ஸ்ரீ குமரகுருபரர்

இயற்றிய

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

     மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற நூல் பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. இது பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படுகிறது. மதுரையில் எழுந்தருளியுள்ள மீனாட்சியம்மையைப் பாட்டுடைத்தலைவியாகக் கொண்டு குமரகுருபரர் என்ற புலவரால் பாடப்பட்டது. காலம் 17 ஆம் நூற்றாண்டு. மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் குமரகுருபரர்.

     இந்நூலின் முதலில் விநாயகர் வணக்கம் இடம் பெற்றுள்ளது. காப்புப் பருவத்தில் திருமால், சிவபெருமான், சித்திவிநாயகக் கடவுள், முருகக்கடவுள், பிரமதேவர், தேவேந்திரன், திருமகள், கலைமகள், துர்க்கை, சத்தமாதர்கள், முப்பத்துமூவர் ஆகியோரிடம் பாட்டுடைத்தலைவியாகிய மீனாட்சியம்மையைக் காக்குமாறு பதினோரு பாடல்களில் குமர குருபரர் வேண்டுகிறார். ஏனைய தால், செங்கீரை முதலிய ஒன்பது பருவங்களில் பருவத்துக்குப் பத்து பாடல்கள் வீதம் தொண்ணூறு பாடல்கள் அருளப்பெற்றுள்ளன. மொத்தம் 102 பாடல்கள் உள்ளன.

நூல்

காப்பு

விநாயக வணக்கம்

கார்கொண்ட கவுண்மதக் கடைவெள்ள முங்கட்
கடைக்கடைக் கனலு மெல்லை
கடவாது தடவுக் குழைச்செவி முகந்தெறி
கடைக்கா றிட்ட வெங்கோன்

போர்கொண்ட வெண்டோ ட்பொலன்குவடு பொதியும்வெண்
பொடிதுடி யடித்து வைத்துப்
புழுதியாட் டயராவொ ரயிராவ ணத்துலவு
பொற்களிற் றைத்து திப்பாந்

தார்கொண்ட மதிமுடி யொருத்தன் றிருக்கண்மலர்
சாத்தக் கிளர்ந்து பொங்கித்
தவழுமிள வெயிலுமழ நிலவுமள வளவலாற்
றண்ணென்று வெச்சென்று பொன்

வார்கொண்ட டணிந்தமுலை மலைவல்லி கர்ப்பூர
வல்லியபி ராம வல்லி
மாணிக்க வல்லிமர கதவல்லி யபிடேக
வல்லி சொற் றமிழ் தழையவே.

1-வது காப்புப் பருவம்

திருமால்

மணிகொண்ட நெடுநேமி வலயஞ் சுமந்தாற்று
மாகணச் சூட்டு மோட்டு
மால்களிறு பிடர்வைத்த வளரொளி விமானத்து
வாலுளை மடங்க றாங்கும்

அணிகொண்ட பீடிகையி னம்பொன்முடி முடிவைத்தே
மையனொடு வீற்றி ருக்கு
மங்கயற் கண்ணமுதை மங்கையர்க் கரசியையெ
மம்மனையை யினிது காக்க

கணிகொண்ட தண்டுழாய்க் காடலைத் தோடுதேங்
கழலுழிபாய்ந் தளறு செய்யக்
கழனிபடு நடவையிற் கமலத் தணங்கரசொர்
கையணை முகந்து செல்லப்

பணிகொண்ட துத்திப் படப்பாய்ச் சுருட்டுப்
பணைத்தோ ளெருத்த லைப்பப்
பழமறைகண் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற
பச்சைப் பசுங் கொண்டலே. 1

பரமசிவன்
வேறு

சிகர வடவரை குனிய நிமிர்தரு
செருவி லொருபொரு வில்லெனக்கோட்டினர்
செடிகொள் பறிதலை யமண ரெதிரெதிர்
செலவொர் மதலைசொல் வையையிற் கூட்டினர்

திருவு மிமையவர் தருவு மரவொலி
செயவ லவர்கொள நல்குகைத் தீட்டினர்
சிறிய வென துபுன் மொழியும் வடிதமிழ்
தெரியு மவர்முது சொல்லெனச் சூட்டினர்

பகரு மிசைதிசை பரவ விருவர்கள்
பயிலு மியறெரி வெள்வளைத் தோட்டினர்
பசிய வறுகொடு வெளிய நிலவிரி
பவள வனமடர் பல்சடைக் காட்டினர்

பதும முதல்வனு மெழுத வரியதொர்
பனுவ லெழுதிய வைதிகப் பாட்டினர்
பரசு மிரசத சபையி னடமிடு
பரத பதயுக முள்ளம்வைத் தேத்துந்

தகரமொழுகிய குழலு நிலவுமிழ்
தரள நகையுமெ மையனைப் பார்த்தெதிர்
சருவி யமர்பொரு விழியு மறுகிடை
தளர வளர்வதொர் செவ்விமுற் றாக்கன

தனமு மனனுற வெழுதி யெழுதரு
தமது வடிவையு மெள்ளிமட் டூற்றிய
தவள மலர்வரு மிளமி னொடுசத
தளமின் வழிபடு தையலைத் தூத்திரை

மகர மெறிகட லமுதை யமுதுகு
மழலை பழகிய கிள்ளையைப் பேட்டன
மடவ நடைபயில் பிடியை விரைசெறி
வரைசெய் புயமிசை வையம் வைத்தாற்றிய

வழுதியுடைய கண் மணியொ டுலவு பெண்
மணியை யணிதிகழ் செல்வியைத் தேக்கமழ்
மதுர மொழுகிய தமிழி னியல்பயின்
மதுரை மரகத வல்லியைக் காக்கவே. 2

சித்தி வினாயகர்
வேறு

கைத்தல மோடிரு கரடக் கரைத்திரை
கைக்குக டாமுடைக் கடலிற் குளித்தெமர்
சித்தம தாமொரு தறியிற் றுவக்குறு
சித்திவி நாயக னிசையைப் பழிச்சுதும்

புத்தமு தோவரு டழையத் தழைத்ததொர்
பொற்கோடி யோவென மதுரித் துவட்டெழு
முத்தமிழ் தேர்தரு மதுரைத் தலத்துறை
முத்தன மேவுபெ ணரசைப் புரக்கவே. 3

முருகவேள்
வேறு

பகர மடுப்பக் கடாமெடுத் தூற்றுமொர்
பகடு நடத்திப் புலோமசைச் சூற்புயல்
பருகி யிடக்கற் பகாடவிப் பாற்பொலி
பரவை யிடைப் பற் பமாதெனத் தோற்றிய

குமரி யிருக்கக் கலாமயிற் கூத்தயர்
குளிர்புன மொய்த்திட் டசாரலிற் போய்ச்சிறு
குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு
குமரனை முத்துக்குமாரனைப் போற்றுதும்

இமிழ்திரை முற்றத் துமேருமத் தார்த்துமுள்
ளெயிறு நச்சுப் பணாடவித் தாப்பிசைத்
திறுக விறுக்கித் துழாய் முடித் தீர்த்தனொ
டெவரு மதித்துப் பராபவத் தீச்சுட

வமுதுசெய் வித்திட் டபோனகத் தாற்சுட
ரடரு மிருட்டுக் கிரீவமட் டாக்கிய
வழகிய சொக்கற் குமால்செயத் தோட்டிக
லமர்செய் கயற்கட் குமாரியைக் காக்கவே. 4

நான்முகன்
வேறு

மேகப் பசுங்குழவி வாய்மடுத் துண்ணவும்
விட்புலம் விருந் தயரவும்
வெள்ளமுதம் வீசுங் கருந்திரைப் பைந்துகில்
விரித்துடுத் துத்தி விரியும்

நாகத்து மீச்சுடிகை நடுவட் கிடந்தமட
நங்கையைப் பெற்று மற்றந்
நாகணைத் துஞ்சுதன் றந்தைக்கு வந்துதவு
நளினக் குழந்தை காக்க

பாகத்து மரகதக் குன்றென்றொர் தமனியக்
குன்றொடு கிளைத்து நின்ற
பவளத் தடங்குன் றுளக்கண்ண தென்றப்
பரஞ்சுடர் முடிக்கு முடிமூன்

றாகத் தமைத்துப்பி னொருமுடித் தன்முடிவைத்
தணங்கரசு வீற்றி ருக்கும்
அபிடேக வல்லியை யளிக்குல முழக்குகுழ
லங்கயற் கண்ண முதையே. 5

தேவேந்திரன்
வேறு

சுழியுங் கருங்கட் குண்டகழி
சுவற்றுஞ் சுடர்வேற் கிரிதிரித்த
தோன்றற் களித்துச் சுறவுயர்த்த
சொக்கப் பெருமான் செக்கர்முடி

பொழியுந் தரங்கக் கங்கைவிரைப்
புனல்கால் பாய்ச்சத் தழைந்துவிரி
புவனந் தனிபூத் தருள்பழுத்த
பொன்னங் கொடியைப் புரக்கவழிந்

திழியுந் துணர்க்கற் பகத்தினற
விதழ்த்தேன் குடித்துக் குமட்டியெதி
ரெடுக்கும் சிறைவண் டுவட்டுறவுண்
டிரைக்கக் கரைக்கு மதக்கலுழிக்

குழியுஞ் சிறுக ணேற்றுருமுக்
குரல்வெண் புயலுங் கரும்புயலுங்
குன்றங் குலைய வுகைத்தேறுங்
குலிசத் தடக்கை புத்தளே. 6

திருமகள்
வேறு

வெஞ்சூட்டு நெட்டுடல் விரிக்கும் படப்பாயன்
மீமிசைத் துஞ்சு நீல
மேகத்தி னாகத்து விடுசுடர்ப் படலைமணி
மென்பர லுறுத்த நொந்து

பஞ்சூட்டு சீறடி பதைத்துமதன் வெங்கதிர்ப்
படுமிள வெயிற்கு டைந்தும்
பைந்துழாய்க் காடுவிரி தண்ணிழ லொதுந்குமொர்
பசுங்கொடியை யஞ்ச லிப்பா

மஞ்சூட் டகட்டுநெடு வான்முகடு துருவுமொரு
மறையோதி மஞ்ச லிக்க
மறிதிரைச் சிறைவிரியு மாயிர முகக்கடவுண்
மந்தாகி னிப்பெ யர்த்த

செஞ்சூட்டு வெள்ளோ திமங்குடி யிருக்கும்வளர்
செஞ்சடைக் கருமி டற்றுத்
தேவுக்கு முன்னின்ற தெய்வத்தை மும்முலைத்
திருவைப் புரக்க வென்றே. 7

கலைமகள்

வெள்ளித் தகட்டுநெட் டேடவிழ்த் தின்னிசை
விரும்புஞ் சுரும்பர் பாட
விளைநறவு கக்கும் பொலன் பொகுட் டலர்கமல
வீட்டுக் கொழித் தெடுத்துத்

தெள்ளித் தெளிக்கும் தமிழ்கடலி னன்பினைந்
திணையென வெடுத்த விறைநூற்
றெள்ளமுது கூட்டுணுமொர் வெள்ளோதி மத்தினிரு
சீறடி முடிப்பம் வளர்பைங்

கிள்ளைக்கு மழலைப் பசுங்குதலை யொழுகுதீங்
கிளவியுங் களி மயிற்குக்
கிளரிளஞ் சாயலு நவ்விக்கு நோக்கும்விரி
கிஞ்சுகச் சூட்ட ரசனப்

பிள்ளைக்கு மடநடையு முடனொடு மகளிர்க்கொர்
பேதமையு முதவி முதிராப்
பிள்ளைமையின் வள்ளன்மை கொள்ளுமொரு பாண்டிப்
பிராட்டியைக் காக்க வென்றே. 8

துர்க்கை

வடிபட்ட முக்குடுமி வடிவே றிரித்திட்டு
வளைகருங் கோட்டு மோட்டு
மகிடங் கவிழ்த்துக் கடாங்கவிழ்க் குஞ்சிறுகண்
மால்யானை வீங்க வாங்குந்

துடிபட்ட கொடிநுண் ணுசுப்பிற் குடைந்தெனச்
சுடுகடைக் கனலி தூண்டுஞ்
சுழல்கண் முடங்குளை மடங்கலை யுகைத்தேறு
சூரரிப் பிணவு காக்க

பிடிபட்ட மடநடைக் கேக்கற்ற கூந்தற்
பிடிக்குழாஞ் சுற்ற வொற்றைப்
பிறைமருப் புடையதொர் களிற்றினைப் பெற்றெந்தை
பிட்டுண்டு கட்டுண்டு நின்

றடிபட்ட திருமேனி குழையக் குழைத்திட்ட
வணிமணிக் கிம்பு ரிக்கோ
டாகத்த தாகக் கடம்பா டவிக்குள் விளை
யாடுமொர் மடப்பிடி யையே. 9

சத்த மாதர்கள்
வேறு

கடகளி றுதவுக பாய்மிசைப் போர்த்தவள்
கவிகுவி துறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயி றெரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடிச் சேர்த்தவள்

இடியுக வடலரி யேறுகைத் தார்த்தவள்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொ டுழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனுமிவ ரெழுவர்க டாண்முடிச் சூட்டுதும்

குடமொடு குடவியர் பாணிகைக் கோத்திடு
குரவையு மலதொர்ப ணாமுடிச் சூட்டருள்
குதிகொள நடமிடு பாடலுக் கேற்பவொர்
குழலிசை பழகளி பாடிடக் கேட்டுடை

மடலவிழ் துளபந றாவெடுத் தூற்றிட
மழகளி றெனவெழு கார்முகச் சூற்புயல்
வரவரு மிளையகு மாரியைக் கோட்டெயின்
மதுரையில் வளர்கவு மாரியைக் காக்கவே. 10

முப்பத்து மூவர்
வேறு

அமரில் வெந்நிடும வுதியர் பின்னிடுமொ
ரபயர் முன்னிடுவ னத்தொக்க வோடவும்
அளவு மெம்முடைய திறையி தென்னமுடி
யரச ரெண்ணிலரொர் முற்றத்து வாடவும்

அகில மன்னரவர் திசையின் மன்னரிவ
ரமர ரென்னுமுரை திக்கெட்டு மூடவும்
அமுத வெண்மதியின் மரபை யுன்னியுனி
யலரி யண்ணல்முழு வெப்பத்து மூழ்கவும்

குமரி பொன்னிவையை பொருணை நன்னதிகள்
குதிகொள் விண்ணதியின் மிக்குக் குலாவவுங்
குவடு தென்மலையி னிகர தின்மைசுரர்
குடிகொள் பொன்மலைது தித்துப்ப ராவவுங்

குமரர் முன்னிருவ ரமர ரன்னையிவள்
குமரி யின்னமுமெ னச்சித்தர் பாடவுங்
குரவை விம்மவர மகளிர் மண்ணிலெழில்
குலவு கன்னியர்கள் கைக்கொக்க வாடவும்

கமலன் முன்னியிடு மரச வன்னமெழு
கடலி லன்னமுட னட்புக்கை கூடவுங்
கரிய செம்மலொடு மிளைய செம்மல்விடு
கருடன் மஞ்சையொடொர் கட்சிக்கு ளூடவுங்

கடவி விண்ணரசு நடவும் வெம்முனைய
களிறு கைம்மலைசெல் கொப்பத்து வீழவுங்
கனக மன்னுதட நளினி துன்னியிரு
கமல மின்னுமொரு பற்பத்துண் மேவவும்

இமய மென்னமனு முறைகொ டென்னருமெ
மிறையை நன்மருகெ னப்பெற்று வாழவும்
எவர்கொல் பண்ணவர்க ளெவர்கொன் மண்ணவர்க
ளெதுகொல் பொன்னுலகெ னத்தட்டு மாறவும்

எழில்செய் தென்மதுரை தழைய மும்முலையொ
டெழுமெ னம்மனை வனப்புக்கொர் காவலர்
இருவ ரெண்மர்பதி னொருவர் பன்னிருவ
ரெனும் விண்ணவர்கண் முப்பத்து மூவரே. 11

காப்புப் பருவம் முற்றிற்று

2-வது செங்கீரைப் பருவம்

நீராட்டி யாட்டுபொற் சுண்ணந் திமிர்ந்தள்ளி
நெற்றியிற் றொட்டிட்ட வெண்
ணீற்றினொடு புண்டரக் கீற்றுக்கு மேற்றிடவொர்
நித்திலச் சுட்டி சாத்தித்

தாராட்டு சூழியக் கொண்டையு முடித்துத்
தலைப்பணி திருத்தி முத்தின்
றண்ணொளி ததும்புங் குதம்பையொடு காதுக்கொர்
தமனியக் கொப்பு மிட்டுப்

பாராட்டு பாண்டிப் பெருந்தேவி திருமுலைப்
பாலமுத மூட்டி யொருநின்
பானாறு குமுதங் கனிந்தூறு தேறல்தன்
பட்டாடை மடிந னைப்பச்

சீராட்டி வைத்துமுத் தாடும் பசுங்கிள்ளை
செங்கீரை யாடி யருளே
தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி
செங்கீரை யாடி யருளே. 1

உண்ணிலா வுவகைப் பெருங்களி துளும்பநின்
றுன்றிருத் தாதை நின்னை
யொருமுறை கரம்பொத்தி வருகென வழைத்திடுமு
னோடித் தவழ்ந்து சென்று

தண்ணுலா மழலைப் பசுங்குதலை யமுதினிய
தாய்வயிறு குளிர வூட்டித்
தடமார்ப நிறைகுங் குமச்சே றளைந்துபொற்
றாடோ ய் தடக்கை பற்றிப்

பண்ணுலா வடிதமிழ்ப் பைந்தாமம் விரியும்
பணைத்தோ ளெருத்தமேறிப்
பாசொளிய மரகதத் திருமேனி பச்சைப்
பசுங்கதிர் ததும்ப மணிவாய்த்

தெண்ணிலா விரிய நின்றாடும் பசுந்தோகை
செங்கீரை யாடி யருளே
தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி
செங்கீரை யாடி யருளே. 2

சுற்றுநெடு நேமிச் சுவர்க்கிசைய வெட்டுச்
சுவர்க்கா னிறுத்தி மேருத்
தூணொன்று நடுநட்டு வெளிமுகடு மூடியிரு
சுடர் விளக்கிட்டு முற்ற

எற்றுபுன லிற்கழுவு புவனப் பழங்கல
மெடுத்தடுக் கிப்பு துக்கூ
ழின்னமுத முஞ்சமைத் தன்னை நீபன்முறை
யிழைத்திட வழித்த ழித்தோர்

முற்றவெளி யிற்றிரியு மத்தப் பெரும்பித்தன்
முன்னின்று தொந்தமிடவு
முனியாது வைகலு மெடுத்தடுக் கிப்பெரிய
மூதண்ட கூடமூடுஞ்

சிற்றில்விளை யாடுமொரு பச்சிளம் பெண்பிள்ளை
செங்கீரை யாடி யருளே
தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி
செங்கீரை யாடி யருளே. 3

மங்குல்படு கந்தரச் சுந்தரக் கடவுட்கு
மழகதிர்க் கற்றை சுற்றும்
வாணயன மூன்றுங் குளிர்ந்தமுத கலைதலை
மடுப்பக் கடைக்க ணோக்கும்

பொங்குமதர் நோக்கிற் பிறந்தவா னந்தப்
புதுப்புணரி நீத்த மையன்
புந்தித் தடத்தினை நிரப்பவழி யடியர்பாற்
போகசா கரம டுப்ப

அங்கணொடு ஞாலத்து வித்தின்றி வித்திய
வனைத் துயிர்க ளுந்தளிர்ப்ப
வருண்மடை திறந்துகடை வெள்ளம் பெருக்கெடுத்
தலையெறிந் துகள வுகளுஞ்

செங்கயல் கிடக்குங் கருங்கட் பசுந்தோகை
செங்கீரை யாடி யருளே
தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி
செங்கீரை யாடி யருளே. 4

பண்ணறா வரிமிடற் றறுகாண் மடுப்பப்
பசுந்தேற லாற லைக்கும்
பதுமபீ டிகையுமுது பழமறை விரிந்தொளி
பழுத்தசெந் நாவு மிமையாக்

கண்ணறா மரகதக் கற்றைக் கலாமஞ்ஞை
கண்முகி றதும்ப வேங்குங்
கார்வரையும் வெள்ளெனவொர் கன்னிமா டத்துவளர்
கற்பூர வல்லி கதிர்கால்

விண்ணறா மதிமுயற் கலைகிழிந் திழியமுத
வெள்ளருவி பாய வெடிபோய்
மீளுந் தகட்டகட் டிளவாளை மோதமுகை
விண்டொழுகு முண்ட கப்பூந்

தெண்ணறா வருவிபாய் மதுரைமர கதவல்லி
செங்கீரை யாடி யருளே
தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி
செங்கீரை யாடி யருளே. 5

வேறு

முகமதி யூடெழு நகைநில வாட
முடிச்சூ ழியமாட
முரிபுரு வக்கொடி நுதலிடு சுட்டி
முரிப்பொ டசைந் தாட

இகல்விழி மகரமு மம்மக ரம்பொரு
மிருமக ரமுமாட
விடுநூ புரவடி பெயரக் கிண்கி
ணெனுங்கிண் கிணியாடத்

துகிலொடு சோர்தரு கொடிநுண் மருங்கு
றுவண்டு துவண்டாடத்
தொந்தி சரிந்திட வுந்தி கரந்தொளிர்
சூலுடை யாலிடைமற்

றகில சராசர நிகிலமொ டாடிட
வாடுக செங்கீரை
யவனி தழைந்திட மவுலி புனைந்தவ
ளாடுக செங்கீரை. 6

தசைந்திடு கொங்கை யிரண்டல தெனவுரை
தருதிரு மார்பாடத்
தாய்வரு கென்பவர் பேதைமை கண்டு
ததும்புபு னகையாடப்
பசைந்திடு ஞால மலர்ந்தமை வெளிறியொர்
பச்சுடல் சொல்லவுமோர்
பைங்கொடி யொல்கவு மொல்கி நுடங்கிய
பண்டி சரிந்தாட

இசைந்திடு தேவை நினைந்தன வென்ன
விரங்கிடு மேகலையோ
டிடுகிடை யாட வியற்கை மணம்பொதி
யிதழ்வழி தேறலினோ

டசைந்தொசி கின்ற பசுங்கொடி யெனவினி
தாடுக செங்கீரை
யவனி தழைந்திட மவுலி புனைந்தவ
ளாடுக செங்கீரை. 7

பரிமள மூறிய வுச்சியின் முச்சி
பதிந்தா டச்சுடர்பொற்
பட்டமு டன்சிறு சுட்டியும் வெயிலொடு
பனிவெண் ணிலவாடத்
திருநுதன் மீதெழு குறுவெயர் வாடத்
தெய்வம ணங்கமழுந்
திருமேனியின் முழு மரகத வொளியெண்
டிக்கும் விரிந்தாடக்

கருவினை நாறு குதம்பை ததும்பிய
காது தழைந்தாடக்
கதிர்வெண் முறுவ லரும்ப மலர்ந்திடு
கமலத் திருமுகநின்

அருள்விழி யொடும்வளர் கருணை பொழிந்திட
வாடுக செங்கீரை
யவனி தழைந்திட மவுலி புனைந்தவ
ளாடுக செங்கீரை. 8

வேறு

குருமணி வெயில்விட மரகத நிழல்விரி
குன்றே நின்றூதுங்
குழலிசை பழகிய மழைமுகி லெழவெழு
கொம்பே வெம்பாச

மருவிய பிணிகெட மலைதரு மருமைம
ருந்தே சந்தானம்
வளர்புவ னமுமுணர் வருமரு மறையின்வ
ரம்பே செம்போதிற்

கருணையின் முழுகிய கயறிரி பசியக
ரும்பே வெண்சோதிக்
கலைமதி மரபிலொ ரிளமதி யெனவளர்
கன்றே யென்றோதும்

திருமகள் கலைகமகடலைமகள் மலைமகள்
செங்கோ செங்கீரை
தெளிதமிழ் மதுரையில் வளருமொ ரிளமயில்
செங்கோ செங்கீரை. 9

சங்குகி டந்தத டங்கைநெ டும்புய
றங்காய் பங்காயோர்
தமனிய மலைபடர் கொடியெனவடிவுத
ழைந்தா யெந்தாயென்

றங்கெண டும்புவ னங்கடொ ழுந்தொறு
மஞ்சே லென்றோதும்
அபயமும் வரதமு முபயமு முடையவ
ணங்கே வெங்கோபக்

கங்குன்ம தங்கய மங்குல டங்கவி
டுங்கா மன்சேமக்
கயல்குடி புகுமொரு துகிலிகை யெனநின்
கண்போ லுஞ்சாயற்

செங்கய றங்குபொ லன்கொடி மின்கொடி
செங்கோ செங்கீரை
தெளிதமிழ் மதுரையில் வளருமொ ரிளமயில்
செங்கோ செங்கீரை. 10

செங்கீரைப் பருவம் முற்றிற்று

3 வது தாலப்பருவம்

தென்னன் றமிழி னுடன்பிறந்த
சிறுகா லரும்பத் தீயரும்புந்
தேமா நிழற்கண் டுஞ்சுமிளஞ்
செங்கட் கயவாய்ப் புனிற்றெருமை

இன்னம் பசும்புற் கறிக்கல்லா
விளங்கன் றுள்ளி மடித்தலநின்
றிழிபா லருவி யுவட்டெறிய
வெறியுந் திரைத்தீம் புனற்பொய்கைப்

பொன்னங் கமலப் பசுந்தோட்டுப்
பொற்றா தாடிக் கற்றைநிலாப்
பொழியுந் தரங்கம் பொறையுயிர்த்த
பொன்போற் றொடுதோ லடிப்பொலன்சூட்

டன்னம் பொலியுந் தமிழ் மதுரைக்
கரசே தாலோ தாலேலோ
அருள்சூற் கொண்ட வங்கயற்கண்
ணமுதே தாலோ தாலேலோ. 1

வீக்குஞ் சிறுபைந் துகிற்றோகை
விரியுங் கலாப மருங்கலைப்ப
விளையாட் டயரு மணற்சிற்றில்
வீட்டுக் குடிபுக் கோட்டியிருள்

சீக்குஞ் சுடர்தூங் கழன்மணியின்
செந்தீ மடுத்த சூட்டடுப்பிற்
செழுந்தாட் பவளத் துவரடுக்கித்
தெளிக்கு நறுந்தண் டேறலுலை

வாக்குங் குடக்கூன் குழிசியிலம்
மதுவார்த் தரித்த நித்திலத்தின்
வல்சி புகட்டி வடித்தெடுத்து
வயன்மா மகளிர் குழாஞ்சிறுசோ

றாக்கும் பெருந்தண் பணைமதுரைக்
கரசே தாலோ தாலேலோ
அருள்சூற் கொண்ட வங்கயற்கண்
ணமுதே தாலோ தாலேலோ. 2

ஓடும் படலை முகிற்படல
முவர்நீத் துவரி மேய்ந்துகரு
வூறுங் கமஞ்சூல் வயிறுடைய
வுகைத்துக் கடவுட் கற்பகப்பூங்

காடுந் தரங்கக் கங்கை நெடுங்
கழியு நீந்தி யமுதிறைக்குங்
கலைவெண் மதியின் முயறடவிக்
கதிர்மீன் கற்றை திரைத்துதறி

மூடுங் ககன வெளிக்கூட
முகடு திறந்து புறங்கோத்த
முந்நீ ருழக்கிச் சினவாளை
மூரிச் சுறவி னோடும்விளை

யாடும் பழனத் தமிழ்மதுரைக்
கரசே தாலோ தாலேலோ
அருள்சூற் கொண்ட வங்கயற்கண்
ணமுதே தாலோ தாலேலோ. 3

ஊறுங் கரடக் கடத்துமுகந்
தூற்று மதமா மடவியர்நின்
றுதறுங் குழற்பூந் துகளடங்க
வோட விடுத்த குங்குமச் செஞ்

சேறு வழுக்கி யோட்டறுக்குந்
திருமா மறுகி லரசர் பெருந்
திண்டே ரொதுங்கக் கொடுஞ்சி நெடுஞ்
சிறுதே ருருட்ட்டுஞ் செங்கண்மழ

வேறு

பொருவே லிளைஞர்கடவு
இவுளி கடைவாய் குதட்டவழிந்
திழியும் விலாழி குமிழியெறிந்
திரைத்துத் திரைத்து நுரைத்தொருபே

ராறு மடுக்குந் தமிழ்மதுரைக்
கரசே தாலோ தாலேலோ
அருள்சூற் கொண்ட வங்கயற்கண்
ணமுதே தாலோ தாலேலோ. 4

வார்க்குன் றிரண்டு சுமந்தொசியு
மலர்கொம் பனையார் குழற்றுஞ்சு
மழலைச் சுரும்பர் புகுந்துழக்க
மலர்த்தா துகுத்து வானதியைத்

தூர்க்கும் பொதும்பின் முயற்கலைமேற்
றுள்ளி யுகளு முசுக்கலையின்
றுழனிக் கொதுங்கிக் கழனியினெற்
சூட்டுப் படப்பை மேய்ந்துகதிர்ப்

போர்க்குன் றேறுங் கருமுகிலை
வெள்வாய் மள்ளர் பிணையலிடும்
பொருகோட் டெருமைப் போத்தினொடும்
பூட்டி யடிக்க விடிக்குரல் விட்

டார்க்கும் பழனத் தமிழ்மதுரைக்
கரசே தாலோ தாலேலோ
அருள்சூற் கொண்ட வங்கயற்கண்
ணமுதே தாலோ தாலேலோ. 5

வேறு

காரிற் பொழிமழை நீரிற் சுழியெறி
கழியிற் சிறுகுழியிற்
கரையிற் கரைபொரு திரையிற் றலைவிரி
கண்டலின் வண்டலினெற்

போரிற் களநிறை சேரிற் குளநிறை
புனலிற் பொருகயலிற்
பொழிலிற் சுருள்புரி குழலிற் கணிகையர்
குழையிற் பொருகயல்போய்த்

தேரிற் குமரர்கண் மார்பிற் பொலிதரு
திருவிற் பொருவில்வரிச்
சிலையிற் றிரள்புய மலையிற் புலவிதி
ருத்திட வூழ்த்தமுடித்

தாரிற் பொருதிடு மதுரைத் துரைமகள்
தாலோ தாலேலோ
சங்கம் வளர்ந்திட நின்ற பொலன்கொடி
தாலோ தாலேலோ. 6

சேனைத் தலைவர்க டிசையிற் றலைவர்கள்
செருவிற் றலைவர்களாற்
சிலையிற் றடமுடி தேரிற் கொடியொடு
சிந்தச் சிந்தியிடுஞ்

சோனைக் கணைமழை சொரியப் பெருகிய
குருதிக் கடலிடையே
தொந்த மிடும்பல் கவந்த நிவந்தொரு
சுழியிற் பவுரிகொள

ஆனைத் திரளொடு குதிரைத் திரளையு
மப்பெயர் மீனைமுகந்
தம்மனை யாடுக டற்றிரை போல
வடற்றிரை மோதவெழுந்

தானைக் கடலொடு பொலியுந் திருமகள்
தாலோ தாலேலோ
சங்கம் வளர்ந்திட நின்ற பொலன்கொடி
தாலோ தாலேலோ. 7

அமரர்க் கதிபதி வெளிறக் களிறெதிர்
பிளிறக் குளிறியிடா
வண்ட மிசைப்பொலி கொண்ட லுகைத்திடு
மமரிற் றமரினொடுங்

கமரிற் கவிழ்தரு திசையிற் றலைவர்கண்
மலையில் சிறகரியுங்
கடவுட் படையொடு பிறகிட் டுடைவது
கண்டு முகங்குளிராப்

பமரத் தருமலர் மிலையப் படுமுடி
தொலையக் கொடுமுடி தாழ்
பைம்பொற் றடவரை திரியக் கடல்வயி
றெரியப் படைதிரியாச்

சமரிற் பொருதிரு மகனைத் தருமயில்
தாலோ தாலேலோ
சங்கம் வளர்ந்திட நின்ற பொலன்கொடி
தாலோ தாலேலோ. 8

முதுசொற் புலவர் தெளித்த பசுந்தமிழ்
நூல்பாழ் போகாமே
முளரிக் கடவுள் படைத்த வசுந்தரை
கீழ்மே லாகாமே

அதிரப் பொருது கலிப்பகை ஞன்றமிழ்
நீர்நா டாளாமே
அகிலத் துயிர்க ளயர்த்து மறங்கடை
நீணீர் தோயாமே

சிதைவுற் றரசிய னற்றரு மங்குடி
போய்மாய் வாகாமே
செழியர்க் கபயரு மொப்பென நின்றுண
ராதா ரோதாமே

மதுரைப் பதிதழை யத்தழை யுங்கொடி
தாலோ தாலேலோ
மலையத் துவசன் வளர்த்த பசுங்கிளி
தாலோ தாலேலோ. 9

தகரக் கரிய குழற்சிறு பெண்பிள்ளை
நீயோ தூயோன்வாழ்
சயிலத் தெயிலை வளைப்பவ ளென்றெதிர்
சீறா வீறோதா

நிகரிட் டமர்செய் கணத்தவர் நந்திபி
ரானோ டேயோடா
நிலைகெட் டுலைய வுடற்றவு டைந்ததொ
ரானே றாகமே

சிகரப் பொதிய மிசைத்தவ ழுஞ்சிறு
தேர்மே லேபோயோர்
சிவனைப் பொருத சமர்த்த னுகந்தருள்
சேல்போன் மாயாமே

மகரத் துவச முயர்த்தபொ லன்கொடி
தாலோ தாலேலோ
மலையத் துவசன் வளர்த்த பசுங்கிளி
தாலோ தாலேலோ. 10

தாலப் பருவம் முற்றிற்று

4-வது சப்பாணிப் பருவம்

நாளவட் டத்தளிம நளினத் தொடுந்துத்தி
நாகணையும் விட்டொ ரெட்டு
நாட்டத்த னும்பரம வீட்டத்த னுந்துஞ்சு
நள்ளிருளி னாப்ப ணண்ட

கோளவட் டம்பழைய நேமிவட் டத்தினொடு
குப்புற்று வெற்பட்டுமேழ்
குட்டத்தி னிற்கவிழ மூதண்ட வேதண்ட
கோதண்ட மோடு சக்ர

வாளவட் டஞ்சுழல மட்டித்து நட்டமிடு
மதுமத்தர் சுத்த நித்த
வட்டத்தி னுக்கிசைய வொற்றிக்க னத்தன
வட்டத்தை யொத்திட்ட தோர்

தாளவட் டங்கொட்டு கைப்பாணி யொப்பவொரு
சப்பாணி கொட்டியருளே
தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
சப்பாணி கொட்டியருளே. 1

பொய்வந்த நுண்ணிடை நுடங்கக் கொடிஞ்சிப்
பொலந்தேரொ டமர கத்துப்
பொன்மேரு வில்லியை யெதிர்ப்பட்ட ஞான்றம்மை
பொம்மன்முலை மூன்றிலொன்று

கைவந்த கொழுநரொடு முள்ளப் புணர்ச்சிக்
கருத்தா னாகத்தொடுங்கக்
கவிழ்தலை வணக்கொடு முலைக்கண்வைத் திடுமொரு
கடைக்கணோக் கமுத மூற்ற

மெய்வந்த நாணினொடு நுதல்வந் தெழுங்குறு
வெயர்ப்பினோ டுயிர்ப்பு வீங்கும்
விம்மிதமு மாய்நின்ற வுயிரோவ மெனவூன்று
விற்கடை விரற்கடை தழீஇத்

தைவந்த நாணினொடு தவழ்தந்த செங்கைகொடு
சப்பாணி கொட்டி யருளே
தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
சப்பாணி கொட்டியருளே. 2

பூமரு வெடிப்பமுகை விண்டதண் டலையீன்ற
புனைனறுந் தளிர்கள் கொய்தும்
பொய்தற் பிணாக்களொடு வண்டற் கலம்பெய்து
புழுதிவிளை யாட்ட யர்ந்தும்

காமரு மயிற்குஞ்சு மடவனப் பார்ப்பினொடு
புறவுபிற வும்வ ளர்த்துங்
காந்தள்செங் கமலத்த கழுநீர் மணந்தெனக்
கண்பொத்தி விளையா டியுந்

தேமரு பசுங்கிள்ளை வைத்துமுத் தாடியுந்
திரள்பொற் கழங் காடியுஞ்
செயற்கையா னன்றியு மியற்கைச் சிவப்பூறு
சேயிதழ் விரிந்த தெய்வத்

தாமரை பழுத்தகைத் தளிரொளி துளும்பவொரு
சப்பாணி கொட்டி யருளே
தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
சப்பாணி கொட்டியருளே. 3

விண்ணளிக் குஞ்சுடர் விமானமும் பரநாத
வெளியிற் றுவாத சாந்த
வீடுங் கடம்புபொதி காடுந் தடம்பணை
விரிந்த தமிழ் நாடும் நெற்றிக்

கண்ணளிக் குஞ்சுந் தரக்கடவுள் பொலியுமாறு
காற்பீட முமெம் பிரான்
காமர்பரி யங்கக் கவின்றங்கு பள்ளியங்
கட்டிலுந் தொட்டிலாகப்

பண்ணளிக் குங்குதலை யமுதொழுகு குமுதப்
பசுந்தேற லூற லாடும்
பைங்குழவி பெருவிரல் சுவைத்து நீ பருகிடப்
பைந்தேறலூறு வண்கைத்

தண்ணளிக் கமலஞ் சிவப்பூற வம்மையொரு
சப்பாணி கொட்டி யருளே
தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
சப்பாணி கொட்டி யருளே. 4

சேலாட்டு வாட்கட் கருங்கடற் கடைமடை
திறந்தமுத மூற்று கருணைத்
தெண்டிரை கொழித்தெறிய வெண்டிரை நெருப்பூட்டு
தெய்வக் குழந்தை யைச்செங்

கோலாட்டு நின்சிறு கணைக்காற் கிடத்திக்
குளிப்பாட்டி யுச்சி முச்சிக்
குஞ்சிக்கு நெய்போற்றி வெண்காப்பு மிட்டுவளர்
கொங்கையிற் சங்கு வார்க்கும்

பாலாட்டி வாயிதழ் நெரித்தூட்டி யுடலிற்
பசுஞ்சுண்ண முந்தி மிர்ந்து
பைம்பொற் குறங்கினிற் கண்வளர்த் திச்சிறு
பரூஉமணித் தொட்டிலேற்றித்

தாலாட்டி யாட்டுகைத் தாமரை முகிழ்த்தம்மை
சப்பாணி கொட்டி யருளே
தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
சப்பாணி கொட்டியருளே. 5

வேறு

வானத் துருமொ டுடுத்திரள் சிந்த
மலைந்த பறந்தலையின்
மண்ணவர் பண்ணவர் வாளின் மறிந்தவர்
மற்றவர் பொற்றொடியார்

பானற் கணையு முலைக்குவ டும்பொரு
படையிற் படவிமையோர்
பைங்குடர் மூளையொ டும்புதி துண்டு
பசுந்தடி சுவைகாணாச்

சேனப் பந்தரி னலைகைத் திரள்பல
குரவை பிணைத்தாடத்
திசையிற் றலைவர்கள் பெருநா ணெய்தச்
சிறுநா ணொலிசெய்யாக்

கூனற் சிலையி னெடுங்கணை தொட்டவள்
கொட்டுக சப்பாணி
குடைநிழ லிற்புவி மகளை வளர்த்தவள்
கொட்டுக சப்பாணி. 6

சமரிற் பிறகிடு முதியரு மபயரு
மெதிரிட் டமராடத்
தண்டதரன்செல் கரும்ப டிந்திரன்
வெண்பக டோ டுடையாத்

திமிரக் கடல்புக வருணன் விடுஞ்சுற
வருணன் விடுங்கடவுட்
டேரினுகண்டெழ வார்வில் வழங்கு
கொடுங்கோல் செங்கோலா

இமயத் தொடும்வளர் குலவெற் பெட்டையு
மெல்லைக் கல்லினிறீஇ
எண்டிசை யுந்தனி கொண்டு புரந்து
வடாது கடற்றுறை தென்

குமரித் துறையென வாடு மடப்படி
கொட்டுக சப்பாணி
குடைநிழ விற்புவி மகளை வளர்த்தவள்
கொட்டுக சப்பாணி. 7

சென்றிடு வாளிகள் கூளிகள் காளிகள்
ஞாளியி லாளியெனச்
செருமலை செம்மலை முதலியர் சிந்தச்
சிந்திட நந்திபிரான்

நின்றில னோடலு முன்னழ கும்மவன்
பின்னழ குங்காணா
நிலவுவி ரிந்திடு குறுநகை கொண்டு
நெடுங்கயி லைக்கிரியின்

முன்றிலி னாடன் மறந்தம ராடியொர்
மூரிச் சிலைகுனியா
முரிபுரு வச்சிலை கடைகுனி
யச்சில முளரிக் கணைதொட்டுக்

குன்றவி லாளியை வென்ற தடாதகை
கொட்டுக சப்பாணி
குடைநிழ லிற்புவி மகளை வளர்த்தவள்
கொட்டுக சப்பாணி. 8

வேறு

ஒழுகிய கருணையு வட்டெழ
வைத்தவ ருட்பார்வைக்
குளநெகி ழடியர்ப வக்கடல்
வற்றவ லைத்தோடிக்

குழையொடு பொருதுகொ லைக்கணை
யைப்பிணை யைச்சீறிக்
குமிழொடு பழகிம தர்த்தக
யற்கண்ம டப்பாவாய்

தழைகெழு பொழிலின்மு சுக்கலை
மைப்புய விற்பாயத்
தவழிள மதிகலை நெக்குகு
புத்தமு தத்தோடே

மழைபொழி யிமயம யிற்பெடை
கொட்டுக சப்பாணி
மதுரையில் வளரு மடப்பிடி
கொட்டுக சப்பாணி. 9

செழுமறை தெளியவ டித்தத
மிழ்ப்பதி கத்தோடே
திருவரு ளமுதுகு ழைத்துவி
டுத்தமு லைப்பாலாற்

கழுமல மதலைவ யிற்றைநி
ரப்பிம யிற்சேயைக்
களிறொடும் வளரவ ளர்த்தவ
ருட்செவி லித்தாயே

குழலிசை பழகிமு ழுப்பிர
சத்திர சத்தோடே
குதிகொளு நறியக னிச்சுவை
நெக்கபெ ருக்கேபோன்

மழலையின முதுகு சொற்கிளி
கொட்டுக சப்பாணி
மதுரையில் வளரும டப்பிடி
கொட்டுக சப்பாணி. 10

சப்பாணிப் பருவம் முற்றிற்று

5-வது முத்தப் பருவம்

காலத் தொடுகற் பனைகடந்த
கருவூ லத்துப் பழம்பாடற்
கலைமாச் செல்வர் தேடிவைத்த
கடவுண் மணியே யுயிரால

வாலத் துணர்வி னீர்பாய்ச்சி
வளர்ப்பார்க் கொளிபூத் தருள்பழுத்த
மலர்க்கற் பகமே யெழுதாச்சொன்
மழலை ததும்பு பசுங்குதலைச்

சோலைக் கிளியே யுயிர்த்துணையாந்
தோன்றாத் துணைக்கோர் துணையாகித்
துவாத சாந்தப் பெருவெளியிற்
றுரியங் கடந்த பரநாத

மூலத் தலத்து முளைத்தமுழு
முதலே முத்தந் தருகவே
முக்கட் சுடர்க்கு விருந்திடுமும்
முலையாய் முத்தந் தருகவே. 1

உருகி யுருகி நெக்குநெக்கு
ளுடைந்து கசிந்திட் டசும்பூறும்
உழுவ லன்பிற் பழவடியா
ருள்ளத் தடத்தி லூற்றெடுத்துப்

பெருகு பரமா னந்த வெள்ளப்
பெருக்கே சிறியேம் பெற்றபெரும்
பேறே யூறு நறைக்கூந்தற்
பிடியே கொடிநுண் ணுசுப்பொசிய

வருகுங் குமக்குன் றிரண்டேந்து
மலர்ப்பூங் கொம்பே தீங்குழலின்
மதுரங் கனிந்த பசுங்குதலை
மழலை யரும்பச் சேதாம்பன்

முருகு விரியுஞ் செங்கனிவாய்
முத்தந் தருக முத்தமே
முக்கட் சுடர்க்கு விருந்திடுமும்
முலையாய் முத்தந் தருகவே. 2

கொழுதி மதர்வண் டுழக்குகுழற்
கோதைக் குடைந்த கொண்டலுநின்
குதலைக் கிளிமென் மொழிக்குடைந்த
குறுங்கட் கரும்புங் கூன்பிறைக்கோ

டுழத பொலன்சீ றடிக்குடைந்த
செந்தா மரையும் பசுங்கழுத்துக்
குடைந்த கமஞ்சூற் சங்குமொழு
கொளிய கமுகு மழகுதொய்யில்

எழுது தடந்தோட் குடைந்ததடம்
பணையும் பணைமென் முலைக்குடைந்த
இணைமா மருப்புந் தருமுத்துன்
டிருமுத் தொவ்வா விகபரங்கள்

முழுதுந் தருவாய் நின்கனிவாய்
முத்தந் தருக முத்தமே
முக்கட் சுடர்க்கு விருந்திடுமும்
முலையாய் முத்தந் தருகவே. 3

மத்த மதமாக் கவுட்டொருநான்
மருப்புப் பொருப்பு மிசைப்பொலிந்த
வானத் தரசு கோயில்வளர்
சிந்தா மணியும் வடபுலத்தார்

நத்தம் வளர வளகையர்கோ
னகரில் வளரும் வான்மணியும்
நளினப் பொகுட்டில் வீற்றிருக்கு
நங்கை மனைக்கோர் விளக்கமெனப்

பைத்த சுடிகைப் படப்பாயற்
பதுமநாபன் மார்பில்வளர்
பரிதி மணியு மெமக்கம்மை
பணியல் வாழி வேயீன்ற

முத்த முகுந்த நின்கனிவாய்
முத்தந் தருக முத்தமே
முக்கட் சுடர்க்கு விருந்திடுமும்
முலையாய் முத்தந் தருகவே. 4

கோடுங் குவடும் பொருதரங்கக்
குமரித் துறையிற் படுமுத்தும்
கொற்கைத் துறையிற் றுறைவாணர்
குளிக்குஞ் சலாபக் குவான்முத்தும்

ஆடும் பெருந்தண் டுறைப்பொருநை
யாற்றிற் படுதெண் ணிலாமுத்தும்
அந்தண் பொதியத் தடஞ்சார
லருவி சொரியுங் குளிர்முத்தும்

வாடுங் கொடிநுண் ணுசுப்பொசிய
மடவ மகளி ருடனாடும்
வண்டற் றுறைக்கு வைத்துநெய்த்து
மணந்தாழ் நறுமென் புகைப்படலம்

மூடுங் குழலாய் நின்கனிவாய்
முத்தந் தருக முத்தமே
முக்கட் சுடர்க்கு விருந்திடுமும்
முலையாய் முத்தந் தருகவே. 5

வேறு

பைவைத்த துத்திப் பரூஉச்சுடிகை முன்றிற்
பசுங்கொடி யுடுக்கை கிழியப்
பாயிருட் படலங் கிழித்தெழு சுடர்ப்பரிதி
பரிதிக் கொடிஞ்சி மான்றேர்

மொய்வைத்த கொய்யுளை வயப்புரவி வாய்ச்செல்ல
முட்கோல் பிடித்து நெடுவான்
முற்றத்தை யிருள்பட விழுங்குந் துகிற்கொடி
முனைக்கணை வடிம்பு நக்கா

மைவைத்த செஞ்சிலையு மம்புலியு மோடநெடு
வான்மீன் மணந்து கந்த
வடவரை முகந்தநின் வயக்கொடி யெனப்பொலியு
மஞ்சிவர் வளாக நொச்சித்

தெய்வத் தமிழ்க்கூட றழையத் தழைத்தவ
டிருப்பவள முத்த மருளே
சேல்வைத்த வொண்கொடியை வலம்வைத்த பெண்கொடி
திருப்பவள முத்த மருளே. 6

பின்னற் றிறைக்கடன் மதுக்குட மறத்தேக்கு
பெய்முகிற் காருடலம் வெண்
பிறைமதிக் கூன்குயக் கைக்கடைஞ ரொடுபுடை
பெயர்ந்திடை நுடங்க வொல்கு

மின்னற் றடித்துக் கரும்பொற்றொடிக்கடைசி
மெல்லியர் வெரீஇப் பெயரவான்
மீன்கணம் வெருக்கொள்ள வெடிவரால் குதிகொள்ளும்
விட்புலம் விளை புலமெனக்

கன்னற் பெருங்காடு கற்பகக் காட்டுவளர்
கடவுண்மா கவளங் கொளக்
காமதே னுவுநின்று கடைவாய் குதட்டக்
கதிர்க்குலை முதிர்ந்து விளையுஞ்

செந்நெற் படப்பைமது ரைப்பதி புரப்பவ
டிருப்பவள முத்த மருளே
சேல்வைத்த வொண்கொடியை வலம்வைத்த பெண்கொடி
திருப்பவள முத்த மருளே. 7

சங்கோ லிடுங்கடற் றானைக்கு வெந்நிடு
தராபதிகண் முன்றிறூர்த்த
தமனியக் குப்பையுந் திசைமுதல்வர் தடமுடித்
தாமமுந் தலைம யங்கக்

கொங்கோ லிடுங்கைக் கொடுங்கோ லொடுந்திரி
குறும்பன் கொடிச்சுறவு நின்
கொற்றப் பதாகைக் குழாத்தினொடு மிரசதக்
குன்றினுஞ் சென்று லாவப்

பொன்கோல வேலைப் புறத்தினொ டகத்தினிமிர்
போராழி பரிதி யிரதப்
பொங்காழி மற்றப் பொருப்பாழி யிற்றிரி
புலம்பப் புலம்பு செய்யச்

செங்கோ றிருத்திய முடிச்செழியர் கோமக
டிருப்பவள முத்த மருளே
சேல்வைத்த வொண்கொடியை வலம்வைத்த பெண்கொடி
திருப்பவள முத்த மருளே. 8

வேறு

பருவரை முதுபல வடியினி னெடுநில
நெக்ககு டக்கனியிற்
படுநறை படுநிறை கடமுடை படுவக
டுப்பவு வட்டெழவும்

விரிதலை முதலொடு விளைபுல முலையவு
ழக்கிய முட்சுறவின்
விசையினின் வழிநறை மிடறொடி கமுகின்வி
ழுக்குலை நெக்குகவும்

கரையெறி புணரியி னிருமடி பெருகுத
டத்தும டுத்தமடக்
களிறொடு பிளிறிய விகலிய முகிலினி
ரட்டியி ரட்டியமும்

முரசதிர் கடிநகர் மதுரையில் வளர்கிளி
முத்தம ளித்தருளே
முழுதுல குடையதொர் கவுரியர் குலமணி
முத்தம ளித்தருளே. 9

புதையிருள் கிழிதர வெழுதரு பரிதிவ
ளைத்தக டற்புவியிற்
பொதுவற வடிமைசெய் திடும்வழி யடியர்பொ
ருட்டலர் வட்டணையிற்

றதைமலர் பொதுளிய களியளி குமிறுகு
ழற்றிரு வைத்தவளச்
சததள முளரியின் வனிதையை யுதவுக
டைக்கண்ம டப்பிடியே

பதுமமொ டொழுகொளி வளையுநி னளினமு
கத்துகி டற்றுமுறப்
பனிமிதி யொடுசுவை யமுதமு நுதலொடு
சொற்குத லைக்கணிறீஇ

முதுதமி ழுததியில் வருமொரு திருமகன்
முத்தம ளித்தருளே
முழுதுல குடையதொர் கவுரியர் குலமணி
முத்தம ளித்தருளே. 10

முத்தப் பருவம் முற்றிற்று

6-வது வருகைப் பருவம்

அஞ்சிலம் போலிட வரிக்குரற் கிண்கிணி
யரற்றுசெஞ் சீறடி பெயர்த்
தடியிடுந் தொறுநின் னலத்தகச் சுவடுபட்
டம்புவி யரம்பையர்கடம்

மஞ்சுதுஞ் சளகத் திளம்பிறையு மெந்தைமுடி
வளரிளம் பிறையுநாற
மணிநூ புரத்தவிழு மென்குரற் கோவசையு
மடநடைக் கோதொடர்ந்துன்

செஞ்சிலம் படிபற்று தெய்வக்கு ழாத்தினொடு
சிறையோதி மம்பின் செலச்
சிற்றிடைக் கொல்கிமணி மேகலையிரங்கத்
திருக்கோயி லெனவெனஞ்சக்

கஞ்சமுஞ் செஞ்சொற் றமிழ்க் கூடலுங் கொண்ட
காமர்பூங் கொடிவருகவே
கற்பகா டவியிற் கடம்பா டவிப்பொலி
கயற்கணா யகிவருகவே. 1

குண்டுபடு பேரகழி வயிறுளைந் தீன்றபைங்
கோதையும் மதுரமொழுகுங்
கொழிதமிழ்ப் பனுவற் றுறைப்படியு மடநடைக்
கூந்தலம் பிடியுமறுகால்

வண்டுபடு முண்டக மனைக்குடி புகச்சிவ
மணங்கமழ விண்டதொண்டர்
மானதத் தடமலர்ப் பொற்கோயில் குடிகொண்ட
மாணிக்க வல்லிவில்வே

டுண்டுபடு மதிநுதற் றோகையொடு மளவில்பல
தொல்லுரு வெடுத்தமர்செயுந்
தொடுசிலை யெனக்ககன முகடுமுட் டிப்பூந்
துணர்த்தலை வணங்கிநிற்குங்

கண்டுபடு கன்னல்பைங் காடுபடு கூடற்
கலாபமாமயில் வருகவே
கற்பகா டவியிற் கடம்பா டவிப்பொலி
கயற்கணா யகிவருகவே. 2

முயல்பாய் மதிக்குழவி தவழ்சூ லடிப்பலவின்
முட்பொதி குடக்கனியொடு
முடவுத் தடந்தாழை முப்புடைக் கனிசிந்த
மோதிநீ ருண்டிருண்ட

புயல்பாய் படப்பைத் தடம்பொழில்க ளன்றியேழ்
பொழிலையு மொருங்கலைத்துப்
புறமூடு மண்டச் சுவர்த்தலமிடித்தப்
புறக்கடன் மடுத்துழக்கிச்

செயல்பாய் கடற்றானை செங்களங் கொளவம்மை
திக்குவிச யங்கொண்டநாள்
தெய்வக் கயற்கொடிக டிசைதிசை யெடுத்தெனத்
திக்கெட்டு முட்டவெடிபோய்க்

கயல்பாய் குரம்பணை பெரும்பணைத் தமிழ்மதுரை
காவலன் மகள்வருகவே
கற்பகா டவியிற் கடம்பா டவிப்பொலி
கயற்கணா யகிவருகவே. 3

வடம்பட்ட நின்றுணைக் கொங்கைக் குடங்கொட்டு
மதுரவமு துண்டு கடைவாய்
வழியும்வெள் ளருவியென நிலவுபொழி கிம்புரி
மருப்பிற் பொருபிடித்துத்

தடம்பட்ட பொற்றாது சிந்துரங் கும்பத்
தலத்தணிவ தொப்பவப்பிச்
சலராசி யேழுந் தடக்கையின் முகந்துபின்
றானநீ ரானிரப்பி

முடம்பட்ட மதியங் குசப்படை யெனக்ககன
முகடுகை தடவியுடுமீன்
முத்தம் பதித்திட்ட முகபடா மெனவெழு
முகிற்படா நெற்றிசுற்றுங்

கடம்பட்ட சிறுகட் பெருங்கொலைய மழவிளங்
களிறீன்ற பிடிவருகவே
கற்பகா டவியிற் கடம்பா டவிப்பொலி
கயற்கணா யகிவருகவே. 4

தேனொழுகு கஞ்சப் பொலன்சீ றடிக்கூட்டு
செம்பஞ்சி யின்குழம்பால்
தெள்ளமு திறைக்கும் பசுங்குழவி வெண்டிங்கள்
செக்கர்மதி யாக்கரைபொரும்

வானொழுகு துங்கத் தரங்கப் பெருங்கங்கை
வாணிநதி யாச்சிவபிரான்
மகுடகோ டீரத் தடிச்சுவ டழுத்தியிடு
மரகதக் கொம்புகதிர்கால்

மீனொழுகு மாயிரு விசும்பிற் செலுங்கடவுள்
வேழத்தின் மத்தகத்து
வீற்றிருக் குஞ்சே யிழைக்கும் பசுங்கமுகு
வெண்கவரி வீசும் வாசக்

கானொழுகு தடமலர்க் கடிபொழிற் கூடல்வளர்
கவுரியன் மகள்வருகவே
கற்பகா டவியிற் கடம்பா டவிப்பொலி
கயற்கணா யகிவருகவே. 5

வேறு

வடக்குங் குமக்குன் றிரண்டேந்தும்
வண்டன் மகளிர் சிறுமுற்றில்
வாரிக் குவித்த மணிக்குப்பை
வானா றடைப்ப வழிபிழைத்து

நடக்குங் கதிர்பொற் பரிசிலா
நகுவெண் பிறைகைத் தோணியதா
நாண்மீன் பரப்புச் சிறுமிதப்பா
நாப்பண் மிதப்ப நாற்கோட்டுக்

கடக்குஞ் சரத்தின் மதிநதியுங்
கங்கா நதியு மெதிர்கொள்ளக்
ககன வெளியுங் கற்பகப்பூங்
காடுங் கடந்து கடல்சுருங்க

மடுக்குந் திரைத்தண் டுறைவையை
வளநாட் டரசே வருகவே
மலையத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே. 6

கண்ணந் திமிர்ந்து தேனருவி
துளைந்தா டறுகாற் றும்பிபசுந்
தோட்டுக் கதவந்திறப்ப மலர்த்
தோகை குடிபுக் கோகைசெயுந்

தண்ணங் கமலக் கோயில்பல
சமைத்த மருதத் தச்சன்முழு
தாற்றுக் கமுகு நாற்றியிடுந்
தடங்கா வணப்பந் தரில்வீக்கும்

விண்ணம் பொதிந்த மேகபடா
மிசைத்தூக் கியம்பன் மணிக்கொத்து
விரிந்தா லெனக்கா னிமிர்ந்துதலை
விரியுங் குலைநெற் கற்றைபல

வண்ணம் பொலியும் பண்ணைவயன்
மதுரைக் கரசே வருகவே
மலையத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே. 7

தகரக் குழலி னறையுநறை
தருதீம் புகையுந் திசைக்களிற்றின்
றடக்கை நாசிப் புழைமடுப்பத்
தளருஞ் சிறுநுண் மருங்குல்பெருஞ்

சிகரக் களபப் பொம்மன்முலைத்
தெய்வ மகளிர் புடையிரட்டுஞ்
செங்கைக் கவரி முகந்தெறியுஞ்
சிறுகாற் கொசிந்து குடிவாங்க

முகரக் களிவண் டடைகிடக்கு
முளரிக் கொடிக்குங் கலைக்கொடிக்கு
முருந்து முறுவல் விருந்திடுபுன்
மூர னெடுவெண் ணிலவெறிப்ப

மகரக் கருங்கட் செங்கனிவாய்
மடமான் கன்று வருகவே
மலையத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே. 8

தொடுக்குங் கடவுட் பழம்பாடற்
றொடையின் பயனே நறைபழுத்த
துறைத்தீந் தமிழி னொழுகுநறுஞ்
சுவையே யகந்தைக் கிழங்கையகழ்ந்

தெடுக்கும் தொழும்ப ருளக்கோயிற்
கேற்றும் விளக்கே வளர்சிமய
விமயப் பொருப்பில் விளையாடு
மிளமென் பிடியே யெறிதரங்கம்

உடுக்கும் புவனங் கடந்துநின்ற
வொருவன் றிருவுள் ளத்திலழ
கொழுக வெழுதிப் பார்த்திருக்கு
முயிறோ வியமே மதுகரம்வாய்

மடுக்குங் குழற்கா டேந்துமிள
வஞ்சிக்கொடியே வருகவே
மலையத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே. 9

பெருந்தே னிறைக்கு நறைக்கூந்தற்
பிடியே வருக முழுஞானப்
பெருக்கே வருக பிறைமௌலிப்
பெம்மான் முக்கட் சுடர்க்கிடுநல்

விருந்தே வருக மும்முதற்கும்
வித்தே வருக வித்தின்றி
விளைக்கும் பரமா னந்தத்தின்
விளைவே வருக பழமறையின்

குருந்தே வருக வருள்பழுத்த
கொம்பே வருக திருக்கடைக்கண்
கொழித்த கருணைப் பெருவெள்ளங்
குடைவார் பிறவிப் பெரும்பிணிக்கோர்

மருந்தே வருக பசுங்குதலை
மழலைக் கிளியே வருகவே
மலையத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே. 10

வருகைப் பருவம் முற்றிற்று

7-வது அம்புலிப் பருவம்

கண்டுபடு குதலைப் பசுங்கிளி யிவட்கொரு
கலாபேத மென்னநின்னைக்
கலைமறைகண் முறையிடுவ கண்டோ வலாதொண்
கலாநிதி யெனத்தெரிந்தோ

வண்டுபடு தெரியற் றிருத்தாதை யார்மரபின்
வழிமுத லெனக்குறித்தோ
வளர்சடை முடிக்கெந்தை தண்ணறுங் கண்ணியா
வைத்தது கடைப்பிடித்தோ

குண்டுபடு பாற்கடல் வருந்திருச் சேடியொடு
கூடப் பிறந்தோர்ந்தோ
கோமாட்டி யிவணின்னை வம்மெனக் கொம்மெனக்
கூவிடப் பெற்றாயுனக்

கண்டுபடு சீரிதன் றாதலா லிவளுட
னம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுட
னம்புலீ யாடவாவே. 1

குலத்தொடு தெய்வக் குழாம்பிழிந் தூற்றிக்
குடித்துச் சுவைத்துமிழ்ந்த
கோதென்று மழல்விடங் கொப்புளிக் கின்றவிரு
கோளினுச் சிட்டமென்றும்

கலைத்தோடு மூடிக் களங்கம் பொதிந்திட்ட
கயரோகி யென்றுமொருநாள்
கண்கொண்டு பார்க்கவுங் கடவதன் றெனவும்
கடற்புவி யெடுத்த்திகழவிட்

புலத்தோரு முடுமீன் கணத்தோடு மோடுநின்
போல்வார்க்கு மாபாதகம்
போக்குமித் தலமலது புகலில்லை காண்மிசைப்
பொங்குபுனல் கற்பகக்கா

டலைத்தோடு வையைத் துறைப்படி மடப்பிடியொ
டம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுட
னம்புலீ யாடவாவே. 2

கீற்றுமதி யெனநிலவு தோற்றுபரு வத்திலொளி
கிளர்நுதற் செவ்விவவ்விக்
கெண்டைத் தடங்கணா ரெருவிட் டிறைஞ்சக்
கிடந்தது முடைந்தமுதம்விண்

டூற்றுபுது வெண்கலை யுடுத்துமுழு மதியென
வுதித்தவமை யத்துமம்மை
யொண்முகத் தொழுகுதிரு வழகைக் கவர்ந்துகொண்
டோ டினது நிற்கமற்றை

மாற்றவ ளொடுங் கேள்வர் மௌலியி லுறைந்தது
மறைந்துனை யழைத்த பொழுதே
மற்றிவள் பெருங்கருணை சொற்றிடக் கடவதோ
மண்முழுதும் விம்முபுயம் வைத்

தாற்றுமுடி யரசுதவு மரசிளங் குமரியுட
னம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுட
னம்புலீ யாடவாவே. 3

விண்டலம் பொலியப் பொலிந்திடுதி யேலுனது
வெம்பணிப் பகை விழுங்கி
விக்கிடக் கக்கிடத் தொக்கிடர்ப் படுதிவெயில்
விரியுஞ் சுடர்ப் பரிதியின்

மண்டலம் புக்கனை யிருத்தியெனி னொன்ளொளி
மழுங்கிட வழுங்கிடுதிபொன்
வளர்சடைக் காட்டெந்தை வைத்திடப் பெறுதியேன்
மாகணஞ் சுற்றவச்சங்

கொண்டுகண் டுஞ்சா திருப்பது மருப்பொங்கு
கோதையிவள் சீறடிகணின்
குடர் குழம்பிடவே குமைப்பதும் பெறுதியெங்
கோமாட்டி பாலடைந்தால்

அண்டபுகி ரண்டமு மகண்டமும் பெறுதியா
லம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுட
னம்புலீ யாடவாவே. 4

எண்ணில்பல புவனப்பெருந் தட்டை யூடுருவி
யிவள்பெரும் புகழ் நெடுநிலா
எங்கணு நிறைந்திடுவ தங்கதனின் மெள்ளநீ
யெள்ளளவு மொண்டுகொண்டு

வெண்ணிலவு பொழிவது கிடைத்தனை மடுத்திவள்
விழிக்கடை கொழித்த கருணை
வெள்ளந் திளைத்தாடு பெற்றியாற் றண்ணளி
விளைப்பதும் பெற்றனை கொலாம்

மண்ணிலொண் பைங்கூழ் வளர்ப்பது னிடத்தம்மை
வைத்திடுஞ் சத்தியேகாண்
மற்றொரு சுதந்திர நினைக்கென விலைகலை
மதிக்கடவு ணீயுமுணர்வாய்

அண்ணலங் களியானை யரசர்கோ மகளுட
னம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுட
னம்புலீ யாடவாவே. 5

முன்பும்ப ரரசுசெய் பெரும்பாவ முங்கோப
மூரிமாத் தொடர் சாபமும்
மும்மைத் தமிழ்செழியன் வெப்பொடு கொடுங்கூனு
மோசித்த வித்தலத்தின்

றன்பெருந் தன்மையை யுணர்ந்திலை கொல் சிவாராச
தானியாய்ச் சீவன்முத்தித்
தலமுமாய்த் துவாதசாந் தத்தலமு மானதித்
தலமித் தலத்திடையேல்

மன்பெருங் குரவர் பிழைத்த பாவமுமற்றை
மாமடிகளிடு சாபமும்
வளரிளம் பருவத்து நரைதிரையு முதிர்கூனு
மாற்றிடப் பெறுதிகண்டாய்

அன்பரென் புருகக் கசிந்திடு பசுந்தேனொ
டம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுட
னம்புலீ யாடவாவே. 6

கும்பஞ் சுமந்தமத வெள்ளநீர் கொட்டுங்
கொடுங்களி றிடும்போர்வையான்
குடிலகோ டீரத் திருந்துகொண் டந்நலார்
கொய்தளிர்க் கைவருடவுஞ்

செம்பஞ் சுறுத்தவும் பதைபதைத் தாரழற்
சிகையெனக் கொப்புளிக்குஞ்
சீறடிகள் கன்றிச் சிவந்திட செய்வதுந்
திருவுளத் தடையாது பொற்

றம்பஞ் சுமந்தீன்ற மானுட விலங்கின்
தனிப்புதல்வனுக்கு வட்டத்
தண்குடை நிழற்றுநினை வம்மென வழைத்தன
டழைத்திடு கழைக் கரும்பொன்

றம்பஞ் சுடன்கொண்ட மகரக் கொடிக்கொடியொ
டம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுட
னம்புலீ யாடவாவே. 7

துளிதூங்கு தெள்ளமுத வெள்ளருவி பொழியுநின்
றொன்மரபு தழையவந்து
தோன்றிடுங் கௌரியர் குலக்கொழுந்தைக்கண்டு
துணைவிழியு மனமுநின்று

களிதூங்க வளவளாய் வாழாம லுண்ணமுது
கலையொடு மிழந்துவெறுமட்
கலத்திடு புதுக்கூ ழினுக்கிரவு பூண்டொரு
களங்கம்வைத் தாயிதுவலால்

ஒளிதூங்கு தெளிவிசும் பினினின்னொ டொத்தவ
னொருத்தன் கரத்தின் வாரி
உண்டொதுக் கியமிச்சி நள்ளிருளி லள்ளியுண்
டோ டுகின் றாயென் செய்தாய்

அளிதூங்கு ஞிமிறெழுந் தார்க்குங் குழற்றிருவொ
டம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுட
னம்புலீ யாடவாவே. 8

மழைகொந் தளக்கோதை வம்மினென் றளவினீ
வந்திலை யெனக் கடுகலும்
வாண்முகச் செவ்விக் குடைந்தொதுங் கினவனெதிர்
வரவொல்கி யோபணிகள்கோ

ளிழைக்குங்கொல் பின்றொடர்ந் தெனவஞ்சி யோதாழ்த்
திருந்தனன் போலுமெனயா
மித்துணையு மொருவாறு தப்புவித் தோம்வெகுளி
லினியொரு பிழைப்பில்லைகாண்

டழைக்குந் துகிற்கொடி முகிற்கொடி திரைத்துமேற்
றலம்வளர் நகிற்கொடிகளைத்
தாழ்குழலு நீவிநுதல் வெயர்வுந் துடைதம்மை
சமயமிது வென்றலுவலிட்

டழைக்குந் தடம்புரிசை மதுரைத் துரைப்பெணுட
னம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுட
னம்புலீ யாடவாவே. 9

ஏடகத் தெழுதாத வேதச் சிரத்தர
சிருக்குமிவள் சீறடிகணின்
னிதயத் தடத்தும் பொலிந்தவர் திருவுளத்
தெண்ணியன் றேகபடமா

நாடகத் தைந்தொழி னடிக்கும் பிரான்றெய்வ
நதியொடு முடித்தல் பெற்றாய்
நங்கையிவ டிருவுள மகிழ்ச்சிபெறி லிதுபோலொர்
நற்றவப் பேறில்லைகாண்

மாடகக் கடைதிரித் தின்னரம் பார்த்துகிர்
வடிம்புதை வருமந்நலார்
மகரயாழ் மழலைக்கு மரவங்க ணுண்டுகில்
வழங்கக் கொழுங்கோங்குதூங்

காடகப் பொற்கிழி யவிழ்க்குமது ரைதிருவொ
டம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுட
னம்புலீ யாடவாவே. 10

அம்புலிப் பருவம் முற்றிற்று

8-வது அம்மானைப் பருவம்

கரைக்குங் கடாமிரு கவுட்குட முடைந்தூற்று
களிறுபெரு வயிறுதூர்ப்பக்
கவளந் திரட்டிக் கொடுப்பதென வுஞ்சூழ்ந்தொர்
கலைமதிக் கலசவமுதுக்

கிரைக்கும் பெருந்தேவர் புன்கண் டுடைத்திட
வெடுத்தமுத கலசம் வெவ்வே
றீந்திடுவ தெனவுமுழு முத்திட் டிழைத்திட்ட
வெறிபந்தின் நிரையென்னவும்

விரைக்குந் தளிர்க்கைக் கொழுந்தா மரைத்துஞ்சி
மீதெழுந் தார்த்தபிள்ளை
வெள்ளோதி மத்திரளி தெனவுந் கரும்பாறை
மீமிசைச் செந்சாந்துவைத்

தரைக்குந்திரைக்கைவெள் ளருவிவை யைத்துறைவி
யம்மானை யாடியருளே
ஆகங் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்
ணம்மானை யாடியருளே. 1

திங்கட் கொழுந்தைக் கொழுந்துபடு படர்சடைச்
செருகுதிரு மணவாளன்மேற்
செழுமணப் பந்தரி லெடுத்தெறியு மமுதவெண்
டிரளையிற் புரளுமறுகாற்

பைங்கட் சுரும்பென விசும்பிற் படர்ந்தெழும்
பனிமதி மிசைத்தாவிடும்
பருவமட மானெனவெ னம்மனைநி னம்மனைப்
படைவிழிக் கயல்பாய்ந்தெழு

வெங்கட் கடுங்கொலைய வேழக்கு ழாமிதென
மேகக் குழாத்தைமுட்டி
விளையாடு மழகளிறு கடைவாய் குதட்டமுகை
விண்டவம் பைந்துகோத்த

அங்கட் கரும்பேந்து மபிடேக வல்லிதிரு
வம்மானை யாடியருளே
ஆகங் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்
ணம்மானை யாடியருளே. 2

கள்ளூறு கஞ்சக் கரத்தூறு சேயொளி
கலப்பச் சிவப்பூறியும்
கருணைப் பெருக்கூற வமுதூறு பார்வைக்
கடைக்கட் கறுப்பூறியும்

நள்ளூறு மறுவூ றகற்றுமுக மதியில்வெண்
ணகையூறு நிலவூறியும்
நற்றாரள வம்மனையொர் சிற்குணத் தினைமூன்று
நற்குணங் கதுவல் காட்ட

உள்ளூறு களிதுளும் பக்குரவ ரிருவீரு
முற்றிடு துவாத சாந்தத்
தொருபெரு வெளிக்கே விழித்துறங் குந்தொண்ட
ருழுவலன் பென்புருகநெக்

கள்ளூற வுள்ளே கசிந்தூறு பைந்தேற
லம்மானை யாடியருளே
ஆகங் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்
ணம்மானை யாடியருளே. 3

குலைபட்ட காந்தட் டளிர்க்கையிற் செம்மணி
குயின்றவம் மனைநித்திலங்
கோத்தவம் மனைமுன் செலப்பின் செலுந்தன்மை
கோகனக மனையாட்டிபாற்

கலைபட்ட வெண்சுடர்க் கடவுடோ ய்ந் தேகவது
கண்டுகொண் டேபுழுங்குங்
காய்கதிர்க் கடவுளும் பின்றொடர்வ தேய்ப்பக்
கறங்கருவி தூங்குவோங்கு

மலைப்பட்ட வாரமும் வயிரமும் பிறவுமா
மாமணித் திரளைவாரி
மறிதிரைக் கையா லெடுத்தெறிய நாற்கோட்டு
மதகளிறு பிளிறியோடும்

அலைபட்ட வையைத் துறைச்சிறை யனப்பேடை
யம்மானை யாடியருளே
ஆகங் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்
ணம்மானை யாடியருளே. 4

தமரான நின்றுணைச் சேடியரி லொருசிலர்
தடக்கையி நெடுத்தாடுநின்
றரளவம் மனைபிடித் தெதிர்வீசி வீசியிட
சாரிவல சாரிதிரியா

நிமிராமு னம்மனையொ ராயிர மெடுத்தெறிய
நிரைநிரைய தாய்ககனமேல்
நிற்கின்ற தம்மைநீ பெற்றவகி லாண்டமு
நிரைத்துவைத் ததுகடுப்ப

இமிரா வரிச்சுரும் பார்த்தெழப் பொழிலூ
டெழுந்தபைந் தாதுல கெலாம்
இருள்செயச் செய்துநின் சேனா பராகமெனு
மேக்கமள காபுரிக்கும்

அமரா மதிக்குஞ்செய் மதுரா புரித்தலைவி
யம்மானை யாடியருளே
ஆகங் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்
ணம்மானை யாடியருளே. 5

உயிரா யிருக்கின்ற சேடியரின் மலர்மீ
துதித்தவ ளெதிர்த்துநின்னோ
டொட்டியெட் டிப்பிடித் திட்டவம் மனைதேடி
யோடியா டித்திரியநீ

பெயரா திருந்துவிளை யாடுவது கண்டெந்தை
பிறைமுடி துளக்க முடிமேற்
பெருகுசுர கங்கைநுரை பொங்கலம் மானையப்
பெண்கொடியு மாடன்மான

வெயரா மனம்புழுங் கிடுமமரர் தச்சனும்
வியப்பச் செயுந்தவளமா
மேடையுந் தண்டரள மாடமுந் தெண்ணிலா
வீசத் திசைக்களிறெலாம்

அயிரா வதத்தினை நிகர்க்குமது ரைத்தலைவி
யம்மானை யாடியருளே
ஆகங் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்
ணம்மானை யாடியருளே. 6

வேறு

முத்தம ழுத்திய வம்மனை கைம்மலர்
முளரிம ணங்கமழ
மொய்குழல் வண்டுநின் மைவிழி வண்டின்
முயங்கி மயங்கியிடக்

கொத்து மணித்திர ளிற்செயு மம்மனை
குயிலின்மி ழற்றியநின்
குழலினி சைக்குரு கிப்பனி தூங்கு
குறுந்துளி சிந்தியிட

வித்துரு மத்திலி ழைத்தவு நின்கை
விரற்பவ ளத்தளிரின்
விளைதரு மொள்ளொளி திருடப் போவது
மீள்வது மாய்த்திரிய

அத்தன் மனத்தெழு தியவுயி ரோவிய
மாடுக வம்மானையே
அழகு தழைந்தகல் யாணசவுந்தரி
யாடுக வம்மானையே. 7

கிளநில வுமிழ்பரு முத்தின் கோவை
யெடுத்தவர் திருமார்புக்
கிடுவ கடுப்பவு மப்பரி சேபல
மணியி னியற்றியிடும்

வளரொளி விம்மிய வம்மனை செல்வது
வானவி லொத்திடவும்
மனனெக் குருகப் பரமா னந்த
மடுத்த திருத்தொண்டர்க்

களிகனி யத்திரு வருள்கனி யுங்கனி
யாடுக வம்மானையே
அழகு தழைந்தகல் யாண சவுந்தரி
யாடுக வம்மானையே. 8

கைம்மல ரிற்பொலி கதிர்முத் தம்மனை
நகைமுத் தொளிதோயக்
கண்டவர் நிற்கப் பிறர்சிலர் செங்கைக்
கமலச் சுடர்கதுவச்

செம்மணி யிற்செய் திழைத்தன வெனவுஞ்
சிற்சிலர் கட்கடையின்
செவ்வியை வவ்விய பின்கரு மணியிற்
செய்தன கொல்லெனவுந்

தம்மன மொப்ப வுரைப்பன மற்றைச்
சமயத் தமைவுபெறார்
தத்தமி னின்று பிதற்றுவ பொருவத்
தனிமுதல் யாமென்பார்க்

கம்மனை யாயவர் தம்மனை யானவ
ளாடுக வம்மானையே
அழகு தழைந்தகல் யாண சவுந்தரி
யாடுக வம்மானையே. 9

ஒள்ளொளி மரகத மும்முழு நீலமு
மொண்டர ளத்திரளும்
ஒழுகொளி பொங்க விளைந்திடு மம்மனை
யொருமூன் றடைவிலெடாக்

கள்ளவிழ் கோதை விசும்புற வீசுவ
கண்ணுதல் பாற்செலநின்
கையில் வளர்த்த பசுங்கிளி யும்வளர்
காமர் கருங்குயிலும்

பிள்ளைவெ ளோதிம மும்முறை முறையாற்
பெருகிய காதலைமேற்
பேச விடுப்ப கடுப்ப வணைத்தொரு
பெடையோ டாசவனம்

அள்ளல் வயிற்றுயின் மதுரைத் துரைமக
ளாடுக வம்மானையே
அழகு தழைந்தகல் யாணசவுந்தரி
யாடுக வம்மானையே. 10

அம்மானைப் பருவம் முற்றிற்று

9-வது நீராடற் பருவம்

வளையாடு வண்கைப் பொலன்சங் கொடும்பொங்கு
மறிதிரைச் சங்கொலிட
மதரரிக் கட்கயல் வரிக்கய லொடும்புரள
மகரந்த முண்டுவண்டின்

கிளையொடு நின்றிருக் கேசபா சத்தினொடு
கிளர்சைவ லக்கொத்தெழக்
கிடையாத புதுவிருந் தெதிர்கொண்டு தத்தமிற்
கேளிர்க டழீஇக்கொண்டெனத்

தளையொடு கரையடிச் சிறுகட் பெருங்கைத்
தடக்களி றெடுத்து மற்றத்
தவளக் களிற்றினொடு முட்டவிட் டெட்டுமத
தந்தியும் பந்தடித்து

விளையாடும் வையைத் தடந்துறை குடைந்துபுது
வெள்ளநீ ராடியருளே
விடைக்கொடி யவர்கொரு கயற்கொடி கொடுத்தகொடி
வெள்ளநீ ராடியருளே. 1

நிரைபொங் கிடுஞ்செங்கை வெள்வளை களிப்பநகை
நிலவுவிரி பவளம்வெளிற
நீலக் கருங்குவளை செங்குவளை பூப்பவற
னெறிகுழற் கற்றை சரியத்

திரைபொங்கு தண்ணந் துறைகுடைந் தாடுவ
செழுந்தரங் கக்கங்கைநுண்
சிறுதிவலை யாப்பொங்கு மானந்த மாக்கட
றிளைத்தாடு கின்றதேய்ப்பக்

கரைபொங்கு மறிதிரைக் கையாற் றடம்பணைக்
கழனியிற் கன்னியாமுலைக்
களபக் குழம்பைக் கரைத்துவிட் டள்ளற்
கருஞ்சேறு செஞ்சேறதாய்

விரைபொங் கிடத்துங்க வேகவதி பொங்குபுது
வெள்ளநீ ராடியருளே
விடைக்கொடி யவர்க்கொரு கயற்கொடி கொடுத்தகொடி
வெள்ளநீ ராடியருளே. 2

பண்ணாறு கிளிமொழிப் பாவைநின் றிருமேனி
பாசொளி விரிப்ப வந்தண்
பவளக் கொடிக்காமர் பச்சிளங் கொடியதாய்ப்
பருமுத்த மரகதமாய்த்

தண்ணாறு மல்லற் றுறைச்சிறை யனங்களி
தழைக்குங் கலாமஞ்ஞைபாய்ச்
சகலமுந் நின்றிருச் சொருபமென் றோலிடுஞ்
சதுமறைப் பொருள் வெளியிடக்

கண்ணாறு குழலியர் குடக்கொங்கை பொங்குசெங்
களபமுங் கத்தூரியும்
கர்ப்புரமு மொக்கக் கரைத்தோடி வாணியுங்
காளிந்தி யுங்கங்கையாம்

விண்ணாறு மளவளாய் விளையாடு வையைபுது
வெள்ளநீ ராடியருளே
விடைக்கொடி யவர்க்கொரு கயற்கொடி கொடுத்தகொடி
வெள்ளநீ ராடியருளே. 3

தூங்குசிறை யறுகா லுறங்குகுழ னின்றுணைத்
தோழியர்கண் மெற்குங்குமந்
தோயும் பனித்துறைச் சிவிறவீ சக்குறுந்
துளியெம் மருங்குமோடி

வாங்குமலை வில்லிமார் விண்ணுறு நனைந்தவர்
வனைந்திடு திகம்பரஞ் செவ்
வண்ணமாச் செய்வதச் செவ்வான வண்ணரொடு
மஞ்சள்விளை யாடலேய்ப்பத்

தேங்குமலை யருவிநெடு நீத்தது மாசுணத்
திரள்புறஞ் சுற்றியீர்ப்பச்
சினவேழ மொன்றொரு சுழிச்சுழலன் மந்தரந்
திரைகடன் மதித்தன்மானும்

வீங்குபுனல் வையைத்தடந்துறை குடைந்துபுது
வெள்ளநீ ராடியருளே
விடைக்கொடி யவர்கொரு கயற்கொடி கொடுத்தகொடி
வெள்ளநீ ராடியருளே. 4

துளிக்கும் பனித்திவலை சிதறக் குடைந்தாடு
துறையிற் றுறைத்தமிழொடும்
தொன்மறை தெளிக்குங் கலைக்கொடி யெனுந்துணைத்
தோழீமூழ் கிப்புனன்மடுத்

தொளிக்கும் பதத்துமற் றவளென வனப்பேடை
யோடிப் பிடிப்பதம்மை
யொண்பரி புரத்தொனியு மடநடையும் வௌவின
துணர்ந்துபின் றொடர்வதேய்ப்ப

நெளிக்குந் தரங்கத் தடங்கங்கை யுடனொட்டி
நித்திலப் பந்தாடவும்
நிரைமணித் திரளின் கழங்காட வுந்தன்
னெடுத்திரைக் கையெடுத்து

விளிக்கும் பெருந்தண் டுறைக்கடவுள் வையைநெடு
வெள்ளநீ ராடியருளே
விடைக்கொடி யவர்கொரு கயற்கொடி கொடுத்தகொடி
வெள்ளநீ ராடியருளே. 5

வேறு

துங்க முலைப்பொற் குடங்கொண்டு
தூநீர்நீந்தி விளையாடுந்
துணைச்சே டியர்கண் மேற்பசும்பொற்
சுண்ண மெறிய வரச்சேந்த

அங்கண் விசும்பி னின்குழற்காட்
டறுகாற் கரும்ப ரெழுந்தார்ப்ப
தையன் றிருமே னியலம்மை
யருட்கட் சுரும்பார்த் தெழன்மானச்

செங்க ணிளைஞர் களிர்காமத்
தீமுண் டிடக்கண் டிளமகளிர்
செழுமென் குழற்கூட் டகிற்புகையாற்
றிரள்காய்க் கதலி பழுத்துநறை

பொங்கு மதுரைப் பெருமாட்டி
புதுநீ ராடி யருளுகவே
பொருநைத் துறைவன் பொற்பாவாய்
புதுநீ ராடி யருளூகவே. 6

இழியும் புனற்றண் டுறைமுன்றி
லிதுவெம் பெருமான் மண்சுமந்த
இடமென் றலர்வெண் கமலப்பெண்
ணிசைப்பக் கசிந்துள் ளுருகியிரு

விழியுஞ் சிவப்பவானந்த
வெள்ளம்பொழிந்து நின்றனையால்
மீண்டும் பெருக விடுத்தவர்கோர்
வேலை யிடுதன் மிகையன்றே

பிழியு நறைக்கற் பகமலர்ந்த
பிரச மலர்பூந் துகண்மூழ்கும்
பிறைக்கோட் டயிரா வதங்கூந்தற்
பிடியோ டாடத் தேனருவி

பொழியும் பொழிற்கூ டலிற்பொலிவாய்
புதுநீ ராடி யருளுகவே
பொருநைத் துறைவன் பொற்பாவாய்
புதுநீ ராடி யருளூகவே. 7

மறிக்குந் திரைத்தண் புனல்வையை
வண்ட லிடுமண் கூடைகட்டி
வாரிச் சுமந்தோர்க் கம்மைதுணை
மணிப்பொற் குடத்திற் கரைத்தூற்றும்

வெறிக்குங் குமச்சே றெக்கரிடும்
விரைப்பூந் துறைமண் போலொருத்தி
வெண்பிட் டிடவு மடித்தொருவன்
வேலை கொளவும் வேண்டுமெனக்

குறிக்கு மிடத்திற் றடந்தூநீர்
குடையப் பெறினக் கங்கைதிருக்
கோடீ ரத்துக் குடியிருப்புங்
கூடா போலும் பொலன்குவட்டுப்

பொறிக்குஞ் சுறவக் கொடியுயர்ததாய்
புதுநீ ராடி யருளுகவே
பொருநைத் துறைவன் பொற்பாவாய்
புதுநீ ராடி யருளூகவே. 8

வேறு

சொற்கொடி யோடு மலர்க்கொடி கொய்து
தொடுத்த விரைத்தொடையும்
சுந்தரி தீட்டிய சிந்துர மும்மிரு
துங்கக் கொங்கைகளின்

விற்கொடி கோட்டிய குங்கும முங்குடை
வெள்ளங் கொள்ளைகொள
வெளியே கண்டுநின் வடிவழ கையன்
விழிக்கு விருந்து செய

விற்கொடி யோடு கயற்கொடி வீர
னெடுத்த கருப்புவிலும்
இந்திர தனுவும் வணங்க வணங்கு
மிணைப்புரு வக்கொடிசேர்

பொற்கொடி யிமய மடக்கொடி வையைப்
புதுநீ ராடுகவே
பொருநைத் துறையொடு குமரித் துறையவள்
புதுநீ ராடுகவே. 9

கொள்ளைவெ ளருவி படிந்திடு மிமயக்
கூந்தன் மடப்பிடிபோல்
கொற்கைத் துறையிற் சிறைவிரி யப்புனல்
குடையு மனப்பெடைபோல்

தெள்ளமு தக்கட னடுவிற் றோன்று
செழுங்கம லக்குயில்போல்
தெய்வக் கங்கைத் திரையூ டெழுமொரு
செம்பவ ளக்கொடிபோல்

கள்ளவிழ் கோதையர் குழலிற் குழலிசை
கற்றுப் பொற்றருவிற்
களிநற வுண்ட மடப்பெடையோடு
கலந்து முயங்கிவரிப்

புள்ளுறை பூம்பொழின் மதுரைத் துரைமகள்
புதுநீ ராடுகவே
பொருநைத் துறையொடு குமரித் துறையவள்
புதுநீ ராடுகவே. 10

நீராடற் பருவம் முற்றிற்று

10-வது ஊசற் பருவம்

ஒள்ளொளிய பவளக் கொழுங்கான் மிசைப்பொங்கு
மொழுகொளிய வயிரவிட்டத்
தூற்றுஞ் செழுந்தண் ணிலாக்கால் விழுந்தனைய
வொண்டரள வடம்வீக்கியே

அள்ளிட வழிந்துசெற் றொளிதுளும் புங்கிரண
வருணரந் நப்பலகைபுக்
காடுநின் றோற்றமப் பரிதிமண் டலம்வள
ரரும்பெருஞ் சுடரையேய்ப்பத்

தெள்ளுசுவை யமுதங் கனிந்தவா னந்தத்
திரைகடன் மடித்துழக்குஞ்
செல்வச் செருக்கர்கண் மனக்கமல நெக்கபூஞ்
சேர்க்கையிற் பழைய பாடற்

புள்ளொலி யெழக்குடி புகுந்தசுந் தரவல்லி
பொன்னூச லாடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே. 1

விற்பொலிய நிலவுபொழி வெண்ணித் திலம்பூண்டு
விழுதுபட மழகதிர்விடும்
வெண்டாள வூசலின் மிசைப்பொலிதல் புண்டரிக
வீட்டில் பொலிந்துமதுரச்

சொற்பொலி பழம்பாடல் சொல்லுகின் றவளுநின்
சொருபமென் பதுமிளநிலாத்
தூற்றுமதி மண்டலத் தமுதமா யம்மைநீ
தோன்றுகின் றதும்விரிப்ப

எற்பொலிய வொழுகுமுழு மாணிக்க மணிமுகப்
பேறிமழை முகிறவழ்வதவ்
வெறிசுடர்க் கடவுடிரு மடியிலவன் மடமக
ளிருந்துவிளை யாடலேய்க்கும்

பொற்புரிசை மதுரா புரிப்பொலி திருப்பாவை
பொன்னூச லாடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே. 2

உருகிய பசும்பொன் னசும்பவெயில் வீசுபொன்
னூசலை யுதைந்தாடலும்
ஒண்டளி ரடிச்சுவ டுறப்பெறு மசோகுநற
வொழுகுமலர் பூத்துதிர்வதுன்

றிருமுனுரு வங்கரந் தெந்தையார் நிற்பது
தெரிந்திட நமக்கிதுவெனாச்
செஞ்சிலைக் கள்வனொரு வன்றொடை மடக்காது
தெரிகணைகள் சொரிவதேய்ப்ப

எரிமணி குயின்றபொற் செய்குன்று மழகதி
ரெரிப்பவெழு செஞ்சோதியூ
டிளமதி யிமைப்பதுன் றிருமுகச் செல்விவேட்
டெழுநாத் தலைத்தவமவன்

புரிவது கடுக்குமது ராபுரி மடக்கிள்ளை
பொன்னூச லாடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே. 3

கங்கைமுடி மகிழ்நர்திரு வுளமசைந் தாடக்
கலந்தாடு பொன்னூசலக்
கடவுடிரு நோக்கத்து நெக்குருகி யிடநின்
கடைக்கணோக் கத்துமற்றச்

செங்கண்விடை யவர்மனமு மொக்கக் கரைந்துருகு
செய்கையவர் சித்தமே பொற்
றிருவூசலாவிருந் தாடுகின் றாயெனுஞ்
செய்தியை யெடுத்துரைப்ப

அங்கணெடு நிலம்விடர் படக்கிழித் தோடுவே
ரடியிற் பழுத்த பலவின்
அளிபொற் சுளைக்குடக் கனியுடைந் தூற்றதே
னருவிபில மேழுமுட்டிப்

பொங்கிவழி பொழின்மதுர மதுரைநா யகிதிருப்
பொன்னூச லாடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே. 4

சேர்க்குஞ் சுவைப்பாட லமிதொழுக வொழுகுபொற்
றிருவூசல் பாடியாடச்
சிவபிரான் றிருமுடி யசைப்பமுடி மேற்பொங்கு
செங்கணா வரசகிலம்வைத்

தார்க்கும் பணாடவி யசைப்பச் சராசரமு
மசைகின்ற தம்மனையசைந்
தாடலா லண்டமு மகண்டபகி ரண்டமு
மசைந்தாடு கின்ற தேய்ப்பக்

கார்கொந் தளக்கோதை மடவியர் குழற்கூட்டு
கமழ்நறும் புகைவிண்மிசைக்
கைபரந் தெழுவதுரு மாறிரவி மண்டலங்
கைக்கொள விருப்படலவான்

போர்க்கின்ற தொக்குமது ராபுரி மடக்கிள்ளை
பொன்னூச லாடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே. 5

தேர்க்கோல மொடுநின் றிருக்கோல முங்கண்டு
சிந்தனை புழுங்கு கோபத்
தீயவிய மூண்டெழுங் காமா னலங்கான்ற
சிகையென வெழுந்துபொங்குந்

தார்க்கோல வேணியர்த முள்ளமென வேபொற்
றடஞ்சிலையு முருகியோடத்
தண்மதி முடித்ததும் வெள்விடைக் கொண்மணி
தரித்ததும் விருத்தமாகக்

கார்க்கோல நீலக் கருங்களத் தோடொருவர்
செங்களத் தேற்றலமரக்
கட்கணை துரக்குங் கரும்புருவ வில்லொடொரு
கைவிற் குனித்துநின்ற

போர்க்கோல மேதிரு மணக்கோல மானபெண்
பொன்னூச லாடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே. 6

குழியும் பசுங்கண் முசுக்கலை வெரீஇச்சிறு
குறும்பலவி னெடியபாரக்
கொம்பொடி படத்தூங்கு முட்புறக் கனியின்
குடங்கொண்டு நீந்தன் மடைவாய்

வழியுங் கொழுந்தே னுவட்டெழு தடங்காவின்
வள்ளுகிர்க் கருவிரற்கூன்
மந்திக ளிர்ந்தேகும் விசையினில் விசைந்தெழு
மரக்கோடு பாயவயிறு

கிழியுங் கலைத்திங்க ளமுதருவி தூங்குவ
கிளைத்துவண் டுழுபைந்துழாய்க்
கேசவன் கால்வீச வண்டகோ ளகைமுகடு
கீண்டுவெள் ளருவிபொங்கிப்

பொழியுந் திறத்தினை நிகர்க்குமது ரைத்தலைவி
பொன்னூச லாடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே. 7

ஒல்குங் கொடிச்சிறு மருங்கிற் கிரங்கிமெல்
லோதிவண் டார்ந்தெழப்பொன்
னூசலை யுதைந்தாடு மளவின்மலர் மகளம்மை
யுள்ளடிக் கூன்பிறைதழீஇ

மல்குஞ் சுவட்டினை வலம்புரிக் கீற்றிதுகொல்
வாணியென் றசதியாடி
மணிமுறுவல் கோட்டநின் வணங்கா முடிக்கொரு
வணக்கநெடு நாண்வழங்கப்

பில்குங் குறும்பனிக் கூதிர்க் குடைந்தெனப்
பிரசநா றைம்பாற்கிளம்
பேதையர்க ளூட்டும் கொழும்புகை மடுத்துமென்
பெநடெயொடு வரிச்சுரும்பர்

புல்குந் தடம்பணை யுடுத்தமது ரைத்தலைவி
பொன்னூச லாடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே. 8

கொன்செய்த செழுமணித் திருவூச லரமகளிர்
கொண்டாட வாடுந்தொறுங்
குறுமுறுவ னெடுநில வருந்துஞ் சகோரமாய்க்
கூந்தலங் கற்றை சுற்றுந்

தென்செய்த மழலைச் சுரும்பராய் மங்கைநின்
செங்கைப் பசுங்கிள்ளையாய்த்
தேவதே வன்பொலிவ றெவ்வுருவு மாமவன்
றிருவுருவின் முறைதெரிப்ப

மின்செய்த சாயலவர் மேற்றலத் தாடிய
விரைப்புனலி னருவி குடையும்
வெள்ளானை குங்குமச் செஞ்சேறு நாறமட
மென்பிடியை யஞ்சிநிற்கும்

பொன்செய்த மாடமலி கூடற் பெருஞ்செல்வி
பொன்னூச லாடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே. 9

இருபதுமு மென்குரற் கிண்கிணியு முறையிட்
டிரைந்திடு மரிச்சிலம்பும்
இறுமிறு மருங்கென் றிரங்குமே கலையும்பொ
னெழுதும்செம் பட்டு வீக்குந்

திருவிடையு முடைதார மும்மொட் டியாணமுஞ்
செங்கைப் பசுங்கிள்ளையுந்
திருமுலைத் தரளவுத் தரியமும் மங்கலத்
திருநாணு மழகொழுகநின்

றருள்பொழியு மதிமுகமு முகமதியி னெடுநில
வரும்புகுறு நகையுஞான
ஆனந்த மாக்கடல் குடைந்துகுழை மகரத்தொ
டமராடு மோடரிக்கட்

பொருகயலும் வடிவழகு பூத்தசுந் தரவல்லி
பொன்னூச லாடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே. 10

ஊசற் பருவம் முற்றிற்று

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முற்றிற்று