உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
கண்ணஞ் சேந்தனார் இயற்றிய திணைமொழி ஐம்பது (உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.) இந் நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல் திணைமொழி ஐம்பது என ஐந்திணை ஐம்பதிலிருந்து வேறுபட்டுப் பெயர் பெற்றுள்ளது. இந் நூலை இயற்றியவர் கண்ணஞ் சேந்தனார். இவர் சாத்தந்தையாரின் புதல்வர். இவரது பெயரைக் கொண்டே இவர் வைதிக சமயச் சார்பினர் என்று அறியலாம். கார் நாற்பதின் ஆசிரியர் கண்ணங் கூத்தனார் என்று கூறப்படுதலால், சேந்தனாரும், கூத்தனாரும் ஒரு வேளை உடன் பிறந்தோராயிருத்தல் கூடும் என்று ஊகிக்க இடம் உண்டு. 1. குறிஞ்சி அஞ்சி அச்சுறுத்துவது
புகழ் மிகு சாந்து எறிந்து, புல் எரி ஊட்டி, புகை கொடுக்கப் பெற்ற புலவோர் துகள் பொழியும் வான் உயர் வெற்ப! இரவின் வரல் வேண்டா, யானை உடைய சுரம். 1
புலவோர் - தேவர்கள் வெற்பு - மலை "மணமிக்க சந்தனமரங்களை வெட்டி, நெருப்பு வைத்து புகையைத் தேவர்களுக்கு அளிக்க, அதைப் பெற்ற தேவர்கள் மழையை அளிக்கும் மலைநாட்டை உடையவனே! நீ வரும் வழியில் யானைகள் உலவுவதால் இரவில் வரவேண்டாம்" எனத் தோழி கூறினாள். இதன் பயன் விரைவில் தலைவியை மணம் செய்து கொள்ள வேண்டும் என்பதாகும். செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது
கண முகை கை எனக் காந்தள் கவின், 'மண முகை' என்று எண்ணி, மந்தி கொண்டாடும் விறல் மலை நாட! வரவு அரிதாம்கொல்லோ? புனமும் அடங்கின காப்பு. 2
மந்தி - பெண் குரங்கு முகை - அரும்பு "காந்தள் கைகள் என்று கூறும்படி அரும்புகளுடன் இருப்பதைக் கண்ட பெண் குரங்குகள் முளைப் பாலிகைகளை உடைய குடங்கள் எனக் கருதி விளையாடும் நாட்டை உடையவனே! தினைக் கதிர்கள் கொய்து காவலும் முடிந்துவிட்டது. தலைவி வீட்டில் இருக்கிறாள். நீ இங்கு வருதல் அரிது. எனவே தலைவியை மணந்து கொள்வாய்" என்று தோழி தலைவனிடம் கூறினாள். தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது
ஓங்கல் இறு வரைமேல் காந்தள் கடி கவின, பாம்பு என ஓடி, உரும் இடிப்பு, கண்டு இரங்கும் பூங் குன்ற நாடன் புணர்ந்த அந் நாள் போலா, ஈங்கு நெகிழ்ந்த, வளை. 3
ஓங்கல் - உயர்ச்சி கடி - புதிது உரும் - இடி "காந்தள் பூக்களுடன் திகழ, மேகம் கண்டவர் பாம்பு என வியக்கும்படி மின்னுக்கொடியுடன் விளங்க, இடி இடிக்க, பிரிந்த காதலர் வருந்தும் மலையை உடையவன், களவு ஒழுக்கத்தில் புணர்ந்த அந்த நாளைப் போன்று வேறு எந்த நாளும் இன்பம் தராது வளைகள் நெகிழ்ந்தன" என்று வெளிப்புறத்தில் இருக்கும் தலைவன் கேட்குமாறு தோழி தலைவியிடம் கூறினாள். தலைமகனைத் தோழி இரவுக்குறி நயப்பித்தது
ஏனம் இடந்திட்ட ஈர் மணி கொண்டு, எல்லிடை, கானவர் மக்கள் கனல் எனக் கை காய்த்தும் வான் உயர் வெற்பன் வருவான்கொல், என் தோழி மேனி பசப்புக் கெட? 4
ஏனம் - தினை எல் - இரவு "குறவரின் மக்கள் உழுங்காலத்தில் விட்ட மாணிக்க மணிகளைத் தீயாகும் என எண்ணி இரவுக் காலத்தில் குளிர் காய்வர். அத்தகைய நாட்டை உடையவனே! தலைவியின் பசலை நிறமானது கெடும்படி இரவில் அருள்வானோ, அறியேன்" என்று தோழி தலைவனிடம் கூறினாள். (தலைவனை இரவில் வருமாறு கூறல்) பின்னின்ற தலைமகனைக் காவல் மிகுதி சொல்லிச் சேட்படுத்தது
விரை கமழ் சாரல் விளை புனம் காப்பார் வரையிடை வாரன்மின்; - ஐய! - உரை கடியர்; வில்லினர்; வேலர்; விரைந்து செல் அம்பினர்; கல்லிடை வாழ்நர் எமர். 5
விரை கமழ் - மணம் வரை - மலை "இம்மலையில் வாழும் எங்களவரான வேடுவர், மணமிக்க இம்மலைச்சாரலில் உள்ள தினைப்புனத்தினை கையில் வேலையும், வில்லையும், விரைந்து செல்லும் அம்புகளையும் ஏந்தி இரவில் காவல் செய்வர். ஆதலின் இம்மலையிடம் இரவில் வரவேண்டாம்" எனத் தோழி தலைவனிடம் கூறினாள்.
யானை உழலும் அணி கிளர் நீள் வரைக் கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்; ஏனலுள், - ஐய! - வரவு மற்று என்னைகொல்? காணினும், காய்வர் எமர். 6
ஏனல் - தினை "தலைவனே! யானைகள் திரியும் குறிஞ்சி நிலத்தில் வாழும் வேடமகள் நாங்கள். மேன்மகனாகிய தாங்கள் இத்தினைப் புனத்தில் என்ன பயன் கருதி வந்தீர்? எம்மவர் கண்டால் சினந்து உமக்குத் தீங்கு செய்வர். இங்கு வர வேண்டாம்" என்று தலைவனிடம் தோழி கூறினாள். இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது
யாழும் குழலும் முழவும் இயைந்தென வீழும் அருவி விறல் மலை நல் நாட! மாழை மான் நோக்கியும் ஆற்றாள்; இர வரின், ஊர் அறி கெளவை தரும். 7
மாழை - அழகு "யாழ், குழல், முழவு ஒலி ஒன்று சேர்தல் போன்ற ஒலியை உடைய அருவிகளை உடைய நாடனே! நீ இரவில் வருவதால் மான் போன்ற பார்வையை உடைய தலைவி உனக்கு ஏற்படும் துன்பத்தை நினைத்து வருந்துவாள். ஊரவர் அறியும் பழிச் சொற்களே பரவி நிற்கும்" என்று தோழி தலைவனிடம் கூறினாள். (சேட்) படை
வேங்கை மலர, வெறி கமழ் தண் சிலம்பின் வாங்கு அமை மென் தோள் குறவர் மகளிரேம்; சோர்ந்து குருதி ஒழுக, மற்று இப் புறம் போந்தது இல், - ஐய! - களிறு. 8
அமை - மூங்கில் "தலைவனே! வேங்கை மலர்களால் மணம் வீசும் மலைச் சாரலில் மூங்கிலைப் போன்ற மென்மையான தோள்களை உடைய குறப் பெண்களாகிய நாங்கள் வாழும் பகுதியில் இரத்தம் வடிந்து ஒழுகும் ஆண் யானை வரவில்லை. வேறு இடத்திற்குப் போய்த் தேடுவீர்" என்று தோழி தலைவனை அங்கிருந்து அகற்றினாள். தோழி தலைமகனை இரவுக்குறி நயப்பித்தது
பிணி நிறம் தீர்ந்து, பெரும் பணைத்தோள் வீங்க, மணி மலை நாடன் வருவான்கொல், - தோழி! - கணி நிற வேங்கை மலர்ந்து, வண்டு ஆர்க்கும் மணி நிற மாலைப் பொழுது? 9
பிணி நிறம் - பசலை நிறம் "தலைவியே! நம் மலைநாட்டுத் தலைவன் பிரிவால் ஏற்பட்ட துன்பத்தால் தோன்றும் பசலை நீங்கப் பெற்றுப் பூரிக்குமாறு தினையைக் கொய்ய வேண்டும் காலத்தைக் காட்டும் சோதிடன் போல வேங்கை மலர்ந்தன. அப்படிப்பட்ட மாலை நேரத்தில் தலைவன் வரமாட்டானோ?" என்று கூறுவதன் மூலம் பகற்குறியைத் தவிர்த்து இரவுக் குறியில் வருமாறு தோழி தலைவனிடம் கூறினாள். தலைமகன் சிறைப்புறத்தானாக, படைத்து மொழி கிளவியால், தோழி வரைவு கடாயது
பலவின் பழம் பெற்ற பைங் கண் கடுவன், 'எல!' என்று இணை பயிரும் ஏகல் சூழ் வெற்பன் புலவும்கொல்? - தோழி! - புணர்வு அறிந்து, அன்னை செலவும் கடிந்தாள், புனத்து. 10
கடுவன் - ஆண் குரங்கு "நம் களவொழுக்கத்தைச் செவிலி அறிந்து நாம் சோலைக்குச் செல்லும் போக்கினைத் தவிர்க்கிறாள். தலைவனைக் காண முடியாது. ஆண்குரங்கு பெண்குரங்குடன் இணைந்து 'ஏடி' என்று அழைத்து அன்புடன் பழகும் மலைநாடன் நம்முடன் பிணங்கி ஊடல் கொள்வானோ?" எனத் தோழி தலைவியிடம் வினவினாள். 2. பாலை தலைமகனது செலவு உணர்ந்து, வேண்டாத மனத்தாளாய், தலைமகள் தோழிக்குச் சொல்லியது
கழுநீர் மலர்க் கண்ணாய்! கெளவையோ நிற்க, பொருள் நீரார் காதலர் பொய்த்தனர், நீத்தார்- அழி நீர ஆகி, அரித்து எழுந்து தோன்றி, வழி நீர் அறுத்த சுரம். 11
கௌவை - அலர் சுரம் - பாலை "நீர் மலரினைப் போன்ற கண்களையுடைய என் தோழியே! தலைவன் களவுப் புணர்ச்சியின் போது கூறிய உறுதிமொழியை மறந்து, எங்கும் அழிவு பெற்ற புல் முதலான தூசுகளை நீக்கி, பேய்த்தேர் உண்டாக்கி, நீர் இல்லாத வறண்ட பாலை நிலத்தில் நம்மை விட்டுப் பொருள் தேடச் சென்றார் " என்று தலைவி தோழியிடம் கூறினாள். 'யான் பிரியத் தலைமகள் ஆற்றுமோ? நீ அறிவாயாக!' என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது
முரி பரல ஆகி, முரண் அழிந்து தோன்றி, எரி பரந்த கானம் இயை பொருட்குப் போவீர்; அரி பரந்த உண்கண்ணாள் ஆற்றாமை நும்மின் தெரிவார் யார், தேரும் இடத்து? 12
அரி - ஆராய்ந்து "உடைந்த மரங்களையுடைய, வலிமை அழிந்து தீ பரவியுள்ள காட்டில் பொருள் தேடச் செல்லும் தலைவரே! உம் பிரிவால் வருந்தும் தலைவியின் வருத்தத்தை நும்மைப் போல் ஆராய்ந்து அறிபவர் யார்? நான் அதை அறியேன்" என்று தோழி தலைவனிடம் கூறல். பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
ஓங்கு குருந்தோடு அரும்பு ஈன்று பாங்கர் மராஅ மலர்ந்தன, தோன்றி; விராஅய்க் கலந்தனர் சென்றார் வலந்த சொல் எல்லாம்- பொலந்தொடீஇ! - பொய்த்த குயில். 13
பாங்கர் - பக்கம் பொலந்தொடி - தங்கவளையல் மராமரங்கள் பக்கத்தில் உயர்ந்த குருந்த மரங்களுடன் கூடி மொட்டுகள் மலர்ந்துள்ளன. தலைவர் கூறிய உறுதிமொழியை வேனிற் பருவம் வருவதால் குயில்கள் கூவி பொய்யாக்கி விட்டன என்று இளவேனில் பருவத்தைக் கண்டு தலைவி வருந்தி தோழியிடம் கூறினாள்.
புன்கு பொரி மலரும் பூந் தண் பொழில் எல்லாம் செங் கண் குயில் அகவும் போழ்து கண்டும், பொருள் நசை உள்ளம் துரப்ப, துறந்தார் வரு நசை பார்க்கும், என் நெஞ்சு. 14
பொழில் - சோலை நசை - விருப்பம் "புன்னை மரங்கள் மலரவும் சிவந்த கண்களையுடைய குயில்கள் கூவி அழைக்கும்படியான வேனிற் காலத்தை அறிந்தும் பொருள் மீது கொண்ட ஆசையினால் நம்மை விட்டுப் பிரிந்து போன தலைவர் நம்மை நாடி வருவதை எதிர் நோக்குகின்றது என் நெஞ்சு" என்று இளவேனிற் பருவம் வந்ததை அறிந்த தலைவி கூறினாள். 'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது
சிறு புன் புறவொடு சிற்றெழால் சீறும் நெறி அரு நீள் சுரத்து அல்குவர்கொல், - தோழி! - முறி எழில் மேனி பசப்ப, அருள் ஒழிந்து. ஆர் பொருள் வேட்கையவர்? 15
அல்குதல் - தங்குதல் முறி - இளந்தளிர் "என் மேனியின் நிறம் பசலை அடையுமாறு அன்பு நீக்கி, பொருள்களில் விருப்பம் கொண்ட தலைவர், புறாக்களும், 'எழால்' என்ற பறவையும் சினந்து போர் செய்யும் பாலை நிலத்தின்கண் தங்கி நம்மை மறப்பரோ? மறக்கமாட்டார், அருள் செய்வார்" என்று தலைவி தோழியிடம் கூறினாள். புணர்ந்து உடன்போகிய தலைமகன் தலைமகளை ஆற்றுவித்துக் கொண்டு சொல்லியது
கருங் கால் மராஅ நுணாவோடு அலர, இருஞ் சிறை வண்டுஇனம் பாலை முரல,- அரும்பிய முள் எயிற்று அம் சொல் மடவாய்!- விரும்பு, நாம் செல்லும் இடம். 16
எயிறு - பல் கால் - அடிப்பாகம் "அரும்பு போன்ற பற்களை உடைய இளம் பெண்ணே! மராமரமும், நுணாமரமும் சேர்ந்து மலர்ந்தும், பெரிய இறகுகளை உடைய வண்டினங்கள் பாலைப் பண்ணைப் பாடியும் நம்மை அன்புடன் வரவேற்பதைக் காண்பாயாக" என்று தன்னுடன் வந்த தலைவியிடம் தலைவன் கூறினான். 'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது
கல் அதர் வாயில், கடுந் துடிகள் பம்பும் வில் உழுது வாழ்நர் குறும்புள்ளும், போவர்கொல்- எல் வளை மென் தோள் நெகிழ, பொருள் நசைஇ, நல்காத் துறந்த நமர்? 17
அதர் - பாலை நில வழி "தோள்கள் மெலியுமாறு நம்மை விட்டுப் பொருள் தேடச் சென்ற தலைவர், உடுக்கைகள் ஒலிக்கின்ற வில் போரால் வாழ்வை நடத்தும் பாலை நிலத்தில் வாழும் மறவரின் ஊர்களில் செல்வாரோ? செல்லாமல் திரும்புவார்" என்று தலைவி தோழிக்குக் கூறல். செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள் உடன்படாது சொல்லியது
கதிர் சுட, கண் உடைந்து, முத்தம் சொரியும் வெதிர் பிணங்கும் சோலை வியன் கானம் செல்வார்க்கு எதிர்வன போலிதே? எல் வளையோ, கொன்னே உதிர்வன போல உள! 18
வெதிர் - மூங்கில் எல் - ஒளி "வெப்பத்தால் முத்துக்கள் கொட்டுகின்ற மூங்கில் புதர்களையும் சோலைகளையும் கடந்து செல்ல விரும்பிய நம் தலைவருக்கு உடன்படாமல் என் கை வளையல்கள் கீழே விழுகின்றன" என்று தலைவி தோழியிடம் கூறினாள். 'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது
கலையொடு மான் இரங்கு கல் அதர் அத்த நிலை அஞ்சி, நீள் சுரத்து அல்குவர்கொல்? - தோழி! - முலையொடு சோர்கின்ற, பொன் வண்ணம்; அன்னோ! வளையோடு சோரும், என் தோள். 19
கலை - ஆண் மான் அல்குதல் - தங்குதல் "பொன் போன்ற என் மேனி மார்பகங்களோடு சேர்ந்து தளர்ந்துள்ளன. தோழியே! ஆண் மான்களோடு பெண் மான்கள் நீர் இல்லாமல் வருந்தும் பாலைநிலத்தைக் கண்டு அஞ்சி, அப்பாலை நிலத்தில் தங்கி இருப்பாரோ? இருக்காமல் விரைவில் திரும்புவார்" எனத் தலைவி தோழியிடம் கூறினாள். மகட் போக்கிய நற்றாய் சொல்லியது
ஏற்றிய வில்லின் எயினர் கடுஞ் சுரம், பாற்றினம் சேரப் படுநிழல் கண்டு அஞ்சி, கூற்று அன வல் வில் விடலையோடு என் மகள் ஆற்றும்கொல், ஐய நடந்து? 20
கூற்று - எமன் பாறு - பருந்து "வேட்டுவர் வாழ்கின்ற கொடிய பாலை நிலத்தில் தலைவனுடன் சென்ற தலைவி பருந்துக் கூட்டத்தின் நிழலைக் கண்டு அஞ்சி, தலைவனுடன் மெல்ல நடந்து செல்வாளோ?" என வருந்தி நற்றாய் கூறல். 3. முல்லை தலைமகன் வரைவு மலிந்தது தோழி தலைமகட்குச் சொல்லியது
அஞ்சனம் காயா மலர, குருகிலை ஒண் தொடி நல்லார் முறுவல் கவின் கொள, தண் கமழ் கோடல் துடுப்பு ஈன, காதலர் வந்தார்; திகழ்க, நின் தோள்! 21
அஞ்சனம் - மை, கருமை கோடல் - வெண் காந்தள் மலர் "காயாச்செடிகள் மை போன்ற மலர்களைப் பூக்கவும், குருக்கத்திச் செடிகளின் இலைகள் பெண்களின் பற்கள் போன்று விளங்கவும், இவற்றைக் கடந்து பொருள் பெறச் சென்ற தலைவர் மணம் பேச வந்தார். பிரிந்த போது மெலிந்த உன் தோள்கள் முன் போல் வீங்கி விளங்குக" என்று தோழி தலைவியிடம் கூறல். தோழி பருவம் காட்டி, தலைமகளை வற்புறுத்தியது
மென் முலைமேல் ஊர்ந்த பசலை மற்று என் ஆம்கொல்?- நல் நுதல் மாதராய்! - ஈதோ நமர் வருவர்; பல் நிற முல்லை அரும்ப, பருவம் செய்து, இன் நிறம் கொண்டது, இக் கார். 22
நுதல் - நெற்றி கார் - மழைக்காலம் "முல்லை அரும்புகளைத் தோற்றுவித்து கார்காலத்தின் இனிய காட்சியைத் தந்தது. நம் தலைவர் வந்து சேர்வார், மார்பகங்களின் மீது படர்ந்திருந்த பசலை விரைவில் நீங்கிவிடும். நீ வருந்தாமல் இரு" என்று தோழி தலைவியிடம் கூறியது.
சென்றார் வருவர்; செறிதொடீஇ! கார் இஃதோ, வெஞ் சின வேந்தர் முரசின் இடித்து உரறி, தண் கடல் நீத்தம் பருகி, தலைசிறந்து, இன்றையின் நாளை மிகும். 23
தொடி - வளையல் நீத்தம் - வெள்ளம் "அடர்த்தியான வளையல்கள் அணிந்த தலைவியே! மேகம் கோபமிக்க வேந்தர்களைப் போல இடியோடு கூடி முழங்கி குளிர்ந்த கடல்நீரை முகந்து சிறப்புடன் விளங்கியது. பொருள் தேடிச் சென்ற தலைவர் இன்றோ நாளையோ வருவார், வருந்தாதே" என்று தலைவியிடம் தோழி கூறினாள்.
செஞ் சுணங்கின் மென் முலையாய்! சேர் பசலை தீர்; இஃதோ வஞ்சினம் சொல்லி வலித்தார் வரு குறியால்; வெஞ் சினம் பொங்கி, இடித்து உரறிக் கார் வானம் தண் பெயல் கான்ற, புறவு. 24
சுணங்கு - தேமல் "தேமல் படர்ந்த மென்மையான மார்பகங்களையுடைய தலைவியே! கொடிய சினத்துடன் பொங்கிய மேகம் குளிர்ந்த மழையை முல்லை நிலத்தில் பெய்தது. இதுவே உறுதிமொழிகள் பலவற்றைக் கூறிச் சென்ற தலைவர் திரும்பி வரும் அடையாளமாகும். எனவே நீ பிரிவினால் தோன்றிய பசலை நீங்கி மகிழ்வாயாக" என்று தோழி கூறினாள்.
கரு இயல் கார் மழை கால் கலந்து ஏந்த, உருகு மட மான் பிணையோடு உகளும்;- உருவ முலையாய்! - நம் காதலர் இன்னே வருவர்; வலிக்கும் பொழுது. 25
கால் - காற்று பிணை - பெண் மான் உகளும் - துள்ளித் திரியும் "அழகிய மார்பகங்களையுடையவளே! மழை இன்மையால் வெம்மையுற்றிருந்த ஆண் மான்கள், பெண் மான்களோடு, மழையானது உயர்ந்து காணப்படுவதால் துள்ளி விளையாடுகின்றன. தலைவர் வருவதைக் கார்காலமே தெரிவிப்பதால் நம் தலைவர் வருவார், வருந்தாதே" என்று தோழி கூறினாள்.
இருங் கடல் மாந்திய ஏர் கொள் எழிலி கருங் கொடி முல்லை கவின முழங்கி, பெரும் பெயல் தாழ, பெயர் குறி செய்தார்; பொருந்த நமக்கு உரைத்த போழ்து. 26
ஏர் - அழகு எழிலி - மேகம் "தலைவியே! நம் தலைவர் கடல் நீரைப் பருகிய மேகங்கள், முல்லை அரும்புகளோடு காணும்படியாக ஒலித்துக் கொண்டு, பெரும்மழை பெய்யும்படியாகத் தாம் திரும்பி வருவதற்கான அடையாளத்தைக் காட்டியுள்ளார். திரும்பி வருவதாகச் சொல்லிய காலமும் இதுவே, மயங்காதே" என்று தோழி கூறினாள்.
ஆயர் இனம் பெயர்த்து, ஆம்பல் அடைதர, பாய முழங்கி, படு கடலுள் நீர் முகந்து, மா இரு ஞாலம் இருள் கூர் மருள் மாலை- சேயவர், செய்த குறி. 27
ஆம்பல் - மலர், ஒருவகை புல்லாங்குழல் "தலைவியே! ஆயர்கள் பசுவின் கூட்டங்களுடன், புல்லாங்குழலினை ஊதி ஆரவாரித்தனர். மேகங்கள் ஒலிக்கும் கடல் நீரினை முகர்ந்து எல்லாப் பக்கங்களும் பரவின. மயக்கத்தைத் தரும் மாலை வேளையே தொலைவில் சென்ற நம் காதலர் திரும்பி வருவதாகக் கூறிச் சென்ற அடையாளமாகும். வருந்த வேண்டாம்" என்று தோழி கூறினாள். பருவம் காட்டிய தோழி வற்புறுத்தியது
அதிர் குரல் ஏறோடு அலை கடல் மாந்தி, முதிர் மணி நாகம் அனுங்க முழங்கி, கதிர் மறை மாலை, கனை பெயல் தாழ, பிதிரும் முலைமேல், சுணங்கு. 28
அனுங்க - வருந்த "கதிரவன் மறைந்த மாலை வேளையில் மழையானது இடியோடு மாணிக்கத்தை உடைய பாம்புகள் வருந்துமாறு பெய்வதால் தலைவியின் மார்பகங்களில் தேமல்கள் காணப்படும்" என்று தோழி கூறினாள்.
கோடல்அம் கூர் முகை கோள் அரா நேர் கருத, காடு எலாம் கார் செய்து, முல்லை அரும்பு ஈன, ஆறு எலாம் நுண் அறல் வார, அணியிழாய்! போதராய்; காண்பாம், புறவு. 29
அறல் - கருமணல் இழை - அணிகலன் "அழகிய அணிகலன்களை அணிந்தவளே! மழை பெய்தலால் காந்தளின் கூர்மையான அரும்புகள் வலிமை மிக்க பாம்புக்கு ஒப்பாக காணப்படும். கருமணல் அழகாகக் காணப்படும். அழகிய காட்சியைக் கண்டால் தலைவனைப் பிரிந்த துன்பம் மறையும்" என்று தோழி தலைவியை முல்லை நிலக்காட்சியைக் காண அழைத்தாள்.
அருவி அதிர, குருகிலை பூப்ப, தெரி ஆ இனநிரை தீம் பால் பிலிற்ற,- வரி வளைத் தோளி!-வருவார் நமர்கொல்? பெரிய மலர்ந்தது இக் கார். 30
ஆ - பசு "வளையல்கள் பொருந்திய தோள்களை உடைய தலைவியே! இந்தக் கார் காலமானது அருவிகள் பெருகி ஒலிக்கவும், குருக்கத்தி இலைகள் பொலிவு பெற்று விளங்கவும், பசுக்கள் பாலைப் பொழியவும் செய்தன. நம் தலைவர் வருவார். வருந்தற்க" என்று தோழி கூறினாள். 4. மருதம் தலைமகள் வாயில் மறுத்தது
பழனம் படிந்த படு கோட்டு எருமை கழனி வினைஞர்க்கு எறிந்த பறை கேட்டு, உரன் அழிந்து, ஓடும் ஒலி புனல் ஊரன் கிழமை உடையன், என் தோட்கு. 31
பழனம் - மருதநிலம் கோட்டு - கொம்பு "மருத நிலத்தில் மேய்ந்த எருமை, உழவர் பறையை ஒலிக்கும் ஓசையைக் கேட்டு வீட்டை நோக்கி ஓடும் நாட்டை உடைய தலைவன் கணவன் என்ற உரிமையினைப் பெற்றுள்ளான். உரிமை ஒன்றே போதும். அருள் வேண்டாம்" என்று வாயிலாக வந்தவனிடம் தலைவி கூறினாள்.
கணைகால் நெடு மருது கான்ற நறுந் தாது இணைக் கால நீலத்து இதழ்மேல் சொரியும் பணைத் தாட் கதிர்ச் செந்நெல் பாய் வயல் ஊரன் இணைத்தான், எமக்கும் ஓர் நோய். 32
நறு - வாசனை "மருத மலர்கள் பூந்துகளைக் கதிர்களோடு கூடிய நெற்பயிரிடம் சொரியாமல் குவளை மலர் மீது சொரியும் வளநாட்டை உடைய தலைவன் பரத்தைக்கு இன்பம் தருகிறான். எமக்கு இணையில்லாத பசலை நோயைத் தந்தான். அவன் அருள் வேண்டுவதில்லை" என்று தலைவி வாயிலாய் வந்தவனிடம் கூறினாள். தோழி வாயில் மறுத்தது
கடையாயார் நட்பேபோல், காஞ்சி நல் ஊர! உடைய இள நலம் உண்டாய்; கடை, அக் கதிர் முலை ஆகத்துக் கண் அன்னார் சேரி எதிர் நலம் ஏன்று நின்றாய். 33
ஆகம் - மேனி "கீழ்மக்கள் செல்வம் வற்றிய காலத்தில் விலகுவது போல, தலைவியின் இளமை இல்லாத நிலையைப் பார்த்து அவளை விட்டு, ஒளியுடைய மேனியை உடைய பரத்தையர் இன்பத்தை எதிர்கொண்டாய். நீ என்னை வாயிலாக வேண்டுவது மறுக்கப் பட வேண்டுவதாகும்" என்று தலைவனிடம் தோழி கூறினாள். தலைமகள் பாணற்கு வாயில் மறுத்தது
செந்நெல் விளை வயல் ஊரன், சில் பகல், தன் நலம் என் அலார்க்கு ஈயான்; எழு - பாண! - பாரித்த அல்குல் பணைத்தோளார் சேரியுள், வாரிக்குப் புக்கு, நின்று, ஆய்! 34
பணை - மூங்கில் "பாணனே! செந்நெல் விளையும்படியான வயல்கள் சூழ்ந்த ஊர்த் தலைவன் இன்பத்தை என்னை அல்லாத பெண்களுக்குக் கொடுக்காமல் இருந்தான். இப்போது மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய பரத்தையருக்கு இன்பத்தை வாரி இறைக்கிறான். அதற்குரிய காரணத்தை ஆராய்ந்து வருக" என்று தலைவி கூறினாள்.
வேனில் பருவத்து எதிர் மலர் ஏற்று ஊதும் கூனி வண்டு அன்ன குளிர் வயல் நல் ஊரன் மாண் இழை நல்லார் இள நலம் உண்டு, அவர் மேனி ஒழியவிடும். 35
அன்ன - போன்ற "மலர்களில் உள்ள தேனை உட்கொள்ளும் வண்டினைப் போன்ற வாழ்க்கையை நடத்தும் தலைவன் பெண்களின் மேனியழகு நீங்கியவுடன் அகன்று விடுவான். அத்தகைய தலைமகன் உறவு வேண்டாம்" என்று தலைவி பாணனிடம் வாயில் மறுத்தாள். தோழி வாயில் நேர்வாள் கூறியது
செந்தாமரை மலரும் செய் வயல் நல் ஊர! நொந்தால் மற்று உன்னைச் செயப்படுவது என் உண்டாம்- தந்தாயும் நீயே; தர வந்த நல் நலம் கொண்டாயும் நீ ஆயக்கால்? 36
நொந்தால் - வருத்தமடைந்தால் "செந்தாமரை மலர்கள் மலர்ந்துள்ள பண்படுத்திய வயல்கள் சூழ்ந்த மருதநிலத்தூர்த் தலைவனே! பரத்தையிடம் பிரிந்த உம்மை வருத்தம் அடைந்து சினப்பதால் எம்மால் செய்வது என்ன? களவொழுக்கத்தில் தலைவிக்குப் பேரழகைத் தந்தவனும் நீயே! அதைப் (அழகை) பிரிவதால் எடுத்துக் கொண்டவனும் நீயே! உன்னிடம் நாங்கள் என்ன குறை சொல்ல இயலும். எதுவும் இல்லை" என்று தோழி தலைவனிடம் கூறுவது. பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது
பல் காலும் வந்து பயின்று உரையல்! - பாண! - கேள்; நெல் சேர் வள வயல் ஊரன் புணர்ந்த நாள், எல் வளையம்; மென் தோளேம்; எங்கையர்தம் போல நல்லவருள் நாட்டம் இலேம். 37
எல் - ஒளி "தலைவன் எம்மோடு இருந்தபோது அவனுக்கு எளிமையான தோள்களையுடையவராய் இருந்தோமே அல்லாமல் எம் தங்கையரான பரத்தையர் போலத் தலைவனின் அருளைப் பெறவில்லை. எனவே தலைவனின் பேரருளை எடுத்துச் சொல்ல வேண்டாம்" எனத் தலைவி பாணனிடம் வாயில் மறுத்தாள்.
நல் வயல் ஊரன் நலம் உரைத்து, நீ - பாண! - சொல்லின் பயின்று உரைக்க வேண்டா; ஒழிதி, நீ! எல்லு நல் முல்லைத் தார் சேர்ந்த இருங்கூந்தல் சொல்லும், அவர் வண்ணம் சோர்வு. 38
நீ - சொல்வாயாக "பாணனே! நிலங்களையுடைய தலைவனின் நலன்களையெல்லாம் உன்னுடைய வெற்றுச் சொற்களால் எடுத்துச் சொல்ல வேண்டாம். நீண்ட கூந்தலையுடைய பரத்தையரே, தலைவர் எம்மிடம் (அவர்களிடம்) கொண்டுள்ள காதலின் நேர்த்தியை அவர் எங்களிடம் காட்டுகின்ற (இகழ்ச்சி) நடத்தையால் எடுத்துக் காட்டுகின்றாள். நீ விரும்பினால் தலைவனின் நேர்மையை நாங்களே சொல்லுவோம். நீர் கூற வேண்டாம், செல்வாயாக!" என்று தலைவி கூறினாள். வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்தது
கருங் கயத்து ஆங்கண் கழுமிய நீலம் பெரும் புற வாளைப் பெடை கதூஉம் ஊரன் விரும்பு நாள் போலான்; வியல் நலம் உண்டான்; கரும்பின் கோது ஆயினேம் யாம். 39
கயம் - குளம் கோது - சக்கை "பெரிய குளத்தில் தோன்றிய குவளை மலரையும், வாளை மீனினையும் உடைய குளத்தினை உடைய தலைவன் இன்பத்தை அனுபவித்துவிட்டான். நாங்கள் அவனுக்குச் சாறு பிழிந்து எடுக்கப்பட்ட கரும்புச் சக்கையைப் போல் ஆகிவிட்டோம். அவன் பெரிதும் மாறிவிட்டான். நீர் வந்த வழிச் செல்" என்று தலைவி வாயில் மறுத்தல். 'இந் நிலத்தின்கண் இன்ன பெற்றியால் வருவாயாக!' எனச் சொல்லியது
ஆம்பல் அணித் தழை ஆரம் துயல்வரும் தீம் புனல் ஊரன் மகள் இவள்; ஆய்ந்த நறுந் தே மலர் நீலம் பிணையல்; செறி மலர்த் தாமரை, தன்னையர் பூ. 40
ஆரம் - சந்தனம் "தலைவனே, ஆம்பல் மலர்களால் அழகு செய்யப்பெற்ற சந்தனத் தழைகள் அணிந்த மருத நிலத்தூரனின் மகளான எம் தலைவி நீலமலராவாள். தாமரை அவளுடைய தந்தையும், தமையர்களும் சூடும் மலராகும். எனவே நீல மலரைக் கையில் கொண்டு தாமரை மலரைச் சூடி இரவுக் குறியில் வருக" என்று தோழி தலைவனிடம் கூறியது. 5. நெய்தல் அல்லகுறிப்பட்டுப் பெயர்ந்த தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது
நெய்தல் படப்பை நிறை கழித் தண் சேர்ப்பன் கைதை சூழ் கானலுள் கண்ட நாள்போல் ஆனான்; செய்த குறியும் பொய் ஆயின; - ஆயிழையாய்! - ஐதுகொல், ஆன்றார் தொடர்பு? 41
இழை - அணிகலன்
கைதை - தாழை "தலைவியே! குளிர்ந்த கடற்கரைத் தலைவன், தாழைச் செடிகள் வளர்ந்த சோலையிடத்தில் முன் நம்மை அவன் கண்ட நாளில் நாம் எப்படி அருமையாக விளங்கினோமோ அப்படித்தான் இன்றும் விளங்குகிறோம். ஆனால் அவனால் குறிக்கப்பட்ட இரவுக்குறிகளும் பொய்யாயின. அவனது நட்பு நிலைத்து நிற்காமல் போய்விடும் போலிருக்கிறதே" என்று தோழி கூறினாள். தோழி வரைவு கடாயது
முத்தம் அரும்பும் முடத் தாள் முது புன்னை தத்தும் திரை தயங்கும் தண் அம் கடற் சேர்ப்ப! சித்திரப் பூங் கொடி அன்னாட்கு அருளீயாய், வித்தகப் பைம் பூண் நின் மார்பு! 42
திரை - அலை வித்தகம் - வேலைப்பாடு அமைந்த "முத்துக்களைப் போன்று அரும்புகளை உடைய வளைந்த அடிப்பாகத்தினை உடைய புன்னை மரத்திடத்தில் தாவிச் செல்லும் அலைகளையுடைய கடற்கரைத் தலைவனே! பொன்னாலான அணிகலனைப் பூண்டுள்ள நின் மார்பில் உள்ள இன்பத்தை மணம் என்ற அன்புச் செயலால் அளிப்பாயாக" என்று தோழி தலைவனை வரைவு கடாயது. அல்லகுறிப்பட்டுப் பெயர்ந்த தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது
எறி சுறா நீள் கடல் ஓதம் உலாவ, நெறி இறாக் கொட்கும் நிமிர் கழிச் சேர்ப்பன்,- அறிவு அறா இன் சொல் அணியிழையாய்! - நின் இல் செறிவு அறா, செய்த குறி. 43
ஓதம் - அலை கொட்கும் - திரியும் "அழகிய அணிகலன்கள் அணிந்த எம் தலைவியே! சுறாமீன்கள் துள்ளி விளையாடுகின்ற கடல் அலைகள் உடைய கடற்கரைத் தலைவன் நின் மனையின் புறத்தே செய்த இரவுக்குறியைத் தெரிவிக்கும் அடையாளங்கள் பயனற்றுப் போயின" என்று அல்லகுறிப்பட்ட காலத்து தலைமகன் சிறைப்புறத்தானாக தோழி தலைவிக்குக் கூறியது. தலைமகனைக் கண்ணுற்று நின்ற தோழி வரைவு கடாயது
இன மீன் இருங் கழி ஓதம் உலாவ, மணி நீர் பரக்கும் துறைவ! தகுமோ- குண நீர்மை குன்றாக் கொடி அன்னாள் பக்கம் நினை நீர்மை இல்லா ஒழிவு? 44
ஓதம் - அலை "மீன்கள் கூட்டமாக இருக்கக்கூடிய கழியிடத்தில் அலைகள் வந்து மோதும் துறையுடைய தலைவனே! நற்குணங்களில் சிறிதும் குறைவுபடாத தலைவியின் மணச்செயலை எண்ணிப் பார்க்கும்படியான நிலை தங்கள்பால் ஏற்படாதது உங்களுக்குத் தக்கதோ?" என்று தோழி தலைவனிடம் கூறினாள்.
கடல் கொழித்திட்ட கதிர் மணி முத்தம் படம் அணி அல்குல் பரதர் மகளிர் தொடலை சேர்த்து ஆடும் துறைவ! என் தோழி உடலும், உறு நோய் உரைத்து. 45
கொழித்திட்ட - செழித்திட்ட "பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய பரதவப் பெண்கள் கடல் அலையில் வரும் முத்துக்களை மாலையாகச் சேர்த்து விளையாடுவர். இத்தகைய கடல் துறைவனே! தலைவி நீ மணந்து கொள்ளாமையால் அடையும் துன்பங்களைக் கூறி உடல் வருந்துகிறாள். விரைவில் அவளை மணந்து கொள்வாயாக" என்று தலைவியைப் பற்றி தோழி தலைவனிடம் கூறியது.
முருகு இயல் கானல் அகன் கரை ஆங்கண் குருகுஇனம் ஆர்க்கும் கொடுங் கழிச் சேர்ப்ப! மருவி வரலுற வேண்டும், என் தோழி உரு அழி உள் நோய் கெட. 46
குருகு - பறவை கானல் - கடற்கரைச் சோலை "நறுமணமிக்க கடற்கரைச் சோலையில் பறவைக் கூட்டம் ஆரவாரிக்கும்படியான வளைந்த கழிகளையுடைய கடல் துறைவனே! அழகு அழிவதற்குக் காரணமான நோயானது ஒழியும்படியாக நீ மணந்து கொள்ளுதல் வேண்டும். இதைத் தலைவி விரும்புகிறாள்" என்று தோழி தலைவனைப் பார்த்துக் கூறினாள். தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழியால் சொல் எடுப்பப்பட்டு, தலைமகள் சொல்லியது
அணி பூங் கழிக் கானல், அற்றை நாள் போலான்; மணி எழில் மேனி மலர் பசப்பு ஊர, துணி கடற் சேர்ப்பன் துறந்தான்கொல்? - தோழி!- தணியும், என் மென் தோள் வளை. 47
எழில் - அழகு "என் தோழியே! கடற்கரைச் சோலையில் களவுப் புணர்ச்சி நிகழ்ந்த காலத்தைப் போல் அல்லாமல், அன்பில்லாதவனாய் செம்மணி போன்ற என் உடலில் பீர்க்கம் பூவைப் போன்ற பசலை நிறம் பரவ என்னைப் பிரிந்து சென்றான். என் உடல் மெலிந்து வளையல் கழன்றன" என்று தலைவன் சிறைப்புறத்தானாக "உன் குறையை நீயே சொல்" என்று தோழி கூற தலைவி கூறினாள். தோழி தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது
கறங்கு மணி நெடுந் தேர் கண் வாள் அறுப்ப, பிறங்கு மணல்மேல் அலவன் பரப்ப, வறம் கூர் கடுங் கதிர் வல் விரைந்து நீங்க, நிறம் கூரும் மாலை வரும். 48
அலவன் - நண்டு "தலைவியே! தலைவனது தேர் மாலை வேளையில் நண்டுகள் நாற்புறமும் பரவி ஓடவும், வெயில் விரைந்து விலகவும் காண்பவர் கண்களின் ஒளிமிக்க பார்வை வருந்தும்படியாக வருகிறது" என்று தோழி தலைவியைச் சந்திக்க தலைவன் இரவுக்குறியில் வருமாறு செய் என்றாள். தலைமகன் பாங்கற்குச் சொல்லியது
மயில்கொல்? மடவாள்கொல்? மாநீர்த் திரையுள் பயில்வதோர் தெய்வம்கொல்? - கேளீர்! - குயில் பயிரும் கன்னி இள ஞாழல் பூம் பொழில் நோக்கிய கண்ணின் வருந்தும், என் நெஞ்சு. 49
கேள் - நட்பு திரை - அலை "தோழனே! சோலையில் நின்ற தலைவி தோகையுடன் கூடிய மயிலோ! இளமையான இவ்வுலகப் பெண்ணோ! நீர் அர மகளோ! அவளைப் பார்த்த கண்களைக் காட்டிலும் மனம் வருந்துகிறது" என்று பாங்கனிடம் தலைவன் கூறினான். பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி வரைவு கடாயது
பவழமும் முத்தும் பளிங்கும் விரைஇ, புகழக் கொணர்ந்து, புறவு அடுக்கும் முன்றில், தவழ் திரைச் சேர்ப்பன் வருவான்கொல்? - தோழி! - திகழும், திரு அமர் மார்பு. 50
விரைஇ - கலந்து புறவு - முல்லை "பவளத்தையும் முத்தையும் வீட்டின் முன் தவழ்கின்ற அலைகளையுடைய தலைவன் மங்கலமான மணத்தைப் பொருந்துமாறு மார்பினால் தழுவுதலான இன்பத்தைத் தருவதற்குரியவனாய் வாரானோ!" எனத் தோழி வினவுதல். (வரைவு கடாவுதல்) |