![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 23. ‘விடுதலை’ |
கவந்தனும் காமனும் ஒரு நகரத்திலே... இரவு மணி எட்டு அல்லது ஒன்பது இருக்கலாம். நாகரிகத்தின் உச்சியைக் காணவேண்டும் என்றால், அந்த நகரத்தை, ஏன் - எந்தப் பட்டணத்தையும் இரவில்தான் பார்க்க வேண்டும். நீங்கள் இரவு எட்டு மணிக்குமேல் சென்னை மாநகரில் சுற்றிப் பார்த்திருக்கிறீர்களா? சுற்றியிருந்தால் நான் கீழே சொல்லும் விஷயம் உங்களுக்குப் பிரமிப்பை உண்டாக்காது. கண்ணைப் பறிக்கும் விளக்குகள், உள்ளத்தைப் பறிக்கும் நாகரிகம்! மனிதனின் உயர்வையும், உடைவையும் ஒரே காட்சியில் காண்பிக்கும் நாகரிகச் சின்னங்கள்! இது கலியுகமல்ல, விளம்பர யுகம் என்பதற்குப் பொருள் தெரியவேண்டுமானால் இந்த நகரத்தின் இரவைக் காணவேண்டும். இந்தக் கூட்டங்கள்! - ஏன் இவ்வளவு அவசரம்? இதுதான் நாகரிகத்தின் அடிப்படையான தத்துவம் - போட்டி, வேகம்! டிராம் வண்டிகளின் 'கணகண'வென்ற ஓலம். ஒரு வேளை இது நாகரிக யக்ஷனின் வெற்றிச் சிரிப்போ என்னவோ? பெண்களின் பல் வரிசைக்கு முத்துக் கோத்தாற்போல் என்கிறார்கள். இந்த வரிசையான மின்சார விளக்குகளுக்கு உபமானமாகத் தேவலோகத்திலும் இவ்வளவு பெரிய முத்துக் கிடையாதே! புதிதாக வந்தவன் மலைத்துப் போகலாம். உற்சாகப்பட முடியாது. வெளிச்சம்! வெளிச்சம்! கண்ணைப் பறிக்கும் வெளிச்சம்! இதுதான்... தெரு மூலை! இதுதான் மனித நதியின் சுழிப்பு! இதற்கு உபநதிகள் போல் பெரிய கட்டடங்களுக்கிடையே ஒண்டி ஒடுங்கிப் போகும் ரஸ்தாக்கள். இது வேறு உலகம்! ஒற்றைப் பாதையில் பாதசாரிகள்; மங்கிய மின்சார விளக்குகள்! இடையிடையே எங்கிருந்தோ வரும் எக்களிப்புச் சிரிப்பைப் போல டிராமின் கணகணப்பு. மணி எட்டுத்தானே சொன்னேன்? கொஞ்ச நேரம் சென்றுவிட்டால் ஆட்கள் நடமாட்டமிருக்காது. 'ஆசாமிகள்' வருவார்கள். வாடிக்கைக்குக் கிராக்கி உண்டு. இந்தப் பக்கங்களுக்கு அதற்கு மேல் வரவேண்டுமென்றால் 'ஆசாமி'யாக இருக்க வேண்டும்; அல்லது குருடனாக இருக்கவேண்டும்; அல்லது கண்கள் எல்லாவற்றையும் பார்ப்பதற்குத்தான் என்ற இரும்புத் தத்துவம் கொண்ட மனிதனாக இருக்க வேண்டும். அதோ மூலையில் சுவரின் அருகில் பார்த்தீர்களா? சிருஷ்டித் தொழில் நடக்கிறது. மனிதர்களா, மிருகங்களா? நீங்கள் போட்டிருக்கிறீர்களே பாப்லின் ஷர்ட்டு, உங்கள் ஷெல் பிரேம் கண்ணாடி! - எல்லாம் அவர்கள் வயிற்றில் இருக்க வேண்டியதைத் திருடியதுதான். ரொம்ப ஜம்பமாக, நாஸுக்காகக் கண்ணை மூடவேண்டாம். எல்லாம் அந்த வயிற்றுக்காகத்தான். வீட்டில் இவ்வளவு 'சீப்'பாகக் காரியம் நடத்த முடியாது. ஆனால், உங்களிடம் தத்துவம் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை. ***** தன்னினைவில்லாமலே ஒரு வாலிபன் தெரு வழியாக வருகிறான். களைப்பு, பசி இவை இரண்டுந்தான் அப்பொழுது அவனுக்குத் தெரியும். மனிதனை மிருகமாக்கும் இந்தத் தெரு வழியாகத்தான் அவன் ஆபீஸுக்குச் செல்வது வழக்கம். அந்தப் பெயரற்ற ஆபீஸ், அவனை முப்பது ரூபாய்களுக்குச் சக்கையாகப் பிழிந்தெடுத்த பிறகு, இந்த உணர்ச்சிதான் வருமாக்கும்! அதோ அந்தப் பெண்ணுடன் இருக்கும் ஒருவன் - இவனைவிட அதிகமாகக் கொழுத்த தீனியா தின்கிறான்? அவன் தன்னை மறக்க - யோகிகளைப் போல் அல்ல - குடிக்கிறான். இவனுக்கு அது தெரியாது. ஒரு மூலை திரும்புகிறான்; சற்று ஒதுக்கமான மூலை. அலங்கோலமான ஸ்திதியில் ஒரு பெண்! பதினாறு, பதினேழு வயது இருக்கும். காலணா அகல குங்குமப் பொட்டு, மல்லிகைப் பூ, இன்னும் விளம்பரத்திற்குரிய சரக்குகள். அவளை அவன் கவனிக்கவில்லை. "என்னாப்பா, சும்மாப் போரே? வாரியா?" வாலிபன் திடுக்கிட்டு நிற்கிறான். "நீ என்னாப்பா, இதான் மொதல் தரமா? பயப்படுரியே?" கையை எட்டிப் பிடித்தாள். "உன் பெயரென்ன?" "ஏம் பேரு ஒனக்கு என்னாத்துக்கு?" இவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரே ஒரு வழிதான் புலப்படுகிறது. அதற்குள் அவள் சந்திற்குள் இழுக்கிறாள். வாலிபன் உடனே மடியிலிருந்த சில்லறைகளையெல்லாம் அவள் கையில் திணித்துவிட்டு, "போ! போ!" என்று அவளை நெட்டித் தள்ளிவிட்டு ஓடிவிடுகிறான். "ஏண்டா, பேடிப் பயலே! பிச்சைக்காரின்னா நெனச்சுகினே!" என்று சில்லறைகளை விட்டெறிகிறாள். அவன் அதற்குள் ஓடிப் போய்விட்டான். இந்த அசம்பாவிதமான செய்கையினால் அவள் மலைக்கிறாள். சற்றே பயம். "பேடிப் பயல்! பேமானி!" என்று முணுமுணுத்துக் கொண்டே, இருட்டில் சில்லறையைத் தேடுகிறாள். ஆனால் அவனும் அன்று பட்டினி என்று இவளுக்குத் தெரியாது. எக்காளச் சிரிப்பு மாதிரி எங்கோ ஒரு பக்கத்திலிருந்து டிராமின் கணகணப்பு! மணிக்கொடி, 22-07-1934 (புனைப்பெயர்: கூத்தன்) |