உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பிள்ளைத்தமிழ் நூல்கள் |
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயா சாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். இது பிள்ளைப் பாட்டு எனவும் பிள்ளைக் கவி எனவும் வழங்கப்படும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு பால்களிலும் பாடப்படுவதுண்டு. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்துக் காண்பர். ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடப்படுவது வழக்கு. ஆண்பால் பிள்ளைத்தமிழ்க்குரிய பருவங்கள் இவை, பெண்பால் பிள்ளைத்தமிழ்க்குரிய பருவங்கள் இவை என்பனவும் முன்பே குறிக்கப்பட்டன. ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, ஆகியவற்றைப் பொதுவாகக் கொண்டு இறுதியிலுள்ள மூன்று பருவங்களுக்கு ஈடாகச் சிற்றில் இழைத்தல், சிறு சோறாக்கல், குழமகன், ஊசல், காமவேள்நோன்பு முதலியவற்றுள் எவையேனும் மூன்றைப் பெற்று வரும் ஆயினும் பெரும்பாலும் நீராடல் அல்லது கழங்கு, அம்மானை, ஊசல் எனும் பருவங்களே அதிகம் இடம் பெறுகின்றன. இதனை
" சாற்றிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி மாற்றாரிய முத்தமே வாரானை - போற்றாரிய அம்புலியே யாய்த்த சிறுபறையே சிற்றிலே பம்புசிறு தேரோடும் பத்து " என்ற வெண்பாப் பாட்டியல் நூற்பாவாலும் (பாடல் 7) ,
"சிற்றில் இழைத்தல் சிறுசோறாக்கல் பொற்பமர் குழமகன் புனைமணி ஊசல் ஆண்டு ஈறாறதில் இழிற்காமன் நோன்போடு வேண்டுதல் தானுள விளம்பினர் புலவர்" என்ற பன்னிரு பாட்டியல் நூற்பாவாலும் (பாடல் 105)
" பின்னைய மூன்றும் பேதையர்க் காகா ஆடுங் கழங்கு அம்மானை ஊசல் பாடுங் கவியால் பகுத்து வகுப்புடன் அகவல் விருத்தத் தாள் கிளையளவாம்" (பாடல்.47) என்றஇலக்கண விளக்கப் பாட்டியல் நூற்பாவாலும் அறியலாம். பிள்ளைத்தமிழ் பத்து பருவங்களில் தான் அமைய வேண்டும் என்பது வரையறை ஆகும். பெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்கள் இவ்வாறே பாடப்ப்பட்டுள்ளன. ஆயினும் ஆண்டாள் பிள்ளைத்தமிழ் 11 பருவங்களையும், தில்லை சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழ் பன்னிரண்டு பருவங்கள் கொண்டதாகவும் பாடப்பட்டுள்ளன. தமிழர் பண்பாட்டில் முதல் 2 திங்கள் குழந்தையை வெளியில் கொண்டு வர மாட்டார்கள். எனவே, பிள்ளைத்தமிழ், 3-ம் திங்கள் முதல் பாமாலைகளால் தொடுக்கப்படும். 3-ம் திங்கள்: காப்பு 5-ம் திங்கள்: செங்கீரை 7-ம் திங்கள்: தாலாட்டு 9-ம் திங்கள்: சப்பாணி 11-ம் திங்கள்: முத்தம் 13-ம் திங்கள்: வருகை 15-ம் திங்கள்: அம்புலி 17-ம் திங்கள்: சிற்றில் (ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது) / நீராடல் (பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது) 19-ம் திங்கள்: சிறுபறை (ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது) / அம்மானை (பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது) 21-ம் திங்கள்: சிறுதேர் (ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது) / ஊசல் (பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது) பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் பத்துப் பருவங்களையும் பாடும்போது பாடல்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும் எனவும், இரட்டிதுப் பாடினால் ஓசை நீண்டு பாட வேண்டும் என்பது வரையறை ஆகும். ஆனாலும் இவ்வரையறை மீறி பத்துப் பருவத்திற்கான பாடல் எண்ணிக்கைக் குறைத்தும் கூட்டியும் பாடியுள்ள நிலை அறியப்படுகிறது. சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் - ஒவ்வொரு பருவத்திலும் 7 பாடல்கள் கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்- ஒவ்வொரு பருவத்திலும் 5 பாடல்கள் பழனிப் பிள்ளைத்தமிழ்- - ஒவ்வொரு பருவத்திலும் 3 பாடல்கள் திருஞான சம்பந்தர் பிள்ளைத்தமிழ்- ஒவ்வொரு பருவத்திலும் 1 பாடல்கள் திருநாவுக்கரசர் பிள்ளைத்தமிழ்- ஒவ்வொரு பருவத்திலும் 1 பாடல்கள ஆண்டாள் பிள்ளைத்தமிழ்- ஒவ்வொரு பருவத்திலும் மாறுபட்ட எண்ணிக்கையுள்ள பாடல்கள். இலங்கையில் கதிர்காமத் தலத்திலுள்ள முருகன் மேல் இயற்றப்பட்ட கதிர்காமப் பிள்ளைத்தமிழ் என்ற நூல் உண்டு. அதனை இயற்றியவர் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவங். கருணாலய பாண்டியன் என்னும் புலவர். அவரது பிள்ளைத்தமிழ் நூலில் செந்தமிழ்க் காப்பு, செங்கீரை, மொழிபயில் பருவம், உண வூட்டல், தாலாட்டல், சப்பாணிகொட்டல், முத்தம் தருதல், வருகை, நிலாவழைத்தல், சிறுபறைமுழக்கல், சிற்றில் சிதைத்தல், சிறுதேர் உருட்டல், பூணணிதல், உடைவாள் செறித்தல் என 14 பருவங்கள் காணப்படுகின்றன. மேலும் காப்புப் பருவத்தில் 4 பாக்களும், பிற எல்லாப் பருவங்களிலும் மும்மூன்று பாக்களும் ஆக மொத்தம் 43 பாக்கள் உள்ளன. பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ், பிள்ளைத்தமிழ் நூல்களுக்கு முன்னோடி. குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் தமிழில் தோன்றிய முதலாவது பிள்ளைத்தமிழ். பொதுவாக பிள்ளைத்தமிழ் நூல்கள் ஆண்பால் பிள்ளைதமிழ், பெண்பால்பிள்ளைத்தமிழ் என இருவகையிலேயே அடங்கும். ஆயினும் பிள்ளைத்தமிழ் நூல்களின் வளர்ச்சியைக் கணக்கிட உதவும் வகையில் இவை மேலும் இறைவன் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் இறைவி பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் கவிஞர் அல்லது சான்றோர் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் அரசன் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் மக்கள் தலைவர் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் என வகைப்படுத்துவர். பிள்ளைத் தமிழில், அம்புலிப்பருவம் இயற்றுவதே மிகக் கடினம் என்பார்கள். காரணம், பாட்டுடைத் தலைவன் அல்லது தலைவி யோடு நிலவை விளையாட வருமாறு அழைக்கும்போது சாம, பேத, தான, தண்டம் என்னும் நான்கு வகை உத்திகளையும் கொண்டு அதை அழைக்கவேண்டும். சாமம் என்பது இனிய சொற் களைக் கூறி யழைத்தல். பேதம் என்பது, “உனக்கும் இத் தலைவனுக்கும் இடையில் இவ்வளவு வேறுபாடுகள் உள்ளன, உன்னைவிட இவன் உயர்ந்தவன், ஆகவே விளையாட வா” என்பது. தானம் என்பது “இன்னின்ன பொருள்களைத் தருவான், வா என்றல். தண்டம் என்பது நீ வராவிட்டால் உன்னை இவ்விதமாகத் தண்டிப்பான், ஆகவே வந்துவிடு” என்று கூறுதல். ஊர்ப் பெயர்களிலும் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் உள்ளன. உதாரணமாக அந்தகக்கவி வீரராகவர் செய்யூர் பிள்ளைத்தமிழ் என்னும் நூலை எழுதியுள்ளார். சிதம்பர முனிவர் க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் என்பதை எழுதியுள்ளார். அங்கப்ப நாவலர் என்பார் பரசமய கோளரியார் பிள்ளைத்தமிழ் என்பதை எழுதினார். பரசமய கோளரியார் என்றால், பிற சமயங்களின் கொள்கைகளை எதிர்க்கும் சிங்கம் போன்றவர் என்று பொருள். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வாகடப் பிள்ளைத்தமிழ் என்னும் நூலை எழுதினார். வாகடம் என்றால் மருத்துவ நூல். ஒரு சாதிக்கே உரிய பிள்ளைத் தமிழாக செங்குந்தர் பிள்ளைத்தமிழ் என்பது அமைந்துள்ளது. தனியொருவர் பாடுவதாக இல்லாமல், தொகுப்புப் பிள்ளைத்தமிழ் நூல்களும் இருபதாம் நூற்றாண்டில் எழுந்துள்ளன. உதாரணமாக, அ. அருணகிரி என்பவர் தொகுத்த கம்பன் பிள்ளைத்தமிழ் என்ற நூலில், பத்துப் பருவங்களையும் பத்துக் கவிஞர்கள் பாடியுள்ள னர். கம்பராமன், சித்தன், தங்க. அன்புவல்லி, தமிழவேள், பெரி. சிவனடியான், இரா. திருமுருகன், அப்துல் காதர், சொ.சொ.மீ. சுந்தரம், இளந்தேவன், மரியதாசு என்பவர் அக்கவிஞர்கள். இவ்வாறே அரு. சோமசுந்தரன் தொகுத்த திருவள்ளுவர் பிள்ளைத்தமிழ் என்ற நூலிலும் பத்துக் கவிஞர்கள் பத்துப்பருவங் களைப் பாடியுள்ளனர். எப்படிக் காப்புப் பருவத்தை இயற்றுவது? சைவ, வைணவப் புலவர்கள் என்றால் அவரவர் தெய்வங்களைக் காக்க என்று கூறிப் பாடிவிடுவார்கள். கம்பன் பிள்ளைத்தமிழ் பாடிய கனகராஜ ஐயர் என்பவர், விநாயகர், இராமன், சீதை, இளையபெருமாள், பரதாழ்வார், சத்ருக்கனன், வால்மீகி, நம்மாழ்வார் ஆகியவர்களைக் காப்புக்கடவுளராக வைத்துப்பாடியுள்ளார்.பெரியார் பிள்ளைத்தமிழ் பாடிய மாவண்ணா தேவராசன் என்பவர், பெற்றவர் வாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டு வாழ்த்து, பெரியார், ஆசிரியர், சுதந்திரதேவி ஆகியோர் வாழ்த்துகள், தமிழர் இயக்கங்கள் வாழ்த்து ஆகியவற்றை முதற்கண் அமைத்துள்ளார். பின்னர் காப்புப் பருவத்தில், விஞ்ஞா னக் கலைஞர், நடுநிலையறிஞர், சமதர்மவாதிகள், அறநெறிமறத் தமிழர், நீதிக்கட்சியினர், ஏழைத் தொழிலாளர், பொதுமையச் சித்தர்கள், உண்மைக் கவிஞர்கள், மருத்துவர்கள் ஆகியோர் காக்க என வேண்டுவதாக உள்ளது. இடையில் பெண்ணுக்குக் காப்பு என்பது இடம்பெறுகிறது. புகழ் பெற்ற சில பிள்ளைத்தமிழ் நூல்கள் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் - பகழிக் கூத்தர் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் - கவிராசப் பண்ண்டாரத்தையா மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் - சி அன்பானந்தம் குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் - ஒட்டக்கூத்தர் கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் - சிவஞான முனிவர் காந்திமதியம்மைபிள்ளைத்தமிழ் - அழகிய சொக்கநாதர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் - சிவஞான சுவாமிகள் அனுமார் பிள்ளைத்தமிழ் - அருணாசலக் கவிராயர் கதிர்காமப் பிள்ளைத்தமிழ் - சிவங். கருணாலய பாண்டியன் திருஞான சம்பந்தர் பிள்ளைத்தமிழ் சுந்தரர் பிள்ளைத்தமிழ் மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ் பாவேந்தர் பிள்ளைத்தமிழ் மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ் காமராசர் பிள்ளைத்தமிழ் பெரியார் பிள்ளைத்தமிழ் கலைஞர் பிள்ளைத்தமிழ் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் |