உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பலி ஜோஸப் நையரு - ஹங்கேரி மோல்டேவியா நோக்கி நிற்கும் மலைச் சிகரங்களிலே அந்த வருஷத்தில் மந்தைகளுக்குக் கரடிகளால் வெகு தொல்லை ஏற்பட்டு வந்தது. வில் - பொறி வைத்து எல்லாம் முயன்று பார்த்ததும் ஒன்றும் பயன்படவில்லை. மேய்ப்பவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தீப்பந்தம் வைத்துக் கரடிகளின் பேரில் விட்டெறிந்து பார்த்தார்கள்; குண்டு போட்டுக்கூடச் சுட்டுப் பார்த்துவிட்டார்கள். ஜென்ட்யூர்கி என்ற இடத்தைச் சேர்ந்த டோ னி டீர்ஸ் என்பவனுடைய முதுகைக் கரடிகள் பிறாண்டிக் கிழித்ததுதான் மிச்சம். தன்னுடைய மந்தையில் உள்ள எருது ஒன்றின் மேல் கரடி தாவிப் பாய்ந்தபொழுது கையிலிருந்த கோடரியை டீர்ஸ் விட்டெறிந்தான். அந்த மிருகம் எருதை விட்டுவிட்டு டீர்ஸ் மேல் பாய்ந்தது. இனிமேல் காயம் ஆறினாலும் அவனுக்குப் பழைய தெம்பு எங்கிருக்கப் போகிறது? இது நடந்த பிற்பாடுதான் மேய்ச்சல்காரர்கள் எல்லோரும் இனிமேல் என்ன செய்வது என்பதை ஆலோசிக்க மார்ட்டின் உடூவின் குடிசையில் கூடினார்கள். வருகிற ஞாயிற்றுக்கிழமை, சர்ப்பவிழாக் கொண்டாடி கரடிகளுக்குப் பூசை போடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. கிறிஸ்துவ சமயம் இங்கெல்லாம் பரவுவதற்கு முன்னர் மிலேச்ச காலத்திலிருந்தே இருந்துவரும் ஒருவிதமான ரத்த பலி. அந்த கிரியைகளும் மந்திரங்களும் உடூவுக்குத்தான் தெரியும். அந்தக் காலத்தில் இருந்த டால்ட்டாஸ் என்ற மிலேச்ச மந்திரவாதிகள் போல, அவனுக்கு மந்திரவாதம் தெரியும். தீயும் தண்ணீரும் அவன் சொற்படி கேட்கும். அவனுடைய குடிசைக்கு அருகாமையில் வந்துவிட்டால், ஓநாய்கள் கூட வாலைக் காலிடை சொருகிக் கொண்டு 'பவ்வியமாக' நடந்து செல்லும். அவன் ஆயுசு முழுதுமே காடுகளில் கழிந்தது. அந்த மலைச் சாரல்களுக்கு வந்து பொழுது இப்பொழுது பிரம்மாண்டமாக ஓங்கி வளர்ந்து கிளையும் கொப்புமாகப் படர்ந்திருக்கும் மரங்கள் எல்லாம் சிறு சிறு குத்துச் செடிகளாக நின்றன என அவன் சொல்லுவான். அந்தச் சுற்று வட்டாரத்திலேயே அவனை இந்தக் கிழக்கோலத்தில் தவிர வேறு நிலையில் பார்த்தோர் எவருமே கிடையாது. அன்றிருந்ததுபோலவே மெலிந்து வரண்டு இருந்து வருகிறான். அவனுடைய மனைவி இறந்துபோய் எத்தனையோ வருஷங்களாயின. அவள் செத்ததும் அவன் கையால்தான் என்றும், ஒரு காலத்தில் பேச்சடிபட்டு அதுவும் செத்து மடிந்தது. அந்தக் காலத்தில்தான் காடேறிப் போனான் என்றும் அப்போது சொல்லிக் கொண்டார்கள். ஆனால் மந்தைகளை மேய்த்துக்கட்டி வருவதில் எந்த வட்டாரத்திலுமே அவனுக்கு ஈடு இனிமேல்தான் பிறக்க வேண்டும். சென்ற ஐம்பது வருஷங்களாக, அவனுடைய கவனக்குறைவால் மந்தைக்குச் சேதம் வந்தது என்ற வார்த்தை பிறந்தது கிடையாது. ஆனால் இந்த வருஷம் அவனையும் ஒரு கரடி ஆட்டம் காட்டியது. ஒற்றை ஒரு நாள் இராத்திரியில் அவன் மந்தையிலே தளதளவென்றிருந்த நான்கு எருதுகளின் கழுத்தைக் கடித்துத் துண்டாக்கிவிட்டது அந்த மிருகம். இந்த 'அநியாயத்தை'க் கண்டதும் கோபாவேசத்தால் அவன் முகத்தில் ரத்தம் பரவி நின்றது. 'உன் ஆட்டமெல்லாம் அந்தமட்டுக்குந்தான்' என்று சபதம் செய்தான். இது வெள்ளிக்கிழமை நடந்தது. ஆனால் சனிக்கிழமைக்குள் மந்தை அவன் கையைவிட்டு வேறு கை மாறியது. குடிசையிலிருந்து அவனுடைய தட்டுமுட்டுகள் வெளியே எடுத்து எறியப்பட்டு அவன் ஸ்தானத்திற்குக் கருந்தடியனாக ஒருவனை நியமித்து விட்டார்கள். 'நீ யாரடா?' என வந்தவனைத் தலைமுதல் கால்வரை ஏற இறங்கப் பார்த்துவிட்டுக் கேட்டான் கிழவன். அந்த மனிதன் வாய்விட்டு உரக்கச் சிரித்துவிட்டு 'என்னை மார்ட்டின் உடூவின் மகன் என்பார்கள்; என் பேர் ஆண்டி' என்றான். கிழவன் திகைப்பூண்டு மிதித்தவனைப்போல நின்றான். 'என் மகனா?' 'ஆமாம்' 'என் வயிற்றுக்கு வைரியாக வந்துவிட்டாய் என்று மேய்ச்சல்காரர்கள் சொல்லுகிறார்களே, அது நிசமா?' 'இந்த ஐம்பது வருஷமாகத்தான் தின்னாயே அது போதாதா? எங்களைப்பத்தி ஒரு தடவை நினைச்சுப் பார்த்திருப்பியா? எனக்கு மூணு பிள்ளைகள் இருக்குது. அதுகள் பட்டினி கிடந்து வாடுவதைப் பார்த்துக் கண்கள் பூத்துப் போச்சு. இப்போ நீ தான் கொஞ்சம் பட்டினி கிடந்து அது எப்படியிருக்குது என்று பாரேன். இல்லாவிட்டா நாசமாகப் போயேன். செத்தொழியத்தான் காலம் ஆச்சே.' மாட்டின் உடூ பதில் சொல்லவில்லை. அமைதியாக வெளியே சிதறிக் கிடந்த சாமான்களைச் சேகரித்து அருகில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றுக்கு எடுத்துச் சென்று நெட்ட நெடுகலாக வளர்ந்து நின்ற பைன் மரத்தடியில் அவைகளை அடுக்கினான். பொழுது சாய்கிற நேரமாய் விட்டபடியால் சுள்ளி பொறுக்கி அடுக்கி நெருப்பு மூட்டினான். எல்லாம் முடிந்ததும் தரையில் சாவதானமாக உட்கார்ந்து கொண்டு யோசிக்க ஆரம்பித்தான். மற்ற மேய்ச்சல்காரர்கள் மந்தையைக் கொண்டு அடைத்துவிட்டுப் பசியைத் தீர்த்துக்கொண்டபின் நாளைக்கு நடக்க வேண்டிய பலியைப் பற்றி அவனிடம் பேசித் தீர்த்துவிட அங்கு வந்தார்கள். நெருப்பருகே, அசையாது சிலைபோல் உட்கார்ந்து அனல் விட்டு நிகிரும் தீக் கொழுந்துகளுக்குள் கண்ணைச் சொருகியவன் போலப் பார்த்து யோசனையிலாழ்ந்திருப்பதைக் கண்டார்கள்; அசைந்தாடும் அனல் ஒளி மயிர் செறிந்தடர்ந்த நெஞ்சில் செக்கச் செவேலென்று கூத்தாடின. 'மாமா உங்களுக்கு இந்த மாதிரித் துன்பம் வந்திருப்பதாகக் கேள்விப் பட்டோம்' என்றார்கள். கிழவன் தலையசைத்தான். 'துன்பந்தான்; அது வரும் என்று எனக்கு முன்னமே தெரியும்.' சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்கள் மனசு படக்குப் படக்கென்று பறையடித்தது. மந்திரசக்தி அவர்களை அவ்வளவு பயத்துள் ஆழ்த்தியது. 'அவர் சொல்லுவது சரிதான்' என்றான் ஆட்டு மந்தை மேய்க்கும் டேவிட் டூருக். 'ஒருநாள் நான் வீட்டுக்குத் திரும்பறச்சே என்னுடைய நாய் - நான் வளர்த்த நாய் - மனிசன் குரலெடுத்து என்னிடம் பேசிச்சு 'டேவிட் டூரு நீ வீட்டுக்குப் போடா, உன் பெண்டாட்டி செத்துப் போனா' என்று சொல்லிச்சு; நான் ஓட்டம் ஓட்டமென்று வீட்டுக்கு ஓடியாந்து பார்த்தேன். அது சொன்னாப்பிலே, அவ செத்து மடிஞ்சு கெடந்தா' என்றான். நெருப்பு மங்க ஆரம்பித்தது. சாவைப் படலம் இருளேற ஆரம்பித்தது. தணலைச் சூழ உட்கார்ந்திருந்தவர்கள் மௌனமாக இருந்தார்கள். கீழே சரிந்து விழுந்த கங்கை எடுத்துப் போடக் கை நீட்டியவன், தன்னருகில் உஸ் என்ற சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கையை இழுத்துக் கொண்டான். 'பாம்பு' என்று மெதுவாகச் சொன்னான். சூழ அமர்ந்திருந்தவர்கள் நடு நடுங்கினார்கள். ஆமாம் அவர்களுக்கு எதிரிலே கல்லெறி தூரத்தில், தன்னுடைய மொண்ணைத் தலையைத் தூக்கிக் கொண்டு வழவழவென்று நிலா வெளிச்சத்தில் நெளிந்தது அந்தப் பாம்பு. கிழட்டு மார்ட்டின் அதன் திசையில் திரும்பினான். ஒரு கணம் மனிதனும் பாம்பும் வைத்த கண் மாற்றாமல் ஒருவரையொருவர் பார்த்திருந்தனர். பிறகு அந்தப் பாம்பு 'உஸ்' என்ற சப்தத்துடன் தலையை இழுத்துக்கொண்டு மறைந்தது. கிழவனுடைய தலை நெஞ்சில் படிந்து தொங்கியது. நாள் முழுவதும் இம்மாதிரி பல உற்பாதங்கள் தோன்றிக்கொண்டிருந்தன. மந்தை வெறித்துக் கொண்டு நாலா திசைகளிலும் கலைந்து ஓடியது. ஸ்வாலோக் குருவிகள் வானத்து உச்சியிலே கிறீச்சிட்டுக் கொண்டு காற்றோடு மல்லாடிப் பறந்தன. அதிசயமான மிருகங்கள் தம் குகைகளை விட்டு வெளியேறிச் சஞ்சரித்தன. மரங்கள் காற்றில் அழுதன; உயர் சிகரக் கோடுகள் தம்முள் மறைந்து கிடக்கும் அபாயங்கள் எல்லாவற்றையும் வெளிக்காட்டிப் பயமுறுத்தின. 'அதற்கு அர்த்தம் மரணம்' என்றான் கிழவன் நெருப்புக்குள் பார்த்துக் கொண்டே. 'ஆமாம் ஆமாம்' என்றார்கள் மற்ற மேய்ச்சல்காரர்கள். தலையைத் தூக்கி ஏறெடுத்துப் பார்க்க ஒருவருக்காவது தைரியமில்லை. யாருடைய பார்வை கிழவன் கண்ணில் விழுகிறதோ அவனுக்குத்தான் கெடுவு என்பது அவர்களுக்குத் தெரியும். சாவு... அந்தச் சமயத்திலே மந்தைக்குக் காவல் நின்ற நாய் ஓலமிட்டு அழுதது. 'அது பேய்க் கனவு காணுகிறது' என்றான் ஒரு வாலிபன் அறியாமையால். 'பேய்க் கனவா? ஒனக்கு ரொம்பத் தெரியுண்டா!' என்றார்கள் மற்றவர்கள். 'ஒரு வேளை டோ னி டீர்ஸ்தான் செத்துப் போனானோ என்னமோ? நாய் தெரிந்து கொண்டு ஓலமிடுகிறது' என்றான் வேறொருவன். 'அப்படியிருந்தால்தான் தேவலியே' என்றான் மற்றொருவன். அது அப்படியானால் மரணத்தின் கண்ணி அவர்கள் மீது விழுந்துவிடாது. கிழவன் இல்லை என்பது போலத் தலையசைத்துவிட்டு, 'எனக்காகத்தான் அந்த நாய் அழுகிறது' என்றான். மனதில் ஏற்பட்ட ஆறுதலை வெளிக்காட்டிக் கொள்ளாமலிருக்க அவர்கள் ரொம்பவும் சிரமப்பட்டார்கள். அவனுடைய வார்த்தையைச் சந்தேகிப்பது போலப் பாசாங்கு செய்தார்கள். 'யாரிடம் இந்த வார்த்தை. மார்ட்டின் உடூவைச் சாவு வந்து இழுத்துக் கொண்டு போவதா? அதற்கு அந்த சக்தி ஏது?' நிச்சயந்தானா என்பதைத் தெரிந்து கொள்ள டேவிட் சாலக்காக வலை வீசினான். 'மாமா உங்களைப் போல ஆயுசோட இருப்பேன் என்று எனக்கு நிச்சயமாகத் தெரிந்தால்' என்றான். 'அத்தனை காலம் உன்னால் வாழமுடியாது போனால் நீ நாளைக்குக் காலம்பர ஆட்டுக்கிடாவுலே பால் கறப்பே' என்றான். ஆட்டுக்கிடா நகர லோகாதிபதியான சாத்தானுக்கு உருவகம். 'நீ செத்துப் போவே என்பது எப்படி நிச்சயம்?' என்று கேட்க ஆட்டிடையன் துணிவு கொண்டான். 'எனக்குத் தெரியும்' என்று உறுமினான் கிழவன். இந்த வார்த்தைகள் அவர்களுடைய உள்ளத்தைக் கிளறி பயமூட்டியது. ஆனால் இனிமேலும் சந்தேகப்பட்டுக் கொண்டிருக்க அவர்கள் துணிவு கொள்ளவில்லை. 'என்ன கஷ்டம், என்ன கஷ்டம்' என்று சொல்லிக்கொண்டு தலையைச் சொறிந்தான் ஆட்டிடையன். 'நீ இல்லாமல் நாங்கள் எப்படி பலி கொடுப்போம்?' 'ஆமாம் பலி பூஜை?' என்று அலறினார்கள் இதரர்கள். பயம் அவர்களுடைய குரல் வளையில் தாண்டவம் நடத்தியது. அதைச் செய்யாமலிருப்பது எப்படி? 'நீங்கள் இல்லாவிட்டால் மாமா எங்களுக்கு என்ன செய்யத் தெரியும். கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு தொங்க வேண்டியதுதான்.' கிழவன் கைப்புடன் சிரித்தான். யாருக்கு எது செய்ய முடியும் என்பது அங்கீகரிக்கப்படுவதே இனிப்பாகத்தான் இருக்கும். 'நீங்கள் பயப்பட வேண்டாம்; பலி நடந்தே தீரும்.' அவன் சொன்ன மாதிரி அவ்வளவு அபூர்வமாக இருந்ததினால் அவன் வார்த்தையை மதிக்க அவர்கள் விரும்பவில்லை. உள்ளத்தில் கோபம் கொதித்தது. சாகப் போகிறேன் என்று சம்பிரதாயமாகப் பேசுவதெல்லாம் நடுவாந்திரத்தில் விட்டு விட்டா போய்விடுவது? 'ஞானம் படைத்தவர்கள் தங்களுக்குத் தெரிந்ததைத் தங்களுடன் கல்லறைக் குழிக்குள் புதைத்துக்கொள்ளக் கூடாது' என்றான் ஆட்டிடையன் அர்த்த புஷ்டியுடன். கிழவனிடமிருந்து இரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா என பெருவேட்கையுடன் பார்வைகள் தாவின. 'நாளைக் காத்தாலைக்கு உங்கள் எல்லோருக்கும் அது காட்டப்படும்' என்றான் கிழவன். குரலில் கேலி கலந்திருந்தது. 'அதுவும் நல்லதுதான்' என்றார்கள். அவர்கள் ஆத்திரம் தணிந்தது. தத்தம் தடியையும் கோடரியையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். இரவு நெடு நேரமாகிவிட்டது. கொஞ்சமாவது உடலைக் கிடத்த வேண்டாமா? 'எந்த இடத்தில் பலிக்கு விறகு அடுக்கியிருக்கிறீர்கள்?' என்று கேட்டான் கிழவன். 'வழக்கம் போல்தான். குழிக்கல்லுக்கிட்டே' என்றார்கள். 'போய் வருகிறேன்' என விடை பெற்றுக்கொண்டு இருளில், இருளோடு இருளாகக் கரைந்து போனார்கள், நிராசர கணங்கள் மாதிரி. கிழவன் தணலைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தான். மகன் நினைப்பு வந்தது. அதோடு குடும்ப ஞாபகமும் படர்ந்தது. எத்தனை குழந்தைகள் என்பதை விரல் மடக்கி எண்ண முயன்றான். 'அமிலி... சின்ன ஸ்டீபன்... மார்ட்டின்... வீரா... சீச்சி அது தப்பு ஜோப்பாவைக் கணக்கிலே சேக்கலியே.' ஒரு மகன் அவன் வயிற்றுக்கு வைரியாக முளைத்தான்... அவனுடைய சதையும் ரத்தமுமே அவனுக்குப் பகை... 'அவன் இப்போ என்ன செய்கிறானோ' என்று மனசு உலாவியது. அடுத்த பள்ளத்தாக்கை நோக்கிக் கண்கள் சஞ்சரித்தன. 'போய்ப் பார்க்கிறேன்.' புதிய உணர்ச்சி ஒன்று ஜீவத் துடிப்புடன் அவனிடை கனிவுடன் ததும்பிப் பாய்ந்தது. 'பையன் செய்தது சரிதான்' என மகனுக்காகப் பரிந்து கொண்டான். 'மூணு குழந்தைகள்' கடவுள் கட்டின மண்ணில். தனக்கென்று ஒன்றும் கிடையாது. சுரண்டிப் போட்ட வால்நட் ஓடு கூட அவனுக்கு என்னிடமிருந்து கிடைத்தது கிடையாது. அவன் சொன்னது சரிதான். இந்தச் சாப்பாடு அவனுக்குத்தான் சொந்தம். எனக்குச் சாவுதான் சொந்தம்.' கையில் கோடரி எடுத்துக்கொண்டு தடமாடித் தடமாடி, மகன் படுத்துறங்கிய அடுத்த பள்ளத்தாக்குக்குச் சென்றான். அவனுடைய நாய்கள் வாலைக் குலைத்துக் கொண்டு ஓடி வந்தன. பிறகு வேகமாக மந்தைக் காவலுக்கு ஓடிவிட்டன. தூரத்திலே, பள்ளத்தாக்கிலே மங்கலாக மந்தை படுத்துக் கிடந்தது தெரிந்தது. அதை விட்டுப் பிரிவதென்றால் மனதில் உளைச்சல் எடுத்தது. வேறு வழியில்லாதபோது... மெதுவாகக் குடிசைக்குள் புகுந்தான். மார்ட்டினுடைய கட்டிலில் மகன் நீட்டிப் படுத்துக் கிடந்து உறங்கினான். தூங்கும் தலையை ஒரே வெட்டில் தறித்துச் சாய்த்து விடும்படி தீமையின் தேவன் தூண்டினான். 'அவனுக்கு மூணு குழந்தைகள்' என்ற நினைப்பு அவனுடைய மனதின் அடிவானத்தில் மின்னியது. 'என்னுடைய பேரன் பேத்திகள்' என்று சொல்லிக் கொண்டான். உள்ளுக்குள் மனம் பூரித்தது. மனம் மனிதத் தன்மை கொண்டு விம்மியது. குனிந்து, தூங்கியவன் முகத்தில் உதடுகளைச் சேர்த்தினான். 'இதையாவது அவர்களுக்குக்கொடு' என்று மெதுவாகச் சொன்னான். உறங்கியவன் விழிக்கவில்லை. முகத்தில் படர்ந்திருந்த துன்பங்களைப் போன்ற அசைவுகள் அகன்றன. மூச்சு அமைதி கண்டது. மனதிலிருந்த சுமை இறங்கியது மாதிரி மார்ட்டின் உடூ நிம்மதி கொண்டான். வழி சொல்லிக் கொள்ளுவது போல் மற்றும் ஒரு முறை குடிசையில் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான். பிறகு வெளியே வந்தான். கடைசித் தடவையாக மந்தையைக் கணக்கெடுத்தான். அவன் ஜீவியத்திலேயே முதல் முதலாக அவன் கண்களில் பொட்டு ஜலம் தெறித்தது. ஆனால் வெகு வேகமாகத் திரும்பினான். நேரம் இறகு கட்டிப் பறப்பதால் அவன் வேகமாகச் செல்லவேண்டும். ஏற்கனவே பனியுண்ட நட்சத்திரங்கள் உறங்கி வழிந்தன. தான் மூட்டிய தணலருகில் வந்தான்; தோல் வாரில் செய்த சாட்டையை இடுப்பில் வரிந்து சுற்றிக் கட்டிக் கொண்டு, வெளிச்சத்திற்காகத் தணலிலிருந்த ஒரு கொள்ளியை எடுத்துக்கொண்டு, அதை மலைக்கு மேலே உயரப் பிடித்து ஏந்திய வண்ணம் 'இதோ புறப்பட்டாச்சு' என்றான். குழிக்கல்லுக்குப் போகும் வழி மாட்டடித் தடந்தான். நெட்ட நெடுகலாக, செங்குத்தாகச் செல்லும் பாதை அது. எப்படியோ உச்சியை அடைந்தான். உச்சியில் புல் அடர்ந்த மைதான வெளி. சூழவும் அடர்ந்த கானகம். மைதான மத்தியில் ஏதோ இரண்டு அம்பாரமாகக் கிடந்தது. மேய்ப்பவர்கள் அடுக்கி வைத்துள்ள விறகுக் குவியல்தான் அது. மறுநாள் பலியிடுவதற்காக அவர்கள் ஆசையுடன் சேகரித்து வைத்த விறகு. இந்தக் கானகங்களில் அழிந்து மடியாமல் காப்பாற்றப்பட்டு வரும் இந்த மந்திரக் கிரியையில் ஈடுபடுகிறவர்கள் இரகசியத்தை வெளிவிடவே கூடாது என்று பிரமாணம் செய்து கொடுத்தவர்களேயாகும். விறகுக் குவியலைச் சுற்றிச் சுற்றி வந்து கவனமாகப் பார்த்துவிட்டு, 'நல்லாத்தான் செய்திருக்கிறார்கள்' என்று சொல்லிக் கொண்டான் மார்ட்டின் உடூ. கானகம் உறங்கியது. ஆனால் கீழ்த்திசை வானத்தில் வெள்ளை படர்ந்து உதயத்தின் வரவுக்குக் கட்டியம் கூறியது. பகலுக்காகக் காத்திருக்கக் கூடாது என்று மார்ட்டின் உள்ளூர உணர்ந்தான். 'பகல் பலத்தை வாங்கி விடுகிறது' என்று நினைத்தான். குத்துச் செடிகளினடியில் கிடந்த சருகுகளையும் குச்சிகளையும் வாரிக் கொணர்ந்து சேர்த்து விறகுக் குவியலடியில் போட்டு அதில் நெருப்பு மூட்டினான். புகை, அடுக்கிய விறகிடையில் வெளிவந்தது. அழல் குதித்தெழுந்து அடிக்கட்டையில் பற்றியது. 'அந்த வேலை முடிந்தது' என்று மனத்திருப்தியுடன் சொல்லிக் கொண்டான். எந்த இடத்தில் பற்றி ஏற வழியிருக்கிறது என்று விறகுக் குவியலை ஆராய்ந்து கவனித்தான். இரண்டு முறை கால் தவறக் கீழே வழுக்கினான். ஆனால் மூன்றாவது தடவை விறகுக் குவியல் உச்சிக்கு ஏற முடிந்தது. பல நிமிஷங்கள் அவன் அதன் மீது அசைவற்று நின்றான். செறிந்த தலை மயிரில் பனி முத்துக் கோத்தது. பிறகு குனிந்து தான் கொண்டு வந்திருந்த தோல் வாரினால் தன் கால்களை இறுகச் சேர்த்து வரிய வரியக் கட்டிக் கொண்டான். நிமிர்ந்தெழும் புகை அவன் உருவத்தை மறைத்தது. 'இந்த லோகத்தைக் நான் கண்டதெல்லாம் போதும்' என்று கண்களை மூடிக்கொண்டு சொன்னான். அவன் தீரன், பிடிவாதம் கொண்டவன்; இருந்தும் தன் சதைக்கு ஏற்பட விருப்பதை நினைக்க மனம் வெருண்டது. சீக்கிரம் காரியம் நடந்துவிட்டால் தேவலை என்று ஆசைப்பட்டான். 'நெருப்பே நீ சீக்கிரம் உன் வேலையை முடி' என்று கத்தினான். ஆனால் நெருப்பு அவனைப்போல அவசரப்படவில்லை. தீக்கொழுந்து அடிக்கட்டுகளுக்கு மேல் தாவவில்லை. ஆனால் அதன் வெதுப்பு அவனிடம் ஒருவித மயக்கத்தை ஏற்படுத்தியது. கடைசி மந்திரத்தை உச்சாடணம் செய்யுங்காலம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தான். அதிசயமான, புராதனமான வார்த்தைகளை அவன் வாய் கொட்டிற்று: 'அக்கினி பவித்திரமான அக்கினி; சகல வஸ்துக்களையும் உண்டு பசி தீரும் அக்கினி, எனக்கு முன்னால் போ, எனக்கு வழி காட்டு; வானத்தை நோக்கிக் குரல் கொடு; எட்டாத வானத்தை நோக்கிக் கூப்பிடு; கடவுளைக் கூப்பிடு; கடவுளைக் கூப்பிட்டு அவரது பட்சியை அனுப்பச் சொல்; என்னை அவரிடம் அழைத்துச் செல்ல அவருடைய பட்சியை அனுப்பட்டும்; அதன் சிறகின் அரவணைப்பிலே என்னை அவரிடம் அழைத்துச் செல்லட்டும்.' விறகின் வெடிப்பும் நெருப்பின் குமுறலும் அவன் குரலை அமுக்கியது. நிமிர்ந்த வாக்கில், இயற்கைக்கு மாறாக நெட்டை நெட்டென்று மண்டிச் சுருளும் புகைகளினூடே அவனுடைய உருவம் தெரிந்தது. தழல் மேலேறி வளர்ந்து அவனை நோக்கி ஊர்ந்து வந்தது. இன்னும் அவை அவனைத் தொடவில்லை. ஆனால் கழுத்தளவு படர்ந்து மூடியிருந்த அவனுடைய தலைமயிரைக் கருக்கி மேலோங்கிச்சுருள வைத்தது. கண் குழியில் வெள்ளை விழி மட்டும்தான் தெரிந்தது. அவனுடைய கைகள் காற்றில் சிறகடித்தன. அவன் வாய் அகன்று திறந்திருந்தது. வான லோகத்தில் அவனுடைய குரல் எங்கோ ஓலம் கேட்டது. அக்கினிச் சர்ப்பங்கள் விறகுக்கட்டுகளுக்கிடையிலே தாவிப் பாய்ந்தபோது, அவனுடைய வீங்கிய நாக்கு வெடித்து இரத்தத்தைத் தெறித்தது. அவன் பக்க வாட்டாகச் சிதையில் சரிந்தான். மந்தைதான் முதலில் நெருப்பைக் கண்டது. அவற்றிடை கலவரம் கிளம்ப வேலியை உடைத்துக் கொண்டு வெளியேற முயன்றன. முதல் ஆள் விழித்துக் கொண்டபோது வானமே செங்கோளமாகத் தழல்விட்டது. அவசர அவசரமாகக் குழலெடுத்தூதினான். "மலையில் நெருப்புப் பத்திக்கிச்சு" என்று கூப்பாடு போட்டான். அவன் சொல்லி ஆக வேண்டியதொன்றுமில்லை. அவர்களுடைய கண்களுக்கே தெரிந்தது. கோடரியை எடுத்துக்கொண்டு நெருப்புப் பற்றியுள்ள இடம் நோக்கி ஓடினார்கள். அவர்கள் வந்தபோது அக்கினிமயமாக இருந்தது. அக்கினிக் கொழுந்தின் மத்தியிலே கிழட்டு மார்ட்டின் உடூவின் கரிக்கட்டையான உடலம் கிடந்தது. 'பலி; உலகம் இதற்கு முன்னால் கண்டிராத பலி' என்று சொல்லிக் கொண்டார்கள். கருகிப்போன சவத்தை இமை கொட்டாமல் வெகு நேரம் பார்த்து நின்றார்கள். அது சற்றும் உருக்குலையாமல் இருந்தது. 'செத்தும் சாவைக் கேலி செய்து நிற்கிறான் பார். அவன் தான் உண்மையான டால்ட்டாஸ்' என்றார்கள். 'அவரைப்போல இனிமேல் யார் வரப்போரா?' என்றான் டேவிட் துயரத்தோடு. புதிய மேய்ப்பவனான ஆண்டி உடூதான் கடைசியாக அங்கு வந்து சேர்ந்தான். அவன் தூரத்தில் வருவதைக் கண்டதுமே கோடரியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு தயாரானார்கள். 'சீக்கிரம் வா. உன்னுடைய ரொட்டி இங்கே சுட்டு வைத்திருக்கிறது. வா' என்று உறுமினார்கள். பயந்துபோய் 'அது என் தப்பில்லை' என்று அலறினான் அவன். 'அவனையும் தூக்கி நெருப்பில் போட்டு விடுவோம்' என்றான் ஒருவன். கும்பல் அவனைப் பயமுறுத்திக்கொண்டு நெருங்கியது. ஆனால் அவன் கலங்கிப் பின்வாங்கவில்லை. நெருப்பிடையில் கருகிக் கிடந்த உடம்பைக் கண்டு வெருண்டு ஸ்தம்பித்து நின்றான். 'அப்பா' என்று வாய்விட்டு அலறினான். குரல் பயங்கரமானது. யாவரும் வெருண்டு விலகினார்கள். நெருப்பினிடையிருந்த உடலம் குரலைச் செவியுற்றது போலச் சிறிது குவிந்து உதடற்ற சிரிப்புச் சிரித்த மாதிரி இருந்தது. 'கிழவன் சாப்பாட்டைப் பறிக்க எப்படி உனக்கு மனம் வந்தது' என்று தாக்க ஆரம்பித்தார்கள் மேய்ப்பவர்கள். கண்கள் கலங்க அவன் அவர்களை நோக்கினான். 'என் மூணு குழந்தைகளும் பட்டினி கிடந்து வாடுகின்றன' என்றான். 'அவர்களுக்காகத்தான் அவர் அதைச் செய்தார்' என்று ஆண்டி நெருப்பைச் சுட்டிக் காட்டினான். மேய்ப்பவர்கள் பதில் எதுவும் சொல்லவில்லை. ஆட்டிடையன் டேவிட்டுக்குத்தான் வார்த்தை வந்தது. 'ஒருவன் சாப்பிடுவது என்றால் இன்னொருவன் பட்டினி; உயிர் வாழ எல்லா ஜீவன்களும் கொன்றுகொண்டுதான் இருக்கவேண்டும். அது அப்படித்தான். அதற்கென்ன செய்யலாம். வீட்டுக்குத் திரும்புவோம் வாருங்க.' ஒவ்வொருவராக மேய்ப்பவர்கள் பதுங்கினார்கள். மாட்டை ஓட்டிப்போக வேண்டாமா? காலம்பரப் பசியாத்திக்கிட நேரமாச்சே. |