உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது (உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.) கீழ்க்கணக்கு வரிசையில் அகப்பொருள் நூல்கள் ஆறு. அவற்றுள் இரண்டு நூல்கள் 'திணை' என்றும், வேறு இரண்டு 'ஐந்திணை' என்றும் பெயர் பெறுவன. ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தந்துள்ளமையால் 'திணைமாலை' என்றும், பாடல் அளவினால் 'திணைமாலை நூற்றைம்பது' என்றும், இந்நூல் பெயர் பெற்றுள்ளது. கீழ்க்கணக்கில் அமைந்த ஐந்திணை நூல்களில் அளவால் பெரியது இதுவே. குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்னும் வரிசையில் ஐந்திணைகளை இந்நூல் முறைப்படுத்தியுள்ளது. திணை ஒவ்வொன்றும் 30 பாடல்களைக் கொண்டுள்ளது. எனினும் குறிஞ்சி, நெய்தல், முல்லைத் திணைகள் மூன்றும் 31 பாடல்களைப் பெற்றுள்ளன. அதனால், இந்நூலில் 153 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந் நூலின் ஆசிரியர் ஏலாதியை இயற்றிய கணிமேதாவியார். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர். 1. குறிஞ்சி தலைமகளும் தோழியும் ஒருங்கு இருந்தவழிச் சென்று, தலைமகன் தோழியை மதியுடம்படுத்தது
நறை படர் சாந்தம் அற எறிந்து, நாளால் உறை எதிர்ந்து வித்திய ஊழ் ஏனல், - பிறை எதிர்ந்த தாமரைபோல் வாள் முகத்துத் தாழ்குழலீர்! - காணீரோ, ஏ மரை போந்தன ஈண்டு? 1
ஏ - அம்பு குழல் - கூந்தல் மரை - மான் "மணம் மிக்க பூங்கொடிகள் படர்ந்த சந்தன மரத்தை வேரோடு வெட்டி நல்ல நாளில் மழையை எதிர்பார்த்து விதைத்ததனால் முதிர்ந்த தினைப்புனத்தைக் காவல் செய்த தாமரைப் போன்ற முகத்தையும், நீண்ட கூந்தலையும் உடைய பெண்களே! இந்த இடத்தில் என் அம்புகள் பாய்ந்து தாக்குதற்கு வந்த மான்களை நீங்கள் பார்த்ததுண்டோ?" எனத் தலைவன் தலைவியையும் தோழியையும் பார்த்துக் கேட்டாள். தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது
சுள்ளி, சுனை நீலம், சோபாலிகை, செயலை, அள்ளி அளகத்தின்மேல், ஆய்ந்து, தெள்ளி, இதணால் கடி ஒடுங்கா ஈர்ங் கடா யானை உதணால் கடிந்தான் உளன். 2
அகவல் - அழைத்தல் அமர்தல் - விரும்புதல் சுள்ளி - அணிச்ச மலர் "பரணில் இருந்த தலைவியைக் குளிர்ந்த மதத்தை உடைய ஆண் யானை தாக்கிய போது ஒருவன் மொட்டம்பினால் அந்த யானையைத் துரத்தித் தலைவியைக் காப்பாற்றி, அனிச்ச மலரையும், நீல மலரையும், அசோகமலரையும் பறித்துத் தலைவியின் கூந்தலில் அணிவித்தான். அவன் தலைவியின் உள்ளத்தே விளங்குகிறான்" என்று தோழி செவிலிக்குக் கூறினாள். பகற்குறிக்கண் வந்த தலைமகனைக் கண்டு, தோழி செறிப்பு அறிவுறீஇயது
சாந்தம் எறிந்து உழுத சாரல், சிறு தினை, சாந்தம் எறிந்த இதண் மிசை, சாந்தம் கமழக் கிளி கடியும் கார் மயில் அன்னாள் இமிழ, கிளி எழா, ஆர்த்து. 3
கடிதல் - விரட்டுதல் இமிழ்தல் - கூவுதல் "சந்தன மரக்கட்டைகளைக் கால்களாக அமைத்துப் பரண் செய்து கார்கால மயிலைப் போன்ற தலைவி "ஆலோ" என்று கூவியும் கிளிக்கூட்டம் செல்வதில்லை. எனவே அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்லப் போகின்றனர்" என்று தலைவனிடம் தோழி கூறியது. தலைமகள் இற்செறிந்த காலத்து, புனத்தின்கண் வந்த தலைமகன் தலைமகளைக் காணாது ஆற்றாது பெயர்கின்றான் சொல்லியது
கோடாப் புகழ் மாறன் கூடல் அனையாளை ஆடா அடகினும் காணேன்; போர் வாடாக் கருங் கொல் வேல் மன்னர் கலம் புக்க கொல்லோ, மருங்குல் கொம்பு அன்னாள் மயிர்? 4
மாறன் - பாண்டியன் கூடல் - மதுரை தலைவியை விளையாட்டுப் பண்ணையிலும் கண்டேனில்லை. போர்க்களத்தில் பின் வாங்காத வேற்படையேந்திய மன்னர் அணியும் முதன்மை அணியாகவுள்ள முடியாக ஒன்றுகூடி வளர்ந்து அவள் முதுக்குறைவினைக் காட்டினவோ என்று தலைவன் தனக்குள் சொல்லுதல். (தலைவியை இச்செறித்தனர்) தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி செறிப்பு அறிவுறீஇயது
வினை விளையச் செல்வம் விளைவதுபோல் நீடாப் பனை விளைவு நாம் எண்ண, பாத்தித் தினை விளைய,- மை ஆர் தடங் கண் மயில் அன்னாய்! - தீத் தீண்டு கையார் பிரிவித்தல் காண்! 5
தடங்கண் - பெரிய கண்கள் தீத்தண்டு - தினைத் தண்டு "மை போன்ற பெரிய கண்களை உடையவளே! நாம் களவுப்புணர்ச்சியின் கண் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அதற்கு இடையூறு செய்வதுபோல செல்வம் ஒருவனுக்குப் பெருகுவது போல பயிரானது விளைந்து, கொய்ய வேண்டிய நாள் வந்துவிட்டதென்று நம்மவர்க்கு அறிவித்து, நம்மைத் தலைவனிடம் இருந்து பிரியச் செய்தலைக் காண்பாயாக" என்று தலைவியிடம் தோழி கூறினாள். இரவுக்குறி வேண்டிய தலைமகற்குத் தோழி மறுத்துச் சொல்லியது
மால் நீலம் மாண்ட துகில் உமிழ்வது ஒத்து, அருவி மால் நீல மால் வரை நாட! கேள்: மா நீலம் காயும் வேற் கண்ணாள், கனை இருளில் நீ வர, ஆயுமோ? மன்ற, நீ ஆய்! 6
காய்தல் - வெறுத்தல் "நீல மணிகள் பாயும்படியான அருவியை உடைய மலைநாட்டுத் தலைவனே! நீல மலர்களை வெறுத்து ஒதுக்கும்படியான நிலையில் இருக்கும் வேல் போன்ற கண்களை உடைய தலைவி இருளின்கண் நீ வர, உனக்கு ஏற்படும் துன்பத்தை ஆராயும் மனப்பக்குவம் உடையவளா என்பதனை நீ எண்ணிப் பார்ப்பாயாக" என தோழி தலைவனிடம் கூறினாள்.
கறி வளர் பூஞ் சாரல், கைந்நாகம் பார்த்து, நெறி வளர் நீள் வேங்கை கொட்கும், - முறி வளர் நல் மலை நாட! - இர வரின், வாழாளால், நல் மலை நாடன் மகள். 7
கறி - மிளகு "மலை நாட்டுத் தலைவனே! மிளகு படர்கின்ற அழகியச் சாரலின் கண் தும்பிக்கையை உடைய யானைகளை எதிர்பார்த்து வளர்கின்ற வேங்கைப் புலிகள் திரியும் இரவின்கண் நீ வரின் நன்மலை நாடன்மகள் பொறுக்கமாட்டாள்" என்று தோழி தலைவனிடம் கூறினாள். பின்னிலை முனியாது நின்ற தலைமகன் தோழியை மதி உடம்படுத்தது
அவட்குஆயின், ஐவனம் காவல் அமைந்தது; இவட்குஆயின், செந் தினை கார் ஏனல்; இவட்குஆயின், எண் உளவால், ஐந்து; இரண்டு ஈத்தான்கொல்? என் ஆம்கொல்? கண் உளவால், காமன் கணை! 8
ஐவனம் - மலை நெல் கணை - அம்பு "தலைவியிடம் காமனின் அம்பான ஐந்தும் உள்ளன. அவற்றுள் இரண்டு அம்புகளை விழிகளில் உள்ளனவாய்க் காமன் அவளுக்குக் (தலைவி) கொடுத்தானோ! எனவே என் உயிருக்கு யாது நிகழுமோ?" எனத் தலைவன் கூறியது. பாங்கற்குத் தலைமகன் தலைமகளைக் கண்ட வகை கூறி, தன்ஆற்றாமை மிகுதியைச் சொல்லியது
வஞ்சமே என்னும் வகைத்தால்; ஓர் மா வினாய், தஞ்சம் தமியனாய்ச் சென்றேன்; என் நெஞ்சை நலம் கொண்டு ஆர் பூங் குழலாள், நன்று ஆயத்து, அன்று, என் வலம் கொண்டாள், கொண்டாள் இடம். 9
குழல் - கூந்தல் "'தப்பி வந்த மான் ஒன்றைக் கண்டதுண்டோ?' என வினவி தனியனாய் தினைப் புனத்தை நாடிப் போனேன். மங்கையர் நடுவில் மணம் வீசும் பூக்களை அணிந்தவள் என் வெற்றித் திறனைக் கைக்கொண்டவளாய் என் உள்ளத்தைத் தனக்கு இடமாகக் கொண்டு விட்டாள். இது மாயமோ" எனத் தலைவன் தோழனிடம் கூறினான். தோழி நெறி விலக்கியது
கரு விரல், செம் முக, வெண் பல், சூல், மந்தி பரு விரலால் பைஞ் சுனை நீர் தூஉய், பெரு வரைமேல் தேன் தேவர்க்கு ஓக்கும் மலை நாட! வாரலோ, வான் தேவர் கொட்கும் வழி! 10
கொட்கும் - திரியும் "கருமையான விரல்கள், சிவந்த முகம், வெண்மையான பற்களை உடைய சூல் கொண்ட பெண் குரங்கு தன் பெரிய விரலால் அணை நீரை தேவர்களுக்குத் தூவி வழிபடும் மலைநாட்டை உடையவனே! தேவர்கள் உலவுகின்ற மலையின் வழியே நீ தலைவியை நாடி வருவதைக் கைவிடுவாயாக" என்று தோழி தலைவனிடம் கூறினாள்.
கரவு இல் வள மலைக் கல் அருவி நாட! உர வில் வலியாய், ஒரு நீ, இரவின், வழிகள் தாம் சால வர அரிய; வாரல், இழி கடா யானை, எதிர்! 11
கரவு - குற்றம் "மலைகளையும், அருவிகளையும் உடைய தலைவனே! நீ இரவில் வலிய வில்லையே துணையாய்க் கொண்டு வரும் மலைவழிகள் துணை இல்லாமல் வருவதற்கு உரியன இல்லை. மதநீரைச் சொரியும் யானைகளின் முன் வராமல் இருப்பாயாக" எனத் தோழி தலைவனிடம் கூறியது. வெறி விலக்கி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது
வேலனார் போக; மறி விடுக்க; வேரியும் பாலனார்க்கு ஈக; - பழியிலாள் பாலால் கடும் புனலின் நீந்தி, கரை வைத்தாற்கு அல்லால், நெடும், பணைபோல் தோள் நேராள், நின்று. 12
மறி - ஆட்டுக்குட்டி பணை - மூங்கில் "வெறியாடுவதற்கு வந்த பூசாரி அதனைச் செய்ய வேண்டாம். தலைவி விரைவாகச் செல்லும் நீரில் ஆடிட, நீர் அவளை அடித்துச் செல்ல தலைவன் அவளைக் கரை சேர்த்தான். அத்தலைவனைத் தவிர வேறு எவரையும் மணம் செய்ய மாட்டாள். அவள் மயக்கத்துக்கு அதுவே காரணம்" எனத் தோழி செவிலிக்கு அறத்தோடு நிற்றல். நெறியினது அருமை கூறி, தோழி இரவுக்குறி மறுத்தது
ஒரு வரைபோல் எங்கும் பல வரையும் சூழ்ந்த அரு வரை உள்ளதாம் சீறூர்; வரு வரையுள் ஐ வாய நாகம்; புறம் எல்லாம், ஆயுங்கால், கை வாய நாகம் சேர் காடு. 13
வரை - மலை "எல்லா மலைகளும் உயர்ந்து கடப்பதற்கு அரிய எல்லையுள் எம் சிறிய ஊர் உள்ளது. ஐந்து வாய்களை உடைய பாம்புகள் நிறைந்து உள்ளன. யானைகள் நிறைந்த காடுகள் உள்ளன. துன்பம் நிறைந்த வழியில் நீ வர வேண்டாம்" என தோழி இரவுக்குறி வேண்டும் என்று கூறிய தலைவனிடம் கூறியது. செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது
வருக்கை வள மலையுள், மாதரும் யானும், இருக்கை இதண் மேலேம் ஆக, பருக் கைக் கடாஅம் மால் யானை கடிந்தானை அல்லால், தொடாஅவால், என் தோழி தோள். 14
இதண் - பரண் கடாஅம் - மதநீர் "பலா மரங்கள் நிறைந்த மலையிடத்தில் நானும் தலைவியும் பரண் மீது தினைப்புனத்தைக் காத்தோம். அப்போது மதயானையிடம் இருந்து காப்பாற்றிய காளையைப் போன்றவனைத் தவிர எவரையும் என் தலைவியின் தோள்கள் தொடமாட்டா" என்று தோழி செவிலிக்கு அறத்தோடு நிற்றல். தலைமகன் சான்றோரை வரைவு வேண்டி விடுத்த இடத்து, தலைமகள் தந்தைக்கும் தனையன்மார்க்கும் நற்றாய் அறத்தொடு நின்றது
வாடாத சான்றோர் வரவு எதிர்கொண்டிராய்க் கோடாது நீர் கொடுப்பின் அல்லது, கோடா எழிலும் முலையும் இரண்டிற்கும் முந்நீர்ப் பொழிலும் விலை ஆமோ, போந்து? 15
கோடா - தளர்ச்சியுறாத எழில் - அழகு பொழில் - உலகம் "தலைவன் அனுப்பிய சான்றோரின் வருகையை ஏற்று நீர் வார்த்து மணமுறையில் மகளைத் தந்தால் அல்லது நம் மகளின் தளர்ச்சி இல்லாத கட்டழகும், கொங்கைகள் என்ற இரண்டிற்கும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகும் பொருந்தியதாய் நின்று காணிக்கையாகக் கொள்ளத் தக்கது ஆகுமோ? காதலை மதிக்க வேண்டும்" என்று நற்றாய், தந்தை, தமையன் ஆகியோருக்கு அறத்தோடு நின்றாள். தோழி சேட்படுத்த இடத்து, தலைமகன் தனது ஆற்றாமையால் சொல்லியது
'நாள் நாகம் நாறும் நனை குழலாள் நல்கி, தன் பூண் ஆகம் நேர்வு அளவும் போகாது, பூண் ஆகம்' என்றேன்; இரண்டாவது உண்டோ? மடல் மாமேல், நின்றேன், மறுகிடையே நேர்ந்து. 16 "மலர்களை அணிந்த தலைவி அணிகளுடன் கூடிய மார்பை எனக்கு அளித்து என்னுடன் புணரும் வரைக்கும் எலும்பால் ஆன அணிகலன் என் மார்பினின்று நீங்காது. இனி இதற்கு மாறாக வேறொரு சொல் உண்டோ? பனை மடலால் செய்யப் பட்ட குதிரையின் மீது ஏறி ஊரத் துணிந்து விட்டேன்" எனத் தலைவன் தோழியிடம் கூறினான். 'நின்னால் சொல்லப்பட்டவளை அறியேனா' என்ற தோழிக்குத் தலைமகன் அறிய உரைத்தது
அறிகு அவளை; ஐய இடை, மடவாய்! ஆய, சிறிது அவள் செல்லாள், இறும் என்று அஞ்சிச் சிறிது, அவள் நல்கும்வாய் காணாது, நைந்து உருகி என் நெஞ்சம் ஒல்கும்வாய் ஒல்கல் உறும். 17
ஒல்குதல் - வருந்துதல் "தலைவியை நான் நன்றாக அறிவேன். அவள் உண்டா இல்லையா என்று ஐயப்படும்படி உள்ள இடையானது வருந்துமாறு அவள் சிறிது தொலைவு செல்வதற்கு முன்பே என் உள்ளம் அவள் இடை ஒடிந்து விடும் என்று அஞ்சி அவள் நடக்குந் தோறும் அவள் பின் போய்த் தளர்ந்து வருந்தும்" என்று தலைவன் தோழியிடம் கூறியது. பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது
என் ஆம் கொல்? - ஈடு இல் இள வேங்கை நாள் உரைப்ப, பொன் ஆம், போர் வேலவர்தாம் புரிந்தது; என்னே! மருவி ஆம், மாலை மலை நாடன் கேண்மை; இருவியாம், ஏனல் இனி. 18
கேண்மை - நட்பு இருவி - திளைத்தாள் "வேங்கை மரம் தினைக்கதிரைக் கொய்ய வேண்டியதை பூத்து தெரிவித்தது. கதிர்கள் பறிக்கப்பட்டு வெற்றுத் தினைத் தாளை உடையதாய் விளங்கும். தந்தையும் தமையனும் தலைவிக்குப் பரிசமாக விரும்பியது பொன்னாலான அணிகலன் ஆகும். நட்புடன் பழகி வரும் மலைநாட்டுத் தலைவனின் நட்பு என்ன ஆகுமோ?" (தோழி வரைவு கடாயது) பின்னின்ற தலைமகன் தோழி குறை மறாமல் தனது ஆற்றாமை மிகுதி சொல்லியது
பால் ஒத்த வெள் அருவி பாய்ந்து ஆடி, பல் பூப் பெய்- தாலொத்த ஐவனம் காப்பாள் கண் வேல் ஒத்து, என் நெஞ்சம் வாய்ப் புக்கு ஒழிவு காண்பானோ, காண் கொடா? அம் சாயற்கே நோவல் யான். 19
ஐவனம் - மலை நெல் "பால் போன்ற நீர்வீழ்ச்சியில் பாய்ந்து நீராடுதலைச் செய்து பலவகையான மலர்களைப் பரப்பினாற் போல் இருக்கின்ற புனத்தைக் காவல் செய்யும் தலைவியின் கண்கள் வேலினைப் போல் என் உள்ளத்தில் தாவிப்புகுந்தன. காரணம் என் உயிரின் ஒழிவைக் காண வேண்டும் என்பதோ! அவ்வளவு முயற்சி தேவையில்லை. ஏனெனில் நான் தலைவியைக் காண்பதைக் கொண்டு அவளது மேனிக்கே வருந்துகின்றேன்" எனத் தலைவன் தோழிக்குச் சொன்னது. கையுறை மறை
நாள் வேங்கை பொன் விளையும் நல் மலை நல் நாட! கோள் வேங்கை போல் கொடியார் என் ஐயன்மார்; கோள் வேங்கை அன்னையால் நீயும்; அருந் தழை யாம் ஏலாமைக்கு என்னையோ? நாளை எளிது. 20
வேங்கை - மரம், புலி "பொன் போன்ற வேங்கை மலர்கள் பூத்த மலைநாடனே! என் தமையன்மார்கள் புலியைப் போன்று வீரமானவர்கள். நீயும் புலியைப் போன்று காணப்படுகிறாய்! இங்கு நீ இருந்தால் போர் ஏற்படும். நீ கொண்டு வந்த தழையை நாளை யாம் ஏற்றுக் கொள்வது எளிதாகும்" என்று தோழி தலைவன் கொண்டு வந்த பரிசை ஏற்க மறுத்தாள். ஆற்றானாய தலைமகனைத் தோழி ஏன்றுகொண்டு கையுறை எதிர்ந்தது
'பொன் மெலியும் மேனியாள் பூஞ் சுணங்கு மென் முலைகள் என் மெலிய வீங்கினவே, பாவம்!' என்று, என் மெலிவிற்கு? அண் கண்ணி வாடாமை, யான், 'நல்ல' என்றால், தான் உண்கண்ணி வாடாள் உடன்று. 21
சுணங்கு - தோல் கண்ணி - பூமாலை "தலைவியின் தேமல் படர்ந்த கொங்கைகள், நான் வருந்துமாறு பருத்துக் காணப்படுகின்றன. தலைவ! நீ வீணாக மெலிகின்றாய்! நீ கொணர்ந்த குறுங்கண்ணிய தழை வீணாக வாடிப் போகாதபடி யான் தலைவியிடம் கொண்டு சேர்த்து இவை நல்லவை எனக் கூறினால், தலைவி துன்பப்படாமல் ஏற்றுக் கொள்வாள்" என்று தோழி தலைவனிடம் கூறினாள். பகற்குறிக்கண் தலைமகள் குறிப்பு இன்றிச் சார்கிலாத தலைமகன் தனது ஆற்றாமை சொல்லியது
கொல் யானை வெண் மருப்பும், கொல் வல் புலி அதளும், நல் யானை நின் ஐயர் கூட்டுண்டு செல்வார்தாம் ஓர் அம்பினான் எய்து போக்குவர்; யான் போகாமல், ஈர் அம்பினால் எய்தாய், இன்று. 22
மருப்பு - தந்தம் அதள் - தோல் "கொல்கின்ற யானையினுடைய வெண்மருப்பையும் கொல்ல வல்ல புலியையும் கொல்கின்ற உன் தமையர் இத்தினைப் புனத்தில் வருகின்றவரை ஓர் அம்பினால் ஒழிப்பர். ஆனால் நீயோ நான் இவ்விடத்தை விட்டு நீங்காதவாறு உன் கண்களாகிய அம்புகளால் தாக்கினாய்" எனத் தலைவன் தலைவியிடம் கூறுதல். 'நின்னால் குறிக்கப்பட்டாளை யான் அறியேன்' என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது; பாங்கற்குக் கூறியதூஉம் ஆம்
பெரு மலை தாம் நாடி, தேன் துய்த்து, பேணாது அரு மலை மாய்க்குமவர் தங்கை திரு முலைக்கு நாண் அழிந்து, நல்ல நலன் அழிந்து, நைந்து உருகி, ஏண் அழிதற்கு யாம் ஏயினம். 23
ஏண் - வலிமை "மலைப்போன்ற யானைகளைக் கைப்பற்றும் வீரர்களின் தங்கையாகிய தலைவியின் கொங்கை மீது கொண்ட விருப்பினால் நாணம் இழந்து அரிய பண்புகள் யாவும் கெட்டுத் தளர்ந்து வலிமை கெடும் நிலைக்கு நாம் எடுத்துக் காட்டாய் அமைந்தோம்" என தலைவன் கூறினான். தோழி குறை மறாமல் தலைமகன் தனது ஆற்றாமை மிகுதியைச் சொல்லியது
நறுந் தண் தகரம், வகுளம், இவற்றை வெறும் புதல்போல் வேண்டாது, வேண்டி, எறிந்து உழுது, செந் தினை வித்துவார் தங்கை பிறர் நோய்க்கு நொந்து இனைய வல்லளோ? நோக்கு! 24
வேண்டாது - விரும்பாது "பயனற்ற பயிர்களை வெட்டி சிவந்த தினை விதைப்பவரான மலைநாட்டுத் தலைவரின் தங்கை, மற்றவர்படும் துன்பத்துக்காகத் தளர்ந்து வருந்துவாளா? நீ நன்று ஆராய்வாயாக!" எனத் தலைவன் தோழியிடம் கூறினான். தோழி தலைமகனை நெறி விலக்கி, வரைவு கடாயது
கொல் இயல் வேழம், குயவரி கோட் பிழைத்து, நல் இயல் தம் இனம் நாடுவபோல், நல் இயல் நாம வேற் கண்ணாள் நடுநடுப்ப வாரலோ, ஏம வேல் ஏந்தி, இரா! 25
ஏமம் - பாதுகாத்தல் "கொல்லும் தன்மையுடைய யானைகள் புலியினால் பற்றப்படுவதனின்றும் தப்பி, நல்ல தன்மையுடைய தம் கூட்டத்தைத் தேடித் திரிவன போன்று இரவில், பாதுகாவலான வேலைக் கையில் கொண்டு, நல்ல இயல்புடன் அச்சம் தரும் வேலைப் போன்ற கண்களையுடைய தலைவி மிகவும் நடுக்கம் கொள்ள வாராதிருக்க வேண்டும்!" என்று தோழி தலைவனிடம் சொன்னாள்.
கருங் கால் இள வேங்கை கான்ற பூக் கல்மேல் இருங் கால் வய வேங்கை ஏய்க்கும் மருங்கால் மழை வளரும் சாரல் இர வரின், வாழாள், இழை வளரும் சாயல் இனி. 26
வயம் - வெற்றி ஏய்க்கும் - ஒப்பாகும் "அணிகலன்களை அணிந்த தலைவி! வேங்கை மலர்கள் பாறைகள் மீது படிந்து பெரிய கால்களை உடைய புலியைப் போல விளங்கும். அத்தகைய இடங்களில் மழை விடாது பெய்யும். அவ்வழியே இரவில் நீ வருவாயின் (தலைவி) உயிர் தாங்கிக் கொண்டு இருக்க மாட்டாள்!" என்று தோழி தலைவனிடம் சொன்னாள். தோழி படைத்து மொழி கிளவியான் வரைவு கடாயது
பனி வரை நீள் வேங்கைப் பய மலை நல் நாட! 'இனி வரையாய்' என்று எண்ணிச் சொல்வேன்; முனி வரையுள் நின்றான் வலியாக நீ வர, யாய் கண்டாள்; ஒன்றாள், காப்பு ஈயும், உடன்று. 27
முனி - கோபம் "குளிர்ந்த மலைகளை உடைய மலை நாடனே! இதுகாறும் நீ தலைவியை மணந்து கொள்ளவில்லை! இனியேனும் மணந்து கொள்ளவேண்டும் என நினைத்து உனக்கு ஒன்றைக் கூறுவேன். இந்த மலையில் நின் கால் வன்மையையே துணையாகக் கொண்டு நீ வருவதை எம் தாய் பார்த்தாள். எம்முடன் சினந்து மாறுபட்டாள். காவலை எமக்கு ஏற்படுத்தினாள். எனவே தலைவியை நீ விரைவில் மணந்து கொண்டு களிப்பாயாக!" எனத் தோழி தலைவனைப் பார்த்துச் சொன்னாள். தலைமகன் சொன்ன குறிவழியே சென்று, தலைமகளைக் கண்டு, பாங்கன் சொல்லியது
மேகம் தோய் சாந்தம், விசை, திமிசு, காழ் அகில், நாகம், தோய் நாகம், என இவற்றைப் போக எறிந்து, உழுவார் தங்கை இருந் தடங் கண் கண்டும், மறிந்து உழல்வானோ, இம் மலை? 28
தட - அகன்ற "சந்தனம், வேங்கை, அகில், சுரபுன்னை போன்ற மரங்களை வெட்டி உழுது தினைப் பயிர் இடுபவரான மலை நாட்டவரின் தங்கையான தலைவியின் நீண்ட அகன்ற கண்களைப் பார்க்க நேர்ந்தும், இங்கிருந்து மீண்டு அங்கு வருவதற்கு முயன்று வந்த தலைவன், ஆ! இந்த மலையைப் போன்ற நெஞ்சினன் ஆவான்!" என்று பாங்கன் வியந்து உரைத்தான். பகற்குறிக்கண் இடம் காட்டியது
பலா எழுந்தபால் வருக்கைப் பாத்தி அதன் நேர் நிலா எழுந்த வார் மணல் நீடி, சுலா எழுந்து, கான் யாறு கால் சீத்த காந்தள் அம் பூந் தண் பொதும்பர்- தான் நாறத் தாழ்ந்த இடம். 29
பொதும்பர் - சோலை "உயர்ந்த பலாமரத்தின் பக்கத்தில் நிலவின் ஒளி பொருந்தியுள்ள மணல் உயர்ந்து வட்டமாய்ப் பரவி விளங்கும் ஆற்றின் பக்கம் காந்தள் மலர்கள் மிகுந்துள்ள சோலை. அச்சோலையே! நானும் தலைவியும் விளையாடும் இடம்" என்று தோழி தலைவனிடம் கூறினாள். பாங்கற்குத் தலைமகன் கூறியது
திங்களுள் வில் எழுதி, தேராது, வேல் விலக்கி, தங்கள் உளாள் என்னும் தாழ்வினால், இங்கண், புனம் காக்க வைத்தார்போல் பூங்குழலைப் போந்து, என் மனம் காக்க வைத்தார், மருண்டு. 30
தேராது - தெளியாது "நிறைந்த சந்திரனில் இரண்டு வில்களை எழுதி காண்பவர்க்குத் தீமை உண்டாகும் எனப் பாராது, இரண்டு வேல்களான கண்களை அந்த வில்லில் மாறுபாடாய்ப் பொருத்தித், தம் குலத்தில் வந்தவள் என எண்ணப்படும் எளிய காரணத்தால், இவ்விடத்தில் மலர்கள் சூடிய கூந்தலை உடைய தலைவியைத் தினைப் புனத்தைக் காவல் செய்ய வைத்துவிட்டார்கள். ஆனால் அவளோ என் உள்ளத்தில் புகுந்து காவல் காக்கின்றாள்" எனத் தலைவன் தன் பாங்கனுக்குச் சொன்னான். தோழி தலைமகளை மெலிதாகச் சொல்லி, குறை நயப்பக் கூறியது
தன் குறை இது என்னான், தழை கொணரும் தண் சிலம்பன் நின் குறை என்னும் நினைப்பினனாய், பொன் குறையும் நாள் வேங்கை நீழலுள் நண்ணான்; எவன்கொலோ, கோள் வேங்கை அன்னான் குறிப்பு? 31
சிலம்பு - மலை "குளிர்ந்த மலை நாடன் தனக்குரிய காரியம் இன்னது என்று உரைக்கவில்லை. பூந்தழைகளை, அடிக்கடி கொண்டு வருகின்றான். தான் நாடி வந்த செயல் உன்னால் முடியத்தக்கது என்ற எண்ணம் கொண்டவனாய்ப் பொன்னின் நிறத்தையும் தோற்கச் செய்யும் புதிய மலர்கள் மலர்ந்த வேங்கை மரத்தின் நிழலிலும் நில்லாதவனாய் உள்ளான். ஆகவே, வன்மை மிக்க புலி போன்ற அவனது மனக்கருத்து யாதோ?" என்று தோழி தலைவியிடம் உரைத்தாள். 2. நெய்தல் பாங்கற்குச் சொல்லியது
பானல் அம் தண் கழிப் பாடு அறிந்து, தன்னைமார் நூல் நல நுண் வலையால் நொண்டு எடுத்த கானல் படு புலால் காப்பாள் படை நெடுங் கண் நோக்கம் கடிபு ஒல்லா; என்னையே காப்பு. 32
பானல் - நெய்தல் தண் - குளிர்ச்சி "தன் தமையன் முகந்து பிடித்த மீன்களைக் காயவைத்த கருவாட்டினைக் கடல் துறையில் இருந்து காப்பாளின் பார்வை கருவாட்டில் நிலை கொள்ளாமல் எளியேனையே தன்வயப்படுத்திக் காப்பதில் நிலை கொண்டது" எனத் தோழனிடம் தலைவன் கூறியது.
பெருங் கடல் வெண் சங்கு காரணமா, பேணாது இருங் கடல் மூழ்குவார் தங்கை, இருங் கடலுள் முத்து அன்ன, வெண் முறுவல் கண்டு உருகி, நைவார்க்கே ஒத்தனம், யாமே உளம். 33
நைவார்க்கு - துன்பப்படுபவர்க்கு "பெரிய கடலில் முழுகுபவரான பரதவரின் தங்கையாகிய எம் தலைவியின், பெரிய கடலில் விளையும் முத்துகளைப் போன்ற வெண்மையான பற்களின் ஒளியைப் பார்த்து, மனம் தளர்ந்து வருந்தும் மக்களைப் போன்றவராய் நாம் ஆனோம்" எனத் தலைவன் தன் தோழனுக்குக் கூறினான். புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்ணுற்று நின்ற தோழி வரைவு கடாயது
தாமரைதான் முகமா, தண் அடை ஈர் மா நீலம் காமர் கண் ஆக, கழி துயிற்றும், காமரு சீர்த் தண் பரப்ப! பாய் இருள் நீ வரின், தாழ் கோதையாள் கண் பரப்ப, காண், நீர் கசிந்து. 34
கா - சோலை "அழகிய சிறப்பான குளிர்ந்த கடல் பரப்பை உடைய தலைவனே! தாமரையே முகமாகவும், குளிர்ந்த இலைகள் ஈரமான கண்களாகவும் உடைய தலைவியைச் சந்திக்க, கடல் கழிகளை உறங்கச் செய்யும் பரவி நிற்கும் இருளையுடைய இந்த இரவில் நீ வருவாயானால், தலைவி வருந்துவதை நீ காண்பாயாக!" எனத் தோழி தலைவனிடம் கூறியது. 'இரவும் பகலும் வாரல்' என்று தலைமகனைத் தோழி வரைவு கடாயது
புலால் அகற்றும் பூம் புன்னைப் பொங்கு நீர்ச் சேர்ப்ப! நிலா அகற்றும் வெண் மணல் தண் கானல், சுலா அகற்றி, கங்குல் நீ வாரல்; பகல் வரின், மாக் கவ்வை ஆம், மங்குல் நீர் வெண் திரையின்மாட்டு. 35
கவ்வை - பழிச்சொல் மங்குல் - மேகம் திரை - அலை "புன்னை மரங்கள் நிறைந்து காணப்படும் துறையை உடையவனே! நீ இரவில் வராமல் பகலில் வந்தால் மேகம் போன்ற நீரை உடைய கடற்கரையின் பக்கம் பழிச் சொற்கள் உண்டாகும்" எனத் தோழி தலைவனிடம் கூறியது. தோழி வரைவு கடாயது
'முருகு வாய் முள் தாழை நீள் முகை பார்ப்பு' என்றே குருகு வாய்ப் பெய்து, இரை கொள்ளாது, உருகி மிக இன்னா வெயில் சிறகால் மறைக்கும் சேர்ப்ப! நீ மன்னா வரவு மற! 36
பார்ப்பு - குஞ்சு குருகு - நாரை "நாரை, தாழையின் மொட்டுகளைத் தன் குஞ்சுகள் என்று எண்ணி, தாம் கொண்டு வந்த இரையை அவைகளுக்குப் புகட்டும், அவை உண்ணாததைக் கண்டு வருந்தி, அவற்றைச் சூரியன் கதிர்கள் படாதபடி சிறகால் பாதுகாக்கும். இத்தகைய நாட்டை உடையவனே! நீ வந்து போவதை மறப்பாயாக. நிலையான வரவை மேற்கொள்வாயாக!" என்று தோழி வரைவு கடாயது.
ஓத நீர் வேலி உரை கடியாப் பாக்கத்தார், காதல், நீர் வாராமை கண் நோக்கி, ஓத நீர் அன்று அறியும்; ஆதலால், வாராது, அலர் ஒழிய, மன்று அறியக் கொள்ளீர், வரைந்து. 37
ஓதம் - அலை தோழி தலைவனை நோக்கி, "தலைவ! முன்னம் நீ செய்த, உறுதி மொழிகளை அலைகளையுடைய கடல் நீர் அறியும். உம்மேல் உள்ள அன்பால் துன்பம் அடைந்து இவளுடைய கண்கள் நீர் வரப் பெறாமலும் உள்ளதை, உம் கண்களால் இவள் அடைந்த வேறுபாட்டை உற்றுப் பார்த்து இங்ஙனம் வந்து கொண்டிராமல் பழிச் சொற்கள் நீங்குமாறு உறவினரான கூட்டத்தவர் அறிய இவளை மணந்து கொள்வீராக!" என்று உரைத்தான். காமம் மிக்க கழிபடர் கிளவி
மாக் கடல் சேர் வெண் மணல் தண் கானல் பாய் திரை சேர் மாக் கடல் சேர் தண் பரப்பன் மார்பு அணங்கா மாக் கடலே! என் போலத் துஞ்சாய்; இது செய்தார் யார் - உரையாய்! - என் போலும் துன்பம் நினக்கு? 38 "பெரிய கடலைச் சேர்ந்த துறையையுடைய தலைவனின் மார்பாலே வருத்தம் அடையாத பெருங்கடலே! என்னைப் போன்று நீ உறங்காது இருக்கின்றாய்! என் துன்பத்தைப் போன்ற கொடுமையினை உனக்குச் செய்தவர் யார்? சொல்வாயாக!" எனக் கடலைப் பார்த்து தலைவி வினவினாள். நொதுமலர் வரைந்து புகுந்த பருவத்து, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது
தந்தார்க்கே ஆமால், தட மென் தோள் - இன்ன நாள் வந்தார்க்கே ஆம் என்பார் வாய் காண்பாம்; - வந்தார்க்கே காவா இள மணல் தண் கழிக் கானல்வாய்ப் பூவா இள ஞாழல் போது. 39
கா - சோலை "உப்பங்கழிகளைப் பக்கத்தில் கொண்ட கடற்கரைச் சோலையில் வந்து, முன்னர்ப் பூவாமல் அப்போதே மலர்ந்த இளைய கோங்கின் மலரை என் கையில் பறித்துத் தந்து போன தலைவர்க்கே தலைவியின் மென்மையான தோள்கள் தக்கவை. இப்போது மணம் பேசி வந்தார்க்குத் தகுதியுடையன என்று சொல்பவரின் வாய்ச் சொல்லின் உறுதியை எத்தகையது என உணர்வோம்!" எனத் தோழி செவிலித்தாயிடம் சொன்னாள். வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தது
தன் துணையோடு ஆடும் அலவனையும் தான் நோக்கா, 'இன் துணையோடு ஆட இயையுமோ? இன் துணையோடு ஆடினாய் நீ ஆயின், அந் நோய்க்கு என் நொந்து?' என்று போயினான் சென்றான், புரிந்து. 40
அலவன் - ஆண் நண்டு "தலைவன் ஆண் நண்டைப் பார்த்து, 'நீ உன் பெண் நண்டுடன் விளையாடுவது ஒன்றையே செய்திருப்பாயானால், பிரிவுத் துன்பத்தை நீ அறிய மாட்டாய்! எனவே பிரிவுத் துன்பத்தை எடுத்துச் சொல்வதில் என்ன பயன் உண்டு' எனக் கூறி அகன்றுவிட்டான்" என்று தோழி தலைவியிடம் கூறியது. தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழியால் சொல் எடுக்கப்பட்டு, தலைமகள் தனது ஆற்றாமையால் சொல்லியது
உருகுமால் உள்ளம், ஒரு நாளும் அன்றால்; பெருகுமால், நம் அலர் பேண, - பெருகா ஒருங்கு வால் மின்னோடு, உரும் உடைத்தாய், பெய்வான், நெருங்கு வான் போல, நெகிழ்ந்து. 41
வால் - வெண்மை "ஒன்றாய்ப் பெருகி வெண்மையான மின்னலுடன் இடிகளையும் கொண்டு பெய்வதற்கு நான்கு பக்கங்களிலும் சூழ்கின்ற மழையைப் போல அயலவர் விரும்புமாறு கூறப்பட்ட பழிச் சொற்கள் பெருகுகின்றன. எனவே பல நாட்கள் நம் உள்ளம் வருந்துகின்றது" என்று தலைவி கூறினாள். நயப்பு; கையுறையும் ஆம்
கவளக் களிப்பு இயல் மால் யானை, சிற்றாளி தவழ, தான் நில்லாததுபோல், பவளக் கடிகையிடை முத்தம் காண்தொறும், நில்லா - தொடி கையிடை முத்தம் தொக்கு. 42
களிப்பு - கிளர்ச்சி, மகிழ்ச்சி "உணவை உண்டதால் கிளர்ச்சியான தன்மைகொண்ட மதம் மிக்க யானையானது யாளியின் சிறு குட்டி நடை கற்கும் பருவத்திலும் அதற்கு அஞ்சி எதிர் நிற்காது. அது போன்று பவளத் துண்டமான வாய் இதழ்களின் இடையே தோன்றும் பற்களான முத்துக்களைக் காணும் வேளைகளில் எல்லாம், தலைவியின் கையில் உள்ள வளையல்களில் பதிக்கப்பட்டு உள்ள முத்துக்கள் ஒன்று சேர்ந்தும் ஒப்புமையில் தோற்கும்" எனத் தலைவன் தோழியிடம் கூறியது. தலைமகனைத் தோழி வரைவு கடாயது
கடற் கோடு இரு மருப்பு, கால் பாகன் ஆக, அடற் கோட்டு யானை திரையா, உடற்றி, கரை பாய் நீள் சேர்ப்ப! கனை இருள் வாரல்! வரைவாய், நீ, ஆகவே வா! 43
மருப்பு - தந்தம் கால் - காற்று "கடல் சங்கு பெரிய மருப்பாகவும், காற்று பாகனாகவும், அலைகள் யானையாகவும் அமைந்து கடற்கரையினைச் சுற்றி வருத்தும்படியான நீண்ட கடற்கரைத் தலைவனே! மிகுந்த இருளை உடைய இரவில் நீ வராதிருக்க வேண்டும். வர விரும்பினால் மணத்துக்குரியனாகவே வருக!" எனத் தோழி தலைவனை வரைவு கடாயது. பகற்குறியிடம் காட்டியது
கடும் புலால் புன்னை கடியும் துறைவ! படும் புலால் புள் கடிவான் புக்க, தடம் புல் ஆம் தாழை, மா ஞாழல், ததைந்து உயர்ந்த தாழ் பொழில், ஏழை மான் நோக்கி இடம். 44
புள் - பறவை "புலால் நாற்றத்தைத் தமது நறுமணத்தால் நீக்கும் புன்னை மலர்கள் நிரம்பிய துறைமுகத்திற்குரிய தலைவனே! தாழையும், கோங்கு மரங்களும் நெருங்கி வளரும் பூஞ்சோலை, மானைப் போன்ற கண்களை உடைய தலைவியின் விளையாடும் இடமாகும்" என்று தோழி தலைவனுக்குப் பகலில் தலைவியுடன் கூடும் இடத்தைக் கூறுதல். தலைமகன் சொல்லிய குறி வழி அறிந்து, தலைமகளைக் கண்ட பாங்கன் தலைமகனை வியந்து சொல்லியது
தாழை தவழ்ந்து உலாம் வெண் மணல் தண் கானல், மாழை நுளையர் மட மகள், ஏழை, இணை நாடில் இல்லா, இருந் தடங் கண் கண்டும், துணை நாடினன்; தோம் இலன்! 45
மாழை - அழகிய தோம் - குற்றம் "தாழை மரங்கள் படர்ந்து பரவி நிற்கும் வெண்மணல் நிரம்பிய சோலையில் பரதவரின் இளைய மகளான தலைவியின் பார்வைக்கு ஒப்புமை இல்லை. பெரிய கண்களைப் பார்க்க நேர்ந்தும் தோழனான என்னைத் திரும்பி வந்து சேர்ந்தவனான தலைவன் குற்றம் சிறிதும் இல்லாதவன்" என்று பாங்கன் கூறுதல். தோழி நெறி விலக்கி, வரைவு கடாயது
தந்து, ஆயல் வேண்டா; ஓர் நாள் கேட்டு, தாழாது வந்தால், நீ எய்துதல் வாயால் மற்று; எந்தாய்! மறி மகர வார் குழையாள் வாழாள்; நீ வாரால், எறி மகரம் கொட்கும் இரா. 46
குழை - காதணி "நல்ல நாளை ஆராய்ந்து காலம் தாழ்த்தாது நீ மணம் பேசி வரின், நிச்சயமாய் இவளை நீ அடைதல் கூடும். கரை வழியே செல்பவரைத் தாக்கும் சுறா மீன்கள் திரியும் இரவில் வாராதிருப்பாயாக! நீ மீண்டும் வருவாயானால், சிறிய சுறா மீனைப் போன்று வார்க்கப்பட்ட காதணிகளை உடைய தலைவி உயிர் வாழ மாட்டாள்" எனக் கூறினாள். (தோழி வரைவு கடாயது) பாங்கன் தலைமகனைக் கண்டு, தலைமகளை வியந்து சொல்லியது
பண்ணாது, பண்மேல் தேன் பாடும் கழிக் கானல், எண்ணாது கண்டார்க்கே ஏர் அணங்கால்; எண்ணாது சாவார் சான்றாண்மை சலித்திலா மற்று இவளைக் காவார், கயிறுரீஇ விட்டார். 47
அணங்கு - தெய்வம் "தலைவியின் பெற்றோர் தம் வீட்டில் வைத்துப் பாதுகாக்காமல் சோலையில், கொல்லேற்றினைக் கயிற்றை அறுத்துப் பலருக்குத் தீமை உண்டாக்குமாறு விட்டதுபோல், தலைவியைப் போகவிட்டு விட்டனர்" எனத் தலைவனிடம் பாங்கன் கூறியது. தலைமகற்கு இரவுக்குறி மறுத்தது
திரை மேல் போந்து எஞ்சிய தெண் கழிக் கானல் விரை மேவும் பாக்கம் விளக்கா, கரைமேல், விடுவாய்ப் பசும் புற இப்பி கால் முத்தம் படு வாய் இருள் அகற்றும், பாத்து. 48
திரை - அலை விரை - மணம் "அலைகளுக்கு மேல் வந்து கரைகளில் ஒதுங்கி நின்ற முத்துக்கள் மணம் பொருந்திய பாக்கத்துக்கு விளக்குகளாய் அமைந்து இருளை நீக்கும். எனவே பலரும் நின் வருகையை அறிந்து பழி கூறுவர்" என்று தோழி தலைவனைப் பார்த்துக் கூறினாள்.
எங்கு வருதி, இருங் கழித் தண் சேர்ப்ப! - பொங்கு திரை உதைப்பப் போந்து ஒழிந்த சங்கு நரன்று உயிர்த்த நித்திலம் நள் இருள் கால் சீக்கும்; வரன்று உயிர்த்த பாக்கத்து வந்து? 49
நரன்று - ஒலித்து "குளிர்ந்த கடற்கரைத் தலைவ! அலைகள் வெளியே தள்ளக் கரையில் வந்து பொருந்திய சங்குகள் ஒலித்துக் கொண்டு ஈன்ற முத்துகள், இருளைப் போக்கும். தலைவ எவ்விடத்தில் உள்ள மறைவைக் கொண்டு நீ வருவாய்? நின் வருகையை யாவரும் அறிவர். ஆதலால் இரவில் வரவேண்டா!" எனத் தோழி தலைவனுக்கு இரவுக் குறி விலக்கிக் கூறினாள். தோழி வரைவு கடாயது
திமில் களிறு ஆக, திரை பறையா, பல் புள் துயில் கெடத் தோன்றும் படையா, துயில்போல் குறியா வரவு ஒழிந்து, கோல நீர்ச் சேர்ப்ப! நெறியால் நீ கொள்வது நேர். 50
திமில் - தோணி புள் - பறவை அரவம் - ஒலி "அழகான கடல் நீரையுடைய துறைத் தலைவனே! தோணியே யானையாகவும், அலைகள் பறையொலியாகவும், கடற் பறவைகளை உறக்கம் கெடும்படியாக வெளிப்படும் படையாகவும் கொண்டு கனாக் கண்டாற் போன்று களவு ஒழுக்கத்தில் தனியாய் வரும் வருகையானது நீங்கப் பெற்று, மணச் சடங்கு முறைப்படி நீ இவளை மணந்து கொள்வது உனக்குத் தகுதியானதாகும்" எனத் தோழி தலைவனைப் பார்த்துக் கூறினாள். (தோழி வரைவு கடாயது) தலைமகற்குத் தோழி குறை நேர்ந்து, பகற்குறியிடம் அறியச் சொல்லியது
கடும் புலால் வெண் மணல் கானல் உறு மீன்கண் படும் புலால் பார்த்தும்; பகர்தும்; அடும்பு எலாம் - சாலிகைபோல் வலை சாலப் பல உணங்கும்; - பாலிகை பூக்கும் பயின்று. 51
சாலிகை - கவசம் உணங்கும் - உலரும் "கருவாட்டைப் பறவைகள் கவராமல் பார்த்துக் கொண்டிருப்போம். அங்குப் பக்கத்தில் உள்ள அடப்பம் கொடிகள் எல்லாம், முளைப்பாலிகைகள் போன்று ஒன்றாகக் கூடி பூத்துக் காணப்பெறும். மிகப் பல வலைகள், உடற் கவசங்களை விரித்து வைத்தாற் போன்று அவற்றின் மீது உலர வைக்கப்பட்டிருக்கும். அத்தகைய இடமே பகற்குறியிடமாகும்" என்று தோழி தலைவனை நோக்கிச் சொன்னாள். தலைமகனைத் தோழி வரைவு கடாயது
திரை பாகன் ஆக, திமில் களிறு ஆக, கரை சேர்ந்த கானல் படையா, விரையாது - வேந்து கிளர்ந்தன்ன வேலை நீர்ச் சேர்ப்ப! - நாள் ஆய்ந்து, வரைதல் அறம். 52
திரை - அலை திமில் - தோணி "அலைகள் யானைப் பாகனாகவும், தோணிகள் ஆண் யானைகளாகவும், சோலைகள் படையாகவும் கொண்டு வேந்தன் புறப்பட்டாற் போன்ற கடல் நீரை உடைய தலைவ! களவுப் புணர்ச்சியில் விருப்பம் கொள்ளாது, நல்ல நாள் ஒன்றைப் பார்த்து இவளை மணந்து கொள்வது நல்லொழுக்கமான நெறியாகும்" என்று தோழி தலைவனை வரைவு கடாயது.
பாறு புரவியா, பல் களிறு நீள் திமிலா, தேறு திரை பறையா, புள் படையா, தேறாத மன் கிளர்ந்த போலும் கடல் சேர்ப்ப! மற்று எமர் முன் கிளர்ந்து எய்தல் முடி! 53
பாறு - பருந்து புள் - பறவை கிளர்த்தல் - எழுதுதல் "பருந்துகள் குதிரையாகவும், பெரிய தோள்கள் பல யானைகளாகவும், தெளிவான அலைகள் வாத்தியங்களாகவும் கடற்பறவை சேனையாகவும் கொண்டு அமைதியின் அருமையை உணராத அரசர்கள் போன்ற கடல் துறைவனே! சுற்றத்தவர்க்கு முன் போய் மணச்சடங்கின்படி இவளை மணத்தலை முடித்துக் கொள்வாயாக!" என தோழி தலைவனுக்குக் கூறியது.
வாராய்; வரின், நீர்க் கழிக் கானல் நுண் மணல்மேல் தேரின் மா கால் ஆழும் தீமைத்தே; ஓர் இலோர், கோள் நாடல், வேண்டா; குறி அறிவார்க் கூஉய்க் கொண்டு, ஓர் நாள் நாடி, நல்குதல் நன்று. 54
மா - குதிரை ஓரில் - ஆராய்ந்து "தலைவனே! இரவில் வரவேண்டாம். வந்தால் தேரின் சக்கரங்கள் நுண்ணிய மணலிடத்தே புதைந்து போகும் தீமைகள் உள்ளது. எனவே நிமித்தங்களை அறிய வல்லவரை அழைத்து நல்ல நாளைப் பார்த்து மணம் கொண்டு இவளுக்கு நீ நன்மை செய்தல் நல்லதாகும்" எனத் தோழி தலைவனிடம் கூறியது.
கண் பரப்ப காணாய், கடும் பனி; கால் வல் தேர் மண் பரக்கும் மா இருள் மேற்கொண்டு, மண் பரக்கு - மாறு, நீர் வேலை! நீ வாரல்! வரின், ஆற்றாள், ஏறு நீர் வேலை எதிர். 55
வேலை - கடல் "நீரினையுடைய கடல்துறைவனே! இவள் துன்பத்தால் கண்ணீர் விடுவதைக் காண்பாயாக! மாறாக வருவாய் ஆயின் கடற்பக்கத்திலுள்ள இக்கடற்கரைப் பட்டினத்தில் இவள் உயிர் வாழாள்" என்று தோழி தலைவனிடம் கூறினாள். தலைமகற்கு இரவுக்குறி நேர்ந்த தோழி, இடம் காட்டியது
கடற் கானல் சேர்ப்ப! கழி உலாஅய் நீண்ட அடல் கானல் புன்னை, தாழ்ந்து, ஆற்ற, மடற் கானல், அன்றில் அகவும் அணி நெடும் பெண்ணைத்து - எம் முன்றில் இள மணல்மேல் மொய்த்து. 56
பெண்ணை - பனை மரம் "கடல்துறைவனே! யாம் விளையாடும் இடம் பெரிய மீன்களைக் கொன்று உலர வைத்திருக்கும் உப்பளத்துடன் இருக்கும். புன்னை மரங்கள் மிகவும் தழைக்கப் பெற்றிருக்கும்; பூ இதழ்களை உடைய சோலையில் வாழும் அன்றில் பறவைகள் கூடி அழைக்கின்ற அழகிய உயர்ந்த பனையுடன் கூடியது. இதுவே இரவுக்குறி" என்றாள். தோழி வரைவு கடாயது
வரு திரை தான் உலாம் வார் மணல் கானல், ஒரு திரை ஓடா அளவை, இரு திரை முன் வீழும் கானல், முழங்கு கடல் சேர்ப்ப! என் வீழல் வேண்டா, இனி. 57
வீழல் - விரும்புதல் "அலைகள் வந்து உலாவுகின்ற மணற் பரப்பில் ஓர் அலை போய்ச் சேர்வதற்கு முன் இரண்டு அலைகள் வந்து மோதும், இத்தகைய வளப்பம் கொண்ட கடல் துறைவனே! இனி என்னால் வந்து மேற்கொள்ளும் இந்தக் களவொழுக்கத்தை விரும்புதல் வேண்டுவதன்று" என்று தோழியுரைத்தாள். தலைமகற்குத் தோழி பகற்குறி நேர்ந்து, இடம் காட்டியது
மாயவனும் தம்முனும் போலே, மறி கடலும் கானலும் சேர் வெண் மணலும் காணாயோ - கானல் இடை எலாம், ஞாழலும் தாழையும்; ஆர்ந்த புடை எலாம், புன்னை; - புகன்று? 58
புடை - பக்கம் "கண்ணனும் பலராமனும் போலக் காணப்படும் கடலும் கடற்கரைச் சோலையும் அதனைச் சேர்ந்த வெண் மணலினையும் அந்தச் சோலையின் நடுவெல்லாம் நிறைந்திருக்கும் கோங்கு, தாழை, புன்னை மரங்களையும் விரும்பி நீ பார்ப்பாயாக! அதுவே பகற்குறியிடம்" என்று தோழி தலைவனுக்குச் சொன்னான். 'இப்பொழுது வாரல்!' என்று தோழி வரைவு கடாயது
பகல் வரின், கவ்வை பல ஆம் பரியாது, இர வரின், ஏதமும் அன்ன; புக அரிய தாழை துவளும் தரங்க நீர்ச் சேர்ப்பிற்றே, ஏழை நுளையர் இடம். 59
பரியாது - இரங்காது தரங்கம் - அலை "தலைவ! நீ பகலில் வந்தால் பழிச் சொற்கள் பலவாய்ப் பெருகும். அத்தகைய பழிச் சொற்களுக்காக நீ இரவில் வருவாயானால் துன்பங்களும் அவை போன்று பலவாகத் தோன்றும். மேலும் எளியவரான எம்முடையவரான பரதவர் வாழும் இடமாவது மற்றவர் புகுவதற்கு அரிய தாழை மரங்கள் நெருங்கிப் படர்ந்து கிடக்கும் அலை பொருந்திய கடல் நீரையுடைய கரையில் உள்ளதாகும். எனவே இரண்டு பொழுதுகளும் வரவேண்டா. அதை விடுத்து மணத்தை மேற்கொள்வாயாக" என்று தோழி தலைவனிடம் சொன்னாள். பாங்கற்குத் தலைமகன் கூறியது
திரை அலறிப் பேரத் தெழியாத் திரியா, கரை அலவன் காலினால் காணா, கரை அருகே நெய்தல் மலர் கொய்யும் நீள் நெடுங் கண்ணினாள், மையல், நுளையர் மகள். 60
திரை - அலை தலைவன் தன் பாங்கனிடம் "மயக்கத்தை உண்டாக்கும் தலைவி, கடலிலே நீந்துபவள். கரையிடத்து அலைந்து அங்கிருக்கும் நண்டுகளைக் கால்களால் கண்டு பிடிப்பவள். கரையில் உள்ள நெய்தல் பூக்களைக் கொய்பவள். நீண்ட கண்களை உடையவள்" என்று கூறினாள். தலைமகற்குத் தோழி இரவுக்குறி மறுத்தது
அறிகு அரிது, யார்க்கும் - அரவ நீர்ச் சேர்ப்ப! நெறி, திரிவார் இன்மையால், இல்லை - முறி திரிந்த கண்டல், அம் தண் தில்லை கலந்து, கழி சூழ்ந்த மிண்டல், அம் தண் தாழை, இணைந்து. 61
தாழை - தாழை மரம் "முள்ளிச் செடிகள் தில்லை மரங்களுக்கிடையே சூழப் பெற்றன. நெருங்கிய தாழை மரங்களும் அவற்றுடன் கூடியுள்ளன. அதனால் எவர்க்கும் வழியை அறிதல் அரிய ஒன்றாகும். ஆகவே நீ இரவுக் குறியில் வருவது துன்பம் தருவதாகும்!" எனத் தோழி தலைவனைப் பார்த்துச் சொன்னாள். தலைமகளை ஒருநாள் கோலம் செய்து, அடியிற் கொண்டு முடிகாறும் நோக்கி, 'இவட்குத் தக்கான் யாவனாவன் கொல்லோ?' என்று ஆராய்ந்த செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது
வில்லார் விழவினும், வேல் ஆழி சூழ் உலகில் நல்லார் விழவகத்தும், நாம் காணேம்; - நல்லாய்! - உவர்க்கத்து ஒரோ உதவிச் சேர்ப்பன் ஒப்பாரைச் சுவர்க்கத்து உளராயின், சூழ். 62
சூழ்தல் - ஆராய்தல் "நல்ல தாயே! வில் விழாக் கூட்டத்திலும் மணவிழாவிலும் கடற்கரையில் இவளுக்கு உதவியைச் செய்த கடல் துறைக்கு உரியவனைப் போன்ற ஆடவரை நாம் காணவில்லை! எனவே இவளுக்குத் தக்கவன் அவனே! அவனையல்லாமல் அவனைப் போன்றவர் சுவர்க்கத்தில் இருப்பாராயின் ஆராய்வாயாக!" என்று சொன்னாள். 3. பாலை தலைமகளைத் தோழி பருவம் காட்டி, வற்புறீஇயது
எரி நிற நீள் பிண்டி இணர் இனம் எல்லாம் வரி நிற நீள் வண்டர் பாட, புரி நிற நீள் பொன் அணிந்த, கோங்கம்; - புணர் முலையாய்! - பூந்தொடித் தோள் என் அணிந்த, ஈடு இல் பசப்பு? 63
பிண்டி - அசோகு "அசோக மரங்கள் மலர்க் கொண்டுள்ளன. கோங்க மரங்கள் பெரிய பொன் போன்ற மலர்களை உடையன ஆயின. அழகிய வளையலை அணிந்த நின் தோள் மட்டும் தகுதியற்ற பசலை நிறத்தை எதன் பொருட்டாக மேற்கொண்டன?" எனத் தோழியுரைத்தாள்.
'பேணாய், இதன் திறத்து!' என்றாலும், பேணாதே நாண் ஆய நல் வளையாய்! நாண் இன்மை காணாய்; எரி சிதறி விட்டன்ன, ஈர் முருக்கு; ஈடு இல் பொரி சிதறி விட்டன்ன, புன்கு. 64
நாண் - நாணம் "நல்ல வளையலை அணிந்தவளே! முருக்க மரங்கள் தீயைச் சிதறவிட்டாற் போல் பூத்தன. புங்க மரங்கள் நெற் பொரிகளைச் சிதறியதைப் போல் மலர்களை மலரச் செய்தன. எனவே, உன் முந்தைச் செயல் நாணம் உடையது என்பதையும், தலைவன் குறிப்பிட்டுச் சொல்லிச் சென்ற வேனிற் பருவம் வந்தது என்பதையும் பார்ப்பாயாக!" எனக் கூறினாள். சுரத்திடைச் சென்ற செவிலித்தாய் குரவொடு புலம்பியது
தான் தாயாக் கோங்கம் தளர்ந்து முலை கொடுப்ப, ஈன்றாய் நீ பாவை, இருங் குரவே! ஈன்றாள் மொழி காட்டாய் ஆயினும், முள் எயிற்றாள் சென்ற வழி காட்டாய், 'ஈது' என்று, வந்து. 65
எயிறு - பல் "பெருங்குரா மரமே! கோங்க மரம் பூக்களைக் கொடுக்க நீ பொம்மை போன்ற காய்களைப் பெற்றுள்ளாய். அதனால் என்னால் பெற்றெடுத்த என் மகள் உன்னிடம் சொல்லிய பொருளை எனக்கு எடுத்துக் காட்ட வல்லாய் அல்லை! என்றாலும் கூர்மையான பற்களைக் கொண்ட என் மகள் தலைவன் பின் போன வழியை முன் வந்து இது தான் என்று காட்டுவாயாக" என்று செவிலி குரா மரத்துடன் கூறினாள். தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது
வல் வரும்; காணாய் - வயங்கி, முருக்கு எல்லாம், செல்வர் சிறார்க்குப் பொற்கொல்லர்போல், நல்ல பவளக் கொழுந்தின்மேல் பொன் - தாலி பாஅய்த் திகழக் கான்றிட்டன, தேர்ந்து! 66
வயங்கி - ஒளியிழந்து "முருக்க மரங்கள் எல்லாம் பொன்னால் செய்யப்பட்ட கழுத்தணியின் மீது பவளக் கொழுந்தினைப் பொருத்தி வைத்தாற் போன்று ஒளியோடு மலர்ந்தன. ஆகையால் ஆராய்ந்து இது வேனிற் காலம் என்பதை அறிவாயாக! எனவே, நம் தலைவன் விரைவில் வருவான்" எனத் தலைவியிடம் சொன்னாள். பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது
வெறுக்கைக்குச் சென்றார், விளங்கிழாய்! தோன்றார்; 'பொறுக்க!' என்றால், பொறுக்கலாமோ? - ஒறுப்பபோல் பொன்னுள் உறு பவளம் போன்ற, புணர் முருக்கம்; என் உள் உறு நோய் பெரிது! 67
மிக்கது - மிகுந்தது "அணிகளை அணிந்தவளே! முருக்க மரங்கள் என்னை வருத்த வந்தவை போன்று பூத்தன. அவற்றால் என் துன்பம் மிக்கது. பொருள் தேடும் பொருட்டுச் சென்ற தலைவர் வேனிற் பருவம் வந்தும் திரும்பி வரவில்லை! இத்தகைய நிலையில் என்னைப் பார்த்து நீ பொறுத்துக் கொள் என்றால் பொறுத்துக் கொள்ள இயலுமோ?" என்று தலைவி தோழியிடம் சொன்னாள். பொருள் வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவு அழுங்கியது
சென்றக்கால், செல்லும் வாய் என்னோ? - இருஞ் சுரத்து நின்றக்கால், நீடி ஒளி விடா, - நின்ற இழைக்கு அமர்ந்த ஏய் ஏர் இளமுலையாள் ஈடு இல் குழைக்கு அமர்ந்த நோக்கின் குறிப்பு! 68
குழை - காதணி "காதுவரை நீண்ட தலைவியின் கண்ணின் பார்வை தொலைவு தொடர்ந்து நம்முன்பு வந்து ஒளிவிட்டுப் பெரிய இப்பாலை நில வழியே எதிர்ப்பட்டு விளங்கினால், பொருள்தேடும் பொருட்டு நாம் இவளைப் பிரிந்து செல்லும் போது, போகும் வகை என்னாகும்?" எனத் தலைவன் நெஞ்சிற்குக் கூறினான். இடைச் சுரத்துக் கண்டார் செலவு விலக்கியது
அத்தம் நெடிய; அழற் கதிரோன் செம்பாகம் அத்தம் மறைந்தான்; இவ் அணியிழையோடு, ஒத்த தகையினால், எம் சீறூர்த் தங்கினிராய், நாளை வகையினிராய்ச் சேறல் வனப்பு. 69
செம்பாகம் - சரிபாதி வனப்பு - அழகு "நீங்கள் செல்லும் வழி நீண்டது. தீயைப் போன்ற கதிரவன் பாதி மறைந்தனன். எனவே இவளுடன் நீயும் எம் சிறிய ஊரில் தங்கி மறுநாள் செல்க" என்று கண்டவர் தலைவனிடம் கூறினர். புணர்ந்து உடன் போய தலைமகன், தலைமகளை ஆற்றுவித்துக் கொண்டு போவான், சொல்லியது
நின் நோக்கம் கொண்ட மான், தண் குரவ நீழல், காண்; பொன் நோக்கம் கொண்ட பூங் கோங்கம் காண்; - பொன் நோக்கம் கொண்ட சுணங்கு அணி மென் முலைக் கொம்பு அன்னாய்! - வண்டல் அயர், மணல்மேல் வந்து! 70
வண்டல் - மகளிர் விளையாட்டு தலைவன் தலைவியை நோக்கி, "மான்களையும், குராமரத்தின் நிழலின் தன்மையையும் பாராய். கோங்க மரங்களைக் காண்பாய். இந்த அழகிய மணலிடத்தில் விளையாடுவாயாக!" என்று கூறினான். சுரத்திடைச் சென்ற செவிலிக்குத் தலைமகனையும் தலைமகளையும் கண்டார் சொல்லிய வார்த்தையைத் தாங்கள் கேட்டார்க்குச் சொல்லி ஆற்றுவித்தது
அம் சுடர் நீள் வாள் முகத்து ஆயிழையும், மாறு இலா வெஞ் சுடர் நீள் வேலானும், போதரக் கண்டு, அஞ்சி, 'ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக, இரு சுடரும் போந்தன!' என்றார். 71
வாள் - ஒளி போதரல் - செல்லல் "அழகிய சந்திரனைப் போன்ற முகத்தை உடைய தலைவியும், ஒப்பில்லாத ஒளியையும் வேலையும் கொண்ட தலைவனும், இந்தப் பாலை வழியில் செல்ல, அவர்களைப் பார்த்து அஞ்சி இரண்டு சுடர்களுள் ஒன்றும் இல்லாது உலகம் முழுவதும் கெடுமாறு இரண்டு சுடர்களும் மறைந்து சென்றன" என்று கண்டோர் செவிலியிடம் கூறினர். சுரத்திடைச் சென்ற செவிலியைத் தலைமகளைக் கண்டார் சொல்லி ஆற்றுவித்தது
'"முகம் தாமரை; முறுவல் ஆம்பல்; கண் நீலம்; இகந்து ஆர் விரல் காந்தள்" என்று என்று, உகந்து இயைந்த மாழை மா வண்டிற்கு ஆம் நீழல், வருந்தாதே, ஏழைதான் செல்லும், இனிது. 72
மாழை - கூட்டம் "தாமரை மலர் போன்ற முகம், ஆம்பல் போன்ற பற்கள், குவளை போன்ற கண்கள், காந்தள் போன்ற விரல்கள் என எண்ணி, அவ் உறுப்புகளை விரும்பித் தலைவியுடன் நெருங்கி வண்டுகள் வாழும். அத்தகைய வண்டுகளுக்கு தக்கதான சோலையில் துன்புற்று தன் தலைவியுடன் இன்று சென்றாள்" என செவிலிக்குக் கண்டவர் கூறினர். முன்னை ஞான்று, உடன்போக்கு வலித்து, தலைமகனையும் தலைமகளையும் உடன்படுவித்து, பின்னை அறத்தொடு நிலை மாட்சிமைப்பட்டமையால் தலைமகளைக் கண்டு, தோழி உடன்போக்கு அழுங்குவித்தது
செவ் வாய், கரிய கண், சீரினால் கேளாதும், கவ்வையால் காணாதும், ஆற்றாதும், அவ் ஆயம், தார்த் தத்தை வாய் மொழியும், தண் கயத்து நீலமும், ஓர்த்து ஒழிந்தாள் - என் பேதை ஊர்ந்து. 73
கயம் - குளம் கவ்வை - பழிச்சொல் தார் - மாலை "அலரால் முன்பு உடன்போக்கைக் கொண்டாள். ஆனால் கிளியின் பேச்சினைக் கேட்க முடியாததாலும், குளிர்ந்த குளத்தில் உள்ள நீல மலர்களைப் பார்க்க இயலாததாலும் தோழியர் வருந்துவதாலும் உடன்போக்கைக் கைவிட்டாள்" என்று தோழி தலைவனிடம் கூறினாள். காமம் மிக்க கழிபடர் கிளவி; நிலத்தான் பாலை; ஒழுக்கத்தான் நெய்தல்
புன் புறவே! சேவலோடு ஊடல் பொருள் அன்றால்; அன்பு உறவே உடையார் ஆயினும், வன்புற் - றது காண்! அகன்ற வழி நோக்கி, பொன் போர்த்து, இது காண், என் வண்ணம், இனி! 74
வண்ணம் - அழகு "பெண் புறாவே! நீ ஊடுதலை நீக்குவாயாக! ஏனெனில் எம் காதலர் அன்புடன் இருந்தவர். இப்போது பிரிந்து உள்ளம் நெகிழாது வலியவர் ஆனார். தேரின் அடிச்சுவட்டைப் பார்த்து, உடலில் பசலை பரவி காணப்படும் என் நிலையைக் காண்பாயாக!" எனத் தலைவி கூறினாள். மகட் போக்கிய தாய் சொல்லியது
எரிந்து சுடும் இரவி ஈடு இல் கதிரான், விரிந்து விடு கூந்தல் வெஃகா, புரிந்து விடு கயிற்றின் மாசுணம் வீயும் நீள் அத்தம், அடு திறலான் பின் சென்ற ஆறு. 75
மாசுணம் - பாம்பு வீயும் - இறக்கும் "என் மகள் தலைவனுடன் சென்ற வழி சூரியனின் வெப்பத்தால் மலைப்பாம்புகள் மாண்டு கிடக்கின்ற பாலை வழியாகும். அத்தகைய வழியில் செல்வாளோ!" என நற்றாய் தனக்குள் கூறி வருந்தினாள். |