![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
இனி இ. எம். டிலாபீல்ட் இதுவரை நடக்காததைப் பற்றி ஒரு கதை எழுதினால் என்ன?... அந்தக் கதையின் போக்கில் அறிந்து கொள்ள முடியுமானால்... பதினைந்து இருபது வருடங்களுக்கப்புறம்: ஓல்ட் பெய்லியில் (நியாயஸ்தலம்) நடக்கிறது. ஒரு பெண் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுத் தண்டனையை எதிர்பார்த்து நிற்கிறாள். யுத்த நெருக்கடியிலும் பொது ஜனங்களிடை ஒரு பரபரப்பை உண்டுபண்ணும் ஒரு கேஸ். இதற்கு நீண்ட காலமாகவில்லை; அந்தப் பெண் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டாள். சாட்சிக் கூண்டில் நிற்கிறாள். நடுத்தரமான வயது. தலை சற்று நரைத்துவிட்டது. குரல் சாந்தமானது. நல்ல படிப்பாளியினுடையது. தன்னுடைய சொந்தப் புத்திரனைக் கொன்றதாக ஒப்புக் கொள்ளுகிறாள். இருந்தாலும் குற்றத்தைப் பற்றிய சாட்சிகளை விசாரித்தாக வேண்டியதுதான். இந்தத் தேதியில் துப்பாக்கியில் சுடப்பட்டது... இன்னின்னார் - குற்றவாளியைத் துப்பாக்கி கையிலிருக்கும்பொழுது பார்த்தார்கள்... அவளது பத்தொன்பது வயதுள்ள புத்திரன் படுக்கையில் இறந்து கிடக்கிறான், தூங்கும்பொழுது மண்டையில் சுடப்பட்டு. குற்றவாளியும் போலீசாரிடம், "எனது மைக்கேலைக் கொன்றேன்" என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறாள். ஜட்ஜ் - வயது சென்றவர் - முன்பக்கமாகத் தலையைச் சாய்த்து, "ஏ குற்றவாளியே! உனது புத்திரனைக் குரோதத்தினால் தீர ஆலோசித்துக் கொன்றாய் என்று உன் மேல் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்று நீ அறிவாயா?" "ஆம்! பிரபுவே!" "நீ குற்றவாளி என்று ஒப்புக் கொள்ளுகிறாயா?" "நான் குற்றவாளி என்று ஒப்புக் கொள்ளுகிறேன் பிரபுவே." இச்சமயத்தில் கோர்ட் நிசப்தமாக இருக்கிறது. "உன்மீது மரணத் தீர்ப்புச் சொல்லாமலிருப்பதற்குக் காரணம் ஏதாவது உண்டா?" "இல்லை" "ஒன்றுமில்லையா? இந்தப் பயங்கரமானதும் இயற்கைக்கு விரோதமானதுமான ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டும் காரணம் ஏதேனும் இல்லையா?" குற்றவாளியின் கண்கள் கலங்குகின்றன. தேம்பியழுவதில் உடல் முழுவதும் குலுங்குகிறது. பேசவேண்டும் என்று சைகை செய்கிறாள். எதையோ ஒன்றைச் சொல்ல வேண்டுமென்று ஆசைப்படுகிறாள். ஒரு தம்ளரில் ஜலம் கொடுக்கிறார்கள். கடைசியாகப் பேச முடிகிறது. "பிரபுவே - இந்த யுத்தந்தான் காரணம். முன்பு நடந்த யுத்தம் என் நினைவிலிருக்கிறது. அதுதான், அந்த உலக மகா யுத்தம் என்று சொல்கிறார்களே அதுதான். எனது தகப்பனார் அதில் ஈடுபட்டார். அவருடைய இரண்டு கால்களும் போய்விட்டன. அவர் இறந்து போகவில்லை. முடவனாக வாழ்ந்து வந்தார். யுத்தத்தின் கடைசி வருஷத்தில் எனது கணவனும் சென்றார். அவருக்கு ஷெல்லினால் மூளை கலங்கிவிட்டது. அதற்கப்புறம் குணப்படவேயில்லை. ஒரு வேலையையும் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. அவருக்காகவும் எனது மகனுக்காகவும் நான் உழைக்க வேண்டியதாயிற்று. என் அதிர்ஷ்டம் என்னால் வேலை செய்ய முடிந்தது. எனது மகனுக்குக் கல்வி போதிக்க முடிந்தது. அவன் குழந்தையாக இருக்கும் பொழுது..." மறுபடியும் பேசமுடிந்தது. "1914 - ல் நடந்த யுத்த எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள் இருவருக்கும் அது என்ன கொடுத்தது என்று தெரியும். இந்த யுத்தம் வந்தவுடன் எனது மகனும் அதற்குச் செல்லவேண்டும் என்று எனக்குத் தெரியும். அவனை அது என்ன செய்யும் என்று யோசித்தேன். அதிலிருக்கும் பாஷாணப் புகை, காயங்கள், கொலைகள், அவைகள் மட்டுமல்ல, அதைப்பற்றிச் சொல்ல வரவில்லை, சாந்தமாக இருக்கும்படி, மற்றவரிடம் அன்பு செலுத்தும்படி அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தேன். நாசம் செய்வதும் பின்னப்படுத்துவதும் தப்பிதம் என்று போதித்திருந்தேன். அவனால் யுத்தத்தைத் தாங்க முடியாது... அவனைப் போல் இந்தத் தலைமுறையில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். "இப்படிச் செய்வதுதான் நல்லதென்றுபட்டது. நான் என் மகனைக் கொன்றேன். அவன் தூங்கும்போது அவனுக்குத் தெரியாது... ஒரே நிமிஷந்தான். அது சண்டைக்குப் போகிற மாதிரியல்ல..." ஒரே வழி தான் உண்டு. கோர்ட்டில் உள்ளவர்கள் தீர்ப்பு அப்படித்தான் ஆகவேண்டும் என்று மனத்திற்குள் பிரார்த்தித்துக் கொள்ளுகிறார்கள். வைத்திய நிபுணர்களையழைத்து அவள் செய்கைகளுக்கு அவள் உத்திரவாதியல்ல என்று காண்பிக்க முடியுமா? அதாவது பைத்தியக்காரி என்று. ஒரு வேளை முடியும்! அவள் கொலை செய்தாள். அவள் அதற்குச் சொல்லும் காரணம், அதாவது போன யுத்தம் நினைவிலிருக்கிறது என்பது... அந்த வயோதிக ஜட்ஜ் கைகள் நடுங்கிக்கொண்டு கறுப்புக் குல்லாயை வாங்கிக் கொள்ளுகிறார். அவருக்கும் போன யுத்தம் நினைவிலிருக்கிறது. கொலையும் பைத்தியமும்... கொலையும் பைத்தியமும்...போன யுத்தத்தை நினைவில் வைத்திருக்கிறவர்கள்... |