உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பூச்சாண்டியின் மகள் லூயி கௌப்ரஸ் - ஹாலந்து அவள் பெயர் பத்தேமா. அவள் பாக்தாத் நகர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தாள். அவள் நீலத்தாடிவாலாவின் புதல்வி. கண்டதும் காம வெறியை எழுப்பும் மோகனாங்கி. அவளது மதி முகத்தின் விளிம்பாகச் சுருண்டு தொங்கிய அளகபாரம், பளபளக்கும் அலை வளைவுகள் நிறைந்த போர்வையாக, அவளது உடல் முழுவதையும் மறைத்தது... பொதுவாக, நீலத்தாடிவாலாவுக்கு மகள் ஒருத்தி உண்டென்று யாருக்குமே தெரியாது. அவனது கடைசி மனைவியின் சகோதரர்கள்தான் அவனைக் கொன்றுவிட்டனர். வாரிசில்லாமல் மாண்டு போனான். அவர்கள் சொத்தை அபகரித்துக் கொண்டனர் என்று பலர் நினைக்கின்றனர். இந்தக் கதை சம்பந்தமான புராதன சாசனங்கள் எல்லாவற்றையும் என்னைப் போல் பரிசோதனை செய்திருந்தால், நீலத்தாடிவாலா, தனது மண்டை இரு கூறாகப் பிளக்கப்பட்டு, தன் மகள் மடியில் செத்தான், அவளுக்குத் தன் சொத்தெல்லாவற்றையும் விட்டுச் சென்றான் என்பதை இலகுவில் கண்டு கொண்டிருப்பார்கள். பத்தேமா என்ற அந்த அனாதை - அழகிக்குத் தகப்பனார் பேரில் அத்யந்தப் பிரீதி; அவனுக்கும் அப்படித்தான். சொன்னபடி கேட்காத மனைவிமாரை அகற்றுவதற்குத் தகப்பனார் கையாண்ட வழிதான் அவளுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. அந்த முறை கௌரவமானதில்லை, சிலாக்கியமான வழியில்லை; மேலும் சிறிதும் கற்பனையற்ற ஒரே மாதிரியான வழி என்று அவள் கருதினாள். ஒவ்வொரு சிறிய தாயாரும், இரகசியத்தைத் தெரிந்துகொள்ள ஆசைப்படாமல் இருக்க மாட்டாள் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் அவள் தன் தகப்பனார் வழி சரியானது என்று சிறிதும் ஆதரிக்கவில்லை. மன்னிக்க முடியாத காம வெறியைத் தணித்துக் கொள்ளச் செய்யப்பட்ட கொலை என்பதே அவளது முடிவான அபிப்பிராயம். நீலக்குழலி பத்தேமா, ஏராளமான செல்வம், அடிமைகள் சூழ்ந்திருக்க, அனாதையாக வளர்ந்தாள். வேலைக்காரர்கள், சிப்பந்திகள், அடிமைகள் யாவரும், அவளுக்கு ராஜ மரியாதை செய்தனர். பாக்தாதின் 'பிரபல குடும்பங்கள்' கலிபாவின் மந்திரி பிரதானிகள், எல்லோரும், எங்கும் நீலக்குழல் நங்கையின் செல்வத்தைப் பற்றிப் பேசிக் கொள்வார்கள். அவளது அழகோ, செல்வமோ எந்த வாலிபனையும் திருமணப் பாதையில் இறங்கத் துணிவு கொடுக்கவில்லை. ஆகையால் அழகி பத்தேமா தன் பளிங்கு மாடங்களில் தனித்தே வசித்தாள். தூரத்திலே பேரீச்ச மரத்தோட்டங்கள், ரோஜா வனங்கள், பளிங்கு போன்ற தடாகங்கள், தங்கத்தாலும் வெள்ளியாலுமே கட்டப்பட்ட வேனில் மாளிகையின் வைரமிழைத்த தூண்கள் - இவைகளிடையே தனித்து நடமாடினாள். முடிவில் அவளால் தனிமையைச் சுமக்க முடியவில்லை. தோட்டக்காரன் மகன் நல்ல அழகன்; அவன் பட்டிக்காட்டான்; ஆனாலும், போகத்திலும் நாகரிகத்தின் நுனிக் கிளைகளிலுமே நடமாடிய பத்தேமாவை அவனது கிராமியத் தன்மை வசீகரித்தது. கலிபாவின் ஆஸ்தான மண்டபத்திலோ, அல்லது பாக்தாத் பிரபல குடும்பங்களிலோ, என்ன பேசிக் கொள்ளுவார்கள் என்பதைக் கொஞ்சமும் சட்டை செய்யாது அவனைக் கலியாணம் செய்து கொண்டாள் பத்தேமா. பத்தேமா குதூகலித்திருப்பது போலத் தோன்றியது. தனது பரிவாரங்கள் புடைசூழ, புருஷனுடன் நாலு இடங்களுக்கு செல்ல ஆரம்பித்தாள்; ஒய்யாரப் படகுகளையும் தங்கப் பல்லக்குகளையும் அடிக்கடி வெளியே பார்க்க முடிந்தது. அவளும் அவளது காதலன் எமீனும் மந்திர சக்தியால் இணைக்கப்பட்ட தம்பதிகள் போல் தோன்றினர். பலமும் அழகும் மிகுந்த வாலிபன், புதிதாகப் பெற்ற செல்வத்தின் மெருகில் திகழ்ந்தான்... அவளோ எனில், காதலும் அளவற்ற நகைகளும் பிரகாசிக்க, நீலக்குழற் பாரத்துடன் விளங்கினாள். பிரபல குடும்பங்கள், 'மகனை வைத்துக் கொண்டு அசட்டையாக இருந்து விட்டோ மே!' என்று குறைகூறிக் கொள்ளலாயின... திடீரென்று ஒரு வதந்தி. எமீன் இறந்து விட்டானாம்... அதற்கு முந்திய தினந்தான் அவனை எல்லாரும் மசூதியில் தொழுகை செய்வதைப் பார்த்தார்கள்... இப்பொழுது அவன் செத்துப் போனதாகச் செய்தி. நகரமே நடுங்கியது என்று சொல்ல வேண்டும். பிரதம விஜியரும், பிரதம நீதிபதியும் இந்த விஷயத்தில் தலையிட வேண்டிய அவசியமே இல்லை என்று முடிவு கட்டினர். ஏனென்றால், அதற்கு முந்திய தினத்தில் தர்பூஜ் பழங்களை அளவு மிஞ்சித் தின்றதால், கழிச்சல் எடுத்து எமீன் மாண்டு போனதாகச் சொல்லிக் கொண்டார்கள். மூன்று மாதங்கள் கழிந்தன; பாக்தாத்வாசிகள் கண்ணைத் தள்ளிக்கொண்டு ஆச்சரியத்துடன் பார்க்கும்படியாக, விதவை பத்தேமா மறுமுறையும் நிக்காஹ் செய்துகொண்டாள். இம்முறை புருஷனாக வாய்த்தவன் அவளது பரிவாரத்தில் உள்ள மெய்க்காப்பாளன். தன் பரிவாரத்திற்குள்ளேயே கணவன் ஸ்தானத்தை வகிப்பவர் இருந்ததால், பாக்தாத் பெரிய குடும்பப் பிள்ளைகளுக்குள் தேடிப் பரிசோதனை செய்யும் சிரமம் பத்தேமாவுக்கு இல்லாது போய்விட்டது. திருமணம் கோலாகலமாக நடந்தது. எமீனைப் போலப் புதிய கணவனும் திடீரென்று சேவகன் ஸ்தானத்திலிருந்து கணவன் என்ற சொர்க்க பதவிக்கு உயர்த்தப்பட்டதில் தன்னை மறந்தான். இந்த வாலிபன் - பத்தேமா அவனைத் தன் மெய்க்காப்பாளர் படையின் தலைவனாக்கி விட்டாள் - திடீரென்று மாண்டு போனான். குதிரையிலிருந்து விழுந்தான் என்று சொல்லிக் கொண்டார்கள். பத்தேமாவின் புருஷன் குதிரையின் பேரில் இருந்ததையோ, அல்லது அதன் மீதிருந்து விழுந்ததையோ ஒருவரும் பார்க்கவில்லை. பாக்தாத் குடும்பங்களிலும் கலிபாவின் அரண்மனையிலும், விஷமேறுவது போல், பீதி கொப்புளித்துப் பொங்கியது. ஏனென்றால் அவள் தகப்பனுக்கு நீலத்தாடி இருந்தது போல, அவளது தலைமயிரும் நீலமாக இருக்கிறது என்ற உண்மை அவர்களுடைய நினைவிற்கு வந்தது. துக்கத்திற்கு அறிகுறியான கறுப்புப் படுதா அணிந்திருந்த பத்தேமாவின் கண்கள் கருமுத்துக்கள் போல ஜொலித்தன. நடுநிசியின் ராணிபோல விளங்கினாள். நீலக் குழற்பாரம் பீதியை யாவருக்கும் விளைவித்ததெனினும், கலியாணம் செய்துகொள்ள அவளுக்கு மூன்றாவது முறையும் புருஷன் அகப்பட்டான். இப்பொழுது பல்லக்குத் தூக்கிகளில் ஒருவன். அவன் பெயர் ஆலி. கட்டுமஸ்தான சரீரம், மாப்பிள்ளை உடையில் வாலிப சுல்தானாகவே விளங்கினான். ஆனால், மூன்று மாதக் கலியாண வாழ்வுக்கப்புறம் அவன் மாண்டுபோனபொழுது, அவன் இயல்பாகவே மாண்டானா, அல்லது... என்ற சந்தேகம் பாக்தாத் குடும்பங்களையும் கலிபா அந்தப்புரத்தையும் வாட்டியது. மலேரியாவில் செத்துப் போனானாம். கொழு கொழுவென்றிருந்த அவனா அப்படிச் செத்துப் போனான்? பின் ஏன் இப்படி இரவோடிரவாகப் புதைக்கப்பட வேண்டும்? பெரியவர்கள் தலையைத் தலையை அசைத்தனர். அவர்களது கண்கள் பயத்தைக் கக்கின. அந்தரங்க உத்தேசங்கள் அவர்களது உதட்டின் கோணத்தில் துடித்தன. பிரதம விஜியரும் பிரதம நீதிபதியும் இது தலையிட வேண்டிய விஷயந்தானா என்று கலந்து கொண்டனர். அவர்களுடைய ஆலோசனை மகாநாடு வெகுவாக நீடித்தது. அதற்குள் பத்தேமா நான்காவது, ஐந்தாவது, ஆறாவது கணவன்மார்களை மணந்து 'பறிகொடுத்து' விட்டாள். நாலாவது மாப்பிள்ளை பாரசீகத்து வர்த்தகன். பூர்வீகம் டெஹ்ரான். ஆயுள் ரேகை பலம் என்று சொன்னார்கள். ஐந்தாவது நபர் அவள் படகோட்டிகளில் ஒருவன். ஆறாவது கணவன் பத்தேமாவின் மரகதச் சுரங்கங்களில் வேலை செய்த ஒரு அடிமை. ஒவ்வொரு தடவையும் மூன்று மாதங்களுக்கப்புறம் ஒவ்வொரு அசட்டு மாப்பிள்ளையும் செத்துப் போனான். ஒவ்வொரு முறையும், பத்தேமா, நடுநிசி ராணி போல், பாக்தாதுக்குச் சென்று வந்தாள். இனிப் பொறுக்க முடியாது என்று நினைத்து விட்டனர் விஜியரும் நீதிபதியும். பத்தேமாவின் உல்லாச மாளிகைக்கு அவளைத் தேடிச் சென்றனர். அவள் அங்கில்லை. வேறு மாளிகை ஒன்றிற்குச் சென்றிருப்பதாகக் கேள்விப்பட்டார்கள். அவளுக்குப் பல மாளிகைகள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரத்தினத்தினால் அமைக்கப்பட்டது. பாதரசச் சுனையும், மாந்திரிகப் புஸ்தகங்கள் நிறைந்த மாளிகை ஒன்றும் அவளுக்கு உண்டு. இந்த இரு பெரியார்களும் உல்லாச மாளிகைகள் எல்லாவற்றிலும் ஏறியிறங்கிக் காலோய்ந்தார்கள். அவள் மாந்திரிக மாளிகையில் இருக்கிறாள் என்று கடைசியாகத் தெரியவந்தது. அங்கு சென்றார்கள்... அவள் அவர்களை வரவேற்றாள். சிறிது வெறுப்புடனேயே வரவேற்றாள். நடுநிசி ராணிபோல் அவள் உடையணிந்திருக்கவில்லை. ஆறு கணவர்களின் விதவை மாதிரி காணப்படவில்லை. மிகவும் மெல்லிய உடையும் மெல்லிய முகமூடியும் அணிந்து, வானுலக ரம்பையாக விளங்கினாள். ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் சிறிது கோபமுள்ள ரம்பையாகவே விளங்கினாள். "உங்களுக்கென்ன வேண்டும்?" என்றாள் மிடுக்காக. "உனது ஆறாவது கணவன் மாண்ட காரணம் என்னவென்று தெரியவேண்டும்" என்றனர் அதிகாரிகள். "ஆறாவது புருஷனுடன் தான் உங்கள் ஆராய்ச்சியே ஆரம்பிக்கிறதா?" என்றாள் பத்தேமா. "அவசரப்பட வேண்டாம். ஒவ்வொன்றாக, படிப்படியாகக் கவனிப்போம்" என்று பயமுறுத்தினர் அதிகாரிகள். "ஏன் வரிசைக் கிரமமாக ஒன்றிலிருந்து கவனிக்கப்படாது? எனக்கு ரொம்ப ஜாஸ்தியாக விளக்கிச் சொல்லிக் கொண்டிருக்கத் தெரியாது. எனது ஆறாவது புருஷர் பிடிப்பு ஜுரத்தால் மாண்டு போனார்" என்றாள். அதிகாரிகள் கோபமாகப் பதில் சொல்லப் போனார்கள். அந்தச் சமயத்தில், பத்தேமாவின் ஆறாவது கணவனான மரகதச் சுரங்க அடிமை, கையில் இரண்டொரு புஸ்தகங்களைச் சுமந்துகொண்டு அங்கு வந்தான். அவன் எப்பொழுதும் போல் திடகாத்திரமாகவே இருந்தான். கொஞ்சமாவது இளைப்போ மெலிவோ இல்லை. "இதென்ன?" என்றனர் அதிகாரிகள். பத்தேமா தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டாள். "இதன் அர்த்தமா? அவர் சாகவில்லை என்பதுதான். கொஞ்சம் அசமந்தம். பேசத் தெரியவில்லை. படிப்புக் கற்றுக் கொடுக்க அவரை இங்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறேன்... இப்போ ஏதோ இரண்டெழுத்து வாசிக்கத் தெரியும்" என்றாள். "ஆனால் உனது மற்ற ஐந்து புருஷர்கள் எங்கே, நீலத்தாடி - இல்லை, நீலக்குழலீ! அவர்கள் எங்கே?" என்று ஒரு ஆணித்தரமான கேள்வியைப் போட்டார் பிரதம விஜியர். அவர் கண்கள் ஆச்சரியத்தில் விசாலமாகத் திறந்தன. "எனது சுரங்கக் கணவன் மாதிரி அவர்களும் உயிருடன் தான் இருக்கிறார்கள். எனது படகோட்டிக் கணவனுக்குக் கொஞ்சங்கூட சுறுசுறுப்பில்லை. பாதரசச் சுனை உள்ள மாளிகையில் அடைத்து வைத்திருக்கிறேன். ரசத்தைக் கொஞ்சம் கொஞ்சம் உள்ளுக்குச் செலுத்தி வந்தால், நரம்புகளில் ரத்தம் வேகமாகப் பாயும். காதல் குளத்தில் தாம்பத்தியப் படகைச் சுறுசுறுப்பாகத் தள்ளிக்கொண்டு செல்ல முடியும். பாரசீக வியாபாரி உடம்பில் ஒட்டக நாற்றம்; அதற்காக அவரை மாணிக்கத் தடாகத்தருகில் உள்ள மாளிகையில் வைத்திருக்கிறேன். நமது பல்லக்குத் தூக்கி மாப்பிள்ளை, என் அடிமைப் பெண்கள் ஒருத்தியிடமே சரசம் செய்ய ஆரம்பித்தார். வைடூர்யக் கோபுரத்தில் அடைத்து வைத்திருக்கிறேன். அவரை எனக்கே எனக்காக அடைத்து வைத்துக் காப்பாற்ற ஆசை. எனது மெய்க்காப்பாள மாப்பிள்ளை, ரொம்பக் குஷியாக நடனம் செய்கிறார். நடன மண்டபத்திலே வளர்த்து வருகிறேன். அந்தரங்கத்தில் செய்ய வேண்டிய விஷயங்களல்லவா? எனது முதல் புருஷர் இருக்கிறாரே - என் கண்மணி - அருகிலேயேதான் இருக்கிறார்; நினைத்த சமயத்தில் அவரிடம் போவேன். இதிலென்ன ஆச்சரியமிருக்கிறது? நான் நீலத்தாடி வாலாவின் புத்திரி என்பதை மறந்து விட்டீர்களா? உயிரிலும் மயிரிலும் நான் அவரது சாயை. அவர் பல பெண்டாட்டிகள் வேண்டும் என்று விரும்பினார். நான் பல புருஷர்கள் வேண்டுமென்று விரும்புகிறேன். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, அவர் அவர்களைக் கொன்றார். ஆனால் நான் என் கணவர்களைக் கொல்லவில்லை. அவர்களை அடைத்து வைத்து நாகரிகப்படுத்தி, அவர்கள் மீது ஆட்சி புரிய விரும்பினேன். வெறி அதிகமாக இருந்தாலும் எல்லா அம்சங்களிலும் நான் பெண்தான்; இன்னும் என்ன தெரிய வேண்டும் உங்களுக்கு?" பத்தேமா, வெகு மிடுக்காகக் கலிபாவின் அதிகாரிகள் முன் நின்றாள். ஆனால் அவ்விருவரும் தங்கள் சேவகர்களை அழைத்து, "இந்த தூர்த்த ஸ்திரீயைக் கட்டிப்பிடித்திழுத்து மன்னர்பிரான் முன் கொண்டு நிறுத்துங்கள்" என்று உத்தரவிட்டனர். அப்படியே நடந்தது. நீலத்தாடிவாலாவின் புத்திரியைப் பாக்தாத் தெருக்கள், சதுக்கங்கள் வழியாக, கலிபாவின் சன்னிதானத்திற்கு இழுத்துச் சென்றார்கள். அவளது நீலக் குழல் விளங்கும் தலையை வெட்டி எறியும்படி கலிபா உத்தரவிட்டார். கொலையாளிகள் கையில் ஒப்படைக்கப்பட்ட பொழுது, "என்ன ஆச்சரியம்? என் தகப்பனார் மனைவிகளைக் கொன்றதற்காகக் குற்றம் சாட்டினர். நானோ அவரது வழியை வெறுத்தேன். அவரது மகளான நான் என் புருஷர்களைக் கொல்லவில்லை. அவர்களை அன்பாக வளர்த்தேன்; நாகரிகப்படுத்தினேன்; அறிவை வளர்த்தேன். ஆனால் கொஞ்சம் தனித்தனியாக வைத்துத்தான் நடத்தினேன்; என்றாலும் இப்படித் தீர ஆலோசனை செய்து நடத்திய கலியாணத் திட்டமும் ஆட்சேபிக்கப்படுகிறது..." என்று நினைத்தாள் பத்தேமா. "ஆச்சரியமாகத்தான் இருக்கிறது... இருந்தாலும் நீலத்தாடி அல்லது நீலக்குழல் இருந்துவிட்டால்... கலியாணம், காதல் விஷயங்களில் பொதுஜன அபிப்பிராயத்தைத் திருப்தி பண்ண முடியாதுதான்..." இப்படிப்பட்ட ஒரு அசைக்க முடியாத தத்துவத்தை முடிவுகட்டிய பிற்பாடு தனது நீலக்குழல் அலையும் தலையைக் குனிந்தாள்... பிரச்னையைக் கடைசி நிமிஷத்திலும் முடிவு கட்ட முயன்றாள். ஆனால் முயற்சி பலிக்கவில்லை. ஏனெனில் துண்டான கழுத்து வழியாக அவளது எண்ணங்கள் சிவப்பு ஆறாக ஓடின. நீதி மண்டபத்தில், நீலக்குழலியின் தலை கிடந்தது. அதற்கப்புறம் அவளது ஆறு கணவர்களும் அவளது சொத்துக்கு வாரிசானார்கள். |