மதுரைக் கண்ணங்கூத்தனார்

இயற்றிய

கார் நாற்பது

(உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.)

     அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது. எனவே இது காலம் பற்றிய தொகை நூலாகும். இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார். கூத்தனார் என்பது இவர் இயற்பெயர். கண்ணன் என்பது இவர் தந்தையார் பெயர். இவர் வாழ்ந்த ஊர் மதுரை. இவர் இந் நூலின் முதற் செய்யுளில் முல்லை நிலத் தெய்வமாகிய மாயோனைக் குறித்துள்ளார். பலராமனைப் பற்றியும் நூலில் கூறியுள்ளார்(19). எனவே, இவர் வைணவ சமயத்தவராதல் கூடும். இவர் நூலில் வேள்வித் தீயையும் (7) கார்த்திகை நாளில் நாட்டவரால் ஏற்றப்படும் விளக்கையும்(26) கூறியுள்ளார். கார்த்திகை நாளில் விளக்கு வைத்து விழாக் கொண்டாடுதல் பண்டை வழக்கமாகும். நூலின் சிறப்புப் பாயிரச் செய்யுள் நூல் இறுதியில் தரப்பட்டுள்ளது.

தோழி தலைமகட்குப் பருவம் காட்டி வற்புறுத்தியது

பொரு கடல் வண்ணன் புனை மார்பில் தார்போல்,
திருவில் விலங்கு ஊன்றி, தீம் பெயல் தாழ,
'வருதும்' என மொழிந்தார் வாரார்கொல், வானம்
கரு இருந்து ஆலிக்கும் போழ்து? 1

திருவில் - இந்திரவில்லை

     கரையை மோதுங்கடலினது நிறத்தினையுடைய திருமால் மார்பில் அணிந்த பூமாலைபோல, இந்திரவில்லைக் குறுக்காக நிறுத்தி இனிய பெயல் விழா நிற்க, வருவேன் என சொல்லிப்போன தலைவர், மேகமானது கருத்து மழை பொழியும் காலத்து வாராரோ? என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

கடுங் கதிர் நல்கூர, கார் செல்வம் எய்த,
நெடுங் காடு நேர் சினை ஈன, - கொடுங்குழாய்!-
'இன்னே வருவர், நமர்' என்று எழில் வானம்
மின்னும், அவர் தூது உரைத்து. 2

நெடுங்காடு - நெடிய காடு
எழில் - அழகு

     வளைந்த குழையையுடையாய், சூரியனின் வெங்கதிர் குறைந்து, கார்பருவம் துவங்கி, நெடிய காடெல்லாம் மிக்க அரும்புகளைத் தர, நமது தலைவர் இப்பொழுதே வருவார் என்று மேகம் தூது அறிவித்தது என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

பருவம் கண்டு அழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டி, தோழி தனது ஆற்றாமை தோன்ற உரைத்தது

வரி நிறப் பாதிரி வாட, வளி போழ்ந்து
அயிர் மணல் தண் புறவின் ஆலி புரள,
உரும் இடி வானம் இழிய, எழுமே-
நெருநல், ஒருத்தி திறத்து. 3

தண் - குளிர்ச்சி
அயிர் மணல் - இள மணல்
ஆலி - ஆலங்கட்டி

     வரி நிறத்தினை உடைய பாதிரிப் பூக்கள் வாட, இள மணலையுடைய குளிர்ந்த காட்டில், ஆலங்கட்டிகள் புரள, வானம் இடி இடித்து, நேற்று முதல், ஒருத்தி தனித்திருப்பதால், அவளை வருத்துவதற்காக மழை பெய்தது.

தோழி பருவம் காட்டித் தலைமகளை வற்புறுத்தியது

ஆடு மகளிரின் மஞ்ஞை அணி கொள,
காடும் கடுக்கை கவின் பெறப் பூத்தன;
பாடு வண்டு ஊதும் பருவம், - பணைத் தோளி!-
வாடும் பசலை மருந்து. 4

அணி கொள - அழகுபெற
ஆடு மகளிர் - கூத்தாடும் மகளிர்
மஞ்ஞை - மயில்

     கூத்தாடும் மகளிர் போல மயில்கள் அழகுபெற, கொன்றைகள் அழகு பெற பூத்தன. பாடுகின்ற வண்டுகளும் அப்பூக்களின் மீது நிற்கும். மூங்கில் போன்ற தோளை உடையவளே! இப்பருவமானது வாடுகின்ற நின் பசலைக்கு மருந்தாகும்.

இகழுநர் சொல் அஞ்சிச் சென்றார் வருதல்-
பகழிபோல் உண் கண்ணாய்! - பொய் அன்மை; ஈண்டைப்
பவழம் சிதறியவை போலக் கோபம்
தவழும் தகைய புறவு. 5

புறவு - காடுகள்

     அம்பு போலும் மையுண்ட கண்களையுடையாய்! பவழம் சிந்தியவைபோலக் காடுகள் இந்திர கோபங்கள் பரக்குந் தன்மை உடையவையாயின. ஆதலால் பிறர் கூறும் பழிக்கு அஞ்சிப் பொருள் தேடச் சென்ற தலைவர், மீண்டும் வருதல் பொய்யல்ல; மெய்யாம்.

தொடி இட ஆற்றா தொலைந்த தோள் நோக்கி,
வடு இடைப் போழ்ந்து அகன்ற கண்ணாய்! வருந்தல்;-
கடிது இடி வானம் உரறும், நெடு இடைச்
சென்றாரை, 'நீடல்மின்' என்று. 6

கடிது - கடுமையாய்
தொலைந்த - மெலிந்த
உரறும் - முழங்கும்

     மாவடுவில் நடுவே பிளந்தாற்போல, அகன்ற கண்களையுடையாய்! கடுமையாய் இடிக்கும் மேகம், நெடிய வழியில் சென்ற தலைவனை, காலந் தாழ்த்தாது போகச் சொல்லி முழங்காமல் நிற்கும். ஆதலால் வருந்தாதே.

நச்சியார்க்கு ஈதலும், நண்ணார்த் தெறுதலும்,
தற் செய்வான் சென்றார்த் தரூஉம், - தளரியலாய்!-
பொச்சாப்பு இலாத புகழ் வேள்வித் தீப் போல
எச் சாரும் மின்னும், மழை. 7

தெறுதலும் - அழித்தலும்
ஈதல் - கொடுத்தல்

     தளர்ந்த இயல்பினையுடையாய்! தம்மை விரும்பியடைந்தார்க்கு ஈதலும், அடையாத பகைவரை அழித்தல் பொருட்டுப் பொருள் தேடச் சென்ற தலைவரை, மறப்பில்லாத புகழையுடைய வேள்வித்தீயைப் போல மின்னும் மழை வானமானது கொண்டு வரும்.

மண் இயல் ஞாலத்து, மன்னும் புகழ் வேண்டி,
பெண் இயல் நல்லாய்! பிரிந்தார் வரல் கூறும்-
கண் இயல் அஞ்சனம் தோய்ந்தபோல், காயாவும்
நுண் அரும்பு ஊழ்த்த புறவு. 8

ஞாலம் - உலகம்
அஞ்சனம் - மை

     பெண் தகைமையையுடைய நல்லாய்! மண் நிறைந்த உலகத்து நிலை பெறும் புகழை விரும்பிப் பிரிந்து சென்ற தலைவர் மீண்டும் வருதலைக் கண்களில் தீட்டிய மையினைப் போன்று காயாஞ் செடிகளும், நுண்ணிய அரும்புகளும் மலரப் பெற்ற காடுகள் சொல்லும்.

கருவிளை கண் மலர்போல் பூத்தன, கார்க்கு ஏற்று;
எரி வனப்பு உற்றன, தோன்றி; வரி வளை
முன்கை இறப்பத் துறந்தார் வரல் கூறும்,
இன் சொல் பலவும் உரைத்து. 9

வரல் - வருதலை
வனப்பு - அழகு

     கார் கால்த்தில் கண் மலர் போலப் பூத்த கருவிளம்பூக்களும், தீயினது அழகையுடைய பூக்களும், வரியையுடைய வளைகள் முன்னங்கையினின்று கழல, இனிய சொற்கள் பலவும் சொல்லிப் பிரிந்து சென்ற தலைவர் வருவார் என்பதனைக் கூறும்.

வான் ஏறு வானத்து உரற, வய முரண்
ஆன் ஏற்று ஒருத்தல் அதனோடு எதிர் செறுப்பக்,
கான் யாற்று ஒலியின் கடு மான் தேர் - என் தோழி!-
மேனி தளிர்ப்ப, வரும். 10

வய - வலி
வான் ஏறு - இடி முழக்கம்
முரண் - மாறுபாடு

     என் தோழியே! வானத்தில் ஏற்படும் இடியின் ஓசை மிகுந்த இக்காலத்தில் வலியினையும், மாறுபாட்டினையும் உடைய எருமை வெகுளுமாறு, குதிரை பூட்டப்பட்ட நம் காதலர் தேர் காட்டாற்றின் ஒலி போலும் ஒலி எழுப்பி உன் மேனி தழைக்க வருவார் என்று கூறியது.

புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்,
வணர் ஒலி ஐம்பாலாய்! வல் வருதல் கூறும்-
அணர்த்து எழு பாம்பின் தலைபோல் புணர் கோடல்
பூங் குலை ஈன்ற புறவு. 11

வணர் - குழற்சியையுடைய
புறவு - காடுகள்

     தழைத்த கூந்தலையுடையாய்! பாம்பினது படத்தைப் போல, வெண்காந்தள்கள் மலர்ந்த காடுகள், பொருளைக் கொண்டு வரப் பிரிந்து சென்ற தலைவர் விரைந்து வருவார் என்று சொல்லும்.

மை எழில் உண் கண், மயில் அன்ன சாயலாய்!
ஐயம் தீர் காட்சி அவர் வருதல் திண்ணிதாம்; -
நெய் அணி குஞ்சரம் போல, இரும் கொண்மூ
வைகலும் ஏரும், வலம். 12

மை எழில் - கருமையாகிய எழில்
குஞ்சரம் - யானை
வைகல் - பொழுது

     கருமையும், அழகும் பொருந்திய மையுண்ட கண்களையுடைய, மயில் போல சாயலினையுடையாய்! நெய் பூசிய யானைகள் போல கரிய மேகங்கள், நம் தலைவர் வருவது உறுதி என்று கூறி எழாமல் நின்றது.

ஏந்து எழில் அல்குலாய்! ஏமார்ந்த காதலர்
கூந்தல் வனப்பின் பெயல் தாழ, வேந்தர்
களிறு எறி வாள் அரவம் போலக் கண் வெளவி,
ஒளிறுபு மின்னும், மழை. 13

அரவம் - பாம்பு
அல்குல் - பெண் உறுப்பு
எழில் - அழகு

     நம் தலைவரோடு கூடி இன்பந் துய்த்த மகளிரின் சரிந்த கூந்தலினது அழகுபோல, மழைபெய்ய, அரசர் யானையை வெட்டி வீழ்த்துகின்ற ஒலியுடைய வாளினைப் போல ஒளியுடன் மின்னும். இவ்வாறு மழை பெய்வதால் தலைவர் வருவார் என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

செல்வம் தரல் வேண்டிச் சென்ற நம் காதலர்
வல்லே வருதல் தெளிந்தாம்; - வயங்கிழாய்!-
முல்லை இலங்கு எயிறு ஈன, நறுந் தண் கார்
மெல்ல இனிய நகும். 14

தண் கார் - குளிர்ந்த மேகம்

     அணிகளை உடையவளே! மகளிரின் பற்கள் போன்று முல்லை மலர, நல்ல குளிர்ந்த மேகம், செல்வம் பெற வேண்டிப் பிரிந்து சென்ற நமது தலைவர் விரைந்து வருதல் உண்மை என்று மின்னியது எனத் தோழி தலைவியிடம் கூறினாள்.

திருந்திழாய்! காதலர் தீர்குவர் அல்லர்-
குருந்தின் குவி இணர் உள் உறை ஆகத்
திருந்து இன் இளி வண்டு பாட, இருந் தும்பி
இன் குழல் ஊதும் பொழுது. 15

குருந்தின் - குருத்த மரத்தின்
இருந்தும்பி - கரிய தும்பி

     திருந்திய அணிகளை உடையவளே! குருத்த மரத்தின் குவிர்ந்த பூங்கொத்துக்களின் உள்ளிடத்தில் இருந்து வண்டுகள் பாட, கரிய தும்பிகள் இனிய குழலை ஊத, இந்தக் காலத்தில் காதலர் நம்மை விட்டுப் பிரிந்து இருக்க மாட்டார். விரைந்து வருவார் எனத் தோழி தலைவியிடம் கூறினாள்.

கருங் குயில் கையற, மா மயில் ஆல,
பெருங் கலி வானம் உரறும் - பெருந்தோள்!
செயலை இளந் தளிர் அன்ன நின் மேனிப்
பயலை பழங்கண் கொள. 16

கையற - செயலற்று
மாமயில் - பெரிய மயில்
உரறும் - இடிக்கும்

     பெரிய தோளினை உடையவளே! அசோக மரத்தின் இளந்தளிர் போன்ற உன் உடம்பினது பசலை, மெலிவு கொள்ளவும், கரிய குயில்கள் துன்புறவும், பெரிய மயில்கள் களித்து ஆடவும் மேகங்கள் முழங்கியது. இப்படிப்பட்ட காலத்தில் தலைவன் விரைந்து வருவான் எனத் தோழி தலைவியிடம் கூறினாள்.

அறைக் கல் இறு வரைமேல் பாம்பு சவட்டி,
பறைக் குரல் ஏறொடு பெளவம் பருகி,
உறைத்து இருள் கூர்ந்தன்று, வானம்; பிறைத் தகை
கொண்டன்று, - பேதை! - நுதல். 17

நுதல் - நெற்றி

     மேகமானது கடல் நீரைக் குடித்து, பறையொலி போலும் இடியை இடித்து, பாறைக் கற்களையுடைய பக்க மலையின் மேல் நீரைச் சொரிந்தது. ஆனால், உனது நெற்றி பிறை மதியின் அழகைக் கொண்டதே என்று தோழி தலைவியிடம் கூறினாள். மழை வந்தால் கார்காலம் வந்துவிட்டது, உன் அழகைப் பருக தலைவன் வருவான் என்பது உட்கருத்து.

கல் பயில் கானம் கடந்தார் வர, ஆங்கே
நல் இசை ஏறொடு வானம் நடு நிற்ப,
செல்வர் மனம்போல் கவின் ஈன்ற, நல்கூர்ந்தார்
மேனிபோல் புல்லென்ற காடு. 18

நடுநிற்ப - நடுவு நின்று

     மலை நெருங்கிய காட்டைக் கடந்து சென்ற தலைவர் வருங்காலம் வந்த பொழுது, மேகங்கள் எங்கும் பெய்தலால், பொலிவிழந்த காடுகள் பொருளையுடையார் மனம் போல அழகைத் தந்தன என்று தலைவன் விரைந்து வருவான் எனத் தோழி தலைவியிடம் கூறினாள்.

வினை முற்றிய தலைமகன் பாகற்குச் சொல்லியது

நாஞ்சில் வலவன் நிறம் போலப் பூஞ் சினைச்
செங் கால் மராஅம் தகைந்தன; பைங் கோல்
தொடி பொலி முன் கையாள் தோள் துணையா வேண்டி,
நெடு இடைச் சென்றது, என் நெஞ்சு. 19

தகைந்தன - மலர்ந்தன

     கலப்பைப் படையால் வெற்றியுடையவனது கவண்ணிறம் போல, வெண்கடம்புகள் மலர்ந்தன. என் மனம் பசுமையாகிய திரண்ட வளைகள் உடைய முன்னங்கையையுடையாளின் துணையை வேண்டி நெடிய காட்டு வழியைக் கடந்து சென்றது என்று தலைவியிடத்து நான் செல்வதற்குள் என் மனம் சென்றுவிட்டது என்று தலைவன் பாங்கனிடம் கூறினாள்.

வீறு சால் வேந்தன் வினையும் முடிந்தன;
ஆறும் பதம் இனிய ஆயின; ஏறொடு
அரு மணி நாகம் அனுங்க, செரு மன்னர்
சேனைபோல் செல்லும், மழை. 20

வீறு சால் - சிறப்பமைந்த

     அரசனுடைய போர்த் தொழில்களும் முடிந்தன. வழிகளும் இனியவாயின. மேகங்கள் நாகங்கள் வருந்த, போர்வேந்தரின் சேனைபோல போகும். ஆகவே நாம் போகலாம்.

பொறி மாண் புனை திண் தேர் போந்த வழியே
சிறு முல்லைப் போது எல்லாம், செவ்வி நறு நுதல்,
செல்வ மழைத் தடங் கண் சில் மொழி, பேதை வாய்
முள் எயிறு ஏய்ப்ப, வடிந்து. 21

நறுநுதல் - அழகான நெற்றி

     அலங்கரிக்கப்பட்ட தேர் வந்த வழியில் சிறிய முல்லையின் அரும்புகள் எல்லாம் உன்னுடைய கூர்மையுற்ற நெற்றியையும், கண்களையும், கூரிய பற்களையும் ஒத்து நிற்கும் என்று பார்க்கும் பொருள்களெல்லாம் தலைவியை ஒத்துள்ளது என்று தலைவன் பாங்கனிடம் கூறினான்.

இளையரும் ஈரங் கட்டு அயர, உளை அணிந்து,
புல் உண் கலி மாவும் பூட்டிய; நல்லார்
இள நலம் போலக் கவினி, வளம் உடையார்
ஆக்கம்போல் பூத்தன, காடு. 22

கவினி - அழகுற்று

     சேவகரும் குளிர் காலத்திற்குரிய உடையினை உடுக்க, குதிரையும் தேருடன் பூட்ட, காடுகள் அழகுற்று வளமானவர்கள் செல்வம் போல பொலிவுற்றது என்று தலைவன் பாங்கனிடம் கூறினான்.

தோழி தலைமகட்குப் பருவம் காட்டி வற்புறுத்தது

கண் திறள் முத்தம் கடுப்பப் புறவு எல்லாம்
தண் துளி ஆலி புரள, புயல் கான்று
கொண்டு, எழில் வானமும் கொண்டன்று; எவன் கொலோ,
ஒண்டொடி! ஊடும் நிலை? 23

ஆலி - ஆலங்கட்டிகளும்

     காடெங்கும் குளிர்ந்த நீர்த்துளிகளும், ஆலங்கட்டிகளும் புரளும் வகை, மழைபொழிந்து அழகினையுடையது. ஆதலால் தலைவர் வருவர். இனிப் புலம்புதல் வேண்டா என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

வினைமுற்றிய தலைமகன் நெஞ்சிற்கு கூறியது

எல்லா வினையும் கிடப்ப, எழு, நெஞ்சே!
கல் ஓங்கு கானம் களிற்றின் மதம் நாறும்;
பல் இருங் கூந்தல் பனி நோனாள்; கார் வானம்
எல்லியும் தோன்றும், பெயல். 24

பெயல் - மழை

     மலைகள் உயர்ந்த காடுகளில் யானையின் மதம் அடங்காமல் நிற்கும். கரிய கூந்தலையுடையவள் நான் கூறிய சொல்லை இனிப் பொறுக்க மாட்டாள். ஆகவே எல்லாத் தொழில்களும் ஒழிந்து நிற்க நீ புறப்படு என்று தலைவன் தன் நெஞ்சிடம் கூறினான்.

பருவங்கண்டழிந்த தலைமகனுக்கு தோழி உரைத்தது

கருங் கால் வரகின் பொரிப்போல் அரும்பு அவிழ்ந்து,
ஈர்ந் தண் புறவில் தெறுழ் வீ மலர்ந்தன;
சேர்ந்தன செய் குறி; வாரார் அவர் என்று
கூர்ந்த, பசலை அவட்கு. 25

கூர்ந்த - கொடிய

     குளிர்ச்சி மிக்க காட்டில், அரும்புகள் மலர்ந்தன. செய்த குறிகள் தோன்றின. ஆதலால் தலைவர் இனி வரமாட்டாரென்று தலைவிக்குப் பசலை மிகுதியானது.

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது

நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட
தலை நாள் விளக்கின் தகை உடையவாகி,
புலம் எலாம் பூத்தன தோன்றி; - சிலமொழி!-
தூதொடு வந்த, மழை. 26

புலம் எலாம் - இடமெல்லாம்

     மென்மையாகப் பேசுபவளே! தோன்றிப் பூக்கள், கார்த்திகை திருவிழாவில் கொளுத்தி வைத்த முதல்நாள் விளக்கைப் போல அழகுடையனவாகி மலர்ந்தன. மழையும் தூதுடனே வந்தது. எனவே தலைவன் கார்காலம் கண்டு வருவான் என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

ஊடுதலால் பசலை மிகும் எனதோழி தலைவியிடம் கூறியது

முருகியம்போல் வானம் முழங்கி இரங்க,
குருகிலை பூத்தன கானம்; பிரிவு எண்ணி,
'உள்ளாது அகன்றார்' என்று ஊடி யாம் பாராட்ட,
பள்ளியுள் பாயும், பசப்பு. 27

பசப்பு - பசலை
முருகியம் போல் - குறிஞ்சிப் பறை

     குறிஞ்சிப் பறை போல மேகம் முழங்க, காட்டின்கண் குருக்கத்தியிலை விரிந்தன. பிரிதலை நன்றென்று நினைத்து, நம் வருத்தத்தைக் கருதாது சென்றார் என்று ஊடுதலைப் பாராட்ட நோய் படுக்கையிடத்தில் பரவும் என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

வினைமுற்றிய தலைமகன் நெஞ்சோடு சொல்லியது

இமிழ் இசை வானம் முழங்க, குமிழின் பூப்
பொன் செய் குழையின் துணர் தூங்க, தண் பதம்
செல்வி உடைய, சுரம் - நெஞ்சே! - காதலி ஊர்
கவ்வை அழுங்கச் செலற்கு. 28

சுரம் - காடுகள்

     வானம் முழங்க, குமிழின் பூக்கள் கொத்துக்களாய்த் தொங்க, மனமே! நம் காதலியின் ஊருக்கு நாம் செல்வதற்குச் சரியான நேரமாகும் என்று தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறினான்.

வினைமுற்றிய தலைமகன் நெஞ்சோடு சொல்லியது

பொங்கரும் ஞாங்கர் மலர்ந்தன; தங்காத்
தகை வண்டு பாண் முரலும், கானம்; பகை கொண்டல்
எவ்வெத் திசைகளும் வந்தன்று; சேறும் நாம்,
செவ்வி உடைய சுரம். 29

தகை - அழகையுடைய

     சோலைகளெல்லாம் மலர்ந்தன. வண்டுகள் பாடாமல் நின்றன. மேகங்கள் எல்லா திசைகளும் வந்தது. காடுகளும் தட்ப முடையவாயின. ஆகவே நாம் போவோம் என்று தலைவன் தன் நெஞ்சிற்கு கூறினான்.

வினைமுற்றிய தலைமகன் நெஞ்சோடு சொல்லியது

வரை மல்க, வானம் சிறப்ப, உறை போழ்ந்து
இரு நிலம் தீம் பெயல் தாழ, விரை நாற,
ஊதை உளரும், நறுந் தண் கா, பேதை
பெரு மடம் நம்மாட்டு உரைத்து. 30

கா - குளிர்ந்த சோலை

     மலைகள் நிறைந்த இவ்விடத்தில் வானமும் பூமியும் சேருமாறு மழை பெய்கிறது. ஊதைக் காற்றானது, தலைவர் வாரார் என்று கருதி வருந்தியிருக்கும் தலைவியது அறியாமையைத் தெரிவிக்கிறது. ஆகவே நீ தேரை விரைவாகச் செலுத்து என்று நெஞ்சிற்குக் கூறினான்.

வினைமுற்றிய தலைமகன் பாங்கனுக்கு சொல்லியது

கார்ச் சேண் இகந்த கரை மருங்கின் நீர்ச் சேர்ந்து,
எருமை எழில் ஏறு, எறி பவர் சூடி,
செரு மிகு மள்ளரின் செம்மாக்கும் செவ்வி,
திருநுதற்கு யாம் செய் குறி. 31

சேண் - ஆகாயம்

     எருமையினது எழுச்சியுடைய ஆண் கரையின் பக்கத்திலுள்ள நீரையடைந்து எறியப்பட்ட பூங்கொடிகளைச் சூடிக் கொண்டு போரில் வீரமிக்க வீரனைப் போல இறுமாந்திருக்கும் காலமே, நாம் திரும்பி வருவதற்கு அழகிய நெற்றியினை உடைய தலைவிக்குச் செய்த குறியாகும். எனவே விரைந்து தேரினை ஓட்டு என்று பாகனிடம் கூறினான்.

வினைமுற்றிய தலைமகன் பாங்கனுக்கு கூறியது

கடாஅவுக, பாக! தேர் கார் ஓடக் கண்டே;
கெடாஅப் புகழ் வேட்கைச் செல்வர் மனம்போல்
படாஅ மகிழ் வண்டு பாண் முரலும், கானம்
பிடாஅப் பெருந்தகை நற்கு. 32

வேட்கை - விழைவு, விருப்பம்

     அழியாத புகழை விரும்புகின்ற செல்வரது மனத்தைப் போல, வண்டுகள் பாடா நிற்கும். மேகம் ஓடுதலைக் கண்டு தேரை வேகமாக செலுத்துவாய் என்று தலைவன் பாங்கனிடம் கூறினான்.

வினைமுற்றிய தலைவன் பாகற்குக் கூறியது

கடல் நீர் முகந்த கமஞ் சூல் எழிலி
குடமலை ஆகத்து, கொள் அப்பு இறைக்கும்
இடம்' என ஆங்கே குறி செய்தேம், பேதை
மடமொழி எவ்வம் கெட. 33

எழிலி - மேகம்

     கடலினது நீரை முகந்த மேகம், மேற்கு மலையிடத்து நீரினைச் சொரியும். அப்பொழுதே பேதையின் வருத்தம் நீங்கக் குறி செய்தோம். ஆகவே விரைந்து செல்வாய் என்று தலைவன் பாகனிடம் கூறினான்.

பருவங்கண்டழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற உரைத்தது

விரி திரை வெள்ளம் வெறுப்பப் பருகி,
பெரு விறல் வானம் பெரு வரை சேரும்
கரு அணி காலம் குறித்தார், திரு அணிந்த
ஒள் நுதல் மாதர் திறத்து. 34

ஒள் நுதல் - நுண்ணிய நெற்றியை

     மேகம் கடலினது நீரை உண்டு பெரிய மலையை அடையும் காலத்தை, தலைவர் தாம் மீண்டும் வருங்காலமாகத் தலைக்கோலத்தை அணிந்த ஒள்ளிய நெற்றியினை உடைய காதலியிடம் குறிப்பிட்டார் என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

'சென்ற நம் காதலர் சேண் இகந்தார்!' என்று எண்ணி
ஒன்றிய நோயோடு இடும்பை பல கூர,
வென்றி முரசின் இரங்கி, எழில் வானம்
நின்றும் இரங்கும், இவட்கு. 35

இரங்கு - பரிவுறா நிற்கும்

     பிரிந்து சென்ற தலைவர், நெடுந்தூரத்தைக் கடந்து சென்றானென்று நினைத்துப் பசப்பு நோயுடன் பல துன்பங்களும் மிகப் பெறுதலால் அவளுக்காக மேகமும் மனம் இரங்கி நிற்கும் என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

வினைமுற்றி மீளுந் தலைமகன் பாகற்குச் சொல்லியது

சிரல்வாய் வனப்பின ஆகி, நிரல் ஒப்ப
ஈர்ந் தண் தளவம் தகைந்தன; சீர்த்தக்க
செல்வ மழை மதர்க் கண், சில் மொழி, பேதை ஊர்
நல் விருந்து ஆக, நமக்கு. 36

பேதை - காதலியின்

     செம் முல்லைப் பூக்கள் குருவியின்வாய் போல் அழகுடைய தாயிற்று. செல்வத்தையுடைய காதலியின் ஊரானது நமக்கு நல்ல விருந்தைத் தரும் இடமாகும். எனவே விரைந்து செல்வாயாக என்று தலைவன் பாகற்குக் கூறினான்.

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது

கருங் கடல் மேய்ந்த கமஞ் சூழ் எழிலி
இருங் கல் இறு வரை ஏறி, உயிர்க்கும்
பெரும் பதக் காலையும் வாரார்கொல், வேந்தன்
அருந் தொழில் வாய்த்த நமர்? 37

உயிர்த்தல் - நீரைக் காணுதல்

     கரிய கடலினைக் குடித்த கருவுற்ற மேகம் மழை பொழிந்து, அரசனது போர்த் தொழிலும் முடிந்தது. நம் தலைவர் வாராமல் இருப்பாரோ என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

தலைவன் பொய்யுரைத்தான் என்று தோழி தலைவியிடம் கூறியது

புகர் முகம் பூழிப் புரள, உயர் நிலைய
வெஞ் சின வேழம் பிடியோடு இயைந்து ஆடும்
தண் பதக் காலையும் வாரார்; எவன் கொலோ,-
ஒண்டொடி! - ஊடும் நிலை? 38

வேழம் - யானை

     ஆண் யானைகள், புழுதியிற் புரண்டு பெண் யானைகளுடன் விளையாடும் இக்காலத்தும் தலைவர் வரவில்லை. எனவே அவருக்காக நீ வருத்தப் படல் வேண்டாம் என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

அலவன் கண் ஏய்ப்ப அரும்பு ஈன்று அவிழ்ந்த
கருங் குரல் நொச்சிப் பசுந் தழை சூடி,
இரும் புனம் ஏர்க் கடிகொண்டார்; பெருங் கெளவை
ஆகின்று, நம் ஊர் அவர்க்கு. 39

அவிழ்ந்த - பின் மலர்ந்த

     வண்டின் கண்களை ஒப்ப அரும்பினை ஈன்று பின் மலர்ந்த கரிய பூங்கொத்தினை உடைய நொச்சியினது பசிய தழையை சூடிக்கொண்டு, உழவர் புதிதாக ஏர் உழத் தொடங்கினார்கள். ஆதலால் நம் தலைவர்க்கு நம் ஊரின் கண் பெரிய அலராயிற்று என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

பருவம் காட்டித் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது

'வந்தன செய் குறி; வாரார் அவர்' என்று
நொந்த ஒருத்திக்கு நோய் தீர் மருந்து ஆகி,
இந்தின் கரு வண்ணம் கொண்டன்று, எழில் வானம்;
ஈந்தும், - மென் பேதை! - நுதல். 40

எழில் வானம் - அழகிய முகில்

     தலைவர் செய்த குறிகள் வந்துவிட்டன, தலைவர் வரமாட்டார் என்று நொந்த ஒருத்திக்கு, அழகிய மேகம் நோய்த் தீர்க்கும் மருந்தாகி கரிய நிறத்தைக் கொண்டது. உன் நெற்றி இனி ஒளி பெறும் என்று தோழி மகிழ்ந்து தலைவியிடம் கூறினாள்.

சிறப்புப் பாயிரம்

முல்லைக் கொடி மகிழ, மொய் குழலார் உள் மகிழ,
மெல்லப் புனல் பொழியும் மின் எழில் கார்; - தொல்லை நூல்
வல்லார் உளம் மகிழ, தீம் தமிழை வார்க்குமே,
சொல் ஆய்ந்த கூத்தர் கார் சூழ்ந்து.

புனல் - நீர்

     முல்லைக் கொடிகள் மகிழ்ந்து மணம் வீச, கரிய கூந்தலையுடைய பெண்கள் உள்ளம் மகிழ, மழை பொழியும் மின்னலை உடைய கார் மேகத்தினைக் கொண்டு, கற்றறிந்தார் தீம் தமிழை வளர்க்கும் என்று மகிழ கார் நாற்பது என்ற இந்நூல் இருக்கிறது.