உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
நானூறு சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் உரையாசிரியர் : ஊ.புட்பரதச் செட்டியார் ... தொடர்ச்சி - 7 ... 31. இரவச்சம்
[அதாவது மானங் கெடுவதற் கேதுவாகிய இரப்பதை அஞ்ச வேண்டுமென அதன் இயல்பைத் தெரிவிப்பது; இரவுக்கு அச்சம் என விரியும்.]
301. நம்மாலே ஆவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும் தம்மாலாம் ஆக்கம் இலரென்று - தம்மை மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும் தெருண்ட அறிவி னவர். (இ-ள்.) இ நல்கூர்ந்தார் - இந்தத் தரித்திரர், நம்மாலே -, ஆவர் - (ஆக்கமுள்ளவ) ராவார்கள், எஞ்ஞான்றும் - எப்போதும், தம்மால் ஆம் - தங்களால் சம்பாதித்த, ஆக்கம் இலர் - பொருளில்லாதவர், என்று -, தம்மை - தங்களை, மருண்ட மனத்தார் பின் - (மேலானவராகமதித்து) மயங்கின மனமுள்ளவர் பின்னே, தெருண்ட அறிவினர் தாமும் - தெளிந்த அறிவை யுடையவர்களும், செல்பவோ - செல்வார்களோ, எ-று. நாம் கொடுத்துத்தான் தரித்திரர்க்குப் பணமுண்டே யன்றி அவர்களுடைய சொந்த முயற்சியால் ஒருகாசும் கிடையாது என்று தம்மிடத்திற் பெருமை பாராட்டுகிற அற்பரித்து இரக்கும் பொருட்டு விவேகிகள் செல்லார்கள் என்பதாம். பிறர் நல்குதலை மேற்கொண்டு செல்பவர் நல்கூர்ந்தார்; நல்கு - முதனிலைத் தொழிற்பெயர். இல் என்பது ஒரு பொருளின் சம்பந்தத்தை மறுக்கும்போது செயப்படுபொருள் குன்றாததாகவும் பொருளையே மறுக்கும்போது செயப்படுபொருள் குன்றியதாகவு மிருக்குமாதலால் ஆக்கம் இலர் என்பதை ஆக்கத்தை இல்லாதவர் எனவும் ஆக்கமானது இல்லாதவர் எனவும் இருவகையிலும் உரைக்கலாம். இரண்டாம் பக்ஷத்தில் "உயர்திணை தொடர்ந்த" என்கிற சூத்திர விதியை அமைத்துக் கொள்க. தம்மை மருண்ட என்பதை வேற்றுமை மயக்கமாகக் கொண்டு தம்மிடத்தில் மருட்சி கொண்ட எனவுமுரைக்கலாம். கடவுள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு முகமாய்ச் சீவனம் கற்பித்திருத்தலால் நாம் கொடுக்கிறோமென்று நினைப்பது அறிவின்மை. தாமும் - உயர்வு சிறப்பும்மை. தாம் - அசை.
302. இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின் பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ? விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு. (இ-ள்.) ஒருவன் -, இழி தக்க செய்து - தாழ்வதற்கேதுவான காரியங்களைச் செய்து, ஆர உணலின் - நிறையப் புசிப்பதினும், பழி தக்க - பழிக்கும்படியான காரியங்களை, செய்யான் - செய்யாதவனாகி, பசித்தல் - பசியோடிருத்தல், தவறோ - குற்றமோ, ஒருவன் அழிந்து பிறக்கும் பிறப்பு - ஒரு மனிதன் அழிந்து மறுபடி பிறக்கும்படியான பிறப்பு, விழித்து இமைக்கும் மாத்திரை அன்றோ - கண்ணைத் திறந்து இமைக்கோட்டுதலாகிய அளவை உடையதல்லவா, எ-று. இவ்வுடம்புபோனால் வேறுடம்பு கிடைப்பது அரிதென நினைக்க வேண்டாம். சீக்கிரத்தில் கிடைக்கும். ஆதலால் தாழ்வானவை செய்து பிழைப்பதினும் இறப்பது நலம் என்பது கருத்து. இழித்தக்க காரியங்களாவன - யாசிப்பதற்குச் செய்யு முயற்சிகள். இழி பழி என்பவை முதனிலைத் தொழிற்பெயர்கள். இழித்தற்குத் தக்க பழித்தற்குத் தக்க என விரித்துக் கொள்க. ஆர என்னும் வினையெச்சம் இங்கு உணலின் என்பதற்கு உரியா நின்றது, அழித்து - வலித்தல் விகாரம். பிறக்கும் பிறப்பு - பிறக்கிற தொழில்.
303. இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர் செல்லாரும் அல்லர் சிறுநெறி - புல்லா அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லால் முகம்புகுதல் ஆற்றுமோ மேல்? (இ-ள்.) இல்லாமை - பொருளில்லாமையானது [வறுமை], கந்து ஆ - ஏதுவாக [அதுபற்றி என்கிறபடி], இரவு - இரப்பதை, துணிந்து - தெளிந்து, ஒருவர் - [எவராகிலும்] ஒருவர், சிறு நெறி - (யாசிப்பதாகிய) அற்பவழியில், செல்லாரும் அல்லர் - நடவாமலுமிரார்; புல்லா - தழுவிக் கொண்டு, அகம் புகுமின் - எமது வீட்டிற்கு வாருங்கள், உண்ணுமின் - சாப்பிடுங்கள், என்பவர் மாட்டு அல்லால் - என்கிறவரிடத்து அல்லாமல், மேல் - மேலானவர், முகம் - மற்றவரிடத்தில், புகுதல் - செல்வத்தை, ஆற்றுமோ - பொறுப்பார்களோ; [முகம்புகுதல் - முகங்காட்டுதலுமாம்], எ-று. வறுமையால் யாசிக்கும்படி நேரிட்டாலும் கண்டவிடத்துச் செல்லாமல் ஆதரிப்பவரிடமே செல்லுவர் மேலானவர். இல்லாமை - எதிர்மறைத் தொழிற்பெயர்; இல் - பண்படி, பகுதி. ஆகாரம் - சாரியை, மை - விகுதி. இரவு - தொழிற்பெயர், உ - விகுதி. செல்லாரும் - இழிவு சிறப்பும்மை. மேல் - ஆகுபெயர்; சொல்லளவில் அஃறிணையாதலால் ஆற்றும் என்கிறவினை சேர்க்கப்பட்டது.
304. திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும் உருத்த மனத்தோடு உயர்வுள்ளின் அல்லால் அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்று எருத்திறைஞ்சி நில்ல தாம் மேல். (இ-ள்.) திரு - லக்ஷ்மியானவள், தன்னை நீப்பினும் - தன்னைக் கைவிட்டாலும், தெய்வம் செறினும் - தெய்வமானது கோபித்தாலும், உருத்த - (சோர்வின்றி) எழுந்த, மனத்தோடு - மனதினால், உயர்வு உள்ளின் அல்லால் - தன் மேன்மையை நினைப்பதேயல்லாமல், அருத்தம் செறிக்கும் - பணத்தை வீணாச் சேர்த்துவைக்கிற, அறிவு இலார் பின் சென்று - விவேகமில்லாதவரிடத்திற் போய், எருத்து இறைஞ்சி - தலைகுனிந்து, நில்லாது - நிற்கமாட்டார், மேல் - மேலானவர், எ-று. பெரியோர் தமக்குத் தரித்திரமும் பல சங்கடங்களும் சேர்ந்தாலும் அதைரியப்படாமல் தமது மேன்மையை எண்ணி இரவாதிருப்பார்களே யல்லாமல் யாசகர்க்கு உபயோகப்படுத்தாமற் பணஞ் சேர்த்து வைக்கிற அவிவேகிகளிடத்திற் போய் தலைவணங்கி நிற்கமாட்டார் என்பதாம். உருத்த - உரு - பகுதி, த் - இறந்த கால இடைநிலை, மற்றொன்று சந்தி, அ - பெயரெச்ச விகுதி. உள்ளின் என்பது வினையெச்சமாத் தோன்றினாலும் 'நீ வரவேண்டும்' முதலான விடத்திற் கொள்வது போல் தொழிற்பெயராக் கொள்க; வினையெச்சமாகவே கொண்டால் பொருள் பொருந்தாமை காண்க. பின் - ஏழனுருபு. எருத்து - ஆகுபெயர், பிடர்வணங்க என உரைக்கினும் பொருந்தும்.
305. கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும் இரவாது வாழ்வதாம் வாழ்க்கை; - இரவினை உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்னை கொல் கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு. (இ-ள்.) கரவாத - (தனக்கு உள்ளதை) மறைக்காத, திண் அன்பின் - உறுதியான அன்பினாலே, கண் அன்னார்கண்ணும் - (தமக்குக்) கண்போன்றவரிடத்தும், இரவாது வாழ்வது - யாசிக்காம லிருந்து வாழ்வது, வாழ்க்கை ஆம் - நல்ல வாழ்வாகும். இரவினை - இரத்தலை, உள்ளுங்கால் - நினைத்தால், உள்ளம் உருகும் - மனம் உருகிப் போகின்றது; கொள்ளும் கால் - (ஒருவர் கைப்பொருளைக்) கொள்ளும் போது, கொள்வார் குறிப்பு - பெற்றுக் கொள்ளுகிறவருடைய மனம், என்கொலோ - எப்படிப்பட்டதா யிருக்குமோ, எ-று. மனமொத்தவரிடத்தும் இரப்பதாகாது, ஏனெனில் இரத்தலை நினைக்கும் போதே மன முருகுமானால் பொருளை ஒருவர் கொடுக்கப் பெற்றுக் கொள்ளும் போது எப்பாடுபடுமோ என்பதாம். என்ன எண்ணிப் பிறர்பொருளைக் கொள்ளுகிறார்களோ எனவும் கருத்துக் கூறலாம். குறிப்பு - அதன் கருவிக்கு ஆகுபெயர். ஆல் - அசை. உள்ளுங்கால், கொள்ளுங்கால் - இரண்டும் பெயரெச்சத் தொடர், இரவினை - இரவு - தொழிற்பெயர், இன் - சாரியை, ஐ - உருபு.
306. இன்னா இயைக இனிய ஒழிகென்று தன்னையே தானிரப்பத் தீர்வதற்கு - என்னைகொல் காதல் கவற்றும் வனத்தினாற் கண்பாழ்பட்டு ஏதில் அவரை இரவு. (இ-ள்.) இன்னா - துன்பங்கள், இயைக - (நமக்கு) சேரட்டும், இனிய - இன்பங்கள், ஒழிக - நீங்கட்டும், என்று -, என்று -, தன்னையே - தன் மனதையே, தான் -, நிரப்ப - நிரம்பச் செய்வதனால் [திருப்திப் படுத்துவதனால்], தீர்வதற்கு - தீர்ந்து போம்படியான வறுமைக்காக, காதல் கவற்றும் - பணத்தாசை கவலைப் படுத்துகிற, மனத்தினால் -, கண்பாழ்பட்டு - அறிவு அழிந்து, ஏதிலவரை - சம்பந்த மில்லாதவர்களை, இரவு - இரப்பது, என்னகொல் - என்ன பிரயோசனம், எ-று. இன்பத்தைத் துன்பம் போலவும் துன்பத்தை இன்பம் போலவுமெண்ணி மனதிற் திருப்தியடைந்தால் தரித்திரத் துன்பம் நீங்குவதாயிருக்க அயலாரிடம் சென்று இரப்பதேன்; அது செய்யவேண்டாம் என்கிறபடி. இன்னா - இனிமையடியாகப் பிறந்த எதிர்மறைப் பலவின்பால் குறிப்பு வினையாலணையும் பெயர். "இனையவும் பண்பிற் கியல்பே" என்றதனால் பகுதி இகரமுங் கெட ஆகாரவிகுதி புணர்ந்தது; "ஆவேயெதிர்மறைக் கண்ணதாகும்". இனிய - அந்தப் பண்பில் உட்ன்பாட்டு வினையாலணையும் பெயர். இயைக, ஒழிக - பிரார்த்தனையின் கண் வந்த வியங்கோள். தான் இரப்ப எனப்பிரித்து தன் மனதைத் தான் வேண்டிக் கொள்வதனால் என்றுரைப்பாரு முண்டு. தீர்வதற்கு - வினையாலணையும் பெயர். கொல் - அசை. கண் - ஆகுபெயர். ஏதும் [யாதொரு தொடர்ச்சியும்] இல்லாதவர் ஏதிலவர், அகரம் - சாரியை.
307. என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்து என்றும் அவனே பிறக்கலான் - குன்றின் பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட! இரப்பாரை எள்ளா மகன். (இ-ள்.) குன்றின் பரப்பு எல்லாம் - மலையினுடைய இடங்களிலெல்லாம்; பொன் ஒழுகும் - பொன்னானது ஓடும்படியான, பாய் - பாய்கின்ற, அருவி நாட - மலைவெள்ளத்தை யுடைத்தான நாட்டை யுடையவனே!, இ உலகத்து - இவ்வுலகத்தில், என்றும் - எக்காலத்திலும், புதியார் - புது மனிதர், பிறப்பினும் - பிறந்து கொண்டிருந்தாலும், என்றும் -, பிறக்கலான் - பிறவாதவன், அவனே -, (எவனென்றால்), இரப்பாரை - யாசிப்பாரை, எள்ளாமகன் - இகழாத மனிதன். யாசகரை அவமதியாமல் ஆதரிப்பவனே புதிது புதிதாய் மனிதர் பிறந்து கொண்டிருக்கு மிவ்வுலகத்தில் பிறவாத நற்கதியடைவான் என்பதாம். பொன்னின் தொழிலைத் தெரிவிக்கிற ஒழுகும் என்னும் பெயரெச்சம் அருவியாகிய இடப்பெயரோடு முடிந்தது. புதியார் - புதுமையில் மை கெட்டு உகரம் இகரமாய் நிற்க, ஆர் விகுதி புணர்ந்தது. உம் - இழிவு சிறப்பு. பிறக்கலான் - பிற - பகுதி, கு - சாரியை, அல் - எதிர்மறை விகுதி, ஆன் - ஆண்பால் விகுதி, எதிர்கால உடன்பாட்டெதிர்மறை வினைமுற்று, இப்பாட்டு இரத்தலிலுள்ள துன்பத்துக் கிரங்கிக் கொடுப்போரைப் புகழ்ந்தது. இச்சங்கதித் தொடர்ச்சியால் சொல்லப்பட்டது.
308. புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன் நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை ஈயாய் எனக்கென்று இரப்பானேல் அந்நிலையே மாயானோ மாற்றி விடின். (இ-ள்.) புறத்து - வெளியிலே [உடம்பில்], தன் இன்மை - தனது வறுமையானது, நலிய - வருத்த, அகத்து - மனதில், தன் நல்ஞானம் - தனது நல்ல விவேகத்தை, நீக்கி - தள்ளி, நிறீஇ - (அவிவேகத்தை) நிலைப்படுத்தி, ஒருவனை - ஒரு தனவானை, எனக்கு -, ஈயாய் என்று - (எதாகிலும்) கொடு என்று, இரப்பானேல் - யாசிப்பானாகில், மாற்றிவிடின் - (அந்தத் தனவான் இல்லையென்று) மறுத்துவிட்டால், அ நிலையே - அவ்விடத்திலேயே, மாயானோ - இறந்து போக மாட்டானா, எ-று. தரித்திரம் பற்றி உடம்பு வருந்துவதனால் விவேகங்கெட்டு ஒருவனிடம் போய் இரக்க அவன் இல்லையென்று சொன்னால் அந்த யாசகன் உடனே சாவான் என அவனுக்கு இரங்கிச் சொன்னபடி. அவன் அங்கேயே இறந்தால் நல்லதென வெறுத்துச் சொன்ன தெனவுமாம். நலிய என்னுந் தன்வினை இங்கு பிறவினையாக் கொள்ளப்பட்டது. நிறீஇ - நிறுவ என்னும் வினைப்பகுதியில் ஈறுகெட்டு உகரம் இகரமாகி அளபெடுத்து வினையெச்சமாயிற்று. ஓ - இரக்கத்தின்கண் வந்தது.
309. ஒருவர் ஒருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி வழிபடுதல் வல்லுதல் அல்லால் - பரிசழிந்து செய்யீரோ என்னானும் என்னுஞ்சொற்கு இன்னாதே பையத்தான் செல்லும் நெறி? (இ-ள்.) ஒருவர் -, ஒருவரை - மற்றொருவரை, சார்ந்து - சேர்ந்து, ஒழுகல் ஆற்றி - நடத்தலைச் செய்து, வழிபடுதல் - வணக்கமாயிருப்பது, வல்லுதல் அல்லால் - முறைமை யல்லாமல், பரிசு அழிந்து - யோக்கியதை கெட்டு, என்னானும் செய்யீரோ - ஏதாகிலு முதவி செய்யமாட்டார்களோ, என்னும் சொற்கு - என்று சொல்லுகிற சொல்லைக் காட்டிலும், தான் -, பைய - துன்பமுண்டாக, செல்லும் நெறி - செல்லத்தக்க வழியானது, இன்னாதே - இனிமையா யிராதா, எ-று. ஒருவன் ஒரு பணக்காரனைச் சேர்ந்து தக்கபடி நடந்து வணக்கத் தோடிருத்தல் உலகத்தின் முறையல்லாமல் அவனை யாசித்தல் கூடாது. அதனினும் தான் எங்கேயாகிலும் தான் எங்கேயாகிலும் வருத்தப் பட்டுப் போகலாம் என்றபடி. நெறி என்பதற்குத் தவஞ்செய்யப் போகும்வழி எனப் பொருள் கூறின் தவநெறியை இழித்துக் கூறியதாம். ஒருவனைச் சார்ந்து வணங்கியிருக்க அவனே ஏதாகிலும் உதவிசெய்தால் கொள்ளலாமல்லது வாய்திறந்து யாசித்தல் இழிவென்றபடி, இதுவும் அதமபக்ஷமாச் சொன்னது. ஆனும், ஏனும், ஆகிலும் இப்படிப்பட்ட சொற்கள் உம்மையோடு கூடி விகற்பப்பொருளில் வரும்; ஐயப்பொருளென்பது மிதுவே. சொற்கு - குவ்வுருபு எல்லைப்பொருளில் வந்தது. இன்னாதே - ஏகாரம் - வினா; எதிர்மறையாகி இனியதென்னும் பொருள் பயக்கும். பைய - துன்பப் பொருளதாகிய பை என்னும் வினைப்பகுதியிற் பிறந்த வினையெச்சம், அல்லது பசுமையின் விகாரமாகிய பை என்பதின் மேல் பிறந்த குறிப்பு வினையெச்சமுமாம்; எளிமையாக என்பது பொருள்.
310. பழமைகந் தாகப் பசைந்த வழியே கிழமைதான் யாதானும் செய்க; - கிழமை பொறாஅர் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத்து அறாஅச் சுடுவதோர் தீ. (இ-ள்.) பழமை - ஆதிகால சிநேகத்தை, கந்து ஆக - ஆதாரமாக, பசைந்த வழியே - சிநேகித்த விடத்தில், தான் -, யாதானும் கிழமை - ஏதாகிலும் ஒரு தகுந்ததை, செய்க - செய்ய வேண்டும்; அவர் - கிழமை செய்யப் பெற்றவர், கிழமை பொறர் எனில் - அந்த வுரியதை ஏற்றுக் கொள்ளாமற் போனால், (அது) தன்நெஞ்சத்து - தன் மனதில், பொத்தி - பதிந்து, அறா சுடுவது - நீங்காமல் சுடும்படியான, ஓர் தீ - ஒரு அக்கினியாகும், எ-று. ஒருவர் பழமை பற்றி வந்தால் அவருக்குத் தக்கதே தாகிலும் செய்ய வேண்டும். அதை அவர் அதிருப்தியால் ஏற்றுக் கொள்ளாமற் போனால் செய்தவருக்கு எப்போதும் மன வருத்தமாயிருக்கும் என்றபடி. பொறுத்தல் - சுமத்தல் எனக்கொண்டு, ஏற்றுக் கொள்ளாமற் போனால் என உரைக்கப்பட்டது. பசை - பகுதி, ஒட்டுதல், பொறாஅர், அறாஅ - இரண்டிடத்தும் அளபெடை பாட்டினோசையை நிறைக்க வந்தவை. 32. அவையறிதல்
[அதாவது தன்னுடையதும் பிறருடையதுமான கல்வி வல்லமைகளை அறிந்து பேசவேண்டு மென்பதைச் சொல்லுகின்றது.]
311. மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழி விட்டாங்கோர் அஞ்ஞானம் தந்திட்டு அதுவாங்கு அறத்துழாய்க் கைஞ்ஞானம் கொண்டொழுகும் காரறி வாளர்முன் சொன்ஞானம் சோர விடல். (இ-ள்.) மெய் ஞானம் கோட்டி - மெய்யான நூலறிவினையுடைய சபையின்கண், உறழ் வழி விட்டு - சேருகிற முறைமையை நீக்கி, ஆங்கு - அவ்விடத்தே, ஓர் அஞ்ஞானம் தந்திட்டு - அறியாமைக்கு உரிய ஒரு பேச்சைச் சொல்லி, அது - அந்தப் பேச்சையே ஆங்கு - அவ்விடத்தில், அற துழாய் - மிகவும் பரப்பி, கை ஞானம் கொண்டு ஒழுகும் - கசந்த [அருவருத்த] ஞானத்தைக் கைக்கொண்டு நடக்கிற, கார் அறிவாளர்முன் - அயோக்கியமான அறிவுள்ளவரிடத்தில், சொல் ஞானம் - சொல்லத்தக்க ஞானத்தை, சோர விடல் - தளரவிட வேண்டும், எ-று. விவேகிகள் சபையிற் சென்று தெரிந்து கொள்வதை விட்டு அங்கே மூடப்பேச்சைப் பேசி அதையே ஸ்தாபிக்கிற மூடர்களுக்கு நல்ல விவேகமொழிகளை உறுதிப்படுத்திச் சொல்லாமல் விடவேண்டுமென்பதாம். இது தன் மூடப்பேச்சையே ஸ்தாபிக்கிற தீப்புலவனைக் குறித்துச் சொல்லியது. துழாய் - வினையெச்சம், துழாவு - பகுதி, உகரம் கெட்டு யகர விகுதி புணர்ந்தது. கைஞ்ஞானம் - வினைத்தொகைத் தொடரானாலும் ஞகரம் விரித்தல் விகாரமாய் வந்தது. முன் - ஏழனுருபு, கோடற் பொருளில் வந்தது. இரண்டாம் ஆங்கு அசையுமாம்.
312. நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்கும் தீப்புலவன் சேரார் செறிவுடையார்; - தீப்புலவன் கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால் தோட்புடைக் கொள்ளா எழும். (இ-ள்.) நா பாடம் சொல்லி - வாய்க்கு வந்த பாடத்தைச் சொல்லி, நயம் உணர்வார் போல் - சாரம் அறிந்தவர்களைப் போலே, செறிக்கும் - (பிறரைச்) சேர்க்கிற, தீ புலவன் - அயோக்கியமான புலவனை, செறிவு உடையார் - அடக்கமுடைய நற்புலவர், சேரார் - சேரமாட்டார்கள்; தீ புலவன் -, கோட்டியுள் குன்ற - சபையில் இளைத்துப் போக, குடி - (நற்புலவன்) வமிசத்தை, பழிக்கும் - தூஷிப்பான், அல்லாக்கால் - அல்லாவிட்டால், தோள் - புஜங்களை, புடைக்கொள்ளா - தட்டிக் கொண்டு, எழும் - (சண்டைக்கு) எழுந்திருப்பான், எ-று. தன் வாய்க்கு வந்த எதையோ சொல்லி உட்கருத்தறிந்தவன் போலே பாவித்துச் சனங்களைக் கூட்டுகிற டம்பக்காரனான புலவனிடத்து அடக்கமுடையோர் பேசலாகாது, ஏனெனில் அவன் தன் பேச்சுக்குத் தாழ்மை வந்தால் நியாயஞ் சொன்னவனை வமிசத்தோடு பழிப்பான் அல்லது சண்டைக்கு எழுவான் என்றபடி. செறிக்கும் - பிறவினைப் பெயரெச்சம். தீப்புலவற் சேரார் - "இயல்பின் விகாரமும்" என்கிற விதியால் உயர்திணைப் பெயரின் ஈறுதிரிந்தது. குன்ற - நிகழ்காலம் புடை - முதனிலைத் தொழிற்பெயர். கொள்ளா - செய்யா என்னும் வாய்ப்பாட்டெச்சம்.
313. சொல்தாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர், கற்றாற்றல் வன்மையும் தாம்தேறார்; - கற்ற செலவுரைக்கும் ஆறறியார் தோற்ப தறியார் பலவுரைக்கும் மாந்தர் பலர். (இ-ள்.) சொற்று - பேசுவதில், ஆற்று - சக்தியை, கொண்டு - ஆதாரமாகக் கொண்டு, சுனைத்து - தினவினால், எழுதல் காமுறுவர் - (வந்து செய்ய) எழுந்திருப்பதை விரும்புகிறவர்களுமாய், கற்று ஆற்றல் - (பிறர்) கற்றிருக்கும் சாமர்த்தியத்தையும், வன்மையும் - (பிரசங்கித்தல் முதலியவற்றுள்) வல்லமையையும், தாம் தேறார் - தாம் அறிந்து தெளியாதவருமாய், கற்ற - (தாம்) கற்றவற்றை, செல - (பிறர் மனதில்) புகும்படி, உரைக்கும் ஆறு - சொல்லும் விதத்தை, அறியார் - அறியாதவர்களுமாய், தோற்பது அறியார் - தோற்கும்படி யானதையும் தெரிந்து கொள்ளாதவர்களுமாய், பல உரைக்கும் - பலவற்றை (வீணாச்) சொல்லுகிற, மாந்தர் - மனிதர், பலர் - அநேகர் (இருக்கிறார்கள்), எ-று. தமக்கு மூச்சுவிடாமல் பேசும் வல்லமை யிருப்பதைப் பற்றி வாய்பதைத்தலால் பிறர் நன்றாய்க் கற்றுப் பேசுந் திறத்தையும் அறியாமல் தெரிந்ததைப் பிரருணரச் சொல்லவும் தெரியாமல் எதனாலே தாம் தோல்வி யடைவார்களோ அதுவுந் தெரியாமல் விணாய்ப் பல பேச்சுப் பேசுகிற மூடரிடமும் சேரலாகாது என்றபடி. பலவுரைக்கு மாந்தர் பலர் என்பதை எழுவாயாவைத்து காமுறுவர் தேறார் அறியார் எனவு முடிக்கலாம். சொற்று - தொழிற்பெயர், று - விகுதி, ஆற்று - முதனிலைத் தொழிற்பெயர். சுனைத்து - து - விகுதி, தொழிற்பெயர்; சொறிதல் பொருள், அதன் காரணமாகிய தினவுக்கு வந்தது. தோற்பது - இதுவும் அப்படியே.
314. கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால் பெற்றதாம் பேதையோர் சூத்திரம் - மற்றதனை நல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லித்தன் புல்லறிவு நாட்டி விடும். (இ-ள்.) கற்றதும் இன்றி - கற்குந் தொழிலில்லாமல் [கற்காமல்], கணக்காயர் பாடத்தால் - பண்டிதராகிய உபாத்தியார் (பிறருக்குச் சொல்லிக் கொடுத்த) பாடத்தினால், ஓர் சூத்திரம் - ஒரு சூத்திரத்தை, பேதை - அறிவில்லாதவன், பெற்றது - பெற்றுக் கொண்டவனாகி, அதனை - அச் சூத்திரத்தை, நல்லாரிடை - நல்ல வித்துவான்கள் நடுவே, புக்கு - புகுந்து, நாணாது சொல்லி - வெட்கப்படாமல் சொல்லி, தன் புல் அறிவு - தன்னுடைய ஈனமான அறிவை, காட்டி விடும் - வெளிப்படுத்துவான், எ-று. பேதையானவன் தான் உபாத்தியாயருக்கு வழிபட்டுக் கற்காமல் பள்ளியில் உபாத்தியாயர் பிறருக்குச் சொல்லுங்கால் தற்செயலாய்த் தெரிந்ததொரு சூத்திரத்தைக் கற்றோர் சபையில் நாணாமல் சொல்ல இவனை யாவரும் மூடனென்று இகழ்வார்களென்பதாம். இதற்குப் பள்ளியில் சொன்ன பாடத்தால் என்பபொருள் கூறிப் பள்ளியை இழிவாகக் காட்டுவாரு முண்டு. கற்றதூஉம் - அளபெடை இன்னிசைக்கு வந்தது. கணக்கை ஆய்ந்தவர் - கணக்காயர்; கணக்கு - எண்ணும் எழுத்துமாம். பெற்றது - முற்றெச்சம்; இழிவினால் பேதைக்குக் கூறப்பட்டது; "உவப்பினு முயர் வினுஞ் சிறப்பினுஞ் செறலினும் இழிப்பினும் பாறிணை யிழுக்கினு மியல்பே" ஆம், மற்று - இரண்டும் அசை, புக்கு - புகு என்னும் பகுதி ககரமிரட்டிக் காலங்காட்டி உகர விகுதி பெற்ற வினையெச்சம்.
315. வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார் கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோடு - ஒன்றி உரைவித் தகம்எழுவார் காண்பவே, கையுள் சுரைவித்துப் போலும்தம் பல். (இ-ள்.) வென்றி பொருட்டால் - பிறனை வெல்வதாகிய காரணத்தால், விலங்கு ஒத்து - மிருகங்களோடு சமானமாக, மெய் கொள்ளார் - உண்மைப் பொருள் கொள்ளாதவராகி, கன்றி கறுத்து - மிகக் கோபித்து, எழுந்து - (போருக்கு) ஆயத்தமாகி, காய்வாரோடு - ஆக்கிரகப் படுவாரோடு, ஒன்றி - சேர்ந்து, வித்தகம் உரை - கல்வியைச் சொல்வதற்கு, எழுவார் - எத்தனப் படுபவர்; சுரை வித்து போலும் - கரையின் விரை போன்ற, தம் பல் - தம்முடைய பற்களை, கையுள் - தமது கையிலே, காண்ப - காண்பார்கள், எ-று. எதையாகிலும் சொல்லி எதிரியை ஜயிக்கப் பார்க்கிறவர்களுக்கு நற்கல்வியைச் சொல்லப் போனால் பல்லை உதிர்த்துக் கையிற் கொடுப்பார்கள். பல் உதிரும்படி அடிப்பார்கள் என்பதாம். உரை - முதனிலையே வினையெச்சப் பொருட்டாய் வந்தது. "வினைமுற்றே வினையெச்சமாகலும்" என்கிற சூத்திரத்தின் உரையைக் காண்க. வென்றிப் பொருட்டு - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. கொள்ளார் - முற்றெச்சம். கன்றிக் கறுத்து - "ஒரு பொருட் பன்மொழி சிறப்பினின்வழா" என்பதனால் அமைந்தது. எ - அசை.
316. பாடமே ஓதிப் பயன்தெரிதல் தேற்றாத மூடர் முனிதக்க சொல்லுங்கால், - கேடருஞ்சீர்ச் சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை ஈன்றாட்கு இறப்பப் பரிந்து. (இ-ள்.) பாடமே ஓதி - (ஒருபாட்டை) வாய்பாடமா மாத்திரஞ் சொல்லி, பயன் தெரிதல் - அதன் பொருளை அறிவதிலே, தேற்றாத - தேறாத [தெளிவில்லாத], மூடர் -, முனி தக்க - கோபிக்கும்படியான சொற்களை, சொல்லுங்கள் - சொல்லும்போது, கேடு அறு சீர் - கேடில்லாத மேன்மையையுடைய, சான்றோர் - பெரியோர், அவரை ஈன்றாட்கு - அந்த வைதவரைப் பெற்ற தாய்க்கு, இறப்ப பரிந்து - மிகவும் இரங்கி, சமழ்த்தனர் நிற்ப - வெட்கினவராகி நிற்பார்கள், எ-று. பாடல்களின் பொருள் நுட்ப மறியாத மூடர் திட்டினால் பெரியோர் வெட்கி நிற்பார்கள், ஏனென்றால் இந்த மூடப்பிள்ளையைப் பெற்றவள் என்ன பயனடைவாளென்று என்பதாம். அன்றியும், நாம் இவனைச் சபிப்பதனால் இவன் கேடுற இவன் தாய் வருந்துவாளே என்று சும்மா நிற்கிறார்களெனவுமாம். பாடமே - ஏகாரம் - பிரிநிலை. முனிதக்க - முனிதலுக்குத் தக்க; முனி - முதனிலைத் தொழிற்பெயர். நிற்பவே - ஏ - அசை.
317. பெறுவது கொள்பவர் தோள்மேல் நெறிப்பட்டுக் கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; - மற்றும் முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும் அறிதற் கரிய பொருள். (இ-ள்.) எல்லா நூல் - சாஸ்திரங்களெல்லாம், பெறுவது கொள்பவர் - பெறத்தக்க பொருளைக் கொள்கிற வேசிமாருடைய, தோள் போல் - புஜங்களைப் போல, நெறி பட்டு - (ஆசிரியன்) வழிப்பட்டு, கற்பவர்க்கு - கற்றுக் கொள்ளுகிறவர்களுக்கு, எளிய - சுலபத்தில் கிரகிக்கத் தக்கன ஆம்; அ முறி புரை மேனியர் - தளிரை ஒத்த மேனியை யுடைய அந்த வேசிமாருடைய, உள்ளம் போன்று - மனதை ஒத்து, மற்று யார்க்கும் - (அப்படி கல்லாத) எவர்களுக்கும், அறிதற்கு அரிய பொருள் - அறிய சுலபமாகாத பொருளுடையன ஆம்; எ-று. கிரமப்படி கற்பவர்க்கு எந்த நூலும் சுலபமாம்; அப்படி கற்காதவர்களுக்கு எதுவும் கடினமாம் என்றபடி. எளிய - எளிமைப் பண்படியாகப் பிறந்த பலவின்பாற் குறிப்பு வினைமுற்று. அரிய - அருமையடியாப் பிறந்த பெயரெச்சம்.
318. புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார் உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப் போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்து தேற்றும் புலவரும் வேறு. (இ-ள்.) புத்தகமே சால தொகுத்தும் - புத்தகங்களை மாத்திரம் மிகுதியாகச் சேர்த்தும், பொருள் தெரியார் - (அவற்றின்) பொருளை அறியாதவராகி, உய்த்து - கொண்டு வந்து, அகமெல்லாம் நிறைப்பினும் - வீடெல்லாம் நிறைத்தாலும், அவற்றை போற்றும் புலவரும் வேறே - அப்புத்தகங்களைப் பாதுகாக்கும் புலவரும் வேறா யிருப்பார்கள்; பொருள் தெரிந்து - அவற்றின் அர்த்தங்களை அறிந்து, தேற்றும் புலவரும் வேறு - (பிறரை) தேறச் செய்யும் வித்துவான்களும் வேறாயிருப்பார்கள், எ-று. புத்தகங்களை மிகுதியாச் சேர்த்ததனாலே புத்தக பரிபாலகராவார்களே யன்றி வித்துவான்களாக மாட்டார்கள். அவற்றின் பொருளைத் தாமறிந்து பிறர்க்குப் போதித்துத் தெளியச் செய்பவரே வித்துவான்களாவார் என்பதாம். புத்தகமே - ஏகாரம் - பிரிநிலை. அவர்களைப் புலவர் என்றது பரிகாசம். தொகுத்தும் - உம் - உயர்வு சிறப்பு, இழிவு சிறப்பெனக் கொள்ளுவாரு முண்டு. வேறு - இடம் பால்களுக்குப் பொதுவான குறிப்பு முற்று. "வேறில்லை யுண்டைம் பான் மூவிடத்தன."
319. பொழிப்பகல நுட்பநூல் எச்சம்இந் நான்கின் கொழித்தகலம் காட்டாதார் சொற்கள் - பழிப்பில் நிரை ஆமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட! உரையாமோ நூலிற்கு நன்கு? (இ-ள்.) பழிப்பு இல் - குற்றமில்லாத, நிரை ஆ மா - கூட்டமாகிய காட்டுப்பசுக்களை, சேர்க்கும் - தம்மிடத்திலே சேரச் செய்கிற, நெடு குன்ற நாட - உன்னதமான மலைகளுள்ள நாட்டையுடைய அரசனே!, பொழிப்பு - (கருத்து விள்ளும்படி தொகுத்துச் சொல்லுகிற) பொழிப்புரையும், அகலம் - (பதப்பொருள் முதலியவற்றை நியாயங்காட்டி விரித்துச் சொல்லுகிற) அகலவுரையும், நூல் எச்சம் - (நூலில் சொல்லப் படாமற் குறைந்த விஷயங்களை எடுத்துச் சொல்லும்) - விசேஷவுரையும், நான்கின் - ஆகிய நான்கு வகையிலும், கொழித்து அகலம் காட்டாதார் சொற்கள் - நன்றாய் ஆராய்ந்து பொருள் விரிவைக் காட்ட மாட்டாதவர் செய்த நூல்கள், நூலிற்கு - நூல்களுக்கு, நன்கு உரை ஆமோ - நல்லதான உரையாகுமோ [ஆகாது], எ-று. பல வகையிலும் பொருளை விரித்துக் காட்ட மாட்டாதவர்கள் உரை சிறப்பில்லை என்பதாம். மலைகள் தாமிருக்கும் செழிப்பினால் பசுக்களை வந்து சேரும்படி செய்கின்றன என மலைகளைச் சிறப்பித்தபடி. நன்கு - பண்புப் பெயர், உரைக்கு விசேஷணம்.
320. இற்பிறப் பில்லார் எனைத்தநூல் கற்பினும் சொற்பிறரைக் காக்கும் கருவியரோ? - இற்பிறந்த நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார் புல்லறிவு தாமறிவ தில். (இ-ள்.) இல் பிறப்பு இல்லார் - நற்குடிப்பிறப்பு இல்லாதவர், எனைத்து நூல் கற்பினும் - எவ்வளவு சாஸ்திரங்களை வாசித்தாலும், பிறர் சொல்லை காக்கும் - (கல்லாத) பிறருடைய சொற்களை இகழாமல் காக்கும்படியான, கருவியரோ - (அடக்க முதலான) சாதனங்களை உடையவரோ, [அல்லர்], இல் பிறந்த நல் அறிவாளர் - நற்குடியிற் பிறந்த விவேகிகள், நவின்ற நூல் தேற்றாதார் - (பெரியோர்) செய்த நூல்களில் தெளியாதவருடைய, புல் அறிவு - ஈனமான அறிவை, தாம் அறிவது இல் - (உன்னிடத்து) தாம் அறிந்து கொள்வதுமில்லை. [உபேக்ஷையா யிருப்பார்கள் என்றபடி], எ-று. குல சம்பிரதாயத்திற் பிறவாதவர்கள் எவ்வளவு கற்றும் பிறர் சொல்வதில் நேர்ந்த வழுக்களைத் தூற்றுவாரேயல்லது வெளிப்படுத்தாமல் விடார். குலப்பிறப் புள்ளவர்களோ குல சம்பிரதாயத்தால் அவ்வழுக்களைக் கவனிப்பது மில்லை; ஆன போது வெளியிட்டுத் தூற்றுவதேது என்றபடி. எனைத்து - எனை என்பதோ ரிடைச்சொன்மேல் து - விகுதி வந்தது; ஐ - சாரியை எனவுமாம். பிறரை என்பதிலுள்ள ஐ - சாரியை எனவுமாம். பிறரை என்பதிலுள்ள ஐ யுருபைப் பிரித்துச் சொல் என்பதோடு கூட்டிக் கொள்ள வேண்டும். தேற்றாதார் - இது பிறவினையாதலின் தம்மை என ஓர் செயப்படுபொருளை வருவித்து உரைத்துக் கொள்க. இல் - இல்லை யென்பதில் ஐ விகுதி குன்றியது. இல்லை என்பது செயப்படுபொருள் குன்றியதும் குன்றாததுமா யிருப்பதனால் அறிவதில் என்றதை எழுவாய்த் தொடராகவேனும், இரண்டாம் வேற்றுமைத் தொகையாகவேனும் கொள்க. இதனால் கல்வி மாத்திரமல்ல இற்பிறப்பு முடையவர் கோட்டியிற் சென்றதால் தான் இகழ்ச்சி நேராது என்று அறிவுறுத்தியதாம். முந்தி ஆறு பாட்டால் அயோக்கிய சபையின் திறத்தைக் கற்றாலல்லது கல்வித்திற முண்டாகாதென்று முந்திச் சொன்னதின் தொடர்ச்சியாற் காட்டி அயோக்கிய சபையையும் யோக்கிய சபையையும் விவரித்தார் என அதிகாரத்துக்கு இசையக் கூட்டிக் கொள்க. 33. புல்லறிவாண்மை
[அதாவது புல் - அற்பமான, அறிவாண்மை - அறிவை ஆளுந்தன்மை. அதாவது, சாரத்தையும், அசாரத்தையும் அறிந்து கொள்ளாமையோடு கர்வப்படுவதுமாம்.]
321. அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல் பொருளாகக் கொள்வர் புலவர்; - பொருளல்லா ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை மூழை சுவையுணரா தாங்கு. (இ-ள்.) அருளின் - கிருபையினால், அறம் உரைக்கும் - தருமங்களைச் சொல்லுகிற, அன்பு உடையார் - (யாவரிடத்தும் இயற்கையில்) அன்புள்ளவர்களுடைய, வாய் சொல் - வாக்கிலிருந்து - (தமக்கு) ஒரு பிரயோசனமாக ஏற்றுக் கொள்வார்கள்; பொருள் அல்லா - ஒரு வஸ்துவே யாகாத, ஏழை - மூடன், அதனை - அப்பெரியோர் சொல்லை, மூழை - துடுப்பு, பால் கூழை - பாற்சோற்றினது, சுவை உணராது ஆங்கு - உருசி யறியாதது போல (அறியாமல்), இகழ்ந்து உரைக்கும் - தூஷித்துப் பேசுவான், எ-று. பெரியோர் நற்புத்தி போதித்தால் யோக்கியர் அதைத் தமக்கொரு பேறாகக் கொள்வர், மூடரோ அதைத் தூஷிப்பார் என்றதாம். கூழை - வேற்றுமை மயக்கம். உணராது - உணராத, மூழை ஆங்கு எனவு முரைக்கலாம். உணராது - வினையாலணையும் பெயர்; மூழை கருத்தாவான போது தொழிற்பெயர்.
322. அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால் செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்; கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின் செவ்வி கொளல்தேற்றா தாங்கு. (இ-ள்.) தோல் கவ்வி தின்னும் - தோலைக் கவ்வித் தின்னு கொண்டிருக்கிற, குணுங்கர் நாய் - புலையருடைய நாயானது, பால் சோற்றின் -, செவ்வி கொளல் - ருசியைக் கொள்ளுதலிலே, தேற்றாது ஆங்கு - தெளிவில்லாதது போலே, அவ்வியம் இல்லார் - பொறாமை முதலிய மனக்கோட்ட மில்லாதவர், அறத்து ஆறு உரைக்கும் கால் - தருமமார்க்கங்களைச் சொல்லும் போது, செவ்வியர் அல்லார் - நற்குண மில்லாதவர்கள், செவி கொடுத்தும்-, கேட்கலார் - கேளார்கள், எ-று. இதிலும் முந்தியபாட்டின் கருத்தே அமைந்தது. கவிகள் வெவ்வேறாகையால் ஒரு விஷயத்தையே பலவிதத்திற் கூறுதல் கவித்திற மெனினுமாம். செல்வருடைய நாயாகில் நல்லுணவு நின்றிருக்கும். குணுங்கர் நாயாதலின் அஃதில்லை; தோலைத் தின்கின்றது என்றபடி செவிகொடுத்தும் - செவிகொடுப்பது போல் பாவனையே யல்லது அஃதில்லை என்பது கருத்து. உம்மை - இழிவு சிறப்பு. கேட்கலார் - கேள் - பகுதி, கு - சாரியை, அல் - எதிர்மறை விகுதி, ஆர் - பலர்பால் விகுதி.
323. இமைக்கும் அளவில்தம் இன்னுயிர்போம் மார்க்கம் எனைத்தானும் தாங்கண் டிருந்தும் - தினைத்துணையும் நன்றி புரிகல்லா நாணில் மடமாக்கள் பொன்றிலென் பொன்றாக்கால் என்? (இ-ள்.) இமைக்கும் அளவில் -, தம் இனி உயிர் - தமது இனிய பிராணம், போம் மார்க்கம் - போகும் வழியை, எனைத்தானும் - எல்லாப் பிரமாணங்களாலும், தாம் கண்டு இருந்தும் - தாங்கள் பார்த்திருந்தும், தினை துணையும் - தினையளவாயினும், நன்றி - (தருமங்களைக் கேட்பதும் அங்ஙனம் நடப்பதுமாகிய) நற்காரியங்களை, புரிகல்லாத - செய்யாத, நாண் இல் மட மாக்கள் - வெட்கமில்லாத மூட ஜனங்கள், பொன்றில் என் - இறந்தாலென்ன, பொன்றாக்கால் என் - இறவாம லிருந்தாலென்ன, எ-று. பிரத்தியக்ஷம் முதலானவைகளால் உயிர்போவது தெரிந்திருக்கவும் தருமங் கேட்டு ஆசரியாதவர் இறந்தும் நஷ்டமில்லை இறவாதிருந்தும் லாபமில்லை என்றதாம். எனைத்தானும் - முற்றும்மை ஆகலின் எல்லாவற்றாலும் என்று உரைக்கப்பட்டது. எனைத்தானும் போம் மார்க்கம் - எவ்வகையிலாயினும் போம் வழியை எனவு முரைக்கலாம். நன்றி-பண்படியாப் பிறந்த பெயர். நாணில் - தர்மாசரணை செய்கிற பலரைக் கண்டும் நாணாத.
324. உளநாள் சிலவால் உயிர்க்கு ஏமம் இன்றால், பலர்மன்னும் தூற்றும் பழியால், - பலருள்ளும் கண்டாரோடு எல்லாம் நகாஅது எவனொருவன் தண்டித் தணிப்பகை கோள். (இ-ள்.) உள நாள் சில - வாழ்தற்கிருக்கிற நாள்கள் அற்பம், உயிர்க்கு - பிராணனுக்கு, ஏமம் இன்று - (உடம்பை விட்டுப் போக வொட்டாத) காவலில்லை; பலர் - அநேகர், தூற்றும் - வியாபிக்கச் செய்கிற, பழி - நிந்தைகள், மன்னும் - அதிகமாயிருக்கின்றன. பலருள்ளும் - உலகத்திலுள்ள பலபேருக்குள்ளும், கண்டாரோடு எல்லாம் - காணப்படுகிற யாவரோடும், நகாது - (இன்பமாய்ப் பேசிச்) சிரியாமல், ஒருவன் -, தண்டி - கெட்டு, தனி - தனியாயிருந்து, பகைகோள் - பகைகொள்ளுதல், எவன் - என்னபயன்?, எ-று. வாழ்நாளோ சிறிது, உயிரைப் போகவொட்டாமல் தடுக்கவோ வழியில்லை; உலகத்தார் தூஷணையோ அநேகம்; இப்படியிருக்க, நமக்குக்கிட்டின நல்லோரோடு சிநேகமா யிருப்பதை விட்டு மூடன் பகை கொள்வதிற் பயனென்ன, கேடுதான் பயன் என்பதாம். ஆல் - மூன்றும் அசை. ஏமம் இன்று என்பதற்கு சந்தோஷம் இல்லை எனவும் பொருள் கூறலாம். கோள் - முதல் நீண்ட முதனிலைத் தொழிற்பெயர். ஒருவன் அங்கே போய் அடிபட்டதை, அங்கே அடிபடப்போனான் என்பது போல் பகை கொள்வதினால் வருங் கேட்டை, கெட்டுப் பகைகொளல் என்றார்; நிச்சயத்தினால் கெட்டு என இறந்தகாலம் கூறப்பட்டது [பொது. சூ.33].
325. எய்தியிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி வைதான் ஒருவன் ஒருவனை; - வைய வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான் வியத்தக்கான் வாழும் எனின். (இ-ள்.) எய்தி இருந்த அவை முன்னர் - பலர் கூடியிருந்த சபைக்கு முன்னே, ஒருவன் -, சென்று - போய், ஒருவனை - (அங்கிருக்கும்) ஒருவனை, எள்ளி - இகழ்ந்து, வைதான் - திட்டினவனாயிருக்க, வைய வயப்பட்டான் - திட்ட உட்பட்டவன், வாளா இருப்பானேல் - (பொறுத்து) சும்மா இருப்பானானால், வைதான் - திட்டினவன், வாழுமெனின் - வாழ்ந்து கொண்டிருந்தால், வியத்தக்கான் - ஆச்சரியப்படத் தக்கவன் (ஆவன்), எ-று. புத்தியீனனாகிய ஒருவன் ஒரு சபையிற் சென்று காரணமின்றி யொருவனைத் திட்ட, அப்படி திட்டப்பட்டவன் அதைப் பொறுத்துக் கொண்டு சும்மா இருக்க, அந்தத் திட்டினவன் வாழமாட்டானென்பது கருத்து. முன்னர் - ஏழனுருபுமாம். முதல் வைதான் என்பதோடு ஆக என்றொரு சொற்கூட்டி வினையெச்சமா முடித்துக் கொள்க. வயப்பட்டான் - வசப்பட்டான். விய என்னு முதனிலை வியக்க என்னும் வினையெச்சமா நின்றது.
326. மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை ஊக்கி அதன்கண் முயலாதான் - தூக்கிப் புறத்திரு போகென்னும் இன்னாச் சொல் இல்லுள் தொழுத்தையால் கூறப் படும். (இ-ள்.) மேல் - (தன்) மேல், மூப்பு வாராமை முன்னே - கிழத்தனம் வாராமைக்கு முன்னேயே, அற வினையை - தரும காரியத்தை, ஊக்கி - மேற்கொண்டு, அதன்கண் முயலாதான் - அந்த விஷயத்தில் முயற்சி செய்யாதவன், இல்லுள் - (தன்) வீட்டில், நூக்கி - தள்ளி, புறத்து இரு - வெளியிலே இரு, போக என்னும் - (இவ்விடம் விட்டு) போகக் கடவாய் என்கிற, இன்னா சொல் - இனிமையில்லாத சொல்லை, தொழுத்தையால் - வேலைக்காரியாலும், கூறப்படும் - சொல்லப்படுவான், எ-று. மூப்புவராமுன்னமே தரும காரியங்களில் முயன்று நடவாதவனை வெள்ளாட்டியும் இகழ்ந்து பேசுவாள் என்பதால், நற்காரியஞ் செய்யாத புத்தியீனனிடத்து அற்பருக்கும் அலக்ஷியமுண் டென்றபடி. மூப்பு வந்தபின் எதுவும் செய்ய இயலாமை பற்றி வாராமை முன்னே என்றார். வாராமை - எதிர்மறைத் தொழிற்பெயர் அறமாகிய வினை அறவினை. ஊக்கி - ஊக்கு - பகுதி. மூப்பு - மூத்தல் - மூ - பகுதி. தொழுத்தை - தொழு - பகுதி, ஐ - கர்த்தாப் பொருள் விகுதி, தகரம் எழுத்துப் பேறு, மற்றொரு தகரம் விரித்தல் விகாரம், வணங்கியிருப்பவள் என்பது பொருள். கர்த்தாப்பெயர் மூன்றாம் வேற்றுமையில் வந்தவிடத்து இரண்டு செயப்படு பொருள் வருமாயின் ஒன்று இரண்டாம் வேற்றுமையிலும் மற்றொன்று முதல் வேற்றுமையிலும் வரும்.
327. தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார் ஏமஞ்சார் நன்னெறியும் சேர்கலார் - தாமயங்கி ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப் போக்குவார் புல்லறிவி னார். (இ-ள்.) புல் அறிவினார் -, தாமேயும் இன்பு உறார் - தாமாகிலும் இன்ப மடையார்; தக்கார்க்கும் - யோக்கியருக்கும், நன்று ஆற்றார் - நன்மை செய்யமாட்டார்; ஏமம் சார் - (உயிருக்கு) காவலாயிருக்கும்படியான, நல் நெறியும் - நல்ல தருமவழியையும், சேர்கலார் - சேரமாட்டார்; தாம் மயங்கி - தாங்கள் மயக்கங் கொண்டு, ஆக்கத்துள் தூங்கி - செல்வத்திலேயே ஒன்றும் தோன்றாமலிருந்து, வாழ்நாளை - (தமது) ஆயுசை, அவத்தமே போக்குவார் - வீணாகவே கழிப்பார்கள், எ-று. புத்தியீனர் செல்வத்தையே சதமாகக் கொண்டு யாதொரு நற்காரியமுஞ் செய்யாமல் தமது வாணாளை வீணாளாக்குவர் என்பதாம். தாமே - ஏகாரம் பிரிநிலை, விகற்பமுமாம். இன்பு - இன்பம் என்பதின் ஈறு தொகுத்தல், சேர்கலார் - சேர் கு அல் ஆர் - பகுதி சாரியை எதிர்மறை விகுதி, பலர்பால் விகுதிகள் வாழ்நாள் - வினைத்தொகை.
328. சிறுகாலை யேதமக்குச் செல்வழி வல்சி இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப் பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும் பொன்னும் புளிவிளங்கா யாம். (இ-ள்.) சிறு காலையே - இளமையிலேயே, தமக்கு செல்வுழி - தாம் (மரணமடைந்த பின்) போமிடத்துக்கு, வல்சி - (தருமமாகிய) சோற்றை, இறுக இறுக - மிகவும் அழுத்தமாக, தோள் கோப்பு - தோள் மூட்டையாக, கொள்ளார் - எடுத்துக் கொள்ளாதவர்கள், இறுகி இறுகி - (பணத்தைச்) சிக்கெனவாக் கொண்டு, பின் அறிவாம் - (தருமத்தைப்) பின்னே யோசிப்போம், என்று இருக்கும் -, பேதையார் - புத்தியீனர், கை காட்டும் - (மரண காலத்தில்) கையால் உருவம் காட்டுகிற, பொன்னும் - பொன் உருண்டையும், புளி விளங்காய் - புளிப்பாகிய விளாங்காய் (ஆகும்), எ-று. நல்ல பருவத்தில் தருமஞ் செய்யாது விட்டுப் பின்பு பார்த்துக் கொள்வோமென்று பணத்தைச் சேர்த்து வைக்கும் பேதையர் மரணகாலத்தில் வாய் அடைத்துப் போன போது தாம் வைத்திருந்த பொன்னுருண்டையைத் தம்மவர் எடுத்துக் கொள்ளும்படி கையினால் திரட்சியைக் காட்ட, அங்கிருந்த வஞ்சகர் புளிப்பான விளாங்காய் வேண்டுமென்கிறார் என்று பாவித்து அப்பொன்னைத் தாம் அபகரித்துக் கொண்டு போனாற் போல் சேர்த்து வைத்த பொருள் தம்மவருக்கும் உதவாமற்போம் என்பது கருத்து. இக்காலத்தில் அப்படி நடந்ததுமுண்டு. தமக்கு - நான்கனுருபு கர்த்தாப் பொருளில் வந்தது. தோள்கோப்பு - தோளில் கோக்கத்தக்க மூட்டை. தொழிற் பெயர் செயப்படுபொருளுக்கு ஆயிற்று. இறுகி இறுகி என்பது இறுகிறுகி என ஈறுதொகுத்தலாயிற்று. மிகுதிப் பொருளைக் காட்ட வந்த அடுக்கு 'பொரிவிளங்காய்' என்று பாடங் கூறுவது முண்டு.
329. வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும் மறுமை மனைத்தாரே யாகி; - மறுமையை ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்துச் சிந்தியார் சிற்றறிவி னார். (இ-ள்.) வெறுமை இடத்தும் - பணமில்லாத போதும், விழு பிணி போழ்தும் - விசேஷமான வியாதி வந்த காலத்திலும், சிறு அறிவினார் - அற்பபுத்தி யுடையார், மறுமை மனத்தாரே ஆகி - மறுமைக்குரியதைச் செய்யும் மனதுள்ளவரே யாகி, ஆற்றிய காலத்து - செய்யக் கூடிய காலத்தில், மறுமையை - மறுமைக்கு உரிய தருமத்தை, ஐந்தை அனைத்தானும் - சிறு கடுகின் அளவாகிலும், சிந்தியார் - நினைக்க மாட்டார், எ-று. புத்தியீனர் தாம் தரித்திரப்படும் போதும் வியாதியனுபவிக்கும் போதுமே தருமசிந்தை யுடையரல்லது பொருள் கைகூடி செய்யத்தகுந்த காலத்தில் அச்சிந்தை யில்லாதவர் என்பதாம். விழுப்பிணி - பண்புத்தொகை. பிணிப்போழ்து - ஆறாம் வேற்றுமைத் தொகையாம். மறுமை மனத்தர் - மறுமையினிடத்து மனதை யுடையவர். ஏலும் என்பது போல் ஆனும் என்பதும் வினையெச்சக்குறி; ஆயினும் என்பதின் இடைக் குறையுமாம். மூன்றனுருபெனக் கொண்டு சிந்தனைக் கருவிக்குக் கூட்டினு மமையும்.
330. என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார் கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை - அன்னோ அளவிறந்த காதல்தம் ஆருயிர் அன்னார்க் கொளஇழைக்கும் கூற்றமும் கண்டு. (இ-ள்.) அளவு இறந்த காதல் - அதிக ஆசைக்குப் பாத்திரமான, தம் ஆர் உயிர் அன்னார் - தம்முடைய அருமையான உயிர் போன்றவரை, கொள இழைக்கும் - கொண்டு போக முயற்சி செய்கிற, கூற்றம் கண்டும் - எமனைப் பார்த்தும், அன்னோ - ஐயோ, (புல்லறிவாளர்) இவ்வுடம்பு பெற்றும் - இந்த மனிதவுடலைப் பெற்றும், அறம் நினையார் - தருமசிந்தை யில்லாதவராகி, தம் வாழ்நாளை - தமது ஆயுளை, கொன்னே கழிப்பர் - வீணாகக் கழிக்கிறார்கள், என்னே - இது என்ன?, எ-று. தருமங்களைச் செய்வதற்கு ஏற்ற மனுஷ்ய தேகத்தை அடைந்தும் தருமஞ் செய்யாமை என்ன காரணமோ தெரியாது. தம் உறவினருக்கு வைத்த பொருளைச் செலவழிக்கக் கூடாதன்றோ எனின் அப்படிப்பட்டவர்களை எமன் தம் கண்ணுக்கு எதிரேயே கொண்டு போக முயல்கின்றானே என்பது கருத்து. நாம் யாருக்காகப் பொருளைச் சேர்த்து வைக்கிறோமோ அவர்களும் அதை அனுபவிப்பது சதமன்று என்கிறபடி. என்னே - ஏ - இரக்கத்தில் வந்தது. மற்று - அசை. ஆருயிர் - அரு என்னும் பண்படி முதல் நீண்டது. இவ்வதிகாரத்துக்குப் பாடல்களை ஒருவாறு பொருத்தினாலும் இவ்வதிகாரமே பொருட்பாலுக்கு இயைந்ததன்று அறத்துப்பாலி லிருக்கத்தக்கது பின்னதுமப்படியே. 34. பேதைமை
[அதாவது முழுமூடத்தனம்.]
331. கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை நிலையறியாது அந்நீர் படிந்தாடி அற்றே கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு. (இ-ள்.) கொலை வல் - கொலைத் தொழிலில் சாமர்த்தியமுள்ள, பெரு கூற்றம் - பெரிய எமன், கோள் பார்ப்ப - எடுத்து கொண்டு போகுங் காலத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, ஈண்டை வலை அகத்து - இவ்வுலக வாழ்க்கையாகிய வலையினிடத்து, செம்மாப்பார் மாண்பு, இறுமாந்திருப்பவருடைய பெருமை, கொலைஞர் - கொலை செய்பவர், உலை ஏற்றி - உலையிலே போட்டு, தீ மடுப்ப - நெருப்பை மூட்ட, ஆமை - ஆமையானது, நிலை அறியாது - (தனக்கு வந்திருக்கிற) கதியை அறியாமல், அந் நீர் படிந்து - அந்தத் தண்ணீரில் மூழ்கி, ஆடியற்று - விளையாடுவது போலாம், எ-று. இவ் வுலகவாழ்க்கையைச் சதமென நம்பிச் சந்தோஷிப்பது ஆமையைச் சமைக்கத் தீ மூட்டிய விடத்து அது உலைநீரில் விளையாடுவது போலாம். ஏனெனில் உடனே கேடுவர இருப்பதால் என்கிறபடி. கொலைஞர் - ஞகரம் பெயர்ப்பகுபத விடைநிலை. மடுப்ப - நிகழ்காலம். ஆடி என்பது ஆடினால் என்பதின் திரிபு; ஆடினால் அதுபோலாம் என்பது பொருள்; ஈறுகெட்ட தொழிற் பெய ரென்னவுமாம். அற்று - அன் - பகுதி, று - விகுதி. வல்பெருங்கூற்றம் - பண்புத் தொகை. கோட் பார்ப்ப - கோட்பு ஆர்ப்ப எனப்பிரித்து, கொள்ளுதற்கு இரைந்து கொண்டிருக்க எனவு முரைக்கலாம். செம்மாப்பார் - செம்மா - பகுதி.
332. பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன் ஓசை அவிந்தபின் ஆடுதும் என்றற்றால் இற்செய் குறைவினை நீக்கி அறவினை மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு. (இ-ள்.) இல் செய் - குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய, குறைவினை நீக்கி - காரியக் குறைகளைப் போக்கி, அறவினை மற்று அறிவாம் - தரும காரியத்தைப் பின்னாலே யோசிப்போம், என்று இருப்பார் மாண்பு - என்று அலக்ஷியமாயிருக்கு மனிதருடைய பெருமையை, பெரு கடல் ஆடிய சென்றார் - பெரிய கடலிலே மூழ்கப் போனவர்கள், ஓசை - கடலோசையானது, ஒருங்கு - ஒருமிக்க - ஸ்நானஞ் செய்வோம், என்றற்று - என்றிருந்தாற் போலாம், எ-று. சமுசார காரியங்களை நன்றாத் தீர்த்துத் தருமகாரியங்களைப் பார்ப்போமென் றிருப்பவர் கடலோசை அடங்கியபின் முழுகலாமென் றிருப்பார் போலே என்றபடி. கடலில் தொனி ஓயாதது போல் சமுசார காரியமும் ஓயாதென்றதாம். ஆடிய - செய்யிய என்னும் வாய்ப்பாட்டெச்சம். ஒருங்கு, உடன் - இரண்டுக்கும் பொருளில் அதிக பேதமில்லை, ஆதலால் ஒரு பொருட் பன்மொழி என்னலாம். ஆடுதும் - தும் - விகுதி, எதிர்காலத் தன்மைப் பன்மையில் வந்தது. ஆல் - அசை. குறைவினை - இன் - சாரியை. மற்று - வினைமாற்றில் வந்தது "வினைமாற்றசைநிலை பிறிதெனுமற்றே" என்பது சூத்திரம். மாண்பு என்பது அவர் நினைப்பின்படி கூறிப் பரிகாசஞ் செய்தபடி.
333. குலந் தவங் கல்வி குடிமைமூப் பைந்தும் விலங்காமல் எய்தியக் கண்ணும் - நலஞ்சான்ற மையாறு தொல்சீர் உலகம் அறியாமை நெய்யிலாப் பாற்சோற்றின் நேர். (இ-ள்.) குலம் - நற்குலமும், தவம் - நல்ல விரதமும், கல்வி - படிப்பும், குடிமை - குடித்தன இயல்பும், மூப்பு - (ஒழுக்கத்தில்) முதிர்ந்திருப்பதும், ஐந்தும் - (ஆகிய இவ்) வைந்தும், விலங்காமல் எய்தியக் கண்ணும் - (ஒருவனுக்கு) தப்பாமல் பொருந்தின போதும், நலம் சான்ற - நன்மை மிகுந்த, மை அறு தொல் சீர் - குற்றமற்ற பழமையான சிறப்பையுடைய, உலகம் அறியாமை - உலகத்துக்கு ஏற்றதை அறியாமலிருப்பது, நெய் இலா பால் சோற்றின் - நெய் இல்லாத பால்சோற்றுக்கு, நேர் - சமானமாகும், எ-று. குலமுதலியவை ஒருவனுக்கு அமைந்தும் உலகத்துக்கு ஏற்ற நற்காரியம் அறியாமல் அவன் நடப்பது நெய்யில்லாத பால் சோறு போல் இனிப்பாயிராது என்பதாம். நெய் இலாமையைப் பாலிற்குக் கூட்டுக; சாரமற்ற பால் என்பதாம். இது இவ்வதிகாரத்துக்குப் பொருந்தாதே ஆயினும் ஒரு சங்கதியின் தொடர்ச்சிமேல் தொடர்ச்சியாய் வந்ததெனக் கொள்க. குல முதலியவை பெயர்ச்செவ்வெண், தொகை பெற்றது [இடை. சூ. 9]. எய்தியக்கண் - வினையெச்சம். உம்மை - உயர்வு சிறப்பு. சோற்றின் - நான்காம் வேற்றுமைத் தொகை, சோற்றினொடு என மூன்றாம் வேற்றுமைத் தொகையுமாம். நேர் - பகுதியே நேரும் என்னும் வினைமுற்றுப் பொருட்டாய் வந்தது.
334. கல்நனி நல்ல கடையாய மாக்களின்; சொல்நனி தாமுணரா வாயினும் - இன்னினியே நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென்று உற்றவர்க்குத் தாம்உதவ லான். (இ-ள்.) சொல் - (பிறர்) சொல்லுஞ் சொல்லை, நனி - நெருக்கமாக, தாம் -, உணரா ஆயினும் - அறிந்து கொள்ளாதவை யானாலும், உற்றவர்க்கு - தம்மை அடைந்தவர்களுக்கு, இன் இனியே - அப்போதே, நிற்றல் - நிற்பதும், இருத்தல் - உட்கார்வதும், கிடத்தல் - படுப்பதும், இயங்குதல் - நடப்பதும், என்று - என்று சொல்லுகிற (இவர்களுக்கு) உதவுலால் - உதவியாவதனாலே, கல் - கல்லுகள், கடை ஆய மாக்களின் - ஈனமான மனிதரைக் காட்டிலும், நனி நல்ல - மிகவும் நல்லவைகள், எ-று. ஒருவன் கற்களினிடம் சென்று நிற்க உட்காரப் படுக்க அதன் மேல் நடக்க இப்படி எதைச் செய்ய விரும்பினாலும் அததுக்கு அக்கற்கள் உபயோகப் படுவதினால் பிறர்க்கு உதவாத மனிதரைக்காட்டிலும் மேலானவை என்பதாம். நனி என்னு முரிச்சொல் நெருக்கத்துக்கு வந்தது. நெருங்கிக் கேட்க மாட்டாதவை எனக்கொள்க. இது உலக இயல்பைக் குறித்தது. ஆய - யகரம் இறந்தகால இடைநிலை என்பர்; ஆகிய என்பதின் விகாரமென்னவுமாம். இனி என்பது அடுக்கி இன்னினி என்று விகாரப்பட்டது. நிற்றல் முதலிய பெயர்ச்செவ்வெண் விகாரத்தால் தொகை பெறா வாயின.
335. பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக் கறுவுகொண் டேலாதார் மாட்டும் - கறுவினால் கோத்தின்னா கூறி உரைக்கால் பேதைக்கு நாத்தின்னும் நல்ல தினத்து. (இ-ள்.) பெறுவது ஒன்று இன்றியும் - தாம் பெறத்தக்க பயன் ஒன்று இல்லாதே யிருந்தும், பெற்றானே போல - ஒரு பயனை அடைந்தவன் போல், ஏலாதார் மாட்டும் - (தன் கோபத்தை) ஏற்கத் தகாதவரிடத்திலும், கறுவு கொண்டு - பகைகொண்டு, கறுவினால் - கோபத்தினால், இன்னா கோத்து - பிரியமல்லாத சொற்களைக் கூட்டி, கூறி உரையாக்கால் - சொல்லாமற் போனால், பேதைக்கு - புத்தியீனனுக்கு, நல்ல சுனைத்து - நல்லதான தினவானது, நா தின்னும் - நாக்கைத் தின்றுவிடும், எ-று. பயனில்லாமலே எப்படிப்பட்டவர் மேலும் தூஷணைகளைக் கற்பித்துச் சொல்லாவிடின் மூடனுக்குத் திருப்தியில்லை என்பதாம். இன்னா - இனி என்னும் பண்படி வினைப்பகுதியிற் பிறந்த எதிர்மறை வினையாலணையும் பெயர். கூறி யுரைத்தல் - ஒரு பொருட் பன்மொழி. சுனைத்தல் - சொறிதல் காரணமாகிய தினவுக்கு ஆகு பெயர்.
336. தங்கண் மரபில்லார் பின்சென்று தாம்அவரை எங்கண் வணக்குதும் என்பர் - புன்கேண்மை நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப! கற்கிள்ளிக் கையிழந் தற்று. (இ-ள்.) தங்கண் மரபு இல்லார் பின் சென்று - தம்மிடத்து (ஒரு நன்மை செய்யும்) முறை யில்லாதவரிடம் போய், அவரை -, நாம் -, எங்கண் வணக்குதும் - எங்களிடத்து வணங்கிநிற்கச் செய்வோம், என்பவர் புல் கேண்மை - என்று சொல்லுகிறவர்களுடைய அற்பமான உறவு, நல் தளிர் புன்னை - நல்ல தளிர்களோடு கூடிய புன்னை மரங்கள், மலரும் கடல் சேர்ப்ப - மலரும்படியான கடற்கரை யரசனே!, கல் கிள்ளி - கல்லைக் கிள்ளி, கை இழந்தற்று - கையைப் போக்கிக் கொண்டது போலாம், எ-று. தமக்கு யாதொரு நன்மையுஞ் செய்யும்படியான முறையில்லாதவரைச் சுவாதீனஞ் செய்ய முயல்வது கல்லைக்கிள்ளிக் கைபோவதற்கொப்பமாம் என்றால், பயன்படாமற் போவதுமன்றித் தனக்கொரு நஷ்டமுமாம் என்றபடி, இதெல்லாம் பேதைமை. வணக்குதும் - தன்மைப்பன்மை எதிர்கால வினைமுற்று. கேண்மைக்குப் புன்மையாவது இவர் நினைப்பினால் மாத்திரமுண்டாயிருத்தல்.
337. ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின் போகா தெறும்பு புறஞ்சுற்றும்; - யாதும் கொடாஅர் எனினும் உடையாரைப் பற்றி விடாஅர் உலகத் தவர். (இ-ள்.) ஆகாது எனினும் - கிட்டாதானாலும், அகத்து - உள்ளே, நெய் உண்டாகில் - நெய் இருக்குமானால், எறும்பு -, போகாது - (அந்தப் பாத்திரத்தை) விட்டு நீங்காமல், புறம் சுற்றும் - வெளிப்பக்கத்திலே சுற்றிக் கொண்டிருக்கும்; யாதும் கொடார் எனினும் - எதையும் கொடாதவரானாலும், உடையாரை - பொருளுள்ளவர்களை, பற்றி - சேர்ந்து, உலகத்தவர் - உலகத்திலுள்ள ஜனங்கள், விடார் - விடமாட்டார்கள், எ-று. உள்ளே புகுந்து நெய்குடிக்கக் கூடாமலிருந்தாலும் அந்தக் கலசத்தை எறும்பு சுற்றிக் கொண்டிருப்பதுபோல் ஒரு காகம் கொடாராயினும் தனவான்களிடத்தில் பேதைகள் சுற்றிக் கொண்டிருப்பார்கள் என்பதாம். உலகத்தவர் - உலகம் - பகுதி, அர் - பலர்பால்விகுதி, அத்தும் அகரமும் - சாரியைகள்.
338. நல்லவை நாடொறும் எய்தார் அறஞ்செய்யார் இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார் - எல்லாம் இனியார்தோள் சேரார் இடைபட வாழார் முனியார்கொல் தாம்வாழும் நாள். (இ-ள்.) நாள் தொறும் - ஒவ்வொரு நாளும், நல்லவை - (பெறத்தக்க) நன்மைகளை, எய்தார் - அடையார்கள்; அறம் செய்யார் - கருமத்தைச் செய்யமாட்டார்கள்; இல்லாதார்க்கு - தரித்திரர்க்கு, யாது ஒன்றும் ஈகலார் - எதையாகிலும் கொடுக்க மாட்டார்கள்; இனியார்தோள் - இனிமையான தம் பெண்டிர்களது புஜங்களை, சேரார் அடையார்கள்; இசைபட - கீர்த்தி யுண்டாகும்படி, வாழார் - வாழ மாட்டார்கள்; (ஆதலின் மூடர்) தாம் வாழும் நாள் எல்லாம் - தாங்கள் பிழைத்திருக்குங் காலங்களையெல்லாம், முனியார்கொல் - வெறுக்கமாட்டார்களா, எ-று. நாள்தோறும் எய்தத்தக்க நன்மைகளாவன - பின்னே தங்களுக்கு க்ஷேமலாபங்களை யுண்டாக்கத்தக்க கல்வி கேள்விகளும் பொருளுமாம். ஆகவே, அறம் பொருளின்பங்களைத் தாங்கள் அடையாமலும் பிறர்க்கு உபகாரஞ் செய்து கீர்த்தி பெறாமலும் வீணாய்க் கழிக்கிற தங்கள் வாழ்நாள் மேல் தங்களுக்கே வெறுப்பில்லாம லிருப்பது அதிசயந்தான் என்கிறபடி. இல்லாதார்க் கியாதொன்றும் - "யவ்வரினிய்யாம்" என்பதனால் குற்றியலுகரம் இகரமாகி "யகரம்வரக் குறளுத்திரியிகரமும்" என்பதனால் குற்றியலிகரமாயிற்று. அவ்விகரம் "சீருந்தளையுஞ் சிதையின் சிறிய அ இ உவ்வளவோ டாரு மறிவ ரலகு பெறாமை" என்கிற காரிகைச் சூத்திரத்தினால் அலகு பெறாது வாளா நின்றது.
339. விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர் விழைந்திலேம் என்றிருக்கும் கேண்மை - தழங்குகுரல் பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே ஆய்நலம் இல்லாதார் மாட்டு. (இ-ள்.) ஆய் நலம் இல்லாதார்மாட்டு - ஆராயப்பட்ட சற்குணமில்லாத மூடரிடத்தில், ஒருவர் - (எவராகிலும்) ஒருவர், விழைந்து - விரும்பி, தம்மை வியப்ப - தம்மைக் கொண்டாட, ஒருவர் - (கொண்டாடப்பட்ட) மற்றொருவர், விழைந்திலேம் - நாங்கள் விரும்பினோமில்லை, என்று இருக்கும் கேண்மை - என்று ஏற்பட்டிருக்கிற சிநேகமானது, தழங்கு குரல் - கோஷிக்கிற தொனியையுடைய, பாய் திரை சூழ் வையம் - பாய்ந்து வருகிற அலைகளுள்ள - கடல்சூழ்ந்த பூமியை, பயப்பினும் - தருவதாயிருந்தாலும், இன்னாது - பிரியமாயிராது, எ-று. தம்மை விரும்பிச் சிநேகித்தவரைச் சிநேகியாத மூடருடைய கூட்டுறவு எவ்வளவு பிரயோசனந் தருவதானாலும் யோக்கியருக்கு இஷ்டமாயிராது என்பது கருத்து. வியப்ப - நிகழ்காலத்தில் வந்தது. விழைந்திலேம் - உடன் பாட்டெதிர்மறை வினைமுற்று; விழை -, பகுதி, த் - இடைநிலை, சந்தியால் வந்த தகரம் நகரமானது விகாரம், இல் - எதிர்மறைப்பண்படி, இடைநிலை அல்லது விகுதி, ஏம் - தன்மைப்பன்மை விகுதி. பாய் திரை - அன்மொழித் தொகை. திரை - கடல், எனக்கொள்ளின் வினைத்தொகையாம்.
340. கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும் பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின் மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத பித்தனென் றெள்ளப் படும். (இ-ள்.) கற்றனவும் - தாம் கற்ற கல்விகளும், கண் அகன்ற - அதிகமான, சாயலும் - மேன்மையும், இல் பிறப்பும் - நற்குடிப் பிறப்பும், பக்கத்தார் - அயலார், பாராட்ட - கொண்டாட, பாடு எய்தும் - பெருமையை அடையும்; தான் உரைப்பின் - (அவைகளை உடையவன்) தானே சொன்னால், மைத்துனர் - மைத்துனர்கள், பல்கி - அதிகப்பட்டு, மருந்தில் - மருந்தினாலும், தணியாத - தீராத, பித்தன் என்று - பைத்தியக் காரனென்று, எள்ளப்படும் - இகழப்படுவான், எ-று. ஒருவனுடைய கல்வி பெருமை முதலியவற்றைப் பிறர் கூறின் நன்றாயிருக்கும்; தானே கூறினால் பரிகாசஞ் செய்யப் படுவான் என்பது கருத்து. பரிகாசஞ் செய்ய உரியவராதலின் மைத்துனர் என்றது. பாரில் ஆடல் செய்தல் - பாராட்டல், எள்ள - இதைத் தொழிற்பெயராக் கொள்ள வேண்டும். தணியாத என்பது பித்தன் என்பதின் பகுதியான பித்து என்பதோடு முடிந்தது. 35. கீழ்மை
[அதாவது கீழ்மக்களது தன்மை அல்லது கீழ்ச்சாதியாரது தன்மை.]
341. கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும் குப்பை கிளைபோவாக் கோழிபோல்; - மிக்க கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன் மனம்புரிந்த வாறே மிகும். (இ-ள்.) காலை - காலத்தில், கப்பி - தானியத்தை, கடவது ஆ - கடமையாக, தன் வாய் பெய்யினும் - தன் வாயிலே போட்டாலும், குப்பை கிளைப்பு - குப்பையைக் கிளறுதலை, ஓவா - விட்டொழியாத, கோழி போல் - கோழியைப் போல், மிக்க கனம் பொதிந்த - மிகுந்த மேன்மை நிறைந்திருக்கிற, நூல் விரித்துக் காட்டினும் - சாஸ்திரங்களை விரித்துத் தெரிவித்தாலும், கீழ் - கீழானவன், தன் மனம் புரிந்த ஆறே - தன் மனது விரும்பியவழியே, மிகும் - மிகுந்து செல்வான், எ-று. கோழிக்குக் காலத்தில் தானியம் போட்டாலும் குப்பை கிளறப் போவதுபோல் கீழ்மகன் எத்தனை நல்ல நூல்களை யெடுத்துச் சொன்னாலும் அதைவிட்டுத் தன் மனதுக்கு இசைந்தபடியே செல்வான் என்பதாம். கடவது - கடமையில் கட - பகுதி, அ - சாரியை, து - விகுதி. மிக்க - மிகு - பகுதி, அ - பெயரெச்ச விகுதி, பகுதியில் ககரம் இரட்டிக் காலங்காட்டியது. கீழ் - ஆகுபெயர்.
342. காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல் தாழாது போவாம் என உரைப்பின் - கீழ்தான் உறங்குவம் என்றெழுந்து போமாம், அஃதன்றி மறங்குமாம் மற்றொன் றுரைத்து. (இ-ள்.) காழ் ஆய - உறுதியான நூற்பொருள்களை, கொண்டு - கற்றுக் கொள்ள, கசடு அற்றார் தம் சாரல் - குற்றமில்லாத பண்டிதரிடத்தில், தாழாது - தாமதப்படாமல், போவாம் என உரைப்பின் - போவோம் என்று ஒருவர் சொன்னால், கீழ் -, உறங்குவாம் என்று எழுந்துபோம் - தூங்குவோம் என்று எழுந்துபோவான்; அஃது அன்றி - அதல்லாமல், மற்றொன்று உரைத்து - வேறொரு சாக்கைச் சொல்லி, மறங்கும் - மறுத்துச் சொல்வான், எ-று. தான், ஆம் - அசைகள். படிக்கப் போவோ மென்றால் எதையாகிலும் சொல்லி அதை மறுத்துத் தூங்கப் போவான் கீழ்மகன் என்பதாம். கொண்டு - கொள்ள என்பதின் திரிபு. "சொற்றிரியினும் பொருடிரியா வினைக்குறை" என்பது சூத்திரம். போவாம் - உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்று; நீயும் நானும்; "அம் ஆம் என்பன முன்னிலையாரையும்" உறங்குவாம் - இதுவுமப்படியே போம்; போகும் அல்லது போவும் என்பதில் ஈற்றுயிர் மெய் கெட்டது. "செய்யுமெனெச்சவீற் றுயிர்மெய் சேறலும்" [வினை. சூத். 22].
343. பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையாது ஒருநடைய ராகுவர் சான்றோர்; - பெருநடை பெற்றக் கடைத்தும் பிறங்கு அருவிநன்னாட! வற்றாம் ஒருநடை கீழ். (இ-ள்.) சான்றோர் - பெரியோர், பெருநடை - பெரிய சிறப்பை, தாம் பெறினும் - தாம் அடைந்தாலும், பெற்றி - (தமது) தன்மை, பிழையாது - தப்பாமல், ஒரு நடையர் ஆகுவர் - (முன்னும் பின்னும்) ஒரே விதமான நடக்கையுள்ளவர் ஆவார்கள்; பிறங்கு அருவி நல் நாட - விளங்குகின்ற மலையருவிகளையுடைய நல்ல நாட்டையுடையவனே!, கீழ் -, பெரு நடை - பெருஞ் சிறப்பை, பெற்றக்கடைத்தும் - பெற்ற விடத்தும், ஒரு நடை - (முந்தியநடைக்கு வேறான) நடையிலே, வற்று ஆம் - வல்லமையுடையனாவான், எ-று. பெரியோர் அரசரால் எவ்வாறு மேன்மைப்படுத்தப் பட்டாலும் தாங்கள் முன்னிருந்தபடி அடக்கமொடுக்கங்களோ டிருப்பாரே யல்லது மாறார்; கீழ்மகனோ மாறிவிடுவான் என்றபடி. பெற்றக் கடைத்து - ஒருவகை வினையெச்சம்; இதனோடு சேர்ந்த உம் இழிவு சிறப்பு; பெறுவது அருமை என்றபடி. பெற்றி - தொழிற் பெயர்; பெற்றிருக்கும் சற்குணத்துக்கு ஆகு பெயர்; பெறு - பகுதி, இ - விகுதி ஆகுவர் - கு - சாரியை வற்று - வல் என்கிற பண்படி மேல் று - ஒன்றன்பால் விகுதி வந்தது. இழிவினால் கீழ்மகனை அஃறிணையாகவே முடித்தார்.
344. தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால் பனையனைத்தா உள்ளுவர் சான்றோர்; - பனையனைத்து என்றும் செயினும் இலங்கருவி நன்னாட! நன்றில நன்றறியார் மாட்டு. (இ-ள்.) இலங்கு அருவி நல் நாட - விளங்குகின்ற அருவிகளுள்ள நல்ல நாட்டையுடையவனே!, தினை அனைத்தே ஆயினும் - தினையளவாயினும், செய்த நன்று - (ஒருவன்) செய்த உபகாரத்தை, உண்டால் - அனுபவித்தால், சான்றோர் - நற்குணமிகுந்தவர், பனை அனைத்து ஆ - பனையளவாக, உள்ளுவர் - நினைப்பார்கள்; என்றும் - எக்காலமும், பனை அனைத்து செயினும் - பனையளவான நன்றி செய்தாலும், நன்று அறியா மாட்டு - (உபகாரத்தின் மகிமை) அறியாதவர்களிடத்து, நன்று இல - (அவை) உபகாரமாக நினைக்கப்பட மாட்டா, எ-று. அற்பவுபகாரத்தையும் பெரிதா நினைப்பது சான்றோரியல்பு, பெரிய வுபகாரத்தையும் உபகாரமா நினையாமலிருப்பது கீழோர் இயல்பு என்பதாம். தினை - ஒருவகைச் சிறுதானியம். அனைத்து - அன் - இடைச்சொல், பகுதி, ஐகாரம் - சாரியை, து - ஒன்றன் விகுதி, நன்றில - குறிப்பு முற்று, ஒரு மொழியாக் கொள்க.
345. பொற்கலத்து ஊட்டிப் புறத்தரினும் நாய்பிறர் எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்; - அச்சீர் பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யும் கருமங்கள் வேறு படும். (இ-ள்.) பொன் கலந்து ஊட்டி - பொன் பாத்திரத்தில் (நல்லவுணவை) உண்பித்து, புறம் தரினும் - ரக்ஷித்து வந்தாலும், நாய் -, பிறர் எச்சிற்கு - பிறருண்ட எச்சிற் சோற்றுக்கு, இமையாது - கண்கொட்டாமல், பார்த்திருக்கும் - (கொள்ளத்தகுந்த சமயத்தை) எதிர்பார்த்திருக்கும்; அ சீர் - அத்தன்மையாக, பெருமை உடைத்து ஆ கொளினும் - சிறப்புள்ளவனாக ஏற்றுக் கொண்டாலும், கீழ் -, செய்யும் கருமங்கள் - செய்கிற காரியங்கள், வேறுபடும் - (கனவான்கள் செய்யுங் காரியங்களுக்கு) வேறாகவே யிருக்கும், எ-று. நல்லுணவுகளைக் கொடுத்து மேன்மைப் படுத்தினாலும் இழிவான உணவுக்குக் காத்திருக்கும் நாய் போலவே மேன்மையாக் கொண்டாலும் இழிந்த காரியங்களைக் கீழோர் செய்வார்கள் என்பதாம். ஊட்டி - உண் என்பதின் பிறவினையெச்சம், டு - பிறவினை விகுதி, முதல் நீண்டது விகாரம்.
346. சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர் எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும் முந்திரிமேற் காணி மிகுவதேல் கீழ்தன்னை இந்திரனா எண்ணி விடும். (இ-ள்.) விழுமியோர் - மேலானவர், சக்கரம் செல்வம் பெறினும் - பூமண்டல அரசாட்சியாகிய சம்பத்தை யடைந்தாலும், எக்காலும் - எந்தத் தருணத்திலாயினும், மிகுதி சொல் - அதிகமான சொல்லை [வரம்பு கடந்த பேச்சை], சொல்லார் - சொல்ல மாட்டார்; எ காலும் - எப்பொழுதாயினும், முந்திரி மேல் - முந்திரி என்கிற சிறுதொகையின் மேல், காணி மிகுவதேல் - காணி என்னும் அற்பத்தொகை அதிகப்பட்டால், கீழ் -, தன்னை -, இந்திரன் ஆ - தேவேந்திரனாக, எண்ணி விடும் - எண்ணிக்கொள்வான், எ-று. மேலோர் எவ்வளவு செல்வத்திலும் வரம்பு கடந்து நடப்பதில்லை; கீழோரோ இருக்கிற தாழ்ந்த நிலைக்கு மேல் கிஞ்சித்துச் செல்வம் வந்தால் தம்மை மறந்து துர்மார்க்கஞ் செய்வார்கள் என்பது கருத்து. சக்கரம் - மண்டலமாகையால் பூமண்டலத்துக்குக் கொள்ளப்பட்டது. விழுமியோர் - விழுமுதல் - விரும்புதல், பிறர் விரும்பும்படியான நல்ல இயல்பையுடையவர்; விழுமு - பகுதி, இன் - இடைநிலை, ஈறுதொக்கது, ஆர் விகுதியின் ஆ ஒ ஆயிற்று ["பெயர் வினையிடத்து னளரயவிற்றயல்" பொது. சூத். 2]. முதல் எக்காலும் என்பதில் உம்மை முற்றுப்பொருளது, இரண்டாவதில் ஐயப்பொருளது, விகற்பப் பொருளென்க; எப்பொழுதாயினு மென்றபடி. அவர்களுக்குச் செல்வம் வருதல் அருமையென்றதாயிற்று. இங்கே காணி என்பது கீழ்க்காணியை; இக்கால வழக்கத்தின்படி முந்திரியில் அறுபத்தி நான்கிலொரு பங்கு. முந்திரியென்பது முந்நூற்றிருபதி லொருபங்கு. காணிமேல் முந்திரி முகுவதேல் எனச் சொற்களை மாற்றிப் பொருள் கொள்வது நேர்.
347. மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச் செய்த தெனினும் செருப்புத்தன் காற்கேயாம்; எய்திய செல்வந்த ராயினும் கீழ்களைச் செய்தொழிலாற் காணப் படும். (இ-ள்.) மை தீர் - குற்றமற்ற, பசு பொன் மேல் - நல்ல பொன்னின்மேலே; மாண்ட மணி - மாட்சிமையான ரத்தினங்களை, அழுத்தி - இழைத்து, செய்தது எனினும் - செய்யப்பட்டதானாலும், செருப்பு -, தன் காற்கே ஆம் - தன் காலில் அணிவதற்கே உபயோகமாம்; எய்திய செல்வந்தர் ஆயினும் - செல்வத்தைப் பொருந்தினவர்களானாலும், கீழ்களை - தொழிலால் - அவர்கள் செய்யுங் காரியங்களால், காணப்படும் - (இவர்கள் கீழ்கள் என்று) அறிதல் கூடும் [அறியலா மென்றபடி], எ-று. இரத்தினமிழைத்த செருப்பானாலும் காலில் அணியத் தக்கதே, அதுபோல் கீழ்மக்கள் எவ்வளவு செலவம் பெற்றாலும் கீழ்ப்படியில் வைக்கத்தக்கவரே யன்றி மேற்படியில் வைக்கத் தகார் என்பதாம். மாண்ட - மாண் என்கிற பண்படிமேற் பிறந்த தெரிநிலை யிறந்த காலப் பெயரெச்சம். செய்தது - இது செயப்பாட்டு வினையின் திரிபு; படு - விகுதி குன்றியது. காண - தொழிற் பெயராக் கொண்டு படு என்பதோடு முடிக்க காணப்படும் என ஒருமொழியாகவே கொண்டாலும் பொருந்தும்.
348. கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம் இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும், - அடுத்தடுத்து வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட! ஏகுமாம் எள்ளுமாம் கீழ். (இ-ள்.) விறல் மலை நல் நாட - பெருமையான மலைகளுள்ள நல்ல நாட்டையுடையவனே!, கீழ் -, கடுக்கென - கடினமாக, சொல்வற்று - சொல்லுதலிலே சாமர்த்திய முடையவன்; கண்ணோட்டம் - தாக்ஷிணியம், இன்று - இல்லாதவன்; பிறர்மாட்டு - பிறரிடம் (உண்டான), இடுக்கண் - சங்கடத்தை, உவக்கும் - சந்தோஷிப்பான்; அடுத்து அடுத்து - அடிக்கடி, வேகம் உடைத்து ஆம் - கோபாவேசத்தை யுடையவனாவான்; ஏகும் - (பலவிடத்தும்) திரிவான்; எள்ளும் - (பிறரைத் தூஷிப்பான், எ-று. கடினமாய்ப் பேசுவதும் யாரிடத்தும் தாக்ஷிணியம் பாராமையும் பிறருக்கு நேரிடுகிற ஆபத்துக்குச் சந்தோஷிப்பதும் அடிக்கடி சும்மாக் கோபிப்பதும் கண்டவிடத்துச் சும்மாத் திரிவதும் பிறரைத் தூஷிப்பதும் கீழ்மக்களியல்பு என்றபடி. ஆம் எல்லாம் அசைகள்.
349. பழையர் இவரென்று பன்னாட்பின் நிற்பின் உழையினியர் ஆகுவர் சான்றோர்; - விழையாதே கள்ளுயிர்க்கும் நெய்தல் கனைகடல் தண்சேர்ப்ப! எள்ளுவர் கீழா யவர். (இ-ள்.) கள் உயிர்க்கும் - தேனை ஒழுக்குகிற, நெய்தல் - நெய்தற் பூக்களையுடைய, கனை கடல் - ஒலிக்கிற கடலினது, தண் சேர்ப்ப - குளிர்ச்சியான கரையையுடைய அரசனே!, பின் நிற்பின் - (ஒருவர்) தமது பின்னே நின்றால், இவர் - இவர்கள், பல் நாள் பழையர் என்று - பல நாள் (சிநேகித்த) பழமையானவர்கள் என்று, சான்றோற் -, உழை - அவரிடத்திலே, இனியர் ஆகுவர் - இஷ்டமுள்ளவராவார்கள்; கீழாயவர் - கீழ்மக்கள், விழையாதே - (அவர்களை) விரும்பாமலே, எள்ளுவர் - நிந்திப்பார்கள், எ-று. சிலநாள் தம்மிடம் வந்தவர்களையும் பழைய சிநேகிதர் போல் கொள்வார்கள் பெரியோர்; எத்தனைநாள் பழகினாலும் சிநேகியாமல் நிந்திப்பார்கள் கீழோர் என்பதாம். 'பன்னாள் பின் நிற்பின்' என உரைப்பது இழிவு. அங்கே சிநேகித்த என்கிற சொல் வருவிக்கப்பட்டது.
350. கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றும் தீற்றினும் வையம்பூண் கல்லா சிறுகுண்டை; - ஐயகேள், எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச் செய்தொழிலாற் காணப்படும். (இ-ள்.) ஐய கேள் - அரசனே கேட்கக் கடவாய், என்றும் - நாள்தோறும், கொய் புல் குறைத்து - அறுக்கத்தக்க புல்லை அறுத்து, கொடுத்து - (தின்பதற்கு) கொடுத்து, தீற்றினும் - (கழுவுதல் முதலியவைகளால்) சுத்தப்படுத்தினாலும், சிறு குண்டை - சிறிய எருதுகள், வையம் - பண்டியை, பூண்கல்லா - பூண்டு இழுக்கமாட்டா; எய்திய செல்வந்தர் ஆயினும் - செல்வத்தைப் பொருந்தினவர்க ளானாலும், கீழ்களை-, செய்தொழிலால் - (அவர்கள்) செய்யுங் காரியங்களால், காணப்படும் - (இவர்கள் கீழ்கள் என்று) அறிதல் கூடும் [அறியலாம் என்றபடி], எ-று. எவ்வளவு மேன்மைப் படுத்தினாலும் கன்றுகள் பண்டியிழுக்க மாட்டாமை போல் கீழ்மக்களும் தக்க காரியங்களுக்கு உதவார்கள் என்றபடி. கொய் புல்லாவது பக்குவமானபுல். குண்டை - பால்பகா அஃறிணைப் பெயராதலின் ஈண்டு பன்மை. |