உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
நானூறு சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் உரையாசிரியர் : ஊ.புட்பரதச் செட்டியார் ... தொடர்ச்சி - 5 ... 21. சுற்றம் தழால்
[அதாவது சுற்றத்தாரைத் தழுவிக் கொண்டிருத்தல், அதனால் மிகுந்த பயனுண்மையின் அது பெருமையுடையோர் கடனெனக் கூறப்பட்டது.]
201. வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும் கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தா அங்கு அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன் கேளிரைக் காணக் கெடும். (இ-ள்.) வயாவும் - கர்ப்பந் தரித்திருப்பதினா லுண்டான நோவையும், வருத்தமும் - (அதுபற்றி வரும் பல) துன்பங்களையும், ஈன்றக்கால் நோவும் - கருவுயிர்க்குங்கால் உண்டாகும் நோவையும், கவான் மகன் கண்டு - தொடை மேல் மகனைக் கண்டு, தாய் -, மறந்து ஆங்கு - மறந்து போனாற் போல், அசா - தளர்ச்சியால், தான் உற்ற வருத்தம் - தான் அடைந்த துன்பம், உசா - (க்ஷேம) விசாரணை செய்யுந் தன்மையுள்ள, தன் கேளிரைக் காண - தன் சுற்றத்தாரைப் பார்க்கையில், கெடும் - நீங்கும், எ-று. ஈன்றக்கால் என்கிற வினையெச்சம் நிகழ்காலத்திற்குக் கொள்ளப்பட்டது. அசா - முதனிலைத் தொழிற்பெயர். அளபெடைகள் பாட்டினோசை நிறைக்க வந்தன.
202. அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம் நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழு மரம்போல் பல்லார் பயன்துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே நல்லாண் மகற்குக் கடன். (இ-ள்.) அழல் மண்டு போழ்தின் - வெப்பம் நெருங்கின காலத்தில் [கோடை காலத்தில்], அடைந்தவர்கட்கு எல்லாம் - (தன்னிடம்) சேர்ந்தவர்களுக்கெல்லாம், நிழல் மரம் போல் - நிழலைத் தருகிற மரத்தைப் போலே, நேர் ஒப்ப - ஒருசமமாக, தாங்கி காத்து, பழு மரம் போல் - பழுத்த மரத்தைப் போலே, பல்லார் பயன் துய்ப்ப - பலரும் பிரயோசனம் அனுபவிக்கும்படி, தான் வருந்தி வாழ்வதே - தான் வருத்தப்பட்டுக் கொண்டாயினும் சீவித்திருப்பதே, நல் ஆண்மகற்கு - நற்குணமுள்ள ஆண்பிள்ளைகளுக்கு, கடன் முறைமையாகும், எ-று. போழ்து - பொழுதின் விகாரம், வருந்தி என்பதோடு இழிவு சிறப்பும்மை வருவிக்கப்பட்டது. ஏகாரம் - தேற்றம்.
203. அடுக்கல் மலைநாட! தன்சேர்ந் தவரை எடுக்கலம் என்னார்பெரியோர்; - அடுத்தடுத்து வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே தன்காய் பொறுக்கலாக் கொம்பு. (இ-ள்.) அடுக்கல் மலை நாட - அடுக்கடுக்கான மலைகள் பொருந்தின நாட்டை யுடையவனே!, பெரியோர் -, தற்சேர்ந்தவரை - தம்மைச் சேர்ந்தவர்களை, எடுக்கலம் - தாங்க மாட்டோம், என்னார் - என்று சொல்லமாட்டார்; வன் காய் பல பல - வன்மையான அநேகங் காய்கள், அடுத்து அடுத்து காய்ப்பினும் - சேர்ந்து சேர்ந்து அல்லது கிட்டக் கிட்டக் காய்த்தாலும், (ஒரு மரத்தில்) தன் காய் பொறுக்கலா கொம்பு - தன் காய்களைப் பொறுக்க மாட்டாத கிளை, இல்லை - இல்லையே, எ-று. எத்தனை கனமான காய்கள் காய்த்தாலும் மரத்துக்கிளை பொறுப்பது போல தம்மை யடுத்தவரைப் பெரியோர் காப்பர் என்றபடி. எடுக்கலம் - தன்மைப் பன்மை யெதிர்மறை வினைமுற்று, எடு - பகுதி, கு - சாரியை, அல் - எதிர்மறை விகுதி, அம் - தன்மைப் பன்மை விகுதி. பொறுக்கலா என்னும் பெயரெச்சத்தையும் இவ்வாறே பகுத்துக்கொள்க. தற்சேர்ந்தவர் என்பதை ஒரு சொல்லாக் கொள்ள வேண்டும்.
204. உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை; - நிலைதிரியா நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால் ஒற்கமி லாளர் தொடர்பு. (இ-ள்.) உலகு அறிய - உலகத்தார் அறியும்படி, தீர கலப்பினும் - திடமாகச் சேர்ந்தாலும், சிறு இனத்தார் கேண்மை - அற்பருடைய உறவு, நில்லா - நிலைபெறாமல், சில பகல் ஆம் - சொற்பகால விருப்பதேயாம்; ஒற்கம் இலாளர் தொடர்பு - குணக்குறைவு இல்லாதவருடைய உறவு, நிலை திரியா நிற்கும் - தமது நிலையினின்று மாறாமலிருக்கின்ற, பெரியோர் -, நெறி அடைய - நன்னெறி [மோக்ஷம்] அடையும்படி, நின்ற அனைத்து - யோக நிலையிலே நின்றாற் போலாம். [தவறிப் போகாமல் நீடித்து நின்று பயன்படுமென்பது கருத்து.] எ-று. ஆல் - அசை.
205. இன்னர் இனையர் எமர்பிறர் என்னும் சொல் என்னும் இலராம் இயல்பினால் - துன்னித் தொலைமக்கள் துன்பம்தீர்ப் பாரேயார் மாட்டும் தலைமக்கள் ஆகற்பா லார். (இ-ள்.) இன்னர் - இவர், இனையர் - இப்படிப்பட்டவர், எமர் - எம்மவர் [உறவினர்], பிறர் - உறவில்லாதவர், என்னும் சொல் - என்று சொல்லுகிற பேச்சு, என்னும் - ஏதாகிலும், இலர் ஆம் - இல்லாதவராகிய, இயல்பினால் - தன்மையால், துன்னி - சேர்ந்து, தொலை மக்கள் - தளர்ந்த மனிதருடைய, துன்பம் தீர்ப்பார் - சங்கடத்தை நீக்குவார்கள், யார் மாட்டும் - எவரிடத்தும், தலை மக்கள் ஆகல் பாலார் - மேன்மக்களாகும் தன்மையுடையவர்கள், எ-று. எங்கும் மேன்மக்களென்று சொல்லத்தக்கவர் நன்மை தீமைகளையும் உறவு உறவின்மைகளையும் நாடாமலே சேர்ந்து துன்புற்றவர்களுடைய துன்பங்களைத் தீர்ப்பர் என்பது கருத்து. ஆகற்பாலார் - எழுவாய்; தீர்ப்பாரே - பயனிலை ஏகாரம் - தேற்றம். துன்பம் தீர்ப்பார் - எழுவாய், தலைமக்களாகற் பாலார் - பயனிலை என்னவுமாம்; அப்போது ஏகாரம் பிரிநிலை தொலை மக்கள் - தொலை - வினைத்தொகை, செல்வம் தொலைந்த மக்கள் என்பதாம். இன்னர் - இன் - இடைச்சொல், பகுதி, அர் - விகுதி. இளையரில் ஐ - சாரியை, பிறர் - ரகரவொற்று விகுதி. என் என்பது இடைக் குறையான எவனென்னும் குறிப்பு முற்றாலாகிய பெயர்.
206. பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல் அக்காரம் பாலோடு அமரார்கைத்து உண்டலின் உப்பிலிப் புற்கை உயிர்போல் கிளைஞர்மாட்டு எக்காலத் தானும் இனிது. (இ-ள்.) பொன் கலத்தில் பெய்த - பொற்பாத்திரத்திலே இட்ட, புலி உகிர் வான் புழுக்கல் - புலி நகம் போலே வெண்மையான சோற்றை, அக்காரம் பாலோடு - சக்கரை பால்களோடு, அமரார் கைத்து - அன்பில்லாருடைய கையிலிருந்து, உண்டலின் - உண்பதைப் பார்க்கிலும், உப்பு இலி - உப்பு இல்லாத, புற்கை - புல்லரிசிக் கூழை, உயிர்போல் கிளைஞர் மாட்டு - உயிரையொத்த பந்துக்களிடத்தில், எக்கலத்தானும் - எந்தப் பாத்திரத்திலாகிலும் (உண்பது) இனிது - இனிப்பாகும், எ-று. அக்காரம் பால் - உம்மைத் தொகை. கைத்து - ஐந்தாம் வேற்றுமைத் தொகை, து - சாரியை, அல்லது கைத்து - கையினிடத்துள்ளதாகிய, புழுக்கல் எனவுங் கூட்டலாம். போல் - வினைத்தொகை. கலத்தான் - ஆன் - இடப்பொருள்.
207. நாள்வாய்ப் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து வேளாண்மை வெங்கருணை வேம்பாகும்; - கேளாய், அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனும் தமராயார் மாட்டே இனிது. (இ-ள்.) நாள்வாய் பெறினும் - காலத்திலே பெற்றாலும், தம் - தம்மை, நள்ளாதார் இல்லத்து - நேசியாதவருடைய வீட்டில், வேளாண்மை - உபகாரமாகக் கொடுக்கப்பட்ட, வெம் கருனை - விரும்பத்தக்க பொரிக்கறியுணவும், வேம்பு ஆகும் - வேம்பு போல் கைப்பு ஆகும்; கேளாய் - கேள், அபரானப் போழ்தின் - பிற்பகற்காலத்து, அட்கு இடுவர் ஏனும் - இலைக்கறியை இட்டாராயினும், தமர் ஆயார் மாட்டே - தம்மவரா யிருப்பவரிடத்திலேயே, இனிது - (உண்ணும் உணவு) இனிப்பாகும், எ-று. இங்கே தமர் என்பது நேசிக்கு முறவினர்க்கு ஆம். நாள்வாய் - வாய் - ஏழனுருபு. நள்ளாதார் - நள் - பகுதி, ஆ - எதிர்மறை விகுதி, ள் - சந்தி, ஆர் - பலர்பால் விகுதி, தகரம் - எழுத்துப் பேறு, அபரானம் - அபராஹ்ந என்னும் ஆரியமொழித்திரிபு; அபர - பிற்பட்டது. அஹத் - பகல், பகலின் பிற்பட்ட பாகம் என மாறி யியைந்தது.
208. முட்டிகை போல முனியாது வைகலும் கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்; சூட்டுக்கோல் போல எரியும் புகுவரே நட்டார் எனப்படு வார். (இ-ள்.) முட்டிகை போல - சம்மட்டியைப் போலே, முனியாது - வெறுக்காம லிருக்கும்படி, வைகலும் - நாள்தோறும், கொட்டி - பதப்படுத்தி, உண்பாரும் - (ஒருவர் சோற்றை) உண்கிறவர்களும், (காலம் வாய்த்தால்) குறடுபோல் - பற்றுக் குறட்டைப்போல, கைவிடுவர் - விட்டு நீங்குவர்; நட்டார் என்பபடுவார் - அன்புள்ள உறவின ரென்னப்பட்டவர்கள், சுட்டு கோல் போல - உலையாணிக்கோலைப் போல, எரியும் புகுவர் - (உறவினர்க்குத் துன்ப நேர்ந்த போது அவரோடு) நெருப்பிலேயும் விழுவர், எ-று. சம்மட்டி இரும்பைக் கொட்டிப் பதமாக்குவது போல் ஒருவனைத் தனக்கு இதஞ்செய்யும்படி வசப்படுத்தி யுண்பர் என்பதாம். கொட்டுதல் - அடித்தல், பதமாக்குதலுக்கு ஆயிற்று. குறடு - கொல்லனுடைய ஓநாயுதம்.
209. நறுமலர்த் தண் கோதாய்! நட்டார்க்கு நட்டார் மறுமையும் செய்வதொன் றுண்டோ ! - இறுமளவும் இன்புறுவ இன்புற்று எழீஇ அவரோடு துன்புறுவ துன்புறாக் கால். (இ-ள்.) நறுமலர் தண் கோதாய் - சுகந்தமான பூச்சூட்டிய குளிர்ந்த கூந்தலுடையவளே!, நட்டார் - நேசித்தவர், நட்டார்க்கு - நேசித்தவர்க்கு, இறும் அளவும் - சாகும் வரையும், அவரோடு - அந்த நட்டாரோடு, இன்பு உறுவ இன்பு உற்று - இன்பப்படுமவைகளை இன்பப்பட்டு, எழீஇ - நடந்து, துன்பு உறுவ துன்பு உறாக்கால் - துன்பப்படுமவைகளைத் துன்பப்படாமற் போனால், மறுமையும் - மறுபிறப்பிலாகிலும், செய்வது ஒன்று உண்டோ - செய்யத்தக்க நற்காரியம் வேறொன்று இருக்கிறதோ [இல்லை], எ-று. நட்டார் - சுற்றத்தார் எனக்கொள்க. மறுமையும் என்பதில் உம்மை விகற்பப் பொருளும் எச்சப் பொருளு முடையது. இம்மையிலொன்று மில்லையே மறுமையிலாகிலு முண்டோ வென்றால் அதுவுமில்லை என்பது கருத்து. நட்டார் தம்மை நட்டாரோடு சமமாக இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டுமென அவர்களிருக்க வேண்டிய முறைமை கூறப்பட்டது. இன்பு உறுவ, துன்பு உறுவ - பலவின்பால் வினையாலணையும் பெயர், இரண்டனுருபு தொக்கது. எழீஇ - எழு - பகுதி.
210. விரம்பிலார் இல்லத்து வேறிருந்து உண்ணும் வெருக்குக்கண் வெங்கருணை வேம்பாம்; - விருப்புடைத் தன்போல்வார் இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை என்போடு இயைந்த அமிழ்து. (இ-ள்.) விருப்பு இலார் இல்லத்து - (தன்மேல்) அன்பில்லாதவர்களுடைய வீட்டில், வேறு இருந்து, வேறாயிருந்து, உண்ணும் -, வெருகு கண் - பூனைக்கண்னைப் போன்ற, வெம்கருனை - விரும்பத் தக்க பொரிக்கறியுணவு, வேம்பு ஆம் - விருப்பு உடை தன்போல்வார் இல்லுள் (தன்மேல்) விருப்பமுள்ள தன்னோடொத்தவருடைய வீட்டில் (உண்ணப்படும்) தயங்கு நீர் - தெளிந்த நீரிலேயுள்ள, தண் புற்கை - குளிர்ச்சியான புல்லரிசிக்கூழானது, என்போது இயைந்த - உடம்பிற்குப் பொருந்தின, அமிழ்து - அமிர்தமாகும், எ-று. வேறிருத்தலாவது - அன்பிற்குத்தக்க வுபசாரம் பெறாமலிருத்தல். ஒருவித பளபளப்பினால் பூனைக்கண் - கருனைக்கு உவமை யாயிற்று. வெருகு என்பதில் ககரம் வேற்றுமைச் சந்தியில் மிக்கது. "நெடி லோடுயிர்த்தொடர்" என்கிற [நன். உயிர் புணர். சூ. 33ன்] உரையைக் காண்க. விருப்பு - விரும்பு என்னு முதனிலைத் தொழிற்பெயர் வலிந்தது. வேம்பு, அமிழ்து - உவமையாகு பெயர்கள். தனக்கு அவர்கள் மேலுள்ளது போல் தன்மேல் அவர்களும் அன்பு கூர்ந்தவரா யிருக்கவேண்டுமென்பது "விருப்புடைத் தன்போல்வர்" என்று சொல்லப் பட்டது. என்பு - உடம்புக்கு ஆகுபெயர்; "என்பு முரியர் பிறர்க்கு". 22. நட்பாராய்தல்
[அதாவது சிநேகிக்கத்தக்க குணமிருப்பதைத் தெரிந்து கொள்வது.]
211. கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மைஎஞ்ஞான்றும் குருத்திற் கரும்புதின் றற்றே; - குருத்திற்கு எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும் மதுரம் இலாளர் தொடர்பு. (இ-ள்.) கருத்து உணர்ந்து - (நூல்களின்) உட்பொருளை அறிந்து, கற்று அறிந்தார் கேண்மை - படித்தெடுத்தவரோடு கொண்ட சிநேகம், எஞ்ஞான்றும் - எப்போதும், குருத்தின் கரும்பு தின்றது அற்று - குருத்திலிருந்து கரும்பைத் தின்றாற் போலும்; என்றும் - எக்காலத்தும், மதுரம் இலாளர் தொடர்பு - (கல்வியறிவாகிய) இனிப்பில்லாதவரோடு கொண்ட சிநேகம், குருத்திற்கு -, எதிர் செல - எதிரே செல்லும்படியாக, [அடியிலிருந்து என்கிறபடி], தின்று அன்னதகைத்து - தின்றாற் போலிருக்கிற குணமுள்ளது, எ-று அரோ - அசை. கரும்பைக் குருத்திலிருந்து தின்றால் வரவர இனிமை யதிகமாவதுபோலே கற்றோர் கேண்மையு நாளுக்குநாளினிப்பாகும்; அதற்கு எதிர்செலத்தின்றால் வர வர இனிமை குறைவது போல் கல்லாதார் நட்பு நாளுக்குநாள் உருசி குறைந்து வெறுக்கப்படும் என்பதாம். இக்கருத்தே கல்வியில் எட்டாம் பாட்டிலும் சொல்லப்பட்டது. அற்றே என்பதில் ஏகாரம் தேற்றத்தில் வந்ததென்னலாம். உணர்ந்து என்னும் எச்சம் சற்று என்பதைக் கொண்டது. அறிந்தார் என்பதற்கு காரியா காரியங்களை அறிந்தவர்கள் என்பது பொருள். இதுதான் படித்தெடுத்தவர் என்று கூறப்பட்டது. உட்பொருள் தெரிய நூல்களைக் கற்று நன்மை தீமைகளைப் பகுத்தெடுக்குந் தன்மையுள்ளவர்கள் என்பது திரண்ட கருத்து. தகைத்து - குறிப்புமுற்று, தகை - பகுதி, து - ஒன்றன்பால் விகுதி.
212. இற்பிறப்பு எண்ணி இடைதிரியார் என்பதோர் நற்புடை கொண்டமை யல்லது - பொற்கேழ் புனலொழுகப் புள்ளரியும் பூங்குன்ற நாட! மனமறியப் பட்டதொன் றன்று. (இ-ள்.) பொன் கேழ் - பொன்னிறமுள்ள, புனல் ஒழுக - அருவி நீர் பெருக, புள் இரியும் - பறவைகள் ஓடுகின்ற, பூ குன்ற நாட - அழகான மலை சூழ்ந்த நாடுடையவனே!, இல் பிறப்பு எண்ணி - (அவருடைய) நற்குடிப்பிறப்பை எண்ணி, இடை திரியார் - நடுவில் மாறார்கள், என்பது ஓர் நல்புடை - எண்று சொல்லப்பட்ட ஒரு நல்ல பக்ஷத்தை, கொண்டமை அல்லது - (சிநேகிப்பதற்கு ஏதுவாகக்) கொண்டதேயல்லாமல், மனம் அறியப்பட்டது ஒன்று அன்று - அவருடைய மனநிலை யறியப்பட்டதென்கிற ஒருபக்ஷம் அல்ல, எ-று. முற்பாட்டில் கூறியபடி சிநேகிப்பதற்கு கல்வி யறிவு காரணமானது போல் நற்குலப்பிறப்பும் காரணமாதலால் நற்குடிப் பிறந்தவர் மாறமாட்டாரென்ற உறுதியினால் சிநேகிக்கலாம்; மனம் அறிவது அசாத்தியம் என்கிறபடி. பொன் மிகுதி பற்றி அந்நிறமுள்ள நீர் ஓடி வரக்கண்டு இது யாதோ என அஞ்சிப் பறவைகள் ஓடுகின்றன என மலையைச் சிறப்பித்தது. [உயிர் புணர் சூ. 50ம்] விதியால் பூங்குன்ற என மெலிமிகுந்தது. கொண்டமை - தொழிற்பெயர்.
213. யானை யானையவர் நண்பொரிஇ நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கும் நாய். (இ-ள்.) யானை அனையவர் நண்பு - யானை போன்றவர்களுடைய நேசத்தை, ஒரீஇ - விட்டு, நாய் அனையார் கேண்மை - நாய் போன்றவர்களுடைய சிநேகத்தை, கெழீஇ கொளல் வேண்டும் - சேர்த்துக் கொள்வது ஆவசியகம்; (ஏனெனில்) யானை -, அறிந்து அறிந்தும் - பலதரம் அறிந்திருந்தும், பாகனையே கொல்லும் - (தனக்கு உணவு கொடுத்துக் காக்கிற) பாகனையே கொல்கின்றது; எறிந்த வேல் - (தன்னையுடையவன்) பிரயோகித்த ஆயுதமானது, மெய்யது ஆ - தன் உடலில் பொத்ததாயிருக்கவும், நாய் -, வால் குழைக்கும் - வாலையாட்டும், எ-று. பாகனையே - இங்கு ஏகாரம் சிறப்புப் பொருளில் வந்ததாக் கொளல் வேண்டும். மெய்யது - குறிப்பு வினையாலணையும் பெயர், சினையடி யாப்பிறந்த பெயர் என்பது நேர்.
214. பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில் சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்; - பலநாளும் நீத்தார் எனக்கை விடலுண்டோ , தம்நெஞ்சத்து யாத்தாரோடு யாத்த தொடர்பு. (இ-ள்.) பல நாளும் - எந்நாளும், பக்கத்தார் ஆயினும் - அருகிலிருப்பவரானாலும், நெஞ்சில் - மனதில், சில நாளும் - சொற்ப தினங்களாகிலும், ஒட்டாரோடு - பொருந்தாதவர்களோடு, ஒட்டார் - சேரமாட்டார்கள். (புத்திசாலிகள்), தம் நெஞ்சத்து - தமது மனசிலே, யாத்தாரோடு - சேர்க்கப்பட்டவர்களோடு, [பொருந்தினவர்களோடு என்றபடி], யாத்த தொடர்பு - சேர்த்த சிநேகத்தை, பல நாளும் நீத்தார் என - பலகாலமும் (தம்மை) விட்டிருப்பவரென்று, கை விடல் உண்டோ - விட்டுவிடுவது இருக்குமா [இல்லை], எ-று. மனம் பொருந்தாதவர் எத்தனை காலம் கிட்ட விருந்தாலும் அவரை யோக்கியர் நேசிக்கமாட்டார். மனம் பொருந்தினவர் எவ்வளவுகாலம் விட்டிருந்தாலும் அவர் சிநேகத்தைக் கைவிடமாட்டார்கள் என்பது கருத்து. நீத்தார் - நீ - பகுதி, ஆர் - விகுதி, தகரங்கள் சந்தியும் இடைநிலையும். யாத்தார் - யா - பகுதி, மற்றவை முன் போல்.
215. கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; - தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை நயப்பாகும் நட்பாரும் இல். (இ-ள்.) கோட்டு பூ போல - கொம்பிலிருக்கிற பூவைப் போலே, மலர்ந்து - (முன்னே) முகமலர்ந்து, பின் கூம்பாது - பின்பு குவியாமல், வேட்டதே வேட்டது - விரும்பினதே விரும்பினதா யிருப்பது, நட்பு ஆட்சி ஆம் - சிநேக பரிபாலனஞ் செய்வதாம்; தோட்ட - தோண்டப்பட்ட, கயம் பூபோல் - குளத்திலிருக்கும் பூவைப் போலே, முன் மலர்ந்து பின் கூம்பு வாரை - முதலில் முகமலர்ச்சியைக் காட்டிப் பின்பு முகம் சுருங்கிப் போகின்றவர்களை, நயப்பாரும் நட்பாரும் இல் - விரும்புகின்றவர்களும் சிநேகிக்கின்றவர்களும் இல்லை, எ-று. ஒருவரைக் கண்டவுடனே முகமலர்ச்சியோடு விரும்பியது மாறாமலிருந்தால் அதுதான் சிநேக குணம், அப்படியின்றி முன் சந்தோஷங்காட்டிப் பின் வெறுப்படைவது சிநேக குணமல்ல என்பது கருத்து. வேட்டது - வேள் - பகுதி, ட் - இடைநிலை, அ - சாரியை, து - விகுதி, ள் ட் ஆனது சந்தி, தொழிற்பெயர்; விருப்பம் என்கிறபடி தோட்ட - தொடு என்னு முதனிலை முதனீண்டு டகரமிரட்டிக் காலங் காட்டியது; பெயரெச்சம்.
216. கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை இடையாயார் தெங்கின் அனையர்; - தலையாயார் எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே, தொன்மை யுடையார் தொடர்பு. (இ-ள்.) கடை ஆயார் - கீழ்த்தரமானவர்கள், நட்பில் - சிநேகத்தில், கமுகு அனையர் - பாக்குமரத்தை ஒத்தவர், இடை ஆயார் - மற்ற நடுத்தரமானவர், தெங்கின் அனையர் - தென்னை மரத்தை யொத்தவர்; தலை ஆயார் - முதற்றரமானவர்கள்; எண் அரு பெண்ணை போன்று - எண்ணுதற்கு அருமையான பனைமரத்தை ஒத்து (இருப்பவர்); தொன்மை உடையார் தொடர்பு - பழமை யுடையவருடைய சிநேகம், இட்ட ஞான்று - செய்த காலத்தில், இட்டதே - செய்ததே, [பின்பு ஒரு காலும் உபசரணையை வேண்டுவதன்று என்கிறபடி], எ-று. இப்படிச் சொன்னதனால் ஒரு நாள் உபசரணை தவிர்த்தாலும் பாக்குமரம் பயன் கெடுவதுபோல் கீழோர் சிநேகம் கெடுமெனவும், இடையிடையே உபசரணை யில்லாமற் போனால் தெங்கு பழுது படுவதுபோல் மத்திமர் சிநேகம் பழுதாமெனவும் குறிப்பிக்கப்பட்டது. தலையாயாராகிய தொன்மையுடையார் தொடர்பு எனக் கூட்டியுமுரைக்கலாமாயினும் "எடுப்பழிவுளது" என்னுங் குற்றம் வரும் என அறிக. வேறு வகை யுரைப்பாரு முளர், அதுவுங் குற்றத்திற்கே யிடமாம். இருப்பவர் என ஒரு சொல் வருவிக்கப்பட்டது. பழமையாவது ஒரு கால் செய்த நட்பைப் பாராட்டுந் தன்மை இட்டநாளிட்டதே யன்றிப் பின் யாதோ ருபசரணையை வேண்டாதென்னுஞ் சிறப்பு நோக்கித்தான் எண்ணரும் பெண்ணை என்னப்பட்டது.
217. கழுநீருள் காரட கேனும் ஒருவன் விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்; - விழுமிய குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார் கைத்துண்டல் காஞ்சிரங் காய். (இ-ள்.) கழு நீருள் கார் அடகு ஏனும் - அரிசி கழுவிய நீர்ல் சமைத்த கறுத்த இலைக்கறியானாலும், ஒருவன் -, விழுமிது ஆ - சிறப்பாக [பிரியமாக], கொள்ளின் - ஏற்றுக் கொண்டால், அமிழ்து ஆம் - அமிருதம் போலாம்; விழுமிய - சிறந்த, குய் - தாளிப்புள்ள, துவை - கறிகள், ஆர் - நிறைந்த, வெண் சோறே ஆயினும் - வெண்மையான நல்லரிசிச் சோறே யானாலும், மேவாதார் - நேசியாதவருடைய, கைத்து - பொருளாகிய உணவை, உண்டல் - புசித்தல், காஞ்சிரங்காய் - எட்டிக்காயைத் தின்பது போலாம், எ-று. உணவிலுள்ள வுருசியும், சிநேக குணம் பற்றியே சிறக்கும் என்பது கருத்து. விழுமிது - விழுமு - பகுதி, இன் - இடைநிலை, ஈறு தொக்கது, து - விகுதி.
218. நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்? சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு. (இ-ள்.) நாய் கால் சிறு விரல் போல் - நாயின் கால்களிலுள்ள சிறிய விரல்களைப் போலே, நன்கு அணியர் ஆயினும் - மிகவும் நெருக்கமுள்ளவரா யிருந்தாலும், ஈ கால் துணையும் - ஈயின் காலளவாகிலும், உதவாதார் நட்பு - உதவி செய்யாதவர்களுடைய சிநேகம், என் ஆம் - என்ன பயனாம்; செய் விளைக்கும் - கழனியை விளையும்படி செய்கின்ற, வாய்க்கால் அனையார் தொடர்பு - நீர்க்காலை யொத்தவர்களுடைய சிநேகத்தை, சேய்த்து ஆனும் - தூரத்திலிருப்பதானாலும், சென்று கொளல் வேண்டும் - போய்க் கொண்டு வர வேண்டும், எ-று. சேய்த்து - குறிப்பு முற்று, சேய் - பண்படி, பகுதி.
219. தெளிவிலார் நட்பின் பகைநன்று; சாதல் விளியா அருநோயின் நன்றால் - அளிய இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்லா புகழ்தலின் வைதலே நன்று. (இ-ள்.) தெளிவு இலார் நட்பின் - விவேக மில்லாதவருடைய நேசத்தைக் காட்டிலும், பகை நன்று - அவருடைய விரோதம் நல்லது; விளியா - தீராத, அரு நோயின் - அருமையான வியாதியைக் காட்டிலும், சாதல் நன்று - செத்துப் போவது நல்லது; அளிய - (மனம்) வெந்து போம்படி, இகழ்தலின் - நிந்திப்பதைக் காட்டிலும், கோறல் - கொல்லுதல், இனிது - நல்லது; இல்ல புகழ்தலின் - இல்லாத குணங்களைச் சொல்லிப் புகழ்வதைப் பார்க்கிலும், வைதலே - திட்டுவதே, நன்று - நல்லது, எ-று. மற்று - அசை. மூடனுடைய சிநேகத்தினால் ஏதாகிலும் துன்பம் அனுபவிக்க வேண்டி வரும்; பகையினால் ஒன்று மில்லையாம்; ஆந்தனால் தெளிவிலார் நட்பின் பகை நன்று என்றார். கோறல் - கொல் - பகுதி, தல் - விகுதி, பகுதி முதனீட்சி விகாரம்.
220. மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப் பொரீஇப் பொருள்தக்கார்க் கோடலே வேண்டும் பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா மரீஇப் பின்னைப் பிரிவு. (இ-ள்.) பலரோடு - அநேகரோடு, மரீஇ - சேர்ந்து, பல் நாள் - அநேகநாள், முயங்கி - கலந்து, பொரீஇ - (மனநிலையில்) ஒப்பாகி, பொருள் தக்கார் - பிரயோஜனமாகத் தக்கவர்களை, கோடலே வேண்டும் - கொள்வதே ஆவசியகம்; பரீஇ - கடித்து, உயிர் செகுக்கும் - உயிரை நாசப்படுத்துகின்ற, பாம்பொடும் - பாம்போடு கூடவும், மரீஇ - சேர்ந்து, பின்னை பிரிவு - பின்பு பிரிந்து போவது, இன்னா - பிரியமாகமாட்டாது, எ-று. பலரோடும் பழகிப் பார்த்து உபயோகமானவர்களைச் சிநேகித்துக் கொள்ள வேண்டும். கெட்ட குணமுள்ள பாம்போடாயினும் நேசித்துப் பிரிவது துக்கமா யிருக்குமானால் மேலானவர்களைப் பிரிவது மகா துக்கமல்லவா என்கிறபடி. பொரீஇ - பொருவு - பகுதி, மற்றவை செய்யு ணிலையில் வந்த விகாரம். மற்ற வினையெச்சங்களு மிப்படியே. இன்னா - இன்னாது என்பதில் ஈறு தொகுத்தல். 23. நட்பிற் பிழை பொறுத்தல்
[அதாவது சிநேகித்தவர் தமக்குச் செய்யுங் குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுதல்.]
221. நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும் நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு புல்லிதழ் பூவிற்கும் உண்டு. (இ-ள்.) நல்லார் என - நல்லவர்களென்று; தாம் நனி விரும்பி கொண்டாரை - தாங்களே மிகவும் இச்சித்துச் சிநேகங் கொண்டவர்களை, அல்லார் எனினும் - நல்லவரல்லாதவரா யிருந்தாலும், அடக்கி கொளல் வேண்டும் - அக்குற்றங்களைத் (தம்மனதில்) அடக்கி நட்பாகவே கொள்ள வேண்டும்; நெல்லுக்கு உமி உண்டு -, நீர்க்கு நுரை உண்டு -, பூவிற்கும் - புஷ்பத்திற்கும், புல் இதழ் உண்டு - (ஈனமான) புற இதழ் இருக்கின்றது, எ-று. யாரும் விரும்பிக் கொள்ளத்தக்க நெல் நீர் பூ இவைகளிலும் உபயோகமற்ற தாழ்மையான பொருள்க ளிருக்கின்றமையால் சில குணங்களைக் கொண்டு நாம் சிநேகித்தவரிடத்தில் உள்ள குற்றங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றபடி, "குற்றம் பார்க்கிற் சுற்றமில்லை". அவர்களுக்கு ரகசியத்தில் புத்தி சொல்லி அடங்கச் செய்து கொள்ள வேண்டுமெனவு முரைக்கலாம்.
222. செறுத்தோறு உடைப்பினும் செம்புனலோடு ஊடார் மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர் வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு. (இ-ள்.) செறுத்தோறு உடைப்பினும் - (தாங்கள்) கட்டுந்தோறும் உடைத்துக் கொண்டு போனாலும், நீர் நசை வாழ்நர் - ஜலத்தை விரும்பி வாழ்கின்றவர்கள், செம்புனலோடு - நல்ல நீரோடு, ஊடார் - பிணங்காதவராய், மறுத்தும் சிறை செய்வர் - மறுபடியும் கட்டிக் கொள்வார்கள்; (அப்படியே) வெறுப்ப வெறுப்ப செயினும் - வெறுக்கும்படியான காரியங்களை அடிக்கடி செய்தாலும், தாம் வேண்டி - தாங்கள் விரும்பி, தொடர்பு கொண்டார் - சிநேகங் கொண்டவர்கள், பொறுப்பர் - பொறுத்துக் கொள்ளுவார்கள், எ-று. வெறுப்ப என்பது பலவின்பால் வினையாலணையும் பெயர்; அடுக்கு பலமுறை செய்தலாகிய பொருணிலையால் வந்தது. அதனை வினையெச்சமா வைத்து துன்பங்களை எனச் செயப்படுபொருள் வருவித்து உரைப்பதும் அமையும். அந்தப் பக்ஷத்தில் அடுக்கு மிகுதிப் பொருளில் வந்ததாம்.
223. இறப்பவே தீய செயினும் தம் நட்டார் பொறுத்தல் தகுவதொன்று அன்றோ - நிறக்கோங்கு உருவவண்டு ஆர்க்கும் உயர்வரை நாட! ஒருவர் பொறைஇருவர் நட்பு. (இ-ள்.) தன் நாட்டார் - தன்னுடைய சிநேகிதர், இறப்ப தீய செயினும் - மிகவுந் தீங்குகளைச் செய்தாலும், பொறுத்தல் - பொறுத்துக் கொள்ளுதல், தகுவது ஒன்று அன்றோ - தகுதியான ஒரு காரியமல்லவா; நிறம் கோங்கு - நல்ல நிறமுள்ள கோங்கம் பூவிலே, உருவம் வண்டு ஆர்க்கும் - அழகுள்ள வண்டுகள் சப்திக்கப் பெற்ற, உயர்வரை நாட - உயர்வான மலைகளுள்ள நல்ல நாட்டை யுடையவனே!, ஒருவர் பொறை - ஒருவர் பொறுப்பது, இருவர் நட்பு - இருவருடைய சிநேகம் ஆகின்றது, எ-று. ஏ - அசை. பொறை - தொழிற்பெயர், பொறு - பகுதி, ஐ - விகுதி.
224. மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தம் கடுவிசை நாவாய் கரையலைக்கும் சேர்ப்ப! விடுதற்கு அரியார் இயல்பிலரேல் நெஞ்சம் சுடுதற்கு மூட்டிய தீ. (இ-ள்.) மடி திரை தந்திட்ட - மடிந்து வீழ்கின்ற அலைகள் கொடுத்த, வான் முத்தம் - பிரகாசமான கிரணங்களையுடைய முத்துக்களை, கடு விசை நாவாய் - மிகுந்த வேகமுள்ள கப்பல்கள், கரை அலைக்கும் சேர்ப்ப - கரைகளிலே அலையச் செய்கின்ற கடற்கரை யரசனே!, விடுதற்கு அரியார் - (சிநேகம்) விடக்கூடாதவர்கள், இயல்பு இலரேல் - சற்குணம் இல்லாதவரானால், (அவர்) நெஞ்சம் சுடுதற்கு - மனதைச் சுடுவதற்கு, மூட்டிய தீ - மூட்டப்பட்ட நெருப்புப் போலாவர், எ-று. அலைகளிலே இருந்த முத்துக்கள் கப்பலின் விசையால் கரையில் தள்ளப்பட்டு அலைந்து கொண்டிருக்கும்படியான நாடு என்று சிறப்புக் கூறியது. நேசித்தவரை விடக்கூடாதென்று முன் சொன்னோம் ஆனாலும் அவர்கள் சற்குணமிலராயின் மனதிற்கு மிகத் துயரமாயிருக்கும். எனவே சிநேகித்தவர் தவறின்றி நடக்க வேண்டும் என்றதாயிற்று. தந்திட்ட - இதில் இடு - துணைவினை.
225. இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப் பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்; - பொன்னொடு நல்லிற் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம் இல்லத்தில் ஆக்குத லால். (இ-ள்.) பொன்னொடு நல் இல் சிதைத்த - பொன்னோடு கூட நல்ல வீட்டைக் கட்டழித்த, தீ - நெருப்பை, நாள்தோறும் - ஒவ்வொரு நாளும், நாடி - விரும்பி, தம் இல்லத்தில் - தமது மாளிகையில், ஆக்குதலால் - (யாவரும்) உண்டாக்குவதனால், இன்னா செயினும் - துன்பங்களைச் செய்தாலும், விடற்பாலர் அல்லாரை - விடக்கூடாதவர்களை, பொன்னாக போற்றிக் கொளல் வேண்டும் - பொன்போல் நினைத்து மேலாகக் கொள்ள வேண்டும், எ-று. வீட்டையும் பொன்னையும் அழித்ததென்று கைவிடாமல் நெருப்பைச் சனங்கள் தினம் வீடுகளில் உண்டாக்காமற் போனால் எந்தச் சுகமும் வாய்க்காது, அதுபோல் துன்பஞ் செய்தாலும் உதவியான சிநேகிதரை கைவிடக் கூடாதென்பது கருத்து. விடலாகிய பான்மையுடையவர் விடற்பாலர்; பான்மை - இயல்பு. முற்பாட்டிற் கூறியபடி. நெஞ்சஞ் சுடுதற்கு மூட்டிய தீயானாலும் பொறுத்தல் கடமை என்றார்.
226. இன்னா செயினும் விடுதற்கு அரியாரைத் துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர் விண்குத்து நீள்வரை வெற்ப! களைபவோ கண்குத்திற்று என்றுதம் கை. (இ-ள்.) துன் அரு சீர் - சேருதற்கரிய சிறப்புள்ள, விண்குத்து - வானத்தைக் குத்துகின்ற, நீள் வரை - நீண்ட மூங்கிலை யுடைத்தான, வெற்ப - மலைக்கு உரியவனே!, இன்னா செயினும் - துன்பங்களைச் செய்தாலும், விடுதற்கு அரியாரை - விடக்கூடாதவர்களை, துன்னா - சேராமல், துறத்தல் - விட்டுவிடல், தகுவதோ - தகுந்ததோ [அன்று], கண் குத்திற்று என்று - கண்ணைக் குத்தினது என்று, தம் கை - தமது கையை, களைபவோ - நீக்கிப் போடுவார்களோ (உலகத்தார்), எ-று. "னலமுன்றனவும்" என்கிற [மெய். புணரியல். 34வது சூத்திரத்தினால்] த ற ஆகி "குறில் செறியாலள" என்கிற [மெய். புணரியல். சூ. 26னால்] கெட்டு, துறத்தறகுவதோ என்றாயிற்று.
227. இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும் கலந்து பழிகாணார் சான்றோர்; - கலந்தபின் தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார் தாமும் அவரின் கடை. (இ-ள்.) இலங்கு நீர் தண் சேர்ப்ப - விளங்குகின்ற ஜலத்தினால் குளிர்ச்சியான கடற்கரை யுடையவனே!, இன்னா செயினும் -, சான்றோர் - பெரியோர், கலந்து - சிநேகித்து, பழி காணார் - குற்றத்தைப் பார்க்க மாட்டார்; கலந்த பின் - நேசித்த பின்பு, தீமை எடுத்து உரைக்கும் - (சிநேகிக்கப்பட்ட வருடைய) குற்றங்களை எடுத்துச் சொல்லுகின்ற, திண் அறிவு இல்லாதார் தாமும் - திடமான அறிவில்லாதவர்களும், அவரில் கடை - தீமை செய்யு நேசரைக் காட்டிலுந் தாழ்மையானவர், எ-று. தாம் - அசை. பழி - முதனிலைத் தொழிற்பெயர், பழிக்கப்படுவதற்கு ஆகுபெயர்; செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயரென்றுஞ் சொல்லலாம்.
228. ஏதிலார் செய்தது இறப்பவே தீதெனினும் நோதக்கது என்னுண்டாம் நோக்குங்கால்! - காதல் கழுமியார் செய்த கறங்கருவி நாட! விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று. (இ-ள்.) கறங்கு அருவி நாட - ஒலிக்கின்ற மலையருவிகளுள்ள நாட்டுக் குடையவனே!, ஏதிலார் செய்தது - அயலார் செய்தது - அயலார் செய்தது, இறப்பவே தீது எனினும் - மிகவுங் கொடிய தானாலும், நோக்குங்கால் - (விதியை) யோசித்தால், நோதக்கது - வெறுக்கத்தக்கது, என் உண்டாம் - என்ன உண்டு, காதல் கழுமியார் - அன்பு மிகுந்தவர், செய்த - செய்த (தீமை), நெஞ்சத்துள் நின்று - மனதில் நின்றால் [சிந்தித்தால்], விழுமிது ஆம் - சிறந்த தாய்விடும், எ-று. அயலார் செய்ததே யோசிக்குங்கால் வெறுக்கத் தகாததானால் அன்பர் செய்தது பிரியமாகும் என்பது கருத்து. செய்தது என்பது ஈறு குறைந்தது; அல்லது விழுமிது என்பது சிறந்த பொருளுக்கு ஒரு பெயராகக் கொள்ளத்தக்கது. நோதற்குத் தக்கது நோதக்கது; நோ - முதனிலைத் தொழிற் பெயர், நான்கனுருபு தொக்கு; தக்கதோடு ஒரு மொழித் தன்மைப் பட்டதெனக் கொள்க. கழுமியார் - கழுமு - பகுதி, இன் - ஈறு குறைந்தது, ஆர் - விகுதி.
229. தமரென்று தாம்கொள்ளப் பட்டவர் தம்மைத் தமரன்மை தாமறிந்தார் ஆயின், - அவரைத் தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை தம்முள் அடக்கிக் கொளல். (இ-ள்.) தமர் என்று - தம் உறவினர் என்று, தாம் கொள்ளப்பட்டவர் - தாமே உறவு கொள்ளப் பட்டவர், தம்மை - தம்மிடத்தில், தமர் அன்மை - தம்முறவிற்கு ஏலாமை செய்ததை, தாம் அறிந்தார் ஆயின் - தாம் அறிந்து கொண்டாரானால், அவரை - அப்படிச் செய்தவரை, தமரினும் நன்கு மதித்து - தம்மவரினு மேலாகக் கொண்டு, தமர் அன்மை - (அவரிடம் காணப்பட்ட) தமரன்மையை, தம்முள் - தம்மனதில், அடக்கி கொளல் - அடக்கிக் கொள்க, எ-று. தமரன்மை அதன் காரியத்திற்கு ஆயிற்று. தம்மை - வேற்றுமை மயக்கம் அடக்கிக் கொளல் - வியங்கோள் வினைமுற்று, [வினை. சூ. 19 உரையைக் காண்க].
230. குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை நட்டபின் நாடித் திரிவேனேல் - நட்டான் மறைகாவா விட்டவன் செல்வழிச் செல்க அறைகடல்சூழ் வையம் நக. (இ-ள்.) ஒருவனை நட்டபின் - ஒருவனை நேசித்த பிறகு, குற்றமும் - (அவனிடம்) குற்றத்தையும், ஏனை குணமும் - மற்ற குணத்தையும், நாடி திரிவேனேல் - ஆராய்ந்து கொண்டு திரிவேனேயானால், நட்டான் - நேசித்தவனுடைய, மறை - ரகசியத்தை, காவா விட்டவன் - காக்காமல் வெளிவிட்ட பாவி, செல் உழி - போம் கதியில், அறை கடல் சூழ் வையம் நக - ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த பூமி (இகழ்ந்து) சிரிக்கும்படி, செல்க - போகக்கடவேன், எ-று. எவ்வித ரகசியத்தை வெளியிடுவதினாலே நேசித்தவனுக்குத் துன்பமுண்டாகுமோ அவ்வித ரகசியத்தை வெளியிட்ட பாவி போகத்தக்க நரகந்தான் சிநேகித்தபின் அவனுடைய குண தோஷங்களைச் சொல்லிக் கொண்டு திரிகிறவனுக்கும் என்றபடி. மறை - செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயர்; மறைக்கப்படுவது. நக - செயவெனெச்சம், நகு - பகுதி, அ - விகுதி, குற்றுகர விதி பெற்றது. செல்வுழி - இங்கே வகரம் தோன்றியதற்கு விதி, [உயிர் புணர். 13ம் சூத்திர வுரையிற்] காண்க. 24. கூடா நட்பு
[அதாவது பொருந்தாத சிநேகம் இப்படிப்பட்டதெனத் தெரிந்து கொள்ளுதல்.]
231. செறிப்பில் பழங்கூரை சேறணை யாக இறைத்துநீர் ஏற்றும் கிடப்பர், - கறைக்குன்றம் பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட! தங்கருமம் முற்றும் துணை. (இ-ள்.) கறைக் குன்றம் - கறுப்பான மலைகளிலே, பொங்கு அருவி - மிகுந்த அருவிகள், தாழும் - இழியாநின்ற, புனல் - நீரோடு கூடிய, வரை - மலைகளுள்ள, நல் நாட - நல்லதேசத்தரசனே!, செறிப்பு இல் - கட்டு இல்லாத, பழங்கூரை - பழைய கூரை வீட்டிலே, சேறு அணை ஆக - சேற்றினால் அணை உண்டாக்கி, நீர் இறைத்தும் - (அதில் வீழ்ந்த) நீரைப் புறத்தில் இறைத்தும், (நீர்) ஏற்றும் - (மேல் விழு) நீரை உள்ளே விழவொட்டாமல் ஏற்றும், தம் கருமம் - தமது காரியம், முற்றும் துணை - நிறைவேறுமளவும், கிடப்பர் - இருப்பார்கள் (அதற்குடையவர்கள்), எ-று. பழுதுபட்ட கூரை வீட்டிலுள்ளவர் மழை பெய்கையில் அதற்குப் பழுது வராமல் காத்து நிற்பது போல் நட்டாருடைய காரியத்தை முற்றுமளவுங் காப்பவர் சிநேகிக்கத் தக்கவரேயன்றி அதற்கிசையாதவர் அல்லர் என்பது கருத்து. அல்லது மழை வருமுன்னமே பழுதுபட்ட வீட்டைச் செம்மை செய்து கொள்ளாமல் வந்த போது வருந்துகின்றவரைப் போன்ற மூடர் நேசிக்கத்தகாதவர் என்னவுமாம். ஆக என்பதற்கு ஆகச் செய்து என்று பொருள் கொள்ளப்பட்டது.
232. சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய் மாரிபோல் மாண்ட பயத்ததாம் - மாரி வறத்தக்கால் போலுமே வாலருவி நாட! சிறந்தக்கால் சீரிலார் நட்பு. (இ-ள்.) சீரியார் கேண்மை - சிறந்தவர்களுடைய சிநேகம், சிறந்த சிறப்பிற்று ஆய் - மேம்பட்ட சிறப்புள்ளதாய், மாரி போல் - மழை போலே, மாண்ட - மாட்சிமைப்பட்ட, பயத்தது ஆம் - பிரயோசனமுள்ளதாகும்; வால் அருவி நாட - வெண்மையான அருவியுள்ள நாடுடையவனே! சீர் இலார் நட்பு - சற்குணமில்லாதவருடைய சிநேகம், சிறந்தக்கால் - மிகுந்தால், மாரி - மழை, வறந்தக்கால் போலும் - இல்லாமற் போனால் (இருக்கு நிலைமை) போல அப்பிரயோசனமாம், எ-று. சிறப்பிற்று - சிறப்பு - பகுதி, இன் - சாரியை, று - விகுதி, ன் ற் ஆனது சந்தி; குறிப்பு முற்று, அல்லது குறிப்பு முற்றாலணையும் பெயர். மாண்ட - மாண் - பகுதி.
233. நுண்ணுணர்வி னாரோடு கூடி நுகர்வுடைமை விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால் - நுண்ணூல் உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப் புணர்தல் நிரயத்துள் ஒன்று. (இ-ள்.) நுண் உணர்வினாரொடு கூடி - நுட்பமான அறிவுடையவர்களோடு சேர்ந்து, நுகர்வு உடைமை - புசிப்பதைக் கொண்டிருத்தல், விண் உலகே ஒக்கும் விழைவிற்று - தேவலோகத்தையே ஒத்திருக்கும்படியான மேன்மையுள்ளது ஆம்; நுண் நூல் உணர்வு - நுட்பமான சாஸ்திரஞானம், இலர் ஆகிய - இல்லாதவர்களாகிய, ஊதியம் இல்லார் - பயனற்றவர்களை, புணர்தல் - சேர்தல், நிரயத்துள் ஒன்று - நரகங்களுள் ஒன்றாம், எ-று. ஆல் - அசை. உணர்விற்கு நுட்பமாவது உள்ளுறையைக் கிரகித்தல், நூலுக்கு நுட்பம் பொறிக்கும் மனதிற்கும் சாதாரணமா யெட்டாதவைகளை அறிவிப்பது விண்ணுலகே - ஏகாரம் - பிரிநிலை.
234. பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல் ஒருபொழுதும் சொல்லாதே நந்தும் - அருகெல்லாம் சந்தன நீள்சோலைச் சாரல் மலைநாட! பந்தமி லாளர் தொடர்பு. (இ-ள்.) அருகு எல்லாம் - பக்கங்களிலெல்லாம், சந்தனம் நீள்சோலை - சந்தன மரங்களுடைய பெரிய தோப்புக்களோடு கூடிய, சாரல் மலை நாட - சாரல்களையுடைய மலைகளுள்ள நாட்டரசனே!, பந்தம் இலாளர் தொடர்பு - மனப்பற்றில்லாதவருடைய சிநேகம், வை தீ போல் - வைக்கோலிற் பற்றிய நெருப்பைப் போலே, பெருகுவது போல தோன்றி - வளர்வது போலே காணப்பட்டு, ஒரு பொழுதும் -, செல்லாதே - (காரியத்தில்) உபயோகப்படாமல், நந்தும் - கெடும், எ-று.
235. செய்யாத செய்தும்நாம் என்றலும் செய்தவனைச் செய்யாது தாழ்த்துக் கொண்டு ஓட்டலும் - மெய்யாக இன்புறூஉம் பெற்றி யிகழ்ந்தார்க்கும் அந்நிலையே துன்புறூஉம் பெற்றி தரும். (இ-ள்.) செய்யாத - செய்யக்கூடாதவைகளை, நாம் -, செய்தும் என்றாலும் - செய்வோம் என்று சொல்வதும், செய்வதனை - செய்ய வேண்டியதை, செய்யாது - செய்யாமல், தாழ்த்துக் கொண்டு ஓட்டலும் - நீடிக்கச் செய்து வைப்பதும், மெய்யாக - சத்தியமாகவே, இன்பு உறும் பெற்றி - (ஐம்புலன்களின்) இன்பமுறுந் தன்மையை, இகழ்ந்தார்க்கும் - நீக்கினவர்களாகிய துறவிகளுக்கும், அந்நிலையே - அப்போதே, துன்பு உறும் பெற்றி - துன்பத்தை அடையும் படியான தன்மையை, தரும் - கொடுக்கும், எ-று. செய்யக் கூடாதவைகளைச் செய்வோமென்று வீண் முயற்சி செய்வதும், செய்யத் தக்கவைகளைச் செய்யாமல் சாவகாசப் படுத்திப் போடுவதும் துறந்தவர்களுக்கும் துன்பமுண்டாக்கும் என்றபடி. செய்தும் - தனித்தன்மைப் பன்மை வினைமுற்று, தும் - விகுதியே எதிர்காலங் காட்டும்.
236. ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும் விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார் கருமங்கள் வேறு படும். (இ-ள்.) ஒரு நீர் பிறந்ந்து - ஒரே ஜலத்திலே உண்டாகி, ஒருங்கு - ஒரே விதமாக, நீண்டக்கடைத்தும் - வளர்ந்தாலும், விரி நீர் குவளையை - விஸ்தரித்த நற்குணமுள்ள நீலோற்பலத்தை, ஆம்பல் - ஆம்பற் பூ, ஒக்க அல்லா - ஒக்கமாட்டா; பெரு நீரார் கேண்மை கொளினும் - மிகுந்த சற்குணமுள்ளவருடைய சிநேகத்தைப் பெற்றாலும், நீர் அல்லார் - குணவான்களாகதவருடைய, கருமங்கள் - காரியங்கள், வேறுபடும் - வேறாய்ப்போம், எ-று. குணவான்களோடு கூடியிருக்கிறாரென்று குணமில்லாதவரைத் தக்க காரியங்களில் நட்புக் கொள்ளலாகா தென்பது கருத்து. ஒருங்கு - முதனிலை வினையெச்சப் பொருட்டாய் வந்தது, நீண்டக்கடைத்தும் - இதுவும் ஒருவகை வினையெச்சம்; கடை - விகுதி, து - சாரியை.
237. முற்றல் சிறுமந்தி முற்பட்ட தந்தையை நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக் குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே ஒற்றுமை கொள்ளாதார் நட்பு. (இ-ள்.) முற்று அல் சிறு மந்தி - முதிராத சிறிய குரங்கு, முன்பட்ட தந்தையை - எதிரே நேர்ந்த தன் தந்தையாகிய பெருங்குரங்கை, நெற்று கண்டன்ன விரலால் - பயற்ற நெற்றைக் கண்டாற் போன்ற கைவிரல்களால், ஞெமிர்த்திட்டு - மடங்கச் செய்த, குற்றி பறிக்கும் - குத்தி (அதின் கையிலுள்ளவற்றை) பறித்துக் கொண்டு போகின்ற, மலை நாட - மலையுள்ள நாட்டரசனே!, ஒற்றுமை கொள்ளாதார் நட்பு - தன்னோடு ஒன்றுபடமாட்டாதவருடைய சிநேகம், இன்னாது - இன்பமாயிராது, எ-று. ஏ - அசை. சிறுகுரங்குகள் பெருங்குரங்குகளை யடித்துப் பறிக்கும் படியான பலத்தோடு வளரா நின்ற மலையெனச் சிறப்பித்தது. தான் வருவதற்கு முன்னமே வந்து அங்குள்ள குற்றியைப் பெயர்த்தெடுக்கமாட்டாத கிழக்குரங்கை விரலால் தள்ளித்தான் அக்குற்றியைப் பெயர்த்து எடுக்கும்படியான, சிறு குரங்குள்ள மலையெனவும் பொருள் கொள்ளலாம். முற்று - வினைமுதற்பொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயர். கண்டு என்பதற்கு கட்டியாயிருப்பது பொருளானதைக் கொண்டு நெற்றாகிய கண்டை ஒத்த எனவு முரைக்கலாம்.
238. முட்டுற்ற போழ்தின் முடுகியென் ஆருயிரை நட்டான் ஒருவன்கை நீட்டேனேல் - நட்டான் கடிமனை கட்டழித்தான் செல்வழிச் செல்க நெடுமொழி வையம் நக. (இ-ள்.) முட்டு உற்ற போழ்தின் - (என்னுடைய நண்பன்) சங்கடத்தை அடைந்தபோது, முடுகி - துரிதப்பட்டு, என் ஆர் உயிரை - என்னுடைய அருமையான பிராணனை, நட்டான் ஒருவன் கை நீட்டேனேல் - சிநேகிதனாகிய ஒருவன் கையிற் கொடாமற் போவேனேயானால், நட்டான் - சிநேகிதனுடைய, கடிமனை - காவலுள்ள அல்லது கலியாணஞ் செய்த மனையாளை, கட்டு அழித்தான் - கற்பழித்தபாவி, செல்வுழி - போமிடத்தில், நெடு மொழி வையம் - மிகுந்த பேர்பெற்ற பூமியிலுள்ளோர், நக - சிரிக்கும்படி, செல்க - (நான்) போகக் கடவேன், எ-று. நண்பனுக்குச் சங்கடநேர்ந்தபோது தன் உயிரைக் கொடுத்தாகிலுங் காப்பாற்றாதவன் நட்டான் மனையாளைக் கற்பழித்தவன் செல்லு நரகத்திற் செல்வான் என்றபடி. முட்டு - முதனிலைத் தொழிற்பெயர். அரு உயிர் - நிலைமொழி முதனீண்டு குற்றுகரவிதி பெற்றது; "ஆதிநீடல்" என்பதும், "முற்றுமற்றோரோவழி" என்பதும் விதிகள். கடி என்பது பல குணந் தழுவிய ஓருரிச்சொல் [உரி. சூ. 16].
239. ஆன்படு நெய்பெய் கலனுள் அது களைந்து வேம்படு நெய்பெய் தனைத்தரோ - தேம்படு நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப் புல்லறிவி னாரொடு நட்பு. (இ-ள்.) தேம்படு நல் வரை நாட - தேன் கூடுகள் சேர்ந்த நல்ல மலைநாடனே!, நயம் உணர்வார் - சிநேகமறியும்படியானவர்களுடைய, நண்பு -, ஒரீஇ - நீக்கி, புல் அறிவினாரொடு நட்பு - அற்பஞான முடையவர்களோடு கொண்ட சிநேகம், ஆண் படு நெய் பெய் கலனுள் - பசுவினிடமுண்டாகு நெய்யை ஊற்றியிருந்த மாத்திரத்தில், அது களைந்து - அந்நெய்யை எடுத்துவிட்டு, வேம்பு அடு நெய் பெய்தது அனைத்து - வேம்பைச் சேர்ந்த நெய்யை யூற்றினாற் போலாகும், எ-று அரோ - அசை. [மெய். புணரியல். சூ. 11ன் விதியினால்] தேன்படு தேம்படு ஆயிற்று.
240. உருவிற்கு அமைந்தான்கண் ஊராண்மை யின்மை பருகற்கு அமைந்தபால் நீரளாய் அற்றே தெரிவுடையார் தீயினத்தார் ஆகுதல் நாகம் விரிபெடையோடு ஆடிவிட் டற்று. (இ-ள்.) உருவிற்கு அமைந்தான்கண் - அழகுக்கு ஏற்றவனிடத்து, ஊர் ஆண்மை இன்மை - ஒப்புரவில்லாமையானது, பருகற்கு அமைந்த பால் - குடிப்பதற்கு ஏற்ற பாலானது, நீர் அளாயற்றே - நீர் கலந்தாற் போலாம்; தெரிவு உடையார் - விவேக முடையவர்கள், தீ இனத்தார் ஆகுதல் - தீமையான இனத்தைச் சேர்ந்தவராயிருப்பது, நாகம் - சர்ப்பமானது, விரி பெடையோடு - பெட்டை விரியன் பாம்பொடு, ஆடி விட்டற்று - புணர்ந்து நீங்கினது போலாம், எ-று. நாகம் விரி பெடையோடு புணர்ந்தால் சாகுமென்பார்கள். ஒப்புரவாவது உபகாரஞ் செய்யுங்குணம், சிநேகிப்பதற்கு ரூபமும் ஒரு காரணமாயிருக்க அவனிடத்தில் உபகாரகுணமில்லாமையால் ருசி கெடுதலினால் பால் நீரளாயற்றே யென்றார். அளாய் - வினையெச்சம், யகரமெய் - விகுதி. இன்பவியல் 25. அறிவுடைமை
[அதாவது காரியா காரியங்களைத் தெரிந்து கொள்ளும் படியான புத்தியுள்ளவனாதல்.]
241. பகைவர் பணிவிடம் நோக்கித் தகஉடையார் தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய் இளம்பிறை ஆயக்கால் திங்களைச் சேராது அணங்கருந் துப்பின் அரா. (இ-ள்.) பகைவர் பணிவு இடம் நோக்கி - சத்துருக்கள் தளர்ந்திருக்குமிடம் பார்த்து, தகவு உடையார் - தகுதியுள்ளோர், தாமேயும் நாணி - தாங்களே வெட்கப்பட்டு, தலை செல்லார் - (வெல்வதற்கு) அவ்விடம் போகமாட்டார். காணாய் - பார்; (வெல்வதற்கு) அவ்விடம் போகமாட்டார். காணாய் - பார்; அணங்கு அரும் துப்பின் - வருந்துதலில்லாத சாமர்த்தியமுள்ள, அரா - பாம்பு [இராகு], திங்களை - சந்திரனை, இளம் பிறை ஆயக்கால் - இளம்பிறை யாயிருந்தால், சேராது - (அதனை வருத்தும்படி) போகாது, எ-று. பகைவனானாலும் அவன் இளைத்திருக்குங் காலத்திலே அவனை வெல்ல நினையாமல் இரங்குவது விவேகம் என்பது கருத்து. அணங்கரும் என்பதில் அருமை இன்மைக்குக் கொள்ளப்பட்டது.
242. நளிகடல் தண்சேர்ப்ப! நல்கூர்ந்த மக்கட்கு அணிகலம் ஆவது அடக்கம் - பணிவில்சீர் மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர் கோத்திரம் கூறப் படும். (இ-ள்.) நளி கடல் தண் சேர்ப்ப - அகலமான கடலின் குளிர்ச்சியான கரைக்கரசனே!, நல்கூர்ந்த மக்கட்கு - தரித்திரப்பட்ட மனிதருக்கு, அணிகலமாவது - ஆபரணமாவது, அடக்கம் - அடங்கியிருத்தல்; பணிவு இல் சீர் - அடக்கமில்லாத சிறப்பையுடைய, மாத்திரை இன்றி - அளவில்லாமல், [அளவைக் கடந்து], நடக்குமேல் - நடப்பானாயின், வாழும் ஊர் - (அவன்) வாழ்கின்ற ஊரில், கோத்திரம் - (அவன்) குலம், கூறப்படும் - (இழித்து) சொல்லப்படும், எ-று. தரித்திரனா யிருப்பவன் வீண் பிரசங்கங்களுக்குப் போகாமல் அடங்கியிருப்பது புத்தி; இல்லாமற் போனால் அவனைப் பற்றி அவன் குலமும் இகழப்படு மென்பது கருத்து.
243. எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகாது எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால் தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும் கொன்னாளர் சாலப் பலர். (இ-ள்.) எந்நிலத்து வித்து இடினும் - எந்த நிலத்திலே விதைத்தாலும், காஞ்சிரம் காழ் - எட்டி விதை, தெங்கு ஆகா - தென்னமர மாகமாட்டா; தென் நாட்டவரும் - தென் தேசத்தாரும், சுவர்க்கம் புகுதலால் - சொர்க்கலோகம் சேர்வதனாலே, தன்னால்தான் - தன்னாலேயே, மறுமை ஆகும் - மறுபிறப்பின் கதியுண்டாகும்; வடதிசை பலரும் - வடதிசையிலுள்ள அநேகரும், சால கொன் ஆளர் - மிகவும் (மறுமைக்கு உதவியின்றி) வீண் காலங் கழிப்பவர், எ-று. வித்தினியற்கையேயன்றி மரத்திற்கு நிலத்தினியற்கை யில்லாதது போல மறுமைப்பயனடைய அவரவர் செய்கையே காரணமாவதன்றித் திசையினா லொன்றுமில்லை யென்பதாம். வடநாட்டார்க்கே யன்றித் தென்னாட்டாருக்கு நற்கதியில்லையென யாரோ அக்காலத்திற் சொன்னதைக் குறித்து இப்பாட்டு பாடப்பட்டது போலும். தான் என்பது ஏகாரத்தைப் போலே பிரிநிலையில் வந்தது; தன் + ஆற்றான் எனப் பிரிந்து தான் நடக்கும் வழியால் என்று பொருள் கொள்வதும் பொருந்தும். கொன் - பயனின்மை, அதை யாள்பவர் கொன்னாளர்.
244. வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன் தீஞ்சுவை யாதும் திரியாதாம்; ஆங்கே இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை மனந்தீதாம் பக்கம் அரிது. (இ-ள்.) வேம்பின் இலையுள் கனியினும் - வேப்பிலை மேலே பழுத்தாலும், வாழை - வாழைப் பழமானது, தன் தீம் சுவை யாதும் - தன்னுடைய மதுரமான உருசி சிறிதும், திரியாது - மாறாது; ஆங்கே - அப்படியே, இனம் தீது எனினும் - சேர்ந்த கூட்டம் தீயதானாலும், இயல்பு உடையார் கேண்மை - நல்ல சுபாவமுடையவர்களுடைய நட்பு (திரியாது), மனம் தீது ஆம் பக்கம் - (அவருக்கு) மனது தீமையாகும் பக்ஷம், அரிது - இல்லை, எ-று. சுபாவத்தில் யோக்கியருக்கு அயோக்கிய சகவாசம் செய்ய வேண்டி வந்த போதும், மனதில் கொடுமையின்றி அன்பு பாராட்டுவது விவேகத்தின் பயனென்றபடி. வாழையின் பயனிலையாகிய திரியாது என்பதில் சுவை என்னும் எழுவாய் பகுதிப் பொருளில் முடிந்தது [பொது. சூ. 26ன்] உரையைக் காண்க.
245. கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலைசார்ந்தும் உப்புண்டு உவரி பிறத்தலால் தத்தம் இனத்தனையர் அல்லர் எறிகடல்தண் சேர்ப்ப! மனத்தனையர் மக்கள்என் பார். (இ-ள்.) கடல் சார்ந்தும் - சமுத்திரத்தை யடுத்தும், இன் நீர் - இனிப்பான நீரானது, பிறக்கும் - உண்டாகும், மலை சார்ந்தும் - மலையை அடுத்தும், உப்பு ஈண்டு உவரி - உப்பு நிறைந்த உவர்நீர், பிறத்தலால் - உண்டாவதனால், எறி கடல் தண் சேர்ப்ப - அலைமோதா நின்ற சமுத்திரத்தின் குளிர்ச்சியான கரையுடையவனே!, மக்கள் என்பார் - மனிதரென்று சொல்லப்படுகிறவர், தத்தம் இனத்து அனையர் அல்லர் - தங்கள் தங்களுடைய இனத்தை ஒத்தவரல்லர்; (மற்றென்னெனின்), மனத்து அனையர் - தம் தம் மனத்தை ஒத்தவர், எ-று. உவர்க்கடலருகே நன்னீரும், நல்லருவி பாயு மலையருகே யுவர் நீரும் பிறப்பதனால் அவரவ ரியற்கையே பிரதானமன்றிச் செயற்கை பிரதான மன்றென முற்பாட்டிற் கூறியதே இங்குங்கூறி உறுதிப்படுத்தப்பட்டது. நல்லினஞ்சேர்தலிலே தீயாரைச் சேர்வதனாற் றீமையும் நல்லாரைச் சேர்வதனா னன்மையும் உண்டாமெனக் கூறிற்று. ஈண்டு எப்போதுந் தன்னியல்பு மாறாதிருப்பது விவேகமெனச் சொல்லிற்று; ஆதலின் அவ்வதிகாரத்தோடு இதற்கு மாறுபாடில்லை யென உணர்க.
246. பரா அரைப் புன்னை படுகடல் தண்சேர்ப்ப! ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ? நல்ல மரூஉச்செய்து யார்மாட்டும் தங்கு மனத்தார் விராஅஅய்ச் செய்யாமை நன்று. (இ-ள்.) பரு அரை புன்னை - பருத்த அரையையுடைய புன்னை மரங்கள், படு - சேர்ந்திருக்கின்ற, கடல் தண் சேர்ப்ப - குளிர்ச்சியான கடற்கரையையுடைய அரசனே, தங்கும் மனத்தார் - நிலைநிற்கிற மனமுடையவர்கள், நல்ல மரூஉ - நன்மைகள் சேர்ந்திருக்கின்ற, செய்தியார் மாட்டும் - செய்கையையுடைய யாரிடத்திலும், ஓராலும் ஒட்டலும் - நீங்குவதும் சேர்வதும், செய்பவோ - செய்வார்களோ, (இப்படிச் செய்வதினும்) விராய் செய்யாமை - கலந்து சிநேகஞ் செய்யாமை, நன்று -, எ-று. யோக்கியரோடு சில காலஞ் சேர்ந்திருப்பதும் சிலகாலம் நீங்கியிருப்பதும் விவேகச் செய்கையன்று; அதினும் அவர்களைச் சேராமலிருப்பதே நலமென்றபடி. மரங்களுக்கு அடியிலிருந்து கிளை பிரியுமளவுமுள்ள கட்டையை அரையென்பார்கள். பரு அரை - பராரை என்பதும், ஒருவல் - ஒரால் என்பதும் மரூஉ வழக்கென அறிக. மருவு என்பது மரூஉ எனவும், விரவி என்பது விராய் எனவும் செய்யுணோர்க்கத்தால் விகாரப்பட்டன; அல்லது விரவு என்னுமுதனிலை விரா என்றாகி, யகர விகுதிபெற்ற தென்னவுமாம்.
247. உணர உணரும் உணர்வுடை யாரைப் புணரிற் புணருமாம் இன்பம் - புணரின் தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப் பிரியப் பிரியுமாம் நோய். (இ-ள்.) உணர - (நம்முடைய குணங்களை) அறிந்து கொள்ள, உணரும் - அறிந்திருக்கின்ற, உணர்வு உடையாரை - விவேகமுள்ளவர்களை, புணர - சேர, இன்பம் புணரும் - சந்தோஷமுண்டாகும்; தெரிய - அறிந்துகொள்ள, தெரியும் தெரிவு இலாதாரை - தெளிவான புத்தியில்லாதவர்களை, புணரின் - சேர்ந்தால், பிரிய - (அவரை) விட்டு நீங்க, நோய் பிரியும் - துன்பம் நீங்கும், எ-று. ஆம் - இரண்டும் அசை. நம்முடைய சிநேக குணங்களை அறிந்து கொள்ளும்படியான விவேகிகளைச் சிநேகிப்பதில் இன்பமும் அத்தன்மையில்லாதவரைச் சிநேகிப்பதில் துன்பமும் உண்டாமென்பது கருத்து. தெரியும் என்பதை தெரிவோடு கூட்டுக.
248. நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும் மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும், தன்னைத் தலையாகச் செய்வானும் தான். (இ-ள்.) நல் நிலைக்கண் தன்னை நிறுப்பானும் - நல்ல நிலையிலே தன்னை வைப்பவனும், தன்னை -, நிலை கலக்கி - (நல்ல) நிலையினின்றுங் கலங்கச் செய்து, கீழ் இடுவானும் - தாழ்ந்த நிலையிலே சேர்க்கிறவனும், நிலையினும் - (இருக்கின்ற) நிலையைக் காட்டிலும், மேல் மேல் உயர்ந்து நிறுப்பானும் - மிகவுமேலான நிலையிலே தன்னை உயர்த்தி வைப்பவனும், தன்னை -, தலை ஆக செய்வானும் - முக்கியமானவனா யாக்குகின்றவனும், தான் - அவனே ஆவான், எ-று. ஒருவனுக்கு உயர்வு தாழ்வு முதலியவை அவனுடைய அறிவினாலேயே உண்டாகுமென்பது கருத்து. நிறுப்பான் முதலிய நான்கும் - எழுவாய், தான் - பயனிலை.
249. கரும வரிசையால் கல்லாதார் பின்னும் பெருமை யுடையாரும் சேறல் - அருமரபின் ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப! பேதைமை யன்றுஅது அறிவு. (இ-ள்.) அரு மரபின் - அருமையான கிரமத்தையுடைய, ஓதம் - அலைகள், அரற்றும் - சப்திக்கின்ற, ஒலி கடல் தண் சேர்ப்ப -, கரும வரிசையால் - காரியத்தின் முறைமையால், கல்லாதார் பின்னும் - மூடர்பின்னே, பெருமை உடையாரும் - (கல்வியறிவாகிய) பெருமை யுடையவர்களும், சேறல் - செல்லுதல், பேதைமை அன்று - புத்தியில்லாமை அன்று, அது அறிவு - அது விவேகமேயாம், எ-று. நாலாவது ஐந்தாவது பாடல்களில் கூறியபடி யோக்கியருக்கு அயோக்கியரோடு சேர்வதே புத்திக்குறைவல்லவோ என்றால் அல்ல, காரியவசத்தால் சேர்வது புத்திதான் என்றார். அலைகளுக்கு அருமையான கிரமமாவது மற்றொன்றுக்கு இல்லாமல் ஒரேவிதமா யோங்கி யெழுந்து மடியுந்தன்மை எனக்கொள்க.
250. கருமமும் உட்படாப் போகமும் துவ்வாத் தருமமும் தக்கார்க்கே செய்யா - ஒருநிலையே முட்டின்றி மூன்றும் முடியுமேல்அஃதென்ப பட்டினம் பெற்ற கலம். (இ-ள்.) கருமமும் உள் படா - (அறம் பொருள்களைச் சேர்ந்த) காரியங்களுக்கும் உட்பட்டு [அவற்றைச் செய்தென்றபடி], போகமும் துவ்வா - போகத்தையும் அனுபவித்து, தருமமும் - (கொடையாகிய) தருமத்தையும், தக்கார்க்கே செய்யா - தகுந்தவர்களுக்கே செய்து (நிற்கும்படி), ஒரு நிலையே - ஒரு பிறப்பிலேயே, மூன்றும் - இம்மூன்று காரியங்களும், முட்டு இன்றி - தடையில்லாமல், முடியுமேல் - (ஒருவனுக்கு) நிறைவேறுமானால், அஃது - அந்நிலையானது, பட்டினம் பெற்ற கலம் - (தானிருக்குங்) கடற்கரையூரைச் சேர்ந்த கப்பல், என்ப - என்று சொல்வர் (பெரியோர்), எ-று. ஒரு கப்பல் பல தேசஞ் சென்று வியாபார முடித்துத் தன்னிலை சேர்ந்தது போலே ஒருவன் பல ஜன்மங்களெடுத்துக் கடைசியில் ஒரு ஜன்மத்தில் அறம் பொருள் தேடி போக மனுபவித்துச் சற்பாத்திரத்தில் தானஞ் செய்து கடைத்தேறுதலால் அந்தச் சனனம் பயன்பட்டுத் தேறினது என்கிறது கருத்து. உள்படா முதலிய செய்யாவென்னும் வாய்பாட் டெச்சங்கள் நிற்கும்படி என்கிற வருவித்த வினையோடு முடிந்தன. |