நானூறு சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் உரையாசிரியர் : ஊ.புட்பரதச் செட்டியார் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்பட்டன. நாலடியாரும் அவற்றுள் ஒன்று. முப்பொருள்களையும் சிறப்புற நான்கடிக்கு மிகாமல் உரைப்பது கீழ்கணக்கு நூல்களின் சிறப்பாகும். இந்நூல் சமண முனிவர் நானூறு பேரால் பாடப்பட்டது. கடவுள் வணக்கம்
வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால் கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம் சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து முன்னி யவைமுடிக என்று. (இ-ள்) வான் இடு வில்லின் - மேகத்தில் உண்டாகிய இந்திரவில்லைப் போன்ற, வரவு அறியா - (உடம்பின்) தோற்றத்தை அறிந்து, வாய்மையால் - சத்தியத்தினால், கால் நிலம் தேயா - பாதம் பூமியிற் படியாத, கடவுளை - தேவனை, எம் உள்ளத்து - எமது மனதில், முன்னியவை முடிக என்று - நினைத்த காரியங்கள் கைகூட வேண்டுமென்று சொல்லி, யாம் - நாம், நிலம் சென்னி உற - தரையில் தலை பொருந்தும்படி, வணங்கி சேர்தும் - தெண்டமிட்டுச் சேர்வோம். எ-று. வானத்தில் தோன்றுகின்ற வில்லானது இப்போதென்றும் இன்னபடியென்றும் தெரியாமல் உண்டாகி உரு அழிந்து போவது போல் உடம்பும் அழிந்து போவதனால் அது அழியா முன்னமே நினைத்த காரியங்கள் கைகூடும்படி கடவுளை நாம் பணிந்து சேர்வோம் என்பது கருத்து. கால் நிலத் தோயாமைக்குக் காரணம் வாய்மை. தேவதைகளின் பாதம் பூமியிற் படியாதென்று சாஸ்திரஞ் சொல்லும். இங்கு கடவுளை என்பது அருகனை. இக்காப்பு பதுமனார் செய்ததென்பர். இடு - வினைத்தொகை. வில்லின் - இன் உருபு ஒப்புப் பொருளில் வந்தது. அறியா - செய்யா என்னும் வினையெச்சம். முன்னியவை - வினையாலணையும் பெயர், முன்னு - பகுதி, இ - இன் இடைநிலையின் ஈறு குறைந்தது, அ - சாரியை, வை - விகுதி. என்று - சொல்லெச்சம். சேர்தும் - தனித் தன்மைப்பன்மை வினைமுற்று; உயர்வினால் வந்தது பன்மை. முடிக - வேண்டிக் கோடலில் வந்த வியங்கோள்.
அறத்துப்பால் அறத்துப்பால் - தருமத்தை விளைக்கும் பாகம் என உருபும் பயனு முடன் தொக்க தொகையா விரியும். அறமாவது மநு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும். விலக்கியன ஒழிதலுமாம். 1. துறவற இயல் 1. செல்வ நிலையாமை
[அதாவது செல்வம் நிலையல்ல வென்பதைக் குறித்துச் சொல்லியது. செல்வநிலையாமை - செல்வத்தின் நிலையாமையைத் தெரிவிக்கிற அதிகாரம். அதிகாரம் - தலைமை; செல்வநிலையாமையைத் தலைமையா வைத்துச் சொல்லிய பாடல் என்பது திரண்ட பொருள். மற்றவைகளு மிப்படியே.]
1. அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம் ஒன்று உண்டாக வைக்கற்பாற் றன்று. (இ-ள்.) அறுசுவை உண்டு - (தித்திப்பு முதலிய) ஆறு உருசிகளையுமுடைய போசனத்தை, இல்லாள் அமர்ந்து ஊட்ட - பெண் சாதி அன்பு கொண்டு உண்பிக்க, மறு சிகை நீக்கி - மற்றொரு கவளத்தைத் தள்ளி, உண்டாரும் - உண்ட செல்வர்களும், வறிஞர் ஆய் - தரித்திரராகி, ஓர் இடத்து சென்று இரப்போர்களாகில், செல்வம் ஒன்று - செல்வமென்கிற ஒரு பொருள், உண்டு ஆக - நிலையாயிருக்கிறதாக, வைக்கல் பாற்று அன்று - வைக்கும்படியான தன்மையுடையது அல்ல, எ-று. பரிசாரகர் பலரிருக்கையிலும் இல்லாளே அன்பு கூர்ந்து பல இன்சொற்களோடு வேண்டி உண்பிக்கையில் ஒருவகையுண்டியில் ஒரு கவளமேயன்றி மற்றொன்றை நீக்கிப் புசித்த மிக்க செல்வமுடையவர்க்கும் வேறோரிடத்திற் போய் கூழையிரக்கும்படி நேரிடுமானால் செல்வமென்பது நிலையான பொருளென்று நினைக்கத் தக்கதல்ல என்பது கருத்து. அறுசுவை - இரண்டனுருபும் பயனு முடன் தொக்க தொகை; அறுசுவை - பண்புத்தொகை. உண்டி - உண் - பகுதி, இ - செயப்படுபொருள் விகுதி, ட் - எழுத்துப் பேறு. இல் = இல்லறம், அதற்கு உரியவள் இல்லாள். ஊட்ட - பிறவினை வினையெச்சம்; உண் - பகுதி, டு - பிறவினை விகுதி, முதல் நீட்சி - விகாரம்; ஆக ஊட்டு - பிறவினைப் பகுதி. சிகை = குடுமி, பிசைந்த அன்னத்தில் எடுக்குங்கவளம் அதுபோல் தோன்றுதலால் ஆகுபெயராய்க் கவளத்தை யுணர்த்திற்று. வறிஞர் - ஞகரம் பெயர்ப்பகுபத இடைநிலை. "இலக்கியங் கண்டதற்கு" [நன். பதவி. சூ.14]. உண்டு - குறிப்புமுற்று. வைக்கல் - தொழிற்பெயர்; வைக்கலாகிப் பால் = வைக்கற்பால், இரு பெயரொட்டுப் பண்புத் தொகை; பால் - தன்மை, அதனையுடையது வைக்கற்பாற்று; று - ஒற்றன்பால் விகுதி, குறிப்புமுற்று; இது அன்று என்பதோடு சேர்ந்து ஒரு தன்மைப்பட்டு எதிர்மறை வினைமுற்றாயிற்று.
2. துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க; அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும். (இ-ள்.) செல்வம் - அகடு உற - நடுவுநிலைமை பொருந்த, யார் மாட்டும் - யாரிடத்திலும், நில்லாது - நிற்காமல், சகடக்கால் போல - பண்டியின் சக்கரம்போல, வரும் - (கீழ்மேலாகவும் மேல் கீழாகவும்) மாறி வரும்; (ஆதலால்) துகள் தீர் பெருஞ் செல்வம் - குற்றமற்ற பெரிய செல்வமானது, தோன்றியக்கால் - உண்டானால், தொட்டு - (அது) தொடங்கி, பகடு நடந்த கூழ் - எருமைக்கடாக்கள் உழைத்ததனாலுண்டாகிய சோற்றை, பல்லாரோடு உண்க - (ஏழைகள்) பலரோடு (கூடி) உண்ணக்கடவர்கள், (செல்வம் தோன்றியவர்கள்), எ-று. செல்வம் சகடக்கால்போல் தாழ்ந்து முயர்ந்தும் நிலையின்றி வருவதாதலால் அச்செல்வ முண்டான காலந்தொட்டுப் பலருக்கு மிட்டுத் தாமு முண்பது நலம் என்பது கருத்து. தோன்றியக்கால் - எதிர்காலவினையெச்சம்; தொட்டு என்பதோடு அது என்பதை வருவித்துக் கூட்டுக. பகடு நடந்த கூழ் என்பது கடாவின் உழைப்பினாலுண்டான சோற்றில் ஒருவருக்கு மாத்திரஞ் சுதந்திரம் வேண்டாமென ஓரெளிமையைக் காட்டுதற்கு, நடந்த என்னும் பெயரெச்சம் காரியப் பெயரைக் கொண்டது. "அறுபொருட் பெயரும் எஞ்சநிற்பது பெயரெச்சம்" என்பதில் உம்மையை எச்சப் பொருளதாவைத்து, பிறபெயரும் என்று உரைத்திருப்பதைக் காண்க. நில்லாது - முற்றெச்சம்; எதிர்மறை வினையெச்சமுமாம். துகள் தீர் என்பதில் தீர் வினைத்தொகை யாதலின் பகரம் இரட்டியாது நின்றதென உணர்க.
3. யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ்ச்
(இ-ள்.) யானை எருத்தம் பொலிய - யானையின் பிடரானது விளங்கும்படி, குடை நிழல் கீழ் - குடையினது நிழலிலே, சேனை தலைவராய் சென்றோரும் - சேனைகளுக்கு அதிபதியாகிச் சென்ற அரசர்களும், ஏனை வினை உலப்ப - மற்றவினை [தீவினை] கெடுப்பதனால், வேறு ஆகி - (முன்னிருந்த நிலையினின்றும்) வேறுபட்டு, தாம் கொண்ட மனையாளை - தாங்கள் கலியாணஞ் செய்து கொண்ட மனைவியை, மாற்றார் கொள - பகைவர் கொண்டு போக, வீழ்வர் - கெடுவார்கள், எ-று.சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட மனையாளை மாற்றார் கொள. சேனைகள் சூழ்ந்து வர யானை மேல் செல்லும் பெருஞ் செல்வமுடைய அரசர்களும் அந்த நல்வினை போய்த் தீவினை வரும்போது தம் மனையாளுந் தமக்கு உதவாதபடி பிறர் கொண்டு போக வறுமையும் சங்கடமும் அடைவர் ஆதலால், செல்வஞ் சதமன்றென நோக்கி அது கிடைத்த போது தரும சிந்தையோடிருக்க வேண்டும் என்பது கருத்து. எருத்தத்தில் பொலிய என உரைக்கவுங் கூடும். பொலிய என்னும் வினையெச்சம் சென்றோர் என்பதற்கு உரியா நின்றது. கீழ் - ஏழனுருபு. உம்மை - உயர்வு சிறப்பு. செல்வம் நல்வினைப் பயனாதலின் ஏனை என்பது தீவினைக்காயிற்று. உலப்ப - இதுவேறாகி என்பதற்குங் காரணப் பொருட்டாய் வந்த செயவெனெச்சம். கொள - இது வீழ்வர் என்பதற்குக் காரணம்.
4. நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க; சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று. (இ-ள்.) வாழ் நாள் - ஆயுள், சென்றன சென்றன - நிச்சயமாய் விரைவில் போகாநின்றன; கூற்று - எமன், செறுத்து - கோபித்து, உடன் வந்தது வந்தது - கூடவே நிச்சயமாய் வரக் காத்திருக்கிறது; (ஆதலால்) நின்றன நின்றன - இருக்கின்றன இருக்கின்றன என்று நினைக்கப்பட்ட பொருள்கள், நில்லா என உணர்ந்து - அப்படி நிற்க மாட்டா [அழியும்] என்று அறிந்து, ஒன்றின ஒன்றின - உங்களுக்குச் செய்யக் கூடியவையாகப் பொருந்தின தருமங்களை, செயின் - செய்யப் புகுந்தால், வல்லே செய்க - துரிதமாய்ச் செய்யக் கடவீர்கள், எ-று. கூடிய நற்காரியங்களைச் செய்ய வேண்டின் சீக்கிரஞ் செய்ய வேண்டும், ஆகட்டும் பின் செய்வோ மென்றால் நாம் ஸ்திரமென்று நினைக்கிற பொருள்கள் அழிந்து போகின்றன. அன்றியும் நமக்கும் நாளேற ஆயுள் குறுக எமன் கொண்டு போகக் காத்திருக்கிறான், பின்பு நாம் ஒன்றுஞ் செய்ய முடியாது என்பது கருத்து. சென்றன சென்றன என்னும் அடுக்கு விரைவைக் காட்டுகின்றது. நிச்சயம் பற்றி நிகழ்காலத்தில் இறந்தகாலம் வந்தது. வந்தது வந்தது என்பதும் அப்படியே; ["விரைவினுமிகவினும்" பொது. சூ.33] நின்றன நின்றன என்பதில் முதலது முற்றெச்சம், இரண்டாவது வினையாலணையும் பெயர், இங்கும் முன்போல் காலவழுவமைதி; அங்ஙனம் நினைக்கப் பட்டன என்று பிரகரணத்தால் கொள்ளப்பட்டது. ஒன்றின ஒன்றின என்னும் அடுக்கு அப்போது அப்போது எனக் கால பேதத்தைக் குறித்து வந்தது. வல்லே - இடைச்சொல். கூற்று - சொல்லளவில் அஃறிணையாய் உயர்திணைப் பொருளை யுணர்த்துகின்றது.
5. என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால் பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம் கொடுத்தாறு செல்லும் சுரம். (இ-ள்.) என் ஆனும் ஒன்று - ஏதாகிலும் ஒரு பொருள், தம்மை உற பெற்றக்கால் - தமது கையிற் சேரப் பெற்றால், பின் ஆவது என்று - (இதனைக் கொடுப்பது) பிற்காலத்திலாகட்டுமென்று, பிடித்து இரா - பிடித்து வைத்திராமல், முன்னே கொடுத்தார் - முந்தியே கொடுத்தவர்கள், கோடு இல் தீ கூற்றம் - கோணுதலில்லாத தீய எமன், தொடுத்து செல்லும் - கயிற்றாற் கட்டிப் போகின்ற, சுரம் ஆறு - பாலைநில வழியினின்றும், உயப் போவர் - தப்பிப் போவார்கள், எ-று. பிறர்க்குக் கொடுக்கத்தக்கதாகக் கையிலோர் பொருள் கிடைத்த போதே அதனைக் கொடுப்பவர் எமன் கொண்டு போகுங் கொடிய வழியினின்று தப்பி நல்ல நல்ல நெறியிற் செல்வர், அதாவது சுவர்க்க நெறியிற் செல்வர் என்பது கருத்து. சுரம் - காய்ச்சலான என்னவுமாம். தொடுத்த ஆறு என்பது தொடுத்தாறு என்று ஈறு தொகுத்தலாய் கொண்டு கட்டிய படியே எனவு முரைக்கலாம். தான் கொண்ட கொள்கையைச் சிறிதும் பிசகாமல் நிறைவேற்றுதலால் "கோடு இல் தீங்குற்றம்" என்றது. பாலை நிலமாவது சிறிதும் நீர் நிழல்களில்லாத வெட்டவெளி. சுரம் என்பது 'ஜ்வரம்' என்கிற ஆரியத்தின் திரிபு. என் என்பது இடை குறைந்த எவன் என்னுங் குறிப்பு முற்றினாலணையும் பெயர். ஆனும் என்பது விகற்பப் பொருளில் வந்ததோ ரிடைச் சொல். ஆவது என்பது இங்கு வியங்கோளாக் கொள்ளத்தக்கது. எதிர்கால முற்றாக் கொள்ளினும் கொள்ளலாம். பொருள் சிறிது சுற்றாம்.
6. இழைத்தநாள் எல்லை இகவா; பிழைத்தொரீஇக் கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; - ஆற்றப் பெரும்பொருள் வைத்தீர், வழங்குமின் நாளைத் தழீஇம்தழீஇம் தண்ணம் படும். (இ-ள்.) இழைத்த நாள் - (ஆயுளாக) ஏற்படுத்திய நாட்கள், எல்லை இகவா - தமது எல்லையைக் கடக்கமாட்டா; கூற்றம் ஒரீஇ - எமனை விட்டு பிழைத்து - தப்பி, குதித்து உய்ந்தார் - குதித்து ஓடிப்போனவர்கள், ஈங்கு இல்லை - இவ்வுலகத்திலில்லை; ஆற்ற - நிரம்ப, பெரும் பொருள் வைத்தீர் - மிகுந்த திரவியத்தைச் (சேர்த்து) வைத்திருப்பவர்களே! வழங்குமின் - கொடுங்கள், நாளை - நாளைக்கே [சீக்கிரத்தில்], தண்ணம் - பிணப்பறையானது, தழீஇம் தழீஇம் - தழீந்தழீ மென்னு மோசையாக, படும் - அடிக்கப்படும், எ-று. ஒருவனுக்கு நிர்ணயித்த ஆயுசு ஒரு நிமிஷமும் மேலோடா தாகையால் எமனுக்குத் தப்பிப் பிழைத்தவரில்லை. நீரும் இறந்து போவதற்கு முன்பே பரோபகாரமாகப் பொருளைக் கொடுங்கள் என்பது கருத்து. தண்ணம் படுமென்றது சாவுக்குக் குறிப்பு. ஆற்ற - வினையுரியா வந்த வினையெச்சம். வைத்தீர் - முன்னிலை வினையாலணையும் பெயர். நாளை என்பது காலவிரைவைக் காட்டியது. வழங்குமின் - மின் - ஏவற்பன்மை விகுதி.
7. தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும் கூற்றம் அளந்துநும் நாளுண்ணும்; - ஆற்ற அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும் பிறந்தும் பிறவாதார் இல். (இ-ள்.) கூற்று - இயமன், தோற்றம் சால் ஞாயிறு - பிரகாச மிகுந்த சூரியனை, நாழிஆ - படியாகக் கொண்டு, வைகலும் - தினந்தோறும், நும் நாள் அளந்து உண்ணும் - உமது ஆயுளை அளவிட்டுத் தின்கிறது; (ஆதலின்) ஆற்ற அறம் செய்து - மிகுதியாகத் தருமத்தைச் செய்து, அருளுடையீர் ஆகுமின் - கிருபையுள்ளவர் ஆகுங்கள், (அப்படியாகாமற் போனால்) யாரும் - எப்படிப்பட்டவரும், பிறந்தும் - மனிதராய்ப் பிறந்தும், பிறவாதாரில் - பிறவாதார் போலவே (ஆவர்), எ-று. ஜனங்களே! ஆயுள் சீக்கிரத்திற் கழிந்து போகின்றது; அப்படி கழியா முன்னமே பரோபகார முதலிய தருமங்களைச் செய்து உயிர்க்கு உயிராகிய கிருபை உள்ளவரென்று பலருஞ் சொல்லும்படி ஆகுங்கள்; அப்படி ஆகாமற் போனால் தருமங்களைச் செய்யக் கூடிய மனிததேக மெடுத்தும் உபயோகமில்லை என்பது கருத்து. சூரியன் உதயமாவதனாலே நாளுண்டாகி அழிவதால் சூரியனை அளவுக் கருவியாகவும், அது அழிய ஆயுசு குறைந்து போவதனால் கூற்ற முண்ணுமென்றும் ரூபித்தார். 'அறஞ்செய் தருளுடையீராகுமின்' என்பதை விகுதி பிரித்தல் என்கிற நியாயத்தினால் 'அருளுடையீராகி அறஞ் செய்மின்' என்று மாற்றிப் பொருளுரைத்தல் நேர். பிறவாதாரில் - ஐந்தனுருபு, ஒப்புப் பொருளில் வந்தது. சால் ஞாயிறு - உரியடியாகப் பிறந்த வினையின் தொகை, உரித்தொடரென்பதே நேர். வைகலும் - உம்மை முற்றுப் பொருளில் வந்தது.
8. செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி மருங்கறக் கெட்டு விடும். (இ-ள்.) செல்வர் யாம் என்று - நாம் செல்வமுடையவராயிருக்கிறோமென்று நினைத்து, தாம் செல் உழி - தாம் போகுமிடங்களில், எண்ணாத - (பிறரை) மதியாத, புல் அறிவாளர் - அற்பபுத்தியுள்ளவர்களுடைய, பெருஞ் செல்வம் - பெரிய சம்பத்தும், எல்லில் - இரவில், கருங் கொண்மூ வாய் திறந்த மின்னுபோல் - கருமையாகிய மேகம் வாய் திறப்பதனாலுண்டாகிய மின்னலைப் போல, தோன்றி - காணப்பட்டு, மருங்கு அற இருந்தவிடம் தெரியாமல், கெட்டுவிடும் - அழிந்துபோம், எ-று. செல்வச் செருக்கினால் பிறரை மதியாத அற்பருடைய செல்வம் மின்னல் தோன்றி அழிவது போல் விரைவில் அழிந்து போம் என்பது கருத்து. ஜனங்களுடைய தோற்றத்திற்கு வாய் திறந்து விடுவது போல் காணப்படுதலால் 'கருங்கொண்மூ வாய் திறந்த' என்றார். செல்வர்யாம் என்றது ஓரிடம் பிறவிடந் தழுவிய வழுவமைதி [பொது. சூ. 29] செல்வுழி - செல் உழி என்பதில் "எகர வினாமுச் சுட்டின் முன்னர்" என்னுஞ் சூத்திரத்தில் 'நெறி' என்பதனால் வகரந் தோன்றியது; [உயிர். சூ. 13ன்] உரையைக் காண்க. பெருஞ் செல்வமும் என உயர்வு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. கொண்மூ - நீரைக் கொள்ளூந் தன்மையால் வந்த காரணப் பெயர் என்னலாம். மூ - விகுதி. இலக்கியங் கண்டதற்கு இலக்கண மியம்ப வேண்டுவது நியாயம். திறந்த - இப்பெயரெச்சம் காரியப் பெயர் கொண்டது.
9. உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான் துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே வழங்கான் பொருள்காத் திருப்பானேல், அஆ இழந்தான்என் றெண்ணப் படும். (இ-ள்.) உண்ணான் - (ஒருவன்) தான் உண்ணாதவனாயும், ஒளி நிறான் - தன்னிடத்துப் பிரகாசத்தை நிறுத்தாதவனாயும், ஓங்குபுகழ் செய்யான் - வளரும்படியான கீர்த்தியைச் சம்பாதியாதவனாயும், துன் அரு கேளிர் - சேருதற்கு அரிய உறவினருடைய, துயர்களையான் - துன்பங்களை நீக்காதவனாயும், வழங்கான் - (யாசகர்க்குக்) கொடாதவனாயும், கொன்னே - வீணாக, பொருள் காத்திருப்பானேல் -, அ ஆ - ஐயோ! இழந்தான் என்று எண்ணப்படும் - (அப்பொருள்) போக்கடித்துக் கொண்டானென்று (புத்திமான்களால்) எண்ணப்படுவான், எ-று. செல்வம் நிலையற்றதாகையால் அது கிடைத்தபோதே தானும் அனுபவித்து நல்ல விஷயத்திலும் உபயோகப்படுத்தாமற் போனால் அதை இழந்ததற்குச் சமானம் என்பது கருத்து. ஒளி நிறான் என்றது ஆடையாபரணங்களாலே தன்னிடத்து ஒரு பிரகாசத்தை உண்டாக்காதவன் என்றபடி, புகழாவது, தேவாலயம் பிரமாலயம் சத்திரம் சாலை முதலிய செய்தலாலாவது. ஓங்கு புகழ் என்றது மேலுலகங்களிலுஞ் செல்லும்படியான புகழ் என்பதற்கு; புகழினால் சொர்க்க முண்டு என்பது சாஸ்திரக் கொள்கை. எப்போதோ ஒரு கால் ஏதோ ஒரு துன்பமடைந்து தம்மவனென்று தன்னிடம் வந்த பந்துக்கள் என்பதற்கு 'துன்னருங்கேளிர்' என்றார். நிறான் - நிறு - பகுதி, ஆன் - விகுதி, இடைநிலையின்றி வந்ததனால் எதிர்மறையையுங் காட்டியது; ஆகாரம் புணர்ந்து கெட்டதெனவும், ஆ எதிர்மறையினிடை நிலையும் னகர விகுதியும் வந்தன எனவும் கொள்வது முண்டு. கொன் - இடைச்சொல். அ ஆ - இரக்கக் குறிப்பு. எண்ணப்படும் - "பல்லோர் படர்க்கை" என்கிற சூத்திரத்தினால் செய்யுமென் முற்று ஆண்பாலுக்கு வந்தது [வினை. சூ. 29]
10. உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும் கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட! உய்த்தீட்டும் தேனீக் கரி. (இ-ள்.) வான் தோய் மலை நாட - ஆகாயத்தை அளாவிய மலைகளுள்ள நாட்டின் அரசனே! உடாஅதும் - தான் உடுக்காமலும், உண்ணாதும் - உண்ணாமலும், தம் உடம்பு செற்றும் - தமது உடம்பை வருத்தியும், கெடாத நல்லறமும் செய்யார் - அழியாத நல்ல தருமங்களையும் செய்யாராகி, கொடாது - (ஆதுலர்க்கு) கொடாமல், வைத்து ஈட்டினார் - ஈட்டி வைத்தவர்கள், இழப்பர் - அச்செல்வத்தை இழந்து போவர்; உய்த்து - (பல மலரினின்றும்) கொண்டு வந்து, ஈட்டும் - சேர்த்து வைக்கிற, தேன் ஈ - தேனீயானது, கரி - (இதற்கு) சாட்சி, எ-று. [ஈட்டல் - சம்பாதித்தல்] இதற்கும் முற்பாட்டின் கருத்தே கருத்து. தேனீயானது பல பூக்களிலுஞ்சென்று கொண்டு வந்து தேனைச் சேர்த்து வைக்க அதை யாரோ கொண்டு போவது போல் தனக்கும் பிறர்க்கும் பயன்படுத்தாத பொருளைக் கள்ளர் முதலினோர் கொண்டு போவர் என்பது விசேஷம். 'தம் உடம்பு செற்றும் கெடாத நல்லறம்' என்றது, தமது உடம்பை அழியும்படி வருத்தினாலும் உடம்பு அழியுமேயன்றி அறம் அழியாமலிருக்கும், அப்படிப்பட்ட தருமத்தை எனச் சிறப்பிக்கும்படி. உடா அது முதலிய அளபெடைகள் இசை நிறைக்க வந்தவை. செற்றும் - உம்மை இழிவு சிறப்பு, அறமும் - உயர்வு சிறப்பு; மற்ற உம்மைகள் எண்ணும்மை. வைத்து ஈட்டினார் என்பதை ஈட்டி வைத்தார் என விகுதி பிரித்துக் கூட்டிக் கொள்க. உய்த்தீட்டும் என்பதையும் அப்படி பிரித்து உரைக்கலாம். ஒரு காரியத்தைக் கண்டவனேயன்றி அனுபவித்தவனும் சாக்ஷியாவானாகையால், 'தேனீக்கரி' என்றார். தேன் என்பதைப் பிரித்து ஈட்டினார் என்பதற்குச் செயப்படு பொருளாவைத்தும் உரைக்கலாம். 2. இளமை நிலையாமை
[அதாவது இளமைப் பருவம் சதமல்லவென்று சொல்லுவது.]
11. நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர் குழவி யிடத்தே துறந்தார்; - புரைதீரா மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி இன்னாங் கெழுந்தீருப் பார். (இ-ள்.) நல்லறிவாளர் - நல்ல விவேகமுள்ளவர், நரை வரும் என்று எண்ணி - மூப்பு (நிச்சயமாக) வரத்தக்கது என்று நினைத்து, குழவியிடத்தே துறந்தார் - இளம் பருவத்திலேயே இல்வாழ்க்கையை விட்டார்கள்; புரை தீரா - குற்றம் நீங்காத, மன்னா இளமை - நிலையில்லாத இளமைப் பிராயம், மகிழ்ந்தாரே - (இருக்கிறதென்று) சந்தோஷப்பட்டவர்களே, கோல் ஊன்றி - கோலை ஊன்றிக் கொண்டு, இன்னாங்கு எழுந்திருப்பார் - வருத்தமாக எழுந்திருப்பார்கள், எ-று. காரியாகாரியங்களைப் பகுத்தறிந்தவர்கள் இளமையுள்ள போது மகிழாமல் அக்காலத்துக்கு உரிய சுகங்களைக் கைவிட்டிருப்பார்; இளமையிலே மகிழ்ந்தவரோ அது நீங்கி மூப்பு வந்த போது சுகத்தையனுபவிக்கச் சக்தியில்லாமையால் வருத்தப்படுவார்கள் என்பது கருத்து. நரை என்பது மூப்புக்குக் காரிய ஆகுபெயர். குழவியிடத்தே - இடம் - ஏழனுருபு தாமே யெழுந்திருக்க மாட்டாமல் கோலையூன்றியும் எழுந்திருக்க வருந்துவார் என்பது சுகானுபவசக்தி இல்லாமைக்குக் குறிப்பு மன்னா - மன் என்னும் இடைச்சொல்லடியாகப் பிறந்த எதிர்மறைப் பெயரெச்சம், ஈறுதொக்கது. இன்னா ஆங்கு என்பது ஈறு தொகுத்தலாய் இன்னாங்கு என்றாயிற்று.
12. நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார் அற்புத் தளையும் அவிழ்ந்தன, - உட்காணாய்; வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே ஆழ்கலத் தன்ன கலி. (இ-ள்.) நட்பு நார் அற்றன - சினேகங்களாகிய பந்தனைகள் அற்றுப் போயின நல்லாரு அஃகினார் - பெண்டுகளும் அன்பு குறைந்தார்கள். அற்பு தளையும் அவிழ்ந்தன - அன்பாகிய பந்தமும் அவிழ்ந்து போயின; உள் காணாய் - மனதிலே யோசித்துப் பார்; வாழ்தலின் - உயிரோடிருப்பதிலே, ஊதியம் என் உண்டாம் - பயன் என்ன உண்டு, ஆழ் கலத்து அன்ன கலி வந்தது - கடலில் முழுகுகின்ற கப்பலிடத்து உண்டாகும் ஓசை போன்ற (உறவினர் அழுங் குரல்) வந்தது, எ-று. உறவினர்களும் மனைவிகளும் இனி இவனால் உபயோகமில்லையென்று அன்பில்லாமல் இருக்கவும், தனக்கும் யாரிடத்தும் அன்பு நீங்கியிருக்கவும், மூப்பு வந்து நலிய உயிரோடிருப்பதிற் பயனென்ன? அதுதான் சதமோ, சாவுங்கிட்டிற்றே; இவற்றால் இளமை நிலைமை யல்லவென்று நீ யோசித்து இளமை மகிழாதே என்பது கருத்து. நட்பு - நட்பினனுக்கு ஆகுபெயர். என் - எவனென்னும் குறிப்பு முற்று இடைகுறைந்தது. ஆம் - அசை, உண்டாம் என ஒரு சொல்லாகவுங் கொள்ளலாம். வந்தது - நிச்சயம் பற்றி இறந்த காலமா வந்த வழுவமைதி கலத்தன்ன - கலத்தது அன்ன, ஈறு தொகுத்தல், ஏ - அசை.
13. சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப் பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே ஏம நெறிபடரும் ஆறு. (இ-ள்.) சொல் தளர்ந்து - பேச்சு ஓசை குன்றி, கோல் ஊன்றி - தடியைப் பிடித்துக் கொண்டு, சோர்ந்த நடையினராய் - தள்ளாடிப் போன நடையுடையவராய், பல் கழன்று - பற்கள் நீங்கிப் போய், பண்டம் பழிகாறும் - (தேகமாகிய) பண்டம் பழிப்பை யடையுமளவும், இல் செறிந்து - இல்வாழ்க்கையில் நெருங்கியிருந்து, காம நெறி படரும் - ஆசை வழியிலே செல்லுகின்ற, கண்ணினார்க்கு - அறிவுடையவருக்கு, ஏமம் நெறி படரும் ஆறு - சுகமாகிய வழியில் செல்லும் வகை, இல்லை -, எ-று. ஏ - அசை. மூப்பினால் சுகானுபவத்திற்கு உரிய அங்கங்களெல்லாம் பழுதுபடச் சாமளவும் உலக இன்பத்தையே நாடினவர்கள் மோட்ச இன்பத்துக்குரிய வழியில் செல்லார்கள் என்பது கருத்து. சொல் தளர்ந்து, பல் கழன்று, - இவை சினை வினையாதலால் முதல் வினையோடு முடிந்தன [வினை. சூ. 26].
14. தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழ்இலா மம்மர்கொள் மாந்தர்க்கு அணங்காகும் தன்கைக் கோல் அம்மனைக்கோல் ஆகிய ஞான்று. (இ-ள்.) தாழா - குனிந்து, தளரா - தளர்ச்சியடைந்து, தலைநடுக்கா - தலை நடுக்கலெடுத்து, தண்டு ஊன்றா - தடியை ஊன்றிக் கொண்டு, வீழா இறக்கும் - வீழ்ந்து செல்லுகின்ற, இவள் மாட்டும் - இவளிடத்தும், தாழ் இல்லா - உறுதி இல்லாத, மம்மர் கொள் - மோகத்தைக் கொண்ட, மாந்தர்க்கு - மனிதருக்கு, தன் கை கோல் - அவள் கையிலிருக்கும் ஊன்று கோலானது, அம்மனை கோல் ஆகிய ஞான்று - அவள் தாய்க்கு ஊன்றுகோலா யிருந்த நாளில், அணங்கு ஆகும் - வருத்த முண்டாயிருக்கும் [மிக்க ஆசை உண்டாயிருக்கு மென்றபடி] எ-று. மூப்பினால் முதுகு வளைந்து தலை நடுக்கத்தோடு தள்ளாடிச் செல்லும் இந்தக் கிழவியினிடத்திலும் அவள் பருவமடைந்திருந்த காலத்தில் காமுகர்க்கு ஆசையாய் வருத்தமுண்டாயிருக்கும், ஆகவே இப்போது வெறுக்கத்தக்க நிலையுள்ள இவள் முன் ஆசைப்படத்தக்கவளா யிருந்தாள் என்பது கருத்து. இதனால் இளமை நிலையல்ல என்றதாயிற்று. தாழா முதலியவை செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள், தலை நடுக்கா என்பது சினைவினையாதலின் முதல்வினையோடு முடிந்தது. இவள்மாட்டும் - உம்மை இழிவு சிறப்பு. கோல்மேல் வைத்து அம்மானை ஆடுகிற வழக்கமும் உண்டு ஆதலால், இவள் இப்பொழுது ஊன்றிக் கொண்டு போகும் கோல் அம்மானை ஆடும் கோலாகிய காலத்து என்றால் இளமைப் பருவத்து எனவும் கருத்துக் கொள்ளலாம்.
15. எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத் தனக்குத்தாய் நாடியே சென்றாள்; - தனக்குத்தாய் ஆகியவளும் அதுவானாள் தாய்த்தாய்க்கொண்டு ஏகும் அளித்திவ் வுலகு. (இ-ள்.) எனக்கு தாய் ஆகியாள் - எனக்குத் தாயாயிருந்தவள், என்னை ஈங்கு இட்டு - என்னை இவ்வுலகத்தில் விட்டுவிட்டு, தனக்கு தாய் நாடி - தனக்கொரு தாயைத் தேடி, சென்றாள் - போனாள்; தனக்கு தாய் ஆகியவளும் - அவளுக்குத் தாயாயிருந்தவளும், அது ஆனால் - அப்படியானால், இ உலகு - இந்த உலகம், தாய் தாய் கொண்டு - ஒரு தாய் மற்றொரு தாயைத் தேடிக் கொண்டு, ஏகும் அளித்து - செல்லும் படியான ஏழமையை உடையது, எ-று. தாய் நாடிச் சென்றாள் என்றால் இறந்து இன்னொருத்தி வயிற்றிற் பிறக்கிறாள் என்பதாம். மக்களைப் பெற்று இளமையிலேயே இறக்கிறாள் என்பதனால் இளமை சதமல்ல என்பது கருத்து. ஆகியாள் - ஆகு - பகுதி, இன் - இடைநிலை, ஈறு கெட்டது, ஆள் - விகுதி, ய் - உடம்படுமெய், சந்தி. ஆகியவள் - இதில் ஈறுகெட்ட இடைநிலைமேல் அகரச் சாரியையும் அள் விகுதியும் வந்தன. தாய்த் தாய்க் கொண்டு என்பதில் முதலது எழுவாயாதலினால் தகரம் விரித்தல் விகாரம், இரண்டாவதில் "இயல்பின் விகாரமும்" என்கிற விதியால் ககரம் மிக்கது, 'தாய் தாய்க் கொண்டு' என்கிற பாடம் நன்று. 'தாயைத் தாவிக் கொண்டு' எனவும் உரைக்கலாம். அதில் தாய் - வினையெச்சமாம், யகரம் - வினையெச்சவிகுதி, ஏ - அசை.
16. வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி அறிவுடை யாளர்கண் இல். (இ-ள்.) வெறி அயர் - வெறியாட்டம் ஆடுகிற, வெம் களத்து - உக்கிரமான இடத்தில், வேல் மகன் பாணி - பூசாரியினது கையில், முறி ஆர் நறு கண்ணி - தளிர்கள் நிறைந்த வாசனையுள்ள பூமாலை, முன்னர் தயங்க - எதிரில் விளங்க, மறி - ஆடு, குளகு உண்ட அன்ன - உணவை உண்டதற்குச் சமானமான, மன்னா மகிழ்ச்சி - நிலையில்லாத சந்தோஷம், அறிவுடையாளர்கண் இல் - விவேகமுள்ளவர்களிடத்து இல்லை, எ-று. உடனே தன்னை வெட்டுகிறதற்குக் கத்தி பிடித்திருக்கிற பூசாரி கையில் தொங்குகிற மாலையிலுள்ள தளிரைத் தின்று அவ்வாடு சந்தோஷப்படுகிறதற்குச் சமானமாயிருக்கின்றது. இன்றைக் கிருந்து நாளை அழியும்படியான இளமையைக் கண்டு மகிழ்தல் என்பது கருத்து. பல ஜெந்துக்களைப் பலியிடுமிடமாதலால் வெங்களமென்றது. வேல் என்பது ஆயுதப் பொதுப் பெயராகையால் இங்கே கத்திக்குக் கொள்க. ஆர் - வினைத்தொகை. நறுங்கண்ணி - பண்புத்தொகை. தயங்க - நிகழ்கால வினையெச்சம். உண்ட அன்ன என்பது ஈறு தொகுத்தலால் உண்டன்ன என்று ஆயிற்று. உண்டு என்பதை உண்டால் என்பதின் திருபாகக் கொண்டும் உரைக்கலாம் [வினை சூ. 25] இல் - விகுதி கெட்ட குறிப்பு முற்று முடையாளர் - உடைமையை ஆள்பவர் என்பது பொருள், ஒரு சொற்றன்மைப்பட்டது.
17. பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம் கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும் வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும் கோல்கண்ண ளாகும் குனிந்து. (இ-ள்.) இளமை - இளமைப் பருவமானது, பனி படு சோலை - குளிர்ச்சி பொருந்திய சோலையினிடத்து, பயன் மரம் எல்லாம் - பயனைத்தரும் மரங்களெல்லாம், கனி உதிர்ந்து வீழ்ந்தால் அற்று - பழங்கள் உதிர்ந்து போய் வீழ்ந்தாற் போலும்; இவளை - இப்பெண்ணை, வேல் கண்ணள் என்று - வேலைப் போன்ற கண்களையுடையவளென்று, நனி பெரிதும் - மிக விசேஷமாக, வெஃகன்மின் - ஆசைப்படாதிருங்கள்; மற்று - இன்னும் யாதெனில், இவளும் - இத்தன்மையான இப்பெண்ணும், குனிந்து - வளைந்து, கோல் கண்ணள் ஆகும் - கோலாகிய கண்ணை உடையவள் ஆவாள், எ-று. ஒரு சோலையிலே யாவரும் விரும்பும்படி கனிகளோடும் கூடியிருந்த மரம் அக்கனிக ளுதிர்ந்துவிட்டால் விரும்பத்தகாதாவது போல், இளமை அழிந்த பின் அவ்வுடம்பு விரும்பத் தகாததாம்; ஆதலினால் பெண்கள் மேல் ஆசை வைக்க வேண்டாம் என்பதாம். மூப்பில் பார்வை குறைந்து போவதினால் கோலைத்தட்டி வழி கண்டு கொண்டு செல்வாள் என மூப்பிற்குக் குறியாகக் கோல்கண்ணள் என்றார். படு - வினைத்தொகை, படுதல் = பொருந்துதல். பயன்மரம் - இரண்டனுருபும் பயனும் தொக்கதொடர். மரம் - பால்பகா அஃறிணைப் பெயர், இங்கு பன்மை. கனி உதிர்ந்து - சினைவினை முதலைக் கொண்டது. வீழ்ந்து என்பது வீழ்ந்தால் என்பதின் திரிபு. அற்று - அன் என்னும் உவமையிடைச் சொல்லடியாகப் பிறந்த குறிப்புமுற்று; அன் என்பதில் னகரம் சாரியை. நனி பெரிதும் - ஒரு பொருட்பன்மொழி. வெஃகன்மின் - எதிர்மறை ஏவற்பன்மை முற்று. மற்று - வினைமாற்றில் வந்த அசை. இவளும் - உம்மை - உயர்வு சிறப்பு.
18. பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை இருசிகையும் உண்டீரோ என்று - வரிசையால் உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள் எண்ணார் அறிவுடை யார். (இ-ள்.) பருவம் எனைத்து உள - வயது எவ்வளவு உண்டு? பல்லின் பால் ஏனை - பல்லின் தன்மை எவ்வளவு? இரு சிகையும் உண்டீரோ என்று - இரண்டு முனைகளிலும் மென்று தின்றீரோ என்று, வரிசையால் - முறையால், உள் நாட்டம் கொள்ளப்படுதலால் - உள்ளத்தில் ஆராய்தலைச் செய்யப்படுவதனால், யாக்கை கோள் - தேகத்தின் வலிமையை, [இளமையில் தேகக்கட்டை என்றபடி] அறிவுடையார் எண்ணார் - விவேகிகள் (சதமென்று) சிந்திக்கமாட்டார், எ-று. இப்போது வயதென்ன? பல் தளர்ந்திருக்கிறதோ? பல், தளராமல் இருக்கிறதோ? வாயின் இருபுறங்களிலும் மென்று தின்னும்படி இருக்கிறதா? என்று, இப்படி காலந்தோறும் மாறுதலை விசாரிக்கக் கூடியதாய் இருப்பதினால், இளமையில் உடம்பிலுள்ள வலிமையைச் சதமென்று நினைப்பது புத்தியீனம் என்பது கருத்து. எனைத்து - என் என்னும் வினாவிடைச் சொல்லின் மேல் ஐகாரச் சாரியையும், து - விகுதியும் வந்த குறிப்புவினையாலணையும் பெயர். உளது என்பது ஈறுதொகுத்தலாய் உள என்று ஆயிற்று. ஏனை - இதுவும் எனைத்து என்பதின் விகாரமெனலாம், அல்லது ஏ என்னும் வினாவிடைச் சொல்லடியாக வந்த குறிப்புமுற்றாம்; னகர ஐகாரங்கள் சாரியை, து - விகுதி குன்றியது.
19. மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின் முற்றியிருந்த கனியொழியத் தீவளியால் நற்காய் உதிர்தலும் உண்டு. (இ-ள்.) நல் வினை - தரும காரியத்தை, மற்று அறிவாம் - பின்னே அறிந்து செய்வோம். (இப்போது) யாம் இளையம் என்னாது - யாம் இளையவரா யிருக்கின்றோம் என்று நினையாமல், கைத்து உண்டாம் போழ்தே - பொருள் இருக்கும் பொழுதே, கரவாது அறம் செய்மின் - மறைக்காமல் தருமத்தைச் செய்யுங்கள்; தீ வளியால் - கடுங்காற்றினால், முற்றி இருந்த - முதிர்ந்த, கனி ஒழிய - பழங்கள் நீங்கி நிற்க [விழாமலிருக்க], நல் காய் - நல்ல காய்கள், உதிர்தலும் உண்டு, எ-று. பெருங்காற்றடிக்கையில் பழங்கள் உதிராமலிருக்க, காய் உதிர்வது போல் வயது சென்றவர் பிழைத்திருக்க வாலிபர் இறத்தலும் உண்டாதலால், நாம் இப்பொழுது போகங்களை அனுபவித்துக் கொண்டு வயது முதிர்ந்த பின் தரும காரியங்களைச் செய்து கொள்வோம் என்று நினையாமல் பொருள் கிடைத்த போதே தருமம் செய்ய வேண்டும் என்பது கருத்து. மற்று - வினைமாற்றில் வந்தது, இளையம் - குறிப்பு முற்று, கைத்து - கையிலிருக்கத்தக்கது என்னுங் காரணத்தால் பொருளுக்குப் பெயராயிற்று. உதிர்தலும் - எதிர்மறை உம்மை.
20. ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால் தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப் பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன் கள்ளம் கடைப்பிடித்தல் நன்று. (இ-ள்.) ஆள் பார்த்து உழலும் - (ஆயுள் முடிந்த) ஆளைத் தேடிக் கொண்டு திரிகிற, அருள் இல் கூற்று - கிருபை யில்லாத எமன், உண்மையால் - இருப்பதனால், தோள் கோப்பு - (பிரயாணத்துக்கு வேண்டுவதாய்) தோளில் சேர்க்கத்தக்க மூட்டையை [தருமத்தை], காலத்தால் கொண்டு - நேர்ந்த காலத்தில் கைக்கொண்டு, உய்மின் - பிழையுங்கள்; பீள் பிதுக்கி - (வயிற்றில் இருக்கும்) கருவை வெளிப்படச் செய்து, தாய் அலற - தாயானவள் கூவி அழ, பிள்ளையை கோடலால் - பிள்ளையைக் கொண்டு போவதினால், அதன் கள்ளம் - அக்கூற்றினுடைய வஞ்சனையை, கடைப்பிடித்தல் நன்று - அறிந்து சேர்தல் நல்லதாம், எ-று. எமன் கிருபையில்லாமல் சிறியவனோ பெரியவனோ ஆயுசு முடிந்தவனிடம் செல்லுகின்றான்; அன்றியும் தாய் வருந்திச் சுமந்த கருவை அகாலத்தில் வெளிப்படுத்தித் தாய் அழும்படி அந்தக் குழந்தையைக் கொண்டு போகின்றான்; ஆதலால், எமன் எந்தக் காலத்தில் வந்து பிடிப்பானோ என்று நினைத்து இளமையை நிலையுள்ளதென்று நம்பாமல் நேர்ந்த போதே அறஞ் செய்ய வேண்டும் என்பது கருத்து. "இயல்பின்விகாரமும் விகாரத்தியல்பும்" என்கிற உருபு புணரியல் (16வது) சூத்திரத்தினால் ஆள் என்னும் உயர்திணைப் பெயரின் ஈறு திரிந்தது. அருளில் கூற்று - மெய்யீற்றுப் புணரியல் (30வது) சூத்திர விதியால் இல் என்பது ஈறு இயல்பாய் முடிந்தது. தோளில் கோக்கத்தக்கது தோட்கோப்பு = மூட்டை; அது இங்கே தருமத்திற்கு உவமை ஆகுபெயர். காலத்தால் - ஆல் உருபு இடப்பொருளில் வந்தது; "யாதனுருபிற் கூறிற்றாயினும்" [பெயரியல். சூ. 60] பிதுக்கல் - பிறைனை; பிதுக்கல் - தன்வினை; மெல்லெழுத்து வல்லெழுத்தானது பிறவினைக்குறி. மற்று - அசை. 3. யாக்கை நிலையாமை
[அஃதாவது, உடம்பு நிலையற்றது என்பதைக் குறித்துச் சொல்லுவது]
21. மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத் துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால் எஞ்சினார் இவ்வுலகத் தில். (இ-ள்.) மலைமிசை தோன்றும் - மலையின் மேல் காணப்படுகிற, மதியம் போல் - சந்திரனைப் போல, யானை தலைமிசை கொண்ட குடையர் - யானையின் தலைமேல் வைத்த குடையையுடைய அரசரும், நிலமிசை - பூமியில், துஞ்சினார் என்று - இறந்தார்களென்று, எடுத்து தூற்றப் பட்டார் அல்லால் - பலரறியக் காட்டி இகழப்பட்டவர்களே யல்லாமல், எஞ்சினார் - (அவ்விகழ்ச்சிக்கு உட்படாமல்) மிகுந்தவர்கள், இ உலகத்து இல் - இவ்வுலகத்தில் இல்லை, எ-று. மகா ராஜாதிராஜாக்களும் இறந்தார்களென்று இகழப்படுதலால் யாக்கை நிலையற்றது என்பது கருத்து. குடையார் - இங்கே உயர்வு சிறப்பும்மை, விகாரத்தால் தொக்கது. மதியம் - அம் - சாரியை. துஞ்சினார் - இது இடக்கரடக்கல்.
22. வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅது எழுதலால் - வாழ்நாள் உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும் நிலவார் நிலமிசை மேல். (இ-ள்.) வாழ்நாட்கு - உயிரோடிருக்குங்காலத்துக்கு, அலகு ஆய் - கணக்காய், வயங்கு ஒளி மண்டிலம் - விளங்குகிற சூரியன், வீழ்நாள் படாது - பிரயோசனமில்லாத காலம் உண்டாகாமல், எழுதலால் - உதயமாதலால், வாழ்நாள் உலவா முன் - ஆயுசு கெடாமுன், ஒப்புரவு ஆற்றுமின் - கடமையான தர்மங்களைச் செய்யுங்கள்; யாரும் எப்படிப்பட்டவரும், நிலமிசைமேல் - பூமியின் மேல், நிலவார் - நிலைபெறார், எ-று. சூரியன் உதயமாவது ஒருநாள் கழிந்தது இரண்டு நாள் கழிந்தன என்று ஆயுசுக்கு அளவிடுவதா யிருத்தலால் ஆயுசு கழிந்து போவதற்கு முன்னே தர்மத்தைச் செய்ய வேண்டும் என்பது கருத்து. மண்டலம் - [வட்டம்]. இவ்வடசொல் தமிழின் மண்டிலம் என விகாரப்பட்டு வழங்குகின்றது. படாஅது - இவ்வளபெடை மறை விகுதி. நிலவார் என்பதில் நில - பகுதி. ஒப்புரவு = பெரியோர் ஒப்பும்படியான பலம்; இது உபகாரத்திற்கு வழங்குகின்றது. மிசை மேல் - "ஒரு பொருட் பன்மொழி சிறப்பினின் வழா" [பொது. சூ. 47]
23. மன்றம் கறங்க மணப்பறை யாயின அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் - பின்றை ஒலித்தலும் உண்டாமென்று உய்ந்துபோம் ஆறே வலிக்குமாம் மாண்டார் மனம். (இ-ள்.) மன்றம் கறங்க - சபையெல்லாம் முழங்க, மணம்பறை ஆயின - கலியாண வாத்தியமாய் நின்றவை, பின்றை அன்று - பின்பு அன்றைக்கே, ஆங்கே - அவ்விடத்திலேயே, அவற்கு - அந்த மனிதனுக்கு, பிணம் பறை ஆய் - பிணவாத்தியமாய், ஒலித்தலும் உண்டாம் என்று - ஓசைப்படுவதும் உண்டு என்று நினைத்து, மாண்டார் மனம் - மாட்சிமைப்பட்டவர்களுடைய மனமானது, உய்ந்து போம் ஆறே (பிறவித் துயருக்குத்) தப்பிப் போம்படியான வழியை, வலிக்கும் உறுதியாய்ப் பற்றியிருக்கும். எ-று. ஒருவருக்குக் கல்லியாணத்துக்கு வைத்த வாத்தியமே உடனே அவர் சாவுக்கு அடிக்கும் வாத்தியம் ஆகும்படியான நிலையுள்ளது இவ்வுடம்பு. ஆனதால் இப்படிப்பட்ட உடம்பைப் பராமரியாமல் தருமஞ் செய்ய முயலுவார் பெரியோர் என்பது கருத்து. ஒலித்தலும் - உம்மை எதிர்மறையில் வந்தது, என்று - இவ்விடைச் சொல்லோடு நினைத்து என்னும் ஒரு சொல் கூட்டிக் கொள்க. வலிக்குமாம் - ஆம் - அசை. மாண்டார் - மாண் - பண்படி, பகுதி, ட் - இடைநிலை, ஆர் - விகுதி. இறந்தார் என்னும் பொருள்படும்போது மாள் - பகுதி.
24. சென்றே எறிய ஒருகால்; சிறுவரை நின்றே எறிப பறையினை - நன்றேகாண் முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டுஎழுவர் செத்தாரைச் சாவார் சுமந்து. (இ-ள்.) சென்று - (செத்தவிடத்திற்குப்) போய், ஒரு கால் எறிப் (பறையினை) - பிணவாத்தியத்தை ஒரு தரம் கொட்டுவார்கள்; சிறுவரை நின்று - (பின்) சிறிது காலம் சும்மாவிருந்து, பறையினை எறிப - சாப்பறை யடிப்பார்கள்; முக்காலைக் கொட்டினுள் - மூன்றாங் காலம் வாத்தியத்தைக் கொட்டுவதற்குள்ளே, சாவார் - சாகப்போகிறவர்கள், செத்தாரை - செத்துப் போனவர்களை, மூடி சுமந்து - வஸ்திரத்தினால் மறைத்துத் தூக்கிக் கொண்டு, தீ கொண்டு எழுவர் - நெருப்பை யெடுத்துக் கொண்டு போவார்கள்; நன்றே காண் - நன்றாய் யோசித்துப் பார், எ-று. மூன்றாங் கொட்டுக்குள்ளே செத்தவரைச் சுடுகாட்டுக்குக் கொண்டு போகிறார்களாதலால் யாக்கை நிலையற்றது என்பதாம். "சாவார்" என்பது, இன்றைக்கொருவரைச் சுடுகாட்டில் விட்டு வந்தவர் நாளைக்குச் செத்துப் போவார் என்பது தோன்றுதற்கு. சென்றே நின்றே - ஏகாரங்கள் - அசை. எறிப - "அர் ஆர் பவ்வூ ரகரமாரீற்ற" என்றதனால் 'ப' விகுதி பலர் பாலுக்கு வந்தது, [வினை. சூ. 8] "பாந்தம் செலவோடு வரவும்" என்றதனால், [பத. சூ. 18.] இங்கே எதிர்காலங் காட்டியது.
25. கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப் பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங்கொண்டீண்டு உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே டொண்டொண்டொ டென்னும் பறை. (இ-ள்.) கணம் கொண்டு - கூட்டங்கொண்டு, சுற்றத்தார் - உறவினர், கல் என்று அலற - கலீரென்று கூவி அழ, பிணம் கொண்டு - பிணத்தைத் தூக்கிக் கொண்டு, காட்டு உய்ப்பார் - சுடுகாட்டில் இடுபவரை, கண்டும் - பார்த்து, மணம் கொண்டு - கல்லியாணஞ் செய்து கொண்டு, ஈண்டு உண்டு உண்டு உண்டு என்னும் - இவ்வுலகத்தில் நிச்சயமாய்ச் சுகமுண்டு சுகமுண்டு சுகமுண்டு என்கிற, உணர்வினான் - அறிவுல்லவனைக் குறித்து, தொண் தொண் தொண் என்னும் பறை - தொண் தொண் தொண் என்கிற வகையாய் ஒலிக்கிற பிணப்பறையானது, சாற்றும் - (இல்வாழ்க்கை இவ்வகையது என்று) சொல்லும், எ-று. ஏகாரம் - அசை, பிரசித்தத்தைக் காட்டியது என்றுஞ் சொல்லலாம். இறந்து சுடுகாடு சேர்பவரைப் பார்த்தும் கல்லியாணஞ் செய்து கொண்டு நான் சுகமே வாழ்வேன் என்று நினைக்கிற மூடனுக்குச் சரீரம் நிலையுள்ளதென்று நினையாதே என்ப பிணப்பறை தன் ஒலியால் தெரிவிக்கின்றது என்றால் நாளைக்கு நமக்கும் இதுதான் கதியென்று அறிவு மூட்டுகின்றது என்பது கருத்து. 'கல்' என்பது அழும் ஓசையின் குறிப்பு. உய்ப்பார்க்கண்டு - 'இயல்பின்விகாரமும்' என்கிற [உருபு. சூ. 16] விதியால் வலி மிகுந்தது. உண்டு உண்டு உண்டு என்னும் அடுக்கு நிச்சயமென்கிற பொருளில் வந்தது. [பொது. சூ. 44] தொண் தொண் தொண் என்பது ஒலிக்குறிப்பு. பறைசாற்றும் என்பது [பொது. 49ம்] சூத்திரத்தின் விதியால் கருவியைக் கர்த்தா போல் சொன்னது.
26. நார்த்தொடுத்து ஈர்க்கிலென் நன்றாய்ந்து அடக்கிலென் பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்; தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டக் கால். (இ-ள்.) தோல் பையுள் நின்று - தோலாற் செய்த பையாகிய உடம்பிலிருந்து, தொழில் அற செய்து - (தான் செய்ய விதித்த) தொழில்களைப் பூரணமாகச் செய்து, ஊட்டும் கூத்தன் - (அப்பயனைத் தன்னை) அனுபவிக்கச் செய்கிற கூத்தாடியாகிய ஆத்துமா, புறப்பட்டக்கால் - (அதைவிட்டு) அப்புறஞ் சென்றால், (அவ்வுடலை) நார் தொடுத்து ஈர்க்கில் என் - கயிற்றாற் கட்டி யிழுத்தாலென்ன?, நன்று ஆய்ந்து அடக்கில் என் - நன்றாகச் சுத்தஞ் செய்து அடக்கஞ் செய்தால் என்ன? பார்த்த உழி பெய்யில் என் - கண்டவிடத்தில் போட்டாலென்ன?, பல்லோர் பழிக்கில் என் - பலரும் பழித்தாலென்ன? [யாதும் இழிவுமில்லை சிறப்புமில்லை என்றபடி.], எ-று. இறந்த பின் உடலை மேன்மைபப்டுத்தினாலும் உயர்வில்லை; தாழ்மைப்படுத்தினாலும் குறையில்லை; ஆதலின் இறவாதிருக்கும் பொழுதே நற்காரியம் செய்ய வேண்டும் என்பது கருத்து. இப்பாட்டு யாக்கை நிலையாமையைக் குறிப்பிப்பதனால் இவ்வதிகாரத்தில் சேர்க்கப்பட்டது என்றறிக. உயிரோடிருக்கும் போது ஒரு காலத்துக்கொருகால் வெவ்வேறான செய்கைகளைச் செய்வதனால் ஆத்துமாவைக் 'கூத்தன்' என்றது. என் என்பது எவன் என்னும் குறிப்பு வினைமுற்று, இடைகுறைந்தது. பார்த்த உழி என்பது ஈறு தொக்கதாய்ப் பார்த்துழி என்று ஆயிற்று; உழி - இடம். பல்லோர் - ஈற்று அயல் ஆகாரம் ஓகாரமாயிற்று [பொது. சூ. 2].
27. படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக் கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம் தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல். (இ-ள்.) படு மழை மொக்குளில் - வீழ்கின்ற மழை நீரினது குமிழிபோல், பல் காலும் தோன்றி - பல காலங்களிலும் உண்டாகி, கெடும் இது - நாசமாகும் படியானது, ஓர் யாக்கை என்று எண்ணி - ஒருவகைப் பொருளாகிய தேகம் என்று நினைத்து, தடுமாற்றம் தீர்ப்போம்யாம் - (இந்தச் சம்சாரத்தில்) தடுமாறுவதை நாம் போக்கக் கூடவோம், என்று உணரும் - என்று அறிந்து நிற்கிற, திண் அறிவாளரை - உறுதியான ஞானமுள்ள பெரியோர்களை, நீள் நிலத்தின்மேல் - இந்தப் பெரிய பூமியில், நேர்ப்பார் யார் - ஒத்திருப்பவர்கள் யார்? [ஒருவருமில்லை என்றபடி], எ-று. மழை நீர்க்குமிழிகள் போல நிலையற்ற உடம்பெடுத்துத் தடுமாறுவதை ஒழிக்க முயல்வார்கள் பெரியோர், நாமும் அப்படி முயல்வது நலம் என்பது கருத்து. படுதல் = வீழ்தல், படுமழை - வினைத்தொகை. மொக்குளின் - ஐந்தனுருபு, ஒப்புப் பொருளில் வந்தது.
28. யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற யாக்கையா லாய பயன்கொள்க; - யாக்கை மலைநாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே நிலையாது நீத்து விடும். இ-ள்.) யாக்கையை - உடம்பை, யாப்பு உடைத்து ஆ- உறுதியை யுடையதாக, பெற்றவர் - அடைந்தவர், தாம் பெற்ற யாக்கையால் ஆய பய - தாம் அடைந்துள்ள தேகத்தினால் ஆகத்தக்க பிரயோஜனங்களை, கொள்க - கொள்ளக்கடவர், (ஏனெனில்) யாக்கை - தேகமானது, மலை ஆடு மஞ்சு போல் தோன்றி - மலையினிடத்திலே ஆடுகின்ற மேகம் போலக் காணப்பட்டு, நிலையாது - நிலைபெறாமல், நீத்துவிடும் (உயிரை) ஒழித்துவிடும், எ-று. மலைமேல் அசைந்து கொண்டிருக்கிற மேகத்தைப் போல உடம்பு நிலையற்றதாகையால் அது உறுதியாயிருக்கும் போதே நற்காரியத்தைச் செய்ய வேண்டும் என்பது கருத்து. யாத்தல் = கட்டுதல், தோல் நரம்பு முதலியவைகளால் கட்டப்படுவதாகையால் யாக்கையெனச் சொல்லப்பட்டது; யா - பகுதி, கு - சாரியை, ஐ - விகுதி, ஆய - ஆகிய என்பதின் இடைக்குறை யென்பார்கள்; அல்லது ஆ - பகுதி, யகரம் - இறந்தகால இடைநிலை, அ - பெயரெச்ச விகுதி மற்று, ஆங்கு, ஏ - இம்மூன்றும் அசை.
29. புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்க அறவினை; - இன்னினியே நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச் சென்றான் எனப்படுத லால். (இ-ள்.) இன் இனி ஏ - இப்பொழுதே, (ஒருவன்) நின்றான் இருந்தான் கிடந்தான் - நின்று கொண்டிருந்தான் உட்கார்ந்தான் படுத்தான், தன் கேள் அலற சென்றான் - தன் பந்துக்கள் அலறி அழ இறந்தான், எனப்படுதலால் - என்று சொல்லப்படுவதனால், (உடம்பு) புல் நுனிமேல் - புல்லின் நுனியிலிருக்கிற, நீர் போல் - நீர்த்துளியைப் போல, நிலையாமை என்று எண்ணி - நிலைபெறாத தன்மையையுடையது என்று நினைத்து, இன் இனி ஏ - இப்பொழுதே, அறம் வினை செய்க - தர்ம காரியத்தைச் செய்யக்கடவர், எ-று. ஒருவன் ஒரே காலத்தில் நின்று கொண்டிருக்கக் கண்டேனென்றும் மற்றொருவன் உட்கார்ந்திருக்கக் கண்டேனென்றும் இன்னம் ஒருவன் படுத்திருக்கப் பார்த்தேனென்றும் கடைசியிலொருவன் அவன் இறந்து போனானென்றும் சொல்லும்படி மனிதனுடைய நிலையிருக்கிறதினால் தருமத்தைச் சீக்கிரத்தில் செய்ய வேண்டும் என்பது கருத்து. இன் இனி - இன் என்பது இக்காலம் என்பது தெரிவிக்கிற ஒருவகை இடைச்சொல். அது மிக என்னும் பொருளினால் அடுக்கி இன்னின் என்றாகி ஈற்றில் இகரச் சாரியை பெற்றது. அறம் வினை என்பதில் மகரங்கெட்டது. [மெய்யீறு. சூ. 16.], இருபெயரொட்டுப் பண்புத்தொகை.
30. கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல யாக்கை தமர்க்கொழிய நீத்து. (இ-ள்.) மாந்தர்கள் - மனிதர்கள், கேளாதே வந்து - (வரட்டுமா என்று) கேளாமல் வந்து, கிளைகளாய் இல் தோன்றி - உறவினராய் தன் குடியிற் பிறந்து, வாளாதே - சொல்லாமலே, சேக்கை மரன் ஒழிய - தனக்கு வாசஸ்தானமாயிருந்த மரத்தை ஒழித்து, சேண் நீங்கு புள் போல - தூரத்தில் நீங்கிச் செல்லுகிற பட்சியைப் போல, தமர்க்கு - தம்மவர்களுக்கு, யாக்கை ஒழிய நீத்து - உடம்பை விட்டு விட்டு, வாளாதே போவர் - சொல்லாமல் போகின்றார்கள், எ-று. பறவைகள் தமது இச்சையின்படி மரங்களில் வந்து சேர்வதும் விட்டுப் போவதும் போல மனிதர் கர்மவசத்தினால் ஒரு குடியிற் பிறப்பதும் நீங்குவதுமா யிருப்பதுபோல் வந்து போகிறவரை உறவினரென்றெண்ணிப் பாடுபட்டு உழலாமல் தருமத்தைச் செய்ய வேண்டும் என்பது கருத்து. கேளாது, வாளாது - வினையெச்சங்கள். மரம் மரன் ஆனது போலி, [எழுத்து. சூ. 67.] நீத்து - நீ - பகுதி, த் - இடைநிலை, உ - விகுதி, தகரம் - சந்தி, ஆல் - அசை. 4. அறன் வலியுறுத்தல்
[அதாவது தருமம் பொருள் இன்பங்களிலும் உறுதியுடைய தென்பதைக் குறிப்பது.]
31. அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப் புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத் தவத்தால் தவஞ்செய்யா தார். (இ-ள்.) மேல் தவத்தால் - முன் ஜனனத்தில் செய்த நோன்புகளினால், தவம் செய்யாதார் - (பிற்பிறப்பில்) தவஞ் செய்யாதவர்கள், அகத்தாரே வாழ்வார் என்று - அகத்திலுள்ளவரே நன்மையடைவார் என்று நினைத்து, அண்ணாந்து நோக்கி -, தாம் புகப் பெற்றார் - தாங்கள் உள்ளே போகப் பெறாதவராகி, புறங்கடை பற்றி - தலை வாயிலைப் பிடித்துக் கொண்டு, மிக வருந்தியிருப்பார் - மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள், எ-று. ஒரு தனவான் வீட்டில் சுபாசுபங்கள் நேர்ந்த போது யாசகர் பலர் உட்புகுந்திருக்க மற்றொரு யாசகன் உள்ளே போயிருப்பவர்கள் நல்ல பயனைப் பெறுவார்கள் ஆதலின் நாமும் உள்ளே செல்லக்கடவோம் என்று உள்ளே புகப் பார்க்க, வாசற் காப்போரால் தடையுற்று வாசற்படியைப் பிடித்துக் கொண்டு அண்ணாந்து பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்பான் என்பதாம். இது பூர்வஜனனத்தில் தருமஞ்செய்யாத கொடுமையால் வந்தது எனச் சொன்னதனால் தருமம் செய்வது இம்மை மறுமைகளுக்கு உறுதி என்றும், பொருள் இன்பங்கள் அப்படியல்லவென்றும் சொன்னதாயிற்று. அகத்தாரே - இங்கு ஏகாரம் பிறர் வாழார் என்பதைக் குறித்ததினால் பிரிநிலை. அண்ணாந்து - அண்ணா - பகுதி. பெறா அர் - அளபெடை இசை நிறைக்க வந்தது. மூன்றாம் அடியில் தாம் ஏ இரண்டும் அசை. தவத்தால் தவஞ் செய்வதாவது முந்திய ஜனனத்தில் செய்த தவம் பிந்திய ஜனனத்தில் தவஞ் செய்வதற்குக் காரணமாய் சங்கிலிபோல் தொடர்ந்திருக்கும் தன்மை. தவத்தால் என்பதை செய்யாதார் என்பதின் பகுதியில் முடித்துக் கொள்க.
32. ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து போவாம்நாம் என்னாப் புன்நெஞ்சே - ஓவாது நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாட்கள் சென்றன செய்வது உரை. (இ-ள்.) ஆஆ - ஐயோ! நாம் ஆக்கம் நசை இ - நாம் செல்வத்தை விரும்பி, அறம் மறந்து - தருமத்தை மறந்து, போவாம் நாம் என்னா - நாம் இறந்து போவோம் என்று நினையாத, புலை நெஞ்சே - அற்பமான மனமே! ஓவாது - ஒழியாமல், நின்று - நிலைபெற்று, உஞற்றி வாழ்தி எனினும் - முயற்சி செய்து வாழ்வாயானாலும், நின் வாழ்நாட்கள் - உன்னுடைய ஆயுள் நாட்கள், சென்றன - ஒழிந்தன, செய்வது உரை - இனிச் செய்ய வேண்டியதைச் சொல்லு, எ-று. நாம் ஆக்கம் நசைஇ ஆவாம் - செல்வத்தை விரும்பி விர்த்தியாவோம் (என்று எண்ணி), அறம் மறந்து போவோம் நாம் - தருமத்தை மறந்து போவோம் நாம், என்னா புலை நெஞ்சே - என்று எண்ணாத அற்ப மனமே!, எனவும் உரைக்கலாம். உள்ள காலமும் செல்வம் பெற்று வாழ்வதற்கே முயன்று தருமத்தைச் செய்யாதுவிட்டால் உன்வாழ்நாள் சீக்கிரம் ஒழிந்தபின் செய்யத்தக்கது ஒன்றுமில்லை என்பது கருத்து. ஆஆ - இரக்கக் குறிப்பிடைச்சொல். ஆவாம், போவாம் - தன்மைப்பன்மை எதிர்கால வினைமுற்று; உளப்பாட்டில் வராமல் தனித்து வந்தன. ஆக்கம் - விர்த்தியாக்குதற்குக் காரணமாதலின் செல்வத்திற்குக் காரணப்பெயர். ஆக்கு - பிறவினைப்பகுதி. இதில் கு - பிற வினைவிகுதி, அம் - விகுதி, நசைஇ - நசைந்து என்பதின் விகாரம். ஓவாது - ஓ - அல்லது ஓவு - பகுதி.
33. வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்ததனைத் தொல்லையது என்றுணர் வாரே தடுமாற்றத்து எல்லை இகந்தொருவு வார். (இ-ள்.) பேதை - புத்தியீனன், வினைப்பயன் வந்தக்கால் - தீவினைப்பயனாகி ஆபத்து நேர்ந்தால், வெய்ய உயிரா - கடுமையாக மூச்சுவிட்டு [பெருமூச்சுவிட்டு], மனத்தின் அழியும் - மனதிலே வருந்துவான்; அதனை நினைத்து - அத்தீவினைப் பயனை நினைத்து, தொல்லையது என்று - முற்பிறப்பின் பாவத்தால் நேர்ந்ததென்று, உணர்வாரே - அறிந்த விவேகிகளே, தடுமாற்றத்து எல்லை - சம்சார துக்கத்தின் எல்லையை, இகந்து ஒருவுவார் - விட்டு நீங்குவார்கள், எ-று. விவேகமில்லாதவர் சங்கடம் வந்த போது இது முற்பிறப்பின் வினையென்று எண்ணாமல் வருந்துவார்; அதை யறிந்தவரோ வருந்தமாட்டார் என்பது கருத்து. இதனால் விவேகமும் தருமத்தின் பயன் என்று சொல்லியதாயிற்று. வெய்ய - வெம்மையின் அடியாகப் பிறந்த பலவின்பாற் பெயர்; வெய்யனவாகிய உயிர்ப்பு உயிர்த்து எனக்கொள்க. குறிப்புவினையெச்சமெனக் கொண்டு உயிரா என்னும் வினைக்கு உரி என்னவுமாம். உயிரா - செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சம். அழியுமாம் - ஆம் - அசை. தொல்லையது - தொல்லை என்னும் பண்பின்மேல் வந்த குறிப்பு வினைமுற்று; அ - சாரியை, து - விகுதி. உணர்வாரே ஏகாரம் பிரிநிலை. தடுமாறுதல் = வழிதெரியாமல் அங்கே இங்கே சுற்றுவது; பலபிறப்புப் பிறப்பதான சம்சாரத்துக்கு ஆகுபெயர்.
34. அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால் பெரும் பயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன் கோதுபோல் போகும் உடம்பு. (இ-ள்.) அரு பெறல் யாக்கையை - அருமையான பெறுதலையுடைய உடம்பை, பெற்ற பயத்தால் - அடைந்த பலத்தினால், பெரு பயனும் - பெரிய பிரயோஜனமான (தர்மத்தையும்), ஆற்ற கொள்க - மிகவுந் தேடிக்கொள்ள வேண்டும்; கரும்பு ஊர்ந்த சாறு போல் - கரும்பிலிருந்து உண்டான சாற்றைப்போல, சாலவும் பின் உதவி - (அத்தருமம்) மிகவும் பின்னுக்கு உதவியாயிருக்கும்; உடம்பு - திரேகமானது, அதன் கோது போல் போகும் - அக்கரும்பின் சக்கைபோல (உதவியில்லாமல்) போய்விடும், எ-று. மக்களுடம்பைப் பெறுதல் அருமையானது; அதைப் புண்ணியத்தால் பெற்றபடியால் அதைக்கொண்டு தருமத்தைச் செய்யவேண்டும்; அத்தருமம் கருப்பஞ்சாற்றைப் போல் ஆத்துமாவின் அனுபவத்திற்கு உதவும், உடம்போ உதவாது என்பது கருத்து. 'அரும்பெறல்' என்பதை 'பெறல் அரு' என மாற்றியும் உரைக்கலாம். அற்ற - வினையெச்சம்; இங்கே வினையுரி. உதவி = உதவுவது, பெயர். ஏ - அசை.
35. கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்; வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம் வருங்கால் பரிவ திலர். (இ-ள்.) கரும்பு ஆட்டி - கரும்பை (ஆலையில்) சிதைத்து, கட்டி - (அச்சாற்றினாலாகிய) வெல்லக்கட்டியை, சிறுகாலை கொண்டார் - முற்காலத்தில் கொண்டவர்கள், துரும்பு எழுந்து வேங்கால் - அதன் சக்கை கிளம்பி வேகும்போது, ஆண்டு - அவ்விடத்தில், துயர் உழவார் - துன்பத்தால் வருந்தார்கள்; (அதுபோல்), வருந்தி - வருத்தப்பட்டு, உடம்பின் பயன் கொண்டார் - தேகத்தின் பிரயோசனத்தைக் கொண்டவர்கள் [தருமத்தைச் செய்து அதன் பயனைப் பெற்றவர்], கூற்றம் வருங்கால் - எமன் வரும்போது, பரிவது இலர் - துன்பப்படுவது இல்லையாவார், எ-று. கரும்பின் சாற்றினால் ஆக வேண்டிய பயனைப் பெற்ற பின் அதன் துரும்பு வேகக்கண்டு துன்பம் அடையாததுபோல் தேகத்தின் பயனாகிய தருமத்தைச் சம்பாதித்த பின் மரணத்துக்குப் பயப்படார் விவேகிகள் என்பது கருத்து. சிறுகாலை - இது அற்பகால மென்னும் பொருளை யுடைத்தாய் முற்காலத்தைக் குறிக்கின்றது. "சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து." இலர் - சிறப்புக்குறிப்பு வினைமுற்று. பரிவது அதற்குச் செயப்படுபொருள். இல்லை என்பது ஒரு பொருளின் சம்பந்தத்தை நீக்கும்போது செயப்படுபொருள் குன்றாவினையாகவும் பொருளையே நீக்கும்போது செயப்படு பொருள் குன்றிய வினையாகவும் வழங்கும். உதாரணம்: 'குடம் நீரில்லாது' - செயப்படு பொருள் குன்றாவினை; 'குடமில்லை' - செயப்படு பொருள் குன்றியவினை.
36. இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால் மருவுமின் மாண்டார் அறம். (இ-ள்.) இன்று கொல் அன்று கொல் என்று கொல் - இன்றைக்கோ அன்றைக்கோ என்றைக்கோ, என்னாது - என்று நினையாமல், கூற்றம் - எமன், பின்றையே நின்றது என்று எண்ணி - பின் புறத்திலேயே நிற்கின்றது என்று நினைத்து, தீயவை ஒருவுமின் - தீமையான காரியங்களை விட்டு விடுங்கள்; ஒல்லும் வகையான் - கூடிய விதத்தில், மாண்டார் அறம் - மாட்சிமைப் பட்டவர்களுடைய தர்மத்தை, மருவுமின் - சேருங்கள், எ-று. நம்முடைய ஆயுள் சதமல்லவென்று நினைத்துப் பாவங்களைச் செய்யாமல் புண்ணியங்களைச் செய்ய வேண்டும் என்பது கருத்து. கொல் - ஐயத்தில் வந்தது. [இடை. சூ. 46.] பின்றை - ஐ - சாரியை, [உயிரீற்று. சூ. 35.] மாண்டார்களுடைய அறமாவது அவர்கள் நூல்களில் சொல்லியதும் அவர் ஆசரித்ததுமாம்.
37. மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால் எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாதுஉம்பர்க் கிடந்துண்ணப் பண்ணப் படும். (இ-ள்.) மக்களால் ஆய - மனிததேகங்களால் செய்யத்தக்க, பெரும் பயனும் - பெருமையாகிய பயன்களும், ஆயுங்கால் - ஆராயுமிடத்து, எத்துணையும் - எவ்வளவினும், ஆற்றபல ஆனால் - மிகவும் அநேகங்கள் ஆதலினாலே, தொக்க உடம்பிற்கே - (நரம்பு தசை முதலியவை) சேர்ந்த உடம்புக்காக்வே, ஒப்புரவு செய்து ஒழுகாது உபயோகமான காரியங்களைச் செய்து நடவாமல், உம்பர் கிடந்து - சுவர்க்கத்திலிருந்து, உண்ணப் பண்ணப்படும் - போகங்களை யனுபவிக்க (அறங்களைச்) செய்யவேண்டும், எ-று. மனிதர் உடம்பினால் செய்ய வேண்டிய நற்காரியங்கள் பலவாயிருக்க அசுத்தமான தேகத்துக்கே வேண்டிய காரியங்களைச் செய்து கொண்டிராமல் சொர்க்க அனுபவத்திற்கு ஏதுவான நற்காரியங்களைச் செய்ய வேண்டும் என்பது கருத்து. மக்கள் என்பது மனித உடம்பை. தொக்க - தொகு - பகுதி, அகரம் - பெயரெச்ச விகுதி, ககரம் இரட்டி இறந்தகாலம் காட்டியது.
38. உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி இறப்ப நிழற்பயந் தாஅங்கு - அறப்பயனும் தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும். (இ-ள்.) உறக்கும் துணையது - கிள்ளி எடுக்கும் அளவுள்ளதான, ஓர் ஆலம் வித்து - ஒரு ஆலமரத்தின் விதை, ஈண்டி - (கிளைகள்) நெருங்கி, இறப்ப நிழல் பயந்தாங்கு - மிகவும் நிழலைத் தருவது போல, அறம் பயனும் - தருமப் பிரயோஜனமும், சிறிது ஆயினும் - அற்பமானாலும், தக்கார் கைபட்டக்கால் - யோக்கியர் கையில் சேர்ந்தால், வான் சிறிது ஆ - ஆகாயம் அற்பமாகும்படி, போர்த்துவிடும் - மூடிவிடும், எ-று. தருமஞ் செய்வதையும் யோக்கியர்கள் திறத்திலே செய்தால் அது அற்பமானாலும் ஆலம்விதை பெருகிப் பெரிய மரமாவது போல மிகவும் பெரிதாம் என்பது கருத்து. வான் சிறிதா என்பதற்கு வானினும் பெரிதாக என்றபடி. பயந்தாங்கு - பயந்த என்பது அசுர ஈறு தொகுத்தலால் வந்ததென்றும், பயந்தால் என்னும் வினையெச்சம் பயந்து எனத் திரிந்ததென்றும் இருவகையில் கொள்ளலாம். அறப்பயனும் - உம்மை எச்சப்பொருளில் வந்தது. ஆயினும் - இழிபு சிறப்பும்மை.
39. வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார் வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர் வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல் வைகலை வைத்துணரா தார். (இ-ள்.) வைகலும் - தினந்தோறும், வைகல் - நாட்கழிவை, தம் வாழ் நாள்மேல் - தமது ஆயுசில், வைகுதல் - வைத்து - செல்லுதலாக வைத்து, வைகலை உணராதார் - நாட்கழிவை யறியாதவர்கள், வைகலும் - தினந்தோறும் வைகல் வரக்கண்டும் - நாட்கழிவு வரப்பார்த்தும், அஃது உணரார் - அதின் உண்மையை அறியாதவராகி, வைகலும் - தினந்தோறும், வைகலை - ஆயுள் கழிதலை, வைகும் என்று - இருக்கிறதென நினைத்து, இன்பு உறுவர் - சந்தோஷப்படுவார்கள், எ-று. தினம் நாள் கழிந்து வருவது தமது ஆயுள் கழிவதாக நினையாமல் அது நிற்பதாகவே நினைத்துச் சந்தோஷப்படுவது மூடத்தனம்; தனது மேல் கதிக்கு வேண்டிய நற்காரியங்களைச் செய்து சந்தோஷித்தல் புத்தி என்பது கருத்து. இங்கே வைகல் என்றது நாள் கழிவுக்கு ஏதுவான சூரியவுதயாஸ்தமயங்கள் எனக்கொள்க. இதனால் தனது ஆயுள் கழிவதன் முன்னே தருமங்களைச் செய்வது அவசியமென அறனை வலியுறுத்தியதாயிற்று. வைகலும் - முற்றும்மை. கண்டும் - சிறப்பும்மை. உணரார் - முற்றெச்சம். வாழ்நாள் மேல் - ஏழாம் வேற்றுமை. இது முன் வந்த சொல்லும் பொருளும் மறுத்தும் வருவதனால் "இருமைப்பின் வருநிலை" என்னும் அலங்காரமாம். சூத்திரம் - "முன்வருஞ் சொல்லும் பொருளும் ப்லவயின், பின்வருமென்னிற் பின்வருநிலையே" - தண்டியலங்காரம்.
40. மான அருங்கலம் நீக்கி இரவென்னும் ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால் ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்து இவ்வுடம்பு நீட்டித்து நிற்கும் எனின். (இ-ள்.) ஈநத்தால் - இழிவான காரியத்தால், ஊட்டியக் கண்ணும் - (சோறு முதலியவற்றை) அனுபவிக்கச் செய்தும், இவ்வுடம்பு - இந்தத் தேகம், உறுதிசேர்ந்து - உறுதிப்பட்டு, நீட்டித்து நிற்கும் எனின் - வெகுகாலம் நிலைத்திருக்குமானால், மாநம் அரு கலம் நீக்கி - மானமென்னும் அருமையாகிய ஆபரணத்தைத் தள்ளி, இரவு என்னும் - இரப்பது என்று சொல்லுகிற, ஈந இளிவினால் - தாழ்மையான அவமானத்தால், வாழ்வேன்மன் - பெரும்பாலும் வாழ்வேன், எ-று. எவ்வளவு காப்பாற்றினாலும் உடம்பு நீடித்து நிற்பதில்லை யாதலால், அதற்காக இழிவான காரியங்களைச் செய்தல் வீண். நிலையான ஆத்துமாவுக்காக வேண்டிய காரியக்களைச் செய்வது நலம் என்பது கருத்து. மாநமாவது தன் பெருமையைக் காப்பற்றல். ஈநவிளி வினால் = ஈநமாகிய சாவினால் எனவும் உரைக்கலாம்; ஈநகாரியஞ் செய்வது சாவுக்குச் சமானமென்பது கருத்து; சாவில் ஈநமாவது பலர் பழிக்கும்படியான நிலை. மன் - அசையும் ஆம். பெரும்பாலும் வாழ்வேனென்பதனால் அப்படி வாழ்தலும் கூடாத காரியம் என்றதாயிற்று. ஊட்டியக் கண்ணும் - இது எதிர்கால வினையெச்சம்; கண் - விகுதி, உம் - இழிவு சிறப்பு. நீட்டித்து - டகரம் - விரித்தல் விகாரம். 5. துய்தன்மை
[துய்தன்மை - இது துய்து அன்மை எனப்பிரித்து, சுத்தமில்லாதது எனப் பொருள் கொள்ளப்படும், ஆதலின் அதைக் குறித்துச் சொல்லிய அதிகாரமாம். தூயதன்மை என்றும் பாடமுண்டு. அதையும் தூயது அன்மை எனப்பிரித்து முன்போல் பொருள் கொள்க.]
41. மாக்கேழ் மடநல்லாய் என்றாற்றும் சான்றவர் நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர் ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே காக்கை கடிவதோர் கோல். (இ-ள்.) மா கேழ் மடம் நல்லாய் - மாந்தளிரின் நிறம் போன்ற நிறமும் இளமையும் பொருந்திய பெண்ணே! என்று அரற்றும் - என்று கத்துகிற, சான்றவர் - வித்துவான்கள், நொய்யது - அற்பமான, ஓர் புக்கு இல்லை - ஒரு புகத்தக்க வீட்டை, நோக்கார் கொல் - சிந்தியார்களா; ஓர் யாக்கைக்கு - ஒரு உடம்பில், ஈ சிறகு அன்னது - ஈயின் சிறகு அளவான, ஓர் தோல் அறினும் - ஒரு தோல் அற்றாலும். காக்கை கடிவது - காக்கையை ஓட்டும்படியான, ஓர் கோல் - ஒரு கொம்பு, வேண்டும் - வேண்டியிருக்கிறது, எ-று. ஏ - அசை. அசுத்தமான புண்ணுடம்பைக் கண்டு மாக்கேழ் மட நல்லாய் என்று துதித்துக் கத்திக் கொண்டிருப்பவர் அவ்வுடம்பின் அற்பத்தனத்தைக் கண்டதில்லையோ? ஏனென்றால் உடம்பில் கொஞ்சந் தோல் பேர்ந்தாலும் அப்புண்னைக் குத்த வருகின்ற காக்கையை ஓட்ட ஒரு கோல் தேட வேண்டுமே; இவ்வளவு அருவருப்பான உடம்பை மேன்மையாக நினைத்தல் அசுத்தமேயல்லாது சுத்தமன்று என்பது கருத்து. அப்படிப்பட்ட அறிவீனரை சான்றவரென்றது எதிர்மறை இலக்கணை, பரிகாசத்துக்குச் சொன்னது. நல்லாள் என்பதின் ஈறு விளியில் யுகரமாய்த் திரிந்தது [பெயர். சூ. 51]. சான்றவர் - வினையாலணையும் பெயர்; சால் - உரிச்சொல், பகுதி. றகரம் - இடைநிலை, அகரம் - சாரியை, அர் - விகுதி, சால்பு = நிறைவு, விவேகத்தால் நிறைந்தவர் என்பது பொருள். நொய்வது - நொய் - பண்படி, பகுதி, அ - சாரியை, து - ஒன்றன்பால் விகுதி. புக்கில் - புகு இல் என்பதில் ககரம் இரட்டி நின்றது, வினைத்தொகை. யாக்கைக்கு - கு உருபு இடப் பொருளில் வந்தது. கடவது - வினையாலணையும் பெயர். கோல் என்பதோடு இருபெயரொட்டுப் பண்புத்தொகையாய்க் கொள்ள வேண்டும்.
42. தோல்போர்வை மேலும் துளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும் மீப்போர்வை மாட்சித்து உடம்பானால் - மீப்போர்வை பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப் பைம்மறியாப் பார்க்கப் படும். (இ-ள்.) தோல் போர்வை - தோலாகிய போர்வையை, மேலும் - மேலேயும், தொளை பல ஆய் - பல துவாரங்களையு முடைத்தாய், பொய் மறைக்கும் - அசுத்தங்களை மறைக்கின்ற, மீ போர்வை - மேல் போர்வையினால், மாட்சித்து - மாட்சிமை யுடையது, உடம்பு -; ஆனால் - அப்படியாதலால், மீ போர்வை - மேற்பார்வையானது, பொய் மறை ஆ - பொய்யை மறைத்து நிற்க, காமல் புகலாது - காமத்தை விரும்பாமல், அதனை - அவ்வுடம்பை, பை மறி ஆ - பையை மறித்ததாக, பார்க்கப்படும் - பார்க்கவேண்டும், எ-று. இந்த உடம்பு அருவருக்கும் படியான நீர் ஒழுகுகின்ற பல துவாரங்களோடு கூடி மேலே ஒரு தோல் போர்த்து அதனாலே கண்ணுக்கினியதாகத் தோன்றுகின்றதே யன்றி, உண்மையாகப் பார்த்தால் மல மூத்திர முதலிய அசுத்தங்கள் பொதிந்த பைக்குச் சமானமாகும்; அதனை மேலே பார்த்துக் காமங் கொள்ளாமல், மேலே பளபளப்பாயும் மெத்தென்று மிருக்கிற ஓர் அசுத்தப்பையை உட்புறந் திருப்பிப் பார்த்தால் எப்படியோ அப்படிப் பார்த்தால் அதன் அசுத்த நிலை வெளிப்படும் என்பது கருத்து. மாட்சித்து - குறிப்புவினைமுற்று. அசுத்த வஸ்துக்கள் உண்மையில் அழகில்லாதனவாய்ப் போர்வையினால் அழகுள்ளன போலத் தோன்றுதலால் பொய்யென்றார். மறை = மறைப்பது; கர்த்தாப் பொருள் விகுதி குறைந்து நின்றது. மறி - முதனிலைத் தொழிற்பெயர், மறிதல் = திருப்புதல். ஆ - செயவென் வாய்பாட்டு வினையெச்சம், ஈறு குறைந்து நின்றது. மற்று - அசை, பார்க்கப்படும் - பார்க்க வேண்டுமென்னும் பொருள்ளுள்ள ஒருவகை வியங்கோள் வினைமுற்று; தேற்றப்பொருளுள்ள தொழிற்பெயர் என்று சொல்வாரும் உளர்.
43. தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடிப் பொய்க்கோலம் செய்ய ஒழியுமே - எக்காலும் உண்டி வினையுள் உறைக்கும் எனப்பெரியோர் கண்டுகை விட்ட மயல். (இ-ள்.) பெரியோர் - மேலோர், எக்காலும் - எப்போதும், உண்டி வினையுள் - உண்ணுகிற தொழிலால், உறைக்கும் என - துர்க்கந்தப்படுமென்று, கண்டு கைவிட்ட - பார்த்துத் தள்ளிவிட்ட, மயல் - மயக்கமாகிய (தேகம்), தக்கோலந் தின்று - தக்கோலம் என்னும் (வாசனைத் திரவியத்தைத்) தின்று, தலை நிறைய பூ சூடி - தலை நிரம்பப் பூவைச் சூடி, பொய் கோலம் செய்ய - பொய்யான அலங்காரஞ் செய்வதனால், ஒழியுமே - (அந்தத் துர்க்கந்தம்) நீங்குமா? [நீங்காது], எ-று. பல உணவுகள் சீர்ணிப்பதனால் துர்க்கந்தம் வீசுகிற உடம்பில் வாசனை வஸ்துக்களை மெல்வதும் பூச்சூட்டுவதும் ஆகிய இப்பொய் அலங்காரத்தினால் அந்தத் துர்க்கந்தம் நீங்குமா என்பது கருத்து. பொய்க்கோலம் - இங்கே [மெய்யீறு. சூ. 21னால்] வலி மிகுந்தது. ஒழியுமே - ஏகாரம் - வினாவிடைச்சொல். வினையுள் - விக்குள் என்பது போல. உள் - தொழிற்பெயர் விகுதியாம், மூன்றாம் வேற்றுமைத் தொகை; அல்லது உள் - ஏழனுருபாய் காரணப் பொருளில் வந்ததென்பது நேர். மயல் என்பது அதற்குக் காரணமாகிய உடம்பிற்கு ஆகு பெயர்.
44. தெண்ணீர்க் குவளை பெருங்கயல் வேலென்று கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன கண்ணீர்மை கண்டொழுகு வேன். (இ-ள்.) உள் நீர் - உள்ளேயிருக்கிற நீரை, களைந்தக்கால் - நீக்கிவிட்டால், நுங்கு குன்றிட்ட அன்ன - நுங்கைத் தோண்டியெடுத்தாற் போலிருக்கிற, கண் நீர்மை - கண்ணின் குணத்தை, கண்டு ஒழுகுவேன் - கண்டு நடக்கிற நான், தெள் நீர் குவளை - தெளிவான நீரில் (முளைத்த) கருநெய்தற்பூ - பொரு கயல் - போர் செய்கின்ற கெண்டை மீன்கள், வேல் - வேலாயுதம், என்று - என்று சொல்லி, கண் இல் புல் மாக்கள் - விவேகமில்லாத அற்பமனிதர்கள், கவற்ற - கவலைப்படுத்த விடுவனோ - (என் ஒழுக்கத்தை) விடுவனோ [விடேன்], எ-று. உள் நீரைத் தோண்டிவிட்டால் நுங்கைத் தோண்டி விட்டாற் போல வெறும்பள்ளமாய் காணப்படுகிற கண்ணை குவளை கயல் வேல் இவற்றோடு உபமானப்படுத்தி விவேகமற்றவர் வருணிப்பதனாலே மயங்க வேண்டாம் என்பது கருத்து. பொருகயல் என்பது ஒன்றோடொன்று எதிர்முகமாய் நின்று பாய்வதுபோல கண் அசைந்து ஓடும்போது நிற்குநிலையைக் குறிக்கின்றது. இவை பெயர்ச்செவ்வெண், விகாரத்தால் தொகை பெறாதனவாம். என்று - வினையெச்சம். இல்புன் - இங்கே லகரம் [உருபு. சூ. 10னால்] இயல்பாயிற்று. கவற்ற - இது கவற்று என்னும் பிறவினையின் வினையெச்சம். கவல் - தன்வினைப்பகுதி, று - பிறவினை விகுதி. சூன்றுதல் = தோண்டுதல், குன்றிட்டு அன்ன, அல்லது சூன்றிட்ட அன்ன என இருவகையாயும் பிரித்து முற்பாட்டுகளில் காட்டி யிருக்கிறபடி இலக்கணம் கூறலாம். விடுவன் - அன் - தன்மையொருமை விகுதி [வினை. சூ. 12]. ஒழுகுவேன் - தன்மை வினையாலணையும் பெயர்.
45. முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும் கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ எல்லோரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க பல்லென்பு கண்டொழுகு வேன். (இ-ள்.) எல்லாரும் காண - யாவருங் காணும்படி, புறம் காடு - சுடுகாட்டில், உதிர்ந்து உக்க - உதிர்ந்து சிந்தியிருக்கிற, பல் என்பு கண்டு - பல்லாகிய எலும்புகளைக் கண்டு, ஒழுகுவேன் நடப்பவனாகிய யான், முறுவல் - பற்களை, முல்லை முகை என்று - முல்லை யரும்புகள் என்றும், முத்து (என்று) - முத்தென்றும், இவை பிதற்றும் - இவற்றை உபமானமாகப் பிதற்றுகிற, கல்லா புல் மக்கள் - (மேலான நூல்களைக்) கற்காத அற்ப மனிதர், கவற்ற விடுவனோ - சொல்லும்படி சும்மா விருப்பேனோ [இரேன்], எ-று. சுடுகாட்டில் உதிர்ந்து கிடக்கிற பல் எலும்புகளை முல்லையரும்பு முத்து இவைகளோடு ஒப்பிட்டுக் கல்லாதவர் பிதற்றுவதனால் மனவுறுதியை விட்டு மயங்கலாகாது என்பது கருத்து. புறங்காடு - இது காட்டுப்புறம் என இலக்கணப்போலியாகவும், ஊர்க்குப் புறத்திலுள்ள காடு என்று இலக்கணம் உடையதாகவுங் கொள்ளலாம். உக்க - பெயரெச்சம், உகு - பகுதி.
46. குடருங் கொழுவுங் குருதியும் என்பும் தொடரும் நரம்பொடு தோலும் - இடையிடையே வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள் எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள். (இ-ள்.) குடரும் - குடலும், கொழுவும் - கொழுப்பும், குருதியும் - இரத்தமும், என்பும் - எலும்பும், தொடரும் நரம்பொடு - ஒன்றோடொன்று சேர்ந்திருக்கின்ற நரம்பும், தோலும் - சருமமும், இடைஇடையே - இவற்றின் நடுவே நடுவே, வைத்த தடியும் - வைத்த தசைகளும், வழும்பும் - நிணமும், ஆம் இவற்றுள் - ஆகிய இவைகளுக்குள், ஈர்ங் கோதையாள் - குளிர்ச்சியான மாலையை யணிந்த பெண் என்பவள், எத்திறத்தாள் - எந்தப் பகுதியை யுடையவள், எ-று. குடல் முதல் வழும்பு ஈறாகச் சேர்ந்திருக்கிற உடம்பைக் கண்டு ஈர்ங்கோதையாளென்று மயங்குகின்றார்களே, உற்றுப் பார்த்தால் எல்லாம் அசுத்த வஸ்துக்களாகவே காணப்படுகின்றன, ஆதலின் இது அஞ்ஞானம் என்பது கருத்து. உம்மைகள் - எண்ணும்மைகள். ஒடு - எண்ணிடைச் சொல், மற்று - அசை. ஈர்ங்கோதை - பண்புத்தொகை, நிலைமொழியில் அ - கெட்டது. [எழுத்தியல். சூ. 64னால்] ஙகரம் மிகுந்து ஈரெற்றாய் நின்றது.
47. ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும் கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் - பேதை பெருந்தோளி பெய்வளையாய் என்னுமீப் போர்த்த கருந்தோலால் கண்விளக்கப் பட்டு. (இ-ள்.) ஊறி உவர்த்தக்க - (மலங்கள்) ஊறி வெறுக்கத்தக்க, ஒன்பது வாய் புலனும் - ஒன்பது துவாரமாகிய இந்திரியங்களும், கோதி குழம்பு அலைக்கும் - அசுத்தக் குழம்புகள் சிதறி மோதப் பெற்ற, கும்பத்தை - (உடம்பாகிய) பண்டத்தை, பேதை - அறிவில்லாதவன், மீ போர்த்த கருந்தோலால் - மேலே போர்த்திருக்கிற அழகான தோலினால், கண் விளக்கப்பட்டு - கண்கள் ஒரு பிரகாசத்தையடைந்து, பெருந்தோளி - பெருத்ததோளை யுடையவளே!, பெயவளாய் - வளைகளை இடப்பெற்றவளே!, என்னும் - என்று சொல்வான், எ-று. கருத்து வெளிப்படை ஊறி என்னும் செய்தென் வினையெச்சம், உவர்த்தலுக்குக் காரணமாதலின் பிறகர்த்தா வினையோடு முடிந்தது. இது செயவென் வினையெச்சத்தின் திரிபென்னலுமாம். உவர்த்தலுக்குத் தக்க = உவர்த்தக்க. வாய்ப்புலனும் என்னும் எழுவாய் அலைக்கும் என்னும் உடம்பின் வினையைக் கொண்டது. [பொது. சூ. 26னால்] அமைந்தது. அதன் உரையைக் காண்க. வாய் என்பதை ஏழாம் வேற்றுமை தொக்கதாகவுங் கொள்ளலாம்.
48. பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும் கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப் பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தல் முடைச்சாகாடு அச்சிற்று உழி. (இ-ள்.) பண்டம் அறியார் - வஸ்துவின் உண்மையை அறியாமல், படு சாந்தும் கோதையும் கொண்டு - பூசத்தக்க சந்தனத்தையும் பூமாலையும் அணிந்து கொண்டு, பாராட்டுவார் - அவ்வுடம்பை ஆதரிப்பவர்கள், பெடை சேவல் வன் கழுகு - பெட்டையும் ஆணுமாகிய கடினமான கழுகுப் பறவைகள், மண்டி - நெருங்கி, பேர்த்திட்டு குத்தும் - பெயர்த்து குத்துகின்ற, முடை சாகாடு - துர்க்கந்தமுள்ள உடம்பாகிய பண்டியை, அச்சு இற்றுழி - (உயிராகிய) அச்சு முறிந்த போது, கண்டிலர் கொல் - பார்த்தார்கள் இல்லையோ, எ-று. உயிர்போன உடம்பைக் கழுகுகள் குத்த அதின் அசுத்தம் வெளிப்படையா நிற்பதைக் கண்டறியாமல் சந்தனம் மாலை முதலியவற்றால் அதனைப் பாராட்டுகிறார்கள் மூடர்கள் என்பது கருத்து. அறியார் - முற்றெச்சம். [வினையியல் - சூ. 32.] பெடைச் சேவல் - உம்மைத் தொகை. சாகாடு, அச்சு - இரண்டும் உவமையாகு பெயர்.
49. கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக் குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி - ஒழிந்தாரைப் போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று சாற்றுங்கொல் சாலச் சிரித்து. (இ-ள்.) கழிந்தார் இடு தலை - இறந்தவர்களுடைய (சுடுகாட்டில்) கிடக்கிற தலை, கண்டார் - பார்த்தவர்களுடைய, நெஞ்சு உட்க - மனம் பயப்படும்படி, குழிந்து ஆழ்ந்த கண்ண ஆய் தோன்றி - பள்ளமாகி ஆழ்ந்திருக்கிற கண்களையுடையனவாக காணப்பட்டு, ஒழிந்தாரை - மற்றவர்களை, போற்றி - மேன்மைப்படுத்தி, நெறி நின்மின் - நல்ல வழியிலே நில்லுங்கள், இதன் பண்பு - இவ்வுடம்பின் குணம், இற்று என்று - இத்தன்மையானது என்று, சால சிரித்து - மிகவும் சிரித்து, சாற்றுங்கொல் - சொல்லுகின்றனவோ, எ-று. சுடுகாட்டில் கிடக்கிற செத்தவர்களுடைய தலையெலும்புகள் கண்ணிருந்த விடத்து ஆழமான பள்ளமாய் இளித்த பற்களுமாய் கிடப்பதைப் பார்த்தால் இவ்வுடம்பு இப்படி அருவருக்கத்தக்கது; இதனை நம்பி வீண் காலம் போக்காமல் நல்லவழியிலே நடவுங்களென்று சிரித்துப் பிறருக்குப் போதிக்கின்றன போலிருக்கின்றன என்பது கருத்து. கண்ண - சினையடியாகப் பிறந்த பெயர்ப் பகுபதம்; குறிப்பு வினைமுற்று என்னவுமாம். ஆய் - ஆக என்பதின் திரிபு. தலை - பால் பகா அஃறிணை யாதலின் இங்கு பன்மை. இற்று - இன் என்னும் இடைச்சொல்லின் அடியாகப் பிறந்த குறிப்பு வினை முற்று. று - விகுதி. சாற்றும் - "றவ்வொடுகரவும்மை" என்னும் [பதவியல். 18ம்] சூத்திரத்தில் செய்யுநிகழ்பெதிர்வும் என்றமையால் இங்கு நிகழ்காலத்தில் வந்தது. அல்லது இயற்கைப் பொருளை இற்றெனக்கிளத்தல்' என்கிற [பொது. சூ. 53] விதியால் தன்மையைக் காட்டவந்ததுமாம்.
50. உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச் செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச் - செயிர்தீர்ந்தார் கண்டிற் றிதன்வண்ணம் என்பதனால் தம்மையோர் பண்டத்துள் வைப்ப திலர். (இ-ள்.) உயிர் போயார் வெள் தலை - செத்தவர்களுடைய வெள்ளையான தலையெலும்புகள், உட்க சிரித்து - (பிறர்) பயப்படும்படி சிரித்து, செம்மாப்பவரை - (இல்வாழ்க்கைச் சுகத்தால்) இறுமாந்திருப்பவர்களுக்கு, செயிர் தீர்க்கும் - (இறுமாப்பாகிய) குற்றத்தை நீக்கும், (ஆதலால்) செயிர் தீர்ந்தார் - குற்றம் நீங்கியவர்கள், கண்டு - பார்த்து, இதன் வண்ணம் இற்று - இதன் குணம் இப்படிப்பட்டது, என்பதனால் - என்று நினைப்பதனால், தம்மை - தங்களை, ஓர் பண்டத்துள் - ஒரு பொருளில், வைப்பது இலர் - வையார்கள், எ-று. இறந்தவர்களுடைய தலையெலும்புகள் பிறர் பயப்படும்படி சிரிப்பது போலிருத்தலால் உடம்பின் மேல் ஆதாரம் வைத்திருப்பவர்கள் அவ்வபிமானத்தை விடுகிறார்கள்; அப்படி விட்டால் தம்மை ஒரு பொருளாகப் பாராட்டார்கள் என்பது கருத்து. போயார் - யகரம் இறந்தகால இடைநிலை யெனக் கொள்க. [பொது. சூ. 26னால்] உயிர் என்பது போயார் என்பதின் பகுதியோடு முடிந்தது. வெள் தலை என்பதில் [மெய். 24வது சூத்திரத்தினால்] தகரம் டகரமும் ஆயின. செம்மாப்பவரை - ஐ உருபை கு உருபாகத் திரித்துக் கொள்க; வேற்றுமை மயக்கம். வைப்பது - தொழிற்பெயர்; இதனை எழுவாயாகவும் இரண்டாம் வேற்றுமையாகவும் கொள்ளலாம். இல் என்பது செயப்படுபொருள் குன்றியதும் குன்றாததுமாய் இருக்குமென்பதை முன்னமே காட்டியிருக்கிறோம். |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |