பத்துப் பாட்டுக்களில் முதலாவது

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

பாடிய

திருமுருகு ஆற்றுப்படை

     பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார். இவரது இயற்பெயர் கீரன் என்பதாம். நெடுநல்வாடையை இயற்றியவரும் இவரே. இந்நூல் ஆற்றுப்படுத்தப்படுவர்கள் பெயரைச் சார்த்தி வழங்காமல் பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார்ந்து விளங்குகிறது. இந்நூலின் பாட்டுடைத் தலைவன் செந்தமிழ் தெய்வமாகிய முருகப் பெருமான். இந் நூல் முருகன் எழுந்தருளியுள்ள ஆறு படை வீடுகளை பாராட்டும் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1. திருப்பரங்குன்றம்

முருகக் கடவுளின் தோற்றப் பொலிவு

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு,
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி,
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்,
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக் கை, 5

மறு இல் கற்பின் வாணுதல் கணவன்

கடப்பமாலை புரளும் மார்பினன்

கார்கோள் முகந்த கமஞ் சூல் மா மழை,
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி,
தலைப் பெயல் தலைஇய தண் நறுங் கானத்து,
இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து 10

உருள் பூந் தண் தார் புரளும் மார்பினன்

சூரரமகளிரின் உடல் அழகு

மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண் செஞ் சீறடி,
கணைக் கால், வாங்கிய நுசும்பின், பணைத் தோள்,
கோபத்து அன்ன தோயாப் பூந் துகில், 15

பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல்,
கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பின்,
நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர்இழை,
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி

சூரரமகளிரின் அலங்கரிப்பு

துணையோர ஆய்ந்த இணை ஈர் ஓதிச் 20

செங் கால் வெட்சிச் சீறிதழ் இடை இடுபு,
பைந் தாள் குவளைத் தூ இதழ் கிள்ளி,
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்து,
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
மகரப்பகுவாய் தாழ மண்ணுறுத்து, 25

துவர முடித்த துகள் அறும் முச்சிப்
பெருந் தண் சண்பகம் செரீஇ, கருந் தகட்டு
உளைப் பூ மருதின் ஒள் இணர் அட்டி,
கிளைக் கவின்று எழுதரு கீழ் நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல் வளைஇ, துணைத் தக 30

வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்
நுண் பூண் ஆகம் திளைப்ப, திண் காழ்
நறுங் குறடு உரிஞ்சிய பூங் கேழ்த் தேய்வை,
தேம் கமழ் மருது இணர் கடுப்ப, கோங்கின்
குவி முகிழ் இள முலைக் கொட்டி, விரி மலர் 35

வேங்கை நுண் தாது அப்பி, காண்வர,
வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா,

சூரரமகளிர் ஆடும் சோலை

கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி
'வாழிய பெரிது!' என்று ஏத்தி, பலர் உடன்
சீர் திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி 40

சூரர மகளிர் ஆடும் சோலை

காந்தட் பூங்கண்ணி
மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து,
சுரும்பும் மூகாச் சுடர்ப் பூங் காந்தள்
பெருந் தண் கண்ணி மிலைந்த சென்னியன்

முருகன் சூரனைத் தடிந்த வகை

பார் முதிர் பனிக் கடல் கலங்க உள் புக்கு, 45

சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்

பேய்மகளின் துணங்கைக் கூத்து

உலறிய கதுப்பின், பிறழ் பல் பேழ் வாய்,
சுழல் விழிப் பசுங் கண், சூர்த்த நோக்கின்,
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்கப்
பெரு முலை அலைக்கும் காதின், பிணர் மோட்டு, 50

உரு கெழு செலவின், அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூர் உகிர்க் கொடு விரல்
கண் தொட்டு உண்ட கழி முடைக் கருந் தலை
ஒண் தொடித் தடக் கையின் ஏந்தி, வெருவர
வென்று அடு விறற் களம் பாடி, தோள் பெயரா, 55

நிணம் தின் வாயள் துணங்கை தூங்க
மாமரத்தை வெட்டிய வெற்றி

இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை,
அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி,
அவுணர் நல் வலம் அடங்க, கவிழ் இணர்
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து, 60

எய்யா நல் இசை, செவ்வேல் சேஎய்

ஆற்றுப்படுத்தல்

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு,
நலம் புரி கொள்கைப் புலம் பிரிந்து உறையும்,
செலவு நீ நயந்தனை ஆயின், பல உடன்,
நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப, 65

இன்னே பெறுதி, நீ முன்னிய வினையே:

மதுரை மாநகரச் சிறப்பு

செருப் புகன்று எடுத்த சேண் உயர் நெடுங் கொடி
வரிப் புனை பந்தொடு பாவை தூங்க,
பொருநர்த் தேய்த்த போர் அரு வாயில்,
திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து, 70

மாடம் மலி மறுகின் கூடல் குடவயின்

திருப்பரங்குன்றில் முருகன் வீற்றிருத்தல்

இருஞ் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முள் தாள் தாமரைத் துஞ்சி, வைகறைக்
கள் கமழ் நெய்தல் ஊதி, எல் படக்
கண்போல் மலர்ந்த காமரு சுனை மலர், 75

அஞ்சிறை வண்டின் அரிக் கணம் ஒலிக்கும்
குன்று அமர்ந்து உறைதலும் உரியன், அதாஅன்று,

2. திருச்சீர் அலைவாய்

ஆறுமுகன் யானையின்மேல் ஏறி வருதல்

வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வர,
படு மணி இரட்டும் மருங்கின், கடு நடை, 80

கூற்றத்தன்ன மாற்று அரு மொய்ம்பின்,
கால் கிளர்ந்தன்ன வேழம் மேல்கொண்டு

ஆறு முகங்களின் இயல்புகள்

ஐவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண் மிகு திருமணி
மின் உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப, 85

நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலங் குழை
சேண் விளங்கு இயற்கை வாண் மதி கவைஇ
அக லா மீனின் அவிர்வன இமைப்ப,
தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார்
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே: 90

ஆறு திருமுகங்களின் செயல்கள்

மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க,
பல் கதிர் விரிந்தன்று, ஒரு முகம்; ஒரு முகம்,
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினிது ஒழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ 95

அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே; ஒரு முகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி,
திங்கள் போலத் திசை விளக்கும்மே; ஒரு முகம்
செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கி,
கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே; ஒரு முகம் 100

குறவர் மட மகள், கொடி போல் நுசுப்பின்
மடவரல், வள்ளியொடு நகை அமர்ந்தன்றே;

தோள்களின் சிறப்பு

ஆங்கு, அம் மூஇரு முகனும், முறை நவின்று ஒழுகலின்
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்
செம் பொறி வாங்கிய, மொய்ம்பின், சுடர் விடுபு, 105

வண் புகழ் நிறைந்து, வசிந்து வாங்கு, நிமிர் தோள்:

பன்னிரு கைகளின் தொழில்கள்

விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒரு கை, உக்கம் சேர்த்தியது ஒரு கை;
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒரு கை,
அங்குசம் கடாவ ஒரு கை; இரு கை 110

ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப; ஒரு கை
மார்பொடு விளங்க, ஒரு கை
தாரொடு பொலிய; ஒரு கை
கீழ் வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப, ஒரு கை
பாடு இன் படு மணி இரட்ட; ஒரு கை 115

நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய, ஒரு கை
வான் அர மகளிர்க்கு வதுவை சூட்ட;
ஆங்கு, அப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி
அலைவாயில் ஆறுமுகன் வந்தருளியிருக்கும் காட்சி

அந்தரப் பல்லியம் கறங்க, திண் காழ்
வயிர் எழுந்து இசைப்ப, வால் வளை ஞரல, 120

உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ,
விசும்பு ஆறு ஆக விரைசெலல் முன்னி,
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச் சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே, அதாஅன்று, 125

3. திருஆவினன் குடி

முன் செல்லும் முனிவரது இயல்புகள்

சீரை தைஇய உடுக்கையர், சீரொடு
வலம் புரி புரையும் வால் நரை முடியினர்,
மாசு அற இமைக்கும் உருவினர், மானின்
உரிவை தைஇய ஊன் கெடு மார்பின்
என்பு எழுந்து இயங்கும் யாக்கையர், நன் பகல் 130

பல் உடன் கழிந்த உண்டியர், இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர், யாவதும்
கற்றோர் அறியா அறிவினர், கற்றோர்க்குத்
தாம் வரம்பு ஆகிய தலைமையர், காமமொடு
கடுஞ் சினம் கடிந்த காட்சியர், இடும்பை 135

யாவதும் அறியா இயல்பினர், மேவரத்
துனி இல் காட்சி முனிவர், முன் புக

பாடுவார் இயல்பு

புகை முகந்தன்ன மாசு இல் தூ உடை,
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து,
செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின் 140

நல்லி யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென் மொழி மேவலர், இன் நரம்பு உளர

பாடும் மகளிர் இயல்பு

நோய் இன்று இயன்ற யாக்கையர், மாவின்
அவிர் தளிர் புரையும் மேனியர், அவிர்தொறும்
பொன்னுரை கடுக்கும் திதலையர், இன் நகைப் 145

பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல்,
மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க:

திருமால், சிவன், இந்திரன், ஆகியோரின் இயல்புகள்

கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால் எயிற்று,
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந் திறல்,
பாம்பு படப் புடைக்கும் பல் வரிக் கொடுஞ் சிறைப் 150

புள் அணி நீள் கொடிச் செல்வனும் வெள் ஏறு
வலம்வயின் உயரிய, பலர் புகழ் திணி தோள்,
உமை அமர்ந்து விளங்கும், இமையா முக் கண்,
மூஎயில் முருக்கிய, முரண் மிகு செல்வனும்
நூற்றுப் பத்து அடுக்கிய நாட்டத்து, நூறு பல் 155

வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து,
ஈர் இரண்டு ஏந்திய மருப்பின், எழில் நடை,
தாழ் பெருந் தடக் கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக் கிளர் செல்வனும்

பிரமனுக்காகத் திரண்டு வந்த தேவர்கள்

நாற் பெருந் தெய்வத்து நல் நகர் நிலைஇய 160

உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப்
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக,
ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றி,
தாமரை பயந்த தா இல் ஊழி
நான்முக ஒருவற் சுட்டி, காண்வர, 165

தேவர்கள் வருகின்ற காட்சி

பகலில் தோன்றும் இகல் இல் காட்சி
நால் வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு,
ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர்
மீன் பூத்தன்ன தோன்றலர், மீன் சேர்பு
வளி கிளர்ந்தன்ன செலவினர், வளியிடைத் 170

தீ எழுந்தன்ன திறலினர், தீப் பட
உரும் இடித்தன்ன குரலினர், விழுமிய
உறு குறை மருங்கில் தம் பெறுமுறை கொண்மார்,
அந்தரக் கொட்பினர், வந்து உடன் காண,

முருகன் மடந்தையோடு வீற்றிருத்தல்

தா இல் கொள்கை மடந்தையொடு, சில் நாள், 175

ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று,

4. திருவேரகம்

இரு பிறப்பாளரின் இயல்பு

இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது,
இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல் குடி,
அறு நான்கு இரட்டி இளமை நல்லி யாண்டு
ஆறினின் கழிப்பிய, அறன் நவில் கொள்கை, 180

மூன்று வகைக் குறித்த முத் தீச் செல்வத்து,
இருபிறப்பாளர், பொழுது அறிந்து நுவல

அந்தணர் வழிபடும் முறை

ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்,
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர், தற்புகழ்ந்து, 185

ஆறு எழுத்து அடக்கிய அரு மறைக் கேள்வி
நா இயல் மருங்கில் நவிலப் பாடி,
விரை உறு நறு மலர் ஏந்திப் பெரிது உவந்து,
ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று,

5. குன்று தோறாடல்

வேலன் (பூசாரி) கட்டிய சிரமாலை

பைங்கொடி, நறைக் காய் இடை இடுபு, வேலன், 190

அம் பொதிப் புட்டில் விரைஇ, குளவியொடு
வெண் கூதாளம் தொடுத்த கண்ணியன்;

குரவைக் கூத்து

நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின்;
கொடுந் தொழில் வல் வில் கொலைஇய கானவர்
நீடு அமை விளைந்த தேக் கள் தேறல் 195

குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து,
தொண்டகச் சிறு பறைக் குரவை அயர

முருகனைச் சேவிக்கும் மகளிர்

விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங் கான்,
குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி,
இணைத்த கோதை, அணைத்த கூந்தல்; 200

முடித்த குல்லை, இலையுடை நறும் பூ,
செங் கால் மராஅத்த வால் இணர், இடை இடுபு,
சுரும்பு உணத் தொடுத்த பெருந் தண் மாத் தழை
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ,
மயில் கண்டன்ன மட நடை மகளிரொடு 205

குமரக் கடவுளின் திருக்கோலம்

செய்யன், சிவந்த ஆடையன், செவ்வரைச்
செயலைத் தண் தளிர் துயல் வரும் காதினன்,
கச்சினன், கழலினன், செச்சைக் கண்ணியன்,
குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன்,
தகரன், மஞ்ஞையன், புகர் இல் சேவல்அம் 210

கொடியன், நெடியன், தொடி அணி தோளன்
நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு,
குறும் பொறிக் கொண்ட நறுந் தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன்,

குன்று தோறாடலின் இயல்பு

முழவு உறழ் தடக் கையின் இயல ஏந்தி, 215

மென் தோள் பல் பிணை தழீஇ, தலைத்தந்து,
குன்றுதோறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று,

6. பழமுதிர்சோலை

முருகன் இருப்பிடங்கள்

சிறு தினை மலரொடு விரைஇ, மறி அறுத்து,
வாரணக் கொடியொடு வயிற் பட நிறீஇ,
ஊர்ஊர் கொண்ட சீர் கெழு விழவினும், 220

ஆர்வலர் ஏத்த மே வரு நிலையினும்,
வேலன் தைஇய வெறி அயர் களனும்,
காடும் காவும், கவின் பெறு துருத்தியும்,
யாறும் குளனும், வேறு பல் வைப்பும்,
சதுக்கமும் சந்தியும், புதுப் பூங் கடம்பும், 225

மன்றமும் பொதியிலும், கந்துடை நிலையினும்

குறமகளின் வெறியாட்டு
நகரில் முருகனை ஆற்றுப்படுத்தல்

மாண் தலைக் கொடியொடு மண்ணி அமைவர,
நெய்யோடு ஐயவி அப்பி, ஐது உரைத்து,
குடந்தம்பட்டு, கொழு மலர் சிதறி,
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ, 230

செந் நூல் யாத்து, வெண் பொரி சிதறி,
மத வலி நிலைஇய மாத் தாள் கொழு விடைக்
குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி
சில் பலிச் செய்து, பல் பிரப்பு இரீஇ,
சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து, 235

பெருந் தண் கணவீர நறுந் தண் மாலை
துணை அற அறுத்துத் தூங்க நாற்றி,
நளி மலைச் சிலம்பின் நல் நகர் வாழ்த்தி,
நறும் புகை எடுத்து, குறிஞ்சி பாடி,
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க, 240

உருவப் பல் பூத் தூஉய், வெருவரக்
குருதிச் செந் தினை பரப்பி, குறமகள்
முருகு இயம் நிறுத்து, முரணினர் உட்க,
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர்

முருகனை வழிபடுதல்

ஆடு களம் சிலம்பப் பாடி, பலவுடன் 245

கோடு வாய்வைத்து, கொடு மணி இயக்கி,
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி,
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட,
ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தவாறே.

முருகனைக் கண்டு துதித்தல்

ஆண்டு ஆண்டு ஆயினும் ஆக, காண் தக 250

முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்தி,
கை தொழூஉப் பரவி, கால் உற வணங்கி
நெடும் பெருஞ் சிமையத்து நீலப் பைஞ் சுனை,
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப,
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ! 255

ஆல் கெழு கடவுள் புதல்வ! மால் வரை
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ!
இழை அணி சிறப்பின் பழையோள் குழவி!
வானோர், வணங்கு வில், தானைத் தலைவ! 260

மாலை மார்ப! நூல் அறி புலவ!
செருவில் ஒருவ! பொரு விறல் மள்ள!
அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொன்மலை!
மங்கையர் கணவ! மைந்தர் ஏறே!
வேல் கெழு தடக் கைச் சால் பெருஞ் செல்வ! 265

குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து,
விண் பொரு நெடு வரைக் குறிஞ்சிக் கிழவ!
பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே!
அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக!
நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேர் ஆள! 270

அலந்தோரக்கு அளிக்கும், பொலம் பூண், சேஎய்!
மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து,
பரிசிலர்த் தாங்கும் உரு கெழு நெடு வேஎள்!
பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்!
சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி! 275

போர் மிகு பொருந! குரிசில்! எனப் பல,
யான் அறி அளவையின், ஏத்தி, ஆனாது

கருதி வந்ததை மொழிதல்

நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின்,
நின் அடி உள்ளி வந்தனென்; நின்னொடு
புரையுநர் இல்லாப் புலமையோய்! எனக் 280

குறித்தது மொழியா அளவையின்

சேவிப்போர் கூற்று

குறித்து உடன்
வேறு பல் உருவின் குறும் பல் கூளியர்,
சாறு அயர் களத்து வீறு பெறத் தோன்றி,
அளியன் தானே முது வாய் இரவலன்;
வந்தோன், பெரும! நின் வண் புகழ் நயந்து என 285

இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி;

முருகன் அருள்புரிதல்

தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின்,
வான் தோய் நிவப்பின், தான் வந்து எய்தி,
அணங்கு சால் உயர்நிலை தழீஇ, பண்டைத் தன்
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி, 290

அஞ்சல் ஓம்புதி, அறிவல் நின் வரவு என,
அன்புடை நன் மொழி அளைஇ, விளிவு இன்று,
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒரு நீ ஆகித் தோன்ற, விழுமிய
பெறல் அரும் பரிசில் நல்குமதி பலவுடன் 295

அருவியின் காட்சியும் இயற்கை வளமும்

வேறு பல் துகிலின் நுடங்கி, அகில் சுமந்து,
ஆர முழு முதல் உருட்டி, வேரல்
பூவுடை அலங்கு சினை புலம்ப, வேர் கீண்டு,
விண் பொரு நெடு வரைப் பரிதியின் தொடுத்த
தண் கமழ் அலர் இறால் சிதைய, நன் பல 300

ஆசினி முது சுளை கலாவ, மீமிசை
நாக நறு மலர் உதிர, யூகமொடு
மா முக முசுக்கலை பனிப்ப, பூ நுதல்
இரும் பிடி குளிர்ப்ப வீசி, பெருங் களிற்று
முத்துடை வான் கோடு தழீஇ, தத்துற்று 305

நன் பொன் மணி நிறம் கிளர, பொன் கொழியா,
வாழை முழு முதல் துமிய, தாழை
இளநீர் விழுக் குலை உதிர, தாக்கி,
கறிக் கொடிக் கருந் துணர் சாய, பொறிப் புற
மட நடை மஞ்ஞை பலவுடன் வெரீஇ, 310

கோழி வயப் பெடை இரிய, கேழலொடு
இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கைக் குடா வடி உளியம்
பெருங் கல் விடர்அளைச் செறிய, கருங் கோட்டு
ஆமா நல் ஏறு சிலைப்ப, சேண் நின்று 315

இழுமென இழிதரும் அருவி,
பழம் முதிர் சோலைமலை கிழவோனே!

தனிப் பாடல்கள்

குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர் தடிந்தாய்!
புன் தலைய பூதப் பொரு படையாய்! - என்றும்
இளையாய்! அழகியாய்! ஏறு ஊர்ந்தான் ஏறே!
உளையாய்! என் உள்ளத்து உறை. 1

குன்றம் எறிந்ததுவும், குன்றப் போர் செய்ததுவும்,
அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும், -இன்று என்னைக்
கைவிடா நின்றதுவும், கற்பொதும்பில் காத்ததுவும்,
மெய் விடா வீரன் கை வேல்! 2

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை. 3

இன்னம் ஒரு கால், எனது இடும்பைக் குன்றுக்கும்,
கொல் நவில் வேல் சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனி வேய் நெடுங் குன்றம் பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும். 4

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்;
பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்-பன்னிரு கைக்
கோலப்பா! வானோர் கொடிய வினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்தில் வாழ்வே! 5

அஞ்சும் முகம் தோன்றின், ஆறுமுகம் தோன்றும்;
வெஞ் சமரில், அஞ்சல் என வேல் தோன்றும்; -நெஞ்சில்
ஒரு கால் நினைக்கின், இரு காலும் தோன்றும்
முருகா! என்று ஓதுவார் முன். 6

முருகனே! செந்தி முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே! - ஒரு கை முகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன், நான். 7

காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால்,
ஆர்க்குப் பரம் ஆம் அறுமுகவா! - பூக்கும்
கடம்பா! முருகா! கதிர் வேலா! நல்ல
இடம்காண்; இரங்காய், இனி! 8

பரங்குன்றில் பன்னிரு கைக் கோமான்தன் பாதம்
கரம் கூப்பி, கண் குளிரக் கண்டு, -சுருங்காமல்,
ஆசையால், நெஞ்சே! அணி முருகு ஆற்றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல். 9

நக்கீரர்தாம் உரைத்த நல் முருகு ஆற்றுப்படையை
தற்கோல, நாள்தோறும் சாற்றினால், - முன் கோல
மா முருகன் வந்து, மனக் கவலை தீர்த்தருளி,
தான் நினைத்த எல்லாம் தரும். 10