![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
கனவு ஐவான் டர்ஜனீப் - ருஷியா அந்தக் காலத்தில் நான் என் தாயாருடன் ஒரு சிறு துறைமுகப் பட்டினத்தில் வசித்து வந்தேன். எனக்கு அப்பொழுதுதான் பதினேழு வயது நிரம்பிற்று. தாயாருக்கு முப்பத்தைந்து வயது. சின்ன வயதிலேயே அவளுக்குக் கலியாணமாகியிருந்தது. எனது தகப்பனார் இறந்தது எனக்கு நன்றாக ஞாபகத்திலிருக்கிறது. அப்பொழுது எனக்கு ஏழு வயதிருக்கும். என் தாயார் நல்ல அழகிதான்; ஆனால், முகத்தில் எப்பொழுதும் சோகக்களை தட்டியிருக்கும். அவளைச் சிறு வயதிலேயே எல்லாரும் ரொம்ப அழகி என்று சொல்லிக் கொள்வார்களாம். ஆனால் அவளது கண்களில் மிதக்கும் சோக விலாசத்தைப் போல் நான் வேறு எங்குமே கண்டதில்லை. எனக்கு அவள் மீது அத்யந்தப் பற்றுதல்... அவளும் என்னைப் பிரியமாக நடத்தினாள்... ஆனால் வாழ்க்கை சந்தோஷகரமானதாக இல்லை. ஏதோ அந்தரங்கமான பெருவியாதி போன்ற துயரம் அவளைத் தின்று கொண்டிருந்தது. அது எனது தந்தையின் மரணத்தால் மட்டிலும் ஏற்பட்டது என்று கூறிவிடமுடியாது. என் தந்தையின் நினைவும் அவள் மனத்தில் வெகு ஆழமாகப் பதிந்திருந்தது. அது மட்டிலும் இல்லை, அதைவிட வேறு ஏதோ ஒன்று அவளை வாட்டிக் கொண்டிருந்தது என்று எனக்குப் பட்டது. என் தாய் என் மீது பாசமாக இருந்தாள் என்று கூறினேன். ஆனால், சில சமயம் என்னை வெறுத்தாற்போல் நடந்துகொண்டாள். என்னை ஒரு சுமையாகப் பாவித்து உதறித் தள்ளினாள். சில சமயங்களில் அவளாலேயே தடுக்க முடியாத வெறுப்பு அவளைக் கவ்வியது. பிறகு அதற்காக மிகவும் வருந்துவாள். கண்ணீருடன் என்னைக் கட்டித் தழுவிப் பொறுமுவாள். இதற்கெல்லாம் அவளது உடைந்து போன தேக ஸ்திதியும், எனது நடத்தைகளுமே காரணம் என்று எண்ணினேன். ஆனால், அவளுடைய வெறுப்புக்கள், நான் மோசமாக - போக்கிரித்தனமாக - நடந்துகொண்ட சமயத்தில் எழவில்லை. எனது தாய் எப்பொழுதும் துஷ்டிக்கு அறிகுறியாகிய கறுப்பு உடையே அணிந்து வந்தாள். நாங்கள் தாராளமாகச் செலவு செய்து சௌகரியமாகத்தான் வாழ்ந்து வந்தோம். ஆனால் நாங்கள் ஒருவருடனும் பழகாது தனியாகவே வசித்து வந்தோம். 2 எனது தாயின் நினைவுகள், கவலைகள் - எல்லாம் எனது வளர்ப்பில் கவிந்தன. அவள் எனக்காகவே வாழ்ந்தாள் என்று சொல்லிவிடலாம். அப்படியிருந்தது அவள் பராமரிப்பு. இம்மாதிரியாகப் பெற்றோரின் கவலையெல்லாம் கவிழ்வது குழந்தைகளுக்கு நல்லதன்று; கெடுதலை விளைவிப்பதும் சகஜம். ஒற்றைக்கொரு பிள்ளை என்றால், கண்டபடி வளரும். தங்களைப் போல் பிள்ளைகளும் இருக்க வேண்டுமே என்று பெற்றோர்கள் நினைப்பதில்லை. ஆனால் நான் சீர்கெட்டுப் போகவில்லை. எனக்குப் பிடிவாதமும் கிடையாது. ஆனால் எனது நரம்புகள் மிகவும் தளர்ச்சியடைந்துவிட்டன. அதிலும் நான் மிகவும் பலவீனப்பட்ட பிள்ளை. என்னைப் பார்த்தால் என் தாயைப் பார்க்க வேண்டாம். அவ்வளவு முக ஜாடை ஒத்திருக்கும். என் வயதிற்கேற்ற சிநேகிதர்கள் கிடையாது. யாருடனும் பேசுவதற்குச் சங்கோஜம். என் தாயாருடன் கூட அதிகமாகப் பேசமாட்டேன். எனக்குப் புஸ்தகம் என்றால் பெரிய பைத்தியம். வெறுங்கனவு கண்டுகொண்டு, தனியாகத் திரிவதில் எனக்கு இச்சை. என்ன கனவுகள் என்று சொல்லுவது கஷ்டம். ஏதோ ஒரு கனவு. கதவு பாதி திறந்திருக்கிறது. அதற்குப் பின்புறம் ஏதோ மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆசை சொக்கும்படி அதன் முன்பு நான் நின்று காத்துக்கொண்டே இருப்பேன். வாசற்படியைத் தாண்டுவதில்லை. அதற்கப்பால் என்ன இருக்கிறது என்று யோசித்துக் கொண்டே, ஆசை உந்தித்தள்ள வாசற்படியில் நின்றுகொண்டே சில சமயம் அப்படியே தூங்கிப் போவதும் உண்டு. கவிதையுள்ளம் படைத்திருந்தால் பாட்டெழுதத் தொடங்கியிருப்பேன்; மதப்பற்று இருந்தால் சன்னியாசம் பெற்றிருப்பேன்; இரண்டும் என்னிடம் கிடையாததினால் கனவு கண்டுகொண்டே காத்திருந்தேன். 3 விபரமற்ற எண்ணங்கள், சிந்தனைகளுடன், சில சமயங்களில் தூங்கிவிடுவேன். முக்கால்வாசி எனது வாழ்க்கையே தூக்கந்தான். ஒவ்வொரு நாளும் கனவுகள் கண்டேன். இவற்றை நான் மறப்பதில்லை. அவற்றிற்குக் காரணம் கற்பித்து, எந்த இரகசியத்தை அறிவிக்கத் தோன்றியிருக்கின்றன எனக் கண்டுபிடிக்க முயற்சித்தேன். சில கனவுகள் ஒரே மாதிரியாகத் திரும்பத் திரும்ப வந்தன. அவை இப்படி வருவது ஆச்சரியமாக, விபரீதமாக, எனக்குத் தென்பட்டது. முக்கியமாக ஒரு கனவு என்னை அலட்டியது. ஒரு கரடுமுரடான குண்டும் குழியும் நிறைந்த சிறிய தெரு; பட்டணமும் பழைய காலத்து மோஸ்தர். ஊசிக் கூரையுள்ள பல மச்சுக்களடங்கிய கட்டிடங்கள்; வழிநெடுக நான் அந்தத் தெரு வழியாக என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு போகிறேன். எந்தக் காரணத்தாலோ அவர் எங்களை விட்டு ஒளிந்து கொண்டிருக்கிறார். அந்தத் தெருவிலேதான் ஏதோ ஒரு வீட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறார். நான் ஒரு சிறு வாசல் வழியாக நுழைந்து, கட்டையும் பலகையும் நிறைந்து கிடக்கும் முற்றத்தையும் கடந்து, இரண்டு வட்டமான ஜன்னல்கள் உள்ள சிறு அறைக்குள் செல்லுகிறேன். அந்த அறையின் மத்தியில் ஒரு நீண்ட அங்கியைப் போட்டுக்கொண்டு என் தகப்பனார் நிற்கிறார். அவர் வாயில் ஒரு சுங்கான் இருக்கிறது. ஆனால், அவரைப் பார்த்தால் என்னுடைய நிஜத் தகப்பனார் மாதிரியே இல்லை. நெட்டையாக, ஒல்லியாக, வளைந்த கிளி மூக்கும், கறுத்து இருண்ட கண்களும் உள்ளவர். அவரை நான் கண்டுபிடித்தது அவருக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. எனக்கும் அப்படித்தான். தயங்கித் தயங்கி நிற்கிறேன். அவர் வேறு பக்கம் திரும்பி, என்னவோ முனகிக் கொண்டு, இப்படியும் அப்படியுமாக நடக்கிறார். முனகிக்கொண்டே, என்னைப் பார்த்தவண்ணமாகத் தூரச் செல்லுகிறார். அறையும் வளர்ந்துகொண்டே அவர் நடப்பதற்கு இடம் கொடுக்கிறது. பிறகு மூடுபனியில் மறைந்துவிடுகிறார். நான் தகப்பனாரை இழந்துவிட்டேன் என்று பயந்து, அவரைப் பின்பற்றி வேகமாக ஓடுகிறேன். அவரைக் காணவில்லை. அவருடைய கோபமான உறுமல்தான் கேட்கிறது. நான் திடீரென்று விழித்துக் கொள்ளுகிறேன். பிறகு, தூக்கம் வரவில்லை. மறுநாள் முழுவதும் இது என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். பயனில்லை. 4 ஜூன் மாதம் வந்தது. நாங்கள் வசித்த பட்டினத்தில் அந்தக் காலந்தான் இறக்குமதிக் காலம்; கப்பல்கள் ஏராளமாகத் துறைமுகத்தில் வந்து சரக்குகளை இறக்கும். தெருவிலே புதுப்புது ஆட்களின் நடமாட்டமும் அப்பொழுதுதான் அதிகம். அந்தச் சமயத்தில் துறைமுகப் பக்கத்தில் சுற்றுவதற்கு எனக்கு மிகவும் பிரியம். ஒருநாள் காப்பிக்கடைப் பக்கமாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது, அங்கு ஒரு மனிதன் தென்பட்டான். மேலே நீளமான கறுப்புச் சட்டை; தலையிலே வைக்கோல் தொப்பி; கைகளை இறுக மார்பில் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். நீண்ட கறுத்த முடி நெற்றியிலிருந்து மூக்கு வரை தொங்கிக் கொண்டிருந்தது. வாயில் ஒரு சுங்கான். அந்த மனிதனை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. எங்கே? மனத்தில் இவ்வளவு ஆழமாகப் பதிந்த முகம் யாருடையது? என் நினைவு என்னைத் தூக்கிவாரிப் போட்டது. நான் கனவில் தேடிக்கொண்டிருக்கும் எனது கனவுத் தந்தைதான். சந்தேகமில்லை; பட்டப் பகலின் சுயப் பிரக்ஞையுடன் நுழைந்து, ஒரு கிண்ணம் பீரும், ஒரு பத்திரிகையும் கொண்டு வரும்படி கட்டளையிட்டுவிட்டு, காலியாகக் கிடந்த மேஜையின் பக்கத்தில் உட்கார்ந்தேன். பத்திரிகையினால் நன்றாக முகத்தை மறைத்துக்கொண்டு, அதன் விளிம்புகளின் மேலாக எனது கனவுத் தந்தையின் முகத்தைப் பார்க்கிறேன். அவர் யாருக்காகவோ காத்திருப்பதாக எனக்குப் பட்டது. அவர் தமது குனிந்த தலையை நிமிரவே இல்லை. சில சமயங்களில், 'இந்த முக ஜாடையெல்லாம் நானாகக் கற்பனை செய்து கொண்டது. உண்மையில் நான் இரவில் காண்பவருக்கும் என் முன்பு உட்கார்ந்திருப்பவருக்கும் சம்பந்தமே கிடையாது' என்று பட்டது. அந்தச் சமயத்தில் அவர் என் பக்கமாக முகத்தைச் சிறிது நிமிர்த்தினார். என் வாயிலிருந்து சிறு சப்தம் கூட வெளிப்பட்டது. அவரே தான் என்பதில் சந்தேகமே இல்லை. கொஞ்ச நேரத்தில் அவர் நான் அடிக்கடி அவரைப் பார்ப்பதைக் கண்டு கொண்டார். முதலில் அவர் முகத்தில் கோபம் ஜொலித்தது; எழுந்திருக்க முயன்று மேஜையில் சாத்தியிருந்த பிரம்பைத் தள்ளிவிட்டார். நான் உடனே அதை எடுத்து அவரிடம் கொடுத்தேன். சிறிது வேண்டா வெறுப்புடன், புன்சிரிப்புத் தவழ, எனக்கு வந்தனமளித்துவிட்டு, எதையோ கண்டவர்போல் புருவத்தை நெரித்து, என்னையே நோக்கினார். "நீ மரியாதையான பையன் போலிருக்கிறது. இந்தக் காலத்தில் அதேது? வீட்டில் உன்னை நன்றாக வளர்த்திருக்கிறார்கள்?" என்று திடீரென்று என்னிடம் சொன்னார். நான் என்ன பதில் சொன்னேன் என்று ஞாபகம் இல்லை. அப்படித்தான் பேச்சு வளர்ந்தது. அவரும் நம் தேசத்தினராம்; சமீபத்தில்தான் அமெரிக்காவிலிருந்து திரும்பினாராம். அங்குதான் ரொம்ப காலம் தங்கியிருந்தாராம். அவர் யாரென்று கேட்டதற்கு ஏதோ ஒரு பெயரைச் சொன்னார். எனது கனவுத் தந்தை மாதிரி உறுமலுடனேயே அவர் பேச்சை முடித்தார். என் பெயரைக் கேட்டதும், அவர் முகத்தில் ஆச்சரியக் குறி தோன்றியது. அந்த ஊரில்தான் நான் ரொம்பக் காலம் இருந்தேனோ என்றும், யாருடன் வசிக்கிறேன் என்றும் கேட்டார். நான் "தாயுடன் வசிக்கிறேன்" என்றேன். "அப்படியானால் உன் தகப்பனார்?" "அவர் இறந்து ரொம்பக் காலமாகிறது." என் தாயார் பெயரைக் கேட்டார். நான் சொன்னதும் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு, தாம் ஒரு விபரீதப் பிராணி என்று சொல்லிக் கொண்டார். நாங்கள் எங்கே வசிப்பது என்று கேட்டார். எங்கள் இடத்தைச் சொன்னேன். 5 சம்பாஷணை ஆரம்பித்த பொழுது இருந்த பயம் பின்னர் தெளிந்தது. ஆனால் அவர் சிரிப்பும் கேள்விகளும் எனக்குப் பிடிக்கவில்லை. அவருடைய கண்களில் தோன்றிய குறிகளும், அவை என்னைக் குத்துவன போலிருந்தன. அவற்றில் ஒரு பேய் - ஆசை, ஒரு பெருமிதம், எனக்குப் பயத்தை அளித்தது. எனது கனவில் இந்தக் கண்கள் இல்லை. அவர் முகத்தில் காணப்பட்ட வெட்டுக்காயம் இல்லை. முகம் களைத்திருந்தாலும், அந்தக் கனவில் வாலிபக்களை யிருந்தது. எனது கனவுத் தந்தைக்கு இவர் முகத்தில் இருக்கும் வெட்டுக்காய வடு கிடையாது. நான் எனது விபரத்தைச் சொல்லும்போது, ஒரு நீக்ரோவன் உள்ளே வந்து அவரை அழைத்தான். "அப்பா எவ்வளவு நேரம்?" என்று சொல்லிக்கொண்டே, உள்ளே அவனுடன் எழுந்து சென்றுவிட்டார். வெகு நேரம் கழித்து உள்ளெல்லாம் சென்று தேடினேன். அவர்கள் பின்புறமாகச் சென்று விட்டார்கள் போலிருக்கிறது. என் தலை வலிக்க ஆரம்பித்தது. கடற்கரையில் சிறிது சுற்றிவிட்டு வீடு திரும்பினேன். 6 வெளி வாசலில் எங்கள் வேலைக்காரி என்னை எதிர் நோக்கி ஓடி வந்தாள். என்னமோ விபரீதம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று விரைந்து சென்றேன். வேலைக்காரி, அரைமணி நேரத்திற்கு முன்பு எனது தாயாரின் படுக்கையறையிலிருந்து ஒரு பயத்தினால் வீறிட்டெழும் கூக்குரலைக் கேட்டு, அங்கு ஓடிப் பார்க்க, எனது தாயார் மயங்கிக் கிடந்தாளாம். சிறிது நேரத்தில் பிரக்ஞையைப் பெற்றாலும், படுக்கையிலேயே கிடக்க வேண்டியதாயிற்று. என்ன கேட்டாலும் ஒன்றும் பதில் சொல்லாது பயந்து நடுங்கிக்கொண்டு மிரள மிரள விழித்தாளாம். வேலைக்காரி வைத்தியருக்கு ஆள் அனுப்ப, அவர் மருந்து கொடுத்த பிறகும், காரணம் கூற மறுத்து விட்டாளாம். தோட்டக்காரன், சப்தம் கேட்ட சமயத்தில் பூந்தொட்டிகளைத் தள்ளிக்கொண்டு யாரோ காம்பௌண்டு கேட்டிற்கு ஓடியதைக் கண்டதாகச் சொன்னான். அவன் சொன்ன அடையாளம் நான் சிறிது முன்பு சந்தித்த ஆசாமியினுடையது போல இருந்தது. நான் என் தாயாரிடம் சென்று, "இங்கு யாராவது வந்தார்களா?" என்று கேட்டேன். "யாரும் வரவில்லை" என்று படபடவென்று சொல்லிவிட்டு, "ஏதோ ஒரு சொப்பனம் கண்ட மாதிரித் தோன்றியது," என்று முகத்தை மூடிக்கொண்டாள். "பகலிலா?" என்றேன். "இப்பொழுது என்னைத் தொந்தரவு செய்யாதே. ஒரு காலத்தில் உனக்குச் சொல்லுகிறேன்" என்று என்னை அனுப்பிவிட்டாள். அன்றிரவு வரை எழுந்திருக்கவேயில்லை. எல்லோருக்கும் அதிசயமாக இருந்தது. ஒன்றும் புரியவில்லை. 7 இரவில் நான் அவளிடம் சென்றேன். பக்கத்தில் உட்கார வைத்து, "நான் சொல்வதைக் கேள்" என்று ஆரம்பித்தாள். "நீ இன்னும் சிறுவனல்ல. உனக்கும் தெரிய வேண்டியதுதான். எனக்கு அந்தக் காலத்தில் ஒரு சிநேகிதை உண்டு. அவள், தான் காதாலித்த புருஷனைத்தான் மணந்தாள். சிறிது நாள் கழித்து பட்டணத்திற்கு குஷாலாக இருக்கச் சென்றார்கள். நாடகமென்ன, சங்கீதக் கச்சேரியென்ன, கேட்கவேண்டுமா பணம் இருந்தால்? எனது சிநேகிதையும் அடக்கஒடுக்கமானவள் அல்ல, படாடோ பக்காரி. ஆனால் மனசில் கல்மிஷமில்லாதவள். வாலிபர்கள் அவள் மீது கண் வைத்தார்கள். அவர்களிலே முக்கியமான ஒரு ராணுவ அதிகாரி எப்பொழுது பார்த்தாலும் அவளையே இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பான். "ஆனால் அவளிடம் சிநேகம் பண்ணிக்கொள்ளவில்லை; பேசியதுகூடக் கிடையாது. எப்பொழுது பார்த்தாலும் முரட்டுத்தனமாக அவளையே விழித்துப் பார்த்துக் கொண்டிருப்பான். அதனால் அவளுக்குப் பட்டணவாசத்தின் சுகம் கூட விஷமாயிற்று. புருஷனை ஊருக்குப் புறப்படும்படி அவசரப்படுத்தினாள். ஒருநாள் அவள் புருஷன் அந்த ராணுவ உத்தியோகஸ்தனுடைய சிநேகிதர்கள் கிளப்பிற்குச் சீட்டு விளையாடச் சென்றான். முதல் முதலாக, அவள் அன்று தான் அங்கு தனியாக இருந்தது. வெகு நேரமாகப் புருஷன் வரவில்லை. அவள் மனத்தில் பயம் தட்டியது. வேலைக்காரியை அனுப்பிவிட்டுப் படுக்கச் சென்றாள். சுவரில் யாரோ தட்டுவது மாதிரிக் கேட்டது. பயம் அவள் உடம்பையெல்லாம் நடுக்கியது. சுவரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு மூலையில் விடி விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. சுவரில் ஒரு பக்கம் திறந்தது. அதிலிருந்து அந்தக் கறுப்புக் கண்களுடைய முரடன் வெளிப்பட்டான். பயம் அவள் வாயை அடைத்தது. அவள் பக்கமாக நெருங்கினான். மிருகம் மாதிரி அவள் தலையில் எதையோ போட்டு மூடினான். "அதற்கப்புறம் என்ன நடந்தது என்று எனக்கு ஞாபகமில்லை! சுத்தமாக ஞாபகமேயில்லை. மரணவேதனையாக, கொலை மாதிரி... மூடுபனி விலகியது. நான்... எனது சிநேகிதைக்குப் புத்தி தெளிந்தது. "பிறகு சத்தமிடப் பலம் வந்தது. "பிறகு அவள் கணவன் வெகு நேரம் கழித்து வந்து அவளைப் பார்த்தான். அவள் முகம் அடையாளம் தெரியாதபடி பயங்கரமாக மாறியது. அவளைப் பல கேள்விகள் கேட்டான். அவள் பதில் சொல்லவில்லை. திரைக்குப் பின் கள்ளக் கதவு இருந்தது. அவளுடைய கையிலிருந்த திருமணக் கணையாழியும் அத்துடன் காணாமற் போய்விட்டது. அது சாதாரணமானதல்ல. அதில் ஏழு தங்க நட்சத்திரங்களும், ஏழு வெள்ளி நட்சத்திரங்களும் செதுக்கப்பட்டிருந்தன. அது குடும்பச் சொத்து. அவள் அதைப் போக்கடித்து விட்டாள் என்று பிரமாதமாக நினைத்தான். அவனும் கவலையில் ஆழ்ந்தான். என் சிநேகிதைக்கு உடம்பு குணப்பட்டதும் ஊருக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் புறப்படும் தினத்தில் குப்பைத் தொட்டியில் ஒருவனுடைய பிரேதம் கிடந்தது. மண்டையில் பலத்த காயம். அந்த முரட்டு அதிகாரிதான் சீட்டாட்டத்தில் கொல்லப்பட்டான். "எனது சிநேகிதையும் ஊருக்குப் போனாள். சிறிது காலத்தில் அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவளுடைய புருஷனுக்கு 'அது' தெரியாது. அவளால் எப்படிச் சொல்ல முடியும்? அவளுக்கே திட்டமாகத் தெரியாது. ஆனால் பழைய சந்தோஷம் மறைந்தது. அதன் பிறகு வந்த மன இருள் அகலவில்லை. அதற்கு முன்னும் பின்னும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை... அந்த ஒரு பையன் தான்..." என் தாயாரின் உடல் முழுவதும் நடுங்கியது. அவள் தனது முகத்தை மூடிக்கொண்டாள். "அவள் குற்றமென்று நீ சொல்லுவயா? அவளுக்குக் கிடைத்த இந்தத் தண்டனை அநியாயமானது என்று கடவுள் முன்பு கூறவும் அவளுக்கு உரிமை இல்லையா? இத்தனை காலம் கழித்து மறுபடியும் வந்து துன்பத்தால் செல்லரிக்கப்பட்ட இருதயத்தை ஏன் தாக்கவேண்டும்? கொலைகாரனுக்குப் பேய்க் கனவு தோன்றுவதில் அதிசயமில்லை... ஆனால் எனக்கு..." அவள் பிரக்ஞையிழந்து ஜன்னியில் பிதற்ற ஆரம்பித்து விட்டாள். 8 என் தாய் எனக்குக் கூறிய கதை எனதுள்ளத்தை எப்படிச் சிதறடித்தது! முதல் வார்த்தையிலிருந்தே அறிந்து கொண்டேன். அவள் வாயிலிருந்து தவறுதலாக நழுவிய வார்த்தை எனது உத்தேசத்தைத் திடப்படுத்தியது. எனது கனவில் நான் கண்டவர்தான் எனது உண்மையான தந்தை. அவர் அவள் நினைத்திருந்தது போல், கொல்லப்படவில்லை. அவளைப் பார்க்க வந்து பயப்படுத்திவிட்டார். என்மேல் அவளுக்கிருந்த வெறுப்பு, அவளது துயரம், எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, இவற்றையெல்லாம் நினைக்க நினைக்க எனது மூளை சுழன்றது. இப்படிக் கொதித்துச் சுழன்ற எனது மூளையில் ஒரு எண்ணம் மட்டிலும் தரையிட்டது போல் பதிந்தது. அந்த எனது தந்தையை நான் திரும்பவும் சந்திக்க வேண்டும். ஏன்? எதற்காக? அது மட்டும் புரியவில்லை. அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஒரே எண்ணந்தான் எனக்குப் பெரிய பைத்தியமாயிற்று. 9 முதன் முதலாக நான் அவரைச் சந்தித்த காப்பிக் கடைக்குச் சென்றேன். அங்கு ஒருவருக்காவது அவரைப் பற்றித் தெரியவில்லை. கடைக்காரன் நீகிரோவனை ஞாபகத்தில் வைத்திருந்தான். ஆனால் அவர்கள் எங்கு சென்றார்கள், எங்கு தாமதிக்கிறார்கள் - ஒன்றும் அவனுக்குத் தெரியாது. இந்த நிலையில் ஒவ்வொரு ஹோட்டலாகத் தேடியும் பலன் இல்லை. திரும்பியபொழுது என் தாய் படுக்கையை விட்டு எழுந்துவிட்டாள்; ஆனால் என்னுடன் பேசப் பிரியப்படவில்லை. இப்படியிருக்கையில் வெளியில் பயங்கரமான புயல் ஒன்று எழுந்தது. கதவுகளும் ஜன்னல்களும் காற்றுத் தேவனின் கோபத்தில் தறிகெட்டு அடித்துக் கொண்டிருந்தன. ஏதோ ஒரு பெரிய பிரம்மராக்ஷஸு, தெரு வழியாக ஓலமிட்டுக்கொண்டு, வீடுகளைத் தவிடு பொடியாக்கிச் செல்லுவதுபோல் இருந்தது அப்பெரும் புயல். இரவு முழுவதிலும் எனக்குத் தூக்கமில்லை. உஷைத்தேவி திசைச் சாளரத்தில் எட்டிப் பார்க்கும் காலை நேரம். சற்றுக் கண்ணயர்ந்த பொழுது யாரோ என்னை அதிகாரத் தொனியுடன் கூப்பிடுவது போல் கேட்டது. என்ன ஆச்சரியம்! நான் அக்குரலைக் கேட்டவுடன் பயப்படவில்லை. மிகுந்த சந்தோஷத்துடன் ஆடைகளை எடுத்தணிந்துகொண்டு எனது எண்ணம் நிறைவேறும் என்ற உற்சாகத்துடன், வெளியேறினான். 10 புயல் நின்றுவிட்டது. ஆனால் காற்றின் வேகம் கொஞ்சம் அசாதாரணமாகவே இருந்தது. வழியெல்லாம் இரவில் அடித்த புயலால் இடிந்து விழுந்த வீடுகளின் பாகங்கள். "நேற்று இரவில் கடலில் என்ன நடந்திருக்கும்?" என்று எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. தூரத்தில் காணும் துறைமுகத்தின் பக்கம் திரும்பினேன். கால்கள் என்னையறியாமலே அத்திசையில் நடந்தன. அட, என்ன! இருபது அடி தூரத்தில் நான் முன்பு கண்ட நீகிரோவன் என் முன்னால் நடந்து கொண்டிருந்தான்! அவனை வேகமாகப் பின் தொடர்ந்து ஓடினேன். அவன் திடீரென்று திரும்பி, தெருப் பக்கம் முன்னால் நீண்டிருந்த ஒரு வீட்டின் மூலையைக் கடந்து திரும்பினான். நான் ஓடிச் சென்றேன். அந்தச் சந்து வெறிச்சென்று கிடந்தது. தெருவில் ஒரு மனிதன் எப்படித் திடீரென்று மறைந்து விட முடியும்! இப்படி ஆச்சரியத்தால் நான் திக்பிரமையடைந்து நிற்கையில் வேறு ஒரு அதிசயமான விஷயத்தை உணர்ந்தேன். அந்தச் சந்துதான் நான் கனவில் கண்டது. நான் முன் நடந்தேன். பழைய கனவில் தோன்றிய வீடு! கதவைத் தட்டினேன். வெகு நேரம் கழித்து ஒரு ஸ்திரீ வந்து கதவைத் திறந்தாள். நான் என் தந்தையைப் பற்றி விசாரித்தேன். அவர் அமெரிக்காவிற்குச் சென்று விட்டாராம். பிறகு அந்த நீகிரோவனைப்பற்றி விசாரித்தேன். அதற்குள், "எஜமான் வந்ததும் பேசிக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார்கள் அங்கிருந்தவர்கள். இனி என்ன செய்வது? 11 சோர்ந்து கடற்கரைப் பக்கமாகச் சென்றேன். கடலில் அமைதியில்லை. நுரைக்கும் அலைகள் மணலில் மோதிக் கொந்தளித்து மடிந்து வெறும் உப்புத் தண்ணீராகிக் கொண்டிருந்தன. மேலே கடற்பறவைகள் ஓலமிட்டுப் பறந்தன. சற்றுத் தூரத்தில் ஏதோ ஒன்று கிடந்தது. நெருங்கிப் பார்த்தேன். ஒரு பிரேதம்! பாறையின் பக்கத்தில் பாசியும் செத்தையும் மூடிக் கிடந்தது. விதி இழுப்பது போல் கால்கள் என்னை இழுத்துச் சென்றன. அவர்தான்! என் தந்தை! புயற்காற்று தன் வேலையைச் செய்து விட்டது. அவர் அமெரிக்காவைப் பார்க்கவில்லை. என் தாயின் வாழ்வைக் குலைத்த என் தந்தை! வஞ்சம் தீர்ந்ததாக என் மனத்தில் ஒரு திருப்தி ஏற்பட்டது. ஆனால் அதே சமயத்தில் உள்ளத்தில் அர்த்தமாகாத ஒரு சுமை ஏறியது. "இதுதான் இரத்த சம்பந்தமோ!" என்று எனக்குப் பட்டது. இன்னும் நெருங்கிப் பார்த்தேன். அவர் கையில் ஏதோ இறுகப் பற்றப்பட்டிருந்தது. அதுதான்! எனது தாயின் கலியாண மோதிரம். எனது பலம் கொண்ட மட்டிலும் முயற்சித்து அதை எடுத்துக் கொண்டு, திரும்ப ஓடிவந்து விட்டேன். என் தாயிடம் கிரமமாகச் சொல்ல வேண்டுமென்ற நினைப்பு. ஆனால் சொல்ல முடியவில்லை. மோதிரத்தை மட்டிலும் அவளிடம் கொடுத்தேன். அவள் பதறினாள். பிரக்ஞையிழப்பாள் போலிருந்தது. பிறகு நான் சொல்லியதைக் கேட்டாள். அவள் உடல் பலமுறை நடுங்கியது. "நான் பார்க்க வேண்டும்; அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்" என்றாள். என்ன தடுத்தும் பயன் இல்லை. இருவரும் சென்றோம். இருவரும் கடற்கரையில் பாறையின் பக்கத்தில் சென்றோம். பழைய பாசி மட்டிலும் இருந்தது. சடலத்தைக் காணவில்லை! நானும் என் தாயும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதற்குக் கூடப் பயம்! எழுந்து சென்று விட்டாரோ? "இறந்து கிடந்ததைப் பார்த்தாயா?" என்று மெதுவாகக் கேட்டாள். நான் தலையை அசைத்தேன். நான் கண்ட மூன்று மணி நேரத்திற்குள் பிரேதத்தை யாரோ அகற்றி விட்டார்கள். அது என்னவாயிற்று என்று கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். ஆனால், முதலில் என் தாயைக் கவனிக்க வேண்டும். போகும்பொழுதே என் தாயாருக்கு ஜுரம். மனவுறுதிதான் அவளைக் கொண்டு சென்றது. மிகவும் சிரமத்துடனேயே அவளை வீட்டுக்குக் கொண்டு வர வேண்டியிருந்தது. அவள் உடல் குணப்பட்டவுடன் நான் 'அவரை'த் தேடவேண்டும் என்று கட்டளையிட்டாள். என்ன செய்தும் பயன்படவில்லை. கடற்கரை, கிராமம் எல்லாம் சுற்றியாகிவிட்டது. ஓரிடத்தில் கடலில் கிடந்த ஒருவரைப் புதைத்தார்களாம். அங்கு சென்று விசாரித்தேன். அவர் அடையாளமாகத் தெரியவில்லை. அவர் சென்ற கப்பலைப் பற்றி விசாரித்தேன். முதலில் கப்பல் புயலில் முழுகிவிட்டது என்று கூறினார்கள். பிறகு நியூயார்க்கில் வந்து சேர்ந்தது என்று கூறினார்கள். என்ன செய்வது என்று தெரியாது. நீகிரோவனைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினேன். பரிசுகள் கொடுப்பதாகப் பத்திரிகையில் பிரசுரித்தேன். நான் வீட்டில் இல்லாதபொழுது அவன் வந்து காத்திருந்து சென்றுவிட்டான் என்று வேலைக்காரி கூறினாள். சென்றவன் திரும்பவே இல்லை. என் தந்தையைப் பற்றிய புலனும் ஒன்றும் தெரியாது மறைந்தது. அதைப்பற்றி என் தாயார் பிறகு பேசவே இல்லை. ஒரு தடவைதான் அந்தக் கனவைப் பற்றி, "ஆமாம்! அப்படித்தான் - " என்று ஆரம்பித்தவள் முடிக்கவேயில்லை. நெடுங்காலம் வியாதியுற்றிருந்து குணப்பட்டு, பிறகு அவள் மரணமடைந்தாள். ஆனால், அந்தச் சம்பவத்திற்கப்புறம், பழைய வாஞ்சையுடன் என்னிடம் பழகியதேயில்லை. காலதேவன் பழைய நினைவுகளை - பழைய விஷயங்களை - மாற்றுவதில் நிபுணன். ஆனால் இருவரிடையில் சங்கோஜம் ஏற்பட்டு விட்டால் அவனுக்கு ஒன்றும் செய்ய முடியாது. பிறகு அந்தக் கனவு எனக்கு ஏற்பட்டதே இல்லை. இப்பொழுது எனது தந்தையை நான் தேடுவது கிடையாது. சிற்சில சமயங்களில் சுவருக்கப்புறம் ஓலங்கள் கேட்பது போல் துயரத்தில் பிரலாபங்கள் கேட்கின்றன. மதில் சுவரோ கடக்க முடியாதது. அந்த ஓலங்கள் என் இதயத்தைக் கிழிக்கின்றன. அவை என்னவென்று எனக்குப் புரியவேயில்லை. சில சமயம் மனித ஓலம் மாதிரியும், மறுகணம் சமுத்திர கோஷம் மாதிரியும் கேட்கிறது. இதோ மிருகத்தின் உறுமல் மாதிரி கேட்கிறது. துயரமும் பயமும் என்னைக் கவ்வி எழுப்புகின்றன. விழிக்கிறேன். |