![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
பைத்தியக்காரி மொப்பஸான் - பிரான்ஸ் "ஆமாம், நீ சொல்வது முன்பு பிரான்சிற்கும் ருஷியாவிற்கும் சண்டை நடந்ததே, அப்பொழுது நடந்த பயங்கரமான சம்பவத்தை என் நினைவிற்குக் கொண்டு வருகிறது" என்று கூறத் தொடங்கினார் முஸே டி' என்டோலின். பாபர்க் கு கார்மீலில் இருக்கிற எனது வீடுதான் உங்களுக்குத் தெரியுமே! ருஷ்யர்கள் படையெடுத்து வந்தபொழுது எனது பக்கத்து வீட்டில் ஒரு பைத்தியக்காரி வசித்து வந்தாள். அவளுக்குப் பைத்தியம் ஏற்பட்டதே ஒரு பெருங்கதை. இந்த உலகத்திலே துன்பத்தில் யாருக்குத்தான் பங்கு கிடையாது! அந்த ஸ்திரீக்கு துன்பம் தனது ஏகபோக அன்பைச் சொரிந்தது. அவளது இருபத்தைந்தாவது வயதில் தகப்பனாரை இழந்தாள். அவர் இறந்த ஒரு மாதத்திற்குள் அவள் புருஷனும், அப்பொழுதுதான் பிறந்த குழந்தையும் அவரைத் தொடர்ந்து சென்றார்கள். இப்படி ஒன்றன்பின் ஒன்றாக வந்த துன்பத்தின் கடாக்ஷத்தால் அவள் படுத்த படுக்கையாகி, பல நாட்கள் ஜன்னி கண்டு பிதற்றினாள். இதன் பிறகு கொஞ்ச நாள் சோர்வும், அமைதியும் அவளைக் கவ்வின. அசையாது அலுங்காது, படுத்த படுக்கையாக, வெறுமெனக் கண்களை மிரள மிரள விழித்துக்கொண்டு கிடந்தாள். உடம்பு குணமாகி விட்டது என்று நினைத்து அவளைப் படுக்கையைவிட்டு எழுந்திருக்கும்படி செய்ய முயற்சித்தார்கள். ஆனால், அவளைத் தூக்க முயன்றவுடன், அவள் கூச்சலிட்டு, கொல்லப்படுபவள் போல் ஓலமிடத் தொடங்கியதால், குளிப்பாட்டி உடைகளை மாற்றுவதற்கு மட்டுமே அவளைப் படுக்கையிலிருந்து எடுக்கவும், மற்றபடி படுத்த படுக்கையாகவே கிடக்கவும் அனுமதித்தார்கள். வயது முதிர்ந்த வேலைக்காரி ஒருத்தி அவள் பக்கத்தில் இருந்து அவளுக்கு வேண்டிய உதவியைச் செய்து கொண்டிருந்தாள். அந்தப் பிரமை மண்டிய உள்ளத்தில் என்ன ஏற்பட்டுக் கொண்டிருந்தது என்று ஒருவருக்கும் ஒன்றும் தெரியாது. அவள் மறுபடி பேசியதே கிடையாது. என்ன நடந்தது என்று திட்டமாக அறியாமல் வெறும் துன்பக் கனவு கண்டு கொண்டிருக்கிறாளா? அல்லது அவளது கலங்கிய மூளை சலனமற்றுவிட்டதா? இப்படிப் பதினைந்து வருஷங்கள் கழிந்தன. இத்தனை காலமும் அவள் உயிர்ப் பிணமாகக் கிடந்தாள். சண்டை ஆரம்பித்தது. டிஸம்பரில் ஜெர்மானியர் கார்மீலுக்குள் வந்தனர். எல்லாம் நேற்று நடந்த மாதிரி இருக்கிறது. அப்பொழுது நல்ல மாரிக்காலம். ஜலம் கல்லைப் போல் உறைந்து பாறைகளைக்கூட உடைத்துத் தகர்த்துவிடும் போல் இருந்தது. எனக்கோ, அங்கு இங்கு அசைய முடியாதபடி கீல்வாதம். நாற்காலியில் சாய்ந்தபடியே அவர்கள் தட்தட் என்று கால் வைத்துப் போகும் சப்தத்தைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ராணுவப் படை இடைவிடாமல் சென்று கொண்டேயிருந்தது; தட்தட் என்ற சப்தம் காதில் இடித்துக் கொண்டேயிருந்தது. ராணுவ அதிகாரிகள் தங்கள் படைகளைப் பிரித்து, உணவு கொடுக்கும்படி, வீட்டுக்குப் பத்து இருபது பேராக எங்கள் ஊர்க்காரர் மீது சுமத்திவிட்டனர். எனது பக்கத்து வீட்டிற்குப் பன்னிரண்டு பேர் சுமத்தப் பட்டனர். அதில் ஒருவன் ராணுவ அதிகாரி - மேஜர் - வெறும் தடியன், முரடன். கொஞ்ச நாட்களுக்கெல்லாம் அமைதியாக நடந்து வந்தது. பக்கத்து வீட்டுக்காரி நோயாளி என்று அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டது. முதலில் அவன் அவளைக் கவனிக்கவில்லை. கொஞ்ச நாட்களில் அவர்கள் பார்க்க முடியாத ஸ்திரீ என்பது அவனது மனத்தை உறுத்தியது. அவளுக்கு என்ன வியாதி என்று கேட்டான். தீராத் துயரத்தால், பதினைந்து வருஷங்களாகப் படுத்த படுக்கையாக இருக்கிறாள் என்று கூறினார்கள்; அவன் நம்பவில்லை; அந்தப் பைத்தியம் தன் மனத்தில் இதைப் பெருமை என்று நினைத்துக்கொண்டு, 'படுக்கையை விட்டு எழுந்திருக்க மாட்டேன்' என்கிறது என்று எண்ணிக்கொண்டான். இப்படி நோயாளி என்று வேஷமிட்டு, பிரஷ்யர் முன்பு வராமல், ஏமாற்ற முயலுகிறாள், அடைந்து கிடக்கிறாள் என்று எண்ணிவிட்டான். அவன், அவளைப் பார்க்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தி, அவள் அறைக்குச் சென்றான். "எழுந்து கீழே வா! நாங்கள் எல்லோரும் உன்னைப் பார்க்க வேண்டும்" என்று முரட்டுத்தனமாகக் கூறினான். அவள் பதில் சொல்லாமல் மிரள மிரள விழித்தாள். "அதிகப் பிரசங்கித்தனத்தை நான் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டேன். மரியாதையாக நீ எழுந்து நடந்து கீழே வராவிட்டால், உன்னை நடக்கச் செய்ய எனக்குத் தெரியும்!" என்றான் அந்த முரட்டு மேஜர். அவள் அவனைக் கேட்டதாகத் தெரியவில்லை. சலனமற்றுக் கிடந்தாள். அவள் பேசாமல் இருப்பதே தன்னை அவமரியாதை செய்வது என்று நினைத்துக்கொண்டு, "நாளைக்கு நீ கீழே இறங்கி வராவிட்டால்..." என்று தலையை அசைத்து உருட்டி விழித்துவிட்டு அவ்விடத்தை விட்டு வந்துவிட்டான். மறுநாள் கிழட்டு வேலைக்காரி பயந்துபோய் அவளுக்கு உடைகளை அணிவிக்க முயன்றாள். அதற்குப் பைத்தியம் கூச்சலிட்டுக்கொண்டு தன் முழு பலத்தோடும் முரண்டியது. அந்த முரடன் சப்தத்தைக் கேட்டு மேலே ஓடினான். வேலைக்காரி அவனை இடைமறித்து, காலில் விழுந்து, "அவள் வரமாட்டேன் என்கிறாள், எஜமான். மன்னிக்க வேண்டும். துயரத்தில் மூளை கலங்கியவள்" என்றாள். படைவீரன் கோபத்தால் துடித்தாலும், சிறிது தயங்கினான். அவளைப் பிடித்து இழுத்து வரும்படி உத்தரவிடவில்லை. பிறகு, உடனே கலகலவென்று சிரித்துவிட்டு, ஜெர்மன் பாஷையில் உத்தரவிட்டான். சிறிது நேரங் கழித்து, சில சிப்பாய்கள் ஒரு படுக்கையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்கள். அந்தக் கலைக்காத படுக்கையில், பித்துக்குளி, மௌனமாக, என்ன நடக்கிறது என்பதைப் பற்றிச் சிறிதும் கவனிக்காது, படுத்துக் கிடந்தது. படுக்கையைவிட்டு எழுப்பாதவரை அதற்கு என்ன கவலை? அவள் பின்பு ஒரு சிப்பாய் பெண்கள் உடையை எடுத்துக்கொண்டு நடந்தான். அந்த முரட்டு மேஜர், "நீயாக உடுத்திக்கொண்டு நடந்து வருகிறாயா, இல்லையா? அதைத்தான் பார்க்கிறேன்!" என்று கைகளைத் தேய்த்துக் கொண்டான். இந்தக் கூட்டம் இமாவில் காட்டுப் பக்கம் சென்றது. இரண்டு மணி நேரங் கழித்து, சிப்பாய்கள் மட்டும் தனியாகத் திரும்பினார்கள். பைத்தியக்காரி என்னவானாள் என்பது தெரியவில்லை. அவளை என்ன செய்தார்கள்? எங்கு கொண்டு சென்றார்கள்? ஒருவருக்கும் ஒன்றும் தெரியாது. பனி அதிகமாகப் பெய்தது. எங்கு பார்த்தாலும் உறைபனி. காடுகள் பனித் திரைகள் மாதிரி நின்றன. ஓநாய்கள் வீட்டுக் கதவண்டைவரை வந்து ஊளையிடத் தொடங்கின. அந்தப் பைத்தியத்தின் கதி என் சிந்தனையைவிட்டு அகலவில்லை. பிரஷ்ய அதிகாரிகளிடம் இதற்காக மனுச்செய்து கொண்டேன். அதற்கே என்னைச் சுட்டுவிட முயற்சித்தார்கள். வசந்த காலம் வந்தது. வீட்டுக்குத் தலைவரியாகச் சுமத்தப்பட்ட படை சென்றுவிட்டது. ஆனால், எனது பக்கத்து வீடு அடைத்தபடியே கிடந்தது. வீட்டைச் சுற்றிய தோட்டத்தில் புல்லும் பூண்டும் கண்டபடி வளரத் தொடங்கின. கிழட்டு வேலைக்காரி மாரிக் காலத்திலேயே இறந்துவிட்டதால், அந்தச் சமாசாரத்தைப் பற்றி ஒருவரும் கவலை கொள்ளவில்லை. நான் ஒருவன் தான் அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். அவளை என்ன செய்தார்கள்? அவள் காட்டு வழியாகத் தப்பித்துக் கொண்டாளா? யாராவது அவளைக் கண்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்களா? அவள்தான் பேசாமடந்தையாச்சே; சந்தேகம் தீர்ந்தபாடில்லை. காலந்தான் சிறிது சிறிதாகக் கவலையைக் குறைத்தது. அடுத்த இலையுதிர் காலம் வந்துவிட்டது. காட்டுக் கோழி ஏராளம். கீல் வாதத்தைக்கூடப் பொருட்படுத்தாமல் காட்டிற்குச் சென்று ஐந்நூறு பட்சிகளைச் சுட்டு வீழ்த்தினேன். அதில் ஒன்று ஒரு குழிக்குள் விழுந்துவிட்டது. அதை எடுக்கப் பள்ளத்தில் இறங்கினேன். அது ஒரு மண்டையோட்டின் பக்கத்தில் கிடந்தது. உடனே அந்தப் பித்துக்குளியின் ஞாபகம், என் மனத்தில் எதை வைத்தோ அடித்தது போல் எழுந்தது. அந்த நாசமாய்ப் போன வருஷத்தில் எத்தனை பேரோ இறந்திருக்கலாம். ஆனால் அந்தப் பித்துக்குளியின் மண்டையோடுதான் இது என்று நான் திட்டமாகக் கூறுவேன். உடனே எல்லாம் ஸ்பஷ்டமாக விளங்கிவிட்டது. அந்தக் குளிரில் யாருமற்ற காட்டில் படுக்கையை வைத்துவிட்டு வந்துவிட்டார்கள். பித்துக்குளி, மனப் பிராந்தியைப் பிடித்துக்கொண்டு, குளிரில் விறைத்துவிட்டது. பனி அவளை மூடியது. ஓநாய்கள் அவளைத் தின்றன. பட்சிகள் மெத்தைப் பஞ்சை எடுத்துக் கூடு கட்டின. அந்த மண்டையோட்டிற்கு மட்டும் ஒரு புழுவும் குடியிருக்க வரவில்லை. அவள் அஸ்தியை நான் சேகரித்து, 'நமது சந்ததி இனியாவது யுத்தத்தை அறியாமல் இருக்க வேண்டும்' என்று அதன் மீது பிரார்த்தித்தேன். |