இவற்றுள் மூன்று பாடல்கள் ஒரு சொல் அளவில் சிதைந்துள்ளன. ஏனைய பதினைந்தின் அடிகளும் சொற்களும் பல் வேறு வகையில் சிதைந்துள்ளன. எவ்வித சிதைவும் இன்றி உள்ளவை நெய்தல் திணைப் பகுதியில் அமைந்துள்ள பாடல்களே. இந் நூலைச் செய்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்பது நூல் இறுதிக் குறிப்பில் காணப்படுகிறது. எனவே நூலாசிரியர் பெயர் புல்லங்காடனார் என்பதும், இவர் தந்தையார் பெயர் காவிதியார் என்பதும் விளங்கும். இவர் தந்தையார் அரசனால் 'காவிதி' என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப் பெற்றவராக இருத்தல் கூடும். மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். எனவே, இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவராவார். 1. குறிஞ்சி வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
நுகர்தல் இவரும் கிளி கடி ஏனல் நிகர் இல் மட மான் நெரியும் அமர் சாரல் கானக நாடன் கலந்தான்இலன் என்று, மேனி சிதையும், பசந்து. 1
இவர்தல் - பொருந்துதல் ஏனல் - தினைப்புனம் தினைக்கதிர்களைத் தின்பதற்காக அமரும் கிளிகளை ஓட்டும் தினைப்புனத்தில் தனக்கு நிகரற்ற மான்கள் சிலிர்த்து நிற்கும்படியான கானக நாட்டுத் தலைவன் மலைச்சாரலில் என்னைச் சேர்ந்தான். அத்தகையவன் இன்று இங்கு என்னைப் பிரிந்து சென்றான் என்பதை அறிந்த எனது உடல் பசலை நிறம் கொண்டு அழகு இழந்தது. வரைவு நீட்டித்த வழி ஆற்றாமையைத் தலைவி தோழிக்குக் கூறுதல்
வெந்த புனத்துக்கு வாசம் உடைத்தாகச் சந்தனம் ஏந்தி, அருவி கொணர்ந்திடூஉம் வஞ்ச மலை நாடன் வாரான்கொல்? - தோழி! - என் நெஞ்சம் நடுங்கி வரும்! 2
புனம் - காடு "தீயினால் கருகிய காட்டுக்கு மீண்டும் நறுமணம் உண்டாகும்படி மலையினின்று வரும் அருவிகள் சந்தனக் கட்டைகளை அடித்துக் கொண்டு வந்து சேர்கின்ற கள்ள மனமுடைய மலைநாட்டுத் தலைவன் இனி இங்கு வருவானோ? வராது விடுவானோ" என்று தலைவி தோழியிடம் அஞ்சுகின்றாள். வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
பாசிப் பசுஞ் சுனைப் பாங்கர், அழி முது நீர் காய் சின மந்தி பயின்று, கனி சுவைக்கும், பாசம் பட்டு ஓடும் படு கல் மலை நாடற்கு ஆசையின் தேம்பும், என் நெஞ்சு. 3
பாங்கர் - பக்கம் மந்தி - குரங்கு "பாசி படர்ந்த பசுமையான நீர்ச்சுனையின் பக்கத்தில் பெருகுகின்ற பசுமையான நீரில் கோபங்கொண்ட குரங்குகள் அந்நீரில் அடித்துவரும் பழங்களை எடுத்துச் சுவைக்கும். இத்தகைய பாசமுடைய அருவியுடைய மலை நாட்டுத் தலைவன் பொருட்டு என் மனம் காதலால் வருந்துகின்றது" என்று தலைவி தோழியிடம் கூறினாள். வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
ஓங்கல் விழுப் பலவின் இன்பம் கொளீஇய தீம் கனி மாவின் முசுப் பாய் மலை நாடன் தான் கலந்து உள்ளாத் தகையனோ, - நேரிழாய்! - தேம் கலந்த சொல்லின் தெளித்து? 4
ஓங்கல் - மலை நேரிழை - பெண் "மலையில் உள்ள பலாமரத்தில் இனிய பழத்தைக் கருங்குரங்குகள் பறிக்கும் மலைநாட்டுத் தலைவன், இயற்கைப் புணர்ச்சியால் தேன் கலந்த சொற்களைக் கூறி என்னைத் தெளிவித்துச் சேர்ந்து பின்னர் அவற்றை எண்ணாது மறக்குந் தன்மையுடையவனோ?" எனத் தோழியிடம் தலைவி கூறினாள். வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
இரசம் கொண்டு இன் தேன் இரைக்கும் குரலைப் பிரசை இரும் பிடி பேணி வரூஉம் முரசு அருவி ஆர்க்கும் மலை நாடற்கு, என் தோள் நிரையம் எனக் கிடந்தவாறு! 5
இரசம் - இன்பம் நிரையம் - நரகம் "கரிய பெண் யானை, இனிய வண்டுகள் இன்பத்துடன் பாடும் ஒலியைக் கேட்டுத் தேன் கூட்டை நாடி வரும் முரசு போன்று முழங்கி வரும் அருவிகளையுடைய மலை நாட்டுத் தலைவனுக்கு என் தோளில் சேர்கின்ற இன்பம் நரகத்தில் இருப்பது போல இருக்கின்றது போலும்" என்று தலைவி கூறுகிறாள்.
மரையா உகளும் மரம் பயில் சோலை, உரை சால் மட மந்தி ஓடி உகளும் புரை தீர் மலை நாடன் பூண் ஏந்து அகலம் உரையா வழங்கும், என் நெஞ்சு. 6
உகளும் - திரியும் புரை - குற்றம் "காட்டுப் பசுக்கள் திரியும் மரங்கள் நிறைந்த சோலையில், இளமையான குரங்குகள் திரியும் படியான குற்றமற்ற மலைநாட்டுத் தலைவனின் அணிகலன்கள் அணிந்திருக்கும் மார்பானது என் மனத்தைத் தேய்த்து அதனுள் நடக்கின்றது" என்று தலைவி கூறினாள்.
கல் வரை ஏறி, கடுவன், கனி வாழை எல் உறு போழ்தின் இனிய பழம் கவுள் கொண்டு, ஒல்லென ஓடும் மலை நாடன்தன் கேண்மை சொல்ல, சொரியும், வளை. 7
கடுவன் - ஆண் குரங்கு எல் - சூரியன் "பாறைகளையுடைய மலையின் மீது ஆண்குரங்குகள் ஏறிப் பகற்பொழுதில் இனிய வாழைப் பழங்களைப் பறித்து உரித்துக் கன்னத்தில் அடக்கிக் கொண்டு விரைவாய் ஓடும். இத்தகைய மலை நாடனின் நாட்டின் சிறப்பினை சொல்ல எண்ணிய அளவில் என் கை வளையல்கள் நெகிழ்ந்து கழல்கின்றன" என்றாள் தலைவி. தலைவி வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி அறத்தோடு நிற்றல்
கருங் கைக் கத வேழம், கார்ப் பாம்புக் குப்பங் கி . . .க் கொண் . . . . . . . . . . . . . கரும் பெருங் கல் மலை நாடன் பேணி வரினே, சுருங்கும், இவள் உற்ற நோய். 8
கதம் - சினம் கரிய துதிக்கையை உடைய சினம் கொண்ட யானைகள் கரிய பாம்பின் பக்கத்தில்... மலைநாட்டுத் தலைவன் இவளை விரும்பி நாள்தோறும் வந்தால் இவள் கொண்ட பிரிவாற்றாமையாகிய நோய் குறையும். வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
காந்தள் அரும் பகை என்று, கத வேழம் ஏந்தல் மருப்பிடைக் கை வைத்து, இனன் நோக்கி, பாய்ந்து எழுந்து ஓடும் பய மலை நல் நாடன் காய்ந்தான்கொல், நம்கண் கலப்பு? 9
மருப்பு - தந்தம் "செங்காந்தள் மலரை தீ என எண்ணி சினம் கொண்ட யானை துதிக்கையைத் தூக்கிக் கொண்டு தன் கூட்டத்தை நோக்கி ஓடும். இத்தகைய அச்சத்தைத்தரும் வனப்பு மிக்க மலைநாட்டுத் தலைவன் நம்முடன் கூடும் இன்பத்தை வெறுத்துவிட்டார் போல் உள்ளது" எனத் தலைவி தோழியிடம் கூறினாள். தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்
பொன் இணர் வேங்கைப் புனம் சூழ் மலை நாடன், மின்னின் அனைய வேல் ஏந்தி, இரவினுள் இன்னே வரும்கண்டாய் - தோழி! - இடை யாமத்து என்னை இமை பொருமாறு? 10
இணர் - மலர்க்கொத்து புனம் - காடு "பொன்போன்ற மலர்க் கொத்துக்களையுடைய வேங்கை மரங்கள் நிறைந்திருக்கும் காடுகள் சூழ்ந்த மலை நாட்டுத் தலைவன் நடு இரவில் மின்னல் போன்று ஒளி வீசும் வேலினை ஏந்தி இப்போது வருவான். எனவே என் கண்கள் எவ்வாறு உறங்கும்" என்று தலைவி தோழியிடம் கூறினாள். தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்
எறி கிளர் கேழல் கிளைத்திட்ட பூழி பொறி கிளர் மஞ்ஞை புகன்று குடையும் முறி கிளர் நல் மலை நாடன் வருமே- அறி துறைத்து, இவ் அல்லில் நமக்கு. 11
கேழல் - பன்றி பூழி - புழுதி "பன்றிகள் தம் கொம்புகளைக் குத்தி எழுப்பிடும் புழுதியில் புள்ளிகளையுடைய மயில்கள் விளையாடும். இத்தகைய தன்மையுடைய மலைநாட்டுத் தலைவன் நம்மிடம் சில பேசி, அரிதாக வருகின்றான்" என்று தலைவி தோழியிடம் கூறினாள். தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்
நாக நறு மலர், நாள் வேங்கைப் பூ, விரவி, கேசம் அணிந்த கிளர் எழிலோள் ஆக, 'முடியும்கொல்?' என்று முனிவான் ஒருவன் வடி வேல் கை ஏந்தி, வரும். 12
விரவி - கலந்து ஆகம் - உடல் "புன்னையின் மணமிக்க மலரையும் அன்று அலர்ந்த வேங்கை மலரையும் ஒன்று சேர்த்துக் கலந்து தம் கூந்தலுக்கு அணிந்த அழகினையுடைய தலைவியின் உடல் அழியுமோ என தலைவன் அஞ்சித் தன் உயிரினைப் பற்றி பயப்படாமல் வேலேந்தி வருகின்றான்" என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள். 2. பாலை வரைபொருள் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவனுக்குத் தலைவியின் பிரிவாற்றாமை கூறல்
கடுகி அதர் அலைக்கும் கல் சூழ் பதுக்கை விடு வில் எயினர்தம் வீளை ஓர்த்து ஓடும் நெடு இடை அத்தம் செலவு உரைப்பக் கேட்டே, வடுவிடை மெல்கின, கண். 13
கடுகி - விரைந்து விளை - சீழ்க்கை ஒலி "ஆறலைக் கள்வர்களும், வேடர்களும் உடைய பாலை நிலவழியில் செல்லுகின்றாய் என்று கேட்டவுடன் தலைவியின் மாவடுவைப் பிளந்தாற் போன்ற இரு கண்களிலிருந்து கண்ணீர் மெதுவாக வழிந்தது" என்று தோழி தலைவனிடம் கூறினாள். வரைபொருள் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவனுக்குத் தலைவியின் பிரிவாற்றாமை கூறல்
கத நாய் துரப்ப, .... .... .... ..... ..... ..... .... .... .... .... .... .... ..... ..... ...... ..... யவிழும் புதல் மாறு வெங் கானம் போக்கு உரைப்ப, நில்லா, முதன் ..... ..... ..... .... ..... .... .... .... ..... 14 .... .... .... ..... ..... ..... ..... ..... .... ..... .... .... .... .... .... .... ..... ..... ..... ..... ..... .... ..... .... .... .... கடுங் கதிர் வெங் கானம் பல் பொருட்கண் சென்றார், கொடுங் கல் மலை .... .... .... ..... ..... ..... 15 ..... ..... ...... ...வுறையும் மெல்லென் கடத்து .... ...... கடுஞ் சின வேங்கை கதழ் வேழம் சாய்க்கு ..... ..... ..... ..... ..... ..... ..... ..... ..... ..... ..... ..... ..... ..... ..... ..... ..... ..... ..... நமர். 16 கடமா இரிந்தோடும் கல் அதர் அத்தம், மட மா இரும்பிடி வேழ மரு .... .... .... .... .... ..... ..... ..... ...ண்ட வுண் கண்ணுள் நீர் ..... ..... ..... ..... ...... ..... ..... ..... ...... ...... ..... 17 பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது
ஆமா சிலைக்கும் அணி வரை ஆரிடை, ஏ மாண் சிலையார்க்கு இன மா இரிந்து ஓடும் தாம் மாண்பு இல் வெஞ் சுரம் சென்றார் வரக் கண்டு, வாய் மாண்ட பல்லி படும். 18
ஆமா - காடு சிலை - வில் "காட்டுப் பசுக்கள் கனைக்கின்ற அழகிய மலையினை அடுத்துள்ள வழியில் அம்புகளை உடைய வேடர்களைக் கண்டு பயந்து ஓடும் விலங்குகளை உடைய பெருமையற்ற கொடிய பாலை நிலக்காட்டில் பிரிந்து சென்ற நம் தலைவரின் வருகையைக் கண்டு சிறப்புடையனவற்றை ஒலி மூலம் எடுத்துக்கூறும் பல்லி ஒலிக்கின்றது" என்று தோழி தலைவியை ஆறுதல் படுத்தினாள். பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது
அரக்கு ஆர்ந்த ஓமை அரி படு நீழல், செருக்கு இல் கடுங் களிறு சென்று உறங்கி நிற்கும், பரல் கானம் பல் பொருட்குச் சென்றார் வருவர்; நுதற்கு இவர்ந்து ஏறும், ஒளி. 19
செருக்கு - மதம் "அரக்கியைப் போன்ற செந்நிறம் கொண்ட ஓமை மரத்தின் இடை இடையே உள்ள நிழலில் மதமற்ற யானைகள் போய் உறங்கும் தன்மை கொண்ட பரற்கற்களையுடைய பாலை நிலக்காட்டின் வழியாய்ப் பொருள் திரட்டச் சென்ற தலைவர் இப்பொழுதே வருவார். அதனால்தான் உன் நெற்றியிலுள்ள பசலை நீங்கி ஒளியுண்டாயிற்று" எனத் தோழி தலைவியைத் தேற்றினாள்.
.... .... ..... ..... ..... ..... ..... .... ..... ....... ..... .... .... .... ..... ..... ..... ..... ..... .... ..... .......விழ்க்கும் ஓவாத வெங் கானம் சென்றார் ..... ...... ...... ..... ..... ..... ..... வார் வருவார், நமர். 20 பிரிவிடை ஆற்றாத தலைவி தோழிக்குச் சொல்லியது
ஆந்தை குறுங்கலி கொள்ள, நம் ஆடவர் காய்ந்து கதிர் தெறூஉம் கானம் கடந்தார் பின்,- ஏந்தல் இள முலை ஈர் எயிற்றாய்! - என் நெஞ்சு நீந்தும், நெடு இடைச் சென்று. 21
கானம் - காடு "பருத்த முலைகளையும் குளிர்ந்த பற்களையும் உடைய என் தோழியே! ஆந்தைகள் மரப்பொந்துகளிலிருந்து சிறிய ஒலி எழுப்பும்படியாக நம் தலைவர் சூரியன் காய்ந்து வருத்தும் பாலை நிலக்காட்டின் வழியாகச் சென்றுள்ளார் என்று என் நெஞ்சானது அவர் சென்ற நெடிய காட்டின் வழியே போய்க் கொண்டிருக்கின்றது" என்று தலைவி கூறினாள். பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது
கள்வர் திரிதரூஉம் கானம் கடந்தவர் உள்ளம் பிரிந்தமை நீ அறிதி - ஒள்ளிழாய்! - தொல்லை விடரகம் நீந்திப் பெயர்ந்து, அவர் வல்லை நாம் காணும் வரவு. 22
விடர் - குகை வல்லை - விரைவு "ஒளிமிக்க அணிகலன்களை அணிந்துள்ள தலைவியே! ஆறலைக் கள்வர்கள் திரியும் காட்டு வழியில் பிரிந்து சென்ற நம் தலைவரின் உள்ளம் பிரிதற்குரிய காரணத்தை அறிந்திருப்பாய். தொன்மையான மணற்குன்றுகளையெல்லாம் கடந்து சென்ற தலைவர் விரைந்து வருவார். இல்லக் கதவுகளைத் திறந்து காண்போம்" என்றாள் தோழி. 'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது
சிலை ஒலி வெங் கணையர், சிந்தியா நெஞ்சின் கொலை புரி வில்லொடு கூற்றுப்போல், ஓடும் இலை ஒலி வெங் கானத்து, இப் பருவம் சென்றார் தொலைவு இலர்கொல் - தோழி! - நமர்? 23
சிலை - வில் கூற்று - எமன் "நாணேற்றிய வில்லுடனும் அம்புகளுடனும் கூடிய வேடர்கள் எவற்றைப் பற்றியும் சிந்திக்காது கொல்லும் தொழிலில் நாட்டங்கொண்டு கொலைபுரி வில்லோடு எமனைப் போல செல்லும் வெப்பமிக்க காட்டின் வழியாக இவ் வேனிற் காலத்தில் நம்மைப் பிரிந்து சென்ற நம் தலைவர் தளர்ச்சியுற்றவராக இருப்பாரோ" என்று தோழியிடம் தலைவி வினவினாள். ஆற்றாமையறிந்து வருந்திய தோழிக்குத் தலைவி ஆற்றுவல் என்பது தோன்றக் கூறியது
வெஞ் சுரம் தேர் ஓட வெஃகி நின்று, அத்த மாச் சிந்தையால் நீர் என்று செத்து, தவா ஓடும் பண்பு இல் அருஞ் சுரம் என்பவால் - ஆய்தொடி! - நண்பு இலார் சென்ற நெறி. 24
தேர் - கானல் "அழகான வளையலையணிந்த தோழியே! கொடிய பாலை நிலக் காட்டில் தேர் ஓடும், நீரைத் தேடி நீங்காது ஓடுகின்ற மான்கள் வாழும். அத்தகைய பயனற்ற கொடிய காடே நம் மீது நட்பு இல்லாத நம் தலைவர் சென்ற வழி" என்று தலைவி கூறினாள். 3. முல்லை பிரிவாற்றாமையால் வருந்திய தலைவிக்குக் கார்ப்பருவம் காட்டி வருவர் எனத் தோழி வற்புறுத்தியது
கார் செய் புறவில் கவினிக் கொடி முல்லை கூர் எயிறு ஈன, குருந்து அரும்ப, ஓரும் வருவர் நம் காதலர்; - வாள் தடங் கண்ணாய்!- பருவரல், பைதல் நோய் கொண்டு! 25
எயிறு - பல் பைதல் - பசலை "ஒளியையுடைய அழகிய கண்களை உடையவளே! மழை பெய்கிறது, முல்லை மலர்கிறது, குருந்த மரங்கள் அரும்புகளை தோற்றுவித்தன. எனவே நம் காதலர் வருவர். ஆதலினால் பசலை நோய் பெற்று வருந்தற்க" என்று தலைவியிடம் தோழி கூறினாள். பிரிவாற்றாமையால் வருந்திய தலைவிக்குக் கார்ப்பருவம் காட்டி வருவர் எனத் தோழி வற்புறுத்தியது
குருதி மலர்த் தோன்றி கூர் முகை ஈன, .... .... சேவல் எனப் பிடவம் ஏறி, பொரு தீ என வெருளும்; - பொன் நேர் நிறத்தாய்! - அரிது, அவர் வாராவிடல். 26
வெருளும் - அச்சப்படும் "பொன் போன்ற அழகியவளே! செங்காந்தள் மலர்களைக் கண்டு சேவல் ஒன்று தன்னுடன் சண்டையிடும் சேவல் என்று எண்ணி, விடவம் என்ற செடியின் மீது ஏறி நின்றது. அது சிவந்த காரணத்தால் சுடும் நெருப்பு என்று பயந்து ஓடியது. ஆகையால் கார்காலம் வந்துவிட்டது. தலைவன் வருவான்" என்று தோழி கூறினாள்.
.... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... ..... .... .... .... ..... ..... ....ர ஒல்கப் புகுதரு கார் தரு மாலை கலந்தார் வரவு உள்ளி, ஊர் தரும், மேனி பசப்பு. 27
ஒல்குதல் - தளர்தல்
.... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... ..... .... .... பெய்த புறவில் கடுமான் தேர் ஒல்லைக் கடாவார்; இவர்காணின் காதலர்; சில் .... .... .... ..... .... ..... ..... ..... 28 .... .... .... ..... .... ..... ....... குருந்து அலர, பீடு ஆர் இரலை பிணை தழுவ, காடு ஆர, கார் வானம் வந்து முழங் ..... ..... ..... ..... ..... .... .... .... ..... .... ..... ..... ..... .... 29 .... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... ..... .... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... ..... கொன்றைக் கொடுங் குழல் ஊதிய கோவலர் மன்றம் புகுதரும் போழ்து. 30 .... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... ..... .... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... ..... .... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... வானம் வந்து துளி வழங்கக் கண்டு. 31 கார் எதிர் வானம் கதழ் எரி சி.... ...... .... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... ..... ..... ..... லக மெழு நெஞ்சே! செல்லாயால், கூர் எரி மாலைக் குறி. 32 தளை அவிழ் தே.... ..... ..... ..... ...... ...... ...... .... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... ..... உளையார் கலி நன் மாப் பூட்டி வருவார், களையாரோ, நீ உற்ற நோய்? 33 முல்லை எயிறு ஈன ..... .... ..... ..... ..... .... ..... .... .... ..... ........ .....ன மல்கி, கடல் முகந்து கார் பொழிய, காதலர் வந்தாரர் உடன் இயைந்த கெ.... ...... 34 .... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... ..... ..... .... ....ர டைப் பால் வாய் இடையர் தெரிவிலர் தீம் குழல் ஊதும் பொழுதால், அரிது .... .... ..... ..... ..... ..... 35 தோழி பருவம் காட்டி தலைவர் வருவார் என வற்புறுத்தி ஆற்றுவித்தல்
பிடவம் குருந்தொடு பிண்டி மலர, மடவ மயில் கூவ, மந்தி மா கூர, - தட மலர்க் கோதையாய்! - தங்கார் வருவர், இடபம் எனக் கொண்டு, தாம். 36
பிண்டி - அசோகு மா - விலங்கு "பெருமையுடைய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை அணிந்தவளே! பிடவஞ் செடியும் குருந்த மரமும் அசோகமரமும் மலர்ந்து விளங்க, இளமையான மயில் நடனமாடி அகவ, குரங்குகளும் ஏனைய விலங்குகளும் குளிரால் நடுங்க நம் தலைவர் ஒரு காளை என எண்ணி வருவார் ஒரு பொழுதும் தங்கார்" என்று தோழி கூறினாள். பரத்தையிற் பிரிந்த தலைவன் பாணனை வாயிலாக விடுக்கத் தலைவி பாணனை நோக்கிக் கூறியது
கழனி உழவர் கலி அஞ்சி ஓடி, தழென மத எருமை தண் கயம் பாயும் பழன வயல் ஊரன் பாண! எம் முன்னர், பொழெனப் பொய் கூறாது, ஒழி. 37
கலி - ஆரவாரம் "வயலில் உழுகின்ற உழவர்கள் செய்யும் ஆரவாரத்துக்கு அஞ்சி ஓடி 'தழ்' என ஒலியை எழுப்பிக் கொண்டு எருமைகள் குளிர்ந்த குளத்தில் வீழும் இத்தகைய இயல்புடைய மருத நிலத்தினை உடைய தலைவன் அனுப்பிய பாணனே என்னிடம் பொய் சொல்லாது நீங்குவாயாக" என்றாள் தலைவி. பரத்தைமாட்டுப் பயின்று வரும் தலைமகனைப் புலந்து, தலைமகள் சொல்லியது
கயல் இனம் பாயும் கழனி நல் ஊர! நயம் இலேம் எம் மனை இன்றொடு வாரல்; துயில் இன் இள முலையார் தோள் நயந்து வாழ் நின், குயி ..... ..... ..... கொண்டு. 38
கழனி - வயல் கயல் மீன்கள் துள்ளிப் பாய்கின்ற வயல்களைக் கொண்ட மருத நிலத்தலைவனே! நாம் ஆடலிலும் பாடலிலும் நயம் இல்லாதவர்களாக இருக்கின்றோம். எனவே எம் வீட்டிற்கு வர வேண்டாம். இள மார்பகங்களைக் கொண்ட எம் இளையர் தோளில் சேரும் இன்பத்தை நன்கு அனுபவித்து அவர்களுடன் உறங்கி வாழ்வாயாக. தலைவன் மகற்கொண்டு வரும் சிறப்பினைத் தோழி கண்டு மகிழ்ந்து கூறியது
முட்ட முது நீர் அடை கரை மேய்ந்து எழுந்து, தொட்ட வரி வரால் பாயும் புனல் ஊரன் கட்டு அலர் கண்ணிப் புதல்வனைக் கொண்டு, எம் இல் சுட்டி அலைய வரும். 39
முட்ட - முழுவதும் தொட்ட - தோண்டிய "பதிக்கப்பட்டன போன்ற வரிகளையுடைய வரால் மீன்கள், பழமையான நீர் மோதும் கரை முழுவதும் திரிந்து இரைகளை உண்டு எழுந்து நீரினுள் பாயும் மருத நிலத் தலைவன், மலர் மாலையை அணிந்த எம் புதல்வனை அவனுடைய நெற்றிச் சுட்டி அசையும்படி எம் இல்லத்திற்கு எடுத்துக்கொண்டு வருகின்றான்" என்று தோழி தலைவியிடம் கூறினாள். வாயில் வேண்டிய பாணற்குத் தோழி வாயில் மறுத்தது
தாரா இரியும் தகை வயல் ஊரனை வாரான் எனினும், 'வரும்' என்று, சேரி புலப்படும் சொல்லும், இப் பூங் கொடி அன்னாள் கலப்புஅடும் கூடும்கொல் மற்று? 40
தகை - அழகு "அழகுமிக்க வயல்களை உடைய மருதநிலத்தலைவனை வராதே என்றாலும் வருகின்றான் என்று பரத்தையர் கூறுவது தலைவியின் நலத்தைக் கெடுக்கின்றது" என்று பாங்கனிடம் தோழி கூறினாள். வாயிலாகிய பாணற்குத் தலைவி வாயில் மறுத்தது
பொய்கை நல் ஊரன் திறம் கிளப்ப, என் உடையை? அஃது அன்று எனினும், அறிந்தேம் யாம் செய்தி நெறியின், - இனிய சொல் நீர் வாய் மழலைச் சிறுவன் எமக்கு உடைமையால். 41
பொய்கை - குளம் "இனிய மழலைச் சொற்கள் பேசுகின்ற எம் புதல்வன் எனக்குத் துணையாக இருப்பதால் வேறு துணை தேவையில்லை. மருத நிலத் தலைவன் நல்லியல்புகளை என்னிடம் கூறுதற்கு என்ன தகுதியைப் பெற்றுள்ளாய்? எம் தலைவனைப் பற்றி அனைத்தையும் தெரிந்துள்ளோம்" என்று தலைவி பாணனிடம் கூறினாள்.
நீத்த நீர் ஊரன் நிலைமையும், வண்ணமும், யார்க்கு உரைத்தி - பாண! - அதனால் யாம் என் செய்தும்? கூத்தனாக் கொண்டு, குறை நீ உடையையேல், ஆட்டுவித்து உண்ணினும் உண். 42
வண்ணம் - அழகு "தலைவனின் நல்லொழுக்கத்தையும் நற்பண்புகளையும் நீ யாரிடத்தில் கூறுகின்றாய்? அவன் இயல்பினை யாம் அறிவோம். அதனால் என்னால் என்ன செய்ய இயலும். உனக்கு ஏதேனும் குறை இருந்தால் அவனிடம் ஆடிப்பாடிக் கேட்பாயாக" என்று தலைவி பாணனிடம் கூறினாள்.
போது அவிழ் தாமரைப் பூந் துறை ஊரனைத் தாது அவிழ் கோதைத் தகை இயலார் தாம் புலப்பர்; ஏதின்மை சொல்லி இருப்பர், பிறர் மகளிர், பேதைமை தம்மேலே கொண்டு. 43
கோதை - பெண் "தாமரைகள் மலர்ந்துள்ள நீர்நிலையினை உடைய மருத நிலத்தலைவனை அழகிய மலர் மாலையை அணிந்த அழகினையுடைய பரத்தையர் பிற மகளிரின் தொடர்பு இருப்பதாகக் கூறி பிணக்கம் கொள்கின்றனர் என்று பலர் வாயிலாக அறிகிறேன்" என்று தலைவி பாணனிடம் கூறினாள். வாயிலாக வந்த தோழிக்குத் தலைவி வாயில் மறுத்தது
தண் துறை ஊரன், - தட மென் பணைத் தோளாய்!- 'வண்டு ஊது கோதை வகை நாடிக்கொண்டிருந்து, கோல வன முலையும் புல்லினான்' என்று எடுத்து, சாலவும் தூற்றும், அலர். 44
தண் - குளிர்ந்த "மென்மையான தோள்களையுடைய தோழியே! குளிர்ந்த நீர்த்துறைகளையுடைய மருத நிலத்தலைவனான நம் தலைவர் பரத்தையர்களின் திறத்தினை ஆராய்ந்து அவர் தம் சேடியருள் சந்தனக் கோலம் வரையப்பட்ட மார்பகங்களையுடைய ஒருத்தியைத் தழுவினான் என்று அலர் எழுகின்றது. அப்படிப்பட்ட தலைவனை நான் எப்படித் தழுவுவேன்" என்று கூறினாள். வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது
மூத்தேம், இனி; - பாண! - முன்னாயின், நாம் இளையேம்; கார்த் தண் கலி வயல் ஊரன், கடிது, எமக்குப் பாத்து இல் பய மொழி பண்பு பல கூறி, நீத்தல் அறிந்திலேம், இன்று. 45
கார் - மழை "பாணனே! மழை பொழிந்து குளிர்ந்த வயலை உடைய மருத நிலத்தூரன், அன்று நான் இளமையாக இருந்தேன், அதனால் அன்பு மொழிகளைக் கூறினான். இன்று முதுமையுடையவளாக இருக்கிறேன். அன்று என்னுடன் கூடிய தலைவன் பிரிவான் என்பதை அறியேன்" என்று பாணனிடம் தலைவி கூறினாள்.
கய நீர்நாய் பாய்ந்து ஓடும் காஞ்சி நல் ஊரன், நயமே பல சொல்லி, நாணினன் போன்றான்;- பயம் இல் யாழ்ப் பாண! - பழுது ஆய கூறாது, எழு நீ போ, நீடாது மற்று. 46
நயமே - நல்லவற்றைக் கூறி "பொய்கையிலிருந்து நீரானது வழிந்து ஓடும் வாய்க்காலில் காஞ்சி மரங்கள் நிறைந்துள்ள மருத நிலத் தலைவன், அந்நாளில் நயன் நிறைந்த சொற்களைக் கூறி என்னை மணந்தான். இன்று நாணங் கொண்டவன் போல அஞ்சி மறைந்திருக்கின்றான். ஆதலால் குற்றமுடைய சொற்களைக் கூறி என் மனத்தைப் புண்படுத்தாது, இங்கு நீடித்து நில்லாமல் எழுந்து செல்வாயாக" என்று பாணரிடம் தலைவி கூறினாள்.
அரக்கு ஆம்பல், தாமரை, அம் செங்கழுநீர், ஒருக்கு ஆர்ந்த வல்லி, ஒலித்து ஆரக் குத்தும் செருக்கு ஆர் வள வயல் ஊரன் பொய், - பாண!- இருக்க, எம் இல்லுள் வரல். 47
ஆர்த்த - மகிழ்ச்சி "செங்குமுத மலர்களும், தாமரை மலர்களும், அல்லி மலர்களும் ஆகிய இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று கூடிக் குத்திக் கொள்ளும் இயல்புடைய மகிழ்ச்சிமிக்க அளமான வயல்கள் சூழ்ந்த மருத நிலத்தலைவனின் பொய் மொழிகளைச் சொல்லும் பாணரே! நின் தலைவன் பரத்தையர் சேரியில் இருக்கட்டும். எம் மனைக்கு வருதல் வேண்டாம்" என்று பாணனிடம் தலைவி கூறினாள்.
கொக்கு ஆர் வள வயல் ஊரன் குளிர் சாந்தம் மிக்க வன முலை புல்லான், பொலிவு உடைத்தா;- தக்க யாழ்ப் பாண! - தளர் முலையாய் மூத்து அமைந்தார் உத்தரம் வேண்டா; வரல். 48
தளர் - தளர்ந்த வன - வலிமையான "கொக்குகள் நிறைந்துள்ள வனப்புமிக்க வயல்களை உடைய தலைவன் சந்தனக் குழம்பு பூசிய பரத்தையர் தம் அழகு மிக்க மார்பகங்களைப் பொலிவு பெறத் தழுவாது, தளர்ந்த மார்பகங்களையும் முதுமை பொருந்திய தன்மையும் உடைய என்னைத் தழுவ வரமாட்டான். எனவே அவன் இங்கு வரவேண்டியதில்லை" என்று தலைவி பாணனிடம் கூறினாள். 5. நெய்தல்
நாவாய் வழங்கு நளி திரைத் தண் கடலுள் ஓவா கலந்து ஆர்க்கும் ஒல்லென் இறாக்குப்பை! பா ஆர் அம் சேர்ப்பற்கு உரையாய் - பரியாது, நோயால் நுணுகியவாறு. 49
திரை - அலை நாவாய் - படகு "படகுகள் ஓடும் குளிர்ந்த அலைகளை உடைய கடலில் இரால் மீன்கள் ஆர்த்து ஒலிக்கும். பரந்த கடலை உடைய எம் தலைவனிடம் பிரிவாகிய பொறுக்க முடியாத நோயினால் நான் மெலிந்து போயுள்ளேன் என்று தலைவனிடம் கூறுவாயாக" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.
நெடுங் கடல் தண் சேர்ப்ப! நின்னோடு உரையேன்; ஒடுங்கு மடல் பெண்ணை அன்றிற்கும் சொல்லேன்; கடுஞ் சூளின் தான் கண்டு, கானலுள் மேயும் தடந் தாள் மட நாராய்! கேள். 50
தட - பெரிய "நெய்தல் நிலத்தலைவனே நான் உன்னிடம் ஒன்றும் கூறமாட்டேன், பனைமரத்தில் உள்ள அன்றில் பறவையிடமும் கூறமாட்டேன். எம் தலைவன் இயற்கைப் புணர்ச்சிக் காலத்தில் 'நின்னைப் பிரியேன், பிரியில் தரியேன்' என்று என்னிடம் சூளுரைத்த காலத்துக் கானலில் மேய்ந்திருந்த நாரையே உன்னிடம் கூறுகிறேன் என் இறையைக் கேட்பாயாக" என்று தலைவி கூறினாள்.
மணி நிற நெய்தல் மலர் புரையும் கண்ணாய்! அணி நலம் உண்டு இறந்து, (ந)ம் அருளா விட்ட துணி முந்நீர்ச் சேர்ப்பற்குத் தூதோடு வந்த பணி மொழிப் புள்ளே! பற. 51
புள் - பறவை "நீல நிற மணி போன்று விளங்கும் நெய்தல் மலர் போன்ற என் கண்களை ஆராய்ந்து அதன் அழகையும் என் உடல் நலத்தையும் கவர்ந்து நம்மிடம் அருள் காட்டாது பிரிந்து சென்ற மனத்துணிவு மிக்க தலைவனுக்காக இயற்கைப் புணர்ச்சியின் தூதாக வந்த பணிந்த மொழியையுடைய நாரையே விரைந்து சென்று தலைவனை அழைத்து வருவாயாக" என்றாள்.
அன்னையும் இல் கடிந்தாள்; யாங்கு இனி யாம் என் செய்கம்? புன்னையங் கானலுள் புக்கு இருந்தும் நின்னை நினையான் துறந்த நெடுங் கழிச் சேர்ப்பற்கு உரையேனோ, பட்ட பழி? 52
இல் - இல்லம் "நாரையே! அன்புமிக்க என் தாய் தற்போது கடுஞ்சொல் கூறுகின்றாள். நாம் இனி என் செய்வது. என்னை நினையாது பிரிந்துபோன நெடிய உப்பங்கழிகளையுடைய கடற்கரைத் தலைவனுக்கு நான் அடைந்துள்ள பழிச் சொற்களோடு கூடிய அலரினைச் சொல்வேனா அல்லது இறப்பேனா" என்று தலைவி புலம்பினாள். வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது
அலவன் வழங்கும் அடும்பு இவர் எக்கர் நிலவு நெடுங் கானல் நீடார் துறந்தார்; புலவு மீன் குப்பை கவரும் துறைவன் கலவான்கொல், தோழி! நமக்கு? 53
அடும்பு - வண்டுகள் "நண்டுகள் உலாவும் கடற்கரைச் சோலையில் நீண்ட நாட்கள் தங்கியிராது, நீங்கிச் சென்ற பரதவர் எல்லோரும் புலால் நாற்றத்தையுடைய மீன் குவியலைக் கவர்ந்து வருவர். அப்படிப்பட்ட வளம் வாய்ந்த நெய்தல் நிலத் தலைவன் இனி என்னைத் தழுவானோ கூடானோ! தோழியே நீ கூறுக" என்று தலைவி தோழியைப் பார்த்துக் கூறினாள். வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது
என்னையர் தந்த இற உணங்கல் யாம் கடிந்து, புன்னையங் கானல் இருந்தேமா, பொய்த்து எம்மைச் சொல் நலம் கூறி, நலன் உண்ட சேர்ப்பனை என்னைகொல் யாம் காணுமாறு? 54
உணங்கல் - பறவைகள் "என் தோழியே! என் தந்தை, உடன் பிறந்தவர் கவர்ந்து வந்த இறால் மீன்களைக் கவர வருகின்ற பறவைகளை ஓட்டியபடி புன்னை மரங்கள் பொருந்திய கானலில் இருந்தபோது பொய்யான புகழுரைகளைக் கூறி எம்முடன் இன்பம் துய்த்த நெய்தல் நிலத் தலைவனை இனிமேல் காணும் வழி யாது? ஆராய்ந்து கூறுக" என்று தலைவி வினவினாள். பாங்கி தலைவன் இயற்பழித்துழித் தலைவி இயற்பட மொழிந்தது
கொக்கு ஆர் கொடுங் கழிக் கூடு நீர்த் தண் சேர்ப்பன் நக்காங்கு அசதி நனி ஆடி, - தக்க பொரு கயற்கண்ணினாய்! - புல்லான் விடினே, இரு கையும் நில்லா, வளை. 55
வளை - வண்டுகள் தங்குமிடம் "உப்பங்கழிகள் பொருந்திய நீர்த்துறைகளையுடைய தலைவன் என்னைப் பார்த்து நகைத்து, விளையாட்டாய்ப் பேசி என்னை தழுவாதிருந்தால் என் வளையல்கள் கழலாது நின்றிருக்கும். அன்று தழுவியதால் இன்று பிரிவுத் துன்பத்தில் வளையல்கள் கழல்கின்றன" என்றாள். வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது
நுரை தரும் ஓதம் கடந்து, எமர் தந்த கருங் கரை வன்மீன் கவரும் புள் ஓப்பின், புகர் இல்லேம் யாம் இருப்ப, பூங் கழிச் சேர்ப்பன் நுகர்வனன், உணடான், நலம். 56
புள் - பறவை "நம்மவர் கொண்டு வந்த மீனின் வற்றலைக் கவரப் பறந்து வரும் பறவைகளை ஓட்டும் செயலில் மூழ்கி நாம் குற்றமற்றவராய் இருந்தோம். அப்போது அழகிய உப்பங்கழிகளையுடைய நெய்தல் நிலத் தலைவன் இங்கு வந்து எம்முடைய நலத்தை நுகர்ந்தான். அவன் இன்று அதனை மறந்தான் போலும்" என்று தலைவி தோழியிடம் கூறினாள். தோழி இரவுக் குறியிடம் தலைவிக்கு உணர்த்தியது
கொடு வாய்ப் புணர் அன்றில் கொய் மடல் பெண்ணைத் தடவுக் கிளை பயிரும் - தண் கடல் சேர்ப்பன் நிலவுக் கொடுங் கழி நீந்தி, நம் முன்றில் புலவுத் திரை பொருத போழ்து. 57
முன்றில் - பறவை "தலைவன் உப்பங்கழி நீரை அடித்து அலையை எழுப்பி ஓசையை உண்டாக்குவான். அவ்வோசையைக் கேட்ட பனை மரத்தில் உள்ள அன்றில் பறவைகள் அஞ்சி ஓசை எழுப்பும். இவற்றின் மூலம் இரவில் தலைவன் வருகை புரிந்துள்ளான்" என்று தோழி குறிப்பாகக் கூறுகின்றாள். தலைவி தோழியிடம் பிரிவாற்றாமை கூறி வருந்துதல்
சுறா எறி குப்பை சுழலும் கழியுள், இறா எறி ஓதம் அலற இரைக்கும் உறாஅ நீர்ச் சேர்ப்பனை உள்ளி இருப்பின், பொறாஅ, என் முன்கை வளை. 58
எறி - எறிந்த "சுறாமீனால் மோதி அடிக்கப்பட்ட மீன் குவியல்கள் சுழல்கின்ற உப்பங்கழிகளுள் இறால் மீன்களை வீசி எறிகின்ற அலைகளை உடைய கடற்கரைத் தலைவன் என்னுடன் கூடாது பிரிந்து சென்றுள்ளான். அப்பிரிவை எண்ணி நாம் கலங்கி இருப்பதால் என் முன்னங்கை வளையல்களும் பொறுக்க முடியாது கீழே விழுந்து விடுகின்றன" என்று தலைவி தோழியிடம் கூறினாள். இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி படைத்து மொழிந்தது
தாழை குருகு ஈனும் தண்ணம் துறைவனை- மாழை மான் நோக்கின் மடமொழி! - 'நூழை நுழையும் மட மகன் யார்கொல்?' என்று, அன்னை புழையும் அடைத்தாள், கதவு. 59
மடமொழி - பேதைமையான சொல் "இளைய மொழிகளைப் பேசும் தலைவியே! நம் நெய்தல் நிலத் தலைவன் யார் என்பது தெரியாமல், நம் தாய் நாள்தோறும் புழக்கடை வாயிலில் நுழைந்து செல்லும் அறிவற்றவர் யார்? எனச் சீறி கதவில் உள்ள சிறிய துளையையும் அடைத்துப் பூட்டிவிட்டாள். இனி நாம் என்ன செய்வோம்" என்று தோழி தலைவிக்குக் கூறுவதுபோல் தலைவரிடம் கூறினாள். தோழி தலைவிக்குத் தலைவன் வரைவொடு புகுந்தமை சொல்லியது; வினை முற்றி மீண்ட தலைமகன் வரவு அறியச் சொல்லியதூஉம் ஆம்.
பொன் அம் பசலையும் தீர்ந்தது; - பூங்கொடி!- தென்னவன் கொற்கைக் குருகு இரிய, மன்னரை ஓடு புறம் கண்ட ஒண் தாரான் தேர் இதோ, கூடல் அணைய வரவு. 60
தென்னவன் - பாண்டியன் "பகை மன்னர் அஞ்சி ஓடுமாறு புறம் கண்ட ஒளிமிக்க வாகைப்பூ மாலையைச் சூடிய நம் தலைவனின் தேரானது தென்னவன் கொற்கைக் கடல் வரையில் போயும், குருக்கள் அஞ்சி ஓடும்படி மதுரையை வந்துள்ளது. எனவே நீ பசலை நோய் நீங்கி நலமாக வாழ்வாயாக" என்றாள். |