பத்துப் பாட்டுக்களில் பத்தாவது

இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் பல் குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனைப்

பாடிய

மலைபடுகடாம்

திணை : பாடாண்
துறை : ஆற்றுப்படை

கூத்தர் பலவகை வாத்தியங்களைப் பையிலிட்டு எடுத்துச் செல்லுதல்

திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப, பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி,
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,
மின் இரும் பீலி அணித் தழைக் கோட்டொடு, 5

கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம் பின்,
இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு,
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,
நடுவு நின்று இசைக்கும் அரிக் குரல் தட்டை,
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி, 10

நொடி தரு பாணிய பதலையும், பிறவும்,
கார் கோள் பலவின் காய்த் துணர் கடுப்ப,
நேர் சீர் சுருக்கிக் காய கலப் பையிர்

அவர்கள் கடந்து வந்த மலை வழி

கடுக் கலித்து எழுந்த கண் அகல் சிலம்பில்
படுத்து வைத்தன்ன பாறை மருங்கின், 15

எடுத்து நிறுத்தன்ன இட்டு அருஞ் சிறு நெறி,
தொடுத்த வாளியர், துணை புணர் கானவர்,
இடுக்கண் செய்யாது, இயங்குநர் இயக்கம்
அடுக்கல் மீமிசை, அருப்பம் பேணாது,
இடிச் சுர நிவப்பின் இயவுக் கொண்டு ஒழுகி- 20

பேரியாழின் இயல்பு

தொடித் திரிவு அன்ன தொண்டு படு திவவின்;
கடிப்பகை அனைத்தும், கேள்வி போகா,
குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர் புரி நரம்பின்,
அரலை தீர உரீஇ, வரகின்
குரல் வார்ந்தன்ன நுண் துளை இரீஇ, 25

சிலம்பு அமை பந்தல் பசையொடு சேர்த்தி,
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி,
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து,
புதுவது போர்த்த பொன் போல் பச்சை;
வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால் 30

மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து
அடங்கு மயிர் ஒழுகிய அவ் வாய் கடுப்ப
அகடுசேர்பு பொருந்தி அளவினில் திரியாது,
கவடு படக் கவைஇய சென்று வாங்கு உந்தி;
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாவை, 35

களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்,
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர்ப் பேரியாழ்

பாணரும் விறலியரும் சூழ இருந்த கூத்தர் தலைவனை அழைத்தல்

அமை வரப் பண்ணி, அருள் நெறி திரியாது,
இசை பெறு திருவின் வேத்தவை ஏற்ப,
துறை பல முற்றிய பை தீர் பாணரொடு 40

உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின்,
மதம் தபு ஞமலி நாவின் அன்ன,
துளங்கு இயல் மெலிந்த, கல் பொரு சீறடி,
கணம் கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ,
விலங்கு மலைத்து அமர்ந்த சேயரி நாட்டத்து, 45

இலங்கு வளை, விறலியர் நிற்புறம் சுற்ற
கயம் புக்கன்ன பயம் படு தண் நிழல்,
புனல் கால் கழீஇய மணல் வார் புறவில்,
புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சி,
கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ! 50

'நன்னனை அடைந்தால் நல்ல பயன் பெறுவீர்கள்' எனல்

தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின்
மீமிசை நல் யாறு கடல் படர்ந்தாஅங்கு,
யாம் அவண் நின்றும் வருதும்; நீயிரும்,
கனி பொழி கானம் கிளையொடு உணீஇய,
துனை பறை நிவக்கும் புள்ளினம் மான, 55

புனை தார்ப் பொலிந்த வண்டு படு மார்பின்,
வனை புனை எழில் முலை வாங்கு அமைத் திரள் தோள்
மலர் போல் மழைக் கண் மங்கையர், கணவன்;
முனை பாழ் படுக்கும் துன் அருந் துப்பின்,
இசை நுவல் வித்தின் நசை எர் உழவர்க்குப் 60

புது நிறை வந்த புனல் அம் சாயல்,
மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி,
வில் நவில் தடக் கை, மே வரும் பெரும் பூண்,
நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு,
உள்ளினிர் சேறிர் ஆயின், பொழுது எதிர்ந்த 65

புள்ளினிர் மன்ற, எற்றாக் குறுகுதலின்

கூத்தன் தான் கூறப் போகும் செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்

ஆற்றின் அளவும், அசையும் நல் புலமும்,
வீற்று வளம் சுரக்கும் அவன் நாடு படு வல்சியும்,
மலையும், சோலையும், மா புகல் கானமும்,
தொலையா நல் இசை உலகமொடு நிற்ப, 70

பலர் புறம் கண்டு, அவர் அருங் கலம் தரீஇ,
புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகை மாரியும்,
இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும், புகழுநர்க்கு
அரசு முழுது கொடுப்பினும், அமரா நோக்கமொடு,
தூத் துளி பொழிந்த பொய்யா வானின், 75

வீயாது சுரக்கும் அவன் நாள் மகிழ் இருக்கையும்,
நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து,
வல்லார் ஆயினும் புறம் மறைத்து, சென்றோரைச்
சொல்லிக் காட்டி, சோர்வு இன்றி விளக்கி,
நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும், 80

நீர் அகம் பனிக்கும் அஞ்சு வரு கடுந் திறல்,
பேர் இசை நவிரம் மேஎய் உறையும்,
காரி உண்டிக் கடவுளது இயற்கையும்,
பாய் இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரும்
ஞாயிறு அன்ன, அவன் வசை இல் சிறப்பும், 85

இகந்தன ஆயினும், தெவ்வர் தேஎம்
நுகம் படக் கடந்து, நூழிலாட்டி,
புரைத் தோல் வரைப்பின்வேல் நிழல் புலவோர்க்குக்
கொடைக் கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும்,
இரை தேர்ந்து இவரும் கொடுந் தாள் முதலையொடு 90

திரை படக் குழிந்த கல் அகழ் கிடங்கின்,
வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி,
உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும்,
கேள் இனி, வேளை நீ முன்னிய திசையே:

வழியினது நன்மையின் அளவு கூறுதல்

மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின், 95

புகுவது வந்தன்று இது; அதன் பண்பே:
வானம் மின்னு வசிவு பொழிய, ஆனாது
இட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய,
பெயலொடு வைகிய வியன் கண் இரும் புனத்து,
அகல் இரு விசும்பின் ஆஅல் போல, 100

வாலின் விரிந்த புன் கொடி முசுண்டை;
நீலத்து அன்ன விதைப் புன மருங்கில்,
மகுளி பாயாது மலி துளி தழாலின்,
அகளத்து அன்ன நிறை சுனைப் புறவின்,
கெளவை போகிய கருங் காய் பிடி ஏழ் 105

நெய் கொள ஒழுகின, பல் கவர் ஈர் எண்;
பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப,
கொய் பதம் உற்றன, குலவுக் குரல் ஏனல்;
விளை தயிர்ப் பிதிர்வின் வீ உக்கு, இருவிதொறும்,
குளிர் புரை கொடுங் காய் கொண்டன, அவரை; 110

மேதி அன்ன கல் பிறங்கு இயவின்,
வாதி கை அன்ன கவைக் கதிர் இறைஞ்சி,
இரும்பு கவர்வுற்றன, பெரும் புன வரகே;
பால் வார்பு கெழீஇ, பல் கவர் வளி போழ்பு,
வாலிதின் விளைந்தன, ஐவன வெண்ணெல்; 115

வேல் ஈண்டு தொழுதி இரிவுற்றென்ன,
கால் உறு துவைப்பின், கவிழ்க் கனைத்து, இறைஞ்சி,
குறை அறை வாரா நிவப்பின், அறை உற்று,
ஆலைக்கு அலமரும், தீம் கழைக் கரும்பே;
புயல் புனிறு போகிய, பூ மலி புறவின், 120

அவல் பதம் கொண்டன, அம் பொதித் தோரை;
தொய்யாது வித்திய துளர் படு துடவை
ஐயவி அமன்ற; வெண் கால் செறுவில்,
மை என விரிந்தன, நீள் நறு நெய்தல்;
செய்யாப் பாவை வளர்ந்து, கவின் முற்றி, 125

காயம் கொண்டன, இஞ்சி; மா இருந்து,
வயவுப் பிடி முழந் தாள் கடுப்ப, குழிதொறும்,
விழுமிதின் வீழ்ந்தன, கொழுங் கொடிக் கவலை;
காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்தென,
ஊழ் மலர் ஒழி முகை உயர்முகம் தோய, 130

துறுகல் சுற்றிய சோலை வாழை,
இறுகு குலை முறுகப் பழுத்த; பயம் புக்கு
ஊழ் உற்று அலமரும், உந்தூழ்; அகல் அறை,
காலம் அன்றியும் மரம் பயன் கொடுத்தலின்,
காலின் உதிர்ந்தன, கருங் கனி நாவல்; 135

மாறு கொள ஒழுகின, ஊறு நீர் உயவை;
நூறொடு குழீஇயின, கூவை; சேறு சிறந்து,
உண்ணுநர்த் தடுத்தன, தேமா; புண் அரிந்து,
அரலை உக்கன, நெடுந் தாள் ஆசினி;
விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்ப, 140

குடிஞை இரட்டும் நெடு மலை அடுக்கத்து,
கீழும் மேலும், கார் வாய்த்து எதிரி,
சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி,
முரஞ்சு கொண்டு இறைஞ்சின, அலங்கு சினைப் பலவே:

கானவர் குடியின் இயல்பு

தீயின் அன்ன ஒண் செய் காந்தள் 145

தூவல் கலித்த புது முகை ஊன் செத்து,
அறியாது எடுத்த புன் புறச் சேவல்,
ஊஉன் அன்மையின், உண்ணாது உகுத்தென,
நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய்,
வெறிக்களம் கடுக்கும் வியல் அறைதோறும் 150

மண இல் கமழும் மா மலைச் சாரல்,
தேனினர், கிழங்கினர், ஊன் ஆர் வட்டியர்,
சிறு கண் பன்றிப் பழுதுளி போக்கி,
பொருது தொலை யானைக் கோடு சீர் ஆக,
தூவொடு மலிந்த காய கானவர் 155

செழும் பல் யாணர்ச் சிறுகுடிப் படினே,
இரும் பேர் ஒக்கலொடு பதம் மிகப் பெறுகுவிர்

வழியிலுள்ள சிற்றூர்களில் நிகழும் விருந்து

அன்று, அவண் அசைஇ, அற் சேர்ந்து அல்கி,
கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து,
சேந்த செயலைச் செப்பம் போகி, 160

அலங்கு கழை நரலும் ஆரிப் படுகர்ச்
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி,
நோனாச் செறுவின் வலம் படு நோன் தாள்
மான விறல் வேள் வயிரியம் எனினே,
நும் இல் போல நில்லாது புக்கு, 165

கிழவிர் போலக் கேளாது கெழீஇ,
சேட் புலம்பு அகல் இனிய கூறி,
பரூஉக் குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக் கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்

நன்னனது மலைநாட்டில் பெறும் பொருள்கள்

ஏறித் தரூஉம் இலங்கு மலைத் தாரமொடு, 170

வேய்ப் பெயல் விளையுள் தேக் கள் தேறல்
குறைவு இன்று பருகி, நறவு மகிழ்ந்து, வைகறை,
பழஞ் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர,
அருவி தந்த பழம் சிதை வெண் காழ்,
வரு விசை தவிர்த்த கட மான் கொழுங் குறை, 175

முளவுமாத் தொலைச்சிய பைந் நிணப் பிளவை,
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ,
வெண் புடைக் கொண்ட துய்த் தலைப் பழனின்
இன் புளிக் கலந்து மா மோர் ஆக,
கழை வளர் நெல்லின் அரி, உலை ஊழ்த்து, 180

வழை அமை சாரல் கமழத் துழைஇ,
நறு மலர் அணிந்த நாறு இரு முச்சிக்
குறமகள், ஆக்கிய வால் அவிழ் வல்சி,
அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ,
மக முறை தடுப்ப, மனைதொறும் பெறுகுவிர் 185

மலைநாட்டில் நெடுநாள் தங்காது, நிலநாட்டில் செல்ல வேண்டுதல்

செருச் செய் முன்பின் குருசில் முன்னிய
பரிசில் மறப்ப, நீடலும் உரியிர்
அனையது அன்று அவன் மலைமிசை நாடே
நிரை இதழ்க் குவளைக் கடி வீ தொடினும்,
வரை அறை மகளிர் இருக்கை காணினும், 190

உயிர் செல வெம்பிப் பனித்தலும் உரியிர்;
பல நாள் நில்லாது, நில நாடு படர்மின்

வழியின் அருமை எடுத்துரைத்தல்
பன்றிப் பொறியுள்ள வழிகளில் பகலில் செல்லவேண்டும் எனல்

விளை புனம் நிழத்தலின், கேழல் அஞ்சி,
புழைதொறும் மாட்டிய இருங் கல் அடாஅர்
அரும் பொறி உடைய, ஆறே; நள் இருள் அலரி 195

விரிந்த விடியல், வைகினிர், கழிமின்

பாம்புகள் உறையும் இடத்தைக் கடந்து செல்லும் வகை

நளிந்து பலர் வழங்காச் செப்பம் துணியின்,
முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில்,
கரந்து, பாம்பு ஒடுங்கும் பயம்புமார் உளவே;
குறிக் கொண்டு, மரம் கொட்டி, நோக்கி, 200

செறி தொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச,
வறிது நெறி ஒரீஇ, வலம் செயாக் கழிமின்

கவண் கற்கள் படாமல் தப்பிச் செல்லவேண்டும் விதம்

புலந்து, புனிறு போகிய புனம் சூழ் குறவர்,
உயர்நிலை இதணம் ஏறி, கை புடையூஉ,
அகன் மலை இறும்பில் துவன்றிய யானைப் 205

பகல் நிலை தவிர்க்கும் கவண் உமிழ் கடுங் கல்
இரு வெதிர் ஈர்ங் கழை தத்தி, கல்லெனக்
கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய
உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன:
வரும், விசை தவிராது; மரம் மறையாக் கழிமின் 210

காட்டாற்று வழிகளில் வழுக்கும் இடங்களைக் கடத்தல்

உரவுக் களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி,
இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின்,
குமிழி சுழலும் குண்டு கய முடுக்கர், அகழ் இழிந்தன்ன, கான் யாற்று நடவை
வழூஉம் மருங்கு உடைய; வழாஅல் ஓம்பி, 215

பரூஉக் கொடி வலந்த மதலை பற்றி,
துருவின் அன்ன புன் தலை மகாரொடு.
ஒருவிர் ஒருவிர் ஓம்பினிர் கழிமின்

பாசி படிந்த குளக்கரைகளைக் கடந்து செல்லுதல்

அழுந்து பட்டு அலமரும் புழகு அமல் சாரல்,
விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா, 220

வழும்பு கண் புதைத்த நுண் நீர்ப் பாசி
அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய;
முழு நெறி பிணங்கிய நுண் கோல் வேரலொடு
எருவை மென் கோல் கொண்டனிர் கழிமின்

காரி உண்டிக் கடவுளைத் தொழுதல்

உயர் நிலை மாக் கல், புகர் முகம் புதைய, 225

மாரியின் இகுதரு வில் உமிழ் கடுங் கணை,
தாரொடு பொலிந்த, வினை நவில் யானைச்
சூழியின் பொலிந்த, சுடர்ப் பூ இலஞ்சி,
ஓர் யாற்று இயவின், மூத்த புரிசைப்
பராவு அரு மரபின் கடவுள் காணின், 230

தொழா நிர் கழியின் அல்லது, வறிது.
நும் இயம் தொடுதல் ஓம்புமின் மயங்கு துளி
மாரி தலையும், அவன் மல்லல் வெற்பே

மலைக் காட்சிகளில் ஈடுபடின், வழி தப்பும் என்று அறிவுறுத்தல்

அலகை அன்ன வெள் வேர்ப் பீலிக்
கலக மஞ்ஞை கட்சியில் தளரினும்; 235

கடும் பறைக் கோடியர் மகாஅர் அன்ன,
நெடுங் கழைக் கொம்பர், கடுவன் உகளினும்;
நேர் கொள் நெடு வரை, நேமியின் தொடுத்த,
சூர் புகல் அடுக்கத்து, பிரசம் காணினும்,
ஞெரேரென நோக்கல், ஓம்புமின், உரித்தன்று; 240

நிரை செலல் மெல் அடி நெறி மாறு படுகுவிர்

இரவில் குகைளில் தங்குதல்

வரை சேர் வகுந்தின் கானத்துப் படினே,
கழுதில் சேணோன் ஏவோடு போகி,
இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி,
நிறப் புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின், 245

நெறிக் கெடக் கிடந்த, இரும் பிணர் எருத்தின்,
இருள் துணிந்தன்ன ஏனம் காணின்,
முனி கழை இழைந்த காடு படு தீயின்
நளி புகை கமழாது, இறாயினிர் மிசைந்து;
துகள் அறத் துணிந்த மணி மருள் தெள் நீர், 250

குவளை அம் பைஞ் சுனை, அசைவு விடப் பருகி;
மிகுத்துப் பதம் கொண்ட பரூஉக் கண் பொதியினிர்,
புள் கை போகிய புன் தலை மகாரொடு
அற்கு, இடை கழிதல் ஓம்பி, ஆற்ற, நும்
இல் புக்கன்ன, கல் அளை வதிமின் 255

விடியற்காலத்தில் செம்மையான பாதையில் செல்லுமாறு கூறுதல்

அல்சேர்ந் தல்கி அசைதல் ஓம்பி
வான்கண் விரிந்த விடியல் ஏற்றெழுந்து
கானகப் பட்ட செந்நெறிக் கொண்மின்
கயம் கண்டன்ன அகன் பை, அம்கண்
மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும், 260

துஞ்சுமரம் கடுக்கும், மாசுணம் விலங்கி,
இகந்து சேண் கமழும் பூவும், உண்டோ ர்
மறந்து அமைகல்லாப் பழனும், ஊழ் இறந்து
பெரும் பயம் கழியினும், மாந்தர் துன்னார்
இருங் கால் வீயும், பெரு மரக் குழாமும்; 265

இடனும் வலனும் நினையினர் நோக்கி,
குறி அறிந்து, அவைஅவை குறுகாது கழிமின்:
கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து,
கூடு இயத்து அன்ன குரல் புணர் புள்ளின்
நாடு காண் நனந் தலை மென்மெல அகன்மின் 270

குறவரும் மயங்கும் குன்றத்தில் செய்யவேண்டுவன

மா நிழல் பட்ட மரம் பயில் இறும்பின்,
ஞாயிறு தெறாஅ மாக நனந் தலை,
தேஎம் மருளும் அமையம் ஆயினும்,
இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும்
குறவரும் மருளும் குன்றத்துப் படினே, 275

அகன் கண் பாறைத் துவன்றிக் கல்லென
இயங்கல் ஓம்பி, நும் இயங்கள் தொடுமின்:

வழி மயங்கினார்க்குக் குறவர்கள் வந்து உதவிபுரிதல்

பாடு இன் அருவிப் பயம் கெழு மீமிசை,
காடு காத்து உறையும் கானவர் உளரே;
நிலைத் துறை வழீஇய மதன் அழி மாக்கள் 280

புனல் படு பூசலின், விரைந்து வல் எய்தி,
உண்டற்கு இனிய பழனும், கண்டோ ர்
மலைதற்கு இனிய பூவும், காட்டி,
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற,
நும்மின், நெஞ்சத்து அவலம் வீட, 285

இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர்:
அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு,
குறியவும் நெடியவும் ஊழ் இழிபு, புதுவோர்
நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து,
அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின், 290

பல திறம் பெயர்பவை கேட்குவிர்மாதோ

மலையில் தோன்றம் பலவித ஒலிகளைக் கேட்டல்

கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின்,
மலை முழுதும் கமழும் மாதிரம்தோறும்,
அருவி நுகரும் வான்அர மகளிர்,
வரு விசை தவிராது வாங்குபு குடைதொறும், 295

தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை;
இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்,
விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர்
புலம் புக்கு உண்ணும், புரி வளைப் பூசல்;
சேய் அளைப் பள்ளி, எஃகு உறு முள்ளின் 300

எய் தெற, இழுக்கிய கானவர் அழுகை;
கொடுவரி பாய்ந்தென, கொழுநர் மார்பில்,
நெடு வசி விழுப் புண் தணிமார், காப்பு என,
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல்;
தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை 305

மலைமார், இடூஉம் ஏமப் பூசல்:
கன்று அரைப்பட்ட கயந் தலை மடப் பிடி
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின்,
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, கிளையொடு,
நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல்; 310

கைக் கோள் மறந்த கரு விரல் மந்தி
அரு விடர் வீழ்ந்த தன் கல்லாப் பார்ப்பிற்கு,
முறி மேய் யாக்கைக் கிளையொடு துவன்றி,
சிறுமை உற்ற களையாப் பூசல்;
கலை கையற்ற காண்பு இன் நெடு வரை, 315

நிலைபெய்து இட்ட மால்பு நெறி ஆக,
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அருங் குறும்பு எறிந்த கானவர் உவகை,
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சானம் என;
நறவு நாள் செய்த குறவர் தம் பெண்டிரொடு 320

மான் தோல் சிறு பறை கறங்கக் கல்லென,
வான் தோய் மீமிசை அயரும் குரவை;
நல் எழில் நெடுந் தேர் இயவு வந்தன்ன,
கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை;
நெடுஞ் சுழிப்பட்ட கடுங்கண் வேழத்து 325

உரவுச் சினம் தணித்து, பெரு வெளில் பிணிமார்,
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை;
ஒலி கழைத் தட்டை புடையுநர், புனந்தொறும்
கிளி கடி மகளிர் விளி படு பூசல்;
இனத்தின் தீர்ந்த துளங்கு இயில் நல் ஏறு, 330

மலைத் தலைவந்த மரையான் கதழ் விடை,
மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கி,
கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப,
வள் இதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய,
நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை; 335

காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி,
வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டு படு மிச்சில் காழ் பயன் கொண்மார்,
கன்று கடாஅ உறுக்கும் மகாஅர் ஓதை;
மழை கண்டன்ன ஆலைதொறும், ஞெரேரெனக் 340

கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்;
தினை குறு மகளிர் இசை படு வள்ளையும்,
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும்; குன்றகச் சிலம்பும்;
என்று இவ் அனைத்தும், இயைந்து ஒருங்கு, ஈண்டி, 345

அவலவும் மிசையவும் துவன்றிப் பல உடன்,
அலகைத் தவிர்த்த எண் அருந் திறத்த
மலை படு கடாம் மாதிரத்து இயம்ப

நன்னனது மலை வழியில் செல்லும் வகை

குரூஉக் கண் பிணையல் கோதை மகளிர்
முழவுத் துயில் அறியா வியலுள் ஆங்கண் 350

விழவின் அற்று, அவன் வியன் கண் வெற்பே
கண்ண் தண்ண்ணெனக் கண்டும் கேட்டும்,
உண்டற்கு இனிய பல பாராட்டியும்,
இன்னும் வருவதாக, நமக்கு எனத்
தொல் முறை மரபினிர் ஆகி, பல் மாண் 355

செரு மிக்குப் புகழும் திரு ஆர் மார்பன்
உரும் உரறு கருவிய பெரு மலை பிற்பட,
இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர்
நறுங்கார் அடுக்கத்து, குறிஞ்சி பாடி,
கைதொழூஉப் பரவி, பழிச்சினிர் கழிமின் 360

குன்றும் குகைகளும் நெருங்கிய மலை வழி

மை படு மா மலை, பனுவலின் பொங்கி,
கை தோய்வு அன்ன கார் மழை, தொழுதி,
தூஉய் அன்ன துவலை துவற்றலின்,
தேஎம் தேறாக் கடும் பரிக் கடும்பொடு,
காஅய்க் கொண்ட நும் இயம் தொய்படாமல், 365

கூவல் அன்ன விடரகம் புகுமின்,
இருங் கல் இகுப்பத்து இறு வரை சேராது,
குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து,
நின்று நோக்கினும் கண் வாள் வெளவும்,
மண் கனை முழவின்தலை, கோல், கொண்டு 370

தண்டு கால் ஆக, தளர்தல் ஓம்பி,
ஊன்றினிர் கழிமின்; ஊறு தவப் பலவே:
அயில் காய்ந்தன்ன கூர்ங் கல் பாறை,
வெயில் புறந்தரூஉம் இன்னல் இயக்கத்து,
கதிர் சினம் தணிந்த அமயத்துக் கழிமின் 375

அரண்களும் நடுகற்களும் உள்ள வழிகள்

உரை செல வெறுத்த அவன் நீங்காச் சுற்றமொடு
புரை தவ உயரிய மழை மருள் பல் தோல்,
அரசு நிலை தளர்க்கும், அருப்பமும் உடைய;
பின்னியன்ன பிணங்கு அரில் நுழைதொறும்,
முன்னோன் வாங்கிய கடு விசைக் கணைக் கோல் 380

இன் இசை நல் யாழ்ப் பத்தரும், விசி பிணி
மண் ஆர் முழவின் கண்ணும், ஓம்பி,
கை பிணி விடாஅது பைபயக் கழிமின்,
களிறு மலைந்தன்ன கண் கூடு துறுகல்
தளி பொழி கானம் தலை தவப் பலவே; 385

ஒன்னாத் தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென,
நல் வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா நல் இசைப் பெயரொடு நட்ட
கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே;
இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக, 390

தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின்

புதியவர்களுக்கு வழி தெரிய, புல்லை முடிந்து இட்டுச் செல்லுதல்

பண்டு நற்கு அறியாப் புலம் பெயர் புதுவிர்
சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்

நன்னனுடைய பகைவர் இருக்கும் அரு நிலங்கள்

செல்லும் தேஎத்து, பெயர் மருங்கு அறிமார்,
கல் எறிந்து, எழுதிய நல் அரை மராஅத்த 395

கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை,
ஒட்டாது அகன்ற ஒன்னாத் தெவ்வர்
சுட்டினும் பனிக்கும் சுரம் தவப் பலவே:
தேம் பாய் கண்ணித் தேர் வீசு கவிகை
ஓம்பா வள்ளல் படர்ந்திகும் எனினே, 400

மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர்
ஆங்கனம் அற்றே, நம்மனோர்க்கே;
அசைவுழி அசைஇ, அஞ்சாது கழிமின்

கோவலரது குடியிருப்பில் பெறும் உபசாரம்

புலி உற, வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி,
கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து, 405

சிலை ஒலி வெரீஇய செங் கண் மரை விடை
தலை இறும்பு கதழும் நாறு கொடிப் புறவின்,
வேறு புலம் படர்ந்த ஏறுடை இனத்த
வளை ஆன் தீம் பால், மிளை சூழ் கோவலர்,
வளையோர் உவப்ப, தருவனர் சொரிதலின், 410

பலம் பெறு நசையொடு பதி வயின் தீர்ந்த நும்
புலம்பு சேண் அகல, புதுவிர் ஆகுவிர்;
பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன,
தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ,
கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும் 415

பல் யாட்டு இனம் நிரை எல்லினிர் புகினே,
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்;
துய்ம் மயிர் அடக்கிய சேக்கை அன்ன,
மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி,
தீத் துணை ஆகச் சேந்தனிர் கழிமின் 420

நாடுகாக்கும் வேடர் திரள்களின் செய்கை

கூப்பிடு கடக்கும் கூர் நல் அம்பின்
கொடு விற் கூளியர் கூவை காணின்,
படியோர்த் தேய்த்த பணிவு இல் ஆண்மை,
கொடியோள் கணவல் படர்ந்திகும் எனினே,
தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ, 425

ஓம்புநர் அல்லது, உடற்றுநர் இல்லை;
ஆங்கு வியம் கொண்மின்; அது அதன் பண்பே

மாலை சூடி, நீர் அருந்தி, குளித்துச் செல்லுதல்

தேம் பட மலர்ந்த அராஅ மெல் இணரும்,
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்,
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி, 430

திரங்கு மரல் நாரில், பொலியச் சூடி,
முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென,
உண்டனிர், ஆடி, கொண்டனிர் கழிமின்

புல் வேய்ந்த குடிசைகளில் புளிங் கூழும் பிறவும் பெறுதல்

செவ் வீ வேங்கைப் பூவின் அன்ன,
வேய் கொள் அரிசி, மிதவை சொரிந்த, 435

சுவல் விளை நெல்லின், அவரை அம் புளிங் கூழ்,
அற்கு, இடை உழந்த நும் வருத்தம் வீட,
அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய
புல் வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்;
பொன் எறிந்து அறைந்தன்ன நுண் நேர் அரிசி 440

வெண் எறிந்து இயற்றிய மாக் கண் அமலை,
தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக,
அசையினிர் சேப்பின், அல்கலும் பெறுகுவிர்
விசையம் கொழித்த பூழி அன்ன,
உண்ணுநர்த் தடுத்த நுண் இடி நுவணை: 445

நொய்ம் மர விறகின் ஞெகிழ் மாட்டி,
பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சி,
புலரி விடியல் புள் ஓர்த்துத் கழிமின்

நன்னனது தண் பணை நாட்டின் தன்னை

புல் அரைக் காஞ்சி, புனல் பொரு புதவின்,
மெல் அவல், இருந்த ஊர்தொறும், நல் யாழ்ப் 450

பண்ணுப் பெயர்த்தன்ன, காவும், பள்ளியும்,
பல் நாள் நிற்பினும் சேந்தனிர் செலினும்,
நன் பல உடைத்து, அவன் தண் பணை நாடே:

உழவர் செய்யும் உபசாரம்

கண்பு மலி பழனம் கமழத் துழைஇ,
வலையோர் தந்த இருஞ் சுவல் வாளை, 455

நிலையோர் இட்ட நெடு நாண் தூண்டில்,
பிடிக் கை அன்ன, செங் கண் வராஅல்,
துடிக் கண் அன்ன. குறையொடு விரைஇ,
பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்,
ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த, 460

விலங்கல் அன்ன, போர் முதல் தொலைஇ,
வளம் செய் வினைஞர் வல்சி நல்க,
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதித் தேறல்,
இளங் கதிர் ஞாயிற்றுக் களங்கள்தொறும், பெறுகுவிர்;
முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண் சோறு, 465

'வண்டு படக் கமழும் தேம் பாய் கண்ணித்
திண் தேர் நன்னற்கும் அயினி கான்ம்' எனக்
கண்டோ ர் மருள, கடும்புடன் அருந்தி,
எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ்
மருதம் பண்ணி, அசையினிர், கழிமின் 470

சேயாற்றின் கரைவழியே செல்லுதல்

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,
செங் கண் எருமை இனம் பிரி ஒருத்தல்,
கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி,
வனை கலத் திகிரியின் குமிழி சுழலும்,
துனை செலல் தலைவாய், ஓவு இறந்து வரிக்கும், 475

காணுநர் வயாஅம், கட்கு இன் சேயாற்றின்
யாணர் ஒரு கரைக் கொண்டனிர் கழிமின்

நன்னனது மூதூரின் இயல்பு

நிதியம் துஞ்சும், நிவந்து ஓங்கு வரைப்பின்,
பதி எழல் அறியாப் பழங் குடி கெழீஇ,
வியல் இடம் பெறாஅ விழுப் பெரு நியமித்து, 480

யாறு எனக் கிடந்த தெருவின், சாறு என,
இகழுநர் வெரூஉம், கவலை மறுகின்,
கடல் என, கார் என, ஒலிக்கும் சும்மையொடு,
மலை என, மழை என, மாடம் ஓங்கி,
துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும், 485

பனி வார் காவின் பல் வண்டு இமிரும்,
நனி சேய்த்தன்று, அவன் பழ விறல் மூதூர்

மூதூர் மக்கள் விருந்து எதிர்கொள்ளுதல்

பொருந்தாத் தெவ்வர் இருந் தலை துமிய,
பருந்து படக் கடக்கும் ஒள் வாள் மறவர்
கருங் கடை எஃகம் சாத்திய புதவின், 490

அருங் கடி வாயில் அயிராது புகுமின்:
மன்றில் வதியுநர் சேண் புலப் பரிசிலர்,
வெல் போர்ச் சேஎய்ப் பெரு விறல் உள்ளி
வந்தோர் மன்ற, அளியர் தாம் என,
கண்டோ ர் எல்லாம், அமர்ந்து, இனிதின் நோக்கி, 495

விருந்து இறை அவர் அவர் எதிர் கொளக் குறுகி,
பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட

அரண்மனை வாயிலில் காணும் பொருள் வளம்

எரி கான்றன்ன பூஞ் சினை மராஅத்து,
தொழுதி போக வலிந்து அகப்பட்ட
மட நடை ஆமான், கயமுனிக் குழவி, 500

ஊமை எண்கின் குடாவடிக் குரளை,
மீமிசைக் கொண்ட கவர் பரிக் கொடுந்தாள்
வரை வாழ் வருடை வன் தலை மாத்தகர்,
அரவுக் குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை,
அளைச் செறி உழுவை கோள் உறவெறுத்த 505

மடக் கண் மரையான் பெருஞ் செவிக் குழவி,
அரக்கு விரித்தன்ன செந்நில மருங்கின்,
பரல் தவழ் உடும்பின் கொடுந் தாள் ஏற்றை,
வரைப் பொலிந்து இயலும் மடக் கண் மஞ்ஞை,
கானக்கோழி கவர் குரல் சேவல், 510

கானப் பலவின் முழவு மருள் பெரும் பழம்,
இடிக் கலப்பு அன்ன, நறு வடி மாவின்
வடிச் சேறு விளைந்த தீம் பழத் தாரம்,
தூவல் கலித்த இவர் நனை வளர் கொடி,
காஅய்க் கொண்ட நுகம் மருள் நூறை, 515

பரூஉப் பளிங்கு உதிர்த்த, பல உறு திரு மணி,
குரூஉப் புலி பொருத புண் கூர் யானை
முத்துடை மருப்பின் முழு வலி மிகு திரள்,
வளை உடைந்தன்ன வள் இதழ்க் காந்தள்,
நாகம், திலகம், நறுங் காழ் ஆரம், 520

கருங் கொடி மிளகின் காய்த் துணர்ப் பசுங் கறி,
திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல்,
கான் நிலை எருமைக் கழை பெய் தீம் தயிர்,
நீல் நிற ஓரி பாய்ந்தென, நெடு வரை,
நேமியின் செல்லும் நெய்க் கண் இறாஅல், 525

உடம்புணர்பு, தழீஇய ஆசினி, அனைத்தும்,
குட மலைப் பிறந்த தண் பெருங் காவிரி
கடல் மண்டு அழுவத்துக் கயவாய் கடுப்ப,
நோனாச் செருவின் நெடுங் கடைத் துவன்றி

முற்றத்தில் நின்று விறலியர் நன்னனைப் போற்றுதல்

வானத்து அன்ன வளம் மலி யானை, 530

தாது எருத் ததைந்த, முற்றம் முன்னி,
மழை எதிர் படு கண் முழவு கண் இகுப்ப,
கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர,
மருதம் பண்ணிய கருங் கோட்டுச் சீறியாழ்
நரம்பு மீது இறவாது, உடன் புணர்ந்து ஒன்றி, 535

கடவது அறிந்த இன் குரல் விறலியர்
தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது,
அருந் திறல் கடவுள் பழிச்சிய பின்றை

கூத்தர்கள் நன்னனைப் போற்றுதல்

விருந்தின் பாணி கழிப்பி, நீள் மொழிக்
குன்றா நல் இசைச் சென்றோர் உம்பல், 540

இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப,
இடைத் தெரிந்து உணரும், பெரியோர் மாய்ந்தென,
கொடைக்கடன் இறுத்த செம்மலோய் என,
வென்றிப் பல் புகழ் விறலோடு ஏத்தி,
சென்றது நொடியவும் விடாஅன், 545

நன்னன் கூறும் முகமன் உரை

நசைதர
வந்தது சாலும் வருத்தமும் பெரிது என,

நாள் ஓலக்கத்திற்கு அழைத்துச் செல்லுதல்

பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து,
திரு நகர் முற்றம் அணுகல் வேண்டி,
கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ,

நன்னனது குளிர்ந்த நோக்கம்

உயர்ந்த கட்டில், உரும்பு இல் சுற்றத்து, 550

அகன்ற தாயத்து, அஃகிய நுட்பத்து,
இலம் என மலர்ந்த கையர் ஆகி,
தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்,
நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவிக்
கடுவரல் கலுழிக் கட்கு இன் சேயாற்று 555

வடு வாழ் எக்கர் மணலினும், பலரே;
அதனால், புகழொடும் கழிக, நம் வரைந்த நாள்! என,
பரந்து இடம் கொடுக்கும் விசும்பு தோய் உள்ளமொடு,
நயந்தனிர் சென்ற நும்மினும், தான் பெரிது,
உவந்த உள்ளமொடு, அமர்ந்து இனிது நோக்கி, 560

நன்னனது கொடைச் சிறப்பு

இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம்
எள் அறு சிறப்பின் வெள் அரைக் கொளீஇ,
முடுவல் தந்த பைந் நிணத் தடியொடு,
நெடு வெண்ணெல்லின் அரிசி முட்டாது,
தலை நாள் அன்ன புகலொடு, வழி சிறந்து 565

பல நாள் நிற்பினும், பெறுகுவிர்; நில்லாது
செல்வேம் தில்ல, எம் தொல் பதிப் பெயர்ந்து! என,
மெல்லெனக் கூறி விடுப்பின், நும்முள்
தலைவன் தாமரை மலைய, விறலியர்
சீர் கெழு சிறப்பின் விளங்குஇழை அணிய, 570

நீர் இயக்கன்ன நிரை செலல் நெடுந் தேர்,
வாரிக் கொள்ளா வரை மருள் வேழம்,
கறங்கு மணி துவைக்கும் ஏறுடைப் பெரு நிரை,
பொலம் படைப் பொலிந்த கொய் சுவல் புரவி,
நிலம் தினக் கிடந்த நிதியமோடு, அனைத்தும், 575

இலம்படு புலவர் ஏற்ற கைந் நிறைய,
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கையின்
வளம் பிழைப்பு அறியாது, வாய் வளம் பழுநி,
கழை வளர் நவிர்த்து மீமிசை, ஞெரேரென
மழை சுரந்தன்ன ஈகை நல்கி, 580

தலை நாள் விடுக்கும் பரிசில் மலை நீர்
வென்று எழு கொடியின் தோன்றும்
குன்று சூழ் இருக்கை நாடுகிழவோனே.

தனிப் பாடல்

தூஉஉத் தீம் புகை தொல் விசும்பு போர்த்ததுகொல்?
பாஅய்ப் பகல் செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான்கொல்?
மாஅ மிசையான் கோன் நன்னன் நறு நுதலார்
மாஅமை எல்லாம் பசப்பு!