குலசை நகர் தெய்வ சிகாமணிக் கவிராயர்

இயற்றிய

அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ்

1. காப்புப் பருவம்

1. திருமால்

நீர்கொண்ட தண்துழாய்த் திருமாலை மாலயன்
     நிலாமாலை மாலைவண்ணன்
நித்தன்முத லெத்தனை உயிர்த்தொகுதி அத்தனையும்
     நீபெற்ற தாயென்றசொற்

சீர்கொண்ட நான்மறை பராவுபஞ் சாட்சரச்
     செல்வியைத் தென்குலசையூர்ச்
சிவகாம சுந்தரியை அறம்வளர்த் தவளைமக
     தேவியைக் காக்கபரவைப்

பார்கொண்ட சிற்றடிச் சுவடுகவ டில்லாத
     பத்தர்சித் தத்திருத்திப்,
படைப்புயி ரனைத்துமொர் தினைத்துணைப் பொழுதினும்
     பழுதிலா மற்பரித்துத்

தார்கொண்ட குழலிருவ ரூடாம னீடுழி,
     தான்வீற் றிருக்கும் அமுதத்
தண்கலைச் சுடர்வானி லொண்கதிர்ச் சுடர்வீசு
     சங்குசக் கரபாணியே.

2. சிவபெருமான்

வேறு

கருவிமுகில் தவழ் பொருப்பை வலிதிற் பெயர்த்துநீள்
     கடலகடு கிழியநட்டு முறையில் திருப்பவே
கடவுளர்கை விட உதித்த கடுவைத் தடக்கியே
     கறைமிடற துடையகர்த்த ரெனுமற் புதத்தினார்

திரிபுரமும் மதனும்முற்று மொழியக் கணத்திலே
     சினவுதிரு நகைநுதற்கண் ணினர்பத்த ரத்தனார்,
திகழ்கயிலை மலையிருப்பர் பொருகைக் கணிச்சியார்
     திரிபத கையவள் மணத்த சிவனைத் துதிப்பம் யாம்

நரமிருக வடிவெடுத்து இரணியற் குறைத்தமால்
     நளினன் முதலெவர்களுக்கு முதன்மைச் சிறப்பினாள்,
நலியுமடியவர் நினைக்குமளவிற் செலச் செய்வாள்
     நனவு கனவினும் அபத்தரிதயத்தி னுட்படாள்.

குருமணிகள் மரை மலர்த்து வெயிலொத் தெறிக்கவே,
     குடவளை குவளை மலர்த்தும் நிலவைப் பரப்பவே
குலவு பகலிரவு ஒழித்த உலகத் துயர்ச்சிசேர்
     குலசை நகர்அறம் வளர்த்த கொடியைப்புரக்கவே.

3. விநாயகர்

வேறு

நெடியமதிலிற் பொன்மண்டபநிலைபெற்றிருக்கும்வான்
     எழுபிறை மருப்பொடைந்துகைநிலைபெற்றவெற்பனான்
முடிவிலடியர்க்கு நன்கருள் முளரிப்பதத்தினான்,
     முதுமறை வழுத்துகுஞ்சர முகனைத்துதிப்பநீள்,

குடிலசடிலத்தர் நஞ்சிடு குவளைக் கழுத்தினார்
     குலசை வருகச்சிகொண்டவர் குழையச் செய்மைக்கணாள்
தடவரைகள் சுற்றும் அம்புவி தருமப் பெருக்கினாள்
     தமிழ்அறம் வளர்த்த சுந்தரி தமிழைப் புரக்கவே.

4. கந்தன்

வேறு

அடலசுரர் படமகிழ்ச்சி யண்டருக் காக்கிட
     அமர்செய்அயில் கையிலெடுத்து வந்த சத்தார்த்தனை
அமலனையென் னுளமிருக்கும் அன்பனைத் தோட்டுறு
     கடல்விடமதெனஉதித்த கஞ்சனைத் தேய்த்திடு

கருணைமுகில் மருகனைப்பிரபந்தனைக் கூத்துறு
     கலப மயில்தனை நடத்துகந்தனைப் போற்றுதும்
வடவரைவில்லினர் மணத்த மன்றலுக் கேற்றவள்
     வழிபெறு மெய்யருள் விசிட்டரின் புறப்பார்த்தவள்

மனதில் அடியவர் நினைக்கும் அன்பெனப் பூத்தவள்
     குடவளை வெண்மதி மணற்செய்குன்றினிற்கொட்டுறு
குளிர்தரளம் உடுநிகர்ப்பது உண்டெனக் காட்டிய
     குலசைநகர் அறம் வளர்த்த கொம்பினைக் காக்கவே,

5. இலக்குமிதேவி

வேறு

கடலைக் கவியின் அடைத்து அடைத்தகல்
     அணையினடற் படை நடத்தியே
கரபத்திருதச முகத்தன் மக்களொடு
     அழிய ஒழித்து அமரருக்குநீள்

கவலைத் துயர்கள் அகற்றி நற்குண
     விபிடணனுக் கரசி யற்றிமா
வடவெற் பெனத்தனு எடுத்த லக்கும
     ணனுமிதி லைப்பொனும் வரத்தமூர்

மகிழத் தயவினர் வரச்செய்த அற்புத
     மணிமுடி வைத்துல களித்தமால்
மருமத்து உறவு இருக்கும் இலக்குமி
     வனச மலர்ப்பதம் வழுத்துவாம்

நடனக் களிமயில் நடத்து சுப்பிர
     மணியனை ஒக்கலை யிருத்தியே
நகிலத்தெழு அமுது உளத்து மெய்ப்பொருள்
     விளைய உணப்பணும் விருப்பினாள்

நகையிற் றிரிபுர மெரித்த முக்கணன்
     முதலினர் முத்தொழில் முளைத்தவோர்
கொடியிற் குழையுநு சுப்பிளைத்திட
     வளரு மிணைக்கன தனத்தினாள்

குரவைத் தொனிகுட வளைக்கிளைத்தொனி
     மணி முரசத்தொனி மகிழ்ச்சி சேர்
குலசைப்பதி அறம் வளர்த்த பொற்கொடி
     யினிமை யிசைத் தமிழ் தழைக்கவே.

6. துர்க்கை

வேறு

முத்தலை வேற்படை நீலிகலாதரி
     முரிதிரைக் கடல்வளை நிலத்தொடு
முச்சக மேற்கொடி தாமகிடாசுரன்
     முடியினிற் சரணுற மிதித்தவள்

முக்க ணின்நாற்புயமானத பூரணி
     முனைமுறுக்குள பிறையெயிற்றினள்
உத்தியினாற்பல ஆகம மெய்யறிவு
     உடைய வித்தகர் உளமிருப்பவள்

ஒத்த நிலாச்சடையார் தமையாடல்செய்
     உரிமை முற்றிய பெருமை பெற்றவள்
உத்தரவாய்ச் செல்வி வீரமனோகரி
     உபய பொற்பத மலர் வழுத்துதும்

நித்திய வாழ்க்கையர் காரணகாரியர்
     நிமலை அற்புத கமல லக்குமி
நிச்சய வாக்கினள் நான் மறை நூன்முறை
     நிறுவு மெய்ப்பொருள் அருளிசைக்குயில்

நெட்டுள மாக்கொடி யூர்தியதாமென
     நிலை நிறுத்து அயிலறுமுகற்கு அனை
அத்தமிலாச் சொல்லினோர் செயுமாணவ
     மறம் வெறுத்தவள் புவனரட்சகி

அற்பர்தம் நாட்டம் அடாதவள் பேறாண்மை
     அடியருள்தனி குடியிருப்பவள்
அத்திரவாட்கணி வாள் நகை வாள்நுதல்
     அறம் வளர்த்தவள் தமிழ் தழைக்கவே

7. வடுகன்

வேறு

உருமுக் குரல்படு துடிவைத் தொருகரம்
     ஒளிரக் கனல்விழி ஊக்கியே
உறுமுத் தலையடு கழுமுட் படையொரு
     கையினிற் றிரியஉ லாத்தியே

உதயக் கதிரென மணிநெட் டரவணி
     யொருகைத் தலமிசை சேர்த்தியே
மரையிற் குடிபுகு விதிகட் டலைமலை
     வளர்கைத் தலமெதிர் காட்டியே

மலை சுற் றுலகினில் ஞமலிப் பரிமிசை
     வருமுக் கிரபுய ஈட்டினான்
வடிவிற் கரியவ னடியற்குயிரென
     வடுகக் கடவுளை வாழ்த்துவாம்

அரவப் பகிரதி சுழலச் சடையுடை
     அவிழப் பரிபுர மார்க்கவே
அணுகிச் சிவசிவ வெனுமுத்தர்கள்வினை
     அகலப் பதமெதிர் தூக்கியே

அணிபொற் சபைமுழவு அதிரச் சகதலம்
     அதிரப் பவரித கூத்தனார்
குருகிற் பொலிகர மலர் தொட் டணைசிறு
     குதலைக் கிளியெனை யாட்கொள்தாய்

குணவிற் புரையிரு புருவப் பெடைமயில்
     குயின்முத் தமிழிசை வேட்கையாள்
குலசைப் பதிஉமை யவள்முப் படிதரு
     கொடியைப் பரிவொடு காக்கவே,

8. ஐயனார்

வேறு

புள்ளரசின் மேற்கொண்ட பூவரசி கொண்கனும்
     பொன்னரசு நாடுகாக்கும்
புருகூதன் முதலமரர் அமுதுண்ண விடமுண்ட
     புண்ணியனும் உதவுசுதனை

வள்ளமுலை யிருவருக் கொருகொழுந னைச்சாத
     வாகனனை யயிராணிதன்
மரபுகாத் தவனைத் தமிழ்க்குலசை நகர்வாழ
     வந்தஐ யனைத்துதிப்பாம்

கள்ளவிழ் மலர்ப்பொழில் எழிற்சிமய இமயமேற்
     கைப்பிடித் திடுகணவர்பொற்
கால்பிடித் தம்மிமிசை வைத்து அருந் ததிஅன்று
     காட்ட எதிர் கண்டஅவளைத்

தள்ளரிய கற்புநிலை பெற்றுமலை வற்றுமுச்
     சகமெலாம் போற்றமுற்றுந்
தாபித்த மகதேவி யம்மையுமை அறம்வளர்த்
     தவளிசைத் தமிழ்தழைக்கவே.

9. நாமகள்

சித்தமும் புத்தியு மனமும்ஆங் காரமுஞ்
     செயலும்உரை யும்பொருந்தித்
திரிபுவன உயிர்தொறும் இருந்துவிளை யாடியுந்
     தெரியாத சின்மயத்தைக்

கொத்தலர்க் கொந்தளச் சிந்துரத் திருநுதற்
     குறுநகைப் பெண் அரசியைக்
குலசேக ரப்பட்டி னத்து அறம் வளர்த்தபொற்
     கொடியைப் புரக்கஇசையுஞ்

சத்தமுஞ் சகலகலை அத்தமுஞ் சாவித்ரி
     காயத்திரி மந்திரமுமுச்
சங்கத் தமிழ்ப்பனுவ லாட்டியெனு நாமமுஞ்
     சட்சமய முழுதும் எழுதும்

வித்தகம் விரித்துத் தரித்தகர மும்படிக
     மெய்யு மெய்யும்படைத்த
மெல்லரும்பு அலர்வட்ட வெள்ளிமண் டபம்ஒத்த
     வெள்ளை வெண் கமலத்தளே.

10. இந்திரன்

வெண்திரைத் தமரக் கருங்கடற் செந்துவரின்
     விழுதுபட் டுஒளிபமுத்து
மின்னுபின் னற்குடில மோலிப் பரானந்த
     வெள்ளத்தி னுள்ளத்தின்மேற்

கொண்டிருக் கும்பொருளை வரபூத ரத்தைக்
     குணக்கடலை வேதமுடிவைக்
குலசேக ரப்பட்டி னத்து அறம்வளர்த்தபொற்
     கொடியைப் புரக்கவேலை

மண்டலத்து உறுசிகர வரைகள் மேற்கொண்டெழ
     மற்சிற குஅறுத் துஇருந்து
வச்சிரத் தாற்பொருது விருதுகொண் டுஎதிரிட்டு
     வந்தவரை வென்றடக்கி

அண்டருக்கும் இந்தி ராணிக்கும் நாலுகோட்டு
     அயிராவ தத்துக்குநீடு
ஐந்துதரு வுக்கும்மின் னமுதுக்கும் வேந்தான
     ஆகண்ட லக்கடவுளே.

11. முப்பத்து மூவரும் பிரமதேவரும்

ஆதித்தர் பன்னிருவர் காளகண் டத்திறைவர்
     ஐந்தாறு பேர்வசுக்கள்
ஆனாத எண்மரெழு மேனாளி ல்அன்றவ
     தரித்தஅச் சுனியிருவரும்

போதிற் பொருந்தியிர ணியகற்ப முஞ்செய்து
     புவனப் படைப்புயிர்கள் தம்
புண்ணியபா வத்தின்வழி யொழுகவெழு தியவிதிப்
     புத்தேளி ருங்காக்கபொற்

சோதிக் கொழுங்கதிர் விரிக்கும்வட வெற்புஎடுத்
     துக்குனித் துச்சிரித்துத்
துட்டர்புரம் வெந்துபொடி பட்டொழிய அடும்விடைச்
     சோதிசெம் பாதியுடலும்

மாதிக்குடன் சகமனைத்தும் நின்றொளிர் பச்சை
     மரகதச் சுடர்பரப்பி
வந்துகுடி கொண்டமக தேவிசுந் தரிஅறம்
     வளர்த்ததே வியைமுழுதுமே.

காப்புப்பருவம் முற்றிற்று

2. செங்கீரைப்பருவம்

விம்பச் சிவந்தவா யம்மைமே னாதேவி
     வெற்பரசி கற்பரசிபொன்
மேகலையொ துக்கிமடி மீதுற இருத்திமுலை
     விம்மிவழி யும்பான் முதற்

கம்பிக்கும் வேலைத்த ரைப்பெய்து பெய்தசங்
     கைக்கொண்டு பால்புகட்டிக்
கைச்சங்கை மும்முறை சிரஞ்சுற்றி யொருமுறை
     கவிழ்த்தி உடலங்குலுக்கிக்

கும்பக் களிற்றெருத் தத்தில்திருத்தமொடு
     கொணருநீ ராட்டி மஞ்சள்
குளிர்நிலக் காப்பிட்டு நெய்பொத்தி வட்டக்
     குதம்பையிரு குழையிலிட்டுச்

செம்பொற் பசுந்தொட்டில் வைத்து வைத்து ஆட்டு
     செங்கீரை யாடியருளே
சீரைவள நாட்டுதமிழ் வீரைவள நாட்டரசி
     செங்கீரை யாடியருளே. 12

பொன்குலவு செங்கமல முங்குவளை யுஞ்சுரும்
     புங்கரும் பும்பகழிநாண்
போர்விலென உருவிலிக் குதவுகனை வயல்அயலொர்
     பொம்மலிற் கயல்குதித்து

மின்புரை கனிக்கதலி மடலொடித் துக்கமுகின்
     மிடறுதட விக்கதிர் நிலா
மேகமட்டுஞ்சென்று மீண்டுமட வார்கள் நீர்
     விளையாடும் வாவிபுக்குத்

தன்பெருமை யைச்சிறுமை யாக்கும்விழி யார்விழி
     தனக்கொதுங் கிப்பதுங்குந்
தாமரையி லுறையுஞ்ச கோரம்பறந்து
     வதனத்தைமதி யென்று உலாவுந்

தென்குலசை நகரறம் வளர்த்தசிறு பெண்பிள்ளை
     செங்கீரை யாடியருளே
தெய்வநா யகியறம் வளர்த்தநா யகிதேவி
     செங்கீரை யாடியருளே. 13

நீரைவள மாக்குசெங் கமலமுங் குவளைகளும்
     நிறைமடுவி லொருபருவரால்
நெரிமருப் பெரிவிழிக் கவையடிப் பகடுகள்
     நீரினிற் படியவெடி போய்

ஊரைவள மாக்கும்மதி மண்டலத் தொடுபலவி
     னுட்கனியு முட்கனியுடைத்
தூடுருவி யாடுதிரை வானதிபு குந்துவரி
     யுண்டுசூற் கொண்டெழுந்து

பாரைவள மாக்குமைக் கொண்டல்கிழி யச்சென்று
     பாய்ந்ததிற் றோய்ந்ததுளியின்
பண்டைச் சுனைப்புனலில் வந்தச்ச மற்றுப்
     பரர்க்கேற் றெந்நாளும்வாழுஞ்

சீரைவள நாட்டுதமிழ் வீரைவள நாட்டரசி
     செங்கீரை யாடியருளே
திறம்வளர்த் துஅருள்வளர்த் துஅறம்வளர்த் தருள்தேவி
     செங்கீரை யாடியருளே 14

ஒற்றைவட மேருஒரு காலென நிறுத்திமேல்
     ஒளிரும் வெளிமுகடுமூடி
உகந்தொறும் உகந்திடும் பிரளயச் சலதிக
     ளும்புதுக் கும்புவனமே

சுற்றிலுங் கலனென அடுக்கிவைத் துஅண்டச்
     சுவர்க்குள்எழு வரைகள் நட்டுச்
சுடர்விளக் கிட்டுஎண் டிசைத்தலைவர் நம்மையத்
     தொன்மையில் சூழநிறுவிப்

பெற்றஉயிர் எண்பத்து நான்குநூ றாயிரப்
     பெயர்குறை படாமலூட்டிப்
பித்தர் திரிஅம்பக த்தர்க்கும் இன்பப்
     பெருக்கமு துஅளித்தளித்துச்

சிற்றில்விளை யாடும்வளை யாடுகைப் பெண்பிள்ளை
     செங்கீரை யாடியருளே
தென்குலசை நகர்வாழ வந்து அவ தரித்தபரை
     செங்கீரை யாடியருளே 15

தலைவனைத் தன்னைவினை யைக்கண்டு சட்சமய
     தர்க்கம்எல் லாமறிந்து
சரியைகிரி யாயோக ஞானந்த ரும்பதந்
     தனையும்அறி வாலறிந்து

தொலைவரிய மாயப் பிரபஞ்சப் பகட்டுத்
     தொடக்கைக் கடக்கவிட்டுச்
சுகானந்த வெளியொளியில் அசையாது நிலைநின்ற
     சுத்தர்சித் தத்தில் அமுதக்

கலைமதியு நதியும்இலை பொதியும்இத ழியும் வேய்ந்த
     கற்றைச் சடாதரரெனுங்
கண்டிதஅகண்டிதக் கடவுளொடு குடிகொண்டு
     கால்கொண்டு கதிகொடுக்குந்

நிலைநுதற் கயல்விழித் துடியிடைப் பெண்ணரசி
     செங்கீரை யாடியருளே.
தெய்வநா யகிஅறம் வளர்த்தநா யகிதேவி
     செங்கீரை யாடியருளே 16

அன்றிற்க ரும்பெண்ணை படியினு மடம்பிலும்
     அலைகடற் கரைதிரையினும்
அவரவர்கள் கொடுவந்த சீனிசீ னாம்பரம்
     அடங்கிய இடங்கடொறுநீள்

குன்றைப் பெரும்பல கலன்களிலும் வெண்மணற்
     குன்றினுங் கைதைகளினுங்
குளிர்நிழற் சோலையினும் வலைஞர்வலை யினும் அளவர்
     குடிலினும் பண்டம்விற்கும்

முன்றிற் பெருஞ்சாலை நிலையினும் பலர்சிலர்கள்
     முந்திவரு சந்திகளினும்
உள்வாய் முனைச்சங்க மாயிரஞ்சுற்றிட
     முழங்கொலி வலம்புரிவலஞ்

சென்று இட்டம் உடனுலவு தென்குலசை உமையம்மை
     செங்கீரை யாடியருளே
சிவசக்தி சிவஞான சத்திவா லாசத்தி
     செங்கீரை யாடியருளே 17

கருந்தலைச் சாரிகைகள் செவ்வாய்ப் பசுங்கிள்ளை
     கற்பனைச் சொற்சுவைபெருக
கந்தருவர் ஏழிசைகள் சூழிசையி னியாழிசைகள்
     கரநரம் பலதுதொனியாய்ப்

பொருந்தும் புழைக்குழலி னொலியுங் கடிப்பிடும்
     பொம்மலுஞ் செம்மையல்ல
பொருவருங் கஞ்சத் தெழுந்தொனி விருப்பிலம்
     புதிதன்று தேவபாணி

பருந்துநிழ லுங்குழலு ம்ஓசையும் போலஇப்
     பகிரண்ட கோடியெல்லாம்
படரும் பரஞ்சோதி யிச்சித்த நிச்சயப்
     பழுதின்மொழி தொழுதுவேட்டோந்

திருந்துசெம் பவளஇதழ் வெண்முறுவல் வாய்விண்டு
     செங்கீரை யாடி அருளே
தென்குலசை நகரறம் வளர்த்தமக தேவிநீ
     செங்கீரை யாடிஅருளே. 18

வேறு

கால்வளை தண்டை சிலம்பு சதங்கை
     கலின்கலி ன்என்றாடக்
கைவளை யாடக் கிரணம் வளைந்த
     கலன்கள் புரண்டாடச்

சூல்கலை புயலென உச்சி மிலைச்சிய
     சூழிய மீதாடச்
சுட்டியும் ரத்நப் பட்டமு மாடச்
     சுற்றிய பட்டாட

வேல்வளை கண்ணியர் பண்ணிய ரன்பும்
     மிகுந்து புகுந்தாட
மெய்யெழி லாடப் பொய்யிடை யாடிட
     வேர்வை துளித்தாட

வால்வளை நிழலென உலகு புரந்தவள்
     ஆடுக செங்கீரை
றத்தை வளர்த்த தமிழ்க்குல சைப்பரை
     ஆடுக செங்கீரை 19

மின்புரை சிற்றிடை மங்கையர் முப்பொறி
     வென்றார் நின்றார்பார்
மேல்அம ரேசர்கள் காமலர் தூய்மறை
     விண்டே கண்டார்பார்

அன்பர் விருப்பள வுங்கிருபை வைத்தவர்
     அன்பால் முன்பானார்
ஆகம வேதபு ராணிகர் தாள்தொழு
     தந்தர் வந்தார்பார்

நன்கு மதித்து மிகுந்த கவித்துவர்
     நங்கா யிங்கானார்
நாவலர் காவலர் நாடொறும் நீசெயும்
     நன்றாய் கின்றார்கேள்

தென்குல சைப்பர மன்கை பிடித்தவள்
     செங்கோ செங்கீரை
தேவர்கள் மூவர்கள் யாவரு மானவள்
     செங்கோ செங்கீரை, 20

புன்சென னத்து என்உளம்புக இச்சை
     புரிந்தாய் செங்கீரை
புண்ட ரிகப்பிர மன்பரி சுத்தர்
     புகழ்ந்தாய் செங்கீரை

தன்கண வர்க்குநல்லின்பம் அளித்திசை
     தந்தாய் செங்கீரை
தண்துள வத்தொடை விண்டவ னுக்கொரு
     தங்காய் செங்கீரை

வன்பகை யிற்சுழ ல்அன்பர்த மக்கெதிர்
     வந்தாய் செங்கீரை
மண்டல வட்டம் அழிந்தலை புக்கினும்
     மங்காய் செங்கீரை

தென்குல சைப்பதி அம்புய லட்சுமி
     செங்கோ செங்கீரை
திங்கண் முடித்த சிவன்கை பிடித்தவள்
     செங்கோ செங்கீரை 21

செங்கீரைப் பருவம் முற்றிற்று

3. தாலப்பருவம்

காரார் குவளைத் துணைவிழியைக்
     கையாற் பிசையச் செங்குவளை
கடுத்துக் கலங்கிப் புனல் ததும்பக்
     கண்டு முலைத்தாய் மலைத்தாய்தன்

வாரார் முலையூடு எடுத்து அணைத்து
     வதனத் துஅணைத்து முத்தமிட்டு
வயிறு நிரம்பப் பால் புகட்டி
     மடிமீ திருத்தித் திருத்தியொலி

சீரா ரருவி நீராட்டித்
     திறம்பா ராட்டிப் பணிபூட்டித்
திருக்கண் மலர்க்கஞ் சனந்தீட்டிச்
     செம்பொற் றிருமா லிகைசூட்டி

ஆராரெனத்தா லாட்டிய கண்
     ணாட்டி தாலோ தாலேலோ
அறத்தை வளர்த்த அறம்வளர்த்த
     அம்மா தாலோ தாலேலோ 22

நந்தா இரு நூற்றிருபத்து
     நாலு புவனத் தெண்பத்து
நான்கு நூறாயிர முயிர்க்கும்
     நடுநின் றெவர்க்கு மிதம்அகிதம்

முந்தாது அகன்று பிந்தாது
     முன்னை வினையின் படிநடத்தி
முறையாய் நடத்தும் விளையாட்டு
     முழுது நடத்திச் சகம்புரந்த

சிந்தாமணியே நீலரத்நத்
     தெய்வமணியே கண்மணியே
தெள்ளித் தெளித்த தெள்ளமுதே
     தேனே மானே முக்கண்முகம்

ஐந்தா ம்ஒருவர் காமவெப்பம்
     மாற்று மருந்தே தாலேலோ
அறத்தை வளர்த்த அறம்வளர்த்த
     அம்மா தாலோ தாலேலோ 23

வெப்பான் மெலியும் வழுதிதன்பால்
     விருப்பாய்ப் புகுந்து சிவசமய
வெறுப்பால் அழிந்து வெறுப்பான
     வீண்பா தகராஞ் சமணர்தம்மை

இப்பா ரறிய வென்றுசமண்
     எண்ணா யிரருங் கழுமுனையில்
இருப்பா ரெனுஞ் சொற்படி கழுவின்
     ஏற்றிச் சைவ நெறியொழுங்கு

தப்பாதமைத்து வெண்ணீறு
     தரிப்பார் இடத்திற் குடியிருக்குந்
தமிழ்ப்பா வலனைச் சண்முகனைச்
     சம்பந்தனைமைந் தனைமுலைப்பால்

அப்பா அரசே உண்ணெனும்பெண்
     அரசே தாலோ தாலேலோ
அறத்தை வளர்த்த அறம்வளர்த்த
     அம்மா தாலோ தாலேலோ 24

வடக்குங் குமக்கொங் கைகள்குலுங்க
     மணிவாய் வெளுப்பக் கண்சிவப்ப
மடுவிற் படுநீர் குடைந்தாடும்
     மகளிர் விழியின் மருண்டுஉள் அஞ்சிக்

கிடக்குஞ் சினக்கெண் டைகளிலொரு
     கெண்டை குதித்துக் கற்பகப்பூங்
கிளர்கொப் புஒசித்துக் காமவல்லி
     கிளையுந் தழையுங் கடந்துநிலா

கடக்குங் ககன இலஞ்சியினில்
     நாண்மீன் கோண்மீ னொடும்பொருது
நந்தா மகரா லயமிதெனும்
     நாம மறிந்து வந்துபுகுங்

கடற்குண் டகழி சூழ்குலசே
     கரப்பட் டினத்தாய் தாலேலோ
கங்கா தரர்பங் கானஇன்பக்
     கனியே தாலோ தாலேலோ 25

அத்தா யினுஞ்சீ ரசோதைத்தாய்
     அணித்தாய்க் களவு கண்டுமத்தால்
அடித்தாய் மகனே களவுசெய்தாய்
     ஆயின் இனமும் அடித்தாயா

கொத்தா யிருக்குஞ் சபையறியக்
     கூறிவிடுவேன் மாறிவிடு
குலத்துக்கீன முறையலநான்
     கொடுப்பன் வேண துஉனக்கெனுஞ்சொல்

எத்தா லுரைத்தாள் இத்தாயென்று
     எண்ணா துஅனேகந் திருவிளையாட்டு
எல்லாம் புரிவோ னுடன்பிறந்திங்கு
     எண்ணான் குஅறமும் வளர்த்திடுசெங்

கைத்தாய் புவனத் தாய்குலசே
     கரப்பட்டினத்தாய் தாலேலோ
கங்கா தரர்பங் கானஇன்பக்
     கனியே தாலோ தாலேலோ 26

வேறு

மங்குல் தவழ்ந்திடும் மதிளிற் கோபுர
     வாயிலில் வீதிகளில்
வண்டலை தண்டலை நிழலிற் கடல்அலை
     வாய்க்கரை யில்திரையிற்

கொங்கலர் பங்கய மடுவில் தொடுவிற்
     குமரர்கள் தந்தெருவிற்
குவளைக் குழியிற் கழியிற் புளினக்
     குன்றினின் முன்றில்களிற்

திங்க ளிளம்பிறை நுதலியர் பரதச்
     சிரமக் கூடத்திற்
சீனத் தவர்மலை யாளத் தவர்பலர்
     சிலர்வரு சாலைகளிற்

சங்கு முழங்கு வளங்குல வுங்குல
     சைத்தாய் தாலேலோ
சங்கரன் பங்கினும் எங்கு நிறைந்தவள்
     தாலே தாலேலோ 27

போதுகண் மேய்ந்திடும் மேதிகள் வாவி
     புகுந்து மிகுந்த சுவைப்
புனல்பரு கிப்பரு கிக்கன் றுஉள்ளிப்
     பொழியும் பால்பெருகிச்

சீதநிலாவிரி யும்பாற் கடலிற்
     செறியக் கயமுழுதும்
செங்கால் அனமது கண்டு மகிழ்ந்திச்
     சித்துச் செந்தமிழுக்கு

ஆதர மாகிய சொல்லும் பொருளும்
     அறிந்து பிரிப்பவர்போல்
ஆவிப்புனல்புற நீவிப் பயமுண்டு
     ஆசைப் பெடையுடனே

தாதவிழ் பங்கய மீதுறை யுங்குல
     சைத்தாய் தாலேலோ
சங்கரன் பங்கினும் எங்கு நிறைந்தவள்
     தாலே தாலேலோ 28

கந்த மலர்க்குவ ளைத்தளிர் மென்றுஇரு
     கடைவாய் தேன்சொரியக்
கவையடி மேதிக ள்நிறைபுன லோடைக்
     கயமது இறங்கவெருண்டு

அந்தமில் சங்கம் அகன்று நிலாமணி
     யணியணி யாகஉமிழ்ந்து
அன்னச் செந்நெல் கதிர்அரி விரிவயல்
     அத்தனையும் புகுதப்

புந்திம கிழ்ந்துஅரி வாரிக் கட்டிப்
     போர்செயும் மள்ளர்வளைப்
புதுமுத் தொடுநெற் பழமுத் துஉதிரப்
     புதிதெனு ம்அவை முழுதுஞ்

சந்திர னிற்கதிர் தந்த தமிழ்க்குல
     சைத்தாய் தாலேலோ
சங்கரன் பங்கினும் எங்கு நிறைந்தவள்
     தாலோ தாலேலோ 29

துளவ முடித்தபண் ணவன் முதன் மற்றவர்
     தூரா வேராவாய்
துன்பம்அறும்படி வந்துஅரு ளென்றுஅடி
     சூழ்வார் பால்வாழ்வாய்

களப முலைத்துணை உனதுப தத்துணை
     காணார் காணாதாய்
கருணை மணங்கமழ் தருமலர் வந்துஉயர்
     காவாய் பூஆவாய்

அளவிடு தற்குஅரிது அரிதெனு மெய்ப்பொருள்
     ஆவாய் தேவுஆவாய்
அம்புவி தண்புனல் வெந்தழல் வாடையொடு
     ஆனா வான்ஆவாய்

தளவ நகைக்குயில் குலசை நகர்ப்பரை
     தாலோ தாலேலோ
சங்கரி வால சவுந்தரி சுந்தரி
     தாலோ தாலேலோ 30

வேறு

கொடுமனைத்திரி சூலீ நீலீ தாலேலோ
     குமரனைப்பெறு தாயே சேயே தாலேலோ
பிடிந டைக்குல மாதே போதே தாலேலோ
     பிரண வப்பொருளாம்மா மாயீ தாலேலோ

படித மிழ்க்குஉப காரீ நாரீ தாலேலோ
     ஆதி சத்திகல் யாணீ வாணீ தாலேலோ
அடியருக்குஉயி ராவாய் பாவாய் தாலேலோ
     அறம்வ ளர்த்த பொன் மானே தேனே தாலேலோ 31

தாலப்பருவம் முற்றிற்று

4. சப்பாணிப் பருவம்

எண்டிசைக் கைவரைகள் பதறாமல் நிலைநின்ற
     எழுவரை நடுங்கி டாமல்
இதுவரையு மெலியாத வடவரை குலுங்காமல்
     எவ்வரையு ம்அதிரா மன்மேல்

விண்டலத் தவர்விழிகள் முகிழாம ல்அலைவாரி
     வெள்ளங் கலங்கி டாமல்
வேதன்நிலை வைகுண்ட நாதன்நிலை கயிலாச
     விமலன்நிலை அசையா மல்ஏழ்

மண்டலத் துறுசரா சரஉயிர்த் தொகையெலாம்
     மருளாம ல்உலக மெல்லாம்
மறுகாம ல்நாடொறு மயங்கா அனந்தனும்
     மனந்தளர்ந் துஅஞ்சி டாமல்

தண்டளிர்க் கைத்துணை வருந்தாமல் மெல்லநீ
     சப்பாணி கொட்டி அருளே
தமிழறம் வளர்த்தஉமை குலசைநக ருக்கிறைவி
     சப்பாணி கொட்டி அருளே. 32

மண்டார் கலித்திரைக் குண்டகழி நாப்பண்ஒரு
     வரைகொண்டு நட்டுவிட்ட
மதிநடுத் தறியெனக் குழியினி ல்நிறுத்திநெடு
     வாசுகிக் கயிறு பூட்டி

உண்டான தானவர்க ள்ஒருபக்கம் வானவர்கள்
     ஒருபக்க நின்று சுற்றி
ஓடதி கொடுத்துக் கடைந்திடக் கடல்வயிறு
     உடைந் துஅதிற் கோப விடமேற்

கொண்டார அச்சங் கொடுத்தாரையுஞ்சென்று
     கொல்லத் தொடர்ந்த கடுவைக்
குடங்கையி ல்எடுத்துணக் கண்டுபத றிக்கடவுள்
     குருமணி மிடற்றுஅடக்குந்

தண்டா மரைக்கரங் கொண்டுஆ தரித்துநீ
     சப்பாணி கொட்டி அருளே
தமிழறம் வளர்த்தஉமை குலசைநக ருக்கிறைவி
     சப்பாணி கொட்டி அருளே 33

தமிழ்மா மதித்திலத வதனமுஞ் சூழியக்
     கொண்டையுங் கெண்டை விழியுங்
கொப்பிட்ட குழையும்நில வுஒப்பிட்ட மூரலுங்
     கோலமுந் திருஉ தரமுஞ்

சிமிழா மெனச்சிறுத் துப்பெருக் குந்தனச்
     செப்புமணி யாப ரணமுஞ்
செய்யபட்டுடையும் இடை யுங்கடக மிட்டபொற்
     செங்கையுந் தாட்க மலமும்

அமுதான மென்மதுர வார்த்தையுங் கண்டுகேட்டு
     அம்பரத் துஉம்ப ரொடும் வந்து
அன்றைக்கு ம்இன்றைக்கு ம்அவிர்மணிக் கைதொட்ட
     அத்தர்பரி சுத்தர் கயிலைத்

தமிழ்ஆரணத்தலைவர் பிரியா திருக்கு முறை
     சப்பாணி கொட்டி அருளே
தாய்அறம் வளர்த்தமக தேவிகுல சைக்கிறைவி
     சப்பாணி கொட்டி அருளே 34

குருமா மணித்திரள்கள் புரள இரு கரையுங்
     கொழிக்கும் பெருக்கா றுசங்
குத்தொனியொ டுந்தரங் கத்தொனியொ டுந்திரை
     குரைகட ல்எனப்ப ரந்து

வருமார வாரப் புதுப்புன ல்நிறைந்துஏரி
     மடைகடை திறந்து வெள்ளம்
மட்டினில் நிறுத்திஅணை கட்டிமுட் டாதகால்
     வழிவழி திறந்து பாயப்

பெருமாக மட்டும் வளர் செந்நென்முத் துங்கரும்
     பின்கணுவெடித்த முத்தும்
பேரோசை வெண்சங்கின் முத்துந் துலங்கிப்
     பிறங்கிச் சிறந்த செல்வந்

தருமான வீரைவள நாட்டரசி தேவரசி
     சப்பாணி கொட்டி அருளே
தமிழறம் வளர்த்தஉமை குலசைநக ருக்கிறைவி
     சப்பாணி கொட்டி அருளே 35

விழுதுங் கொழுந்தும் இளவெயிலும் பிறங்கியொளிர்
     விரிசடைக் கிடைகி டக்கும்
வெண்டிரைக் கங்கைவெள் ளந்துள்ள ஆனந்த
     வெள்ளமேற் கொள்ள உலகம்

முழுதுங் குலுங்கவட வரையுங் குலுங்கமணி
     முடியரவு நெறுநெ றென்ன
முப்பத்து முக்கோடி தேவர்களும் முனிவர்களும்
     முறைமுறை வலஞ்செய்து தாள்

தொழுதுந் துதித்தும்அர கரசம்பு வேஅருள்
     சுரந்துஅருள் புரிந்தி டென்னச்
சுத்தநிர்த் தம்புரியும் அத்தனுக் கின்பச்
     சுவைத்தேன் கொடுத்துஅ டுத்து

தழுவுந் துணைத்தா மரைக்கரங் கொண்டு நீ
     சப்பாணி கொட்டி அருளே
தமிழறம் வளர்த்தஉமை குலசைநக ருக்கிறைவி
     சப்பாணி கொட்டி அருளே 36

நல்நற் கருங்கட் சிவந்தவாய் வெண்ணிறப்
     பதுமா சனத்தி ருக்கும்
பாமாது தனதுநுனி நாமா துஎனக்கொண்ட
     பழமறைக் கிழவன் முடிமேல்

எனப் படப்புடைத் துஉலகப் படைப்பெலாம்
     ஒக்கப் படைத்துஇசை படைத்து
உலகம் பரிக்குநாட் பிரமன் சிறைத்துயர்
     ஒழித்திட வெளிக்குள் வந்த

மனற் பசுங்கா யெருக்கலர் முடித்திடுங்
     கோடீரன் மடியில் வைத்துக்
கொண்டுசெவி தாழ்த்துக் கொடுக்க உப தேசங்
     கொடுத்தகுரு பரனுக்கு முத்

தனக் களிற்றுக்கும் முலையூட்டும் மலைவல்லி
     சப்பாணி கொட்டி அருளே
தமிழறம் வளர்த்தஉமை குலசைநக ருக்கிறைவி
     சப்பாணி கொட்டி யருளே. 37

வேறு

வம்பைத் தருவெண் தும்பைச் சிறுமலர்
     வான்நதி நுரையெனவே
மறுகிச் சிதறப் பதறிக் குளிர்தரு
     மதிதடு மாறிமனம்

வெம்பிச் சுழலச் சுலவும் பணிமணி
     வெயில்விரி மின்பிறழ
வெண்டலை மாலைக ளொன் றினொ டுஒன்றலை
     மீதடி படஅருமைச்

செம்பொற் சரணப் பரிபுர ம்அதிரத்
     திசையதி ரச்சபையில்
திருகும் பவுரித் திருநட னம்புரி
     சிவன்மரு மந்தனிலே

கும்பத் தனம் அது அழுந்தப் புணர்பவள்
     கொட்டுக சப்பாணி
குலசைத் திருநகர் குடிபுக் கிடும்உமை
     கொட்டுக சப்பாணி 38

அருஉரு வாய்உட ல்தொறும்உயி ராய்நடுவு
     ஆதியும் அந்தமுமாய்
அதுஇது என்னுஞ் சுட்டாய் முட்டா
     அன்பர் பெறுங்கதியாய்

ஒருபொருளாகியும் உறுபல பொருளாய்
     யுள்ளது மில்லதுமாய்
உணரும் பதிபசு பாசத் திற்பதி
     உள்ளுறை சின்மயமாய்த்

தெரிவரு ம்ஐம்பத் தோரக் கரமாய்ச்
     சிவன்அயன் மாலெனுமுத்
தேவரு மாயுல கெங்குநி றைந்த
     திகம்பரி சுந்தரிநற்

குருபர னைக்கய முகனைப் பெற்றவள்
     கொட்டுக சப்பாணி
குலசைத் திருநகர் குடிபுக் கிடும்உமை
     கொட்டுக சப்பாணி 39

மலர்சுற் றியசுரு ள்நெகிழக் குறுவெயர்
     வைத்துளி முத்தாட
மதுரித் திடுசிறு குதலைக் கிளியினி
     மைச்சொல் வரக்கோவை

இலவத் துவரித ழ்அமுதத் துளிவடம்
     இட்ட உரத்தூர
இருகட் கடைகுழை சருவிச் சிறிய
     எழிற்குமி ழில்தாவ

ஒலிபற் றியபுது வளைசுற் றியதுணை
     உட்கை சிவப்பேற
ஒளிர்சுட் டியுமணி யணிபட் டழுநுத
     லுக்கிடை கொட்டாட

குலசைத் திருநகர் குடிபுக் கிடும் உமை
     கொட்டுக சப்பாணி
குகனைப் புகர்இப முகனைத் தரும்உமை
     கொட்டுக சப்பாணி 40

அருளிற் பெரியவள் அடியர்க் கெளியவள்
     அத்துவி தக்கோவை
அழகுக் கழகுசெ யிளமைச் சிறுகுயில்
     அற்புத மெய்ச்சோதி

கருணைக் கடல்கட லமுதச் சுவையுயர்
     கற்பக நற்போது
கமலத் தொளிர்பர ம்உகளக் கிளியிரு
     கட்பிடி பொற்பூவை

பெருமைப் பிரணவ அருமைப் பொருளிசை
     பெற்ற தமிழ்த்தேறல்
பிறைவைத் திடுசடை முடிமுக் கணர்நிறை
     பெட்புற ழப்பேடு

குருகிற் பொலிதளி ரிருகைத் துணைகொடு
     கொட்டுக சப்பாணி
குலசைத் திருநகர் குடிபுக் கிடும்உமை
     கொட்டுக சப்பாணி. 41

சப்பாணிப் பருவம் முற்றிற்று

5. முத்தப்பருவம்

உப்பத்தி யிப்பிமுத் துஊனிற் பொதிந்தமுத்து
     உயர்திரை மடக்கினிலிருந்து
ஊசலா டுங்குடக் கூனந்து தந்த முத்து
     ஒளிகுன்று வெளியமுத்துக்

கொப்பத் திறங்கிபக் கோட்டுமுத் தரிகொலக்
     குப்புற்று திர்ந்தமுத்துக்
கோகனக முத்துவண் டறுகால் துவைக்கக்
     குழைந்தமுத்துச் செந்நென்முத்து

இப்பத்தி னாலுலகி லியாவருங் கைக்கொண்ட
     எளியமுத்துக் கன்னன்முத்து
எம்முத் தினுங்கூட எண்ணுமுத் திவையெலாம்
     என்னமுத் திவைவிரும்போம்

முப்பத்திரண்டறம் வளர்த்தமக தேவியுன்
     மூரல்வாய் முத்தம் அருளே
முத்தமிழ்க் குலசேக ரப்பட்டி னத்திறைவி
     மூரல்வாய் முத்தம் அருளே 42

தத்துந் திரைக்கடற் பள்ளத் திறங்கிச்
     சலாபங் கொழிக்குமுத்துச்
சங்கீன்ற முத்துக் குதிக்கும் பெருஞ்சுறாத்
     தாய்முத்து வேய்முத்துமீன்

கொத்துங் குரண்ட வெண்தலைமுத்து மைப்புயற்
     குளிர்முத்து வேழமுத்துக்
குழையும் பசுஞ்சாலி முத்துமத வாரணக்
     கோட்டில்விளை முத்துமதனன்

புத்தம் பெனுங்கமல முத்துமடல் விரிபகம்
     பூகத்தின் முத்துமின்னார்
பூணிட்ட களமுத்து யாம்இட்ட மெனுமுரை
     பொருந்தோம் மலைக்குட்படா

முத்தம் பதித்தசெம் பவளவெள் ளத்தைநிகர்
     மூரல்வாய் முத்தம்அருளே
முத்தமிழ்க் குலசேக ரப்பட்டினத்துஅரசி
     மூரல்வாய் முத்தம்அருளே 43

கோண்தழுவு மிருகோட்டி ன்ஒருபிறை தரித்திடுங்
     கோடீரர் பாரகச்சி
கொண்டபாண் டீசுரர் அளந்தஇரு நாழிநெற்
     கொண்டு அறம் வளர்க்கும் விரதம்

பூண்டுஅவர் அவர்க்குஉள்ள படியின் எள்ளளவு
     புறம்போய் விடாமல் ஊட்டிப்
பூகண்ட நவகண்ட ஆகண்ட லன்திருப்
     பொன்னுலகும் எவ்வுலகமும்

நீண்டகட லுந்திரையு மணியுமொளி யும்பொழிலும்
     நிழலுமென எக்காலமும்
நீங்காம ல்நின்றுவிளை யாடும் பராசக்தி
     நித்தியகல் யாணிபஞ்ச

பாண்டவர்கள் தூதான ஆண்டவர் சகோதரி
     பவளவாய் முத்தம் அருளே
பரவுகுல சேகரப்பட்டினத் துஉமைஅம்மை
     பவளவாய் முத்தம் அருளே 44

காயுங் கதிர்க்குவாய் விள்ளுமள் ளற்பசுங்
     காற்கமல மேகறித்துக்
காலிவா விப்படிந் தெழுமேதி தன்குழக்
     கன்றுக் கிரங்கி யோடிப்

பாயுந்தி வெள்ளங் கடந்துமுலை விம்மிப்
     பொழிந்தபால் முழுதும் வாசப்
பூவுடைந் தொழுகுதே னாற்றொடு கலந்துமைப்
     பூகத் திடம்புகுந்து

சாயுங் குலைச் செந்நெல் வயல் தொறு நடந்துசெந்
     தாமரைக் குளநிரப்பித்
தண்கதலி வைப்பெலாஞ் சென்றுமக ராதிகள்
     சலஞ்சலம் வலம்புரியுணப்

பாயுந் திரைக்கடற் குலசேகரப்பட்டி
     னத்தரசி முத்தம் அருளே
பாண்டவர்கள் தூதான ஆண்டவர் சகோதரி
     பவளவாய் முத்தம் அருளே 45

வேறு

ஈரப் பிறைவாள் நுதற்கனி
     யினிய சுவையற் புதக்கனியே
யெண்ணெண் கலையு முடையவளே
     யிருநாற் றிசையு முடையவளே

பாரக் கதிர்வேற் படையனமே
     பதுமா சனத்தின் புடையனமே
பைய நடந்து வரும்பிடியே
     பரவார் சுழலவரும்பிடியே

காரிற் பிறழுங் குழலாளே
     கருப்பம் புகுந்தங் குழலாளே
கையாற் றொழுவார் மருங்கணியே
     காத்தாண் டருள மருங்கணியே

தாரப் பொருப்பார் விருப்பமுறுந்
     தனத்தாய் முத்தந் தருகவே
தமிழ்த்தென் குலசை அறம்வளர்த்த
     தாயே முத்தந் தருகவே 46

புலவே கமழும் புனல்வாரி
     புதுமுத் தெறியுங் கரைவாரி
புவன முழுதும் விரும்பவளம்
     பொருந்தும் பொருந்து மரும்பவளம்

பலதே சமுஞ்செய் தொழில்புரியும்
     பயிலுஞ் சங்கு வலம்புரியும்
பாதை பசும்பொன் மணித்துவரும்
     பலபண் டமுங்கொண் டணித்துவரு

மலர்மான் கலாப ம்அம்புயப்பூ
     மன்னர் பொறுக்கு ம்அம்புயப்பூ
மதுரத் தமிழு மெய்யிருக்கு
     மணக்கு மனுநூற் குடியிருக்குங்

குலசேகரப்பட்டினஞானக்
     கொழுந்தே முத்தந் தருகவே
குயிலே அறத்தை வளர்த்தகுலக்
     கொடியே முத்தந் தருகவே 47

நாரத் தரங்கத் திரைப்பரவை
     நலியக் கடந்த சுராசுரர்கள்
நடுங்கப் பிறந்த விடநுகர்ந்து
     நகையிற் பகைஞர் புரமெரித்தும்

வீரத் துயில்மா லயனறியா
     வேடமெடுத்து ம்அயமெடுத்தும்
வெள்ளைப் பிறையைச் சடைக்கணிந்தும்
     வீயப் பிறையை யுடம்பளித்தும்

பாரக் கரியை உரித்தியமன்
     பதைக்க உதைத்து ம்இசைமிகுதி
படைத்த கடவு ளுடலிலொரு
     பாதி பகிர்ந்து கொண்டநிலா

மூரற் கனிவா யிதழ்குவித்து
     முத்தந் தருக முத்தமே
முகுந்தற் கிளைய அறம் வளர்த்த
     முத்தே முத்தந் தருகவே 48

விளரிச் சுரும்ப ரிசைமுரலும்
     விரைப்பூங் கமலத் தவிசிருக்கும்
விதியு நதியு மதியுமணி
     வேணிப் பிரானுஞ் சுதரிசனத்

துளவப் புயலும் புரந்தரனுந்
     துளைக்கைக் களிற்றா னென்றுநறை
தூற்றுங் கடம்பே சனுமதனுஞ்
     சுற்றுந் திசையெண் மருந்தனத்தில்

தளர்சிற் றிடைப்பொன் முதன்மடந்
     தையரு முயரு மறையுமொழி
தருமுச் சுடரு முயிர்த்தொகையத்
     தனையு நினையும் பொருளான

முளரிப் பதத்தாய் மறுவின்மதி
     முகத்தாய் முத்தந் தருகவே
முகுந்தற் கிளைய அறம்வளர்த்த
     முத்தே முத்தந் தருகவே. 49

வேறு

செக்க மலத்தவி சிற்குடி புக்குயர்
     சித்திர லட்சுமியே
சித்த மகிழ்ச்சி வரப்பர விப்புகழ்
     சிட்ட ருளத்தமுதே

மைக்க ணருட்கடை யிற்சக மொக்க
     வளர்த்திடு மெய்ப்பொருளே
மட்டவிழ் கட்டலர் சுற்றி முடித்த
     மலர்க்குழன் முத்தரசே

சக்கர அத்தனொ டுஉற்பவ நித்திய
     தத்துவ அற்புதமே
சட்சமய யத்தினு மற்றினு மொத்துறை
     தற்சொரு பத்தினளே

முக்கண ரிச்சை மிகுத்த இசைக்குயின்
     முத்தம் அளித்தருளே
முற்று தமிழ்க்குல சைப்பதி யுத்தமி
     முத்தம் அளித்தருளே 50

வேறு

பிறைநு தற்சுந் தரிய ருட்கண்
     பெருக முத்தந் தருகவே
பிழைபொறுத்தன் பரைவ ளர்க்கும்
     பெரியள் முத்தந் தருகவே

பொறை நிலத்தொன் றிமைய வெற்பின்
     புதல்வி முத்தந் தருகவே
புகழ்கொடுக்கும் பொருள்கொடுக்கும்
     புவனை முத்தந் தருகவே

சறுவருக்கும் பொதுவி னிற்குத்
     தலைவி முத்தந் தருகவே
தளிர டிப்பெண் கொடிமணிப்பைத்
     தருணி முத்தந் தருகவே

கறைமி டற்றெண் புயன்ம ணக்குங்
     கவுரி முத்தந் தருகவே
கருணை கைக்கொண் டறம்வ ளர்க்குங்
     கருணி முத்தந் தருகவே 51

முத்தப்பருவம் முற்றிற்று

6. வாரானைப்பருவம்

சொற்கொண்ட வேதாந்த மருவுசித் தாந்தஞ்
     சொலும்பர ஞானமாக
துரியங் கடந்துபர நாதவெளி மேற்கொண்ட
     சோதியை அனாதியைத்திண்

கற்கொண் டெறிந்திடும் பத்தருக் கும்பர
     கதிப்பொருள் கொடுக்குமுதலைக்
கண்ணுக்கு மெண்ணுக்கு மெட்டாதமூன் றுகட்
     கனியைஞா னக்கொழுந்தை

விற்கொண்டதிருநுதற்கயல்விழியின் வெண்ணகையின்
     மெள்ளவுள் ளாக்கியழியா
மெய்யும் பகிர்ந்துபணி செய்யும் படிக்கருள்செய்
     வித்தாரி விதரணமெய்ப்பூண்

மேற்கொண்ட தோள்துணைத் தாசரதி பின்வந்த
     மாதரசி யேவருகவே
மங்களகல் யாணியே தென்குலசை நகரறம்
     வளர்த்ததிரு வேவருகவே 52

வாலப் பிறைச்சிந் துரத்திரு நுதல்தெய்வ
     மகளிரொ டெதிர்த் திருந்தம்
மனைபந்து பொற்கழங்காடி விளையாடிவளை
     யாடுங் கரஞ்சிவப்ப

ஏலக் குழற்சுற்றும் நெகிழவிரு கைவழியி
     னிருவிழிகள் போகமீள
விடுபதத் தண்டையம் மாமெல்ல மெல்லென்று
     இரங்கஇம யத்தாயறிந்து

ஆலக் கருங்கணீர் நீங்குமென வாங்குபந்து
     அம்மனை கழங்கொளித்தங்கு
அப்பருவ மிப்பருவ மலவென் றெடுத்தணைத்து
     அச்சமற உச்சிமோக்குங்

கோலப்பசுங்கிளிப் பிள்ளையே வரிசைக்
     குலக்கொழுந் தேவருகவே
குலசேக ரப்பட்டினத்திலே வந்துகுடி
     கொண்டநா யகிவருகவே 53

பதுமமல ரேமலரின் மணமே மணக்கும்
     பைந்துணர்க் கற்பதருசூழ்
பந்தரிற் படருமிள வஞ்சியே கிஞ்சுகப்
     பவளவாய்ப் பைங்கிள்ளையே

கதிரொளி விரிக்குமொரு கடவுள் மணியேமர
     கதக்கொழுந் தேசெழுந்தேன்
கனியுமினி மைச்சுவைக் கனியே திருப்பாற்
     கடற்குளெழு தெள்ளமுதமே

சதுர்மறையின் மூலமே யறிஞரனு கூலமே
     தண்கலை நிறைந்தமதியே
தன்மார்த்த மோட்சமே சாலோக சாமீப
     சாரூப சாயுச்யமே

மதுர கவி வாணிதொழு மங்கள கல் யாணியே
     மகதேவி யேவருகவே
வாடாமல் வீரைவள நாடாள வந்தறம்
     வளர்த்தசுந் தரிவருகவே 54

தண்டையும் பரிபுரமு நவமணி தரித்திடு
     சதங்கையு மிரங்கவிருதாள்
தாமரைகன் றக்குரம் பைசெய்து செய்துகைத்
     தளிர்சிவப் பச்சூழியக்

கொண்டையுஞ் சுற்றவிழ நுதலிரு விளிம்பினுங்
     குறுவெயர் துளிப்பரத்நக்
கொப்பசைய மிக்கமூக் குத்திமுத் தொளிவிடக்
     கொடியிடை துவண்டுமறுக

விண்டைவாவந் துயர்இமய வெற்பின்முற் றத்தினும்
     வீதியினுமோடி யோடி
விளையாடி மேனியெல் லாம்புழதி யாடுமிவ்
     விளையாட்ட யர்வொழிந்து

வண்டையுந் தேனையுந் தணவாத பூங்கூந்தன்
     மலரன்ன மேவருகவே
வைத்தபடி நாலரையின் முப்பத் திரண்டறம்
     வளர்த்தசுந் தரிவருகவே 55

நீடாழி யுலகத்து நடுநின்ற வடவரையை
     நிமிர்தனு வெனக்குனித்து
நெட்டுடல்துளையெயிற் றரவைநா ணாக்கிவில்
     நிறையமுறை யிற்பூட்டிமேல்

ஓடாத வொழியாத தாரணித்தேரணிய
     துச்சியிற்பா தம்வைத்திவ்
வுலகும்விண் ணுலகுமுண் டுமிமுந் துழாய்ப்பகழி
     யொன்றெடுத் தெக்காலமும்

வீடாத வேதமு முப்பத்து முக்கோடி
     மெய்த்தே வரும்பராவ
வெப்புநாண் கொண்டோம்பு வீறுநினை யாமலது
     வேளையின் மறுத்தொறுத்துக்

கூடார் புரத்தைச் சிரித்தெரித் தவரிச்சை
     கொண்டசுந் தரிவருகவே
குலசேக ரப்பட்டினத்துக்குள் வந்துகுடி
     கொண்டநா யகிவருகவே 56

வேறு

சலசே கரவா ரிதித்திரைவெண்
     தரளங் கொழிக்குங் கரைதொறுஞ்சஞ்
சரிக்குங் கவைக்கால் வரியலவன்
     தாளாற் கிளைத்த குழியிடறி

நிலவே பொழியுங் குடவளைகள்
     நிலையு மலையுங் கடந்துவளை
நிழலில் தவழ்ந்து கமலமடு
     நீரிற் புகுந்து பகிர்ந்துழவின்

பலசீர் நடக்கும் வயல்நடவிற்
     பரந்து நிரந்த வீதியிற்போய்ப்
பருமுத் துமிழ வந்தமுத்தம்
     பகலும் புகல்தண் கதிர்பரப்புங்

குலசேகரப்பட்டினத்துவஞ்சிக்
     கொடியே பிடியே வருகவே
கொன்றை முடித்துக் கொண்டகச்சி
     கொண்டா ரிடத்தாய் வருகவே 57

உலகத் துறுதி யறிஞருளத்
     துள்ளே ருசிக்குந் தெள்அமுதே
ஒக்கப் படைத்துக் காத்தழிக்கும்
     ஒழியாத் தொழின்மூன் றுடையவளே

பலகற் பனையும் நடத்தியசிற்
     பரையே அரையே சதுர்மறைகள்
பாடித் துதிக்கும் பழம்பொருளே
     பருவமில்லாப் பரசமயக்

கலகக்கொடியா ரளந்தறியாக்
     கருணைக் கடலே குணமலையே
கண்ணின் மணியே பசியமர
     கதப்பூங் கொழுந்தே தொழுந்தலைமைக்

குலகற்பகமே படரும்வஞ்சிக்
     கொடியே பிடியே வருகவே
கொன்றை முடித்துக் கொண்டகச்சி
     கொண்டா ரிடத்தாய் வருகவே 58

பலசட் சமய வொழுக்குவளம்
     பொலிய வருக தரளவடம்
பூட்ட வருக நுதல்திலதம்
     பொறிக்க வருக குறிக்குமுண்மைப்

பலசற் சனங்க ளுன்வரவு
     பார்க்க வருக சதங்கையிரு
பாதச் சிலம்பு கலின்கலெனப்
     பைய நடந்து வருகசெம்பொற்

கலசச் சுவைப்பா லுண்டிமையாக்
     கண்கள் வளர வருக முழுக்
காத லடியார் கேட்டவரங்
     கைமேற் கொடுக்க வருகதமிழ்க்

குலசைப் பதிவாழ் அறம்வளர்த்த
     கொடியே பிடியே வருகவே
கொன்றை முடித்துக் கொண்டகச்சி
     கொண்டா ரிடத்தாய் வருகவே 59

வேறு

மறுமுகத்தொளிர் சிறுபிறைச்சடை
     வரதர்கைக்கொளு மமுதமே
வடிவுடைச்சுரர் மகளிர்கற்பக
     மலர்எடுத்து அணி சரணியே

குறுமுகைச்சத தளம்விருப்பொடு
     குடியிருக்கும்வெள் ளெகினமே
குவலயத்தடி யவர்தமக்குறு
     குறைதவிர்த்திடு மிறைவியே

உறுமுனைப்படை யனையதுட்டரை
     யொருவுமுத்தமி வரதியே
உடலுயிர்த்தொகை வகைபிரித்தவ
     னுடனுதித்தபெண் அரசியே

அறுமுகத்தொரு கடவுளைப்பெறு
     மமலைசிற்பரை வருகவே
அருள் வளர்த்து உயர் பரகதிப்பொருள்
     அறம்வளர்த்தவள் வருகவே 60

பிரமனுக்குமி தரிதெனப்புகல்
     பிரணவப்பொருள் வருகவே
பிடிநடைக்குளிர் தளிரடிச்சிறு
     பிறை நுதற்கொடி வருகவே

தரணியிற்சதுர் மறைவழுத்திடு
     தருமவர்த்தனி வருகவே
சகளநிட்கள வுகளபொற்பத
     சததளத்தினள் வருகவே

சிரகரத்தர வணிபொறுத்திடு
     சிவன்மனைக்கிளி வருகவே
திருமுகத்திரு விழியின் முத்தொழில்
     செயுமிசைக்குயில் வருகவே

அரவணைத்துயில் பரமனுக்கிளை
     யவளெனக்குயிர் வருகவே
அமலை நித்திய வரதியுத்தமி
     அறம் வளர்த்தவள் வருகவே 61

வாரானைப்பருவம் முற்றிற்று

7. அம்புலிப்பருவம்

நாளினம் பரவவரு வாய்நீயு ம்இவளுமே
     நாளினம் பரவவருவாள்
நச்சுவார் பணியுளுறு வாய்நீயு மிவளுமே
     நச்சுவார் பணியுளுறுவாள்

வாளுமா னுங்கண்ணி லுடையைநீ யிவளுமே
     வாளுமா னுங்கண்ணி லுடையாள்
மாதிரவ மறுவையுடை யாய்நீ யும்இவளுமே
     மாதிரவ மறுவையுடையாள்

கோளினோர் பானிலாமானனீயிவளுமே
     கோளினோர் பானிலாமான்
குவலயம் விரித்தகலையுடையைநீ யிவளுமே
     குவலயம் விரித்தகலையாள்

ஆளுமூல காயுமொரு நீயுநிகர் வேறல்ல
     அம்புலீ யாடவாவே
அருட்கருணை மாதறம் வளர்த்தமக தேவியுட
     னம்புலீ யாடவாவே 62

முற்பக்க மூவைந்து பிற்பக்க மூவைந்து
     முப்பது தினந்தினத்தின்
முன்பின் வாழ்வுந்தாழ்வு முடையைநீ யிவள்நான்
     முகப்பிரமர் விண்டு முதலாக

கற்பக்க டைக்கணெல் லாமழித்தும் பின்பு
     கண்ணருளி ன்எண்ணுயிரெலாங்
கட்டளைப் படி பெற்று முற்று முற்றாமல் வளர்
     கன்னிவிட மொழுகு பகுவாய்ப்

பற்பக்க மடையஅங் காந்துகவ் வுங்கொலைப்
     பாந்தட் பழம் பகையை நீ
பாந்தளெல் லாமிறைவி காந்தனுக் கணியுமா
     பரண நீ அறிவைபகலும்

அற்பக்க முங்கதிர் பரப்புமிழை யவளுடன்
     அம்புலீ யாடவாவே
அருட்கருணை மாதறம் வளர்த்தமக தேவியுடன்
     அம்புலீ யாடவாவே 63

ஓராழி யெழுபரித் தேராழியுடனுறைந்து
     ஒளிமட்கு நாளிறைவிதன்
உதயாதி வருபருதி யாயிர மெனக்கிரண
     முமிழ்பாத தண்டையருகே

நேராக வருவதெப்படி யென்றுள் அஞ்சலையுன்
     நிலவா யிரத்தினுந்தண்
நிறைகதிர் பரப்புநகை நிலவுண்டு தேவிமுக
     நிலவுண்டு தம்ப முன்பின்

பாராமல் வாரா திருந்தமதி யேதுகுறை
     வட்டமதி யிவள் நினைத்தாற்
பண்டு போல்திருப்பாற் கடல்க டைந்துசம்
     பாதிப்ப தருமையல்ல

ஆராயும் அறுபத்து நாலுகலை வல்லியுடன்
     அம்புலீ யாடவாவே
அருட்கரு ணைமாதறம் வளர்த்தமக தேவியுடன்
     அம்புலீ யாடவாவே 64

மடலேறு கட்டைமுட் டாட்பா சடைக்கமலம்
     மானனார் தம்மறுவிலா
மதிவதன ராசிக்கு நாணியுஞ் சந்நிதியில்
     வருமாதர் கையினிலெடுத்து

உடலேறு கறைதுடைத் தொளியேறு வள்ளமென்
     றுள்ளியெள் ளுவர்களென்றும்
ஓராடி யொன்றானி செய்து போடுவதென்று
     முத்திகொண்டஞ்சியஞ்சிக்

கடலேறி மலையேறி விடையேறு மிறைசடைக்
     காடேறி மறுகிமறுகிக்
கள்ளரைப் போற்றிரிய வேண்டாம் உனக்கொரு
     களங்கமும் அடாது வந்தால்

அடலேறு வேற்படைக் கந்தனைத் தந்தவளொடு
     அம்புலீ யாடவாவே
அருட்கருணை மாதறம் வளர்த்தமக தேவியுடன்
     அம்புலீ யாடவாவே 65

வித்தகர் விதித்தபடி வங்களி லடங்காத
     வீரபத் திராவதார
வேகப்பிரளயசண்ட மாருதம் வெளிக்கொண்டு
     வேள்வியை அழித்தங்கிதன்

கைத்தலந் துண்டமிட்டாயிரஞ் செங்கதிர்க்
     கடவுள் தன் பல்லுகுத்துக்
கமலத் தயன்சிரம றுத்திசை சிறுத்ததக்
     கன்சென்னி கீழ்ப்படுத்தி

புத்தமுத முண்ணும் புரந்தரனும் வேறுருப்
     பூண்டொழித் திடஅடித்துப்
புகழ்வாணி மூக்கையும் போக்கியுன் னுடலுமண்
     புரளப் புரட்டும்வேகம்

அத்தனையு மான்மருட் டிவள்பொருட் டல்லவோ
     அம்புலீ யாடவாவே
அருட்கருணை மாதறம் வளர்த்தமக தேவியுடன்
     அம்புலீ யாடவாவே 66

கும்பக் களிற்றுரியி னேகாசர் வாகீசர்
     குஞ்சிதப் பாதர்கச்சி
கொண்டபாண் டீசர்திரி பதகையவள் குடிகொண்ட
     கோடீர மவுலிதாழ்த்துச்

செம்பொற் பதத்துணை வணங்கப் பிணங்கிச்
     சினத்துதைப் பப்பதைத்த
சீரடி சிவக்கச் சிறுபிறைக் கோடுறச்
     செய்தநோ யையும்மறந்து

விம்பக் கனிச்செய்ய வாய்விண்டுன் யோகபலன்
     மேற்கொண்ட நல்லகாலம்
விளையாட வாவென் றழைத்தனள் பிழைத்தனையிவ்
     வேளையினி நாளையென்னா

தைம்பத்தொ ரட்சரச் சட்சமய நாயகியொடு
     அம்புலீ யாடவாவே
அருட்கருணை மாதறம் வளர்த்தமக தேவியுடன்
     அம்புலீ யாடவாவே 67

வெளியாடு பொற்சபையின் மீதாடு பாகத்தர்
     விரிசடைக் கங்கையென்னும்
மிக்கபகை யாட்டியொ டிருந்துறவு பாராட்டி
     வீறுபாராட்டினதுமின்

னொளியா டகச்சிலம் பிடுதாள் சிவந்திட
     வொறுத்ததுவு மிவள் முகத்துக்கு
ஒப்பெனப் பெயர்படைத் ததுவுங் களங்கமென்
     றுள்ளஞ்சி யலை மலைத்து

வளியாடு பஞ்சென்ன வங்குமிங் குந்திரியும்
     மதியற்ற மதியேசும்மா
வரவரிற் றாழ்வுக ளெலாந்தீர்த்து நீடூழி
     வாழ்வுதரு வாளிசைச்சீர்

அளியா டலங்கற் குழற்றெய்வ நாயகியொடு
     அம்புலீ யாடவாவே
அருட்கருணை மாதறம் வளர்த்தமக தேவியுடன்
     அம்புலீ யாடவாவே 68

வரசுதரி சனனுமவ னுதரமடு வினில்வளரும்
     வனசத் துதித்தவனுமோர்
மைக்கண்ணி யாலழகு மெய்க்கணெல் லாமுறும்
     மலர்க்கண்ண னுங்கணபணச்

சிரசினவிர் மணியுடைய அரவெட்டு மெட்டுத்
     திசைக்கரியும் வரைகளெட்டுந்
திரையுததி யுஞ்சகல உலகுமுயி ரும்பவுரி
     திரியவிரி சபையினின்று

பரசுதாள் நடமிடப் பன்னகப் பின்னலப்
     பணியொடுஞ் சுலவமலைவாய்ப்
தறிவெண் டலைமுழைக் குள்ளே பதுங்குவை
     பதுங்காமல் வாழலாந் தே

வரசிகுல சேகரப்பட்டினப் பெண்மயிலொடு
     அம்புலீ யாடவாவே
அருட்கருணை மாதறம் வளர்த்தமக தேவியுடன்
     அம்புலீ யாடவாவே 69

பூரணப் பேர்பெற்ற தொருநா ளிரண்டுநாள்
     போக்குவர வறியாதநாள்
பூரணப் பேர் பெற்ற நாளும் பழம்பகைப்
     பொங்கரவின் வாய்ப்புகுதுநாள்

வாரணத் துரியுத்த ரீயன் சடைக்கண்ணில்
     வைத்தநாள் முதலுனக்கு
வளர்வு தளர்வின்றிநீ சுகமே யிருந்துதான்
     வாழ்ந்தநா ளெந்தநாள்முற்

காரணச் செல்விதிரு நாரணற் கிளையமயில்
     கண்முன்வா பெண்முன் வந்தாற்
கண்ணருளி லெண்ணரிய கவலையுந்தீராக்
     களங்கமுந் தீர்ப்பளொருநா

லாரணத் தலைவிபரி பூரணக் கவரியுடன்
     அம்புலீ யாடவாவே
அருட்கருணை மாதறம் வளர்த்தமக தேவியுடன்
     அம்புலீ யாடவாவே 70

வேறு

கமலலக்குமி யுடனுதித்துல
     கம்புகு மிசையாலே
கயிலைவெற்பிறை யடிமுடிக்கடை
     கண்டவு ளுறையாலே

குமரனைப்பெறு மிவள் முகத்தெழில்
     கொண்டுள அழகாலே
குவலயத்தெவர்களும் விருப்பொடு
     கும்பிடு மதனாலே

சமர்விளைத்திடு மதனனுக்கொரு
     தண்குடை யெனலாலே
தரணியிற்பல வுடலுயிர்க்கமிர்
     தந்தரு கலையாலே

அமலைதற்பரை தயவு வைத்தனள்
     அம்புலீ வருவாயே
அறம்வளர்த்தவள் திருமுனிப்பொழுது
     அம்புலீ வருவாயே. 71

அம்புலிப்பருவம் முற்றிற்று

8. அம்மானைப்பருவம்

பம்பரஞ் சுற்றுவ தெனச்சுற்றி யின்னுயிர்ப்
     பாங்கியரம் மனையெடுத்துப்
பாடியா டக்கண்டு கூடியாடுந்தொழிற்
     பருவமறி யாளிவளென

உம்பரிங் கிகழ்வரவர் நிகரல்ல அவரைவிட்டு
     உம்பர்மன முங்குலுங்க
உலகத்தில் எண்பத்து நான்குநூ றாயிரம்
     உயிர்த்தொகை யெலாங்குலுங்க

நம்பரமர் புகழ்பாடி நம்பரமர் செயல்பாடி
     நம்பரமர் கருணைபாடி
நம்பரமர்செம்பொனம் பலநின்று கூத்தாடும்
     நடனப் பதங்கள்பாடி

அம்பரம் பொருவிழி பரந்தாட வொலியாடும்
     அம்மானை யாடியருளே
அறம்வளர்த் துலகாளு ம்அறம்வளர்த்தவளேபொன்
     அம்மானை யாடியருளே 72

குயின்மொழிப் பூமங்கை கயல்விழிப் பாமங்கை
     கொடுவரும் அம் மனையுநீகைக்
கொண்டஅம் மனையுமுக் குணவிறைவ ரிற்பணி
     குயிற்றிய அம் மனைபொலியநீ

கயிலெடுத் தாடியிட சாரிவல சாரிவரு
     காலைநீ லக்கணொளியுங்
கனிவாயின் மூரலுங் கதுவ வவை புயல்மதி
     கலந்தென நலந்தழைத்தும்

மயிலியற் சாயநின் கைவரச் செம்மையாம்
     வகைகண்டு தேவியுன்னம்
மனையெம தம்மனை நிறம் பெற்றதென் னென்னவம்
     மனையாடு மரசியின்னம்

அயில்விழிக் கடைதொடர் நகைமதிக் கதிர்படர
     அம்மானை யாடியருளே
அறம்வளர்த்து உலகாளும் அறம்வளர்த் தவளேபொன்
     அம்மானை யாடியருளே 73

புண்டரம் புனைசிறிய துண்டவெண் பிறைவியர்ப்
     புத்துளிக் கத்தமிழ்த்தேன்
பொழியுஞ் செழுங்குமுத வாய்மல ரின்முல்லைப்
     புதுப்பூ வரும்புவிரிய

விண்டலர்ந் திடுகாந்தள் மெல்விரல் சிவப்பஇரு
     விழியொளி பரப்பவாசம்
வீசுகுழல் மேகமுக பந்தியவி ழத்தவள
     வெண்டரள வடமலங்கப்

பண்தரு மொலிப்பாத கிண்கிணி யொலிப்பமைப்
     படிவவடி வந்துளங்கப்
பருவமின் னிடைதுவண் டொசியவிரு தாளைப்
     பதித்துப் பெயர்த்துவைத்திங்கு

அண்டரண் டங்களு மசைந்தாட வொலியாடும்
     அம்மானை யாடியருளே
அறம்வளர்த் துலகாளு மறம்வளர்த் தவளேபொன்
     அம்மானை யாடிஅருளே 74

செங்கரஞ் சங்கபற் பங்குலவ வேதஞ்
     சிலம்பச் சிலம்புகண்ணின்
செம்மையுங் கருமையும் வெண்மையு மிறைவர்முத்
     தேவர்மெய் யெழில்கொடுப்பக்

கொங்கரும் புந்துணைக் கோங்கரும் பன்னபொற்
     கொங்கைமணி யொளிவிரிப்பக்
குளிர்பசுத் தருவண்ண மரகதத் திருமேனி
     கூறமா றாதெவர்க்குங்

கங்கணங் கட்டிக் கொடுக்கும் அருள் சுரபியைக்
     காட்டநிதி மறையிறைவர்தங்
கதிர்மணித் தரும தேவியே
     கவினெலாங் கொண்டவுன்பொன்

அங்கமெங் குங்குலைந் தாடநகை நிலவாட
     அம்மானை யாடியருளே
அறம்வளர்த் துலகாளும் அறம்வளர்த் தவளேபொன்
     அம்மானை யாடியருளே 75

செம்பது மனுங்கரும் பதுமனுஞ் சொல்திருச்
     செங்கணெடி யவனும் அடியுந்
திருமுடியும் வெவ்வேறு வடிவுகொண் டினமினந்
     தேடியுங் காணப்படா

வம்படரும் வெண்தும்பை யம்படரு மதிவேணி
     வரதர்பங் கினுமுகைப்பூ
மடல்விண்டுநறைமண்டுசிறைவண்டு குடிகொண்ட
     வனசப் புதுக்கோவிலுந்

தம்பமென நம்புமெய் யடியரித யமுமுதிய
     சதுர்மறையு நிறையுமுலகச்
சரவசர வுயிர்களுங் குறையாத வாழ்வுகதி
     தருமந்த்ர ரூபவடிவாம்

ஐம்பத்தெண் ணேழற்ற கோணத்து வாழுமுமை
     அம்மானை யாடிஅருளே
அறம்வளர்த் துலகாளும் அறம்வளர்த் தவளே பொன்
     அம்மானை யாடியருளே 76

வேறு

இன்னிசைச்சொற் சுவைப்பசிய
     அஞ்சுகமே குயிலே
இயலிசைநா டகமூன்றும்
     எழுதிவைத்த படமே

பன்னகபூ டணர்விரகந்
     தீர்க்குமலை மருந்தே
பதினாறு நான்காகப்
     பணித்தகலை மானே

பொன்னவிரு நூற்றுக்காற்
     பூங்கோவின் மயிலே
புவனவுயிர்க் குயிராகப்
     பொருந்துமொரு பொருளே

அன்னநடைப் பெண்ணரசே
     அம்மானையா டுகவே
அறம்வளர்த்த நாயகமே
     அம்மானையா டுகவே 77

கைம்மலர்ப்பைந் தளிர்சிவக்கில்
     தளிர்களெல்லாஞ் சிவக்குங்
கருணைவிழி கலங்கில்எழு
     கடலுநிலை கலங்குஞ்

செம்மணித்தாட் டுணைபெயர்க்கிற்
     சேடன்முடி பெயருஞ்
சிற்றிடைப்பொற் கொடிநுடங்கிற்
     கொடிகளெல்லாங் கலையும்

மைம்மழைக்கொந் தளங்கலையின்
     முகில்களெல்லாங் கலையும்
மரகதமெய் குலுங்கிலுயிர்
     வருக்கமெல்லாங் குலுங்கும்

அம்மனை நீ யறிந்துமெல்லென்று
     அம்மனையா டுகவே
அறம்வளர்த்த நாயகமே
     அம்மனையா டுகவே 78

நாடகத்தாள் கடவுள்மனம்
     நடந்துதொடர்ந் தாட
நடப்பநிற்ப வானசரா
     சரவருக்க மாடச்

சூடகக்கைத் தளிராட
     வளைகளொலித் தாடச்
சோதிமுகம் வெயர்வாடத்
     துடியிடைதள் ளாட

ஏடகப்பூங் குழலாடக்
     குறுமுறுவ லாட
இருவிழிகை வழிபோய்வந்து
     எழிற்குழையூ டாட

ஆடகக்கொப் பசைந்தாட
     அம்மனையா டுகவே
அறம்வளர்த்த நாயகமே
     அம்மனையா டுகவே 79

சேறடி தொட்டலர் கமலத் தயனுஞ்
     சிவனுந் திருமாலுஞ்
சிந்தையில் வந்தனை பண்ணிப்பண்ணித்
     தேடிய மெய்ப்பொருளே

பேறடி யார்கள் பெறும்படி வந்து
     பிறந்த பெருந்தவமே
பெற்றும் வளர்த்துங் கன்னி யெனப்பெயர்
     பெற்ற குலக்கொடியே

ஈறடி நடுவெனு மூன்றும் அறிந்தவர்
     இதயத் தெழுசுடரே
இகபர மென்னு மிரண்டினுமொன்றி
     யிருந்தவ ளேகுழன்மேல்

ஆறடி வண்டுக ளேழிசை பாடிட
     ஆடுக அம்மனையே
அத்தர் தமிழ்க்குல சைப்பதி உத்தமி
     ஆடுக அம்மனையே 80

வேறு

தண்டமிழ் தந்தென்முன்வந்துசொல் லென்றவள்
     அம்மனை ஆடுக அம்மனையே
சாமள ரூப சுபாவ சவுந்தரி
     அம்மனை ஆடுகஅம்மனையே

கொண்டலி னின்றுல கங்கள் புரந்தவள்
     அம்மனை ஆடுக அம்மனையே
கும்பிடு மன்ப ருளங்குடி கொண்டவள்
     அம்மனை ஆடுகஅம்மனையே

மண்டலம் விண்டலமெங்கு நிறைந்தவள்
     அம்மனை ஆடுக அம்மனையே
மாமறை நூன்முறை கூர்பரி பூரணி
     அம்மனை ஆடுக அம்மனையே

அண்டர்கள் தொண்டர்கள் துன்ப மகன்றிட
     அம்மனை ஆடுக அம்மனையே
அத்தர் தமிழ்க்குல சைப்பதி உத்தமி
     அம்மனை ஆடுக அம்மனையே 81

அம்மானைப் பருவம் முற்றிற்று

9. நீராடற்பருவம்

கங்கைசர சொதி யமுனை வேகவதி காவிரி
     கதிப்பொருனை சிந்துவுந்தி
காளிந்தி நீளுந்தி யெத்தனைசொ லத்தனை
     கணக்கிலா நதிகள்புயலிற்

பொங்கிமேற் கொண்டுவே லிறைநிலங் கன்னியெப்
     போதும்விழை வுறுநிலங்கைப்
போராழி மாறன் நிலம்ஓரா யிரங்கள்
     புரந்தர னிலந்தலங்கள்

எங்குமிங் குங்குளிர் புனற்கிறை நிலங்காறும்
     எய்திச் செழித்துலகெலாம்
ஈடேற நிலைபணிக் கணிபாலை முல்லைமலர்
     ஏந்தித் திரைக்கையினாற்

பங்கய மடற்கைதை தந்துவந் தனைசெய்யும்
     பரவைநீ ராடி அருளே
பலருக்கு முத்திதரு குலசைப் பதிக்கவுரி
     பரவைநீ ராடி அருளே 82

செக்கச் சிவந்தசெம் பவளமிதழ் காட்டமுரி
     திசைபுருவ வடிவுகாட்டச்
சிறுதரள மறுவில்குறு நகைகாட்ட மோட்டாமை
     செய்யபுற வடிகாட்டநேர்

ஒக்கப் பொருங்கயல்கள் கண்காட்ட வொலிகாட்டி
     ஒளிகாட்டி வெளிகாட்டுநீர்
உட்கிடக் குஞ்சங்கம் மணிமிடறு காட்டமலை
     ஒலியலையின் முழுகுகுவடு

முக்கட் பரம்பரம ரிச்சித் திணங்குமிரு
     முகிழ்முலைப் பெருமைகாட்ட
மோதியசை வலமுழுதும் ஓதிவிரி வதுகாட்ட
     முளரிப் பதங்கள் பரவிப்

பக்கத்தி னின்றஅரம் பையராடல் காட்டநீ
     பரவைநீ ராடிஅருளே
பலருக்கு முத்திதரு குலசைப் பதிக்கவுரி
     பரவைநீ ராடிஅருளே 83

நீலகண் டன்சதுர் முகப்பதும யோனிதிரு
     நின்றுவிளை யாடுமார்பன்
நிலைநின்ற முப்பத்து முக்கோடி தேவரொடிந்
     நீணிலத் தெவரையுமெணா

மாலக மிகத்திரண்டொருவடிவு கொண்டுதான்
     வந்துல கழித்தசூரன்
மதமறத் துணைவரறவளமறச் செய்துசூர்
     மாவெனுங் கொடியனைச்செவ்

வேலக முறச்சென் றிரண்டுபங் கிட்டஅவ்
     வேலையி லிரண்டிலொன்று
விருதுகொடி யொன்றூர்தி யென்றுகைக் கொண்டு புகழ்
     மிக்கசெந்தூரில் வாழும்

பாலகன் சந்நிதி முகாரம்ப குணதிசைப்
     பரவைநீ ராடிஅருளே
பலருக்கு முத்திதரு குலசைப் பதிக்கவுரி
     பரவைநீ ராடிஅருளே. 84

துத்திவிரி படமகுட விடமொழுகு பகுவாய்த்
     துளைக்கொலை யெயிற்றுநெற்றிச்
சூட்டரா அணிபொதுவி லாட்டராகம்மறைத்
     துறையறியும் அறிஞருக்கும்

முத்திதரு ம்ஐந்துமுக முக்கண்ணெண் டோட்கயிலை
     முழுமுதற் பொருள்பிடித்த
மோகத்தி னாகத்தோர் பாகத்தின் வைத்தநாள்
     முதலறம் வளர்க்குவிரதம்

நித்திய முறைப்படி நடத்திமுச் சகநிலை
     நிறுத்தியெல் லாவுயிர்க்கும்
நேர்நின்று நானென்றும் நீயென்றும் வேறன்று
     நின்றபரை யேபராவும்

பத்தியடி யவர்செயும் பவமறக் கதிபெறப்
     பரவை நீ ராடிஅருளே
பலருக்கு முத்திதரு குலசைப் பதிக்கவுரி
     பரவை நீ ராடிஅருளே. 85

சோமன் கதிர்ப்பருதி சுற்றும்வட வரைவில்லி
     சொல்லுமுக முடிவிலெல்லாந்
தொலைவில்லி கயிலாச வில்லியொரு பொருளினுஞ்
     சோர்வில்லி கைப்பிடித்த

மாமங் கலச்சுமங் கலியான உன்கருணை
     வாரிப்பெருக்கி ன்அகமாய்
மண்டலமு ம்விண்டலமுமெண்டிசையுமெவ்வுயிரும்
     வைத்தறம் வளர்த்தவுமைநீ

காமன் பதித்திலோத் தமையுருப் பசிமேன
     கைப்பெண்அயி ராணிமுதலாங்
கன்னியர்கள் சாந்துபொற் சுண்ணமவை யேந்திஇரு
     கைகொண்டு கால்வணங்கப்

பாமங்கை பூமங்கை மார்செங்கை பற்றியே
     பரவைநீ ராடிஅருளே
பலருக்கு முத்திதரு குலசைப் பதிக்கவுரி
     பரவைநீ ராடிஅருளே 86

மதியரவு விரவியணி வரதர்உத்தரகோச
     மங்கைத் தலத்திருந்து
மறைமுடிவும் நொடியுமொரு பொருளினடி முடிதெரிய
     வாய்திறந் தன்றுனக்குக்

கதிபெற வுணர்த்திடுமவ் வேலைவே லைக்கொண்டு
     கரியபெரி யவரைநிகர்செங்
கட்சூ ரனைத்தடிந் திடுகடவு ளுன்குழற்
     கண்ணிலறு காலளியின்வந்து

அதிசயமெய் யுரையெனுமவ் வுரைகேட் டிருந்ததை
     யறிந்திருவ வருக்குமன்றைக்
கருளிச்செய் சாபமோ சனமாம் படிக்குவிளை
     யாடல்புரி அமலனருள்சேர்

பதிகரச முதிய தமிழ்அதியரச னருமைமகள்
     பரவைநீ ராடிஅருளே
பலருக்கு முத்திதரு குலசைப் பதிக்கவுரி
     பரவைநீ ராடிஅருளே 87

வேறு

தவள தரளத் திடைத்ததொட்டில்
     தன்னிற் கிடந்து கண்வளர்ந்து
சற்றே யுதரப் பசிஅரும்பச்
     சதங்கைத் திருத்தாளுதைந்து உதைந்து

குவளைக் கருங்கண் பிசைந்துஅழுது
     குறுவேர் துளிக்கப் பளிக்கறையில்
குலவிச் சுலவு மிளமயிலிற்
     குழைத்தங் கெழுந்த குறிப்பறிந்து

கவளக் களிற்று மலையரசன்
     காதன் மனைவி வந்தெடுத்துக்
கண்ணீர் துடைத்து மடியில்வைத்துக்
     காமர் முலைப்பா லூட்டவுண்ட

பவளக் கனிவாய்ப் பசுங்கிளியே
     பரவைத் திரைநீ ராடுகவே
பரையே குலசைப் பதித்தாயே
     பரவைத் திரைநீ ராடுகவே 88

கிடந்து தவழுங் குடவளையாற்
     கிரண மெறிக்கும் நிலாக்குவளை
கிடங்கு கடந்து கொடிக்காலின்
     கேணிக் கேறி ஊறியதேன்

தொடர்ந்து சொரிய முகைவிரியுந்
     துணர்ப்பூங் கமலத் தடம் புகுந்து
துள்ளிக் கயல்கள் குதிக்குமந்தச்
     சுனைச்செங் கமல மிசைவிசும்பில்

நடந்து திரியுஞ் சுடரின் ஒன்று
     நாளி லிருந்து மறுகில்வந்து
நகைவெண் டரளத் திரள்உமிழ்ந்து
     நன்னீர்க் கயத்தின் மகிழ்ச்சியிற்போய்ப்

படர்ந்த குலசைப் பதித்தாயே
     பரவைத் திரைநீ ராடுகவே
பரையே அறத்தை வளர்த்தவளே
     பரவைத் திரைநீ ராடுகவே 89

புகலுங் கருணைப் பெருங்கடலே
     புகலப் படாத குணமலையே
போற்றா ரகலச் சுழல் காற்றே
     புகழ்வோர் தழைக்கப் பெயும்மழையே

இகலும் வினைநோய்க் கொருமருந்தே
     இகழா நின்றோர்க் குறும்பிணியே
எழுதுந் தமிழி னிசைக்கிசையே
     யெழுதா மறைக்கு ளுறைபொருளே

அகலு முடம்பி ன்உயிர்க்குயிரே
     அகலா அறிஞர் அகத்தமுதே
அறத்தை வளர்க்கும் மணிவிளக்கே
     அருவே உருவே அம்மேநீ

பகலு மிரவு முழங்கியெழும்
     பரவைத் திரைநீ ராடுகவே
பரையே குலசைப் பதித்தாயே
     பரவைத் திரைநீ ராடுகவே 90

வேறு

தானமுறப்பெரி யோர்பரவப்பர
     வைப்புனலாடுத லாடுகவே
சங்குமுழங்கும் முழங்கு திரைப்பர
     வைப்புனலாடுத லாடுகவே

தேனிதழித்தொடை யார்மகிழப்பர
     வைப்புனலாடுத லாடுகவே
தென்றன்மலர்த்துகள் சிந்தவலைப்பர
     வைப்புனலாடுத லாடுகவே

ஆனஇசைத்தமிழ் வாழ்வுபெறப்பர
     வைப்புனலாடுத லாடுகவே
அன்பர்தழைக்க நிலம்பொலியப்பர
     வைப்புனலாடுத லாடுகவே

வானவர்பொற்றொடி மாதர்கையிற்பர
     வைப்புனலாடுத லாடுகவே
மன்குலசைப்பதி வந்ததிருப்பர
     வைப்புனலாடுத லாடுகவே 91

நீராடற்பருவம் முற்றிற்று

10. ஊசற்பருவம்

மாமக நடக்கும்விண் மட்டும்எட் டுயரூஞ்சல்
     மண்டபச் சுற்றுநாப்பண்
மன்னும்மின் னெல்லாந் திரண்டிரண் டுருவாக
     வந்ததென நின்றமுந்நீர்க்

காமர்செம் பவளக் கொழுங்கா ல்நிறுத்திமர
     கதவிட்ட மிசைகடாவிக்
கங்குலும் பகலென எறித்திடுஞ் செம்மணிக்
     கதிர்மணி வடங்கள்பூட்டித்

தாமவெண் தரளவச் சிரமழுத் திடுபசுந்
     தமனியப் பலகைசேர்த்துத்
தமனியச் சுழுகிட்ட தவிசிட்டு மேல்விதா
     னஞ்செய்து கலைமகளுடன்

பூமகளு மேவடந் தொட்டாட நிலைபெற்ற
     பொன்னூச லாடி அருளே
புவனவுயி ரத்தனையு மருளறம் வளர்த்தவுமை
     பொன்னூச லாடி அருளே 92

விண்ணினயிராணி முதன்மங்கையர்கள் செங்கைதலை
     மேற்கொண்டு தாள்வணங்கி
விரைகமழ் புதுப்பனீர் கொடுவந்து நீராட்டி
     மிக்கசெம் பட்டுடுத்துக்

கண்ணின்மை யெழுதிக் கருங்குழல் திருத்திக்
     கவின்பெற முடித்தெடுத்துக்
காமர்திரு வும்பிறையு முறையில் தரித்துவான்
     கற்பக அலங்கல் சுற்றிப்

பண்ணிசை தரும்பாத கிண்கிணி யணிந்துகைப்
     பணிகுழைப் பணியணிந்து
பைம்பொற் பதக்கம்வெண் தரளவட மிட்டுப்
     பசுஞ்சாந்து வேய்ந்துபரவும்

புண்யவதி பாக்யவதி யதிரூப வதிஅழகு
     பொன்னூச லாடி அருளே
புவனவுயி ரத்தனையும் அருளறம் வளர்த்தஉமை
     பொன்னூச லாடி அருளே 93

இங்கிதச் சொற்சுவை பொருட்சுவை பதச்சுவை
     யிசைச்சுவை அலங்காரமும்
எள்ளளவும் ஒருவாது திருவாத வூரன்முன்
     இயம்பும்வா சகமும் அந்நாள்

சங்கிலித் தளையிட்ட மாறனையு மெண்ணாது
     தண்பரவை யிற்படிந்து
சந்தப் பொருப்பிடைகண் வளரும்ஒரு புயல்பொழி
     தமிழ்ப்பெருக் கமும்மடத்திற்

கங்குலில் தழலிட்ட சமணரைக் கழுவேற்று
     காரணப் பிள்ளைகவியுங்
கற்றூண் மிதக்கமிசை வந்துமக ராலயக்
     கரைசேர்ந்த புலவனியலும்

பொங்கிசை மிகும்புரா ணங்களு முழங்கிடப்
     பொன்னூச லாடி அருளே
புவனவுயி ரத்தனையும் அருளறம் வளர்த்தஉமை
     பொன்னூச லாடிஅருளே 94

பாதார விந்தச் சிலம்பொலித் தாடப்
     பணைத்துப் புடைத்தகொங்கைப்
பங்கயத் துணையாட வொட்டியா ணத்தினொடு
     பட்டுத்த ரீயமாடக்

காதாரு மகரகுண் டலமாட வில்லிதழ்க்
     கனியின்மணி முறுவலாடக்
கைவளை யொலித்தாட மைவளையு மிருவிழிக்
     கடையின்மெய்க் கருணையாட

ஆதார மண்டலமு மெண்டிசையு மெவ்வுயிரும்
     ஆடவே ள்தனையளித்தோர்
ஆகமுந் தொலையாத மோகமுங் கூடநின்று
     ஆடவா பரணமாடப்

போதா சனத்தி லுறை மழலைக் கிளிப்பிள்ளை
     பொன்னூச லாடிஅருளே
புவனவுயி ரத்தனையும் அருளறம் வளர்த்தஉமை
     பொன்னூச லாடிஅருளே. 95

மின்னலம் பாயுலவு சாலிற் கிடந்துள்ளி
     வெள்ளிடையி லொருபருவரால்
வெடிபோய்விண் மேகத்தி னகடுகிழி யப்பாய்ந்து
     மீண்டுநீண் டோங்கிலைப்பூங்

கன்னலைக் கதலியைக் கமுகைப் பலாவைக்
     கடந்துசுனை யிற்புகுந்து
காவிக் கயம்படிந் தெழுமேதி தன்குழக்
     கன்றின்மடி முட்டமுட்டச்

சொன்னலந் தருசுவைப் பால்சுரந் துள்ளே
     சொரிந்திட விரிந்தபாலைத்
தோலடிப் பாலன்ன முண்டுபெடை யொடுமடல்
     தூய்மலர்ப் பள்ளி வளரும்

பொன்னலந் தரும்மான வீரைவள நாட்டரசி
     பொன்னூச லாடிஅருளே
புவனவுயி ரத்தனையு ம்அருளறம் வளர்த்தஉமை
     பொன்னூச லாடிஅருளே 96

கருந்தா தனைய கொடியமனக்
     கரனைக் கரிய திரிசிரனைக்
கடுந்தூ டணனைத் தொலைத்திலங்கை
     கலங்கக் கடலைக் கடந்து சென்றங்கு

இருந்தார் தம்மில் வந்தவனை
     எல்லாலிரங்கா வரக்கரென்று
யெதிரிட் டன்றே யமர்விளைத்த
     எல்லாப் பொல்லாக் குணமுடைய

பொருந்தார் மடியப் பொருதுவென்று
     புருகூ தனுக்கும் புலவருக்கும்
பொன்னா டளித்துச் சனகியொடும்
     புகல்தம் பியினோட யோத்தியினில்

வருந்தா சரதி சகோதரியே
     மணிப்பொ னூச லாடுகவே
மயிலே அறத்தை வளர்த்தவளே
     மணிப்பொன் னூச லாடுகவே 97

நம்ப வளமே கொடுப்பவளே
     நம்பார் தம்பா ல்அடாதவளே
நால்வே தமுஞ்சொல் பொருளே
     நாட்பூ மலரே மலர்மணமே

கும்பம் வளர்ந்த தனத்தாயே
     குலசே கரப்பட்டினத்தாயே
கூற்றை யுதைத்தா ரகத்தமுதே
     குறையா நிறையாப் பெருவாழ்வே

அம்பள வாய்விழி மானே
     அளக்கப் படாத குணக்கடலே
அணுவாய் மலையா யகம்புறமாய்
     அளவுக் களவா யிருந்தவளே

செம்ப வளவாய்ப் பசுங்கிளியே
     திருப்பொன் னூச லாடுகவே
செகத்தி லறத்தை வளர்த்தவளே
     திருப்பொன் னூச லாடுகவே 98

தருமந் தழைப்பச் சிவசமயந்
     தழைப்பத் திருநீற் றொளிதழைப்பத்
தானந் தழைப்பப் பரிகலத்தார்
     தழைப்பப் பரவு தொண்டர் செய்யுங்

கருமந் தழைப்ப இசைத்தபிள்ளைக்
     கவிதை தழைப்பக் கல்விகவி
கற்றோர் தழைப்பப் புகழ்க்குலசே
     கரப்பட் டினமுந் தழைப்பஇரு

பெருமண் டலங்காத் தருள்வேந்தர்
     பிடித்த செங்கோ ல்தழைப்பமுக்கண்
பெம்மான் கைமான் தரித்தவிடைப்
     பெருமான் பூட்டு முன்னுடைய

திருமங் கலப்பூண் தழைப்பவம்மா
     திருப்பொன் னூச லாடுகவே
செகத்தி லறத்தை வளர்த்தவளே
     திருப்பொன் னூச லாடுகவே. 99

ஊசற்பருவம் முற்றிற்று

அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் முற்றிற்று
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247