உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
நானூறு சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் உரையாசிரியர் : ஊ.புட்பரதச் செட்டியார் ... தொடர்ச்சி - 8 ... 36. கயமை
[அதாவது மூடத்தனம். இதுவும் முந்திய அதிகாரத்தைச் சேர்ந்தது.]
351. ஆர்த்த அறிவினர் ஆண்டிளையர் ஆயினும் காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம் தீத்தொழிலே கன்றித் திரிதந்து எருவைபோல் போத்தறார் புல்லறிவி னார். (இ-ள்.) ஆர்த்த அறிவினர் - நிறைந்த அறிவுள்ளவர்கள், ஆண்டு - வருஷங்களிலே, [வயதிலே], இளையர் ஆயினும் - இளையவர்களானாலும், தம்மை -, காத்து ஓம்பி - நன்றாகக் காத்து, அடக்குப - (யோக்கிய காரியங்களிற் புகவொட்டாமல்) அடக்குவார்கள்; புல் அறிவினார் - அற்பபுத்தி யுள்ளவர்கள், மூத்தொறும் - வயது முதிருந்தோறும், தீ தொழிலே - கெட்ட காரியங்களிலேயே, கன்றி - உழன்று வருந்தி, திரிதந்து - திரிந்து, எருவை போல் - கொறுக்கையைப் போலே, போத்து அறார் - உள்ளே தொளையாயிருப்பது நீங்கமாட்டார், எ-று. அறிவுள்ளவர் சிறியரானாலும் தாம் இந்திரியங்களுக்கு வசப்பட்டுத் தீமை செய்யாமல் அடங்குவார்கள்; புத்தியீனர் வயது முதிர முதிரத் தீத்தொழிலே செய்வார்கள் என்பது கருத்து. எருவைபோல் - கழுகு போல், போத்து அறார் - குற்ற நீங்கார், என்றும் உரைக்கலாம். கழுகு குரூரகுணமுள்ள பக்ஷி என்பது பிரசித்தம். போத்து - பொத்து - குற்றம், அது முதல் நீண்டது. கொறுக்கைபோல் உள்ளே தொளையாயிருப்பது நீங்கார் என்றால் மேற்பார்வைக்குத் தடித்த ரூபமுள்ளவராகி உள்ளே ஒன்றுமில்லாதவர் என்பதாம். இது சிறப்பன்று என அறிக. ஆர்ந்த என்பது ஆர்த்த என வலிந்தது. காத்தோம்பி - ஒரு பொருட்பன்மொழி. அடக்குப - இது இங்கே காலங்குறியாது தன்மை குறித்து நிற்கும். மூத்தொறும் - மூ - முதனிலைத் தொழிற் பெயர், கன்றல் - வருந்தல்.
352. செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும் வழும்பறுக்க கில்லாவாம் தேரை; - வழும்பில்சீர் நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன்று இல்லாதார் தேர்கிற்கும் பற்றி அரிது. (இ-ள்.) செழு பெரு பொய்கையுள் - செழிப்பான பெரிய குளத்தில், என்றும் வாழினும் - எந்நாளும் வாழ்ந்து கொண்டிருந்தாலும், தேரை - தவளைகள், வழும்பு அறுக்ககில்லா - (தம்மேலுள்ள) வழுவழுப்பான அழுக்கை நீக்கிக் கொள்ள மாட்டா; வழும்பு இல் சீர் - குற்றமில்லாத சிறப்பையுடைய, நூல் - சாத்திரங்களை, கற்றக்கண்ணும் - கற்றாலும், நுணுக்கம் ஒன்று இல்லாதார் - நுட்பபுத்தியாகிய ஒரு பொருள் இல்லாதவர், தேர்கிற்கும் பெற்றி - நூற்பொருளைத் துணியுந் தன்மையானது, அரிது - இல்லை, எ-று. பெரிய குளத்தில் வெகு நாளிருந்தும் தவளை தன்மேலழுக்கைக் கழுவிக் கொள்ள மாட்டாமைபோல் மூடன் எப்படிப்பட்ட நூலைப் படித்தாலும் அதன் தாற்பரியத்தை யறியும்படியான புத்திசூக்ஷ்ம மில்லாதவனாம். அறுக்ககில்லா - அறு - பகுதி, கு, அ - இரண்டும் சாரியைகள், கில் - ஆற்றலைக் காட்டும் விகுதி, ஆ - எதிர்மறைப் பலவின்பால் விகுதி. ஆம் - அசை. இல்சீர் - "இல்லெனின்மைச் சொற்கையடைய" என்கிற சூத்திரத்தால் இயல்பாயிற்று [மெய்யீ. சூ. 30], கற்றக்கண் - எதிர்கால வினையெச்சம். நுணுக்கம் - பண்புப் பெயர், நுண் - பண்படி, பகுதி, அம் - விகுதி, உகர ககரங்கள் பண்பின் விகாரம்; இது அத்தன்மையான அறிவுக்கு ஆகுபெயர்.
353. கணமலை நன்னாட! கண்ணின்று ஒருவர் குணனேயும் கூறற்கு அரிதால் - குணன் அழுங்கக் குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு எற்றால் இயன்றதோ நா. (இ-ள்.) கண மலை நல்நாட - கூட்டமாகிய மலைகளுள்ள நல்ல நாட்டின் அரசனே!, கண் நின்று - எதிரில் இருந்து, ஒருவர் குணனேயும் - ஒருவர் குணத்தையும், கூறற்கு அரிது - சொல்லுதற்கு (நா எழல்) அருமையாயிருக்கும்; (அப்படியிருக்க) உழை நின்று - அவரிடத்திலிருந்து, குணன் அழுங்க - குணம் அழியும்படி, குற்றம் கூறும் - குற்றங்களை எடுத்துச் சொல்லுகிற, சிறியவர்கட்கு - கயவருக்கு, நா - நாக்கு, எற்றால் இயன்றதோ - எப்படிப்பட்ட பொருளினால் செய்யப்பட்டதோ, எ-று. குணங்கூறுவது சாதாரணமானாலும் அவர் என்ன நினைப்பாரோ என்று பயந்து அதைக் கூறுவதும் கூடாமலிருக்க, ஒருவரிடஞ் சென்று அவர் குணங்களெல்லா மறையும்படி கயவர் குற்றங் கூறுகிறார்களே அவர்களுக்குக் கொடிய பொருளால் நாக்கு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கவி வியந்து கூறினார். ஆல் - அசை, எற்றால் - என் - வினாவிடைச் சொல், பகுதி, று ஒன்றன் பால் விகுதி.
354. கோடேந்து அகல் அல்குல் பெண்டிதர்தம் பெண்ணீர்மை சேடியர் போலச் செயல்தேற்றார்; - கூடிப் புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி மதித்திறப்பர் மற்றை யவர். (இ-ள்.) கோடு ஏந்து அகல் அல்குல் பெண்டிர் - பக்கங்களுயர்ந் தகன்ற வல்குலையுடைய குலமக்கள், தம் பெண் நீர்மை - தமது பெண்தன்மையை, சேடியர் போல செயல் தேற்றார் - (தமக்குப் பணிசெய்யும்) பாங்கியர் போல அலங்கரித்துக் கொள்ளுதலை அறியார்; மற்றையவர் - வேசிமார், புது பெருக்கம் போல் - புதிய வெள்ளம்போல், கூடி - (ஆடவரோடு) கலந்து, தம் பெண்ணீர்மை மதித்து காட்டி - தமது பெண் தன்மை மேம்பட அலங்கரித்துக்காட்டி, இறப்பர் - (அவர்களிடத் துள்ளவற்றை யபகரித்து) நடப்பர், எ-று. குலப்பெண்கள் அலங்காரங்களாலே, தம்மை வியக்கச் செய்து பிறரிடத்துப் பொருள் பறிப்பதில்லை, வேசிமாரோ அப்படிச் செய்வார்கள்; அதுபோல், யோக்கியர் தங்குணங்களைக் காட்டி வியக்கச் செய்யாமல் அடங்கியிருப்பார்கள், அயோக்கியர் வெகு மேன்மை யுள்ளவர் போல நடித்துக் காட்டி வஞ்சித்துப் பொருள் பறித்துக் கொண்டு போவார்கள் என்பதாம்.
355. தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லா உளிநீராம் மாதோ கயவர்; - அளிநீரார்க்கு என்னானுஞ் செய்யார் எனைத்தானும் செய்பவே இன்னாங்கு செய்வார்ப் பெறின். (இ-ள்.) தளிர் மேலே நிற்பினும் - துளிரின் மேல் நின்றாலும், தட்டாமல் - (ஒருவர்) தட்டித்தள்ளாமல், செல்லா - போகமாட்டாத, உளி நீரர் - உளியின் தன்மையுடையவர்கள், கயவர் -, அளி நீரார்க்கு - மெத்தென்ற தன்மையுள்ளவர்க்கு, என்னானும் செய்யார் - எந்தவுதவியுஞ் செய்யமாட்டார்கள்; இன்னாங்கு செய்வார் பெறின் - துன்பஞ் செய்பவர்களை அடைந்தால், எனைத்தானும் - எவ்வளவை யாகிலும், செய்ய - செய்வார்கள், எ-று. மாது, ஒ - இரண்டும் அசை. உளியானது மெதுவான வஸ்துவின் மேலும் தானே வியாபியாமல் ஒருவர் தட்டித் தள்ளினால் செல்வது போல் கீழ்மக்கள் எவ்வளவு அற்ப காரியத்திலும் பிறர் ஏவாமல் பிரவேசிக்க மாட்டார்; நல்லவருக்கு ஒன்றுங் கொடார்; அடித்துக் குத்திப் பலவிதத்தில் துன்பப்படுத்துவோர்க்கு எதையுங் கொடுப்பார்கள் என்பதாம். "இரணங் கொடுத்தாற் கொடுப்பர் கொடாரே, சரணங் கொடுத்தாலுந் தாம்." இயற்கையாப் பொல்லாங்கு செய்யும் அயோக்கியருக்கேயன்றி யோக்கியருக்குக் கொடார் எனினும் பொருந்தும். அளிநீரார் - அளிந்த நீர்மையை உடையவர்கள் அல்லது அளிக்கும்படியான [இரங்கும்படியான] நீர்மையை உடையவர்கள். ஆனும் - ஆயினும் என்பதின் இடைக்குறை; இங்கு உம்மை - ஐயம். எனைத்தானும் - இங்கு உம்மை சிறப்பு.
356. மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர் செய்நன்று உள்ளுவர் சான்றோர்; கயந்தன்னை வைததை உள்ளி விடும். (இ-ள்.) குறவன் -, மலை நலம் - மலையின் வளத்தை, உள்ளும் - நினைப்பான்; பயந்த - பயனைத்தந்த, விளை நிலம் - விளைகின்ற நிலத்தை, உழவன் - பயிர்செய்பவன், உள்ளும் -, சான்றோர் - பெரியோர், ஒருவர் செய்த நன்று - (தமக்கு) பிறரொருவர் செய்த நன்மையை, சிறந்து உள்ளுவர் - சிறந்ததா நினைப்பார்கள்; கயம் - கயவன் [கீழ் மகன்], தன்னை -, வைததை - (ஒருவன்) திட்டினதை, உள்ளிவிடும் - (தீர) நினைப்பான், எ-று. குறவனுக்கு மலையிற் பழக்கமாதலால் மலைநல முள்ளுவான்; அப்படியே உழவனும் சான்றோர் பிறரைச் சிறப்பித்தலை மேற்கொண்டவராதலால் செய்த நன்று உள்ளுவர். கயவனுக்கு வேறொரு நினைப்புமின்றித் தன்னை மேலாக எண்ணுவது இயற்கை யாதலால் அதற்குத் தாழ்மை வரும்படி வைததையே நினைப்பனென்பது கருத்து. குறம் - சாதிப்பெயர் அதனையுடையவன் குறவன். உழவன் - உழு, அ, அன் - பகுதி, சாரியை, விகுதிகள், சிறந்து - சிறக்க என்பதின் திரிபு. கயவனைக் கயம் என்றது இழிவினால்.
357. ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; - கயவர்க்கு எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீது ஆயின் எழுநூறும் தீதாய் விடும். (இ-ள்.) ஒரு நன்றி செய்தவர்க்கு - ஒரு உபகாரஞ் செய்தவர் திறத்தில், ஒன்றி எழுந்த - சேர்ந்து உண்டான, பிழை நூறும் - நூறு குற்றங்களேயானாலும், சான்றோர் -, பொறுப்பர் - பொறுத்துக் கொள்ளுவர், கயவர்க்கு -, எழு நூறு நன்றி செய்து - எழு நூறு நன்மைகளைச் செய்து, ஒன்று தீது ஆயின் - ஒரு தீமை செய்தானாயின், எழுநூறும் தீது ஆய்விடும் - எழுநூறு நன்மைகளும் தீதுபோலவே முடியும், எ-று. மேலோர் அற்ப நன்மையைச் செய்தவனும் பல தீங்கு செய்தால் நன்மையாகவே எண்ணிப் பொறுத்துக் கொள்வார்கள், கீழோரோ இதற்கு மாறாயிருப்பார்கள் என்றால் அவரவரியற்கை அப்படித் தோன்றுமென்பது கருத்து. செய்தவர்க்கு - குவ்வுருபு இடப்பொருளில் வந்தது. கயவர்க்கு - கோடற்பொருளில் வந்தது. ஆயின் என்பதோடு செய்தான் என ஒரு சொல் கூட்டிக் கொள்க. அல்லது செய்து என்பதைச் செயவெனெச்சத் திரிபாவைத்து அவற்றுள் ஒன்று தீதாயின் என்று உரைக்க தீதாய் விடும் - விடு உறுதியைக் காட்டும்.
358. ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள்; - கோட்டை வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய்! பன்றி செயிர்வேழம் ஆகுதல் இன்று. (இ-ள்.) வாள் கண்ணாய் - வான் போன்ற கண்ணுடையவளே!, இல் பிறந்தார் - நற்குடிப்பிறந்தவர், ஏட்டை பருவத்தும் - தளர்ச்சியான காலத்திலும் [தரித்திரத்திலும்], செய்வன - செய்கிற நற்காரியங்களை, முழு மக்கள் - மூடர்கள், மோட்டிடத்தும் - உயர்வான காலத்திலும் [செல்வப்பெருக்கிலும்], செய்யார் - செய்யமாட்டார்கள்; கோட்டை - கொம்பில், வயிரம் செறிப்பினும் - பூணைப் பூட்டினாலும், பன்றி - பன்றியானது, செயிர் வேழம் ஆகுதல் - வீரங் காட்டும் படியான யானை ஆகுதல், இன்று - இல்லை, எ-று. பன்றிக் கொம்புக்கு யானைக் கொம்புக்குப் போடுவது போலப் பூண்கட்டினாலும் அது யானையாகாதது போல், மூடர் மிகுந்த செல்வம் பெற்றாலும் நற்குடிப் பிறப்பாளர் தரித்திரத்திற் செய்யுமளவும் விருந்து பாராட்டல் முதலாகிய நற்காரியஞ் செய்யமாட்டார்கள், என்றால் மேலோரியற்கையும் கீழோரியற்கையு மாறா என்பது கருத்து. பிறந்ததற்பின் படிப்பு முதலியவைகளாலே கிஞ்சித்தும் தளராதிருப்பது பற்றி மூடரை முழுமக்கள் என்றது. கோட்டை - வேற்றுமை மயக்கம்.
359. இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது நின்றாதும் என்று நினைத்திருந்து - ஒன்றி உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி மரையிலையின் மாய்ந்தார் பலர். (இ-ள்.) இன்று ஆதும் - இன்றைக்குச் (செல்வமுடையர்) ஆவோம்; இந்நிலையே - இப்பொழுதே, ஆதும் - (செல்வமுடையர்) ஆவோம்; இனி - மேல், சிறிது நின்று - சொற்ப காலமிருந்து, ஆதும் -, என்று நினைத்து இருந்து - இப்படி சிந்தித்துக் கொண்டிருந்து, ஒன்றி உரையின் மகிழ்ந்து - சேர்ந்து சொல்வதனாலே சந்தோஷித்து, தம் உள்ளம் வேறு ஆகி - தமது நினைப்பு மாறி, மரை இலையின் - தாமரையிலை போலே, பலர் - அநேகர், மாய்ந்தார் - அழிந்தார்கள், எ-று. எமக்கு இன்று செல்வம் வரும் நாளை வரும் என்று பிறரிடம் சொல்லி மகிழ்ந்திருந்து, அது அப்படி வராமையாலே மனம் வருந்தி அழிந்தவர் பலர் என்றால், வீணெண்ணத்தினால் ஜம்பம் பேசுதல் சுயவரியற்கை என்பது கருத்து. தாமரையிலை செழிப்பா யிருந்து நாள் வட்டத்தில் அங்கேயே அழிவது போல் அழிந்தார் என்பதாம். மரை - மான்கள்; அவை தின்ன இலைபோல் எனப் பொருளுறைப்பாரு முண்டு அப்பக்ஷத்தில் தின்பதற்கு முன் செழிப்பாய்க் காணப்பட்டுப் பின் சொரூபமே தெரியாமல் அழிந்தது போல் என வலிந்து கருத்து கொள்ள வேண்டும். ஆதும் - தன்மைப்பன்மை வினைமுற்று, எதிர்காலம் - தும் - விகுதி. "தவ்வொடிறப்புமெதிர்வும்" என்பதை நினைக்க. உரையின் - ஐந்தனுருபு, ஏதுப்பொருளில் வந்தது. உள்ளம் வேறாகி - சினைவினையாதலின் செய்தெனெச்சம், முதல் வினையொடு முடிந்தது.
360. நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும் ஈரங் கிடையகத் தில்லாகும்; - ஓரும் நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும் அறைப் பெருங்கல் அன்னார் உடைத்து. (இ-ள்.) நீருள் பிறந்து - தண்ணீரிலுண்டாகி, நிறம் பசியது ஆயினும் - நிறத்தில் பசுமையானதா யிருந்தாலும், கிடையகத்து - சடையினுள்ளே, ஈரம் இல் ஆகும் - ஈரமானது இல்லாதாகும்; நிறை பெரு செல்வத்து - நிறைவான பெரிய செல்வத்திலே, நின்றக்கடைத்தும் - இருந்தாலும், அறை பெரு கல் அன்னார் - பாறையாகிய பெரிய கல்லைப் போன்றவர்களை [மனதில் பசையில்லாதவரை], உடைத்து - (இவ்வுலகம்) உடையதா யிருக்கின்றது, எ-று. தண்ணீரிருந்தும் உள்ளீரமில்லாத சடையைப் போலே கன்னெஞ்சுடைய மூடர் இவ்வுலகத்திற் பலருண்டென்பதாம். மனதிற் பசையாவது தயாதாக்ஷிணியங்கள். ஓரும் - அசை; நீர் அறியும் என்னவுமாம். நிறை - முதனிலைத் தொழிற்பெயர்; வினைத்தொகை என்றால் தொடைபற்றி ஒற்று மிகுந்ததெனக் கொள்க. 37. பன்னெறி
[அதாவது பல விஷயங்களையும் கலந்து சொல்லியது.]
361. மழைதிளைக்கும் மாடமாய் மாண்பமைந்த காப்பாய் இழைவிளக்கு நினறிமைப்பின் என்னாம்? - விழைதக்க மாண்ட மனையானை யில்லாதான் இல்லகம் காண்டற்கு அரியதோர் காடு. (இ-ள்.) மழை திளைக்கும் - மேகம் தவழும்படியான, மாடம் ஆய் - மாடியுள்ளதாய், மாண்பு அமைந்த காப்பு ஆய் - சிறப்புப் பொருந்திய காவலுள்ளதாய், இழை விளக்கு - ஆபரணங்களாகிய விளக்குகள், நின்று இமைப்பின் - நிலைபெற்று விளங்கப்பெற்றாலும், விழை தக்க - விரும்பும்படியான, மாண்ட - மாட்சிமைப்பட்ட, மனையாளை - இல்லாளை, இல்லாதான் - பெற்றில்லாதவனுடைய, இல்லகம் - மனை, என் ஆம் - என்ன பயனுடையதாம், (அது) காண்டற்கு அரியது - பார்ப்பதற்குக் கூடாத, ஓர் காடு - ஒரு காடேயாம், எ-று. எவ்வளவு செல்வமிருந்தாலும் நல்ல மனையாளில்லாத வீடு பயனில்ல தென்பதாம். மழைதிளைக்கு மாடமென்பது உயரத்தைக் குறிக்கின்றது. அது அன்மொழித்தொகை. பண்புத்தொகையா வுரைத்தாலும் பொருந்தும். மாண்பமைந்த காப்பும் இப்படியே.
362. வழுக்கெனைத்தும்இல்லாத வாள்வாய்க் கிடந்தும் இழுக்கினைத் தாம்பெறுவ ராயின் - இழுக்கெனைத்தும் செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார் கையுறாப் பாணி பெரிது. (இ-ள்.) (பெண்கள்) வழுக்கு எனைத்தும் இல்லாத - கொஞ்சமும் குற்றமு மில்லாத வாள் வாய் கிடந்தும் - வாளின் காவலி லிருந்தும், இழுக்கினை - குற்றத்தை, தாம் -, பெறார் ஆயின் - அடையாமலிருந்தாலும், அ சின்மொழியார் - அந்தப் பெண்கள், இழுக்கு எனைத்தும் - குற்றங்களை யெல்லாம், செய்குறா பாணி - செய்யாதகாலம், சிறிதே - சொற்பமேயாம், கை உறா பாணி - ஒழுக்கத்தைப் பெறாத காலம், பெரிது - அதிகமாம், எ-று. இயற்கையிற் கற்பில்லாத பெண்களுக்குக் காவல் வைத்தாலும் அவர்கள் இழிவான காரியம் பெரும்பாலும் செய்வார்கள் என்பது கருத்து. வாள் காவலாவது வாள் வைத்துக் கொண்டிருப்பவர்களுடைய காவல், வாள் போன்ற கொடிய காவல் எனினுமாம். பெறாராயின் என்பதோடு சிறப்பும்மை கூட்டிக் கொள்க. இங்கே இழுக்கென்றது முக்கியமாய்க் கற்பின் அழிவை, பெரும்பான்மையாய்ப் பெண்களின் இயல்பைச் சொன்னபடி. செய்குறா - உறு - துணைவினை, கு - சாரியை.
363. எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை அட்டில் புகாதான் அரும்பணி; - அட்டதனை உண்டி உதவாதான் இல்வாழ்பேய்; இம்மூவர் கொண்டானைக் கொல்லும் படை. (இ-ள்.) எறி என்று எதிர் நிற்பாள் - அடி என்று சொல்லி எதிரில் நிற்கிற பெண், கூற்றம் - எமன், சிறு காலை - காலையில், அட்டு இல் புகாதால் - சமையல் வீட்டிலே போகாதவள், அரு பிணி - அருமையான வியாதி; அட்டதனை - சமைத்ததை, உண்டி உதவாதாள் - உணவாகக் கொடாதவள், இல் வாழ் பேய் - வீட்டிலிருக்கிற பிசாசு; இம்மூவர் - இந்தப் பெண்கள் மூவரும், கொண்டானை - கொண்ட கணவனை, கொல்லும் படை - கொல்லும்படியான ஆயுதம், எ-று. கணவன் ஏதாகிலும் கோபித்துச் சொன்னால் எதிர்த்து நிற்பதும், காலத்தில் சமைக்க முயலாமையும், கணவன் விரும்பிய போது சோறிடாமையும், புருடனைக் கொல்லுவதற்கு ஒப்பாகும் என்றபடி. கூற்றம், பிணி, பேய், படை இவை உவமையாகு பெயர்கள். உண்டி என்பதனை ஏவலொருமையாக வைத்து "நீ உண்ணென்று கொடாதவள்" என உரைப்பாரும் உண்டு.
364. கடியெனக் கேட்டும் கடியான், வெடிபட ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்; - பேர்த்துமோர் இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே கற்கொண்டு எறியும் தவறு. (இ-ள்.) கடி எனக் கேட்டும் - (இல்வாழ்க்கையை) நீக்கி விடு என்று (பெரியோர்) சொல்லக் கேட்டும், கடியான் - நீக்கான்; வெடி பட - (தலை) வெடித்துப் போம்படி, ஆர்ப்பது கேட்டும் - தம்பட்ட முதலியவை ஒலிப்பதைக் கேட்டும், அது தெளியான் - (இல்வாழ்க்கை) இத்தன்மையதெனத் தெரிந்து கொள்ள மாட்டான்; பேர்த்தும் ஓர் இல் கொண்டு - மறுபடியும் ஒரு இல்லாளைக் கட்டிக் கொண்டு, இனிது இரூஉம் ஏமுறுதல் - சந்தோஷமா யிருக்கின்ற மயக்கம், கல் கொண்டு எறியும் - கல்லால் எறியும்படியான, தவறு என்ப - குற்றம் என்று சொல்வர் (பெரியோர்), எ-று. ஒருவன் கலியாண முயற்சியை விடு என்று பெரியோர் சொல்லவும் விடாமல் அவள் இறந்து போனதைக் கண்டும் தெரியாமல் மற்றொருத்தியைக் கலியாணஞ் செய்து கொண்டு மகிழ்ந்திருத்தல் பெருங் குற்றமென்பது கருத்து. கடி என்பது கலியாணத்துக்கும் பேர். கடியத்தக்கது கடி என்று அதற்கு அவயவப் பொருள் கொண்டு உரைப்பாரு முளர். ஆர்ப்பது - இங்கு சாப்பறையின் ஓசை. இரூஉம் - குச் சாரியை இன்றி அளபெடுத்துப் பெயரெச்சமானது; இது சொல்லிசை யளபெடை. ஏகாரம் - அசை.
365. தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்கு இடையே இனியார்கண் தங்கல் - கடையே புணராதென்று எண்ணிப் பொருள்நசையால் தம்மை உணரார்பின் சென்று நிலை. (இ-ள்.) ஒருவர்க்கு -, தவம் முயன்று வாழ்தல் - தவத்துக்குரிய காரியங்களில் முயற்சி செய்து வாழ்வது, தலையே - தலைமையான நிலை; இனியார்கண் தங்கல் - இனிமையான மனைவிகளிடத்துச் சேர்தல்; இடையே - நடுத்திறமானது; புணராது என்று எண்ணி - கிடைக்க மாட்டாதென்று நினைத்தும், பொருள் நசையால் - பணத்தின் ஆசையினாலே, தம்மை உணரார் பின் - தமது யோக்கியதையை அறியாதவர்கள் பின்னே, சென்று நிலை - போய் நிற்பது, கடையே - கடைசித் திறமேயாம், எ-று. மனிதன் தவஞ்செய்து வாழ்வது முக்கியமானது; இல்லாவிட்டால் இல்லறத்தில் வாழவாவது வேண்டும். இது மத்திமம். இரண்டுமில்லாமல் இவர்களால் பணவுதவி யாகமாட்டாதென்று தெரிந்தும் தம் யோக்கியதையைத் தெரிந்து கொள்ள மாட்டாதவரைப் பின் செல்வது அதமம் என்றபடி. எண்ணி என்பதோடு உம்மை கூட்டிக் கொள்க. நிலை - தொழிற்பெயர்.
366. கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள் இனி துண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும் முனிவினாற் கண்பா டிலர். (இ-ள்.) தலை ஆயார் - தலைமையான அறிவினவர், கல்லா - நூல்களைக் கற்று, கழிப்பர் - (பொழுது) போக்குவர்; இடைகள் - மத்திமர், நல்லவை - கிடைத்த போகங்களை, துவ்வா - அனுபவித்து, கழிப்பர் -, கடைகள் - அதமர், இனிது உண்ணேம் - இனிமையான வுணவை உண்ணப் பெற்றிலோமே, ஆர பெறேம் - (செல்வத்தை) நிரம்பப் பெறவுமாட்டோமே, யாம் - நாம், என்னும் - என்று சொல்லத்தக்க, முனிவினால் - வெறுப்பினால், கண்பாடு - தூக்கம், இலர் - இல்லாதவராவர், எ-று. நூல்களைக் கற்றுப் பொழுது போக்குவது மேலானவர்கள் தொழில்; கிடைத்தமட்டிலே திருப்தியாய்ச் சுகத்தை அனுபவித்தல் மத்திமர் தொழில்; அதமரோ கிடைத்ததில் திருப்தியில்லாமல் செல்வத்திற்காக ஏக்கம் பிடித்துத் தூக்கமுமில்லாமல் அலைந்து கெடுவார்கள் என்பது கருத்து. கல்லா, துவ்வா - இரண்டும் செய்யா என்னும் இறந்தகால வினையெச்சம். துவ்வா - து - பகுதி, ஆ - விகுதி, வகரம் எழுத்துப் பேறு, உண்ணேம், பெறேம் என்பன நமக்குக் கிட்டாதென்று வெறுப்பின் விதத்தைக் காட்டும். கண்பாடு - தொழிற்பெயர், முதல் நீண்டது, கண்படுதல் - செய்கையின்றி யழிதல், இதன் காரணமான தூக்கத்திற் காயிற்று, கண்பாட்டை இலர் எனவுமுரைக்கலாம்.
367. செந்நெல்லால் ஆய செழுமுனை மற்றும் அச் செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல் வயல் நிறையக் காய்க்கும் வளைவயல் ஊர! மகனறிவு தந்தை அறிவு. (இ-ள்.) செம் நெல்லால் ஆய செழு முளை - நல்ல நெற்களாலுண்டாகிய செழிப்பான முளைகள், மற்றும் - பின்னும், அ செம் நெல்லே ஆகி - அந்த செவ்விய நெல்லாகவே தாம் ஆய், விளைதலால் - (மேன்மேல்) விளைகிறபடியினாலே, அ நெல் - அப்படிப்பட்ட நல்ல நெற்கள், வயல் நிறைய காய்க்கும் - வயல்கள் நிரம்பும்படி விளைகிற, வளம் வயல் ஊர - வளப்பமான வயல்கள் சூழ்ந்த வூர்களையுடைய அரசனே!, தந்தை அறிவு மகன் அறிவு - தகப்பனுடைய புத்தியே மகனுடைய புத்தியாகின்றது, எ-று. நல்ல நெல்முளையினால் நல்ல நெல் விளைவது போல் தந்தையின் நற்புத்தியால் மகனுக்கும் நற்புத்தி யுண்டாமென்பதாம். இது காரணம் பற்றிப் பெரும்பான்மையான சம்பவத்தைச் சொல்லியது. விளைதலால் - ஆல் உருபு ஞாபக ஹேதுப் பொருளில் வந்தது. தந்தையறிவு மகனறிவென் றறியப்படுமென்பதாம்.
368. உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப் புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக் கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால் போல் கீழ்மேலாய் நிற்கும் உலகு. (இ-ள்.) உடை பெரு செல்வரும் - பெருஞ் செல்வமுடையோர்களும், சான்றோரும் - கல்வியறிவு நிறைந்தவர்களும், கெட்டு - (தம் நிலைகளிலிருந்து) மாறி, புடை பெண்டிர் மக்களும் - வைப்பாட்டி மக்களும், கீழும் - கீழ் மக்களும், பெருகி - விர்த்தியாகி, கடைக்கால் தலைக்கண்ணது ஆகி - காற்புறத்தி லிருக்க வேண்டியது தலைப்புறத்திருப்பதாகி, குடை கால் போல் - குடையினது காம்பு போல், உலகு - உலகமானது, கீழ் மேல் ஆய் நிற்கும் - கீழோன் மேலோனா நிற்கப் பெறும், எ-று. செல்வரும் கற்றவரும் நிலைமாறி அயோக்கியர் விர்த்தியாகிக் கீழ்மேலா யிருக்கும் உலக இயற்கை என்றபடி. குடைக்காம்பு அப்படி யிருப்பது முற்காலத்தில். கெட்டு, பெருகி, ஆகி - இவை காரணப் பொருட்டாய் வந்த எச்சங்கள்; கெட்டதனால், பெருகினதனால், ஆனதனால் என்றது பொருள். உலகம் கீழ்மேலாவதற்கு இவை காரணம்; ஆதலின் பிற கர்த்தாவின் வினையில் முடிந்தன. செயவெனெச்சத் திரிபென்னவுமாம். இப்படியும் உலகம் மாறிவிடும் என்பது கருத்து. "வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வரே."
369. இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய் தணியாத உள்ளம் உடையார்; - மணிவரன்றி வீழும் அருவி விறன்மலை நன்னாட! வாழ்வின் வரைபாய்தல் நன்று. (இ-ள்.) மணி வரன்றி - ரத்தினங்களை வாரிக் கொண்டு, வீழும் அருவி - வீழ்கிற அருவிகளோடு கூடிய, விறல் மலை நல் நாட - மேன்மையான மலைகளுள்ள நல்ல நாட்டின் அரசனே!, இனியார் - சிநேகிதர், தம் நெஞ்சத்து நோய் உரைப்ப - தம் மனதிலிருக்குந் துன்பத்தைச் சொல்ல, அ நோய் தணியாத - அந்தத் துன்பங்களைப் போக்காத, உள்ளம் உடையார் - மனமுடையவர்கள், வாழ்வின் - வாழ்வதைக் காட்டிலும், வரை பாய்தல் - மலையிலிருந்து குதித்து உயிர் விடுதல் நன்று - மேலானதாம், எ - று. சிநேகிதர் துன்பத்தை நீக்க மனமில்லாதவர் வலுவில் உயிர் விடுதல் மேல் என்பது கருத்து. தம்மாலே அத்துன்பத்தை நீக்கக் கூடினும் கூடாவிடினும் அதில் மனஞ் செல்லாத பாவிகள் என்பதற்கு "தணியாத வுள்ளமுடையார்" என்றது.
370. புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும் விதுப்புற நாடின்வே றல்ல; - புதுப்புனலும் மாரி அறவே அறுமே, அவரன்பும் வாரி அறவே அறும். (இ-ள்.) புது புனலும் - (வெள்ளம் வந்த) புதிய நீரும், பூ குழையார் நட்பும் - அழகிய காதணியணிந்த வேசைமாதர்களுடைய சிநேகமும், இரண்டும் -, விதுப்பு அற நாடின் - துரிதமில்லாமல் யோசித்தால், வேறு அல்ல - (ஒரு தன்மை யுடையனவே யல்லாமல்) வேறு தன்மை யுடையன அல்ல; புது புனல் - புதுநீர், மாரி அறவே அறும் - மழை நீங்கினால் நீங்கும்; அவர் அன்பும் - அவ்வோசையருடைய சிநேகமும், வாரி அற - பொருளின் வரவு நீங்க, அறும் - நீங்கும், எ-று. மழை நின்றால் புதுவெள்ளம் நிற்பது போல் பணவரவு நின்றால் வேசையர் சிநேகமும் நிற்கு மாதலால் அவ்வஞ்சகரோடு சேர வேண்டாம் என்பது கருத்து. புனலும் நட்பும் - எண்ணும்மைகள். அறவே, அறுமே - ஏ இரண்டும் அசை அல்லது அறவே ஏகாரம் உடனே என்னும் பொருளைக் குறிப்பிக்கும். அறுமே - ஏ பிரசித்தத்தைக் குறிக்கும். அன்பும் - உம்மை எச்சப் பொருளில் வந்தது. காமத்துப்பால்
[அதாவது இம்மை யின்பங்களில் சிறப்பாய்க் கொண்ட காமத்தைப் பற்றிச் சொல்லியது.] 38. பொது மகளிர்
[அதாவது வேசையர் தன்மையைக் குறித்துச் சொல்லியது. அவர்கள் ஒருவர்க்கே வாழ்க்கைப்படாமல் பணங்கொடுத்தவர்கெல்லாம் வாழ்க்கைப்படுதலால் பொதுமகளிர் என்னப் பட்டார்.]
371. விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும் துளக்கற நாடின்வே றல்ல; - விளக்கொளியும் நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும் கையற்ற கண்ணே அறும். (இ-ள்.) விளக்கு ஒளியும் - விளக்கினது பிரகாசமும், வேசையர் நட்பும் - பொதுமகளிரது அன்பும், இரண்டும் - (ஆகிய) இரண்டும், துளக்கு அற நாடின் - சஞ்சலமில்லாமல் யோசித்தால், வேறு அல்ல -வேறுவகைப்பட்டன அல்ல; விளக்கு ஒளியும் - விளக்கினது பிரகாசமும், நெய் அற்ற கண்ணே - நெய் வற்றிய அப்போதே, அறம் நீங்கும்; அவர் அன்பும் - அவ்வேசையர் நட்பும், கை அற்ற கண்ணே - கைப்பொருள் நீங்கிய பொழுதே, அறும் - நீங்கும், எ-று. விளக்கின் பிரகாசமானது நெய் வற்றிய பொழுது நீங்குதல் போல வேசிமார் நட்பும் பொருள் வறளுமளவே யன்றிப் பின்பு கிஞ்சித்தும் இராதென்பதாம். இதனால் அன்பில்லா தாருடைய போகம் இனிதன்று என்பது கருத்து. வேசையர் - வேஸ்யா என்னும் வடசொல்லின் திரிபு. நட்பு - பண்பையுணர்த்தும் தொழிற்பெயர்; நள் - பகுதி, பு - விகுதி. வேறல்ல என்பது வெவ்வேறு தன்மைகளுள்ளன வல்ல என்பதாம்; அவ்வொரு தன்மையாவது காரணமுள்ள அளவே காரியமிருத்தல். அற்றகண் - பெயரெச்சத் தொடர். அறும் - நீங்குந் தன்மையுள்ளதெனத் தன்மையைக் காட்டினதேயன்றிக் காலங் காட்டினதல்ல; இதற்கு விதி "இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்" என்பது.
372. அங்கோட்டு அகல் அல்குல் ஆயிழையாள் நம்மோடு செங்கோடு பாய்துமே என்றாள்மன்; - செங்கோட்டின் மேற்காணம் இன்மையான் மேவாது ஒழிந்தாளே காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து. (இ-ள்.) அம் கோடு அகல் அல்குல் - அழகிய பக்கங்களுள்ள அகன்ற அல்குலை யுடையவளான, ஆய் இழையாள் - ஆய்ந்தெடுத்த ஆபரணத்தை யுடையவள் [வேசைப் பெண்], நம்மொடு - நம்மோடு கூட, செம் கோடு - செம்மையான மலையினுச்சியிலிருந்தும், பாய்துமே மன் என்றாள் - (உன்னுடன் ஏறி) கீழே விழுவோம் என்று உறுதியாகச் சொன்னாள்; காணம் இன்மையால் - (நம்மிடத்தில்) பணமில்லாமையால், செம் கோட்டின் மேல் - செம்மையான மலையுச்சியின் மேல், மேவாது - (நம்முடனே) சேராமல், கால் - (தன்) காலில், கால் நோய், வாத நோயை, காட்டி - காண்பித்து, சுலுழ்ந்து - கலங்கி அழுது, ஒழிந்தாள் - நீங்கினாள், எ-று. ஒருவன் உயிர்க்குயிராய் வைத்திருந்த ஒரு வேசையின் நடக்கையைச் சொல்லியது. நீ மலைமேலேயேறி வீழ்ந்தாலும் நான் கூட விழுவேனே யல்லது உயிர் பிழைத்திரேன் என்று நான் பணம் கொடுத்த போதெல்லாஞ் சொல்லி, நானோர் ஆபத்தால் மலைக்கோடேறி விழும்படி நேரிட, அப்போதும் அவளைப் பிரிய மனமில்லாமல் கூட வாவென்று அழைக்க, அதற்குத் தன் காலில் நோயுண்டென்று காட்டிப் பொய்யழுகை யழுது என்னைவிட்டு நீங்கிப் போனாள் என்றான் என்பதாம். இதனால் வேசையர் வஞ்சித்தும் பணம் பறிப்பா ரென்பதாயிற்று. பாய்தும் - தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்று; தும் - விகுதியே காலம் காட்டும் [பதவியல். சூ. 18].
373. அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும் செங்கண்மா லாயினும் ஆகமன்; - தம்கைக் கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளிர் அன்னார் விடுப்பர்தம் கையால் தொழுது. (இ-ள்.) அம் கண் விசும்பின் - அழகிய இடமுள்ள தேவலோகத்திலுள்ள, அமரர் தொழப்படும் - தேவர்களால் வணங்கப்படுகிற, செம் கண் மால் ஆயினும் ஆக - சிவந்த கண்களையுடைய மகாவிஷ்ணுவே யானாலும் ஆகட்டும், தம் கை கொடுப்பது ஒன்று - தமது கையில் கொடுக்கும்படியான ஒரு பொருள், இல்லாரை - இல்லாதவர்களைக், கொய்தளிர் அன்னார் - கொய்யத்தக்க தளிர்போன்ற மேனியையுடைய வேசிகள், தம் கையால் - தமது கையால், தொழுது - கும்பிட்டு, விடுப்பர் - அனுப்புவார்கள், எ-று. மன் - அசை. எவ்வளவு ரூபலாவணியம் முதலிய குணங்கள் வாய்ந்தவரானாலும் பணம் இல்லாதவர்களை இப்போது நீங்கள் வருவதற்கு சமயமில்லையென்று போக்குச் சொல்லித் தடுத்து அனுப்பிடுவார்களேயன்றி அவரைச் சேரார்க ளென்பது கருத்து. இதனால் பணம் ஒன்றையே யன்றி மற்றெந்தக் குணத்தையும் விரும்பார்களென்று அவர்களுடைய ரசமறியாக் குணத்தை யுணர்த்தினார். அமரர் தொழப்படுவதனால் மேன்மையும், செங்கண் என்றதனால் ரூபமும், குறிக்கப்பட்டன. ஆக - வியங்கோள் வினைமுற்று. மன் - அசை.
374. ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்குக் காணமி லாதார் கடுவனையர்; - காணவே செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார் அக்காரம் அன்னர் அவர்க்கு. (இ-ள்.) ஆணம் இல் நெஞ்சத்து - அன்பில்லாத மனத்தையுடைய, அணி நீல கண்ணார்க்கு - அழகுள்ள நீலோற்பலம் போன்ற கண்களையுடைய வேசையர்க்கு, காணம் இல்லாதார் - தனம் இல்லாதவர்கள், கடு அனையர் - விஷம் போலப் பிரியமில்லாதவராவர், காண - யோசிக்குமளவில், செக்கு ஊர்ந்து கொண்டாரும் - செக்காட்டுவோராயினும், செய்த - தேடிய, பொருள் உடையார் - திரவியத்தையுடையவர், அவர்க்கு - அவ்வேசையர்க்கு, அக்காரம் அன்னார் - சர்க்கரை போலினியராவர், எ-று. பணமொன்றிலே யல்லாமல் மற்றெதிலும் அன்பில்லாதவராதலால் வேசையர்கள் பணமில்லாதாரை விஷத்து கொப்பாகவும் பணமுள்ளோரை அக்காரத்துக் கொப்பாகவும் கொள்கின்றார்கள் என்றதனால் அவர் போகம் மிகவும் இனிப்பில்லாத தென்பது கருத்து. காண - செய்வெனெச்சம், நிகழ்காலத்தில் வந்தது; இதை மத்திமதீப நியாயத்தாலே இருபுறமுங் கொள்க.
375. பாம்பிற்கு ஒருதலை காட்டி ஒருதலை தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் - ஆங்கு மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார் விலங்கன்ன வெள்ளறிவி னார். (இ-ள்.) பாம்பிற்கு - பாம்பினுக்கு, ஒரு தலை காட்டி - ஒரு புறத்தைக்காட்டி, ஒரு தலை - மற்றொரு புறத்தை, தேன் படு - மதுரத்தைப் பெற்றிருக்கிற, தெள் கயத்து மீன் - தெளிந்த தடாகத்திலுள்ள மீனுக்கு, காட்டும் - காண்பிக்கும், மலங்கு அன்ன - விலாங்கு மீனை யொத்த, செய்கை - செய்கையையுடைய, மகளிர் தோள் - வேசையரது தோள்களை, விலங்கு அன்ன - மிருகத்தையொத்த, வெள் அறிவினார் - அறிவில்லாத மூடர்கள், சேர்வார் - அணைவார்கள், எ-று. தன்னைப் பிடிக்கவரும் பாம்புக்கும் மீனுக்கும் இது பிடிபடும் என்னும் ஆசையைக் காட்டி ஒன்றினுக்கும் அகப்படாமல் தப்பித்துக் கொள்ளும் விலாங்கு மீனைப் போல் ஆசைகாட்டி மயக்கும் வேசையாரை விவேகமற்றவர்களே சேர்வார்கள் என்பது கருத்து. அவர்கள் வஞ்சனை தெரிந்தால் மலம்பட்ட அமுதம் போல் அவருருவமும் போகமும் யார்க்கும் இனிக்கமாட்டா. அதனைத் தெரிந்து கொள்ள மாட்டாமையால் வெள்ளறிவினாரென்றார். மீன் காட்டும் - நான்காம் வேற்றுமைத் தொகை. ஆங்கு - அசை. வெண்மையான அறிவு வெள்ளறிவு; வெண்மையாவது கல்வி கேள்விகளாற் கலப்புறாமை.
376. பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும் போல் நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த பொற்றொடியும் போர்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே நிற்றியோ போதியோ நீ. (இ-ள்.) நூல் - நூலிற் (கோத்த), பொத்த - தொளைத்த, கல்லும் - மணியும், புணர் பிரியா - கூடியிருத்தல் பிரியாத, அன்றிலும் போல் - அன்றிற் பறவைகளைப் போலவும், நித்தலும் - தினமும், நம்மை பிரியலம் என்று உரைத்த - நம்மை விட்டுப் பிரியமாட்டோமென்று சொல்லிய, பொன் தொடியும் - பொன்னாலாகிய வளையலையுடையவளும் [வேசையும்], போர் தகர் கோடு ஆயினாள் - போர்செய்கின்ற ஆட்டினுடைய கொம்பு போல் (திரும்பிய குணமுடையவள்) ஆயினாள்; நல் நெஞ்சே - நல்ல மனமே!, நீ நிற்றியோ - நீ (அவளிடத்தில்) நிற்கின்றாயா?, (அல்லது) போதியோ (என்னுடன்) வருகின்றாயா? (சொல்), எ-று. நூலும் மணியும் போலவும் அன்றிலைப் போலவும் உம்மைக் கூடியிருப்பேனேயல்லது பிரிந்திருக்கமாட்டேனென்று சொல்லி, என் கையில் பணம் வறண்ட இக்காலத்தில் சண்டை யாட்டுக்கடாவின் கொம்பு பின்னிட்டு வளைந்திருப்பது போல முன் சொன்னதற்கு விரோதமாகப் பின்னிவிட்டாள். அவள் குணந் திரிந்த இக்காலத்தும் நீ அவளிடத்தில் இருப்பையா அல்லது பிரிந் தென்னோடு வருவையா, மனமே? என்றதனால், வேசையர் குணந்தெரிந்தும் அவளைப்பற்றி யலையாமல் மனதைச் சுவாதீனப் படுத்திக் கொள்ளவேண்டுமென்பது கருத்து. பொத்த - பொத்து - பகுதி, அ - பெயரெச்ச விகுதி. நூற்கல் - உம்மைத் தொகை. கல்லும், அன்றிலும் - எண்ணும்மைகள். பிரியலம் - உடன்பாட்டு எதிர்மறைச் சிறப்பு வினைமுற்று; பிரி - பகுதி, அல் - எதிர்மறை விகுதி, அனைத்தும், ஓர் பகுதியாகி, அதன்மேல் அம் - தன்மைப்பன்மை விகுதி, நிற்றீ, போதி - நிகழ்கால வினைமுற்றுகள். நிற்றி - நில் - பகுதி, இ - விகுதி, லகரம் றகரமானது சந்தியும் விகாரமும்; றி - விகுதியென்பது நேர். றி என்பதில் றகரம் இடைநிலை யென்றால் அது இறந்த காலத்தைக் காட்டும், ஆகையால் பொருந்தாது. போதியோ என்பதற்கு அவளை விட்டுப் போகிறாயா? எனவும் பொருள் கூறலாம். இப்பகுதிக்கு வருதலும் அர்த்தமாகிறது. ஓ - இரண்டும் வினா.
377. ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள்கொண்டு சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை ஏமாந்து எமதென்று இருந்தார் பெறுபவே தாமாம் பலரால் நகை. (இ-ள்.) ஆ மா போல் - காட்டுப் பசுவைப் போல், நக்கி - (இன்ப முண்டாக) பரிசித்து, அவர் - தம்மைச் சேர்ந்தவர்களுடைய, கை பொருள் கொண்டு - கையிலிருக்கும் பொருளைக் கவர்ந்து கொண்டு, சே மா போல் - எருதைப் போல, குப்புறும் - கவிழ்ந்து படுத்துக் கொள்ளுகிற, சில்லைக்கண் - பரத்தையினிடத்துள்ள, அன்பினை - அன்பை, ஏமாந்து - மயங்கி, எமது என்று இருந்தார் - எமக்கே யுரியதென்றிருந்தவர், பலரால் - பலர்களாலும், நகை பெறுப - நகைத்தலைப் பெறுவார்கள், எ-று. தாம், ஆம், எ - மூன்றும் அசைகள். ஆமா இன்புற நக்கும், அதுபோல் இவர்களும் இன்புற ஆலிங்கன முதலியவற்றைச் செய்து அவர் கைப்பணம் பறித்துக் கொண்டு, அவர் அதிக மோகங்கொண்ட சமயத்தில் எருதைப் போல கவிழ்ந்து கொண்டு மோசஞ்செய்கிற வேசையினது அன்பைத் தமக்குரியதென்று நம்புகிறவனைப் பலர் நகைப்பார்கள் என்பது கருத்து. சேமா - இருபெயரொட்டுப் பண்புத்தொகை சில்லைக் கண் - உவமைத் தொகை; சில்லை - சிள்வண்டு, அதைப்போன்ற கண்ணுடையாள். வண்டு தேனிருக்கு மிடமெல்லாஞ் சென்று அதைக் கவர்ந்து கொண்டு நீங்குதல் போலப் பணமுடையாரிடத் தெல்லாம் நாடுங்கண்ணளாகையால் சில்லைக்கண் என்றார். கண் என்பது இங்கே உள்நாட்டத்தை. ஏமாந்து - ஏமா - பகுதி. பெறுப - பலர்பால் வினைமுற்று. ப - விகுதி, காலத்தையும் பாலையும் காட்டும்.
378. ஏமாந்த போழ்தின் இனியார்போன்று இன்னாராய்த் தாமார்ந்தபோதே தகர்க் கோடாம் - மானோக்கின் தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே, செந்நெறிச் சேர்தும்என் பார். (இ-ள்.) செம் நெறி - நல்லவழியை [வீட்டுநெறியை], சேர்தும் என்பார் - அடையக் கருதுவோர், ஏமாந்த போழ்தின் - மயங்கிய போது, இனியார் போன்று - பிரியமுள்ளவர்களைப் போலிருந்து, தாம் ஆர்ந்த போது - தாம் (வறியராய்) இச்சித்த காலத்து, இன்னார் ஆய் - பிரியமில்லாதவர்களாய், தகர் கோடு ஆம் - ஆட்டுக்கடாவின் கொம்பைப்போ லாகும்படியான, மான் நோக்கின் - மான் போலும் பார்வையையுடைய, தம் நெறி பெண்டிர் - சுதந்திரப் பெண்களாகிய வேசிகளுடைய, தடம் முலை சேரார் - பெரிய முலைகளைச் சேரமாட்டார்கள், எ-று. காமுகர் மயங்கிய போது பணத்தைப் பறிக்கும் பொருட்டுப் பிரியமானவர்களாக விருந்து பின்பு அவர் பணம் வறண்டு விரும்பிய போது உடன்படாது மாறுபடுகின்ற வேசிகள் போகத்தை, நல்வழியில் நடக்க விரும்புவோர் விரும்ப மாட்டார்கள் என்றபடி. ஆர்தல் - விரும்புதல் மானோக்கின் - இன் - சாரியை. தம் நெறிப் பெண்டிர் - ஒருவர்க்கும் உட்படாமல் தம் மனம் போன போக்கிலே செல்கின்றவர்கள். செந்நெறி - செம்மையான நெறி; பண்புத்தொகை. சேர்தும் - தன்மைப்பன்மை எதிர்கால வினைமுற்று.
379. ஊறுசெய் நெங்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார் தேற மொழிந்த மொழிகேட்டுத் - தேறி எமரென்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும் தமரல்லர் தம்உடம்பி னார். (இ-ள்.) ஒள் நுதலார் - பிரகாசமான நெற்றியை யுடையவர்கள், ஊறு செய் நெஞ்சம் - துன்பஞ் செய்யும் படியான எண்ணத்தை, தம் உள் அடக்கி - (பிறர் அறிய வொட்டாமல்) தம்முள்ளே மறைத்து வைத்து, தேற - (காமுகர்கள்) நிச்சயமாகக் கொள்ளும்படியாக, மொழிந்த மொழி - சொன்ன சொற்களை, கேட்டு - (காதினாற்) கேட்டு, தேறி - (இவர்கள் நல்லவர் என்று) தேறி, எமர் என்று - எமக்குரியவரென்று, கொள்வாரும் - நினைக்கிறவர்களும், கொள்ப - (அப்படி) நினைக்கக் கடவர்கள்; (வேசையர்) யார்க்கும் - எவ்வகைப்பட்டவர்க்கும், தமர் அல்லர் - உரியரல்லர்; தம் உட்மபினார் - தமக்கே உரிய உடம்பின ராவர், எ-று. தமது வஞ்சகத்தை வெளிக்காட்டாமல், நல்லவர்களைப் போல நம்பும்படி பேசும் வேசிமாரை நல்லவர்களென் றெண்ணுகிறவர்கள் எண்ணட்டும், அவர்கள் உடம்பை யாருக்கும் வசப்படுத்தாமல் தமக்கே வசப்படுத்தி வைத்திருக்கின்றவர்களென் றறிக. ஊறு - உறு என்னும் பகுதி முதல் நீண்ட முதனிலைத் தொழிற்பெயர். எமர், தமர் - கிளைப்பெயர்; யாம், தம - பகுதிகள்.
380. உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார் கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம் - தெள்ளி அறிந்த இடத்தும் அறியாராம் பாவம் செறிந்த உடம்பி னவர். (இ-ள்.) உள்ளம் ஒருவன் உழையது ஆ - மனமானது ஒருவனிடத்தில் இருக்க, ஒள் நுதலார் - விளக்கமான நெற்றியையுடைய வேசிமார், கள்ளத்தால் செய்யும் - கள்ளத்தினாற் செய்கின்ற, கருத்து எல்லாம் - நினைவுகளெல்லாம், தெள்ளி அறிந்த இடத்தும் - தெளிவாக ஆராய்ந்து அறிந்த போதும், பாவம் செறிந்த உடம்பினவர் - பாவம் நிறைந்த உடம்பை யுடையோர் [அதாவது பாவிகள்], அறியார் ஆம் - அறியமாட்டார்களாம், எ-று. மனம் ஒருவர்மேல் நிற்க மற்றொருவர் மேல் காமமுற்றது போல் நடித்துக் காட்டும் வேசியர் கள்ளக்கருத்தை நன்றாயறிந்த போதும் அறியாத மூடரா யிருப்பவர் யாரெனில் பாவிகளென்பதேயாம். 39. கற்புடை மகளிர்
[அதாவது பதிவிரதைகளின் தன்மை. பொதுமகளிர் போகம் விரும்பத்தக்க தன்றென்ற போது குலமகளிர் போகம் அறத்துக்குப் பொருந்தியதனால் விரும்பத்தக்க தென இவ்வதிகாரம் முன்னதின் பின்னர் வைக்கப்பட்டது.]
381. அரும்பெற்று கற்பின் அயிராணி யன்ன பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் - விரும்பிப் பெறுநசையால் பின்னிற்பார் இன்மையே பேணும் நறுநுதலாள் நன்மைத் துணை. (இ-ள்.) அரு பெறல் கற்பின் - பெறுதற்கரிதான, கற்பினையுடைய, அயிராணி அன்ன - அயிராணியைப் போன்ற, பெரு பெயர் - பெரிய கீர்த்தியையுடைய, பெண்டிர் எனினும் - பெண்களானாலும், பெறும் நசையால் - தன்னை அநுபவிக்கும்படியான ஆசையால், விரும்பி - அபேட்சித்து, பின் நிற்பார் இன்மையே - (தன்) பின்னால் காத்திருக்கும் படியான புருஷரில்லாமையாகிய நற்குணத்தையே, பேணும் நறு நுதலாள் - பரிபாலனஞ் செய்கிற பெண், நன்மை துணை - (தன் நாயகனுக்கு) நல்ல துணையாவாள், எ-று. இந்திராணிக்குச் சமானமான பெண்ணானாலும், எவள் தன்னைச் சேரவேண்டுமென்று விரும்புகிற புருஷர் தன் பின்னே நிற்காதபடி நல்லொழுக்கத்தில் நிற்கின்றாளோ அவளே தன் கணவனுக்கு நல்ல துணையானவள் என்பதாம். பெண்ணின் குறிப்பைக் காணாமல் எவனும் அவள் பின்னே நிற்கமாட்டா னாகையால் பின்னிற்பா ரென்றார். நறுநுதலாள் - நல்ல நெற்றியையுடையவள். அருபெறல் - பெறலரும் என்று சொற்களைத் திருப்பிக் கொள்க. அயிராணி - இந்திராணி என்னும் வட சொல்லின் திரிபு.
382. குடநீர்அட் டுண்ணும் இடுக்கண் பொழுதும் கடல்நீர் அறவுண்ணும் கேளிர் வரினும் கடன்நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி மாதர் மனைமாட்சி யாள். (இ-ள்.) குடம் நீர் - (ஒரு) குடத்து நீரை, அட்டு உண்ணும் - காய்ச்சி உண்ணும்படியான, இடுக்கண் பொழுதும் - வறுமை வந்த காலத்தும், கடல் நீர் அற உண்ணும் - சமுத்திர ஜலத்தை வற்றும்படி உண்கிற, கேளிர் வரினும் - சுற்றத்தார் வந்தாலும், கடன் நீர்மை - கடமையாகிய குணத்தை, கை ஆறு ஆ - ஒழுக்கநெறியாக, கொள்ளும் - கொள்ளுகின்ற, மடம் மொழி மாதர் - இரசமான மொழியையுடைய பெண், மனை - இல் வாழ்க்கைக்குத்தக்க, மாட்சியாள் - மேன்மையை யுடையவள், எ-று. குடநீரட்டுண்ணும் - அரிசி முதலியவை யின்மையால் நீரையே காய்ச்சி யுண்கிற என்று வறுமையின் மிகுதி கூறப்பட்டது. கடனீர் வற்றும்படி யுண்கிற கேளிர் என்றால் எண்ணிக்கையில்லாத பந்துக்களென்பது பொருள். கடனாவது - விருந்தோம்பல், சுற்றந்தழுவுதல் என்பன. மடமொழி - சுவடு முதலியவை இல்லாத பேச்சு. இடுக்கண் - இடுக்கமுற்று நிற்பது, அதாவது துன்பம்; இங்கே அது வறுமைக்குக் கொள்ளப்பட்டது. மனை - இல்லறம்.
383. நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும் மேலாறு மேலுறை சோரினும் - மேலாய வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழும்மாண் கற்பின் இல்லாள் அமர்ந்ததே இல். (இ-ள். நால் ஆறும் ஆறு ஆய் - நாற்றிசையும் வழியாகி, நனி சிறிது ஆய் - மிகவும் சிறியதாகி, எ புறனும் - எல்லாப் பக்கங்களிலும், மேல் ஆறு - மேல் வழியிலிருந்து, மேல் - (தன்) மேல், உறை சோரினும் - மழைத்துளி வழிந்தாலும், மேல் ஆய - மேலான தர்மங்களை, வல்லாள் ஆய் - (செய்ய) வல்லவளாய், வாழும் ஊர் - தான் வாழ்கின்ற ஊரிலுள்ளார், தன் புகழும் - தன்னைப் புகழும்படியான, மாண் - கற்பின் - மாட்சிமைப்பட்ட கற்பினையுடைய, இல்லாள் - மனைவி, அமர்ந்ததே - வாழ்கின்றதே, இல் - மனையாகும், எ-று. நாற்பக்கத்திலும் வழியுடையதாய் மிகவும் சிறியதாய் மேல் வழியிலிருந்து மழைத்துளி தன் மேல் வழிந்தாலும் பொறுத்து இல்லறம் நடாத்துவதில் வல்லவளாய் ஊரார் தன்னைப் புகழக் கற்பின் மிகுந்தவள் வசிக்குமிடமே வீடென்பதாம். வீட்டின் சீர்மை யில்லாமையைச் சொன்னது தரித்திரத்தின் மிகுதியைக் குறிப்பிப்பதற்கு எவ்வளவும் தனக்குரிய ஒழுக்கத்தில் தவறுதல் இல்லாமல் கற்பினையுடையவள் சிறந்த பெண் என்றதாயிற்று. ஆய - பலவின்பால் வினையாலணையும் பெயர்.
384. கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள், உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள்; - உட்கி இடனறிந்து ஊடி இனிதின் உணரும் மடமொழி மாதராள் பெண். (இ-ள்.) கட்கு இனியாள் - கண்ணுக்கு இனிய ரூபத்தையுடையவளாய், காதலன் - நாயகனது, காதல்வகை - ஆசையின்படி, புனைவாள் - (தன்னை) அலங்கரித்துக் கொள்பவளாய், உட்கு உடையாள் - அச்சம் உடையவளாய், ஊர் நாண் இயல்பினாள் - ஊருக்கு நாணும் படியான தன்மையுடையவளாய் [அல்லது ஊரார் நாணும்படியான தன்மையுடையவனாய்], உட்கி - அஞ்சி, இடன் அறிந்து - சமயம் தெரிந்து ஊடி - (நாயகனோடு) பிணங்கி, இனிதின் - பிரியமாக, உணரும் - (புணர்ச்சியைத்) தெரிந்து கொள்கிற, மடமொழி மாதராள் பெண் - கபடமில்லாத பேச்சுகளை யுடைய பெண்ணே பெண் ஆவாள், எ-று. முகக்கோட்டம் சுடுசுடுப்பு இல்லாமல் பார்க்கப் பிரியப்படுபவளாய், நாயக னிஷ்டப்படி தன்னை அழகு செய்து கொள்பவளாய், பர புருஷரோடு பேசுதல் முதலாகியவற்றிற்கு அஞ்சுகிறவளாய், எப்படிப்பட்டவர்களுக்கும் நாணுந் தன்மையுடையவளாய், நாயகன் மனதுக்கு என்னகோட்ட முண்டாமோவென் றஞ்சி அப்படிப்பட்ட தருணத்தில் ஊடி மறுத்தும் மூர்க்கமில்லாமல் ஊடலின் நீங்கிப் புணருங் காலம் அறிபவளே குலப்பெண்ணாவாள். "ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக், கூடலிற் றோன்றிய உப்பு" என்னுங் குறளானு முணர்க. உவப்பிற்கு ஏதுவாகையால் இங்கே இடனறிந்தூடி என்றும், அவ்வூடலே பிடிவாதமாய் நின்றால் அது வெறுப்பைத் தருமாதலால் இனிதினுணரும் என்றுங் கூறினார். "ஒரு பொருண் மேற்பல பெயர்வரினிறுதி, யொருவினை கொடுப்ப தனியு மொரோவழி" என்பதனால் இனியாள் முதலியவை 'மாதராள் பெண்' என்பதனோடு முடிந்தது. இச்சூத்திரத்தில் வினையென்றது முடிக்குஞ் சொல்லை. காதல்வகை - வகையென்பதனோடு ஆக என ஒரு சொல்லை வருவித்துக் கூட்டிக் கொள்க. ஊர் - ஊரிலுள்ளார்க்கு ஆகுபெயர். ஊர் நாண் இயல்பினாள் - ஊரிலுள்ளவர்கள் வெட்கப்படும்படியான கற்புடைமை முதலிய நற்குணமுடையாள் என உரைப்பினும் பொருந்தும். மாதர் - அழகு, அதனையுடையவள் மாதராள்.
385. எஞ்ஞான்றும் எம்கணவர் எம்தோள்மேல் சேர்ந்தெழினும் அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; - எஞ்ஞான்றும் என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையால் பன்மார்பு சேர்ந்தொழுகு வார். (இ-ள்.) எ ஞான்றும் - எந்த நாளும், எம் கணவர் - எம்முடைய நாயகர், எம் தோண்மேல் - எம்முடைய புயங்களில், சேர்ந்து எழினும் - அணைந்தெழுந்தாலும், அ ஞான்று - அந்த நாளில், கண்டேம் போல் - (யாம்) கண்டது போல, நாணுதும் - நாணமடைகின்றோம், எ ஞான்றும் - எப்பொழுதும், பொருள் நசையால் - பொருள் ஆசையால், பல் மார்பு - பலருடைய மார்புகளை, சேர்ந்து ஒழுகுவார் - சேர்ந்து நடக்கின்ற பரத்தையர், கெழீஇயினர் - (பலர்க்கும்) உரியராயினர், என்னை - ஈதென்ன தன்மையோ? எ-று ஆல், கொல், ஒ - அசைகள். எம்முடைய நாயகர் எப்போதும் எம்மைவிட்டுப் பிரியாமலே இணைந்திருக்கிறார். ஆயினும் முதலில் கண்ட போது எப்படி நாணினோமோ அப்படியே இன்றும் நாணுகின்றோம். இப்படியிருக்க, பொருளாசையினால் ஒரு கால் சேருகின்ற வேசிமார் சற்றும் நாணாமல் சேர்ந்தவர்களை எப்படி அவ்வளவு சொந்தமாய்க் கையாளுகிறார்கள் என்பது கருத்து. இதனால் வேசிமாரைப் போல நாணம் அச்சங்களின்றிப் புருஷரிடத்தில் நடப்பவர்கள் குலப்பெண்களாகார்கள் என்பதாம். சேர்ந்தெழினும் - சேர்ந்தெழுந்தாலும். கண்டேம் - தன்மைப் பன்மை வினையாலணையும் பெயர். நாணுதும் - தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்று; இங்கே இயல்பினால் நிகழ்காலத்தில் மயங்கியது. என்னை - எவன் என்னும் வினாவினைக் குறிப்புமுற்று, கடைக்குறையாய் ஐகாரச் சாரியை பெற்றது. கெழீஇயினர் - இன்னிசையளபெடை, கெழுவு - பகுதி, இன் - இடைநிலை, அர் - விகுதி, தெரிநிலை வினைமுற்று.
386. ஊள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால் வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; - தெள்ளிய ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ நாணுடையாள் பெற்ற நலம். (இ-ள்.) வள்ளன்மை - மிகுந்த ஈகையை, பூண்டான்கண் - அடைந்தவனிடத்துள்ள, ஒள் பொருள் - பிரகாசமான திரவியமானது, உள்ளத்து - மனத்தில், உணர்வு உடையான் - அறிவுடையவன், ஓதிய நூல் அற்று - படித்த நூலை ஒத்திருக்கும்; (அதுபோல) நாண் உடையாள் - நாணம் உடைய குலமகள், பெற்ற நலம் - அடைந்த அழகு, தெள்ளிய - விவேகமுள்ள, ஆண் மகன் - வீரனாகிய புருஷருடைய, கையில் - கையிலுள்ள, அயில் - கூர்மையான, வாள் அனைத்து - வாளை ஒத்திருக்கின்றது, எ-று. இயற்கையில் தாதாவாயிருப்பவன் கையில் பணம் இருந்தால் அது விவேகமுள்ளவன் கற்ற நூற்பொருள் போல் பயன்பட்டு விளங்கும். அதுபோல இயற்கையில் நாணமுடைய வளுக்குள்ள அழகாவது வீரன் கையில் ஆயுதம் போல் யாவராலும் புகழப்பட்டு விளங்குமென்பதாம். ஆல், அரோ - அசைகள். வள்ளல் தன்மை - வள்ளன்மை. ஒள்பொருள் - ஒண்பொருள், பண்புச் சொற்களிலுள்ள லகர ளகரங்கள் பெரும்பாலும் னகர ணகரங்களாகத் திரிந்து வருவன என அறிக. வாள் அனைத்து - அனை - உவமைச்சொல். வாளனைத்து என்பது ஒரு சொல்லாக் கொள்ளத்தக்கது.
387. கருங்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்கென்று ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரான்; - ஒருங்கொவ்வா நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது என்னையும் தோய வரும். (இ-ள்.) ஊரன் - ஊருக்குடையவன், கரு கொள்ளும் - கறுத்த கொள்ளையும், செம் கொள்ளும் - சிவந்த கொள்ளையும், ஒருங்கு ஒப்ப - சமானமாய் ஒத்திருக்க, தூணி பதக்கு என்று - தூணிப்பதக்கென்னும் அளவால், கொண்டானாம் - வாங்கிக் கொண்டானாம்; (அதுபோல்) ஒருங்கு ஒவ்வா - முழுதும் ஒத்திராத, நல் நுதலார் - அழகிய நெற்றியையுடைய வேசியரை, தோய்ந்த - அனுபவித்த, வரை மார்பன் - மலை போன்ற மார்பையுடைய கணவன், நீர் ஆடாது - ஸ்நானஞ் செய்யாமல், என்னையும் தோய வரும் - என்னையும் அனுபவிக்க வருகிறான். எ-று. ஒரு நாட்டுப்புறத்தான் கருங்கொள்ளையும் செங்கொள்ளையும் விலை வித்தியாசமில்லாமல் ஒரேயளவிற்கு வாங்கிக் கொண்டா னென்பார்கள், அப்படியே என் கணவன் பல பரத்தையரைப் புணர்ந்து ஸ்நானமுஞ் செய்யாமல் என்னையும் அனுபவிக்க வருகிறான், இதென்ன அக்கிரமம் என்று தலைவி கூறியதாகக் கொள்க. இதனால் தன் கணவன் செய்த அக்கிரமத்தையும் பொறுத்துக் கொள்வார் கற்புடை மகளிர் என்பதும், நீராடியாயினும் வந்தால் சேரலாமெனத் தம்முடைய சுத்தியையும் கூறினவாறாயிற்று. ஒருங்கு - பகுதியே வினையெச்சப் பொருட்டாய் வந்தது. தூணி பதக்கு என்பன முகத்தலளவைப் பெயர்கள். தூணி - நாலுமரக்கால், பதக்கு - இரண்டு மரக்கால். ஆம் என்பது தாம் காணாமையைக் குறிக்கின்றது. ஊரன் என்பது தாரதம்மிய மறியாமையைக் குறிக்கின்றது. வரும் - இயல்பினால் வந்த கால வழுவமைதி.
388. கொடியவை கூறாதி பாண! நீ கூறின் அடிபைய இட்டொதுங்கிச் சென்று - துடியின் இடக்கண் அனையம்யாம் ஊரற்கு அதனால் வலக்கண் அனையார்க்கு உரை. (இ-ள்.) பாண - பாணனே!, கொடியவை கூறாதி - கொடுமையான சொற்களைச் சொல்லாதே; (ஏனெனில்) யாம் -, ஊரற்கு - தலைவனுக்கு, துடியின் - உடுக்கையினது, இடம் கண் அனையம் - இடது பக்கத்தைப் போல் பிரயோசனப் படாதவர்களாயிருக்கின்றோம்; அதனால் - அத்தன்மையால், நீ கூறின் - (அப்படிப்பட்ட சொற்களை) நீ சொன்னால், பைய - மெதுவாக, அடி விட்டு ஒதுங்கி சென்று - நீ இருக்குமிடத்தை விட்டு அப்புறம் போய், வலம் கண் அனையர்க்கு - அந்த (உடுக்கையின்) வலது பக்கத்தைப் போல் அவருக்குப் பிரயோசனப்படுகிற வேசியர்க்கு, உரை - சொல்லு, எ-று. இஃது ஒருத்தி தன் தலைவன் பரத்தையரிடத்துச் செல்வதைப் பாணன் தன்னிடத்திற் கூற, அதைக் கேட்கச் சகியாமல், பிரயோசனப்படாத வென்னிடத்திற் சொல்ல வேண்டாம், பிரயோசனப்படுகிற பரத்தையரிடத்திற் சொல்லென்று சொன்னாள் என்பது கருத்து. இதனால் தன் கணவன் தூஷணையைக் காதினால் கேட்கவும் பிரியமில்லாமையாகிய நற்குணம் குலமகளிர்க் குண்டென்று கூறப்பட்டது. உடுக்கைக்கு வலதுபக்கம் அடிபடுதலே யன்றி இடது பக்கம் அடிபடுவதில்லை. பாணன் என்பவன் பாடுகின்ற ஓர் இழி சாதியான்; இவன் தலைவன் தலைவிகளுக்குத் தூது செல்வதுண்டு. கூறாதி - முன்னிலை யேவலொருமை வினைமுற்று; கூறு - பகுதி, ஆ - எதிர்மறை விகுதி, தகரம் - எழுத்துப்பேறு, இ - விகுதி, பைய - குறிப்பு வினையெச்சம். அனையம் - தன்மைப் பன்மை வினைமுற்று.
389. சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லூரன்மீது ஈப்பறக்க நொந்தேனும் யானேமன்; - தீப்பறக்கத் தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம் நோக்கி இருந்தேனும் யான். (இ-ள்.) சாய் - கோரைப்புல்லை, பறிக்க - பிடுங்க, நீர் திகழும் - நீர் விளங்குகின்ற, தண் வயல் - குளிர்ச்சியாகிய வயல் சூழ்ந்த, ஊரன் மீது - ஊர்களையுடையவனான நாயகன் மீது, ஈ பறக்க - ஈயானத் பறக்கையில், நொந்தேனும் யானே - சகியாமல் மனவருத்தப்பட்டவளும் யானே, தீ பறக்க - தழல் வீசும்படி, முலை தாக்கி - (வேசியர்) முலைகளினால் தாக்கி, பொருத - போர்செய்த [கிரீடை செய்த], தண் சாந்து - குளிர்ச்சியான சந்தனக் கலவையை, அணி அகலம் - தரித்த மார்பை, நோக்கி இருந்தேனும் யான் - கண்டிருந்தவளும் யானே, எ-று. கூடியிருக்கையில் என் நாயகன் மேல் ஈ பறக்கவும் பார்த்துச் சகியாமல் அன்பு கொண்டிருந்தவளும் நான், வேசிமார் தீப்பறக்கும்படி அழுத்தமாய் முலைகளால் தாக்கி கிரீடை செய்து சந்தனக்குழம்பு அப்பிய மார்பைக் கண்டு நொந்து நிற்பவளும் யான் என ஒரு குலமகள் கூறியது. இதனால் குலமகளிர் தமது நாயகர் பரத்தையரைக் கூடின காலத்தும் தாமவரைத் திரஸ்காரஞ் செய்யாது இருக்க வேண்டுமென்று கூறியதாயிற்று. பறிக்க - காரணப் பொருட்டாய் வந்த செயவெனெச்சம். மன - அசை; மிகவும், எனவும் சொல்லலாம். பொருத - பொரு - பகுதி, த - இடைநிலை, அ - பெயரெச்ச விகுதி; இறந்தகாலப் பெயரெச்சம். நொந்தேன், இருந்தேன் - தன்மை ஒருமை வினையாலணையும் பெயர்கள். உம் - சிறப்போடு எண்ணுப் பொருளையும் தரும். ஏ - பிரிநிலை.
390. அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று பெரும்பொய் உரையாதி, பாண; - கரும்பின் கடைக்கண் அனையம்நாம் ஊரற்கு அதனால் இடைக்கண் அனையார்க்கு உரை. (இ-ள்.) பாண - பாணனே!, அரும்பு அவிழ் - பூவரும்புகள் மலரும்படியான, தாரினான் - மாலையணிந்த எனது நாயகன், எம் அருளும் என்று - எமக்குக் கிருபை செய்வானென்று, பெரு பொய் - பெரிய பொய்யான வார்த்தைகளை, உரையாதி - சொல்லாதே; (ஏனெனில்) ஊரற்கு - உரையாளும் அவனுக்கு, கரும்பின் கடை கண் அனையம் நாம் - நாங்கள் கரும்பின் கடைசிக் கணுவை யொத்திருக்கின்றோம்; அதனால் - (இப்பேச்சை) இடை கண் அனையார்க்கு - (அக்கரும்பின்) இடையிலுள்ள கணுக்களையொத்த பரத்தையர்க்கு, உரை - சொல்லு, எ-று. கரும்பின் கடைக்கணுவைப் போல் உருசி குறைந்துள்ள நம்மிடத்தில் அருள்செய்து நாயகன் வருவானென்று பாணனே நீ பொய்யுரை சொல்லாதே; அக்கரும்பின் இடைக் கணுக்களைப் போல அவருக்கு ருசியுள்ள பரத்தையரிடம் இப்பேச்சைச் சொல்லு எனத் தலைவி கூறியது. எம் அருளும் - நான்காம் வேற்றுமைத் தொகை. உரை யாதி - முன்னிலை யேவல் வினைமுற்று. அனையம் - தன்மைப் பன்மை வினைமுற்று. 40. காம நுதலியல்
[அதாவது காமத்தின் பகுதிகளைச் சொல்லுகின்ற பிரிவு.]
[இஃது தலைமகற்கு வாயிலில் நேர்ந்த தோழி தலைமகள் புலவிநீங்கச் சொல்லியது.]
391. முயங்காக்கால் பாயும் பசலைமற்று ஊடி உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; - வயங்கு ஓதம் நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப! புல்லாப் புலப்பதோர் ஆறு. (இ-ள்.) வயங்கு - விளங்குகின்ற, ஓதம் - கடலானது, நில்லா - நில்லாமல், திரை அலைக்கும் - அலைகளால் மோதுகின்ற, நீள் சுழி - நீண்ட சுழிகளினது, தண் சேர்ப்ப - குளிர்ச்சியான கரையையுடைய அரசனே!, முயங்காக்கால் - சேர்ந்திராமற் போனால், பசலை பாயும் - பசலையானது [நிறம் மாறுதல்] உடம்பில் வியாபிக்கும், ஊடி உயங்காக்கால் - ஊடி வருந்தாத போது, காமம் உப்பு இன்றாம் - காமமானது ருசியில்லாமற் போகும்; புல்லா - புணர்ந்து, புலப்பது - ஊடுவது, ஓர் ஆறு - (காமத்துக்கு) ஓர் நன்னெறியாம், எ-று. பசலை - விசனத்தைக் குறிக்கின்ற வேறு நிறம் [நிறம் மாறுதல்]; கூடாமற் போனால் பசலையுண்டாகின்றது. இங்கே பசலை நித்திரையின்மை, உடம்பு மெலிதல், எல்லாவற்றிலும் பிரியம் இல்லாமற் போதல் இவைகளுக்கு உபலக்ஷணம். எப்பொழுதும் சேர்ந்து கொண்டிருந்தால் காமத்தில் ருசியில்லை, ஆதலால் கூடுவதும் ஊடுவதும் காமத்திற்கு அழகு. முயங்காக்கால் - செய்யின் என்னும் வாய்பாட்டு எதிர்மறை வினையெச்சம். காமம் உப்பின்று - மாடுகோடு கூறியது என்பது போலக் கொள்க. 'உயர்தினை தொடர்ந்த' என்னும் சூத்திர வுரையில் இலக்கணம் காண்க. கூடலை வடநூலாரும் சம்போகமென்றும் ஊடலை விப்ரளம்பம் என்றும் சொல்லி, விப்ரளம்பத்தை மதுரதரம் என்கிறார்கள். [மதுரதரம் - மிகுந்த இனிப்பு.]
392. தம்அமர் காதலர் தார்சூழ் அணியகலம் விம்ம முயங்கும் துணையில்லார்க்கு - இம்மெனப் பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம் நெய்தல் அறைந்தன்ன நீர்த்து. (இ-ள்.) தம் அமர் காதலர் - தம்மால் விரும்பப்பட்ட நாயகருடைய, தார் சூழ் அணி அகலம் - மாலையை யணிந்த அழகிய மார்பை, விம்ம முயங்கும் - பூரிக்கத் தழுவும், துணை இல்லார்க்கு - அந்நா யகரைப் பிரிந்த மாதருக்கு, இம் என - இம்மென்னு மோசையோடு, எழிலி பெய்ய - மேகம் (நீரைச்) சொரிய, முழங்கும் - முழங்காநின்ற, திசையெல்லாம் - திக்குகளெல்லாம், (அம்முழக்கம்) நெய்தல் அறைந்தது அன்ன நீர்த்து - சாப்பறை யறைந்தாற் போலும் தன்மையையுடைத்து, எ-று. மழைக்காலத்தில் தம்மைத் தழுவும்படியான நாயகரைப் பிரிந்த மாதருக்கு மழை பெய்யும் ஓசை சாப்பறை போலிருக்கும் என்றால் அவர்கள் உயிர் பொறுத்தல் கடின மென்றபடி. அமர் - வினைத்தொகை; இச்செய்வினையைச் செயப்பாட்டு வினையாகத் திரித்துக் கொள்க. நீர்த்து - குறிப்பு முற்று.
[இஃது தலைமகன் சொல்ல உடன்படாமையைத் தலைவற்குத் தோழி சொல்லியது.]
393. கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள் கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு இம்மாலை என்செய்வ தென்று. (இ-ள்.) கம்மம் செய் - கம்மியத் தொழிலைச் செய்கின்ற, மாக்கள் - மனிதருடைய [கம்மாளருடைய], கருவி - ஆயுதங்களை, ஒடுக்கிய - வேலையில்லாமல் இருக்கச் செய்த, மம்மர் கொள் - மயக்கத்தைக் கொண்ட, மாலை - சாயங்காலத்தில், மலர் ஆய்ந்து - பூக்களை யாராய்ந்தெடுத்து, பூ தொடுப்பாள் - அம்மலர்களை (மாலையாத் தொடுத்து,) கை மாலை இட்டு - கையில் அம்மாலையை வைத்துக் கொண்டு, துணை இல்லார்க்கு - நாயகனில்லாத பெண்களுக்கு, இ மாலை என் செய்வது என்று - இந்த மாலை என்ன பிரயோசனத்தைத் தருவதென்று, கலுழ்ந்தாள் - மனம் கலங்கி அழுதாள், எ-று. ஒருத்தி சாயங்காலம் நல்ல மலர்களை மாலை தொடுத்து நாயகன் பிரிந்து பரதேசம் செல்வதைத் தோழியாற் கேள்வியுற்று இவ்வளவு வருந்தி அன்பினால் நாயகருக்கென்று விநோதமாய்க் கட்டிய இந்த மாலை அவர் இல்லாத போது இது ஏதுக்கும் உபயோகமில்லையென்று மனங்கலங்கி அழுதாள் எனத் தோழி தலைவற்குக் கூறினாள். இதனால் அவன் பகற்காலத்தில் நாயகரைப் பிரிந்திருந்தாலும் இரவிற் பிரிந்திருப்பது சகிக்கத் தக்கதன்று என்றால் இதுவும் கார்க்காலம் போல பெண்களுக்கு வருத்த முண்டாக்கும் என்றதாயிற்று. மாலை என்பது பூமாலையேயல்ல போகத்துக்கு வேண்டிய மற்றக் கருவிகளுக்கும் உபலக்ஷணம். இப்படிப்பட்ட காரியங்களெல்லாம் பெண்களுக்குக் காமமிகுதியால் வரும் இன்பச் செய்கைகள். 'கம்மஞ்செய்... ஒடுங்கிய' என்பது அந்திக் காலத்தின் குறிப்பு. பலகுறிப்புகள் உளவாயினும் பகலெல்லாம் மிகவருந்தி வேலை செய்யும் கம்மியரும் வேலையை நிறுத்தித் தன் நாயகிமாரிடம் செல்லுங் காலமென இக்குறிப்பைக் காட்டியது. மம்மர் என்பது காமக்களிப்பு. மம்மர் செய் - இது காலத்தின் இயற்கையைக் காட்டியது. ஒடுங்கிய என்னும் பெயரெச்சமும் பெயரெச்சத்தின் விகாரமாகிய செய் என்னும் வினைத்தொகையும் [நன். பொது. சூ.4ம்] விதியால் மாலை என்னும் தம்மெச்சம் கொண்டன. கலுழ்ந்தாள் - கலுழ் - பகுதி.
[இஃது வினைமுற்றி மீண்ட தலைமகன் பாகன்கேட்பச் சொல்லியது.]
394. செல்சுடர் நோக்கிச் சிதர் அரிக்கண் கொண்டநீர் மெல்விரல் ஊழ்தெறிய விம்மித்தன் - மெல்விரலின் நாள்வைத்து நங்குற்றம் எண்ணும்கொல், அந்தோதன் தோள்வைத்து அணைமேற் கிடந்து. (இ-ள்.) செல் - (அஸ்தமிக்கச்) செல்கின்ற, சுடர் - சூரியனை, நோக்கி - பார்த்து, சிதர் - சிதறிய, அரி - இரேகைகளையுடைய, கண் - கண்கள், கொண்ட - அடைந்த, நீர் - நீரை, மெல் விரல் - மெல்லிய விரல்களால், ஊழ் - முறையில், தெறியா - எடுத்தெறிந்து, விம்மி - விம்மி அழுது, தன் மெல் விரலின் - தன்னுடைய மெல்லிய விரல்களில், நாள் வைத்து - நாள்களைக் கணக்கிட்டு, (தலைவி) அணைமேல் - படுக்கையில், தன் தோள் வைத்து - தன் புஜங்களைத் தலைக் கணையா வைத்து, கிடந்து - படுத்து, நம் குற்றம் - நமது குற்றங்களை, எண்ணும் கொல் - எண்ணுவாளோ, அந்தோ - ஐயோ! (என்று பாகனோடு தலைவன் கூறினான்), எ-று. ஒரு தலைவன் தேசாந்தரம் போயிருந்து தன்னூர் கிட்ட வரும் போது, நம்முடைய காதலி அஸ்தமன காலங் கண்டு கண்களில் வடியும் நீரை விரலால் எடுத்துத் தெறித்து நாம் போன நாள் இத்தனையென்று விரல்வைத்தெண்ணி நாம் விரைவில் வருவோ மென்றும் இன்னின்னபடி செய்வோமென்றும் சொல்லித் தவறிப் போன குற்றங்களைச் சிந்தித்து விசனப்படுவாளே யென்றிரங்கிப் பாகனோடு சொல்லியபடி. செல் - வினைத்தொகையாகலின் ஈறுதிரியா தியல் பாயிற்று. அந்தோ - இரக்கச் சொல். "சிதரரிக்கண்கொண்ட நீர்" என்பதற்கு 'இரேகைகள் படர்ந்த கண் அழகை மறைத்துக் கொண்டு நிற்கிற நீர்' என அவள் அழகை நினைத்து இரங்கினானென்பது கருத்து.
[இஃது தலைமகன் தானுற்றதைப் பாங்கற்குச் சொல்லியது.]
395. கண்கயல் என்னும் கருத்தினால் காதலி பின்சென்றது அம்ம சிறுசிரல்; - பின்சென்றும் ஊக்கி எழுந்ததும் எறிகல்லா ஒண்புருவம் கோட்டிய வில்வாக்கு அறிந்து. (இ-ள்.) கண் - கண்களை, கயல் என்னும் - மச்சமென்கிற, கருத்தினால் - எண்ணத்தினால், சிறு சிரல் - சிறிய சிச்சிலிக் குருவி, காதலி பின் சென்றது - மனைவியைப் பின் தொடர்ந்து போயிற்று; பின் சென்றும் - பின் போயும், ஊக்கி எழுந்தும் - முயற்சிப்பட்டும், ஒள் புருவம் - பிரகாசமான புருவமாகிய, கோட்டிய - வளைத்த, வில் வாக்கு - வில்லின் வளைவை, அறிந்து - தெரிந்து, எறிகல்லா - எறியமாட்டாதிருந்தன [பிடியாமலிருந்தன], எ-று. தன் தலைவியினுடைய கண்களை மச்சமென்று நினைத்து சிச்சிலிக் குருவிகள் பின்சென்று பிடிக்க முயன்றும் மேலிருக்கும் புருவத்தை வளைத்த வில்லென்று நினைத்துப் பிடியாமனின்றன வென்று தன் காதலியினுடைய அழகை வியந்து தலைவன் தோழனோடு சொல்லியது. அம்ம - இடைச்சொல், இது அசையுமாம், கேளுங்கள் என்கிற பொருளையுந் தரும். "அம்மவுரையசை கேண்மினென்றாகும்" என்பது சூத்திரம். எறிகல்லா - எறி - பகுதி, கு - சாரியை, அல் - எதிர்மறைப் பண்படி, இங்கு விகுதியாவேனும் இடைநிலையாவேனும் கொள்க; ஆ - பலவின்பால் விகுதி. எறிதல் - தூக்கிப்போடல் வாக்கு - வாங்கு என்னு முதனிலைத் தொழிற்பெயர் வலிந்து நின்றது.
[இஃது மகளைப் போக்கிய தாய் இரங்கியது.]
396. அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற்கு அன்னோ பரற்கானம் ஆற்றின கொல்லோ; - அரக்கார்ந்த பஞ்சிகொண்டு ஊட்டினும் பையெனப் பையெனவென்று அஞ்சிப் பின்வாங்கும் அடி. (இ-ள்.) அரக்கு ஆம்பல் - செவ்வாம்பலைப் போல, நாறும் - தோன்றுகின்ற, வாய் - இதழையுடைய, அம் மருங்கிற்கு - அழகிய இடையே யுடையவளுக்கு, அன்னோ - ஐயோ!, பரல் கானம் - பருக்காங் கற்களையுடைய காட்டை, அரக்கு ஆர்ந்த பஞ்சி கொண்டு - சிவந்த நிறமுடைய பஞ்சினால், ஊட்டினும் - (செம்பஞ்சிக் குழம்பைத்) தடவினாலும், பை என பை என என்று - மெதுவாக மெதுவாக என்று, அஞ்சி - பயந்து, பின் வாங்கும் அடி - (சகியாமல்) இளைக்கிற பாதங்கள், ஆற்றின கொல் ஓ - பொறுத்தனவோ?, எ-று. நம்மகள் காடு சென்றாளே அவள் செம்பஞ்சிக் குழம்பைப் பஞ்சினால் தடவினபோதும் அதைப் பொறுக்க மாட்டாமல் மெல்ல மெல்ல என்று சொன்ன அவள் தன் தலைவன் பின்னே செல்லுகையில் அவளுடைய பாதங்கள் பருக்காம் கற்களின் மேல் எப்படி நடந்தனவோ வென்றிரங்கித் தாய் விசனப்பட்டுச் சொன்னாள் என்பதாம். நாறும் வாய் - மணம் வீசும் வாய் எனவும் பொருள் கொள்ளலாம். அம்மருங்குல் - உரிச்சொற்றொடர்ப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. அம் - உரிச்சொல்; அது பண்பாதலால் "ஐந்தொகை மொழிமேற் பிறதொக லன்மொழி" என்பதற்கு விரோதமில்லை. அன்னோ - இரக்கச்சொல். கொல் என்பது ஐயப்பொருளில்வந்த இடைச்சொல். ஓ - வாக்கியாலங்காரத்திற்கு வந்த அசைச்சொல். (அல்லது) "ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழா" என்கிற விதியினால் இரண்டும் ஐயப்பொருளையே சிறப்பித்து நின்றன வென்னவுமாம். பைய என என்பது பையென என ஈறு தொகுத்தலாய் நின்றது. பையெனப் பையென - அச்சப்பொருள் பற்றி அடுக்கி வந்தன.
[இஃது தலைவன் பிரிவாற்றாத தலைவி நிலைமையைத் தோழி கூறியது.]
397. ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர் மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி மாலை பரிந்திட்டு அழுதாள் வனமுலைமேல் கோலஞ்செய் சாந்தம் திமிர்ந்து. (இ-ள்.) ஓலை கணக்கர் - ஓலையெழுதும் கணக்கர்களுடைய, ஒலி அடங்கும் - ஓசை ஒழிந்து போகும்படியான, புல் செக்கர் - அற்பமான சிவப்பினையுடைய, மாலை பொழுதில் - மாலைக்காலத்தில், மணந்தார் பிரிவு உள்ளி - தலைவன் பிரிதலை நினைத்து, மாலை பரிந்திட்டு - மாலையைக் கழற்றியெறிந்து, வனம் முலை மேல் - அழகான ஸ்தனத்தின் மேல், கோலம் செய் சாந்தம் - அலங்காரம் செய்த சந்தனப் பூச்சை, திமிர்ந்து - உதிர்ந்துத்தள்ளி, அழுதாள் - துக்கித்தாள், எ-று. சாயங்காலத்தில் தன் தலைவன் பிரிவதை எண்ணி அதைப் பொறாமல் தலைவி, தான் அணிந்திருந்த பூமாலையைக் கழற்றி யெறிந்து சந்தனக் கோலத்தைத் திமிர்த்துத் தள்ளியழுதாள் எனத் தோழி தலைவற்குச் சொன்னா ளென்பதாம். கணக்கர் கிராமக்கணக்கு முதலியவைகளை யெழுதிப் பேசி யோயுங்காலமாதலால், "ஓலைக்கணக்கர் ஒலியடங்கு" என்பதைச் சாயங்காலத்தின் குறிப்பாகக் கொள்ளப்பட்டது. அடங்கு - வினைத்தொகை. மணந்தார் - விவாகஞ் செய்தவர், வினையாலணையும் பெயர். உள்ளி - உள் அல்லது உள்ளு - பகுதி, இ - விகுதி, இதனை உகரத்தின் திரிபு என்று சொல்வாரு முளர்.
[இஃது உடன்போக்குப் பொருந்தின தலைமகன் தோழிக்குச் சொல்லியது.]
398. கடக்கருங் காலத்துக் காளைபின் நாளை நடக்கவும் வல்லையோ என்றி; - சுடர்த்தொடீஇ பெற்றான் ஒருவன் பெருங்குதிரை அந்நிலையே கற்றான் அஃதூரும் ஆறு. (இ-ள்.) சுடர் தொடீஇ - பிரகாசமுள்ள வளைகளை யுடையவளே!, கடக்க அருகானத்து - கடந்துபோவதற் கரிதான காட்டிலே, காளை பின் - காளை போன்ற என் கணவன் பின், நாளை - நாளைத்தினம், நடக்கவும் வல்லையோ - நடந்து சொல்லவு மாட்டுவையோ, என்றி - என்று நீ சொன்னாய்; பெரு குதிரை - பெரிய குதிரையை, பெற்றான் ஒருவன் - பெற்றவனாகிய ஒருவன், அ நிலையே - அக்கணமே, அஃது - அதை, ஊரும் ஆறு - ஏறி நடத்து முறைமையை, கற்றான் - கற்றவனேயாவன், (ஆதலால் நாயகன் பின்போதல் அரிதன்று), எ-று. நீ நாளைக்குக் கணவன் பின் போக வுடன்பட்டையே நடந்து செல்லமாட்டுவையோ வென்று தோழீ நீ என்னை வினாவினாய், அதற்கு நான் சொல்லுகிறேன், ஒருவன் குதிரையை வாங்கினால் அதையேறி நடத்தவும் கற்றிருப்பானல்லவோ, அப்படிப்போல ஓர் கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட நான் அவன் பின் செல்லமாட்டா திருப்பேனோ என்றாள் ஒருத்தி என்பதாம். கடக்க அரு - கடக்கரு என ஈறுதொக்கது. காளை - உவமையாகு பெயர். வல்லை - முன்னிலைக் குறிப்பு வினைமுற்று. ஓ - வினா விடைச்சொல். என்றி - முன்னிலை யொருமைத் தெரிநிலை வினைமுற்று; என் - பகுதி, இடைச்சொல், றகரம் - இடைநிலை, இ - விகுதி. ஐயாயிகர வீற்ற மூன்று மேவலின் உரூஉம் என்னுஞ் சூத்திரத்திற் காண்க. சுடர்த்தொடி - வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, அளபெடுத்தது விளியுருபு.
[இஃது மகளைப் போக்கிய தாய் கவலைப்பட்டுச் சொல்லியது.]
399. முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும் இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம் வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என் பூம்பாவை செய்த குறி. (இ-ள்.) முலை கண்ணும் - முலையின் காம்புகளும், முத்தும் - முத்துமாலையும் (அழுந்த) - முழுமெய்யும் - உடம்பு முழுமையும், புல்லும் இலக்கணம் யாதும் - ஆலிங்கனம் செய்து கொண்ட குறி யாதொன்றையும், அறியேன் - அறியமாட்டேன்; என் பூம்பாவை - என்னுடைய மகள், செய்த குறி - செய்த அடையாளம், கலை கணம் - மான் கூட்டம், வேங்கை வெரூஉம் - புலிக்கு பயப்படுகிற, நெறி - வழியில், செலிய போலும் - செல்லுதற்குப் போலும், எ-று. நேற்று என் மகள் தன்னுடைய முலைக்கண்ணும் முத்துமாலையும் என் மெய்யிற் பொருந்தும்படி என்னை ஆலிங்கனஞ் செய்த குறி இன்னதென்று அறிந்திலேன். அது, மான்கள் புலிக்கஞ்சி யோடும்படியான வழியில் தான் தன் னாயகனோடு செல்லுதற்கு அடையாளமாகச் செய்தாளென்று இன்றறிந்தேன் என்று தாய் மகளைக் குறித்துக் கவலைப்பட்டுச் சொல்லியது. பயத்துக் கேதுவானதை இரண்டாம் வேற்றுமையிற் கொள்வது தமிழ்ச் செய்யுளாட்சி; நான்காம் வேற்றுமையிற் கொள்வது உலக வழக்கு. வெரூஉம் - உகரம் அளபெடுத்தது இன்னோசைக்காக, செலிய - செயவென் வாய்பாட்டு வினையெச்சம்; செல் - பகுதி, இ - சாரியை, அ - விகுதி, இச்சாரியை பெறாதபோது செல்ல வென்றிருக்கும். போலும் - தெரிநிலை வினைமுற்று, பயனிலை இங்கு போல் என்றது உவமையைக் காட்டினதன்று; தற்குறிப்பைக் காட்டியது. "அங்ஙனம் புல்லியது" என்பதை எழுவாயாக வருவித்துக் கொள்க.
400. கண்மூன்று உடையானும் காக்கையும் பையரவும் என்ஈன்ற யாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற கோங்கரும் பன்ன முலையாய்! பொருள்வயின் பாங்கனார் சென்ற நெறி. (இ-ள்.) பொன் ஈன்ற - பொன்போலும் தேமல் பூத்த, கோங்கு அரும்பு அன்ன முலையாய் - கோங்க மலரையொத்த முலையையுடைய தோழி!, கண் மூன்று உடையானும் - மூன்று கண்களையுடைய சிவனும், காக்கையும் - காக்கைப் பறவையும், பை அரவம் - படமுடைய சர்ப்பமும், என் ஈன்ற யாயும் - என்னைப் பெற்ற தாயும், பிழைத்தது என் - (எனக்கு அவர்கள்) செய்த குற்றம் என்ன, [ஒன்றுமில்லை]; (குற்றம் செய்ததெது வெனில்) பொருள்வயின் - பொருளினிடத்தசையால், பாங்கனார் - என் நாயகர், சென்ற நெறி - போன மார்க்கமே (யாம்), எ-று. அந்நெறி இல்லையாயின் அவர் செல்லார், அப்போது அவையெல்லாம் நமக்கு அநுகூலமே யாகும். நாயகர் பொருள் விருப்பத்தால் தேசாந்தரம் போன நெறியை நாம் வெறுத்துப் பழிக்க வேண்டுவதென்ன? அது நமக்கு என்ன குற்றம் செய்தது. ஆகில் யார் குற்றம் செய்தவர்களென்றால், மன்மதனை முழுதும் எரிக்காமல் உயிர் கொடுத்த சிவனும், தன் கூட்டிற் பொரித்த குயிற்குஞ்சைக் குத்தியெறியாமல் வளர்த்த காக்கையும், சந்திரனை விழுங்கிப் பின் உமிழ்ந்த அரவும், என்னைப் பெற்ற போதே கொல்லாமல் விட்டு வளர்த்த தாயுமே பிழை செய்தனர் என்று தலைவி தன் பிரிவாற்றாமையைத் தோழியோடு சொல்லியது என்றால் கணவனைப் பிரிந்த காலத்து மன்மதனும் குயிலும் சந்திரனும் வருத்துவதனாலும் தாய் கொன்றிருந்தால் இப்படிப்பட்ட துன்பங்களை யநுபவியாமலிருக்கலா மாதலாலும் அவர்கள் பிழைத்த தென்றாள். இப்பொழுது மன்மதன், குயில், சந்திரன் ஆகிய இவர்கள் இன்னின்ன காரியம் செய்ததனாலே பிழை செய்தார்களென்று நாம் வெறுக்க வேண்டியதில்லை; அவர் அந்நெறியிற் செல்லாமல் நம்மிடத்தே யிருப்பராயின் அவரெல்லாம் அநுகூலமே செய்வாராவர், ஆதலால் அவர் சென்ற நெறியே நமக்குப் பிழைத்ததென நாம் கூறவேண்டிய தாயிற்று. கண்மூன்றுடையான் - பண்புத்தொகை; மூன்று கண் என மாற்றிக் கொள்க. பையரவு - இரண்டாம் வேற்றுமை யுருபும் பயனுமுடன்றொக்க தொகை. பிழைத்தது - தொழிற்பெயர். கண்மூன்றுடையான் முதலானோர் பிழைத்தது என்பதனோடு முடிந்தது, அது எழுவாயாகி என் என்னும் வினாவினைக் குறிப்பு முற்றோடு முடிந்தது. பொன் - தேமலுக்கு ஆகுபெயர். முலையாய் - ளகரம் யகரமானது விளியுருபு. வயின் - ஏழனுருபு. நெறி - எழுவாய், பிழைத்தது - பயனிலை. நாலடியார் முற்றிற்று |