பொய்கையார் இயற்றிய களவழி நாற்பது (உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.) களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது. போர்க்கள நிகழ்ச்சிகளைச் சிறப்பித்துள்ளமையினால் 'களவழி' என்றும், பாடல் தொகை அளவினால் 'களவழி நாற்பது' என்றும், இந் நூல் வழங்கலாயிற்று. இந் நூற் பாடல்களில் நாலடி அளவியல் வெண்பாக்களும் (22), பஃறொடை வெண்பாக்களும்(19) காணப்படுகின்றன. ஐந்து செய்யுட்களைத் தவிர ஏனையவெல்லாம் 'அட்ட களத்து' என்று முடிகின்றன. மூன்று செய்யுட்கள் (15, 21, 29), 'பொருத களத்து' என்றும், ஒரு செய்யுள் (40), 'கணைமாரி பெய்த களத்து' என்றும், மற்றொரு செய்யுள் (35), 'அரசுஉவா வீழ்ந்த களத்து' என்றும் முடிவு பெற்றுள்ளன. யானை, குதிரை, தேர், தானை, என்ற நால்வகைப் படைப் போரும் குறிக்கப்படினும், யானைப் போரைப் பற்றிய செய்யுட்களே மிகுதியாய் உள்ளன. களவழி நாற்பது பாடியவர் பொய்கையார் என்பவராவர்.
நாள் ஞாயிறு உற்ற செருவிற்கு வீழ்ந்தவர் வாள் மாய் குருதி களிறு உழக்க, தாள் மாய்ந்து, முற்பகல் எல்லாம் குழம்பு ஆகி, பிற்பகல் துப்புத் துகளின் கெழூஉம் - புனல் நாடன் தப்பியார் அட்ட களத்து. 1
குருதி - இரத்தம் களிறு - யானை சோழன் குற்றங்கள் செய்த பகைவரை வீழ்த்திய போர்க்களத்தில் சூரியன் தோன்றிய இளங்காலையில் பகைவர் மீது வாள் ஆழமாகப் பதிந்தது. அதனால் வழிந்த இரத்தத்தைப் போர்க்கள யானைகளின் கால்கள் கலக்கின. முற்பகலில் குழம்பைப் போன்ற சேறாக மாறியது. பிற்பகலில் வெயில் காய்ந்து யானைகளால் தூளாகிப் பிறகு பவளப் புழுதி போல் எங்கும் பறந்தும், பரவியும் இருக்கும்.
ஞாட்பினுள் எஞ்சிய ஞாலம் சேர் யானைக் கீழ்ப் போர்ப்பு இல் இடி முரசின் ஊடு போம் ஒண் குருதி, கார்ப்பெயல் பெய்த பின், செங் குளக் கோட்டுக் கீழ் நீர்த் தூம்பு நீர் உமிழ்வ போன்ற - புனல் நாடன் ஆர்த்து அமர் அட்ட களத்து. 2
ஞாலம் - உலகம் புனல் - அருவி சோழன் ஆராவாரித்துப் போரிட்ட போர்க்களத்தில் தரை மீது கிடந்த யானையின் கீழே, மூடுதுணியும் இல்லாத போர்முரசு சிக்கிக் கொண்டது. அந்த முரசின் உள்ளே புகுந்த யானையின் இரத்தம் வெளியே வருகிறது. அவை மழைநீர் நிரம்பிய நீர்க்குளத்தின் கரையின் கீழே உள்ள மதகுகள் சிறிது சிறிதாகத் தண்ணீரை உமிழ்ந்து வெளிப்படுத்துவன போல் இருந்தது.
ஒழுக்கும் குருதி உழக்கித் தளர்வார், இழுக்கும் களிற்றுக் கோடு ஊன்றி எழுவர்- மழைக் குரல் மா முரசின், மல்கு நீர் நாடன் பிழைத்தாரை அட்ட களத்து. 3
கோடு - யானைத் தந்தம் இடிபோன்ற போர் முரசினை முழங்கி வெற்றி பெற்ற சோழனின் போர்க்களத்தில் வழிந்தோடும் இரத்தத்தைத் தங்கள் நடையால் சேறாக்கிச் சோர்ந்த வீரர்கள் நடக்க முடியாமல் வழுக்கி விழும் போது அருகில் வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடந்த யானையின் தந்தத்தை ஊன்று கோலாக்கி எழுந்து நடந்தார்கள்.
உருவக் கடுந் தேர் முருக்கி, மற்று அத் தேர்ப் பருதி சுமந்து எழுந்த யானை, இரு விசும்பில் செல் சுடர் சேர்ந்த மலை போன்ற - செங் கண் மால் புல்லாரை அட்ட களத்து. 4
செங்கண்மால் - திருமால் புல்லர் - பகைவர் திருமால் போன்று சிவந்த கண்களை உடைய சோழன் பகைவர்களை அழித்த போர்க்களத்தில் தேரின் சக்கரத்தைத் துதிக்கையில் தூக்கி நிற்கிறது யானை. அது, விரிந்த வானத்தில் செல்லும் சூரியன் மாலையில் ஒரு மலையைச் சேர்ந்தது போல் இருந்தது.
தெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம் குருதி படிந்து உண்ட காகம், உரு இழந்து, குக்கில் புறத்த; சிரல் வாய - செங் கண் மால் தப்பியார் அட்ட களத்து. 5
உரு - உருவம் சிறந்த அம்புகளாலும், பிற கருவிகளாலும் புண்ணாக்கப்பெற்ற உடலிலிருந்து வழியும் இரத்தத்தைக் குடித்த கரிய காகங்கள் நிறம் மாறின. செம்போத்துப் பறவைகள் போல் உடல் மாறின. மீன்கொத்திப் பறவையின் சிவந்த அலகைப் போல் மூக்குகளையும் பெற்றவைகளாயின.
நால் நால் - திசையும் பிணம் பிறங்க, யானை அடுக்குபு பெற்றிக் கிடந்த - இடித்து உரறி, அம் கண் விசும்பின் உரும் எறிந்து, எங்கும் பெரு மலை தூவ எறிந்தற்றே; அரு மணிப் பூண் ஏந்து எழில் மார்பின், இயல் திண் தேர், செம்பியன் வேந்தரை அட்ட களத்து. 6
எழில் மார்பில் - அழகிய மார்பில் விசும்பு - உலகம் அருமையான மணிகள் கோர்த்த மாலையை மார்பிலே அணிந்தவனும் திண்ணிய தோள்களை உடையவனுமான சோழன் வேந்தர்களை வென்ற போர்க்களத்தில், பிணங்கள் எல்லாத் திசைகளிலும் காணப்பட்டன. யானைகள் கொல்லப்பட்டு ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்டன. இது மலைமீது விழுந்த இடியினால் பிய்த்தெறியப்பட்ட புதர்கள் மலை மீது சிதறிக் கிடப்பன போல இருந்தன.
அஞ்சனக் குன்று ஏய்க்கும் யானை அமர் உழக்கி, இங்குலிகக் குன்றேபோல் தோன்றுமே - செங் கண் வரி வரால் மீன் பிறழும் காவிரி நாடன் பொருநரை அட்ட களத்து. 7
அஞ்சனம் - மை காவிரி நாடன் - சோழன் சிவந்த கண்களை உடைய வரால் மீன் விளையாடும் காவிரி பாயும் நாட்டினை உடைய சோழனது பொருந்திய படைகளை உடைய போர்க்களத்தில், கரிய மலையைப் போன்ற யானையானது, போரிட்டு இரத்தக் குளியல் நடத்தியதால் சிவந்த உடலைப் பெற்றுச் சாதிலிங்க மலை என்னும் சிவந்த மலையைப் போல காட்சி அளித்தது.
யானைமேல் யானை நெரிதர, ஆனாது கண் நேர் கடுங் கணை மெய்ம் மாய்ப்ப, எவ்வாயும் எண்ண அருங் குன்றில் குரீஇஇனம் போன்றவே- பண் ஆர் இடி முரசின், பாய் புனல், நீர் நாடன் நண்ணாரை அட்ட களத்து. 8
நண்ணாரை - பகைவரை நீர்நாடன் - சோழன் முரசு ஒலிப்பதுபோல் பாயும் அருவிகளை உடைய சோழன் பகைவர்களை வென்ற போர்க்களத்தில், அவன் பகைவரை வீழ்த்திய காட்சி, நெருக்கமாக சாய்ந்துள்ள யானைகள் மீது பெண்களின் கண்களைப் போன்ற அம்புகள் ஆழமாகப் பாய்ந்தது. உடல்களை மறைக்கும் அளவிற்கு அம்புகள் தைத்த காட்சி குன்றின் மீது குருவிகளின் கூட்டம் இருப்பதைப் போல இருந்தது.
மேலோரைக் கீழோர் குறுகிக் குறைத்திட்ட கால் ஆசோடு அற்ற கழற் கால், இருங்கடலுள் நீலச் சுறாப் பிறழ்வ போன்ற - புனல் நாடன் நேராரை அட்ட களத்து. 9
நேராரை - பகைவரை களம் - போர்க்களம் சோழன் பகைவர்களை வென்ற களத்தில், யானை, குதிரை, தேர்கள் மீதிருந்து போரிடும் வீரர்களின் கால்கள், கீழிருந்து போரிடும் வீரர்களால் வெட்டப்பெற்றுச் செருப்புகள் இல்லாமல் இரத்த வெள்ளத்துள் வீழ்ந்து கிடக்கும் காட்சி பசியோடிருக்கும் சுறாமீன்கள் கடல் நீரின் மேல் வந்து இரைதேடிப் புரள்வது போல் இருந்தது.
பல் கணை எவ் வாயும் பாய்தலின் செல்கலாது ஒல்கி, உயங்கும் களிறு எல்லாம், தொல் சிறப்பின் செவ்வல் அம் குன்றம்போல் தோன்றும் - புனல் நாடன் தெவ்வரை அட்ட களத்து. 10
தெவ்வரை - பகைவரை தொல் - தொன்மையான சோழன் பகைவர்களை வென்ற களத்தில், உடல் முழுமையும் அம்புகள் பாய்ந்து இரத்தத்தைப் போர்வையாக்கிக் கொண்டு மேலே தொடர முடியாமல் அசையாமல் உள்ள காட்சி, தொன்று தொட்டே செம்மை நிறம் படிந்து வரும் சிறப்பினைப் பெற்ற செம்மலை போல் தோன்றும்.
கழுமிய ஞாட்பினுள் மைந்து இகந்தார் இட்ட ஒழி முரசம் ஒண் குருதி ஆடி, தொழில் மடிந்து, கண் காணா யானை உதைப்ப, இழுமென மங்குல் மழையின் அதிரும் - அதிராப் போர்ச் செங் கண் மால் அட்ட களத்து. 11
குருதி - இரத்தம் அட்டகளத்து - போர்க்களம் கொடிய போர்க்களத்தில் வீரர்கள் விட்டொழித்த போர் முரசம், குருதி வெள்ளத்தில் மிதந்து வர, போரில் கண்ணிழந்த யானை முரசை உதைக்க, மேகக்கூட்டம் முழங்குவதுபோல் ஒலி தரும்படி சோழன் போர்க்களம் காட்சி தந்தது.
ஓவாக் கணை பாய ஒல்கி, எழில் வேழம் தீவாய்க் குருதி இழிதலால், செந் தலைப் பூவல்அம் குன்றம் புயற்கு ஏற்ற போன்றவே- காவிரி நாடன் கடாஅய், கடிது ஆகக் கூடாரை அட்ட களத்து. 12
எழில் - அழகு வேழம் - யானை காவிரி பாயும் நாட்டையுடைய சோழன் பகைவர்களை வென்ற களத்தில், அம்புகள் உடம்பு முழுவதும் பட்டதால் யானைகள் சோர்ந்து நின்றன. இரத்தத்தால் யானைகளின் உடல்கள் நனைந்தன. இரத்தம் தரையில் சிந்தியது. அது சிவந்த அழகிய செம்மண் மலை மீது பெய்த மழை செந்நீராக ஓடுவது போல் இருந்தது. யாருக்கும் அஞ்சாத களிறைப் பகைவர்கள் மீது விரைந்து செலுத்தினான்.
நிரை கதிர் நீள் எஃகம் நீட்டி, வயவர் வரை புரை யானைக் கை நூற, வரை மேல் உரும் எறி பாம்பின் புரளும் - செரு மொய்ம்பின் சேய் பொருது அட்ட களத்து. 13
பொருது - பொருந்திய முருகனைப் போன்று சோழன் போரிட்ட களத்தில், போர்வீரர்களால் வெட்டப்பட்டு யானைகளின் துதிக்கைகள் கீழே விழுந்து அசைந்தன. அக்காட்சி இடி ஒலியோடு மலைமீது பேரிடி விழுந்தமையால் அதிர்ச்சியடைந்த பாம்புகள் கீழே விழுந்து புரள்வது போல் இருந்தது.
கவளம் கொள் யானையின் கைகள் துணிக்க, பவளம் சொரிதரு பை போல், திவள் ஒளிய ஒண் செங் குருதி உமிழும் - புனல் நாடன் கொங்கரை அட்ட களத்து. 14
கொங்கரை - பகைவரை சோழன் பகைவர்களை வென்ற களத்தில், யானைகளின் துதிக்கைகள் துண்டிக்கப்பட்டதால் அவற்றிலிருந்து இரத்தம் கொட்டுகிறது. அந்தக் காட்சி பைகளில் இருந்து பவளங்கள் இடைவிடாது கொட்டுவது போல் இருந்தது.
கொல் யானை பாய, குடை முருக்கி, எவ்வாயும் புக்க வாய் எல்லாம் பிணம் பிறங்க, தச்சன் வினை படு பள்ளியின் தோன்றுமே - செங் கண் சின மால் பொருத களத்து. 15
கொல் யானை - போர் யானை சிவந்த கண்களை உடைய திருமால் போன்று போரிட்ட களத்தில், யானைகள் எல்லா இடங்களிலும் பாய்ந்தமையால் சிதைக்கப்பட்ட வெண்கொற்றக் குடைகளும் பிணங்களும் எங்கும் காணப்பட்டன. அக்காட்சி, தச்சுத் தொழில் வல்லவர், தச்சுத் தொழிலைச் செய்தும் பிறருக்குக் கற்றுக் கொடுத்தும் வருகின்ற தொழிற்பள்ளிக்கூடம் போல் இருந்தது.
பரும இன மாக் கடவி, தெரி மறவர் ஊக்கி, எடுத்த அரவத்தின் ஆர்ப்பு அஞ்சாக் குஞ்சரக் கும்பத்துப் பாய்வன, குன்று இவரும் வேங்கை இரும் புலி போன்ற - புனல் நாடன் வேந்தரை அட்ட களத்து. 16
அரவம் - பாம்பு வேந்தர் - அரசர் சோழன் பகை மன்னர்களை வென்ற களத்தில், குதிரை வீரர்கள் குதிரைகளை ஊக்கப்படுத்துவதற்காக ஆரவார முழக்கத்தை எழுப்புகின்ரனர். வீரர்களின் ஆரவார முழக்கத்தைக் கேட்டு யானைகள் எழாமல் நின்றன. அதனால் கோபப்பட்ட குதிரைகள் யானைகளின் மத்தகங்கள் மீது பாய்ந்தன. அந்தக் காட்சி வேங்கைப் புலிகள் மலைகள் மீது பாய்வன போல் இருந்தது.
ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்து ஓடி, தாக்கி எறிதர, வீழ்தரும் ஒண் குருதி கார்த்திகைச் சாற்றில் கழி விளக்குப் போன்றனவே- போர்க் கொடித் தானை, பொரு புனல் நீர் நாடன் ஆர்த்து அமர் அட்ட களத்து. 17
ஆர்த்து - ஆராவாரித்து போர்க் கொடி நாட்டி சோழன் ஆர்த்துப் போரிட்ட களத்தில், வீரர்கள் ஒருவரோடு ஒருவர் போரிட்டதால் உடல்களில் ஏற்பட்ட புண்களில் இருந்து இரத்தம் கொட்டுகிறது. அக்காட்சி கார்த்திகைத் திருவிழாவில் கூட்டம் கூட்டமாக ஏற்றப் பெற்ற தீபங்களைப் போலத் தெரிந்தது.
நளிந்த கடலுள் திமில் திரை போல் எங்கும் விளிந்தார் பிணம் குருதி ஈர்க்கும் - தெளிந்து தடற்று இலங்கு ஒள் வாள், தளை அவிழ் தார், சேஎய் உடற்றியார் அட்ட களத்து. 18
தார் - மாலை போர்க்களத்தில் வீரர்களின் பிணங்களை, அங்கே பொங்கி வழியும் இரத்த வெள்ளமானது இழுத்துச் செல்லும். அக்காட்சி, கடற்கரை ஓரத்தில் கட்டுமரங்களை அலைகள் இழுத்துச் செல்வது போல் தோன்றியது.
இடை மருப்பின் விட்டு எறிந்த எஃகம் காழ் மூழ்கி, கடைமணி காண்வரத் தோன்றி, நடை மெலிந்து, முக் கோட்ட போன்ற, களிறு எல்லாம் - நீர் நாடன் புக்கு அமர் அட்ட களத்து. 19
நீர் நாடன் - சோழன் வீரர்கள் எறிந்த வேலானது யானையின் இரு தந்தங்களுக்கு நடுவே பாய்ந்து சென்று கடைப்பகுதி மட்டும் வெளியே தோன்றியது. அக்காட்சி மூன்று தந்தங்களை உடையது போன்று யானைகள் நின்றது போலிருந்தது.
இரு சிறகர் ஈர்க்கும் பரப்பி, எருவை குருதி பிணம் கவரும் தோற்றம், அதிர்வு இலாச் சீர் முழாப் பண் அமைப்பான் போன்ற - புனல் நாடன் நேராரை அட்ட களத்து. 20
நேராரை - பகைவரை கழுகுகள் போர்க்களத்தில் ஈர்க்குகளைப் போன்ற இறகுகளைப் பரவவிட்டும், குனிந்தும் பிணங்களை இரத்தத்தோடு சுவைக்கின்றன. அக்காட்சி அதிர்வு இல்லாத மென்மையான ஓசையைத் தரும் மத்தளத்தைத் தட்டி இசையை உண்டாக்குவது போல் இருந்தது.
இணை வேல் எழில் மார்வத்து இங்க, புண் கூர்ந்து, கணை அலைக்கு ஒல்கிய யானை, துணை இலவாய், தொல் வலியின் தீரா, துளங்கினவாய், மெல்ல நிலம் கால் கவவு மலை போன்ற - செங் கண் சின மால் பொருத களத்து. 21
பொருத களத்து - போரிட்ட களத்தில் சோழன் சிவந்த கண்களை உடைய திருமால் போன்று போரிட்ட களத்தில், யானைகளின் கழுத்துக்குக் கீழ் மார்புப் பகுதிகளில் ஒரே அளவான வேல்கள் பாய்ந்து புண்களை உண்டாக்கின. அதற்கு முன் தைத்த அம்புகள் வலியை ஏற்படுத்தின. இந்த நிலையில் பாகர்கள் துணையில்லாமல் வலியைப் பொறுத்துக்கொண்டு உடல் நடுங்கச் சோர்வோடு நின்ற யானைகள் நிலையாக நிலங்களில் இடம்பெற்ற மலைகள் போன்று இருந்தன.
இரு நிலம் சேர்ந்த குடைக் கீழ், வரி நுதல் ஆடு இயல் யானைத் தடக் கை ஒளிறு வாள் ஓடா மறவர் துணிப்ப, துணிந்தவை கோடு கொள் ஒண் மதியை நக்கும் பாம்பு ஒக்குமே- கூடாரை அட்ட களத்து. 22
மதி - சந்திரன்
கட்டாரை - பகைவரை சோழன் பகைவர்களை வென்ற களத்தில், புறங்காட்டி ஓடாத வீரர்கள், கூரிய வாளால் எப்போதும் அசைந்து கொண்டிருக்கும் தலையைக் கொண்ட யானைகளின் துதிக்கைகளை வெட்டினர். அவை (துதிக்கை) தரையில் வீழ்ந்து கிடக்கும் வெண்கொற்றக் குடைக்கு அருகே வீழ்ந்து கிடந்தன. அக்காட்சி கதிர்நிறைந்த ஒளிவீசும் நிலவைத் தொட்டுச் சுவைக்கும் பாம்பைப் போன்றிருந்தது.
எற்றி வயவர் எறிய, நுதல் பிளந்து நெய்த் தோர்ப் புனலுள் நிவந்த களிற்று உடம்பு, செக்கர் கொள் வானில் கருங் கொண்மூப் போன்றவே- கொற்ற வேல் தானை, கொடித் திண் தேர், செம்பியன் செற்றாரை அட்ட களத்து. 23
நுதல் - நெற்றி செம்பியன் - சோழன் வீரம் பொருந்திய செம்பியன் (சோழன்) தன்னோடு பொருந்தாதவர்களை வென்ற போர்க்களத்தில், வீரர்களின் போர்க்கருவிகள் வீசப்பெற்று, அதனால் பிளவுபட்ட நெற்றியிலிருந்து ஒழுகிய இரத்த நீரில் குளித்தெழுந்த யானைகளின் உடம்புகள், மாலை நேரச் சிவந்த வானில் திட்டுத் திட்டாகப் படர்ந்த மேகம் போல் இருந்தன.
திண் தோள் மறவர் எறிய, திசைதோறும் பைந் தலை பாரில் புரள்பவை, நன்கு எனைத்தும் பெண்ணைஅம் தோட்டம் பெரு வளி புக்கற்றே- கண் ஆர் கமழ் தெரியல், காவிரி, நீர் நாடன் நண்ணாரை அட்ட களத்து. 24
மறவர் - வீரர் நண்ணாரை - பகைவரை சோழன் தன்னோடு சேராத பகைவர்களை வென்ற களத்தில், வீரர்கள் எல்லாத் திசைகளிலும் வாளை வீசியதால் வெட்டுப்பட்ட புதிய தலைகள் போர்க்களத்தில் நிறைந்து கிடந்தன. அக்காட்சி, புயல் வீச்சால் தாக்கப்பட்டுக் கரிய காய்கள் எல்லாம் சிதறி விழுந்த பனந்தோப்பாகத் தெரிந்தது.
மலை கலங்கப் பாயும் மலை போல் நிலை கொள்ளாக் குஞ்சரம் பாய, கொடி எழுந்து, பொங்குபு வானம் துடைப்பன போன்ற - புனல் நாடன் மேவாரை அட்ட களத்து. 25
மேவாரை - பகைவரை சோழ மன்னன் பகைவரை அழித்த போர்க்களத்தில் மலைகள் நடுங்க மலைகள் வந்து மோதுவன போல யானைகள் யானைகளுடன் மோதின. அப்போது யானைகள் மீது கட்டப்பட்டிருந்த கொடிகள், வானத்தில் பட்ட இரத்தக் கறைகளைத் துடைப்பன போல் நிமிர்ந்து பறந்து ஆடின.
எவ் வாயும் ஓடி, வயவர் துணித்திட்ட கை வாயில் கொண்டு எழுந்த செஞ் செவிப் புன் சேவல் ஐ வாய் வய நாகம் கவ்வி விசும்பு இவரும் செவ் வாய் உவணத்தின் தோன்றும் - புனல் நாடன் தெவ்வாரை அட்ட களத்து. 26
தெவ்வாரை - பகைவரை உவணம் - உலகம் சோழ வீரர்கள் போரில் எதிரிகளின் கைகளைத் துண்டாக்கிக் கீழே விழச் செய்தனர். சிவந்த காதுகளை உடைய ஆண் கழுகுகள் அவற்றைத் தூக்கிக் கொண்டு வானில் பறந்தன. அக்காட்சி பாம்பினை வாயில் தூக்கிச் சென்ற கருடன் வானில் பறப்பது போல் தோன்றியது.
செஞ் சேற்றுள் செல் யானை சீறி மிதித்தலால், ஒண் செங் குருதி தொகுபு ஈண்டி நின்றவை, பூ நீர் வியல் மிடாப் போன்ற - புனல் நாடன் மேவாரை அட்ட களத்து. 27
செஞ்சேறு - இரத்தசகதி மேவாரை - பகைவரை சோழ மன்னன் தன்னை அடையாதவர்களை (பகைவர்களை) வென்ற களத்தில், இரத்தச் சேற்றில் முன்னும் பின்னுமாக நடந்து யானைகள் கோபத்தினால் மிதித்தலால் உண்டான குழிகளில் வீரர்களின் சிவந்த கண்களோடு புதிய இரத்தமானது திரண்டு தேங்கியது. அது சிவந்த மலர்களைக் கொண்ட நீரினைக் கொண்ட அகன்ற சால்களைப் போன்று இருந்தது.
ஓடா மறவர் உருத்து, மதம் செருக்கி, பீடுடை வாளர் பிணங்கிய ஞாட்பினுள், கேடகத்தோடு அற்ற தடக் கை கொண்டு ஓடி, இகலன் வாய்த் துற்றிய தோற்றம், அயலார்க்குக் கண்ணாடி காண்பாரின் தோன்றும் - புனல் நாடன் நண்ணாரை அட்ட களத்து. 28
பீடுடை - பெருமை உடைய சோழன் பகைவர்களை வென்ற களத்தில், பெருமிதத்தோடு போரிட்ட போர்க்களத்தில் வீரர்கள் பகைவர்தம் கைகளை ஏந்திய கேடயத்தோடு அறுபட்டு வீழுமாறு வெட்டினர். அக்கைகளை நரிகள் கவ்விக் கொண்டு ஓடின. அந்தத் தோற்றம் தம் முகங்களைக் கண்ணாடியில் கண்டு மகிழும் மனிதர்களைப் போல அந்நரிகள் பக்கத்தில் நிற்பவர்களுக்குக் காட்சி தந்தன.
கடி காவில் காற்று உற்று எறிய, வெடி பட்டு, வீற்று வீற்று ஓடும் மயல் இனம்போல், நால் திசையும் கேளிர் இழந்தார் அலமருப - செங் கண் சின மால் பொருத களத்து. 29
கேளீர் - உறவினர் சோழன் சினம் கொண்ட திருமால் போன்று போரிட்ட களத்தில், காற்று கடுமையாக வீசியதால் சோலையில் இருந்த மயில் கூட்டம் பயந்து ஒவ்வொரு திசை நோக்கி ஓடுவது போல, போரில் இறந்துபட்ட வீரர்களின் மனைவிமார்கள் தம் கணவரின் உடல்களைத் தேடி நான்கு திசைகளிலும் ஓடி அலைந்தனர்.
மடங்க எறிந்து மலை உருட்டும் நீர்போல், தடங் கொண்ட ஒண் குருதி கொல் களிறு ஈர்க்கும்- மடங்கா மற மொய்ம்பின், செங் கண், சின மால் அடங்காரை அட்ட களத்து. 30
அடங்காரை - பகைவரை சோழன், அடங்காத வீரர்களைச் சிவந்த கண்களை உடைய திருமால் போன்று போரிட்ட போர்க்களத்தில் பொங்கி ஓடும் இரத்த வெள்ளமானது கொல்லப்பட்ட யானைகளின் உடல்களை இழுத்துக்கொண்டு செல்வது, மலைகளோடு மலைகள் மோதுமாறு மலைகளைத் தூக்கி எறிந்தும் உருட்டியும் இழுத்துக் கொண்டு ஓடும் வெள்ளம் போல் இருந்தது.
ஓடா மறவர் எறிய, நுதல் பிளந்த கோடு ஏந்து கொல் களிற்றின் கும்பத்து எழில் ஓடை மின்னுக் கொடியின் மிளிரும் - புனல் நாடன் ஒன்னாரை அட்ட களத்து. 31
ஒன்னாரை - பகைவரை சோழன் பகைவர்களை வென்ற களத்தில், வீரர்கள் வீசிய வேல்பட்டு யானையின் நெற்றி பிளக்கப்படுகிறது. அதனால் கொல்லப்பட்ட யானையின் மத்தகத்தில் கட்டப்பெற்ற அழகிய ஓடை என்னும் பட்டமானது தெறித்து விழும்போது 'பளிச்' என்ற ஒளியோடு வீழ்கிறது. அக்காட்சி மின்னல் கயிற்றில் பறக்கும் கொடி போல் இருந்தது.
மை இல் மா மேனி நிலம் என்னும் நல்லவள் செய்யது போர்த்தாள்போல் செவ்வந்தாள் - பொய் தீர்ந்த பூந் தார், முரசின், பொரு புனல், நீர் நாடன் காய்ந்தாரை அட்ட களத்து. 32
காய்ந்தாரை - பகைவரை சோழன் பகைவர்களை அழித்த போர்க்களத்தில், குற்றம் இல்லாத உடலைப் பெற்ற நிலம் என்னும் நன்மைகள் தரும் பெண்ணானவள் சிவந்த நிறமுள்ள போர்வையை விரும்பிப் போர்த்திக் கொள்வதைப் போல வீரர்கள் சிந்திய இரத்தம் எங்கும் பரவியது.
பொய்கை உடைந்து புனல் பாய்ந்த வாய் எல்லாம், நெய்தல் இடை இடை வாளை பிறழ்வனபோல் ஐது இலங்கு எஃகின் அவிர் ஒளி வாள் தாயினவே- கொய் சுவல் மாவின், கொடித் திண் தேர், செம்பியன் தெவ்வரை அட்ட களத்து. 33
செம்பியன் - சோழன் வலிமையான குதிரை பூட்டிய கொடி பொருந்திய திண்மையான தேரினை உடைய சோழன் போரிட்ட களத்தில், கரையை உடைத்துக் கொண்டு வெளியேறும் பொய்கை நீர் வெள்ளத்தில் நெய்தல் பூக்களுக்கு நடுவே வாளைமீன் அசைந்து புரள்வது போல், போர்க்களத்தில் வழிந்தோடும் இரத்த வெள்ளத்தில் மிதக்கும் வேலின் தலைப்பகுதிகளுக்கு நடுவே வாள்கள் மிதந்து சென்றன.
இடரிய ஞாட்பினுள் ஏற்று எழுந்த மைந்தர் சுடர் இலங்கு எஃகம் எறிய, சோர்ந்து உக்க குடர் கொடு வாங்கும் குறு நரி, கந்தில் தொடரொடு கோள் நாய் புரையும் - அடர் பைம் பூண் சேய் பொருது அட்ட களத்து. 34
ஞாட்பினுள் - உலகத்தில் அழகிய அணிகலனை அணிந்த சோழ மன்னன் போரிட்டு வென்ற போர்க்களத்தில் சோழ வீரர்களின் வேல்கள் பகைவர்கள் மீது பட்டன. பகைவர்கள் குடல் சரிந்து கிடக்கிறார்கள். சரிந்த குடல்களைக் கவ்விக் கொண்ட குள்ள நரிகள் அவற்றை இழுக்கின்றன. அச்செயல் தூணில் கட்டப்பெற்ற நாய்கள் சங்கிலியை இழுக்கும் செயலாக உள்ளது.
செவ் வரைச் சென்னி அரிமானோடு அவ் வரை ஒல்கி உருமிற்கு உடைந்தற்றால் - மல்கிக் கரை கொன்று இழிதரும் காவிரி நாடன் உரை சால் உடம்பிடி மூழ்க, அரசோடு அரசுஉவா வீழ்ந்த களத்து. 35
அரிமானோடு - சிங்கத்தோடு சோழ வேந்தனின் வேல்கள் பாய்ந்தமையால் எதிர்த்த அரசனும் வீழ்கிறான். அவன் ஏறி வந்த பட்டத்து யானையும் வீழ்கிறது. அக்காட்சியானது சிவந்த மலை மீது இடி வீழ்ந்தமையால் மலையோடு சிங்கமும் சிதறுண்டு கிடக்கும் காட்சி போல் உள்ளது.
ஓஒ உவமன் உறழ்வு இன்றி ஒத்ததே,- காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள், மா உதைப்ப, மாற்றார் குடை எலாம் கீழ் மேலாய், ஆ உதை காளாம்பி போன்ற, - புனல் நாடன் மேவாரை அட்ட களத்து. 36
களத்து - போர்க்களம் சோழன் போரிட்ட போர்க்களமானது ஒப்பிட முடியாத காட்சி உடையதாக இருந்தது. சோழன் பகைவரை வீழ்த்திய போரில் குதிரைப் படையால் உதைக்கப்பட்டமையால் வெண்கொற்றக் குடைகள் தரைமேல் கிடக்கின்றன. அக்காட்சி பசுக்களின் கால்களால் இடறப்பட்ட காளான்கள் கீழ் மேலாகச் சிதறிக் கிடப்பது போல் உள்ளது.
அரசர் பிணம் கான்ற நெய்த்தோர், முரசொடு முத்துடைக் கோட்ட களிறு ஈர்ப்ப, எத் திசையும் பெளவம் புணர் அம்பி போன்ற - புனல் நாடன் தெவ்வரை அட்ட களத்து. 37
தெவ்வரை - பகைவரை சோழன் பகைவரை அழித்த போர்க்களத்தில் வீழ்த்தப்பட்ட அரசர்களின் பிணங்கள் வடித்த இரத்தமானது முரசுகளையும் முத்துகளைக் கொண்ட தந்தங்களை உடைய யானைகளையும் இழுத்துச் செல்கிறது. அது கடல் அலைகளால் இழுத்துச் செல்லப் பெறும் சிறியதும், பெரிதுமான தோணிகளைப் போல இருந்தது.
பருமப் பணை எருத்தின் பல் யானை புண் கூர்ந்து உரும் எறி பாம்பின் புரளும் - செரு மொய்ம்பின், பொன் ஆர மார்பின், புனை கழற் கால், செம்பியன் துன்னாரை அட்ட களத்து. 38
துன்னாரை - பகைவரை பொன்னால் ஆகிய மாலையினையும், கழலினையும் அணிந்து பகைவர்களை வென்ற போர்க்களத்தில் புண்பட்ட பருத்த உடலையும் கழுத்தையும் உடைய யானைகள் வலி தாங்க முடியாமல் தவிக்கும். இடியின் ஒலியைக் கேட்டுப் பாம்புகள் உருள்வன போல இருபக்கங்களிலும் புரண்டு துடிக்கும்.
மைந்து கால் யாத்து மயங்கிய ஞாட்பினுள், புய்ந்து கால் போகிப் புலால் முகந்த வெண்குடை பஞ்சி பெய் தாலமே போன்ற - புனல் நாடன் வஞ்சிக்கோ அட்ட களத்து. 39
ஞாட்பினுள் - உலகில் சோழ மன்னன் வெற்றி பெற்ற போர்க்களத்தில், எதிரி வீரர்கள் கைதிகளாக விலங்கிட்டு அடங்க வைத்த போரில், காம்புகள் முறிபட்ட வெண்கொற்றக் குடைகள், இரத்தம் கசியும் தசைகள் நிறைந்து காட்சியளித்தன. அக்காட்சி செம்பஞ்சுக் குழம்பு நிறைந்துள்ள அகன்ற பெரிய தொட்டிகள் போல இருந்தது.
வெள்ளி வெண் நாஞ்சிலால் ஞாலம் உடுவன போல், எல்லாக் களிறும் நிலம் சேர்ந்த - பல் வேல், பணை முழங்கு போர்த் தானைச் செங் கண் சின மால் கணை மாரி பெய்த களத்து. 40
ஞாலம் - உலகம் மாரி - மழை சிவந்த கண்களை உடைய பாண்டியன் மழை போல் அம்புகள் பெய்த போர்க்களத்தில், காயம்பட்ட யானைகள் தந்தங்களோடு கூடிய முகங்களைத் தரைமேல் சாய்த்துக் கிடந்தன. அக்காட்சி உழவர்கள், வெள்ளியால் செய்யப் பெற்ற வெண்மைநிறக் கலப்பைகளைக் கொண்டு நிலத்தை உழுவது போல் தோன்றியது.
வேல் நிறத்து இயங்க, வயவரால் ஏறுண்டு கால் நிலை கொள்ளாக் கலங்கி, செவி சாய்த்து, மா, நிலம் கூறும் மறை கேட்ப போன்றவே- பாடு ஆர் இடி முரசின், பாய் புனல், நீர் நாடன் கூடாரை அட்ட களத்து. 41
கூடாரை - பகைவரை அட்டகளத்து - போர்க்களத்து அருவி பாயும் நீர் நாடன் இடி முரசு போன்று கொடியவர்களை வென்ற போர்க்களத்தில், வேல்களால் மார்பில் குத்தப்பட்டுத் தளர்ந்துபோன யானைகள் கலக்கம் அடைந்து ஒரு பக்கக் காதுகள் நிலத்தில் படும்படியாகச் சாய்ந்தன. அக்காட்சி, நிலமகள் கூறும் அறக்கருத்துகளை யானைகள் பணிவோடு கேட்கும் நிலைபோல் தோன்றியது. மிகைப் பாடல்
படைப்பொலி தார் மன்னர் பரூஉக் குடர் மாந்திக் குடைப் புறத்துத் துஞ்சும் இகலன், இடைப் பொலிந்த திங்களில் தோன்றும் முயல்போலும் - செம்பியன் செங் கண் சிவந்த களத்து.
செம்பியன் - சோழன் பாண்டியன் கண்கள் சிவந்தது போன்று சிவந்த போர்க்களத்தில், போருக்கு உரிய மாலைகளை அணிந்து போரிட்டு மாண்ட மன்னர்களின் பருத்த குடல்களைத் தின்ற நரிகள், வீழ்ந்து கிடக்கும் வெண்கொற்றக் குடைகளின் அருகே தூங்குவது முழு நிலாவிற்கு அருகில் உள்ள முயல் வடிவக் களங்கம் போன்று இருந்தது. |