காரியாசான் இயற்றிய சிறுபஞ்ச மூலம் (உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.) சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், கண்டங்கத்தரி வேர் என்பனவாம். இது போன்றே வில்வம், பெருங் குமிழ், தழுதாழை, பாதிரி, வாகை, இவற்றின் வேர்களைப் பெரும் பஞ்சமூலம் என்பர். சிறுபஞ்சமூலம் ஆகிய மருந்து உடல் நலம் பேணுமாறு போல, சிறுபஞ்சமூலப் பாடல்களில் குறித்த ஐந்தைந்து பொருள்களும் உயிர் நலம் பேணுவன. அதனால் இந்நூல் சிறுபஞ்சமூலம் என பெயர் பெற்றது. இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர். காரி என்பதுவே இவரது இயற்பெயர். ஆசான் என்பது தொழில் பற்றி வந்த பெயராகலாம். இவரை மாக் காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. இவர் சைன சமயத்தார் என்பது இந் நூலின் காப்புச் செய்யுளால் அறியலாகும். பாயிரச் செய்யுளிலிருந்து இவர் மாக்காயனாரின் மாணாக்கர் என்பது தெரிய வருகிறது. இந்த ஆசிரியரிடம் கல்வி பயின்றோருள் மற்றொருவர் ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல்களின் ஆசிரியராகிய கணிமேதாவியார். இவரும் மாக்காயனாரின் ஊராகிய மதுரையைச் சார்ந்தவராதல் கூடும். இவர் பஞ்ச தந்திரக் கதையுள் வரும், மைனாவுக்கும் முயலுக்கும் வழக்குத் தீர்த்த கங்கைக் கரையில் உள்ள பூனைக் கதையை, 'உறுதவ மேல் கங்கை கரைப் பூசை போறல் கடை' (100) என்று சுட்டியுள்ளார். இதனால் பஞ்ச தந்திரம் தமிழில் பெருக வழங்கிய காலத்தை ஒட்டி இந்நூலாசிரியர் வாழ்ந்தனர் என்று எண்ணவும் இடமுண்டு. இந் நூலில் நான்கு வரிகளில் ஐந்து பொருள்களை அமைத்துப்பாடும் திறம் நோக்கத்தக்கது. இந்நூற் செய்யுட்களில் அமைந்துள்ள ஐந்தைந்து பொருள்களும் திரிகடுகத்தில் உள்ளது போலத் தெளிவுபட விளக்கமாக அமையவில்லை. ஐந்து என்னும் எண்ணுத்தொகைக் குறிப்பு பதினைந்து இடங்களிலேதான் உள்ளது (22, 39, 40, 42, 43, 47, 51, 53, 57, 60, 63, 68, 83, 92, 92) இந் நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 102 பாடல்கள் உள்ளன. 85 முதல் 89 வரை உள்ள ஐந்து பாடல்கள் பல பிரதிகளில் காணப்பெறவில்லை. ஆனால் புறத்திரட்டில் இந்நூலைச் சார்ந்த மூன்று பாடல்கள் காணப்படுகின்றன. அவை விடுபட்ட இந்தப் பாடல்களாக இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் ஆதாரமின்மையால் அவை மிகைப் பாடல்களாக தனியே தரப்பட்டுள்ளன.
கடவுள் வாழ்த்து
முழுது உணர்ந்து, மூன்று ஒழித்து, மூவாதான் பாதம், பழுது இன்றி, ஆற்றப் பணிந்து, முழுது ஏத்தி, மண் பாய ஞாலத்து மாந்தர்க்கு உறுதியா, வெண்பா உரைப்பன், சில.
ஆற்ற - மிகுதியாக ஏத்தி - போற்றி எல்லாவற்றையும் உணர்ந்து, காமம், வெகுளி, மயக்கம் என்ற முக்குற்றங்களையும் ஒழித்து மூப்பில்லாதவனாகிய கடவுளை வணங்கி இந்நூலை இவ்வுலகத்தார்க்கு நன்மை உண்டாகும்படி கூறுவேன். நூல்
பொருள் உடையான் கண்ணதே, போகம்; அறனும், அருள் உடையான் கண்ணதே ஆகும்; அருள் உடையான் செய்யான் பழி; பாவம் சேரான்; புறமொழியும் உய்யான், பிறன் செவிக்கு உய்த்து. 1
சேரான் - நிலையான் உய்த்து - செலுத்தி பொருள் உடையவன் இன்பம் அடைவான். அருள் உடையவன் அறம் செய்வான். அத்தகைய அருளுள்ளவன் பழியையும், பாவத்தையும், பிறரை பழிபடக் கூறும் புறமொழிகளைக் கூறுதலையும் செய்ய மாட்டான்.
கற்புடைய பெண் அமிர்து; கற்று அடங்கினான் அமிர்து; நற்பு உடைய நாடு அமிர்து; நாட்டுக்கு நற்பு உடைய மேகமே சேர் கொடி வேந்து அமிர்து; சேவகனும் ஆகவே செய்யின், அமிர்து. 2
கற்பு - கற்றல் நற்பு - நன்மை கற்புடைய பெண் அவன் கணவனுக்கு அமிர்தம் போன்றவள், கற்றுப் பொறிகளைந்தையும் அடக்கியவன் உலகத்திற்கு அமிர்தம் போன்றவன், நற்செய்கைகளையுடைய நாடுகள் அந்நாட்டிற்கு நன்மையைச் செய்யும் வேந்தனுக்கு அமிர்தம் போன்றது, அவனுக்கு நன்மை செய்யும் சேவகன் அவனுக்கு அமிர்தமாகும்.
கல்லாதான் தான் காணும் நுட்பமும், காது இரண்டும் இல்லாதாள் ஏக்கழுத்தம் செய்தலும், இல்லாதான் ஒல்லாப் பொருள் இலார்க்கு ஈத்து அறியான் என்றலும், நல்லார்கள் கேட்பின் நகை. 3
ஏக்கழுத்தம் - இறுமாப்பு ஒல்லா - பொருந்தாத கல்லாதான் ஆராய்ந்து காணும் நுண்பொருளும், காதிரண்டு இல்லாதாள் அழகுடையோன் என நினைத்தாலும், பொருளில்லாதவன் ஈயதறியான் என்றாலும், தனக்கியலாத பொருளை ஈவேன் என்றாலும் அறிவுடையோர் நகைப்பர்.
உடம்பு ஒழிய வேண்டின், உயர் தவம்; மற்று ஈண்டு இடம் பொழிய வேண்டுமேல், ஈகை; மடம் பொழிய வேண்டின், அறிமடம்; வேண்டேல், பிறர் மனை; ஈண்டின், இயையும் திரு. 4
திரு - செல்வம் ஈகை - கொடுத்தல் ஒருவன் தன் பிறவியை ஒழிக்க தவமும், புகழையடைய ஈகையும், உள்ளத் தூய்மையாய் இருக்க, அறிந்தும் அறியாமையும், பிறர் மனையாளை விரும்பாமையும், நாடோறும் வருவாய் சிறிதாக இருந்தாலும் செல்வமும் வேண்டிய அளவு வந்து சேரும்.
படைதனக்கு யானை வனப்பு ஆகும்; பெண்ணின் இடை தனக்கு நுண்மை வனப்பு ஆம்; நடைதனக்குக் கோடா மொழி வனப்பு; கோற்கு அதுவே; சேவகற்கு வாடாத வன்கண் வனப்பு. 5
நடை - ஒழுக்கம் வன்கண் - வீரம் படைக்கு அழகானது யானைப்படை, பெண் இடைக்கு அழகானது சிறுமை, அரசனுக்கும் ஒழுக்கத்ததுக்கும் அழகு நடுவு நிலை மாறாத சொல்லாகும். படைவீரர்க்கு அழகு அஞ்சாமை ஆகும்.
பற்றினான், பற்று அற்றான் நூல், தவசி; எப் பொருளும் முற்றினான் ஆகும், முதல்வன்; நூல் பற்றினால் பாத்து உண்பான் பார்ப்பான்; பழி உணர்வான் சான்றவன் காத்து உண்பான் காணான், பிணி. 6
பற்று - சார்பு சான்றவன் - பெரியோன் தவமுடையவன், கடவுள் நூலை உணர்ந்து ஒழுகுபவன்; எல்லாம் உணர்ந்தவன் தலைவனாவான்; அந்தணன் பிறர்க்கு பகுத்துக் கொடுத்து உண்பான்; பெரியோன் பழியை விலக்கி வாழ்வான்; தமக்கு நல்லனவற்றை அறிந்து உண்பவன் நோய்வாய்பட மாட்டான்.
கண் வனப்புக் கண்ணோட்டம்; கால் வனப்புச் செல்லாமை; எண் வனப்பு, 'இத் துணை ஆம்' என்று உரைத்தல்; பண் வனப்புக் கேட்டார், நன்று என்றல்; கிளர் வேந்தன் தன் நாடு வாட்டான், நன்று என்றல் வனப்பு. 7
வனப்பு - அழகு கிளர் - விளங்குகின்ற கண்ணுக்கழகு கண்ணோட்டம், காலுக்கழகு பிறரிடம் இரக்க செல்லாமை, ஆராய்ச்சிக்கு அழகு தன் கருத்துக்களைத் துணிந்து சொல்லுதல், இசைக்கு அழகு கேட்பவர் நன்று என்று கூறுதல், அரசனுக்கு அழகு குடிமக்கள் அவனை நல்லவனென்று கூறுதல்.
கொன்று உண்பான் நாச் சாம்; கொடுங் கரி போவான் நாச் சாம்; நன்று உணர்வார் முன் கல்லான் நாவும் சாம்; ஒன்றானைக் கண்டுழி, நாச் சாம்; கடவான் குடிப் பிறந்தான் உண்டுழி, நாச் சாம், உணர்ந்து. 8
கொடுங்கரி - பொய்ச் சான்று உயிர்களைக் கொன்று உண்பானுடைய நாக்கு, பொய்ச்சான்று சொல்வானுடைய நாக்கு அற்றுப்போகும். கற்றுணர்ந்தவர் முன் கல்லாதானுடைய நாக்கு அடங்கும். தான் சொல்லிய சொல்லைக் கேட்காதவன் முன் சொன்னவன் நாக்கு எழாது. உதவி செய்தவன் செய்த தீமையைச் சொல்லாத சான்றோன் நாக்கு பிறருக்கு அதனைக் கூறும்.
சிலம்பிக்குத் தன் சினை கூற்றம்; நீள் கோடு விலங்கிற்குக் கூற்றம்; மயிர்தான் வலம் படா மாவிற்குக் கூற்றம் ஆம்; ஞெண்டிற்குத் தன் பார்ப்பு; நாவிற்கு நன்று அல் வசை. 9
கூற்றம் - எமன் கோடு - கொம்பு சிலந்திக்கு அதன் முட்டையும், விலங்குகளுக்கு அவற்றின் கொம்புகளும் எமனாகும். கவரிமானுக்கு அதன் மயிரும், நண்டிற்கு அதன் குஞ்சுகளும், ஒருவனுடைய நாவிற்கு நன்மையில்லாத வசை மொழிகளும் எமனாகும்.
நாண் இலான் சால்பும், நடை இலான் நல் நோன்பும், ஊண் இலான் செய்யும் உதாரமும், ஏண் இலான் சேவகமும், செந்தமிழ் தேற்றான் கவி செயலும்,- நாவகம் மேய் நாடின் நகை. 10
உதாரம் - ஈகை ஏண் - வலிமை நாணமில்லாதவனது அமைதியும், நல்லொழுக்கம் இல்லாதவனது நோன்பும், தனக்கே உணவில்லாதவன் செய்கின்ற ஈகையும், வலிமையில்லாதவன் வீரமும், தமிழறியாதவன் பாட்டுக்களைச் செய்தலும் எண்ணிப் பார்த்தால் நகைப்பு தோன்றும்.
கோறலும் நஞ்சு; ஊனைத் துய்த்தல் கொடு நஞ்சு; வேறலும் நஞ்சு, மாறு அல்லானை; தேறினால், நீடு ஆங்குச் செய்தலும் நஞ்சால்; இளங்கிளையை நாடாதே, தீதுஉரையும் நஞ்சு. 11
கிளை - உறவு நாடாது - ஆராய்ந்து உயிரைக் கொல்லுதலும், கொன்ற உயிரின் தசையை உண்பதும் கொடிய விஷமாகும். தனக்கு எதிர் அல்லாதவனை எதிர்த்து வெல்லுதலும், ஆராய்ந்து அறிந்து ஒருவனை அக்காரியத்தில் மேல் செலுத்தாது காலம் நீட்டித்தலும், சுற்றத்தாரை ஆராயாமல் தீங்கு சொல்லுதலும், ஒருவனுக்கு நஞ்சு போலத் துன்பம் தரும்.
இடர் இன்னா, நட்டார்கண்; ஈயாமை இன்னா; தொடர் இன்னா, கள்ளர்கண்; தூயார்ப் படர்வு இன்னா;- கண்டல் அவிர் பூங் கதுப்பினாய்! - இன்னாதே, கொண்ட விரதம் குறைவு. 12
அவிர்தல் - விளங்குதல் இன்னா - தீது நண்பருக்குத் தீமை செய்தலும், அவர்களுக்குத் துன்பம் நேர்ந்த காலத்தில் ஈயாமையும், பகைவரிடத்து நட்பு கொள்ளுதலும், உளத்தூய்மை உடையவரை விட்டு விலகுதலும், தான் கொண்ட விரதத்தில் குறைவுபடுதலும் தீய பயன்களையே தரும். ஆதலால் அவற்றைச் செய்தல் கூடாது.
கொண்டான் வழி ஒழுகல் பெண்; மகன் தந்தைக்குத் தண்டான் வழி ஒழுகல்; தன் கிளை அஃது; அண்டாதே, வேல் வழி வெம் முனை வீழாது, மண் நாடு; கோல் வழி வாழ்தல் குணம். 13
ஒழுகல் - நடத்தல் மனைவி கணவன் சொல்படியும், மகன் தந்தை சொல்படியும், சுற்றத்தார் அவனைப் போல நடத்தலும் நன்மையாகும். பகைவரோடு சேர்ந்து கொள்ளாமல் அரசன் எதிர்த்துப் போர் புரிவதும், நாட்டு மக்கள் அரசன் சொற்படி நடத்தலும் நன்மை தரும்.
பிழைத்த பொறுத்தல் பெருமை; சிறுமை இழைத்த தீங்கு எண்ணி இருத்தல்; பிழைத்த, பகை, கெட வாழ்வதும், பல் பொருளால் பல்லார் நகை கெட வாழ்வதும், நன்று. 14
இழைத்த - பிறர் செய்த பிறர் செய்த தவற்றைப் பொறுத்தல் பெருமை, பிறர் செய்த தீமையை நினைத்துக் கொண்டே இருத்தல் சிறுமை. பிறரிடம் பகை கொள்ளாது வாழ்தலும், செல்வரும் நல்லோரும் ஏளனம் செய்யாது வாழ்வது நன்மையுடையதாகும்.
கதம் நன்று, சான்றாண்மை தீது, கழிய மதம் நன்று, மாண்பு இலார் முன்னர்; விதம் நன்றால், கோய் வாயின் கீழ் உயிர்க்கு ஈ துற்று, குரைத்து எழுந்த நாய் வாயுள் நல்ல தசை. 15
கதம் - கோபம் கழிய - மிக்க நற்குணமில்லாதார் முன்பு கோபம் நல்லது, அங்குச் சான்றான்மை தீது. மிக்க வலி செய்தல் நன்று. கீழ்மக்களுக்குக் கொடுக்கும் உணவு நாயின் வாயிற் கொடுத்த மாமிசத்தை விட நல்லதாகும்.
நட்டாரை ஆக்கி, பகை தணித்து, வை எயிற்றுப் பட்டு ஆர் அணி அல்குலார்ப் படிந்து ஒட்டி, துடங்கினார், இல்லகத்து, அன்பின் துறவாது; - உடம்பினான் ஆய பயன். 16
படிந்து - சேர்ந்து இல் - குடி நட்பு கொண்டாரைச் செல்வராக்கி, பகைவரைத் தாழ்த்தி, மாதரைச் சேர்ந்து தொடர்புற்று, சுற்றார் இடத்தும், தம் குடியிற் பிறந்தவரிடத்தும் அன்போடிருத்தல் ஆகியவையும் இப்பிறப்பின் பயனாகும்.
பொய்யாமை பொன் பெறினும், கள்ளாமை, மெல்லியார் வையாமை, வார் குழலார் நச்சினும் நையாமை, ஓர்த்து உடம்பு பேரும் என்று, ஊன் அவாய் உண்ணானேல்,- பேர்த்து உடம்பு கோடல் அரிது. 17
ஓர்த்து - அறிந்து அவாய் - விரும்பி ஒருவன் செல்வத்தைப் பெற்றவனாயினும் பொய் சொல்லாமையும், பிறர் பொருளைக் களவு செய்யாமையும், எளியாரைத் திட்டாமையும், பெண்கள் தம்மை விரும்பினாலும் மனந்தளராமையும், புலால் உண்ணாமையும் உடையவனுக்கு மறுபிறப்பு இல்லை.
தேவரே, கற்றவர்; கல்லாதார் தேருங்கால், பூதரே; முன் பொருள் செய்யாதார் ஆதரே; 'துன்பம் இலேம், பண்டு, யாமே வனப்பு உடையேம்!' என்பர், இரு கால் எருது. 18
பூதர் - பிசாசுகள் ஆதர் - அறிவிலார் கற்றவர் தேவர், கல்லாதார் பூத பிசாசுகள், முதுமைக்கு இளமையிலேயே பொருள் தேடாதவர் அறிவிலாதார். முன்பு செல்வமுடைமையால் துன்பம் இல்லாமலும் அழகுடையோம் என்று சொல்லுவோரும், இரு கால் விலங்குகளுக்கு ஒப்பாவார்.
கள்ளான், சூது என்றும் கழுமான், கரியாரை நள்ளான், உயிர் அழுங்க நா ஆடான், எள்ளானாய், ஊன் மறுத்துக் கொள்ளானேல், ஊன் உடம்பு எஞ் ஞான்றும் தான் மறுத்துக் கொள்ளான், தளர்ந்து. 19
கழுமல் - பற்றல் பிறர் பொருளைக் களவு செய்யாமலும், சூதாடாமலும், கீழ்மக்களுடன் நட்பு கொள்ளாது, பிறர் மனம் வருந்தும்படி வன்சொற் கூறாமலும், புலால் விரும்பானாய் இருப்பவன் மீண்டும் பிறக்க மாட்டான்.
பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார், மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா, விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு உரையாமைச் செல்லும் உணர்வு. 20
தாவா - கெடாதிருக்க நாறுவ - முளைப்பன பூவாது காய்க்கும் மரம் போல, வயதில் இளையவரும் அறிவினால் மூத்தவராவார். பாத்தி கட்டி விதைக்காமலே முளைக்கிற விதை போல பிறர் சொல்லித் தராமலேயே அறிவுடையவர்களுக்கு அறிவு வளரும்.
பூத்தாலும் காயா மரம் உள; நன்று அறியார், மூத்தாலும் மூவார், நூல் தேற்றாதார்; பாத்திப் புதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு உரைத்தாலும் செல்லாது, உணர்வு. 21
நன்று - நன்மை
தேற்றாதார் - தெரியாதார் ஆண்டுகள் முதிர்ந்து வயதாகியும் அறிவு முதிராதவர், பூத்தாலும் காயா மரம் போன்றவர். புதைத்தாலும் முளைக்காத விதையைப் போன்று அறிவில்லாதவனுக்கு எவ்வுரையாலும் அறிவுண்டாகாது.
வடிவு, இளமை, வாய்த்த வனப்பு, வணங்காக் குடி, குலம், என்ற ஐந்தும் குறித்த முடியத் துளங்கா நிலை காணார்; தொக்கு ஈர் பசுவால், இளங் கால் துறவாதவர். 22
துளங்கா - அறியாத
ஈர் - இழுக்கின்ற வடிவம், இளமை, அழகு, உயர் குடிப்பிறப்பு, நற்குலம், ஆகியவை முடிவு வரை நுகர முடியாது. ஆகவே இளம் பருவத்திலேயே துறவு செய்தல் நன்று.
கள் உண்டல், காணின் கணவற் பிரிந்து உறைதல், வெள்கிலளாய்ப் பிறர் இல் சேறல், உள்ளிப் பிறர் கருமம் ஆராய்தல், தீப் பெண் கிளைமை,- திறவது, தீப் பெண் தொழில். 23
வெள்கு - நாணு கள்ளுண்டலும், கணவனைப் பிரிந்து வாழ்தலும், பிறர் மனைக்கட் சேறலும், பிறரின் செயலை நினைத்து ஆராய்தலும், தீய பெண்டிரின் நட்பும் ஆகியவை தீய பெண்டிரின் தொழில்களாம்.
பெருங் குணத்தார்ச் சேர்மின்; பிறன் பொருள் வவ்வன்மின்; கருங் குணத்தார் கேண்மை கழிமின்; ஒருங்கு உணர்ந்து, தீச் சொல்லே காமின்; வரும் காலன், திண்ணிதே;- வாய்ச் சொல்லே அன்று; வழக்கு. 24
கழிமின் - விடுங்கள் நன்மைக் குணமுடையவர்களைச் சேரவேண்டும். பிறர் பொருளைக் கவராதிருக்க வேண்டும். தீக்குணத்தாருடன் நட்பு விடவேண்டும். தீய சொற்களைச் சொல்லாதிருக்க வேண்டும். எமன் நிச்சயம் வருவான். இஃது உலக வழக்கமாகும்.
வான் குரீஇக் கூடு, அரக்கு, வால் உலண்டு, நூல் புழுக்கோல், தேன் புரிந்தது, யார்க்கும் செயல் ஆகா; - தாம் புரீஇ, வல்லவர் வாய்ப்பன என்னார்; ஓரோ ஒருவர்க்கு ஒல்காது, ஓரொன்று படும். 25
புரிந்து - விரும்பி தூக்கணாங் குருவிக் கூடும், எறும்புகளால் செய்யப்படும் புற்றும், புழுக்களால் நூற்கப்படும் நூலும், புழுக்களால் செய்யப்படும் கூடும், தேனீக்களால் நிரப்பப்படும் தேன்கூடும் ஆகிய இவற்றை எல்லாம் கற்று வல்லவரும் செய்ய முடியாது. சில செய்கைகள் சிலருக்கு அருமையாகவும் சிலருக்கு எளிமையாகவும் இருக்கும்.
அறம் நட்டான் நல்-நெறிக்கண் நிற்க, அடங்காப் புறம் நட்டான் புல்-நெறி போகாது! - புறம் நட்டான் கண்டு எடுத்து கள், களவு, சூது, கருத்தினால், பண்டு எடுத்துக் காட்டும், பயின்று. 26
நட்டான் - விரும்பியவன் அறத்தை விரும்பியவன் நல்ல வழியில் செல்வான், விரும்பாதவன் தீய வழிகளில் செல்வான். அவன் தீய வழிகளான, கள், களவு, சூது இவற்றை நல்ல வழி என்று எடுத்துக் கொண்டு அதன் வழிச் சென்று அதன் பயன்களை உலகுக்கு எடுத்துக் காட்டுவான்.
ஆண் ஆக்கம் வேண்டாதான் ஆசான்; அவற்கு இயைந்த மாணாக்கன், அன்பான், வழிபடுவான்; மாணாக்கன் கற்பு அனைத்து மூன்றும் கடிந்தான்; கடியாதான் நிற்பு அனைத்தும், நெஞ்சிற்கு ஓர் நோய். 27
கடிந்தான் - ஒழித்தவன் பிரமசரியம் காப்பவன் ஆசிரியனாவான், அவன் மீது அன்பு செய்பவர்கள் மாணாக்கர்கள் ஆவர், மாணவர்கள் காமம், வெகுளி, மயக்கங்கள் ஆகிய மூன்றையும் விட வேண்டும். இல்லையெனில் அவர்கள் ஆசிரியருக்கு நோயாவார்கள்.
நெய்தல் முகிழ்த் துணை ஆம், குடுமி; நேர் மயிரும் உய்தல் ஒரு திங்கள் நாள் ஆகும்; செய்தல், நுணங்கு நூல் ஓதுதல், கேட்டல், மாணாக்கர், வணங்கல், வலம் கொண்டு வந்து. 28
துணை - அளவு நுணங்கு - நுட்பம் மாணாக்கர் குடுமி மொட்டளவு வைத்துக் கொள்ளுதலும், மாதம் ஒருமுறை தலை முழுகுதலும், ஆசிரியரை வணங்குதலும், நூல்களைப் படித்தலும் கேட்டலும், கேட்டவற்றை ஓதுதலும் அவர்களின் கடமையாகும்.
ஒருவன் அறிவானும் எல்லாம், யாதொன்றும் ஒருவன் அறியாதவனும், ஒருவன் குணன் அடங்க, குற்றம் இலானும், ஒருவன் கணன் அடங்கக் கற்றானும், இல். 29
அடங்க - முழுவதும் எல்லாம் அறிந்தவனும், ஏதும் அறியாதவனும், நற்குணமே இல்லாதவனும், குற்றமில்லாதவனும், எல்லா நூல்களையும் கற்றவனும் இவ்வுலகில் இல்லை.
உயிர் நோய் செய்யாமை, உறு நோய் மறத்தல், செயிர் நோய் பிறர்கண் செய்யாமை, செயிர் நோய் விழைவு, வெகுளி, இவை விடுவான் ஆயின்,- இழவு அன்று, இனிது தவம். 30
வெகுளி - கோபம் பிற உயிர்க்குத் துன்பம் செய்யாமையும், தனக்குப் பிறரால் ஏற்பட்ட துன்பத்தைத் திரும்பச் செய்யாமலும், கோபம், அவா ஆகியவற்றை விட்டுவிடுவானும் செய்யும் தவம் இனிமையுடையது.
வேட்டவன் பார்ப்பன்; விளங்கிழைக்குக் கற்பு உடைமை; கேட்பவன் கேடு இல் பெரும் புலவன்; - பாட்டு, அவன் சிந்தையான் ஆகும், சிறத்தல்; உலகினுள் தந்தையான் ஆகும், குலம். 31
சிந்தை - ஆராய்ச்சி பார்ப்பனன் வேள்வி செய்தலும், பெண் நற்பண்புடையவளாயிருத்தலும், பல நூல் கற்று கேட்டவன் புலவனாதலும், மனத்தானாராய்ந்து பாடுபவனும், தந்தையான் ஏற்படுவது குலமும் அழகானதாகும்.
வைப்பானே வள்ளல்; வழங்குவான் வாணிகன்; உய்ப்பானே ஆசான், உயர் கதிக்கு; உய்ப்பான், உடம்பின் ஆர் வேலி ஒருப்படுத்து, ஊண் ஆரத் தொடங்கானேல், சேறல் துணிவு. 32
ஒருப்படுத்து - நீக்கி ஆர - உண்ண பொருளை ஈட்டி வைப்பவன் வள்ளல், அப்பொருளைப் பிறர்க்கு கொடுப்பவன் வாணிகன், ஒருவனை மேலான பதவிக்கு உயர்த்துபவன் ஆசிரியன், ஒழுக்கத்தால் உயிர்களை கொன்று புலால் உண்ணாதவன் உயர்கதிக்கு செல்வான்.
வைததனான் ஆகும் வசை; வணக்கம், நன்று, ஆகச் செய்ததனான் ஆகும், செழுங் குலம்; முன் செய்த பொருளினான் ஆகும் ஆம், போகம்; நெகிழ்ந்த அருளினான் ஆகும் அறம். 33
போகம் - உலக இன்பம் பிறரைத் திட்டுவதால் பழியும், பிறர்க்கு வணக்கத்தையும், நன்மையையும் செய்வதனால் நல்ல குடிப்பிறப்பும், பொருளால் இன்பமும், அருளினால் அறமும் உண்டாகும்.
இல் இயலார் நல் அறமும், ஏனைத் துறவறமும், நல் இயலான் நாடி உரைக்குங்கால், நல் இயல் தானத்தான் போகம்; தவத்தான் சுவர்க்கம் ஆம்; ஞானத்தான் வீடு ஆகும் நாட்டு! 34
தானம் - கொடை இல்லறத்தார் செய்த அறமும், துறவறத்தார் செய்த அறமும் ஆராய்ந்து பார்த்தால், கொடையால் செல்வமும், தவத்தால் சுவர்க்கமும், ஞானத்தால் வீடும் கிடைப்பது உறுதி.
மயிர் வனப்பும், கண் கவரும் மார்பின் வனப்பும், உகிர் வனப்பும், காதின் வனப்பும், செயிர் தீர்ந்த பல்லின் வனப்பும், வனப்பு அல்ல; நூற்கு இயைந்த சொல்லின் வனப்பே, வனப்பு. 35
உகிர் - நகம் தலைமயிர், மார்பு, நகம், செவி, பல் இவை தரும் அழகு ஒருவற்கு அழகற்றது. நூல்களைக் கற்று சொல்வன்மையால் வரும் அழகே சிறந்தது.
தொழீஇ அட, உண்ணார்; தோழர் இல் துஞ்சார்; வழீஇப் பிறர் பொருளை வவ்வார்; கெழீஇக் கலந்த பின் கீழ் காணார்; காணாய், மடவாய்! புலந்தபின், போற்றார், புலை. 36
கெழீஇ - தழுவி புலத்தல் - பகைத்தல் அறிஞர்கள் இழிவான வேலைக்காரிகள் சமைத்த உணவை உண்ணமாட்டார்கள். தோழரல்லாதவர் வீட்டில் உறங்க மாட்டார்கள். பிறர் பொருளை விரும்பமாட்டார்கள். நண்பர்களின் கீழ்மைக் குணத்தை ஆராய மாட்டார்கள். சிலருடன் பகைத்த பின்பு அவரது கீழ்மை குணத்தைப் போற்றாது எதிர்த்து கெடுப்பர்.
பொய்யாமை நன்று; பொருள் நன்று; உயிர் நோவக் கொல்லாமை நன்று; கொழிக்குங்கால், பல்லார் முன் பேணாமை, பேணும் தகைய; சிறிய எனினும், மாணாமை, மாண்டார் மனை. 37
கொழித்தல் - தெள்ளுதல் பொய் சொல்லாதிருத்தல், முயற்சி செய்து பொருள் தேடுதல், பிற உயிர்களைக் கொல்லாதிருத்தல், விரும்பும் தன்மையவற்றைப் பலரறிய விரும்பாமை ஆகியவை நன்மை தருவனவாம்.
பண்டாரம், பல் கணக்கு, கண்காணி, பாத்து, இல்லார், உண்டு ஆர் அடிசிலே, தோழரின் கண்டாரா, யாக்கைக்குத் தக்க அறிவு இல்லார்க் காப்பு அடுப்பின்,- காக்கையைக் காப்பு அடுத்த சோறு. 38
பண்டாரம் - கருவூலம் பாத்தல் - உண்டாக்குதல் பண்டாரத்துக்கும், கணக்குத் தொழிலுக்கும், மேற்பார்வை தொழிலுக்கும், இல்லத்தரசிகளின் காவலுக்கும், உணவின் காவலுக்கும், அறிவில்லாதவர்களை ஏற்படுத்தினால், அக்காவல் காக்கையைச் சோறு காக்க விட்டது போலாகும்.
உடை இட்டார், புல் மேய்ந்தார், ஓடு நீர்ப் புக்கார், படை இட்டார், பற்றேனும் இன்றி நடை விட்டார்,- இவ் வகை ஐவரையும் என்றும் அணுகாரே, செவ் வகைச் சேவகர் சென்று. 39
அணுகார் - சேரமாட்டார் தமக்கு அஞ்சி உடுத்த உடையைப் போகவிட்டவர், புல் பறித்து வாயிலிட்டார், ஓடுகின்ற நீரில் புகுந்தவர், கைப்படையை விட்டவர், நிலை தளர்ந்தவர், இவர்களை அறம் பொருள் செய்யும் வீரர்கள் வருத்த மாட்டார்கள்.
பூவாதாள், பூப்புப் புறக்கொடுத்தாள், இலிங்கி, ஓவாதாள் கோலம் ஒரு பொழுதும் காவாதாள், யார் யார் பிறர் மனையாள் உள்ளிட்டு, - இவ் ஐவரையும் சாரார், பகை போல் சலித்து. 40
இலிங்கி - தவமுடையவள் சலித்தல் - வெறுத்தல் பருவமடையாத கன்னியும், பூப்புத் தவிர்த்தாளையும், தவப் பெண்ணையும், கணிகையையும், பிறர் மனையாளையும் அறிஞர்கள் பகைவர்கள் போல வெறுப்பர்.
வருவாய்க்குத் தக்க, வழக்கு, அறிந்து, சுற்றம் வெருவாமை, வீழ் விருந்து ஓம்பி, திரு ஆக்கும் தெய்வத்தை எஞ் ஞான்றும் தெற்ற வழிபாடு செய்வதே-பெண்டிர் சிறப்பு. 41
தெற்ற - தெளிவு தம் கணவரது வருவாய்க்குத் தக்க செலவு செய்து, சுற்றத்தைப் பேணி, செல்வத்தை மேன்மேலும் உயரச் செய்கின்ற தெய்வத்தையும் வழிபாடு செய்வதே மாதர்க்குரிய சிறப்புகளாகும்.
நாள் கூட்டம், மூழ்த்தம், இவற்றொடு நன்று ஆய கோள் கூட்டம், யோகம், குணன், உணர்ந்து, - தோள் கூட்டல் உற்றானும் அல்லானும், - ஐந்தும் உணர்வான் நாள் பெற்றானேல், கொள்க, பெரிது! 42
கோள் கூட்டம் - கோளின் பொருத்தம் நாட்பொருத்தம், முகூர்த்தம், கோள் பொருத்தம், யோகம், குணன் நன்மையும் உணர்ந்து நாளைப் பெற்றால், அந்நாள் நற்செயல்களுக்கெல்லாம் நன்மை செய்யும் நாளாகும்.
பேண், அடக்கம், பேணாப் பெருந் தகைமை, பீடு உடைமை, நாண் ஒடுக்கம், என்று ஐந்தும் நண்ணின்றா, பூண் ஒடுக்கும் பொன் வரைக் கோங்கு ஏர் முலைப் பூந் திருவே ஆயினும், தன் வரைத் தாழ்த்தல் அரிது. 43
தகைமை - தன்மை ஏர் - அழகு உறவினரைப் பேணுதலும், அடக்கமுடைமையும், மற்றொருவனை விரும்பாதலும், பெருமை உடைதலும், வெட்கமும், இந்த ஐந்திணைப் பெற்று பொன் மலை போன்ற இனிய கரும்பினைப் போன்ற அழகினை உடைய, இலைகளைப் பெற்ற தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளே ஆனாலும், தன் கணவனைத் தாழ்த்தாமல் அடங்கியிருத்தலே இனிதாகும்.
வார் சான்ற கூந்தல்! வரம்பு உயர, வைகலும் நீர் சான்று உயரவே, நெல் உயரும்; சீர் சான்ற தாவாக் குடி உயர, தாங்கு அருஞ் சீர்க் கோ உயர்தல் ஓவாது உரைக்கும் உலகு. 44
வார் சாற - நீட்சி மிகுந்த நீட்சி மிகுந்த கூந்தலை உடைய பெண்ணே! வரப்புயர நீருயரும், நீருயர நெல் உயரும், நெல் உயர, குடியானவர்கள் உயர்வடைவர், மக்கள் உயர அரசன் உயர்வான்.
அழியாமை எத் தவமும், சார்ந்தாரை ஆக்கல், பழியாமைப் பாத்தல் யார் மாட்டும் ஒழியாமை, கன்று சாவப் பால் கறவாமை, செய்யாமை மன்று சார்வு ஆக மனை. 45
பாத்தல் - பகுத்துண்டல் மனை - வீடு எவ்வகைப்பட்ட தவத்தினைக் கெடுக்காமையும், தம்மை அடைந்தவர்களை உயரச் செய்தலும், பிறரைப் பழியாமலும், யாவரிடத்தும் மறைக்காமல் பகுத்துண்டலும், கன்று இறந்தபின் பால் கறவாமையும் நன்மையென்று கூறுவர் பெரியோர்.
நசை கொல்லார், நச்சியார்க்கு என்றும்; கிளைஞர் மிசை கொல்லார்; வேளாண்மை கொல்லார்; இசை கொல்லார்; பொன் பெறும் பூஞ் சுணங்கின் மென் முலையாய்! நன்கு உணர்ந்தார் என் பெறினும் கொல்லார், இயைந்து. 46
கொல்லல் - கெடுத்தல் சுணங்கு - தேமல் பொன்னால் ஆன அணிகலன்களை அணிந்த இளமையான மார்பினை உடையவளே! நன்கு உணர்ந்தோர் தம்மை விரும்பினவரது விருப்பத்தைக் கெடுக்க மாட்டார், நண்பரது விருப்பத்தையும் கெடுக்க மாட்டார், தமக்கு வரும் புகழையும் கெடுக்க மாட்டார், ஒருவர் மற்றவர்களுக்கு செய்யும் உதவி செய்யும் தன்மையைக் கெடுக்க மாட்டார். அறத்தை அறிந்தவர் ஓருயிரையும் கொல்ல மாட்டார்.
நீண்ட நீர், காடு, களர், நிவந்து விண் தோயும் மாண்ட மலை, மக்கள், உள்ளிட்டு, மாண்டவர் ஆய்ந்தன ஐந்தும், அரணா உடையானை வேந்தனா நாட்டல் விதி. 47
மாண்ட - மாட்சிமைப்பட்ட விதி - முறை நகரைச் சுற்றி அகழியும், அதனைத் தொடர்ந்து காடும், வயல் நிலமும், மலையும், மாட்சிமையுடைய குடிமக்களும் அமைந்த நாட்டுக்கு அரசனாக அமைவது நன்மையாகும்.
பொச்சாப்புக் கேடு; பொருட் செருக்குத்தான் கேடு; முற்றாமை கேடு; முரண் கேடு; தெற்றத் தொழில் மகன்தன்னொடு மாறுஆயின், என்றும் உழுமகற்குக் கேடு என்ற உரை. 48
செருக்கு - களிப்பு தெற்ற - தெளிவான உழவுத்தொழிலை உடையவனுக்கு (விவசாயிக்கு) மறதி கேடாம். பொருள் மிகுதியால் உண்டாகும் செருக்கு கேடாம். அறிவு வளராமை கேடாம். பிறருடன் மாறுபடுதல் கேடாம். தன்னிடம் வேலைப் பார்ப்பவர்களுடன் முரண்படுதல் மிகுதியான கேடாம்.
கொல்லாமை நன்று; கொலை தீது; எழுத்தினைக் கல்லாமை தீது; கதம் தீது; நல்லார் மொழியாமை முன்னே, முழுதும் கிளைஞர் பழியாமை பல்லார் பதி. 49
கதம் - கோபம் பதி - தலைவன் ஓருயிரைக் கொல்லாமை நன்று, கொல்லுதல் தீமை. கல்லாமை தீது. பிறரைக் கோபித்தல் தீது. அறிவுடையார் சொல்வதற்கு முன்பே அதன்படி நடப்பவன் இறைவனுக்கு ஒப்பாவான்.
உண்ணாமை நன்று, அவா நீக்கி; விருந்து கண்மாறு எண்ணாமை நன்று; இகழின், தீது, எளியார்; எண்ணின், அரியர் ஆவார் பிறர் இல் செல்லாரே; உண்ணார், பெரியர் ஆவார், பிறர் கைத்து. 50
பிறர் இல் - பிறர் இல்லாள் கைத்து - பொருள் விருப்பத்தைத் துறந்து நோன்பு நோற்றல் நன்று, விருந்தினரை வேறாக நினையாமை நன்று, தம்மைவிட எளியாரை இகழ்ந்து பேசுவது தீமை, பிறர் மனைவியை விரும்பாதவரே பெறுதற்கரியராவார், பிறர் பொருளை உண்ணாதவரே பெரியாராவார்.
மக்கள் பெறுதல், மடன் உடைமை, மாது உடைமை, ஒக்க உடன் உறைதல், ஊண் அமைவு,-தொக்க அலவலை அல்லாமை, பெண் மகளிர்க்கு - ஐந்தும் தலைமகனைத் தாழ்க்கும் மருந்து. 51
தொக்க - கூடிய அலவலை - அற்ப காரியம் மக்களைப் பெறுதல், அடக்கமுடைமை, அழகுடைமை, கணவன் கருத்துக்கு இசைதல், உணவின் மிகுதியை விரும்புதல் இந்த ஐந்து குணங்களும் பெண்டிர்க்கு இருத்தல் வணங்குதற்குரியது.
கொண்டான் கொழுநன், உடன்பிறந்தான், தன் மாமன், வண்டு ஆர் பூந் தொங்கல் மகன், தந்தை,-வண் தாராய்! - யாப்பு ஆர் பூங் கோதை அணி இழையை, நற்கு இயையக் காப்பர், கருதும் இடத்து. 52
கோதை - மாலை கருதும் - நினைக்கும் கணவனும், அவள் உடன் பிறந்தவனும், மாமனும், வண்டுகள் மொய்க்கின்ற பூமாலையை அணிந்த மகனும், தந்தையும் ஒரு பெண்ணைக் காக்கத் தக்கவராவார்.
ஆம்-பல், வாய், கண், மனம், வார் புருவம், என்று ஐந்தும், தாம் பல் வாய் ஓடி, நிறை காத்தல் ஓம்பார், நெடுங் கழை நீள் மூங்கில் என இகழ்ந்தார், ஆட்டும் கொடுங் குழை போல, கொளின். 53
கழை - மூங்கில் ஆட்டும் - அசைவிக்கும் மனத்தினை அடக்க இயலாத ஆடவர், பல், வாய், கண், மனம், நீண்ட புருவம் இவை கண்டு மனத்தினை ஓட விடுவர். அவர்கள் கொடுங்குழையணிந்த பெண்ணை நெடும் மூங்கில் என்று நினைத்து இகழ்ந்தால், பெண் விருப்பத்தினை விடுவர்.
பொன் பெறும், கற்றான்; பொருள் பெறும், நற் கவி; என் பெறும் வாதி, இசை பெறும்; முன் பெறக் கல்லார், கற்றார் இனத்தர் அல்லார், பெறுபவே, நல்லார் இனத்து நகை. 54
வாதி - வாது செய்பவன் கற்றவன் பொன்னைப் பெறுவான். பாடவல்லான் பொருளைப் பெறுவான். வாது செய்ய வல்லவன் புகழைப் பெறுவான். ஆனால் கல்லாதவரும் கற்றாருடன் இல்லாதவரும் பிறரால் நகைக்கப்படுவர்.
நல்ல வெளிப்படுத்து, தீய மறந்து ஒழிந்து, ஒல்லை உயிர்க்கு ஊற்றங்கோல் ஆகி, ஒல்லுமேல், மாயம் பிறர் பொருட்கண் மாற்றி, மா மானத்தான் ஆயின், அழிதல் அறிவு. 55
மாயம் - வஞ்சனைச் செயல் நல்லவற்றைப் பிறர்க்குச் சொல்லி, தீயவற்றை மறந்து, பிற உயிர்களுக்கு உதவி செய்து, வஞ்சனை செயலை நீக்கி, குற்றம் வந்தபோது உயிர் விடுதல் ஆகியன அறிவுடைமையாகும்.
தன் நிலையும், தாழாத் தொழில் நிலையும், துப்பு எதிர்ந்தார் இன் நிலையும், ஈடு இல் இயல் நிலையும், துன்னி, அளந்து அறிந்து செய்வான் அரைசு; அமைச்சன் யாதும் பிளந்து அறியும் பேர் ஆற்றலான். 56
தாழ்தல் - தாமதித்தல் ஈடு இல் - கேடில்லாத தன்னுடைய நிலையையும், தன் செயலின் நிலையையும், பகைவரின் நிலையையும், உலக வாழ்க்கையையும் ஆராய்ந்து செய்பவன் அரசனாவான். எல்லாவற்றையும் பாகுபடுத்தி அறிகின்ற ஆற்றலையுடையவன் அமைச்சன் ஆவான்.
பொருள், போகம், அஞ்சாமை, பொன்றுங்கால் போர்த்த அருள், போகா ஆர் அறம், என்று ஐந்தும் இருள் தீரக் கூறப்படும் குணத்தான், கூர் வேல் வல் வேந்தனால் தேறப்படும் குணத்தினான். 57
தேறப்படும் - தெளியப்படும் பொருளும், இன்பமும், அஞ்சாமையும், அருளும், அறமும் ஆகிய நற்குணங்களை உடையவன் அரசனால் போற்றப்படுவான்.
நன் புலத்து வை அடக்கி, நாளும் நாள் ஏர் போற்றி, புன் புலத்ததைச் செய்து, எருப் போற்றிய பின், நன் புலக்கண் பண் கலப்பை பாற்படுப்பான் உழவன் என்பவே - நுண் கலப்பை நூல் ஓதுவார். 58
நன்புலம் - விளைநிலம் வை - வைக்கோல் விளை நிலத்திலுள்ள வைக்கோலைத் திரட்டி, நாள்தோறும் மாடுகளைக் காப்பாற்றி, நிலத்தைப் பண்படுத்தி, எருவிட்டு, கலப்பையால் உழுது, உரமேற்றிய உழவோன் சிறந்தவன் என்று நுண்ணிய உழவு நூலை ஓதிய அறிஞர்கள் கூறுவர்.
ஏலாமை நன்று; ஈதல் தீது, பண்பு இல்லார்க்கு; சாலாமை நன்று, நூல்; சாயினும், 'சாலாமை நன்று; தவம் நனி செய்தல் தீது' என்பாரை இன்றுகாறு யாம் கண்டிலம். 59
ஏலாமை - ஏற்றுக்கொள்ளாமை சாலாமை - நிரம்பாதிருத்தல் பிறரிடத்தில் பொருளைப் பெறாது இருத்தல் நன்று. பண்பு இல்லாருக்கு பொருளைக் கொடுத்தல் தீது. நற்குணமில்லாதவர்க்கு நல்லறிவு உரைத்தலே தீமையாம். கெடுவதாக இருந்தாலும் நற்குணங்களால் உயர்வடையாதிருத்தலே நன்மையாம். ஆனால் தவத்தை இயற்றுதல் தீது என்று சொல்பவர்கள் யாருமில்லை.
அரம் போல் கிளை. அடங்காப் பெண், அவியாத் தொண்டு, மரம் போல் மகன், மாறு ஆய் நின்று கரம் போலக் கள்ள நோய் காணும் அயல், ஐந்தும் ஆகுமேல், உள்ளம் நோய் வேண்டா, உயிர்க்கு. 60
கிளை - உறவினர்கள் அரம் போன்ற சுற்றமும், அடங்காத மனைவியும், அடங்காதன செய்யும் அடிமையும், மரம் போன்ற புதல்வனும், வஞ்சனை செய்கின்ற அயலிருப்பும் உடையவர்களுக்கு வேறு நோய் எதுவும் வேண்டாம். அவையே பெரும் துன்பத்தைத் தரும்.
நீர் அறம் நன்று; நிழல் நன்று; தன் இல்லுள் பார் அறம் நன்று; பாத்து உண்பானேல், பேர் அறம் நன்று, தளி, சாலை, நாட்டல்; - பெரும் போகம் ஒன்றுமாம், சால உடன். 61
சால - மிகுதியாக நீர் அறம் செய்தல், நிழல் அறம் செய்தல், பிறர் உறைய இடங் கொடுத்தல், பகிர்ந்து உண்பது ஆகிய இவை பெரிய அறமாகும். சாலையை நிலை பெறச் செய்தல் நன்று. இவை அனைத்தையும் செய்தார்க்கு பேரின்பம் உண்டாகும்.
பிடிப் பிச்சை, பின் இறை, ஐயம், கூழ், கூற்றோடு எடுத்து இரந்த உப்பு, இத் துணையோடு அடுத்த சிறு பயம் என்னார், சிதவலிப்பு ஈவார் பெறு பயன், பின் சாலப் பெரிது. 62
சாலப் பெரிது - மிகப் பெரிது பிடியளவு பிச்சையும், விரலளவு பிச்சையும், உண்டோ இல்லையோ எனப்படும் பிச்சையும், கூழ் வார்த்தலும், சிறியவை என பயன் கருதாது செய்தவருக்குப் பெரும் பயன் கிடைக்கும்.
வெந் தீக் காண் வெண்ணெய், மெழுகு, நீர் சேர் மண், உப்பு, அம் தண் மகன் சார்ந்த தந்தை, என்று ஐந்தினுள், ஒன்று போல் உள் நெகிழ்ந்து ஈயின், சிறிது எனினும், குன்றுபோல் கூடும், பயன். 63
சார்ந்த - தழுவிய தீயைக் கண்ட வெண்ணெயும் மெழுகும் உருகும். நீர் சேர்ந்த மண்ணும் உப்பும் கரையும். மகனை தழுவிய தந்தை இவற்றைப் போல மனமிரங்கி ஒருவருக்குக் கொடுப்பான் ஆனால் அதனால் வரும் பயன் மிகப் பெரியது.
குளம் தொட்டு, காவு பதித்து, வழி சீத்து, உளம் தொட்டு உழு வயல் ஆக்கி, வளம் தொட்டுப் பாகுபடும் கிணற்றோடு என்று இவை பாற்படுத்தான் ஏகும் சுவர்க்கம் இனிது. 64
சீத்து - செதுக்கு குளம் வெட்டுதல், மரம் நடுதல், மக்கள் நடக்கும் வழி உண்டாக்குதல், தரிசு நிலத்தைக் கழனியாக்குதல், கிணறு தோண்டுதல் இவைகளை செய்தவன் சுவர்க்க லோகத்திற்கு செல்வான்.
போர்த்தும், உரிந்திட்டும், பூசியும், நீட்டியும், ஓர்த்து ஒரு பால் மறைத்து, உண்பான் மேய் ஓர்த்த அறம்; அறமேல் சொல் பொறுக்க; அன்றேல், கலிக்கண் துறவறம் பொய்; இல்லறம் மெய் ஆம். 65
ஓர்த்து - ஆராய்ந்து கலிக்கண் - கலிகாலத்தில் போர்த்தும், களைந்தும், நீறு பூசியும், சடையை நீட்டியும், உடம்பில் ஒரு பக்கத்தை மறைத்தும் செய்யும் துறவறத்தை விட பிறர் சொல்லிய கடுஞ்சொற்களைப் பொறுத்தல் சிறந்த துறவறமாகும்.
தான் பிறந்த இல் நினைந்து, தன்னைக் கடைப்பிடித்து, தான் பிறரால் கருதற்பாடு உணர்ந்து, தான் பிறரால், 'சாவ' என வாழான், சான்றோரால், 'பல் யாண்டும் வாழ்க!' என வாழ்தல் நன்று. 66
இல் - குடி பாடு - பெருமை தான் பிறந்த குடியை நினைத்து, நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து, பிறரால் மதிக்கப்படும் செய்கைகளைச் செய்து, பெரியோரால் வாழ்க என்றும் சொல்லும்படி, பிறர் செத்தொழிக என்று சொல்லாதபடி உயிர் வாழ்ந்திருத்தல் நன்மையாகும்.
நெடுக்கல், குறுக்கல், துறை நீர் நீடு ஆடல், வடுத் தீர் பகல்வாய் உறையே, வடுத் தீரா ஆகும் அந் நான்கு ஒழித்து, ஐந்து அடக்குவான் ஆகில், வே கும்பம் வேண்டான் விடும். 67
உறை - உணவு கும்பம் - இடம் மயிரைச் சடையாக நீட்டுதலும், குறைத்தலும், புனித நீராடுதலும், குற்றம் நீங்கிய பகற் காலத்தில் உண்ணுதலும், இந்த நான்கினையும் விட ஐம்புலன்களையும் அடக்குபவன் மேன்மை அடைவான்.
கொன்றான், கொலையை உடன் பட்டான், கோடாது கொன்றதனைக் கொண்டான், கொழிக்குங்கால், கொன்றதனை அட்டான், இட உண்டான், ஐவரினும் ஆகும் என, கட்டு எறிந்த பாவம் கருது. 68
அட்டான் - சமைத்தல் கட்டு - வரம்பு ஓருயிரைக் கொன்றவன், கொலைக்கு உடன்பட்டவன், கொன்றதனை விலைக்குக் கொண்டவன், ஊனை சமைத்தவன், இதை உண்டவன் இவர்கள் செய்த பாவமானது மிகப் பெரியதாகும்.
சிறைக் கிடந்தார், செத்தார்க்கு நோற்பார், பல நாள் உறைக் கிடந்தார், ஒன்றுஇடையிட்டு உண்பார், பிறைக் கிடந்து முற்றனைத்தும் உண்ணா தவர்க்கு, ஈந்தார், - மன்னராய், கற்று அனைத்தும் வாழ்வார், கலந்து. 69
ஈந்தார் - கொடுத்தார் சிறையில் இருந்தவர், இறந்தவர்களுக்காக விரதம் இருப்பவர், மருந்து உண்பவர், நாளிடை விட்டு உண்பவர், பிறை முடியும் வரையில் உண்ணாதவர், இவர்களுக்கு உணவளித்தவர் கல்வி அறிவுள்ள அரசராய் வாழ்வர்.
ஈன்று எடுத்தல்; சூல் புறஞ்செய்தல்; குழவியை ஏன்று எடுத்தல்; சூல் ஏற்ற கன்னியை, ஆன்ற அழிந்தாளை, இல் வைத்தல்; - பேர் அறமா ஆற்ற மொழிந்தார், முது நூலார், முன்பு. 70
ஆன்ற - மிகவும் ஈன்ற குழந்தையை வளர்த்தல், வளர்ப்பார் இல்லாத குழந்தையை வளர்த்தல், கர்ப்பம் தரித்தவளையும், ஆதரவு அற்றவளையும் தன் வீட்டில் வைத்துப் பாதுகாத்தல் ஆகியவற்றை நூலறிவுள்ள பெரியோர் பெரிய அறமாகக் கொண்டு கூறியுள்ளனர்.
வலி அழிந்தார், மூத்தார், வடக்கிருந்தார், நோயால் நலிபு அழிந்தார், நாட்டு அறைபோய் நைந்தார், - மெலிவு ஒழிய, இன்னவரால் என்னாராய், ஈந்த ஒரு துற்று மன்னவராச் செய்யும் மதித்து. 71
அறை - அறுதல் துற்று - உணவு வலிமையிழந்தவர், முதியோர், வடக்கு நோக்கி நோன்பு நோற்பவர், நோயினால் நலிந்தவர், தமது நாடு விட்டுப் போய் தளர்ந்தவர், இவர்களுக்கு கொடுத்த ஒரு கவளம் உணவு, கொடுத்தவரை அடுத்த பிறவியில் அரசராகச் செய்யும்.
கலங்காமைக் காத்தல், கருப்பம் சிதைந்தால் இலங்காமைப் பேர்த்தரல், ஈற்றம் விலங்காமைக் கோடல், குழவி மருந்து, வெருட்டாமை,- நாடின், அறம் பெருமை நாட்டு. 72
நாடின் - ஆராயின் வயிற்றுக் கருவானது அழியாமல் காத்தலும், கர்ப்பம் கலைந்தால் அதனை வெளிப்படாமல் காத்தலும், குழந்தையைக் காத்தலும், நோய் கண்டால் மருந்து கொடுத்தலும், அச்சுறுத்தாமையும், ஆராய்ந்து பார்த்தால் பெரிய அறமாகும்.
சூலாமை, சூலின் படும் துன்பம், ஈன்றபின் ஏலாமை, ஏற்ப வளர்ப்பு அருமை, சால்பவை வல்லாமை, - வாய்ப்ப அறிபவர் உண்ணாமை, கொல்லாமை, நன்றால், கொழித்து. 73
கொழித்து - ஆராய்ந்து சூல் கொள்ளாமையால் வரும் துன்பம், ஈன்றதால் உண்டாகும் துன்பம், வளர்த்தலால் வரும் அருமை, வளர்ந்த பிள்ளை சால்பு குணங்களைக் கொண்டிருத்தல், இவற்றை ஆராய்பவர்கள் அந்த உயிரைக் கொன்று உண்ணமாட்டார்கள்.
சிக்கர், சிதடர், சிதலைபோல் வாய் உடையார், துக்கர், துருநாமர், தூக்குங்கால், தொக்கு வரு நோய்கள் முன் நாளில் தீர்த்தாரே - இந் நாள் ஒரு நோயும் இன்றி, வாழ்வார். 74
சிக்கர் - தலைநோயுடையார் சிதடர் - பித்துடையார் தலை நோயுடையவர்கள், பைத்தியம், வாய்புற்று, சய நோயுடையவர், மூல நோய் கொண்டவர்கள் இவர்களின் துன்பங்களை முற் பிறவியில் தீர்த்தவர்கள் இப்பிறப்பின்கண் ஒரு நோயுமின்றி வாழ்வர்.
பக்கம் படாமை, ஒருவற்குப் பாடு ஆற்றல், தக்கம் படாமை, தவம்; அல்லாத் தக்கார், இழிசினர்க்கேயானும் பசித்தார்க்கு ஊண் ஈத்தல், கழி சினம் காத்தல், கடன். 75
பக்கம் படுதல் - ஒருபாற்கோடல் தக்கம் - பற்று நடு நிலையும், பிறபொருளிடத்தில் பற்று வைக்காமையும், தவஞ்செய்தலும் இல்லாத இல்வாழ்வார்க்கு, இழி குலத்தில் உள்ள பசித்தவர்க்கு உணவு கொடுத்தலும், மிக்க கோபத்தைத் தடுத்தலும் கடமைகளாகும்.
புண் பட்டார், போற்றுவார் இல்லாதார், போகு உயிரார், கண் கெட்டார், கால் இரண்டும் இல்லாதார், கண் கண்பட்டு ஆழ்ந்து நெகிழ்ந்து அவர்க்கு ஈந்தார்,-கடை போக வாழ்ந்து கழிவார், மகிழ்ந்து. 76
ஈந்தார் - கொடுத்தார் போரில் புண்பட்டவர்க்கும், உயிருக்குப் போராடுபவர்க்கும், குருடனுக்கும், முடவனுக்கும், மனம் நெகிழ்ந்து வேண்டிய உணவு கொடுத்தவர், துன்பம் ஏதுமின்றி வாழ்வர்.
பஞ்சப் பொழுது பாத்து உண்பான்; கரவாதான்; அஞ்சாது, உடை படையுள், போந்து எறிவான்; எஞ்சாதே உண்பது முன் ஈவான்; குழவி பலி கொடுப்பான்;- எண்பதின் மேலும் வாழ்வான். 77
பலி - சோறு பலருக்கும் பகுத்துண்பவன் தன்னிடமுள்ள பொருள்களைக் காத்து பிறருக்கு உதவுபவன், அஞ்சாது படையெடுத்து பகைவரை அழித்து தன் படையைக் காப்பவன், பசித்த குழந்தைகளுக்கு சோறளிப்பவன், எண்பது வயதுக்கு மேல் தன்னுடைய வயதான காலத்தில் சுகமாக உயிர்வாழ்வான்.
வரைவு இல்லாப் பெண் வையார்; மண்ணைப் புற்று ஏறார்; புரைவு இல்லார் நள்ளார்; போர் வேந்தன் வரைபோல் கடுங் களிறு விட்டுழி, செல்லார்; வழங்கார்; கொடும் புலி கொட்கும் வழி. 78
கொட்கும் - சுழன்று திரிகின்ற நள்ளார் - நட்புக் கொள்ளார் அறிஞர்கள் பொதுப் பெண்டிரை மணம் கொள்ள மாட்டார். புற்றின் மேல் ஏறமாட்டார். தமக்கு நிகரில்லாதவரோடு நட்பு கொள்ளார். போர்த் தொழிலில் வல்ல அரசனின் மலைபோன்ற உருவத்தினையுடைய கடுமையான குணம் கொண்ட யானையை விட்ட இடத்தில் செல்ல மாட்டார். கொடும்புலி செல்லும் வழியில் செல்ல மாட்டார்.
தக்கார் வழி கெடாதாகும்; தகாதவர் உக்க வழியராய் ஒல்குவார்; தக்க இனத்தினான் ஆகும், பழி, புகழ்; தம் தம் மனத்தினான் ஆகும், மதி. 79
உக்க - அழிந்த தகுதியுடையவர் வழி மரபு கெடாது, ஆனால் நல்லவர்களல்லாதவர் மரபு கெடும். தீய சேர்க்கையால் பழியும், நல்லவர் சேர்க்கையினால் புகழும் உண்டாகும். அறிவானது ஒருவனது மனத்தளவே உண்டாகும்.
கழிந்தவை தான் இரங்கான், கைவாரா நச்சான், இகழ்ந்தவை இன்புறான், இல்லார் மொழிந்தவை மென் மொழியால், உள் நெகிழ்ந்து, ஈவானேல், - விண்ணோரால் இன் மொழியால் ஏத்தப்படும். 80
ஏத்த - துதிக்க நச்சான் - விரும்பாதவன் ஒருவன் தன்னைவிட்டு நீங்கிய பொருள்கட்கு வருந்தாதவனாயும், தனக்குக் கைவராதவற்றை விரும்பாதவனாயும், தாழ்ந்த பொருள்களின் மேல் விரும்பாதவனாயும், வறிஞர்க்குக் கொடுப்பவன் ஆயின் அவன் தேவர்களால் இன்சொற்களால் புகழப்படுவான்.
காடுபோல் கட்கு இனிய இல்லம், பிறர் பொருள் ஓடுபோல், தாரம் பிறந்த தாய், ஊடு போய்க் கோத்து இன்னா சொல்லானாய், கொல்லானேல், - பல்லவர் ஓத்தினால் என்ன குறை? 81
ஓத்து - நூல் பிறர் பொருளை, இல்லத்தை, தாரத்தை விரும்பாமல், பழிச் சொற்களைச் சொல்லாதவனாய் ஓருயிரையும் கொல்லாதவனாய் இருப்பவன், கற்று அறிந்து கொள்ள வேண்டியது ஒன்றுமில்லை.
தோற் கன்று காட்டிக் கறவார்; கறந்த பால் பாற்பட்டார் உண்ணார்; பழி, பாவம், பாற்பட்டார், ஏற்று அயரா, இன்புற்று வாழ்வன, ஈடு அழியக் கூற்று அயரச் செய்யார், கொணர்ந்து. 82
ஈடு - பெருமை நன்னெறியில் வாழ்பவர், தோலாற் செய்த கன்றினைக் காட்டி பசுவைக் கறவார். அவ்வாறு கறந்த பாலைப் பருகார். பழியையும் பாவத்தையும் தாமே ஏற்றுக் கொண்டு, தம் சுற்றத்தாரோடு வாழ்பவரை, கூற்றுவன் விரும்பி கொலை செய்ய மாட்டான்.
நகையொடு, மந்திரம், நட்டார்க்கு வாரம், பகையொடு, பாட்டு உரை, என்று ஐந்தும் தொகையொடு மூத்தார் இருந்துழி வேண்டார், முது நூலுள் யாத்தார், அறிவினர் ஆய்ந்து. 83
மந்திரம் - இரகசிய சொல் சிரிப்பதும், செவிச் சொல்லும், நண்பருக்காக ஒருபக்கமாகப் பேசுதலும், பகைமைப் பேச்சும், நடுவு நிலை மாறிப் பேசுதலும், ஆராய்ந்து பார்த்தால் அறிவுடையோர், பெரியோர் இருக்குமிடத்தில் செய்யமாட்டார்.
வைதான் ஒருவன் இனிது ஈய வாழ்த்தியது எய்தா உரையை அறிவானேல், நொய்தா அறிவு அறியா ஆள் ஆண்டு என உரைப்பர்; வாயுள் தறி எறியார், தக்காரேதாம். 84 (85-89 வரையிலான பாடல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை)
[இரா-இருக்கை, ஏலாத வைகல், பனி மூழ்கல், குராக் கான் புகல்,] நெடிய மண், எறு உராய்த் தனது எவ்வம் தணிப்பான், இவை என் ஆம்? பெற்றானைத் தெய்வமாத் தேறுமால், தேர்ந்து. 90
சத்தம், மெய்ஞ் ஞானம், தருக்கம், சமையமே, வித்தகர் கண்ட வீடு உள்ளிட்டு, ஆங்கு, அத் தகத் தந்த இவ் ஐந்தும் அறிவான், தலையாய, சிந்திப்பின் சிட்டன் சிறந்து. 91
கண்ட - செய்த சிட்டன் - மேலானவன் இலக்கண நூலும், அறிவு நூலும், அளவை நூலும், சமய நூலும், வீட்டு நூலும், ஆகியவற்றை அறிந்தவர் சிறப்படைவர்.
கண்ணுங்கால் கண்ணும் கணிதமே, யாழினோடு, எண்ணுங்கால் சாந்தே, எழுதல், இலை நறுக்கு, இட்ட இவ் ஐந்தும் அறிவான்-இடையாய சிட்டன் என்று எண்ணப்படும். 92
கண்ணல் - நினைத்தல் கணிதம் போடுதலும், யாழ் இசைத்தலும், சந்தனமரைத்தலும், தொழில்பட நறுக்கலும், இலை எண்ணல் இவை ஐந்தும் அறிந்தவன் இடையாய சிட்டன் என்று எண்ணப்படுவான்.
நாண் இலன் நாய்; நன்கு நள்ளாதான் நாய்; பெரியார்ப் பேண் இலன் நாய்; பிறர் சேவகன் நாய்; ஏண் இல் பொருந்திய பூண் முலையார் சேரி, கைத்து இல்லான், பருத்தி பகர்வுழி நாய். 93
ஏண் - உயர்வு கைத்து - பொருள் நாணமில்லாதவன், பிறரிடம் நட்பு கொள்ளாதவன், பெரியாரைப் பாதுகாக்காதவன், பிறர்க்குப் பணியாளாய் இருப்பவன், உயர்வில்லாத நகையணிந்த பரத்தையரது தெருவில் கைப்பொருள் இல்லாதவன், நாயைப் போல்வன் ஆவான்.
நாண் எளிது, பெண்ணேல்; நகை எளிது, நட்டானேல்; ஏண் எளிது, சேவகனேல்; பெரியார்ப் பேண் எளிது;- கொம்பு மறைக்கும் இடாஅய்!-அவிழின்மீது அம்பு பறத்தல் அரிது. 94
ஏண் - வலிமை நகை - நகுதல் பெண்ணாயின் நாணல் எளிது. ஒருவனோடு நட்பு கொண்டால் சிரிப்பு எளிது சேவகனாயில் வண்மை எளிது. பெரியாராயின் பிறரைப் பேணுதல் எளிது. ஆனால் அருளுடையான் மேல் அம்பு எய்தல் அரிது.
இன் சொல்லான் ஆகும், கிளைமை; இயல்பு இல்லா வன் சொல்லான் ஆகும், பகைமை மன்; மென் சொல்லான் ஆய்வு இல்லா ஆர் அருளாம்; அவ் அருள் நல் மனத்தான்; வீவு இல்லா வீடு ஆய் விடும். 95
அருள் - இரக்கம் இனிய சொற்களால் நட்பும், வன்சொற்களால் பகையும் உண்டாகும். மென் சொல்லினால் பெருமையும், அருளும் உண்டாகும். அவ்வருளால் வீடு பேறு உண்டாகும்.
தக்கது, இளையான் தவம்; செல்வன் ஊண் மறுத்தல் தக்கது; கற்புடையாள் வனப்புத் தக்கது; அழல், தண்ணென் தோளாள் அறிவு இலள் ஆயின், நிழற்கண் முயிறு, ஆய்விடும். 96
அழல் - நெருப்பு முயிறு - செவ்வெறும்பு இளையவன் தவஞ் செய்தல் நல்லது. செல்வமுடையோன் விரதம் இருத்தல் நல்லது. கற்புடைய பெண்ணின் வனப்பு நல்லது. குளிர்ந்திருக்கும் தோள்களையுடைய மனைவி அறிவில்லாது இருந்தால் மிகுதியான துன்பத்தைத் தருவாள்.
'பொய்யான் சுவர்க்கம்; வாயான் நிரையம்; பொருள்தான், மை ஆர் மடந்தையர் இல் வாழ்வு இனிது'-மெய் அன்றால்;- மைத் தக நீண்ட மலர்க் கண்ணாய்! - தீது அன்றே எத் தவமானும் படல். 97
சுவர்க்கம் - மேல் உலகம் நிரையம் - நரகம் மைத் தீட்டிய கண்களையுடையவளே! மெய்ந்நெறி ஒழுக்கத்தால் செல்வம் தேடி இனிதாக வாழ்ந்தாலும், வேசிப் பெண்ணின் சேர்க்கையால் இனிதாக வாழ்ந்தாலும், அது உண்மையல்ல. யாதேனும் ஒரு தவம் உண்டாதல் நன்று.
புல் அறத்தின் நன்று, மனை வாழ்க்கை; போற்று உடைத்தேல், நல்லறத்தாரோடும் நடக்கலாம்; நல்லறத்தார்க்கு அட்டு, இட்டு, உண்டு, ஆற்ற வாழ்ந்தார்களே, இம்மையில் அட்டு, இட்டு, உண்டு, ஆற்ற வாழ்வார். 98
அட்டு - சமைத்து மனைவியோடு கூடி வாழும் வாழ்க்கை துறவு வாழ்க்கையை விட நன்று. ஆராய்ந்து பார்த்தால் நல்லறத்தார், துறவறத்தார்க்கு, சமைத்து இட்டு, உண்டு வாழ்ந்தவர்களே இப்பிறப்பில் நல்வாழ்க்கை வாழ்பவர் ஆவார்.
ஈவது நன்று; தீது, ஈயாமை; நல்லவர் மேவது நன்று, மேவாதாரோடு; ஓவாது, கேட்டுத் தலைநிற்க; கேடு இல் உயர் கதிக்கே ஓட்டுத்தலை நிற்கும் ஊர்ந்து. 99
ஓவாது - இடையறாமல் பிறர்க்குக் கொடுப்பது நன்று, கொடாமை தீது. பொருந்தாதவரோடு பொருந்தாமல் இருப்பது நன்று. உயர்ந்த வீட்டு நெறியின் கண்ணே நிற்க வேண்டும்.
உண் இடத்தும், ஒன்னார் மெலிவு இடத்தும், மந்திரம் கொண்டு எண் இடத்தும், செல்லாமைதான் தலையே; எண்ணி, உரைப் பூசல் போற்றல், உறு தவமேல் கங்கைக் கரைப் பூசை போறல், கடை. 100
பூசல் - போர் பிறர் உண்ணுமிடத்தும், பகைவர் தளர்ந்த இடத்தும், ஆலோசிக்குமிடத்தும் செல்லாமை தலையாய ஒழுக்கமாகும். ஓருயிரைக் கொன்று தின்னல் கங்கைக் கரையில் அமர்ந்திருக்கும் பூனை போல கடையாய ஒழுக்கமாகும்.
பத்தினி, சேவகன், பாத்து இல் கடுந் தவசி, பொத்து இல் பொருள்-திறத்துச் செவ்வியான், பொத்து இன்றி வைத்தால் வழக்கு உரைக்கும் சான்றான், - இவர் செம்மை செத்தால் அறிக, சிறந்து! 101
பொத்து - குற்றம் கற்புடையாள், சேவகர், தவத்தைச் செய்பவர், அரசனால் முதன்மையாக ஏற்படுத்தப்பட்டவர், இவர்களின் பெருமை இவர்கள் காலத்துக்குப் பின் தெரியும்.
வழிப் படர், வாய்ப்ப வருந்தாமை, வாய் அல் குழிப் படல், தீச் சொற்களோடு, மொழிப்பட்ட காய்ந்து விடுதல், - களைந்து, உய்யக் கற்றவர், ஆய்ந்து விடுதல் அறம். 102
களைந்து - நீங்கி நல்வாழ்வு வாழ விரும்புவர்கள், தீயச் சொற்களைக் கூறாமலும், பிறர்க்கு துன்பம் தராமலும், துன்பத்திற்கு வருந்தாமலும், சத்தியம் பொய்யாகும் போது ஆராய்ந்து எழுதப்பட்ட நீதி நூல்களைச் சினந்து அதனை மாற்றுவதே அறமாகும். புறத்திரட்டில் கண்ட பாடல்கள்
அச்சமே, ஆயுங்கால் நன்மை, அறத்தொடு, கச்சம் இல் கைம்மாறு, அருள், ஐந்தால் - மெச்சிய தோகை மயில் அன்ன சாயலாய்! - தூற்றுங்கால் ஈகை வகையின் இயல்பு. (206)
தூற்றுங்கால் - ஆராய்ந்தால் தோகை மயில் போன்ற அழகுடையவளே! அச்சம், ஆராயும்போது நன்மையும், அறம், பயன் எதிர்பாராத உதவி, அருள், இவற்றை ஆராய்ந்து பார்த்தால் இவை ஈகையின் இயல்புகளாகும்.
கைம்மாறும், அச்சமும், காணின் பயம் இன்மை, பொய்ம் மாறு நன்மை, சிறு பயம், மெய்ம் மாறு அருள் கூடி ஆர் அறத்தோடு, ஐந்து இயைந்து, ஈயின்,- பொருள் கோடி எய்தல், புகன்று. (207)
கைம்மாறு - பதில் உதவி கருணையுடன் அறத்தோடு நின்று பதில் உதவி எதிர்பாராமல், மனதிலே பயமும், கொடுப்பதற்கு பயமில்லாமலும், பொய் இல்லாமல் உண்மை மாறாமல் கொடுப்பவனிடம் கோடிப் பொருள் சென்றாலும் நன்றாம்.
இம்மை நலன் அழிக்கும்; எச்சம் குறைபடுக்கும்; அம்மை அரு நரகத்து ஆழ்விக்கும்; மெய்ம்மை அறம் தேயும்; பின்னும், அலர்மகளை நீக்கும்;- மறத்தேயும் பொய் உரைக்கும் வாய். (311)
எச்சம் - பிள்ளை பொய் அவ்வாறு சொன்னவனின் பிறவி நலனை அழிக்கும், குழந்தைகள் குறைபடுவார்கள், நரகத்தில் ஆழ்த்திவிடும், தர்மம் அழியும், திருமகள் அவனைவிட்டு நீங்குவாள். எனவே பொய் சொல்லற்க. சிறப்புப் பாயிரம்
மல் இவர் தோள் மாக்காயன் மாணாக்கன், மா நிலத்துப் பல்லவர் நோய் நீக்கும் பாங்கினால், கல்லா, மறு பஞ்சம் தீர் மழைக்கை மாக் காரியாசான், சிறுபஞ்சமூலம் செய்தான். 1
மறுதீர் - குற்றம் தீரும்படி மாக்காயன் மாணாக்கன் காரியாசான் என்னும் சான்றோன் பஞ்சத்தைப் போக்கும் மழையைப் போல மக்களின் அறியாமையைப் போக்கும் சிறுபஞ்சமூலம் என்ற இந்நூலை இயற்றியுள்ளார்.
ஒத்த ஒழுக்கம், கொலை, பொய், புலால், களவோடு. ஒத்த இவை அல் ஒரு நால் இட்டு, ஒத்த உறு பஞ்ச மூலம் தீர் மாரிபோல் கூறீர்- சிறுபஞ்சமூலம் சிறந்து! 2
மாரி - மழை கொல்லாமை, பொய் கூறாமை, புலால் உண்ணாமை, கள்ளாமை ஆகியவற்றை பஞ்சத்தை அகற்றும் மழை போல, சிறுபஞ்சமூலம் போன்று இந்நூலை மக்களின் தீய குணங்கள் போகுமாறு கூறுவாராக. |
மூலிகையே மருந்து! ஆசிரியர்: டாக்டர் வி. விக்ரம்குமார்வகைப்பாடு : மருத்துவம் விலை: ரூ. 150.00 தள்ளுபடி விலை: ரூ. 135.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
கேரளத்தில் எங்கோ ஆசிரியர்: லா.ச. ராமாமிருதம்வகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 70.00 தள்ளுபடி விலை: ரூ. 65.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|